Monday, 5 November 2018

கோணங்கியுடன் ஒரு நாள்: (பாவிகம் : வள்ளலார், பிரமிள் குறித்த பார்வை) by வைர முத்து

https://www.facebook.com/vairamuthu.mech?fref=ufi
வைர முத்து is with Ramesh Isai and Vel Rajan.
November 1, 2017 ·
கோணங்கியுடன் ஒரு நாள்:
(பாவிகம் : வள்ளலார், பிரமிள் குறித்த பார்வை)

டிஸ்கி :
வையம் என்னை இகழவும்
மாசு எனக்கு எய்தவும்
இதை இயம்புவது
எதுக்கு எனில்…
பொய்யில் கேள்விப் புலமையினோர்
மாட்சி தெரிக்கவே !

பாயிரம் :

சென்ற டிசம்பரில்தான் முதன் முதலாக கேரளா பிலிம் பெஸ்டிவலுக்குப் போயிருந்தேன். (அதுவும் திட்டமிட்டெல்லாம் இல்லை. நண்பர் துறையூர் சரவணன் செல்ல முடியாததால் அவருக்கு பதில் அவர் ஐ.டி. கார்டில் ப்ராக்ஸியாக நான் சென்றிருந்தேன்) அங்கே எழுத்தாளர் T. கண்ணன் அவர்களுடன் வாசம். (இதை எழுதத் துவங்குகையில்தான் T.கண்ணன் அவர்களுடன் நடந்த உரையாடல்கள் மற்றும் அங்கேயே பெஸ்டிவலில், T.கண்ணன், கோணங்கி அங்கு வந்திருந்த நண்பர்களுடன் நிகழ்த்திய இரவு உரையாடல் பற்றியும் எழுதத் தோன்றுகிறது. அதில், அங்கு பார்த்த படங்கள் குறித்த அவர்களது பார்வை, ஒரு படத்தை எப்படி அணுகுவது, இலக்கியம் இசை என பல விடயங்கள் பேசினர், புதிதாக உலக சினிமா பார்க்க வருபவர் மற்றும் இலக்கிய ஆர்வமிருப்போருக்கு மிக நல்ல செவி விருந்து அவ்விரவு உரையாடல்)

கோணங்கி வேறு இடத்தில் தங்கியிருந்தாலும் கண்ணனைப் பார்க்க நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார், முதன்முதலில் அங்குதான் அவரைச் சந்தித்தேன். சரவணனின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன், வாசிப்பனுபவம் உண்டா எனக் கேட்க, இப்பதான் வாசிக்க தொடங்கிருக்கேன், பிரமிள் வாசிச்சிக்கிட்ருக்கேன், அப்புறம் ஏதேதோ சொல்லியிருக்கிறேன்…

கோணங்கி காண் படலம்:

சென்ற வாரம் ரமேஷ் அண்ணன் அழைத்து, கோணங்கிவீட்டுக்கு நானும் வேல்ராஜ் அண்ணனும் போறோம் நீயும் வரியா என்று உடன் அழைத்தார். (இருவருமே பெஸ்டிவலில்தான் அறிமுகம்). ஒரு வாரம் தீபாவளி விடுமுறைக்கு வந்தவன் சரியென்று அப்படியே கோயில்பட்டி போய்விட்டேன்.

கோயில்பட்டி நகர் வளம்:

அப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கோயில்பட்டியை சுற்றிப்பார்க்காவிட்டாலும், அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் ரயில்வே ட்ராக் வழியே (ஒரு கி.மீ. க்கு மேலே..) பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பை கூளங்களின் ஓரத்திலே/மேலேயே நடந்து சென்றது வரை எழுதலாம். மறுநாள் காலை வாக்கிங் சென்ற பூங்கா வளமும் மரங்களும், அழகுதான். பின்ஒருநாள் வந்து ஊரை சுற்றிப்பார்த்து எழுதிவிடுக்றேன். கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாயும் காரா சேவும் பற்றி சொல்லாவிட்டால் பெரும் பாவம் வந்து சேரும். அவ்வளவு அருமையாயிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, வாடா வாடா என அடையாளம் கண்டுகொண்டு! உபசரித்து! முதலில் சாப்பாடு என்று உட்காரவைத்தார். வத்தக்குழம்பு, ரசம், பசு’மோர்’! சாம்பார் பொறியல் , நெல்லிக்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் உடன் கூடிய அருமையான விருந்து.

.....

கோணங்கி : போனதடவ வந்தீங்களேடா (ரமேஷ், வேல்ராஜ்)... இரண்டுநாள் வந்து.. வீடுமாதிரி இருந்துட்டுப் போனீங்களே.. அப்பிடிதாண்டா இயல்பா இருக்கனும்... (இரண்டுநாளும் தூங்க, சாப்பிட, எப்போதாவது பேச)... ராமகிருஷ்ணன்(எஸ்.ரா.) வந்திருந்தால் இந்த அறை முழுக்க (இப்பவே) சொற்களால் நிரப்பியிருப்பான். ஆண்ட்டன் செக்காவ் வைப் பார்க்க/பேசப் போகிறவர்கள் பல முன் தயாரிப்புகளோடு செல்வார்களாம், இவரிடம் இன்ன இன்ன கேள்விகள் கேட்கவேண்டும், இப்படிப் பேசி அவரை மடக்க வேண்டும், அவரிடம் பெயர் பெற்றிட வேண்டும்..... இப்படியெல்லாம். நீங்க இயல்பா இருகீங்கள்ளடே அதாம் எனக்கு பிடிச்சிருக்கு. உக்காந்து வம்படியா பேசக்கூடாது.

(நானும் எந்தவித கேள்விகளுடனும் அங்கு செல்லவில்லை, அட சத்தியமா இல்லீங்க)

ஆனால் அன்றைய எங்களது சந்திப்பின் முடிவில் எனக்குத் தோன்றியவை இதுதான்... கோணங்கியும் அவரது புனைவுலகும் வேறுவேறல்ல, அவர் வாழ்வதே அந்த புனைவுலகில்தான் அவர் புனைவுலகில் அற்றைய தினம் அவர் மனதில் உதித்த கதாப்பாத்திரங்கள் தாம் நாங்கள் மூவரும். பாத்திரங்களின் போக்கு என்பது Authorக்கு தெரியாது. அதேபோல அவரை நீங்கள் உங்கள் இஷ்டப்படி பேட்டி காணவோ, அல்லது வாயைக் கிளறவோ முடியாது, அப்படி வந்தாலும் அது தன்னியல்பாய் இருக்காது அல்லது அதன் முழுப் பரிமாணமும் வெளிப்படாது. உங்களால் செய்யக்கூடியது எல்லாம், கேள்விக்கான மூல விதைகள் சிலவற்றை அவர் உலகினுக்குள் தூவலாம். அவற்றுள் தகுதியானவை விருட்சமாய் வளரும் அவ்வளவுதான் நாம் செய்யக்கூடியது. அன்று நாங்கள் அதைகூட செய்ய மெனக்கெடவில்லை அவரே நங்கள் உதிர்ந்த சில சொற்களை எடுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்தார், அது சார்ந்த பல உப கேள்விகளுக்கான பதில்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. (அது அவருக்கு முக்கியமற்றதாக தோன்றியிருக்கலாம்) இது கோணங்கியைப் பற்றிய ஒரு வரையறை அல்ல அற்றைய நாளின் தேவையற்ற Conclusion அவ்வளவே.

ஆசிரியர் கூற்று :
கோணங்கி பற்றிய பில்டப் ஒன்று கிளிஷேவாக இவ்விடத்தில் வரவேண்டும் என்பதால் ஒன்றும் நான் இதை எழுதிவிடவில்லை. ம்க்கும்.
இதை மென்மேலும் சுயபகடி செய்தவாறே எழுதலாம்தான் ஆனால் இதில் பின்னே சொல்ல வரும் முக்கியமான விஷயங்களின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யுமென்பதால் இத்தோடு என் அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திவிட்டு, கோணங்கியுடன் நிகழ்ந்த உரையாடலை அப்படியே வைக்கிறேன்.

..........

மாலையில் கொஞ்சம் புத்தகங்களை ஒதுங்கவைதுவிட்டு இரவு உட்கார்ந்தோம். பிரமிள் பற்றியே முதலில் பேசத் தொடங்கினார் (நான் கேட்கமலேயே)

கோணங்கி: பிரமிள் பொயட்ரி ஏற்படுத்துற மூடே தனி இதுதான்..

வேல்ராஜ் : அவர எல்லாரும் ஒரு பிரமிப்பாதான் பாக்றாங்க

கோணங்கி: நம்மப் பொருத்தவரைக்கும் எப்பவும் கூடயே அலைவோம்.

அவரை அனுகுகிறவர்களிடம் பெரிய பொயட் ரைட்டர் அப்பிடியெல்லாம் இருந்தது கிடையாது, கூட இருக்கும்போது கேசுவலா... நீ இருக்கேயில்ல... இந்தா இவ்ளோதான். அவர் மூலமாதான் பெரிய பெரிய ஆட்கள்ட்ட சாதாரணமா பழகுறது வந்தது. நா அவர் பிறந்த இடத்துக்குப் போயிட்டு...

வேல்ராஜ் : பிறந்தது ஸ்ரீலங்கா தானண்ணே .

கோணங்கி: திரிகோணமலை தான். போன வருஷம் அங்க போய் ஒரு இரவு முழுக்க சிகரட்டோட அப்பிடியே..... தண்ணியோட அப்படியே அந்த ஊர்ல அலைஞ்சுகிட்டே இருந்தேன். அந்த இடம் வந்து பிரமிள் இருந்த தன்மை. அந்தத் தன்மையோட இருந்துவிட்டு வந்தேன். ரொம்ப அருமையான இடம்.

அவர் நின்ற, நடந்த இடங்கள எல்லாம் என்னால உணர முடிந்தது. இது பிரமிள் நின்ற இடம், அவர் நடந்த வழித்தடங்கள் என்பதெல்லாம் என்னால் உணரமுடிந்தது, அந்த திரிகோணமலை என்பதே பிரமிள் தான் அவர் தன்மை தான். அனா அவர் இங்க மெட்ராஸ்ல கூப்டா நாம் போய் ஓடி ஒளிவேன். ஆள பிடிசிருவரோன்னு...

வேல்ராஜ் : கடைசியில அவர ஹாஸ்பிடல்ல பொய் பாக்கலையோ?

கோணங்கி: பாத்தேன். என்னப் பாத்தவுடனே அவர் கண்களில் கண்ணீர். அவர் கண்ண தொடசிவிட்டுகிட்டே இருந்தேன். நீ பெரிய பொயட், நீ செய்யவேண்டியத எல்லா செஞ்சுட்ட நீ அழுதா மொத்த சொசைட்டியும் அழிஞ்சு போகும்... அழாத அழாத ன்னு தட்டிக்கொடுதுகிட்டே இருந்தேன். என்ன மாதிரி ஒரு குழந்த இது. நீ வந்து பாக்காம போயிட்டியேன்னு ஒரு இது அந்த அழுகைல. தனக்கான ஆள் வந்தவுடனே அழுதார்ல அதுதான்.. ஏ கை பூரா நனைஞ்சிட்டு. ஒரு மாதிரி...... ஒரு வாதை தான... ரைட்டரா இருந்து பொயட்டா இருந்து தனியா வாழ இருந்ததுல்ல. பிரமிள் பேம்லி மாதிரி நாம, உள்ளுக்குள்ளகூடி நாம இருப்போம், எதோ ஒரு இடத்துல.. அவர் வீட்டு ஜன்னல் கம்பியாவோ, சுவரோட திருப்பத்திலையோ, ஏன் அவர் அறையில இருந்த கல்லுல ஒரு பகுதியா கூட நா இருப்பேன்.

அவர் வீட்டுக்கு கூப்டுவார், நானும் அஜயன் பலாவும் தப்பிசிகிட்டே இருப்போம். ஒரு தரவ கட்டாயம் வரணும்னு சொல்லிக் கூப்டாரு, நானும் அஜயனும் போயிருந்தோம். பேசிக்கிட்டு இருந்தோம், அப்பிடியே டக்குன்னு டேரட் கார்ட(Tarot Card) எடுத்து ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்க கொஞ்ச நேரத்ல ஏதேதோ சொல்லி வெளிய தப்பிச்சி வெளியேறிட்டோம். அது அவருக்கு பிடிக்கல. பையங்க யாரும் வந்து இருக்கமாட்றாங்க ன்னு ஒரு இது. அது என்னவோ ஒரு பவர்புல்லான...

வேல்ராஜ் : அவர் பக்கத்துல இருக்க முடியாதுங்கீங்களோ?

கோணங்கி: அப்பிடி இல்ல என்னோட கூச்சமோ, அல்லது என்னோட சுபாவமோ தெரியல அது என்னால அவரோட இருக்க விடல. அவர் சிகரத்துல ஒளிர்ற விளக்கு மாதிரி தள்ளி நின்னுதான் பாக்க தோனுச்சி. அனா கடைசிவரை எம்மேல ஒரு பாசம் இருந்தது அவருக்கு. என்னைத் தவிர இலக்கியவாதிகள் அத்தனைபேரையும் திட்டித்தான் எழுதியிருப்பார். என்ன ஒருமுறைகூட கடிந்ததில்ல. நானும் அப்பிடி நடந்துக்கல ன்னு சொல்லலாம். ஒரு முறை “கோணங்கி என்பதால் மன்னித்து விடலாம்” என்பது போல எழுதியிருக்கிறார். ஒருவேள அவரைவிட்டு தள்ளி இருந்ததால தான் நான் இப்படி இருக்கேன்னு கூட சொல்லலாம். இருந்தாலும் அவர்ட இருந்து அவரோட வார்த்தைகளின் தீவிரத்தை எனக்குள்ள உள்வாங்கிகிட்டேன்.

(ரமேஷ் அண்ணன் ஆம்லேட் கொண்டுவந்து வைக்க..)

பேசிக்கொண்டே. அம்ப்லேட் பொட்டலத்தை பிரித்து வைத்தார்

கோணங்கி: அப்பிடியே ஆம்லேட் எடுத்துக்க.

வை: இல்ல வாணாம்.

ரமேஷ் : ப்யூர் வெஜ்ஜா

வை: ஆமா

ரமேஷ் : இப்பதானா இல்ல எப்பவுமே சாப்டறதில்லையா.

வை: இப்பதான் கொஞ்ச நாளா வள்ளலார் சபைக்கு போனதிலிருந்து.

ரமேஷ் : ஓ ! எதனால.

வை : சபைக்குப் போயிருந்தேன். வள்ளலார் பத்தி படிச்சிகிட்டு இருந்தப்போ,

கோணங்கி: எங்க போன?

வை : இங்க வடலூர் சத்யஞான சபை. வள்ளலார் பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.

கோணங்கி: ஓ, அங்க உள்ள போனியா?

வை : வடலூர் சபைக்கு நா போயிருந்த அன்னிக்கு கறி சாப்பிட்டு இருந்தேன்.
ஆனா அங்கே வாயில்ல....

கோணங்கி: “கொலை, புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரவும்” ன்னு

வை : ஆமா “கொலை, புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரவும்” ன்னு எல்லா வாயில்கள் லயும் இருந்தது, எனக்கு ஒரு மாதிரி இருந்தது, அதனால அடுத்த முறை அங்க ஒரு மாதம் கறி சாப்பிடாம இருந்து போகலாம்னு போனேன். அப்படியே அது தொடருது.

வேல்ராஜ் : இங்க உலக.... மனிதன.. தத்துவந்தான் இயக்கிக்கிட்டு இருக்கில்ல.

கோணங்கி: வள்ளலார் வந்து ரொம்ப பிரமாதமான ஒரு தன்மை ல. ஆனா நா சபைக்கு போறப்போ தண்ணியடிச்சிட்டு தான் போவேன். நா போய் அய்யா கிட்ட சொல்லுவேன். போய்த்தொலடா ம்பாரு, போய் எனக்குள்ள அங்க ஒரு உரையாடல் நிகழும்.

வள்ளலார் இதுக்குள்ள போக போக அப்பிடியே ஒரு இதுதான்.. திருவருட்பா ஒழுங்கா படி.

வேல்ராஜ் : வள்ளுவரும் புலால் மறுத்தல் பேசியிருக்காருல்ல.

கோணங்கி: வள்ளலார்ட்ட நடைமுறைன்னு ஒன்னு இருந்தது. பசிய வந்து..... லாண்ட்ஸ்கேப் முழுவதையுமே பசியா பாத்தாரு, அப்படி பாத்துதான் உணவ குடுத்தாரு அய்யா. ஆனா எல்லாரும் எதோ அவர் பஞ்சதுக்காக கூழ் ஊத்றதா நினச்சாங்க... அனா அப்படியில்ல. பசி..ன்றத மொத்த யுனிவர்சலா இதா பாத்தாரு... அதுதான் அவரோட பொயட்டரியா மாறுறதும். (என்) நாவல்ல வந்து நாலு சாப்டர் எழுதிருக்கேன். ஆக்ஸ் அய்யர் வள்ளலார் உரையாடல் னு ஒரு சாப்டர் எழுதிருக்கேன். வள்ளலார் சென்னைல விரக்தி அடையராறு, வாழ்க்கைல ஒரு வெறுமை, இங்க கந்தர் கோட்டம், அப்புறம் தங்கச் சாலை பகுதிகள்ள தங்கி இருந்தவரு, ஒரு கட்டத்துல விரக்தி அடைஞ்சு இந்தப் பக்கம் திரும்புறார். திரும்பும்போது. வடலூர் பக்கத்துல மேல்பட்டாம்பாக்கம்ன்னு ஒரு ஊர் , அந்தப்பக்கத்துல ஆக்ஸ் அய்யர்ன்னு... அய்யர் னா கிருத்துவப் புனிதர்கள் (கிருஸ்துவ கல்லூரில, பதிரிக்கு பாடம் எடுக்குற பள்ளியில ப்ரினிசிபல் அவரு) அவர பாக்றார். அங்க யோவான் சுவிஷேசங்கள கேக்றார். அங்க யோவான் சுவிஷேசத்துலதான் ஒளிக் கோட்பாடு வருது. அதுல இருந்துதான் வள்ளலாரோட ஒளிக் கோட்பாடு வருது. ஆறாம் திருமுறை முழுவதும் இந்த ஒளிக் கோட்பாடு தான். அத யோவான் சுவிஷேஷங்கள்ள இருந்து உருவெடுத்தது, இத ஆக்ஸ் அய்யர் வள்ளலாரோட உரையாடல் மூலமா அப்படியே எழுதிருக்கேன். பெரிய அளவுல கிருஸ்துவத்த உள்ளிழுத்துக்கிறாரு.

ஒருமுறை... நா ஒரு பெரிய ஃபாதரோட கண்ணாடி டேபிள்குள்ள வள்ளலார் படம் இருந்தத பாத்தேன். அவர்ட ஏன்யா வள்ளலார் படம் வச்சிருக்கீங்க ன்னு கேட்டதுக்கு அவர் பேசுன விஷயங்கள்.... நா கேட்டுட்டு அங்க மேல்பட்டம்பாக்கம் போயிட்டேன். ஆக்ஸ் அய்யர் சமாதி அங்கதான் இருக்கு. என்னோட “சலூன் நாற்காலிகள்” புத்தகத்த அங்கதான் வெளியிட்டேன். கூட லக்ஷ்மி சரவணகுமார் இருந்தான். நாங்க இரண்டுபேரும்தான் போய் அந்த புத்தகத்த வெளியிடறோம்.
வள்ளலார் தமிழ் ட்ரெடிஸ்னல் கவிதை வழியாப் போயிருந்தா இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. ஒளிக் கோட்பாடு குடுத்து அத பெருசா எடுத்துட்டு போனபின்தான் அது சாத்தியமாச்சு.... அது விவிலியத்துல இருந்து வந்தது.

வை : இது வரலாற்றுல, இருக்குதா?

கோணங்கி: ஆமா இது இருக்குது, வெளியில அத மறசிட்டாங்க. ஜெர்மனியிலிருந்து வந்த protestant கிருத்துவர்கள் கிட்ட இது இருக்கு.

அவர் இத்தனை வகை விஷயங்கள அவர் பொயட்ரிக்குள்ள ஒன்னு சேக்கதுக்கு பைபிளோட உரைநடைகுள்ள புகுந்ததினால தான் இந்த சாத்தியமே. அது இரண்டுமே (Poetry - Prose) கலந்துடுற தன்மை அய்யா கிட்ட இருக்கு.

