Thursday, 2 June 2016

மூன்று கனவுகள்-விளாதிமிர் நபொகோவ்


மூன்று கனவுகள்-விளாதிமிர் நபொகோவ்
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 9:55 AM | வகை: VLADIMIR NABOKOV, எஸ். ஷங்கரநாராயணன்,சிறுகதை, விளாதிமிர் நபொகோவ்




தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்

1

பாரன் உல்ஃப் மரப்படிகளில் கைப்பிடிகளைப் பற்றியபடியே சிரமத்துடன் மேலேறி வந்தான். வாயில் விசில். தடதடவென்று அப்போது முதல்தளக் கூடத்தில் இருந்து இறங்கியோடி வந்தாள் நடாஷா.

”எங்க இவ்ள அவசரமா…?”

“டாக்டர் எழுதிக் குடுத்திட்டுப் போன மருந்து வாங்கணும். அப்பாவுக்கு இப்ப பரவாயில்லை…”

“நல்ல விஷயம்!”


தலையில் தொப்பியில்லாமல் மழைக்கோட்டு சலசலக்க இறங்கியோடினாள். கைப்பிடியில் சாய்ந்தபடி அவள் போகிறதை ரசித்தான். பளபளவென்ற பெண்மைக் கேசம்.

மேல் மாடியில் அவன் அறை. உல்லாசமாய் விசில் தொடர்ந்தது. போய் ஈர சூட்கேஸை மெத்தைமேல் வீசியெறிந்தான். கையைத் துப்புரவாக, திருப்தியாகக் கழுவிக் கொண்டு, கிழிறங்கி வந்து பெரியவர் கிரனோவின் கதவைத் தட்டினான்.

கூடம் தாண்டி உள்ளறையில் வயசாளி கிரனோவ் மகளுடன் வசிக்கிறார். ரெட்டைக் குதிரை வண்டிபோல் அகண்ட அவரது ஸ்பிரிங் கட்டிலின் பொடிக் கம்பிகள் மயிர்க்கற்றையாய்க் கொசகொசவென்று கிடக்கும். உட்கார எழ அமுங்கி விரியும். ஒரு பாடாவதி மேஜை, மேலே விரித்திருக்கும் அழுக்கு செய்தித்தாள். இவற்றுடன் வத்தி ஒடுங்கிய நோயாளி கிரனோவ். இவன் தன் பெரிய மொட்டைத்தலையை உள்ளே நீட்டுகிறான். கிரீச் மூச்சென்றது கட்டில். படுக்கையில் பின்சாய்ந்து போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தவர், ”வா, ரொம்ப சந்தோஷம். உள்ள வாப்பா.” தஸ்சு புஸ்சென்று மூச்சு விட்டார். பக்கத்தில் மருந்து மேஜை பப்பரக்கா என்று பாதி திறந்து கிடந்தது.

”அலெக்சி இவானிச், கிட்டத்தட்ட முழுசும் குணமாயிட்டாப்லன்னு கேள்விப்பட்டேன்…” படுக்கை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் முட்டியில் தாளமிட்டான். வெளிறிய, விறைத்த கைகளை அவனிடம் நீட்டியபடியே ஆனால் தலையாட்டி மறுத்தார். ”நீ என்ன கேள்விப்பட்டியோ தெரியாது. ஆனா ஒண்ணு எனக்குத் துப்புரவாத் தெரியும், நாளை காலைல நான் மண்டையப் போட்டுருவேன்.” பேசும்போது வார்த்தை தவிர தேவையற்ற நிறைய ஒலிகள். காற்று சுதந்திரமாய் உள்ளே போய் வந்தது.

”பைத்தாரத்தனம்!” என்று சிரித்தான். பெரிய வெள்ளி சிகெரெட் பெட்டியைத் தன் சராய்ப் பையில் இருந்து வெளியே எடுத்தான். ”ஆட்சேபணை உண்டுமா?” துருப்பிடித்த லைட்டர். சடக் சடக்கென்றது. தீ பற்றவில்லை. கிரனோவ் கண் பாதி சொருகியிருந்தது. நீலம் பாரித்த, தவளையின் விரலிணைந்த ஜவ்வுப்பாதம் போன்ற கண் சிமிழ்கள். துருத்திக் கொண்டிருந்த நாசியில் ஆங்கங்கே நரைத் தூறல். கண்ணைத் திறக்காமலே, ”அப்டிதான் ஆகப்போகுது. அவங்க என் ரெண்டு பிள்ளைங்களையும் கொன்னுட்டாங்க. என்னையும் இவளையும் சொந்த மண்ணில் இருந்து பந்தாடிட்டாங்க. இப்ப விசிததிரமான எதோ ஊர்ல நாங்க தடுமாறி வாழ்ந்து தடுக்கி வீழ்ந்து செத்துப் போகணும்… என்ன மடத்தனம் இது. என்னவெல்லாம் நடக்குது. விதில சிக்கி வீதில விழுந்துட்டம்.”

பாரன் உல்ஃப் சத்தமாகவும் தீர்க்கமாகவும் பேசலானான். ஒமக்கு இன்னும் கொள்ளைக் காலம் கெடக்கு, சாக அவசரப்படண்டாம். எல்லாரும் அடுத்த வசந்த காலத்துக்குள்ளாற ருஷ்யா போயிருவோம். ஆடு மாடு கோழி காக்கா எல்லாமும் திரும்பிரும் பாரும் வேய்…..

