நவீன கவிதை வரிசை -ராணி திலக்

நவீன கவிதை வரிசை -ராணி திலக் : https://www.facebook.com/arajasingh(ரோஸ் ஆன்றா)
ராணி திலக்


நவீன கவிதை வரிசை - 84
------------------------------------------
கண்ணாடியில் மறைபவன்

என் தாய் அலறுகிறாள். நான் கண்ணாடியைப் பார்க்கிறேன். தன் கனவில் அவள், இன்னும் ஓர் குழந்தையைப் பிரசவிக்க வேண்டியுள்ளது. கண்ணாடிக்கு வெளியே இருந்தும் என் பிம்பத்தைப் பிரிக்கவே முடியவில்லை. என் தாய் அலறிக் கொண்டே இருக்கிறாள். மூப்படைந்த கனவில், மூப்படைந்த அலறலில் நான் கண்ணாடியைப் பார்க்கிறேன். என் தலையில் ஓரிரு நாரைகள், அவள் தலையில் உள்ளது போல், அவள் அலறுகிறாள். நகரமெங்கும் இந்த அலறல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவள் கடைசியாகக் கதறினாள். அவள் பிரவசத்தைப் பார்த்தபடி வெளியேறுகிறேன். அவள் மயக்கத்தில் உறங்குகிறாள். அல்லது வேட்கை தீர்ந்தது. அவள் யோனியிலிருந்து வெளியேறியபடி, என் வயதொத்த, என்னைப் போன்ற ஒருவன், வேறொரு கதவைத் திறந்தபடி, கண்ணாடியில் மறைகிறான். அவன் தலையில் நரை புதிதாகவே ஒளிர்கிறது, எண்ணில் வெளியேற முடியாத கண்ணாடியின் மினுமினுப்பைப் போல். என் தாய் அலறிவிட்டாள். கண்ணாடியிலிருந்து உதிரம் வழிகிறது.
___________
ராணி திலக்

நவீன கவிதை வரிசை - 83
------------------------------------------
இடை, வெளி
ஒரு கண்ணாடி தம்ளர்
அதற்கு
இடையே
ஒரு மணிநேர
தூரத்தில் ஒரு தாள்.
தம்ளர்
இங்கே
கவிழ்ந்துகொண்டிருக்கிறது
தாள்
மிக தூரத்தில்
நனைந்துகொண்டிருக்கிறது.
___________
ராணி திலக்
நவீன கவிதை வரிசை - 82
------------------------------------------
தேடல்
அவன்
தன் வெறுப்பைப் போக்குவது
எப்படி என்று தெரியவில்லை
தன் கைக்கு கிடைத்த
செடியின்
இலையைக் 
கிழித்த
தூள் தூளாய் எறிந்தான்,
தன் பாகங்களை
எப்படிப் பொருத்திக் கொள்வது
என்பது அந்த
இலைக்குத் தெரியவில்லை,
அதன் நிழல்கள்
மட்டும்
தரையில் இலையைத்
தேடியபடி
அலைந்து கொண்டே செல்கின்றன.
___________
ராணி திலக்

நவீன கவிதை வரிசை - 81
------------------------------------------
மிதிவண்டித் திருடன்
மாட்டி இருக்கவேண்டிய இடத்தில் சாவி இல்லை. தேடத் தொடங்கினேன். எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத ஒருவன் அந்தத் தெருவில் பிறந்து, இந்தத் தெருவில் நுழைகிறான். நான் சாவியைத் தேடுகிறேன். பூட்டப்படாத வண்டியைத் தொடுகிறான். நான் சாவியைத் தேடுகிறேன். திறந்த தெருவில் ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான். சாவி எனக்கு கிடைத்துவிட்டது. பூட்டின கதவைத் திறந்து, வெளியே பார்த்தேன். தன்னைப் பூட்டிக்கொண்டு வண்டி நிற்கிறது. நெருக்கமான சாலையில், யாருடைய வண்டிகளையோ, யார் யாரோ ஓட்டியபடி மறைக்கிறார்கள். அவர்களுக்கு இடையில், என் கற்பனையில் காணாமல் போன மிதிவண்டியை, இன்னும் பிறக்காத, இப்போது எங்கோ வாழ்கிற, எப்போதோ இறந்த, நான் பார்த்து, யாரும் பார்க்காத ஒருவன், எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத மிதியவண்டியை, பூமியின் எல்லா சாலைகளிலும் ஓட்டிக் கொண்டே இருக்கிறான். சாவி திறந்து விட்டது. அவன் ஓட்டுவதை நிறுத்தவே இல்லை.
___________
ராணி திலக்





