Saturday, 28 May 2016

பள்ளம் - சுந்தர ராமசாமி, போதை ஏற்றாத கதை - விமலாதித்த மாமல்லன்

பள்ளம் - சுந்தர ராமசாமி

http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_22.html

அன்று எங்கள் கடைக்கு விடுமுறை. வாரத்தில் ஒரு நாள். ஆனால், அன்றும் போகவேண்டிவந்தது. அடக்கமில்லாத, முரட்டுச் சாவியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன். மனத்திற்குள் அழுதுகொண்டே தெருவில் இறங்கி நடந்தேன்.
இந்த ஒரு நாளையாவது எனக்கே எனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. நாட்களை எண்ணி, பொறுமை கெட்டபின், சாவகாசமாக வரும் ஏழாவது நாள். நான் ஒத்தி போட்டவைகளையும், செய்ய ஆசைப்பட்டவைகளையும் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியாமல்Sundara_ramasamy7_400 திணறும் நாள். மொட்டைமாடிப் பந்தலின் சாய்ப்பில், வெறுந்தரையில், எதுவும் செய்யாமல், எதுவும் செய்ய இல்லை என்ற சந்தோஷத்துடன் வானத்தைப் பார்த்தபடி மனோராஜ்ஜியத்தில் மிதப்பது. வேலை, அல்லது அப்பா, அல்லது வாடிக்கை என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்க, தீர்மானமே அற்ற சுதந்திரத்தில் திளைக்க ஒரு நாள். பகற்கனவு என்கிறார்கள். ஆனால், ஆசைகள் லட்சியங்கள் அங்கு தானே வர்ணச் சித்திரங்களாக மிளிர்கின்றன. அதுவும் வேண்டாமென்றால் எப்படி?
மொட்டை மாடி வெறுந்தரையில் கிடந்து வானத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறேன். பின் எப்போது என்று தெரியாமல், வானமும் மொட்டைமாடியும் செடி கொடிகளும் என் ரத்தபந்தங்களைச் சுற்றி உழலும் நினைவுகளும் அற்றுப்போய், மனக்காட்சியில் நான் கதாநாயகனாகச் சுழல, என்னைச் சுற்றி, சூரிய சந்திர மண்டலங்கள் கும்மியடிக்கின்றன. பூத்துச் சொரிகின்றன, ஆசைகள். மாலை தொடுக்க, மெல்லிய மேகங்களை உடுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் மிதந்து வருகிறார்கள். பின்னால் நினைத்துப் பார்த்தால் வெட்கமாய் இருக்கும். இப்படி கேவலப்பட்டுப்போய்விட்டோமே என்றிருக்கும். சில சமயம் வருத்தம் பொத்துக் கொண்டு வரும். நல்ல வேளை, என் பகற் கனவுகள், அந்த வர்ணத் திரைக் காட்சிகள், வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு ‘ரீல்’ பார்த்தால்கூட எல்லோரும் என்னைக் காறி உமிழ்ந்து விடுவார்கள். பத்து சட்டம் பார்த்தால் போதும், ’இந்த நாயை வீட்டில் வைத்துக்கொண்டிருக்க யோக்யதை இல்லை’ என்பார் அப்பா.
[’நீங்கள் நினைப்பது சரிதான் அப்பா, சரிதான். என் கற்பனைகள் ஒன்றும் நிறைவேற மாட்டேன் என்கிறதே. நான் என்ன செய்யட்டும். ரொம்ப வேண்டாம்; கால் பங்கு நிறைவேறினால் போதும்... அப்புறம் ஒரு வார்த்தை சிணுங்க மாட்டேன். உங்களைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ - நான் வேலை செய்யும்போது சந்தோஷமாக இருந்தால், கடவுள் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன - ஒரு வார்த்தை முணுமுணுக்க மாட்டேன். எந்த நுகத்தடியில் வேண்டும் என்றாலும் புன்னகையுடன் தோள் கொடுப்பேன். கால் பங்கு நிறைவேறினால் போதும் அப்பா, வெறும் கால் பங்கு.’]
ஒரு நாள் முழுசாக என் கையில் வந்து விழுவது; அதை, கொஞ்சம் கொஞ்சமாக, தீர்ந்துவிடுமே என்ற கவலையில் நான் கொறித்துக்கொண்டிருப்பது, பொறுக்குமா அப்பாவுக்கு? விடுமுறை நாளில், ரத்தமும் சதையுமாய் அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு அர்த்தம் வேண்டாம்.  ”போடா, போய் அந்த சேலம் கட்டை உடைத்து விலை போடு” என்றார் அப்பா.
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அது ஒன்றும் அப்படி பெரிய வேலை இல்லை. அந்த உருப்படிகள் விற்பனைக்கு அவசரமாகத் தேவையுமில்லை. மறு நாளோ, அதற்கு மறுநாளோ கூட போட்டுக் கொள்ளலாம். அரை மணி நேரத்தில் - சரியான கையாள் நின்றால் இன்னும் குறைவாகக்கூட - செய்துவிடக்கூடிய வேலை. அது போதும் என்று வைத்துக் கொண்டால் நான் வீட்டில் அல்லவா இருப்பேன். சும்மா இருந்து விட்டால்கூடக் குற்றமில்லை. சும்மாவும் இருக்கமாட்டேன் என்கிறேனே. அதுதான் கஷ்டமாக இருக்கிறது அப்பாவுக்கு. என் புத்தக அலமாரியை அடுக்க ஆரம்பிக்கிறேன். தரை பூராவும் பரந்து கிடக்கும் புத்தகங்கள் அப்பாவை என்னென்னவோ செய்துவிடுகின்றன. என்ன செய்து இவ்வளவு பெரிய துன்பத்துக்கு ஆளாக்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அல்லது இலக்கிய நண்பன் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுகிறான். அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து, இருள் சூழ்ந்த பின்பும் விளக்குப் போட்டுக் கொள்ளாமல், மிதமிஞ்சிய லகரியுடன், வெறியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வப்போது நண்பன் வெளியே போய் ‘தம்’ இழுத்துவிட்டு வருகிறான். பேச்சு. பேச்சு. என்னதான் பேசிக்கொள்கிறார்களோ, என்று அப்பா, அம்மா முதல் கைக்குழந்தைவரை கேட்டிருக்கிறார்கள். யாரும் இந்தக் கேள்விக்குச் சரிவரப் பதில் சொல்லவும் மாட்டேன் என்கிறார்கள். அப்படியே என் நண்பன் வரவில்லை என்றாலும் - அவன் அநேகமாக வராமல் இருப்பதில்லை - அம்மாவைத் தேடிக்கொண்டு போகிறேன். அவளுடைய கட்டிலின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு, நோபல் பரிசைப் பிடுங்கிக்கொள்ளப்போகிற என் நாவலின் கதையை நான் சொல்ல, அவள் சுவாரஸ்யமாகக் கேட்க, அந்த இடத்தில் அக்காக்கள், தங்கை, அக்கா குழந்தைகள் எல்லோரும் கூட, பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாகி, அங்கு நான் ஒரு கதாநாயகன் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்கும்போது, அப்பா தனியறையில் தனிமை வதைக்க, படித்து முடித்த ‘ஹிந்து’ பத்திரிகையை மாறி மாறி மடித்துக்கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொள்வதும் மீண்டும் வராண்டாவில் உலாவுவதும்.... அப்பப்பா..... ஒரு விடுமுறை நாள் என்ன என்ன பிரச்சினைகளைக் கிளப்புகின்றன.....
‘டேய் போ, போய் சேலம் கட்டை உடைத்து விலை போடு’ என்கிறார் அப்பா. ‘கூட?’ என்கிறேன். ‘மதுக் குஞ்சுவை வரச் சொல்லியிருக்கிறேன்’ என்கிறார். இதைக் கேட்க  எனக்கு மிகச் சங்கடமாக இருக்கிறது. இது ஒரு தந்திரம். எனக்குத் தெரியாமல், வேண்டாம் என்று சொல்லக்கூட எனக்கு சந்தர்ப்பம் தராமல், மதுக்குஞ்சுவை வரச்சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தால் இப்போதுகூட வேண்டாம் என்று நான் அவனை அனுப்பிவைக்க முடியும். இது தெரியாதா அப்பாவுக்கு. அதனால்தான் நேராகக் கடைக்கு வரச்சொல்லியிருக்கிறார். இப்போது அவன் வந்து காத்துக்கொண்டிருப்பான். இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சேலம் கட்டை உடைப்பதைத் தவிர.
தெரு வழியே உடம்பையும் சாவியையும் தூக்கிக் கொண்டு, மனத்திற்குள் அழுதுகொண்டு, என் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளத் தெரியாத என்னையே நிந்தித்துக்கொண்டு, என்னை இப்படித் தொடர்ந்து சங்கடப்படுத்தும் யார் என்று தெரியாத எதிரியை சபித்துக்கொண்டு போனேன்.
வெளிப்பிரக்ஞை ரொம்பவும் மங்கிப் போனதில், மற்றொரு அசையும் பொருளில் என் உடலேறி உட்கார்ந்து கொண்ட மாதிரி நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு கல்தூணைக் காலால் உதைத்து எலும்பை முறித்துக் கொண்டு விழுந்து கிடக்க வேண்டும் போலிருந்தது.
***
இந்த வெள்ளிக்கிழமைகளில்தான் புதுப் படங்கள் போடுகிறார்கள். பதிமூன்று கொட்டகைகளிலும் புதுப் படங்கள். காலை ஒன்பது மணிக்குக் களை கட்டியாயிற்று. பெண்களையும் குழந்தைகளையும் தெருவில் வாரிக் கொட்டியாயிற்று. இடுப்புக் குழந்தைகளுடன் விரைகிறார்கள். இவர்கள் உடம்பில் இந்த நேரங்களில் ஏறும் விறுவிறுப்பைப் பார்த்தால், வருடக்கணக்கில் சிறையிலிருந்துவிட்டு விடுதலை பெற்றுவரும் கணவன்மார்களைக் கொட்டகைகளில் சந்திக்கப் போவதுமாதிரிதான் இருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ள முடியாத நாணத்தால் அமுக்கப்படும் சந்தோஷத்தில்தான் முகத்தில் இந்த போலி கடுகடுப்பு ஏறமுடியும். இந்த  ஒன்பது மணிக்கு, தங்கள் வேலைகளை பரபரக்கப் பாதி முடித்தும், போட்டது போட்டபடியும் தெருக்களில் குதித்து விரைகிறார்கள். தெரிந்தவர்களைக் குறுக்கிட்டுத் தாண்டும்போது, பார்த்தும் சரியாகப் பார்க்காதது போல் சிரித்துக்கொண்டு விரைகிறார்கள். வெயில் விளாச ஆரம்பித்துவிட்டது. இப்போதே இப்படி அடித்தால் நண்பகலுக்கு அதன் கைச்சரக்கை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கழுத்துகளிலும் கன்னங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது. குங்குமப் பொட்டுகளின் ஓரங்கள் கலங்கிவிட்டன. இடுப்புக் குழந்தைகளின் தலைகள், பெண்களின் அவசர உடல் அசைவுகளில் குரங்காட்டம் ஆட, நெற்றிப் பொட்டுகளிலும் தாடைகளிலும் வியர்வை வழிகிறது. குழந்தைகளின் முகங்கள் ரொம்பவும் வாடி விட்டன. பெண்கள் தங்கள் இயற்கையான வேகத்தில் நகராதது மாதிரியும், உருத்தெரியாத ஒரு லகரியை கடைவாயில் ஒதுக்கிக்கொண்டு, அதிலிருந்து ஊறும் ஒரு ரசத்தை விழுங்கி தங்கள் நாளங்களில் பரப்பிக்கொள்வதால்தான், இவர்களால் இத்தனை அமானுஷ்யமான வேகம் கொள்ள முடிந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. அவர்கள் மூளையில் ஊறப்போகும் இன்ப உணர்வுகளுக்கு பாஷை இல்லை.
நானும் சிறு வயதிலிருந்தே இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும் - அவர்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும். காலத்தாலும், நாகரிகங்களாலும், நான் அறியாது அவர்கள் மீது சரியும் கஷ்டங்களாலும் சில சமயம் சந்தோஷங்களாலும் இவர்கள்  அடையும் மாற்றங்களை, நான் மிக உன்னிப்பாக, மிகுந்த ஆசையுடன் கவனித்து வந்திருக்கிறேன். நான் சிறு பையனாக இருக்கும்போது வெள்ளிக்கிழமைகளின் மகோன்னதக் காலைக் காட்சிகளுக்கு, தங்கள் தாயார்களின் அவசரத்துக்கு ஈடுகொடுக்கப் பதறிக் கொண்டு, பாவாடையைச் சுருக்கிக் கொண்டு ஓடிய குட்டிகள், வயிற்றுக் குழந்தையுடனும் இடுப்புக் குழந்தையுடனும் இப்போது ஓடிக்கொண்டிருப்பார்களோ?
வித்தியாசத்திற்காக, வேண்டுமென்றே பாதையை மாற்றுகிறேன். ரொம்பவும் சுற்று இது. அப்பாவுக்குத் தெரியாத சந்துகள். கண்களைக் கட்டி, இதில் எதிலாவது ஒன்றில் அவரை விட்டால், ”இது எந்த ஊர்?” என்று நிச்சயம் கேட்பார். அவருக்கு, கடைக்கு ஒரு பாதைதான் உண்டு. அந்தப் பாதை வழியாகத் தான் அவர் இருபத்தி மூன்று வருடங்களாக -அதற்கு மேலும் இருக்கும் - போய்க்கொண்டிருக்கிறார்.  நான் சுற்றிப் போகிறேன். சந்துகள் வழியாக. இந்தச்  சந்திலுள்ள குடியிருப்புகள், ஆட்கள், முக்கியமாகப் பெண்கள், இந்தத் தெருவிலுள்ள வேசிகள், அரை வேசிகள் - அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களும், அவர்களுடைய குழந்தைகளின் முகங்களும் எனக்குத் தெரியும். இந்த வீடுகள், முன் வாசல்கள் (அன்னம்மை நாடாத்திக்கு ஒரு கோலம்தான் தெரியும். மூன்று ஜிலேபிகள் பிழிந்துவைத்து விடுகிறாள், கோலப்பொடியில்) சண்டைகள், சச்சரவுகள், கெட்ட வார்த்தைகள், அவர்களுடைய முகங்கள் எனக்கு அலுக்கவே இல்லை. இவர்களுடைய ஒழுங்கற்ற தன்மையை நம்பித்தான் நான் என் ஜீவனைச் சுமந்து கொண்டிருப்பதாக, அப்பாவுடைய ஒழுங்கிலிருந்து என்னைத் தற்காத்துக்கொண்டு வருவதாக, படுகிறது.