”அந்தக் காலத்துல நான் காங்கோல சுத்தித் திரிஞ்சிட்டிருந்தனா… கேட்டீரா இவானிச்…” அவன் பெருத்த உடம்பு லேசாய் ஆடியது. ”ரொம்ப தூரத்ல இருக்குது அந்த நாடு, மகா தூரம், காங்கோ காடுகள்… தெரியுமில்லியா? காட்டுக்குள்ளாற ஒரு பட்டி, அங்கத்திய பொண்ணுகளுக்கு மேலாடை கிடையாத். மார்பே டிங் டாங். தண்ணியோட மினுமினுப்பு பாத்தா கரேல்னு கம்பளியாட்டுத் தோலாட்டம். கிட்டத்துல கிட்டத்துல குடிசைகள். மரம் ஒண்ணொண்ணும் இத்தா தண்டி, ரெண்டு கையாலும் அணைக்கேலாது, கேட்டீங்களா, ஒரு ஆரஞ்சு மரம், அடில பெரிய பழம் விழுந்து கெடக்கு, பார்க்க ரப்பர் பந்தாட்டம். அந்த மரப் பொந்துலேர்ந்து ராத்தியாச்சின்னா விநோதமாச் சத்தம், கடலலை பொங்கிவந்தாப் போல. என்ன சத்தம்? எதோ மிருகம் உள்ள வாழுதுபோல… ஊர்த் தலைவன்கிட்ட ரொம்ப நேரம் அரட்டை யடிச்சிட்டிருந்தேன். பாஷை மாத்தி அவனாண்ட எடுத்துச் சொல்லன்னு கூட வந்த எங்காளு பெல்ஜியக்காரன், இன்ஜினியர், அவனுக்கும் தெரிஞ்சிக்க ஒரு துடிப்பு. அவன்தான், அப்ப, 1895ல தங்கன்யிகா அடுத்த சதுப்புகள்ல விநோதமான முதலையுமில்லாத ஆமையுமில்லாத மிருகங்களைப் பார்த்தேன்னது. சரி, அந்த ஆதிவாசித் தலைவன்… அவன் உடம்பு முழுசும் கோபால்ட் தூசி. பளபளப்பு, விரல்ல பூரா நெளிநெளியா மோதிரங்கள். கொழு கொழு பப்ளிமாஸ்! பிதுங்கி பளபளன்னு தொங்கும் தொந்தி, வயிறா வண்ணாந்தாழியா… அப்பதான் ஒருநாள் என்னாச்சின்னா…” உல்ஃபுக்கு கதைசொல்லும் சுவாரஸ்யம். சொரசொர தலையில் தாளமிட்டுக் கொண்டான். மொட்டைத் தலையைத் தடவும் சுகமே தனிதான்.

”நடாஷா வந்திட்டா…” அமைதியாய் அழுத்தமாய் இடைமறித்தார் கிரனோவ். புருவங் கூட அசையவில்லை. சட்டென வெட்கத்துடன் திரும்பினான். கொஞ்சங் கழித்துதான், அதோ கீழ்வாசல் கிளிங். மாடியேறும் தடதட. உள்ளே வேகமாய் நுழைந்தாள். என்ன கண்கள்! கூசினான் அதைப் பார்க்க. ”அப்பா, எப்டி யிருக்கு உடம்பு?”

உல்ஃப் எழுந்துகொண்டபடியே பாவனையான உற்சாகத்துடன், ”சூப்பரா இருக்காரு. படுக்கைலியே ஏன் கெடக்கணும், எழுந்து நடமாட ஆரம்பிக்கலாம். ஒரு ஆப்ரிக்க வித்தைக்காரனைப் பத்தி அவராண்ட சொல்லலாம்னு ஆரம்பிச்சேன்…” அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தபடியே நடாஷா மாத்திரைகளை எடுத்தாள். ”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!

2

அறை திரும்பினான் உல்ஃப். மனம் துள்ளிக்கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. நாற்காலியில் உட்கார்ந்தான். படுக்கையில் உருண்டு புரண்டான். பின் ஏனோ போய் ஜன்னலைத் திறந்து அந்த இருளில் வாசல் வெளியை வெறித்தான். ஒலிகளை ரகசியம் போலச் சிந்திக் கொண்டிருந்தது இரவு. தோளைக் குறுக்கிச் சொடக்கெடுத்தான். போய்ப் பச்சைத் தொப்பி அணிந்து வெளியே போனான்.

கிரனோவ் ஒரு பக்கமாய் உட்கார்ந்திருக்க, நடாஷா அவரது படுக்கையைச் சரிசெய்து கொண்டிருந்தாள். ”உல்ஃப் சாப்பிடப் போறாப்ல…” என்றார் பார்க்காமலேயே. நோயாளி ஆனபிறகு தூரத்து சத்தங்களைக் கிரகிக்க ஆரம்பித்திருந்தார். ஹ்ம், என்று பெருமூச்சு. போர்வையை திரும்ப இழுத்துச் சுற்றிக் கொண்டார். ”ஆச்சு” என்றாள் நடாஷா. ”படுத்துக்கலாம்…”

ஊரே நசநசவென்று கிடந்தது. ஈர மாலை. தெருவில் அடர்த்தியாய் இழுவைத் தண்ணீர். வாகனங்கள். கூம்பாய் விரிந்த குடைகள் நடமாட்டம். உள்ளே தீ எரிகிற வெளிச்சத்தில் கடை ஜன்னல் பிம்பங்கள் மேல்கூரையில் ஆடின. மழையோடு கூட இரவும் மேலிருந்து வழிந்து பிரதேசத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. மெலிந்த நீளக் கால்களைக் காட்டியபடி வேசிகள் கூட்ட நெரிசலில் ரொம்ப அவசியம் போல ஊடே கடந்து போனார்கள். சிறு வெளிச்சத் திவலை அவர்கள் கண்ணில் பட்டு மின்னியது. எங்கோ உயர விளம்பரப் பலகையிலிருந்து பீறிட்டு வந்த கிரணத்தின் ஒரு சக்கரச் சுற்று.

