http://www.maamallan.com/2011/02/blog-post_778.html?m=1
Monday, February 14, 2011
ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்
லைலா
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது.
நான் படிக்கும் ஷோபா சக்தியின் முதல் கதை என்றபோதிலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் புகை மூட்டமாய் இருப்பது போன்ற தோற்றத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. விமர்சனம்தான் வைக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால் பொதுவாக எழுத்து என்கிற காரியமே, விமர்சனம்தான். ஈழ அரசியலின் உள் நுட்பங்கள் அறியாத நான், வெறும் பார்வையாளன் மட்டுமே என்பதால், சரி தப்பு சொல்ல எனக்கு அருகதை இல்லை.
ஷோபா சக்தியுடையது சமகாலத் தமிழின் பெரிய எழுத்துதான் சந்தேகமே இல்லை. எழுதவேண்டும் என்கிற உத்வேகத்தையும் பொறாமையையும் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் ஒருசேர தோற்றுவைத்து இருக்கிறது இந்தக் கதை.
மிகச்சில தீற்றல்களில் ஃப்ரான்ஸின் நிராகரிக்கப்பட்ட கீழ்த்தட்டு மனித வாழ்வை அநாயாசமாக உயிர்ப்பிக்கிறார். நாலாந்தர ஃப்ரெஞ்ச் குடியிருப்புகளை படிக்கட்டுகளை பொலிஸ்காரர்களை மற்றவர்களுக்குத் தோன்றும் துர்நாற்றம் கதை சொல்லிக்கு தோன்றாததும், மற்றவர்களுக்குத் தோன்றாத துர்நாற்றத்தில் நாய்க்குட்டி அவனுக்குத் தெரிவதுமாக அய்யோ சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த அனுதாபமும் கோராமல், நைந்து கிடக்கும் வாழ்வைக் கண்முன் விரித்து வைத்து எழுத்தாளன் ஷோபா சக்தி நம்மோடு நின்று தானும் பார்க்கிறார் அவரையும் அவரது வாழ்வையும்.
எவ்வளவு நிதானமாக நம்மைக் கொண்டு செலுத்த வேண்டிய இடத்திற்கு என்ன ஒரு நேர்த்தியுடன் வலை பின்னுகிறார்.
ஒரு எழுத்தாளனின் அறிமுகம், இப்படித் தன்னிச்சையாகக் கூடி வரவேண்டும். அபிமானிகளால் படி படி எனத் துரத்தப்பட்டு படிப்பது துன்பம். இனிமேல் ஷோபாவின் எழுத்துக்களைத் தேடிப் படிப்பேன். திகட்டாது என்றும் தோன்றுகிறது.
madrasdada@gmail.com at 9:19 PM
இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும்.
Monday, February 14, 2011
ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்
லைலா
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது.
நான் படிக்கும் ஷோபா சக்தியின் முதல் கதை என்றபோதிலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் புகை மூட்டமாய் இருப்பது போன்ற தோற்றத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. விமர்சனம்தான் வைக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால் பொதுவாக எழுத்து என்கிற காரியமே, விமர்சனம்தான். ஈழ அரசியலின் உள் நுட்பங்கள் அறியாத நான், வெறும் பார்வையாளன் மட்டுமே என்பதால், சரி தப்பு சொல்ல எனக்கு அருகதை இல்லை.
ஷோபா சக்தியுடையது சமகாலத் தமிழின் பெரிய எழுத்துதான் சந்தேகமே இல்லை. எழுதவேண்டும் என்கிற உத்வேகத்தையும் பொறாமையையும் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் ஒருசேர தோற்றுவைத்து இருக்கிறது இந்தக் கதை.
மிகச்சில தீற்றல்களில் ஃப்ரான்ஸின் நிராகரிக்கப்பட்ட கீழ்த்தட்டு மனித வாழ்வை அநாயாசமாக உயிர்ப்பிக்கிறார். நாலாந்தர ஃப்ரெஞ்ச் குடியிருப்புகளை படிக்கட்டுகளை பொலிஸ்காரர்களை மற்றவர்களுக்குத் தோன்றும் துர்நாற்றம் கதை சொல்லிக்கு தோன்றாததும், மற்றவர்களுக்குத் தோன்றாத துர்நாற்றத்தில் நாய்க்குட்டி அவனுக்குத் தெரிவதுமாக அய்யோ சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த அனுதாபமும் கோராமல், நைந்து கிடக்கும் வாழ்வைக் கண்முன் விரித்து வைத்து எழுத்தாளன் ஷோபா சக்தி நம்மோடு நின்று தானும் பார்க்கிறார் அவரையும் அவரது வாழ்வையும்.
எவ்வளவு நிதானமாக நம்மைக் கொண்டு செலுத்த வேண்டிய இடத்திற்கு என்ன ஒரு நேர்த்தியுடன் வலை பின்னுகிறார்.
ஒரு எழுத்தாளனின் அறிமுகம், இப்படித் தன்னிச்சையாகக் கூடி வரவேண்டும். அபிமானிகளால் படி படி எனத் துரத்தப்பட்டு படிப்பது துன்பம். இனிமேல் ஷோபாவின் எழுத்துக்களைத் தேடிப் படிப்பேன். திகட்டாது என்றும் தோன்றுகிறது.
madrasdada@gmail.com at 9:19 PM
லைலா
– ஷோபாசக்தி
இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும்.
பிரான்ஸின் தற்போதைய அதிபர் நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன் பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்னார். அந்தப் பகுதியில்தான் நான் கடந்த பத்து வருடங்களாக இருக்கிறேன்.
உண்மையிலேயே இந்தப் புறநகர்ப் பகுதி ஓங்கிய சிறு மரக்காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் குறுக்கறுத்து ஓடும் ஸெயின் நதியையும் கொண்ட அழகிய நிலப்பகுதி. பிரான்ஸில் ஆபிரிக்கர்களும் அரபுக்களும் சிந்தி ரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்து வாழும் பகுதியும் இதுதான். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோஸி சூழலியலில் பெரும் அக்கறைகொண்டவர் எனப் பத்திரிகைகள் எழுதியுமுள்ளன. அவர் அந்த மரக் காடுகளையும் புல்வெளிகளையும் ஸெயின் நதியையும் எங்களிடமிருந்து காப்பாற்ற நினைத்திருக்க வேண்டும். எதிர்பார்த்தது போலவே அந்தத் தேர்தலில் நிக்கோலா சார்க்கோஸி வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் நினைத்திருந்ததுபோல எல்லாம் சுத்திகரிப்பை எங்கள் பகுதியில் நடத்திவிட முடியாது.
நிக்கோலா சார்க்கோஸி என்ன, அந்த மாவீரன் நெப்போலியனே மறுபடியும் உயிர்பெற்று வந்தால் கூட எங்களது பகுதியில் மயிரைப் பிடுங்க முடியாது. இந்தப் பகுதியில் எவரும் பிரஞ்சு அரசாங்கத்தின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இங்கே எங்களுக்கான அறங்களையும் சட்டங்களையும் விதிகளையும் தண்டனைகளையும் நாங்களே எங்களுக்காக விதித்து வைத்துள்ளோம்.
