Friday, 5 January 2018

மௌனம் மரணமாகுமா? எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து… அப்பணசாமி

மௌனம் மரணமாகுமா?
எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து… & அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்
அப்பணசாமி

http://appanasamy.blogspot.in/2015/08/blog-post.html

”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ் கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தேன். வயதுமுதிர்ந்த நிலையில் அவர் மரணத்தின் மீதான விருப்பினைக் கொண்டிருந்தார். மிகவும் யதார்த்தவாதியான அவர் தனது முதிர்வை உணர்ந்து மரணம் குறித்து விவாதிக்க விரும்பியதை நண்பர்கள் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். எதையும் ஆழமான விசாரணைக்குட்படுத்தும் ஆற்றல் கொண்ட அவருக்கு இது சற்று அவமரியாதையாக இருந்தது. இதை அறிந்திருந்த என்னிடம் அன்று உரையாடலைத் தொடங்கினார். நானும் ஆர்வமுடன் பங்கேற்றேன்.

”மரணம் என்பது சர்வவியாபகமானது. நாமறிந்த வரைக்கும் அது பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மனிதன் மட்டுமே ஆதியிலிருந்து இதன் மீது விசனம் கொண்டவனாக இருக்கிறான். நவீன இலக்கியத்தில் இது அறிவுப்பூர்வமாக விவாதிக்கப்படுகிறது. தாஸ்தயேஸ்வ்ஸ்கி, டால்ஸ்டாய் முதல் சார்த்தர், காஃப்கா வரை இதையிட்டுப் படைப்புகள் வாயிலாக விசாரணை செய்துள்ளனர். எனக்கும் அது குறித்த உரையாடல்களும் விசாரணையும் உவப்பானதாக இருந்திருக்கிறது.

”மனிதன் தன் குறித்த சில தேர்வுகளை முடிவு செய்துகொள்ளும் உரிமை கொண்டவனாக இருக்கிறான், சார். இந்த வகையில் தமிழில் நகுலனின் ‘வாக்குமூலம்’ எனக்கு உவப்பான நாவல், சார். அதில் மனிதனின் ஆயுளை அறுபது ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதன் பலாபலன்களை அவர் ஆராய்கிறார். இதை உடனே மனிதகுலம் முழுமைக்குமான அரச கட்டளையாக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதாகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு கலைஞனும் அவ்வாறு மனப்பூர்வமாக  எண்ணமாட்டான். நகுலன் என்ற தனிப்பட்ட மனிதரின் நீண்ட நெடிய தனிமை வாழ்க்கை அவரது கலை மனதில் தொடர்ந்து அலைக்கழித்த எண்ணச் சலனங்களை விசாரணைக்கு உட்படுத்தியதே ‘வாக்குமூலம்’ நாவலாக வெளிப்பாடு அடைந்திருக்கும். நமக்கும் அந்த விசாரணை ஆசுவாசப்படுத்துமானால் அசை போடலாம். முதிர்ந்து கனியாகும் பருவம் குறித்த பக்குவத்தை இது அளிக்குமானால் அது நம்மை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
”இதே போல, உண்மையைப் பட்டவர்த்தனமாக உனர்த்தும் படைப்புகளுக்கு மரணமும் விதிவிலக்கல்ல. டால்ஸ்டாயின் ‘நீதிபதியின் மரணம்’ குறுநாவலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை என்னிடம் உருவாக்கியது சார்” என்றேன்.
வழக்கத்துக்கு மாறாக, அவர் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இருவருமே பகுத்தறிவாளர்கள் என்ற நிலையில் இந்த உரையாடல் எனக்கே வித்தியாசமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் தோன்றியது. பகுத்தறிவாளர்கள் உரையாடலுக்கு எதுதான் விலக்காக முடியும்?

