கைலாஷ் சிவன் கவிதைகள்

லயம் - நகுலன்

பிற்பகலில்
என் அறையில்
நான் தனியாக
"கூ கூ"
என்று குரல் கொடுக்கும்
இந்தக் குயில்
யாருக்கு
எதைச் சொல்கிறது?




 - டேனியப்பா ‏@minimeens  Mar 6

"தனிமையின் சுடரொளி"-கைலாஷ் சிவன் -லட்சுமி மணிவண்ணன்
https://www.facebook.com/permalink.php?story_fbid=1571892356433749&id=100008389998084
1
மிகக்குறைவாகவே தமிழில் எழுதியிருக்கும் கவிஞர் கைலாஷ் சிவன்.அதுவும் ஒரேயொரு கவிதைத் தொகுப்பு மட்டுமே. 1998-ல் வெளிவந்தது.அவருடைய மொழிபெயர்ப்புகள் உட்பட பிற ஆக்கங்கள் எதுவும் நூல் வசமாகவில்லை.அவை எவரெவர் கைகளிலோ உள்ளன.அதுபற்றி எந்தக் கவலையும் அவர் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.சில ஆக்கங்களைத் தந்துவிட்டு அதையே தனது வாழ்நாள் சாதனையாக இளைஞர்களுக்கு மலிவான முன்னுதாரணமாக பாராயணமாகக் கொண்டு நடக்கும் கிழவர்களுக்கு மத்தியில்தான் இத்தனைக்கும் அவர் அமர்ந்திருக்கிறார்.ஆண்டுக்கு ஒருமுறை பிரசுர அடியந்திர ஆசைகொள்ளும் விருப்பங்களுக்கு எதிர்திசை கைலாஷுடையது.இத்தனைக்கும் பிரசுரவாய்ப்புகள் குறைபாடு கொண்டவரல்லர் அவர்.அவரது கழிவுப்பொருட்களுகளும்கூட இன்றைய சூழலில் சந்தை மதிப்பு தூக்கலாவை என்பதை என்னைப்போன்றே அவரைப்போன்றே பிறநண்பர்களும் அறிவர்.அதற்காக என்ன செய்யவேண்டும் ஒரு தமிழ்க்கவிஞன்?
2
கைலாஷை கௌரவிக்கும் பொருட்டு வழக்கமான விருது போன்ற பதங்களை பயன்படுத்தாமல் அவருக்கு பரிவட்டம் கட்டுவது என்று முடிவு செயத போது பொதுவாக என்ன செய்திருக்கிறார் அவர்?என்கிற கேள்வி எழுந்தது.இக்கேள்வியை எழுப்பிப் பார்ப்பதும் அதனை பரிசோதனைக்குட்படுத்துவதும் சேர்ந்ததே அவருக்குப் பரிவட்டம் கட்டிப்பார்ப்பதிலுள்ள அர்த்தப்பாடு.நேரடியாக இக்கேள்வி எழுப்பப்பட்ட இடங்களில் இவரையும் ஆத்மா நாமைப்போல கிணற்றுக்குள் குதித்துக் காட்டச் சொல்கிறீர்களா என முன்வைத்தேன்.இதுவொரு விளையாட்டான எதிர்கேள்விபோல தோற்றமளித்தாலும்கூட முகப்பொலிவுமிக்க. கைலாஷை முன்வைத்துச் செழித்துவிடக்கூடிய கீர்த்திமிக்கது.தமிழ் மொழியின் அகச்சூழலில் கீர்த்தியை முகவாட்டம் அடையவிடாமல் பாதுகாத்த பெருமுயற்சியே கைலாஷ் சிவன் எனும் அணையாப் பெருசுடர்.இந்தச்சுடர்தான் நமதுச்சூழல் இன்னும் தமிழ்கவிதைக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய நம்பிக்கை.கடைசி வாய்ப்பு.இந்த அகச்சுடரில் நாமெல்லோருமே நமது கருணையும் அன்பும் அறச்சீற்றமும் கெட்டுப்போய்விடவில்லை என்பதைக் காண்கிறோம்.எல்லோரையும் கொலை செய்வதற்குண்டான நியாயங்கள் அவரது கவிதைகளில் கருணையுடன் கதகதக்கின்றன.அந்த நியாயங்களை தோல்ப்பிக்கச் செய்துவிடாமலிருப்பதுதான் நமக்கெல்லாம் வாழ்வதற்குண்டான கையிலிருக்கும் ஒரேயொரு சாத்தியப்பாடு.மனமொழியின் குரங்காகத் தமிழ்க்கவிதையை மாற்றத்துணியாமலிருந்தார் என்பது ஒன்றேகூட அவர் என்ன செய்தார் என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல போதுமானது.தமிழ்க்காலம் உள்ளளவும் இக்குணம் இனி நீடித்து வாழும்.மொழிக்குள் நீடித்துவாழும் குணத்தை கவிஞன் பலிபிடத்தில் தன்னை முன்வைத்துத்தான் உருவாக்கமுடியும்.ஒரு கவிக்கும் பிறனுக்குமிடையில் இந்த வேறுபாட்டை அகத்திலும் புறத்திலும் ஸ்திரப்படுத்தியவர் கைலாஷ்.