அவரும் ஒரு வகையில ஒரு லிட்டரேச்சர் ஆள் தான். அதுவுமில்லாம மிகப் பெரிய ரசவாதி.

ஆறாம் திருமுறையோட வள்ளலாரோட சைவம் முடிஞ்சிருது. பிறகு அவரோட மரணம் நிகழ்ந்திருது. அது கொலையோ தற்கொலையோ (எரியூட்டபட்டோ) அப்படி ஆயிருது.

கோணங்கி : தஸ்தாவ்ஸ்கியையும் வள்ளலாரையும் வச்சு எழுதிருக்கேன். இரண்டுபேரும் ஒரே காலத்துல பொறக்குறாங்க இங்கயும் பஞ்சம் அங்கயும் பஞ்சம். “த” ல ரெண்டுபேரையும் வச்சி பெரிய அளவுல டீட்டைல்டா ஒரு சாப்டர் எழுதிருக்கேன். ‘த’ வோட வொர்க் ல பெருசா வள்ளலார் தமிழ்ல பண்ணிய விஷயங்களையும், தாஸ்தாவ்ஸ்கி யோட கரமசாவ் பிரதர்ஸ் ல இருக்கிற சில விவிலிய விஷயங்களையும் வச்சி. இரண்டுலையும் ஊடாடிகிற்றுக்குற விஷயத்த எழுதிருக்கேன். வள்ளலார்கிட்ட பைபிளோட தாக்கம் தான் ஆறாம் திருமுறைய பெருசா உருவாகிருச்சு.

வை : ஆறாம் திருமுறை ?

கோணங்கி: ஆறாம் திருமுறை ல தான் வள்ளலாரோட மேஜர் பொயடிக்ஸ் இருக்கு. அது ரொம்ப முக்கியமானது. அவருக்குள்ள இருக்குற சைவம் இறந்துருது. அதன் பின்தான் யுனிவர்சலா மாறிறாரு.

வேல்ராஜ் : அது என்ன அருட்பெருஞ்சோதி... ?

வை : “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி” ன்னு...

கோணங்கி: பரவாயில்ல நீ உள்ள போயி கொஞ்சம் படிச்சு போனியானா..

வை : நா மொத கொஞ்சம் படிச்சு தான் அங்க போனேன். அதில் பல விஷயங்கள் படிக்கப் படிக்க எனக்கு ரொம்ப ஆர்வமாயிருந்தது, குறிப்பா, சித்தர் மரபு எல்லாம் ரொம்ப க்ளோஸ்ட்ஆதான் இருக்கும். இவர் அதிலுள்ள பல விஷயங்கள உடச்சு பேசுறது, அப்புறம் 'கோயில்' பத்தியும் சபை பத்தியும் எழுதியிருந்தை படிச்சேன்.

கோவில்கள் என்பது தத்துவ குறியீடுகள் தான. வள்ளலார் ஒளிக் கோட்பாட உருவாகுறார். அது சைவ கோட்பாட்டை விடவும், உலகின் வேறெந்த இறைக் கோட்பாட்டிலும் கண்டடயாததாக கருதுகிறார். அவர் தொடக்கத்தில் சைவ மரபின் வழி வந்தாலும், பின்னர் அவர் கண்டுணர்ந்தது இதுவரை எந்த தத்துவத்திலும் சொல்லப்படலைன்னும் அதுதான் உச்சபட்ச/அறிவியல் தத்துவம்ன்னும் உணர்றார். சிதம்பரம் கோவில் கூட இத்தகைய ஒரு தத்துவ குறியீடுதான். அது சைவ சித்தாந்தத்தின் ஒரு முழுமையான குறியீட்டு வடிவுன்னுதான் சொல்லணும். வெட்டவெளி ன்ற தத்துவந்தான், சிதம்பரம் கோவில் இத ஒரு குறியீடா வெளிப்படுத்துது. அதுமட்டுமில்லாம அத எப்படி அடையுறதுன்னும் அதே கோவில் அமைப்பிலேயே குறயீடுகளா உருவாகியிருக்காங்க. வள்ளலார் தன்னுடைய ஒளிக் கோட்பாடு சைவத்தின் கோட்பாடு இறுதியானதில்லன்னும் அதையும் தாண்டிய பல படிநிலைகள் இருக்குதுன்னும் அத்தத்துவத்தின்படி சிதம்பரம் கோவில்ல சில மாறுதல்கள் செய்யணும்ன்னு வள்ளலார் பரிந்துறைக்கிறார். அத சிதம்பரம் தீக்ஷிதர்கள் ஏத்துக்கல. அதனால அவரே ஒரு சபைய நிர்மாணிக்கிறதா முடிவு செஞ்சு அத்தத்துவங்கள அடிப்படையா வச்சு வடலூர் சபைய கட்டுறார். போன வருடம்தான் சிதம்பரம்(பொற்சபை) போய்வந்தேன். ஆனா இதப் படிச்சவுடனே வள்ளலார் உருவாக்கிய 'சபை' எப்படி இருக்குதுன்னு பார்க்க ஆவலா இருந்தது அதனாலதான் முதலில் அங்க போனேன்.

கோணங்கி: நீ போனது தமிழ்ல ஒரிஜினல் ஆத்திகர்களோட பாத! (வை : !!!!). வள்ளலார் நாத்திகர் ல மேஜரான ஆள்ன்றது இங்க ஒரு பயலுக்கும் தெரியாது. வள்ளலாருக்கு பிறகு ஞானியாரடிகள் அவருக்குப் பிறகு பெரியார், அவருக்குப் பிறகு புதுமைப் பித்தன் அவருக்குப் பிறகு பிரமிள். பிரமிள் வள்ளலார் நிறைய சம்மந்தம் இருக்கு. வள்ளலாரோட பொயடிக்ஸ் பவர்ன்றது இன்னும் பிரமிள் ஒரு ஆளுக்குதான் இருக்கு. மத்தவங்க எல்லாம் உருகி உருகி எழுதுறது... எல்லாம் தேவாரம் தான். தேவதேவன் வந்து தேவாரம். தேவதச்சன் வந்து திருவாசகம். வள்ளலார் தன்மை வந்து அதிகம் அறியாமலே பிரமிள் கிட்ட பொயட்ரி ல இருக்கு. அதனால இப்பிடி இருக்கு வள்ளலார், ஞானியாரடிகள், பெரியார், புதுமைப் பித்தன், பாரதில கொஞ்சம் வருது, அடுத்து பிரமிள் அப்புறம் நாமல்லாம். இதுல பிரமிள் முக்கியமான பாயின்ட். அதனால அந்த சுழியில, கவிதைய விடவும் அவர் நின்ற இடத்தினூட சுழி வந்து நம்முடைய தமிழர்களோட மேஜர் இடம்.

வேல்ராஜ் : தமிழ் லிட்டரேச்சர் சமூகத்திலேயே பிரமிள் ஒரு முக்கியமான ஆளா ண்ணே

கோணங்கி: பெரிய ஆள் னா இந்த மாதிரி ஒரு பெரிய இடம் இருக்குல்ல அதுல அய்யாதான். அந்த இடம் வள்ளலாருக்குதான்.
வள்ளலாருக்கு ஈக்வலா மாடர்ன் ரைட்டர் யாரையும் சொல்லவும் முடியாது. வள்ளாருக்குள்ள இருக்குற பொயட்டிக்ஸ் கரை காண முடியாத ஆழம். அவர் எடுத்துகிட்ட அந்த காலமும் அவர அந்த இடத்துல கொண்டு போய் விட்ருச்சி. கிறிஸ்டியானிட்டியோட வரவும். மேல்பட்டம்பாக்கம் ஆக்ஸ் ஆய்யரோட சந்திப்பும் முக்கியக் காரணம்.

ஆக்ஸ் ஆய்யருக்கு என்ன பிரச்னை வருதுன்னா. அவர் கிருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியரா இருந்து கிருத்துவ கல்லூரி நடத்துறார். அதுல ஒரு வெள்ளாள கிருத்துவ மாணவன்... பஞ்சமர் வீட்டுல பாலமுது ஒரு டம்ளர் அருந்தினால்தான் அவனுக்கு கவுன் அணிவிக்கப்படும். (கிருஸ்துவ பாதிரியாரா ஆகுறதுக்கு) அதை அம்மாணவர் அருந்த மறுத்தால் வெறுப்புக்கொண்டு முதல் சமத்துவபுரத்தை மேல்பட்டம்பாக்கத்துல ஆக்ஸ் அய்யர் உருவாகுறார்.

வள்ளலார் காலத்துல, அது அவர பாதிச்சி அவர் சமய சன்மார்க்க சங்கமா உருவாகுரதுக்கு ஆக்ஸ் அய்யர் மிகப் பெரிய தூண்டுதல். இத வரலாற்றுல மறசிட்டாங்க. அய்யா வரலாற்ற மட்டும் எடுத்டுக்கிடல, விவிலியத்த கரைகண்டு படிச்சிருக்கார். அதுதான் முக்கியம்.

தென்னாட்டின் புத்தர் வந்து அய்யா தான். சந்தேகமே கிடையாது.

நா குடிச்சிட்டு போவேன் (வடலூர் சபைக்கு) போககூடதுதான். பெரியார் போயிருக்காரு. குடிக்காம போயிருக்காரு. சுத்தி சுத்தி பாத்திருக்கரு “கொலை புலை தவிர்த்தல் வேண்டும்” ன்னு இருக்க, மாமிசம் சாப்ட்ருக்காரு., அப்பிடியே உள்ள போகாமலே வெளியே வந்துட்டாராம். அந்த அளவுக்கு மரியாதை உள்ள ஆள். பெரியார் சாதாரணமான ஆள் கிடையாது, சும்மா இங்கிதமான ஆளு. அவர் பிராமணீயத்தை அடிச்சவர்ன்னு எதிர்தார்ன்னு எதோ மொட்டையான ஆளுன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க. பெரியார் தான் வள்ளலார். இத யாரவது சொல்லிருகாங்களா. அம்மா வயித்துல பிறக்கல, ஆறாம் திருமுறையில் சைவம் இறந்த அந்த விநாடியில் அயோனியாக பெரியார் பிறக்கிறார். அதனால் தான் தமிழ்நாட்ட / தென்னிந்தியாவ அழிக்க முடியாம இருக்கு. இந்த பெரிய இனம், மரபு அது இதுன்னு வெச்சிருக்கதனால, வள்ளலார் மாதிரி வந்து ஒளி பாச்சுனவங்க வந்து பாய்ச்சிரதுனால. பிரமிள் பொயட்ரிய வந்து கல்குதிரை ல பாய்ச்சின மாதிரி.

வடலூர் லாம் வந்து தொடர்ந்து போகணும். நா தொடர்ச்சியா போயிட்டு வந்துகிட்டு இருந்தேன்... இப்போ இல்ல... தொடர்ந்து அவர எழுதிகிட்டே இருக்கேன். அவரோட எல்லா புத்தகங்களும் இருக்கு. எல்லா எடிசனும் இருக்கு. அய்யா புத்ககம் கிடச்சா உடனே வாங்கிருவேன். பாலகிருஷ்ணன் பிள்ளை எடிசன் வரைக்கும் எங்கிட்ட இருக்கு, அவரோடதெல்லாம் ரொம்ப நேர்த்தியா போட்ட சின்ன சின்ன புக்.

நா.சஞ்சீவிட்ட இருந்த வள்ளலாரோட கம்ப்ளீட் தொகுதி இருக்கு. அவர் மருமகன் ஒரு “கோட்ருக்கு” ஒரு புத்தகம் ன்னு வித்துக்கிட்டு இருந்தாரு, அவர்ட இருந்து நூறு ரூபாய்க்கு வாங்குனேன். ஒரு ரைட்டர் போயிட்டா எப்பிடி நிலம பாரு. ஒரு நூறு புத்தகங்களாவது வள்ளலார் புக்கு என்கிட்ட இருக்கு. முழுவதும் பெரியதா வள்ளலார் பத்தி பெரிய நூல் எழுதணும் (ஆச)இருக்கு, நாம எழுதுறதுக்கு (வயதும்) பத்தும். அத ஓரளவுக்கு “த” வுல எழுதிப் பாத்தோம்.

அவரோடது பக்தி இயக்கம் கிடையாது, அதுதான் முக்கியம். பக்தி இயக்கமா வச்சிகிட்டு இருக்காங்க. வள்ளலார் கிரிஸ்டியானிட்டிக்கு அருகில...

அதாவது...வீரமா முனிவரோட பரமார்த்த குரு கதைகள் வருது. கதை வடிவம் மொத அங்கதான் வருது. விவிலிய மொழிபெயர்ப்புகள் வருது. ஆறுமுக நாவலரும் அத பண்றாரு. அவர் வள்ளலாருக்கு எதிரான ஆளு. அவர் சநாதன சைவம். அந்த சைவம் வள்ளலாரா மாறியிருந்தா அங்க(இலங்கைல) யாரும் செத்துருக்க மாட்டாங்க. இலங்கை ல வள்ளலார் இல்லவே இல்ல ஏன்னா ஆறுமுக நாவலர் தடுத்துட்டாரு. அங்க வள்ளலார கும்புடறவங்க மருந்தளவு தான் இருப்பாங்க. சைவம் தான் அங்க இருந்தது அது நாவலர் வழியா வந்தது.

வள்ளலாரோட இடம் சர்வதேச இடம். அவரு பல்சமய கோட்பாட முன்வைக்கிறார். அவர் ‘சபை’ய உருவாக்கும்போது மடம் ன்றது, பௌத்ததுல இருந்து எடுத்துக்கிறாரு, சமணத்துல இருந்து கொல்லாமைய எடுதுக்கிறார், முக்காடு போடறது இஸ்லாம் ல இருந்து எடுத்துக்கிறாரு, உணவளித்தல் வைணவத்துல இருந்து எடுத்துக்கிறாரு.

உரைநடைக்கும் கவிதைக்கும் பெரிய ரசவாதத்த அவர் பண்ணதால புதுமைப் பித்தன் பிறந்தான். வள்ளலாரோட வேட்டி நூல்ல இருந்து புதுமைப்பித்தன் வாரான். பிரமிள் வள்ளலாரோட ‘அக’ப்பரப்புல இருந்து வாரான், “ஸ்ரீ லங்காவின் தேசியத் தற்கொலை” ன்னு புஸ்தகம் எழுதுறான். ரொம்ப ரேர் காம்பினேசன். அவர் பொயட்டிக்ஸ படிக்கறதுக்கு நீ ஒரு அஞ்சாண்டு எடுத்து நிதானமா வொர்க் பண்ணா அது மெல்ல தன்ன வெளிப்படுத்தும். ப்யூச்சர் எல்லாத்தயும் அய்யா அதுல வச்சுட்டு போயிருக்காரு. நம்முடைய ப்யூச்சரே வள்ளலார் தான். வள்ளலார் ஒன்னும் பழைய ஆள் கிடையாது.

தஸ்தாவ்ஸ்கி க்கும் கனவு வருது, இங்க வள்ளலாருக்கும் கனவு வருது, அது இரண்டையும் வச்சி காம்ப்பேர் பண்ணி, தஸ்தாவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் ல டிமிட்ரி யோட கனவுகளையும், வள்ளலாரோட கனவுகளையும் பக்கம் பக்கமா வச்சு எழுதி இருக்கேன்.” த“ நாவல் வந்து தமிழுடைய டீப் சீக்ரட் ல எப்படி சநாதனத்த விட்டு உதறி வெளியேறி கடவுள் சமயமற்ற ஒரு வெளிய முன்வைத்து நாகர்கள நோக்கி திரும்புதுன்றத, வள்ளலார அகப்பரப்பா வச்சி எழுதியிருக்கேன். ரஷ்யாவுல தாஸ்தாவ்ஸ்கி அங்க கிருத்துவத்துல உள்ள போறதும் வெளிய வாரதுமா இருந்தாரு, உள்ள போறது மறுக்குறது, உள்ள போறது மறுக்குறதுன்னு இருந்தாரு. டால்ஸ்டாய் வந்து முழுக்க ஆதரிக்கிறது தான், ஒருக்கா மறுத்து அப்புறம் முழுக்க ஏத்துகிட்டார்.

வள்ளலார் காலத்துல வந்து சநாதனர்கள் பலபேர் ஏகப்பட்ட பிரச்சன பண்ணி எதோ ஒரு வகைல அவர ஒழிசுக் கட்டுனாங்க. உள்ளூர் காரங்களே அவர வெள்ள வேட்டி சுத்திட்டு போறதப் பாத்து கொக்குப் போறது கொக்குப் போறது ன்னு நேசவாலர்களெல்லாம் நக்கல் பண்ணது எல்லாம் வேதனைப்பட்டு கடிதம் எழுதிருக்காரு அய்யா.

ஐயாவுடைய மொழிங்றது முழுக்க பொயட்டிக்ஸ் தான் அதனுடைய ஆழம் காண முடியாது, சைவத்த மொத்தமா உள்ள வாங்கி பௌத்தத்த உள்ள வாங்கி கிருத்துவத்த உள்ள வாங்கிய இணைச்ச ஒரு ரசவாதி. எனக்கு அந்த பாதர்ட்ட இருந்த வள்ளலார் படம் தான் இவ்வளவையும் சொல்லிக்கொடுத்தது.

வள்ளலார் ஒருத்தர்தான் மொத்த சமய பண்பை, சமயத்துடைய அழுத்தங்களையும் ஒரு விநாடியில கட் பண்ணி அது அல்லாத ஒரு உலகத்தை வந்து ஆறாந்திருமுறை ல கண்ட மிகப் பெரிய இடம் வள்ளலாரையே சாரும். சமயமற்ற தன்மைய அய்யா வச்ச உடனே சடர்ன்னு ஞாநியாரடிகள் இத பிடிச்சிகிறாரு, அவர் வீர சைவ மரபைச் சேர்ந்தவர், அவர் ஆங்கிலம் சமஸ்கிருதத்துலயும் பெரிய மாஸ்டரா இருந்திருக்காரு அவரைத்தான் பெரியார் தன்னுடைய குருவா மானசீகமா...
தன்னோட முதல் பத்திரிகைய அவர வச்சு தான் வெளியிடுறார்...

இதுக்கு மேல சொன்ன உங்களுக்கு போர் அடிக்கும் ன்னு இத்தோட நிப்படறேன். எழுதணும்னாலும் எழுதலாம்.

கிளம்பும் நேரத்தில் கோணங்கி அவருடைய "உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை" புத்தகம் கொடுத்தார் எழுத்தாளர்களிடம் புத்தகத்தில் கையொப்பம் வாங்குவதை நானே கேலி பேசுவேன். அது தேவயில்லை என்பது என் பார்வை. ஆனாலும் ரமேஷ் அண்ணன் கையொப்பம் வாங்கியதால் நானும் வாங்கினேன். அனாலும் முந்தைய நாள் முழுவதும் நடந்த உரையாடலின் சாரமாக அவர் எழுதித் தந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தது.

காலையில் கிளம்பும் வேளையில் கூத்துக்கலைஞர் ஒருவர் வந்தார். கோணங்கி வீட்டின் பின்புறம் அமைத்திருந்த நாடகம் நிகழ்த்தும் இடத்திற்கு அழைத்துசென்று கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் வேல்ராஜ் அண்ணன் எடுத்த ஒரு புகைப்படத்தில் பின்னல் இருக்கும் பையன் பார்க்கும் பார்வை அப்படத்தை வேறுதளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

Friday, 26 October 2018

மரப்பாச்சி – உமா மகேஸ்வரி

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1209%3A2012-12-09-00-53-37&catid=48%3A2012-06-19-04-13-01&Itemid=67&fbclid=IwAR2PbGnm8KNc31lQeMWeXZYPLKtOSmT0f82q25uBgod4Y1Nbs05JmUHZEtg

முகநூலில் நண்பர்கள் அவ்வப்போது பதிவு செய்யும் படைப்புகளை, எண்ணங்களை 'முகநூல் குறிப்புக'ளில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அந்த வகையில் உமாமகேஸ்வரியின் 'மரப்பாச்சி' என்னுமிச் சிறுகதையும் பிரசுரமாகின்றது. இதனை முகநூலில் பதிவு செய்தவர் எழுத்தாளர் சீர்காழி 'தாஜ்'.- பதிவுகள்]

சிறுகதை: மரப்பாச்சி – உமா மகேஸ்வரிபரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.



மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.

அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.

‘அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?’

‘இன்னும் சின்னக் குழந்தையா நீ?’ நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.

அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். ‘ங்கு, அக்கு’ என்று பாப்பாவோடு பேசுகிறார்.

‘அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா…’ என்ரு அனு எதையாவது கேட்டால்., ‘பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு’ என்று அதட்டுகிறார்.

‘நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்’ அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.

‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.

மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின்  இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.

வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.

அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். ‘நான் தலை தேய்து விடறேனே’ என்கிறாள்.

‘ஒண்ணும் வேணாம்’ என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.

எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின்  படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். ‘என்னம்மா?’ பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, ‘ஒண்ணுமில்லை’ என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.

பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.

தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.

மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.

சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும் சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி; ‘ஏன் லேட்?’ என்று ‘உம்’மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக் கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில் அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள். அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப் பாதம் அளைகிறாள்.

கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். ‘அனு எப்படி வளர்ந்துட்டே!’ அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. ‘அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே’ அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.

ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, ‘அங்கே நிறைய பொம்மை இருக்கு’ என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.

அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.

அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ‘ எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.

அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.

‘உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா? பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக் கண்ணாடியைக் கையில் தந்தாள். ‘நல்லாயிருக்கா பார் அனு!’

அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு , மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும் போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து  தென்னைகள், பவழமல்லி, மருதாணி எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்…அய்யோ, பயமா இருக்கே. அத்தையை எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில், கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித் தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை. அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. ‘ரொம்ப இருட்டாயிருக்குமோ?’ பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின் மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச் சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. ‘ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?’ கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின்  உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.

அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. ‘இதுவா? இதுவா அது? இப்படியா, இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே, இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது. உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.

‘அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ’ அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.

‘நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.

காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், ‘இந்தா காப்பியைக் குடி அனு’ என்கிறாள் அத்தை.

‘வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்’

அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.

‘உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?’. தோளில் பட்ட கையை அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து விலகுகிறார்.

பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்? அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். ‘அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?’

‘என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.

‘ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல் வந்துடுச்சு’ எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன – கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.

அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. ‘என் மரப்பாச்சி எங்கே?’ அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. ‘அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.

***

நன்றி : உமா மகேஸ்வரி , தமிழினி பதிப்பகம்

Saturday, 20 October 2018

விருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா, பூதக்கண்ணாடி

விகடன் தடம்ஸ்பெஷல்தலையங்கம்நேர்காணல்கட்டுரைகள்தொடர்கள்சிறுகதைகள்கவிதைகள்பெண்வெளிகாட்சி
சிறுகதைகள்Posted Date : 06:00 (01/08/2016)
விருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா
ஓவியம் : கார்த்திகேயன் மேடி

https://www.vikatan.com/thadam/2016-aug-01/short-stories/121615-story-jbchanakya.html
அந்த மாளிகை ஒருவகையில் எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, புவியியல் அமைப்பில் பூமியைப்போலவே கடலாலும் மலைகளாலும் சூழப்பட்டிருந்தது. `ஒருவர் மட்டுமே அந்த மாளிகையின் அருகில் தங்கியிருக்கிறார்; சாதாரண உரையாடல்கூட அவரிடம் சாத்தியமில்லை’ என்றார்கள். அதிகமும் ஆழ்ந்த தனிமையை நேசிக்கும் எனக்கு அது உதவியாகத்தான் இருக்குமென்று அவர்களுக்குச் சொன்னேன். அங்கு சாப்பிடுவதற்கு உணவுவிடுதி எதுவும் இல்லை  எனவும்  எனக்கு  அறிவுறுத்தினார்கள். அது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நன்றாக நடக்க விரும்பும் எனக்கு, அது நிச்சயம் தொந்தரவாக இருக்கப்போவதில்லை.

ஆழ்ந்த ரேகைகளைப்போல் நெற்றியில்  கிடக்கையாகக் கோடுகள் படிந்திருந்த கிழவர், கேட்டின் ஒரு பக்கத்தை அநாயசமாகத் திறந்து தள்ளினார். நான் யூகித்தேன்... `இவர்தான் அந்தக் காவலாளியாக இருக்க முடியும்.’ நல்ல வெளிர்மஞ்சள் முறுக்கு மீசையின் முனைகளில் வெற்றிலைப்பாக்குக் கறைகள் ஒட்டியிருந்தன. பரிசுத்தமான நரையில் கச்சிதமான தாடி அவருக்குக் கம்பீரமான அழகைக் கூட்டின. அந்த வயதிலும் திடகாத்திரம் மிளிரும் உடம்பில் வெண்ணிறத் துண்டும், கணுக்கால் தெரியுமளவுக்கு வேட்டியும் சாதாரண செருப்பும் அணிந்திருந்தார். குரோட்டன்ஸ்களால் பகுக்கப்பட்டிருந்த காருக்கான சிமென்ட் பாதை, மாளிகை முகப்பின் முன்பாக எழும்பியிருந்த உயரமான தூண்களுக்கு நடுவில், அகலமும் நீளமுமான படிக்கட்டின் முன்பு சென்று நின்றது.

கம்பீரமான மரங்களின் பசுமையோடு வீற்றிருக்கும் அந்த மாளிகை, கடந்துசெல்லும் எல்லாவற்றையும் ஆழ்ந்துபார்க்கும் உயிரூட்டப்பட்ட ஒன்றைப்போல இருந்தது அல்லது மாளிகை குறித்த முழுமையில் அது திளைத்திருந்ததும் காரணமாக இருக்கலாம். அசலான பிரமாண்டத்தைத் தனக்குள் வைத்திருக்கும் ஓர் அனுபவசாலியின் முழுமை என்றும் அதைக் குறிப்பிடலாம். நிச்சயமாக, மனிதர்கள் உருவாக்கிய எத்தனையோ அழகான மாளிகைகளில் அதுவும் ஒன்றில்லை.

இரண்டாள் உயரமும் ஆறடி அகலமும் கொண்ட இரட்டைக்  கதவை, படிக்கட்டு ஏறி தள்ளித் திறந்தார் கிழவர். வீட்டின் மேற்கூரையில் குடையைப்போல் கவிழ்க்கப்பட்ட கண்ணாடிக் கூம்பின் வழியே, வானத்து வெளிச்சம் மழையைப்போல் தரையிறங்கிக்கொண்டிருந்தது. வெளிச்சம் ஏற்படுத்திய வெப்ப உணர்வுக்கு எதிராக உள்ளே இதமான குளிர்ச்சி நிரம்பியிருந்தது. அத்தனை பெரிய மாளிகையில் அந்த ‘வயதான இளைஞர்’ தவிர யாருமில்லை. நான் எனது பொருட்களைத் தூக்கி வந்தபடி அவரைப் பார்த்துச் சிரித்தேன். அவர் புன்னகைத்தபடி என்னை ஊடுருவிப் பார்த்தார். எனக்கான அறையைத் திறந்து குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டார்.

கதவை உட்புறமாகத் தாழிட்டேன். அறையின் ஒழுங்கும் சுத்தமும் என்னைக் கவர்ந்தன. சராசரிக் கூடத்தின் அளவிலிருந்து வேறுபட்ட உயரமும் அகலமும் கொண்ட பெரிய படுக்கையறை.  இரண்டு கைகளையும் நீட்டினால் விரியும் அளவுள்ள குளிர்சாதனப் பெட்டி. ஆளை விழுங்கும் ‘க்யூன் சைஸ்’ கட்டில். எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மரமேசை மற்றும் மேசை விளக்கு தவிர வேறு எதுவும் இல்லை. ஒப்புக்கொண்டு வந்திருக்கும் திரைக்கதை பணி முடியும் வரை இதுதான் எனக்கான அறை. நான் அங்கு மிகச்சிறிய பொருளாக ஆகி இருந்தேன். சன்னல் வழியே பார்த்தேன். ஆயுள்கூடிய மரங்கள் கண்களை நிறைத்தன. அதன் அடர்த்தியான நிழலே மன அமைதியைத் தருவதாக இருந்தது.

சுவரையொட்டி மேலே செல்லும் அகலமான வளைவான பளிங்குப் படிக்கட்டு மாடிக்கு அழைத்துச்சென்றது. பிரமாண்டமான பன்னிரண்டு படுக்கை அறைகள் (நான் மெனக்கெட்டு எண்ணினேன்). ஒரு நவீன சமையலறை. எந்த அறையிலும் கூடத்திலும் ஒரு பொருளும் இல்லை. எல்லாமும் வெறிச்சென்றிருந்தன. குளியலறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாம்சம் பொருந்தியதாக இருந்தன. இரண்டு பெரிய நீராவிக் குளியல் அறைகள். இரண்டு மாடிகளுக்கு மேலே, மேலும் மேலும் மாடிகள் இருக்கலாம் என யூகித்தேன். அங்கிருந்து பிரகாசமான கடல் ஒரு மறைப்புமின்றி வெள்ளை நீர்ப்பரப்பைப் போல் வானத்துச் சரிவில் சேர்ந்திருந்தது. கடலைப் பார்த்த பிறகுதான் நான் அலைகளின் சத்தத்தையே உணர்ந்தேன். அது ஒரு மென்சத்தம். கவனித்தால் மட்டுமே கேட்க முடிகிற தொலைவில் இருந்தது. மாளிகையின் தொடர்ச்சியாக மரங்களின் அடர்த்திக்கும் மத்தியில் பல கட்டடங்கள் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்தேன். ஒருவகையில் இதை உருவாக்க நினைத்த மனிதனின் தேவையை நினைத்தேன். அது அவரவர் வாழ்க்கை சார்ந்தது என விலகிக்கொண்டேன்.

அதிகமும் துப்புரவுப் பணியாளர்கள், மாளிகையின் பராமரிப்பாளர்கள் சிறிய கேட்டின் வழியே வந்தனர். நுழையும்போது அவர்களைப் பார்க்க முடிந்தது. பின்பு அவர்களின் பணிநிமித்தமாக இங்கே எங்கேயோ மறைந்துபோனார்கள்.

பின்புறச் சுற்றுப்படிக்கட்டு நம்மைத் தாழ்வாரத்தின் இடதுபுற கீழ் முகப்புக்கு  அழைத்துவருகிறது. அங்கே அதுவரை கவனித்திராத நிலைக்கண்ணாடி ஒன்று சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. பிரவுன் நிறத் தடித்த சட்டமிட்ட அக்கண்ணாடி ஒரு சுவரைப்போலவே நீளமும் அகலமும் கொண்டிருந்தது. அதை நெருங்க நெருங்க அதன் முன் இருக்கும் அனைத்துக் காட்சிகளும் அதனுள் விரிவடைந்து கொண்டிருந்தன. என் உருவம் பார்த்தேன். கண்ணாடியைக் கண்டுபிடித்தவன்தான் இவ்வுலகின் ஆகச்சிறந்த உன்னதத்தைக் கண்டுபிடித்தவன்  என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? நான் அம்மாளிகைக்குச் சிறிதும் பொருத்த மற்றவனாகத் தெரிந்தேன். சிகையை ஒதுக்கி, சட்டையைச் சரிசெய்து, முகம் துடைத்து, அம்மாளிகைக்குத் தகுதியுடைய உருவத்தைத் தர முயற்சித்துப் பார்த்தேன். தோல்வியை ஒப்புக்கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

ஏன் அக்கண்ணாடி முன்பு அவ்வாறு நடந்துகொண்டேன்? அபத்தங்கள் நிறைந்த மனித வாழ்வின் சில தருணங்களில் அதுவும் ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பகட்ட நகர வாழ்க்கையின்போது, பணிநிமித்தமாக நட்சத்திர ஹோட்டல் களுக்குச் சென்றபோதெல்லாம் இவ்வாறு நடந்துகொள்ள முயற்சித்திருக்கின்றேன். எப்படிக் கழுவினாலும் ஏழ்மை மறைந்து விடாத எனது முகத்தில், அந்த ஹோட்டல்கள் என்னை ஏற்றுக்கொண்டதே இல்லை. நகரத்தின் பிரமாண்டத்தோடு பொருத்திக் கொள்ள விரும்பிய - அறியாமையுடன் நடந்துகொண்ட - நாட்கள் அவை.
பின்னாட்களில் எனக்கும் அந்தப் பகட்டான இடங்களுக்குமான உறவைத் தெளிவாக்கிக் கொண்டபோது அவ்விஷயங்களில் இருந்து மிக இயல்பாக விலகியிருக்க முடிந்தது.

ஓரிடத்தில் நன்றாக உறங்க முடிந்தாலே அவ்விடத்திற்கும் எனக்கும் ஒத்திசைவு சரியாக இருப்பதாக உணர்ந்துவிடுவேன். எந்தச் சிரமமும் இன்றி முற்றிலும் புதியதோர் இடத்தில் நிறைவுகொள்ளும் அளவுக்குப் பகலுறக்கம். ஆழ்ந்து நீராடியதுபோல் புத்துணர்வைப் பெற்றிருந்தேன். கண்டிருந்த உவப்பான கனவை நினைவுகொள்ள முடியவில்லை.

திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது சகோதரரும் பிற்பகலில் வெள்ளைநிற லேண்ட்ரோவர் காரில் வந்தார்கள். காரை விட்டு இறங்கியதும், மாளிகையை ஒரு சிறிய வீட்டைப் பார்ப்பதுபோல் பார்க்க முயன்று, மிகவும் அண்ணாந்து பார்க்க நேர்ந்தது. குளிர் கண்ணாடியைக் கழற்றிவிட்டு முகச் சுருக்கத்துடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். என்னோடு எனது சௌகர்யங்கள் குறித்து சிறிது உரையாடினார். தயாரிப்பாளரின் சகோதரர் மாளிகையை வியந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் சொந்தமாக அப்படி ஒரு மாளிகை என்ற கனவு உற்பத்தியாகி இருக்கலாம். அவர் அந்தக் கண்ணாடியால் கவரப்பட்டவர்போல் அங்கே சென்று தன்னைப் பார்த்தார்; தலையைக் கோதினார். கால் சொக்காய்களில் இரண்டு கைகளையும் நுழைத்து, குல்லாயைச் சரிசெய்து நாவை ஈரப்படுத்தினார். ஒரு கதாநாயகனுக்கு இணையாகத் தன்னை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நின்று பார்த்தார். பின்பு தயாரிப்பாளருடன் வந்து ஊஞ்சலில் அமர்ந்தார்.

தயாரிப்பாளர் எழுந்து மாளிகையின் சுற்றுக்கூடத்தை நோக்கி கம்பீரமாகச் சென்றார். செல்லும்போது இருந்த உற்சாகம் திரும்பியபோது இல்லை. கண்ணாடியில் சட்டையைச் சரிசெய்து, காலரை இழுத்துவிட்டு, தங்கச்செயின் புரள அப்படியும் இப்படியும் அசைந்து பார்த்தார். நிஜத்தையும் பிம்பத்தையும் ஒருசேர நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் தங்களைக் கட்டடத்தின் உரிமையாளராகக் காட்டுவதற்கு அல்லது மாளிகைக்குப் பொருத்தமான நபர்களாகத் தங்களைத் தாங்களே நம்பிக்கொள்வதற்கு என்னென்னவோ செய்துகொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் கொண்டவர்தான். அவர் நிச்சயம் அந்த மாளிகைக்குப் பொருத்தமாகத்தான் இருப்பார் என்ற எனது எண்ணம் உண்மையாகவில்லை. ஆனாலும் தன்னுடைய செல்வத்துக்குப் பொருத்தமான ஒரு மாளிகையில்தான் இருக்கின்றோம் என்பதை இறுதிவரை பொருத்திவிட முயன்று தோற்றுப்போனார்.



இல்லாததைக் காட்டும்படி கண்ணாடி இன்னும் கற்றுக்கொள்ளவில்லைதான்.

இம்மாளிகைக்கு வருபவர்களுக்கு ஒரு சம்பிரதாயமான தொடக்கத்தையும் முடிவையும் மாளிகையே வழங்கும்படி இக்கட்டடத்தின் உரிமையாளர் செய்திருந்தார். வருபவர்கள், மாளிகையின் தோற்றத்தில் உருவாகும் வசீகரத்தில் வீழ்ந்து, சுற்றிப்பார்க்க ஆரம்பித்து, உற்சாகமாகி, பின்பு களைப்படைந்துவிடுதல். கடைசியாக வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதுபோல மாளிகையிலிருந்து வெளியேறிவிடுவது  தற்காலிகமான ஒரு முடிவுரை. இந்த வெளியேறுதலுக்கு மாபெரும் உதவிசெய்வது அந்தச் சுவர் கண்ணாடிதான் என்பதை நான் அனுமானித்திருந்தேன்.

சாயங்காலம் யாருமற்ற கடற்கரை ஓரமாக தெற்கு திசை நோக்கி கிழவருடன் நீண்ட நடை. அவர் சாம்பல்நிற வேட்டியும் வெள்ளை நிற ஜிப்பாவும் அணிந்திருந்தார். எதுவும் பேசிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கவில்லை. மணலில் புதையும் கால்களை எடுத்து எடுத்து நடந்தபடி காற்றில் புடைக்கும் ஆடைகளை அதன்போக்கில் விட்டபடி கடலைப் பார்த்துக்கொண்டும் செல்லவேண்டிய இலக்கு ஏதோ ஒன்று இருப்பதான கற்பனையிலும் நடந்துசென்றோம். மலையடிவாரத்தில் நடந்தபோது மேகங்கள் ஆகாயத்தை மறைப்பதுபோல மலைகளின் நிழல்கள் கடலில் பரவியிருந்தன. ஒரு சுழற்சியாக மீண்டும் கடற்கரைக்கே வந்தோம். இச்சுழற்சியின் மத்தியில் இருக்கும் பொருளாக மாளிகை எனக்குத் தோன்றியது.

இருளில் மறைந்த கடலில் அலைகளின் சத்தமும் கட்டுக்கடங்காத காற்றும் கடலின் இருப்பாக மாறியிருந்தது. கிழவர் பெரிய பெரிய விறகுகளைக் கொண்டுவந்து காற்று மட்டுப்பட்டிருந்த வெள்ளத் தடுப்புக்கு முன்பு மணலில் போட்டு நெருப்பூட்டினார். நானும் அவருக்கு உதவிகள் செய்வதை அவர் தடுக்கவில்லை. ஏற்கெனவே ‘கேம்ப் ஃபயர்’ போடப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கே இருந்தன. இது முற்றிலும் நான் எதிர்பாராதது. அவர், ‘பிளாக் டீ’ தயாரித்தார். எனக்கு இது பிடிக்குமென்று செய்தாரா அல்லது அவருக்காகச் செய்தாரா என்பதைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. அவரின் செயல்களில் இருவருக்குமான தேவைகள் நிறைவுடன் இருந்தன. நட்சத்திரங்களின் கீழே நெருப்பொளியில் அமர்ந்தபடி கடற்காற்றை அனுபவித்துக்கொண்டு, நாங்கள் அமைதியாக துவர்ப்பும் இனிப்புமான சூடான தேநீரைப் பருகினோம். இன்னொருவர் அருகில் இருந்தும் நான் எனது தனிமையில் ஆழ்ந்திருக்க முடிந்தது. இது அவருக்கும் நேர்ந்திருக்கலாம். அம்மாளிகையின் தனிமையும் எங்களது தனிமையும் இணைந்திருந்த அச்சமயம், பற்றியெறிந்துகொண்டிருக்கும் நெருப்பைப்போல நான் தன்னெழுச்சி கொண்டிருந்தேன்.

இரவு குறைவான ஒளியில் மாளிகை மர்மமான ஒன்றாக மாறியிருந்தது. காத்திருக்கும் அனைத்து அறைகளும் ஏதோ ஒரு கட்டாயத்தில் யாருமற்று மூடப்பட்டிருப்பதும் எல்லாமும் அடங்கிவிட்டதான உணர்வு குறித்து நான் கொஞ்சம் நினைத்தேன். பச்சரிசி சாதத்தில் தேங்காயும் சிறிய வெங்காயமும் மசாலாப் பொருட்களும் சேர்த்து, அவர் ஒரு சாதம் தயாரித்தார். எனது நாவிற்கு அது புதிய ருசியாக இருந்தது. வராந்தாவில் தொடர்ந்தோடிய காற்றலை இதமூட்டிக்கொண்டிருந்தது. இருவரும் அங்கேயே அகலமான நாடா கட்டில்களில் படுத்துக்கொண்டோம். நிலவின் மென்நீல இருட்டு, அடர்த்தியற்ற மேகமூட்டத்தைப் போல எங்கள்மீது படர்ந்திருந்தது. தூரத்தில் ஒலிக்கும் அலைகளின் சத்தம் பிரபஞ்சத்தின் ஓய்வின்மையைச்  சொல்லிக்கொண்டிருந்தது. அவர் அதை எனக்குச் சொன்னார். அந்த இரவில் அவரது குரல் மிக அழகாக, பண்பட்டதாக என்னைக் கவர்ந்தது.

