Sunday 10 January 2021

மூன்றாவது நாடக அனுபவமும் பின்னணியும் ‘நட்சத்திரவாஸி’ - 1977 - 78 - Anandarani Balendra

 Anandarani Balendra

எனது மனப்பதிவு – 4

மூன்றாவது நாடக அனுபவமும் பின்னணியும்

‘நட்சத்திரவாஸி’ - 1977 - 78 

எனது முன்னைய மனப்பதிவுகளில் நான் நடித்த நவீன நாடகங்களான ‘பிச்சை வேண்டாம்’, 'மழை’ நாடக அனுபவங்கள் பற்றியும் அந்தக் காலத்தில் அதாவது 60கள் 70களில் ஈழத்து தமிழ் நாடக அரங்கில் பெண்களின் பங்களிப்பு, அவர்கள் பற்றிய கணிப்புகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றியும் எழுதியிருந்தேன். 1975இல் ஆரம்பித்த எனது நவீன நாடகப்பயணம் கடந்த 45 வருடங்களாக இடைவிடாது தொடர்வது பற்றியும் எழுதியிருந்தேன். 

இந்தப் பதிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு சிலரின் அண்மைய செயற்பாடுகள் எனக்கு உணர்த்துகிறது. நான் சம்பந்தப்பட்ட நாடக முயற்சிகளை நான் இருக்கும்போதே தவறாகக் கூறுவதும் இருட்டடிப்பு செய்ய முனைவதும் நடைபெறுகிறது. தெரிந்தே செய்பவர்களை என்ன சொல்வது. இப்பொழுது இலங்கையில் ‘நாடகமும் அரங்கியலும்’ ஒரு பாடநெறியாக பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் இருக்கும்போது தவறானவற்றைக் கூறுவதும் எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

அண்மைக் காலங்களில் நான் எனது கணவரும் நாடக நெறியாளருமான பாலேந்திராவுடன் இணைந்து இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை ‘நாடகமும் அரங்கியலும்’ மாணவர்களுக்கு நடத்தியபோது எம்மைப் பற்றிய பல விடயங்கள் அவர்களுக்கு மிகப் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன. மாணவர்களுக்கு மட்டுமல்ல, பல ஆசிரியர்களுக்கும்தான். நாம் இலங்கையில் ஆற்றிய தொடர் நாடகப் பணிகள் பற்றி அவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. பாடத்திட்டத்தில் பாலேந்திராவைப் பற்றி சில வரிகளே இருப்பதாகச் சொன்னார்கள். பாடத் திட்டத்தை ஆக்கியவர்கள் தவிர்க்க முடியாமல் இதனைச் சேர்த்திருக்கலாம் என்று எனக்குப்படுகிறது. 

ஈழத்து நவீன தமிழ் மேடை நாடகத்துறையில் முன்னோடிகளாயிருந்த பெண்களின் பங்களிப்புகள் குறித்து மாணவர்களுக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. இவை பற்றி பாடத்திட்டத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் ஆசிரியர்கள் எனக்கு அறியத் தந்தால் நல்லது. 

இலங்கையில் நான் வசித்த காலத்தில் 1975இல் இருந்து 1982 ஜுன் மாதம் வரையான எழு வருடங்களில் 14 நாடகங்களில் நடித்திருக்கிறேன். இவை எல்லாம் முழுநீள நாடகங்கள். இவை பாடசாலை நாடகங்கள் அல்ல. நவீன நாடகங்கள். 75க்கும் மேற்பட்ட தடவைகள் மேடையில் நடித்துள்ளேன். இது தவிர பாலேந்திரா நெறிப்படுத்திய பேர்டோல்ட் பிறெக்டின் ‘யுகதர்மம்’ நாடகத்தின் பாடகர் குழுவில் ஒருவராக சுமார் 20 மேடையேற்றங்களில் பங்குபற்றியுள்ளேன். வரலாற்றில் இடம் பிடிப்பதற்காக நான் ஓடவில்லை. பதிவுகள் என்று வரும்போது அது சரியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். எனது பதிவுகளை நான் அதற்கான ஆதாரங்களுடனேயே பதிவிடுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