“சார், எஸ். சம்பத் தெரியுமா? சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா?” என்றார். “ஆமாம் சார். அந்த நாவலை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். அது வெளியான காலத்திலிருந்து இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இது சாவு குறித்த ஒரு உரையாடல். பொதுவாக நாற்பதுகளை நெருங்கும் ஒருவர் கொஞ்சம் முன்பாகவோ கொஞ்சம் பின்பாகவோ சாவு குறித்துச் சிந்திக்கவே நேர்கிறது. சிலருக்கு சிறுவயது முதலேகூட இது குறித்த விசனம் ஏற்படலாம். கடைசியில் இது மன அழுத்தத்தின் விளைவாக உணரப்பட்டுச் சில நாள்கள் மாத்திரைகளை உட்கொள்வதால் அமுக்கப்படலாம். ஒரு சராசரி வாழ்க்கைக்கு இதுவே உகந்தது. ஆனால், தொடர்ந்த தேடல் கொண்ட ஒரு கலாஆளுமைக்கு இது ஒரு விஷயமாகிறது. மனிதன் இது குறித்து ஈராயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து வருவதால் அதன்மீது தாமும் எண்ணங்களைச் செலுத்த கலா ஆளுமை தூண்டுகிறது. இது மெட்டா பிஸிக்கலாக இருந்தாலுமே ‘எல்லாம் மாயை’ என்ற அனர்த்தத்துக்குச் செல்லாத வரை நாம் அதை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும், சார். சாவு குறித்த அதிமுக்கியமான தத்துவ முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் தினகரன் என்ற கதாபாத்திரம் வழியாக நாவலை எழுதிச் செல்லும் எஸ். சம்பத், நாவல் நெடுக, வாழ்வின் உயிர்ப்பான காட்சிகளையும், வண்ணங்களையும் அதே உயிர்ப்புடன் சித்திரப்படுத்தி இருப்பதுதான் நாவலின் சிறப்பு, சார்” என்றேன்.

வழக்கத்துக்கு மாறாக, பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவர், எஸ். சம்பத் மட்டுமல்லாமல் ஆத்மாநாம் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் நீண்ட அறிமுக உரை நிகழ்த்தி, இருவருமே அற்பாயுளில் போய் விட்டதால் தமிழிலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு குறித்தும் தனது ஈடுபாட்டோடு கூடிய வருத்தத்தையும் தெரிவித்தார். அதுதான், சார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகத் தமது மனம் பக்குவப்பட்டிருப்பதை உணர்த்த விரும்பிய அவாவுக்கு நண்பர்கள் இடம் தராது சென்டிமெண்டாக அணுகியதே அவரது வருத்தமாக இருந்தது. இப்போது அது தீர்ந்து அவரது முகத்தில் மின்னியது.

1980-களின் தொடக்கத்தில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அப்போது புதியதாக வெளிவந்த இரண்டு நாவல்கள் அதற்கு இணையாக எனக்குள் செல்வாக்கு செலுத்தின. ஒன்று ’இடைவெளி’, மற்றொன்று ’நாளை மற்றுமொரு நாளே’. அப்போது எக்ஸிஸ்டென்சியலிச சிந்தனைகளின் தாக்கமும் சார்த்தர், காம்யு, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் செல்வாக்கும் ஏற்பட்டிருந்த காலம். ’இடைவெளி’ நாவல் என்னை ஈர்த்ததற்கு அது சாவு குறித்த தத்துவ விசாரணையை மேற்கொண்டதால் மட்டுமல்ல, ’இடைவெளி’ என்ற அதன் தலைப்பும் நாவலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்த விதமும்தான். ஏனெனில், இடைவெளி சுருங்குவது தொடர்பான சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சி விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்த விளையாட்டை ’இடைவெளி’ நாவல் உற்சாகப்படுத்தியது. அது விபத்துகள் குறித்த ஆராய்ச்சி. அதாவது பெர்முடேசன் காம்பினேசன் அடிப்படையிலும் இயற்கையின் தேர்வு விதி அடிப்படையிலும் எவ்வாறு விபத்துகள் நேர்கின்றன என்பதே எனது ஆராய்ச்சி விளையாட்டாக இருந்தது. அப்போதெல்லாம் நிறையப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததால் பயணங்களின்போது இந்த விளையாட்டில் ஈடுபடுவது உவப்பானதாக இருந்தது. ஒரு வளைவில், திருப்பத்தில், சந்திப்பில், நெடிய சாலையில், சாலை குறுகும் தருணத்தில் எல்லாம் இந்த விளையாட்டு உற்சாகம் கொள்ளும். ஒரு புள்ளியில் எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்பதைப் பொறுத்தே விபத்துகளின் விகிதாசாரம் அமைவதாக உணர்ந்தேன். நாளிதழ்களில் விபத்து குறித்த செய்திகளை வாசிக்கும்போது உருவாகும் படபடப்பை இது தணிக்கும். ஒரு புள்ளியில் எத்தனை சாலைகள் கடக்கிறதோ அதன் 0.00000001 சதவீதத்துக்கும் குறைவாகவே விபத்துகள் நடப்பதாக அறிய முடிந்தது. இது பெர்முடேசன் காம்பினேசனில் பல்வேறு அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இடைவெளி சுருங்குவதே விபத்தின் பாதிப்பையும் உயிரிழப்பையும் தீர்மானம் செய்கிறது என நம்பினேன். இதே போன்ற ஒரு விவாதம் ’இடைவெளி’ நாவலிலும் வந்ததால் முதல் வாசிப்பில் உற்சாகம் கொண்டேன்.

