Saturday, 28 May 2016

பள்ளம் - சுந்தர ராமசாமி, போதை ஏற்றாத கதை - விமலாதித்த மாமல்லன்

பள்ளம் - சுந்தர ராமசாமி

http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_22.html

அன்று எங்கள் கடைக்கு விடுமுறை. வாரத்தில் ஒரு நாள். ஆனால், அன்றும் போகவேண்டிவந்தது. அடக்கமில்லாத, முரட்டுச் சாவியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன். மனத்திற்குள் அழுதுகொண்டே தெருவில் இறங்கி நடந்தேன்.
இந்த ஒரு நாளையாவது எனக்கே எனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. நாட்களை எண்ணி, பொறுமை கெட்டபின், சாவகாசமாக வரும் ஏழாவது நாள். நான் ஒத்தி போட்டவைகளையும், செய்ய ஆசைப்பட்டவைகளையும் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியாமல்Sundara_ramasamy7_400 திணறும் நாள். மொட்டைமாடிப் பந்தலின் சாய்ப்பில், வெறுந்தரையில், எதுவும் செய்யாமல், எதுவும் செய்ய இல்லை என்ற சந்தோஷத்துடன் வானத்தைப் பார்த்தபடி மனோராஜ்ஜியத்தில் மிதப்பது. வேலை, அல்லது அப்பா, அல்லது வாடிக்கை என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்க, தீர்மானமே அற்ற சுதந்திரத்தில் திளைக்க ஒரு நாள். பகற்கனவு என்கிறார்கள். ஆனால், ஆசைகள் லட்சியங்கள் அங்கு தானே வர்ணச் சித்திரங்களாக மிளிர்கின்றன. அதுவும் வேண்டாமென்றால் எப்படி?
மொட்டை மாடி வெறுந்தரையில் கிடந்து வானத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறேன். பின் எப்போது என்று தெரியாமல், வானமும் மொட்டைமாடியும் செடி கொடிகளும் என் ரத்தபந்தங்களைச் சுற்றி உழலும் நினைவுகளும் அற்றுப்போய், மனக்காட்சியில் நான் கதாநாயகனாகச் சுழல, என்னைச் சுற்றி, சூரிய சந்திர மண்டலங்கள் கும்மியடிக்கின்றன. பூத்துச் சொரிகின்றன, ஆசைகள். மாலை தொடுக்க, மெல்லிய மேகங்களை உடுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் மிதந்து வருகிறார்கள். பின்னால் நினைத்துப் பார்த்தால் வெட்கமாய் இருக்கும். இப்படி கேவலப்பட்டுப்போய்விட்டோமே என்றிருக்கும். சில சமயம் வருத்தம் பொத்துக் கொண்டு வரும். நல்ல வேளை, என் பகற் கனவுகள், அந்த வர்ணத் திரைக் காட்சிகள், வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு ‘ரீல்’ பார்த்தால்கூட எல்லோரும் என்னைக் காறி உமிழ்ந்து விடுவார்கள். பத்து சட்டம் பார்த்தால் போதும், ’இந்த நாயை வீட்டில் வைத்துக்கொண்டிருக்க யோக்யதை இல்லை’ என்பார் அப்பா.
[’நீங்கள் நினைப்பது சரிதான் அப்பா, சரிதான். என் கற்பனைகள் ஒன்றும் நிறைவேற மாட்டேன் என்கிறதே. நான் என்ன செய்யட்டும். ரொம்ப வேண்டாம்; கால் பங்கு நிறைவேறினால் போதும்... அப்புறம் ஒரு வார்த்தை சிணுங்க மாட்டேன். உங்களைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ - நான் வேலை செய்யும்போது சந்தோஷமாக இருந்தால், கடவுள் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன - ஒரு வார்த்தை முணுமுணுக்க மாட்டேன். எந்த நுகத்தடியில் வேண்டும் என்றாலும் புன்னகையுடன் தோள் கொடுப்பேன். கால் பங்கு நிறைவேறினால் போதும் அப்பா, வெறும் கால் பங்கு.’]
ஒரு நாள் முழுசாக என் கையில் வந்து விழுவது; அதை, கொஞ்சம் கொஞ்சமாக, தீர்ந்துவிடுமே என்ற கவலையில் நான் கொறித்துக்கொண்டிருப்பது, பொறுக்குமா அப்பாவுக்கு? விடுமுறை நாளில், ரத்தமும் சதையுமாய் அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு அர்த்தம் வேண்டாம்.  ”போடா, போய் அந்த சேலம் கட்டை உடைத்து விலை போடு” என்றார் அப்பா.