எனது பதிவுகள் பற்றி என்னோடு உரையாடிய சில நண்பிகள் பாடசாலை நாடகங்களில்கூட ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து நடிப்பது முற்றாகத் தவிர்க்கப்பட்டதாகக் கூறினர். பெண்களே ஆண் வேடமிட்டும், ஆண்கள் பெண்ணாகவும் நடித்துவந்தனர். நான் கூட எனது பாடசாலைக் காலத்தில் நாடகங்களில் நடித்துள்ளேன். மகளிர் பாடசாலை அது. மீசை கீறி, தாடி ஒட்டி ஆண் வேடம் போட்டாலும் எமது குரல் எம்மைக் காட்டிக்கொடுத்துவிடும். எனது பாடசாலை நாடக அனுபவங்கள் பற்றி பின்னர் ஒரு பதிவில் எழுதவுள்ளேன்.

பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகம் 1976 இல் முதல் மேடையேற்றம் கண்டு பின்னர் 1977இல் இலங்கையில் வேறு இடங்களில் மேடையேறிக் கொண்டிருந்த வேளையில், இனக்கலவரம் வெடித்தது. அதற்கு முன்னர் கொழும்பு தெகிவளையில் வசித்து வந்த நான் இனக்கலவரம் ஆரம்பமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் கொழும்பு மவுண்ட்லவனியாவில் எனது பெற்றோர் சகோதரர்களுடன் வேறு வீட்டில் வசிக்க ஆரம்பித்திருந்தேன். 

நாம் இருந்த தெருவில் ஓரிரு தமிழ் குடும்பங்களே வசித்து வந்தன. காடையர்கள் தமிழர்களைத் தாக்குகிறார்கள் என்ற செய்தி எம்மை வந்தடைந்தது. எனது அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே 1958 இல் நடந்த இனக்கலவரத்தின் போது தாம் பொல்காவலவில் இருந்து எப்படித் தப்பினார்கள் என்ற கதையை எமக்குச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு இதன் தாற்பரியம் நன்கு புரிந்திருந்தது. இப்போது நாங்கள் ஐந்து பிள்ளைகளும் கூட. 

நாம் வசித்த வீட்டின் பின்புறமாக அனெக்ஸில் ஒரு பறங்கியர் (Burgher) குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இருவரது வீட்டிற்கும் இடையில் ஒரு கதவு இருந்தது. அவரவர் பகுதிகளில் பூட்டி வைத்திருந்தோம். அவ்வப்போது கண்டால் ‘ஹலோ’ சொல்லும் அளவில்தான் எமது உறவு இருந்தது. பதட்டம் நிலவிய வேளையில் அவர்கள் எம்மிடம் வந்து பொதுக் கதவின் பூட்டை நாம் திறந்து வைத்துள்ளோம். உங்களுக்கு ஆபத்தென்று கருதினால் எமது பகுதிக்கு வரலாம் என்று சொன்னார்கள். ஒரு இரவு அங்கே தங்கினோம். 

காடையர்களுக்கு எமது வீடு தெரிந்துவிட்டது. அடுத்த நாள் நிலமை மோசமாகியதை அடுத்து எமது பக்கத்து வீட்டில் குடியிருந்த சிங்களக் குடும்பத்தினர் தமது வீட்டில் எம்மைத் தங்கவைத்தார்கள். மறுநாள் எமது வீதியில் கத்தி, பொல்லுகளுடன் தமிழர்களைத் தேடித்திரியும் காடையர்களைக் கண்டவுடன் வீட்டுச் சொந்தக்காரர் தனது மாமனாரின் வீடு பாதுகாப்பானது என்று கூறி அங்கே அழைத்துச் சென்றார். மாமனார் அந்த இடத்தின் கவுன்சிலராக இருந்தவரென்பதும் அவரது காரில் எம்மை அழைத்துச் சென்றதும் எனக்கு நல்ல ஞாபகம். 

அவரது வீட்டில் எமக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவர, அது அவருக்கே ஆபத்தாக மாறும் என்று தெரிந்தபோது எனது அப்பா வெள்ளவத்தை பிள்ளையார் கோயில், கதிரேசன் மண்டப வளாகத்தில் தமிழர்களுக்கான முகாம்கள் திறந்திருப்பதை அறிந்து அங்கே எம்மைக் கொண்டுபோய் விடுமாறு கேட்டார். இரண்டு கார்களில் அவர்கள் எம்மைக் கூட்டிச் சென்றார்கள். வழியில் தெகிவளை சந்தியில் தமிழர்களின் கடைகள் எரிவதைப் பார்த்தோம். உயிராபத்து ஏற்படும் வேளையில் நடந்தவை, அது எவ்வளவு காலம் சென்றாலும் மனதில் பதிந்துவிடுகிறது. மனிதநேயம் என்பது சாதி மத இனத்திற்கு அப்பாற்பட்டது என்பதும் புரிந்தது.

