Thursday, 1 June 2017

ஆறு நவயுக நாவல்கள் - கு. ப. ராஜகோபாலன்

ஆறு நவயுக நாவல்கள் 

கிரஹ தாகம் - சரத் சந்திர சட்டர்ஜி 
பெண் - ஸியாராம்சரண குப்தர் 
சுகம் எங்கே ? - வி. ஸ. காண்டேகர் 
அன்னா லியோ டால்ஸ்டாய் 
ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் - ரமேச சந்திர தத்தர் 
மகாராஷ்டிர ஜீவன் உதயம் . . '' '' 

நாவல் இந்திய இலக்கியத்தில் ஒரு புதிய அம்சம். காதம்பரி , ஹர்ஷ சரிதம் போன்ற கதைகள் இந்திய இலக்கியத்திலும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் கதைப் போக்கும் வர்ணனையுமே முக்கியமாக இருக்கின்றன. நாவல், அதன் தற்கால அமைப்பில், வெறும் கதை மட்டுமல்ல. ஆதியில் பிறந்து வளர்ந்த மேலை நாடுகளில் கூட அது வெறும் கதைச் சரடாக இருந்த காலமும் உண்டு. அதன் வளர்ச்சி ஒரு தனிச் சரித்திரம். தற்சமயம் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாவல்தான் அதிகமாக வளர்ச்சி பெற்று வலுத்திருக்கிறது என்று சொல்லலாம் : அநேகமாக அது இலக்கியத்தின் பரப்பையே அளாவி நிற்கிறது. கவிதையும் நாடகமுங்கூட அதில் ஊடுருவி நிற்கின்றன... 

iv 

இதற்குக் காரணம் என்ன? நாவல் வாழ்க்கையின் சித்திரம் : வாழ்க்கையில் நடைபெறும் போராட்டங்களின் சித்திரம். அதில் கதையும் உண்டு; ஆனால், அந்தக் கதை பாத்திரங்களுடைய மன நிகழ்ச்சிகளின் கோவை. இக் காரணத்தாலே, நாவல் நீளமாக இருந்தாலும், அதன் கதை ' நீண்டிருக்காது. குறுகிய கால அளவிலே அமைக்கப்பெற்ற சில பாத்திரங்களின் குண சித்திரமே சில சமயங்களில் நாவலாக அமைந்துவிடும். நிகழ்ச்சிக் காலம் குறுகக் குறுக, நாவலின் பிகுவும், கட்டுக் கோப்பும், உணர்ச்சிப் பெருக்கும் அதிகமாகும். 

மன நிகழ்ச்சிகள்! - இவைதான் நாவலில் ஆதியிலும், நடுவிலும், அந்தத்திலும் அதற்கு உயிர்நிலை. 

குண சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாரணமான பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியா மல், அதை எதிர்த்து, வேறு தனிப் பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை ; அலை மோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்த வகை தெரியாமல் தத்த ளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதா பத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை ; லட்சிய வீரர் கள் (ஆண்களும் பெண்களும்), வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து விழும் வீழ்ச்சியைச் சித்திரிப்பது மேலும் ஒரு வகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலக் கிய - வீரர்கள் தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற் பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்கால சமூகத் திற்கு வழிகாட்டிகள். மொத்தமாகப் பொது நோக்கில் கூறி னால், மனித இயல்பும் வாழ்க்கை நியதியும் கை கலக்கும் கண் கொள்ளாக் காட்சிகளைச் சில அபூர்வசந்தர்ப்பங்களில் பொறுக் கிப் பிணைப்பதன் மூலம் காட்டுவதுதான் நாவலின் தொழில் 