இரண்டாவதாக, எக்ஸிஸ்டென்சியலிச (இருத்தலியல்வாத) எழுத்தாளர்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாகப் போரின் பேரழிவு, மனித எத்தனங்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட வாழ்வின் மீதான விரக்தி, தற்கொலை உணர்வு ஏதோ ஒருவகையில் சாவு குறித்த எண்ணங்களைக் கிளறுவதாக இருந்தது. இந்த வகையில் காம்யுவின் ’அன்னியன்’ என்னைப் பல மாதங்கள் அலைக்கழித்தது. இதன் தொடர்ச்சியாக எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்க நேர்ந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. என்னவோ ஒருவகையான மனக் கிளர்ச்சியை அந்த வாசிப்பு என்னுள் உருவாக்கியது. அதனால்தான் அதன் வசீகரம் முப்பதாண்டுகளாகியும் இன்னமும் தீர்வதாகயில்லை.

நாவல் வாசித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. என்னை வசீகரித்த தமிழ் ஆளுமைகளைத் தேடித் தேடிச் சந்தித்தபோது ஆத்மாநாம், எஸ். சம்பத் ஆகியோர் காலம் ஆகி வெறுமையை உருவாக்கியிருந்தனர். அவர்களோடு பழகிய ’வயல்’ மோகனிடம் அவர்களின் இயல்பு குறித்து விசாரித்தேன்:

’’சம்பத் கனத்த உருவம் கொண்டவர். மிகவும் ஆர்வமானவர். கனத்த உருவத்துக்கு விரோதமான சுறுசுறுப்போடு செயல்படுவார். வியர்வை சட்டையை நனைக்கும் வேகத்தோடு நடந்து வருவார். நீண்டகாலம் இருக்க மாட்டோம் என்பதை முன்னரே அறிந்துதான் அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டாரோ என்னவோ!”

‘இடைவெளி’ நாவலின் மையக் கதாபாத்திரம் ’தினகர’னும் சற்று கனத்த உருவம். நிதானமாகச் செயல்படும் பாத்திரமாக இருந்தாலும் சிந்தனை வேகம் கொண்டு செயல்பட்டு, சம்பத்தின் பிரதிபிம்பமாகவும் கொள்ளச் செய்கிறது.

