Sunday 2 September 2018

கலகம் செய்யும் இடது கை. - பெர்நார் வெர்பர்





Riyas Qurana shared a post.

20 hrs ·


கலகம் செய்யும் இடது கை.

பிரெஞ்சு சிறுகதை.
கதைகதையாம் காரணமாம் -02

எனது தெரிவுகளுக்கும் உங்கள் தெரிவுகளுக்குமிடையில் நிச்சயமாக வேறுபாடுகள் இருக்க கூடும்.


Riyas Qurana - றியாஸ் குரானா
20 hrs ·


கதைகதையாம் காரணமாம் - 02. கதைப் பிரதி.
பெர்நார் வெர்பர்
பெர்நார் வெர்பர் 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் --ள் பிரான்சின் துலூஸ் நகரில் பிறந்தவர். பாமர மக்களும் எளிதில் புரிந்து ரசிக்கும்படி அறிவியல் புனைகதைகளைப் பெருமளவில் எழுதிப் புகழ் பெற்றவர். இவருடைய பதினங்களிலும் சிறுகதைகளிலும் அறிவியல் புனைவைத் தவிர, எதிர்காலவியல், தொன்மம், ஆன்மிகம், தத்துவம், உயிரியல் எனப் பல்வேறு தளங்களை யும் அவற்றின் அம்சங்களையும் இவருக்கேயுரிய எளிமையான நடையில் கையாண்டிருப்பார். இதழியலையும் குற்றவியலையும் பயின்று முடித்தபின் பத்து ஆண்டுகள் 'யுரேகா' எனும் இதழுக்கான அறிவியல் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
35 மொழிகளில் வெளிவந்துள்ள இவரது புத்தகங்கள் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத் துள்ளன. இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில், மார்க் லெவியைத் தவிர்த்து இவர் மட்டுமே பெரும்பாலான மக்களால் படிக்கப்படும் எழுத்தாளர் எனும் சிறப்பைப் பெறுகிறார். தென்கொரியாவில் இவரை ஆதரிக்கும் ரசிகர் கூட்டமே தனியாக உண்டு.
பெரும்பாலான புதினங்களில் அறிவியல் உண்மைகளை மையச்சரடாகக் கொண்டு அவரது கதையைத் தொகுத்து விடுவார். சில நேரங்களில், இவரது புதினங்களில் உள்ள கதைமாந்தர்கள் சிறுகதைகளிலும் வந்து போவார்கள். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3ஆம் தேதியன்று தன் நூலை வெளியிடுவது என்ற இலக்குடன் ஆண்டுக்கு ஒரு புத்தகம் மட்டுமே எழுதுவது என சில ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் வருகிறார்.

0000000000

கலகம் செய்யும் இடது கை

என் பெயர் நார்பேர் பெத்திரொலன். என் பதவி காவல்துறை உயர் அதிகாரி. இப்படியொரு பிரச்சினை எனக்கு ஏற்படும் வரை, என் உடலின் அனைத்துப் பகுதிகளையும் என்னால் இயக்க முடியும் என்றே வெகுநாளாக நம்பி வந்துள்ளேன். நிலைமை மிகவும் தொல்லை தருவதாக மாறியது. என் இடது கை வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கி இருந்தது. எப்படி இந்த அங்கம் தன்னாட்சி பெற்றது தெரியவில்லை. என் மூக்கை சொரிய விரும்பிய அந்த நேரத்தில்தான் என் நெடும்பயணம் தொடங்கியது.

வழக்கமாக என் வலது கையைத்தான் உபயோகப்படுத்துவேன். புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததால் இடது கையைப் பயன்படுத்து வதே எளிமையானது என்று நினைத்தேன். ஆனால், அது அசைய மாட்டேன் என்றது. உடனடி யாக இவ்விஷயத்தில் எவ்வித அக்கறையும் நான் காட்டவில்லை. வலது கையால் எப்பொழுதும் போல் சொரிந்து கொண்டேன்.

இதைப் போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நடந்தது. ஒருநாள் வலது கையால் காரில் கியர் போட் டுக் கொண்டிருந்தபோது, ஸ்டேரிங்கிலிருந்து இடது கை வெளியேறியது. என் வலது கையின் உதவியோடு ஸ்ரேரிங்கை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு என் வண்டியை நிலைக்குக் கொண்டு வந்தேன். நடக்க இருந்த சிறு விபத்தைத் தடுக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது. பின்னர் வீடு திரும்பியதும், ஸ்பூனைப் பிடிக்க இடது கை மீண்டும் மறுத்து விட்டது. வலது கை தன்னந்தனியாக நுாடுல்சுடன் போராட வேண்டியதாகிவிட்டது.

