Saturday 16 January 2016

கதாநதி 1: சூடாமணி - உளவியல் கலைஞர் பிரபஞ்சன்


கதாநதி 1: சூடாமணி - உளவியல் கலைஞர்

http://tamil.thehindu.com/general/literature/கதாநதி-1-சூடாமணி-உளவியல்-கலைஞர்/article8097124.ece
பிரபஞ்சன்

1


ஓவியம்: வெங்கி


வளர்ப்புப் பூனை வீட்டுக்குள் சாவதானமாக, எப்பக்கமும் திரும்பாது நடந்து வந்து, நீங்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் மேல் தாவி ஏறி, உங்கள் மடியில் தலை வைக்கும்போதுதான் பூனையையே நீங்கள் பார்ப்பீர்கள். பூனை சத்தம் எழுப்பாது. அறிவுக்கும் ஞானத்துக்கும் சத்தம் சத்ருவாகவே இருக்கிறது. மனம், இன்னொரு மனதைச் சத்தம் போட்டுக்கொண்டு தொடுவதில்லை. மவுனம் என்ற சக்திவாய்ந்த மொழியை நாம் அறிவோமே!

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் (1931 2010) கதைகள் , தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் முக்கியமான இடம் வகிப்பவை. சூடாமணியின் கதைகள் தமிழ், இந்திய விழுமியங்களின் வேர்களின் நிலை கொண்டு, மாற்றங்களை உட்செரித்துக் கொண்டு வெறுப்புகள் இல்லாத மனோ நிலைகளைக் கட்டமைக்கும் தத்துவப் பார்வை கொண்டவை. சத்தம் போட்டு பேசாதவை. பூனையின் காலடிகள் சத்தம் எழுப்புவதில்லை.

சூடாமணியின் தோள் பையில் பல உலகங்கள். அவரது கைவிரல்கள் போல அவருக்கு நெருக்கமானவை. அதில் ஒன்று குழந்தைகளின் அற்புத உலகம்.

யமுனா, கந்தனுடன் பாண்டி ஆடிக் கொண்டிருக்கிறாள். அம்மா, காரடையான் நோன்புக்கான சரடு கட்டிக்கொள்ள அழைக்கிறாள். ‘எனக்கு எதுக்கு சரடு’ என்கிறாள் யமுனா.

‘‘நல்ல புருஷன் கிடைத்து, அவன் ஷேமமாக இருப்பான். அதுக்குத்தான்.’’

‘‘எனக்கு எட்டு வயசுதானே ஆகிறது. அக்காக்கள் கல்யாணம் ஆனவர்கள். அவர்கள் கட்டிகிடட்டுமே.’’

கடைசியில் யமுனா, கட்டிக்கொள்ள வேண்டி இருந்தது. அவளுடைய சினே கிதன் கந்தனுக்கு உடம்பு திடுமென சரியில்லாமல் போயிற்று. நாளுக்கு நாள் நோய் முற்றிப் படுத்த படுக்கையானான். கந்தனின் தந்தையிடம் அவள் தாத்தா மருந்து கொடுத்துக் கந்தனுக்குத் தரச் சொன்னார். யமுனாவின் அப்பா, இங் கிலீஷ் டாக்டரை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அம்மா, நாட்டு வைத்தியரை அழைக்கச் சொன்னாள். பாட்டி, திருப் பதிக்கு வேண்டச் சொன்னாள். யமுனா யோசித்தாள். அவள் கையில் கட்டிய சரடு அவளுக்குப் புதிய எண்ணத் தைக் கொடுத்தது. அவள், கந்தனுக்கு மனைவி ஆகிவிட்டால் புருஷனை சரடு காப்பாற்றிவிடுமே! அவள் பெருமா ளிடம் ‘நான் கந்தனைக் கல்யாணம் பண் ணிக்கொள்கிறேன். என் வரப் போகிற புருஷனைக் காப்பாற்றிவிடு’ என்று வேண்டிக்கொள்கிறாள். கந்தன் பிழைத் துக் கொண்டான். மருந்து, இங்கிலீஷ் டாக்டர், நாட்டு வைத்தியர், வெங்கடா சலபதி எல்லோருமே கந்தன் பிழைத்த துக்கு உரிமை கொண்டாடினார்கள்.