மனித இயல்பை ஓர் ஆற்றுப் பெருக்காகக் கொள்ள லாம்; வாழ்க்கை யென்று நாம் சொல்லும் சமூக அமைப்பு ஓர் அணை போல அதன் முன் நிற்கிறது. அணை நன்மைக் காகத்தான் ஏற்பட்டது. சமூக அமைப்பும், அணை போல வாழ்க்கையின் வெள்ளப் பெருக்கைத் தன் கட்டுக்குள் அணைத்து, சரியான பாதையில் விகிதப்படி திருப்பத்தான் ஏற்பட்டது. ஆனால் சந்தர்ப்ப மாறுபாட்டால், அணை, வெள் ளத்தை மேலே போகவிடாமல், தன் கட்டுக்குள்ளேயே அடக்க முயலும் கொடுமையுள்ள தாக ஆகிவிடுகிறது. அதன் கட்டுக்கு அடங்கி வாழும் பெருவாரியான மக்கள், சிறு மடை வாய்கள் வழியே சென்றுவிடுகிறார்கள். இதற்காக அவர்கள் தம் இயல்பைக் குறுக்கிக்கொள்ளுகிறார்கள், அல்லது அடக் கிக்கொள்ளுகிறார்கள், அல்லது ஒரேயடியாக இழந்தே விடுகி றார்கள். சிலர், பெரு வெள்ளம் போல், கட்டுக்கடங்காமல் அணையைத் தகர்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் பெரும் பாலோர் அணையை உடைக்க முடியாமல் சிதறிப் போகிறார் கள்; சிலர் அணையைச் சில இடங்களில் தகர்த்தும் விடு கிறார்கள். இந்த மூன்று முக்கியமான போக்குகளில் நாவல் மனிதனுடைய தன்மையைப் படம் பிடிக்க முயலுகிறது. 

வாழ்க்கையின் கொடுமைகளுக்குப் பணிந்து, கஷ்டத் தைக் 'கடவுள் சித்தம்' என்று பொறுத்துக்கொண்டு காலம் கழிக்கும் மக்களிடையே, துயர் தான் தொலையாத கூட்டாளியாக இருக்கிறது. மனித இயல்பின் கீழ்த்தர அம் சங்களான பொய் புரட்டு, கொலை களவு,- இவை அத் துன் பத்திற்கு உதவி செய்து, உயர்ந்த அம்சங்களை இருந்த இடம் தெரியாமல் அடிக்க முயலுகின்றன. ஆனால் உயர்ந்த இயல்புகள் இலேசாக மறைவதில்லை. மல் யுத்தத்தில் இரண்டு சக்திகளும் மேலும் கீழுமாகக் கட்டிப் புரளு கின்றன. 

vi 

வாழ்க்கையின் கட்டுக் கடங்காமல், மனித இயல்பையே பலமாகவும் துணையாகவும் கொண்டு, அதை எதிர்ப்பவர் களுக்கும் துயர் தான் மிச்சம்; ஆனால் அந்தத் துயரையும் அவர்கள் சகித்துப் போகாமல் துச்சமாகத் தூரத் தள்ளி, மேலும் போராடுகிறார்கள், மடிகிறார்கள். அந்தப் போராட் டமும் வீர மரணமும் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் அழியாத பெயர் பெறுகின்றன. போராட்டத்தின் முடிவு வெற்றிதான் என்பதற்குச் சரித்திரம் சாட்சியாக நிற்கிறது. 

ஆனால், அந்தப் போரில் மனிதனுடைய மகத்தான இயல்புடன் உயர்ந்த லட்சியமும் கைகோத்துக்கொண்டால், வாழ்க்கைச் சட்டம் ஒரோர் சமயம் தணிந்து போய்விடு கிறது ; இயல்பும் லட்சியமும் சேர்ந்து வெற்றி பெறுகின் றன. அப்படி அவை வெற்றி பெறத் தவறிவிட்டாலும், அவற்றின் வீழ்ச்சியும் உன்னதமான கம்பீரமான வீழ்ச்சி யாகிவிடுகிறது. ஏனெனில், வீழ்ச்சிக்குக் காரணம் லட்சி யக் கோளாறோ, தவறான வழியோ அல்ல - எங்கோ ஏதோ அற்பமான ஒரு பலவீனம் அல்லது தவறு நேர்ந்துவிடுவ தால்தான். 

இந்தச் சிறு பீடிகையுடன் என் பரிசீலனைக்கு வந்த மேலே குறித்துள்ள ஆறு நவீனங்களின் போக்கையும் பொதுவாக ஆராய்ச்சி செய்ய முயலுகிறேன். 