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அது ஒன்றும் அப்படி பெரிய வேலை இல்லை. அந்த உருப்படிகள் விற்பனைக்கு அவசரமாகத் தேவையுமில்லை. மறு நாளோ, அதற்கு மறுநாளோ கூட போட்டுக் கொள்ளலாம். அரை மணி நேரத்தில் - சரியான கையாள் நின்றால் இன்னும் குறைவாகக்கூட - செய்துவிடக்கூடிய வேலை. அது போதும் என்று வைத்துக் கொண்டால் நான் வீட்டில் அல்லவா இருப்பேன். சும்மா இருந்து விட்டால்கூடக் குற்றமில்லை. சும்மாவும் இருக்கமாட்டேன் என்கிறேனே. அதுதான் கஷ்டமாக இருக்கிறது அப்பாவுக்கு. என் புத்தக அலமாரியை அடுக்க ஆரம்பிக்கிறேன். தரை பூராவும் பரந்து கிடக்கும் புத்தகங்கள் அப்பாவை என்னென்னவோ செய்துவிடுகின்றன. என்ன செய்து இவ்வளவு பெரிய துன்பத்துக்கு ஆளாக்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அல்லது இலக்கிய நண்பன் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுகிறான். அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து, இருள் சூழ்ந்த பின்பும் விளக்குப் போட்டுக் கொள்ளாமல், மிதமிஞ்சிய லகரியுடன், வெறியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வப்போது நண்பன் வெளியே போய் ‘தம்’ இழுத்துவிட்டு வருகிறான். பேச்சு. பேச்சு. என்னதான் பேசிக்கொள்கிறார்களோ, என்று அப்பா, அம்மா முதல் கைக்குழந்தைவரை கேட்டிருக்கிறார்கள். யாரும் இந்தக் கேள்விக்குச் சரிவரப் பதில் சொல்லவும் மாட்டேன் என்கிறார்கள். அப்படியே என் நண்பன் வரவில்லை என்றாலும் - அவன் அநேகமாக வராமல் இருப்பதில்லை - அம்மாவைத் தேடிக்கொண்டு போகிறேன். அவளுடைய கட்டிலின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு, நோபல் பரிசைப் பிடுங்கிக்கொள்ளப்போகிற என் நாவலின் கதையை நான் சொல்ல, அவள் சுவாரஸ்யமாகக் கேட்க, அந்த இடத்தில் அக்காக்கள், தங்கை, அக்கா குழந்தைகள் எல்லோரும் கூட, பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாகி, அங்கு நான் ஒரு கதாநாயகன் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்கும்போது, அப்பா தனியறையில் தனிமை வதைக்க, படித்து முடித்த ‘ஹிந்து’ பத்திரிகையை மாறி மாறி மடித்துக்கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொள்வதும் மீண்டும் வராண்டாவில் உலாவுவதும்.... அப்பப்பா..... ஒரு விடுமுறை நாள் என்ன என்ன பிரச்சினைகளைக் கிளப்புகின்றன.....
‘டேய் போ, போய் சேலம் கட்டை உடைத்து விலை போடு’ என்கிறார் அப்பா. ‘கூட?’ என்கிறேன். ‘மதுக் குஞ்சுவை வரச் சொல்லியிருக்கிறேன்’ என்கிறார். இதைக் கேட்க  எனக்கு மிகச் சங்கடமாக இருக்கிறது. இது ஒரு தந்திரம். எனக்குத் தெரியாமல், வேண்டாம் என்று சொல்லக்கூட எனக்கு சந்தர்ப்பம் தராமல், மதுக்குஞ்சுவை வரச்சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தால் இப்போதுகூட வேண்டாம் என்று நான் அவனை அனுப்பிவைக்க முடியும். இது தெரியாதா அப்பாவுக்கு. அதனால்தான் நேராகக் கடைக்கு வரச்சொல்லியிருக்கிறார். இப்போது அவன் வந்து காத்துக்கொண்டிருப்பான். இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சேலம் கட்டை உடைப்பதைத் தவிர.
தெரு வழியே உடம்பையும் சாவியையும் தூக்கிக் கொண்டு, மனத்திற்குள் அழுதுகொண்டு, என் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளத் தெரியாத என்னையே நிந்தித்துக்கொண்டு, என்னை இப்படித் தொடர்ந்து சங்கடப்படுத்தும் யார் என்று தெரியாத எதிரியை சபித்துக்கொண்டு போனேன்.
வெளிப்பிரக்ஞை ரொம்பவும் மங்கிப் போனதில், மற்றொரு அசையும் பொருளில் என் உடலேறி உட்கார்ந்து கொண்ட மாதிரி நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு கல்தூணைக் காலால் உதைத்து எலும்பை முறித்துக் கொண்டு விழுந்து கிடக்க வேண்டும் போலிருந்தது.
***
இந்த வெள்ளிக்கிழமைகளில்தான் புதுப் படங்கள் போடுகிறார்கள். பதிமூன்று கொட்டகைகளிலும் புதுப் படங்கள். காலை ஒன்பது மணிக்குக் களை கட்டியாயிற்று. பெண்களையும் குழந்தைகளையும் தெருவில் வாரிக் கொட்டியாயிற்று. இடுப்புக் குழந்தைகளுடன் விரைகிறார்கள். இவர்கள் உடம்பில் இந்த நேரங்களில் ஏறும் விறுவிறுப்பைப் பார்த்தால், வருடக்கணக்கில் சிறையிலிருந்துவிட்டு விடுதலை பெற்றுவரும் கணவன்மார்களைக் கொட்டகைகளில் சந்திக்கப் போவதுமாதிரிதான் இருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ள முடியாத நாணத்தால் அமுக்கப்படும் சந்தோஷத்தில்தான் முகத்தில் இந்த