Friday 16 June 2017



நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா

 நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா
ஆலன் ராப் க்ரியே
Author photograph by Nancy Crampton. From the Paris Review.
ஃப்ரெஞ்ச் இலக்கியம், தத்துவத்தை அடுத்து என் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஃப்ரெஞ்ச் சினிமா. அதில் முக்கியமானவர், லன் ராப்-க்ரியே (Alain Robbe-Grillet: 1922 - 2008). நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட இயக்குனர். ஃப்ரெஞ்ச் சிந்தனை, இலக்கியம், சினிமா ஆகியவற்றில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராப்-க்ரியே பற்றி யாரும் அவ்வளவாக எழுத மாட்டார்கள். ஆனால், மிஷல் ஃபூக்கோவும் (Michel Foucault) ரொலான் பார்த்தும் (Roland Barthes) அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஃப்ரான்ஸின் நவீன சிந்தனையே ஆலன் ராப்-க்ரியேவிலிருந்துதான் துவங்குகிறது என்று அறுபதுகளிலேயே Tel Quel என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார் ஃபூக்கோ. ராப்-க்ரியேவின் சிறப்பு என்னவென்றால், எழுத்தில் அவருக்கு யாரும் முன்னோடிகள் கிடையாது. அதேபோல், அவரைப் பின்பற்றி எழுதியவர்களும் யாரும் இல்லை. (நான் முனியாண்டி என்ற பெயரில் எழுதிய சிறுகதைகளில் ராப்-க்ரியேவின் பாதிப்பைக் காணலாம்.) The Erasers, The Voyeur போன்ற நாவல்களை எழுதிய ராப்-க்ரியே ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். அந்தப் படங்கள் அனைத்தும் பாலுறவில் உள்ள அரசியலை மிக ஆழமாகப் பேசுபவை. அந்தத் தாக்கத்தினால்தான் பிற்காலத்தில் காதரீன் ப்ரேயா (Catherine Breillat) போன்றவர்கள் ஃப்ரெஞ்ச் சினிமாவில் உருவானார்கள். உதாரணமாக, ராப்-க்ரியேவின் Trans-Europ-Express (1966)-இல் வரும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிர்வாணப் பெண் தான் காதரீன் ப்ரேயாவின் ’ரொமான்ஸ்’ படத்தில் வரும் நாயகி. ஆக, ராப்-க்ரியே இல்லாவிட்டால் பாலுறவில் பின்னப்பட்டிருக்கும் அரசியலைப் பேசிய காதரீன் ப்ரேயா இல்லை.
ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் முற்பகுதியில் ராப்-க்ரியே எழுதிய For a New Novel என்ற கட்டுரைத் தொடரில் தன் இலக்கியக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், நவீன கதைசொல்லி தான் பார்க்கும் விஷயங்களை விவரிப்பதில்லை; அவனைச் சுற்றியுள்ள பொருட்களை அவன் தான் கண்டுபிடிக்கிறான்; அப்படிக் கண்டு பிடிப்பவற்றை அவன் பார்க்கிறான். அதனாலேயே அவன் குழந்தையாகவும் மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பொய்யனாகவும் மாறுகிறான். இங்கே தெக்கார்த்தே (Rene Descartes) கூறியதை இணைத்துப் பார்ப்போம். ”என் கனவு மிகத் தீவிரமாக இருந்ததென்றால் கண் விழித்து எழும் போது அது கனவா நனவா என்றே எனக்குத் தெரியாது.”
ராப்-க்ரியேவைப் புரிந்து கொள்ள ’கடற்கரை’ என்ற அவருடைய ஒரு சிறுகதையைப் படித்தாலே போதும். அந்தக் கதையில் ஒரு கடற்கரையில் பனிரண்டு வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் கை கோர்த்தபடி நடந்து செல்கிறார்கள். கடல் அலைகள் கரையில் வந்து வந்து போகின்றன. அவர்களின் இடப்பக்கம் ஒரு குன்று இருக்கிறது. எதிரே பறவைக் கூட்டம் அவர்கள் நெருங்குவதைக் கண்டு கூட்டமாக மேலே பறக்கிறது. இவ்வளவுதான் கதை. சுமார் 1500 வார்த்தைகளைக் கொண்ட அந்தக் கதையை பின்நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். ஒருமுறை படித்தால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிவை ஏற்படுத்தும் கதை அது. கதையில் எதுவுமே நடப்பதில்லை. சிறுவர்கள் நடக்கிறார்கள். அலைகள் கரைக்கு வந்து வந்து போகின்றன. இதை எப்படி ஒருவர் சிறுகதையாக எழுத முடியும்? அதைப் பொருட்களின் எதார்த்தம் என்கிறார் ராப்-க்ரியே. புரியாவிட்டால் நீங்களே அந்தக் கதையைப் படித்துப் பார்க்கலாம்.