'கிரஹ தாக' த்தில் கதாநாயகியான அசலா வெறும் உணர்ச்சிக் குவியல்; நிமிஷத்துக்கு நிமிஷம் வாழ்வை அநு பவிப்பவள். மிகவும் சஞ்சல சுபாவமுள்ள இவளுக்கு , ஆசி ரியர், மிகுந்த நகைச் சுவையுடன், அசலா (அசைவற்றவள்) என்று பெயர் வைத்திருக்கிறார். அவள் பெண் ஹிருதயத்தி லிருந்து கிளம்பிய புயலின் வேகத்தில் நால்வர் சுழலுகின் றனர் : அவளிடம் காதல் கொண்ட ஸுரேசன், அவள் 

தந்தை கேதார் பாபு, கணவன் மஹிம், கணவனுடைய பந்து மிருணாளினி. அவள் போக்கே விபரீதம். வாழ்க்கையில் தணிந்து போக வேண்டிய சந்தர்ப்பத்தில் கொதித்தெழுந்து மீறி, மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வதே அவள் தன்மை. அவளுடைய வெள்ளை உள்ளம் வாழ்க்கையின் சோதனையால் களங்கமாகிறது. அதன் போக்கு, பல அநுபவங்களுக்குப் பிறகும், அவளுக்கு அர்த்தமாவதில்லை. தனக்குத் தெரியவில்லை என்பதால், தந்தை சொன்னதை அவள் கேட்டிருக்கலாம். அவள் உள்ளம் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை - முடிவு வரை - அவள் பாதாளத் தில் விழுந்து மாசு கொள்ளும் வரை - இடம் கொடுக்க வில்லை. முதலில் தந்தை முடித்தபடி ஸுரேசனையே மணந்திருக்கலாம் - மணந்து கொள்ள மறுத்தாள் ; மஹிமை மணந்த பிறகு ஸுரேசன் காதலுக்கு இடம் கொடுக் காமலே இருந்திருக்கலாம் - இருக்கவில்லை; மணந்த கணவனுடன் வாழ்க்கை நடத்தப் போன பின் அங்காவது கணவன் மனப் போக்கை அறிந்து, அற்ப விஷயங்களைப் புறக்கணித்துப் பெரிதான அவன் காதலைக் கைக்கொண் டாளா? - அதுவும் இல்லை. மிருணாளினியின் கபடமற்ற பரிகாசத்தை - விளையாட்டை - வினையாக முடித்தாள். ஸுரேசனுடைய காதலைக் கண்டு இரங்கித் தன் கைகளைப் பிடிக்கும்படிகூட அனுமதித்தாள் ; தன் கணவன் மிருணா ளினியுடன் பரிவாகப் பேசினதைக் கண்டு பொறாமை கொண்டாள். வீடு எரிந்து போன பொழுது, ஒரு நிமிஷம் கணவனின் நினைப்புக் கொண்டு, அவனுக்காக எங்கு வேண்டு மானாலும் போகத் தயாரானாள். ஆனால், மஹிம் அவளை எடை போட்டு வைத்திருந்தான். அவள் உணர்ச்சி நிலைக்காதென்று அவனுக்குத் தெரியும். அவள் ஆதரவை அவன் லட்சியம் செய்யவில்லை. மறுபடியும் அசலா பெண் புலி யாகிறாள். 