பாரிஸ் நகரத்தில் வாழும் எனது நண்பர்கள் “நீ எப்பிடி அந்த ஏரியாவில சகிச்சுக்கொண்டு இருக்கிறாய்” என என்னைக் கேட்கும்போது நான் அவர்களிடம் திருப்பி “நீங்கள் எப்பிடித்தான் பரிஸில சகிச்சுக்கொண்டு இருக்கிறீங்களோ” எனக் கேட்பேன். எனது பகுதியில் வாழ்ந்தவர்களால் ஒருநாள் கூட பிரான்ஸின் வேறு பகுதிகளில் வாழ முடியாது. எங்களது பகுதியில் வந்து குடியேறியவர்கள் இறந்தால் அல்லது பொலிஸாரால் நாடு கடத்தப்பட்டால் தவிர இந்தப் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்வதில்லை.
பதின்மூன்று மாடிகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் பத்தாவது தளத்தில் எனது வீடு இருந்தது. ஒரு மிகச் சிறிய வரவேற்பறையையும் ஒரு சிறிய படுக்கை அறையையும் கொண்டது எனது வீடு. அந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்த எல்லா வீடுகளுமே அவ்வகையானவைதான். எனது மாதச் சம்பளத்தில் சரிபாதி வாடகைக்குப் போயிற்று. பாரிஸ் நகரத்தில் இதேபோன்ற ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பதென்றால் முழுச் சம்பளத்தையுமே வாடகைக்காகத் தாரைவார்க்க வேண்டியிருக்கும்.
வேலைக்குச் செல்லாத நாட்களிலும் மாலை நேரங்களிலும் அநேகமாக நான் எங்களது தொடர்மாடிக் குடியிருப்பின் கீழ்த் தளத்திலிருக்கும் வாசற்படிக்கட்டில் குந்தியிருப்பேன். என்னோடு அந்தக் குடியிருப்பில் இருக்கும் இளைஞர்களும் குந்தியிருப்பார்கள். பலதும் பத்தும் பேசுவோம். எங்களிடையே அடிக்கடி கைகலப்பும் வரும். எல்லாமே ஒருநாள் கோபம்தான். அடுத்தநாள் கைகொடுத்துச் சமாதானமாகிவிடுவோம். இரவு நேரங்களில் அந்தப் படிகளில் உட்கார்ந்திருந்து பேசியவாறே குடிப்போம். எங்கள் குடியிருப்புக்குத் தனியாகக் காவலாளி தேவையில்லை. எந்த நேராமானாலும் யாராவது சிலர் வாசற்படிகளில் உட்கார்ந்திருப்போம். சிலர் அங்கேயே உட்கார்ந்தவாறே தூங்கிவிடுவார்கள்.
எங்களை மிகவும் இடைஞ்சல் செய்வது பொலிஸ்காரர்கள்தான். திடீரெனச் சுற்றிவளைத்துக் கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டு எங்களைச் சுவரோடு நிறுத்தி வைத்துச் சோதனையிடுவார்கள். கத்தி, கஞ்சா, போலி விசா, திருட்டு செல்போன் என ஏதாவது அவர்களுக்குச் சிக்கும். எங்கள் குடியிருப்பே திரண்டு நின்று பொலிஸ்காரர்களைத் திட்டும். ஒருமுறை பொலிஸ் வாகனத்துக்குத் தீ வைத்த கதையும் இங்கே நடந்தது. பிரான்ஸில் போலிஸ்காரர்களுக்குக் காதலிகள் கிடைப்பதில்லை எனச் சொல்வார்கள். அத்தகைய ஒரு வெறுப்பு இங்கே பொலிஸ்காரர்கள்மீது மக்களுக்கு உண்டு. எங்கள் பகுதியில் பொலிசாருக்குக் காதலி அல்ல, தவித்த வாய்க்குக் குடிக்க ஒரு மிடறு தண்ணீர் கூட யாரும் கொடுக்கமாட்டோம்.
ஜனாதிபதி நிக்கோலா சாக்கோஸி எங்களது குடியிருப்புப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்ன சில நாட்களில் எங்களது தொடர்மாடிக் கட்டடத்திற்கு அய்ம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு தமிழ்ப் பெண்மணி வந்து சேர்ந்தார். முன்பு எங்களது தொடர்மாடிக் கட்டடத்தில் சில தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. பிள்ளைகள், குட்டிகள் பெருக அவர்கள் இங்கேயே அயலில் வேறு வீடுகளுக்குப் போய்விட்டார்கள். அதன் பின்பு இந்தப் பெண்மணி அங்கே வரும்வரை நான் ஒரேயொரு தமிழன்தான் அங்கிருந்தேன். அந்தப் பெண்மணி நானிருந்த பத்தாவது தளத்திலேயே ஏழாம் இலக்கத்தில் குடியேறினார். எனது கதவு இலக்கம் அய்ந்து.
அந்தப் பெண்மணியைப் பார்த்தவுடனேயே அவர் பாண்டிச்சேரித் தமிழா, அல்லது சிங்களப் பெண்மணியா என்ற சந்தேகங்கள் ஏதும் எனக்கு வரவில்லை. பொதுவாக அய்ரோப்பாவில் வாழும் அய்ம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஈழப் பெண்மணி எப்படியிருப்பாரோ, எவ்வாறு ஆடையணிவாரோ, எப்படித் தலை முடியையைப் பின்னால் கூட்டிக் கட்டியிருப்பாரோ அப்படியே அவர் இருந்தார். ஆனால் அவர் தனியாக அங்கே குடிவந்ததும், கையில் ஒரு நாயைப் பிடித்தபடி வெள்ளைக்காரி மாதிரி வெளியே உலாவச் செல்வதும்தான் என்னைக் கொஞ்சம் குழப்பியது. அந்த அழகிய நாய் இரண்டு உள்ளங்கைகளுக்குள்ளும் அடங்கி விடுமளவிற்கு மிகச் சிறியதான ஓர் இனத்தைச் சேர்ந்தது. அந்த வெண்ணிற நாயின் உடல் சடைத்த முடிகளால் மூடப்பட்டிருந்தது. நாயின் காலெங்கே, வாலெங்கே எனக் கண்டுபிடிப்பதே சிரமம். நாயின் கண்கள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. அந்தக் கண்கள் எப்போதும் ஒளிர்ந்தவாறேயிருந்தன. மூக்குக் கண்ணாடியில் வரைந்து ஒட்டப்பட்ட கண்களைப்போல அந்தப் பெண்மணியின் கண்கள் மரத்திருந்தன. அந்தப் பெண்மணியின் கண்களில் ஒருபோதும் உணர்சிகளை நான் பார்த்ததே கிடையாது.