இந்த இடத்தில் ரொலான் பார்த் 1967-இல் எழுதிய 'எழுத்தாளனின் மரணம்’ என்ற கட்டுரையை நினைவு கூற வேண்டும். அதில் பார்த்த, வாசகர்களுக்காகச் ’சிந்திக்கும்’, வாசகர்களுக்காகச் ’சொல்லும்’ மகா புருஷனான எழுத்தாளரைக் குறிப்பிடுகிறார். தமிழில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அந்தக் கோட்பாட்டின் பொருள், வாசகரையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் பன்முகத் தன்மை கொண்ட பிரதிகளை உருவாக்குதல் என்பதாகும். இந்தக் காரணத்தினாலேயே ராப்-க்ரியேவுக்கு தொல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைப் பிடிக்காது. அவர்கள் ‘சொல்கிறார்கள்’ என்கிறார் ராப்-க்ரியே. ”குஸ்தாவ் ஃப்ளெபர் இந்த உலகத்தையே எழுதினார்; ஆனால், அவர் எதுவும் ‘சொல்லவில்லை’. மானுடத் துயரத்துக்கு அவர் எதுவும் மருந்து வைத்திருக்கவில்லை. அவர் எழுதினார். அவ்வளவுதான். அதனால், எனக்கு அவரைப் பிடிக்கும்” என்கிறார். உலகப் புகழ் பெற்ற காப்ரியா மார்க்கேஸையும் மறுதலிக்கிறார். அவர்களெல்லாம் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்த்தே (Guillermo Cabrera Infante) தான் என்கிறார் ராப்-க்ரியே. நான் ராப்-க்ரியேவின் இலக்கியக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே காப்ரேரா இன்ஃபாந்தேவின் நாவல்களைப் பற்றி எழுதி விட்டேன். கார்ஸியா மார்க்கேஸ் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்தே தான் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்ஃபாந்தேவின் மிக முக்கியமான இரண்டு நாவல்கள், Infante's Inferno மற்றும் Three Trapped Tigers.
*
Miriam Gomez and Guillermo Cabrera Infante by Nestor Almendros
ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ’மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்து கொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக இயலாது.
லெனி பற்றியே தனியாக ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவுக்கு சாகசங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை. 1902-இல் பிறந்த அவர் 2003-இல் அவரது 101-ஆவது வயதில்தான் இறந்தார். 1934-இல் நடந்த ’நியூரம்பர்க் ஊர்வலம்’ என்ற உலகப் புகழ் பெற்ற சம்பவத்தை லெனி படமாக எடுத்தார். அதில் நான் பார்த்த ஒரு காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது போலிருக்கிறது. ஹிட்லர் ராணுவ அணிவகுப்போடு போய்க் கொண்டிருக்கிறார். அப்போது கேமரா ஹிட்லரைப் பார்க்க ஆர்வமுறும் லட்சக் கணக்கான மக்களின் முகங்களைக் காண்பித்து விட்டு திடீரென்று அவர்களின் பின்னால் பாதங்களின் பக்கம் செல்லும். எல்லோருடைய பாதங்களின் குதிகால்களும் எழும்பியபடி நிற்கும். காமரா வரிசையாக அந்தக் குதிகால்களையே காட்டியபடி செல்லும். அப்படியும் ஒரு சிறுவனுக்கு ஹிட்லர் தெரியாததால் சிறுவனின் தந்தை அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ஹிட்லர் பேசுவதைக் கேட்கும் போது டொனால்ட் ட்ரம்ப் பேசுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஃபாஸிஸ்டுகள் அனைவருடைய உடல் மொழியும் பேச்சும் ஒன்றே போல் இருப்பதைக் காணலாம்.
(நியூரம்பர்க் ஊர்வலம் முடிந்து ஹிட்லர் பேசும் காட்சி, Triumph of the Will படத்திலிருந்து.)
தில்லியில் கஸ்தூர்பா காந்தி மார்க் என்ற சாலையில் இருந்தது மாக்ஸ் ம்யுல்லர் பவன். அதே சாலையில்தான் அமெரிக்க மையமும் இருந்தது. 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்தேன். மக்களுக்கு ரேஷன் கொடுக்கும் அலுவலகத்தில் வேலை. வடக்கத்தி ஆட்கள் ராஷன் என்றுதான் சொல்வார்கள். எனவே ராஷனிங் டிபார்ட்மெண்ட். தில்லிப் பல்கலைக்கழகம் இருக்கும் வட தில்லியில் இந்திர ப்ரஸ்தா பெண்கள் கல்லூரியின் எதிரே இருந்தது நான் வேலை பார்த்த ராஷனிங் டிபார்ட்மெண்ட். சிவில் சப்ளைஸ் என்பது அதன் மற்றொரு பெயர். அந்த அலுவலகம் இருந்த அண்டர் ஹில் ரோடுக்கும் கஸ்தூர் பா காந்தி மார்குக்கும் 13 கி.மீ. தூரம். மெட்ரோ ரயில் இல்லாத அந்தக் காலத்தில் அதெல்லாம் நாற்பது ஐம்பது கிலோமீட்டருக்குச் சமம். அந்தக் காலகட்டத்தில் சிமெண்ட் கட்டுப்படுத்தப்பட்ட விலையிலும் வெளிச்சந்தையிலும் விற்றதால் இரண்டு இடங்களிலும் இரண்டு வெவ்வேறு விலைகள் இருந்தன். ராஷன் கார்டை ராஷனிங் டிபார்ட்மெண்டில் காண்பித்து பர்மிட் பெற்று வாங்கினால் ஒரு மூட்டை 30 ரூ. வெளிச்சந்தையில் 60 ரூ. அதனால் எங்கள் அலுவலகமே ஊழல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நானோ கலைஞனுக்குப் பணம் எதுக்கு என்று கஸ்தூர் பா காந்தி மார்க் அமெரிக்க நூலகத்திலும் மாக்ஸ் ம்யுல்லர் பவனிலுமே இருந்தேன். கஸ்தூர் பா காந்தி மார்கை குறுக்காக வெட்டிக் கொண்டு பாரகம்பா சாலை போகும். அதன் இடது பக்கத்தில் நடந்தால் மண்டி ஹவுஸ் வந்து விடும். இந்தியாவின் கலாச்சாரக் கேந்திரம் தில்லி என்றால் தில்லியின் கலாச்சார மையம் மண்டி ஹவுஸ். மண்டி ஹவுஸில் மட்டுமே ஒரு டஜன் கலை அரங்கங்கள் உள்ளன. மாக்ஸ் ம்யுல்லர் பவனில் சினிமா இல்லாத நாட்களில் நடந்தே மண்டி ஹவுஸ் வந்து விடுவேன்.