முகாமுக்குப் போனபோது அங்கே ஏற்கனவே பல பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். அதிலே காயப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலவிதமானோர் இருந்தனர். சிலரின் கதைகளைக் கேட்டபோது எமது துன்பம் கடுகளவானது. எல்லோருக்குமான உணவு விநியோகம், சுகாதார சேவைகள் போன்றவற்றை ஒழுங்குமுறையில் செய்வதற்கு நானும் என்னைப்போன்ற இளையவர்கள் சிலரும் தொண்டர்களாக பணியாற்ற ஆரம்பித்தோம். அப்போதுதான் இன்னுமொரு இளைஞர் குழுவினரும் அங்கே தொண்டாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அக் குழுவில் பாலேந்திராவும் என்னோடு ‘பிச்சை வேண்டாம்’ நாடகத்தில் நடித்த சிலரும் இருந்தனர். 

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரம் அது. என்னோடு ஒன்றாகப் படித்த லோகா சிவஸ்கந்தராஜா ( சிவசிங்கம்) இந்த முகாமிற்கு எதிரில் இருந்த பம்பலப்பிட்டி flats இல் வசித்துவந்தார். கொழும்பில் அப்போது இந்த flats, ரொறிங்டன் அன்டசன் flats என விரல் விட்டு எண்ணக்கூடிய தொடர்மாடி வீட்டுக் கட்டடங்கள்தான் இருந்தன. இப்போது நிலைமை வேறு. தனி வீடுகள் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. 

நாம் தங்கியிருந்த முகாமில் சுகாதார வசதிகள் மிக மோசமாக இருந்தன. ஆண்கள் சமாளித்தார்கள். பெண்கள் நாம் சிரமப்பட்டோம். குறிப்பாக இளம் பெண்கள். அவ்வேளையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்திய நேரங்களில் லோகாவின் வீட்டில் குளியலறை போன்றவற்றை எனக்கு மட்டுமல்ல, சிரமப்படும் பெண்களுக்கும் பாவிக்க உதவினார்கள். லோகாவுடன் இப்போதும் தொடர்பில் இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

எனது அப்பா எங்களை எப்பிடியாவது யாழ்ப்பாணத்திற்குக் கூட்டிப்போக வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தார். கொழும்பு துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் என்றார்கள். ஆனால் அது எப்போது என்று யாருக்கும் நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. இதற்கிடையில் இலங்கை விமான சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த எங்கள் உறவினரான சுந்தரகுமார் (இவர் பின்னர் எனது அக்காவைத் திருமணம் செய்து எனது மைத்துனர் ஆனார்) கொழும்பிலிருந்து பலாலிக்கு விமான சேவை இடம்பெறவுள்ளது என அறிந்து அதில் நாம் பயணிப்பதற்கு ரிக்கற்றுகளை பெற்றுத் தந்தார்.

இரண்டு பஸ்களில் ஆமிக்காரரின் பாதுகாப்போடு இரத்மலானை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். போகும் வழியில் தமிழர்களுக்கெதிரான கூக்குரல்கள் எழுப்பப்பட்டது எமக்குக் கேட்டது. விமான நிலையத்திலும் பல மணித்தியாலங்கள் நாம் எல்லோரும் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம் என்ற ஒரு அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது. பல மணி நேரத்திற்குப் பின்னர் நாம் எல்லோரும் விமானத்தில் ஏறினோம். விமானத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் விமானப் பயணம் அது. அதுவும் பெரிய jet விமானம். எல்லோரும் அது jumbo jet என்று பேசிக்கொண்டார்கள். 

