Tuesday, 28 February 2017

புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்



புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்


http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_13.html
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 9:22 AM | வகை: ஆதவன், கதைகள்


விமலாதித்த மாமல்லன்
4 hrs ·



புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன் http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_13.html


‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.

’வேண்டாம்’ என்றான் வேணு

‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான்.

‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான்.

‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’

’பிற்பாடு’ என்றான் வேணு.

ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.

வேணு; வெறுமனே புன்னகை.

‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?’

’ஒரு குறு நாவல்’

‘அபௌட் வாட்?’

‘ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி...’

‘ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்.’

‘எனக்கு மச்சினியே கிடையாது.’

‘ஓ! a wish fulfilment story, then.'

’தேவலையே! நீயும் இலக்கிய பரிபாஷையெல்லாம் நிறைய பிக் அப் பண்ணிண்டு வரயே!’

ராம் கடகடவென்று சிரித்தான். ‘யா, யு நோ... தில்லியிலே நான் மூவ் பண்ற சர்க்கிள் அப்படி; லிட்டரேச்சர்லே இண்டரஸ்ட் உள்ளவங்க - அதுவும் மாடர்ன் டமில் ரைட்டிங்க்ஸை குளோஸா ஃபாலோ பண்ற கேரக்டர்ஸ் - அங்கே நிறைய இருக்காங்க... ஒவ்வொருத்தவனும் கதைகளையும் ஆத்தர்ஸையும் எப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறான்கறே! Those guys are fantastic, I tell you! உன் பெயரைக் கூட அவர்கள் மென்ஷன் பண்ணிக் கேட்கிறேன் அடிக்கடி.’

‘அப்படியா?’

‘ஆமாங்கிறேன். நான் உன் கிளாஸ்மேட், குளோஸ் ஃபிரண்ட்னு சொன்னேனோ இல்லையா, என் மதிப்பு அப்படியே உசந்து போச்சு. ஐ பிகேம் எ கிரேட் ஹீரோ. உன் அப்பியரன்ஸ் பத்தி,ம் ஃபேமிலி பத்தி, வொர்க்கிங் ஹாபிட்ஸ் பத்தியெல்லாம் தூண்டித் துருவி என்னென்னெல்லாம் கேள்விகள்! அதுவும்... (கண் சிமிட்டல்) லேடீசுக்கு உன் கதைகள் ரொம்பப் பிடிச்சிருக்கப்பா. மிஸ் ஷோபான்னு ஜே. என். யு.விலே அமெரிக்கன் ஹிஸ்டரி படிக்கிற பெண் ஒருத்தி... அவ அப்படியே உன் கதைகளிலிருந்து வரிக்கு வரி கோட் பண்ணினா, ஏன் அவர் இப்பல்லாம் நிறைய எழுதறதில்லே? அவரை நிறைய எழுதச் சொல்லுங்க சார், அப்படின்னா. உன் எழுத்துன்னா அவளுக்குப் பைத்தியமாம்.’

வேணு சிரித்தான்.

‘என்னடா, பிளஃப் அடிக்கிறேன்னு நினைக்கிறியா?’

‘சேச்சே! சந்தோஷத்தினாலே சிரிச்சேன்.’

’நிஜமாகவே நீ சந்தோஷமாக இருக்கலாம். நிறையப் பேர் ஆங்காங்கே உன் கதைகளை ஃபாலோ பண்ணிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முந்தி உன் ஆபிசிலிருந்து நாம் கிளம்புகிற சமயத்தில் நீ அதைரியப்பட்டியே, எழுதி என்ன பயன், எதற்காக எழுதிண்டே போகணும், என்றெல்லாம் அலுத்துண்டியே, அதெல்லாம் அவாவசியம் வேணு! உனக்கு தெரியலை.. வீணே மனசைத் தளரவிடாதே!’

வேணு உலர்ந்த புன்னகை செய்தான். ‘நீ அந்த ஜே.என்.யு. கேர்ளுடைய போட்டோவையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா... அதைப் பார்த்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும்..’

ராம் சிரித்தான். ‘ஐ நோ... நான் சொல்வதை நீ நம்பவில்லை, அல்லவா! அந்தப் பெண் என் கற்பனை என்று நினைக்கிறாய்’ சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கி அணைத்து, மடக்மடக்கென்று தண்ணீர் டம்ளரைக் காலி செய்தான்.

வெயிட்டர் ஜூஸ் தம்ளர்களுடன் வந்தான். அவன் தம்ளர்களை வைத்துவிட்டுச் செல்லும் வரை ராம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்: ‘புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் என்ற சிறுகதையைப் படித்திருக்கிறாயா?’

வேணுவின் முகத்தில் ஆச்சரியம். (இவன் புதுமைப்பித்தன் வேறு படிக்கத் தொடங்கிவிட்டானா?) ‘ஞாபகமில்லை’ என்றான். “என்ன கதை, சொல்லு? சொன்னால் நினைவு வந்துடும்.... படித்து நாளாச்சே! அந்தக் காலத்திலே ஒரு வரி விடாமல் படிச்சிருக்கேன்...”

‘உன்னை மாதிரிதான் அதிலே ஓர் எழுத்தாளன். என் கதைகளை யார் புரிந்து கொள்கிறார்கள். எழுதி என்னதான் பயன், என்றெல்லாம் தன் நண்பனிடம் அலுத்துக் கொள்கிறான். சில நாள் கழித்து ஏதோ முன்பின் தெரியாத ஒருவன் மன மகிழ்ந்து எழுதிய ஒரு பாராட்டுக் கடிதம் எழுத்தாளனுக்கு வருகிறது... எழுத்தாளனுக்கு ஒரே பூரிப்பாகவும் நிறைவாகவும் இருக்கிறது... ஆனால் கையெழுத்தைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது. சே! தன் சோர்வை அகற்ற நண்பன்தான் இப்படி வேறு பெயரில் எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கோபமும் மறுபடி ஆயாசமும் ஏற்படுகிறது.’

‘தெரியும், தெரியும், ஞாபகம் வந்து விட்டது... கடைசியில் எழுத்தாளன், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தன் கதைகளைப் புரிந்துகொள்கிற ஒருத்தன் வருவான்; அப்போது தானில்லாவிட்டாலென்ன, தன் கதைகளிருந்தால் போதும், என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறான்... இல்லையா?’

‘ஆமாம்’

‘சுவையான சிச்சுவேஷன்....’ என்று வேணு அக்கதையை நினைவு கூறுவது போலச் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ‘புதுமைப்பித்தன் பெரிய ஆள்...’ என்றான்.

‘ஹீ இஸ் எ ஜீனியஸ்.’

இட்டிலி வந்துவிட்டது. வேணுவின் பசிக்கு வேண்டியிருந்தது இட்டிலிதான். புதுமைப்பித்தன் அல்ல. ஆனால் வெறுமனே பரக்கப் பரக்க இட்டிலியைத் தின்ன முற்படுவது தன்னை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டும், என வேணு நினைத்தான். ராம் தன்னிடம் எதிர்பார்ப்பது இலக்கியக் கருத்துகள் அல்லது குறைந்த பட்சம் இலக்கிய வம்பு, நான் ஆர்ட்டிஸ்ட், அவன் ஸ்பான்சர், impresario, என் ஏஜெண்ட், என் புகழின் ரட்சகன், என் விசிறிகளின் பக்தியைக் குடம் குடமாக, குடலை குடலையாக, என் காலடியில் சமர்பிக்கும் பூசாரி; இந்த இட்டிலி, ஊத்தப்பம், ஜூஸ் எல்லாம் அவன் அடிக்கும் உடுக்கு. டகடும், டகடும், டகடும்! நான் இப்போது ஆடவேண்டும். அவனுக்குப் பிரத்தியட்சம் ஆக வேண்டும்.

அல்லது இது ஒரு சவாலாகவும் இருக்கலாம். எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்...

வேணு இட்டிலித் துண்டைச் சட்டினியுடன் சேர்த்துத் தின்றான். பேஷ்! பிரமாதமாயிருந்தது. இன்னொரு துண்டைச் சாம்பாருடன் சேர்த்து. அதுவும் ஃபஸ்ட் கிளாஸ். திருநெல்வேலி, தென்காசி முதலிய பிரதேசங்களிலெல்லாம் இட்டிலி இன்னமும் கூட நன்றாயிருக்கும். புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எந்தக் கதையிலும் எழுதவில்லை? ஆசாமிக்கு ஸ்வீட்தான் பிடிக்கும் போலிருக்கிறது. ‘அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும்....’