அலுவலகத்துக்கு மாதம் ஒருமுறை போய் எல்லா நாட்களுக்கும் கையெழுத்துப் போட்டு விட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தால் போதும். என்னுடைய ’பங்கை’ மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள் ஆதலால் நீ உன்னுடைய படிப்பு வேலையையே கவனி என்று சொல்லி விட்டார்கள் என் சகாக்கள். நான் தில்லியில் இருந்த பனிரண்டு ஆண்டுகளும் இப்படி இல்லை. மூன்று நான்கு ஆண்டுகள் அப்படி இருந்தது.
அப்போது கஸ்தூர் பா காந்தி மார்க் என்றால் யாருக்கும் தெரியாது. கர்ஸன் ரோட் என்ற பெயரை எழுபதுகளின் இறுதியில்தான் காந்தியின் மனைவி பெயருக்கு மாற்றியிருந்தார்கள் என்பதால் அப்போதெல்லாம் கர்ஸன் ரோட் என்பதே புழக்கத்தில் இருந்தது. 1978-இல் ஒரு ஆண்டுக் காலம் கர்ஸன் ரோட்டிலேயே இருந்த சர்க்கிள் நம்பர் எட்டில் வேலை பார்த்தேன். சிவில் சப்ளைஸில் பல பிரிவுகள் உண்டு. அவைதான் சர்க்கிள் நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைக்கப்பட்டன. அலுவலகமும் கலாச்சார மையங்களும் ஒரே ஏரியாவில் இருந்ததாலும், டிபார்ட்மெண்ட்டுக்குப் புதிது என்பதாலும் தினமும் போய் தலை காட்ட வேண்டியிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு ஓடி விடலாம்.
பகல் முழுதும் படிப்பு. மாலையில் சினிமா. அதே கர்ஸன் ரோட்டின் கடைசிக் கட்டிடத்தில் தான் ஹங்கேரியன் செண்டர். அங்கேயும் வாரம் இரண்டு சினிமா இருக்கும். ஆக, மாக்ஸ் ம்யுல்லர் பவனிலும் ஹங்கேரியன் செண்டரிலுமாக வாரம் நான்கு சினிமா பார்த்து விடலாம். இரண்டு மையங்களிலும் சினிமா முடிந்து மதுபானமும் கொடுப்பார்கள். ஹங்கேரியன் செண்டர் கம்யூனிஸ்ட் என்பதால் கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் இருக்காது. வாரம் ரெண்டு படத்தோடு சரி. பார்ப்பதற்கும் ஒரு மாதிரி மயான அமைதியாக கலகலப்பே இல்லாமல் இருக்கும். ஆனால் மாக்ஸ் ம்யுல்லர் பவன் அப்படி இல்லை; அங்கே கலாச்சார நடவடிக்கைகள் அதிகம். (சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றிருந்த போது பழைய ஞாபகத்தில் மாக்ஸ் ம்யுல்லர் பவன் போனேன். சினிமா முடிந்து சமோசாவும் டீயும் கொடுத்தார்கள். முன்பெல்லாம் விஸ்கி, பியர் எல்லாம் கொடுப்பார்களே என்று பவன் அதிகாரி போல் இருந்த ஒருவரிடம் கேட்டேன். வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, சிக்கன நடவடிக்கை என்றார். பிறகு சிரித்துக் கொண்டே ”இந்தியாவுக்கு வந்தால் நாமும் இந்தியரைப் போல் ஆகி விட வேண்டும் அல்லவா?” என்று கேட்டார். அப்படியானால் அடிக்கடி பெஹன் சூத் என்று சொல்லிப் பழகுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.)
தில்லியின் மாக்ஸ் ம்யுல்லர் பவனை என்னுடைய Alma materகளில் ஒன்று எனச் சொல்லலாம். அங்கே பார்த்த பல படங்கள் அப்படி அப்படியே காட்சிகளாக என் ஞாபக அடுக்குகளில் தங்கியுள்ளன. குறிப்பாக, Reinhard Hauff. சினிமா ஆர்வலர்கள் பலரிடமும் கேட்டிருக்கிறேன். அவர்கள், யாருக்கும் ரெய்னார்ட் ஹாஃப் பற்றித் தெரியவில்லை. மற்றொரு ஜெர்மன் இயக்குனரான வெர்னர் ஹெர்ஸாக் உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார். ஆனால் ரெய்னார்ட் ஹாஃப்-க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ரெய்னார்ட் ஹாஃப்-இன் சினிமா என்னுடைய புனைவுலகம் போன்றது. ஹெர்ஸாக் அளவுக்கு அவர் புகழ் அடையாமல் போனதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது 78 வயதாகும் ரெய்னார்ட் ஹாஃப் தீவிரமாக இயங்கிய கால கட்டம் எழுபதுகளும் எண்பதுகளுமாக இருந்தது. அதனால் அவர் படம் வெளிவந்த உடனேயே மாக்ஸ் ம்யுல்லர் பவனில் திரையிட்டு விடுவார்கள். இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரெய்னார்ட் ஹாஃப்-இன் படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் படங்கள் கிடைக்கவில்லை. பார்த்து 30 ஆண்டுகள் ஆகிறது.
காட்சி காட்சியாக ஞாபகம் இருக்கிறது என்று சொன்னேன். Slow Attack என்ற படத்தில் ஒரு சிறுவன் ஒரு தெருவில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் தன் கையிலிருக்கும் இரும்புக் கம்பியால் வரிசையாகக் கோடு போட்டுக் கொண்டே போவான். அந்தப் படத்தை நேற்று பார்த்தது போல் என்னால் விவரித்துக் கொண்டு போக முடியும். எண்பதுகளின் முற்பகுதியில் பார்த்த படம். இப்போதுதான் ரெய்னார்ட் ஹாஃப்-இன் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்க்கும் போது 1983-இல் வெளிவந்த படம் என்று தெரிகிறது. Endstation Freiheit என்பது அதன் ஜெர்மன் தலைப்பு. இந்தப் படம் அவரது Knife in the Head என்ற படத்தின் இரண்டாவது பாகம் என்று சொல்லத்தக்கது. ரெய்னார்ட் ஹாஃப்-இன் மற்றொரு முக்கியமான படம் The Brutalization of Franz Blum.
கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா

Thursday 1 June 2017

ஆறு நவயுக நாவல்கள் - கு. ப. ராஜகோபாலன்

ஆறு நவயுக நாவல்கள் 

கிரஹ தாகம் - சரத் சந்திர சட்டர்ஜி 
பெண் - ஸியாராம்சரண குப்தர் 
சுகம் எங்கே ? - வி. ஸ. காண்டேகர் 
அன்னா லியோ டால்ஸ்டாய் 
ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் - ரமேச சந்திர தத்தர் 
மகாராஷ்டிர ஜீவன் உதயம் . . '' '' 

நாவல் இந்திய இலக்கியத்தில் ஒரு புதிய அம்சம். காதம்பரி , ஹர்ஷ சரிதம் போன்ற கதைகள் இந்திய இலக்கியத்திலும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் கதைப் போக்கும் வர்ணனையுமே முக்கியமாக இருக்கின்றன. நாவல், அதன் தற்கால அமைப்பில், வெறும் கதை மட்டுமல்ல. ஆதியில் பிறந்து வளர்ந்த மேலை நாடுகளில் கூட அது வெறும் கதைச் சரடாக இருந்த காலமும் உண்டு. அதன் வளர்ச்சி ஒரு தனிச் சரித்திரம். தற்சமயம் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாவல்தான் அதிகமாக வளர்ச்சி பெற்று வலுத்திருக்கிறது என்று சொல்லலாம் : அநேகமாக அது இலக்கியத்தின் பரப்பையே அளாவி நிற்கிறது. கவிதையும் நாடகமுங்கூட அதில் ஊடுருவி நிற்கின்றன... 

iv 

இதற்குக் காரணம் என்ன? நாவல் வாழ்க்கையின் சித்திரம் : வாழ்க்கையில் நடைபெறும் போராட்டங்களின் சித்திரம். அதில் கதையும் உண்டு; ஆனால், அந்தக் கதை பாத்திரங்களுடைய மன நிகழ்ச்சிகளின் கோவை. இக் காரணத்தாலே, நாவல் நீளமாக இருந்தாலும், அதன் கதை ' நீண்டிருக்காது. குறுகிய கால அளவிலே அமைக்கப்பெற்ற சில பாத்திரங்களின் குண சித்திரமே சில சமயங்களில் நாவலாக அமைந்துவிடும். நிகழ்ச்சிக் காலம் குறுகக் குறுக, நாவலின் பிகுவும், கட்டுக் கோப்பும், உணர்ச்சிப் பெருக்கும் அதிகமாகும். 

மன நிகழ்ச்சிகள்! - இவைதான் நாவலில் ஆதியிலும், நடுவிலும், அந்தத்திலும் அதற்கு உயிர்நிலை. 

குண சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாரணமான பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியா மல், அதை எதிர்த்து, வேறு தனிப் பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை ; அலை மோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்த வகை தெரியாமல் தத்த ளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதா பத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை ; லட்சிய வீரர் கள் (ஆண்களும் பெண்களும்), வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து விழும் வீழ்ச்சியைச் சித்திரிப்பது மேலும் ஒரு வகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலக் கிய - வீரர்கள் தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற் பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்கால சமூகத் திற்கு வழிகாட்டிகள். மொத்தமாகப் பொது நோக்கில் கூறி னால், மனித இயல்பும் வாழ்க்கை நியதியும் கை கலக்கும் கண் கொள்ளாக் காட்சிகளைச் சில அபூர்வசந்தர்ப்பங்களில் பொறுக் கிப் பிணைப்பதன் மூலம் காட்டுவதுதான் நாவலின் தொழில் 

மனித இயல்பை ஓர் ஆற்றுப் பெருக்காகக் கொள்ள லாம்; வாழ்க்கை யென்று நாம் சொல்லும் சமூக அமைப்பு ஓர் அணை போல அதன் முன் நிற்கிறது. அணை நன்மைக் காகத்தான் ஏற்பட்டது. சமூக அமைப்பும், அணை போல வாழ்க்கையின் வெள்ளப் பெருக்கைத் தன் கட்டுக்குள் அணைத்து, சரியான பாதையில் விகிதப்படி திருப்பத்தான் ஏற்பட்டது. ஆனால் சந்தர்ப்ப மாறுபாட்டால், அணை, வெள் ளத்தை மேலே போகவிடாமல், தன் கட்டுக்குள்ளேயே அடக்க முயலும் கொடுமையுள்ள தாக ஆகிவிடுகிறது. அதன் கட்டுக்கு அடங்கி வாழும் பெருவாரியான மக்கள், சிறு மடை வாய்கள் வழியே சென்றுவிடுகிறார்கள். இதற்காக அவர்கள் தம் இயல்பைக் குறுக்கிக்கொள்ளுகிறார்கள், அல்லது அடக் கிக்கொள்ளுகிறார்கள், அல்லது ஒரேயடியாக இழந்தே விடுகி றார்கள். சிலர், பெரு வெள்ளம் போல், கட்டுக்கடங்காமல் அணையைத் தகர்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் பெரும் பாலோர் அணையை உடைக்க முடியாமல் சிதறிப் போகிறார் கள்; சிலர் அணையைச் சில இடங்களில் தகர்த்தும் விடு கிறார்கள். இந்த மூன்று முக்கியமான போக்குகளில் நாவல் மனிதனுடைய தன்மையைப் படம் பிடிக்க முயலுகிறது. 

வாழ்க்கையின் கொடுமைகளுக்குப் பணிந்து, கஷ்டத் தைக் 'கடவுள் சித்தம்' என்று பொறுத்துக்கொண்டு காலம் கழிக்கும் மக்களிடையே, துயர் தான் தொலையாத கூட்டாளியாக இருக்கிறது. மனித இயல்பின் கீழ்த்தர அம் சங்களான பொய் புரட்டு, கொலை களவு,- இவை அத் துன் பத்திற்கு உதவி செய்து, உயர்ந்த அம்சங்களை இருந்த இடம் தெரியாமல் அடிக்க முயலுகின்றன. ஆனால் உயர்ந்த இயல்புகள் இலேசாக மறைவதில்லை. மல் யுத்தத்தில் இரண்டு சக்திகளும் மேலும் கீழுமாகக் கட்டிப் புரளு கின்றன. 

vi 

வாழ்க்கையின் கட்டுக் கடங்காமல், மனித இயல்பையே பலமாகவும் துணையாகவும் கொண்டு, அதை எதிர்ப்பவர் களுக்கும் துயர் தான் மிச்சம்; ஆனால் அந்தத் துயரையும் அவர்கள் சகித்துப் போகாமல் துச்சமாகத் தூரத் தள்ளி, மேலும் போராடுகிறார்கள், மடிகிறார்கள். அந்தப் போராட் டமும் வீர மரணமும் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் அழியாத பெயர் பெறுகின்றன. போராட்டத்தின் முடிவு வெற்றிதான் என்பதற்குச் சரித்திரம் சாட்சியாக நிற்கிறது. 