நிசி நெருங்கவும் கிரனோவின் ஜுரம் அதிகரித்தது. தெர்மாமீட்டர் வெதுவெதுப்பாக சிவப்பு ஏணியில் விர்ரென்று உயர்ந்தது. தலையை உதறி, உதட்டைக் கடித்து எதோ பினாத்தினார். அப்படியே உறங்கிப்போனார். மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடாஷா உடை மாற்றிக் கொண்டாள். மங்கலான ஜன்னல்கதவுக் கண்ணாடியில் அவள் தன்னைப் பார்த்துக் கொண்டாள். மெலிந்த வெளிறிய கழுத்து. தோளை மறைத்து விழும் அடர்த்தியான கூந்தல். கொஞ்ச நேரம் அசையாமல் தன் யௌவனத்தையே புளகாங்கிதத்துடன் பார்த்துக் கொண்டாள். திடுமென்று எதோ நிகழ்ந்தது அங்கே. அந்த அறை, அந்த மகா கட்டில், சிதறிக் கிடக்கும் சிகெரெட் துண்டுகளுடன் அந்த மேஜை, ஒரு வயசாளி பொளந்த வாயுடன் சிரமமாய் மூச்சுத் தடுமாறத் தடுமாற பாதி உறக்கமும் பாதி விழிப்புமாய்த் திண்டாடும் அந்தப் படுக்கை… எல்லாமே அசைய ஆரம்பித்தது. மெல்ல அப்படியே மிதக்கிறாப்போல… கருத்த இரவில், கடலில் கப்பல் போல மெல்ல அசைவு கொடுத்தது. பெருமூச்சுடன் வெதுவெதுப்பான தோளை வருடிக் கொண்டாள். அதே அரைமயக்க நிலையில் கட்டில் பக்கம் குனிந்தாள். தனது பாடாவதி ஸ்டாக்கிங்குகளைச் சுருட்டி உருவினாள். அதில் நெய்த நூலை விட தைத்த நூலே அதிகம். திரும்பவும் அறையே நீந்த ஆரம்பித்திருந்தது. பிடரியில் யாரோ கதகதப்பாய் மூச்சு விடுகிறதார்கள். நீலம் குழைந்த வசீகரமான கண்களை விரியத் திறந்து பார்த்தாள். பூச்சி ஒன்று மெழுகுவர்த்தியை வட்டமடித்து அப்படியே கிறுகிறுப்புடன் போய்ச் சுவரில் மோதியது. போர்வைக்குள் தவழ்ந்து உள்ளே புகுந்துகொண்டு கால்நீட்டிப் படுத்தாள். தன்னைத் தானே மூணாம் மனுஷியாய்ப் பார்த்து தனக்குள்ளே பேசிக் கொண்டாள். அடியே வெதுவெதுப்பான அழகான உடல் உனக்கு, நீளமான தொடைகள்… தலைக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டாள். திரும்ப எழுந்து மெழுகுவர்த்தியை அணைக்கச் சோம்பலாய் இருந்தது. இருந்த கனவு லாகிரியில் கால்களே மறந்திருந்தது. கண் சொருகியது அவளுக்கு. கிரனோவ் பெரிதாய் முனகி அப்படியே கையை மேலே தூ… தானாகவே கை துவண்டு தொய்ந்து உயிரற்று பொத்தென மார்பில் விழுந்தது. நடாஷா லேசாய்த் தலையுயர்த்தி மெழுகுவர்த்தியை ஊதியணைத்தாள். அவள் கண்முன்னே வண்ண வண்ண வளையங்கள் சுற்றிச் சுழன்றன…

ஆகா, எத்தனை சந்தோஷமாய் இருக்கிறது, என நினைத்து தலையணைக்குள் சிரித்துக் கொண்டாள். காலைச் சுருட்டிக்கொண்டதில் ஆளே இத்துனூண்டாகிப் போனாள். மூளையில் பளீரிடும் ஒவ்வொரு யோசனையும் மத்தாப்பூவாய்ச் சுற்றி ஒளி சிந்தியது. மெல்ல உறக்கம் பிடித்து அவள் அதன் ஆழத்துக்குப் போனபோது திடுக்கென மேலே வர நேர்ந்தது, ஊவென்ற பதறிய ஊளை.

”அப்பா என்னாச்சி?” தட்டுத் தடுமாறி மேஜையில் மெழுகுவர்த்தியை ஏற்றினாள். படுக்கையில் நெட்டுக்குத்தாய் உட்கார்ந்தபடி கிரனோவ், கை சட்டைக் காலரை அழுத்தி இழுத்துக் கொண்டிருந்தது. தஸ்சு புஸ்சென்று பெட்ரோமாக்ஸாய்ப் பெருமூச்சு. தற்செயலா முழிப்பு வந்து மெல்ல கண்ணைத் திறந்து அவர் பார்த்தால், பக்கத்து நாற்காலியில் கடிகாரம் மின்னியது. கைத்துப்பாக்கி ஓட்டையில் குண்டு போட்டு யாரோ துப்பாக்கியில் அவரையே… டுமீல் சத்தத்துக்கு, சாவுக்குக் காத்திருந்தார். எதுவும் நிகழவில்லை. சட்டென உடம்பு பதற வீறிட்டார். நெஞ்சு ஆசுவாசப்பட மெல்லத் திரும்பி பெண்ணைப் பார்த்தார், பலவீனமாய் அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.

”ஒண்ணுமில்லப்பா, பேசாமப் படுங்க…” காலாலேயே அவரது தலையணைகளை அவர் கால்கிட்டத்தில் இழுத்துக் கொடுத்தாள். புருவத்தைத் தொட்டாள். வியர்த்திருந்தது. ஹாவென்ற பெருமூச்சுடன் சுவரைப் பார்க்கத் திரும்பியபடி மெல்ல பினாத்தினார். ”அவங்க எல்லாரும்… ஆமாம் நானுந்தான். இல்லல்ல, என்னவோ பிரமை. ம்ஹும்,..” அப்படியே தூக்கம் அவரை வாரியிழுத்தது.

நடாஷா திரும்பப் படுத்துக் கொண்டாள். ஸ்பிரிங் கம்பிகள் அபாரமாய்க் குலுங்கின. தோளிலும் முதுகிலும் உறுத்தின. திரும்பி உருண்டு எப்படியோ தன்னை வசதி பண்ணிக் கொண்டு திரும்ப தன் கனவுலோகத்துக்குள் சஞ்சாரம் செய்ய முயன்றாள் அவள். என்ன அழகான கனவு, ஆனால் என்ன கனவு, நினைவில்லை.

காலை. அவளுக்கு முழிப்பு வந்தது. அப்பா அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். ”நடாஷாக் கண்ணு, உடம்பு சுரத்தா இல்லை, கொஞ்சம் குடிக்கத் தண்ணி குடுக்கறியா?” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பிட்டுக்கொள்ள முடியாமல் தள்ளாடி வாஷ்பேசினை நோக்கிப் போனாள். தண்ணி பிடித்த போது நிதானந் தவறி டம்ளர் இடித்த கிளிங். ஆவேசமாய் அதை வாங்கி மடக்மடக்கெனக் குடித்தார். ”ஹா, இப்டியே போய்ச் சேர்ந்துட்டாத் தேவலை…”