’வெறும் சூத்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வென்று விட முடியாது... ஓர் எழுத்தாளனாலும் கூட’ என்றான் வேணு.

‘புரியவில்லை’

‘நீ அந்தக் கதையைக் குறிப்பிட்டாயே, அதற்காகச் சொன்னேன். ‘எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன்’ என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்கு போஷாக்குத் தரமுடியுமா? இஸ் இட் பிராக்டிகல்? புதுமைப்பித்தன் தேவையேற்பட்டபோது சினிமாவுக்காக எழுதித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வந்தது, என்பதுதானே உண்மை? எழுத்தாளன் என்பது ஓர் உருவகம் மாத்திரம் அல்ல, வயிறும் வாயும் உள்ள ஒரு பிண்டமும் கூட. இந்தப் பிண்டம் ரசிகனுக்கு எதற்காக, அவனுக்குக் கதைதானே வேண்டும், என்கிற நயமான விரக்தியே அக்கதையில் வெளிப்படுகிறது. ‘சிற்பியின் நரகம்’ பிரச்னையின் ஒரு பக்கம் என்றால் இங்கே பார்ப்பது பிரசினையின் மறுபக்கத்தை. பாராட்டு கிடைத்தாலும் மனம் மகிழ்வதில்லை. அந்தப் பாராட்டின் பரிசுத்தத்தைப் பரிசீலிக்க முயல்கிறது. தோழமையைத் தேடுகிறது, அதே சமயத்தில் தோழமையைக் கண்டு மருளவும் செய்கிறது.’

‘ஃபன்டாஸ்டிக்!’ என்றான் ராம் - அவன் முகம் ஆர்வத்தில் ஜொலித்தது. என் ‘ஆட்டம்’ இவனுக்குப் போதையேற்றத் தொடங்கி விட்டது என்று வேணு நினைத்தான். தொடர்ந்து பேசினான். ‘புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுகென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’

‘அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தை தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.'

'ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?’

‘தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி... ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego... you know what I mean?'

’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். -

‘அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை... அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, .... கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்... என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்...’

‘கயிற்றரவு...’

‘கிளாசிக்!’

‘அப்புறம் அமானுஷியக் கதைகள்... காஞ்சனை மாதிரி... புராண நிகழ்ச்சிகள்... சாப விமோசனம் மாதிரி...’

‘தனித்தனிக் கட்டுரைதான் எழுதணும்’ என்று வேணு இட்லியை முடித்துத் தண்ணீர் குடித்தான். ‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும்தான் புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’

ஊத்தப்பமும் பூரியும் வந்துவிட்டன. ராமுவுக்குப் பூரி, வேணுவுக்கு ஊத்தப்பம். ஊத்தப்பமும் மிக ருசியாயிருந்தது. ராமின் தயவில் இன்று இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டிபன். ஒரு நாள் மனைவியை கூட்டிக் கொண்டு இங்கே வரவேண்டும். முடியுமோ என்னவோ? கணவனும் மனைவியும் பீச்சுகுப் போய் உட்கார்ந்திருப்பது பற்றிய ஒரு புதுமைப்பித்தன் கதை.... என்ன தலைப்பு அது, ஞாபகமில்லை... கணவன் வறட்டு அறிவுஜீவி, மனைவியுடன் எதையும் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறவன்... நானும் அந்தக் கணவனைப் போலத்தான் ஆகிக்கொண்டு வருகிறேனோ?

ராம் ஒரு வேளை அந்தக் கதையைப் படிக்காமலிருக்கலாம். அவ்வளவு பிரபலமான கதை இல்லை. எப்படியோ மனத்தில் தங்கிவிட்டிருக்கிறது... வேணு ராமிடம் அக் கதையைப் பற்றி பிரஸ்தாபித்தான்.

‘தெரியும். படிச்சிருக்கேன்’ என்றான் ராம். வேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபமாகக்கூட இருந்தது. இவனையெல்லாம் யார் புதுமைப்பித்தனைப் படிக்கச் சொல்கிறார்கள்? பிசினஸ்மேனாக லட்சணமாக ஸ்பேர்டைமில் விஸ்கியடித்துக் கொண்டு, பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் போய்க் கொண்டு இருக்க வேண்டியது தானே!

’ ‘இரண்டு உலகங்கள்’ என்பது தலைப்பு நீ சொல்ற கதைக்கு...’ என்றாம் ராம். ‘இதே தீமை, ‘நினைவுப் பாதை’ என்கிற கதையிலே இன்னமும் பவர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார்... மனைவியுடைய பாடை கிளம்பிண்டிருக்கு... கணவனுக்கு அதைப் பார்த்து மணப்பெண்ணாக அவள் நின்ற கோலம் நினைவுக்கு வர... தான் அவளை அறிந்து கொள்ளவேயில்லை என்று அப்பத்தான் உறைக்கிறது... அப்பா! மனத்தை உலுக்கும் ஒரு சிச்சுவேஷன்!’

இப்போது, இதைக் கேட்டதும் வேணுவுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. ஆமாம் இவன் ஷோ ஆஃப்தான் செய்கிறான். இலக்கியமும் இலக்கிய ரசனையும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்னுடைய ஒரே உடுப்பான இலக்கிய உடுப்பையும் தான் பறித்துக்கொண்டு என்னை அம்மணமாக்க முயலும் குரூர விளையாட்டு.

‘ஆமா, உன்னைப் போன்றவர்களுக்கு அது உலுக்கும் சிச்சுவேஷன்தான்’ என்றான் வேணு. இப்போது அவனுக்கும் ராமைப் பதிலுக்குக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. ‘அதாவது உன் மென்மையும், பெண்ணென்ற கவிதையைப் புரிந்து கொண்டுள்ள சூட்சுமமும் உலுக்கப்பட்டதாக நீ சொல்ல வருகிறாய்... இது உன் வர்க்கத்தைத்தான் காட்டுகிறது. மென்மை, ரசனை, இதெல்லாம் கூட ஒரு மட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் லக்ஸூரி, அப்பா! கணவன் வீட்டுக்கு வெளியிலும், மனைவி வீட்டுக்குள்ளேயும் ஒரே நுகத்தடியில் கட்டப்பட்ட இரு மாடுகளாக உழை உழையென்று உழைத்துக் கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போகிற மிடில் கிளாஸ் அவலத்தையே அக்கதை சித்தரிக்கிறது. கம்பேடிபிலிடி, அறிந்து கொள்ளுதல், இதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான்.’

ராமின் முகம் சிவந்தது. கோபமல்ல, வியப்புத்தான் அதில் அதிகம் தெரிந்தது. ‘இருக்கலாம்...’ என்றான். ‘நீ சொல்வது போல இருக்கலாம்... நீ ஏன் இப்படிப் பதற்றப்படுகிறாய்?’

‘பதற்றமில்லை ஓர் உண்மையைச் சொன்னேன்.’

ராம் பூரியை முடித்தான். வேணு ஊத்தப்பத்தை முடித்தான்.

‘காப்பி?’ என்றான் வெயிட்டர்.

ராம் வேணுவைப் பார்த்தான். வேணு தலையசைத்து ஆமோதித்தான். உடனே இரண்டு கப்கள் காப்பி என்று சொல்லிவிட்டு ராம் கண் சிமிட்டினான். ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று சிரித்தான்.

வேணுவும் வேறு வழியின்றிச் சிரித்து வைத்தான்.

‘புதுமைப்பித்தனுடைய கதைகளையெல்லாம் நானும் என் வைஃபுமாக ஒரு மாசமாகப் படித்துக் கொண்டு வருகிறோம்.... அதனாலே மனசிலே புதுமைப்பித்தனே ஓடிண்டிருக்கார்... தப்பா நினைச்சுக்காதே.’

‘படி, படி, நிறையப் படி.’

‘நான் இன்னொன்று சொல்கிறேன் - தயவு செய்து, இதுவும் என் கிளாஸ் மென்டாலிட்டியைக் காட்டுவதாக நினைக்காதே. வெறுமனே ஒரு எண்ணம்...’

‘சொல்லு’

‘புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது...’

’அப்ஸர்ட்’

’அவருடைய தம்பதியரைப் பற்றின கதைகள் எதிலேயும் மனைவி ஃபிகருக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை, கவனிச்சியோ?’