ஆனால், அந்தப் போரில் மனிதனுடைய மகத்தான இயல்புடன் உயர்ந்த லட்சியமும் கைகோத்துக்கொண்டால், வாழ்க்கைச் சட்டம் ஒரோர் சமயம் தணிந்து போய்விடு கிறது ; இயல்பும் லட்சியமும் சேர்ந்து வெற்றி பெறுகின் றன. அப்படி அவை வெற்றி பெறத் தவறிவிட்டாலும், அவற்றின் வீழ்ச்சியும் உன்னதமான கம்பீரமான வீழ்ச்சி யாகிவிடுகிறது. ஏனெனில், வீழ்ச்சிக்குக் காரணம் லட்சி யக் கோளாறோ, தவறான வழியோ அல்ல - எங்கோ ஏதோ அற்பமான ஒரு பலவீனம் அல்லது தவறு நேர்ந்துவிடுவ தால்தான். 

இந்தச் சிறு பீடிகையுடன் என் பரிசீலனைக்கு வந்த மேலே குறித்துள்ள ஆறு நவீனங்களின் போக்கையும் பொதுவாக ஆராய்ச்சி செய்ய முயலுகிறேன். 

'கிரஹ தாக' த்தில் கதாநாயகியான அசலா வெறும் உணர்ச்சிக் குவியல்; நிமிஷத்துக்கு நிமிஷம் வாழ்வை அநு பவிப்பவள். மிகவும் சஞ்சல சுபாவமுள்ள இவளுக்கு , ஆசி ரியர், மிகுந்த நகைச் சுவையுடன், அசலா (அசைவற்றவள்) என்று பெயர் வைத்திருக்கிறார். அவள் பெண் ஹிருதயத்தி லிருந்து கிளம்பிய புயலின் வேகத்தில் நால்வர் சுழலுகின் றனர் : அவளிடம் காதல் கொண்ட ஸுரேசன், அவள் 

தந்தை கேதார் பாபு, கணவன் மஹிம், கணவனுடைய பந்து மிருணாளினி. அவள் போக்கே விபரீதம். வாழ்க்கையில் தணிந்து போக வேண்டிய சந்தர்ப்பத்தில் கொதித்தெழுந்து மீறி, மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வதே அவள் தன்மை. அவளுடைய வெள்ளை உள்ளம் வாழ்க்கையின் சோதனையால் களங்கமாகிறது. அதன் போக்கு, பல அநுபவங்களுக்குப் பிறகும், அவளுக்கு அர்த்தமாவதில்லை. தனக்குத் தெரியவில்லை என்பதால், தந்தை சொன்னதை அவள் கேட்டிருக்கலாம். அவள் உள்ளம் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை - முடிவு வரை - அவள் பாதாளத் தில் விழுந்து மாசு கொள்ளும் வரை - இடம் கொடுக்க வில்லை. முதலில் தந்தை முடித்தபடி ஸுரேசனையே மணந்திருக்கலாம் - மணந்து கொள்ள மறுத்தாள் ; மஹிமை மணந்த பிறகு ஸுரேசன் காதலுக்கு இடம் கொடுக் காமலே இருந்திருக்கலாம் - இருக்கவில்லை; மணந்த கணவனுடன் வாழ்க்கை நடத்தப் போன பின் அங்காவது கணவன் மனப் போக்கை அறிந்து, அற்ப விஷயங்களைப் புறக்கணித்துப் பெரிதான அவன் காதலைக் கைக்கொண் டாளா? - அதுவும் இல்லை. மிருணாளினியின் கபடமற்ற பரிகாசத்தை - விளையாட்டை - வினையாக முடித்தாள். ஸுரேசனுடைய காதலைக் கண்டு இரங்கித் தன் கைகளைப் பிடிக்கும்படிகூட அனுமதித்தாள் ; தன் கணவன் மிருணா ளினியுடன் பரிவாகப் பேசினதைக் கண்டு பொறாமை கொண்டாள். வீடு எரிந்து போன பொழுது, ஒரு நிமிஷம் கணவனின் நினைப்புக் கொண்டு, அவனுக்காக எங்கு வேண்டு மானாலும் போகத் தயாரானாள். ஆனால், மஹிம் அவளை எடை போட்டு வைத்திருந்தான். அவள் உணர்ச்சி நிலைக்காதென்று அவனுக்குத் தெரியும். அவள் ஆதரவை அவன் லட்சியம் செய்யவில்லை. மறுபடியும் அசலா பெண் புலி யாகிறாள். 

க 

A.IN 

viii 

மஹிம் தேக அசௌக்கியமடைந்த பொழுது, மறுபடியும் கணவனிடம் ஈடுபட்டு , ஸுரேசனை மறக்க முயலுகிறாள். அந்த நினைப்பும் நீடிக்கவில்லை. வெளியூர் போகும் வழியில், ஸுரேசன் துரோகமாகத் தன்னைத் தனியே அழைத்துக் கொண்டு போனதை மன்னித்து, உடனே வீடு திரும்பாமல், அவனுடன் இருந்தாள். கடைசியாக ஸுரேசனைப் பார்த்து, 'இன்னும் என்ன தான் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்கும் நிலைமையையும் அடைந்தாள். அப்படித் தான் ஸுரேசனையாவது 'காதலி 'த்தாளா? இல்லவே யில்லை! மஹிமைத் திரஸ்கரித்தாளா? இல்லை ! சமூகத்தை எதிர்த்தாளா? ஒன்றுமில்லை. தன் உணர்ச்சிக்குத்தான் பலி யானாள் . அசலாவுக்கு அசலாதான் உலகம். பரஸ்பரம் குற்றங் குறைகளை மன்னித்து விட்டுக் கொடுக்கும் தியாகம் அசலாவுக்குப் புறம்பானது. 

சுகம் எங்கே?' என்ற நவீனத்தில் உஷா இதைப் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறாள். ஆகையால் அனாதை யான விதவையாக மைத்துனன் வீட்டிலிருந்து துரத்தப் பட்டு, கடலில் விழும் தருவாயில், தன்னைக் கரையேற்றின ஆனந்தனை அந்த நிமிஷம் முதல் உள்ளத்தில் தெய்வமாக இருத்திக்கொண்டுவிட்டாள். அந்த ஈடுபாட்டில் ஆனந்த னின் தீய பழக்கங்களை யெல்லாம் பொறுத்துக்கொண் டாள். அவனைச் சீர்திருத்தும் தொண்டில் தன் பெயர் கெடு வதையும் அவள் அலட்சியம் செய்தாள். தான் மனப் பூர்வ மாகச் செய்த அந்த ஆனந்த - ஆராதனை தன் வாழ்க்கையை ஸபலமாக்கப் போதுமானது என்று கொண்டாள். 