காருண்யம் - கைலாஷ் சிவன்

உள்ளம் பரிதவிக்க
பச்சையெல்லாம்
பற்றி எரிகிறது
இருந்தும்
நெஞ்சமெல்லாம்
நிறைய
உயிராக
கூவுகிறது
குயில்

-சூன்ய பிளவு என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து



Shared publicly  -  14 Dec 2013

காற்றின் திசையெங்கும்
உயிர் கொண்டு
அலையும்
இறகொன்று
முடிவுறா தொடர்ச்சியில்
முடிவுறும் கவிதை
            -கைலாஷ் சிவன் 


காதலைத் தேடிய தனிமையின் தனித்த இருள்

வெம்பரப்பில் காயும் காய்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள்
மோட்டு வலையில் சிதறிய ஒளிமுத்துகள்
வெக்கை சுழற்சிகளை நின்று அவதானித்த காற்று
காற்றும் தன் முகம் தேடி தன் வழியில்
ஓடும் திசை யெங்கும் அவல ஒலி தனித்த இதயம்
செவிட்டு ஒளியின் பலஹீணங்கள் முகம் மறைக்க
கண்களுக்குள் சுழன்று பெருகும்
போலிச் சூர்யன்கள் எத்தனை எத்தனை
அவளின் ஒரு கணப்பார்வை என்னைக் கொன்று தீர்க்க
இரண்டு இரண்டு கண்களுக்கிடையில் நிகழும்
மௌனப் பரிவர்த்தனைகள்
எழுத எழுத வெறுமையாகவே தொடரும் பக்கங்கள்
லெர்மன்தோவின் காதல்வரிகள் படபடக்க
ஓய்ந்தலையும் நடுநிசி
கொல்லாமல் விடுவதில்லை - நிலவு அற்ற வானத்தில் நட்சத்திரங்கள்
காதலின் உணர்வுகளில் எரியும் கவிதை வரிகள்
எதைத் தொலைத்து எதைப் பெற
தீர்க்கத்தின் இடைவெளியை நிரப்பிவிடுவாள்
-அவள்
நடுங்கும் கணங்கள் நானா?
சற்றே அதிர்ந்த குரலில் ஓர் பெண் பேசுகிறாள்
தொலை தூரத்தில்
“இதயத்தை காலியாக்கி விடு”
நடுச்சாமத்து நட்சத்திரம் ஒன்று
யாருக்கும் தெரிந்து விடுவதில்லை
உணர்வெழுப்பும் ரகசிய மொழிகளை
நண்பா ! அந்த இரத்தநிற மது திரவத்தை
கிண்ணத்தில் வழியவிடு
நட்சத்திரங்கள் பருகிக் கொண்டாட்டும்
இந்த நிலவற்ற மைதானத்தில்
காத்திருந்த கணங்களும் வெறித்த பார்வையாய்
தொலைந்து போக
நேற்று - இன்று - நாளை அற்ற
போதை பரப்பில் விரியும் பால்வெளி
சுட்டுவிரல் கொண்டு எரியும் நட்சத்திரங்களை
தொட்டுணர முடியும் தான்
தரை வெளிக் கோளத்தில் கவிந்த இருள் தளத்தில்
ஏதோ ஊர்ந்து செல்கிறது ஓர் ஒளிக்கோடு
அவள்தான் பேசுகிறாளோ! தனித்த அமைதியின்
 திரட்சி
எப்போதும் எதையாவது கேட்டோயந்து போன
உன் தனிமை
இனி யாரும் திறப்பதற்கில்லை உன் கதவை
சீறிய காற்றும் மோதிப் பின் வாங்குகிறது
காதைக் குடையும் மௌன வலி
ஏதோவொன்று இருளில் நிழலாடுகிறது
தொங்கிய கயிறு சகிதமாக ஓர் தனிமை.