க 

A.IN 

viii 

மஹிம் தேக அசௌக்கியமடைந்த பொழுது, மறுபடியும் கணவனிடம் ஈடுபட்டு , ஸுரேசனை மறக்க முயலுகிறாள். அந்த நினைப்பும் நீடிக்கவில்லை. வெளியூர் போகும் வழியில், ஸுரேசன் துரோகமாகத் தன்னைத் தனியே அழைத்துக் கொண்டு போனதை மன்னித்து, உடனே வீடு திரும்பாமல், அவனுடன் இருந்தாள். கடைசியாக ஸுரேசனைப் பார்த்து, 'இன்னும் என்ன தான் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்கும் நிலைமையையும் அடைந்தாள். அப்படித் தான் ஸுரேசனையாவது 'காதலி 'த்தாளா? இல்லவே யில்லை! மஹிமைத் திரஸ்கரித்தாளா? இல்லை ! சமூகத்தை எதிர்த்தாளா? ஒன்றுமில்லை. தன் உணர்ச்சிக்குத்தான் பலி யானாள் . அசலாவுக்கு அசலாதான் உலகம். பரஸ்பரம் குற்றங் குறைகளை மன்னித்து விட்டுக் கொடுக்கும் தியாகம் அசலாவுக்குப் புறம்பானது. 

சுகம் எங்கே?' என்ற நவீனத்தில் உஷா இதைப் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறாள். ஆகையால் அனாதை யான விதவையாக மைத்துனன் வீட்டிலிருந்து துரத்தப் பட்டு, கடலில் விழும் தருவாயில், தன்னைக் கரையேற்றின ஆனந்தனை அந்த நிமிஷம் முதல் உள்ளத்தில் தெய்வமாக இருத்திக்கொண்டுவிட்டாள். அந்த ஈடுபாட்டில் ஆனந்த னின் தீய பழக்கங்களை யெல்லாம் பொறுத்துக்கொண் டாள். அவனைச் சீர்திருத்தும் தொண்டில் தன் பெயர் கெடு வதையும் அவள் அலட்சியம் செய்தாள். தான் மனப் பூர்வ மாகச் செய்த அந்த ஆனந்த - ஆராதனை தன் வாழ்க்கையை ஸபலமாக்கப் போதுமானது என்று கொண்டாள். 

ஆனால், ஆனந்தன் கைபிடித்த மனைவி மாணிக்கம், வெறும் காதலிலோ, அடிபட்ட வாழ்க்கை முறையிலோ திருப்தி கொள்ளவில்லை. இருவர் ஒத்துப்போனால் தான் 

சுகம் என்பதை அவள் தர்க்க ரீதியாக அறிந்தாள். ஆனால், தான் ஒத்துப்போக அவள் தயாரில்லை. பிறர் - அதா வது கணவர் - தன் மனத்தை அறிந்து நடந்து வாழ்க் கையை நிமிஷத்திற்கு நிமிஷம் நவீன மாக்க வேண்டு மென்று எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை. அவள் படிப்பு, அச லாவின் படிப்பைப் போல , அதிருப்தியையும் அகங்காரத்தை யுமே கற்றுக் கொடுத்தது. தனஞ்சயன் என்ற போக்கிரியின் வசமாகி அவனுக்கு இரையாகிறாள். அதன் பிறகு - தடுக்கி விழுந்த பிறகு - அவளுக்கு உண்மை தெளிவாகிறது. கணவனுடன் வாழ்வது அசாத்தியமான பிறகு, தனக்குப் பிறக்கவிருந்த குழந்தையின் சேர்க்கையில் சுகத்தை அடை யத் தீர்மானிக்கிறாள். அகங்காரத்தாலும் விளம்பரப் பித் தாலும் அதிருப்தி கொண்டு திரிபவர்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றந்தான் மிஞ்சும் என்று தான் அடைந்த அனுபவத் தைக் கணவனுக்குத் தாழ்மையுடன் கடிதமூலம் அறிவித்து விட்டு அவள் மறைகிறாள். 

அன்னாவின் போக்கு எதிர்ப்பும் அன்று, பணிவும் அன்று - வெறும் நேர்மை. அலைப்பட்டது அன்று அவள் உள் ளம் . யௌவனமும், அழகும், உணர்ச்சியும் நிரம்பப் பெற்ற அன்னா, காரினினுக்கு வாழ்க்கைப்பட்டு, குழந்தை பெற்று, சமூகத்தின் முன்பு சந்தோஷ வேஷம் பூண்டு சஞ்சரிக்கி றாள். யௌவனத்தில் அமிழ்ந்து மூழ்கித் திளைக்க வேண்டிய காதல் தன் வாழ்க்கையில் இல்லாதது பற்றிக் கவலையற்ற வள் போல் இருக்கிறாள். திடீரென்று விரான்ஸ்கி என்ற யுவன் அவள் முன் தோன்றி, அவளை நிலைகுலையச் செய் கிறான். மறுக்கொணாத அந்த மர்மக் கிளர்ச்சிக்கு உட்பட்டு, அன்னா அவன் காதலியாகி, குழந்தை பெறுகிறாள். ஆனால், அவள் புருஷனிடமிருந்து தன் உள்ளத்தை மறைக்கவில்லை. 