”தேமேனு தூங்குங்கப்பா, நல்லாத் தூங்கினா எல்லாம் சரியாப்போகும்.” மேல்சட்டையை உருவிவிட்டு, அப்பாவின் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள். அவர் திரும்பச் சொன்னார். ”முடியல இவளே,” திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு ஒரு கலவரமூட்டும் அஷ்டகோணல் புன்னகையைச் சிந்தினார். ”நடாஷா, அடிக்கொருதரம் நம்மூர்ல நான் நடந்து போயிட்டிருக்காப்ல நினைச்சிக்குவேன். அந்த அரவை ஆலை இல்லே, அதன் பக்கத்து நதிக்கரை… உனக்கு ஞாபகம் இருக்கில்லே? அந்த வழியா போயிட்டிருக்கேன். நடக்க முடியல. ஒரே மரத் தூள். மரத் தூசும் மண் புழுதியும். காலே உள்ள புதையுது. கால்பூரா சகதி அப்புது. ஒருதரம் நாம வெளிநாடு போயிருந்தமா…” தொண்டையைச் செருமிக் கொண்டார். அதுவரை என்ன சொல்லிக் கொண்டிருந்தோம் என்பதே மறந்து திருதிருவென்று விழித்தார்.

அப்போதெல்லாம் அப்பா எப்படி இருந்தார், என அவளுக்குத் துல்லியமாக நினைவு இருந்தது. அழகான குறுந்தாடி, சாம்பல் நிற தோல்கையுறைகள், கடல்நுரைத் தலையணையின் உறைபோல அவரது கட்டம்போட்ட தொப்பி… எப்ப வெளிய கிளம்பினாலும் அதைத்தான் அணிவார். உற்சாக அப்பா… அழுகை முட்டியது.

”ஆமா… அதான்.” என்றார் கிரனோவ் நீட்டி முழக்கி. வெளியே விடியலின் பனிமூட்டத்தைப் பார்த்தபடி பேசினார். ”நல்லாத் தூங்குங்க அப்பா. எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு.” நடுங்கும் கையால் தம்ளரை எடுத்து மேலே சிந்தியபடி தண்ணீர் குடித்தார். முகத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டார். தலையணையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். வெளியே சேவல் ஒன்று தொண்டை விறைக்கக் கூவிற்று. குக்குகூ…கூ!

3

மறுநாள் காலை பதினோரு மணிக்கு உல்ஃப் அவர்கள் கதவைத் தட்டினான். உள்ளே சாப்பாட்டு மேஜையின் கரண்டி தம்ளர்களின் சிணுங்கல்கள். அதைமீறி நடாஷாவின் குபீர்ச் சிரிப்பொலி. கொஞ்சம் கழித்து கதவைப் பின்புறமாய்ச் சாத்தியபடி வெளியே வந்தாள் நடாஷா. ”ரொம்ப சந்தோஷமாய் இருக்கேன். அப்பா இன்னிக்கு எவ்ளவோ நல்லாயிருக்கார்.” வெள்ளைச் சட்டை, இடுப்பில் பட்டன் வைத்த சாம்பல் வண்ண கவுன். அழகிய நீள விழிகளில் உற்சாகம் ததும்பியது.

”ராத்திரியானா பொட்டுத் தூக்கங் கிடையாது,” என்று சட்டென்று தொடர்ந்தாள், ”இப்ப அமைதியாயிட்டாரு. ஜுரம் விட்ருச்சி. எழுந்து உட்கார ஆரம்பிச்சிட்டார். தாதிங்க வந்து உடம்பைத் துடைச்சி விட்டாங்க.”

”வெயில் வந்திட்டது.” என்று உல்ஃப் புதிர் போல் சொன்னான். ”நான் வேலைக்குப் போகல்ல.” வெளிக் கூடத்தில் சுவரில் சாய்ந்தபடி அவர்கள் நின்றிருந்தார்கள். மேலே என்ன பேச என்று ரெண்டு பேருக்குமே திகைப்பு. ”நடாஷா, ஒண்ணு தெரியுமா?” என்று சுவரில் இருந்து பரந்த தன் முதுகை விலக்கி அவளைப் பார்க்கத் திரும்பினான். கையை தன் கசங்கிய சாம்பல் நிறச் சராய்ப் பைக்குள் விட்டுக் கொண்டான். ”ஊருக்கு வெளியே காலாற ஒரு நடை போய்வருவமா? ஆறுக்குள்ள திரும்பி வந்துறலாம், என்ன சொல்ற?”

ஒரு தோளைச் சுவரில் அழுத்தியவாறு நின்றிருந்தாள் அவள். ”அப்பாவை விட்டுட்டு வரணுமே… அதான்!’ உல்ஃப் பிரகாசமானான். ”வா நடாஷா, அப்பாவுக்கு இன்னிக்கு நல்லாயிருக்கில்ல, பின்னென்ன? நம்ம வீட்டுக்காரம்மா, கிட்டத்துல இருக்கா, எதுவும் தேவைன்னா ஒத்தாசை செய்வா.”

”அப்பாட்டக் கேட்டுப் பாக்கறேன்.” குட்டைப் பாவாடை படக்கென்று துள்ள உள்ளே போனாள். மார்பை மறைக்கும் முண்டா பனியனுடன் கிரனோவ் மேஜையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். ”நடாஷா, நடாஷா… நேத்திக்கு பேப்பர் வாங்கிட்டு வரல்லியா?”

ஸ்டவ்வில் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள் அவள். ”அப்பா சும்மா ஒர் ரவுண்டு ஊருக்குள்ள போயிட்டு வரலாம்னு பாக்கறேன். உல்ஃப் கூப்பிடறாரு.”

”சரிடி செல்லம். மவராசியாப் போயிட்டு வா.” எனும்போது அவரது வெளிர்நீலக் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ”என்னை நம்பலாம், இப்ப நான் நல்லாயிருக்கேன். உடம்புதான் பலவீனமா இருக்கு, எழுந்திருச்சாலே ஆளைக் குப்புறத் தள்ளுது. வேடிக்கை!”