அப்பா காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து நடக்கப் போய்விடுகிறார். ஏழு மணிக்கெல்லாம் காலைக்கடன்கள், குளியல், காலை உணவு எல்லாம் அவருக்கு முடிந்து போகிறது. ஹாலின் நடுவில், வெளிவாசல் கதவை யாரேனும் திறந்தால் தெரியும்படி, சம்மணங்கூட்டி தரையில் உட்கார்ந்துகொள்கிறார். காலையில் முதலில் எழுந்த ஒரு கைக்குழந்தை அவசரமாகத் தலை சீவி, பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, சட்டைக்குள் திணித்து ரெடி பண்ணப்பட்டிருக்கும். அக்கா அல்லது தங்கை, அல்லது சமையல் மாமி, கதவின் பின்பக்கம் காத்துக் கொண்டிருந்து குழந்தையை அவர் மடியில் கொண்டு வந்து போடுகிறார்கள். குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்து, அந்தக் கொஞ்சலில் ஒரு வெறி ஏறி, லகரி பிடித்து, தன்னை மறந்து, தன் உடம்பை மறந்து, தன் பெயரை மறந்து கொஞ்சுகிறார். எத்தனையோ விதமான சப்தங்களை அவர் எழுப்புகிறார், தோள் துண்டு நழுவி விழுந்துவிட்டால் கூசிக் குறுகி உள்வருத்தம் கொள்கிறவர். மணி எட்டு அடிக்கிறது. அவருடைய சந்தோஷம் கலைகிறது. விரல்களை நீட்டி மணி சரியாக அடிக்கிறதா என்று சரிபார்க்கிறார். ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொருத்தன் என்றாலும் எப்போதும் ஒரு சிஷ்யன் அவருக்குக் கன கச்சிதமாக அமைந்துகொண்டிருக்கிறான். கேட்டைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வருகிறான். இப்போது யாராவது அவசரமாகப் போய் குழந்தையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்பா சாவியை எடுத்துக்கொள்கிறார். எட்டரை மணிக்குக் கடை திறக்கப்படுகிறது. சிஷ்யன் பின்னறையைச் சுத்தப்படுத்துகிறான். அந்தப் பின்னறைக்குள் நுழைந்து அவருடைய நாற்காலியைப் போய் அடைந்ததும், அவருக்கு ஒரு இதம் ஏற்படுகிறது. அந்த அறையில் அவர் வேலை பார்க்கும்போது, பேரேடுகளைத் திருப்பும்போது, ஃபைல்களைப் புரட்டும்போது, கடிதங்கள் எழுதும்போது, கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கும்போது, எத்தனையோ தடவை அவரை மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறேன். எந்த மன நிலையிலிருந்தாலும், அந்த அறை அவருக்கு மிக அவசியமான ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது மாதிரி எனக்குத் தோன்றியிருக்கிறது. அங்கு வந்து சேருவதற்கும், அந்த அறையின் சூழ்நிலையில் தன்னை முடிந்த மட்டும் கரைத்துக்கொள்ளவும்தான், மற்ற சகல காரியங்களையும், அவசர அவசரமாகவும் படபடப்புடனும் அவர் செய்து முடிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அறைக்கு அவருக்கு வர முடியாமல் போகும் நாளை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதுதான் அவருடைய உண்மையான மரணமாக இருக்கும்.
அப்பாவுக்குத் தெரியாத சந்துகள் வழியாகப் போகும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இங்கிருந்துதான், இது போன்ற சந்துகளிலிருந்துதான், பெண்கள் ஒழுக ஆரம்பிக்கிறார்கள். ஒழுகி, தெருமுனைகள் தாண்டி, வேறு பலரையும் சேர்த்துக் கொண்டு வீங்கி, ரஸ்தாக்களில் வழிந்து, கட்டி தட்டியும், திராவகத் தன்மையுடனும், சேறும் குழம்புமாக இரு கரைகளையும் பிடுங்கிக் கொண்டு ஓடும் பிரவாகம் போல் அவர்கள் விரைகிறார்கள். இந்தச் சந்தின் கடைசியில்தான் ரஸ்தாவைப் பார்க்க தாலுகா ஆபீசின் பழைய கட்டிடம் இருக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் வினோதமான தன்மையை வார்த்தைகளில் விவரிப்பது கடினமானது. அவ்வளவு விசித்திரம். பொறியியல் கணக்குப்படி இந்தக் கட்டிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் - தேசிக விநாயகம் பிள்ளை கைக்குழந்தையாக இருந்தபோது - சரிந்து விழுந்திருக்க வேண்டும். சுவாச கோசங்கள் முற்றிலும் பழுதாகிவிட்ட ஒரு காச நோயாளி, வேப்ப மரத்தடியில் தலை சாய்த்துக் கிடப்பதான சித்திரமே இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. இந்தக் கட்டிடத்தில்தான் அந்தக் காலத்தில் அபின் கொடுப்பார்கள். ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு. தாலுகா ஆபிசின் வெளிச்சுவர், உட்பக்கம் போதிய உயரம் கொண்டது. வெளிப்பக்கமும், அதாவது ரஸ்தாவைப் பார்க்க இருக்கும் முன்பக்கம், போதிய உயரத்துடன் இருக்கும். இடது பக்கம் மட்டும் - வெளிப்பக்கம் - ஒரு பெஞ்சுபோல் மிகவும் குட்டையாக இருக்கும். பக்கவாட்டுக் காலிமனை மிகவும் மேட்டுப்பாங்கானது. அபின் வாங்க வருகிறவர்கள், நான் பார்த்த காலங்களில் அநேகமாகப் பஞ்சடைந்த கிழவர்கள், எல்லோரும் ரஸ்தாவிலிருந்து செம்மண் ஓடையில் இறங்கி, கவனமாகக் கீழே பார்த்துக்கொண்டே திடலில் ஏறி - எங்களூரிலுள்ள மூன்று திறந்தவெளி கக்கூசுகளில் இது மிக உபயோகமானது - காம்பௌண்டு மதிற்சுவர் பெஞ்சில் வரிசையாக, கழுகுகள் போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தாலுகா ஆபீசின் பின்னாலுள்ள கக்கூஸ் சுவரில் சாய்ந்தபடி வேப்பமரத்தடி நிழலில் சில பெண்கள் - சில கிழவிகள் - யாரையும் முகமெடுத்துப் பார்க்காமல், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருப்பது போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். நான் ஒரு சைத்திரிகனாக இருந்திருந்தால், இந்தக் காட்சிகளை பல ஓவியங்களாகச் சேமித்திருப்பேன். அங்கு வருபவர்களின் முகங்களிலிருந்தும் அங்கங்களிலிருந்தும் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கசிந்து, வராண்டாவின் ஓரங்களிலும் படிகளிலும் வேப்ப மரத்தடிகளிலும் வழியும் தள்ளாமையை, இயலாமையை, அனைத்தும் ஒடுங்கிய பின்பும் அபினை நம்பி கொடுக்கில் கொஞ்சம் ஜீவனை வைத்துக்கொண்டிருக்கும் பிடிவாதத்தை, முக்கியமாக, பஞ்சடைந்து, பீளைசாடி போதையில் மயங்கி மிதக்கும் கண்களையெல்லாம்  வரைந்து காட்டியிருப்பேன்.
***
கடையைத் திறந்தேன். கடையின் எதிர்பக்க, சற்றே கோணலான, சினிமாக் கொட்டகையின் வாசலிலிருந்து மதுக்குஞ்சு வெளிப்பட்டான். முன்பக்கம் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது அவனுக்கு அலுப்பைத் தந்திராது. எனக்காக வர நேர்ந்ததே, என்னைப் பார்த்த பின்புதான் அவன் நினைவில் துளிர்த்திருக்கும். நான் அவசரப்பட்டு வந்துவிட்டதுபோல் அவனுக்குத் தோன்றியிருக்கலாம். அவன் வந்து, நான் வந்து சேராத அந்த இடைவெளியை, பள்ளத்தை, பொறுமையின்மையை, எரிச்சலை, அந்தப் புகைப்படங்கள், துடைகள், முலைகள், பிருஷ்டங்கள், முத்தமற தமிழ் முத்தங்கள் அனைத்தும் மிக நன்றாக நிரப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
தகரப்பட்டைகளை வெகு லாவகமாகக் கிழித்து, பண்டிலைப் புரட்டி உடைக்கிறான்  மதுக்குஞ்சு. கைதேர்ந்தவன். எந்த இடத்தில் அடி விழ வேண்டும் என்பது எத்தனை துல்லியமாக அவனுக்குத் தெரிகிறது. சற்றுமுன், காலத்திற்கும் அசைந்து கொடுக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பண்டில், இதோ பரிதாபமாகச் சிதறிக் கிடக்கிறது. நான் பட்டியலையும் கணக்குப் பார்க்க ஒரு பக்கம் எழுதாத தாள்களையும் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் ஊசி, நூல், விலைச்சீட்டு முதலியவற்றை எடுத்துக்கொண்டு வந்தான். உருப்படிகளை கவுண்டரில் வைத்து, மொத்த எண்ணிக்கையைச் சொல்லி ஒத்துக்கொண்டுவிட்டு - எண்ணம் முதல் தடவையே சரியாக வந்துவிட்டது - தரம் பிரிக்க ஆரம்பித்தான். நான் ஒரு பக்கத்தாளில் விற்பனை விலையை கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். மதுக்குஞ்சு ஆர்டர் ஃபைலிலிருந்து ஆர்டரைத் தனியாக எடுத்து, சரக்கு சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். காதில் சொருகியிருந்த ஆட்டுப் புழுக்கைப் பென்சிலால் ‘டிக்’ போட்டுக்கொண்டு வந்தான். நான் விலைச்சீட்டுகளை எழுதி அவனிடம் தந்தேன்.
மின்சாரம் இல்லை. எங்கோ பக்கத்தில் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது போலிருக்கிறது. காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து கொஞ்சம் இதப்படுத்திக்கொண்டேன். தலையைத் திருப்பி ‘ஷோகேஸ்’ கண்ணாடியின் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த சேலைகளின் இடைவெளி வழியாகத் தெருவைக் கவனித்தேன். நெரிசல் தளர்ந்துவிட்டது. எல்லோரையும் இழுத்து, தன் அடிவயிற்றில் அமுக்கிக்கொண்டுவிட்டன இந்த கொட்டகைகள். உடல் பூராவும் எண்ணற்ற முலைகள் கொண்ட மலைபோல் விழுந்து கிடக்கும் ஒரு ராட்க்ஷசியின் உடம்பில் லட்சக்கணக்கான மூஞ்சூறுகள் கொசு கொசுவென்று ஒன்றன் மேல் ஒன்று புரண்டுகொண்டு பால் குடிப்பதுபோல் தோன்றிற்று. மடக்கு நாற்காலிகளை ஓரத்தில் ஒதுக்கி, தூசி தட்டிய இடத்தில் வாகன முண்டை ஒற்றையாக விரித்தான் மதுக்குஞ்சு. சேலைகளை எடுத்து வாகன முண்டில் பரப்பி, விலைச் சீட்டைத் தைப்பதற்கு வசதியாக வைத்துக் கொண்டிருந்தான். சம்மணங்கூட்டி உட்கார்ந்துகொண்டு தைக்க ஆரம்பித்தான்.
“நீ நம்மகிட்டே வந்து எத்தனை வருஷம் இருக்கும் டேய், மதுக்குஞ்சு” எறு கேட்டேன்.
“வருஷம் தெரியலே. பத்து வருஷம் இருக்கும். ஒரு சித்திர மாசம் இருபத்தியொண்ணாம் தேதி” மதுக்குஞ்சு லேசாகச் சிரித்தான். அவன் ஏன் சிரித்தான் என்பது எனக்குப் புரியவில்லை. அவனே சொன்னான்.
”அண்ணைக்குத்தான் பெரியசாமிக்கு பொறந்த நாளு. வீட்டிலேருந்து கடைப்புள்ளைகளுக்குப் பாயசம் வந்தது. நான் காலையிலேயே வந்தேன். ராகு காலம், போயுட்டு பதினொண்ணரை மணி தாண்டி வானு பெரியசாமி சொன்னா. நான் வந்து பாயசம் குடிச்சேன்.”
அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதான். தேதி வருஷம் எனக்கு நினைவில்லை. ஆனால், ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: “இன்னிக்கு ஒரு சின்னப் பயலை வேலைக்கு எடுத்தேன். என்னடா பேர்னு கேட்டேன். முருகன்னு சொன்னான். ஏற்கனவே ரெண்டு முருகன்கள் இருந்துண்டு, இவனைக் கூப்பிட்டா அவன் வரதும், அவனைக் கூப்பிட்டா இவன் வரதும், ரெண்டு பேருமே தன்னை இல்லைன்னு வராம இருக்கறதும் போறாதா. நீ வேறயானு கேட்டேன். அப்பொத்தான் இசக்கி, மில் பெயிலை உடைச்சு, மதுக்குஞ்சு 7 பீஸ்னு ஒத்துண்டான்.  இந்தப் பயலுக்கு, நம்ம கடையிலே மதுக்குஞ்சுனு பேர், அப்படீன்னேன்.” அப்பா தனக்குத்தானே சிரித்துக்கொண்டது இப்போதும் என் மனத்தில் தெரிகிறது.
“மதுக்குஞ்சுவா! பெயர் ரொம்ப ஜோரா இருக்கப்பா” என்று நாங்கள் சொன்னோம்.
“அப்படீன்னா அந்தப் பேரை எனக்கு ஏன் வைக்கலை?” என்று கேட்டான், என் மூத்த அக்காளின் சின்னப் பிள்ளை.
எல்லோரும் சிரித்தோம்.
இந்த ஞாபகங்கள் மனத்தில் ஓடவே மதுக்குஞ்சுவைப் பற்றி அப்பா சொல்லியிருந்த மற்றொரு விஷயம் என் மனத்தில் ஓடிற்று. ரொம்பவும் அதிர்ச்சி தரும் வித்தியாசமான விஷயம் என்பதாலேயே அது என் மனத்தில் பதிந்து போயிருந்தது. இப்போது அந்த விஷயத்தை மதுக்குஞ்சுவிடம் கேட்கலாமா? அப்படிக் கேட்பது அவன் மனத்தைச்  சங்கடப்படுத்துமா? எப்படி ஆரம்பிப்பது? நான், அப்பா சொல்லியிருந்த விஷயத்தைப் பூசி மெழுகிச் சொல்ல ஆரம்பித்தேன்.
“சாமி சொன்னது சரிதான். என் வலது கண், எங்க அம்மாவோடதுதான்” என்றா மதுக்குஞ்சு.
“இப்படிச் சொல்றான் அந்தப் பயல். அதுக்கு மேலே எப்படிக் கேக்கறது? அதுக்கு மேலே எப்படிக் கேக்குறது?” என்று அப்பா திரும்பத் திரும்பக் கேட்டது என் நினைவுக்கு வந்தது.
கேட்கக்கூடிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்ளத்தானே மனம் துடிக்கிறது.
“என்ன மதுக்குஞ்சு. ஏதேனும் விபத்தா?” என்று கேட்டேன்.
“சின்ன வயசிலே நடந்தது. கிராமத்திலே சொல்லக் கேள்விதான். எங்கம்மா ஒரு சினிமாப் பைத்தியம். ஆத்து மணல்லே உக்காந்து சினிமாப் பாத்துக்கிட்டு இருக்கா. நான் மடியிலே படுத்துக் கெடக்கேன். கீள கெடக்கற கூழாங்கல்லே எடுத்து வாயிலே போட்டுக்கறதும் அவ விரலைப் போட்டு நோண்டி எடுக்கறதுமா இருந்திருக்கேன். ஒரு தவா கண்ணை நோண்டிட்டா தெரியாம. அப்டின்னு சொல்றாங்க” என்றான்.
மதுக்குஞ்சு, மிகவும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். இருந்தாலும் முகம் உறைந்து போனது போலிருந்தது. அவன் மனத்தில் ஓடும் எண்ணங்களை அனுமானிக்கத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
“செலவங்க சொல்றாங்க, அவங்க உடனே செத்து போயுட்டாங்கனு. செலவங்க சொல்றாங்க, நான்னுக்கிட்டாகனு. அண்ணைக்கே அவங்க கண்ணை நோண்டி எனக்கு வச்சுட்டாங்களாம், ஆஸ்பத்திரியிலே” என்றான் மதுக்குஞ்சு.
”உனக்கு ஏதாவது கஸ்டமிருக்கா அதனாலே” என்று கேட்டேன்.
”ஒண்ணுமில்லே. ஆனா பார்வை இல்லே. பள்ளம்தான் ரொம்பிச்சு” என்றான் அவன்.
போன் மணி அடித்தது. ரிசீவரை காதில் வைத்துக் கொண்டேன். அப்பாதான்.
“வேலை முடிஞ்சுதா? என்ன சேத்துப் போட்டே?”
’சுவடு’ - 1979