போலி கடுகடுப்பு ஏறமுடியும். இந்த  ஒன்பது மணிக்கு, தங்கள் வேலைகளை பரபரக்கப் பாதி முடித்தும், போட்டது போட்டபடியும் தெருக்களில் குதித்து விரைகிறார்கள். தெரிந்தவர்களைக் குறுக்கிட்டுத் தாண்டும்போது, பார்த்தும் சரியாகப் பார்க்காதது போல் சிரித்துக்கொண்டு விரைகிறார்கள். வெயில் விளாச ஆரம்பித்துவிட்டது. இப்போதே இப்படி அடித்தால் நண்பகலுக்கு அதன் கைச்சரக்கை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கழுத்துகளிலும் கன்னங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது. குங்குமப் பொட்டுகளின் ஓரங்கள் கலங்கிவிட்டன. இடுப்புக் குழந்தைகளின் தலைகள், பெண்களின் அவசர உடல் அசைவுகளில் குரங்காட்டம் ஆட, நெற்றிப் பொட்டுகளிலும் தாடைகளிலும் வியர்வை வழிகிறது. குழந்தைகளின் முகங்கள் ரொம்பவும் வாடி விட்டன. பெண்கள் தங்கள் இயற்கையான வேகத்தில் நகராதது மாதிரியும், உருத்தெரியாத ஒரு லகரியை கடைவாயில் ஒதுக்கிக்கொண்டு, அதிலிருந்து ஊறும் ஒரு ரசத்தை விழுங்கி தங்கள் நாளங்களில் பரப்பிக்கொள்வதால்தான், இவர்களால் இத்தனை அமானுஷ்யமான வேகம் கொள்ள முடிந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. அவர்கள் மூளையில் ஊறப்போகும் இன்ப உணர்வுகளுக்கு பாஷை இல்லை.
நானும் சிறு வயதிலிருந்தே இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும் - அவர்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும். காலத்தாலும், நாகரிகங்களாலும், நான் அறியாது அவர்கள் மீது சரியும் கஷ்டங்களாலும் சில சமயம் சந்தோஷங்களாலும் இவர்கள்  அடையும் மாற்றங்களை, நான் மிக உன்னிப்பாக, மிகுந்த ஆசையுடன் கவனித்து வந்திருக்கிறேன். நான் சிறு பையனாக இருக்கும்போது வெள்ளிக்கிழமைகளின் மகோன்னதக் காலைக் காட்சிகளுக்கு, தங்கள் தாயார்களின் அவசரத்துக்கு ஈடுகொடுக்கப் பதறிக் கொண்டு, பாவாடையைச் சுருக்கிக் கொண்டு ஓடிய குட்டிகள், வயிற்றுக் குழந்தையுடனும் இடுப்புக் குழந்தையுடனும் இப்போது ஓடிக்கொண்டிருப்பார்களோ?
வித்தியாசத்திற்காக, வேண்டுமென்றே பாதையை மாற்றுகிறேன். ரொம்பவும் சுற்று இது. அப்பாவுக்குத் தெரியாத சந்துகள். கண்களைக் கட்டி, இதில் எதிலாவது ஒன்றில் அவரை விட்டால், ”இது எந்த ஊர்?” என்று நிச்சயம் கேட்பார். அவருக்கு, கடைக்கு ஒரு பாதைதான் உண்டு. அந்தப் பாதை வழியாகத் தான் அவர் இருபத்தி மூன்று வருடங்களாக -அதற்கு மேலும் இருக்கும் - போய்க்கொண்டிருக்கிறார்.  நான் சுற்றிப் போகிறேன். சந்துகள் வழியாக. இந்தச்  சந்திலுள்ள குடியிருப்புகள், ஆட்கள், முக்கியமாகப் பெண்கள், இந்தத் தெருவிலுள்ள வேசிகள், அரை வேசிகள் - அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களும், அவர்களுடைய குழந்தைகளின் முகங்களும் எனக்குத் தெரியும். இந்த வீடுகள், முன் வாசல்கள் (அன்னம்மை நாடாத்திக்கு ஒரு கோலம்தான் தெரியும். மூன்று ஜிலேபிகள் பிழிந்துவைத்து விடுகிறாள், கோலப்பொடியில்) சண்டைகள், சச்சரவுகள், கெட்ட வார்த்தைகள், அவர்களுடைய முகங்கள் எனக்கு அலுக்கவே இல்லை. இவர்களுடைய ஒழுங்கற்ற தன்மையை நம்பித்தான் நான் என் ஜீவனைச் சுமந்து கொண்டிருப்பதாக, அப்பாவுடைய ஒழுங்கிலிருந்து என்னைத் தற்காத்துக்கொண்டு வருவதாக, படுகிறது.
அப்பா காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து நடக்கப் போய்விடுகிறார். ஏழு மணிக்கெல்லாம் காலைக்கடன்கள், குளியல், காலை உணவு எல்லாம் அவருக்கு முடிந்து போகிறது. ஹாலின் நடுவில், வெளிவாசல் கதவை யாரேனும் திறந்தால் தெரியும்படி, சம்மணங்கூட்டி தரையில் உட்கார்ந்துகொள்கிறார். காலையில் முதலில் எழுந்த ஒரு கைக்குழந்தை அவசரமாகத் தலை சீவி, பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, சட்டைக்குள் திணித்து ரெடி பண்ணப்பட்டிருக்கும். அக்கா அல்லது தங்கை, அல்லது சமையல் மாமி, கதவின் பின்பக்கம் காத்துக் கொண்டிருந்து குழந்தையை அவர் மடியில் கொண்டு வந்து போடுகிறார்கள். குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்து, அந்தக் கொஞ்சலில் ஒரு வெறி ஏறி, லகரி பிடித்து, தன்னை மறந்து, தன் உடம்பை மறந்து, தன் பெயரை மறந்து கொஞ்சுகிறார். எத்தனையோ விதமான சப்தங்களை அவர் எழுப்புகிறார், தோள் துண்டு நழுவி விழுந்துவிட்டால் கூசிக் குறுகி உள்வருத்தம் கொள்கிறவர். மணி எட்டு அடிக்கிறது. அவருடைய சந்தோஷம் கலைகிறது. விரல்களை நீட்டி மணி சரியாக அடிக்கிறதா என்று சரிபார்க்கிறார். ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொருத்தன் என்றாலும் எப்போதும் ஒரு சிஷ்யன் அவருக்குக் கன கச்சிதமாக அமைந்துகொண்டிருக்கிறான். கேட்டைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வருகிறான். இப்போது யாராவது அவசரமாகப் போய் குழந்தையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்பா சாவியை எடுத்துக்கொள்கிறார். எட்டரை மணிக்குக் கடை திறக்கப்படுகிறது. சிஷ்யன் பின்னறையைச் சுத்தப்படுத்துகிறான். அந்தப் பின்னறைக்குள் நுழைந்து அவருடைய நாற்காலியைப் போய் அடைந்ததும், அவருக்கு ஒரு இதம் ஏற்படுகிறது. அந்த அறையில் அவர் வேலை பார்க்கும்போது, பேரேடுகளைத் திருப்பும்போது, ஃபைல்களைப் புரட்டும்போது, கடிதங்கள் எழுதும்போது, கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கும்போது, எத்தனையோ தடவை அவரை மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறேன். எந்த மன நிலையிலிருந்தாலும், அந்த அறை அவருக்கு மிக அவசியமான ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது மாதிரி எனக்குத் தோன்றியிருக்கிறது. அங்கு வந்து சேருவதற்கும், அந்த அறையின் சூழ்நிலையில் தன்னை முடிந்த மட்டும் கரைத்துக்கொள்ளவும்தான், மற்ற சகல காரியங்களையும், அவசர அவசரமாகவும் படபடப்புடனும் அவர் செய்து முடிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அறைக்கு அவருக்கு வர முடியாமல் போகும் நாளை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதுதான் அவருடைய உண்மையான மரணமாக இருக்கும்.
அப்பாவுக்குத் தெரியாத சந்துகள் வழியாகப் போகும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இங்கிருந்துதான், இது போன்ற சந்துகளிலிருந்துதான், பெண்கள் ஒழுக ஆரம்பிக்கிறார்கள். ஒழுகி, தெருமுனைகள் தாண்டி, வேறு பலரையும் சேர்த்துக் கொண்டு வீங்கி, ரஸ்தாக்களில் வழிந்து, கட்டி தட்டியும், திராவகத் தன்மையுடனும், சேறும் குழம்புமாக இரு கரைகளையும் பிடுங்கிக் கொண்டு ஓடும் பிரவாகம் போல் அவர்கள் விரைகிறார்கள். இந்தச் சந்தின் கடைசியில்தான் ரஸ்தாவைப் பார்க்க தாலுகா ஆபீசின் பழைய கட்டிடம் இருக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் வினோதமான தன்மையை வார்த்தைகளில் விவரிப்பது கடினமானது. அவ்வளவு விசித்திரம். பொறியியல் கணக்குப்படி இந்தக் கட்டிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் - தேசிக விநாயகம் பிள்ளை கைக்குழந்தையாக இருந்தபோது - சரிந்து விழுந்திருக்க வேண்டும். சுவாச கோசங்கள் முற்றிலும் பழுதாகிவிட்ட ஒரு காச நோயாளி, வேப்ப மரத்தடியில் தலை சாய்த்துக் கிடப்பதான சித்திரமே இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. இந்தக் கட்டிடத்தில்தான் அந்தக் காலத்தில் அபின் கொடுப்பார்கள். ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு. தாலுகா ஆபிசின் வெளிச்சுவர், உட்பக்கம் போதிய உயரம் கொண்டது. வெளிப்பக்கமும், அதாவது ரஸ்தாவைப் பார்க்க இருக்கும் முன்பக்கம், போதிய உயரத்துடன் இருக்கும். இடது பக்கம் மட்டும் - வெளிப்பக்கம் - ஒரு பெஞ்சுபோல் மிகவும் குட்டையாக இருக்கும். பக்கவாட்டுக் காலிமனை மிகவும் மேட்டுப்பாங்கானது. அபின் வாங்க வருகிறவர்கள், நான் பார்த்த காலங்களில் அநேகமாகப் பஞ்சடைந்த கிழவர்கள், எல்லோரும் ரஸ்தாவிலிருந்து செம்மண் ஓடையில் இறங்கி, கவனமாகக் கீழே பார்த்துக்கொண்டே திடலில் ஏறி - எங்களூரிலுள்ள மூன்று திறந்தவெளி கக்கூசுகளில் இது மிக உபயோகமானது - காம்பௌண்டு மதிற்சுவர் பெஞ்சில் வரிசையாக, கழுகுகள் போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தாலுகா ஆபீசின் பின்னாலுள்ள கக்கூஸ் சுவரில் சாய்ந்தபடி வேப்பமரத்தடி நிழலில் சில பெண்கள் - சில கிழவிகள் - யாரையும் முகமெடுத்துப் பார்க்காமல், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருப்பது போல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். நான் ஒரு சைத்திரிகனாக இருந்திருந்தால், இந்தக் காட்சிகளை பல ஓவியங்களாகச் சேமித்திருப்பேன். அங்கு வருபவர்களின் முகங்களிலிருந்தும் அங்கங்களிலிருந்தும் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கசிந்து, வராண்டாவின் ஓரங்களிலும் படிகளிலும் வேப்ப மரத்தடிகளிலும் வழியும் தள்ளாமையை, இயலாமையை, அனைத்தும் ஒடுங்கிய பின்பும் அபினை நம்பி கொடுக்கில் கொஞ்சம் ஜீவனை வைத்துக்கொண்டிருக்கும் பிடிவாதத்தை, முக்கியமாக, பஞ்சடைந்து, பீளைசாடி போதையில் மயங்கி மிதக்கும் கண்களையெல்லாம்  வரைந்து காட்டியிருப்பேன்.
***
கடையைத் திறந்தேன். கடையின் எதிர்பக்க, சற்றே கோணலான, சினிமாக் கொட்டகையின் வாசலிலிருந்து மதுக்குஞ்சு வெளிப்பட்டான். முன்பக்கம் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது அவனுக்கு அலுப்பைத் தந்திராது. எனக்காக வர நேர்ந்ததே, என்னைப் பார்த்த பின்புதான் அவன் நினைவில் துளிர்த்திருக்கும். நான் அவசரப்பட்டு வந்துவிட்டதுபோல் அவனுக்குத் தோன்றியிருக்கலாம். அவன் வந்து, நான் வந்து சேராத அந்த இடைவெளியை, பள்ளத்தை, பொறுமையின்மையை, எரிச்சலை, அந்தப் புகைப்படங்கள், துடைகள், முலைகள், பிருஷ்டங்கள், முத்தமற தமிழ் முத்தங்கள் அனைத்தும் மிக நன்றாக நிரப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
தகரப்பட்டைகளை வெகு லாவகமாகக் கிழித்து, பண்டிலைப் புரட்டி உடைக்கிறான்  மதுக்குஞ்சு. கைதேர்ந்தவன். எந்த இடத்தில் அடி விழ வேண்டும் என்பது எத்தனை துல்லியமாக அவனுக்குத் தெரிகிறது. சற்றுமுன், காலத்திற்கும் அசைந்து கொடுக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பண்டில், இதோ பரிதாபமாகச் சிதறிக் கிடக்கிறது. நான் பட்டியலையும் கணக்குப் பார்க்க ஒரு பக்கம் எழுதாத தாள்களையும் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் ஊசி, நூல், விலைச்சீட்டு முதலியவற்றை எடுத்துக்கொண்டு வந்தான். உருப்படிகளை கவுண்டரில் வைத்து, மொத்த எண்ணிக்கையைச் சொல்லி ஒத்துக்கொண்டுவிட்டு - எண்ணம் முதல் தடவையே சரியாக வந்துவிட்டது - தரம் பிரிக்க ஆரம்பித்தான். நான் ஒரு பக்கத்தாளில் விற்பனை விலையை கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். மதுக்குஞ்சு ஆர்டர் ஃபைலிலிருந்து ஆர்டரைத் தனியாக எடுத்து, சரக்கு சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். காதில் சொருகியிருந்த ஆட்டுப் புழுக்கைப் பென்சிலால் ‘டிக்’ போட்டுக்கொண்டு வந்தான். நான் விலைச்சீட்டுகளை எழுதி அவனிடம் தந்தேன்.
மின்சாரம் இல்லை. எங்கோ பக்கத்தில் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது போலிருக்கிறது. காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து கொஞ்சம் இதப்படுத்திக்கொண்டேன். தலையைத் திருப்பி ‘ஷோகேஸ்’ கண்ணாடியின் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த சேலைகளின் இடைவெளி வழியாகத் தெருவைக் கவனித்தேன். நெரிசல் தளர்ந்துவிட்டது. எல்லோரையும் இழுத்து, தன் அடிவயிற்றில் அமுக்கிக்கொண்டுவிட்டன இந்த கொட்டகைகள். உடல் பூராவும் எண்ணற்ற முலைகள் கொண்ட மலைபோல் விழுந்து கிடக்கும் ஒரு ராட்க்ஷசியின் உடம்பில் லட்சக்கணக்கான மூஞ்சூறுகள் கொசு கொசுவென்று ஒன்றன் மேல் ஒன்று புரண்டுகொண்டு பால் குடிப்பதுபோல் தோன்றிற்று. மடக்கு நாற்காலிகளை ஓரத்தில் ஒதுக்கி, தூசி தட்டிய இடத்தில் வாகன முண்டை ஒற்றையாக விரித்தான் மதுக்குஞ்சு. சேலைகளை எடுத்து வாகன முண்டில் பரப்பி, விலைச் சீட்டைத் தைப்பதற்கு வசதியாக வைத்துக் கொண்டிருந்தான். சம்மணங்கூட்டி உட்கார்ந்துகொண்டு தைக்க ஆரம்பித்தான்.