நாளை இந்த மாளிகையின் உரிமையாளர் வருகிறார் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார். மாளிகையின் உரிமையாளர் பெயர் அரவிந்த் தியாகராஜன். இப்படி ஒரு மாளிகையை உருவாக்கவேண்டுமென்று திட்டமிட்ட மனிதர்; இது வேண்டாமென்று தள்ளிவிட்டு வேறிடத்திற்கு சென்றுவிட்ட மனிதர்; அவரை நேரில் பார்க்க ஆர்வம் கொண்டேன்.

அரவிந்த் தியாகராஜன் புகைப்படத்தை மாளிகையின் உள்ளே பார்த்தபோது அவரை ஏற்கெனவே போஸ்டர்களில் பார்த்திருப்பதைக் கிழவரிடம் சொன்னேன். அவர் அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. சமீபமாக வெளிநாட்டு வங்கி ஒன்றின் ஆண்டு விழாவை முன்னிட்டு முதல்வரைச் சந்தித்திருந்த அந்தச் செய்தியை தினசரியில் படித்திருந்தேன். இதன் பின்னர் நகரின் மிகப் பிரதான இடங்களில் அவரது கட்டடங்களில் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருப்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. இதில் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது, இந்தக் கட்டடங்கள் பலவற்றை நான் ஒரு பாதசாரியாக வேடிக்கை பார்த்தபடியே கடந்திருக்கின்றேன்.



அரவிந்த் தியாகராஜன் வருவதற்கான முன்னேற்பாடுகள் ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன். ஊஞ்சலில் கிழவரின் வெற்றிலைப்பாக்குப் பைகூட அகற்றப்படவில்லை. கேட்டில் கார், ஹாரனை அடித்த பின்புதான் கிழவர் நடந்துசென்று கேட்டைத் திறந்து சிரித்தார். வணக்கமும் வைக்கவில்லை. வெறும் சிரிப்புதான். அரவிந்த் தியாகராஜனே ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். அது கறுப்பு வண்ண ஜெர்மன் போர்ஷே கார். ஷோரூமிலிருந்து வீட்டுக்கு வரும் பளபளப்புடன் இருந்தது.  அரவிந்த் தியாகராஜன் தங்க ஃபிரேமிட்ட பவர் கண்ணாடியும், லினன் சட்டையும் ஜீன்ஸ் பேன்ட்டும் எளிமையான தோற்றம் தரும், ஆனால் விலையுயர்ந்த தோல் செருப்பும் அணிந்திருந்தார். தோல் சீவப்பட்ட உருளைக்கிழங்கிற்கு சற்றே நிறமேற்றப்பட்டது போல இருந்தார். வாழ்க்கையை எதிர்கொண்ட அனுபவங்களையும் எதைக் குறித்தும் அச்சமற்ற தன்மையும், அதேசமயம் விருப்பமான ஒன்றை இழந்துகொண்டிருக்கும் மெல்லிய சோகமும் அவரிடம் இருந்தன. நிச்சயம், புகார்கள் நிறைந்த முகமாக இல்லை.

அரவிந்த் தியாகராஜன் காரிலிருந்து இறங்கி, படிக்கட்டில் மேலேறினார். கீழ் வாசலில் நின்ற நான், என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். மரியாதை நிமித்தமான சம்பிரதாயமான உரையாடலுக்குப் பிறகு உள் படிக்கட்டை நோக்கிச் சென்றார். அம்மாளிகையினுள் அவர் செல்வதை நான் அக்கண்ணாடியில் கிட்டத்தட்ட ஒருசேரப் பார்த்தேன். அவர் ஒரு பணக்கார விருந்தாளியைப்போல கண்ணாடி வழியே தோன்றி மறைந்தார். இந்த மாளிகையை உருவாக்கிய எஜமானன், எப்படி இந்த மாளிகையுடன் பொருத்தமற்றுப் போக முடியும்? அவரோ கண்ணாடிப் பக்கமே திரும்பவில்லை. நான் உண்மையிலேயே ஏமாற்றப்பட்டேன்; அல்லது குழம்பிப்போயிருந்தேன். உருவாக்கியவரை விஞ்சிவிடும் இதன் கம்பீரத்துடன் யார் போட்டியிட முடியும்?

இம்முறை கேம்ப் ஃபயர் கடலுக்கு சற்று நெருக்கமாக தடுப்புக்கு அப்பால் போடப்பட்டது. நம்பவியலாதபடி அரவிந்த் தியாகராஜனும் விறகுகளைக் கொண்டுவந்து போட்டு முழுமையாகப் பங்கெடுத்துக்கொண்டார். நெருப்பொளியின் முன்பு மடக்கு நாற்காலியில் அரவிந்த் தியாகராஜன் அமர்ந்து ஸ்காட்ச் அருந்தினார். மதுவருந்துவதற்கு என்னை வற்புறுத்தவில்லை. கிழவர் அதன் பிறகு அங்கு வரவில்லை.

அரவிந்த் தியாகராஜன் என்னைப் பற்றிக் கேட்டு, என்னைப் பேசத் தூண்டினார். நான் முடிந்தவரை என்னைச் சுருக்கமாக சொல்லிக்கொண்டதை அவர் கண்டுகொண்டு சிரித்தார். நான் தயக்கமின்றிக் கேட்டேன். ‘`ஏன் இத்தனை  பெரிய மாளிகையைக் கட்டிவிட்டு வெளியேறி
விட்டீர்கள்?’’ என்றேன்.

அவர் சொன்னார்... ‘`இது ஒரு சொத்தாக மட்டுமே பராமரிக்கப்படுகிறது. சில நண்பர்களின் விருப்பத்தில் தவிர்க்க முடியாதபடி அவ்வப்போது விருந்தினர் மாளிகையாகவும் செயல்படுகிறது. இக்கட்டடங்கள் கூடிய விரைவில் ஆதரவற்றோருக்கான கல்வி நிறுவனமாக மாறிவிடும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எந்த ஒன்றுக்கும் பணம் வசூலிக்கப்படுவதில்லை’’ என்றார்.

``அது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். நீங்கள் இனி இந்த மாளிகை என்னவாகப்போகிறது என்று சொல்கிறீர்கள். நான் ஏன் இவ்வாறு இருக்கிறது என்று கேட்கிறேன்’’ என்று அவருக்கு விளக்கினேன்.

அவர் சில விநாடிகள் என்னை ஆழ்ந்து பார்த்துச் சிரித்தார். அவர் நிறம் மேலும் சிவப்பாக நெருப்பொளியில் அர்த்தம் பொதிந்ததாக மாறிக்கொண்டிருந்தது. அநேகமாக இந்தக் கதையை அவர் நிறையப் பேருக்குச் சொல்லிக் களைத்திருக்கலாம்.

அவர் அமைதியாக இருந்தார். பின்பு அவர் கேட்டார்... ‘`நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?’’

‘`ஆமாம்.’’

இந்த முறை அவர் அமைதிகாத்தது எதையோ சொல்வதற்கான முன்தயாரிப்பாக இருக்குமென்று நான் நினைத்தது பொய்யாகவில்லை. அவருக்கு என்மீது குறைந்தபட்ச அபிப்ராயம் ஏற்பட்டிருக்கலாம். பின்பு அவர் பேசச் செய்தார். அவர் சொன்ன கதை இதுதான்...

“நான் மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன். இந்த வீட்டை என் தந்தையார்தான் உருவாக்கினார். அவர் பெயர்தான் தியாகராஜன். இந்த மாளிகை,  1960-களில் அவர் ஜெர்மனியில் இருந்து வந்த பிறகு கட்டிய அவரது கனவு மாளிகை.  இதைக் கட்டிமுடிக்க அவருக்கு ஏழு வருடங்கள் ஆகின. இவ்வீட்டிற்கான சமையல் பாத்திரங்களிலிருந்து புத்தர் சிலை வரை அனைத்துப் பொருட்களும் ஜெர்மனியில் இருந்தே கப்பலில் கொண்டுவரப்பட்டன. அப்பா இரண்டு வருடங்கள் மட்டுமே இங்கே வசித்தார். பிறகு இந்த வாழ்க்கையின் போக்கிலிருந்து வெகுவாக விலகிப்போனார்.

எல்லா மனிதர்களுக்கும் வீடு என்பது ஓர் அடிப்படை ஆசை. இல்லாதவர்களுக்கு அது  ஒரு  கனவு.  பணம்  வைத்திருப்பவர்களுக்கு அது அந்தஸ்தின் அடையாளம். பல சமயங்களில் பெரிய விஷயங்களுக்கான திறப்பு மிகவும் சிறிய விஷயங்களில்தான் தொடங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அவ்வாறுதான் அவருடைய வாழ்க்கையிலும் அது நிகழ்ந்தது.



அவர் ஒருமுறை கர்நாடகாவிலுள்ள ‘ஹம்பி’க்கு சுற்றுலா போயிருந்தார். அங்கே கிருஷ்ணதேவராயர் ஆட்சிசெய்த அந்த இடங்கள் எத்தனையோ மைல்களின் அளவுக்குப் பரந்துவிரிந்து இருந்ததைப் பார்த்தார். எல்லாம் பாழடைந்து போயிருந்தன. கட்டடக் கலை மேல் அவருக்கு ஆர்வம் இருந்ததால், ஒன்பது நாட்கள் தங்கிச் சுற்றிப்பார்த்தார். கடைசி நாள் அவர் அங்கே  இருந்த மலைக்கோயிலை அடைந்தார். அங்கிருந்து அவர் ஒட்டுமொத்தமாக கிருஷ்ணதேவராயர் அரசாட்சி செய்த இடத்தைப் பார்த்தபோது அவர் மனம் அடைந்ததெல்லாம் பிரமிப்பும் வெறுமையும்தான். அன்று மதியம் அங்கே இருக்கிற சிவன் கோயிலில் வரிசையில் நின்று ‘அன்னதானம்’ வாங்கிச் சாப்பிட்டார். அவருக்கு சாப்பிடும்தோறும் அழுகை வந்துகொண்டிருந்தது. அது என்ன வகையான கண்ணீர் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாளிலிருந்து துங்கபத்ரா நதியில் தினமும் நீராடுவதும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளைப் பாடுபவர்களோடு ஊர் சுற்றுவதுமாக அவரின் போக்கு மாறிவிட்டிருந்தது.

ஹம்பியிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்பியபோது கடுமையான காய்ச்சலில் விழுந்தார். உடல் இளைத்துக்கொண்டே வந்து வேறொருவராக மாறினார். அவருடைய நிறம் மாறியது; குரல் மாறியது; உடைகள் மாறின.

அப்பா தன்னுடைய  தோட்டக்காரருக்காக சிறியதாக ஒரு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். மாடியிலிருந்து தோட்டக்காரரின் வீடு தெளிவாகத் தெரியும். அப்பா ஒருநாள், தோட்டக்காரரின் வீடுதான் தன்னுடைய வீடென்றும், இந்த மாளிகை ஏதோ ஒரு பிசாசு வந்து தன்னை ஆட்டிவைத்து கட்டவைத்துவிட்டது என்றும் சொல்ல ஆரம்பித்தார்.

அரவிந்த் தியாகராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நான் மீதிக் கதையைக் கேட்க  நினைத்து,‘`பிறகு?’’ என்றேன்.

``பிறகென்ன, அந்தத் தோட்டக்காரருக்கு தன்னுடைய நிறுவனத்தில் நல்ல வேலையைக் கொடுத்து அனுப்பிவிட்டு, அவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்’’ என்றார்.

நான் கடக்க முடியாத அமைதியில் உறைந்திருந்தேன். காற்று ஊழியிடுவதுபோல் அலைந்தது. ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிஜத்திற்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். அவரை ஊர்ஜிதம் செய்துகொள்ள இருளில் பார்த்தேன். அவர் கிழவரின் வீட்டுப் பக்கம் திரும்பி, புருவங்களை உயர்த்திப் புன்னகைத்தார். நம்ப முடியாத அந்த விநோதத்தை நான் நேரில் அனுபவிப்பதற்காகவே அங்கு வந்திருப்பேன் என்று நினைத்தேன். கிழவர் அங்கே இருளுருவமாக அந்தச் சிறிய வீட்டு வாசலில் கோரைப்பாய்போட்டு கால் மேல் கால்போட்டுப் படுத்திருந்தார். தன்னையே பிறராகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவரை நான் அந்த இருளில் சற்றே அச்சத்துடன் உணர்ந்தேன்.

மறுநாள் அதிகாலையிலே நான் அந்த விசித்திரத்தையும் பார்த்தேன் அல்லது தரிசித்தேன். தோட்டத்திலிருந்து நான் மாளிகையைச் சுற்றிக்கொண்டு அவரை யூகித்தபடி முன்பக்கம் வந்தேன். இப்பிரபஞ்சத்தின் நிலையாமையை அறிந்துகொண்ட இம்மாளிகையின் நாயகன், கம்பீரமான மீசையுடனும் மடித்துக்கட்டிய வேட்டியுடனும் வார் செருப்புபளிங்குத் தரையில் சத்தமிட நடந்து வந்துகொண்டிருந்தார். அவரது நடை கண்ணாடியில் தெரிந்துகொண்டிருக்க, முன்பக்கம் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஆனால், தூணருகே நான் நிற்பதை அவர் கவனித்திருக்கவில்லை. அவர் மிக நிதானத்துடனும் கம்பீரத்துடனும் ஊஞ்சலில் அமர்ந்து, லகுவாக உந்தி ஆடினார். ஊஞ்சலே விரும்பி அவரைத் தாலாட்டும்படி லயத்துடன் ஆடினார். இதனூடாக மடியிலிருந்து வெற்றிலைப் பையை எடுத்துப் போடலானார். அம்மாளிகையும் எதிரில் இருந்த காடும் மலைகளும் கண்ணாடியில்  அவருடன், அவருடைய லயத்தில் ஆடிக்கொண்டிருந்தன!



 சிறுகதை 
பூதக்கண்ணாடி 
ஜே.பி. சாணக்யா
https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/JGS0Vl6uJPk


         சிறுகதை          சிறுகதை 

பூதக்கண்ணாடி 
ஜே.பி. சாணக்யா 
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் 
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் 
பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச 
விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் 
அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து 
சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் 
தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை 
முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. 

இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற 
வேசியாகப் பாண்டிச்சேரிப் பேருந்து நிலையத்தில் அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பொது 
இட மென்ற எண்ணமற்று மாராப்பை விலக்கிப் பேருந்து நிலையத்திலிருந்தவர்கள் சிலரைப் 
பகிரங்கமாக விபச்சாரத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தாள். அப்போது இளவழகன், பொத்தான் 
மாற்றிப் போடப்பட்ட அழுக்கடைந்த, மேல் சட்டையுடன் அழுதுகொண்டே கையில் ஒரு 
கொய்யாப்பழத்தைப் பிடித்தவாறு அவளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். பேருந்து 
ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தகாத இடத்தில் சிறுநீர் கழிக்கும் நாயை விரட்டுவதுபோல் 
அவளை விரட்டினார்கள். குடி மலிந்த அந்நகரத்தில் அவள் வெட்கப்பட்டுப் போவதுபோல் 
சாடைகாட்டினாளே ஒழிய வளைய வளைய வரும் வீட்டுப் பூனையைப் போல் அங்கேதான் 
சுற்றிக்கொண்டிருந்தாள். 

அன்று மதியம் அங்கிருந்த காவலர்களிடம் அவள் ஒப்படைக்கப்பட்ட பிறகு இளவழகனின் அம்மாவின் 
தங்கை வத்சலாவும் அவள் கணவன் தங்கப்பனும் வந்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து வந்தார்கள். 
இடைப்பட்ட அந்தப் பகல் நேரத்தில் காவல் நிலையத்தில் இளவழகனின் தாய் அழைத்தபோதும் அழையாத 
நேரத்திலும் காவலர்கள் பிஸ்கட்டும் டீயும் வாங்கிக்கொடுத்து அவளைப் 
பயன்படுத்திக்கொண்டார்கள். இளவழகன் அறியாமை கலந்த பயத்துடன் அழுது வடிந்து அழுக்கேறிய 
கன்னங்களுடன் அந்தக் காவல் நிலையத்தில் கொய்யாப்பழத்தையும் பிஸ்கட்டுகளையும் 
பிடித்துக்கொண்டு மர பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். இதை எனக்கு வத்சலா எங்கள் வீட்டில் அந்தக் 
காலை நேரத்தில் மனம் புழுங்கிச் சொன்னாள். 

எங்கள் கிராமமான பூதங்குடி, சிதம்பரத்திற்கு மேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் 
வீராணம் ஏரியில் சென்னைக்கு நீரேற்றும் முகப்பின் முன்னும் புகழ்பெற்ற நாச்சியார் சன்னதியின் 
பின்னும், கூச்ச சுபாவம் கொண்ட மனிதனைப் போல் எல்லாப் பிரதான சாலைகளிலிருந்தும் சற்று 
உள்ளடங்கி இருந்தது. வத்சலா வயல் வேலைகளுக்குப் போகாத நாட்களில் அதிகாலையில் வந்து 
பாட்டிக்கு உதவியாகச் சில வேலைகளைச் செய்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தாள். வத்சலாவுக்கு 
மாநிறத்திற்கும் கீழான நிறம். வடிவானதும் திடகாத்திரமானதுமான நடுத்தர உடல்வாகு. 
தங்கப்பனுக்கு ரத்த சோகை நோய்க்கூறின் வெளுப்பில், கன்னங்கள் உப்பி, கண்கள் சிறுத்து, 
பற்களெல்லாம் மஞ்சள் படிந்த பலவீனத் தோற்றத்தை வெளிப்படுத்தும் தட்டையான உருவம். வீங்கிய 
நரம்புகளுடன் அவனது கைகள் மெலிந்திருந்தன. தங்கப்பன் அருகிலுள்ள அழுக்கடைந்த டவுனில், 
சினிமா தியேட்டரின் எதிரே உள்ள, எப்போதும் மெல்லிய இருட்டுப் பரவி நிற்கும், சிறிய 
ஹோட்டலில் சர்வராகப் பணிபுரிந்துகொண்டிருந்தான். அந்த டவுன் என்பது ஒரு ஊரிலிருந்து 
மற்றொரு ஊருக்குச் செல்லும் வழியில் இருபக்கமும் விரிந்திருந்த கடைத் தெருவாகும். சில 
டிராக்டர் லேத் ஒர்க்ஸ் கடைகள், சிமிண்டு ஒர்க்ஸ் கடைகள், வீட்டு விறகுகள் உட்படத் தைல மரங்கள் 
நிரம்பிக் கிடக்கும் டிம்பர் டிப்போக்கள், ஒரு தர்மாஸ் பத்திரி, ஒரு மேல்நிலைப் 
பள்ளிக்கூடம், ஒரு சில மளிகைக் கடைகள், பரோட்டாக் கடைகள், அவற்றோடு சிறியதும் 
பெரியதுமான குட்டிக் கடைகளால் நிரம்பியிருந்தது அந்தத் தெரு. பெரும்பாலும் சந்தை 
நாளான புதன்கிழமைகளில் மட்டுமே கூட்ட நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் 
அக்கடைத்தெரு, மற்ற நாட்களில் விரைந்துசெல்லும் தொலை தூரப் பேருந்துகள் மற்றும் லோடு 
லாரிகளின் உறுமல்களிலும் விதவிதமான ஹாரன் சப்தங்களிலும் ஒரே மாதிரியான செயலற்ற 
தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு புழுதியில் களைப்புற்றுக் கிடந்தது. தங்கப்பன் பணிபுரிந்த 
கடை சினிமா விடும் நேரமும் தொடங்கும் நேரமும் சற்றுக் களைகட்டும். இரண்டாவது ஆட்டம் 
சினிமா முடிந்த பிறகு சாப்பிட வரும் ஒரு சிலருக்காகத் திறந்திருக்கும் ஒரே கடை 
இதுதான் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்ப அவனுக்கு சில்வண்டுகள் பாடித் தொலைக்கும் 
நள்ளிரவு ஆகிவிடும். சில சமயம், அமைதியைச் சிதறடித்துச் சாலைகள் நடுங்குவதான பொய்த் 
தோற்றத்தை ஏற்படுத்தும் காலியான டிராக்டர்களில் வீடு வந்து சேர்வான். பெரும்பாலும் 
வீட்டிலிருந்து கடைக்கு நடந்தோ டிராக்டர்களில் தொற்றிக்கொண்டோ செல்வதை நான் எனது 
வழக்கமான வாழ்க்கையினூடாகவே பார்த்திருக்கிறேன். 