நவீன கவிதை வரிசை - 80
------------------------------------------
அக்னி நட்சத்திர கவிதை
தெருவைப் பறிக்காமல்
மதிலைப் பறிக்காமல் வேலிப் படலைப்
பறிக்காமல் செடியைப் பறிக்காமல்
ஒரு மொக்கைப் பறித்து
வெவ்வேறு விதமான உடலில்
கடக்கிறாள் சிறுமி
அவள் விரலில் பூக்கத் தொடங்கி
மதில்களில் வேலிகளில் செடிகளில்
பூத்துக் கொண்டு
வாடிக் கொண்டு வருகிறது வெய்யிலில்
சிறுமியாய்க்
கோவில் சென்று
திரும்பும்வேளை
மூதாட்டிகளான பெண்களின்
விரல்களில்
வெய்யிலில் படர்ந்துகொண்டு 
கடந்தபடி 
எங்கும் சிதறியபடி.
___________
ராணி திலக்

ரோஸ் ஆன்றா

நவீன கவிதை வரிசை - 79
------------------------------------------
வயோதிகனின் மாலைவேளை
இசைக் கருவிகளின் கூடு திரும்புகின்றன
யாருமற்ற வெளி யாருமற்றே இருக்கிறது
என்பதை நம்பமுடியாதபடி
முதிர்ந்த இருள்
போன்ற வயோதிகன் வரப்பில்
நின்றபடி வெளியைப் பார்க்கிறான்
அபோத மலையின் வெளியில்
யாருமில்லை என்பதைவிட
தனக்குள் யாரோ ஒருவன்
இருப்பதை அவன் அறிய
ஓசையொன்று
வெண்ணிறமொன்று
வயலில், மின்னி மறைகிறது
வயல் குறைந்துவிட்டது
அவன் கையைத் தட்டுகிறான் 
முதிர்ந்த கையோசையில்
வயலில் திரும்பவும் ஒளிகிறது
அவன் உள்ளங் கையிலிருந்து
வயோதிக ஓசை மீண்டும் எழ 
மிகத் தூரத்தில்
உருவமற்ற அருவத்தின் கையோசைகள்
எங்கும் எதிரொலிக்க
எல்லா வயலிலும் கொடுக்குகள்
வெளி 
ஏறிப் பறக்கின்றன.
___________
ராணி திலக்



5 October at 21:26 · Nagercoil · 
நவீன கவிதை வரிசை - 78
------------------------------------------
விலகல்
யானைகளின் வாய்களில்
அசைந்து கொண்டிருக்கிறது கல்சங்கிலி
சின்னஞ் சிறுபெண்
குடத்திலிருந்து விழும் நீர் மிக
மிக அருகில்
பரவிக் கொண்டிருக்க
பார்த்துக் கொண்டிருக்கும்
பால்ய பறவைகள் தம்
முதுமைக்குப் பறக்கின்றன நிழல்படத்தில்
என் 
பார்வையின்
கோர்ப்பு
கழல்கிறது
வெயிலைக் குடத்திலிருந்து
வெளியேற்றும் ஒரு மூதாட்டி
எங்கோ வழிகிற ஓர் அருவி
தூர பிரதேசத்தில்
அண்ணாந்தபடி கிடைக்கும் நாரைகள்
இவற்றை 
ஏந்தியும் ஏந்தாமலும் கிடக்கும்
நிழல்படங்கள்
சங்கிலி
பிரிபட
தனித் தனியாகும் 
கல்
வளையங்கள் அந்தபுரத்தில் மிதக்கின்றன
யானைகள் பறக்கின்றன
நிழல்படங்கள் 
என் பிம்பங்களை 
விலக்குகின்றன சேர்க்கின்றன.
___________
ராணி திலக்

நவீன கவிதை வரிசை - 77
------------------------------------------
வியாதி
உள்ளே நுழைந்தவன் காண
மர அலமாரிகளில் புட்டிகள்
தலைகளால் மூடப்பட்டிருக்கின்றன
நிவாரணிகளை விற்பவனும் ஒரு வகையில்
வியாதிஸ்தனாகிறான் போல்
எண்ணி வாங்கித் திரும்பியவன்
தெருவெங்கும் வீடுகளெங்கும்
ரோகம்
பற்றிப் படர்கிறது வெளியாகி
முட்கள் குத்த
ஊமையான காயத்தில் இருந்து
ரத்தம் பீறிடுகிறது
வெள்ளமாகி அதில் நனைந்து 
கொண்டே செல்பவன் தன்
நண்பனுக்கென 
சட்டைப் பையில்
வைத்து எடுத்துவரும்
மருத்துபுட்டி
இதயத்தின் நரம்புத் துடிப்பில் உரசுகிறது
அவன் வியாதிஸ்தன் இல்லை
என்பதிலிருந்து விடுபடுவதற்கு முன்பே
அவன் தலையைக்
காகம் கொத்த முயல்கிறது
பார்ப்பவர்களும் அவனையே 
நோயாளியாக்குகிறார்கள் அப்பொழுதே
தன்னிலிருந்து பிரித்துப்
புட்டியைத் தரையில் எரியும்
பொழுது
பூமி
சரும ரோகியானது.
___________
ராணி திலக்