தற்கொலை சாசனம்

விரிந்து கிடக்கும் வெள்ளைக்காகிதம்
உள்ளிருந்து புகைந்து வெளியேறிய
புகைச்சுருள் நிழலாய் அலைந்து திரியும்
காணக் கிடைத்த புகை ஓவியம்;
ஐயோ! பிசாசு... பிசாசு... பிசாசு...
வெறுமையில் எலும்புகள் நடுங்க
ஒண்ட ஓடியது உயிர்
இருள் கதவுக்கு. பின்புறம்
எரியும் மஞ்சள் வெளிச்சத்தில்
புகையும் புகை நீலம்
மிதக்கும். மிதக்கும். மிதக்கும்
சதுரச் சுவர்களுக்குள்
ஐயோ! காற்றைத் திறந்து விடு
தொலைந்து போகட்டும்
அபயத்தின் கதறல் கேட்ட
ஆத்மன்
பயப்படாதே எதிர்கொள்
நீ தானே அதுவும்
“தவிர்ப்பதற்கில்லை எதையும்
தற்கொலைதான்”
கழுத்தை நெரிக்கும் கரங்கள்
உயிர் உஷ்ணம் உள்ளொடுங்க
கவிகிறது இருள் கண்களுக்குள்.
             (பொன்மணியின் நினைவுக்கு)


சூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்

அகாலம்
இருளில் நெளியும் ஒளிவரிகள்
கொடியால் படரும்
தனித்திருக்கும் ‘நான்-இல்’
எரிந்த நிணம்
கரி-ஆகா எலும்புகள்
உதிர்ந்து
சுவாசம் தரிக்க
அதிர்ந்தெழும்பும் ஒலி ரூபத்தின்
ஸப்ததாது
சுயம் தேடும்
தீரா அவஸ்தையின்
‘வேள்வித் தீ’
இருள் வெளிக்குள்
பின்னகரும்
ஒற்றை  நதி
அந்த ஹூங்காரத்தின்
சூன்யப் பிளவிற்குள்
சொட்டுச் சொட்டாய்
மூச்சு விடும்
ஜனன மூலாதாரம்
அது ஏனென்றாய்?
ஒன்றுமில்லை
இருள் சக்திக்குள்
நீர் கோர்க்கும்
மௌனத் துளிகள்
சிரசின் முடிச்சுகளில்
கவியும்
மேக ஸ்தம்பங்கள்
உயிரின்
ஓளி விரல்கள்
ஸ்பரிசம் பட்டு
மனிதாத்மம் - ஆகும்
பிரபஞ்ச விஸ்தாரம்
‘சமுத்திர அலைகள்
கால்களுக்குள் உருண்டு ஓட
சிரசில் தெறிக்கும்
உயிர் முடிச்சு’
எதன் நீட்சியோ
எதையோ தீண்டி
ஸ்தூல மெங்கும்
உள்தகித்து
பாய்ந்து ஓடும்
உதிரம் நதி.

அதோ உன் கண்களுக்குள்
ஸப்திக்கும்
ஓர்
நதியின்
பிரவாஹம்

காலத்தை காலம் தீண்டி
கருக்கொள்ளும்
‘கவிதார்த்தத்தின் தர்ஷனப் பிழம்பு’
அதன் உயிர் முகம்
நீ.

(பிரபஞ்ச ஜீவி பிரமீளுக்கு)
வெறுமை அற்ற வெற்றுத்தாள் - கைலாஷ் சிவன்

கவிதை கேட்டு வந்தான்
ஒருவன்
வெறுமை அற்ற
வெற்றுத் தாளாக - உன்னால்
கவிதை தர முடியுமா?
ஒரு வரி - ஒரேயொரு வரியில்
நண்பா
‘நீ எறிந்த கல் ஒரு குளத்தில்’

இசை ஆனந்தம் : சாக துணிந்த  க்ஷணத்தில்

1.
அடங்கா குதிரையின்
கொந்தளிப்பு
பசிதீரா தீ நாக்குகளில்
எரியும் விழிகள்

2.
இறுகும் முடிச்சு
திமிறி
முட்டி மோத
சுற்றிலும்
திசைச் சுவர்கள்
நிழல்களாய்
அசையும் காற்று
நிஜம்
‘?’