விவாக ரத்து வேண்டுகிறாள். தம் சமூக அந்தஸ்துப் போய் விடுமென்று பயந்து, கணவர் அவளைக் கட்டுப்படுத்த முயலு கிறார். 

அந்த நிலையில் விரான்ஸ்கியும் ஒன்றும் செய்வதற் கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அவன் பொறுப்பை ஏற் றுக்கொள்ள விரும்பினானோ, அவ்வளவுக் கவ்வளவு அவ னுக்கு அது மறுக்கப்பட்டது. காரினின் விவாக ரத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால், விரான்ஸ்கி அன்னாவை மணந்துகொள்ள முடியாது என்பது சமூகம் விதித்த விதி . அந்த விதியையும் மீறிச் செல்லுவதற்கு வேண்டிய ஆற்றல் விரான்ஸ்கியிடம் இல்லை. 

நேர்மையும் உயர்ந்த லட்சியங்களுங்கூட ஒன்றுக் கொன்று முரண்படக் கூடும் என்பதற்கு அன்னாவின் கதை அத்தாட்சி. கதை முழுவதும் தத்துவங்களின் போர்க்கள மாக விளங்குகிறது. காரினின் தம்முடைய மனைவிக்கு விவாக ரத்து அளிக்க மறுத்ததற்கு, சட்டப்படி அவருக்குச் சுதந் திரம் இருந்தது. அவருக்கு அன்னாவிடம் பிறந்த பையனை வேற்றாரிடம் ஒப்புவிக்கும்படி எப்படி வற்புறுத்த முடியும்? ....... அன்னாவின் நேர்மை அபூர்வமானது. அவளை மறந்து விட்டு, அவள் கணவர் சர்க்கார் தஸ்தவேஜிகளை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்திவந்தார். அவளுடைய மனச் சாட்சி சரியானது என்பதனால், அவள் சமூகத்தையும் மீறிப் பொங்கினாள். தனக்கு எவ்விதத்திலும் மாறுபட்ட கணவ ருடன் இருப்பது அவள் இயற்கைக்கு விரோதமானது. அந்த உறவிலிருந்து விடுபடவேண்டும் என்பதே அவள் எண்ணம் ...... விரான்ஸ்கி விஷயம் என்ன? தனக்குப் பிறக்கும் குழந்தைகளைக் காரினின் பெயருக்குப் பலியிட அவன் விரும்பாத நேர்மையும் ஒப்பற்றது. ஆனால், அவ னுக்குப் பெண் மனத்தின் தன்மை தெரியாது. அன்னாவின் 

காதல் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது என்று அவன் தவறாக அர்த்தம் செய்துகொண்டதன் விபரீதம் தான் அன்னாவின் சோக நாடகம். 

அன்னாவுக்கு அப்பொழுது தான் விழிப்பு ஏற்படு கிறது. 'காதல்' என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை என்று உணருகிறாள். அவளுடைய உயர்வும், உள்ளத் தூய்மையும், அவளுடைய தாய் ஹிருதயத்தின் இளக்கத்தில் துயர் ஓவி யங்களாக மாறுகின்றன. அவள், தன் கணவனிடம் பெற் றெடுத்த பாலகனைத் திருட்டுத்தனமாகச் சென்று பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தில், அழியாத தாய் உருவமாக மாறு கிறாள். 