சண்முகத்தைப் போன்றே தினகரன் முன் வாழ்க்கையும் தில்லியை மையமாகக் கொண்டிருக்கிறது. இருவரும் தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவருமே அய்யங்கார். மற்றும் இதர விழுமியங்களையும் பார்க்கும்போது இதனை அவரது தன் வரலாற்று நாவலாகவும் கொள்ள இடம் இருக்கிறது.
“இந்த நாவல் சாவு என்கிற பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான்” என முன்னுரையில் கூறுகிறார் சம்பத். பசி, காமம், பயம் ஆகியவற்றையே மனிதனின் ஆதார விஷயங்களாகக் காணும் இருத்தலியல்வாதிகளின் செல்வாக்கு சம்பத்தினிடம் மேலோங்கி இருந்ததன் காரணமாகவே சாவு குறித்த விசாரணையை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும். “சாவு என்னைப் பாதித்த விதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய்விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!’ இந்த ஒரு எண்ணம் என்னைச் சின்ன வயசிலேயே தொற்றியிருக்க வேண்டும்” என சம்பத் முன்னுரையில் கூறியது போலவேதான் தினகரனும் நாவலில் கூறுகிறார். மேலும், “நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்துப் பேசி விவாதித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லாரும், ... புத்தக எல்லைக்குள் வாழ்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறை கூற விழையவில்லை” என்று சம்பத் கூறுகிறார். அவரது நாவலில் தினகரனும் தனது சாவு குறித்த தேடலுக்கு விடை காண கால்நடை மருத்துவரை அணுகித் தோல்வி அடைகிறார். அதற்கு அவரைக் காரணமாக்காமல் மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்.

’அடிப்படை விஷயங்களில்’ உழல்பவரான தினகரன் மீது டால்ஸ்டாயும், தாஸ்த்யேவ்ஸ்கியும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ”சாவின் வாயிலிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தாஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாகச் சொல்லியிருப்பார் என்று தினகரன் எதிர்பார்த்தார்”. ஆனால், சாவைப் பற்றி தத்துவார்த்தமான முடிவு எதையும் தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லை என்பது தோல்விதான் என்றாலும் “அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம் இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கண்டு அதில் முழுத் தீவிரமாக” ஈடுபட்டதுதான் என்கிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையின் அனர்த்தமான நீட்சியாகத் தற்கொலை பற்றியும் தினகரன் சிந்திக்கிறார். ஒரு பெண் (கல்பனா) விஷயமாக அவர் தற்கொலை முடிவெடுத்து மொட்டைமாடி மீது நிற்கிறார். அப்போது, “ஒரு கணத்திற்கு, கீழே அதலபாதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மௌனம் தேங்கியிருந்தது” என உணர்கிறார். ”அப்போது அவருக்கு ஏற்பட்ட ”அனுபவத்தை என்ன பெயரிட்டு அழைப்பது?” “தன்னை முற்றிலும் காலியாக்கிக் கொண்ட பிறகு மூளையில், உடம்பில் எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை” சாவுக்கும் அப்பாற்பட்டதாக நினைத்து, தற்கொலை சாவு குறித்த விசாரணைக்குத் தீர்வல்ல எனக் கைவிடுகிறார்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது உயிரும் தினகரனிடம் முறையிடுகிறது. அவர் அங்கு நின்றபோது, ’தரை பால் போல் பொங்கி அவர் நின்ற விளிம்பு வரை மேலெழுந்து’ வந்ததாகக் கண்ட மனக்காட்சியை உயிரின் குறியீடாக எதிர்நிலையில் சம்பத் முன்வைக்கிறார். தொடர்ந்து சாவு குறித்த விசாரணை அவரைப் பித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ஏற்கனவே இது போன்றதொரு அனுபவத்தால் திடுக்குற்றிருந்த தினகரனின் மனைவி பத்மா இம்முறை மேலும் துணுக்குறுகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு மேலும் சிக்கலாகிறது. இது போன்ற நேரங்களில் கூச்சல், கைகலப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நினைக்க மறுநாள் காலையில் காப்பி போட்டுக்கொண்டு அவளையும் குழந்தைகளையும் எழுப்பும் அளவுக்கு தினகரன் அவர்கள் மீதும் பித்தாக இருக்கிறார். உடல் இச்சை அவருள் ஏற்படுத்தியிருந்த வலுவான தாக்கத்தின் நீட்சியாகக் கண்டு தினகரன் திடுக்கிடவும் தவறவில்லை.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உடல்கள் மீது அவர் கொண்டிருந்த இச்சையையும் செயல்பாடுகளையும் அவர் பட்டவர்த்தமான வெளிப்படுத்துவதால் அவர் மனைவி கொள்ளும் சீற்றமும் வெளிப்படுத்தும் ரௌத்திரமும் வாழ்நாள் பிணக்காக நீடித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ‘அடிப்படை விஷயங்களில்’ உழலுவதால் பொருளாயத வாழ்க்கையையும் தவற விடுவதைத் தினகரன் அறிந்தே இருந்தாலும் அவர் மீள இயலாத அளவுக்கு அமிழ்ந்து போகிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையில் அமிழ்ந்த பிறகு பத்மா மிகவும் பயந்து போகிறாள். இது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்ததனால் ஏற்பட்ட பித்து அல்ல. அதைவிட அபாயகரமானது என நம்புகிறாள். முதலில் மற்றொரு பெண் உடல் குறித்த இச்சையாக இருக்கும் என நினைத்துப் போரிட முயல்கிறாள். பின்னர் இது ’வேறு ஒன்று’ என்பதை உணர்ந்து பேரச்சம் கொண்டு ‘நேக்கும் குழந்தைகளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா?’ எனக் கெஞ்சுகிறாள். சாவு குறித்த விசாரணையைத் தற்கொலையை நோக்கிய எத்தனமாகப் பொருளாயத மனம் கண்டு அஞ்சுகிறது. அடிப்படை விஷயங்களில் உழலும் தினகரன் வாழ்தலையும் இதனையும் துல்லியமாக வேறுபடுத்திக் காண்கிறார். பெரும் பொருளாயத இழப்பு, அவர் காது கேட்கவே அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக உலகோர் பேசுவது போன்றவை தவிர பெரிய பாதிப்புகளில்லை என்பது தினகரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இது தினகரனின் தத்துவ மனம் என்றால் இதனைப் படைப்புரீதியாகக் கட்டமைப்பதில் எஸ். சம்பத்தின் கலைமனம் அற்புதமாக, வியக்கத்தக்க அளவில் வெற்றி கொள்கிறது. இல்லையானால், சாவு குறித்த ஓர் விசாரணையில் வாழ்வு குறித்த இத்தனை வண்ணமயமான, உயிர்ப்புள்ள ஜீவ வர்ணனைகள் ஏன் இடம் பெற வேண்டும்?