அந்தக் கையைப் பார்த்துக் கேட்டேன் “ஏன், என்ன வேண்டும் உனக்கு? என்ன பிரச்சனை ?”

வாயோ காதுகளோ இல்லாததால், என் இடது கையால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அது செய்த காரியம் என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. என் வலது கையைக் காட்டி, குறிப்பாக அந்த மணிக்கட்டில் உள்ள வெள்ளிச் சங்கிலியை சுட்டிக் காட்டியது. வலது கையின் மேல் இடது கைக்குப் பொறாமைக் கூட இருக்க முடியுமா?”

சந்தேகத்துடன், வலது கையிலிருந்து சங்கிலியை பல்லால் அவிழ்த்து இடது கை மணிக்கட்டில் அணிந்து கொண்டேன். என் கற்பனையின் விளையாட்டுதானா இது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த நொடி முதல் என் இடது கை மீண்டும் நான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்துவிட்டது. நினைத்த மாத்திரத்திலேயே மூக்கைச் சொரிய மேலே சென்றது. வலது கை கியர் போடும்போது ஸ்டேரிங்கை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டது. இனிமேல் அது ஒரு ஒழுங்கான நன்னடத்தையுள்ள கையாக இருக்கும் என்று எண்ணினேன்.

எல்லாம் நல்ல விதமாகத்தான் நடந்து வந்தது. ஒரு நாள் என் இடது கை மீண்டும் தன் சுதந்திர வேட்கையை வெளியிட்டது. ஒப்பேரா அரங்கில் ஒரு இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த போது விரல்களைச் சொடுக்கி கொண்டே இருந்தது. பார்வையாளர்களின் கூச்சலுக்கிடையே வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறும்படி ஆகிவிட்டது. இத்தகைய காட்டு மிராண்டித்தன மான செய்கைக்குக் காரணத்தைக் கூற அது மறுத்துவிட்டது.

தொடர்ந்து என் இடது கை எனக்குத் தொல்லை தந்து கொண்டே இருந்தது. திடீரென புறப்பட்டு என் பாக்கெட்டுக்குள் வேடிக்கையாக நுழைந்து கொள்ளும். என் முடியைப் பிடித்து இழுக்கும். வலது கையின் நகங்களை வெட்ட விடாமல் தடுக்கும். இதனால் எனக்குப் பல வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
சில நேரங்களில் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இரண்டு விரல்களை மூக்குக்குள் விட்டு என்னை எழுப்பி மூச்சுத் திணற வைத்துவிடும்.

என் இடது கையிடம் சரணடையும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. எதையோ எனக்குப் புரியவைக்க அந்தக் கை விரும்பியது. கொஞ்சமாவது அதைக் கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. பலமான எதிரியை எதிர்கொண்டு விடலாம். ஆனால், உங்கள் பக்கத்திலேயே நிரந்தரமாகக் குடியிருந்து மிரட்டி உங்கள் கால்சட்டைப் பைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் எதிரியை வெல்வது எளிதில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

நினைவில் நிற்கக்கூடிய நிகழ்வுகள் நிறைந்த சில வாரங்கள் கடந்தன. அடுத்து, திருட்டைத் தூண்டக் கூடிய, குறைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைந்த பெரிய கடைகளில் என் கை பொருள்களைத் திருடி, என்னை இக்கட்டான நிலையில் மாட்டிவைத்தது. வாயிலில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள கண்காணிப்பாளர்களின் முகத்துக்கு நேராகத் திருடிய பொருள்களை அந்தத் துரோகிக் கை வேண்டுமென்றே ஆட்டிக் காட்டியது. என் அடையாள அட்டை இல்லாமல் நான் மீண்டிருக்கவே முடியாது.

நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கும் போது ஏதோ தவறுதலாக ஏற்படுவது போல் சின்ன சிலைகளையும் கண்ணாடி டம்ளர்களையும் கவிழ்த்து உடைத்தது. பழமையை மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கும் பெண்களின் ஆடைகளுக்குள் புகுந்து அவர்களின் மார்புகளைத் தடவும் வேலையைக் கூட செய்யத் துணிந்தது. நானும் என் வலது கையும் அமைதியாக தேநீர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, இத்தனை வேலையும் அது செய்துவிடும். இதன் விளைவுகளில் பல அறைகள் வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அநாகரிகமாக அசைந்து பதில் சொல்லும்.