Sunday, May 29, 2016

போதை ஏற்றாத கதை - தி இந்து கலை ஞாயிறு பத்தி 29.05.16 (அசல் வடிவம்)

http://www.maamallan.com/2016/05/290516.html

மேலோட்டமான பொழுது போக்கு எழுத்தைத்தாண்டி கொஞ்சம் ஆழமாகப் படிக்கத் தொடங்கும் ஆரம்ப வாசகனைக் கவரக் கூடியதாக இருப்பது உணர்ச்சிகரமான நெகிழ வைக்கும் எழுத்து. ஆனால் சிறந்த இலக்கியவாதிகளாக அறியப்படும் பெரிய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உணர்ச்சிக் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதத்தில் எழுதுவதில்லை. இதன் காரணமாகவே தொடக்க வாசகர்களுக்கு இலக்கியம் சுவாரசியமானதில்லை என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது.

மனதை விம்மச் செய்வதற்கும் விரியச் செய்வதற்குமான வித்தியாசமாக இதைப் பார்க்கலாம்.

கதையின் உயிர் கருவில் இருக்கிறது. உணர்வுபூர்வமாய் ஒன்றை அனுபவித்த கலைஞன், வாசகனை உணர்ச்சிபூர்வமாய்த் தூண்டுவதைவிட உணர வைப்பதையே முதன்மையான காரியம் எனக் கருதுவான். அதன் காரணமாகவே அதீத நாடகீயமாய் விவரிக்கும் அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறான்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் சுந்தர ராமசாமியின் பள்ளம் கதையைக் கூறலாம். இந்தக் கதையை, இடதுசாரி வங்கித் தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருந்த நண்பரொருவருக்கு 80களில் படிக்கக் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்துவிட்டு, என்ன கதை என்றார். சினிமா என்றேன். ஒரு கணம் அசைவற்று நின்று, சினிமா பள்ளம் இது போதும். இதுவே பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறதே என்று பிரமித்தார். 80கள், அரசியலில் கோலோச்சி தமிழ்நாட்டின் தலைவிதியை சினிமா தீர்மானிக்கத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கதை 1979ல் வெளியாகி இருக்கிறது.