அன்னாவுக்கும் மேற்போன உன்னத விக்கிரகம் ஸியாராம் சரணர் கவிதை யுள்ளத்துடன் வார்த்து நிறுத்தி யிருக்கும் பெண். அவள் தான் ஜம்னா. ஜம்னா வாழ்க்கை யின் கொடுமைகளை யெல்லாம் சகித்து, வெள்ளத்தின் முன் படியும் நாணல் போல, வளைந்து கொடுத்துக்கொண்டு, மறு படி தலை நிமிர்கிறாள். கட்டுப்பாட்டைச் சிறிதளவுகூட எதிர்க்காமலிருந்தும் கூட, சமூகம் அவளுக்குப் 'பெயர்', வைக்கிறது. ' யுவதி எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியும்?' - இதுதானே உலகரீதி! அதையும் அவள் பொருட்படுத்தாமல், கணவன் இழைத்த கொடுமையையும் பாராட்டாமல், அவனை எண்ணி எண்ணி ஏங்கி , அவன் தனக் குக் கொடுத்துச் சென்ற குழந்தையைத் துணையாகக் கொண்டு, வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறாள். அந்த அமைதியின் நடுவில், அஜீத்தின் களங்கமற்ற சேவை ஒரு நிமிஷம் அவள் மனத்தைக் கவருகிறது. தன் ஜாதி ஆசாரப்படி அவனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாமா என்று கூட அவள் கொஞ்சம் தடுமாற்றம் கொள்ளுகிறாள். 

XII 

முடிவில் அந்த உணர்ச்சியையும் திடமாகத் தூரத் தள்ளி விடுகிறாள். தனக்குத் துணை மகனே போதும் என்று தீர் மானிக்கிறாள். 

'ஹல்லீயின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நடந்து சென்றாள். ஆகாயத்தில் மேகங்கள் வந்து சூழ்ந்திருந்தன. நாற்புற மும் ஒரே இருள் ! எங்கும் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும், அவள் மகனின் கையைத் தாங்கி மேலே சென்று கொண்டிருந் தாள். இன்று மாத்திரந்தான் அவள் போய்க்கொண்டிருந்தாள் என்பதில்லை. அந்தப் பண்டைக் காலத்துப் பெண் , யுக யுகாந்தரத்து இருளில், அதைத் துச்சமாகக் கருதி, வெகுகாலமாக இப்படியே தான் மேலே நடந்து சென்றுகொண்டிருக்கிறாள் ; - துன்பமும் இருளுமான இந்த இருள் வழியை, இவ்வண்ணமே கால்களால் மிதித்துக்கொண்டு செல்லுகிறாள் ! அவளுக்கு எவ்வித அச்சமும் இல்லை, ஒரு கவலையும் இல்லை.' 

இந்த நான்கு நவீனங்களிலும் பெண் உள்ளத்தின் உணர்ச்சிதான் பிரதானமாக நின்று வாழ்க்கையின் சுக துக்கங்களை ஆண் மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக் கிறது. கலப்பற்ற துக்கமோ சுகமோ கிடையாது. அந்த வீதாசாரப்படி சுகதுக்கங்கள் ஒரு முடிவற்ற தொடர்பு கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் லட்சியமின்றிக் காதல் மட்டும் எப்படித் தனித்து நிற்க முடியாது என்பதை இவை காட்டுகின்றன. 

ரமேச சந்திர தத்தர் எழுதியிருக்கும் 'ரஜ புத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் ' ' மகாராஷ்டிர ஜீவன் உதயம்' என்ற இரண்டு நாவல்களிலும் காதல் இரண்டாம் அந்தஸ் தில் தான் இருக்கிறது. வீரந்தான் முதல் ஸ்தானம் வகிக்கிறது. தேசத்தின் கௌரவமும் ஒற்றுமையும் நிலைபெற 

xiii 



வீரம் போராடும் பொழுது, காதலை ஓய்வு நேரத்து இன்ப மாக மட்டுமே கருதுகிறது. அதாவது தனி நபரின் சுகம் தேசத்தின் - சமூகத்தின் - சுகத்திற்காகத் தியாகம் செய்யப் பட்டுவிடுகிறது. 