3.
வெளியேற
திடம் கொண்ட
‘நான்’
நிழலசையும்
இடுக்கு நோக்கி
கிழித்த
தீக்குச்சி வெளிச்சம்
இருளை உதறித்தள்ள
பதறும் படிக்கட்டுகள்
பரிதவிக்கும் மூச்சு
அதோடு கூட
நிஜம் கருகிய நிழலாய்
‘நான்’

4.
ஓ!
அ(க்ஷ்)க்ஷணம் தான்
ஒலி அலைகள்
அசைந்தசைந்து
நெய்த இசை ரூபம்
மிதந்தூர்ந்து
புலன்களில் ஈர்ந்து
மருவி கசிய
உயிர் கோர்க்கும்
ஓளி வியர்வைகள்

5.
மிதந்தறியும்
ரூபத்தை
பின் தொடர்ந்த
‘நான்’
தூரம் தூரமாய் சென்று
தனித்திருந்து
வியந்து
சுடராய்
தன் முகம் கொள்ள
கண்களுக்குள் பூத்துச் சிரிக்கும்
அரூப பாஷைகள்
ஓர் ஆநந்தம்

6.
காலம் காலமாய்
பதுங்கி உறைந்து
புதைந்த
சொற்கள்
மனிதர்கள்
இன்னும் பிற
புகைந்து எரிந்து
சாம்பலாகும் க்ஷணங்கள்
ஓர் நிச்சலனம்

7.
ஏதோ வொரு
புள்ளியை
தொட்டுணர்த்தி
மையம் கடந்து
மையம் அழிந்து
திடரூப - ‘நான்’
தன்னில்
பஸ்பம்
மீண்டும் உயிர்த்தெழும்
அது எது?
ஜீவ சப்தங்கள்

8.
விதவித நிறங்களில்
ஒளி அடர்ந்த
தைலங்கள்
ஒன்றுடன் ஒன்று
புணர்ந்து
பெருகும்
கோடி கோடி

ஜாலங்களின்
வர்ண பாஷைகளின்
ஓர்
ஆநந்தம்.

9.
பிரக்ஞை குமிழ்கள்
உடைந்துடைந்து
நாதரூபம் தரிக்கும்
பிரபஞ்ச கதிக்குள்
ஒளியும் ஒலியும்
இசைந்து கோர்க்கும்
இசையின்
ஸ்வரூபங்கள்
சித்-சித்-ஆநந்தம்

10.
உயிரின் பிரக்ஞை
இமை திறந்தபோது
அறிவும் - உணர்வும்
குவிந்தோர்
ஆலிங்கனம்
மீண்டும்
புலனாகும்
இங்கோர்
சிருஷ்டி
அது என்ன?
கவிதை



(தமிழ் செல்வனுக்கு)


அவன் விட்டுச் சென்ற கடைசிக் கடிதத்தில் – கைலாஷ் சிவன்

கடைசி வரைக் காத்திருந்தேன்
இலையுதிர்காலமும் முடிந்து
வசந்தமும் துளிர் கொண்டு தழைத்த பகல்
உச்சி உஷ்ணத்தை கடந்த மேக நிழல்
ஒரு துளி நீர் திரண்டு வீழ்ந்தது நாசி நுனியில்
காலம் தன்னைக் கொண்டு போகவில்லை
வீணாய் சூரியனும் கடந்து திரிகிறான்
ஒரு அநாம நேரம் இரவின் மடியில்
தலை கவிழ்ந்து முகம் சிதறிய போது
நிஜத்தை விட்டகன்ற பிறிது பிறிதான நிறமாலைகள்
பதறி ஓடும் பறவைகள் போல் அபயத் தவிப்புகள்
கொஞ்சம் இதயம் கனத்து துடிப்புகள் கூடும்
கைவீசி நிதானமாய் ஆற்றுவழி நடந்தபோது
ஆறு கொண்டு போன நினைவுகள் தடயங்கள்
எல்லாம் தன் நிறமிழந்து உதிர்ந்த தழும்புகளாய்
குடித்துத்தான் திரிகிறேன், குடிப்பதால் வாழ்கிறேன்
சாவு அதன் முகம் மறந்து இருந்தும்
வாழ்கிறேன் வாழ்வதால் சாகிறேன்
சாவைக் குறித்து ஒரு பாடலுண்டு

போராளியும் சிப்பாயும் ஒன்றல்லவே



(டாக்டர் ஸ்ரீதரனுக்கு)

சீக்கிரம் சிலுவையில் அறைந்து விடுங்கள் – கைலாஷ் சிவன்


நான் மண்டியிடப்  போடுவதில்லை
 உங்கள் முன்னால் 
தோளில் கனக்கும் மரத்துடன்
 பயணம் 
நெடுந்தொலைவு 
தோள் மாற்ற ஒதுங்கியபோதும் 
கசையடி 
எப்படியும் கொல்லத்தான் போகிறார்கள் 
அடித்தே கொல்லுங்கள் 
என்றொதுங்கியபோதும் 
கசையடி
 ஜீவன் போகவில்லை 
யாரது என் வஸ்திரத்தை தொட்டது 
சைத்தானும் சோதிக்கத்தான் செய்தான் 
தேவனும் சோதிக்கத்தான் செய்தான் 
இந்த மனிதர்கள் தான் 
என்னை சிலுவையில் அறைகிறார்கள்
 ஏலி ஏலி லாமா சபக்தாணி
மனிதர்கள் தாம் என்ன செய்கிறோம் 
என்பதை அறியாமல்தான் இருக்கிறார்கள் 
பிதாவே அவர்களை மன்னியும் 
ஆமென். 