எழுத்தாளரின் அடையாளங்களுடன் தன்மை ஒருமையில் சொல்லப்பட்ட கதை. துண்டுதுண்டான பல காட்சிகளை கொலாஜ் எனும் இணையொட்டுப் படமாக விவரிக்கப்படும் கதை.

என்னதான் முதலாளி மகன் என்றாலும் ஓய்வு தினத்தன்றும் கடையைத் திறக்க வேண்டியாதாக இருக்கிற அலுப்பு. ஓய்வு நாளைக் கூட தனக்கென்று அனுபவிக்க முடியாத வருத்தம். வெள்ளிக்கிழமை விடுமுறை விடும் துணிக்கடை.

கைக்குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி புதுப் படத்தின் முதல் காட்சிக்காக சந்ததிகளாக வெள்ளியன்று வெயிலில் விரையும் பெண்கள்.

கறாரான அப்பாவின் தினப்படிகள். கடையின் அலுவலக அறையில் அவர் உணரும் பாதுகாப்பு. 

பழைய அரசு அலுவலகக் கட்டிடம். அங்கே அபினுக்காகக் காத்திருக்கும் போதைக்கு அடிமைகளான முதியவர்கள்.

கதையின் இறுதியில் வரும், உதவியாளன் கைக்குழந்தையாய் இருக்கையில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்.

ஆரம்ப வாசகனுக்கு, இதைப் படிக்கையில், கதை ஆற்றொழுக்காக இல்லாது தொடர்பற்றது போல் தோற்றமளித்து இடைமறிக்கும் விவரிப்புகள் எதற்காக என்று தொடக்கத்தில் தோன்றக்கூடும். ஆனால் கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் எதற்காகச் சொல்லப்படுகிறது என சற்றே யோசிக்கத் தொடங்கினால் பள்ளம் நிரம்பிவிடும். 

இந்தக் கதை ஏன் இந்த வடிவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சினிமாக் கொட்டகைக்குள் உலகை மறந்து ஒன்றிவிடும் பெண்களையும் -

ஓய்வு நாட்களில் நண்பனுடன் பகலில் இலக்கியம் பேசத்தொடங்கி இருட்டியபின்பும் விளக்கு போடக்கூட மறந்து ‘வெறியுடன்’ விவாதித்துத் துய்த்துக்கொண்டு இருப்பதையும் –

அப்பா தம் அலுவலக அறையில் சகலத்தையும் மறந்து வேலையில் சந்தோஷமாக மூழ்கிவிடுவதையும் –

போதைக்கு அடிமையாகி வயதான காலத்தில் அபினுக்காகக் காத்திருக்கும் வயசாளிகளையும் -

ஒரே சரடில் இணைத்துப் பார்த்தால், வாசக மூளையின் இடுக்குகளில் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் இருட்டுத் திட்டுகள் அடுக்கடுக்காய்த் திறந்துகொண்டு வெளிச்சப்படக்கூடும்.

மனிதர்கள் அனைவருக்குமே எதிலாவது மூழ்கி தம்மைக் கரைத்துக்கொள்வது என்பது பெருமகிழ்வைத் தரக்கூடியது. அவரவர்க்கு அவரவர் போதை அத்யாவசியம். வாழ்வின் யதார்த்தக் குரூரத்திலிருந்து கொஞ்ச நேரமேனும் தப்பிக்கக் கிடைத்த இருட்டில் கிடைக்கும் ஆனந்தத்தின் மிடக்கு அளப்பரியது. அதுதான் அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கிறது.  கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சினிமாவுக்கு விரையும் பெண்ணுக்கும் தந்தையின் கெடுபிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது பிரத்தியேக இலக்கிய உலகில் நண்பனோடு உலவும் இளைஞனுக்கும் ஒருபோலத் தேவைப்படுகிறது. ஒரு போதை விழிப்பிலிருந்து கிறக்கத்துக்கும் மற்றொன்று உறக்கத்திலிருந்து விழிப்புக்கும் எதிரெதிர் திசைகளில் இட்டுச் செல்கிறது.

கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்

என்கிற கவி ஆதங்கத்தின் கதை வடிவம் இக் கதை.

வெகுஜன எழுத்து வியாபாரியின் கையில் இந்தக் கதை கிடைத்திருந்தால் வாசகனைப் பிழியப் பிழிய அழ வைப்பதிலேயே குறியாய் இருந்திருப்பான் - அதைத்தானே நாயக வழிபாட்டுச் சினிமாக்களும் செய்கின்றன என்கிற சுரணையே இல்லாமல். ஆனால் இந்தக் கதையின் குவி மையம் போதையைக் குறித்த தெளிவான ஆழமான அணுகல். பல்லாயிரம்பேரை கவர்ந்திழுக்கும் சினிமாவின் போதையை விமர்சிக்கப் புறப்பட்டு கதையின் இறுதிக் காட்சியை நாடகீயமாய் கதறக் கதற விவரித்து எழுதுவதன் மூலம் எழுத்தில் மற்றொரு போதையை ஊட்டுவதல்ல கலைஞனின் நோக்கம்.

பார்வையாளனுக்கு எவ்விதத்திலும் சிந்திக்கும் சிரமத்தைக் கொடுக்காமல், கருப்பு வெள்ளை நல்லவன் கெட்டவன் என்கிற இருமைகளை ஆற்றொழுக்காய் சொல்லிச் சென்றுகொண்டிருந்த சினிமா, மக்களின் மீது ஏற்படுத்திகொண்டிருந்த தாக்கத்தைச் சொல்ல வரும் சுந்தர ராமசாமி நேர்க்கொட்டில் கதை சொல்லும் பாணியை இதில் தவிர்த்திருப்பது தற்செயலல்ல.

கதை சொல்லி, சினிமாவுக்கு ஓடும் பெண்களைப் பராக்கு பார்த்தபடி கடை திறக்கத் தாமதமாய் வந்து சேருவதும் அந்தத் தாமத கால அவகாசத்தை சினிமாத் தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதில் கடைப்பையன் செலவிடுவதும் எவ்வளவு இயல்பாய் வந்து உட்கார்ந்திருக்கின்றன.

கதையின் கிளைமாக்ஸை எப்படியெல்லாம் நாடகீயமாக்கி நம்மைக் கதறவைக்கலாம் என்பதிலல்ல, சினிமாவின் போதை இந்த அளவுக்குப் போகிறதென்றால், அது எந்த அளவுக்கு மக்களின் நாடி நரம்புகளில் காலங்காலமாய் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் நம் கவனத்தைக் குவிப்பதே சுந்தர ராமசாமியின் நோக்கம்.

எந்தக் கதையிலும் எழுத்தாளனின் கவனம் குவியுமிடம் எது என்பதே அவனது நோக்கத்தைத் தீர்மானிக்கிறது. நோக்கமே அவனைக் கேளிக்கையாளனிடமிருந்து பிரித்துத் தனியே நிறுத்துகிறது. சொல்கிற விதமே அதைக் கலையாய் உயர்த்துகிறது.

நன்றி: தி இந்து


Saturday, 21 May 2016

சுந்தர ராமசாமி (1931 - 2005) By சாரு நிவேதிதா


சுந்தர ராமசாமி (1931 - 2005)

By சாரு நிவேதிதா
First Published : 22 May 2016 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/05/22/சுந்தர-ராமசாமி-1931---2005/article3444511.ece

இந்தத் தொடரில் சுந்தர ராமசாமி பற்றி நான் எழுதுவது பலரது புருவத்தை உயர்த்தலாம். அவர்கள் மனத்தில் சுந்தர ராமசாமியின் நாவல்கள் பற்றி நான் எழுதிய விமரிசனங்கள் மட்டுமே பதிந்திருக்கின்றன. ஆனால் சுந்தர ராமசாமி ஒரு நாவலாசிரியர் மட்டுமே அல்லவே? சுந்தர ராமசாமி பற்றி ஒருவர் எழுதப் புகும்போது அவருடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றி மட்டுமே எழுதி முடித்து விட முடியாது. அக்டோபர் 2005-ல் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடக்க இருந்தபோது சென்னையில் உள்ள பல எழுத்தாளர்களும் நாகர்கோவிலுக்கு ரயிலேறினர். நவம்பர் 2005 உயிர்மை, சுந்தர ராமசாமி சிறப்பிதழாகவே வெளிவந்தது. அதில் மனுஷ்ய புத்திரன் எழுதியிருந்த கட்டுரையின் முதல் வாக்கியம் இன்னமும் என் நினைவில் தங்கியிருக்கிறது. சென்னையிலிருந்து நாகர்கோவில் புறப்பட்ட ரயில் முழுவதுமே சுந்தர ராமசாமியின் வாசகர்களால் நிரம்பியிருந்தது. இதே வார்த்தைகளில் இல்லை; இன்னும் கவித்துவமாக எழுதியிருந்தார்.

சுந்தர ராமசாமி மற்ற எழுத்தாளர்களைப் போல் வெறும் எழுத்தாளர் மட்டும் அல்ல; அவர் ஓர் இயக்கமாக இருந்தார். அவருக்கு முன்னால் அப்படி ஓர் இயக்கமாக இருந்தவர் சி.சு. செல்லப்பா மட்டுமே. சமகாலத் தமிழ் இலக்கியத்துக்கு க.நா.சு.வின் பணி மகத்தானது என்றாலும் அவர் இயக்கம் அல்ல; அவர் ஒரு கலைஞன், நாடோடி. கலைஞர்களாலும் நாடோடிகளாலும் இயக்கமாக முடியாது. இயக்கம் என்றால் தன்னையொற்றி ஒரு பெரும் இளைஞர் குழு உருவாகவேண்டும். செல்லப்பா அப்படி உருவாக்கினார். ந. முத்துசாமி, சி. மணி, தர்மு சிவராமு, வெங்கட் சாமிநாதன், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கிவிட்டு, அவர்களுக்கான களத்தையும் அமைத்துக் கொடுத்தார் செல்லப்பா. அதே போன்ற ஒரு பெரும் எழுத்தாளர் கூட்டத்தை உருவாக்கியவர் சுந்தர ராமசாமி.

1980-ல் நாகர்கோவிலில் அவர் வீட்டு மொட்டை மாடியில் மாதம் ஒருமுறை ‘காகங்கள்’ என்ற இலக்கியக் கூட்டம் நடக்கும். அப்போது நான் தில்லியில் இருந்தேன். ‘காகங்கள்’ கூட்டத்தில் ஒருமுறை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு என்று ‘கொல்லிப்பாவை’ என்ற இலக்கிய இதழில் கடிதம் எழுதியிருந்தேன். குறுகிய காலமே ஜீவித்து சிறுவயதிலேயே மரித்து விட்ட கனவு அது. சு.ரா.வின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவல் வெளிவந்தது. என் கனவும் கலைந்தது. தமிழகமே அந்த நாவலைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது அது ஒரு சராசரி படைப்பு என்று எழுதிய இரண்டு பேரில் அடியேனும் ஒருவன். (இன்னொருவர் தர்மு சிவராமு. ஆனால் சிவராமு சு.ரா.வின் மீது சொந்தப் பகை கொண்டிருந்தார். அவர் பகைமை பாராட்டுபவர்களைப் பாராட்டி எழுதமாட்டார். ஆனால் நான் சு.ரா.வின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன்.)