அவள் போனபின்னும் அறையைப் பார்வையால் வளைய வந்தார், எதையோ தேடுகிறாப்போல. செய்தித் தாளாய் இருக்கலாம். கட்டிலை அப்படியே நகர்த்தப் பார்த்தார். கட்டில் முனகியது. அப்படியே குனிந்து கட்டில் அடியே தேடி… முகங் குப்புற விழுந்தார். தலை கிறுகிறுவென்று வந்தது. கொஞ்ச நேரம் கிடந்தார். மெல்ல கடும் பிரயத்தனத்துடன் காலை ஊன்றி எழுந்… தள்ளாடி… படுக்கையை எட்டி, ஹாவென்று சரிந்தார். திரும்பவும் நினைவும் கனவுமான மயக்கத்தில் ஆழ்ந்தார். ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார். மர ஆலை இரைச்சல். மஞ்களான மரத் துண்டுகள் நீந்துகின்றன. ஈர மரத்துகளில் கால் புதைகிறது. நதியிலிருந்து புறப்பட்டு வரும் சிலீரென்ற காற்று. உடம்பே வெடவெடக்கிறது…

4

”ஆமாம் நடாஷா… எத்தனையோ ஊர்சுத்தல். சிலபோது என்னைக் கடவுளாய் நினைக்சுக்குவேன்! எனக்கு ரகசியங்களே கிடையாது! சிலோனில் நிழல்களின் அரண்மனை… மடகாஸ்கர் நகரத்தின் சிறு மாடப்புறாக்களை டுமீல்னு சுட்டுத் தின்னிருக்கிறேன். அங்க ஆதிகுடிகள் முதுகெலும்பும் நரம்புகளையுமே நெக்லஸாக அணிந்திருந்தார்கள். இரவுகளில் கடற்கரைப் பக்கம் விநோதமான அவர்கள் பாடல்கள். இசைக்கு நரிகள் நாட்டியமாடுகிறாப் போல இருக்கும். தாமதாவுக்குப் பக்கத்திலேயே கூடாரம் போட்டு தங்கியிருக்கிறேன். செம்மண் பூமி, கடலோ கருநீலம். அதைப்பத்தி நிறையச் சொல்லலாம்னிருக்கு, சொல்லத் தெரியல நடாஷா!”

கையில் ஒரு பைன் குரும்பையைச் குலுக்கியபடியே வந்தவன் சட்டென்று மௌனமானான். தனது தடித்த உள்ளங்கையால் கன்னத்தைத் துடைத்தபடியே அடக்க மாட்டாமல் சிரித்தான். ”ஆ, இப்ப இங்க இருக்கேன். கைல தம்பிடி கிடையாத்! ஐரோப்பாவிலேயே மோசமோ மோசமான ஒரு ஊரில் மாட்டிக்கிட்டிருக்கேன். எதோ ஒரு வேலைல காலை மாலைன்னு வெட்டியாப் பொழுதை ஓட்டிக்கிட்டு, ரொட்டி, தரமில்லாத மட்டன்… டிரைவர் கிளீனர் சாப்பிடற ஓட்டல். ஆனாலும், நானும் வாழ்க்கைல அனுபவிச்சிருக்கேன், ஒரு காலத்துல.”

நடாஷா குப்புறக் கிடந்தாள். விரிந்த தோள்களுடன் தலை நிமிர்த்தி, ஒளிரும் பைன்மர உச்சிகள் நீலப் பின்னணியில் பணிந்து அசைவதைப் பார்த்தாள். அந்த வானத்தைக் கூர்ந்து கண்ணெடுக்காமல் பார்த்தாள். ஒளிப் புள்ளிகள் வளையங்களாய் அவள் கண்ணில் சிதறின. மரத்தில் இருந்து மரத்துக்கு தகதகவென்று அந்தப் பொன்தூவல் பாய்ந்தாற் போல ஒரு பிரமை. பக்கத்தில் காலைக் கட்டிக்கொண்டு உல்ஃப் உட்கார்ந்திருந்தான். வெளிர் சாம்பல் சூட். மொட்டைத் தலை குனிந்திருந்தது. குச்சியை இன்னமும் சுழற்றிக் கொண்டிருந்தான்…

நடாஷா பெருமூச்சு விட்டாள். ”நடுப்பட்ட காலத்தில்…” என ஆரம்பித்தாள். பார்வை பைன் மர உச்சிகளை வெறித்தது. ”அவர்கள் என்னை உயிரோடு எரித்திருப்பார்கள். அல்லது புனிதப் படுத்திக் கொண்டாடி யிருப்பார்கள். கழுத்தைப் பிடி அல்லது காலைப் பிடி. சிலப்ப எனக்கு விநோத உணர்வுகள் தட்டும். ஒரு மாதிரி புளகாங்கிதம், உடம்பே இல்லாத மாதிரி, நானே எங்கோ தூரத்தில் மிதந்திட்டிருக்கா மாதிரி, எல்லாமே துல்லியப் படுது அப்ப… வாழ்க்கை, மரணம், எல்லாமே! ஒரு தடவை, அப்ப எனக்குப் பத்து வயசிருக்கும்… கூடத்துல உட்கார்ந்து என்னமோ வரைஞ்சிட்டிருக்கேன். அலுப்பாய் இருந்தது, பென்சிலைக் கீழே போட்டுட்டு யோசிக்க ஆரம்பித்தேன். திடீர்னு பாத்தா ஒரு பெண் என்னைப் பார்க்க விறுவிறுன்னு உள்ள வந்தாள்! மங்கிய நீல உடைகள், காலில் செருப்புகூட கிடையாது, பெரிய கனமான வயிறு… சின்ன மெலிந்த மஞ்சள் முகம். அபூர்வமான மெல்லிய விளக்கவியலாத விழிகள்… என்னை அவள் சட்டையே பண்ணவில்லை, அப்படியே விர்ரென்று கடந்து அடுத்த அறைக்குள் மறைந்து விட்டாள்! என்னவோ, எனக்கு பயமாய் இல்லை அது. வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ண வந்தவளாய் இருக்கும், என்றே தோன்றியது. அவளை அதற்குப் பிறகு நான் பார்க்கவே இல்லை. ஆனா அவ யார் தெரியுமா? கன்னி மேரி!”

உல்ஃப் புன்னகை செய்தான். ”எதுனால அது மேரின்னு சொல்லத் தோணுது உனக்கு நடாஷா?”