ரோஸ் ஆன்றா
4 October at 20:34 · Nagercoil · 
நவீன கவிதை வரிசை - 76
------------------------------------------
கத்திரி பருவம்
புல்லின் கடிகாரத்தில் 
இளவேனில் காலம் நகர்கிறது 
ஓணான் முதுகில் மலைகள் தாவ
நித்ய மல்லிகள் ருது அடைகின்றன
மணல் வீசும் காமத்தில்
வண்ணத்துப்பூச்சிகளின் குழல் நீள்கிறது
வெளியில் பருந்தின் வட்டச் சுழல் மிதக்க
புயலில் பம்பரம் சுழல்கிறது
சரக்கொன்றை நடனமிட
குயில் ஓசை எழுப்ப
பிரண்டைப் பூவில் சிசுவதனம் சிரிக்கிறது
அதன் அந்தகாரச் சிரிப்பில்
இச்சூரியலில் வழியும் தீயின் வெள்ளம் பாய
சமணரில் உறங்கும் பாறையின்
ஓர வயலில்
கதிர்களில் மணல்வண்ணம் முற்றுகிறது
அரிவாள்கள் வேட்டையாடுகின்றன
உமிகளுக்குள் உறங்கும்
வைரங்கள் என்னும் மின்மினிகள்
நிலத்தில் சாய்கின்றன அயர்வில்
உன் இமை உறங்க
உன் நிழல் உன்னை எழுப்ப
மஞ்சம்புல்லில் அஸ்தமனம் நிகழ
துயில் கலைகிறது
அவ்வேளை அம்
புலியின் சருமத்தில் அலைகிறது
மஞ்சள் வெயில்.
___________
ராணி திலக்

ரோஸ் ஆன்றா
3 October at 20:24 · Nagercoil · 
நவீன கவிதை வரிசை - 75
------------------------------------------
எலும்புக்கூடும் வளையமும்
மாடிப்படிக்கட்டின் 
ஓரத்தில் ஓர் எறும்புக்கூடு 
இருமிக் கொண்டிருக்கிறது
சுவர் அதிரும்படியும்
பார்க்கும் அவன் நடுங்கும்படியும்
இப்போதே இந்தப் புகைப்பிடித்தலை
விட்டுவிட நினைக்கிறான்
மரணத்தைக் குறித்த அச்சமோ
நரம்புதளர்ச்சி குறித்த கலக்கமோ
அவனில் முன்னைவிட
அதிகமாக வளர்கிறது துளிர்விடுகிறது
மருத்துவமனை என்றும்
தூக்குக்கயிறு என்றும் வளர்கிறது
அப் பகற்கனவில் விடுபட அந்தச் 
சிகரெட்டை 
அந்த எலும்புக்கூட்டிற்குத் தானம் அளிக்கிறான்
இப்போது அவன்
சாவிலிருந்து விடுபட்டவனாகிறான் 
சில நாள் கழிகின்றன
மீண்டும் அதே மாடிப்படிக்கட்டில்
அந்தக் கிழவன் இல்லை என்றாலும்
அவன் இருப்பதான தோற்றம்
இருந்தபடியே இருப்பதை
உணர்கிறான் விசாரிக்கிறான் மற்றவர்கள் வார்த்தையில்
எலும்புக்கூடு இறந்துவிட்டு
இருக்கிறது பிரக்ஞையில் என்றபோதிலும்
தானே இறந்ததாக உணர்வு கொள்கிறான்
குற்ற உணர்வு கொள்கிறான்
அல்லது புதிய சிகரெட்டைத்
தான் புகைத்துக்கொள்ள
தன் உடலைக் கிழவனாக்கிப் புகைக்கிறான்
மாடிப்படிக்கட்டின் ஓரத்திலிருந்து
ஒரு புகை வளையம்
கட்டிடத்தை விட்டு
வானத்திற்கு மிதந்து செல்கிறது. 
___________
ராணி திலக்