கவிதை : நானும் நீயும்  எழுதாமலிருப்பது

இது  என் உடம்பல்ல, உயிருமல்ல
நான் ஜீவிக்கிறேன்
யாருக்கு சாப்பிடுகிறேன், வேலை செய்கிறேன்
தூங்குகிறேன், புணருகிறேன்
சட்டையை மாற்றி மாற்றிப் போடுகிறேன்
இங்கு எதுவும் நானல்ல, நானல்லாத நானுமல்ல
நானாக இருப்பது குற்றம்
உன்னைப் போலத்தான் நானும்
என்னைப் போலத்தான் நீயும்
சொல்லிக்கொள்வோம் நாம் நாமல்ல
திரை விழுகிறது கறுப்பு ஜன்னல்
மரணத்தை எப்படி அழைக்க
சவம்.

 நீர் நாரை

கோடை காலம்
வெற்றுடம்பிலிருந்து நீர் கசிய
வெளியின் அடியிலிருந்து
கூவுக் கூவுக் கூவுக்....
வெப்பக் கதவைத் தட்டும் கூக்குரல்கள்
மலட்டுக் காதில் ஊமை ஜீவனா?
ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு
பறவையை பார்த்தேன் காதால்
தனித்த பறவை
சிறகுகளோடு இருந்தது
ஏனென்று தெரியா
அதன் தாகம்.

டைரிக்குறிப்பு : 
ஓர் அகதி நண்பன் விட்டுச் சென்றது

வெம்பரப்பில் காயும் நினைவுகள்
காத்திருப்பு  யாருக்காக - இந்தக்
குழப்பமான செவ்வாய் கிழமை
அறையைச் சுற்றி சுற்றி நான்

எரியும் என் நிலத்தின் வரைபடம்
குழம்பிக் கிடந்த புஸ்தகங்கள்
எழுதப்படாத ஒரு கவிதை பாதியில்
கலைமான் கொம்போடு சொருகிய
புல்லாங்குழல்

மனம் எதையும் நாடவில்லை

சில தப்படி தூரத்தில் ஜன்னல்
எதைப்பார்க்க, தொலைந்த தொலைவையும் தாண்டி
மல்லாந்து சாய்வாக படுத்துக்கொண்டேன்
சிகரெட் நுனியில் தீ பற்ற
ஊதிய புகை ஜன்னல் வழி

மனம் தணியவில்லை

விழிகளை சற்று நிமர்த்திய போது
ஜன்னலுக்கும் எனக்குமிடையில்
அசைகிறது ஒரு பாலம்.

?
உஷ்ணம் வேர் கிளைக்க
குரல்வளை திருகும்
தாகம்
தப்பித்தலின் கோரம்
‘அப்பா நிம்மதி’ - என்ற
பெருமூச்சு
சற்றும் முற்றும் திரும்பினேன்
யாரும் இல்லை
சற்று தூரத்தில்
அசைகிறது
மரத்தின் கிளைகள்

ஏதுமற்ற ஒரு நிலை
தட்டச்சு Tuesday, ‎October ‎13, ‎2015

யார் யாரோ எதை எதையோ பேசுகிறார்கள்
எதை எதையோ சொல்லுகிறார்கள்
பைத்தியமாகிய நான்
எதனிடத்தும் நிறைவு இல்லை
உயிரின் சுழற்சியில் அமிழும் விரல்கள்
எழுதிய கவிதையும் செத்து வாய் பிளக்க
எழுதாத கவிதை மரணத்தை பாடுகிறது
இருள் ஜன்னலில் விழிகளை பரப்ப
அமைதியில் வந்தமர்ந்த பறவைகள்
அமைதியாகவே திரும்பிச் செல்கிறது
உனக்கான கவிதையை நீயே வாசித்துக் கொள்
மனதின் ஸ்பரிசத்தில் நிஜ இருள்
@@@@@@@@@@@@@@@@@@