விமானம் பலாலி விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, தமது உறவினர்கள் யாராவது இதில் வருகிறார்களா என்று பார்ப்பதற்கு சிலரும் jumbo jet ஐ பார்ப்பதற்கு பலரும் கூடியிருந்தார்கள். அந்த நேரம் நாம் வருவது பற்றி உறவினர்கள் எவருக்கும் அறிவிக்க முடியாத சூழ்நிலைதான் இருந்தது. எனது அப்பாவும் ஒரு காரைப் பிடித்துக் கொண்டு எமது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்குப் போய் உறவினர் வீட்டில் தங்கலாம் என்று திட்டமிட்டார். 

அவ்வேளையில் அச்சுவேலிக்கு அருகில் உள்ள கதிரிப்பாய் என்ற சிறிய ஊரில் வசித்துவந்த எனது அம்மாவின் தாய் மாமனாரான நடராஜா அவர்களின் இரு மகன்மார் விமான நிலையத்தில் எம்மைச் சந்தித்து தமது வீட்டிற்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். நாம் சிலவேளை இந்த விமானத்தில் வரக்கூடும் என்று தாம் எதிர்பார்த்ததாகவும் அதனால் அங்கு வந்ததாகவும் சொன்னார்கள். அப்பா, அம்மா, நான், எனது சகோதரர்கள் என ஏழு பேர் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கதிரிப்பாயில் அவர்கள் வீட்டில் தங்கினோம். எங்களை எந்தக் குறையுமில்லாமல் மிக நன்றாகப் பார்த்தார்கள். 

21 வயதுவரை கொழும்பு நகரத்தில் வாழ்ந்த எனக்கு இந்தக் கிராம வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருந்தது. வயற்காணிகளும் தோட்டக் காணிகளும் நிறைந்த ஊர் அது. எந்தவித பரபரப்பும் இல்லாத அமைதியான சூழல். எனக்கு அது பிடித்திருந்தது. தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் என இயற்கை உணவு. நான் முதன் முதலாக சைக்கிள் ஓடப் பழகியதும் அங்குதான். எனது தம்பிமார் நன்றாகப் பழகிவிட்டார்கள். இரண்டு மூன்று விழுகையுடன் எனது சைக்கிள் ஓடும் முயற்சி தோல்வி கண்டது. யாழ்ப்பாணத்தில் நான்கு வருடங்கள் நான் வசித்தபோதுதான் சைக்கிளின் உபயோகத்தின் முக்கியத்துவம் எனக்கு விளங்கியது. மீண்டும் முயன்று தோற்றதுதான் மிச்சம். 

கொழும்பு சென்ற அப்பா அங்குள்ள நிலைமையை அறிந்து திரும்பியவுடன் நாம் எல்லோரும் இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்திலேயே வசிக்கப் போவதாகவும் தான் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்திற்கு மாற்றலாகி வரவிருப்பதாகவும் சொன்னார். அப்பா புகையிரத நிலைய அதிபராக பல காலம் பல ஊர்களில் வேலை பார்த்து பின்னர் எமது சிறு வயதில் இருந்து கொழும்பு – மருதானையில் புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 

சுமார் ஒரு மாதம் சென்ற பின்னர் திடீரென ஒருநாள் பாலேந்திரா நான் தங்கியிருந்த கதிரிப்பாய் வீட்டிற்கு வந்தார். எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். இவர் எப்படி நாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வந்தார் என்று ஒரே யோசனை. அப்போது எனக்கும் பாலேந்திராவிற்கும் இடையில் ஒரு சக நாடகக் கலைஞர் என்ற ரீதியிலான நட்பு மட்டுமே இருந்தது. தான் எமது உறவினர் மூலமாக விசாரித்து அறிந்ததாகச் சொன்னார். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று நலம் விசாரிப்பதற்காக வந்த பாலேந்திரா சும்மா வரவில்லை. ஒரு நாடகப் பிரதியுடன் வந்தார். அந்த நாடகம்தான் தர்மு சிவராம் எழுதிய ‘நட்சத்திரவாஸி'.

நாங்கள் இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்கப் போகிறோம், யாழ்ப்பாண நகருக்கு அருகில் வீடு பார்க்கிறோம் என்று பாலேந்திராவிடம் சொன்னேன். உங்களுக்கு இந்த நாடகம் நன்றாகப் பிடிக்கும். சவாலான பெண் பாத்திரம் இது. நாடக ஒத்திகைகளை நாங்கள் யாழ்ப்பாணத்திலேயே செய்யலாம் என்று கூறி நாங்கள் வீடு மாறியவுடன் தனக்கு தெரியப்படுத்தச் சொல்லி தனது முகவரியை தந்தார். யாழ்ப்பாண நகருக்கு அருகில் கொக்குவிலில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறினோம். 