இளவழகனுக்கு ‘பூதக்கண்ணாடி’ எனும் பெயர் எங்கள் ஊருக்கு வந்த பின்பே ஏற்பட்டது. 
இவ்வூருக்கு வந்த நான்கு நாட்களில் இளவழகனின் தாய் அவனை அங்கேயே விட்டு விட்டு 
ஓடிவிட்டிருந்தாள். மாலை நேரத்தில் கண்கள் சரியாகத் தெரியவில்லை என்று அவன் சொன்னதால் 
தங்கப்பன் அவனைத் தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றான். அவனைப் பரிசோதித்துவிட்டு இது 
மாலைக் கண் நோயில்லை என்று கூறி அருகிலுள்ள பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குப் போகச் 
சொல்லி சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குச் 
சென்றுவந்தபோது இருவரும் சூரிய ஒளி எதிரொளித்து அலையக் கண்ணாடி போட்டுக்கொண்டு 
வந்தார்கள். அவர்களின் முகங்கள் ஒரே நாளில் பழைய தன்மையிலிருந்து விலகிவிட்டிருந்தன. 
கண்ணாடி நழுவி விழுந்துவிடும் என்ற எண்ணத்தில் இளவழகன் எல்லோரையும் சற்று முகத்தைத் 
தூக்கியே பார்த்துக்கொண்டிருந்தான். சிறுமிகள் அவனைத் ‘தாத்தா’ எனக் கூப்பிட்டுப் 
பரிகாசம் செய்தார்கள். அவன் வயயொத்தவர்கள் அந்தக் கண்ணாடியை வாங்கிப் போட்டுப் 
பார்த்தபோது அதிர்ச்சியூட்டும்படி எறும்புகள்கூடச் சுண்டு விரல் அளவுக்குப் பெரிதாக 
நகர்ந்து கொண்டிருந்தன. பிறகு அவர்கள் அவனை மிக இயல்பாக ‘பூதக் கண்ணாடி’ என்று 
கூப்பிட்டார்கள். 

சுற்றிலும் மண் சுவர் எழுப்பப் பட்டுக் கரும்புச் சருகுகளாலான கூரையுடன் இருந்த அவர்களின் 
வீடு வயல்கள் தொடங்கும் மேற்குப் பார்த்த திசையில் மக்கள் புழக்கமில்லாத மீன் குத்தகைக்கான 
குளக்கரையில் இருந்தது. அதன் அருகில் மாவிலிங்க மரமொன்று வீட்டுக்குத் துணையைப் போல் 
உயர்ந்து பரந்து வானம் பார்த்துக்கொண்டிருந்தது. மனிதர்கள் உண்ண முடியாத பழத்தைத் தரும் 
அம்மரம் பழுக்கும் பருவத்தில் பறவைகளின் கூட்டு இரைச்சல்களால் நிரம்பியிருக்கும். வத்சலா 
குளிப்பதற்கு ஊருக்குள் உள்ள குளத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் சில சிமிண்டுக் 
கற்களைப் பொறுக்கி வந்து தோட்டத்தை ஒட்டிப் படித்துறை உருவாக்கிக் கொண்டு அங்கேயே 
துணிதுவைத்துக் குளித்துக்கொண்டாள். 

இளவழகன் எங்கிருந்தாலும் கருப் பையில் உறங்கும் குழந்தைபோல அமைதியாக முழங்கைகளால் 
கால்களைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். வேடிக்கை பார்ப்பதன் பொது 
அம்சங்களைத் தாண்டி வேடிக்கைப் பொருட்களின் முக்கியத்துவங்களை மீறி அவன் வேடிக்கை 
பார்ப்பதில் அத்தனை ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். தங்கப்பன் அவனை விஜயதசமி அன்று 
பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தான். அவன் மதிய சாப்பாடு முடியும் முன்னரே ஓடி 
வந்துவிட்டான். தங்கப்பன் மதிய சோற்றுக்காகப் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளைப்போல் அவனைப் 
போகச் சொன்னான். தனக்கு மதிய சோறு வேண்டாமென்று இளவழகன் கூறிவிட்டான். வேறு 
வழியின்றித் தங்கப்பன் அவனைத் தன்னுடைய ஓட்டலுக்கே அழைத்துச் சென்றான். அங்குச் சில்லறை 
வேலைகளுக்கு அவன் பயன்பட்டுக்கொண்டிருந்தான். சினிமா தியேட்டருக்கு எதிரே உள்ள ஓட்டல் 
என்பதால் இளவழகன் அடிக்கடி திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றுவிடுவான். அங்கும் அவனுக்கு 
வேடிக்கை பார்ப்பது பிடித்தமானதாக இருந்தது. ஒருவேளை அங்கு அனைவரும் ஒன்றைப் 
பார்த்துக்கொண்டிருப்பது என்பது அவனை வேற்றுமையில்லாத ஆளாக உணர வைத்திருக்கும். 
திரைப்படத்தில் என்ன பிடித்தது என்று கேட்டால் எதுவும் பேசாது நிற்பான். கேள்வி 
கேட்டவர்களே ‘போ’ என்று சொல்லும்வரை நின்றுகொண்டிருப்பான். அவன் தங்கப்பனிடமும் ஊர்ச் 
சிறுவர்கள் சிலரிடமும்தான் எப்போதாவது சிரித்துப் பேசுவதைப் பார்க்க முடியும். அதுவும் 
தனக்குத்தானே பேசிக்கொள்ளும் அளவில்தான். 

அதிகாலையில் அவர்கள் இருவரும் ஓட்டலை நோக்கி, எதுவும் பேசிக் கொள்ளாமல், சோகமான 
இசைத் துணுக்கொன்று மீண்டும் மீண்டும் அலுப்புடன் ஒலிப்பது போல ஒரே சீரான நடையில் தேசிய 
நெடுஞ் சாலையின் ஓரத்தில் நிதானமாக நடந்து சென்றுகொண்டிருப்பார்கள். ஊருக்குள்ளே 
திருவிழா சமயங்களில் அவர்கள் பொதுக்காரியத்தில் ஈடுபடும் நடவடிக்கைகள் கூட 
நிழலைப்போல மௌனமாகவே இருந்தன. இருவரும் தனிமையிலும் ஒத்த மனம் பெற்றவர்களைப் போல் 
அமைதியாக அமர்ந்து எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 
திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வத்சலாவுக்குக் குழந்தை பிறக்குமென்ற 
எதிர்பார்ப்பு இன்னும் பூர்த்தியாகவில்லை. தங்கப்பனின் ஆரோக்கியம் ஊரறிந்த கதை என்பதால் 
எல்லோரும் அவனையே குற்றம் சொன்னார்கள். அவனது ஆரோக்கியக் குறைவிற்கும் அவளுடனான 
அவனது தாம்பத்திய உறவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த வத்சலாவும் அதையே 
சொல்வதாக ஒரு குற்றச்சாட்டாகத் தங்கப்பன் என்னிடம் சொன்னான். தங்கப்பனைத் தனக்குப் 
பொருத்தமில்லாதவனென்று நினைக்கும் வத்சலாவுக்கு எப்போதும் அவனைப் பிடித்ததில்லை. 
பெற்றோர்களற்ற அவளுடைய வாழ்க்கையில் குடும்ப உறவினர்கள் ஏற்பாடு செய்த திருமணம் அது. 
வாழத் தொடங்கிவிட்ட பிறகு தனக்கு விதிக்கப்பட்டது என்று அவனை சகித்துக்கொண்டாள். இது 
தங்கப்பனுக்கும் தெரிந்ததுதான். பகலில் அவனுடன் ஏதாவது தெருவில் பேசுவதாயிருந்தால் 
சத்தமாக அவன் எதற்கும் லாயக்கற்றவன். தான் மட்டுமே அவனைச் சகித்துக்கொண்டிருக்க முடியும்’ 
எனும்படி பகிரங்கமாக அனைவரின் முன்னிலையிலும் தொண்டை நரம்புகள் வெளியே தெரியக் 
கத்திப் பேசுவாள். அவன், காரியவாதி சிந்தனை வசப்பட்டுத் தலைசாய்த்து நடப்பது போலக் 
கிளம்பிச் சென்றுவிடுவான். ஏனென்றால் அவன் யாருக்கும் தெரியாதபடி அவளை 
விரும்பிக்கொண்டிருந்தான். வார்த்தைகளைச் சமயத்திற்கு உபயோகப்படுத்தத் தெரியாதவன் 
அப்படித்தான் ஒரு பெண்ணைக் காதலித்திருக்க முடியும். 

இளவழகன் அவனுக்கு அமைந்த உள்ளார்ந்த தனிமையுடன் வயலில் வளரும் ஒற்றைப் பனைமரக் கன்றைப் 
போல வளர்ந்துகொண்டிருந்தான். வத்சலா அவனுக்குத் தான் செய்யவிருக்கும் ஒரு கடமை 
திருமணம் தான் என்று கருதி அவனைப் பற்றிப் பாட்டியிடம் பேசும் சமயங்களிலெல்லாம் தன்னுடைய 
நிறை வேறாத கனவுக்கு மாற்று செய்வது போல உரிமையுடன் வெளிக்காட்டும் தாய்மையுடன் 
பேசுவாள். 

அந்த வருடக் கோடைக் காலத்தின் ஒரு மாலை நேரத்தில் காகங்கள் பறந்தமர்ந்துகொண்டிருந்த 
மாவிலிங்க மரத்தின் கீழ், எங்கள் வயலில் இருந்து பார்த்தால் தெரியும் தூரத்திலும் பேசினால் 
கேட்காத தூரத்திலுமாக மூவரும் அவர்களின் வீட்டைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தார்கள். இளவழகன் 
மூங்கில்களில் ஏறி ஒட்டடைகளை அடித்தான். மறுநாள் ஒரு நாட்டுக் கொத்தனாரை 
வைத்துக்கொண்டு கூரைக்குப் புதிய கரும்புச் சருகுகளை வேய்ந்தார்கள். ஊறவைத்த 
தென்னம்பாளைகளை மர ஊசியில் கயிறாகக் கோர்த்துக் கொடுக்கவும் கூரையின் வெளியே வரும் 
மர ஊசியை வாங்கி உள்ளே மாற்றிக் கொடுக்கவும் இளவழகன் உதவினான். நாங்கள் வேலை முடிந்து 
வீடு திரும்பும் சாயங்காலத்தில் தரைக்கு சிமிண்டுப் பால் ஊற்றி மெழுகிக்கொண்டிருந்தாள் 
வத்சலா. 

அனைவரும் ஒரே வரிசையில் படுத்துறங்கும்படி அவர்களுடைய வீடு இருந்தது. 
அடுப்படியிலிருந்து வரிசையாக வத்சலாவும் தங்கப்பனும் இளவழகனும் படுத்துக்கொள்வார்கள். 
அந்நாட்களின் தொடர்ச்சியில் ஒரு நாள் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோது இளவழகன் அவள் 
காலடியில் குத்துக்காலிட்டு அமர்ந்து அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாக வத்சலா 
எங்களிடம் சொன்னாள். அவளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அது திடுக்கிட வைக்கும் 
நடத்தையாகத்தான் இருந்தது. அவள் எழுவதைப் பார்த்ததும் அவன் அதிவேகத்தில் நகரும் பாம்பைப் 
போல் நழுவித் தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவள் தனது துணி விலகியிருந்ததா என 
யோசித்துச் சரிசெய்துகொண்டாள். எழுந்து தோட்டத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தவள் 
குழப்பத்துடன் வந்து படுத்துக்கொண்டாள். இது நிச்சயம் அவனுடைய பெண் விருப்பம் 
சம்பந்தப்பட்டது; பிள்ளைகள் வளர்வதே தெரியவில்லை; இன்னும் கொஞ்சம் வளர்ந்தவனாக இருந்தால் 
ஏதாவது திருமண ஏற்பாடு செய்யலாம்; இது சாதாரணமானதுதான் என்று நினைத்துச் சமாதானம் 
அடைந்தாள். ஆனால் அவளுக்கு வழக்கமான தூக்கம் அன்றிலிருந்து போய்விட்டது. 
மறுநாள் அந்தக் காலை நேரத்தில் நேற்றைய இரவின் யதார்த்தமற்ற தன்மையை இருவரும் புரிந்து 
கொண்டாலும்கூடப் புரிந்துகொள்ள முடியாத காரணமற்ற சங்கடங்களை உருவாக்கும் சூழலே 
அந்நேரத்தை நிர்வகித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இருவரில் யாராவது ஒருவருக்குத் 
தொடரும் தலை வலியாலோ பீதியூட்டக்கூடிய கனவுகளை எழுந்த உடன் மறந்துவிட்டதாலோ 
அப்படி இருக்கலாம். அது ஒரு மறைமுகமான யதார்த்தம். அவள் பாத்திரங்களைக் கழுவும் போது 
அவன் முகத்தைப் பார்த்தாள். கண்டுபிடிக்கவியலாத தூரத்தில் புதைந்திருந்த அவன் முகம் 
கண்ணாடியில் எதிரொலித்த சூரிய ஒளியின் ஆக்ரோஷமான கதிர் வீச்சால் மூடப்பட்டிருந்தது. 
அவள் அவனது பருவத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளே பேச்சுக் 
கொடுத்தாள். ஒளியின் கீழிருக்கும் இருட்டில் அவன் உதடுகள் அசைய அவன் வழக்கம்போலப் 
பேசினான். சமாதானத்தை, நியாயத்துக்கு மாறாக அவளே செயல்படுத்தியும் கூட. 
அடுத்தடுத்த நாட்களில் அவள் வயல் வேலைகளுக்குச் சென்றாள். இளவழகனும் தங்கப்பனுடன் 
ஓட்டலுக்குச் சென்றவன் புதன் கிழமைதான் வந்தான். தங்கப்பன் வராத சந்தை நாளான அந்த இரவு 
படுக்கையை விரித்தபோதுதான் வத்சலாவுக்கு அந்நிகழ்வை மறந்துவிட்டிருந்தது நினைவுக்கு 
வந்தது. அவன் தனது அக்காளின் மகன் என்பதும் தன் வீட்டில் வளரும் பிள்ளை என்பதும் மேலும் 
அவளுடைய தாய்மை உணர்வும் சேர்ந்து தான் அந்நிகழ்வைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள 
உதவியிருந்தன. அவள் ஆழ்ந்த கனவொன்றிலிருந்து விடுபட்டுப் புரண்டு எழுந்தபோது தான் 
அவன் மறுபடியும் தன் கால்களின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். 
இந்தமுறை அவள் அதிகம் விதிர்த்துப் போனாள். இது விபரீதம்; தவிர்க்க முடியாதது என்று 
உடனே உணர்ந்த அவள் அருவருப்பான உணர்ச்சியால் தீண்டப்பட்டாள். அவன் பழையபடி 
சென்றுபடுத்துக்கொண்டான். அதிர்ச்சியில் அவள் எழுந்து செல்லாமல் அவனை என்ன செய்வது என்ற 
குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள். நட்சத்திரங்கள் அற்ற 
வானத்தைப் பார்த்த நினைவுடன் வீட்டுக்குள் வந்து விளக்கைக் கொளுத்தினாள். மங்கிய 
வெளிச்சத்தில் அவன் கவிழ்ந்து படுத்திருந்தது தெரிந்தது. அவள் அவனைப் பெயர் சொல்லிக் 
கூப்பிட்டாள் - இருமுறை. அவனுக்குள் மறைந்துகொண்டிருக்கும் ரகசியத்தின் வாசனையைக்கூட 
யாரும் அறிந்துகொள்வதை அவன் விரும்பியிருக்க முடியாது. அவன் நடித்துக்கொண்டிருப்பதாக 
நினைத்த அவள், அவனுக்குக் கேட்கும் என்பதால் அவனைப் பார்த்துச் சொன்னாள்: 
“இனிமே இதுபோலச் செஞ் சீன்னா நான் அதுகிட்ட சொல்லி விடுவேன். உனக்கு கல்யாணத்துக்கு 
இன்னும் வயசிருக்கு. எங்கிட்டே இப்பிடியெல்லாம் நடந்துக்கக் கூடாது.” 
அவன் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தான். அவன் எழப்போவதில்லை என்று தெரிந்தும் அவனிடம் 
ஏதாவது அசைவுகள் தெரிகிறதா என்று சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள். 
அடக்கப்பட்ட கோபத்துடன் விளக்கை ஊதி அணைத்தாள். 
இது அவனைப் பற்றிய முன்கூட்டிய முதல் எச்சரிக்கைச் செய்தி என்பதை, அவளால் மட்டுமல்ல 
எங்களாலும் அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் எங்களுக்கு 
வாழ்க்கையைப் பற்றிய விபரீதக் கற்பனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை. அது யதார்த்தமல்ல. 
அல்லது அதியதார்த்தமானது. நோயை அறிந்துகொள்ளும் முன்பே மருந்துகள் தயாரிப்பதும் 
மடத்தனமானது. 

முன்பு நிகழ்ந்தபோது ஒதுக்கித் தள்ளியதுபோல் செய்ய முடியாமல் உள்ளுக்குள் சிறிய 
வெறுப்பு நுழைவதை அவள் தடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆண்பிள்ளை அவனைச் சிறு 
வயதிலேயே தகாத இடங்களுக்குக் கூட்டிச்சென்று கெடுத்துவிட்டாள் என்று தன் அக்காமீது 
அவளுக்கு எரிச்சல் வந்தது. அவனோடு சகஜமாக இருக்கும் சமயத்தில் இது குறித்து அவனுக்கு 
விளக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்குப் பிறகு அவன் வீட்டில் இருக்கும்போதெல்லாம் 
அவளுடைய இயல்புநிலை சீர் குலைந்துகொண்டிருந்தது. அவள் உறங்கும்போதும் புரண்டு 
படுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் விழித்திருக்கும் பகல் நேரத்திலும் அவன் அருகில் 
இருக்கிறானா என்று தனது ஆடைகளை மேலும் கவனத்துடன் சரிபார்த்துக்கொள்ள 
வேண்டியிருந்தது. இதற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள். 
புரிந்துகொள்ள முடியாத அந்தச் செயலுக்காக வத்சலாவும், தனக்கு மட்டுமே தெரிந்த 
பாஷையுடன் பழகும் அவனும், அது அரங்கேறும் சமயத்திற்காக இருளில் ஒரே அறைக்குள் நடமாடும் 
எதிரிகளைப் போல் நள்ளிரவுவரை தூங்குவது போல் அன்றிரவு காத்திருந்தார்கள். அவள் 
எதிர்பார்த்ததைப் போலவே அவன் எழுந்துவந்து அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்தான். 
அவள் ஊசிக் கீறலைப் போல் இருளில் கண் திறந்து பார்த்தாள். அது வினோதம் நிரம்பிய 
நடவடிக்கை. அவளைப் பார்த்து அவன் தலையில் அடித்துக் கொண்டதாகச் சொன்னாள். அவன் தன் 
அக்காவைப் போலவே பைத்தியமாகிக்கொண்டு வருவதாக நினைத்து அவன் இனி எக்கேடாவதுகெட்டு 
ஒழிந்துபோகட்டுமென அழுகையைக் கட்டுப்படுத்தி ஒருக்களித்துப் படுத்தாள். மீண்டும் அவன் 
அப்படியே சிலைபோல அமர்ந்திருந்தான். அவள் புரளும்போது நழுவிப் படுக்கைக்குச் செல்வதும் 
மீண்டும் அப்படியே வந்து அமர்ந்திருப்பதுமாக இருந்தான். இதை அவள் தங்கப்பனிடம் சொல்லலாமா 
வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தாள். இதனால் அவன் விரட்டப்பட்டு அவள் போக்கிடம் 
பற்றிய கவலையாக முடிந்துவிட்டால் என்ன செய்வது என்றெண்ணிப் பயந்துகொண்டிருந்தாள். ஆனால் 
அது புரிந்துகொள்ள முடியாத எங்களுடைய குறைபாடாகவே கடைசிவரை இருந்து தொலைத்தது. 
மறுநாள் ஊர் தூங்கும் அந்த இரவில் அபூர்வமான அந்தக் கணத்தில் ஒட்டுமொத்தமாக - 
தெளிவில்லாமல் - வத்சலா கண்ணீர் எழும்பப் படிக்கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்: அவனுடைய எந்தச் 
செய்கையையும் பொதுவான ஒரு மனிதனின் விஷயத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கவோ 
சந்தோஷம்கொள்ளவோ திருப்திகொள்ளவோ முடியாதபடி சற்று விசித்திரமாக இருக்கிறது. 
எறும்புகள் ஊர்ந்து செல்வதை மணிக்கணக்காக உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்; 
கேட்டால் இதுதான் என் கனவில் அடிக்கடி வருகிறது என்கிறான். 