“நீ நம்மகிட்டே வந்து எத்தனை வருஷம் இருக்கும் டேய், மதுக்குஞ்சு” எறு கேட்டேன்.
“வருஷம் தெரியலே. பத்து வருஷம் இருக்கும். ஒரு சித்திர மாசம் இருபத்தியொண்ணாம் தேதி” மதுக்குஞ்சு லேசாகச் சிரித்தான். அவன் ஏன் சிரித்தான் என்பது எனக்குப் புரியவில்லை. அவனே சொன்னான்.
”அண்ணைக்குத்தான் பெரியசாமிக்கு பொறந்த நாளு. வீட்டிலேருந்து கடைப்புள்ளைகளுக்குப் பாயசம் வந்தது. நான் காலையிலேயே வந்தேன். ராகு காலம், போயுட்டு பதினொண்ணரை மணி தாண்டி வானு பெரியசாமி சொன்னா. நான் வந்து பாயசம் குடிச்சேன்.”
அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதான். தேதி வருஷம் எனக்கு நினைவில்லை. ஆனால், ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: “இன்னிக்கு ஒரு சின்னப் பயலை வேலைக்கு எடுத்தேன். என்னடா பேர்னு கேட்டேன். முருகன்னு சொன்னான். ஏற்கனவே ரெண்டு முருகன்கள் இருந்துண்டு, இவனைக் கூப்பிட்டா அவன் வரதும், அவனைக் கூப்பிட்டா இவன் வரதும், ரெண்டு பேருமே தன்னை இல்லைன்னு வராம இருக்கறதும் போறாதா. நீ வேறயானு கேட்டேன். அப்பொத்தான் இசக்கி, மில் பெயிலை உடைச்சு, மதுக்குஞ்சு 7 பீஸ்னு ஒத்துண்டான்.  இந்தப் பயலுக்கு, நம்ம கடையிலே மதுக்குஞ்சுனு பேர், அப்படீன்னேன்.” அப்பா தனக்குத்தானே சிரித்துக்கொண்டது இப்போதும் என் மனத்தில் தெரிகிறது.
“மதுக்குஞ்சுவா! பெயர் ரொம்ப ஜோரா இருக்கப்பா” என்று நாங்கள் சொன்னோம்.
“அப்படீன்னா அந்தப் பேரை எனக்கு ஏன் வைக்கலை?” என்று கேட்டான், என் மூத்த அக்காளின் சின்னப் பிள்ளை.
எல்லோரும் சிரித்தோம்.
இந்த ஞாபகங்கள் மனத்தில் ஓடவே மதுக்குஞ்சுவைப் பற்றி அப்பா சொல்லியிருந்த மற்றொரு விஷயம் என் மனத்தில் ஓடிற்று. ரொம்பவும் அதிர்ச்சி தரும் வித்தியாசமான விஷயம் என்பதாலேயே அது என் மனத்தில் பதிந்து போயிருந்தது. இப்போது அந்த விஷயத்தை மதுக்குஞ்சுவிடம் கேட்கலாமா? அப்படிக் கேட்பது அவன் மனத்தைச்  சங்கடப்படுத்துமா? எப்படி ஆரம்பிப்பது? நான், அப்பா சொல்லியிருந்த விஷயத்தைப் பூசி மெழுகிச் சொல்ல ஆரம்பித்தேன்.
“சாமி சொன்னது சரிதான். என் வலது கண், எங்க அம்மாவோடதுதான்” என்றா மதுக்குஞ்சு.
“இப்படிச் சொல்றான் அந்தப் பயல். அதுக்கு மேலே எப்படிக் கேக்கறது? அதுக்கு மேலே எப்படிக் கேக்குறது?” என்று அப்பா திரும்பத் திரும்பக் கேட்டது என் நினைவுக்கு வந்தது.
கேட்கக்கூடிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்ளத்தானே மனம் துடிக்கிறது.
“என்ன மதுக்குஞ்சு. ஏதேனும் விபத்தா?” என்று கேட்டேன்.
“சின்ன வயசிலே நடந்தது. கிராமத்திலே சொல்லக் கேள்விதான். எங்கம்மா ஒரு சினிமாப் பைத்தியம். ஆத்து மணல்லே உக்காந்து சினிமாப் பாத்துக்கிட்டு இருக்கா. நான் மடியிலே படுத்துக் கெடக்கேன். கீள கெடக்கற கூழாங்கல்லே எடுத்து வாயிலே போட்டுக்கறதும் அவ விரலைப் போட்டு நோண்டி எடுக்கறதுமா இருந்திருக்கேன். ஒரு தவா கண்ணை நோண்டிட்டா தெரியாம. அப்டின்னு சொல்றாங்க” என்றான்.
மதுக்குஞ்சு, மிகவும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். இருந்தாலும் முகம் உறைந்து போனது போலிருந்தது. அவன் மனத்தில் ஓடும் எண்ணங்களை அனுமானிக்கத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
“செலவங்க சொல்றாங்க, அவங்க உடனே செத்து போயுட்டாங்கனு. செலவங்க சொல்றாங்க, நான்னுக்கிட்டாகனு. அண்ணைக்கே அவங்க கண்ணை நோண்டி எனக்கு வச்சுட்டாங்களாம், ஆஸ்பத்திரியிலே” என்றான் மதுக்குஞ்சு.
”உனக்கு ஏதாவது கஸ்டமிருக்கா அதனாலே” என்று கேட்டேன்.
”ஒண்ணுமில்லே. ஆனா பார்வை இல்லே. பள்ளம்தான் ரொம்பிச்சு” என்றான் அவன்.
போன் மணி அடித்தது. ரிசீவரை காதில் வைத்துக் கொண்டேன். அப்பாதான்.
“வேலை முடிஞ்சுதா? என்ன சேத்துப் போட்டே?”
’சுவடு’ - 1979