‘நட்சத்திரவாஸி’ நாடகப் பிரதியை வாசித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். ஒரேயோரு பெண் பாத்திரம். பாலேந்திரா என்னை நம்பியே இந்த நாடகப் பிரதியைத் தெரிவு செய்தார் போலும் என்று யோசித்தேன். பாலேந்திரா ஏற்கனவே எனக்குக் கூறியது போல் அந்த வித்யா பாத்திரம் மிக மிகச் சிக்கலான ஒரு பெண் பாத்திரம். நடிப்பதற்கு சவாலான ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட, வித்தியாசமான பெண் பாத்திரம். 

ஏற்கனவே சவால்களை சந்திக்கப் பழகிய எனக்கு இந்தப் புதிய சவாலையும் ஏற்கும் மனப்பக்குவம் வந்திருந்தது. கொழும்பில் வசித்துக்கொண்டு மேடையில் நடித்தது சரி. யாழ்ப்பாணம் வந்த பின்பும் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோது எனது அப்பாவும் அம்மாவும் ஆதரவாகவே இருந்தனர். மற்றவர்கள் என்ன கதைப்பார்களோ என்ற பயம் அவர்களுக்கும் இல்லை, எனக்கும் இருக்கவில்லை. 

‘நட்சத்திரவாஸி’ நாடகத்தை எழுதிய தர்மு சிவராம் அவர்கள் ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர். இது அவரின் சொந்த வாழ்க்கையின் சில கூறுகளைக் சொல்லுகிற நாடகம் என்றும் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருகோணமலையில் பல காலம் வாழ்ந்த பின்னர் இந்தியாவில் தமிழ் நாட்டில் வசித்தவர். இவர் பிரமிள் என்ற பெயரில்தான் பெரும்பாலும் அறியப்பட்டவர். அதீத புத்திக்கூர்மை கொண்டவர். இவர் இருந்த காலத்தைவிட இறந்த பின்னர்தான் இவரது திறமைகள் வெளியுலகிற்கு நன்கு தெரிய வந்தன. இவரின் எழுத்துகள் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. திரு. கால சுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.

‘நட்சத்திரவாஸி’ நாடகத்தில் நட்சத்திரவாஸியாக சுகந்தன் பிளாஞ்சாட் நடித்தார். இவர் ஏற்கனவே என்னோடு நான் நடித்த முதல் இரண்டு நாடகங்களான ‘பிச்சை வேண்டாம்’, ‘மழை’ ஆகிய நாடகங்களில் நடித்தவர். நல்ல நடிகர். நன்றாக ஒத்துழைத்து நடிப்பார். சுகந்தனுடன் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்பு உண்டு. சென்ற வருடம் ஒஸ்ரேலியா சென்றிருந்த போது நானும் பாலேந்திராவும் சந்தித்தோம். நாடகம் எமக்கு இவர் போல பல நல்ல நீண்ட கால நண்பர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 

நாகன் பாத்திரத்தில் தனபாலசிங்கம் நடித்தார். இவரை நான் முதன்முதலாக இந்த நாடக ஒத்திகையின்போதுதான் சந்தித்தேன். வித்யா பாத்திரத்தில் நான் நடித்தேன். எம் மூவரைத் தவிர பத்துப் பேர் கொண்ட கோரஸ் நடிகர்கள் இருந்தார்கள். என்னைத் தவிர மற்ற எல்லோரும் கட்டுபெத்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். 

‘நட்சத்திரவாஸி‘ நாடகத்தில் வரும் வித்யா சில முரண்பாடுகள் காரணமாக இளம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறியவர். திருமணமாகாமல் தனித்து வாழ்கின்ற, வேலை பார்க்கின்ற ஒரு சுதந்திரமான பெண். அவர் தன் வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்கள், அவர் மீதான சமூகத்தின் பார்வை என இந்நாடகத்தின் கதை நகர்கிறது. நடிப்பதற்கு சிக்கலான பாத்திரம். பிரதியை மீண்டும் மீண்டும் வாசித்து பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக் கொண்டேன். 

