Wednesday, 15 November 2017

குஞ்ஞுண்ணியும் பாதசாரியும் நாற்பது வருடங்களும் - சுகுமாரன்

http://vaalnilam.blogspot.in/2017/11/blog-post_14.html
செவ்வாய், 14 நவம்பர், 2017

குஞ்ஞுண்ணியும் பாதசாரியும் நாற்பது வருடங்களும் - சுகுமாரன்

பாதசாரி

பாதசாரி என்ற விஸ்வநாதன் என் கல்லூரிப் பருவ நண்பர். சீனியரான அவரை நண்பராக்கியது இருவரையும் ஆட்டிவைத்த இலக்கியக் கிறுக்குத் தான். இலக்கியம் ஏற்படுத்தித் தந்த இரண்டாவது நட்பு அவருடையது.

உள்ளூர் நாளிதழில் வெளியான சிறுகதை ஒன்றை வாசித்து விட்டு, எழுதியவனைப் பார்ப்பதற்காக வீடு தேடி வந்த என் முதல் இலக்கிய நண்பரான ராமு பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரியில் விஸ்வநாதனுடன் ஏற்பட்ட நட்பு பதிற்றாண்டுக் காலம் நீண்டது. இலக்கியம், சினிமா, கலை என்று ஆர்வத்தையும் அக்கறை யையும் அலைச்சலையும் காசில்லாத் திண்டாட்டத்தையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்த நட்பு, பின்னர் என்றோ வழி பிரிந்தது.



என் தனி நூலகத்திலிருக்கும் புத்தகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். தமிழ், மலையாளம்,ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலுமாகச் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பொருள்வாரியாக அமைக்க விரும்பினேன். மலையாளக் கவிதை நூல்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது குஞ்ஞுண்ணியின் கவிதைத் தொகுப்பு கை தவறி விழுந்தது. அதற்குள்ளிருந்து ஒரு நான்கு பக்கத் தாள் வெளியே வந்தது. கவித (கவிதை) என்ற பெயரில் வெளிவந்த தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட தொகுப்புத்தான் குஞ்ஞுண்ணியின் முதலாவது தொகுப்பு என்று நினைக்கிறேன். புத்தகத்துக்கான முகப்பு ஓவியத்தையும் அவரே தீட்டியிருந்தார். புத்தகத்துக்குள்ளிருந்த தாளில் விஸ்வநாதனின் கையெழுத்தில் சில கவிதைகள் இருக்கின்றன. அவை குஞ்ஞுண்ணி கவிதைகளின் தமிழாக்கம். மொத்தம் ஒன்பது கவிதைகளை நண்பர் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியாது. ஆனால் நான் வாசித்துச் சொன்னதை வைத்து அவர் செய்தது அந்த மொழி பெயர்ப்பு.



கவித - குஞ்ஞுண்ணி



கேரள கவிதா கிரந்தவரி ( கேரளக் கவிதைநூல் வரிசை ) யில் வெளியான நூல்களில் ஒன்று குஞ்ஞுண்ணியின் தொகுப்பு. கவித - குஞ்ஞுண்ணி என்று மட்டுமே முகப்பு. இதே வரிசையில் இதே தலைப்பில் அன்று மலையாளத்தின் முக்கியமான கவிஞர்கள் 12 பேரின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இவையனைத்தும் 1977 - 78 ஆண்டுகளில் மாதம் ஒன்றாக வெளியானவை. கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவி வர்மா, சச்சிதானந்தன், காவாலம் நாராயணப்பணிக்கர், கே.ஜி. சங்கரப் பிள்ளை, ஜி.குமார பிள்ளை, கே. அய்யப்பப் பணிக்கர், எம். என் பாலூரு,என். என். கக்காடு, மாதவன் அய்யப்பத் ஆகியவர்கள் மற்ற கவிஞர்கள். இவர்களில் ஏழு பேர் இன்று இல்லை. இந்த வரிசையில் வெளிவந்த எல்லாத் தொகுப்புகளையும் வாங்கியதும் வாசித்ததும் இப்போது உற்சாகம் தரும் நினைவாகப் படர்கிறது. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு 'பழைய நண்ப'ரின் கைப் பிரதியைப் பார்க்கையில் அடிக் கரும்பின் இனிமை உள்ளே ஊறுகிறது. சில நினைவுகள் இனிமையானவைதான்.

பாதசாரி, விஸ்வநாதனாக இருந்த காலத்தில் தமிழாக்கம் செய்த குஞ்ஞுண்ணிக் கவிதைகள் இவை.




பாதசாரியின் கையெழுத்துப் படிகள்





1.

எனக்குண்டு
ஒரு உலகம்
உனக்குண்டு
ஒரு உலகம்
நமக்கில்லை
ஒரு உலகம்.


2.

நானொரு
கால் கவி
பெண்ணின்
இடுப்புப் பிரதேசம்
காண முடியாததால்...
கண்டிருந்தால்
நானொரு
அரைக் கவி ஆவேனோ
அன்றி
அரைக்கால் கவி ஆவேனோ?


3.

பிரபஞ்சம்
ஒரு படி
இறைவனதில்
ஒண்ணேகால் படி
இதென்ன
விவசாயம்?
இதென்ன
வியாபாரம்?


4.

ஆறாவது நாள்
கடவுள்
மண்ணால்
மனிதனைப் படைத்தான்
ஏழாவது நாள்
மனிதன்
கடவுளைத் திரும்பப்
படைத்தான்.


5.

காந்திக்கு
காந்தியே சிஷ்யன்
காந்தி சிஷ்யனுக்கு
உலகத்தில் எல்லோருமே
சிஷ்யராகணும்
தன்னைத் தவிர
எல்லாரும்
காந்தியாகணும்


6.

நமக்கேன்
இத்தனை முகம்,
படைத்தவன்
நான்முகனல்லவா?


7.

பெண்ணாய்த்தான்
பிறக்கிறார்கள் பலர்
பின்னால் அதில்
அதிர்ஷ்டத்தால் சிலர்
ஆணாக ஆகிறார்கள்.


8.

பிரம்மம் உண்மை
உலகம் மாயை
முலையும் ப்ராவும்போல.


9

பிறக்கும்போதே
என் மகன்
இங்க்லீஸ் பேசணும்
அதனால்தான்
என் மனைவிக்கு
பிரசவம் வைத்தேன்
இங்கிலாந்தில்.