“ஸோ?’

‘ஆனால், குழந்தை பாத்திரமாக வருகிற கதைகளிலெல்லாம் ஒரு பெண்குழந்தை - புதுமைப்பித்தனுக்கும் பெண்தானே! - தவிர்க்க முடியாமல் இடம் பெறுகிறது. கதையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘சிற்றன்னை’, ‘மகாமசானம்’, ‘ஒரு நாள் கழிந்தது’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’, ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’... எனவே குழந்தை அவருடைய சப்கான்ஷியஸ்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட அளவு, மனைவி ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை என்றுதானே ஆகிறது.’

‘இதெல்லாம் ஸ்டுப்பிட் அனாலிசிஸ். ஒரு முடிவை மனத்தில் இருத்திக்கொண்டு, பிறகு அதற்கான சாட்சியங்களை நிறுவும் காரியம்...’

காப்பி வந்துவிட்டது.

‘இருக்கலாம்’ என்றான் ராம். ‘அதுதான் சொன்னேனே... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்பெகுலேடிங்.’

காப்பியில் சீனியைக் கலக்கும்போது சட்டென்று வேணுவுக்கு இரண்டு கதைகள்... மிகவும் பிரபலமான கதைகள்... நினைவுக்கு வந்தன. ‘வாட் அபௌட் காஞ்சனை?’ என்றான். ‘வாட் அபௌட் செல்லம்மாள்?’ - இக்கதைகளில் மனைவி ஃபிகர் நன்றாக அமைந்திருக்கிறதே!’

‘அக்ரீட். ஆனால் இக்கதைகளில் என்ன நடக்கிறது, அதை யோசித்துப் பார், காஞ்சனையில் பிசாசு மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்க்கிறது.. செல்லம்மாளிலோ, மனைவி ஒரு சீக்காளியாக்கப்பட்டு, சாகடிக்கப்படுகிறாள்....’

‘ஸோ?’

‘மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற எழுத்தாளனின் சப்கான்ஷியஸ் வேட்கையைத்தானே இது புலப்படுத்துகிறது?’

'How far fetched! உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.’

‘இருக்கலாம்’ என்று ராம் காப்பியை ஒரு வாய் உறிஞ்சினான். ‘ஆனால் கே. என். எஸ். அவருக்குமா பைத்தியம்?’

‘கே. என் . எஸ். ஸா!’ வேணு மலைத்துத்தான் போனான். ‘கே.என்.எஸ்ஸைப் பார்த்தியா?’

’எப்பவாவது மாசத்திலே ஒரு நாள், இரண்டு நாள் போவேன் அவர் வீட்டுப்பக்கம்’ என்றான் ராம் அலட்சியமாக. ‘பக்கத்திலேதானே! நான் இருப்பது டிஃபன்ஸ் காலனி, அவர் சவுத் எக்ஸ்டென்ஷன்.’

கே. என். எஸ்! வேண்வுக்குப் பேச்சே எழவில்லை. போன மாதம் கூடச் சென்னைக்கு வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். வேணுவுக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் கூடவே ஒரு கூச்சம், தன்னம்பிக்கையின்மை. அவருடைய இலக்கிய ஹோதா தன்னை அரவணைக்குமா, புறக்கணிக்குமா என்று புரியாமல், போகாமலே இருந்து விட்டான். ராம் அதிர்ஷ்டசாலி, அவன் எழுத்தாளன் இல்லை.

‘அவர் புதுமைப்பித்தனுடன் குளோஸா மூவ் பண்ணினவர் ஆச்சே! அவர் என்ன சொன்னார் தெரியுமா? There may be something in what you say, அப்படின்னார்.’ ராமின் முகத்தில் என்ன ஒரு கொக்கரிப்பு, வெற்றிப் பெருமிதம்!

வேணு இப்போது உண்மையிலேயே அம்மணமாகிப் போனான். ‘படவா!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான். காஞ்சனையில் வருகின்ற மோகினிப் பிசாசு இப்போது சட்டென்று இங்கே தோன்றி ராமின் கழுத்தை நெறித்துக் கொன்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அல்லது, ’செவ்வாய் தோஷ’த்தில் வருகிற ரத்தக் காட்டேரி...

மனத்தில் ஒரு பிளாக் அவுட். ரெஸ்டாரென்டிலிருந்து வெளியில் வரும்போதும் டாக்ஸியில் செல்லும் போதும் ராம் பேசிக் கொண்டு வந்த எதுவும் மனதில் பதியவில்லை. ஒரே சுயவெறுப்பு, சுய அனுதாபம் - சே! நான் ஒரு முட்டாள். நானும் இவனைப் போல பிசினஸ்மேனாகப் போயிருக்க வேண்டும். பணம்தான் முக்கியம். அது இருந்தால் பிற ஹோதாக்களும் படங்களும் தானாக ஏற்பட்டு விடும். இலக்கிய ரசிகன், எழுத்தாளன்...

ஆமாம், ராம் இனி கதைகளெழுதவும் கூடும். என் சாம்ராஜ்ஜியமென்று, அவனைப் போன்ற ஒட்டகங்கள் நுழைய முடியாத ‘ஊசித் துவாரமென்று’, நான் இருமாந்திருந்த இடத்தினுள்ளும் அவன் நுழைந்துவிடப் போகிறான். எனக்கென்று இனி எந்தக் கிரீடமும் மிச்சமில்லை.

வேணு வீட்டருகே மெயின் ரோடில் அவனை இறக்கிவிட்டு வைஃபை மிக விசாரித்ததாகச் சொல்லச் சொல்லிவிட்டு, ‘பை’ சொல்லிவிட்டு, ராம் சென்றான். வேணு அந்த இருளடர்ந்த திருவல்லிக்கேணிச் சந்தினுள் மாடுகளின் மீது தடுக்கி விழாமல் ஜாக்கிரதையாக நடந்து சென்று, தன் இரண்டு ரூம் அரண்மனைக்குள் நுழைந்தான். பிற்பகலில் பார்த்த ராமின் விசாலமான ஹோட்டல் அறை நினைவு வந்தது. எரிச்சலாக இருந்தது. அந்த அறையிலுள்ள அழகிய மஞ்சத்தில் படுத்தபடி, ராம் புதுமைப்பித்தனைப் படிப்பான். அவனுடைய வீட்டிலும் அத்தகைய படுக்கை இருக்கும். அவன், அவன் மனைவி, இருவருமே படுத்துக்கொண்டு புதுமைப்பித்தனைப் படிப்பார்கள்.

‘காப்பி வேணுமா?’ என்ற மனைவியின் விசாரணை எரிச்சலை அதிகமாக்கியது. ‘ப்ச்’ என்று சூள் கொட்டினான். அதற்கு என்ன அர்த்தமென்று புரியாமல் அவள் நின்று கொண்டே இருந்தாள். அவன் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு வேட்டியைத் தேடினான்... பட்டென்று மனத்தில் குமைந்து கொண்டிருந்த எரிச்சலெல்லாம் குப்பென்று வெடித்தது: ‘என் வேட்டியை எங்கே கொண்டு வச்சே?’

அவள் அமைதியாக அவன் அதுவரை தேடிக்கொண்டிருந்த இடத்திலிருந்தே வேட்டியை எடுத்துக் கொடுத்தாள். ‘காப்பி கலக்கட்டுமா?’ என்று மறுபடி விசாரித்தாள்.

‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!’ என்று அவன் மறுபடி வெடித்தான். இந்த இரண்டாவது வெடிப்புடன் கோபம் சட்டென்று வடிந்து போயிற்று. தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. தான் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் கணவனாக நடந்து கொள்வதாகப்பட்டது. தன் மன உளைச்சல்கள், ஏமாற்றங்களுக்குப் பரிகாரமாக மனைவியை அடித்து நொறுக்கும் கணவனின் பிம்பம்...

குழாயடியில் கால் அலம்புகையில் சட்டென்று புதுமைப்பித்தனின் இன்னொரு சிறுகதை நினைவு வந்தது... ஆபீஸில் எளிய குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவுமிருக்கிற கணவனைப் பற்றிய கதை.... ‘மண்ணாங்கட்டி’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன சடையர் வேண்டிக் கிடக்கிறது? ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துக்காக, தன் வர்க்கத்தினரைக் கோமாளிகளாக்குதல்... துரோகி! உனக்கு வேண்டியதுதான். சொஃபிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டித்தானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லைஃபைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை.