சுந்தர ராமசாமி நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்தார்; ஆசானாக இருந்தார்; உற்ற தோழராக இருந்தார். அவரோடு என்ன வேண்டுமானாலும் சகஜமாகப் பேசலாம் என்ற உரிமையை வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் எழுத்தே நூற்றுக் கணக்கான இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஜெயமோகனை சுந்தர ராமசாமியின் முதன்மையான வாரிசு என்று சொல்லலாம். அந்த வரிசையில் இன்னும் ஏராளமான பேரைச் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்குமே சு.ரா.வின் மீது ஒரு தந்தையின் மீது மகனுக்கு உள்ள பாசமும் அன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அவர்களின் சொந்த வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் சுந்தர ராமசாமியின் இடம் ஒரு தந்தைக்கு உரியதாகவே இருந்தது.

ஆனால் நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். ஆளுமை என்பது இலக்கியத்தை விடவும் உயர்வானது. என் ஆளுமை முதலில் என்னாலேயே சிலாகிக்கப்படக் கூடியதாக இருந்தால்தான் மற்றவர்களைப் பற்றியே நான் யோசிக்க முடியும். ஆளுமை என்றால் என்ன?

அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்வதால் எனக்குப் பணத் தேவை அதிகம். ஆனால் அதற்காக நான் எனக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைச் செய்ய மாட்டேன். எந்நாளும் எந்தத் தருணத்திலும் ஆதாயத்துக்காக மனசாட்சிக்கு விரோதமாக நடக்க மாட்டேன். ஒருவர் எனக்கு உணவு அளிக்கிறார்; எனக்குத் தேவையானதைச் செய்கிறார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலும் அவர் என்னிடம் எழுதிக் கொடுக்கும் ஒரு நாவலுக்கோ கவிதைத் தொகுதிக்கோ எந்தச் சலுகையும் அளிக்க மாட்டேன். அதில் நான் கறாராக இருப்பேன். உயிர் போகும் அவசரத் தேவையாக இருந்தாலும் குப்பையாக இருக்கும் ஒரு வேற்று மொழி நாவலைத் தமிழில் மொழிபெயர்க்க மாட்டேன். பணம் வருகிறது என்பதற்காக ஒரு மோசமான திரைப்படத்தைப் பாராட்டி எழுதமாட்டேன். இதன் பொருட்டு கமல்ஹாசன் போன்ற பல நண்பர்களை இழந்திருக்கிறேன். ஒரே வாக்கியத்தில் சொன்னால், பணத்துக்காகவோ, நட்புக்காகவோ வேறு எந்த ஆதாயத்துக்காகவோ விலை போகமாட்டேன்; சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.



இதை நான் கற்றுக் கொண்டது சுந்தர ராமசாமியிடருந்துதான். எப்படி என்று சற்று விளக்கமாகச் சொல்லவேண்டும். 1976-ம் ஆண்டு நான் தஞ்சாவூரில் இருந்தேன். பகல் முழுவதும் சரஸ்வதி மகால் நூலகத்திலோ அல்லது அரசுப் பொது நூலகத்திலோதான் படித்துக் கொண்டிருப்பேன். மதிய உணவு கிடையாது. அப்போது தேநீர் குடிக்கும் பழக்கமும் இல்லை. இருந்தாலும் கையில் ஒரு பைசா இருக்காது. அந்த அரசுப் பொது நூலகத்தில்தான் ‘பிரக்ஞை’ என்ற ஒரு பத்திரிகை கிடைக்கும். ரவி ஷங்கர், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் குழு அந்தப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தது. அதுதான் முதல் முதலாக எனக்கு அறிமுகமான சிறு பத்திரிகை. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’ நாவலை விமரிசித்து அம்பை அதில் படு காட்டமாக கெட்ட வார்த்தையெல்லாம் போட்டு எழுதியிருந்தார். இந்த ‘பிரக்ஞை’க்கு வருவதற்கு முன்னால் ஒரு விஷயம்:

1976 வரை தமிழ் இலக்கியத்துக்கு ஞான பீடப் பரிசு கிடைத்ததில்லை. ஆனால் வங்காளி, மராத்தி, கன்னடம், மலையாளம், குஜராத்தி போன்ற பல மொழிகளுக்கும் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை அந்தப் பரிசு கிடைத்துவிட்டது. 1976-லிருந்து இப்போது 2016 வரையிலான 40 ஆண்டுகளிலும் கூட நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 1976-ல் அகிலனுக்குக் கிடைத்தது. பிறகு ஜெயகாந்தனுக்கு. அதோடு சரி. ஆனால் இந்திக்கு ஒன்பதும், கன்னடத்துக்கு எட்டும், வங்காளம் மலையாளம் இரண்டுக்கும் தலா ஐந்தும் கிடைத்திருக்கிறது. மற்ற மொழிகளை விட்டுவிடுவோம். நமது பக்கத்து மொழி மலையாளத்தை எடுத்துக் கொண்டால் ஞானபீடம் பெற்றவர்கள் ஜி. சங்கர குரூப், பொற்றேகாட், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர், ஓ.என்.வி. குரூப். அதேபோல் கன்னட இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகளான மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், புட்டப்பா, சிவராம காரந்த், யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னார்ட், சந்திர சேகர கம்பார போன்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழில் இதுவரை (அதாவது, 1965-ல் பாரதீய ஞானபீடப் பரிசு உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை) இரண்டே இரண்டு பேருக்குத்தான் கிடைத்துள்ளது.

1965-ல் முதல் முதலாக ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டதே மலையாளத்துக்குத்தான் (ஜி. சங்கர குரூப்). தமிழில் கொடுக்கப்பட்ட இரண்டு பரிசுகளைப் பெற்றவர்களுமே இலக்கியவாதிகள் அல்லர். ஜெயகாந்தனுமா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஆ. மாதவன், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., , சார்வாகன், கிருஷ்ணன் நம்பி, ந. சிதம்பர சுப்ரமணியன், ஆர். ஷண்முக சுந்தரம், ந.முத்துசாமி, சா. கந்தசாமி, அசோகமித்திரன் போன்றவர்களோடு ஒப்பிட்டால் ஜெயகாந்தன் எழுதியவை மிகவும் நடுத்தரம்தான். அகிலனைப் போல் குப்பை அல்ல என்றாலும் ஜெயகாந்தனுடையவை ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் ஜனரஞ்சகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக எழுதப்பட்டவை. சினிமாவில் பாலசந்தர் எப்படியோ அப்படித்தான் ஜெயகாந்தனும். பாலசந்தரின் சினிமாவை உலக சினிமா ரசிகர்கள் தரமான சினிமா என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அகிலனோ இலக்கியத்தின் நிழல் கூடப் பட முடியாத, படக் கூடாத குப்பை. ஆக, நமது அண்டை மாநில மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மை மொழிகளால் பேசப்படும் இந்தி மொழியோடு போட்டி போட்டுக் கொண்டு ஞானபீடப் பரிசை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் இரண்டு? அதுவும் ஒன்று குப்பை, இன்னொன்று நடுவாந்தரம்! ஆனால் மலையாளத்திலும் கன்னடத்திலும் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நாம் எல்லோரும் அறிந்தவர்கள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். மோடி பதவிக்கு வந்தால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றார் அனந்தமூர்த்தி. அது உடனே சென்னையில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வந்தது. மோடி வென்றார். பிரதமரானார். உடனே அனந்த மூர்த்தி ஒரு விளக்கம் அளித்தார். அதுவும் சென்னையில் உள்ள ஆங்கில தினசரிகளில் முதல் பக்கத்தில் வந்தது. என் கேள்வி இதுதான். அசோகமித்திரன் இப்படி ஏதேனும் சொன்னால் பெங்களூரில் உள்ள ஆங்கில தினசரிகள் இருக்கட்டும், சென்னையில் உள்ள ஆங்கில தினசரிகளிலேயே செய்தி வருமா? வராது. ஏனென்றால், இங்கே உள்ள படித்தவர் யாருக்கும் இங்கே உள்ள இலக்கியவாதிகளின் பெயர் கூடத் தெரியாது. இப்படி பெயர் கூடத் தெரியாமல் யாருமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய போற்றுதலுக்குரிய எழுத்தாளர்களை யார் பாரதீய ஞானபீடத்துக்குப் பரிந்துரை செய்வது? பரிந்துரை செய்யாவிட்டால் தில்லியில் உள்ளவர்களுக்கு அசோகமித்திரனை எப்படித் தெரியும்? கன்னடத்தில் கன்னடியர் யார் யாரையெல்லாம் அவர்களின் மகத்தான எழுத்தாளர்கள் எனக் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கிறது. கன்னட மக்கள் அதைச் சாதித்திருக்கிறார்கள். அந்த மகத்தான எழுத்தாளர்களைப் பற்றி தில்லிக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கே நான் மேலே குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரைப் பற்றியும் தில்லிக்கு எடுத்துச் சொல்ல ஓர் ஆள் இல்லை. யாருக்குமே யார் பெயரும் தெரியாது. பெயர் தெரிந்த என்னைப் போன்ற ஆட்கள் அறுபது வயதுக்குப் பிறகு தினமணியில் கட்டுரை எழுதுவார்கள். அப்படி எழுதும்போது அந்த மூத்த எழுத்தாளர்களில் முக்கால்வாசிப் பேர் காலமாகி இருப்பார்கள். மீதிப் பேர் சுயநினைவு இழந்த வயதை அடைந்திருப்பார்கள். என்ன பயன்? தயவுசெய்து யாரையும் பழிப்பதாக எண்ண வேண்டாம். இந்தச் சமூகம் செய்யத் தவறியது குறித்த வேதனையில் எழுதுகிறேன்.

30 ஆண்டுகளுக்கு முன்பே சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஆ. மாதவன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் போன்றவர்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே அசோகமித்திரன் போன்றவர்களுக்கும் ஞானபீடம் கிடைத்திருக்கவேண்டும். ஏனென்றால், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் படைக்கப்பட்ட சாதனைகளையெல்லாம் விடப் பல மடங்கு சாதனைகள் தமிழில் நடந்துள்ளன. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, எஸ். சம்பத்தின் இடைவெளி, எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள், அசோகமித்திரனின் தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு, லா.ச.ரா.வின் ஜனனி, வேண்டப்படாதவர்கள் போன்ற படைப்புகள் இந்தியாவிலேயே இல்லை; உலக மொழிகளிலும் கம்மிதான். அப்படியானால் இந்தியாவிலேயே ஞானபீடப் பரிசு அதிகம் கிடைத்திருக்க வேண்டிய மொழி அல்லவா தமிழ்? ஆனால் ஏன் ஒரு குப்பைக்கும் ஒரு நடுத்தரத்துக்கும் கிடைத்தது? இது போன்ற ஒரு சூழல் உலகில் எந்தச் சமூகத்திலும் இருந்ததில்லை.