நாங்கள் கட்டடத்தின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கும்போது அந்தப் பெண்மணியை எதிர்கொள்வதுண்டு. அவர் நாயுடன் எங்களைத் தாண்டிச் செல்லும் போது நாங்கள் “Bonjour Madame” என வணக்கம் தெரிவிப்போம். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டுப் போவார். சில தடவைகள் “எப்படி நலமாயிருக்கிறீர்களா” என ஒன்றிரண்டு வார்த்தைகள் எங்களிடம் பேசுவார். அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அவர் பிரஞ்சு மொழியைப் பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே உச்சரித்துப் பேசக் கூடியவர் எனத் தெரிந்தது. கீழ்த்தளத்தில் நாங்கள் அமர்ந்திருக்கும் படிகளின் அருகிலேயே தபாற் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருநாள் அந்தப் பெண்மணி தனது தபாற் பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் அவர் சென்றதும் அந்தப் பெட்டியருகே சென்று அதில் எழுதப்பட்டிருந்த பெயரைப் படித்துப் பார்த்தேன். அதில் – ராஜரத்தினம் இலங்கை நாயகி – எனப் பெயர் எழுதப்பட்டிருந்தது.
இலங்கை நாயகி அங்கு வந்து ஒருமாதம் கழிந்ததன் பின்னாகத்தான் எனக்கு அவரோடு பேச வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் இருவரும் கீழ்த்தளத்தில் லிப்டுக்காகக் காத்திருந்தபோது நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் என்னைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் ஏறியதும் நான் அவரின் கையிலிருந்த அந்த நாயைக் காட்டி “நல்ல வடிவான நாய்…என்ன பேர்?” என்று கேட்டேன். இலங்கை நாயகி ஒரு புன்னகையுடன் “லைலா” எனச் சொல்லிவிட்டுத் தனது கையிலிருந்த அந்த நாயைத் தடவிக் கொடுத்தார்.
நாய்க்கு யாராவது லைலா எனப் பெயர் வைப்பார்களா? எனக்குத்தான் அவர் சொன்னது சரியாகக் காதில் கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். நாய்க்கு லைக்கா எனப் பெயர் வைப்பவர்களுண்டு. முதன் முதலில் ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பிய நாய்க்கு லைக்கா என்று பெயர். எனவே நான் இலங்கை நாயகியிடம் மறுபடியும் “லைக்காவா” என்று கேட்டேன். அவர் வாயை அகலத்திறந்து “லைலா” என அழுத்தமாக உச்சரித்துவிட்டு நாயை எனக்கு முன்னே ஒரு குழந்தையைத் தருவதுபோல நீட்டினார். நான் நாயைத் தடவிக்கொடுத்தேன்.
இருவரும் பத்தாவது தளத்தில் இறங்கினோம். நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நாட்டிலயிருந்து வெளிக்கிட்டு கனகாலமோ” என்று கேட்டேன்.
இலங்கை நாயகி என் முகத்தைப் பார்த்தவாறே “ஓம் தம்பி, எண்பதாம் ஆண்டு லண்டனுக்கு படிக்கவெண்டு போனது, எண்பத்தி மூண்டில அங்கயிருந்து திரும்பி இந்தியாவுக்கு போயிற்றன். பிறகு திரும்பியும் எண்பத்தாறில இஞ்ச வந்தனான்” என்றார்.
“லண்டனிலயிருந்து ஏன் திரும்பிப் போனீங்கள், படிப்பு முடிஞ்சுதா இல்லாட்டி லண்டன் பிடிக்கயில்லையோ?”
இலங்கை நாயகி நாயை இறக்கித் தரையில் விட்டுக்கொண்டே “நான் லண்டனிலயிருந்து இயக்கத்துக்குப் போனனான் தம்பி” என்று சொல்லிவிட்டுத் தனது கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். நான் இவ்வாறான ஒரு பதிலை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மெதுவாக நடந்து கதவைத் திறந்து எனது வீட்டுக்குள் நுழைந்தேன்.
என்ன இந்த மனுசி ஒரு ரைப்பாக் கதைக்கிறதே என்று யோசித்தேன். முன்பின் தெரியாத ஆளிடம் தான் இயக்கம் என்று சொல்வதென்றால் இலங்கை நாயகியின் பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்கக் கூடும் என நான் எச்சரிக்கையானேன். என்னை அவர் உளவு பார்க்கிறாரா? இன்னொரு புறத்திலே ‘அந்த மனுசி இயல்பாகச் சொல்லியிருக்கவும் கூடும், அது உண்மையாகவுமிருக்கலாம், எதைப் பார்த்தாலும் தவறாகவே நோக்கிச் சந்தேகமும் அச்சமும் கொள்ளுமளவிற்கு உனக்குத்தான் மூளை வக்கிரமடைந்துவிட்டது’ என்று என் மனம் குறுக்காலே சொல்லிற்று.
அடுத்தநாள் நான் வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தூரத்தே நாயுடன் இலங்கை நாயகி நடந்து வருவதைக் கண்டதும் நான் எழுந்து லிப்டுக்கு அருகாக வந்து நின்றுகொண்டேன். அவர் லிப்டின் அருகே வந்ததும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் சென்று லிப்டின் கதவுகள் மூடிக்கொண்டதும் நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நீங்கள் இயக்கத்துக்குப் போனதாச் சொன்னீங்கள்..எந்த இயக்கத்துக்குப் போனீங்கள்?” என்று கேட்டேன். அதைக் கேட்காவிட்டால் எனக்குத் தலை வெடித்திருக்கும். அவர் பதில் சொல்வதானால் சொல்லட்டும்.
இலங்கை நாயகி நெற்றியைச் சுருக்கி உதடுகளைக் கடித்து மேலே பார்த்தார். பின்பு “அது.. புளொட்டோ என்னவோ ஒரு பேர் சொன்னாங்கள், நான் அங்க சமையலுக்கு நிண்டனான்” என்றார். லிப்டின் கதவுகள் திறந்ததும் அவர் என்னைத் திரும்பியும் பாராமல் தனது கதவை நோக்கிக் கால்களை அகல வைத்து விறுவிறுவென நடந்தார். எனக்கு மறுபேச்சு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏதாவது திருப்பிப் பேசக் கூடிய மாதிரியா இலங்கை நாயகி பேசுகிறார். அவர் வாயைத் திறந்தாலே அவரின் வாயிலிருந்து முளைத்து ஒரு பாம்பல்லவா என்னைத் தீண்டுகிறது.
எனக்குக் கடி விஷம் ஏறிப் போய்விட்டது. இலங்கை நாயகிக்கு கொஞ்சம் மூளைப் பிசகு என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஒரு எதிர்பாராத நேரத்தில் லிப்டுக்குள் வைத்து இலங்கை நாயகி என்னைத் துப்பாக்கியால் சுட முயற்சிப்பது போல எனக்கு எண்ணங்கள் வர ஆரம்பித்தன. அவர் துப்பாக்கியை எங்கிருந்து உருவுவார், அப்போது லிப்டுக்குள் எனக்கும் அவருக்கும் எவ்வளவு இடைவெளியிருக்கும், நான் எப்படி அவரிடமிருந்து துப்பாக்கியைத் தட்டிப் பறிப்பது, பறித்தவுடன் அவரை நான் சுட வேண்டுமா, அவரைச் சுட்டால் மட்டும் போதுமா அல்லது அவரது நாயையும் சுட வேண்டுமா என்று என் மனதிற்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகாத் தோன்றி என்னை அலைக்கழித்தன.