வேணு மனத்தில் இப்போது ஒரு சாந்தம். அதைப் பகிர்ந்து கொள்ள அவன் மனைவியைத் தேடிச் சென்றான்.

****

Thursday, 16 February 2017

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது {மலையாள பெண் கவிஞர் ரோஸ்மெரியின் கவிதை)

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது {மலையாள பெண் கவிஞர் ரோஸ்மெரியின் கவிதை)
நன்றி - இளங்கோ.
நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.
உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?
உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக... பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி (மலையாளம்)

Monday, 13 February 2017

13-quotes-about-love-that-only-haruki-murakami-couldve-written

Few writers capture the complexity of life and love as well as Haruki Murakami. Through his stories he shows us characters who desperately want love, characters who never think about love, characters who love someone who will never love them back, characters who don't know how to love, and characters who are loved but feel nothing about it.
Regardless of where you fall on Valentine's Day, or whether you relate specifically to any of Murakami's characters, his quotes on love are worth thinking about. Below are 13 of his finest quotes, of which at least one will cause you to pause for a moment.

1“If you can love someone with your whole heart, even one person, then there’s salvation in life. Even if you can’t get together with that person.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, 1Q84

2“Two people can sleep in the same bed and still be alone when they close their eyes."

3“Most everything you think you know about me is nothing more than memories.”

– Haruki Murakami, A Wild Sheep Chase

4“You can hide memories, but you can’t erase the history that produced them.”

SOURCE: GIPHY

5“Spend your money on the things money can buy. Spend your time on the things money can’t buy.”

– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

6“One heart is not connected to another through harmony alone. They are, instead, linked deeply through their wounds. Pain linked to pain, fragility to fragility. There is no silence without a cry of grief, no forgiveness without bloodshed, no acceptance without a passage through acute loss. That is what lies at the root of true harmony.”

7“Sometimes I get real lonely sleeping with you.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, A Wild Sheep Chase

8. “Sometimes I feel like a caretaker of a museum — a huge, empty museum where no one ever comes, and I’m watching over it for no one but myself.”

- Haruki Murakami, Pinball, 1973

9. “What happens when people open their hearts?” “They get better.”

– Haruki Murakami, Norwegian Wood

10. “But even so, every now and then I would feel a violent stab of loneliness. The very water I drink, the very air I breathe, would feel like long, sharp needles. The pages of a book in my hands would take on the threatening metallic gleam of razor blades. I could hear the roots of loneliness creeping through me when the world was hushed at four o’clock in the morning.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

11“Every one of us is losing something precious to us. Lost opportunities, lost possibilities, feelings we can never get back again. That’s part of what it means to be alive.”

– Haruki Murakami, Kafka on the Shore

12“Is it possible, in the final analysis, for one human being to achieve perfect understanding of another? We can invest enormous time and energy in serious efforts to know another person, but in the end, how close can we come to that person’s essence? We convince ourselves that we know the other person well, but do we really know anything important about anyone?”

– Haruki Murakami, The Wind-Up Bird Chronicle

13“If you remember me, then I don’t care if everyone else forgets.”

SOURCE: GIPHY
– Haruki Murakami, Kafka on the Shore

Friday, 3 February 2017

https://docs.google.com/document/d/1MpQHpPZJ4BmWTEBSFYJn4NCbAGhGOsWdCo83Y6TuItA/edit
“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்
சந்திப்பு : வெய்யில், தமிழ்மகன், பாலு சத்யாபடங்கள் : ப.சரவணகுமார்
86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச்சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிகமிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு... ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து... சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல... இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம். தன் நினைவு அடுக்குகளிலிருந்து தேடித்தேடிக் கோத்து சொற்களாக்கி வெகு நிதானமாகப் பேசுகிறார் அசோகமித்திரன்.

``உடம்புக்கு முடியாமப்போனதுக்கப்புறம் ஞாபகங்கள் எல்லாம் குறைஞ்சுபோயிடுத்து. இருபது முப்பது வருஷ நினைவுகள் இப்போ என்னிட்டயே இல்லை. பல விஷயங்களை நினைவுபடுத்தவும் கஷ்டமா இருக்கு. இப்போ முதுகுத்தண்டும் பிரச்னை கொடுத்துட்டது. அப்பப்போ எந்திரிக்க முடியலை. உப்பு சத்து உடம்புல ரொம்ப குறைஞ்சுபோச்சு. எதுவுமே நினைவுல சரியா நிக்கறதில்லை.’’

“மறந்துபோனவற்றில் இருந்து எதையேனும் நினைவுபடுத்த முயல்கிறீர்களா?”

“இல்லை... ஸ்ட்ரெய்ன் பண்ண முடியலை. அப்படி முக்கியத்துவமான நினைவுகளும் என் கடந்த கால வாழ்க்கையில இல்லையே!”

``இரவில் கனவுகள் வருகின்றனவா?’’

``ஒன்பதரை மணிக்குப் படுத்துடுவேன். மாத்திரை சாப்பிடுறதுனால, தூக்கம் வந்திரும். ஆனா, காலை வரைக்கும் தூங்க முடியாது. ரெண்டரை மணிக்கு விழிப்பு வந்துடுறது. அதுக்கப்புறமான இடைப்பட்ட நேரத்தில கனவுகள் வருது. மனசுக்குக் கஷ்டம் தர்ற... அவதி தர்ற... கனவுகளாக வருது.”

“எப்படியான கனவுகள்?”

“அந்தக் காட்சிகளை வெளக்கிச் சொல்ல முடியலை. ஆனா, அந்த மொத்தக் கனவையும் ஒரு உணர்வா சொல்லணும்னா, ரொம்பக்  கஷ்டப்படுத்துகிற கனவுகள். ‘திறந்திருக்கிற கதவைச் சாத்தணும்னு தோணும். ஆனா, எழுந்திருக்க முடியாது. அந்த மாதிரி கனவுகள் அதிகமா வரும்.

அந்த ஜோடிப் பறவைகளைப் பத்தி சொன்னேன்ல... நான் இந்த ரூம்ல ஃபேன் பயன்படுத்தறது இல்ல. எங்கே ஜன்னல் திறந்திருந்து, பறவைங்க உள்ளே வந்து ஃபேன்ல அடிபட்ருமோனு ஒரு பயம். இதெல்லாம் சேர்ந்து, மனசை சங்கடப்படுத்தும்படியான கனவுகள் நிறைய வருது.’’
``இதுவரை எழுதிய உங்களது படைப்புகள் குறித்து நிறைவாக உணர்கிறீர்களா?’’

``இல்லை. பலர் என் படைப்பை வாசிக்கறது சந்தோஷம்தான். ஆனா, அதுக்காக எதையோ பெருசா சாதிச்சிட்டதா நான் நினைக்கலை. அப்படி பெருசா ஒண்ணும் சொல்றதுக்கில்லை.’’

``உங்களுடைய எழுத்துகளை ‘அதிகம் அதிர்ந்து பேசாதவை’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லி இருக்கிறார்். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’

``வேண்டாமே... அதிர்வு எதுக்கு? யாருடைய எழுத்தும் இப்படித்தான் இருக்கணும்னு கிடையாதே. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்துக்கான  பொதுக்குணமா ஒன்றைக் குறிப்பிடுவாங்க. அது காலத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும். அதேசமயம், அதிகமா இல்லேன்னாலும் அதிர்ந்து பேசுற விஷயங்கள் என்னோட எழுத்திலயும் இருக்கத்தான் செய்யுது.’’
``உங்களுடைய புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’’

``நானே கதாநாயகனாகவா?”  

``ஆமாம். அல்லது ஒரு பாத்திரமாகவேணும்...’’

``என் வாழ்க்கை சார்ந்து, என் குடும்பம் சார்ந்து, நிறைய விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். என் சகோதர, சகோதரிகளோட வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் புனைவா எழுதி இருக்கேன். ஆனா, ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டா, போதும்னு நினைக்கிறேன்.’’

``உங்கள் கதைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். அதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?”