Sunday, May 29, 2016

போதை ஏற்றாத கதை - தி இந்து கலை ஞாயிறு பத்தி 29.05.16 (அசல் வடிவம்)

http://www.maamallan.com/2016/05/290516.html

மேலோட்டமான பொழுது போக்கு எழுத்தைத்தாண்டி கொஞ்சம் ஆழமாகப் படிக்கத் தொடங்கும் ஆரம்ப வாசகனைக் கவரக் கூடியதாக இருப்பது உணர்ச்சிகரமான நெகிழ வைக்கும் எழுத்து. ஆனால் சிறந்த இலக்கியவாதிகளாக அறியப்படும் பெரிய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உணர்ச்சிக் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதத்தில் எழுதுவதில்லை. இதன் காரணமாகவே தொடக்க வாசகர்களுக்கு இலக்கியம் சுவாரசியமானதில்லை என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது.

மனதை விம்மச் செய்வதற்கும் விரியச் செய்வதற்குமான வித்தியாசமாக இதைப் பார்க்கலாம்.

கதையின் உயிர் கருவில் இருக்கிறது. உணர்வுபூர்வமாய் ஒன்றை அனுபவித்த கலைஞன், வாசகனை உணர்ச்சிபூர்வமாய்த் தூண்டுவதைவிட உணர வைப்பதையே முதன்மையான காரியம் எனக் கருதுவான். அதன் காரணமாகவே அதீத நாடகீயமாய் விவரிக்கும் அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறான்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் சுந்தர ராமசாமியின் பள்ளம் கதையைக் கூறலாம். இந்தக் கதையை, இடதுசாரி வங்கித் தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருந்த நண்பரொருவருக்கு 80களில் படிக்கக் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்துவிட்டு, என்ன கதை என்றார். சினிமா என்றேன். ஒரு கணம் அசைவற்று நின்று, சினிமா பள்ளம் இது போதும். இதுவே பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறதே என்று பிரமித்தார். 80கள், அரசியலில் கோலோச்சி தமிழ்நாட்டின் தலைவிதியை சினிமா தீர்மானிக்கத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கதை 1979ல் வெளியாகி இருக்கிறது.

எழுத்தாளரின் அடையாளங்களுடன் தன்மை ஒருமையில் சொல்லப்பட்ட கதை. துண்டுதுண்டான பல காட்சிகளை கொலாஜ் எனும் இணையொட்டுப் படமாக விவரிக்கப்படும் கதை.

என்னதான் முதலாளி மகன் என்றாலும் ஓய்வு தினத்தன்றும் கடையைத் திறக்க வேண்டியாதாக இருக்கிற அலுப்பு. ஓய்வு நாளைக் கூட தனக்கென்று அனுபவிக்க முடியாத வருத்தம். வெள்ளிக்கிழமை விடுமுறை விடும் துணிக்கடை.

கைக்குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி புதுப் படத்தின் முதல் காட்சிக்காக சந்ததிகளாக வெள்ளியன்று வெயிலில் விரையும் பெண்கள்.

கறாரான அப்பாவின் தினப்படிகள். கடையின் அலுவலக அறையில் அவர் உணரும் பாதுகாப்பு. 

பழைய அரசு அலுவலகக் கட்டிடம். அங்கே அபினுக்காகக் காத்திருக்கும் போதைக்கு அடிமைகளான முதியவர்கள்.

கதையின் இறுதியில் வரும், உதவியாளன் கைக்குழந்தையாய் இருக்கையில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்.

ஆரம்ப வாசகனுக்கு, இதைப் படிக்கையில், கதை ஆற்றொழுக்காக இல்லாது தொடர்பற்றது போல் தோற்றமளித்து இடைமறிக்கும் விவரிப்புகள் எதற்காக என்று தொடக்கத்தில் தோன்றக்கூடும். ஆனால் கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் எதற்காகச் சொல்லப்படுகிறது என சற்றே யோசிக்கத் தொடங்கினால் பள்ளம் நிரம்பிவிடும். 