‘உனக்கென்ன மனம் வக்கரித்துவிட்டதா, எதற்காக அந்த அழகிய நாய் லைலாவை நீ சுட வேண்டும்?’ என என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஜார் மன்னனை ட்ரொட்ஸ்கி சுடும்போது ஜாரின் நாயையும் சுட்டுக் கொன்றார் என்ற விஷயம் அந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வந்தது. அடுத்து வந்த நாட்களில் நான் இலங்கை நாயகியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
அதுவென்றும் இலேசான காரியமாக இருக்கவில்லை. அவர் திடீரெனத் தனது வீட்டிலிருந்து நாயோடு வெளியே வருவார். எங்களது குடியிருப்பின் அயலில் நாயோடு உலாவுவார். கொஞ்ச நேரம் நாயோடு புல்வெளியின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் வாங்கில் உட்கார்ந்திருப்பார். வேறங்கும் அவர் போய் வருவதாகத் தெரியவில்லை. அருகிலுள்ள சீனாக்காரனின் மலிவு சுப்பர் மார்க்கெட்டுக்குள் அவர் நுழைந்து வெளியே வரும்போது கையில் நாய்க்கான உணவு அடைக்கப்பட்டிருக்கும் பேணிகளுடன் வருவார். இலங்கை நாயகி எங்கே வேலை செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், சமைப்பதற்குப் பொருட்களை எங்கு வாங்குகிறார்? என்பது ஒன்றுமாக விளங்கவில்லை.
என்னுடைய கண்காணிப்பிலும் குறைபாடுகள் இல்லாமலில்லை. வேலைக்குச் செல்லும் நாட்களில் அதிகாலையில் புறப்பட்டுச் சென்று மாலையில்தான் திரும்பி வருவேன். இரவு எட்டு மணிக்குப் பிறகு என் தலையில் இடியே விழுந்தாலும் உணராத அளவுக்குப் போதையிலிருப்பேன். வேலையில்லாத நாட்களில் நான் தூக்கத்தால் எழுவதே மதியம் கழிந்த பிறகுதான். ஆனால் இப்போது நான் இலங்கை நாயகியுடன் லிப்டில் தனியாகச் செல்லும் தருணங்களைக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டேன்.
விரைவிலேயே எனக்கு ஒரு வழி கிடைத்தது. உண்மையில் இலங்கை நாயகி ‘புளொட்’ இயக்கமா, இல்லை மனுசி புத்தி பேதலித்துப் பிதற்றுகிறதா, இல்லை மனுசி கள்ள மனதோடு என்னுடன் பேசுகிறதா என அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நான் செல்லத்துரையைப் போய்ச் சந்தித்தேன். செல்லத்துரை புளொட் இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தவர். மத்திய குழுவில் கூட இருந்தவர் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். எண்பத்தாறிலோ எண்பத்தேழிலோ புளொட்டின் தள மாநாடு நடக்கும்வரை இயக்கத்திலிருந்து மாநாட்டோடு இயக்கத்திலிருந்து வெளியேறியவர். இப்போது அவருக்கு அரசியல் ஈடுபாடெல்லாம் கிடையாது. இடைக்கிடையே இலக்கியக் கூட்டங்களிற்கு செல்லத்துரை வருவார். அப்படி எனக்கு அவர் பழக்கம்.
பாரிஸ் நகரத்தின் ஒரு கபேயில் நான் செல்லத்துரையைச் சந்தித்தேன். நான் அவரிடம் “அண்ணே, ராஜரத்தினம் இலங்கை நாயகி எண்டு பெயர்.. அம்பது வயசிருக்கும், லண்டனிலயிருந்து எண்பத்தி மூண்டில புளொட்டுக்கு வந்தவவாம். இப்ப பிரான்ஸில் இருக்கிறா. ஆளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.
செல்லத்துரை கொஞ்சமும் யோசிக்காமல் “ஓ நீங்கள் லைலா தோழரைச் சொல்லுறீங்கள்” என்றார்.
“அண்ணே, லைலாத் தோழரா, இல்லை லைலாவின்ர தோழரா? தெளிவாச் சொல்லுங்கோ, நான் ஏற்கனவே போதுமான அளவுக்குக் குழம்பியிருக்கிறன்”
“அவவுக்கு லைலா எண்டுதான் இயக்கத்தில பேர்”
“லைலா, மஜ்னு எண்டெலாம் ரொமான்டிக்கா உங்கிட இயக்கத்தில பேர் வைக்க மாட்டீங்களே! மெண்டிஸ், சங்கிலி, மொக்கு மூர்த்தி எண்டு திகிலாத்தானே நீங்கள் பேர் வைப்பீங்கள்.”
“உமக்கு லைலாவெண்டா ஆரெண்டு விளங்கயில்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதல்முதலாய் ப்ளேன் கடத்தயிக்க அந்த ஒப்பிரேஷனைச் செய்த ஒரு பெண் போராளிக்கு லைலா எண்டு பெயர்”
“அண்ணே ஒரு பியர் குடிப்பமா, தலையிடிக்குது” என்று செல்லத்துரையிடம் கேட்டேன். அவருக்கு சீனி வருத்தமென்று சொல்லி பியர் வேண்டாம் என்றார். அவருக்கு ஒரு கறுப்புக் கோப்பியும் எனக்கு ஒரு பியரும் ஓடர் செய்தேன்.
“அண்ணே அவ லண்டனிலயிருந்தா இயக்கத்துக்கு வந்தவ?”
“ஓமோம்..அதென்னண்டா இவ லண்டனுக்கு படிக்கத்தான் போனது. அங்கதான் கீர்த்தி மாஸ்டரோட லவ்வானது. கீர்த்தி மாஸ்டர் அப்ப லண்டனில புளொட்டுக்கு வேலை செய்தவர். நல்ல அரசியல் தெளிவுள்ள ஆள். ரெண்டு பேரும் லண்டனிலயிருந்து ஒண்டாத்தான் வெளிக்கிட்டவை. கீர்த்தி மாஸ்டர் நேர பி. எல் ஓ. ட்ரெயினிங்குக்காக லெபனானுக்குப் போயிட்டார். லைலா இந்தியாவுக்கு வந்திற்றா. இந்தியாவில கே. கே. நகர் புளொட் ஒப்பிஸிலதான் இரண்டு வருசமா இருந்தவ.”
“அப்ப இவ லைலா இயக்கத்தில் பெரிய பொறுப்பில இருந்தவவா?”
“ஒப்பிஸில வேலை செய்தவ. கிட்டத்தட்ட உமாமகேஸ்வரனுக்கு செகரட்ரி மாதிரித்தான். இங்கிலீஸ் நல்லாத் தெரியும். அதால வெளிநாட்டுத் தொடர்புகள், மொழிபெயர்ப்புகள் எண்டு கன வேலை செய்தவ. இவவுக்கு அங்க மஞ்சள் குருவியெண்டு பட்டம்.”
“அதென்ன மஞ்சள் குருவி?”