சொல்லிருட்டு வலைக்குள்
சிக்கிய
கவிதை மீன்கள்
ஒவ்வொன்றாய்
உயிர்துடித்து
இறந்தென்
பசித்த வாய்க்குள்
அதிலொன்றின்
ஓசை முட்கள்
இன்றென்
குரலைத் தைக்கின்றன
நினைவுகளிலிருந்து
நழுவிய சிலது பார்வையில்
துள்ளி தெறித்து
சதா நீந்தி வரும்
தான் வாழ்ந்த
அமைதியில்.
(ஸ்ரீவை முத்துராஜுக்கு)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Lakshmi Manivannan added 3 new photos — feeling excited with படிகம் நவீன கவிதைக்கான இதழ். andAntony Rajasingh in Nagercoil
கவிஞர் புனித கைலாஷ் சிவன்
நவீன தமிழ்க்கவிதையில் நவீனத்திற்குப் பின்தோன்றிய ஸ்தல விருட்சம் போன்றவர் கைலாஷ் சிவன் .டிரண்ட் மேக்கர் என்று சொல்கிறோமே அப்படி.இன்று பலர் அன்கான்ஷியஸ் ஆக எழுதும் பல கவிதைத் தலைப்புகளின் மூலத்தைத் தேடிச் சென்றால் அது கைலாஷ் சிவனில் சென்றடையும்.இதனை அவர்களும் அறியமாட்டார்கள் என்பதே துரதிர்ஷ்டவசமானது .
சீக்கிரம் சிலுவையில் அறைந்து விடுங்கள் ,கொலைக் கருவிகளை விற்றுத் திரிகிறவன் நான்,21 ம் நூற்றாண்டின் பலி பீடம் , திறந்த புத்தகம் நகரும் வார்த்தைகள் ,சுயசரிதைக் குறிப்புகள் போன்ற தலைப்புகள் சிறிய உதாரணங்கள்.
படிகம் இதழுக்கான நேர்காணலுக்கான அழைப்பின் பேரில் அவர் நேற்று கங்கைகொண்டானிலிருந்து நாகர்கோவில் வந்திருந்தார்.
படிகம் இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றாவும்,கே.ராஜதுரையும் "சைபீரியாவிலிருந்து பறந்து வந்து இங்கு தோன்றும் ஒரு பறவையை பற்றி அவரிடம் "நேர்காணல் செய்தார்கள்.சொத்தவிளைக் கடற்கரை,பள்ளம் கடற்கரை,சங்கு துறை வரையிலான கடற்கரை நீளம் அந்த நீலநிற நேர்காணல்.அடுத்த படிகம் இதழில் வெளிவர உள்ளது.உற்சாகத்தை ஏற்படுத்திய நேர்காணல்.
இலங்கையின் ஈழப்பிரச்சனை பற்றி தமிழ்நாட்டில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்."அகதிச்சிறுவனின் இருள் மாசானம்" என்ற இவருடைய இந்த கவிதைக்கு இணையாகச் சொல்ல ஒரு கவிதையும் கிடையாது என்பதே நிஜம்.
"அகதிச்சிறுவனின் இருள் மாசானம்"


அந்திவேளை கருக்கல்
சிறுவன் கையில் ஊதுகுழல்
வாயில் வைத்துக் கொண்டு பேசினான்
தொடந்து பேசினான்

ஓர் புதிய ஒளியின் காலை,மதியவெயில்,கருக்கல்
இரவின் நட்சத்திரங்கள் ,குளிர்,முழு நிலவின் அமைதி
ஓர் அமாவாசையில் நதி ஒளித்துக் கொண்டதை
மிகத் தெளிவாகப் பேசினான்
ஒரு பயங்கரம் இரவில் குண்டுகள் வீழும் சப்தம்
அதிர்ச்சி பிரமைகள்,குழந்தைகளின் கதறல் ,மற்றும்
பெண்களின் ஓலம்,புகைக்காற்று,தீ

ஊதுகுழலின் துவாரத்தில் சுருங்கும் காற்று ஓர் தீவு

குழலை கையில் பிடித்துக் கொண்டான்
தாழ்ந்த குரலில் - அண்ணே
நான் சுவாசித்த பூமி ,வானம்,மழை,
நதி,நிலவு,காற்று
இந்த மலை, இன்னும் இன்னும்
எல்லாவற்றையும் நன்றாக ஊதினேனா !

இந்நேரம் சூரியன் தாழ்ந்தே போய்விட்டான்

தம்பி நீ யார் ?

தென்கிழக்குத் திசையை காட்டி - அங்கிருந்து
எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது இங்கு
வந்து விட்டோம்
வருஷம் 12 ஓடிவிட்டது

அதோ அந்த வேலியிடப்பட்ட கூடாரத்திற்குள்
தங்கியிருக்கிறோம்

உன் அம்மா அப்பா?