யமுனா பெருமிதப் புன்னகைப் பூத் தாள். அவளுக்குத் தெரியும், கந்தன் பிழைத்தது எப்படி என்று. அவள் பெரு மாளை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைத்து, ‘உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால், வாயேன் உன்னை முதலில் ஆட விடுகிறேன்’ என்று பெருமாளை ஆட அழைக்கிறாள்.

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ தரத்தில் சூடாமணி, குழந்தைகள் பற்றிய பல கதைகள் எழுதியிருக்கிறார். குழந்தை களின் நீள அகலம் பற்றி, படிப்பு பற்றிக் கவலைப்படும் பெற்றோர் அவர்களின் உலகத்துக்குள் பிரவேசித்து அவர்களின் அசலான அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை என்பது சூடாமணி யின் கவலை.

ஐம்பது அறுபதுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவதில் அத்தனை சிரமம் இல்லை. கல்வி, அத்துடன் வேலை வாய்ப்பு, உலக அறிவு, பொருளாதாரச் சுதந்திரம் என்பது போன்ற பல கதவுகள் பெண்களுக்குத் திறந்து வைக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றோர் பொறுப்பிலிருந்து, காதல் மற்றும் கல் யாணத் தேர்வுகள் பெண்களின் சுதந்திரப் பரப்புக்குள் வந்து சேர்ந்தன. முன்னேற் றம் நோக்கிய இந்தச் சமூக மாறுதலைச் சூடாமணி மிக கவனமாக தன் கதைகளில் கையாண்டார். அவரது மிகச் சிறந்த கதைகளின் ஒன்று ‘நான்காம் ஆசிரமம்.’ அக்காலத்தில் (1972) மிகப் பெரிய தாவலை நிகழ்த்திக் காட்டியது.

தன் மனைவி சங்கரியை மயானத்தில் எரித்து, துயரத்தோடு திரும்பி நடக்கிறார் புரொஃபஸர் ஞானஸ்கந்தன். அப்போது சங்கரியின் முன்னாள் கணவன் மூர்த்தியைப் பற்றியும், அவளுடைய முதல் கணவனும் முதல் காதலனுமான மனோகரனைப் பற்றியும் உரையாடு கிறார்கள். பதினாறு வயதில் காதல் என்று எதையோ எண்ணிக்கொண்டு மனோகரனைத் திருமணம் செய்து கொள்கிறாள் சங்கரி. அத்திருமணத்தை வாழ்த்தியவர் அவள் தந்தையின் நண்பரான பேராசிரியர் ஞானஸ்கந்தன். பின்னர், மூர்த்தியைக் கைப் பிடிக்கிறாள். இரண்டு குழந்தைகளைப் பெறு கிறாள். திடுமென அதையும் துறந்து, 58 வயதான பேராசிரியரை ‘விரும்பு கிறேன்’ என்று சொல்லித் திருமணமும் செய்துகொள்கிறாள். பிறகு, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்கிறாள். பேரா சிரியர் விவாகரத்து கொடுக்கவில்லை. ஏன் எனில், அவர் அவளைத் துறக்க விரும்பவில்லை. சங்கரி, தன் முடிவைத் தானே தேடிக்கொள்கிறாள்.

பதினாறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட பருவம் சார்ந்ததும் கனவு சார்ந்ததும் ஆன, வசீகரத் துளிர்ப்பில் மனோகரன் அவள் காதலன் ஆனான். கனவு கலைந் தது. பின், அவள் உடம்பு அவளிடம் யாசிக்கிறது. அவள் மூர்த்தியை மணந்து இரண்டு குழந்தைகளையும் பெறு கிறாள். பின்னர், உடம்பு எல்லாம் ஒன்று மில்லை என்ற புரிதலில் அறிவும் ஞான மும் அவளை அழைத்துச் சென்று பேராசிரியரிடம் சேர்க்கிறது. அவர்கள் புத்தகம், வாசிப்பு, தத்துவம் என்று உலகை விசாலிக்கிறார்கள். அதே சமயம், சங்கரிக்கு றெக்கை துளிர்க் கிறது. பேராசிரியருக்கோ சங்கரியோடு சேர்ந்த வாழ்க்கை வேர்விட்டுப் பூமிக் குள் பிரவேசிக்கிறது. ‘மனிதர் தனியாகத் தானே வந்தோம். தனியாகத்தானே போக வேண்டும். தனிமைதானே நிரந்தரம். எனக்குத் தனிமை வேண்டும்’ என்கிறாள் சங்கரி. பேராசிரியர் அவளைப் பிரிய மறுக்கிறார். அவள் நிரந்தரமாகப் பிரிந்தே போகிறாள்