ஆனால், ஆனந்தன் கைபிடித்த மனைவி மாணிக்கம், வெறும் காதலிலோ, அடிபட்ட வாழ்க்கை முறையிலோ திருப்தி கொள்ளவில்லை. இருவர் ஒத்துப்போனால் தான் 

சுகம் என்பதை அவள் தர்க்க ரீதியாக அறிந்தாள். ஆனால், தான் ஒத்துப்போக அவள் தயாரில்லை. பிறர் - அதா வது கணவர் - தன் மனத்தை அறிந்து நடந்து வாழ்க் கையை நிமிஷத்திற்கு நிமிஷம் நவீன மாக்க வேண்டு மென்று எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை. அவள் படிப்பு, அச லாவின் படிப்பைப் போல , அதிருப்தியையும் அகங்காரத்தை யுமே கற்றுக் கொடுத்தது. தனஞ்சயன் என்ற போக்கிரியின் வசமாகி அவனுக்கு இரையாகிறாள். அதன் பிறகு - தடுக்கி விழுந்த பிறகு - அவளுக்கு உண்மை தெளிவாகிறது. கணவனுடன் வாழ்வது அசாத்தியமான பிறகு, தனக்குப் பிறக்கவிருந்த குழந்தையின் சேர்க்கையில் சுகத்தை அடை யத் தீர்மானிக்கிறாள். அகங்காரத்தாலும் விளம்பரப் பித் தாலும் அதிருப்தி கொண்டு திரிபவர்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றந்தான் மிஞ்சும் என்று தான் அடைந்த அனுபவத் தைக் கணவனுக்குத் தாழ்மையுடன் கடிதமூலம் அறிவித்து விட்டு அவள் மறைகிறாள். 

அன்னாவின் போக்கு எதிர்ப்பும் அன்று, பணிவும் அன்று - வெறும் நேர்மை. அலைப்பட்டது அன்று அவள் உள் ளம் . யௌவனமும், அழகும், உணர்ச்சியும் நிரம்பப் பெற்ற அன்னா, காரினினுக்கு வாழ்க்கைப்பட்டு, குழந்தை பெற்று, சமூகத்தின் முன்பு சந்தோஷ வேஷம் பூண்டு சஞ்சரிக்கி றாள். யௌவனத்தில் அமிழ்ந்து மூழ்கித் திளைக்க வேண்டிய காதல் தன் வாழ்க்கையில் இல்லாதது பற்றிக் கவலையற்ற வள் போல் இருக்கிறாள். திடீரென்று விரான்ஸ்கி என்ற யுவன் அவள் முன் தோன்றி, அவளை நிலைகுலையச் செய் கிறான். மறுக்கொணாத அந்த மர்மக் கிளர்ச்சிக்கு உட்பட்டு, அன்னா அவன் காதலியாகி, குழந்தை பெறுகிறாள். ஆனால், அவள் புருஷனிடமிருந்து தன் உள்ளத்தை மறைக்கவில்லை. 

விவாக ரத்து வேண்டுகிறாள். தம் சமூக அந்தஸ்துப் போய் விடுமென்று பயந்து, கணவர் அவளைக் கட்டுப்படுத்த முயலு கிறார். 

அந்த நிலையில் விரான்ஸ்கியும் ஒன்றும் செய்வதற் கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அவன் பொறுப்பை ஏற் றுக்கொள்ள விரும்பினானோ, அவ்வளவுக் கவ்வளவு அவ னுக்கு அது மறுக்கப்பட்டது. காரினின் விவாக ரத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால், விரான்ஸ்கி அன்னாவை மணந்துகொள்ள முடியாது என்பது சமூகம் விதித்த விதி . அந்த விதியையும் மீறிச் செல்லுவதற்கு வேண்டிய ஆற்றல் விரான்ஸ்கியிடம் இல்லை. 

நேர்மையும் உயர்ந்த லட்சியங்களுங்கூட ஒன்றுக் கொன்று முரண்படக் கூடும் என்பதற்கு அன்னாவின் கதை அத்தாட்சி. கதை முழுவதும் தத்துவங்களின் போர்க்கள மாக விளங்குகிறது. காரினின் தம்முடைய மனைவிக்கு விவாக ரத்து அளிக்க மறுத்ததற்கு, சட்டப்படி அவருக்குச் சுதந் திரம் இருந்தது. அவருக்கு அன்னாவிடம் பிறந்த பையனை வேற்றாரிடம் ஒப்புவிக்கும்படி எப்படி வற்புறுத்த முடியும்? ....... அன்னாவின் நேர்மை அபூர்வமானது. அவளை மறந்து விட்டு, அவள் கணவர் சர்க்கார் தஸ்தவேஜிகளை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்திவந்தார். அவளுடைய மனச் சாட்சி சரியானது என்பதனால், அவள் சமூகத்தையும் மீறிப் பொங்கினாள். தனக்கு எவ்விதத்திலும் மாறுபட்ட கணவ ருடன் இருப்பது அவள் இயற்கைக்கு விரோதமானது. அந்த உறவிலிருந்து விடுபடவேண்டும் என்பதே அவள் எண்ணம் ...... விரான்ஸ்கி விஷயம் என்ன? தனக்குப் பிறக்கும் குழந்தைகளைக் காரினின் பெயருக்குப் பலியிட அவன் விரும்பாத நேர்மையும் ஒப்பற்றது. ஆனால், அவ னுக்குப் பெண் மனத்தின் தன்மை தெரியாது. அன்னாவின் 

காதல் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது என்று அவன் தவறாக அர்த்தம் செய்துகொண்டதன் விபரீதம் தான் அன்னாவின் சோக நாடகம். 

அன்னாவுக்கு அப்பொழுது தான் விழிப்பு ஏற்படு கிறது. 'காதல்' என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை என்று உணருகிறாள். அவளுடைய உயர்வும், உள்ளத் தூய்மையும், அவளுடைய தாய் ஹிருதயத்தின் இளக்கத்தில் துயர் ஓவி யங்களாக மாறுகின்றன. அவள், தன் கணவனிடம் பெற் றெடுத்த பாலகனைத் திருட்டுத்தனமாகச் சென்று பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தில், அழியாத தாய் உருவமாக மாறு கிறாள். 