``எனக்குத் தெரியலை. அந்தந்த இடங்களில் உண்மையைச் சொல்றேன் (சிரிக்கிறார்). ஒரு பெரிய அரங்கம்; நிறையக் கூட்டம்... ஏராளமான கலைஞர்கள். அந்தக் கூட்டத்துக்கு இளையபாரதி இரண்டு புத்தக வெளியீடுனு சொல்லி என்னைக் கூப்பிட்டிருந்தார். ஆனா, உண்மையில அது வேறொரு கூட்டம். நிறையப் பேர் வந்திருந்தாங்க. புத்தக வெளியீட்டுக்கா இவ்வளவு கூட்டம்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். கலைஞர் வந்திருந்தார். கூட இருந்தவங்க எல்லாரும் எழுந்துபோய் கலைஞரோட கையைப் பிடிச்சு, வணக்கம் சொல்லி,  கால்ல விழுந்து  என்னென்னமோ  பண்ணினாங்க. எனக்கு அப்படிச் செய்ய முடியலை. அதெல்லாம்கூட எனக்குப் பிரச்னையா இல்ல. அந்த ஹால்ல ஏர்கண்டிஷன் ஓடுது. பக்கத்துலயே ஒரு ஃபேனும் ஓடுது. குளிர் நடுக்குது. தாங்க முடியலை. எனக்குப் பொன்னாடை போர்த்தினாங்க.  `அப்பாடா... சரியான நேரத்துல போர்த்தினீங்க. இந்த இடத்துல இந்தப் பொன்னாடை ரொம்பத் தேவையா இருக்கு’னு சொன்னேன். பல சமயங்களில் உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு.’’
“கவிதைகள் ஏன் உங்களுக்குப் பிடிப்பது இல்லை?’’

``அப்படியெல்லாம் இல்லை. நான் வாசிச்ச பல கவிதைகளில் அலட்சியமா எழுதப்பட்ட மாதிரியான ஒரு தொனி, தோற்றம் இருக்கு. எல்லாரையும் அப்படி எழுதுறாங்கன்னு சொல்லலை. சிலபேருக்கு சில விஷயங்கள் பிடிக்கும்; சிலபேருக்குப் பிடிக்காது. `உனக்கு ஏன் அது பிடிக்கலை?’னு கேட்கக் கூடாது இல்லையா? எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே  கவிதைகள் மேல ஈடுபாடு இல்லை.’’

``பாரதியை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்களே...?’’

``பாரதியோட சில வரிகள் எனக்குப் பிடிக்கும். நல்ல உழைப்பு, அசாத்தியமான சிந்தனை எல்லாம் அவர்கிட்ட இருந்தது. கண்ணம்மா பாடல்கள், கண்ணன் பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல்கள்ல ஒரு ஒழுங்கு இருந்தது. அதையெல்லாம் இப்போ இருக்கற கவிதைகள்ல எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தன் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். ஆரம்பத்துல அவரோட கவிதைகள்ல வர்ற ஐடியாக்களுக்காக, (அரசாங்கக் கட்டடத்தில் முதல் தூக்கம் போட்ட நாள்) போஷிச்சிருக்கேன். அப்புறம், `அன்று வேறு கிழமை’ நல்லா இருந்தது. அதுக்கு மேல எனக்கு அவர் கவிதைகள் மேல ஒண்ணும் தோணலை.”
``இசை கேட்பது உண்டா?’’

``ஒரு காலத்துல நானே பஜன் பாடல்கள் எல்லாம் பாடிட்டிருந்தேன். இப்போ விட்டுப்போயிடுத்து. இசையில நாட்டம் உண்டு. ஆனா, இசை கேட்பதற்கு அதுக்கான சூழலும் வசதியும் வேணுமே. கிராமபோன் வந்தப்போ, அது எங்ககிட்ட இருந்தது. சில ரெக்கார்ட்ஸும்கூட இருந்தது. இப்ப ரேடியோ வெச்சிருக்கேன். அதோ இருக்கு பாருங்க...” (மேசையில் இருக்கும் ஒரு சிறிய ரேடியோவைக் காட்டுகிறார்.)

``இப்போவும் கையால்தான் எழுதுகிறீர்களா?’’

``நான்கைந்து வருஷமா கம்ப்யூட்டர்ல எழுதறேன். யூனிகோட்ல எழுதறதுக்குச் சொல்லிக்குடுத்திருக்காங்க. கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனா, திருத்தவும் எடிட் பண்ணவும் இது ரொம்ப வசதியா இருக்கு.’’
``இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?’’

``பாசிபிளிட்டீஸ்! ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை யோசிப்பேன். குறிப்புகள் எழுதிவைக்கறதும் உண்டு. வாழ்க்கையில பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்னு நினைக்கிறேன். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு சுபாவங்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு சூழல்கள்... அதையெல்லாம் மாற்றிப் போட்டு இவருக்கு இந்த சூழ்நிலையில இப்படி நடந்தா என்னாகும்னு யோசிக்கறதுலதான் கதை உருவாகுது. பாசிபிளிட்டீஸ் இருக்கிறவரை கதைகள் இருக்கும். எழுதிக்கிட்டே இருக்கலாம்.’’

``சிறுகதை வடிவம் காலாவதி ஆகிவிட்டதா. இனி, புதிய வடிவத்துக்குத்தான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?’’

``இல்லை. ஏற்றுக்கொள்ள முடியாது. அதுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கும். ஆனா, ரொம்பப் பெரிய இடம் இருக்கும்னு சொல்ல முடியாது. முன்பு, சிறுகதைகளுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட்டன. பி.எஸ்.ராமையா, அவரோட `மணிக்கொடி’யில சிறுகதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு  இதழில் நான்கைந்து கதைகள் வரும். ஆனால், இப்போ ஆனந்த விகடன்லயே வாரம் ஒரு கதைதான் வெளியிடுறாங்க. அப்போ, வருஷத்துக்கு அதுல 52 கதைகளைத்தானே எழுத முடியும்? இலக்கியத்தின் எந்த வடிவத்தையும்... கவிதை வடிவத்தையும்கூட, காலாவதியாகி விட்டதுனு சொல்ல முடியாது.’’

``தமிழ்ச் சிறுகதை, நாவல் உலகில், அந்த வடிவங்களைக் கௌரவம் செய்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?’’


``கு.ப.ரா-வைச் சொல்லலாம். ரொம்பக் குறைவாத்தான் எழுதினார். ஆனால்,  ரொம்ப மகத்தான சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கார். அப்புறம் புதுமைப்பித்தன். அவர் எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சுட்டுதான் நான் எழுதவே வந்தேன். அதை அவர்தான் எழுதினார்னும் அப்போ எனக்குத் தெரியாது. தலைப்பு நினைவில் இல்லை. சாமியாரான ஒருத்தன் அவன் ஏன் உண்மையில் சாமியாரா இல்லை என்பதை நுட்பமாகப் புலப்படுத்தும் கதை. அப்போ வந்த, `கலைமகள்’ல கு.ப.ரா.,

க.நா.சு., பிச்சமூர்த்தி எல்லாம் தொடர்ந்து எழுதினாங்க. கி.வா.ஜ அதன் ஆசிரியராக இருந்தார். புதுமைப்பித்தன் எழுதின `காஞ்சனை’ கதையை யார் யாரோ வெளியிட்டிருக்காங்க. ஆனா, `கலைமகள்’ வெளியிட்ட `காஞ்சனை’ அவ்வளவு சுத்தமா இருக்கும். அதுக்குக் காரணம், கி.வா.ஜகந்நாதன்தான்.’’

``கு.ப.ரா., புதுமைப்பித்தன் சொன்னீர்கள். அதற்குப் பிறகான காலகட்டத்தில், உங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக யாரைச் சொல்வீர்கள்?’’

``சா.கந்தசாமி ஒரு விசேஷமான எழுத்தாளர். அவர் எந்தப் பின்புலமும் இல்லாமல் இலக்கியத்துக்குள் வந்தவர். நானாவது கல்லூரிக்கெல்லாம் போயிருக்கேன். உலக இலக்கியத்துல பரிச்சயம் உண்டு. ஜி.நாகராஜன் மாதிரியான எழுத்தாள நண்பர்களும் எனக்கு உண்டு. ஆனா, சா.கந்தசாமிக்கு அப்படியெல்லாம் கிடையாது. சுயமாகவே எழுதினார். திறமையான வேற சிலரும் இருக்காங்க...’’ (மௌனமாகிறார்).

“இன்றைக்கு எழுதுகிறவர்களில்?’’