வேறு வழியில்லாமல், என் பிரச்சினைகளை நண்பர் டாக்டர் ஒனோரே பதோவிடம் சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் ஒரு மனோத்தத்துவ நிபுணர். இது ஒன்றும் அசாதாரண மானது இல்லை என்று சொன்னார். நம் மண்டைக்குள் இடது மூளையும் வலது மூளையும் ஒரு பிரிவினை ஏற்பாடாக எதிர் எதிர் திசையில் இயங்கி வருகிறது. இடது புறம் ஆண் தன்மையும் வலது புறம் பெண் தன்மையும் இருக்கும். இடது புறம் பகுத்தறிவுத் தன்மை , வலது புறம் பாச உணர்ச்சி. இடது புறம் ஒழுங்கும் வலதுபுறம் ஒழுங்கின்மையும் காணப்படும். இடது புறம் ஒழுங்கின் இருப்பிடம் என்றால், ஏன் குறிப்பாக என் இடது கை மட்டும் இதுபோன்ற குழப்பங்களை உண்டாக்கு கிறது ?"

எதிர் எதிர் திசையில் தலைக்குள் அமைந்துள்ள தளங்கள்தான் நம் உறுப்புகளின் இயக்கத்தைக் கவனித்துக் கொள்கின்றன. உன் வலது கண், உன் வலது கை, உன் வலது பாதம் இவற்றையெல்லாம் இடது தளமும் இடப்பக்க உறுப்புகளை வலது தளமும் இயக்கும். நீண்ட நேரம் வலது புறம் அடைபட்டிருக்கும் உன் உள்மனது உன் கவனத்தை ஈர்ப்பதற்கு முயற்சி செய்யும். வழக்கமாக, இது நரம்புத் தளர்ச்சி, திடீர் கோபம், கலை உந்துதல் என வெளிப்படும். உசுப்பிவிடப்பட்ட வலது தளம் இப்படித்தான் வெளிப் படுத்தும்.

உன் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. உன் வலது மூளையின் எரிச்சல்தான் உன் இடது கை செய்யும் கலகத்தில் எதிரொலிக்கிறது. கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. உன் உடம்பை ஒரு மிகப்பெரிய நாடாக நினைத்துக்கொள். அதில் ஒரு பகுதி கலகம் விளை விக்கிறது. பிரான்சில் இதுபோன்ற பல கலக இயக்கங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உடம்பின் உள்ளுறுப்புகளில் நடக்கும் அரசியல் பிரச்சினை இது. இது இயல்பானது தான். என் பிரச்சினைக்கு இப்படியொரு உளவியல் காரணம் இருக்கிறது என்பதை அறிந்து மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது. எனினும், இந்தக் 'கலக உறுப்பு' கொடுக்கும் தொல்லைகள் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருந்தது. நான் வேலை செய்யும் இடத்திலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை .

காவல் நிலைய தலைமை அலுவலகத்தில் மேசை மீது இருக்கும் கைத்துப்பாக்கியின் விசையுடன் என் இடது கை விளையாடிக் கொண்டிருக்கும். நான் எழுதி வைத்திருக்கும் தகவல் அறிக்கைகளில் கிறுக்கும். தீக்குச்சிகளைப் பற்றவைத்து தாள்கள் இருக்கும் கூடையில் போடும். மேல் அதிகாரிகளின் காதுகளைப் பிடித்து இழுக்கும். இப்படி அதன் சேட்டை களுக்கு எல்லையே இல்லை.

புதிதாக என்ன செய்தால் அது திருப்தியடையும் என்று அதனிடமே கேட்பது என்று முடிவு செய்தேன். என் வலது கையில் இருக்கும் மோதிரத்தின் மீது அதற்கு ஒரு கண் இருக்கிறதோ? ஒரு பேனாவை எடுத்து என் இடது கை கஷ்டப்பட்டு (நான் வலது கையால் எழுதுபவன்) எழுதிக் காட்டியது. "நமக்குள் ஒரு கூட்டணி ஒப்பந்தம் எழுதிக் கொள்வோம்.”