திருவல்லிக்கேணியில் தன் பெரியப்பா வீட்டு மொட்டை மாடியில் காலையில் ஏழு மணிக்குக் கண்விழிக்க நேர்ந்தபோது வானத்தில் சூரியனின் தங்க ரேகைகள் இன்னமும் அகலாமல்’ இருப்பது தினகரனுக்கு உவப்பளிக்கிறது. இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கட்டான் ஆடுவதாகத் தோன்றுகின்றன: ”சற்றே வலுத்துப் போன காற்றில் தென்னங்கீற்றுகள் ‘ஜே.ஜே’ எனக் கோஷமிடுகின்றன. அந்தக் கோஷத்தையும் மீறி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும் மட்டைகளும் பிரிந்து, பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரங்களைக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்கின்றன”.

அதேபோல, பணமே, பொருளே முதன்மையாகக் கொண்டு வாழும் உயர், நடுத்தர வர்க்கத்தினரை எள்ளலுடனும் உணவக சர்வர், பழவண்டி வியாபாரி, சாலையோர சூதாட்டக்காரன் ஆகிய விளிம்புநிலை மக்கள் மீது கருணையுடனும் அணுகுகிறார்.
இருந்தும் சாவு குறித்த விசாரணையின்போது பித்துநிலை கொள்கிறார். அலுவலகத்தில் தமது ஆராய்ச்சி விளையாட்டில் நிம்மதியாக ஈடுபடுவதற்காகத் தமது பதவிக்கும் தகுதிக்கும் குறைவான ‘மெக்கானிக்கலான’ ஒரு வேலையைச் சில மாதங்கள் கேட்டுப் பெறுவது, ஓட்டலில் ஒரு டீயை மணிக்கணக்கில் குடிப்பது, தன்னை அறியாமல் ஒரு மணி நேரமாக நாணயத்தைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பது, பழ வண்டிக்காரனிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கி இரண்டு சுளைகளை இரண்டு நிமிடமா இரண்டு மணி நேரமா என்பதை உணராமல் தெருவிலேயே நின்று தின்பது, பெரியப்பாவின் உயிர் பிரிவதை இரவு முழுவதும் விழித்திருந்து கண் கொட்டாமல் பார்ப்பது, மின்விசிறியில் தூக்குக்கயிறை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தியானம் செய்வது ஆகிய நடவடிக்கைகளால் மனைவி, குழந்தைகள், மேலதிகாரிகள், சக அலுவலர்கள், ஓட்டல் சர்வர், பழ வண்டிக்காரன் மற்றும் சுற்றத்தார் அவரைப் பைத்தியக்காரன் எனக் கூறுகின்றனர்.