சங்கரியின் வளர்ச்சியை ஆசிரமம் என்கிறார் சூடாமணி. பிரமச்சரியம், இல்லறம், துறவு, வானப்பிரஸ்தம் என்பது போல, இது சங்கரிக்கு ஏற்பட்ட ஆசிரமம். தனியாக இருந்து பூரணம் பெற நினைக்கிறாள் அவள். அவளுக்கு அவள் போதும், அவள் அவளோடு மட்டும் உரையாடி, உறவாடி தன்னுள் இருக்கும் சங்கரியைக் காண அவள் விரும்புகிறாள்.

தனியாக இருப்பது, தனியாக வாழ்வது சிரம அனுபவமாகவே இருக்கிறது. பறவைகளை தவளைகள் விரும்புவதில்லை.

இது பால் தொடர்பான கதை இல்லை. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்கலாம். இது வேதாந்தமும் இல்லை. ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையுடன் இக்கதையை பேசுகிறார்கள். அக்கதை, அக்காலத்தில் பெரிய உரையாடலை ஏற்படுத்தியது. இக்கதை, அக்காலத்தில் பெரிய விவாதங்களை எழுப்பியது. எனினும், கலை, நுணுக்கம், சமூக அவதானம், இலக்கியத் தரம் என்ற வகையில் ‘நான்காம் ஆசிரமம்’ கதை தமிழில் நிலைத்திருக்கும். ஜெயகாந்தன் கதை உடம்பின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. சூடாமணியின் கதையோ, உடம்பைக் கடப்பதைப் பேசுகிறது.

1954 தொடங்கி 2004 வரை சுமார் 574 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் சூடாமணி. வெளி உலக அனுபவங்கள் அவருக்குக் குறைவு. அக வெளியை நிறைத்துக்கொண்டு, மனித மனசஞ் சாரங்களில் எழுத்துப் பயணம் செய்தார். அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக் கொண்டர்.

1967-ல் சூடாமணி ‘நீயே என் உலகம்’ என்று ஒரு கதை எழுதினார். அதில், ஒருவனுக்குப் பெரும் செல்வம் கிடைக்கிறது. அதை ஏற்கலாம் என்று யோசிக்கிறான். தன்னுடையதல்லாத அதை எப்படி செலவழிப்பது என்றும் நினைக்கிறான். கடைசியில் அறப்பணிக்கு நன்கொடை அளிக்கிறான். ‘‘பணத்தைக் கொடுத்து பொருள் வாங்குவார்கள். நான் சமர்த்தனான வியாபாரி. நான் பணம் கொடுத்து இளம் முகங்களின் புன்னகையை வாங்கப் போகிறேன்’’ என்கிறான்.

சூடாமணி 2010-ல் காலமானபோது, பல கோடி ரூபாய் அறச் செயலுக்கு அளித்துச் சென்றார். அவரால் பலன் பெறும் மாணவர்கள், மருத்துவப் பயனாளிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூனையின் இயல்பு மென்மையானது. ஆனால் இருப்பு வலிமையானது.

கதைகள், கற்பனைகள் என்று நாம் சொன்னாலும், அவற்றைப் படைத்தவர்களையே அவை இனம் காட்டுகின்றன. கதைகள் கண்ணாடிகள். எழுதியவர்களின் முகத்தையே அவை காட்டுகின்றன. கண்ணாடிகள் பொய் சொல்வதில்லை.