”தெரியும்!” என்றாள் நடாஷா. ”ஒரு அஞ்சி வருஷம் கழிச்சி என் கனவில் அவளே வந்தாள். கைக்குழந்தையுடன்… அவள் காலடியில் தோளில் சிறகுகளுடன் நிறையப் பச்சிளம் குழந்தைகள் பச்சைமிளகா தெரியுது, அல்லது அரசிலை டாலர் மூடியிருக்கு. ரஃபேல் ஓவியங்கள் போல! அவை பொம்மைகள், இதுங்கள் உயிரோடு! இவை தவிர, சில சமயம் சின்னச் சின்ன தரிசனங்கள் வாய்க்கும் எனக்கு. மாஸ்கோவில் அவர்கள் அப்பாவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க, நான் மாத்திரம் வீட்டில் தனியே. அப்ப நடந்தது பார்… மேஜை மேல வெங்கல மணி, மந்தைக்குப் போகும் மாடுகளுக்குக் கழுத்தில் கட்டுவாங்களே, அந்த மணி. அப்பிடியே அந்த மணி அந்தரத்தில் எழும்பியது. கிணி கிணி கிணின்னு சத்தம். திரும்ப விழுந்திட்டது. என்ன அழகான துல்லியமான ஒலி!”

அவளை விசித்திரமாய்ப் பார்த்தான். கைக் குச்சியை எட்டியமட்டும் தூர விட்டெறிந்தான். நிதானமாய்ப் பேச ஆரம்பித்தான். ”ஒண்ணு உங்கிட்ட நான் சொல்லியே ஆவணும் இவளே. நான் ஆப்ரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ ஒரு நாட்டையும் எட்டிப் பார்த்தது கிடையாது. எல்லாமே புளுகுமூட்டை. வயசு முப்பதாச்சி, நம்ம நாட்லயே ரெண்டுமூணு நகரம், ஒரு டஜன் கிராமங்கள், அப்றம் இதோ இந்த உப்பு பெறாத நாடு, இதைத் தாண்டி எங்கயும் போனதும் இல்லை, கண்டதும் இல்லை. என்னை மன்னிச்சிரு.” சோகமாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். குழந்தைப் பருவத்தில் இருந்து அவனிடமே தங்கியிருந்த பிரும்மாண்டமான கனவுகள் அவை. பலூனை உடைத்துவிட்ட சோகம். ச்.

உலர்ந்த வெக்கையான காற்று வீசியது. தகதகப்பான பைன் மர உச்சிகள் முணுமுணுத்தன. ”எறும்பு” என எழுந்து கொண்டாள், சட்டையை எடுத்து உதறிக் கொண்டே. ”சரியா எறும்புப் புத்து மேலயே உட்கார்ந்திருக்கோம்…”

”என்னைப் பத்தி ரொம்ப மட்டமா நினைக்கிறியா இவளே?”

அவள் சிரித்தாள். ”கிறுக்குத்தனமாப் பேசாதே. நாம ரெண்டு பேரும் ஒரே தராசுத் தரம்தான். உன்னாண்ட நான் சொன்னேனே, என்னுடைய பரவசங்கள், கன்னி மேரி… அந்த வெங்கல மணி… எல்லாமே கட்டுக்கதைதான். ஒருநாள் அப்டில்லாம் நான் நினைச்சிப் பார்த்தேன்… அதுக்கப்பறம், அதெல்லாம் நடந்ததா நானே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்…”

”அப்டிதான்…” என்றான் அவன் பிரகாசமாய். ”உன் பிரயாணங்களைப் பத்தி இன்னுங் கொஞ்சம் சொல்லேன்!” என்றாள் நடாஷா, அதில் குத்தல் த்வனி இல்லை. வழக்கமான உற்சாகத்துடன் சிகெரெட் பெட்டியை வெளியே எடுத்தான். ”தங்கள் சித்தம் என் பாக்கியம்… போர்னியோ லேர்ந்து சுமத்ராவுக்கு தோணில போயிட்டிருந்தேன்.”

5

ஏரிக்குச் சரிந்திறங்கியது பூமி. தோணித்துறைக் கம்பங்களின் நிழல் நீரில் நெளிநெளியாய். குட்டையைத் தாண்டி அதே பைன் மரத் தோப்பு. ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெள்ளைத் தண்டும் மஞ்சள் பனிபோல் இலைகளுமான சவுக்கு மரங்கள். வெளிர்நீல நீர்ப்பரப்பில் பளபளவென்று மேகங்கள் நீந்தின. அவளுக்கு லேவிதனின் இயற்கை ஓவியங்கள் ஞாபகம் வந்தது. ருஷ்யாவிலேயே இருக்கிறாப் போல ஒரு பிரமை. தொண்டை விக்கும் இந்த சந்தோஷம் ருஷ்யாவில் இருந்தால்தான் சாத்தியம். உல்ஃப் தனது அற்புதமான கனவுகளைத் திரும்ப உளர ஆரம்பித்தது அவளுக்கு வேண்டியிருந்தது. பேசியபடியே ஏரித் தண்ணீரில் சில்லெறிந்தான் அவன். அவை ஜோராய் நீர் மேற்பரப்பில் தாவித் திரிந்தன. வேலைநாள், அந்தப் பக்கம் சந்தடி யற்றிருந்தது. அங்கங்கேயிருந்து சிரிப்பும் ஹாவென்ற ஆர்ப்பரிப்புமே தேய்ந்தொலித்தபடி இருந்தன. ஒரு பாய்மரத் தோணி தூரத்தில் தலையாட்டிப் போனது. ஏரிக்கரையோடு ரொம்ப நேரம் நடந்தார்கள். வழுக்கும் மேடேறினார்கள். அந்தப் பக்கம் ராஸ்பெரிப் புதரில் இருந்து சகதி நெடி. இன்னும் தள்ளி, ஏரித் தண்ணீருக்கு வலது பக்கம் ஒரு சிறு விடுதி, ஆளே இல்லை அங்கே. பரிமாறவும் ஆளில்லை, சாப்பிடவும் ஆளில்லை. எங்கோ அவசர ஆபத்து என்று எல்லாவனும் ஓடிப் போயிட்டாப் போல. அங்கே ஒரு டம்ளரும், தட்டும் கூட இல்லை. விடுதியைச் சுற்றி வந்தார்கள். ஒரு காலி மேஜையில் உட்கார்ந்து கொண்டார்கள். சாப்பிடுகிறாப் போலவும் குடிக்கிறாப் போலவும், பின்னணியில் ஒரு இசைக்குழு பாடுகிறாப்போலவும் பாவித்துக் கொண்டார்கள். ஒரே வேடிக்கை. நடாஷாவுக்கு உண்மையிலேயே ஆரஞ்சுத் தோட்டத்தில் இருந்து காற்று இசையைக் கொண்டு வந்தாப்போலிருந்தது. ஒரு உன்மத்தத்துடன் கரையில் ஓடினாள். தஸ்சு புஸ்சென்று மூச்சிரைக்க அவள் பின்னால் ஓடினான் அவன். ”இரு இவளே, பில்லு குடுக்காம வரப்டாது!”