“ஆம்பிள பொம்பிளை எண்டு வித்தியாசம் பாராம எல்லாரோடயும் நல்லாச் சிரிச்சுப் பழகுவா. உடுப்புகளும் அப்பிடி, இப்பிடி லண்டன் ஸ்டைலிலதான் போடுவா. ஒருக்கா உமாமகேஸ்வரன் கூட ‘உங்கிட லண்டன் பழக்கத்தை இஞ்ச காட்டாதீங்கோ, கட்டுப்பாடு தேவையெண்டு’ இவவ ஏசினது. ஆரைப் பார்த்தாலும் வழியிற கேஸ் எண்டு அவவுக்கு ஒரு பேரிருந்தது. லைலாத் தோழர் எங்களுக்கு முதலே இயக்கத்திலயிருந்து விலத்திற்றா.”
“ஏன் இயக்கத்திலயிருந்து வெளியில வந்தவ?”
“அது எனக்குச் சரிவரத் தெரியேல்ல, ஆனால் இயக்கம் உடையத் தொடங்கின உடனேயே கெட்டிக்காரங்கள் ஓடித் தப்பிற்றாங்கள். லைலா லண்டன் படிப்பெல்லா.. நாங்கள் அரைகுறையள் நிண்டு இழுவுண்டு வந்தது. மொக்குகள் எல்லாம் அங்கயிருந்து செத்துப்போனாங்கள். புலி போட்டது அரைவாசி…எங்கிட ஆக்களே போட்டது அரைவாசி.”
“அந்தக் கீர்த்தி மாஸ்டர் இப்ப எங்க?”
“ஆருக்குத் தெரியும்! பி.எல்.ஓவுக்குப் போன ஆளை பிறகு ஒருதரும் கண்டதாத் தெரியேல்ல. அவர் லெபனானிலேயே அடிபாட்டில செத்துப்போனார் எண்டு ஒரு கதையிருக்கு. அப்பிடியில்ல லெபனானில மாணிக்கத்தோட பிரச்சினைப்பட்டுத் திருப்பி இந்தியாவுக்கு வந்துதான் காணாமல் போனவர் எண்டும் ஒரு கதையிருக்கு”
செல்லத்துரையிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் வழியெல்லாம் எனக்கு இலங்கை நாயகி குறித்த சித்திரங்களே மனதிற்குள் வந்து போயின. ஆனால் இப்போது மனது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. அடுத்தநாள் கீழ்த்தளத்தில் லிப்டின் அருகே காத்திருந்து இலங்கை நாயகியுடன் லிப்டில் ஏறி அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் வழமைபோலவே தலையைச் சிறிது அசைத்து வைத்தார்.
நான் புதிதாகப் பார்ப்பதுபோல ஓரக் கண்ணால் இலங்கை நாயகியைக் கவனித்தேன். அவர் தலை குனிந்து கையிலிருந்த நாயைத் தடவிக்கொண்டிருந்தார். இலங்கை நாயகி எலுமிச்சம் பழ நிறம். அதனால் கூட அவருக்கு மஞ்சள் குருவியென்று பெயர் வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். சற்றுப் பருமனான உடல்வாகு, அல்லது அவரது குள்ளமான தோற்றம் அவரைப் பருமனாகக் காட்டுகிறது. தலையில் ஒரு நரை முடி கூடக் கிடையாது. லிப்ட் கதவுகள் திறந்ததும் விறுவிறுவென அவர் கால்களை அகற்றி வைத்து வேகமாக நடந்து போனார். இப்படிக் கால்களை எறிந்து விறுக்காக நடந்துபோகும் பெண்களை ஊரில் ஆண்மூச்சுக்காரி என்பார்கள்.
ஒருநாள் காலையில் நான் கீழ்த்தளத்து வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தபாற்காரி வந்து தபாற் பெட்டிகளிற்குள் கடிதங்களைப் போட்டுக்கொண்டிருந்தாள். திடீரென ஒரு யோசனை உதிக்க நான் போய் தபாற்காரியின் அருகில் நின்று இலங்கை நாயகிக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா எனக் கவனித்தேன். அன்று இலங்கை நாயகிக்குக் கடிதம் வந்திருந்தது. அதைத் தபாற்காரி இலங்கை நாயகி என்று எழுதப்பட்டிருந்த பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றதும் நான் கீழே கிடந்த ஒரு நீளமான மெல்லிய குச்சியை எடுத்து அந்தக் குச்சியைப் பெட்டிக்குள் விட்டு லாவகமாகக் கடிதத்தை வெளியே எடுத்தேன். எங்கள் தொடர்மாடிக் குடியிருப்பில் இவ்வாறு குச்சிவிட்டு ஆட்டும் வேலையை ஒளிவு மறைவாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே தபால் பெட்டிக்குச் சாவியிருக்கிறதோ இல்லையே அநேகமானோர் இவ்வாறு குச்சி விட்டுத்தான் கடிதங்களை எடுத்தார்கள். தபால் பெட்டிகளுக்குக் கீழே நீளமான குச்சிகள் எப்போதும் கிடக்கும்.
நான் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு பத்தாவது தளத்திற்கு வந்தேன். எங்கே வேலை செய்கிறார், என்ன வருமானம், அவரின் தொடர்புகள் எத்தகையவை என எந்தவொரு தடயத்தையும் எனக்குத் தராமல் புகையால் வரைந்த ஒரு சித்திரம் போல இலங்கை நாயகி எங்களது குடியிருப்பில் இருந்தார். இந்தக் கடிதத்தைக் கொடுக்கும் சாட்டில் இலங்கை நாயகியின் வீட்டிற்குள் நுழைவது, குறைந்த பட்சம் அவர் கதவைத் திறந்து கடிதத்தை வாங்கும்போது கதவு இடைவெளிக்குள்ளால் அவரது வீட்டின் உள்ளே எட்டியாவது பார்த்துவிடுவது என்பதுதான் எனது திட்டம். உண்மையில் எனக்கு இதுவொரு தேவையில்லாத வேலைதான். ஆனால் யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் சந்தேகத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எனது மனம் என்னை வழிநடத்திற்று.
நான் ஏழாம் இலக்கக் கதவின் முன்னே நின்று அழைப்பு மணியை அழுத்திக் கையை மணியிலிருந்து எடுக்கவில்லை, சடாரெனக் கதவு திறந்தது. இலங்கை நாயகி கதவுக்குப் பக்கத்திலேயே நின்றிருக்க வேண்டும். அல்லது இவ்வளவு சடுதியில் கதவு திறபட வாய்ப்பேயில்லை. திறந்த கதவு நான்கு அங்குலங்கள் மட்டுமே திறந்தது. கதவுக்கும் நிலைக்கும் இடையே உட்புறமாக ஒன்றுக்கு இரண்டாக இரண்டு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த நாய் கீச்சிடும் சத்தம் கேட்டது. திறந்த கதவு இடைவெளிக்குள்ளால் மூக்குக் கண்ணாடியணிந்த இலங்கை நாயகியின் கண்கள் என்னைப் பார்த்தன.
“எக்ஸ்கியூஸே முவா மேடம், உங்கிட பெயர் ராஜரத்தினம் இலங்கை நாயகியா?”
கதவின் இடுக்கு வழியே பதில் ஏதும் வரவில்லை.