ரஜபுத்திரரின் கௌரவத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்ட முனைந்த பிரதாப சிம்மன், மனைவியையும் குழந்தை களையும் கஷ்டத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கத் தயங்க வில்லை. குழந்தைகள் பட்டினி கிடப்பதுகூட நிமிஷ நேரத் திற்கு மேல் அவரைக் கலங்கச் செய்யவில்லை. அவரைப் பின் பற்றின வாலிப வீரன் தேஜ் சிம்மன் நாட்டை எதிரியிட மிருந்து மீட்கு முன், குஸும குமாரியைக் கைப்பற்ற வர வில்லை. காதலனின் லட்சியம் கைகூடும் வரை காதலியும் காத்துக்கொண்டிருக்கிறாள். 

மகாராஷ்டிர ஜீவன் உதயமாகும் போரிலும் அதே மாதிரி நடைபெறுகிறது. சிவாஜி தம்மை' மறந்து பாடு பட்டுத்தான் மகாராஷ்டிரத்தை ஸ்தாபித்தார். சதா சர்வ காலமும் அவர் நினைத்துக்கொண்டு போர் புரிந்து வந்த ஒரே இலக்கு எதிரி தான். அவருக்குத் துணையாக இருந்து அவர் உயிரைக் காப்பாற்றிய இளைஞன் ரகுநாத்ஜி ஹவல்தார், போர் ஒரு விதமாக நின்ற பின்புதான், தன் காதலி ஸரயூ பாலாவைக் கண்ணெடுத்துப் பார்க்கிறான். 

இந்த இரண்டு நவீனங்களிலும், மனித ஹிருதயத்தை ஆட்கொண்டு, வாழ்க்கையின் சுகதுக்கங்களைத் தாய் நாட்டின் பாதங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்கத் தூண்டும் வேட்கை, உயர்வு பெற்று, வானத்தில் நின்று ஒளி செய்வது போல் விளங்குகிறது. அந்த மகா தாகத்தின் பரப்பில், சிறு மனித உணர்ச்சிகள் பேதைமை கொள்ளுகின்றன ; உயிர் களே மதிப்பற்றுப் போகின்றன ! வாழ்க்கையின் பிணக் 

xiv 

கோலத்தின் அருகில் வீர சக்தி, இரத்த வெறிகொண்ட காளி போல், தாண்டவமாடுகிறது. 

சுகம் எங்கே என்ற பிரச்னை அங்கே கிடையாது! பெண் உள்ளத்தின் பிரசண்ட வேகம் கூட அங்கே எடுபடுவ தில்லை; துக்கத்தின் தூய வர்ணனைக்கு அங்கே இடமில்லை. பெண்மையே அந்த ஊக்கத்திற்கு உணர்வளித்துத்தான் உயிர் பெறுகிறது. வாழ்க்கை பெரிதா, லட்சியம் பெரிதா என்ற கேள்வி அங்கே பிறக்க முடியாது. வாழ்க்கையைத் திருணமாக மதித்த சந்தர்ப்பத்தில், அது எப்படி எழும்? அந்த வீரத்திற்கு லட்சியம் நாட்டின் கௌரவம், ஒற்றுமை. தர்மமும் சத்தியமுமே அதன் கவசமும் கேடயமும். அதைப் போருக்கனுப்பிப் பேரவா ஊட்டும் கருவி - பெண்மை! 

நவீனங்களில் திடுக்கிடும்படியாகவோ எதிர் பாராத வண்ணமோ சம்பவங்கள் நடைபெறா ; இவற்றில் துப்பறியும் வேலை கிடையாது ; மயிர்க் கூச்செறியும் நெருக் கடிகளும் கொலைகளும் நடக்கமாட்டா. எல்லாம் நாம் வாழ்க் கையில் அனுபவத்தில் எதிர்பார்க்கும் சம்பவங்களாகவே இருப்பவை. 