தாண்டி பச்சைப் பசேல் புல்வெளியும் நாணல்களும். அதனூடே சூரியன் தண்ணிரில் தகதகவெனப் பொலிந்தான். மூக்கு விடைக்க நடாஷா திரும்பத் திரும்பச் சொன்னாள். ”ஆகா எல்லாம் எத்தனை ஜோரா இருக்கு.” இருந்த உற்சாகத்துக்கு வாயைக் குவித்து உஹுஹு… என்று காட்டில் கத்தினான், எதிரொலி கேட்காதது ஏமாற்றமாய் இருந்தது. அடங்கிப் போனான். அகண்ட ஏரிப் பரப்பில் வெயிலின் உக்கிரம். நிசப்தம். சூழலே சோகப் பாடல் பாடியது. அவள் தொண்டையைச் செருமிக் கொண்டாள். ”என்னவோ தெரியல, படபடங்குது. அப்பாவுக்கு எப்டி யிருக்கோ. ச், அவரைத் தனியா விட்டுட்டு நான் வந்திருக்கப்டாது…”

உல்ஃப் கிரனோவை நினைத்துக் கொண்டான். மெலிந்த நரைமுடிக் கால்கள். படுக்கையைப் பார்க்க பின் சரிந்த போது அநத்க் கால்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தன. சரி, இன்னிக்கேதான் அவர் டிக்கெட் எடுத்துட்டாதான் என்ன, என்று தோன்றியது. ”அப்டிச் சொல்லாத இவளே. அவரு நல்லாதான் இருக்காரு…” என்றான். ”ம். நானும் அப்டிதான் நினைக்கிறேன்…” என்று திரும்ப உற்சாகத்துக்கு மீண்டாள்.

மேல்கோட்டைக் கழற்றிக் கொண்டான். கோடுபோட்ட சட்டை.யிலிருந்து வியர்வை வெக்கை. அவளுடன் நெருங்கி நடந்து வந்து கொண்டிருந்தான். நேரே பார்த்தபடி வந்து கொண்டிருந்தாலும் பக்கத்தில் ஆம்பளை வாசனை, அவளுக்குப் பிடித்திருந்தது.

”என்ன மாதிரியெல்லாம் கனவுகள்! அற்புதமான கனவுகள்!” என்றான் அவன். கையில் இன்னொரு குச்சி, காற்றில் அதை வீசுந்தோறும் விஷ்க் விஷ்க் என்றது. ”என் பிரமைகளை எடுத்து விடும்போதெல்லாம் பொய்யா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? என் ஒரு சிநேகிதன், மூணு வருஷம் பம்பாயில் வேலை பார்த்தான். பம்பாய்? ஆகா, பேரே எத்தனை இசைக்கோர்வையாய் இருக்கிறது. பெயரிலேயே பிரம்மாண்டம். ஒளி வெள்ளம். இசைப் பரவசம். யோசிச்சிப் பாரு இவளே, அந்த மனுசன் வாழ்ந்திருக்கான், ஆனா. எதையும் அனுபவிச்சுச் சொல்லத் தெரியாது. வேலை தவிர எதையும் பேசமாட்டான். அந்த அபார சூடு. வியாதிவெக்கை. ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் பெண்டாட்டி பற்றிக் கதை. நம்மள்ல யாரு இந்தியாவப் பாத்திருக்கோம்? ஹா, என்னைத் தவிர! நான் பாத்திருக்கேன், பம்பாய், சிங்கப்பூர்! எத்தனையோ சொல்வேன், உதாரணத்துக்கு.”

ஏரிக்கரையை ஒட்டியே நடந்தாள். குழந்தை அலைகள் அவள் காலை சிலீர் சிலீரென்று தழுவிப் போயின. தூரத்தில் தோப்புக்கு அப்பால் ரயில் ஒன்று கடந்து போனது. தண்டவாளம் வயலின் குச்சி போல இசையை வழங்கியது. அப்படியே ரெண்டு பேரும் நின்று அந்த இசையைக் கேட்டார்கள். தடதட தடதட. பொழுதே மேலும் மெருகேறி மென்மையாகி விட்டிருந்தது. ஏரியின் மறுபக்கத்து தோப்பு மரங்களில் நீலச் சாம்பல் அடர்ந்தது.

ரயிலடியில் ஒரு பொட்டலம் பிளம்ஸ் வாங்கினான், ச்சீ புளிப்பு தாளவில்லை. காலி ரயில்பெட்டி ஒன்றில் எறி உட்கார்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு பழமாக ஜன்னல் வழியே விட்டெறிந்தான் அவன். அந்த விடுதில இல்ல இவளே, பீர் குவளை வைக்கிற சின்ன தட்டுகள், ஒண்ணு ரெண்டு லவட்டிட்டு வந்திருக்கலாம், என்றான்.

”பிளம்ஸ் விழறதைப் பார் நடாஷா. சிட்டுகள் போல…” ஆனால் அவள் அலுப்பாய் இருந்தாள். சித்த கண்ணை மூடிக்கொண்டாள். இராத்திரிகள் போல அப்படியே உடலைத் தளத்தி மிதக்கிற பாவனைக்கு வரலாம், என்றிருந்தது.

”திரும்பப் போனதும் அப்பாகிட்ட நாம சுத்தியது பத்தி நான் பேசறச்ச இடை மறிக்கவோ, தடுக்கவோ வேண்டாம். நான் பாட்டுக்கு பாத்ததையும் பாக்காததையும் கதை விடுவேன். அழகழகான விஷயங்கள். அவர் புரிஞ்சுக்குவார்.”