இந்தக் கதை ஏன் இந்த வடிவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சினிமாக் கொட்டகைக்குள் உலகை மறந்து ஒன்றிவிடும் பெண்களையும் -

ஓய்வு நாட்களில் நண்பனுடன் பகலில் இலக்கியம் பேசத்தொடங்கி இருட்டியபின்பும் விளக்கு போடக்கூட மறந்து ‘வெறியுடன்’ விவாதித்துத் துய்த்துக்கொண்டு இருப்பதையும் –

அப்பா தம் அலுவலக அறையில் சகலத்தையும் மறந்து வேலையில் சந்தோஷமாக மூழ்கிவிடுவதையும் –

போதைக்கு அடிமையாகி வயதான காலத்தில் அபினுக்காகக் காத்திருக்கும் வயசாளிகளையும் -

ஒரே சரடில் இணைத்துப் பார்த்தால், வாசக மூளையின் இடுக்குகளில் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் இருட்டுத் திட்டுகள் அடுக்கடுக்காய்த் திறந்துகொண்டு வெளிச்சப்படக்கூடும்.

மனிதர்கள் அனைவருக்குமே எதிலாவது மூழ்கி தம்மைக் கரைத்துக்கொள்வது என்பது பெருமகிழ்வைத் தரக்கூடியது. அவரவர்க்கு அவரவர் போதை அத்யாவசியம். வாழ்வின் யதார்த்தக் குரூரத்திலிருந்து கொஞ்ச நேரமேனும் தப்பிக்கக் கிடைத்த இருட்டில் கிடைக்கும் ஆனந்தத்தின் மிடக்கு அளப்பரியது. அதுதான் அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கிறது.  கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சினிமாவுக்கு விரையும் பெண்ணுக்கும் தந்தையின் கெடுபிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது பிரத்தியேக இலக்கிய உலகில் நண்பனோடு உலவும் இளைஞனுக்கும் ஒருபோலத் தேவைப்படுகிறது. ஒரு போதை விழிப்பிலிருந்து கிறக்கத்துக்கும் மற்றொன்று உறக்கத்திலிருந்து விழிப்புக்கும் எதிரெதிர் திசைகளில் இட்டுச் செல்கிறது.

கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்

என்கிற கவி ஆதங்கத்தின் கதை வடிவம் இக் கதை.

வெகுஜன எழுத்து வியாபாரியின் கையில் இந்தக் கதை கிடைத்திருந்தால் வாசகனைப் பிழியப் பிழிய அழ வைப்பதிலேயே குறியாய் இருந்திருப்பான் - அதைத்தானே நாயக வழிபாட்டுச் சினிமாக்களும் செய்கின்றன என்கிற சுரணையே இல்லாமல். ஆனால் இந்தக் கதையின் குவி மையம் போதையைக் குறித்த தெளிவான ஆழமான அணுகல். பல்லாயிரம்பேரை கவர்ந்திழுக்கும் சினிமாவின் போதையை விமர்சிக்கப் புறப்பட்டு கதையின் இறுதிக் காட்சியை நாடகீயமாய் கதறக் கதற விவரித்து எழுதுவதன் மூலம் எழுத்தில் மற்றொரு போதையை ஊட்டுவதல்ல கலைஞனின் நோக்கம்.

பார்வையாளனுக்கு எவ்விதத்திலும் சிந்திக்கும் சிரமத்தைக் கொடுக்காமல், கருப்பு வெள்ளை நல்லவன் கெட்டவன் என்கிற இருமைகளை ஆற்றொழுக்காய் சொல்லிச் சென்றுகொண்டிருந்த சினிமா, மக்களின் மீது ஏற்படுத்திகொண்டிருந்த தாக்கத்தைச் சொல்ல வரும் சுந்தர ராமசாமி நேர்க்கொட்டில் கதை சொல்லும் பாணியை இதில் தவிர்த்திருப்பது தற்செயலல்ல.

கதை சொல்லி, சினிமாவுக்கு ஓடும் பெண்களைப் பராக்கு பார்த்தபடி கடை திறக்கத் தாமதமாய் வந்து சேருவதும் அந்தத் தாமத கால அவகாசத்தை சினிமாத் தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதில் கடைப்பையன் செலவிடுவதும் எவ்வளவு இயல்பாய் வந்து உட்கார்ந்திருக்கின்றன.

கதையின் கிளைமாக்ஸை எப்படியெல்லாம் நாடகீயமாக்கி நம்மைக் கதறவைக்கலாம் என்பதிலல்ல, சினிமாவின் போதை இந்த அளவுக்குப் போகிறதென்றால், அது எந்த அளவுக்கு மக்களின் நாடி நரம்புகளில் காலங்காலமாய் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் நம் கவனத்தைக் குவிப்பதே சுந்தர ராமசாமியின் நோக்கம்.

எந்தக் கதையிலும் எழுத்தாளனின் கவனம் குவியுமிடம் எது என்பதே அவனது நோக்கத்தைத் தீர்மானிக்கிறது. நோக்கமே அவனைக் கேளிக்கையாளனிடமிருந்து பிரித்துத் தனியே நிறுத்துகிறது. சொல்கிற விதமே அதைக் கலையாய் உயர்த்துகிறது.

நன்றி: தி இந்து