“இலங்கை நாயகி எண்ட பேருக்கு வந்த கடிதம் ஒண்டு என்ர பெட்டிக்க கிடந்தது, தபால்காரி மாறிப் போட்டுட்டாள் போல” என்று கடிதத்தைக் கதவு இடுக்கை நோக்கி நீட்டினேன்.
“கடிதத்தைக் கொண்டுபோய் என்ர தபால் பெட்டிக்குள்ள போடுங்கோ” என்று இலங்கை நாயகி சொன்னதும் கதவு சாத்தப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் பகல் தூக்கத்திலிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. மாதத்தின் முதல் ஞாயிறு. எங்களது குடியிருப்புப் பகுதிக்கு இயக்கப் பொடியன்கள் பத்திரிகைகள் விற்கவும் பணம் சேர்க்கவும் வரும் நாள். நான் எழுந்து சென்று கதவைத் திறந்ததும் எனது கையைப் பற்றிக் குலுக்கியவாறே இரண்டு பொடியன்களும் உள்ளே வந்து அமர்ந்தார்கள்.
“சொல்லுங்க தம்பியவ, நாட்டில என்ன புதினம்?” என்று நான் அவர்கள் எதிரே அமர்ந்தவாறே கேட்டேன்.
“சொன்னா நீங்கள் என்ன உதவியா செய்யப் போறீங்கள்” என்று அவர்களில் ஒருவன் கசப்புடன் சொல்ல, மற்றவன் என்னை வலு தீவிரமாகப் பார்த்துக்கொண்டே ‘அண்ணன், இப்ப உலக நாடுகள் எல்லாம் எங்கிட போராட்டத்தக் கவனிக்குது. தமிழீழ அரசு அமைஞ்சிற்றுது. எங்களட்ட முப்படையுமிருக்கு, ஒரு நீதி நிர்வாகம் இருக்கு, காவல்துறை இருக்கு, வங்கி இருக்கு. எங்கிட அரசை உலகம் அங்கீகரிக்கிறதுதான் மிச்சம். உங்களப் போல ஆக்கள எல்லாம் இந்த நேரத்தில எங்களுக்கு உதவி செய்ய வேணும்” என்றான்
நான் அவர்களைப் பார்த்து எனது முகத்தைப் பாவமாக வைத்தவாறே “தம்பி நீங்கள் என்ன சொன்னாலும் தாறதுக்கு என்னட்டக் காசில்ல, இந்தப் புத்தகம் பேப்பருகளைத் தாங்கோ அதுக்கு மட்டும் காசுதாறன்” என்றேன். அவர்கள் என்னிடம் ஒரு சஞ்சிகையையும் பத்திரிகை ஒன்றையும் தர நான் எண்ணிச் சில்லறைகள் கொடுத்தேன்.
சில்லறைகளை வாங்கிக்கொண்டு பொடியன்கள் புறப்படும்போது எனக்கு அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியது. நான் அந்தப் பொடியன்களைப் பார்த்து “தம்பி இஞ்ச ஏழாம் நம்பரில புதுசா ஆக்கள் வந்திருக்கினம், அங்க போனீங்களா?” என்று கேட்டேன். பொடியன்கள் ‘பிரேக்’ அடித்து நின்றார்கள்.
“என்ன பேர்?”
“இலங்கை நாயகி”
“சிங்களப் பேர் மாதிரியெல்லோ கிடக்கு”
“இல்லைத் தம்பி தமிழ்தான், இலங்கை நாயகி எண்டது தமிழ்ப் பேர்தான், சிங்களமெண்டா லங்காராணியெண்டல்லோ பேர் இருக்கும்”
“இலங்கை நாயகி”
“சிங்களப் பேர் மாதிரியெல்லோ கிடக்கு”
“இல்லைத் தம்பி தமிழ்தான், இலங்கை நாயகி எண்டது தமிழ்ப் பேர்தான், சிங்களமெண்டா லங்காராணியெண்டல்லோ பேர் இருக்கும்”
பொடியன்கள் வெளியே போனதும் நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே நின்று கதவில் இருக்கும் வெளியே பார்க்கும் துவாரம் வழியாக வெளியே நடப்பதை அவதானித்தேன். அந்தப் பொடியன்கள் ஏழாம் இலக்கக் கதவருவே போய் நின்று அழைப்பு மணியில் கை வைக்கவும் கதவு சடாரெனத் திறந்தது. பொடியன்கள் உள்ளே பார்த்துப் பேசுவது தெரிந்தது. ஆனால் அவர்கள் பேசுவது இங்கே எனக்குக் கேட்காது. திறந்த வேகத்திலேயே இலங்கை நாயகியின் கதவு மூடப்பட்டது.
நான் மெல்ல எனது கதவைத் திறந்து வெளியே வந்து இயக்கப் பொடியன்களிடம் “தம்பி மனுசி என்ன சொன்னது?” எனக் கேட்டேன். ஒரு பொடியன் சலித்துக்கொண்டே “மனுசி கதவே திறக்கமாட்டன் எண்டு சொல்லிப் போட்டுது, இயக்கப் பத்திரிகை வாங்குங்கோ எண்டு கேட்டதுக்கு பேப்பரைக் கொண்டு போய்க் கடையில போடுங்கோ வாங்குறன், வீட்டை வரக் கூடாது எண்டு சொல்லிப்போட்டுது” என்று சொல்ல, அடுத்தவன் “இலங்கை நாயகி எண்டது மனுசிக்குப் பொருத்தமான பேராத்தான் கிடக்குது” என்றான்.
எனக்கு இலங்கை நாயகி மேல் மெது மெதுவாக ஆர்வம் குறையலாயிற்று. ஏனெனில் அதுக்கு மேலே தலைபோகிற பிரச்சினைகளெல்லாம் என்னைச் சூழ நடந்துகொண்டிருந்தன. பிரான்ஸில் வாழும் ஒரு இலட்சம் தமிழர்களில் எனக்கு இலங்கை நாயகியும் ஒருவரானார். எப்போதாவது அவர் எதிர்ப்பட நேரிடுகையில் நான் வணக்கம் சொல்வதும் அவர் தலையசைப்பதும் தொடர்ந்தது. நான் புன்னகைக்கும்போது அவர் எனக்குத்தான் தலையசைக்கிறாரா அல்லது எப்போதுமே கையிலிருக்கும் தனது நாயோடு தலையசைத்து அவர் செல்லம் கொஞ்சுகிறாரா என்று எனக்கு வரவரச் சந்தேகமாயிருந்தது.
ஒருநாள் எனது அழைப்பு மணி ஒலிக்கக் கேட்டு நான் கதவைத் திறந்தபோது அங்கே இலங்கை நாயகி நின்றிருந்தார். நான் “உள்ளுக்க வாங்க அக்கா” என்று கூப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்து நின்றேன். அவர் ஓரடி முன்னால் வந்து திறந்திருந்த கதவைப் பிடித்தவாறே நின்றார். எனக்கும் அவருக்கும் இடையே இருந்த மேசையில் எனது சிகரெட் பெட்டி கிடந்தது. எதற்கு இவர் என்னிடம் வந்திருக்கிறார் என்று நான் மண்டையைக் கசக்கியவாறே சிகரெட் பெட்டியை எடுக்க ஓரடி முன்னால் சென்றபோது இலங்கை நாயகி பதறிப்போய் பின்னால் நகர்ந்து வெளியே சென்றார். ‘நான் மஞ்சள் குருவிய ரேப் செய்யப்போறனாக்கும், அதுதான் பயப்பிடுறா’ என்று ஆத்திரத்துடன் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்து அவ்வாறு பதறியடித்தது எனக்குக் கொஞ்சம் அவமானமாயுமிருந்தது. இலங்கை நாயகி மறுபடியும் முன்னால் வந்து கதவைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
“அன்ரனிதாசன் நீங்கள் எனக்கொரு உதவி செய்வீங்களா?”