; எனக்குத் தெரியாது

என் பெயர் : இந்திரஜித்

[ சூனியப்பிளவு கவிதை தொகுப்பிலிருந்து...]
+++++++++==============+++++++=================+++++
ரோஸ் ஆன்றா
10 hrs · Nagercoil ·
நவீன கவிதை வரிசை - 85
------------------------------------------
கோடை காலம்
கருங்குளம் மதியவேளை திங்கட்கிழமை
தொலையத் தொலையத் துலங்கா
தொலைவின் பாதை
பங்குனி வெயில்
விழிகளைச் சுடும் வெப்பக்குருடு
ஊடாடும் காற்று வெளியிடை
கையில் குழந்தை, தலையில் சுமை
கைவீசி நடக்கிறாள். எட்டாத் தொலைவு
படிகக் கண்களில் நீலம் கசியும் துக்கநீர்
கால்பாவக் கால்பாவ வாழ்வின் பாலை
ஒடுங்கிய திரேகத்தின் வெப்பப் பெருமூச்சு
கொண்டவனை எங்கு தொலைத்தது காடு
'அம்மா தாகம்'
குறுமணல் ஆற்றுமேடு
மெலிந்து எலும்பாய் நதி
குழந்தை பற்றி, சுமை இறங்கி
நதி இறங்க
அலைமோதும் பார்வை
கைக்கொண்டு அள்ளிய நீர்
ஈரச்சூடு.
_______________
கைலாஷ் சிவன்

ரோஸ் ஆன்றா
13 mins ·
நவீன கவிதை வரிசை - 86
------------------------------------------
பிடிப்பு
முற்றத்து வெளியில் சிந்தும்
பால் மனதில்
ஞாபக முத்திரை
மார்கழி மாதத்துக் காலை
தாழ்வான பார்வையில்
எதிர்வீட்டு முற்றம்
சாணி தெளித்து
விரலசைவில் நின்றகோலம் - ஓர்
நெளிந்த பார்வை
கம்பிக்கோலச் சிறைக்குள்
நளினமா? அவளா?.
_______________
கைலாஷ் சிவன்
ரோஸ் ஆன்றா
19 hrs · Nagercoil ·

நவீன கவிதை வரிசை - 89
------------------------------------------
இரும்பு கோளம்: (21 - ம் நூற்றாண்டு)
பதுங்கி இருந்த கனவு விழித்துக்கொண்டது
அவன் அழைத்த தொடங்கினான்
ஏன் என்று தெரியவில்லை?
இருள், விழிப்பு, காதல், காமம், நடப்பு, அன்பு,
இருப்பின் வேடிக்கை மற்றும் ஓர் கொலை
எல்லாமும் - ஆக
தன்னையே கொல்லத் தெரியாமல் போன
கனத்த விழிப்பு
இருட்டைச் சுற்றிலும் உணர்வின்
குவிமையங்கள்
தப்பித்தலா, இருப்பா, தற்கொலையா?
ஏன்
ஸந்தோஷமாகச் செத்து விடு
உணர்கொம்புகளில் உன் இதயம் கிழிக்கப்படுமுன்
அப்படி ஒன்றும் பெரிதில்லை
இருப்பதிலும் இல்லாமல் போவதிலுமான
உன் இருப்பு
வாழ்வென்பதே மரணத்தை நிகழ்த்திக் காட்டுவதே - ஆன
ஒரு கலையா?
இருந்தும்
கனவில் ஊர்ந்து போகும் ஸர்ப்பம்
பயம், தோஷம்
நடு இரவில் விழித்துத் திரிகிறது இருப்பு
திசைச் சுவர்களில் முட்டிமுட்டித் தவிக்கும்
ஒரு பறவை மிருகம் குருட்டு வௌவால்
இருளற்ற இருள்வெளி.
நண்பா!
சற்றும் யோசிக்காமல்
நஞ்சைப் பருகக்கொடு உன்கையால்
எதற்கும் என் டைரிக் குறிப்புகளை
கவனமாக மீண்டும் படி; படித்து
(சைத்தானின் நிழற் குறிப்புகள்)
தீயிலிட்டு விடு
இருளில் - ஆந்தையின் அலறலாய் பீறிடும் குருதி;
ஒரு க்ஷணமாவது மரணத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும்
ஓர் உயிர்ப்புடன்
இம்மானுவேல் போலல்லாமல்.
(சே.குவேராவுக்கு)
_______________
கைலாஷ் சிவன்