உலக இலக்கிய வரலாற்றில் மிகச் சில காலகட்டங்களில்தான் இலக்கியத்தில் பெரும் அதிசயங்கள் நடந்துள்ளன. தமிழில் சங்க காலமும் கிரேக்கத்தில் கிட்டத்தட்ட அதே காலகட்டமும் (கி.மு. 630-ல் பிறந்த Sappho என்ற லெஸ்பியன் கவியின் காலத்திலிருந்து கி.பி. 500 வரை நீள்கிறது) தமிழ் மற்றும் கிரேக்க மொழிகளின் பொற்காலம் எனச் சொல்லத் தக்கவை. அடுத்து நடந்தது ரஷ்ய இலக்கியப் பேரெழுச்சி. ஒரே காலகட்டத்தில் எத்தனை காவிய நாயகர்கள், எப்பேர்ப்பட்ட மேதைகள் வாழ்ந்திருக்கிறார்கள்! செகாவும் தல்ஸ்தோயும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்தியவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? புஷ்கின், கொகோல், துர்கனேவ், தஸ்தயேவ்ஸ்கி, லெர்மெந்த்தோவ் என்று எத்தனை பேர்!

நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ருஷ்யாவில் நடந்தது போல் இந்த நூற்றாண்டில் மெக்ரிப் இலக்கியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மொராக்கோ, அல்ஜீரியா போன்ற மெக்ரீப் நாடுகளிலும், லெபனான், சூடான், சிரியா, ஈரான், சவூதி அரேபியா - ஆம், சவூதி அரேபியாவில் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லியான அப்துர்ரஹ்மான் முனிஃப் பிறந்து வளர்ந்தார்; சவூதி அரேபியா அவரை நாடு கடத்தியது - போன்ற நாடுகளில் அரபி மொழியில் முன்பு ருஷ்யாவில் நடந்தது போன்ற இலக்கிய அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. நோபல் பரிசு பெறத்தக்க 50 எழுத்தாளர்கள் இந்த நாடுகளிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போன்றதொரு பேரெழுச்சியே தமிழிலும் நடந்தது - ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, க.நா.சு.விலிருந்து அது துவங்கியது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத இன்னொரு அதிசயமும் இங்கே நடந்தது. அதாவது, அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம். இதற்குக் காரணம், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜனரஞ்சக எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது.

இன்று, நான் நடைப் பயிற்சி செய்துவரும் பூங்காவில் ஒரு சம்பவம் நடந்தது. அவர் என் மதிப்புக்குரியவர். திருக்குறள், நாலடியார் போன்ற பழைய இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்களைக் கூறி எனக்கு தினமும் ஞானத்தை வழங்கிக் கொண்டிருப்பவர். இன்று தேவன் பற்றிச் சொல்லி விட்டு நீங்கள் தேவனைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். உடனேயே அவர், நீங்களெல்லாம் எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்ளக் கூடாது என்றார். எப்போதும் அவர் பேச, கேட்டுக் கொண்டிருந்த நான் இன்று அவருக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுத்தேன். படு காட்டமான பாடம். நீங்களெல்லாம் இந்த philistine சமூகத்தின் பிரதிநிதிகள் என்று நான் ஆரம்பிக்கும்போதே, ஃபிலிஸ்டைன் என்றால்... என்றார். மூடர்கள் என்று தொடங்கினேன்.

தேவனைப் படிப்பதில் தப்பில்லை. கல்கியைப் படிப்பதில் தப்பில்லை. ஆனால் அதை இலக்கியம் என்றால் தப்பு. இதை எனக்குக் கற்பித்தவர் சுந்தர ராமசாமி.

அதனால்தான் இவ்வளவும் எழுத வேண்டி வந்தது. அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது அகிலன் மலக் கிடங்கு என்றார் சுந்தர ராமசாமி. (தொடரும்


சுந்தர ராமசாமி - பகுதி 2




By சாரு நிவேதிதா



First Published : 29 May 2016 10:00 AM IST







சென்ற அத்தியாயத்தில் ‘பிரக்ஞை’ என்ற இலக்கியச் சிற்றிதழ் பற்றிக் குறிப்பிட்டேன். அந்த இதழில் வெளிவந்த கட்டுரைகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். உதாரணமாக, அதில் பொலிவியாவைச் சேர்ந்த Jorge Sanjines என்ற இயக்குநரின் நீண்டதொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. யோசித்துப் பாருங்கள், அந்த நேர்காணல் வந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு. பொலிவியா என்றால் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் தினமணியில் ஏ.என். சிவராமனின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். அவர்தான் உலக நாடுகளின் சரித்திரத்தைப் படமெல்லாம் வரைந்து கட்டுரைகளாக எழுதுவார். வேறு எந்த வழியும் இல்லை. இதில் பொலிவிய இயக்குநர் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? அதிலும் அவருடைய நேர்காணல்? அந்த அளவுக்குத் தேடல் மிகுந்தவர்களாக இருந்தார்கள் அந்தக் காலத்து இலக்கியவாதிகள். இப்போது நாம் கைபேசியின் மூலமே அந்த இயக்குநரின் பெயரை ஹோர்ஹே சான்ஹினேஸ் என்று உச்சரிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தெரிந்துகொண்டு விடலாம். அவருடைய படங்களையும் கைபேசியிலேயே பார்த்து விடலாம். ஆனால் 1976-ல்?

சி.சு. செல்லப்பா, க.நா.சு.வின் அடிச்சுவட்டில் தீவிரமான இலக்கியம் ஏகப்பட்ட சிறுபத்திரிகைகளின் மூலம் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் சுஜாதா என்ற ஒரே மனிதரின் அசுர பலத்தினால் வெகுஜன எழுத்துக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் சுஜாதா ஒன்றும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவரும் இலக்கியத்துக்குச் சத்ரு அல்ல; அவரது அசுர பலத்தினால் அப்படி நிகழ்ந்தது. அவ்வளவுதான். இங்கே நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விட விரும்புகிறேன். எனக்கு சுஜாதாவின் எழுத்து பிடிக்கும். ஜனரஞ்சக எழுத்துக்கு நான் எதிரி அல்ல. எல்லாச் சமூகத்திலும் அவ்வகை எழுத்துக்கு அவசியம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஜனரஞ்சக எழுத்தே காட்டாற்று வெள்ளமாக மாறி இலக்கியத்தை முற்றிலுமாக அடித்துச் சென்றுவிட்டது. இலக்கியத்தின் இடத்தை ஒற்றை ஆளாகப் பிடித்துக்கொண்டு விட்ட குற்ற உணர்வினாலோ என்னவோ சுஜாதா தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு இலக்கியவாதியை அறிமுகம் செய்து கொண்டேயிருந்தார். அதிலெல்லாம் எந்த இலக்கிய மதிப்பீடும் இருந்ததில்லை என்ற போதிலும். உதாரணமாக, மனுஷ்ய புத்திரனும் கவிஞர், பழமலயும் கவிஞர். இலக்கியத்தில் அப்படி ஓர் அத்வைதி அவர். சுஜாதாவின் எழுத்தினால் சுவாரசியமான எழுத்தே இலக்கியம் என்ற நம்பிக்கை வேரூன்றியது. வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு வார இதழ்களில் ஏழு தொடர்கதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர் அவர் மட்டுமே. நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற அனைவரும் முன்னூறு பேருக்கான எழுத்தாளர்களாக மாறினர். முன்னூறு என்றதன் காரணம், அப்போதெல்லாம் சிறுபத்திரிகைகள் முன்னூறு பிரதிகள்தான் அச்சடிக்கப்பட்டன. அதில்தான் இவர்களெல்லாம் எழுதினர். கணையாழியும் தீபமும் மட்டும் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் வந்திருக்கலாம். சுஜாதாவுக்கு முன்னே இந்த நிலை இல்லை. ஏனென்றால், வெகுஜன வாசிப்புக்கு சவாலாக இருக்கக் கூடிய உ.வே. சாமிநாதய்யர் எழுதிய ‘என் சரித்திரம்’ ஆனந்த விகடனில்தான் தொடராக வந்தது.



மேலும், சுஜாதா என்றால் அது ஒரு சுஜாதா இல்லை. அவர் சிறுபத்திரிகைகளில் புழங்கிக் கொண்டிருந்தபோது, கணையாழியில் ‘கடைசிப் பக்கங்கள்’ எழுதிக் கொண்டிருந்தபோது இருந்த சுஜாதா வேறு; ‘சொர்க்கத் தீவு’ எழுதின சுஜாதா வேறு. ‘கடைசிப் பக்கங்களி’ல் அனல் வீசும்; அதில் கண்ணதாசனின் பாடலையும் சிவாஜியின் நடிப்பையுமே கிண்டல் செய்திருப்பார். அவருடைய கிண்டலுக்கு ஆளாகாதவரே அதில் இல்லை. ஆனால் ஜனரஞ்சக வெளியில் அப்படி எழுத முடியுமா? அங்கே வந்த பிறகு ‘எந்திரன்’ ஷங்கர் உலகத் தரமான இயக்குநராகி விட்டார். ஏனென்றால், சிறுபத்திரிகைகளின் மதிப்பீடுகளும் அடிப்படைகளும் வேறு; ஜனரஞ்சக எதிர்பார்ப்புகள் வேறு.

சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரையில் ஏன் சுஜாதா பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், ஒட்டு மொத்த சமூகமே பைங்கிளி எழுத்தை (மலையாளத்தில் ஜனரஞ்சக எழுத்தைப் பைங்கிளி எழுத்து என்று அழைப்பார்கள்) இலக்கியம் என்று நம்பிக்கொண்டு கலாச்சார வறுமையில் உழன்று கொண்டிருந்தபோது ஒற்றை மனிதராக அந்த அசுர அதிகாரத்தை எதிர்கொண்டு போராடினார் சுந்தர ராமசாமி. அவர் செய்தது ஒரு யுத்தம். சி.சு. செல்லப்பாவுக்குப் பிறகு அவர் செய்த பணியை - மலினமான எழுத்தையும், மலினமான கலாச்சார மதிப்பீடுகளையும் எதிர்த்துப் போராடும் பணியைத் - தன் கையில் எடுத்துக் கொண்டார் சு.ரா. இந்திரா பார்த்தசாரதிக்கு ஒருமுறை தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்தபோது குஷ்புவோடு சேர்ந்து அதை வாங்க மாட்டேன் என்று மறுத்தார் அல்லவா இ.பா.? தமிழ்நாட்டின் கலாச்சார வறுமையின் அடையாளம்தான் இ.பா.வுக்குக் கலைமாமணி விருது வழங்கிய செயலாகும்.