அன்னாவுக்கும் மேற்போன உன்னத விக்கிரகம் ஸியாராம் சரணர் கவிதை யுள்ளத்துடன் வார்த்து நிறுத்தி யிருக்கும் பெண். அவள் தான் ஜம்னா. ஜம்னா வாழ்க்கை யின் கொடுமைகளை யெல்லாம் சகித்து, வெள்ளத்தின் முன் படியும் நாணல் போல, வளைந்து கொடுத்துக்கொண்டு, மறு படி தலை நிமிர்கிறாள். கட்டுப்பாட்டைச் சிறிதளவுகூட எதிர்க்காமலிருந்தும் கூட, சமூகம் அவளுக்குப் 'பெயர்', வைக்கிறது. ' யுவதி எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியும்?' - இதுதானே உலகரீதி! அதையும் அவள் பொருட்படுத்தாமல், கணவன் இழைத்த கொடுமையையும் பாராட்டாமல், அவனை எண்ணி எண்ணி ஏங்கி , அவன் தனக் குக் கொடுத்துச் சென்ற குழந்தையைத் துணையாகக் கொண்டு, வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறாள். அந்த அமைதியின் நடுவில், அஜீத்தின் களங்கமற்ற சேவை ஒரு நிமிஷம் அவள் மனத்தைக் கவருகிறது. தன் ஜாதி ஆசாரப்படி அவனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாமா என்று கூட அவள் கொஞ்சம் தடுமாற்றம் கொள்ளுகிறாள். 

XII 

முடிவில் அந்த உணர்ச்சியையும் திடமாகத் தூரத் தள்ளி விடுகிறாள். தனக்குத் துணை மகனே போதும் என்று தீர் மானிக்கிறாள். 

'ஹல்லீயின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நடந்து சென்றாள். ஆகாயத்தில் மேகங்கள் வந்து சூழ்ந்திருந்தன. நாற்புற மும் ஒரே இருள் ! எங்கும் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும், அவள் மகனின் கையைத் தாங்கி மேலே சென்று கொண்டிருந் தாள். இன்று மாத்திரந்தான் அவள் போய்க்கொண்டிருந்தாள் என்பதில்லை. அந்தப் பண்டைக் காலத்துப் பெண் , யுக யுகாந்தரத்து இருளில், அதைத் துச்சமாகக் கருதி, வெகுகாலமாக இப்படியே தான் மேலே நடந்து சென்றுகொண்டிருக்கிறாள் ; - துன்பமும் இருளுமான இந்த இருள் வழியை, இவ்வண்ணமே கால்களால் மிதித்துக்கொண்டு செல்லுகிறாள் ! அவளுக்கு எவ்வித அச்சமும் இல்லை, ஒரு கவலையும் இல்லை.' 

இந்த நான்கு நவீனங்களிலும் பெண் உள்ளத்தின் உணர்ச்சிதான் பிரதானமாக நின்று வாழ்க்கையின் சுக துக்கங்களை ஆண் மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக் கிறது. கலப்பற்ற துக்கமோ சுகமோ கிடையாது. அந்த வீதாசாரப்படி சுகதுக்கங்கள் ஒரு முடிவற்ற தொடர்பு கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் லட்சியமின்றிக் காதல் மட்டும் எப்படித் தனித்து நிற்க முடியாது என்பதை இவை காட்டுகின்றன. 

ரமேச சந்திர தத்தர் எழுதியிருக்கும் 'ரஜ புத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் ' ' மகாராஷ்டிர ஜீவன் உதயம்' என்ற இரண்டு நாவல்களிலும் காதல் இரண்டாம் அந்தஸ் தில் தான் இருக்கிறது. வீரந்தான் முதல் ஸ்தானம் வகிக்கிறது. தேசத்தின் கௌரவமும் ஒற்றுமையும் நிலைபெற 

xiii 



வீரம் போராடும் பொழுது, காதலை ஓய்வு நேரத்து இன்ப மாக மட்டுமே கருதுகிறது. அதாவது தனி நபரின் சுகம் தேசத்தின் - சமூகத்தின் - சுகத்திற்காகத் தியாகம் செய்யப் பட்டுவிடுகிறது. 

ரஜபுத்திரரின் கௌரவத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்ட முனைந்த பிரதாப சிம்மன், மனைவியையும் குழந்தை களையும் கஷ்டத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கத் தயங்க வில்லை. குழந்தைகள் பட்டினி கிடப்பதுகூட நிமிஷ நேரத் திற்கு மேல் அவரைக் கலங்கச் செய்யவில்லை. அவரைப் பின் பற்றின வாலிப வீரன் தேஜ் சிம்மன் நாட்டை எதிரியிட மிருந்து மீட்கு முன், குஸும குமாரியைக் கைப்பற்ற வர வில்லை. காதலனின் லட்சியம் கைகூடும் வரை காதலியும் காத்துக்கொண்டிருக்கிறாள். 

மகாராஷ்டிர ஜீவன் உதயமாகும் போரிலும் அதே மாதிரி நடைபெறுகிறது. சிவாஜி தம்மை' மறந்து பாடு பட்டுத்தான் மகாராஷ்டிரத்தை ஸ்தாபித்தார். சதா சர்வ காலமும் அவர் நினைத்துக்கொண்டு போர் புரிந்து வந்த ஒரே இலக்கு எதிரி தான். அவருக்குத் துணையாக இருந்து அவர் உயிரைக் காப்பாற்றிய இளைஞன் ரகுநாத்ஜி ஹவல்தார், போர் ஒரு விதமாக நின்ற பின்புதான், தன் காதலி ஸரயூ பாலாவைக் கண்ணெடுத்துப் பார்க்கிறான். 