இந்நாடகத்தின் ஒத்திகைகள் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற்றன. இனக்கலவரத்தை அடுத்து பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் கட்டுபெத்தை வளாக மாணவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் ஒத்திகைகளுக்கு வரக்கூடியதாக இருந்தது. மும்முரமாக நடந்த ஒத்திகைகளைத் தொடர்ந்து பாலேந்திராவின் நெறியாள்கையில் ‘நட்சத்திரவாஸி’ நாடகம் முதல் முதலாக 08-01-1978 அன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறியது. 

திரை விலகும்போது ஒரு பெண் பாடும் குரல் கேட்கும். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இனிய குரலில் பாட ஆரம்பித்து பின்னர் கண்ணாடி உடைந்து சிதறும் ஒலியோடு குரல் உடைந்து கரகரப்பாக மாறி இசை ஒலிக்கும். மங்கிய ஒளியில் வித்யா(நான்) மேடையில் சரிந்து விழுந்த நிலையில்… மேடையின் நடுப்பகுதியில் பிரமாண்டமான லிங்கம் ஒன்று கிட்டத்தட்ட கூரையைத் தொடுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி அமர்ந்திருந்த கறுத்த உடை அணிந்த பத்து கோஷ்டி நடிகர்களும் “கொலை! கொலை!” என பல்வேறு தொனிகளில் சத்தமிட்டபடி மேடை முழுவதும் நகர்ந்து பெரிதாக ஆடத் தொடங்குவார்கள். மேடையில் வித்யா கொலையுண்டு கிடப்பார். நாடகத்தின் ஆரம்பமே பார்வையாளர்களை ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த நாடகத்தில் வந்த இசை ஒரு தீம் மியூசிக் போல நாடகத்தின் இடையிடையே ஒலிக்கும். ராகச்சாயல் கொண்ட சிறு ஆலாபனையும் ஸ்வரக் கோர்வைகளும் கொண்ட இந்த இசை மனதை நெருடக்கூடிய வகையில் அமைந்திருந்தது. யாழ். கண்ணன் அவர்கள் இசையமைத்திருந்தார். பாலேந்திரா கூறிய நாடகத்தின் கதையை நன்கு உள்வாங்கி மிக  அருமையாக அந்த இசையமைப்பைச் செய்திருந்தார். 

எனக்கு பல்வேறு உணர்ச்சி மாற்றங்களுடன் நன்றாக நடிப்பதற்கு இந்த இசை பெரிதும் உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக வித்யா தனது இளவயது கதையை flash backல் சொல்லும்போது பெரிய பந்தியாக அமைந்த வசனங்களுக்கு பின்னணியில் ஒலித்த இசை வலுவூட்டியது. நிர்மலா இந்த இசைக்கு குரல் கொடுத்திருந்தார். மிக நன்றாக இருந்தது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசை என்பதால் அப்போது நான் நிர்மலாவை சந்திக்கவில்லை. நான் “கண்ணாடி வார்ப்புகள்” நாடகத்தில் நடிக்கும்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். 

பிரமாண்டமான லிங்கத்துடனான மேடையமைப்பை கட்டுப்பெத்தை பல்கலைக்கழக கட்டடக்கலை மாணவரான குணசிங்கம் செய்திருந்தார். இவர் பின்னர் பாலேந்திரா நெறியாள்கை செய்த ‘கண்ணாடி வார்ப்புகள்’, ‘ஒரு பாலை வீடு’, ‘அரையும் குறையும்’ போன்ற நாடகங்களுக்கு மேடையமைப்பு செய்ததுடன் என்னோடு ‘அரையும் குறையும்’ (மோகன் ராகேசின் ‘ஆதே ஆதுரே’) ‘முகமில்லாத மனிதர்கள்’ (பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’) ஆகிய நாடகங்களில் நடித்துமிருந்தார். இவருடன் அந்தக் காலத்திலிருந்தே எனக்கும் பாலேந்திராவிற்கும் நல்ல பழக்கம் இருந்துவந்தது. சிட்னியில் 1996இல் நடந்த எமது நாடகவிழாவினை ஒழுங்கு செய்து நடத்தியவர்களில் ஒருவர். கடந்த வருடம்கூட நாம் சிட்னி சென்றிருந்தபோது தனது வீட்டில் இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார். 