என்னுடைய பெயர் எப்படி இவருக்குத் தெரியும்..? சரி அவரும் தபாற் பெட்டியில் பார்த்திருப்பார் போல என்று நினைத்துக்கொண்டே “சொல்லுங்கோ அக்கா என்ன செய்ய வேணும்” என்று கேட்டேன்.
“எனக்குச் சரியான சுகமில்லாமல் கிடக்குது, வெளிய போக ஏலாமக் கிடக்கு. லைலாவுக்கு சாப்பாடு வாங்கவேணும் வாங்கிக்கொண்டுவந்து தருவீங்களா” என்று கேட்டார். நான் தலையாட்டியதும் அவர் மெதுவாக நடந்து வந்து கையில் வைத்திருந்த பணத்தையும் உணவுப் பொருட்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த தாளையும் மேசையின் விளிம்பில் வைத்துவிட்டுச் சென்றார்.
நான் நாய்க்கான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வரும்போது இலங்கை நாயகி என்ன சாப்பிடுவார், அவருக்கு ஏதும் தேவையில்லையா? என யோசித்துக்கொண்டே வந்தேன். இலங்கை நாயகியின் கதவின் முன்னால் நின்று நான் அழைப்பு மணியில் கை வைத்ததும் நான் எதிர்பார்த்தது போலவே கதவு உடனே திறக்கப்பட்டது. அந்த நான்கு அங்குல இடைவெளிக்குள்ளால் நான் பொருட்களை ஒவ்வென்றாக எடுத்துக் கொடுக்க இலங்கை நாயகி ஒவ்வொன்றாக வாங்கி வைத்துக்கொண்டார். நான் அத்தோடு வந்திருந்தால் மரியாதை. நான் பேச்சை வளர்க்கும் ஆர்வத்தில் “நாட்டில் என்ன செய்தியெண்டு ஏதாவது அறிஞ்சியளோ” எனக் கேட்டேன். “எனக்கு ஒண்டும் தெரியாது” என்ற பதில் வந்ததும் கதவு மூடப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
அது ஸ்ரீலங்காவில் யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டு வீசியதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நேரமது.
நான் இலங்கை நாயகியின் உடல்நிலை குறித்து ஏதாவது கேட்டிருந்தால் அவர் பதில் சொல்லியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
கொடும்பனி கொட்டிக்கொண்டிருந்த காலமது. புல்வெளிகள் எல்லாம் பனிப் பாலைகளாக மாறியிருந்தன. ஜனவரி மாதத்தில் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வந்தன. பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் என எல்லா மாதங்களுமே அவலச் செய்திகளுடன் பிறந்து மடிந்துபோயின. மே மாதத் தொடக்கத்தில் குளிர் மடியத் தொடங்கிற்று. நான் கீழ்த்தளத்து வாசற்படியில் குந்தியிருந்தபோது இலங்கை நாயகி சுமக்க முடியாத சுமையுடன தூரத்தே நடந்து வருவது தெரிந்தது. நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன். அவரின் கைளில் இருந்த இரண்டு பைகள் நிறையப் பாண் துண்டங்கள் இருந்தன. அவரின் பின்னே லைலா மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நான் அவரின் கைகளிலிருந்த பைகளை வாங்கிக்கொண்டேன்.
லிப்டில் போகும்போது நான் இலங்கை நாயகியிடம் “எதுக்கு இவ்வளவு பாண்?” என்று கேட்டுச் சிரித்தேன்.
இலங்கை நாயகி தனது நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு “குளிருக்க நிண்டு எங்கிட பிள்ளையள் போராடிக்கொண்டிருக்குதுகள், அதுகளுக்கு சாண்ட்விச் செய்துகொண்டுபோய்க் குடுக்கப் போறன்” என்றார்.
நான் இலங்கை நாயகியின் கதவுவரை சென்று பாண் துண்டங்கள் நிறைந்த பைகளைக் கீழே தரையில் சுவரோடு சாய்த்து வைத்தேன். இலங்கை நாயகி நான் அங்கிருந்து நகரும்வரை காத்திருந்துவிட்டு, தனது கதவைத் திறந்து பைகளை இழுத்துக்கொண்டு உள்ளே போனார். லைலா உள்ளே நுழைந்ததும் கதவு மூடப்பட்டது.
நான் இரவு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத் தமிழர்கள் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் கீழே நாற்பது நாட்களாகத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தைக் காண்பித்தார்கள். மேலேயிருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். எப்படியும் முப்பதாயிரம் சனத்துக்குக் குறையாது என நினைக்கிறேன். இப்போது தொலைக்காட்சியில் இலங்கை நாயகி தோன்றினார். அவரின் கையில் பிரபாகரனின் படம் இருந்தது. செய்தியாளரிடம் அவர் பிரஞ்சு மொழியில் துல்லியமாகப் பேசினார். “இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்தி அங்கே விமானத் தாக்குதல்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள், ஒரு தாயாகக் கேட்கிறேன்..சர்வதேசமே எனது பிள்ளைகளைக் காப்பாற்று” என்று விம்மிய குரலில் பேசினார் இலங்கை நாயகி. பேசும்போது அவரின் உடல் பதறிக்கொண்டிருந்தது. அவரின் கைகள் தொலைக்காட்சிச் செய்தியாளரை அடிப்பதுபோல முன்னும் பின்னும் போய்வந்தன. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவரின் குரலும் ஓலமும் கேட்பவர்களின் ஆன்மாவை உலுக்கக் கூடியவை. இலங்கை நாயகி தனது பேச்சை முடிக்கும்போது தனது கையிலிருந்த படத்தை உயரே தூக்கிக்காட்டி “எங்கள் தலைவர் பிரபாகரன்” என்றார். அப்போது அவரது குரல் கணீரென ஒலித்தது. அன்று மே எட்டாம் தேதி.
அதற்குப் பின்பு ஒரு மாதம் கழிந்திருக்கும், நான் எனது கதவைத் திறந்து லிப்டை நோக்கிச் சென்றபோது அங்கே நாயுடன் லிப்டுக்காகக் காத்திருந்தார் இலங்கை நாயகி. லிப்ட் கதவுகள் முடிக்கொண்டன. இருவரும் ஒரேதளத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறோம், ஆனால் நம்முடைய பேச்சுவார்த்தைகள் என்னவோ லிப்டில்தான் நடக்கின்றன. இயக்கமும் அரசாங்கமும் சொந்த நாட்டில் பேசாமல் மூன்றாவது நாடொன்றில் பேசிக்கொள்வதுபோல நமக்கு லிப்ட் முன்றாவது தளம்.
