அழகு நிலா கவிதைகள்
https://www.vikatan.com/anandavikatan/2007-may-02/literature/73374.html
அ து ஒரு காலை நேரம்.
ஒளியில் என் கண்கள் மின்னின
நான் எனக்குள் ஏதோ பேசினேன்
விழியோரக் கண்ணீரைத்
துடைத்தாய் நீ
அது மேலும் பெருகி வழிந்தது
நடுங்கும் விரல்களை அழுத்தி
பாதங்களில் முத்தமிட்டாய்.
உடல் அணைத்து உயிர் இளக்கி
தாமரைகளாய்ப் பூக்கச் செய்தாய்
என் காதோரம்.
உனது சொற்கள் அலைகளாய்
என் இமைகளைத் தழுவ
கேசம் அவிழ்த்து மேகம் சூழ
மழை பெய்தது என் சுவாசம் நனைய.
இப்போது அங்கு யாருமே இல்லை
நீயும் நானும்கூட!
காளிக்குத் துணை இல்லை.
அங்கம் நோகக் கூடிக் களித்து
நூறாயிரம் கரு சுமந்தாயிற்று.
தசை கிழிய உதிரஞ் சொட்டி
காளியின் கதறல் ஓய்ந்தபாடில்லை.
காளி பாவம்
ஏதுமறியாதவள்.
எல்லாம் புரிந்தும் எதுவும் புரிவதில்லை
யாருக்கும்; காளிக்கும்.
மல்லிகை மணம் தோட்டம் முழுக்க.
இது பூமி என்பது மட்டும் தெளிவு.
மீண்டும் அடிவயிற்றில் கரு நெளிய
கையேந்தும் குருடனுக்குத்
தாமரையைத் தருகிறாள் காளி.
கனவில் பாதம் நோக்கிக்
கரையதுங்குகின்றன
சங்குகள்.
மேயவும் மனமற்று
உறங்கவும் வழியற்று
காலமெல்லாம் காமதேனு
தன்னிந்தனியதாய்!
மேகங்கள் சூழ
மரங்களின் நடுவே வீடு.
நள்ளிரவில் விளக்கெரிகிறது.
வீட்டிற்குள் யாராகவும் இருக்கலாம்.
படபடக்கிறது இதயம்.
அது யாருடையதாகவும் இருக்கலாம்.
சிவனோ சக்தியோ திறக்கப்போவது.
கதவைத் தட்டுவோம்.
கை நம்முடையது.
எலும்பும் நரம்பும் புதிரானவை.
பயணத்தில் பாதி இது.
கண் விழித்தபோது ஆடுகளத்தின்
நடுவில் நின்றுகொண்டிருந்தோம்.
மகா விளையாட்டு
விதிகள் புரியாது.
தண்டனைகள் ஏராளம்
பரிசுகளும் ஏராளம்.
சாம்பலை அள்ளி எல்லைக் கோடு.
ஆட்டத்திற்கு முடிவேயில்லை.
கதவைத் தட்டுவதும் திரும்பிச் செல்வதும்
அவரவர் விருப்பம்!
அழகுநிலா
இளம் பெண் கவிஞர்களில் வித்தியாசமானவர் அழகுநிலா. தனிமையும் அமைதியும் சூழ்ந்த தியான மண்டபக் காட்சி போல் இருக்கின்றன இவரின் கவிதைகள்.
‘‘நீங்கள் பேசும் மொழியையே என் கவிதைகளும் பேசுகின்றன’’ எனும் அழகுநிலா, மூன்று கவிதைத் தொகுதிகளுக்குச் சொந்தக்காரர். புதுவை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிகிறார். எழுத்தாளர் அழகாபுரி அழகப்பனின் பேத்தி. கணவர் ரமேஷ், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்!
************************
https://rammalar.wordpress.com/2008/08/10அழகு-நிலா-கவிதைகள்/
குழந்தைகள் விளையாடும்போது
நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம்
பருந்துகளும் பட்டங்களும்
நிறைந்த வானில்
சூடேறிக் கொண்டிருக்கிறது
காற்று.
நிலம் அதிர்ந்த இடங்களில்
தார்ச்சாலைகள் பிளந்துகிடக்க
வெளிச்சத்தில் பழகிய வார்த்தைகள்
மறந்து
விரல்களைக்
கோத்துக் கொள்கிறோம்.
எப்போதும் போலவே
பாதி இருளில் பூமி.
மேற்குப் பார்த்த எனது வீட்டின்
சாவித்துவாரம் தேடியலைகிறது
மாலை வெளியில்.
அறைகளில் நிரம்பிக்கிடக்கும்
வெறுமையைச் சுவர்களும்
கதவுகளுமாய்க் கூறு போட,
ஊரே உறங்கும் இந்த நேரத்தில்
புத்தரின் குரலைப் போல இருக்கிறது
ஜன்னலுக்கு வெளியே பூனையின் முனகல்.
நீ என்னைச் சபிக்கத்
தொடங்கியபோது
உன்னை மட்டுமல்ல
என்னையும் கடந்து
சென்றிருந்தேன் நான்.
திட்டமிட்ட நமது சந்திப்பில்
வாதப் பிரதிவாதங்களுக்குப்
பிறகு மீண்டும்
நண்பர்களாகவோ
அல்லது எதிரிகளாகவோ
பிரிந்து செல்கிறோம்
இவற்றிற்கிடையே
கதை சொல்லிகளிடம்
போய்ச் சேர்ந்திருக்கும்
நம்மைப்பற்றி அவர்கள்
சொல்ல விரும்பிய கதை.