எதற்காகவும் தனது பித்துநிலையைக் கைவிட விரும்பாமல் தொடர்ந்து சாவு குறித்த சிந்தனையில் ஈடுபடுகிறார். அலுவலகத்திலும், கடல் குளியலிலும், சாலைகளில் நடக்கும்போதும் மனைவியின் உடலில் இயங்கும்போதும் கனவிலும் நனவிலும் அது தொடர்கிறது. இதற்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்குமா என குதிரை ரேஸுக்குப் போகிறார். சாலையோரச் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசிக்கிறார். தனது பெரியப்பாவின் இறுதி நிமிடங்களுக்காகத் தூங்காமல் காத்திருக்கிறார்.

இவ்வாறாக, சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம்; சாவு என்பவர் கண்காணிப்பாளர்; சாவு என்பது பிரபஞ்சரீதியில் காத்திருப்பது என்றெல்லாம் ஆய்ந்து இடைவெளி என்ற முடிவை நோக்கி தினகரன் நகர்கிறார்.

இறுதியாக, தனது மனைவி பத்மாவின் உதவியுடன் அறையில் துக்குக் கயிறைக் கட்டி அதைப் பார்த்தபடி (தியானம்!?) நீண்ட நேரம் இருக்கிறார்.

இடைவெளிதான். வாழ்விலும் சாவிலும் இடைவெளிதான் இயங்குகிறது. வாழ்வில் உயிருக்கு அனுசரணையான இடைவெளியாகவும் சாவில் முரண்பட்ட இடைவெளியாகவும் இயங்குகிறது என்பதைக் கண்டடைகிறது. முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கு நிரந்தரமானது. அது ஒன்று மற்றொன்றாக மாறி பரிமாண வளர்ச்சியாகவும் அதே நிலையிலும் வைக்கிறதே இடைவெளி வாழ்விலும் சாவிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். இதோ தினகரன் கணிப்பு:

“வாழ்வு என்பதைப் பற்றிய என்னுடைய கணிப்பு இதுதான். எந்தப் பொருளும் அது உயிர்மயம்தான். ...அதில் ... முன்னமேயே இடைவெளி இருந்தால் அதை உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது முரண்படுகிறது. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி.

”இப்போது அவருள் இன்னொரு கேள்வி எழுகிறது.

”ஏன் இப்படி நடக்கிறது?

“தெரியாது!

“அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? ...

“அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பல்வேறு இயற்கை விதிகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது...”

”இடைவெளியே... சாவே உன்னை வணங்குகிறேன்.
....
....
”மண்டியிடு” என்றது சாவு.
“மானசீகமா? உடம்பாலும் கூடவா?”
“மானசீகமாகப் போதும்!”
“அவர் மண்டியிட்டார்.”