‘நட்சத்திரவாஸி’ நாடகம் யாழ்ப்பாணம், கொழும்பு, பேராதனை, திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேறியது. எனது நடிப்பு பற்றிய நல்ல கருத்துகளோடு நான் ஏற்ற பாத்திரத்தின் தன்மை பற்றிய எதிர்மறை கருத்துகளும் முன் வைக்கப்பட்டன. இப்போது சங்கடமான விஷயங்களெல்லாம் எனக்கு சகஜமாகிவிட்டது. 

மேடையேற்றத்திற்கான பிரயாணங்களும் சுவாரஸ்யமாக இருந்தன. நீண்ட பயணங்களின்போது பாடிக்கொண்டு செல்வோம். இந்தக் குழுவில் நான்தான் ஒரேயொரு பெண். இளவயது முதலே எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்ட எனக்கு நான் தனித்துப் போய்விட்டேன் என்ற எண்ணம் ஒரு காலமும் வந்ததில்லை. எல்லோருமே கலகலப்பாக பழகுவோம். நாடகக் குழு எனக்கு ஒரு குடும்பம் போல. இப்போதும் எங்களுடைய நாடகக் குழவினரை எனது குடும்பம் என்றுதான் சொல்லுவேன். 

இந்த மேடையேற்றங்கள் பற்றி நல்ல விமர்சனங்கள் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்தன. எனது நடிப்பு பற்றி

“வித்தியாவாக நடித்த ஆனந்தராணி மேடைநாடகப் பயிற்சியுடன் வானொலி நாடகப் பயிற்சியுமுடையவர். நீண்ட பந்திகளாகச் சில இடங்களில் அமைந்த வசனங்களைக் கூட பார்வையாளர்களுக்கு அலுப்புத் தோன்றாதபடி தேவையான உணர்ச்சிச் சாயைகளுடனும், ஏற்ற இறக்கங்களுடனும் பேச அவரால் முடிந்தது”

என்று ஒரு விமர்சனத்தில் எழுதப்பட்டிருந்தது. 

இது கனதியான ஒரு நாடகம் என்றும் அக்காலத்தில் கூறப்பட்டது. நாடகம் பார்த்த ரசிகர்கள் சிலரின் நேரடியான விமர்சனங்களும் பத்திரிகைகளில் வந்த இவ்வாறான விமர்சனங்களும், காத்திரமான நாடகங்களில் நடிக்கவேண்டும், தமிழில் நவீன நாடகங்கள் மேலும் வளர்வதற்கு எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தன. எனது நாடகப் பயணமும் தொடர்ந்தது.

‘நட்சத்திரவாஸி’ நாடகத்தின் மேடையேற்றங்களின்போது நிழற்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களை வைத்திருக்கிறேன். 

அடுத்த பதிவில் நான் நடித்த நான்காவது நாடகமான “கண்ணாடி வார்ப்புகள்” நாடக அனுபவம் பற்றி எழுதவுள்ளேன்.

ஆனந்தராணி பாலேந்திரா 

12-09-2020

-------------------------------------------------------------------------- 

Programme

Two plays 'Pali ' & 'Nadchatravaasi' presented by the Tamil Society - University of Moratuwa (Kaddubetta)

Directed by K Balendra

27-10-1976 இல் கொழும்பில் முதல் நான் நெறிப்படுத்தி மேடையேற்றிய "மழை" நாடகம், பின்னர் யாழ்ப்பாணத்தில் 14- 01 -1977 இல் மேடையேறியது. இதைத் தொடர்ந்து 

நான் நெறிப்படுத்திய 'நட்சத்திரவாசி' ,'பலி'(08-01-1978) , 'கண்ணாடி வார்ப்புகள்'(09-06-1978), 'பசி', 'புதிய உலகம் பழைய இருவர்' (27-12-1978) ஆகிய ஆறு நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறின. தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் 1978ல் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் தமிழ் அவைக்காற்று கலைக் கழக ரசிகர் அவைக்காக 'தலைவர்', 'அதிமானிடன்' ஆகிய நாடகங்கள் 27-02-1979 இல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறின.  / - பாலேந்திரா