முன்புபோல் அவன் இயல்பாக இல்லாததால் வீட்டுக்குள் பனிமூட்டம் உருவாகிவிட்டிருந்தது. அவள் 
அதை எதிர்கொள்ள முடியாமல் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தாள். தங்கப்பன் இருக்கும் 
சமயங்களில் அது வெளிச்சத்தைக் கொண்டிருந்தது. சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு 
வெளியில் சென்று அமர்ந்துகொண்டாள். குளிக்கும் சமயங்களை அவனில்லாத நேரமாகத் 
தேர்ந்தெடுத்தாள். வெளி வேலைகளில் ஈடுபட்டு வெயிலில் களைப்புற்று வீடு திரும்பும் 
அவளுக்குக் காற்றுக்காகவோ அலுப்பிற்காகவோ சற்றுத் தளர்ச்சியுடன் தூங்க 
முடியாதிருந்தது. துணி மாற்றிக்கொள்வதற்குக் கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. 
எந்த ஒன்று அவன் நினைப்பைத் தவறான திசைக்கு அழைத்ததோ! ஆனால் தான் மறந்தும் தன் 
அறியாமையின் இயல்பினால்கூட அவனுடைய திசை தெரியாத கற்பனைக்கு இடம் கொடுத்துவிடக் 
கூடாது என்பதில் வத்சலா கவனமாக இருந்தாள். 

அது புரட்டாசி மாதத்தின் நள்ளிரவு. ஊருக்குள் ஒரு வீடு தீப்பற்றிக்கொண்டது. அப்போது பல 
ஆவேசமான பதற்றக் குரல்களைக் கேட்டு வத்சலாவும் எழுந்து ஓடிவந்தாள். மற்ற பெண்களைப் போல் 
அல்லாது எங்களுடன் தீயை அணைத்ததில் அவளும் தன்னை மறந்து ஒரு ஆண் பிள்ளையைப் போலப் 
பங்குகொண்டாள். நெருப்பை அணைத்து முடித்துச் சற்று ஆசுவாசமாகவும் அதன் முழு அழிவையும் 
நினைத்து எழும்பிய பதற்றம் தீராமலும் தெரு மக்கள் தூக்கம் கலைந்த முகங்களுடன் ஆங்காங்கே 
கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

பாட்டிதான் அப்போது வத்சலாவின் முதுகைக் கவனிக்க நேர்ந்ததாகச் சொன்னாள். முதுகுப் பக்கம் 
அவளது ரவிக்கை கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டதுபோல் இரண்டாகத் தொங்கிக்கொண்டிருந்தது. 
எல்லோரும் சட்டென அவளின் பின்பக்கம் வந்தும் அவளைத் திரும்பச் சொல்லியும் அவளது வெற்று 
முதுகைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டார்கள், இதுகூடத் தெரியாமல் ஒரு பெண்பிள்ளை 
இருப்பாளா என்று. நெருப்பை அணைக்கையில் எதிலாவது மாட்டிக் கிழிந்திருக்கும் எனப் 
பொதுவான காரணம் சொன்னார்கள். சட்டெனப் புடவையை எடுத்து வெகுளியாகச் சிரித்தவாறே 
முதுகை மூடிக்கொண்ட அவளுக்குத் தான் வலுவாகத் தாக்கப்பட்டிருப்பதை நினைத்து 
உள்ளுக்குள்ளே நடுக்கம் படர்ந்தது. அவனை நன்றாக அடித்து உதைக்க வேண்டுமென நினைத்தாள். 
அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. 

வீட்டுக்குள் நுழைந்து சிம்னி விளக்கைக் கொளுத்தி அவனை எழுப்பினாள். அவன் தூங்கித்தான் 
போயிருந்திருக்க வேண்டும் என்று முகத்தைப் பார்த்தவுடன் நினைத்தாள். அவன் ஒன்றும் 
புரியாதவன் போல் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்தான். 
“என் ஜாக்கெட்ட பிளேடு வச்சி கிழிச்சியா?” என்றாள். அவன் சட்டென அதிர்ச்சி காட்டி மிக 
இயல்பாய் இல்லையென்று தலையாட்டினான். 

“பொய் புளுவாத. உன்னைத் தவிர வேற யாரு இருக்கா இங்க?” 

அவன் முகத்தைத் தூக்கி அவளைப் புதிதாகப் பார்ப்பவனைப் போல் ஒரு பொம்மையாக அசையாமல் 
பார்த்துக்கொண்டிருந்தான். 

“நான் உனக்கு அம்மாடா! எங்கிட்ட அப்படியெல்லாம் நடந் துக்கக் கூடாது. அதுக்குத் தெரிஞ்சா 
உன்ன ஊட்ட உட்டுத் தொரத்திடும். நீ நடுத் தெருவுலதான் நிக்கணும்.” 

அவன் எதுவும் பேசாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். 

“வச்சிருக்கிறதே நாலு ஜாக்கெட்டு. இதில ஒண்ண கிழிச்சிட்ட. உன் புத்தி ஏன் இப்படிப் 
போவுது?” 

அவள் பேசப் பேச அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலையும் இனி 
வாங்க முடியாது என்று அவளுக்குத் தெரிந்தது. “இதே நாம் பெத்த புள்ளையாருந்தா இப்பிடிச் 
செய்யுமா?” என்றவுடன் சட்டென அவளுக்கு அழுகை வந்தது. 

அவன் மெதுவாக எழுந்தான். அவளுக்கு அவனை எதிர்கொள்ள முடிகிற அளவுக்கு உடலில் பலமும் 
மனதில் தைரியமும் இருக்கறதென்று உடனே நினைத்தாள். அப்படியானவன் அல்ல. சிறுபிள்ளைத்தனம். 
முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். 

அவன் கதவுப் படலைத் திறந்து வெளியேறினான். அவளது தாய்மை உணர்வால் அவனது நடை 
அவளுக்குப் பரிதாபத்தைத் தோற்றுவித்தது. அவன் குளக்கரைப் பாதையை நோக்கிச் 
சென்றுகொண்டிருந்தான் அவன். மதகுக் கட்டையில் சென்று அமரும்வரை எட்டி எட்டிப் 
பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு ஜாக்கெட்டை மாற்றிக்கொண்டு கிழிந்ததைக் கரித்துணிக்காக 
அடுப்பின் மேல் எரவாணத்தில் செருகினாள். அவனை வெளியில் படுக்க வைப்பதற்கான எந்தக் 
காரணத்தையும் தங்கப்பனிடம் சொல்ல முடியாது. பிறகு வெகு நேரம் தூக்கம் வராமல் 
குழப்பத்துடன் விழித்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வாசலுக்கு வந்து அவனைப் பார்த்தாள். 
இருளில் கரிய உருவமாய் மதகுக் கட்டையிலேயே சுருண்டு படுத்திருந்தான். 

மறுநாள் காலையில் வத்சலா, வாழ்க்கை தரும் எதிர்பாராதவைகளில் நேரும் விசனங்களால் 
இயல்புக்கு மாறான முதிர்ச்சியுடன் தோன்றினாள். ரத்த பந்தத்தால் எழும் இயலாமையும் குழந்தை 
இல்லாவிடினும் இளகிய இதயம் கொண்ட அவளது இயல்பான பெண்மைக்குள் சுரக்கும் தாய்மையும் 
அவளை அழுத்திக்கொண்டிருந்தன. வேலைக்குக் கிளம்பிய நேரத்தில் அவன் மதகுக் கட்டையில்தான் 
படுத்திருப்பான் என்று நினைத்து ஏமாந்தாள். வழி நெடுகத் தென்பட்ட அவன் வயதொத்த 
பிள்ளைகளிடம் அவனுக்குச் சாப்பிடுவதற்கு வீட்டில் பழையதை வைத்திருந்ததைச் சொல்லி, அவனைக் 
கண்டால் போய் சாப்பிடச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு சென்றாள். 

பூதக்கண்ணாடி அன்று பகல் முழுதும் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியாத அனல் வீசும் 
வெய்யலில் முடப்பேறிய வெளிர்மஞ்சள் சருகுகள் மூடிய கதிரறுக்கப்பட்ட சோளவயல் காடுகளில் 
சுற்றிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டவர்கள் “மொட்டை வெயிலில் என்ன செய்கிறாய்?” 
என்றார்கள். அவன் நிதானமான நடையுடன் ஆட்களற்றுத் திறந்துகிடந்த டீசல் வாசனை வீசும் 
இஞ்சினுக்குச் சென்று கரடுதட்டிப்போன களிமண் தரையில் படுத்திருந்தான். நாங்கள் 
பாசனத்திற்காக இஞ்சின் கொட்டகைக்குச் சென்றபோது அவன் ஒரு பழைய துணி மூட்டையைப் போல் 
கிடந்தான். அவன் கால்களில் திடமான சோளச் சருகுகளின் கூர்மை குறுக்கும் நெடுக்குமான 
ரத்தக் கோடுகளைக் கிழித்திருந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டு வாசலில் 
வந்து அமர்ந்து, மாட்டுக்கு லாடம் அடித்துக்கொண்டிருந்ததை அவன் வேடிக்கை 
பார்த்துக்கொண்டிருந்தபோதும் கவனித்தேன். அவன் கால்களில் கிழித்திருந்த சோலைகள் காய்ந்து 
வறண்ட கோடுகளாக மாறிவிட்டிருந்தன. 

உச்சி வெயிலில் வேலை கலைந்து வீடு திரும்பிய வத்சலா முதலில் தன் அலுப்பைப் 
போக்கிக்கொள்ளக் கூட உட்காராமல் வைத்தது வைத்தபடி இருந்த சோற்றுப் பானையை ஆர்வமிழந்து 
திறந்து பார்த்தாள். பழையது அப்படியே நீரில் ஊறிக் கொண்டிருந்தது. அவள் 
பெருமூச்சினூடாக அவனை நினைத்தபடி வியர்வையைத் துடைத்துக் காற்று வாக்கில் அமர்ந்தாள். 
அவன் வீட்டுக்கு வராதது குறித்து அவளுக்குள் பலவித யோசனைகள் உருவாயின. வயலில் அவள் 
வேலை செய்து கொண்டிருந்தபோதும் உடனிருக்கும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத 
அவளது வீட்டு நிகழ்வுகள் குறித்து மௌனித்திருந்தாள். அவன் அவளை விட்டுச் சென்றுவிடுவான் 
என்று யோசித்தபோது அவளுக்கு மனத் தாங்கலாக இருந்தது. எந்தத் தொழிலும் தெரியாத 
அவனை எல்லோரும் நிராகரித்துக் கேலிசெய்வதான கற்பனையில் அவளுக்குக் கண்ணீர் திரண்டுவந்தது. 
வெய்யில் தணியும் முன்மாலை நேரத்தில் சோகம் விரவிய முகத்துடன் மண்குடத்தைத் தூக்கிக் 
கொண்டு தண்ணீர் மொள்ளச் சென்றபோது மிகச் சாதாரணமாக ஊர்ப் பையன்களிடம் விசாரித்தாள். 
உள்ளூர அவன் எங்கேயும் தன்னை விட்டுச் சென்றுவிடமாட்டான் என்று அவள் நம்பினாலும் அவனை 
நேரில் பார்க்கும் ஆர்வம் மிகுந்தது. ஊர் பரிகசிக்கும் லத்தைக் கண்ணாடியும் ஒல்லியான 
கைகால்களும் அவளுக்குப் பிடிக்கவே செய்தன. அவனிடம் ஏதாவது பேசி எப்படியாவது ஒரு 
வார்த்தையைப் பிடுங்கி விடும் ஆர்வம் துளிர்த்தது. ‘அறியாப் பிள்ளை. அவனை என்ன செய்வது?’ 
என்று நினைத்துக்கொண்டாள். பகலில் அவனைக் கண்டவர்கள் விவரம் சொன்னதை வைத்துச் 
சாயங்காலமாய் அவள் அவனைத் தேடிக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றாள். சூரியன் சரியும் 
திசையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிவரும் பிள்ளைகளை விசாரித்தாள். அவர்கள் அவன் மெயின் 
ரோடு பக்கமாய்ச் சென்றதாகச் சொன்னார்கள். அவள் அவனைச் சரியாக யூகித்தாள். சற்று 
ஆறுதலோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். 

அவள் யூகித்தபடியே நிழல்கள் தோன்றாத இருளில் தங்கப்பனுடன் அவன் வீட்டுக்கு வந்தான். 
தங்கப்பன் அவளை மங்கிய மஞ்சள் வெளிச்சப் புகை பரப்பும் சிம்னிவிளக்கு வெளிச்சத்தில் 
ஏறிட்டுப் பார்த்தான். வத்சலா தலைக் கேசம் கலைந்து ஒளியிழந்த ஒரு பழைய சித்திரத்தைப் 
போல வீட்டின் இருட்டினூடே தெரிந்தாள். அது ஒரு கேள்வி போலும் அவனே அதற்கு விடை 
கொடுத்தது போலும் பார்வையைத் தாழ்த்தி உள்ளே சென்றான். அவனுக்கும் பின்னே பூதக்கண்ணாடி 
தன்னை மறைத்துக்கொண்டு தங்கப்பனின் வால்போல் சென்றான். வீட்டுக்குள் அவர்களின் நிழல்கள் 
கோரச் சித்திரங்களாக அசைந்தன. அவரவர் தேவைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவள் 
குழப்பமாகத் தடுமாறினாள். சுமுகமான வார்த்தைகளை எதிர்பார்த்துப் பாத்திரங்களில் முகம் 
கொடுத்து வேலை செய்தாள். எதிர்த்தரப்பின் மூச்சடைக்கும் மௌனம் அவள் முதுகுக்குப் பின்னே 
கத்திபோலப் பாய்ந்துகொண்டிருந்தது. அவள் சோர்ந்துபோனாள். தைரியமற்றவளாய் எதுவும் 
பேசாமல் இருவருக்கும் சோறு பரிமாறினாள். அவர்கள் விடிந்து கிளம்பியபோதும் யாரும் 
எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவள் வாசல் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். உபயோகமற்ற 
வார்த்தைகளாக இருப்பினும்கூட அவள் பரிதாபமான முகத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். 
‘எனக்கு ஒரு பிள்ளைப்பூச்சி இல்லையே ஆண்டவா’ என்று முணுமுணுத்து ஏங்கினாள். 
யாருடனாவது தன்னை முழுதாய் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாக இருக்க 
வேண்டும்போலிருந்தது. திரண்ட கண்ணீரை அடக்கிக்கொண்டாள். 

அன்று இரவும் அதன் பின்பு வந்த இரவுகளும் பதற்றம் விரவியதும் தன்னை மறந்து தூங்கியதும் 
துர்க் கனவுகளின் அதிர்ச்சியில் கண் விழித்துச் சூழலைக் கவனித்துக்கொள்வதுமான இரவுகளாக 
அவளுக்கு இருந்தன. பூதக்கண்ணாடி கருப்பையில் சுருண்டுகிடப்பது போலவே எப்போதும் 
தூங்கிக்கொண்டிருந்தான். அதில் மறைந்திருக்கும் அதிகாரம் அவளை நிம்மதியிழக்கச் செய்தது. 
வீட்டுக்குள் நிரம்பிக்கொண்டிருந்த அவனது அதிர்வலைகளில் அவள் மயக்கம்போட்டு விழாத 
குறையாய்த் தன்னை நிர்வகித்துக் கொண்டிருந்தாள். ஒரே நாளைப் போல எந்த மாறுதலுமின்றிக் 
கிழமைகளின் பெயர்கள் மாறிக்கொண்டிருந்தபோதும் அவள் சிந்தித்தவரை அது எப்போதும் 
நடைபெற முடியாதது. ஆனால் அவள் தன் எண்ணம் பொய் என்றும் நினைத்தாள். பூதக்கண்ணாடிக்கும் 
தங்கப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் அவளால் விளங்கிக்கொள்ள முடியாதது. இத்தனை வயதுக்குப் 
பிறகும் அவனைச் சில சமயம் தங்கப்பன் குளிப்பாட்டிவிடுவான். எதுவுமே பேசிக்கொள்ளாமல் 
இருவரும் மணிக்கணக்காகத் தனியாக உட்கார்ந்திருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். பழைய 
சாதாரணக் காட்சியாக இருப்பினும் புதிய அர்த்தத்தைத் தருவதுபோலவும் ஆனால் 
புரிந்துகொள்ள முடியாததுமான அதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள். 
நெல் அறுவடைக் காலம் ஆரம்பித்தபோது தூக்கு வாளியில் கஞ்சியை எடுத்துக்கொண்டு சும்மாடு 
துணியாக ஈரிழைத் துண்டை மேலில் போட்டுக்கொண்டு கதிர் அரிவாளுடன் ஈர வைக்கோல் மணம் 
வீசும் வயல்வெளி வழியே நிலையற்றதும் மகிழ்ச்சியற்றதுமான நினைவுகளில் அவளும் 
அறுவடைக்குப் போனாள். காட்சியும் கருத்தும் ஒன்றிணைய முடியாதபடி அவள் பார்வையும் 
நடையும் விசனத்தில் தோய்ந்திருந்தன. எங்கள் வயலைத் தாண்டிப் பக்கத்து வயலில் இறங்கியபோது 
பாட்டி அவளை நலம் விசாரித்தாள். 

ராஜமாணிக்கம் தன் களிமண் நிற உடலில், சமச்சீரான வெண் பழுப்பு நிறத்துத் தலைமுடி மற்றும் 
அணில் வால் மீசையுடன், பூனைக் கண்களுடன் கம்மங்கூழிலும் கேழ்வரகிலும் வளர்ந்த வளப்பமான 
தொப்பையுடன் மேல் சட்டையற்றுக் கயிற்றுக் கட்டிலில் வெயிலில் குடைபிடித்து 
அமர்ந்திருந்தார். இடுப்பொடிய நிலம் பார்த்துக் கதிரறுத்தவள் வேலை முடிந்து அவரிடம் 
இளவழகனை அவர் வீட்டு மாட்டுப் பண்ணையில் ஏதாவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முடியுமா 
என்று கேட்டாள். “உலகம் தெரியாத அவன் ஒரு ஆளாய் வரவேண்டும்” என்று சொன்னாள். மீசையை 
உருவியபடி தலையாட்டிக் கேட்டுக்கொண்டவர், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார். சூரியன் 
சாயும்வரை வயலில் உதிரிக் கதிர்களைப் பொறுக்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் 
அரிகிடையில் போட்டாள். பின்பு அவள் தனித்த நடையில் காலிப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு 
வெறுமையும் குழப்பங்களும் சூழ்ந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். 
அந்தப் புதன்கிழமை பண்ணையிலிருந்து ஒரு கிழவன் வந்து இளவழகனைக் கூட்டிச் சென்றதாக 
வத்சலா சொன்னாள். தங்கப்பனும் அதை விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு 
மீசைக்காரரைப் பிடிப்பதில்லை என்றும் வத்சலாதான் சொன்னாள். இருப்பினும் அவனுக்குச் சரியான 
இடம் அதுதான் என்று நாங்களும்கூட நினைத்தோம். மனக்குழப்பங்கள் கொண்டு ஒழுங்கற்ற 
காரியங்களை செய்யும் அவன் அங்கே சென்றால் வேலைமீது கவனம் குவியும் என்று நாங்களும் 
எதிர்பார்த்ததில் தவறொன்றும் இல்லை. 