“அக்காவ கொஞ்ச நாளைக்கு முன்னம் நான் பிரஞ்சுச் செய்தியில் பார்த்தனான்”
இலங்கை நாயகி மெதுவாகத் தலையசைத்தார். அது நாய்க்கா அல்லது எனக்கா என்பது தெரியவில்லை. நான் அவரின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே ” கையிலயிருந்த படத்தையெல்லாம் தூக்கிக்காட்டி அடிக்குமாப்போல பேசினீங்கள்” என்றேன்.
இலங்கை நாயகி உதட்டைச் சுழித்து மேலே பார்த்துக்கொண்டே “அந்தப் படமோ, அது பிரபாகரனோ என்னவோ எண்டு சொன்னாங்கள்” என்றார். லிப்ட் கதவு திறந்ததும் இலங்கை நாயகி கால்களை அகல வைத்து நடந்து வெளியே போனார். நாய் அவரின் பின்னாலே ஓடிற்று. நான் லிப்டிற்குள் அப்படியே நின்றிருந்தேன். லிப்ட் மூடிக்கொண்டது.
நேற்று நான் வெளியே பெரும் சத்தங்களைக் கேட்டு ‘லீவு நாளில கூடப் படுக்க விடுறாங்களில்லை’ எனத் திட்டிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தேன். நேரம் காலை பத்துமணியாகியிருந்தது. கதவைத் திறந்து வெளியே என்ன சத்தம் எனப் பார்த்தேன். இலங்கை நாயகியின் கதவு முன்னே கூட்டமாயிருந்தது. பொலிஸார் வந்து கதவை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஆறாம் இலக்கத்தில் குடியிருக்கும் அந்த ஆபிரிக்கப் பெண்மணியிடம் “என்ன விசயம்?” என்று கேட்டேன். தான் இரண்டு மூன்று நாட்களாகவே ஏழாம் இலக்க வீட்டின் உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்ததாகவும் இன்று துர்நாற்றம் அளவுக்கு மீறிப்போகவே தான் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் அவர் சொன்னார். நான் என் நாசியை விரித்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டேன். அப்படி ஒரு துர்நாற்றத்தையும் நான் உணரவில்லை. நான் எப்போது கடைசியாக இலங்கை நாயகியைக் கண்டேன் என்பது எனக்குச் சரியாக ஞாபகத்தில் வர மறுத்தது. ஆனாலும் கடந்த பத்துப் பதினைந்து நாட்களாகவே நான் அவரைக் காணவில்லை என்பது எனக்கு உறைத்ததும் எனக்கு நெஞ்சுக்குள் தண்ணீர் வற்றிப்போயிற்று.
கதவு உடைக்கப்பட்டதும் பொலிசார் அந்தப் பகுதியை யாரும் நெருங்காதவாறு சிவப்புப் பிளாஸ்டிக் நாடாக்களைக் குறுக்கே கட்டினார்கள். உள்ளே இலங்கை நாயகியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து பத்து நாட்களாகியிருக்கலாம் எனச் சொன்னார்கள். நான் ஒரு பொலிஸ்காரனைக் கூப்பிட்டு அவனிடம் மெல்லிய குரலில் “உள்ளே ஒரு நாயும் இருந்தது, அது உயிரோடு இருக்கிறதா எனப் பாருங்கள்” என்றேன்.
உள்ளே போன பொலிஸ்காரன் திரும்பிவந்து என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “உள்ளே நாய் எதுவும் இல்லை” என்றான்.
“அதுவும் செத்திருக்கலாம்” என்றேன்.
“எல்லாம் தேடிப் பார்த்தாயிற்று அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றான் பொலிஸ்காரன்.
இலங்கை நாயகியின் உடல் பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்டு வெளியே எடுத்துவரப்பட்டது. நான் கண்களை இறுக முடிக்கொண்டேன். லிப்டுக்குள் அவர்கள் இலங்கை நாயகியின் உடலை வைக்கும் சத்தம் கேட்டது. நான் கண்களைத் திறந்தபோது லிப்ட் போய்விட்டிருந்தது. நான் மெல்ல நடந்து எனது கதவைத் திறந்து உள்ளே வந்து படுக்கையில் விழுந்தேன். படுக்கையில் அப்படியே கண்களை மூடியவாறே கிடந்தேன்.
இரவு ஏழு மணியளவில் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். இப்போது இலங்கை நாயகியின் வாசலின் முன்னே யாருமில்லை. நான் மெல்ல நடந்துபோய்ப் பார்த்தபோது உடைக்கப்பட்ட கதவு அடைக்கப்பட்டு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. இப்போது நான் துர்நாற்றத்தை அங்கே உணர்ந்தேன். உடனே ஆறாம் இலக்கக் கதவைப் போய்த் தட்டினேன். அந்த ஆபிரிக்கப் பெண் கதவைத் திறந்து வெளியே வந்தார். நான் பதற்றத்துடன் அவரிடம் “நீங்கள் துர்நாற்றத்தை உணர்கிறீர்களா?” எனக் கேட்டேன்.
அந்தப் பெண் என்னைக் கவலையோடு பார்த்து “காலையிலேயே சடலத்தைக் கொண்டுபோய் விட்டார்களே…இப்போது துர்நாற்றம் எதுவுமேயில்லையே” என்றார்.
“அவர்கள் ஒரு சடலத்தை மட்டும்தான் கொண்டு சென்றார்கள்” என்று நான் முணுமுணுத்தேன். அந்த ஆபிரிக்கப் பெண் என்னை இரக்கத்தோடு பார்த்து “இறந்துபோன அந்தப் பெண்மணி உன்னுடைய நாட்டைச் சேர்ந்தவரா?” எனக் கேட்டார்.
நான் ஆம் என்று தலையாட்டினேன்.
“நீங்கள் எந்த நாட்டவர்கள்?” என அந்தப் பெண் கேட்கவும் “ஸ்ரீலங்காவோ என்னவோ ஒரு பேர்” என்று சொன்னேன்.
எனது மூளை முழுவதும் லைலாவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியே நிரம்பியிருந்தது. அந்த நாயை இலங்கை நாயகியைத் தவிர வேறு யாரும் கொன்றிருக்கவோ அழித்திருக்கவோ வாய்ப்பில்லை என்று திடீரென என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதை நான் நம்பவும் ஆரம்பித்தேன். ஆரம்பம் முதலே இலங்கை நாயகி மீது எனது அடி மனதிலே மண்டிக் கிடந்த சந்தேகமும் வெறுப்பும் இப்போது முழுவதுமாகத் திரண்டு மேலே வரலாயிற்று. மஞ்சள் குருவி ஒரு வெண்ணிற நாயைக் கொன்றது.
அதுதான் இந்தக் கதையின் ஆரம்பித்திலேயே நான் சொன்னேனே, இந்தக் கதைசொல்லியின் மனது வக்கிரத்தால் நிரம்பியிக்கிறது!
(‘காலம்’ ஜனவரி 2011 இதழில் வெளியாகிய கதை)