இப்படி ஒரு கீழைய ஆன்ம நிலையில் நாவல் முடிகிறது. பொருளாதாரத் தேடல் உட்பட மனிதனின் அறிவியல், ஆன்மிக, தத்துவத் தேடல்களெல்லாம் மரணம் குறித்ததாக, மரணத்தை வெல்வது குறித்ததாக இருந்து வருகிறது. பொதுவாக, மரணம் குறித்த மேற்கத்தியக் கண்ணோட்டம் என்பது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதாக உள்ளது. கீழைய தத்துவ மரபு மரணத்தை முக்தியாக, வீடுபேறாக, பெரு விடுதலையாகப் பார்க்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் கிழக்கும் மேற்கும் மோதலாகி நவீன சிந்தனைகள் உருவாகியதைப் போலவே சாவு குறித்தும் கிழக்கும் மேற்கும் நெருங்கி, நெருங்கி - நெரித்து, நெரித்து மோதலாகிப் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இதன் நீட்சியாகவே எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலைக் காண முடியும். இங்கே, கிரேக்கமும், பௌத்தமும் சாவை ஒப்பீட்டளவில் யதார்த்தமாகக் காண்பது கவனிக்கத்தக்கது. நவீன சிந்தனைகளும் கூட இதையொட்டியே இயங்க முடியும். வாழ்வு என்பது ஒரு முடிவை நோக்கிச் செல்வது; சாவு என்பது வாழ்வை முழுமையாக்குவது. சாவுக்குப் பின் ஒருவன் தனது சிந்தனைகளை மட்டுமே விட்டுச் செல்கிறான். மேலும் அதில் எந்தவித மாற்றங்களைச் செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். அவன் எதை வாழ்ந்தானோ அதுவே நிசர்னமாகிறது. இவ்வாறு அவன் வாழ்வு சாவால் முற்றுப்பெறுவதுடன் முழுமையும் அடைகிறது.

எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அவன் முதிர்ந்து கனியும்போது மெட்டாபிஸிக்கல் எண்ணங்கள் யாரானாலும் தவிர்க்க இயலாததாகிறது. குறைந்தபட்சம், முன்னர் நிலவிய தீவிர வறட்டுப் பொருள் முதன்மைக்கோட்பாடு முன்பு இருந்த தீவிரத்தில் இருந்து தணியவே, அதன் வறட்டுத்தனத்தில் இருந்து நீங்கும் அளவுக்காவது தணியத்தான் செய்கிறது.

எஸ். சம்பத்தைப் பொறுத்தவரை, அவரே கூறுவது போல பசி, காமம், பயம், சாவு போன்ற அடிப்படை விஷயங்களில் உழல்பவர் அல்லது உழன்றவர். குறிப்பாக, சாவு குறித்த ஆராய்ச்சி விளையாட்டைத் தீவிரமாக விளையாடியவர். கடுமையான நோய் வடிவில் காலம் அவர் வாழ்வில் விளையாடி விட்டது துரதிருஷ்டவசமானது.

முன்னர் பார்த்தபடி சாவு குறித்த கீழைய மற்றும் மேற்கத்திய தத்துவ முடிவுகள் மோதலுக்கு உள்ளாதலில் தாக்கம் அவரில் தீவிரம் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேற்கத்திய பொருளாயதக் கண்ணோட்டத்தின் பிடியிலிருந்து சாவை விடுவிக்க முயலும் சம்பத், மறுபக்கத்தில் சாவை சாவுக்குப் பின்பும் நீடிக்கச் செய்யும் கீழைய தத்துவ முயற்சிகளில் இருந்தும் அறுத்து எறிகிறார். முக்தி, வீடுபேறு, மறுபிறப்பு போன்ற சங்கிலிகளில் இருந்து அதனை விடுவித்து சாவைச் சுயமாக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார். சாவு தானாகவே நிகழ்கிறது என்ற உண்மையின் மூலம் இதனை நிரூபிக்கிறார்.

“அங்கு (மேற்கில்) சமயமும் ஒரு பொருளாதாரத் தத்துவத்தின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது” என்று கூறும் சம்பத், “எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தச் சமுதாயம்தான், இந்தியச் சமுதாயம்தான், கடைசியாக மனித இனத்தைப் பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறது” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். கடந்த முப்பது ஆண்டு கால தத்துவ வளர்ச்சி அதாக இல்லாதபோதும் உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான சாவு குறித்த விசாரணை மெட்டாபிஸிக்கல் அணுகுமுறையாக நீடிப்பது தவிர்க்க இயலாததாகிறது.