நான் காண்பதென்ன கனவா? என் இடது கையுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா? பிறப்பிலிருந்து எனக்கு சொந்தமாக இருக்கும் ஒரு உறுப்புடனா? கை என்பது பெற்ற ஒன்று. பெற்ற ஒன்றுடன் பேரம் பேசுவது என்பது நடக்காத காரியம். என் இடது கை எப்பொழுதும் என்னிடம் உள் ளது. அது எனக்குச் சொந்தமானது. உள்ளிருந்து வெளிப்பட்ட என் உணர்வுகளுக்கு செவி சாய்ப்பது போல் தெரிந்ததால், அதைப் பார்த்துக் கேட்டேன்: "இன்னும் என்ன வேண்டும் ?” மீண்டும் பேனாவை எடுத்தது. எழுதிக்காட்டியது. “என் இஷ்டப்படி வாழ என் கைச் செலவுக்கு ஒரு சிறு தொகை வேண்டும். இதற்கு நீ பணிய மறுத்தால் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்.”

சரணடைவதற்குப் பதிலாக சமாதானம் செய்யும் விதமாக, கையை அழகு நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். அழகிய இளம் பெண் ஒருவள் தன் வெண்மையான கைகளால் என் இடது கைக்குச் சேவை செய்து அதற்கு எடுப்பானதொரு தோற்றத்தைத் தந்தாள். நகங்கள் பளிச்சென மின்னின. இந்தத் துரோகக் கையில் எல்லாம் சரியாகவும் சுத்தமாகவும் இருந்தன. இருப்பினும், இந்தப் பிசாசுக்கு மன நிறைவு அளிக்கவில்லை. ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும், என் தீவிரவாத இடது கை எழுதிக்காட்டியபடி இருந்த வாசகம் "கூட்டணி இல்லையென்றால் லஞ்சம்.”

இந்த மிரட்டலுக்கு நான் பணிய மறுத்தேன். ஒருநாள் என் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்த்தது. மிகவும் கஷ்டப்பட்டு என் வலது கை விலக்க வேண்டியதாகி விட்டது. அன்று முதல் எனக்கு ஒரு விஷயம் தெளிவானது.

என் இடது கை அபாயகரமானது. நானும் அதைவிட மோசமாக நடந்து கொள்ள முடியும். அதனிடம் என் எச்சரிக்கையை வெளியிட்டேன்.

“நீ இப்படியே தொடர்ந்தால் உன்னை வெட்டி எடுத்துவிட என்னால் முடியும்.”

உண்மையில், இந்த எண்ணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது இல்லைதான். ஆனால் கட்டுப்படுத்த முடியாத ஒரு எதிரி கையின் மிரட்டலுக்குப் பணிந்து நான் வாழ விரும்பவில்லை. நான் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அதற்குக் காண்பிப்பதற்காக என் இடது கையை ஸ்கேட்டிங் கிளவுசுக்குள் அனுப்பி சிறையிட்டேன். பயனில்லை. நானே வடிவமைத்த தேக்குமரப் பேழையில் சிறை வைத்தேன்.

இதன் மூலம் விரல்களை அதனால் சேர்க்க முடியாமல் " செய்தேன். இப்படி ஒரு இரவு முழுவதும் அதனைக் கட்டிப் போட்டதில், மறு நாள் காலை, கை ஈரமாக எரிச்சலடைந்தேன். பிடிவாதமாகக் கிளர்ச்சி செய்யும் கைக்கு வேறு எதுதான் சரியான தண்டனை. இங்கு யார் தலைவன் என்பதை இப்பொழுதாவது அது புரிந்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.

« அது நான்தான். நார்பேர் பெத்திரொலன், என் உடல் முழுமைக்கும் ஒரே தலைவன். விரல் நுனிமுதல் எலும்பின் விளிம்புவரை, உறுப்புகளுக்கும் அவை தம் கிளைகளுக்கும் சொந்தக்காரன். ஹார்மோன்களின் பரிவர்த்தனைகளையும் வயிற்றின் அமிலத்தன்மையையும் கவனிக்க ஏகபோக உரிமையுள்ளவன். ரத்த நாளங்களுக்கும் நரம்பின் மின்சாரத் திற்கும் தலைவன். என் உடல் முழுவதுக்கும் தலைவன். இத்தகுதி பிறவியில் எனக்கு அமைந்தது. என் உடல் இயக்கத்தின் எந்த ஒரு பகுதி செய்யும் வேலை நிறுத்தமும் கடுமையாகத் தண்டிக்கப்படும்.” மன்னர், பதினோராம் லூயியைப் போல முழங்கினேன்.

அதனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தேன். இரண்டு வார காலத்துக்கு மீண்டும் நல்ல விதமாக நடந்து கொண்டது. அதன்பின் ஒரு பேனாவை எடுத்து சுவரின் மேல் எழுதிக் காட்டியது.

"விடுதலை, சமத்துவம், கூட்டணி.”

வாக்கெடுப்பு வைத்தால் என்ன ? வலது கை வலது பக்கத்துக்கும் இடது கை இடது பக்கத்துக்கும் வாக்களிக்கும்.

ஒரு வாரம் முழுக்க நன்கு பிளாஸ்திரி போட்டு அதைக் கட்டிப்போட்டேன். எனக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டவர்களிடம், ஸ்கேட்டிங் போகும்போது கீழே விழுந்து விட்டதாகச் சொன்னேன். என் இடது கை என்னை நீண்ட நேரம் விட்டுவைக்கவில்லை. அன்று மாலையே, பிளாஸ்டரின் மேல் பகுதியை நகங்களால் கீறியது. அதனை விடுதலை செய்வது என்று முடிவு செய்தேன். வெளியே வந்து சூரிய வெளிச்சத்தைப் பார்த்ததும் சிலிர்த்தது.

இந்தத் தண்டனைக்குப் பிறகு, என் இடது கை எந்தப் பிரச்சினையும் எனக்குத் தரவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அன்றாட நடவடிக்கைகளில் என்னால் இயல்பாக ஈடுபட முடிந்தது.
ஒருநாள் எல்லாம் தலைகீழ் ஆனது. ஒரு கொடூரமான கொலையைப் பற்றி "விசாரித்துகொண்டிருந்தேன். முந்தைய நாள் இரவு சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர் ஒருவர் கழுத்து நெரிக்கப் பட்டுக் கொலை செய்யப்பட்டார். திருட்டைக்கூடக் காரண மாகக் ககூற முடியாத விசித்திரமான கொலை. பக்கத்தில் கல்லாப் பெட்டியில் கரன்சி நோட்டுகள் அப்படி யே இருந்தன. டிஜிட்டல் ரேகைகளை லேப்பில் பரிசோதனை செய்து பார்ப்பதற்காகப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என் இடது கையின் ரேகைகள் தான் அவை என்பதைக் கண்டுகொண்டபோது வியப்படையாமல் இருக்க முடியவில்லை .

விசாரணை வெகுநாட்களுக்கு நீடித்தது. விசாரணையை நான் ரகசியமாக நடத்தி வந்தேன். ஏனென்றால், கையும் களவுமாகப் பிடி படக்கூடாது என்பதற்காகத்தான். இதற் கிடையில், என் புலன் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் போதெல்லாம், கிடைக்கும் துப்புகள் மறைந்து விடும். எல்லாம் என் இடது கையின் வேலைதான். மேலும் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது என்னைக் கேலி செய்வதற்காக ஏதாவது செய்து அலட்டிக்கொள்ளும். என் மேசைமேல் விரல்களால் தாளம் இட்டுச் சொன்னது. “சண்டை வேண்டும் என்றுதானே விரும்பினாய், இதோ.”

என்னைத் துளைத்துக்கொண்டிருந்த கேள்வி இதுதான். எனக்குத் தெரியாமல் எப்படி என் மொத்த உடம்பையும் குற்றம் நடந்த இடத்துக்கு என் இடது கை இழுத்துச் சென்றிருக்க முடியும்?

கிடைத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தினேன். குற்றம் நடந்ததற்கு முதல் நாள் அந்த இடத்தின் அருகில் என்னைப் பார்த்ததாகக் கூறினார்கள். என் இடது கையில் கைத்தடியுடன் நான் காணப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு கைத்தடியின் உதவியுடன் தூக்கத்தில் என்னை இந்தத் துரோக உறுப்பு கொண்டு சென்றிருக்குமா? இருக்காது. ஒத்துழைப்புத் தராத 85 கிலோ மாமிசக் குவியலைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு என் கை வலிமையாக இருக்காது.