ஆனால், மனித சித்திரங்கள் நிறைய இருக்கும். க்ஷண சித்தமும் தயாள குணமும் படைத்த ஸுரேசன், 'பெரிய மனுஷர்' என்று தாராளமாகச் சொல்லக்கூடிய கேதார் பாபு, 'அசையாத குன்று' என்று சொல்லுவோமே அந்த மாதிரி யான மஹிம், பெண்மையின் பொலிவாகிய மிருணாளினி - இப்படி எத்தனை விதமான பிரகிருதிகள் ! வாழ்க்கை - வீட்டில் வசிக்கும் இவர்கள் எல்லோரும் அசலாவின் தன் மையால் பாதிக்கப்படுகிறார்கள். கிரஹ தாகம்! (வீடு எரிந்து போகிறது!) நடுத் தெருவில் நிற்கிறார்கள் எல்லோரும் ! 

XV 

' சுகம் எங்கே?' என்பதில்தான் என்ன குறைவு ! விளம்பரப் பிரியர் முத்தண்ணா, விவஸ்தையற்ற சஞ்சலா , தனஞ்சயன், ஆனந்தன், மாணிக்கம், உஷா - எவ்வளவு வேறுபட்ட தன்மைகள் ! 

'அன்னா 'வில் உலவும் பிரகிருதிகள் கணக்கில் அடங்காதவர்கள். ஒவ்வொருவரும் தனித் தன்மை கொண்டவர் கள். டால்ஸ்டாய், தம் திறமையையும் உணர்ச்சியையும் பூராவும் அதில் கொட்டி, ஒப்பற்ற வகையில் உருவங்களை வார்த்து நிறுத்தியிருக்கிறார். எல்லோரும் கண்ணெதிரில் நடமாடுவது போலவே தோன்றுகிறது. 

'பெண்'ணில் ஜம்னாவின் அடக்கம் அசாதாரண மானது. கிராமாந்தரப் பரோபகாரி அஜீத் , மனத்தை விட்டு அகல முடியாத உயிர்ச் சித்திரம். ஹல்லீ , இலக்கி யத்தில் தத்ரூபமாக சிருஷ்டிக்கப்பட்டு நிற்கும் பாலகர்கள் சிலரில், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன். 

ரமேச சந்திரரின் நாவல்களில், குன்றின் மேலிட்ட விளக்குகளைப் போலப் பிரகாசிக்கும் பிரகிருதிகள் எல்லோ ரும் சரித்திர புருஷர்கள் . ராணா பிரதாப்சிங், அமர்சிங், தேவீசிங், ராணி துர்க்கா , தேஜ்சிங், திவான் பாமா ஷாஹ், - பெயர்களைக் கேட்டாலே போதும். நமது சரித்திரத்தில் தலை நிமிர்ந்து நடமாடிய ஜோதிகள் ! பிறகு சிவாஜி, தானாஜி, ரகுநாத்ஜி, ராஜா ஜயசிங் - எப்பேர்ப்பட்ட லட்சிய புருஷர் கள்! 

இவற்றை எழுதியவர்கள் சாமானியர்கள் அல்லர். சரத் சந்திரர் இந்தியாவிலேயே தலை சிறந்த நாவலாசிரியர் எனலாம். காண்டேகர் மராட்டியில் முதல் ஸ்தானம் வகிப் பவர். டால்ஸ்டாயைப் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தில்லை. அவர் 'வானமும் பூமியுமாய் வளர்ந்து நிற்கும் கலா நிபுணர்.' ஸியாராம்சரணர் ஹிந்தியில் பிரதம நூலாசிரியர், 

- கவியுங்கூட. ரமேச சந்திரர் இந்தியாவின் ஒப்பற்ற சரித் திராசிரியர். 

இந்த மொழிபெயர்ப்புகளின் மூலம் தமிழிலும் முதல் தரமான நாவல்கள் தோன்றும்படியாக ஓர் ஊக்கம் ஏற்பட வேண்டும்; தமிழ் ஆசிரியர்கள், இவற்றைக் கண்டு, நம் தாய்மொழியிலும் பெரிய நாவல்களை எழுதத் தூண்டு தல் பெற்றால், இந்த நவீனங்களை வெளியிட எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி வீணில்லை. 

இந்தப் புதிய நாவல்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயன்றிருக்கிறேன். இனிமேல், நீங்களே படித்துப் பாருங்கள்.