இன்று தருமு சிவராமின் நினைவு நாள். ஈழத்தில் திருகோணமலையைச் சேர்ந்த நவீன தமிழ் இலக்கிய ஆளுமை தருமு சிவராம். தமிழகத்தில் மிகவும் மதிக்கப்படும் ஆளுமை இவர். பிரேமிள், அரூப் சீவராம் போன்ற பெயர்களில் அறியப் பட்டவர். 70 களின் ஆரம்பங்களில் இவரது சில கவிதைகளை ரசித்திருக்கிறேன். 1973 இல் நான் வெளியிட்ட "நுட்பம் " இதழில்வெளியான "புதுக்கவிதை அனுபந்தத்தில் இவரது E = mc2 கவிதையை மறுபிரசுரம் செய்தேன். 1978 இல் இவரது 'நட்ஷத்திரவாசி' நாடகத்தை நெறிப்படுத்தி மேடையேற்றினேன். அது குறித்து பேராசிரியர் கா இந்திரபாலா, கே எஸ் சிவகுமாரன் ஆகியோர் எழுதிய குறிப்புகளில் சில பகுதிகளை கீழே தருகிறேன். நட்சத்திரவாஸி நாடகமும் எமது ரசிகர்களும் பல ஆண்டுகளாக இலங்கையிலே தமிழ் நாடகம் வளராதிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அங்குமிங்குமாகச் சில தனிப்பட்ட நன் முயற்சிகளைவிடப் பெரும்பாலான நாடகங்கள் சினிமாக்கலையின் பிடியிலிருந்து விலக முடியாத வகையில் திரைக்குரிய பண்புகளை மேடைக்குக் கொண்டுவர எடுத்த பெருமுயற்சிகளாய் வீணாக்கப்பட்டன. மறுபுறம், பாரம்பரிய நாட்டுக்கூத்தானது பேணல் முயற்சியாளர்களுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது வளரத் தவித்துக் கொண்டிருந்தது. அந்த நிலையில், ரசிகர்கள் வேறு வழியின்றி இவற்றை ஏற்கவேண்டியிருந்தது மட்டுமின்றி, “ரசிகர்கள் அப்படித்தான் விரும்புகிறார்கள்” என்ற அநியாயமான குற்றச்சாட்டுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. (இன்று அப்படித்தான் சினிமாக்களை வளராதிருப்பதற்கு ரசிகர்கள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.) ஆனால், இன்று இந்நிலை மாறி, சினிமாக்கலை வேறு நாடகக்கலை வேறு என்ற அடிப்படையிலான உண்மை உணரப்பட்டு, நாடகத்துறையின் வளர்ச்சிக்குரிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கேற்ப ரசிகர்களும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இப்பொழுது ரசிகர்களும், நாடகமும் சம வேகத்தில் முன்னேறிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “நட்சத்திரவாஸி' சிக்கலான கருத்துக்களை உள்ளடக்குகிறது. சிறந்த உத்திகளுடன் நவீன நாடகத்துக்குரிய முன்னேற்றமான பண்புகள் பல நிறைந்திருக்கின்றன. நடிப்பும் நன்றாக அமைந்தது. கட்டுப்பெத்தை வளாகத்தினர் வீரசிங்கம் மண்டபத்திலே அதனை முதன்முறையாக மேடையேற்றிய போது ரசிகர்கள் நிச்சயமாக அமைதியுடனும் ஆர்வத்துடனும் வரவேற்பளித்தனர். பேராசிரியர் கா. இந்திரபாலா வீரகேசரி 19-03-1978 As for its presentation there is a gleam of hope that structurally also the Tamil stage is trying to be `with it' Balendra's imaginative interpretation on the stage with a simple decor (there was also a phallic symbol) and the playing with the appropriate lighting helped in a great way to create the right atmosphere. As mentioned earlier the play is essentially in the dialogue. There was hardly any movement or physical conflict. The conflict was there in the psychological diatribe of the protagonists. Herein lies the sensitive and understanding of the actors, Suganthan and Anandarani Rajaratnam, who gave flesh and blood to their roles with their nuances in enunciation. K. Balendra, deserve special notice now, as some of the frontline directors, of Tamil plays in Colombo are now in Jaffna. Balendra has on several occasions proved that he is a very modern stage actor -I mean not the normal type of film actors who come to the stage to use it as a platform for entry into the celluloid world. But in this play Balendra has shown his tremendous potentiality as a creative worker in the theatre. - K.S.Sivakumaran Daily News 24-04-1978