இப்போதைக்குக் காரியம் என் கையை மீறிப் போய்விடவில்லை.மேலும் சில தகவல்கள் பெற ஒரு மருத்துவரை அணுகினேன். எனக்கு வந்திருப்பது மிகவும் அபூர்வமான வியாதி என்று அவர் விளக்கினார். என்னை அழைத்துச் சென்று சக மருத்துவர்களிடம் காட்டி என் வியாதியைப் பற்றி ஒரு ஆய்வறிக்கை அளிக்க விரும்புவதாகச் சொன்னார். பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி வந்தேன். என் இடது கையோ என்னை அங்கேயே இருக்க வைப்பதற்குக் கதவுகளைப் பிடித்து கொண்டது. வீட்டுக்குத் திரும்பியவுடன் நேரிடையாக என் இடது கையிடமே வாதாட ஆரம்பித்தேன். தவறான பதிலைத் தரும்போதெல்லாம், இரும்பு ஸ்கேலால் அதன் விரல்களில் அடிகொடுத்தேன்.

தொடக்கத்தில் அதற்கு எட்டும் தூரத்தில் இருந்த பேனாக்கள், இரேசர்கள் என எல்லாப் பொருள்களையும் என் மேல் வீசி தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. மேசைக்காலில் அதைக் கட்டிவைத்து டெலிபோன் டைரக்டரி யால் அடித்துக் கொண்டே இருந்த பிறகுதான் அது எழுதுவதை நிறுத்தியது. டெலிபோன் டைரக்டரிகளால் அடித்தால் வலிக்கவும் செய்யும் அடித்ததற்கான தடயமும் இருக்காது. காவல்துறையில், இயன்றவரையில் உடலை வருத்தும் தண்டனைகளைத் தவிர்த்துவிடுவோம். ஆனால், சந்தேகப் பேர்வழிகளைப் பேசவைக்க ஏதாவது செய்தாக வேண்டும்.

இடது கை ஒத்துழைக்க முடிவு செய்தது. பேனாவை எடுத்து எழுதி விளக்கியது.

“ஆம், நான்தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்தேன். என்னைப் பற்றி நீ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. உன் கவனத்தை என் பக்கம் திருப்ப இந்த வழிதான் எனக்குக் கிடைத்தது.”

“சரி. எப்படி என் உடல் முழுவதையும் குற்றம் நடந்த இடத்துக்குக் கொண்டு சென்றாய் ?” மீண்டும் எழுதி விளக்கம் அளித்தது. “பிளாஸ்திரிக்குள் அடைப்பட்டுக் கிடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், என் திட்டத்தைத் தீட்ட போதுமான நேரம் கிடைத்தது. மனோவசிய முறையைப் பயன்படுத்தினேன். நீ தூங்கிக்கொண்டிருந்தபோது, உன்னை எழுப்புவதற்காகக் கிள்ளிவிட்டேன். பாதி தூக்கத்தில் இருந்த போது. உன் எதிரில் ஒரு கடிகாரத்தை ஆடவிட்டு, சிறு குறிப்பேட்டில் நான் எழுதிவைத்திருந்த ஆணைகள் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக உன்னை நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தினேன். வலது கையும் குறிப்பேட்டுக்கு உதவி செய்தது.

"சூப்பர் மார்க்கட்டுக்குப் போ” என்று நான் ஆணையிட்டேன். நீ அங்கு சென்றாய். அங்கு, அன்றைக்கு விற்பனையில் கிடைத்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்த அந்தப் பெண் ஊழியரைத் தவிர வேறு யாரும் இல்லை. அவள் தனிமையில் இருந்த அந்தத் தருணத்தைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன், அவள் மீது நான் பாய்ந்தேன். நீ என்னைத் தொடர்ந்தாய். அவள் கழுத்தை இறுக்கிவிட்டேன்.”

கொடுமை. ஒருபோதும் என்னால் இந்த விஷயத்தை என் உயர் அதிகாரிகளிடம் விளக்க முடியாது. உதாசீனப் படுத்தப்படுவதாகக் கருதுவதால், என் இடது கை தான் கொலை செய்தது என்று நான் சொன்னால் யார் நம்புவார்கள் ?