“இன்றைக்கு எல்லாருமே நல்லா எழுதுகிறாங்க. General Proficiency அதிகமாகிடுச்சி. எந்தப் பத்திரிகையையும் எடுத்துப் பாருங்க... ரொம்ப நல்லா எழுதுறாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்லகூட நிறைய நல்ல கதைகள் வெளியாகுது.  எல்லா கதைகளும் தீவிரமான புனைவுகளைப்போல  நம்மை வேற ஒரு உலகத்துக்கு, அனுபவத்துக்கு அழைச்சுட்டுப் போகிறதான்னு நீங்க கேட்கலாம். ஆனா, படிக்கிற அரை மணி நேரத்துக்கு நல்ல பொழுதுபோக்கா இருக்கிறதே. எனக்குப் பிடிச்சிருக்கு. இன்னிக்கு பத்திரிகைகள்ல வர்ற `ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற பகுதிகள்கூட சென்சிபிளாவும் ரொம்ப புத்திசாலித்தனமாவும் இருக்கு.’’
``பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்?’’

``ஆர்.சூடாமணி... இப்போகூட அவங்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்தாங்க. ரொம்ப நல்ல குணம் அவங்களுக்கு.  குமுதினினு ஒரு எழுத்தாளர் இருந்தாங்க. அவங்களுக்குக் காது கேட்காது. அவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலயும் எழுதினாங்க. தாகூரின் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்காங்க. முன்பைவிட இப்போ நிறையபேர் எழுதறாங்க... சல்மா, தமயந்தியெல்லாம் நல்லா எழுதுறாங்க. விமர்சனமும் இருக்கு. ஆனா, இப்போ யாரையும் விமர்சிக்கிற மனநிலையில நான் இல்லை.”

“போரும் அமைதியும், கரமசோவ் பிரதர்ஸ் போன்ற அளவில் பெரிய அதே சமயம் க்ளாசிக் தன்மையுடைய தமிழ் நாவல்கள் பற்றி...?”

“மகா நாவல்கள்னு சிறப்பிக்கப்படுற எல்லா படைப்புகளையும் இப்போ மறுபரிசீலனை செய்யணும். அது அவசியம்னு  நினைக்கிறேன். என் வரையில் இந்த மகா நாவல்களோட சிகரம்னு கருதப்படுற ‘போரும் அமைதியும்’ எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த மகா நாவல்கள்லாம் அந்தக் காலகட்டத்தோட பிரசுரத் தேவையால உருவாக்கப் பட்டவையோனு சந்தேகப்படுறதுண்டு.  `போரும் அமைதியும்’ மூலநூல் ஆசிரியராலேயே பலமுறை திருத்தப்பட்டது. அது மட்டுமில்லாம உள்ளே ரெண்டு பின்னுரைகளை வேறு கொடுத்திருக்காங்க. எந்தப் படைப்பிலக்கியமும் என்னைப் பொறுத்தவரை முன்னுரை, பின்னுரை இல்லாம, அதன் அளவிலேயே அது சிறந்து விளங்கணும்னு சொல்வேன்.

தமிழிலும் மகா நாவல்கள் எழுதப்பட்டிருக்கு. சுந்தர ராமசாமியின், ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின், `பின் தொடரும் நிழலின் குரல்’, அவர் இப்போ எழுதிட்டு வர்ற மகாபாரதத் தொடர் நாவல்கள், பூமணியின் `அஞ்ஞாடி’ இதெல்லாம் என் நினைவுக்கு வருது. இன்னும் பல இருக்கலாம். புனைகதைங்கிறது மகிழ்ச்சிக்காகப் படிக்கப்படுறது. படிக்கிறதுக்கே அதிக உழைப்பு தேவைப்படுறபோது, எழுத்தாளனோட இலக்கு பற்றி சந்தேகம் வருது. ஜோ டி குரூஸின் ரெண்டு படைப்புகளும் (ஆழிசூழ் உலகு, கொற்கை) மகா நாவல்கள்தான். பல நாட்கள் உழைத்துத்தான் அதைப் படிக்க முடிஞ்சது. இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்தவைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன். இதையே எல்லாரும் ஏத்துக்கணும்னு நான் வற்புறுத்த மாட்டேன். வாசிப்புங்கிறது முழுச் சுதந்திரத்தோட நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்.”

“சிறுகதை, குறுநாவல், நாவல் இவற்றுக்கு உங்களது இலக்கணம் என்ன?”

“கறாரா இதை வரையறுக்க முடியாது. இதில நமக்கு சமரசப் பார்வை தேவை. சிலர் தங்களோட ஒரு சிறுகதைக்கு பல ஆயிரம் சொற்களை எடுத்துக்கிறாங்க. சிலர் சில நூறு சொற்களை எடுத்துக்கிறாங்க. பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள்னு ஓரளவுக்கு மேல் விரிஞ்சிட்டுப் போகிற கதைகளை சிறுகதையிலிருந்து குறுநாவல், நாவல்னு பிரிக்கலாம்.

தமிழ் உரைநடையில படைப்பிலக்கியம் உருவானதே ரொம்பத் தாமதமாத்தானே.  முதல் தலைமுறைக் கதாசிரியர்களுக்கு அவங்களோட வாசகர்கள் யார்னே  தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. அவங்க எழுதின நூல்களை அவங்களோட வாரிசுகள் பள்ளிப் பாடப் புத்தகமா மாத்துறதை விரும்பினாங்க. கேட்க ஆச்சர்யமா இருக்கலாம். `பிரதாப முதலியார் சரித்திரம்’ ‘கமலாம்பாள் சரித்திரம்’ ரெண்டாவது மூணாவது பதிப்பிலேயே பாட நூல்களா திருத்தப்பட்டுருச்சு.”

“ஒரு படைப்பு அந்தப் படைப்பாளியின் உரிமையின்றித் திருத்தப்படலாமா?”

“இப்பல்லாம் பலர் இணையத்தில அவங்க நினைக்கிறதையெல்லாம்  எழுதிடுறாங்க. ‘எடிட்டிங்’கிற விஷயத்தை இந்தத் தலைமுறை கத்துக்கணும். ஒரு கதையில பத்திரிகையாசிரியர் செய்ற சிறுசிறு திருத்தங்களை நாம அனுமதிக்கணும். எழுத்தாளர்கள் தங்களோட எழுத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிற விஷயமா இதைப் பாக்கக் கூடாது.  எந்தப் படைப்பானாலும், அது ஒரு நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படுவது நல்லது. செய்தி, கருத்து, கிண்டல், கவிதை, படைப்பிலக்கியம்னு மிகச் சிறப்பா வெளியிடுறதுல புகழ் பெற்றது ‘நியூயார்க்கர்’ வாரப் பத்திரிகை. அந்தப் பத்திரிகையைத் தோற்றுவித்த ஹரால்ட்ராஸ் ஒருமுறை சொன்னார்... `யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.”

``இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’

```சாந்தோம் அவார்டு’னு ஒண்ணு கிடைச்சது. இதுல பணம், காசெல்லாம் ஒண்ணும் கிடையாது. என் படைப்புகளை மதிப்பீடு செஞ்சு ஒரு கேடயம் குடுத்தாங்க. அதை முக்கியமான அங்கீகாரமா நான் நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு  டைரக்டரா சுந்தர்ராஜன்னு ஒருத்தர் இருந்தார். அவர் ஜெனீவா போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறமா அந்த விருது வழங்கப்படுறதில்லை. நகுலன், சி.மணி,

க.நா.சு-வுக்கெல்லாம் இந்த விருது கொடுத்தாங்க. இதுல சுவாரஸ்யம் என்னன்னா, ஒரு திரைப்படத்துக்கும்கூட இந்த விருது கொடுத்தாங்க... ரஜினிகாந்த் நடிச்ச படம்... அதுலகூட ஒரு பாட்டு வருமே... `சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...’னு(நினைவுபடுத்திக்கொள்கிறார்) ராஜா சின்ன ரோஜா... அந்தப் படத்துக்கும் பரிசு கொடுத்தாங்க (சிரிக்கிறார்).’’

``நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில், உங்களுக்குப் போட்டியாக யாரையாவது நினைத்தது உண்டா?’’

``போட்டினு யாரையும் நெனைச்சது  கிடையாது. நண்பர்கள் நிறைய கிடைச்சாங்க. வா.மு.சேதுராமன் அப்படிக் கிடைச்சவர்தான். அவரோட சகோதரர் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டிருந்தார். அவருக்கு என் படைப்புகள்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர்தான் ஆரம்பத்தில் என் புத்தகங்களை அச்சிடத் தேவையான உதவிகளைச் செய்தார். அவரோட உதவியால்தான் `வாழ்விலே ஒருமுறை’ நூல் வெளியாச்சு. அதுக்குக் கொஞ்சம் வரவேற்பு கிடைச்சது. புத்தகம் வித்துடுச்சு. அதைவெச்சு `இன்னும் சில நாட்கள்’ புத்தகம் வந்தது. அப்புறம், ஆங்கிலத்துல நிறைய வர ஆரம்பிச்சுது. ஆங்கிலத்துல எழுதும்போது, ரெமுனரேஷனும் ஜாஸ்தி. அப்போ நான் ஜெமினியில பார்த்த வேலையை விட்டிருந்த நேரம். கொஞ்சம் மனசு வேதனையோடதான் விட்டேன். அப்போ ஆங்கிலத்துல எழுதறது கொஞ்சம் கை கொடுத்தது.

எனக்கும் ஜி.நாகராஜனுக்குமான நட்புக்கு `நியூயார்க்கர்’ பத்திரிகையும் ஒரு காரணம். ஒரு சமயம், `நியூயார்க்கர்’ல எனக்கு ஒரு கதை வந்துட்டா போதும்’னார். `அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க்கர்ல உங்க கதை வரணும்கிறீங்க... நீங்க இடதுசாரியாச்சே!’ன்னேன். `இடதுசாரியா இருந்தா என்ன... பத்திரிகையை நல்லா நடத்துறாங்க’ன்னார். `நான் வருஷத்துக்கு ஒரு கதை அனுப்பறேன்’னு சொன்னேன். `நானும் அனுப்பறேன்’னு அவர் சொன்னார். இப்படி எங்க நட்பு வளர்ந்தது. அவர் எனக்காக, `கணையாழி’யில எல்லாம் எழுதியிருக்கார். இந்த மாதிரி நட்புதான் உண்டே தவிர, போட்டினு யாரையும் நினைச்சது இல்லே.’’
``நீங்கள் ஏன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில்  எழுதவில்லை?’’

``இல்லையே... ஆங்கிலத்துல நிறைய எழுதியிருக்கேனே.  இதுவரை பத்துப் புத்தகம் வந்திருக்கு. தொகுக்கப்படாம நூத்துக்கும் மேலான கட்டுரைங்க இருக்கு. எக்ஸ்பிரஸ்ல, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை `ரைட்டர்ஸ் நோட்’னு ஒண்ணு போடுவாங்க. அதுல நிறைய எழுதியிருக்கேன். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மேன், நேஷனல் ஹெரால்டு, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லினு நிறைய  எழுதியிருக்கேன்.”

“நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இஸங்கள் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்ளவில்லையே?”   

“இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்ச பிறகு, ஐரோப்பிய நாடுகள் சிதைஞ்சு போயிருந்துச்சு. கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்குற முயற்சியில சில இலக்கியக் கொள்கைகளை உருவாக்குனாங்க.  எனக்குத் தெரிஞ்சு அறுபது, எழுபதுகள்ல ‘ஆலன் ரோப் கிரியே’ங்கிற எழுத்தாளர் திரும்பத் திரும்ப உதாரணமாகச் சொல்லப்பட்டார். அவருடைய நாவல்களையெல்லாம் சினிமாவாக்கூட எடுத்தாங்க.

என்வரையில பின்நவீனத்துவ நூல்களைப் பத்தி முக்கியமான அறிமுகங்கள் இல்லை. நிறைய பாலியல் சலுகைகள் எடுத்துக்கிட்டு எழுதப்பட்ட படைப்புகள் பின்நவீனத்தோட சேர்க்கப்படுது. நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு கால வரிசைப்படி எடுத்துக்கிட்டா,  பல நவீனப் படைப்புகளைக் காட்டிலும் உயர்ந்த படைப்புகள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டிருக்கு. இதுக்கு மேல விரிவா ஆய்வாளர்கள்தான் பேசணும்.”


``சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் குறித்து...’’

``நான் குறை சொல்லப்போறதில்லை. வருஷாவருஷம் சாகித்ய அகாடமியில மொழிக்கு ஒரு ஆள்வீதம், 24 பேருக்கு விருது கொடுத்துடுறாங்க. ஆனா, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு இந்த எண்ணிக்கை போதாது. ஞானபீட விருது வடநாட்டுக்காரங்க கொடுக்கிறது. விருதுனு யோசிச்ச உடனே அவங்க கண்ணுக்கு அங்க உள்ள வயசான முகங்கள்தான் முதல்ல நினைவுக்கு வரும். அதையெல்லாம் தாண்டி எப்பவாவது தென்னிந்தியப் பக்கம் வர்றது உண்டு. அதனால, யாரையும் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. கிடைச்சா சரி, கிடைக்கலைன்னாலும் அதுக்காக வருத்தப்படக் கூடாது. நான் வருத்தப் பட்டதில்லை.

உரைநடைக்காரர்களுக்காவது  எப்படியோ அங்கீகாரம் கிடைச்சிடுது. இந்த கவிஞர்கள் பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அவங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கிறதில்லை. ஒருவகையில் விருதுகள் என்கிறதே லாட்டரி மாதிரிதான். லிஸ்ட்ல தகுதியான பத்துப் பேரு இருப்பாங்க. ஆனா, பத்துப் பேருக்கும் கொடுக்க முடியாதே. யாராவது சொல்லலாம், `நீ வாங்கிட்டே... அதனால குறை சொல்லாம இருக்கலாம்’னு. நான் அந்த விருதை வாங்காதப்பவும் குறை சொல்லலை. வந்தப்பவும் அதைப் பெருசா நினைக்கலை.’’

``ஒரு சமூகத்துக்குக் கற்பனை எவ்வளவு அவசியம்?’’

``எந்தச் சமூகத்துக்கும் ரொம்பவே அவசியம். கற்பனை இருந்தாதான், நாம எதைப் பத்தியும் திட்டமிட முடியும். சராசரி ஆட்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ மட்டுமில்ல... ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும்கூட  கற்பனை தேவைப்படுது. தண்ணீர்ப் பற்றாக்குறையில, வாரத்துக்கு ரெண்டு முறைதான் மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுது... அதை எப்படிச் சமாளிக்கலாம்னு ஓர் அதிகாரி யோசிச்சார்னா, அதைத் திட்டமிடுறதுக்குக் கற்பனை தேவை. கற்பனை என்பது ஏதோ கதை சொல்றவங்களுக்கு மட்டுமான சமாசாரம் கிடையாது.’’

“சமீபத்தில் தாங்கள் எழுதிய ‘ஆகாகான் மாளிகை’ நாடகம் காந்தியின் மீது ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்கிறதே?”  

“காந்தி மட்டுமில்லை, உலகத்துல எவ்வளவு பெரிய மனுஷங்களா இருந்தாலும், அவங்களோட வரலாற்றை, தத்துவத்தை , பங்களிப்பை மறுபரிசீலனை செய்யணும்னுதான் சொல்வேன். காந்தி, நேரு போன்றவங்களே சில தவறுகளைச் செஞ்சிருக்காங்க. ஒரு காலத்தில மகா மனிதர்களா தோற்றமளிச்சவங்களே, இன்னிக்குப் பல தவறுகள் செஞ்சவங்களா விமர்சிக்கப்படுறதைத்தான் நாம அன்றாடம் பாக்குறோமே!

