Saturday 14 December 2019

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான் - ஃபெர்னான்டோ சோரன்டினோ

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான்
by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2016 • 0 Comments
http://vallinam.com.my/version2/?p=2636
sridhar 2என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான். சரியாக இன்றோடு அவன் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. முதலில் என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை; ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயர் தெரியாது. நடுத்தரமான உடல்வாகு உடையவன் என்பது தெரியும், சாம்பல்நிற சூட் அணிந்திருப்பான், நெற்றிப்பொட்டில் கருமை படர ஆரம்பித்திருக்கும், பொதுவான முகத்தோற்றம்.


ஐந்து வருடங்களுக்கு முன்பு, புழுக்கமான ஒரு காலைவேளையில் அவனைச் சந்தித்தேன். பாலெர்மோ பூங்காவில், மரநிழலில் அமைந்த நீளிருக்கையொன்றில், செய்தித்தாள் வாசித்தபடி அமர்ந்திருந்தேன். திடீரென என் தலையை ஏதோவொன்று தொடுவதை உணர்ந்தேன். அது, இதோ இப்போது நான் இதை எழுதிக்கொண்டிருக்கையில், இயந்திரத்தனமாகவும் உணர்வற்றும், குடையால் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறானே, அதே மனிதன்தான். அந்தத் தருணத்தில், கடுஞ்சினத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்தேன்: அவன் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான். அவனிடம் நீ பைத்தியமா என்று கேட்டேன்: நான் கேட்டது அவன் காதில் விழுந்தாற்போலத் தெரியவில்லை. பிறகு காவலரை அழைக்கப்போவதாக மிரட்டினேன். கலக்கமேதும் இல்லாமல், மிகவும் அசட்டையாக, அவன் வேலையைத் தொடர்ந்தான். குழப்பமான சில கணங்களுக்குப் பிறகு, அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தபிறகு, நான் எழுந்து நின்று அவன் மூக்கில் குத்தினேன். அவன் கிட்டத்தட்ட காதில் விழாத அளவுக்கான ஒரு முனகலுடன் கீழே விழுந்தான். மிகுந்த முயற்சியுடன் உடனே மீண்டெழுந்து, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்தான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது, அந்தக்கணம் அவனுக்காக வருந்தினேன். அவனைத் தாக்கியதற்காகக் குற்ற உணர்ச்சியடைந்தேன். உண்மையில் அவன் ஒன்றும் என்னைக் காயப்படும்படி தாக்கவில்லையே; அவன் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டிருந்தான், அதில் எனக்கு வலியேதும் இல்லை. ஆனால், உண்மையில் அந்தத் தட்டுதல்கள் அளவுக்கதிகமாகத் தொல்லை தருவனதான். நம் எல்லோருக்கும் தெரியும், நம் நெற்றியில் ஒரு பூச்சி வந்து அமர்ந்தால் நமக்கு வலியோ அல்லது வேறெதுவுமோ ஏற்படப்போவதில்லை; அப்போது நாம் உணர்வது ஒரு தொந்தரவு. அப்படியென்றால், அந்தக் குடை ஒரு சீரான இடைவெளியில் அவ்வப்போது என் தலையில் அமரும் மிகப்பெரியதொரு பூச்சி.

நான் ஒரு பைத்தியக்காரனை எதிர்கொண்டிருக்கிறேன் என்று முடிவு செய்து, அவனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் அம்மனிதன், ஏதும் பேசாமல் என்னை அடித்துக்கொண்டே என்னைப் பின்தொடர்ந்து வந்தான். எனவே நான் ஓட ஆரம்பித்தேன் (இந்த இடத்தில் பெரும்பாலானோரால் என் அளவுக்கு வேகமாக ஓடமுடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்). அவனும் என் பின்னால் ஓடிக்கொண்டே என் தலையில் ஒரு அடியேனும் அடிக்க முயற்சி செய்தான். அவன் இப்போது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தான், இதே வேகத்தில் அவனை ஓடவைத்தால் என்னைச் சீண்டிக்கொண்டிருக்கும் அவன் அதே இடத்தில் இறந்து வீழ்வான் என்று தோன்றியது.