நவீன கவிதை வரிசை - 90
------------------------------------------
உயிர்-மெய்-இன்-நிராசை
இதயம் தொட்டுணரும் படியாக
கவிதையொன்று தரவேண்டும்
என்றபடி மசங்கும்
நாட்களைத் தனதாக்கி
அலைந்து - திரிந்து அந்த
ஊரில்தான் பட்டு நெய்கிறார்கள்
என்றறிந்து - ஊர் வாசல் கடந்து
உள்ளேறினேன் - அங்கு
கொதிக்கும் நீரில் பட்டுப்புழுக்கள்
குதித்து ஊடு - பாவும் தறியில்
முடிச்சுகள் ஆயிரம் ஆயிரம்
நெய்யப்படும் வாழ்வு
கட்புலனுக்குள் அடங்கா
அரூப முடிச்சுகள் கேட்கும்
கேள்விகள் ஆயிரம் ஆயிரம்
பதில்கள்: திருப்பப் பெற முடிந்த கேள்விகள் மட்டுமே
உன் கவிதை இங்கு சாத்தியமற்றுப் போயின்
தொலையாமல் தொலைந்துபோ
சீக்கிரம் மறக்கப்படுவாய்
நீ.
_______________
கைலாஷ் சிவன்

13 Shanmugam Subramaniam, L

நவீன கவிதை வரிசை - 91
------------------------------------------
கொலைக் கருவிகளை விற்றுத் திரிபவன் நான்
அழுதலின் சங்கீதம்
உன் கடவுளிடம் சொல்லி மண்டியிடு
கனவுகளைக் கனவுகளாகக் காணவிடாமல்
தினமும் தூக்கமற்ற இரவுகள்
மூலையில் சுவர்க்கோழி இருளில் ஆந்தை
சுற்றி வட்டமிடும் பூனையின் கண்கள்
மரண வலையில் சுவாசித்தழும் என் கண்கள்
உன்னை ஒன்றும் சொல்வதற்கில்லை நான்
வரும் பௌர்ணமி இரவின் தேதியை மட்டும்
உரக்க (கத்தி) தெரிவித்துவிட்டு
கடலின் அலைகள் திமிறி நிலம் மேவும்
சாவைக் குறித்துக்கொள்
இனிமேல் யாரும் கனவுகள் காண்பதற்கில்லை
இன்று என் இதயத்தை விற்றுவிட்டு
வெறும் கையோடு
வீடு திரும்புகிறேன்.
(சுப்பையா பாரதி என்கிற வாத்தியாருக்கு)
_______________


சீக்கிரம் சிலுவையில் அறைந்து விடுங்கள் – கைலாஷ் சிவன்


நான் மண்டியிடப்  போடுவதில்லை
 உங்கள் முன்னால்
தோளில் கனக்கும் மரத்துடன்
 பயணம்
நெடுந்தொலைவு
தோள் மாற்ற ஒதுங்கியபோதும்
கசையடி
எப்படியும் கொல்லத்தான் போகிறார்கள்
அடித்தே கொல்லுங்கள்
என்றொதுங்கியபோதும்
கசையடி
 ஜீவன் போகவில்லை
யாரது என் வஸ்திரத்தை தொட்டது
சைத்தானும் சோதிக்கத்தான் செய்தான்
தேவனும் சோதிக்கத்தான் செய்தான்
இந்த மனிதர்கள் தான்
என்னை சிலுவையில் அறைகிறார்கள்
 ஏலி ஏலி லாமா சபக்தாணி
மனிதர்கள் தாம் என்ன செய்கிறோம்
என்பதை அறியாமல்தான் இருக்கிறார்கள்
பிதாவே அவர்களை மன்னியும்
ஆமென்.

கவிதை : நானும் நீயும்  எழுதாமலிருப்பது

இது  என் உடம்பல்ல, உயிருமல்ல
நான் ஜீவிக்கிறேன்
யாருக்கு சாப்பிடுகிறேன், வேலை செய்கிறேன்
தூங்குகிறேன், புணருகிறேன்
சட்டையை மாற்றி மாற்றிப் போடுகிறேன்
இங்கு எதுவும் நானல்ல, நானல்லாத நானுமல்ல
நானாக இருப்பது குற்றம்
உன்னைப் போலத்தான் நானும்
என்னைப் போலத்தான் நீயும்
சொல்லிக்கொள்வோம் நாம் நாமல்ல
திரை விழுகிறது கறுப்பு ஜன்னல்
மரணத்தை எப்படி அழைக்க
சவம்.

Lakshmi Manivannan's photo.