திரும்ப ஊருக்குள் வந்ததும் அப்படியே வீடு திரும்பலானார்கள். உல்ஃப் இறக்கைகளை இழந்தாற் போல அமைதியாகி விட்டான். பாய்ங் பாய்ங் என ஹாரன் அடித்தபடி நகரும் வாகனங்கள். நகரம் பரபரப்பாய் இருந்தது. ஆனால் நடாஷா கிளர்ச்சி தளராமல் இருந்தாள். முகத்தில் பரந்த புன்னகை. மிதத்தல் நடை. கனவு அமிர்தமாய் உள்ளே சுரந்து கொண்டிருந்தது. பொழுது சாய்ந்திருந்தது, அவனும் சுருதியிறங்கி யிருந்தான். ஒரு தேவ வேளை முடிவுக்கு வருகிறது… தெருவில் வீடடைவதற்குக் கொஞ்சம் முன்னாலேயே அவன் நின்றுவிட்டான். அவ¢ள் சிட்டாய்க் கிளம்பியவள், அப்படியே அவளும் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். தலையைக் குனிந்து சராய்க்குள் கைகளை விட்டுக் கொண்டபடி தோளைக் குலுக்கிக் கொண்டான், காளை மாட்டைப் போல. சங்கடத்தை உதறிவிட்டு அவன் சொன்னான். ”அடிப்பெண்ணே, நான் உன்னை நேசிக்கிறேன்!” அவள் முகத்தைப் பார்க்க ஏனோ வெட்கம்!. சிகெரெட்கடையை நோக்கிப் போனான்.

திடுக்கென்று அந்தரத்தில் அப்டியே நின்றாப் போலிருந்தது அவளுக்கு. மூச்சு விடுவதே தெரியவில்லை. மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டு வீட்டைப் பார்கக நடந்தாள். இதையும் அப்பாகிட்டச் சொல்லணும், என நினைத்துக் கொண்டாள்.
சுற்றிலும் நீல நீலமாய் மேகத்திட்டுகளில் மிதந்து போகிறாள் அவள். தெருவிளக்குகள் ரத்தினக் கற்களாய் அந்த மேகத்துள் ஒளிர்கின்றன. ரொம்ப அலுப்பாய், வெக்கையாய் உணர்ந்தாள். தண்டுவடத்தில் சின்ன இம்சை. படுத்துக் கொள்கிற அலுப்பு.

கருப்புச் சட்டையை மாட்டியபடி அப்பா பூட்டிக்கொண்டு அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தார். பட்டன் போடாமல் திறந்திருந்தது சட்டை, கை காலரை சரிசெய்து கொண்டிருந்தது. கையில் சாவிக்கொத்து கிளிங்கியது. மாலைக்குளிர் நடுக்கி ஆளைக் கூன வைத்தது. சில சமயம் பேப்பர் பார்க்க என்று தவித்துப் போவார் அவர்.

”அட அப்பா!” என்று அவர் பின்னால் போனாள். வராந்தா ஓரத்தில் இருந்து திரும்பி என்ன என்பது போல் கம்பீரமாய்ப் பார்த்தார். ”ஏய்யா என் வெள்ளைப்பிடரி கிழட்டுச் சிங்கம், வெளிய போகக்கூடாது…” என்றாள் அவள்.

தலையை மறுத்துக் குலுக்கியபடி மென்மையாய் அவர் சொன்னார். ”செல்லம், இன்னிக்குப் பேப்பர்ல ஒரு அட்டகாசமான செய்தி. அடடா பர்சை எடுத்திட்டு வரல்லியே, ஜல்தி. மாடில போயி எடுத்தாறியா? நான் இப்டி இங்கியே நிக்கறேன்…”

கீழ்க் கதவை டிஷ்யும்.. என முட்டித் திறந்தாள். அப்பா எத்தனை ஜோராய் ஆகிவிட்டார்! படபடவென மாடியேறினாள், எல்லாம் மிதக்கிறாப்போல இருந்தது. கூடம் தாண்டி விரைந்தாள். வெளிய பனில நிக்கிறாரு எனக்காக,. சளி பிடிச்சிக்காம இருக்கணுமே…

கூடத்தில் ஏனோ விளக்கெரிந்து கொண்டிருந்தது. கதவைப் பார்க்கப் போகிறாள், உள்ளே மெல்லிய குரலில் பேச்சுக்குரல். படாரென்று கதவைத் திறக்கிறாள். மேஜைமேல் சீமெண்ணெய் விளக்கு. அடர்புகை எழும்புகிறது. வீட்டுக்காரியும், யாரோ புதுமுகமும்… முதுகுப்பக்கமாய்… படுக்கையை மறைத்து…. திரும்பிப் பார்க்கிறார்கள். ஊவென்று அவளைப் பார்க்க விட்டுக்கார அம்மாள் ஓடி வருகிறாள்.

நடாஷா படுக்கையைப் பார்க்கப் போனாள். அவள் வெளியே பார்த்த அப்பா அல்ல அது. மூக்கு மெழுகுச் சாயலில் விரைப்பு கண்டிருந்தது.

******

(சிர்கா 1924. ருஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலத்தில், திமித்ரி நபொகோவ்.)





மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

கனவு சார்ந்த மறுகரை வாழ்க்கையை ஒரு போர்ப் பின்னணியில் சொல்ல வருகிறார். விவரணைகள் பெரும்பாலானவை தமிழில் எடுபடா அளவிலேயே இருந்தன என்றாலும் முடிந்தவரை கொண்டுவர முயற்சி செய்தேன். இன்றைய தமிழ் புனைகதை எழுத்தில், ஒரு காற்புள்ளி அரைப்புள்ளிக்குக் கூட மொத்தக் கதையில் தொடர்புடன் கவனக் குவிப்புடன் எழுத வேண்டியிருக்கிறது. யாரை வர்ணித்தாலும் உடைகளை வர்ணிப்பது அங்கத்திய வர்ணனை. காதல் வயப்பட்டவன், சாப்பிடப் போகையில் பஜாரில் வேசிகள் நடமாட்டத்தை பார்க்கிறதாக வெல்லாம் விவரங்கள்.

‘லோலிட்டா’ என்கிற நபொகோவின் நாவல் வெகு பிரசித்தம். பதின் பருவப் பெண்ணொருத்திக்கும் வயதான ஆண்மகனுக்குமான காதல் கதை அது. அதை ஆங்கிலத்தில் தான் எழுதினார். நிறைய ஃப்ரெஞ்ச் மற்றும் பிறமொழி இலக்கியங்களையும் நபொகோவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் கதை மகனே அப்பா கதையை மொழிபெயர்த்தது, மகன் தந்தைக் காற்றும் உதவி.


































மூலக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பெறலாம். மூலக் கதைத் தலைப்பு: நடாஷா

நன்றி: சொல்வனம்