எனவேதான் நான் வேகத்தைக் குறைத்து நடக்க வேண்டியதாயிற்று. அவன் முகத்தில் நன்றியுணர்ச்சியோ அல்லது இழித்துரைக்கும் பாவனையோ இல்லை. வெறுமனே குடையால் தலையில் அடித்துக் கொண்டிருந்தான். காவல்நிலையத்துக்குள் நுழைந்து, “அதிகாரி அவர்களே, இம்மனிதன் என் தலையில் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்,” என்று சொல்ல நினைத்தேன். ஆனால், அது ஒரு முன்னுதாரணமில்லாத விநோத வழக்காக இருக்கும். அவ்வதிகாரி என்னையே சந்தேகமாகப் பார்த்து, என் அடையாளப் பத்திரங்களைக் காண்பிக்கச்சொல்லி என்னைச் சங்கடத்துக்குள்ளாக்கும் கேள்விகளைக் கேட்கலாம். முடிவில் என்னையே கூடக் கைதுசெய்து விடலாம்.

வீட்டுக்குத் திரும்புவதே சிறந்த வழி. 67ஆம் எண் பேருந்தில் ஏறினேன். இவ்வளவுநேரம் தன் குடையால் என்னை அடித்துக்கொண்டிருந்தவன் என் பின்னாலேயே ஏறினான். முதல் வரிசையில் அமர்ந்தேன். என் பின்னால் நின்றுகொண்டு இடதுகையால் கம்பியைப் பற்றிக் கொண்டான். வலது கையால் இரக்கமின்றி மீண்டும் தொடர்ந்து குடையால் அடித்துக்கொண்டே இருந்தான். முதலில் பயணிகள் மருட்சியாகப் புன்னகைத்தனர். பேருந்தின் ஓட்டுநர் கண்ணாடி வழியாக எங்களைக் கவனிக்கலானார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பேருந்துப் பயணம் மிகப்பெரிய சிரிப்பாக மாறியது, மிகப்பலமான, நிறுத்தவே முடியாத சிரிப்பு. நான் அவமானத்தில் எரிந்து கொண்டிருந்தேன். என்னைச் சீண்டிக் கொண்டிருப்பவனோ இந்தச் சிரிப்புகளுக்குத் தனக்குள் இடங்கொடாமல் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான்.

பசிஃபிகோ பாலத்தில் – நான் இறங்கினேன் – நாங்கள் இறங்கினோம். சான்டா – ஃபே -நிழற்சாலை வரை நடந்தோம். எல்லோரும் முட்டாள்தனமாக எங்களைப் பார்க்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள், முட்டாள்களே? ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தலையில் குடையால் அடிப்பதைப் பார்த்ததே இல்லையா?” என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனால் அதேசமயம் இப்படியொரு காட்சியை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது. பிறகு ஐந்தாறு சிறுவர்கள் பைத்தியங்களைப் போலக் கத்திக்கொண்டு எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

ஆனால் என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. வீட்டை அடைந்தவுடன், அவன் முகத்தில் அறைவதுபோலக் கதவை மூட நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவன் என் மனதைப் படித்தவன் போல, கதவுக்குமிழை இறுகப்பற்றிக் கதவை உள்ளே தள்ளி என்னோடு உள்ளே நுழைந்தான்.

அந்த நேரத்திலிருந்து, அவன் என் தலையில் குடையால் அடிப்பதைத் தொடர்ந்தான். எனக்குத் தெரிந்தவரை அவன் உறங்கியதோ அல்லது எதையும் சாப்பிட்டதோ இல்லை. அவனுடைய ஒரேவேலை என்னை அடிப்பது மட்டுமே. என்னுடைய எல்லா வேலையின்போதும் என்னுடன் இருப்பான், என்னுடைய அந்தரங்கமான வேலைகளிலும் கூட. முதலில் அந்த அடிகள் என்னை இரவுமுழுதும் விழிக்க வைத்திருந்தது ஞாபகமிருக்கிறது. இப்போது அவை இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது என்று தோன்றுகிறது.