நீண்ட நேரம் குழப்பத்தில் இருந்தேன். என் இடது கைக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

ரத்தம் சொட்டும் அளவுக்கு அதன் நகங்களைப் பிடுங்க வேண்டுமா? அந்தக் கையை உற்றுப் பார்த்தேன். எப்படிப் பார்த்தாலும், அது பல வழிகளில் உதவி செய்யும் ஒரு அருமையான கை. அது கிடுக்குப் பிடியாகவும், பாதுகாக்கும் இடமாகவும், பலபீடமாகவும் உதவி செய்கிறது. எல்லா விரல்களும் தன்னாட்சியுடையவைதான். நகத்தால் கடினமாகியிருந்த நுனிப்பகுதி நார்ப் பொருள்களைச் சுரண்டவோ வெட்டவோ உதவும். என் கைகளின் உதவியால் தான் என் அறிக்கைகளை வேகமாகத் தட்டச்சு செய்வேன். மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளில் ஈடுபட, குளிக்க, புத்தகங்களைப் புரட்ட, கார் ஓட்ட கைகள் தான் உதவி வருகின்றன. அவற்றிற்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன்.

ஒரு பொருள் உங்களிடம் இல்லாதபோது தான் அந்தப் பொருளின் அருமை தெரியும். எந்த அளவுக்கு அந்தப் பொருள் இன்றியமையாததாக இருக்கிறது என்பது புரியும். என் கைகள் ஒரு எந்திர அற்புதம். எந்த ரோபோவாலும் அவற்றை ஈடு செய்ய முடியாது.

எனக்கு என் இரண்டு கைகளுமே வேண்டும். இந்தக் கலகம் பண்ணும் இடக்கையும் சேர்த்துத்தான்.

அதனை நண்பனாக்கிக் கொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த காலத்தில் இந்தக் கை எனக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்திருக்கிறது. எதிர் காலத்திலும் இன்னும் தேவையாக இருக்கும். அது தன்னாட்சியை விரும்புகிறது. இருக்கட்டுமே. அதனால் என்ன, இதன் மூலம் எனக்குக் கைக்கு எட்டும் தூரத்தில் நிரந்தரமாக மேலும் ஒரு கருத்து கிடைக்கும். எனவே, கூட்டணி ஒப்பந்தத் தில் கையொப்பம் இடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

என் தேவைகளை என் வலது கை பிரதிபலித்தால், தன் சொந்த தேவைகளை என் இடது கை பிரதிபலிக்கும். ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்தில், கைச் செலவுக்காகக் கொஞ்சம் பணமும் அழகு நிலையத்தில் வாரமிருமுறை சென்று என் இடது கைக்குக் கையலங்காரம் செய்யவும் ஒப்புக்கொண்டேன். இதற்குக் கைமாறாக உடம்பின் மற்ற பாகங்கள் ஈடுபட்டுள்ள வேலைகளில் பங்குகொள்ள என் இடது கை சம்மதித்தது. ஜாகிங் போகும்போதும் கித்தார் வாசிக்கும் போதும் வலது கைக்கு உதவியாக இருக்க சம்மதம் தெரிவித்தது.

என் உடலைச் சார்ந்துள்ளதால் கிடைக்கும் எல்லா சலுகைகளையும் அது அனுபவித்துக்கொள்ளும். அதாவது வெப்பக்கட்டுப்பாடு, ரத்தப் பாசனம், மற்ற உறுப்புகளின் ஒத்துழைப்போடு வலியை நிறுத்தச் செயல்படும் வலி அறிவிப்பு. அன்றாட துப்புரவு. உரிய உடைப் பாதுகாப்பு. நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேர ஓய்வு போன்ற சலுகைகள்.

இப்படியாக, என் அருகிலேயே எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடிய ஒரு கூட்டணியை உறுதி செய்து விட்டேன்.

என் காவல்துறை வேலையை விட்டு விலகி சொந்தமாகத் துப்பறியும் நிறுவனம் தொடங்க ஆலோசனை வழங்கியதும் இந்தக் கையேதான். Left Hand and Petitrollin Agency என்பது அதன் பெயர்.

இந்த நிறுவனத்தில் என் இடது கைதான் முக்கிய முடிவுகளை எடுப்பதாகச் சிலர் பேசுவதுண்டு. இவையெல்லாம் பொறாமை பிடித்த கெட்ட நாக்குகள் சிதிலமடைந்த பற்களின் இடையே வாய்ச் சிறையில் முக்கால்வாசி நேரம் அடைபட்டுக் கிடப்பதால் வரும் விபரீதம். இப்படியே போனால் உங்களுக்கு க்ளஸ்ட்ரஃபோபியா என்ற மனநோய் தான் வரும். என் இடது கையைப் போலவே அவையும் தன்னாட்சியை விரும்புகின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் - வெங்கட் சுப்புராய நாயகர்