வத்சலாவின் வீட்டை ஒட்டி நீளும் வயல்கள் ராஜமாணிக்கத்தினுடையவைதான். அவர் அந்தப் பக்கத்தில் 
அறுவடை தொடங்கும்போது எப்போதும்போல அங்கேயே ஒரு தற்காலிக வைக்கோல் கூரைப்பந்தலை 
உருவாக்கிக்கொண்டார். அவருக்குப் படுக்கையும் சாப்பாடும் அங்குதான் நடந்தன. அந்தப் பக்கத்து 
அறுவடை தொடங்கும்போது சென்ற தங்கப்பன் அறுவடை முடிந்த ஆறாவது நாளே வீட்டுக்கு 
வந்ததாக வத்சலா சொன்னாள். “அந்த மடக்குக் கட்டில் ஏன் வீட்டினுள் கிடக்கிறது. அதை 
மரியாதையாக அவர் வீட்டு ஆட்களைவிட்டு எடுத்துச் செல்லச் சொல்” என்று சத்தமிட்டுவிட்டுப் 
போனதாகவும் சொன்னாள். அந்தக் கட்டிலின் வருகை அவனை இம்சைக்குள்ளாக்கிக்கொண்டிருந்தது. 
தங்கப்பன் அந்த ஞாயிற்றுக் கிழமை இளவழகனைத் தேடிக்கொண்டு சென்றான். தோட்டத்தில் நின்று 
அவனைப் பார்த்துப் பேசி விட்டு வாங்கிச் சென்றிருந்த பகோடா பொட்டலத்தைக் 
கொடுத்துவிட்டு அறிவுரை கூறிவிட்டு வந்தான். அடுத்த வாரமும் கட்டில் எடுக்கப்படாமல் 
வீட்டினுள் கிடந்தது குறித்துக் கேட்டான் தங்கப்பன். வத்சலா பயந்துகொண்டே ஆனால் துணிச்சலை 
வரவழைத்துக் கொண்டு சாதாரணமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டாள். 
“நான் சும்மா கேட்டேன். இந்தக் கட்டில நான் எடுத்துக்கவான்னு. அவரும் சரின்னுட்டார். நாம 
தரையிலதான படுத்துக்குறோம். குளத்தங்கரை பக்கமா இருக்குறதால பாம்பு பூச்சி ஏதாவது 
வரும். நாம மேலே படுத்துக்கலாம்” என்றாள். அவன் அவளை முறைத்துவிட்டுக் கிளம்பி 
வேலைக்குச் சென்றுவிட்டான். 

அவள் கட்டிலின் மேல் ஆசைப்படுவது இயற்கையானது. ஆனால் அவனுடைய ரோஷமும் இயல்பானதுதான். 
ஆனால் அவன் அதை அத்தனை தீவிரமாக எதிர்க்கும் போது மனைவியானவள் அதை 
அனுப்பிவிடுவதுதான் முறை என்று பாட்டி என்னிடம் அன்றிரவு சாப்பிடும்போது 
விவாதித்தாள். தங்கப்பன் அவளிடம் மறைமுகமாகச் சொல்லியிருப்பான் என்றேன். அப்படித்தான் 
இருக்கும் என்றாள் பாட்டி. 

ஏமாற்றங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, சுயப் பழிவாங்தலுக்குப் பயன்படுத்தப்படும் 
செயல்கள்மீது எப்போதும் எல்லோருக்கும் ஒரு ரகசிய பிரேமை இருக்கவே செய்கிறது என்பதை 
அவனுக்கு யாரும் புரியவைக்க முடியாது. ஏமாற்றுபவர்களைப் போல ஏமாறுபவர்களின் 
பிடிவாதமும் அதற்கு இணையானதுதான். எனினும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவன் 
நினைப்பதற்கு உண்டான செயல்களையும் அவள் செயல்படுத்திக் காட்ட வேண்டுமென்று எதிர் 
பார்த்துக்கொண்டிருந்தான். 

தங்கப்பன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டிலை ராஜ மாணிக்கம் வீட்டுப் பண்ணையில் எடுத்துச் 
சென்று போட்டு வருவதற்கு இளவழகனைத் துணைக்கு அழைத்து வரப் போனான். உச்சி வெயிலில் 
அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது அனைவரது உள்ளுணர்வுகளும் அவரவருக்கு விசுவாசமாக 
எச்சரித்துக்கொண்டிருந்தன. வீட்டுக்குள் இருந்த வத்சலாவுக்குத் தன்னை யாரோ உற்றுப் 
பார்ப்பதாக எழும் எண்ணம் ரகசியமாக அவளது காதில் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் போல் 
உண்மையானதாகவும் அழுத்தமானதாகவும் பதிந்தது. அவளால் எதையும் உதறிவிட முடியவில்லை. 
அவள் துணுக்குற்றாள். கண்மணி அளவுள்ள கீற்றுப் பொத்தல்கள் வழியே பாயும் ஒளி, பூனையை ஒத்த 
இடம் வலமான நடையசைவுகளால், தடைபட்டுத் தடைபட்டு வீட்டினுள்ளே பாய்ந்ததைக் கண்டபோது 
முழுதாய்ப் பயந்து மிரண்டாள். அச்சமயத்திற்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் பாட்டியிடம் 
வத்சலா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். எண்ணை 
காணாத செம்பட்டையான தலைமுடியுடன், எண்ணைப் பசை படிந்த அவள் முகம் இருண்டும் பயத்தில் 
வெளுத்தும் சுயப் பழிவாங்கலில் முழுதாய்த் தோற்றுப்போயிருந்தது. 

மீண்டும் உச்சி வெயிலில் அழகும் தங்கப்பனும் ஹோட்டலை நோக்கி நடந்து 
சென்றுகொண்டிருந்தபோது உரம் வாங்க நண்பர்களுடன் வண்டியை எடுத்துச் சென்ற நாங்கள் 
அவர்களைக் கடக்கவிருந்தோம். எங்கள் பகுதியிலிருந்து யாரும் செல்லாத அப்பாதையில் - அது 
ஒரு பாதையே அல்ல - குறுக்காக வளைந்து சென்றுகொண்டிருந்தார்கள். ஆற்றைக் கடந்தாலொழிய, 
முட்கள் நிறைந்த அந்த வழியற்ற வழி, ஆற்றைத் தவிர வேறெங்கும் அழைத்துச் செல்லாது. பாட்டி, 
அவனைக் கண்டால் வீட்டுக்கு வரச் சொன்னதாகக் கூறியதைத் தங்கப்பனிடம் சொன்னேன். அவன் 
தலையாட்டினான். ஆனால் அவர்கள் திரும்பிப் பிரதான சாலைக்கு வந்து, ஓட்டலை நோக்கி நடக்கத் 
தொடங்கினார்கள். 

வத்சலாவின் பேச்சை வைத்து எங்களால் அதை உணர முடிந்தது. மீட்க முடியாத தொலைவுக்குச் 
சென்றுவிட்ட வாழ்க்கையின் கசப்பை அவர்கள் சுவைத்திருந்தார்கள். அவர்கள் வழக்கம்போலவே 
எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பூதக்கண்ணாடி சாலையில் கிடந்த காய்ந்த மரவள்ளிக் குச்சி 
ஒன்றை எடுத்துத் தரையில் தட்டிக்கொண்டே போனான். 

வத்சலாவுக்கு இருவரும் வராத மற்ற இரவுகள் பற்றிக் கவலை இருந்ததில்லை. எத்தனை விதமான 
கற்பனைகளில் தன்னுடைய விடுதலை குறித்துச் சிந்தித்தும் அவளால் சுலபமான ஒரு முடிவுக்கு 
வரமுடியவில்லை. எங்காவது சென்றுவிடலாம் எனத் தோன்றியது. ஆனால் எதிர்கொள் வதைத் 
தவிர்த்து அவளுக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை. 

அவள் மறுநாள் வேலைகளை முடித்த மதியத்தில் தோட்டத்துப் பக்கக் குளக்கரையில் குளிப்பதற்கு 
இறங்கினாள். வீட்டை ஒட்டிய குளமாக இருப்பதால் அவள் எப்போதும் மக்கட்டி மாராப்போடும் 
சோப்பு டப்பாவோடும் மஞ்சளோடும் இறங்கிவிடுவாள். சாலையை அந்நேரத்தில் உபயோகிப்பவர்கள் 
யாராயிருப்பினும் தூரத்தில் ஒருத்தி மக்கட்டி மாராப்புடன் குளிப்பதைப் பார்க்க முடியும். 
அன்றும் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அது ஒரு நிதானமான குளியலாக 
இருந்தது. நீரில் ஊறிக் கிடப்பது அவள் மனதுக்கு உணக்கையாக இருந்தது. ஆனால் புழுக்கமான 
நினைவுகளை அவளால் களைந்துவிட முடியவில்லை. குளித்து முடித்துக் கரையேறி வாசல் 
படலைத் திறந்து வீட்டினுள்ளே வந்தபோது அவள் சற்றும் எதிர் பாராத செயலில் பேச்சு 
மூச்சற்று நின்றாள். அவளுக்கு உடலெங்கும் உதறல் எடுத்தது. அவளுடைய அனைத்துத் துணிகளும் 
ஒன்று விடாமல் எலி குதறியதைப் போல சுக்கல் சுக்கலாகக் குதறப்பட்டு, அதனுடன் குழம்பு 
சாமான்களான மிளகாய்த்தூள், புளி, தானியங்கள், சில்லரைக் காசுகள் கிழிக்கப்பட்ட ரூபாய்த் 
தாள்கள் அனைத்தும் சேர்த்துக் கலந்து முட்டாடி வைக்கப்பட்டிருந்தன. அலுமினியப் பாத்திரங்கள் 
நசுக்கப்பட்டும் மண் சட்டிகளும் பானைகளும் உடைத்துத் தூளாக்கப்பட்டும் கிடந்தன. வீட்டை ஒட்டிக் 
குளித்துக்கொண்டிருந்தபோதே சத்தமில்லாமல் யாரோ இத்தனை காரியங்களைச் செய்திருப்பதைக் 
கட்டுப்படுத்தப்பட்ட நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஈரம் சொட்டிக்கொண்டிருந்த 
பாவாடையோடு வேகவேகமாக வெளியே வந்தாள். மக்கட்டி மாராப்போடு தெருவில் செல்ல 
முடியாததால் அங்கிருந்தபடி ஊரைப் பார்த்தாள். காத்திருக்கவோ துணைக்கு ஆள் கூப்பிட்டுச் 
சொல்லவோ இயலாதவளாய் கையறுந்த நிலையில் அவள் குரல் நெருக்கப்பட்டு வார்த்தைகளை இழந்து 
அரைநிர்வாணத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். 

ஊரிலுள்ளவர்கள் அவளை வந்து பார்ப்பதற்கு முன்பு அவள் உடுத்திக் கொள்வதற்கு அவள் சினேகிதி 
ஒரு வாயில் புடவையும் ரவிக்கையும் கொடுத்திருந்தாள். அவளுக்குள் குளிர் நடுக்கம் 
உருவாகிக்கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்தவர்கள் சிலர் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். 
ஆறுதலைக் கூறுவதைவிடவும் சம்பவத்தின் பின்னிருக்கும் ரகசிய மனிதனைப் பற்றியே அவர்கள் 
ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவள் விரும்பவில்லை. எளிமையான கற்பனைகளுக்குள் வாழ்க்கையை 
நகர்த்திக்கொண்டிருந்த அவளுக்கு இது உண்மையிலேயே அதிகப்படியான அதிர்ச்சிதான். அவள் 
திடமாக இருக்க முயன்றாள். அவளைப் பொறுத்தவரை அவள் நேரிடையாகவே 
பயமுறுத்தப்பட்டிருந்தாள். கழுவேற்றப்படக் காத்திருக்கும் பொழுதுபோல் அவளுக்குக் 
கிலிபிடித்திருந்திருந்திருக்கும். கேட்பவர்களிடம் அவள் பதில் சொல்லி மாளாது தலைவிரி 
கோலமாய் மரத்தடியிலேயே பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தாள். உள்ளூரத் துரத்தப்படுவதாக 
உணர்ந்த அவள், தப்பித்தலுக்காகவே அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரைவிடவும் 
சரியாக யூகிக்கப்பட்ட அந்த முடிவு அவளைப் பொருத்தவரை மிகச் சரியான முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைதான். சாயங்காலம் சினேகிதியிடம் சில்லரை வாங்கிக்கொண்டு ஊர் 
விசாரிப்புகளுக்கு ஒன்றும் சொல்லாமல் சொந்த ஊரான வயலூருக்குச் சென்றாள். 
அதுதான் நாங்கள் வத்சலாவைக் கடைசியாகப் பார்த்தது. பறவைகள் வீடு திரும்பும் அந்தச் 
சாயங்கால வேளையில் அள்ளிக் கொண்டையிட்ட கூந்தலுடன் புறங்கையால் அழுகையைத் துடைத்தபடியே 
ரோட்டில் நடந்து போனாள். நாங்கள் வழிமறித்துச் சொன்ன சமாதானங்களை ஏற்க அவள் ஒன்றும் 
சிறுமியல்ல. 

ரகசியமாக ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டத்தில், அவரவர்களின் பாத்திரங்களை உணரும் அரூபமான 
கணத்தை எட்டியிருந்த அவர்கள், அப்போது அவற்றைத் தங்களின் இயல்புகளாகக் கருதி மன ஊக்கம் 
பெற்றிருந்திருக்க வேண்டும் - தங்கப்பனும் பூதக்கண்ணாடியும் மிகத் தெளிவாக அந்த முடிவை 
எடுக்காமல் விட்டிருந்தாலும்கூட. ஏனெனில் அவர்கள் வழியற்ற ஊருக்குப் போவதைப் போல 
ஆற்றுப் பாதைக்குள் நுழைந்த நிகழ்வும் வத்சலா கிளம்பிச்சென்றதும் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி 
அது தன் அடியெடுத்து வைத்திருந்ததன் அடையாளமாகவே இதைச் சொல்கிறேன். 
இளவழகனுக்கும் தங்கப்பனுக்கும் செய்தி எட்டுவதற்கு மறுநாள் ஆகி விட்டிருந்தது. அவர்கள் 
வீட்டிற்கு வந்தபோது ஊரில் வேலையற்று இருந்தவர்களும் அவர்களின் எதிர் நடவடிக்கைகள் 
என்னவாக இருக்குமென்று எதிர்பார்த்தவர்களும் வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்போது சூழலை 
இம்சிப்பதுபோலக் காண்டாமிருக வண்டின் எந்திர கதியில் இயங்கும் றெக்கைகளின் சப்தம், பேய் 
வண்டு அடித்தொண்டையில் ரீங்கரித்துப் பாடிக் காதைக் குடையும் சப்தத்தைப் போலும், 
துர்வருகையைக் குறிப்பிடுவதுபோலத் தூரத்தில் நாய்கள் கூட்டாக ஓலமிடுதலும் கலவையாகக் 
கேட்டுக்கொண்டிருந்தது. பூதக்கண்ணாடி வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். 
தங்கப்பன் எல்லோரையும் விரட்டாத குறையாகக் கலைந்து போகச் சொன்னான். வீட்டைச் சுற்றிச் 
சுற்றி வந்து பார்த்தான். சிலர் அவர்களைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டுவரச் 
சொன்னார்கள். “அவள்தானே போனாள்; அவளே வரட்டும்” என்றான் தங்கப்பன். சிலர் “அதுவும் 
சரிதான். அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்” என்றார்கள். 
மானுடர்களின் பூர்வீகத் தனிமை தங்கப்பனுக்கும் பூதக்கண்ணாடிக்கும் அந்நொடியிலிருந்து 
தொடங்கி விட்டிருந்தது. வத்சலா சென்ற பிறகு அவ்வீட்டிற்கான நேரடித் தொடர்பை நாங்கள் 
முழுமுற்றாக இழந்துவிடவில்லை என்றாலும் அதிகபட்சத் தொடர்பை இழந்துவிட்டிருந்தோம். 
அவர்களுக்கான நாடகம் அடுத்த மூன்று நான்கு நாட்களிலேயே முடிந்துவிட்டிருக்கும். 
வழியற்றதைப் போல் அவர்களின் அலுப்பூட்டும் அதே தினசரிக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள். 
ஊருக்குள் விவசாயத்தின் அடுத்த போகத்திற்கான உழவுப்பாடுகள் நடக்கத் தொடங்கின. மழை 
இல்லாமலேயே நிலவும் குளிர்ச்சி மிகுந்த பருவம். வெவ்வேறு திசைகளைப் 
பார்த்துக்கொண்டிருந்த எல்லா மோட்டார்களும் தண்ணீரை முழுமையான வீச்சில் பாய்ச்சிக் 
கொண்டிருந்தன. நீர் நிரம்பிய வயல்களில், தீனிகளுக்காகத் தூரத்திலிருந்து தினம் தினம் 
பறந்துவந்த கொக்குகளைக் குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளால் சுட்டு ஊருக்குள் விலை பேசி 
விற்றுச் சென்றார்கள். அவ்வப்போது பெய்து நின்ற மழைக்குப் பின்பு வெறிக்கும் வெயிலில் 
ஆடுகளும் மாடுகளும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனங்களுக்கு வழிவிட்டுப் படுத்தும் 
நின்றும் வெயிலில் காய்ந்தபடி அசை போட்டுக்கொண்டிருந்தன. நடவு முடியும்வரை எங்கள் 
வாழ்க்கை அள்ளித் தெளித்த கோலத்தின் மிச்சங்கள்தான். இருப்பினும் நடவு முடிந்த பின்பு 
கிடைக்கும் பகல் நேர ஓய்வு வயல்களில் களை மண்டும்வரை நீளும். வத்சலாவின் நினைவுகள் 
எங்களைப் பல சமயங்களில் அவளைப் பற்றிப் பேசவைத்திருக்கின்றன. சாதாரண நாட்களிலேயே ஊரின் 
கண்களில் தென்படாதவர்கள் தங்கப்பனும் பூதக்கண்ணாடியும். விதைப்புக் காலத்தில் 
விவசாயத்திற்கான மெது ஓட்டம் தொடங்கிவிடும்போது அவர்களை நினைத்துப் பார்க்கவே 
எங்களுக்குத் தோன்றியிருக்கவில்லை. 

அன்று தங்கப்பனையும் பூதக் கண்ணாடியையும் நாங்கள் வயலில் பார்த்தோம். சில பெண்கள் 
தங்கப்பனைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்கள். அவனது அசட்டையான 
பதில்களுக்குப் பெண்களும் ஏகத்திற்கு வத்சலாவுக்குச் சலுகையாகப் பேசி அவனை 
வம்புக்கிழுத்தார்கள். ஒரு வகையில் எங்களையும் கடக்க வேண்டிய நெருக்கடி அவனுக்கிருந்தது. 
அவன் வயலூருக்குக் கிளம்பிப் போவதாகச் சொல்லிப் போனான். அது எங்களின் பொருட்டே 
இருக்க முடியும். 

வேலைக்குப் போகாத கைக் குழந்தைக்காரிகளும் வயதானவர்களும் பள்ளிக்கூடத்திற்குப் போகாத 
பிள்ளைகளும் ஊதாரிகளும் நிறை மாதப் பெண்களும் மிச்சமிருந்த அந்தப் பிற்பகலில், ஊருக்குள் 
வத்சலா இல்லாமல் அவர்கள் பிரவேசித்தார்கள். திண்ணையில் படுத்திருந்த சிலர் அவனை வலிந்து 
கேட்டார்கள். அவள் வர முடியாது என்று கூறிவிட்டதாகத் தங்கப்பன் சொன்னான். அதன் பிறகு 
அந்த வீட்டில் அவர்கள் இருவரின் இருப்பு என்பதே எல்லோருக்கும் இயல்பாகிப்போனது. 
மூன்று மாதங்களுக்குப் பிறகு வத்சலாவின் அத்தை, ஊரின் வேலையற்ற நாளில் பக்கத்து ஊருக்கு 
ஒரு விசேஷத்திற்கு வந்தவள், ஒருமுறை பிள்ளையைச் சென்று பார்த்து வரலாமென்று 
எங்களூருக்கு வந்தபோது தான் ஒரே விடுகதைக்குப் பல்வேறு விடைகள் எனும் ரகசியத்தின் 
வாலை நாங்கள் பிடிக்க ஆரம்பித்தோம். 