இப்போது மீண்டும் ‘பிரக்ஞை’க்குப் போகலாம். அதில் 1976-ம் ஆண்டு சு.ரா. எழுதிய கட்டுரை ‘போலி முகங்கள் - சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு’. அந்தக் கட்டுரைதான் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு - அப்போது எனக்கு சி.சு. செல்லப்பா தெரியாது - இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக, பைங்கிளி எழுத்துக்குமான வேறுபாடு பற்றிக் கற்பித்தது. ஒரு பைங்கிளி எழுத்தாளனாக ஆகியிருக்கக் கூடிய என்னை அந்த வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது அந்தக் கட்டுரைதான். செல்லப்பா தன் ஆயுள் முழுவதும் போராடிய கருத்துக்களம் அது. சு.ரா.வின் அந்தக் கட்டுரை இலக்கியப் போலிகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றி எங்களுக்குச் சொன்னது. போலி இலக்கியம் எப்படி ஒரு சீரிய கலாசாரத் தளத்தை அதிகாரத்தின் துணை கொண்டு வீழ்த்துகிறது என்பதை விளக்கியது. இலக்கியத்தையும் இலக்கியம் போல் தோற்றம் கொள்ளும் போலிகளையும் இனம் காணும்போது தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை என்று எங்களுக்குக் காண்பித்தது.

அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை வாழ்த்தித் தமிழறிஞரான நாரண. துரைக்கண்ணன் எழுதியதை சு.ரா. அந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார்: ‘இளவல் அகிலனின் ‘சித்திரப் பாவை’ நாவலை வைத்து மட்டும் பிற மொழியாளர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளின் தரத்தையோ தகுதியையோ எடை போட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.’ ஆக, நாரண துரைக்கண்ணனுக்கே அந்த நாவலின் தகுதி பற்றித் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் தமிழுக்குக் கொடுத்தார்களே என்ற மகிழ்ச்சி! இதுதான் இலக்கிய மதிப்பீடுகளின் சீரழிவு என்றார் சு.ரா.

சு.ரா. கூறியுள்ள ‘சித்திரப் பாவை’யின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். நாயகன் ஓர் ஓவியக் கலைஞன் (சிவாஜி. ஓவியக் கலைஞன் என்பதால் எம்ஜியார் ஒத்து வர மாட்டார்). ஆனால் இவனை ட்ராயிங் மாஸ்டர் என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவியக் கலை பற்றிய நுட்பமான கருத்துக்களை அகிலன் அந்தக் கால வணிகப் பத்திரிகைகளில் படம் வரைந்து கொண்டிருந்த ரெஸாக், சாமா, வர்ணம் போன்றவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருப்பார் என்று நக்கலடிக்கிறார் சு.ரா. இவனைப் பணம் ஈட்டும் தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறார் தந்தை (சுப்பையா). இவனோ கலைதான் உயிர் என்கிறான். இவனுக்கு முதிர்ந்த ஓவியர் ஒருவரின் (ரங்காராவ்) நட்பு கிடைக்கிறது. ‘வழக்கம் போல் அவருக்கு ஒரு மகள் (சரோஜாதேவி) இருக்கிறாள். வழக்கம் போல் நல்ல அழகி. கலையுள்ளம் படைத்தவள். அதோடு அழகான கதாநாயகிகளின் எப்போதும் சாதுவான அப்பாக்கள் போல் இவரும் கல்மிஷம் கிஞ்சித்துமின்றித் தன் பெண்ணை ஓவியக் கலைஞனுடன் பழக விடுகிறார்.’ நாயகனுக்கும் நாயகிக்கும் வழக்கம் போல் காதல் மலர்கிறது. நடுவில் நாயகனின் அண்ணன் (பாலாஜி) வில்லனாகக் குறுக்கிட்டு சரோஜாதேவிக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். மீண்டும் சு.ரா.வின் வார்த்தைகளில்: ‘எச்சிலாக்கப்பட்ட நாயகி, தன்னை மேற்கொண்டு காதலனுக்கு அளிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டாதவளாய், எச்சில் படுத்தியவனே மேலும் எச்சில் படுத்தும்படி, அவனையே வலுக்கட்டாயமாக மணந்து கொள்கிறாள்.’ பிறகு சிவாஜி நகை நட்டுக்கு ஆசைப்படும் ஒரு சராசரிப் பெண்ணை மணக்கிறார். ஆனால் கலைஞனான சிவாஜியால் அந்தப் பெண்ணின் லௌகீக ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அந்தப் பெண் சைக்கிளில் சென்று மயிலாப்பூரில் உள்ள கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். வில்லன் பாலாஜியிடம் மாட்டிய சரோ அவனிடம் அடி உதை பட்டு வாழ, இங்கே சிவாஜி தன் காதலியை நினைத்து அவளை ஒரு ஓவியமாக வரைகிறார். (அதுதான் சித்திரப் பாவை!) ராப்பகலாக வரைந்து வரைந்து அவர் கை காலெல்லாம் வீங்கி விடுகிறது. கடைசியில் சரோஜாதேவி பாலாஜியைப் பிரிந்து சிவாஜியிடமே வந்து சேர்கிறார். இந்தப் ‘புரட்சிகரமான’ முடிவுக்காகத்தான் ஞானபீடம் கிடைத்ததோ?



சு.ரா.வின் அந்த முக்கியமான கட்டுரை ‘ஆளுமைகள் மதிப்பீடுகள்’ என்ற தொகுப்பில் வந்துள்ளது. (காலச்சுவடு பதிப்பகம்) அதை எனக்கு அனுப்பி வைத்த விமலாதித்த மாமல்லனுக்கு நன்றி. பிறகுதான் அந்தக் கட்டுரை ‘காற்றில் கலந்த பேரோசை’ என்ற தொகுப்பிலும் இருப்பதைக் கண்டேன். சு.ரா.வின் இந்தக் கட்டுரை ஏதோ ஒரு நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரை அல்ல; அல்லது, ஏதோ ஒரு இலக்கியப் பரிசை எதிர்த்து எழுதப்பட்ட சர்ச்சைக் கட்டுரையும் அல்ல. இலக்கியம் என்றால் என்ன என்பதை நமக்குப் புரிய வைக்கும் கட்டுரை. அதில் சு.ரா. சொல்கிறார், ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்யும் கரிச்சட்டைப் பையன்கள் காரை இயங்க வைத்ததும் ஓ என்று கத்தும்போது எனக்கு ஏற்படும் சிலிர்ப்பு வால்ட் விட்மனின் கவிதைகளிலிருந்து கிடைத்தது.

மேலும், அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தது பற்றிப் பாராட்டி எழுதிய வல்லிக்கண்ணன், தி.க.சி. ஆகிய இருவரது இலக்கிய மதிப்பீடுகளையும் கேள்விக்குட்படுத்துகிறார் சு.ரா. (இதனால்தான் அந்த இருவரின் வாழ்நாள் பூராவுமான விமரிசனங்களை நான் ஒரு வார்த்தை கூட இதுவரை படித்ததில்லை.) மேலும் சொல்கிறார் சு.ரா.: ‘அகிலன் பரிசு பெற்றதைப் பத்திரிகைச் சக்திகளும் சக கேளிக்கையாளர்களும் கொண்டாடுவது இயற்கையான காரியம். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது. சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்று மற்றொன்றைத் தழுவி முத்தமிட்டுக் கொள்ளும்.’

வார்த்தைகளின் கடுமையைக் கவனியுங்கள். இதையெல்லாம் கற்றுக் கொண்டு வந்த ஒரு தலைமுறை இப்போதைய அவசரமான வணிக எழுத்தினாலும் முகநூல் மோஸ்தர்களாலும் மீண்டும் பழைய இடத்துக்கே செல்வதை நான் பார்க்கிறேன். ஒட்டு மொத்த சமுதாயமே எனக்கு சுஜாதாவை மட்டுமே தெரியும் என்று சொல்லும்போது நான் அவர்களிடம் உங்களுக்கு அசோகமித்திரனைத் தெரியுமா என்று கேட்கிறேன். உலக சினிமா அறிந்த என் நண்பர் ஒருவர் சுஜாதாவைப் படித்து மேனி சிலிர்க்கிறார். என்னவென்று சொல்வது? சுஜாதா முன் வைத்த மதிப்பீடுகள் என்ன? ஆயுள் முழுவதும் வணிகப் பத்திரிகைகளின் கேளிக்கைத் தேவைகளுக்குத் தீனி போட்டதுதான். (அவரது ‘நகரம்’, ‘கனவுத் தொழிற்சாலை’ போன்ற ஒன்றிரண்டு எழுத்துக்களையும், இலக்கிய அறிவே இல்லாத ஒரு philistine சமூகத்துக்கு mass educator-ஆக விளங்கியதையும் நான் மதிக்கிறேன். ஆனால் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், சா. கந்தசாமி, அசோகமித்திரன் என்று யாரையுமே தெரிந்து கொள்ளாமல் சுஜாதா ஒருவரை மட்டுமே படித்த வாசகக் கூட்டத்தை என்னவென்று சொல்வது? சுஜாதாவின் மரணத்துக்குப் பிறகு இந்த வாசகக் கூட்டம் தாய் தந்தையை இழந்த அனாதைகளைப் போல் ஆனதையும் நான் அவதானித்தேன்.)

ஒருமுறை எஸ். ராமகிருஷ்ணன் சுபமங்களா பத்திரிகையில் ரஜினிகாந்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ரஜினி சார் என்று எழுதியிருந்தார். (எஸ்.ரா. சினிமாவில் நுழைந்திருந்த சமயம்). அப்போது நான் சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதனுக்கு நாம் என்ன ரமணர் சார், மார்க்ஸ் சார், பாரதி சார் என்றா அழைக்கிறோம் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். என் கடிதம் பிரசுரமாகவில்லை. ஆனால் அதே ரீதியில் சு.ரா. எழுதிய கடிதம் வந்திருந்தது. ரமணர் சார், பாரதி சார் என்றா அழைக்கிறோம்? பெயர்கள் கூட அதேதான். எங்களைப் போன்றவர்கள் சு.ரா.விடம் பயின்றது அதைத்தான். ஆனால் நிலைமை இப்போதும் திருந்தவில்லை. சமீபத்தில் ஜெயமோகன் ஒரு பேட்டியில் ரஜினியை தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார். என்னைப் பலரும் சினிமாவுக்கு ஏன் வசனம் எழுதுவதில்லை என்று கேட்பதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்: ஓர் அலுவலகத்தில் போய் வேலை செய்து கொண்டு மீதி நேரத்தில் எழுதுவது போல் அல்ல அது. ஒரு மருத்துவரின், ஓர் ஆசிரியரின் வேலை போல் அல்ல அது. படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் ரஜினி என்று பேச முடியாது. தலைவர் என்றே பேச வேண்டும். அதேதான் நம்முடைய கட்டுரையிலும் பேட்டியிலும் வரும். அப்படியானால் கலைஞர் என்றும், புரட்சித் தலைவி என்றும்தான் சொல்லியாக வேண்டும். தலைவரின் நீட்சிதானே இதுவும்?

இத்தகைய சூழலில் சுந்தர ராமசாமியின் முக்கியத்துவம் கூடுகிறது. இலக்கியத்தை, இலக்கிய உத்திகளைக் கற்பிக்க இங்கே இரண்டு டஜன் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தின் மூலம் நாம் கண்டடைய வேண்டிய மதிப்பீடுகள் குறித்து அக்கறை கொண்டார் சு.ரா.