நவீன கவிதை வரிசை - 74
------------------------------------------
தாழ்ப்பாளும் தாழ்ப்பாளின்மையும்
இரவும் பகலும் 
துடைத்தபடியிருக்கும் தாழ்ப்பாள்
இல்லாத நிலைப்படி
திறந்தபடியே கிடக்கிறது
சிறுவன் வயோதிகனாகிக் கடக்கும்வரை
சமையும் கண்ணாடியில் பாறைகள்
வெய்யிலில் தகித்துக் கொதிக்கின்றன
மரங்களின் செடிகளின் நிழல்கள்
மெல்ல மெல்ல தடவிச் சாந்தம் கொள்கின்றன
ஓர் ஆட்டிடையன் குழலோசையில்
மிருகங்களில் செடிகளில் சிற்றோடைகளில் அருவிகளில்
கண்ணாடி அலைபாய்கிறது
சலனமில்லாமல் உறங்கும் கண்ணாடிகள்
மத்திய வேளைகளில்
இரவுகளில் கனவில் லயிக்கின்றன
ஒரு சிறுமி
கண்ணாடியைக் கடக்கிறாள்
பருவம் எய்துகிறாள் தன்னந் 
தனியறைகளில் கண்ணாடிகளுடன் வாழும் இல்லங்கள்
நல்லிதயம் கொண்ட உடல்களாகின்றன
ஒரு கண்ணாடியில்
முலைகள் வளர்ந்துகொண்டே துடிக்கின்றன
தாழ்ப்பாள் கொண்ட கண்ணாடியில்
ஒரு குழந்தை தடுமாறியபடி நடக்கிறது
கண்ணாடியின் பாதை சிக்கலாகிறது
கிணற்றில் ஆற்றில் நதியில்
கரையும் கண்ணாடிகளை
தூக்கிட்டுக் கொள்ளும் கண்ணாடிகளை
கருடனும் ஆந்தையும்
கவனித்தபடியே இருக்கின்றன 
தூய்மையற்றக் கண்ணாடிகளை
கனவும் பகல் கனவுமே
காப்பாற்றிக் கொண்டுவருகின்றன.
___________
ராணி திலக்

ரோஸ் ஆன்றா






ரோஸ் ஆன்றா
2 October at 19:14 · 
நவீன கவிதை வரிசை - 73
------------------------------------------
ஏதும் அறியாத கோப்பை
அந்த இடத்தை விட்டு 
அவன் போய்விடவே உணர்கிறான்
கைவிலங்கைப்போல்
ஒரு கைக்குலுக்கலில்
அவன் பயணம்
தடைபட்டுக் கொண்டே இருக்கிறது
எதிரில் ஒரு கோப்பை
பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது
எடுக்கின்றன கைகள்
பருகுகின்றன இதழ்கள்
அவன் கைகள் வேகவேகமாகச் சென்று
படபடப்புடன் திரும்பி விடுகின்றன
அன்பு என்னும் விஷம்
அல்லது பகை என்னும் அமிர்தம்
போதையை ஏற்றி அலையவிடுகிறது
ஒரு கோப்பையின்
முன் அவர்கள் தங்களின்
குற்றத்தை ஒப்புக் கொள்கின்றனர்
தண்டனையையும் அளித்துக் கொள்கின்றனர்
விடுதலையும் அடைகிறார்கள்
ஏதும் அறியாத கோப்பை
தன்னைக் காலி செய்துகொண்டே
இருக்கிறது அவர்கள் போலல்லாமல்
அவன் போதையில்
தன்னில்
நீதிபதியாக
குற்றவாளியாகள் மாறிக்கொண்டே இருக்கிறான்
ஏதும் அறியாத கோப்பை 
உடைந்து சிதறுகிறது.
___________
ராணி திலக்



ரோஸ் ஆன்றா
1 October at 17:40 · Nagercoil · 
நவீன கவிதை வரிசை - 72
------------------------------------------
சாம்பல்
எவனோ ஒருத்தன் தானே 
தன்னை எரித்துக் கொன்றுகொல்ல
எனக்கு ஏதும் அப்படி நிகழாதபடி
நாளை நாளை என்றே நீளும் 
கால எதிர் நாளைகளில்
ஏதோவொன்றில் ஒன்றி
என் உடலை நானே எரித்துக்கொண்டிருக்க
அங்கிருந்தே தொடங்கும்
என் உடலில் நெருப்பு
நிகழ்கால என்னை எரித்து
நேற்றின் நேற்றின் முன் எரித்துப்
பரவுகிறது என் முதல் நேற்றுக்கு
அதன் சாம்பல்
காற்றாகி
நான் பூத்த கிழமையிலிருந்து
அறிய முடியாத என் திதிநாளுக்குப் படிய மீள்கிறது.
இன்றின் உறுப்பில் இச்சூரியன்
மண்ணில் புதைய
அதன் தேகத்திலிருந்து
துளி யோர் ரத்தத் திவலை சிதறி 
சப்பாத்திக்கள்ளியின் முள்ளருகில் மலர்கிறது
காந்திக்கு விடை தர
என் கானா முழுக்கச் சிதையின் நெடி மணக்கும்
நாளையும் மணக்கும் 
என்றே தொடங்கிய மறுதினத்தில் விழிக்கிறேன்
என் உடலின் ஒரு பகுதி எரிகிறது
என் இருதயத்திலிருந்த்து
பல நரம்புகளுக்குப் பாய்கிறது
சாம்பல்.
___________
ராணி திலக்