ஒளிந்துகொண்டு தேடவைத்தார்கள்
விளையாடக் கொடுத்ததை
காலால் நசுக்கினார்கள்
உணவூட்டும்போது கடித்தார்கள்
பூக்களைப் பிய்த்துப் போட்டு
அவர்களே அழுதார்கள்
பூச்சாண்டிக்குப் பயந்து
வளர்ந்தார்கள்.
அதற்குப் பிறகான
நாட்களில்…
பிறகு அவர்கள்
பெரிய பெரிய பதவிகளில்
பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
யாருக்குப் புரிந்திருக்கும்
வாழ்ந்தேயாக வேண்டியதன் அவசியம்.
முடிக்கப்படாமலிருக்கும் இந்தக்
கடிதம்
முடிக்க முடியாமல் இருக்கிறது
வாழ்க்கையைப் போல
துகள் கூடித் தசை நெளிய
இதழ் குவித்து இலை தின்னும் புழுவாய்
வலி தாங்கி நரை கூடி
முளைவிட்டு நீர் தேடி வேரலைய
நிலமதிரப் பாய்ந்து நகங்கீறி என்
பெண்மை நாணி கூனிக் குறுக
பால் கசியும் பெருங் கடல்
விலங்கின் மார்பு
நன்றி: குமரன் பதிப்பகம்,
3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர்,
சென்னை – 600 017.
Source: http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=88&cid=34&aid=4734
பிப்ரவரி07
எழுத்தாளர்: அழகுநிலா பிரிவு: பிப்ரவரி07 வெளியிடப்பட்டது: 13 மே 2010
அழகுநிலா கவிதைகள்
http://keetru.com/index.php/2010-05-13-05-51-46/07/8599-2010-05-13-11-32-50
மாய வித்தைக்காரன்
நம் கண்ணெதிரே ஒவ்வொன்றாக
மறைய வைக்கிறான்
எங்கே என்று கேட்கச் சொல்லி
புருவம் உயர்த்துகிறான்
நாம் கேட்கிறோம்
எங்கே? எல்லாமும் எங்கே?
மேகமும் நாமும் உருவானது
பழங்கதை
வெள்ளை வெயிலில்நாரும் இலையும் தேடியலைகிறது
மஞ்சள் குருவி
கடுகு விதையாய்
உள்நாக்கில் கசந்து
தடம் புரண்ட இரயிலாகி
கனவு மிருகமாய்
குழந்தையை மிரட்டும்
கடவுளின் ஆவி
அகலத் திறந்த ஆகாயத்தில்
சுற்றுப்பாதை விலகாத
மணல்மேட்டில்
குரைத்துக் குரைத்துச் சாகிறது
வெறிநாய்
வேரில் நீர் தேடி மலரில்
மணம் தேக்கி
உலோகத்தில் இறுகி,
காகிதத்தில் உலர்ந்து
காற்றாய் சுவாசம் நிறைத்து
கழுத்தில் உச்சந்தலையில்
உதிரம் பாய்ந்து
உள்ளே நுரையீரல்
வெளியே விரல்களென
உடல் அசையும்
பிறகு நான் மனிதர்களிடம்
பேசத் தொடங்கினேன்
‘‘ஒருவேளை நீங்கள் என்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நான் ஆகாயத்தின் மகள்.”
அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
‘‘ஒருவேளை நாங்கள் உன்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நாங்களும் ஆகாயத்தின் மக்களே”
நமது நம்பிக்கை ஆதாரபூர்வமானது
நமது சந்தேகம் நியாயமானது
உறுதியாக நம்புகிறோம்
ஆழமாகச் சந்தேகிக்கிறோம்
பறவையின் இந்த எச்சத்தை
இந்த விடியலை இந்த
உறக்கத்தை
ஆழ்கடலின் தரை மணலில்
கோரப்பல் வெண்சுறா விழி பிதுங்கி
புரண்டு நெளிந்து குட்டி ஈன
பாறையிடுக்கில் பதுங்கும் பாம்பென
உடல் நழுவிக் கொடி அறுந்து
அறையில் அமைதியாகத் தூங்குகிறது
குழந்தை
பிரிக்கப்பட்ட கடிதமாய்
கம்பியில் உலரும் பட்டுத் துணியாய்
பெருநகரின் மேம்பாலமாய்
உலக அழகியின் உதட்டுச் சாயமாய்
நாயின் கழுத்துச் சங்கிலியாய்
இறந்த உடலின் நுரையீரலாய்
கைமீறிப் போயிருக்கிறது காரியம்.
தூர்ந்துபோன கிணற்றில்
எட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.
பாம்பும் பாம்பாட்டியும்
செத்தொழிந்துவிட்டனர்
பட்ட மரத்தின் கிளைகளில்
பழங்களைத் தேடுகிறது அணில்
நம்மால் அழவும் முடியவில்லை
சிரிக்கவும் முடியவில்லை
நாம் சொல்லாவிட்டாலென்ன
கோடு போட்டது புலியென்றும்
புள்ளி போட்டது சிறுத்தையென்றும்
நம் குழந்தைகள் தாமாகவே
தெரிந்துகொள்வார்கள்.