சாவு என்பது ஒவ்வொரு உயிரியல் வாழ்வையும் நிறைவு செய்யும் விழுமியம். அது முரண்பாடுகளின் பிறப்பாகவும் அழிவாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த உயிர்களும் தப்பிக்க முடியாது. ஜடப் பொருள்கள் கூட அழிவிலிருந்து தப்பிக்க இயலாது. உயிர் வாழ்வதற்குச் சாதகமான இடைவெளியில் இருந்து அதற்கு முரண்பட்ட இடைவெளியை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு முரண் முற்றிய நிலையில் சாவு தானாக நிகழ்கிறது என்கிறார். சகல உயிர்களுக்கும் இயல்பான வழி இது என்பதால் இதை ஏற்பது சிக்கல் அல்ல.

ஆனால், மனிதனைப் பொறுத்தவரை அறிவு குறுக்கீடு செய்கிறது. இங்கு சாவு தானாக நிகழ்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மனித அறிவால் அறிவியல் உருவாகி எண்ணற்ற மனித உயிர்களின் மரணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டாலும் கூட. மனித ஆணவத்தால் சாவு இலட்சக்கணக்கில் முன் தேதியிட்டு நிகழ்ந்து கொண்டிருப்பதை, சாவு தானாக நிகழ்கிறது என ஏற்க முடியவில்லை. தற்கொலையைக் கூட விட்டு விடலாம். ஏனென்றால், வாழ்க்கை என்பது எந்த வகையிலும் யாசகமல்ல. இந்த ஈகை மனதிற்கு எதிரான போராட்டத்தின் தோல்வியே தற்கொலையைத் துணிச்சலாகத் தேர்வு செய்கிறது.

எஸ். சம்பத் இந் நாவலை 1983 - 84 காலகட்டத்தில் எழுதினார். அதன் பின்னர் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில், என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது.
ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் தாமாகவா போயின?
இந்திரா காந்தி உயிர் பறிக்கப்பட்டதும், அதே நாளில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் தாமாகவா நிகழ்ந்தன?

தண்டகாரண்ய காடுகளில் சல்வா ஜுடும் என்ற பெயரில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவாசிகளின் உயிர்கள் தாமாகவா வெளியேறின?

ஈராக்கில், ஆஃப்கனில், குரேஷியாவில், போஸ்னியாவில், சிரியாவில், யேமனில், லெபனானில், பாலஸ்தீனத்தில், சூடானில், காங்கோவில், எகிப்தில் என உலகம் முழுவதும் அற்பாயுளில் பறிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான உயிர்கள் தாமாக வெளியேறியிருக்குமா என்ன?

இக்கேள்விகளும் இந்த நாவலை வாசித்த பின் எழாமலில்லை.
-நன்றி: கல்குதிரை இளவேனிற்கால இதழ் ஏப்ரல் 2014

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்

செகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்த இலயலாது. அவர் முன் அமரும்போது மனதின் கசடுகள் அந்த நேரத்துக்காகவாவது அகன்று போகின்றன.” இவை பாலகிருஷ்ணனின் நேரடி வார்த்தைகள் இல்லையென்றாலும் அவர் இவ்வாறுதான் அர்த்தப்படுத்துகிறார் என்பதுதான் எனது மனப்பதிவு. இதுதான் இன்றளவும் செகாவை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கூச்சத்தை விட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செகாவையும் என்னையும் தொடர்புபடுத்தி நண்பர் உதயசங்கர் எழுதியுள்ள சிறிய மனப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-appanasamy
அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்
உதய சங்கர் | Saturday, 24 March 2012 | 3 comments
http://udhayasankarwriter.blogspot.in/2012/03/blog-post.html
chekhov.nஇப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை! எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா? அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.


கோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.


என்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.


ஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன ? அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.


தீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்பர்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.


அன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860  1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.


அப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் ! பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் ! எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் ! மீண்டும் வருமா !


சேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...


எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)
நன்றி: http://udhayasankarwriter.blogspot.in/2012/03/blog-post.html
Posted by அப்பணசாமி at 9:58:00 முற்பகல்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்

Labels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அந்தோன் செகாவ், அப்பணசாமி, உதயசங்கர், கோவில்பட்டி, பார்வை, ரஷ்ய இலக்கியம்