(தொடரும்)

சுந்தர ராமசாமி - பகுதி 3

First Published : 05 June 2016 10:00 AM IST

1981-ல் சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' வெளிவந்த போது அதைப் பாராட்டியோ அல்லது விமரிசித்தோ பேசாத ஆளே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அது ஒரு விவாத அலையை எழுப்பியது. நான் அதை விமரிசித்து ஒரு தனிப்புத்தகமே வெளியிட்டேன். பின்னர் சு.ரா.வின் சிறுகதைகளைப் படித்த போது, நகுலன், அசோகமித்திரன், கு.ப.ரா. போன்றவர்களைப் போல் அவை என்னை ஈர்க்கவில்லை என்பதோடு கூட அவை மிகவும் சராசரியாகவும் தோன்றின.
இப்போது 35 ஆண்டுகள் கழித்து இந்தத் தொடருக்காக சு.ரா.வின் மூன்று நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படித்தபோது எண்பதுகளின் துவக்கத்தில் என்ன தோன்றியதோ அதே கருத்துதான் மீண்டும் வலுப்பட்டது. அவரது புகழ் பெற்ற சிறுகதை ‘பள்ளம்’ மிகவும் சராசரியான ஒரு கதை. சுய இரக்கத்தைத் தவிர அதில் எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை விடுமுறையில் வீட்டுக்கு வரும் இலக்கியவாதி நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியாமல் அப்பாவின் வற்புறுத்தலால் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் ஓர் இளைஞன் அன்றைய தினத்தை விவரிக்கிறான். அதிலும் அந்த முடிவு ஏதோ ஒரு பாலா படம் போல் தான் செயற்கையாக இருந்தது. கடை உதவியாளன் மதுக்குஞ்சுவுக்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது. 
‘சின்ன வயசிலே நடந்தது. கிராமத்திலே சொல்லக் கேள்விதான். எங்கம்மா ஒரு சினிமாப் பைத்தியம். ஆத்து மணல்லே உக்காந்து சினிமாப் பாத்துக்கிட்டு இருக்கா. நான் மடியிலே படுத்துக் கெடக்கேன். கீள கெடக்கற கூழாங்கல்லே எடுத்து வாயிலே போட்டுக்கறதும் அவ விரலைப் போட்டு நோண்டி எடுக்கறுதுமா இருந்திருக்கு. ஒரு தவா கண்ணை நோண்டிட்டா தெரியாம, அப்டினு சொல்றாங்க’ என்றான்.
மதுக்குஞ்சு, மிகவும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்...
‘செலவங்க சொல்றாங்க, அவங்க உடனே செத்துப் போயுட்டாங்கனு. செலவங்க சொல்றாங்க, நான்னுக்கிட்டாங்கனு. அண்ணைக்கே அவங்க கண்ணை நோண்டி எனக்கு வச்சுட்டாங்களாம், ஆஸ்பத்திரியிலே’ என்றான் மதுக்குஞ்சு.
‘உனக்கு ஏதாவது கஷ்டமிருக்கா அதனாலே’ என்று கேட்டேன்.
‘ஒண்ணுமில்லே. ஆனா பார்வை இல்லே. பள்ளம்தான் ரொம்பிச்சு’ என்றான் அவன்.
சுய இரக்கத்தில் ஆரம்பிக்கும் கதை கடைசியில் சினிமாவினால் ஏற்படும் தீமை என்கிற நீதியைச் சொல்லி முடிகிறது.  
அவரது மற்றொரு புகழ்பெற்ற கதை, ‘பல்லக்குத் தூக்கிகள்.’ 1973-ல் ஞானரதத்தில் வெளியானது. அதைப் படித்து சிலாகிக்காவிட்டால் அப்போது நீங்கள் ஒரு புத்திஜீவியே கிடையாது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே தமிழ் இலக்கியவாதிகளின் மத்தியில் அப்போது ஒரு தீண்டத்தகாதவனாகக் கருதப்பட்டேன். (‘சு.ரா.வையே விமரிசிக்கிறான், இவனுக்கு என்ன இலக்கியம் தெரியும்?’)
இப்போது அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற சிறுகதையைப் பார்ப்போம். (இதுவும் ‘பல்லக்குத் தூக்கிகள்’ வெளிவந்த 1973-ல்தான் வெளிவந்தது.) உலகின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்லத்தக்க அந்த முழுக்கதையையுமே நான் இங்கே மேற்கோள் காண்பிக்க விரும்புகிறேன். என்றாலும் இடப்பற்றாக்குறை கருதி அதில் சில பகுதிகள். இதிலும் ‘பள்ளத்’தில் வருவது போன்ற ஓர் இளைஞன் தான். சுய இரக்கமும் ஏழைகளின்பால் பச்சாத்தாபமும் தோன்றக் கூடிய, கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஆபத்துகள் அனைத்துக்கும் சாத்தியம் இருக்கக் கூடிய கதைதான். ஆனால் கதையில் தெரிவது ஒரு அபத்தம். எதார்த்த வாழ்வின் மாபெரும் அபத்தம். ஒவ்வொரு சொல்லிலும் அந்த அபத்தம் நுரை போல் கொப்பளித்துக் கொண்டே இருப்பதை நாம் கதை முழுவதிலும் காண்கிறோம். இவ்வளவுக்கும் சு.ரா. ஓர் இடதுசாரி. பாரம்பரியத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அசோகமித்திரனை அப்படிக் கறாராக வரையறுக்க முடியாது. இருந்தும் அசோகமித்திரன் தான் புனைகதைகளில் அவர் எந்த சித்தாந்தத்தைச் சார்ந்திருந்தவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அதையெல்லாம் மீறிய கலாசிருஷ்டியின் சந்நதம் கொண்டு எழுதுகிறார்.  
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்
இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.
‘ஹோல்டான்! ஹோல்டான்’ என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை போலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் ‘ஹோல்டான், ஹோல்டான்’ என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.
கதையின் ஆரம்பம் இது. கதை நமக்குப் பிடிபட்டு விட்டது. ரயிலைப் பிடிக்க ஓடுகிறான் ஒருவன். ரயில் கிளம்பி விட்டது. இவ்வளவுதான் கதை. மேலே பார்ப்போம்.  
பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச்
சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ, அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.
வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் தைப்பவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை, குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம், குழந்தைகள்.
அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள், இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல முடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடைபாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும்.
ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம்
வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன்? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், ‘எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிட்டான்.
இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து
மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை
எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது
கொடுப்பார்களா? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக்
குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ? அப்பா அம்மா
இருந்து இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில்
ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.
ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.
இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர
ஆரம்பித்துவிட்டது.
ஓடினான்.
அப்புறம் பிளாட்பாரத்தில் இருக்கும் பிரச்சினைகள். உலகில் உள்ள அத்தனை பொருட்களும் பிளாட்பாரத்தில் கிடக்கின்றன. கடைசியில் ரயிலைப் பிடிக்கப் போகும் போது கடவுள் வேறு குறுக்கிடுகிறார்.  
திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்.
‘தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்.’
‘அந்த ரெயிலையா?’
‘ஆமாம். அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்!’
‘வேலை கிடைத்துவிடுமா?’
‘வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!’
‘நீ என்ன ஜாதி!’
‘நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை. பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின்
இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது.
தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!’
‘நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?’
‘போ, தள்ளி! பெரிய கடவுள்.’
மீண்டும் ஒற்றைச் சிறகு, ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன் அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரமில்லை.
இந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து
ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும் இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும்! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று?
இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மீண்டும் கடவுள்.
‘அட ராமச்சந்திரா! மறுபடியுமா?’
‘ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்.’
‘அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும்.’
‘நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?’
‘ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?’
‘அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்.’
‘இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம்’
இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள்,
எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு பட்டிருக்கிறார்கள்! இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்! புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?
இப்படியே இன்னும் விவரிக்கப்படும் கதையின் இறுதிப் பகுதி இது: 
கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு
என்ன அடையாளம் கூற முடியும்? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா? மயக்க மருந்து கொடுக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?
அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தது.
***
இந்தத் தொடரின் நோக்கம் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளைப் பற்றி வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல அறிமுகத்தைச் செய்வதுதானே அன்றி வேறு எதுவுமல்ல. அதனால்தான் ஒவ்வொருவரின் படைப்பும் உலகத் தரமானது என்றே குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சு.ரா. இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மற்ற எழுத்தாளர்களைப் போல் வெறும் கதை மட்டும் எழுதவில்லை. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தமிழ்க் கலாச்சார மதிப்பீடுகளின் சீரழிவு, போலி இலக்கியம், வணிக எழுத்து ஆகிய மூன்றுக்கும் எதிரான ஒற்றைக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தார்.
 
சுஜாதா தன் பத்திகளில் சுந்தர ராமசாமி பற்றிப் பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சு.ரா. சுஜாதா பற்றி ஓர் இடத்தில் கூடக் குறிப்பிடவில்லை என்பதில் சுஜாதாவுக்கு ஆழமான வருத்தம் உண்டு. அது ஏனென்றால், சு.ரா. எந்த மதிப்பீடுகளுக்காக இயங்கினாரோ அதற்கு எதிரான உலகில் மக்களுக்கு ஒரு கேளிக்கை உலகை சிருஷ்டித்துக் கொண்டிருந்தார் சுஜாதா. 
பெருமாள் முருகனுக்கு இன்று உலக இலக்கிய அரங்கில் தஸ்லீமா நஸரீனுக்கு இருக்கும் பெயரும் புகழும் இருக்கிறது. மாதொரு பாகனுக்கு ஏற்பட்ட சர்ச்சை காரணம். ஒரு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகை அந்த நாவல் பற்றி என்னை எழுதச் சொன்ன போது அவர்கள் அந்த நாவலுக்கு ஆதரவான அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார்கள். நான் அது ஒரு விஜயகாந்த் படம் என்று எழுதினேன். சமீபத்தில் பெருமாள் முருகனின் மற்றொரு நாவல் ஆங்கிலத்தில் வந்தது. அதிலிருந்து சில பகுதிகளை அதே பத்திரிகை வெளியிட்டது. அந்த நாவல் பற்றி என்னை எழுதச் சொன்னார்கள். இப்படி ஒரு குப்பையை நான் படித்ததே இல்லை என்றும் தஸ்லீமாவின் லஜ்ஜாவும் இதே போன்றதொரு குப்பை தான் என்றும் எழுதினேன். தஸ்லீமா ட்விட்டரில் பொங்கிப் பொங்கி என்னைத் திட்டி எழுதினார்.
இதுதான் சு.ரா.விடமிருந்து நான் கற்றது. நிஜத்தை நிஜம் என்றும் போலியைப் போலி என்றும் சொல்; அதற்காக எந்தச் சமரசமும் வேண்டாம்; கலையில் சமரசத்துக்கே இடமில்லை. ஒருவகையில் என் வாழ்க்கையின் அச்சாணியே சு.ரா. என்று ஆகி விட்டது அல்லவா? சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே? 
அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன்.