ஊர் முனையிலேயே அவளுக்குத் தங்கப்பனின் வீட்டைப் பற்றிய செய்திகளே கேள்விகளாய் உரு 
மாறிக்கொண்டன. வத்சலா கிளம்பி வந்த மறுநாளே தங்கப்பனுடன் அவளை அனுப்பிவிட்டதாக 
வத்சலாவின் அத்தை சொன்னாள். மூன்று மாதங்களாக வத்சலா ஊரில் இல்லை என்றோம் நாங்கள். 
அழுத்தமான குழப்பத்துடன் பூட்டிக்கிடந்த வீட்டையும் நாட்களையும் விசாரித்துவிட்டு அவள் 
நேரே தங்கப்பன் வேலை செய்யும் கடைக்குக் கிளம்பிச் சென்றாள். தங்கப்பன், “அவள் வழியிலேயே 
என்னிடம் சண்டை போட்டுப் பிரிந்து உங்களூருக்கே வந்துவிட்டாள்” என்றான். அதிர்ச்சியடைந்து 
கடைத்தெருவிலேயே அழத் தொடங்கியவள் தனது உறவினர்களுடன் அன்று மாலையே எங்கள் ஊர்ப் 
பகுதியின் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தாள். 

மறுநாள் ஊருக்குள் உயிர்த் தன்மையற்ற முகங்களைக் கொண்ட கொழுத்த காவலர்கள் இருவருடன் 
வாடகைக் காரில் வந்த வத்சலாவின் உறவினர்களுடனும் குழம்பிய நிலையில் ஒழுங்கற்ற 
பட்டாளத்தைப் போல் பின்தொடர்ந்த ஊர்க்காரர்களுடனும் வீட்டைத் திறந்து பார்த்தார்கள். 
சுத்தமாகக் கூட்டப்பட்டு மூன்று மாதத்துத் தூசுபடிந்து கிடந்தது வீடு. அத்தரு 
ணத்திலிருந்து நாங்கள் அவர்களைப் பற்றிய உண்மையை ஒட்டிய அனுமானங்களைக் கற்பனை செய்யத் 
தொடங்கினோம். ஊரில் அகப்பட்டோரிடமெல்லாம் விசாரணை நடந்தது. எல்லோரும் பார்த்திருக்க 
‘பட்டா பாபு’ கடையில் மதிய சாப்பாடும் முன்மதியத்தில் சூடான டீயும் பகோடாவும் 
சாப்பிட்டு, பொழுதுசாயப் போனார்கள். 

அன்று இரவு தங்கப்பனையும் பூதக்கண்ணாடியையும் விசாரணைக்குக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் 
காலையில்தான் திருப்பியனுப்பினார்கள். இறுதியாய் இரண்டு வாரம் கழித்து, கற்பனை வறண்ட, 
வேலைகளைத் தட்டிக் கழிக்கும், அவர்களின் முடிவைச் சொன்னார்கள்: “அவள் எங்காவது 
பிழைப்பதற்குப் போயிருக்கலாம்.” மிக மோசமாக அடி வாங்கித் திரும்பி வந்திருந்தான் 
தங்கப்பன். அவமானத்தில் சுருங்கிப்போயிருந்த அவன், தலையைச் சாய்த்தபடி வேடிக்கை 
பார்ப்பவர்களைப் பொருட்படுத்தாது தெருவோரமாய் நடந்து சென்றான். பூதக்கண்ணாடியின் 
உருவத்தைப் பார்த்து மிரட்டி மட்டும் அனுப்பிவிட்டதாகச் சொன்னார்கள். அடிவாங்கியபோதும் 
தங்கப்பன் “அவளுக்கு என்னோடு வாழ விருப்பமில்லை. அவள் வழியிலேயே ஊருக்குத் திரும்பிப் 
போய்விட்டாள்” என்று கதறி அழுது சொன்னான். அவன் வாங்கிய அடிக்குச் செத்துப்போயிருக்க 
வேண்டும் என்றும் சொன்னார் வத்சலாவின் உறவினர் ஒருவர். இதனால் எங்களுக்கு மேலும் நம்பகமான 
யூகங்களைச் சித்தரிக்கும் போக்குகள் உருவாயின. 

தங்கப்பனின் உடல் கன்றிப் போயிருந்தது. பூதக்கண்ணாடியின் பராமரிப்பில் அவன் அனத்திக் 
கொண்டு வீட்டிலே கிடந்தான். மீண்டும் போலீஸ் விசாரணை என்ற பெயரில் வத்சலாவின் உறவினர் 
தரப்பு இரண்டாவதுமுறை பணம் கொடுத்தபோதும் காவலர்கள் அடியாட்களைப் போல மூர்க்கமாக 
அடித்து அனுப்பினார்கள். குழப்பமான சாதக பாதகமான முடிவுகளை நோக்கி நாங்கள் 
கிசுகிசுக்கத் தொடங்கியிருந்ததில் நியாயத்தின் சாய்மானம் தெரியாமல் ஊர் இந்த முறை 
வத்சலாவுக்குச் சலுகை செய்வதை நிறுத்திக்கொண்டது. 

அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கடலூர் மாவட்டத் தினசரியில், ஒரு துண்டுப் பகுதியில், 
“காணவில்லை” என்ற கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் எங்கள் பகுதி காவல் நிலையத்தின் 
முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் வத்சலா இடம்பெற்றிருந்தாள். சலூன் கடையில் அன்று இது 
பகல் முழுக்கப் பார்த்துத் தீர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தேவைப்படுமென்று யாரோ சொன்னதன் 
பெயரில் துண்டாகக் கத்தரிக்கப்பட்டுச் சினிமா நடிகைகளுக்கு நடுவில் தற்காலிக 
நிரந்தரத்துடனும் ஒட்டப்பட்டது. 

ஊர்ப் பெண்கள் களையெடுப்பிலும் இளம் பெண்களும் வளர்ந்த சிறுமிகளும் புளியங்கொட்டையில் 
பாண்டி ஆட்டமும், ஆண்கள் வயலில் அண்டைக் கழிப்பது, மரம் வெட்டுவது, மரத்தடிகளில் 
சீட்டாடுவது போன்றவைகளிலும் பெருவாரியாக ஈடுபட்டிருந்தபோது தங்கப்பன் சகஜமாக 
நடமாடத் தொடங்கியிருந்தான். பூதக்கண்ணாடி தினமும் அவனை சைக்கிளில் ‘டபுள்ஸ்’ 
ஏற்றிக்கொண்டு போனான். வழக்கத்திற்கு மாறாக எதுவும் எங்களை ஆக்கிரமிக்காத அப்பருவத்து 
இயல்பு வாழ்க்கை அதுதான். வத்சலா ஊர்க்காரர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுமானங்களுக்கு 
ஏற்ப, விதவிதமான பிம்பங்களில் வலம்வந்துகொண்டிருந்தாள். ஆனால் அது முக்கியமற்ற கதையாக 
மாறிவிட்டிருந்தது. 

எல்லாப் பருவங்களும் எங்களைக் கடந்து போனபோது நாங்கள் அவைகளுக்கு உண்டான 
பரிபக்குவத்தோடு ஓடிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் எங்கள் தெருவுக்கான நீர்த்தேக்கத் 
தொட்டியை ஒன்று கூடிக் கையெழுத்திட்டும் கைநாட்டிட்டும் வரவழைத்தோம். மயானத்திற்கான 
பொதுச் செம்மண் சாலை வந்தது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நாட்களின் தொடர்ச்சியில் 
நள்ளிரவில் குறவர் இனக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தச்சுப்பட்டறைகளும் கொல்லன் பட்டறைகளும் 
கொண்ட எங்கள் ஊரின் அரசமரத்தடி முகப்பில் நின்று தன்னைப் பார்த்துக் குரைத்த நாய்களின் 
தொல்லைகளைக் கடுமையாக எதிர்கொண்டபடி அதை உரக்கக் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். 
அவள் சொல்வதைப் புரிந்துகொள்வதற்கு மழையும் இரவும் நாய்களும் இடைஞ்சல்களாக இருந்தன 
என்று தர்மாசாரி சொன்னார். பிறகு, நாங்கள் தூக்கம் கலைந்து மழையில் நனைந்தபடியும் 
கிடைத்ததைப் போர்த்திக்கொண்டும் தேசிய நெடுஞ்சாலையில் மெது ஓட்டத்திலும் நடையிலுமாக 
ஓடிக் கொண்டிருந்தோம். இளகிய இதயம் கொண்ட சில பெண்கள் அங்கேயே அழுகையைத் 
தொடங்கிவிட்டிருந்தார்கள். 

ஹோட்டலிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் 
விளக்குகள் எரியாத அந்த வளைவுப் பாலத்தின் ஓரம், சாபம் பெற்றவனைப்போலவும் கேட்பாரற்ற 
ஒரு நாயைப் போலவும் தங்கப்பன் லாரியில் அடிபட்டு இறந்துகிடந்தான். அவன் உடலை அள்ளிச் 
சாக்குப்பையில் மூட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் குடைபிடித்தபடியும் சிலர் நனைந்த 
படியும் டார்ச் லைட்டிலும் ஜீப்பின் பின் சீட்டில் எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்கிலும் ஜீப்பின் 
ஹெட்லைட் வெளிச்சத்திலும் கடந்து செல்லும் வாகனங்களுக்குக் காவலர்கள் 
வழிகாட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் தங்கப்பன்தான் என்று அடையாளம் காணப்படுவதற்காகவே 
அவனது தலையும் கழுத்துமாய் அரைபட்டு விழுந்த மீதி உடல் நடுச் சாலையில் 
கவிழ்ந்துகிடந்தது. பூதக்கண்ணாடி அடிபட்ட ஜோடிப் பறவையைப் போல் கதறிக்கொண்டிருந்தான். 
அழுதபடியே அவனைப் பிடித்துக்கொண்டு சிலர் தேற்றினார்கள். மழையும் இருளும் சூழ்ந்திருந்த 
அச்சமயத்தில், எங்களைக் கட்டுப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த 
போலீஸ்காரர்களின் அதட்டல்களை மீறித் தங்கப்பனின் ரத்தம் மழைநீரில் கரைந்தோடிக் 
கொண்டிருந்தது. மறுநாள் மழையின் நசநசப்பிலும் தானாகவே கடை பிடிக்கப்பட்டிருந்த 
ஊரறிந்த மௌனத்திலும் ஒரு கோணிப்பையில் தர்மாஸ்பத்திரியிலிருந்து வந்த தங்கப்பனின் உடலை 
ஊர் கூடிப் புதைத்தது. மனம் பேதலிக்கும் தனிமையுடன் பூதக்கண்ணாடியின் மீதமுள்ள வாழ்க்கை 
தொடங்கியது. 

ஆரம்ப நாட்களில், எப்போதும் பூட்டிக்கிடந்த வீட்டில் எப்போதாவது அவன் இருந்தான். 
திடகாத்திரமான மனநிலை இருந்தது அவனுக்கு. ஹோட்டலில் உறுதிப்பூர்வமாக வேலைக்குச் 
சேர்ந்துகொண்டான். மூன்று வேளையும் கடையிலேயே சாப்பிட்டான். அதி காலையில் ஊருக்குள் 
சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நெடுஞ்சாலைக்கு வந்து, இருபுறமும் நோட்டம் விட்டுக் 
கண்ணாடியைச் சரிசெய்து போட்டபடி சைக்கிளில் ஏறிச் செல்லும் அவனை, சாணி தெளித்து வாசல் 
கூட்டும் பெண்களும், டீ கடைக்கும் அதிகாலைப் பேருந்தைப் பிடிப்பதற்குச் செல்பவர்களும் 
நிச்சயமாகப் பார்க்க முடியும். தூக்கமற்றவர்களும் கண் விழித்திருப்பவர்களும் அவன் இரவில் 
வீடு திரும்புவதைப் பார்க்க முடியும். 

அவன் உருட்டிச் செல்லும் சைக்கிளின் ஓசை, பாதி உறக்கத்தில் இருப்பவர்களின் கனவில் நுழையும் 
சாமர்த்தியம் பெற்றது. அது அவனைப் பற்றிய ஒரு மென்சப்தம். வெளிச்சத்தில் தெரியும் மெல்லிய 
இழையைப் போல. அல்லது இரவின் தனிமையில் பாடும் ஒற்றைச் சில்வண்டைப் போல. கிட்டத்தட்ட 
இரண்டு வருடங்கள் எந்த மாற்றங்களும் இல்லாமல் அவனுடைய வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது ஒரு 
நாயினுடையதைப் போல. 

அதன் பிறகு சூழலே இளகியது போல உரையாடலுக்கானதோ எதற்கோ ஒரு துணை அவனுக்குத் 
தேவைப்பட்டிருக்க வேண்டும். திரையரங்கத்திற்குச் செல்லும் ஊர் வாலிபர்கள் ஓட்டலுக்கு வரும் 
பொழுதில் வலிந்து அவனுடன் உறவு ஏற்படுத்திக்கொண்டதை அவனால் தொடர முடிந்தது. பிறகு 
சில நாட்கள் அபூர்வமாக அவனை ஒத்த வாலிபர்கள் அவனுடன் மதகுக் கட்டையில் அமர்ந்து 
பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவன் எங்கள் பிராந்தியத்தின் புகழ்பெற்ற 
டிடர்ஜென்ட் சோப்பின் விளம்பரம் பதித்த பனியனைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்த 
வருடப் பொங்கல் விளையாட்டில் ஊர் வாலிபர்களின் வற்புறுத்தலின் பேரில் பானை உடைத்தலில் 
கலந்துகொண்டு எல்லோரையும் சிரிக்கவைத்துத் தோல்வியடைந்தான். 
1994ஆம் வருடத் தொடக்கத்தில் பஞ்சாயத்துத் தலைவரே அந்தப் புதிய வருடத்திற்கான மீன் 
குத்தகை ஏலத்தை எடுத்திருந்ததார். லாபத்தின் கூட்டல் பெருக்கல்களில் மயங்கிக் குளக்கரையில் 
நிகழ்ந்துவந்த ஆக்கிரமிப்பிலிருந்து சட்டப்பூர்வமாக அதை மீட்டு அகலப்படுத்த வேண்டி ஊர்ப் 
பஞ்சாயத்து முடிவுசெய்தது. 

பூதக்கண்ணாடியின் வீடும் அகற்றப்பட வேண்டிய புறம்போக்கில் இருந்தது. அதைத் தனித்துவிட 
முடியாது. இந்தச் செய்தி எட்டியதும் அவன் அன்று பகலிலேயே ஊர் முக்கியஸ்தர்களிடம் 
பரிதாபமான முகத்தோடு வெயிலில் நின்றபடி கெஞ்சிக்கொண்டிருந்தான். பூதக்கண்ணாடிக்காக 
ஆதரவு தெரிவித்து அவன் வீட்டை விட்டுவிடச் சொல்லிப் பேசியவர்களும் பள்ளிக்கூடத்தை ஒட்டி 
வரும் புறம்போக்கில் அவனை வீடு கட்டிக்கொள்ளச் சொன்னதும் பஞ்சாயத்திற்குக் 
கட்டுப்பட்டார்கள். ஆனால் அன்று முழுதும் வேலைக்குப் போகாமல் பரிதவித்து அங்குமிங்குமாய்க் 
குழப்பமான முகத்துடன் திரிந்துகொண்டிருந்தான். 

குளக்கரையை அகலப்படுத்த வேண்டிய வேலைக்கான முதல்நாள் ‘பொக்லைன்’ வைத்து மண் மேட்டைச் 
சரிக்கத் தொடங்கிய போது ஊரில் வேலையற்றவர்களின் கும்பல் முகத்தில் அறையும் காலைப் 
பகலின் வெயிலில் அவனும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மதியத்திற்கு மேல் 
அவன் வீட்டைப் பிரிப்பதற்காக அவனுக்குக் கடைக்கு ஆள் அனுப்பினார்கள். அவன் இன்னும் வரவில்லை 
என்றார்கள். வேறு வழியில்லாமல் அவனுடைய அந்தக் கூரை வீடு கூலியாட்களால் பிரிக்கப்பட்டு 
மறுபக்கத்தில் அடுக்கப்பட்டது. 

தங்கப்பன் வீட்டின் பகுதிகளைப் பொக்லைன் மண்ணைச் சரித்து அள்ளத் தொடங்கியபோது பூதக் 
கண்ணாடியின் சைக்கிள், திட்ட வரைவுகள் இல்லாத இலக்கற்ற பயணத்தில் களைப்புடன் சென்று 
கொண்டிருந்திருக்கும். திரும்பிச் செல்ல முடியாத ஊரின் நினைவுகளில் அவன் 
மூழ்கிக்கொண்டிருப்பதை, தடுக்க முடியாமல் தடுத்தபடி அவன் தனக்குள் 
உரையாடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு காலத்தில், எப்போதும்போல அவன் சைக்கிள், அவனுடைய 
துணையைப் போல ஒரு ஆறுதலுடன் இருந்திருக்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய பதற்றத்தாலும் தன் 
பெயருக்குப் பின்னே இனி எழுப்பப்படவிருக்கும் அழிக்க முடியாத துரோகம் மிகுந்த திகிலை 
நினைத்தும் ஹாண்டில்பாரைப் பிடித்த கரங்களுக்குள் பிசுபிசுத்த வியர்வையை உணர்ந்தபடி அவன் 
ஒரு துளிக்கும் தாண்டிய கண்ணீரையும் விட்டிருக்கலாம். அல்லது அவன் தங்கப்பனின் இழப்பிற்குப் 
பிறகும் இருந்த மனத்திடத்தால் கனவுகளில் தோன்றும் சிவப்புக் கட்டை எறும்புகளை 
நினைத்தவாறு சாவதானமாகவும் சைக்கிளை மிதித்தபடி குறிப்பிட்ட ஏதோ ஒன்றைத் தேடியும் 
சென்றுகொண்டிருந்திருக்கலாம். தோண்டி எடுக்கப்படும் மண், மனதைப் போல, நினைவில் வரும் 
காலத்தைப் போலப் பின்னோக்கிப் புரண்டுகொண்டிருந்தது. ஒரு சிதிலமடைந்திருந்த உடலின் 
கால் பகுதியைப் பொக்லைன் புரட்டத் தொடங்கியபோது, மலையேற்றத்தில் காதுகளை அடைத்த 
தன்மையுடன் வெளியிடப்படாத எங்களின் கூட்டு அலறல்களால் அத்தருணம் நிரப்பப்பட்டிருந்தது. 
வேடிக்கையின் திசையில் சட்டென எழுந்த காற்று மண்ணை வாரித் தூற்றியது. மாவிலிங்க மரம் 
இலைகளை அலட்சியத்துடன் உதிர்த்துக் கொட்டத் தொடங்கியது. டிம்பர் டிப்போக்களில் கூரான 
இரும்புப் பற்கள், ஈவிரக்கமற்றுக் கத்திக்கொண்டு அறுத்து முடித்து விடுவதுபோல அது 
தொடங்கப்பட்டும் முடிக்கப்பட்டும் இருந்த வாழ்க்கையின் சகல காலங்களுக்கான அத்தனை 
தருணங்களையும் வீசியடித்தது. பதற்றக் குரல்களுடன் உறுதிசெய்யப்பட்ட செய்தியை நாங்கள் 
திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தோம்; கட்டுப்படுத்த முடியாமல் எழும்பிய ஊர் பெண்களின் 
அழுகை, வேறு வழியின்றி முட்டிக் கொண்டிருந்த அணையை உடைத்தது. 
போக்குவரத்து ஸ்தம்பித்து வேடிக்கைப் பொருளைப் போல பார்க்கப்பட்ட அவ்வுடலை போலீஸ் 
வரும்வரை எல்லோரும் குளக்கரை மேட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். அது வத்சலாதான் 
என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவைப்படவில்லை. வாழ்க்கைக்கான நம்பிக்கையுடன் திரும்பி வந்த 
அவள் சினேகிதியின் இரவல் ரவிக்கை புடவையுடன் புதைக்கப்பட்டிருந்தாள். துரோகத்தின் 
கொடிய நிழலும் ஊக்கம் பெற்ற மனப் பிறழ்வின் நடத்தைகளின் முன்னும் அவள் வலுவாகப் 
போராடியிருப்பாள் என்பதே அவள் வாழ்க்கைக்கான கடைசிப் போராட்டமாக இருந்திருக்கும்.