இந்த இரண்டு நவீனங்களிலும், மனித ஹிருதயத்தை ஆட்கொண்டு, வாழ்க்கையின் சுகதுக்கங்களைத் தாய் நாட்டின் பாதங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்கத் தூண்டும் வேட்கை, உயர்வு பெற்று, வானத்தில் நின்று ஒளி செய்வது போல் விளங்குகிறது. அந்த மகா தாகத்தின் பரப்பில், சிறு மனித உணர்ச்சிகள் பேதைமை கொள்ளுகின்றன ; உயிர் களே மதிப்பற்றுப் போகின்றன ! வாழ்க்கையின் பிணக் 

xiv 

கோலத்தின் அருகில் வீர சக்தி, இரத்த வெறிகொண்ட காளி போல், தாண்டவமாடுகிறது. 

சுகம் எங்கே என்ற பிரச்னை அங்கே கிடையாது! பெண் உள்ளத்தின் பிரசண்ட வேகம் கூட அங்கே எடுபடுவ தில்லை; துக்கத்தின் தூய வர்ணனைக்கு அங்கே இடமில்லை. பெண்மையே அந்த ஊக்கத்திற்கு உணர்வளித்துத்தான் உயிர் பெறுகிறது. வாழ்க்கை பெரிதா, லட்சியம் பெரிதா என்ற கேள்வி அங்கே பிறக்க முடியாது. வாழ்க்கையைத் திருணமாக மதித்த சந்தர்ப்பத்தில், அது எப்படி எழும்? அந்த வீரத்திற்கு லட்சியம் நாட்டின் கௌரவம், ஒற்றுமை. தர்மமும் சத்தியமுமே அதன் கவசமும் கேடயமும். அதைப் போருக்கனுப்பிப் பேரவா ஊட்டும் கருவி - பெண்மை! 

நவீனங்களில் திடுக்கிடும்படியாகவோ எதிர் பாராத வண்ணமோ சம்பவங்கள் நடைபெறா ; இவற்றில் துப்பறியும் வேலை கிடையாது ; மயிர்க் கூச்செறியும் நெருக் கடிகளும் கொலைகளும் நடக்கமாட்டா. எல்லாம் நாம் வாழ்க் கையில் அனுபவத்தில் எதிர்பார்க்கும் சம்பவங்களாகவே இருப்பவை. 

ஆனால், மனித சித்திரங்கள் நிறைய இருக்கும். க்ஷண சித்தமும் தயாள குணமும் படைத்த ஸுரேசன், 'பெரிய மனுஷர்' என்று தாராளமாகச் சொல்லக்கூடிய கேதார் பாபு, 'அசையாத குன்று' என்று சொல்லுவோமே அந்த மாதிரி யான மஹிம், பெண்மையின் பொலிவாகிய மிருணாளினி - இப்படி எத்தனை விதமான பிரகிருதிகள் ! வாழ்க்கை - வீட்டில் வசிக்கும் இவர்கள் எல்லோரும் அசலாவின் தன் மையால் பாதிக்கப்படுகிறார்கள். கிரஹ தாகம்! (வீடு எரிந்து போகிறது!) நடுத் தெருவில் நிற்கிறார்கள் எல்லோரும் ! 

XV 

' சுகம் எங்கே?' என்பதில்தான் என்ன குறைவு ! விளம்பரப் பிரியர் முத்தண்ணா, விவஸ்தையற்ற சஞ்சலா , தனஞ்சயன், ஆனந்தன், மாணிக்கம், உஷா - எவ்வளவு வேறுபட்ட தன்மைகள் ! 

'அன்னா 'வில் உலவும் பிரகிருதிகள் கணக்கில் அடங்காதவர்கள். ஒவ்வொருவரும் தனித் தன்மை கொண்டவர் கள். டால்ஸ்டாய், தம் திறமையையும் உணர்ச்சியையும் பூராவும் அதில் கொட்டி, ஒப்பற்ற வகையில் உருவங்களை வார்த்து நிறுத்தியிருக்கிறார். எல்லோரும் கண்ணெதிரில் நடமாடுவது போலவே தோன்றுகிறது. 

'பெண்'ணில் ஜம்னாவின் அடக்கம் அசாதாரண மானது. கிராமாந்தரப் பரோபகாரி அஜீத் , மனத்தை விட்டு அகல முடியாத உயிர்ச் சித்திரம். ஹல்லீ , இலக்கி யத்தில் தத்ரூபமாக சிருஷ்டிக்கப்பட்டு நிற்கும் பாலகர்கள் சிலரில், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன். 

ரமேச சந்திரரின் நாவல்களில், குன்றின் மேலிட்ட விளக்குகளைப் போலப் பிரகாசிக்கும் பிரகிருதிகள் எல்லோ ரும் சரித்திர புருஷர்கள் . ராணா பிரதாப்சிங், அமர்சிங், தேவீசிங், ராணி துர்க்கா , தேஜ்சிங், திவான் பாமா ஷாஹ், - பெயர்களைக் கேட்டாலே போதும். நமது சரித்திரத்தில் தலை நிமிர்ந்து நடமாடிய ஜோதிகள் ! பிறகு சிவாஜி, தானாஜி, ரகுநாத்ஜி, ராஜா ஜயசிங் - எப்பேர்ப்பட்ட லட்சிய புருஷர் கள்! 

இவற்றை எழுதியவர்கள் சாமானியர்கள் அல்லர். சரத் சந்திரர் இந்தியாவிலேயே தலை சிறந்த நாவலாசிரியர் எனலாம். காண்டேகர் மராட்டியில் முதல் ஸ்தானம் வகிப் பவர். டால்ஸ்டாயைப் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தில்லை. அவர் 'வானமும் பூமியுமாய் வளர்ந்து நிற்கும் கலா நிபுணர்.' ஸியாராம்சரணர் ஹிந்தியில் பிரதம நூலாசிரியர், 

- கவியுங்கூட. ரமேச சந்திரர் இந்தியாவின் ஒப்பற்ற சரித் திராசிரியர். 

இந்த மொழிபெயர்ப்புகளின் மூலம் தமிழிலும் முதல் தரமான நாவல்கள் தோன்றும்படியாக ஓர் ஊக்கம் ஏற்பட வேண்டும்; தமிழ் ஆசிரியர்கள், இவற்றைக் கண்டு, நம் தாய்மொழியிலும் பெரிய நாவல்களை எழுதத் தூண்டு தல் பெற்றால், இந்த நவீனங்களை வெளியிட எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி வீணில்லை. 

இந்தப் புதிய நாவல்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயன்றிருக்கிறேன். இனிமேல், நீங்களே படித்துப் பாருங்கள்.