எல்லா சமயங்களிலும் எங்கள் உறவு நன்றாகவே இருந்தது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில், நான் அவனை, பலதொனிகளில் அவனுடைய செயலை விளக்கும்படி கேட்டுப் பார்த்தேன். ஆனால் எந்தப் பயனுமில்லை: ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன் குடையால் என் தலையில் அடித்துக் கொண்டிருப்பான். பலமுறை அவனை குத்தியும், உதைத்தும் – கடவுள் என்னை மன்னிப்பாராக – குடையால் அடித்துமிருக்கிறேன். அவன் வெறுமனே அவற்றை ஏற்றுக்கொள்வான். ஏதோ, அவையெல்லாம் தன் வேலையின் ஒருபகுதி என்பதுபோல ஏற்றுக்கொள்வான். அவன் குணத்தில் குறிப்பிடும்படியான விநோதத்தன்மை இதுதான்: தன் வேலையில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை அதோடு துளியும் பகைமையுணர்வு இல்லாமை. சுருக்கமாகச் சொன்னால், உயரதிகாரி ஒருவரது உத்தரவின் பேரில் ரகசியத் திட்டமொன்றை அவன் செய்துகொண்டிருப்பது போல.

உடலுக்கான தேவைகள் இல்லாதிருந்தாலும், நான் அவனைத் தாக்கும்போது அவன் வலியை உணர்கிறான் என்று எனக்குத் தெரியும். அவன் வலிமையற்றவன் என்பதும் எனக்குத் தெரியும். அவன் இறப்புடையவன் என்பதும். மேலும், ஒரு தோட்டாவினால் அவன் தொல்லையிலிருந்து விடுபட்டுவிடலாம் என்பதையும் அறிவேன். ஆனால், அந்தத் தோட்டாவினால் அவனைக் கொல்வது நல்லதா அல்லது என்னைக் கொல்வது நல்லதா என்பதுதான் தெரியவில்லை. மேலும், நாங்களிருவரும் இறந்தபிறகு அவன் என் தலையில் குடையால் அடிக்காமல் இருப்பானா என்பதும் எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் இந்தச் சிந்தனை வீணானது; என்னால் அவனைக் கொல்லவோ அல்லது என்னைக் கொன்று கொள்ளவோ முடியாது.

தவிரவும், சமீபமாக நான் உணர்ந்த்து என்னவென்றால், என்னால் அந்த அடிகள் இல்லாமல் இனி வாழமுடியாது. இப்போது, அடிக்கடி குறிப்பிட்டவொரு துர்ச்சிந்தனை என்னைப் பீடிக்கிறது. ஒரு பதைபதைப்பு என் ஆன்மாவைத் தின்கிறது, அந்தப் பதைபதைப்பு இந்தச் சிந்தனையிலிருந்து எழுகிறது: ஒருவேளை, அவனுடைய தேவை எனக்கு அதிகமாக இருக்கும்போது அவன் என்னைப் பிரிந்து, என்னை ஆழ்ந்து உறங்கச் செய்து கொண்டிருக்கும் அந்தக் குடையடிகளை நான் உணராமல் போய்விடுவேனோ என்பதே அது.

****

ஃபெர்னான்டோ சோரன்டினோ (Fernando Sorrentino) : 1942-ல் அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் எய்ரஸ்சில் பிறந்தவர். சிறுகதைகளில் முக்கியமாகக் கருதப்படும் சோரன்டினோ தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இதுவரை ஆறு தொகுப்புகள் ஒரு குறுநாவல் வெளிவந்துள்ளது. 2013ல் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான இலக்கியமும் பெருமளவில் எழுதியுள்ளார். மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக மதிக்கப்படும் சோரன்டினோவின் கதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.

ஃபெர்னான்டோ சோரன்டினோ

ஆங்கில மொழியாக்கம்: க்ளார்க் எம். ஸ்லாட்ச்யூ

தமிழில் – ஶ்ரீதர்ரங்கராஜ்