பலகோடி மக்களோட நலனை தனது முதன்மையான அக்கறையாக நெனைச்ச காந்தி, அவரோட குடும்பத்துக்கிட்ட அந்த அக்கறையைக் காட்டலை. ஆகாகான் மாளிகையில நிமோனியா நோயில் படுத்திருக்கிறாங்க கஸ்தூரிபா. அப்போதான் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்துச்சு. அதை, கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கலாம்னு  தேவதாஸ் காந்தி ஏற்பாடு செய்றார். ஆனா, காந்தி மறுத்துடுறாரு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் விரும்பிய இங்கிலாந்துக் கல்வியை காந்தி தடுத்துடுறார். விளைவு, தந்தைக்கும் மகனுக்கும் கடைசி வரைக்கும் பகை. இதுல வினோதம் என்னன்னா, காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே வருஷத்துல ஹரிலாலும் இறந்துபோயிட்டார்.”

``எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?’’

``சில பேர் சொல்றாங்க, `இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க... இதெல்லாம்தான் சவாலா இருக்கு.’’
``ஏதாவது சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறீர்களா?’’

``ஃபேஸ்புக் பார்க்கறதுண்டு. நான் இப்போ இருக்கறது ஒரு மகன் வீட்டில். இன்னொரு மகன், வேளச்சேரியில இருக்கார். மற்றொரு மகன் பாம்பேயில இருக்கார். உறவுக்காரங்களோட தகவல் பரிமாறிக்க, பிறந்த நாட்கள்ல வாழ்த்து சொல்ல ரொம்ப உதவியா இருக்கு.  ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்ல பெரிய ஈடுபாடு வரல.’’

``அன்றாடச் செய்திகளை அப்டேட் செய்துகொள்கிறீர்களா? தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?’’

``சாயங்காலத்தில டி.வி. செய்திகள தவறாமப் பார்த்திடுவேன். ரேடியோ செய்திகளை மிஸ் பண்ணிடாமக் கேட்பேன். பத்து நிமிஷத்தில அன்றைய நாளோட மொத்த நடப்புகளையும் சுருக்கிச் சொல்லிடுறாங்கல்ல. அப்புறம், கிரிக்கெட்டும் விரும்பிப் பார்க்கிறதுண்டு.”

``விவசாயம் நசிந்து மக்கள் சென்னைக்கு வந்து குவிகிறார்கள். நீங்கள் பார்த்த அந்த நாள் சென்னைக்கும் இப்போதைய சென்னைக்கும் வித்தியாசம் எப்படி இருக்கிறது?’’

``அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கு. இதைத் தவிர்க்க முடியாது. இந்த மாற்றத்தை மறுக்க முடியாது. நீங்க சொல்றீங்க, விவசாயம் இல்லாமப் போயிட்டுதுன்னு. விவசாயம்லாம் இருக்கு. அப்போ விவசாயம் செய்யறதுக்கு 100 பேர் தேவைன்னா, இன்னிக்கி நாலைஞ்சு பேரைவெச்சு செஞ்சுடலாம். விவசாய முறை மாறிடுச்சு.’’

``ஆனா, விவசாயிகளோட நிலை மாறவே இல்லையே. சமீபத்துலகூட பலர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே..?’’

``அது ரொம்ப ரொம்ப வருத்தப்படக்கூடிய விஷயம்தான். கொஞ்சமா சொந்தநிலம், சிலருக்கு அதுவும் கிடையாது. பாசனத்துக்கு தண்ணிப் பிரச்னை, வங்கிக் கடன்னு சமாளிக்கிறது கஷ்டம்தான். ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.’’
``உங்களை வாழ்க்கை முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும் கேள்வி ஏதேனும் இருக்கா?’’

``அப்படிப்பட்ட ஒரு பெரிய சிந்தனையாளன் இல்லப்பா நான். சில சூழ்நிலைகளை, சில நபர்களை மாத்திப்போட்டுக் கதை எழுதறதைத் தவிர, பெருசா ஒண்ணும் நான் சிந்திச்சிடலை. நம்ம வரைக்கும் நாம சரியா இருக்கணும். ஒவ்வொருத்தருக்குமே அவங்கவங்களுக்கான சமூகப் பொறுப்பு, தனிமனிதப் பொறுப்பு இருக்கு. பிறர் மனம் வருந்தற மாதிரி எதுவும் செஞ்சுடக் கூடாது... அது ஒண்ணுதான் எனக்குத் தோணிக்கிட்டே இருக்கிற விஷயம். எண்பத்தஞ்சு வயசுல என்ன பெரிய உறுத்தல் இருக்கப்போகுது எனக்கு?”

``படைப்பு அரசியல் என்று எதையாவது உங்கள் எழுத்தில் வைத்திருக்கிறீர்களா?’’

``அரசியலா? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தேவையும் இல்லைனு நினைக்கிறேன்.’’

``உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’

``பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’

``சமீபத்தில் என்ன சினிமா பார்த்தீர்கள்?’’

``சமீபத்தில் இல்லை. கடைசியாக நானும் என் மகனுமாக `ஜுராசிக் பார்க்’ பார்த்தோம். அப்போ சத்யம் தியேட்டர் வேற மாதிரி இருந்தது. இப்போ எல்லாம் மாறிப்போச்சு. எனக்கு இந்த `கபாலி’ படத்தை  முழுசா பார்த்துடணும்னு ஒரு ஆசை. அதுல ரஜினிகாந்த் கையில ஒரு புஸ்தகம் (My Father Balaiah) வெச்சிருப்பார். நான் அந்தப் புத்தகம் பத்தி எழுதியிருக்கேன். ரொம்ப நல்ல புத்தகம் அது.’’


``முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’’

``நடக்க முடியலை. தூங்க முடியலை. தொடர்ந்து உட்கார முடியலை. இதுதானே முதுமை?’’

``முதுமைப் பருவத்துக்கு என்று ஏதாவது ஒரு சௌகரியம், அல்லது நல்ல விஷயம் இருக்கா?’’

``அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.’’

``கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’’

``எனக்கு சில சாமியார்களோட நல்ல பழக்கம் உண்டு. இந்த யோகம்... ஹடயோகம், ராஜயோகம்னு எதை எடுத்துக்கிட்டாலும், அதற்குண்டான கடவுளை நம்பிப் போகலாம் என்கிற நிலை இருக்கு. ஆனா, ரொம்ப தெய்விகமா, பக்தியா நான் செய்யறது கிடையாது. அதுக்கும்கூட கொஞ்சம் வசதி வேண்டியிருக்கு.’’

``அப்படி என்றால் உங்களுக்கு பக்தியில் ஈடுபாடு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா..?’’

``ஈடுபாடு இல்லைன்னாலும்... (யோசிக்கிறார்) சில மந்திரங்களுக்கு நம்ம மனதை நிதானப்படுத்தறதுக்கான சாத்தியம் இருக்கு. மந்திரங்கள் மேல எனக்கு ஈடுபாடு உண்டு. அது மனதை சாந்தப்படுத்துது.’’

``வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியத்துவமானது என்று நினைக்கிறீர்கள்?’’

``இப்போ என் தேவைகளை என் மகன்கள் கவனிச்சிக்குறாங்க. அப்போ, பணம் இல்லாததனால, என்னோட பெரிய பையனை 12-வதுக்கு அப்புறம் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் சேர்க்க முடிஞ்சுது. அதுக்குக்கூட அக்னிபுத்திரன்னு ஒரு கவிஞர்தான் உதவினார். பணம் முக்கியமானதுதான். வந்தா நல்லது, வரலைன்னா என்ன செய்ய முடியும்?’’

``உங்களை மிகவும் பாதித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் எதைச் சொல்ல விரும்புவீர்கள்?’’

``இரு நகரங்களின் கதை (Tale of two cities). நான் எட்டாவது படிக்கிறப்போ பள்ளியில் துணைப் பாட நூலாக இருந்துச்சு. அதுதான், வாசிக்கிற பழக்கத்தைத் தூண்டுச்சு.  என்னை எழுதவும் தூண்டுச்சு.’’

``புதுசா எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?’’

``எழுதணும்னு வர்றவங்க, சொல்ல நெனைக்கிறதை அழுத்தம் திருத்தமா தெளிவா எழுதணும். அதுதான் என்னுடைய ஆசை. மத்தபடி, அவங்கவங்களோட கற்பனை, ஆற்றல் அதுக்குள்ளல்லாம் நான் போக விரும்பலை. முடிஞ்ச வரைக்கும் நம்ம மொழிக்கு நாம மரியாதை செய்யணும்.”


1_386049e6-8a24-43fa-84b1-c6c52496a1cd.jpeg

5_85ebf2bf-4468-47dd-9772-f0d05eb4bd00.jpeg

6_81a00965-4c7c-4700-ac15-2bd2782585f4.jpeg
8_2c730cea-1525-490e-8898-d4c5adb41b15.jpeg
9_08b4c353-42ce-4b5e-8002-c718f9410d97.jpeg
10_cb9a62b2-6c3b-4585-8862-05192508727e.jpeg

11_15c66cc5-8762-47eb-b91f-2676fdb3a512.jpeg