சுரேஷ் எழுதுகிறான்
https://sureshezhuthu.blogspot.com/2019/04/blog-post.html?m=1&fbclid=IwAR2DmWZze-udsjxmfX-sd93qUqFo2PobztQudw7M23KXmibu2SK7D3hwAMc
Wednesday, 10 April 2019
பொண்டாட்டி - பாலுறவைப் பேசும் நீதிக்கதை
எழுத்தாளன் தன்னை என்னவாக பாவித்துக் கொள்கிறான் என்பது புனைவின் அழகியல் ஒருமைக்கு ஒரு இன்றியமையாத அம்சம். அதோடு எழுத்தாளனின் புனைவு பாவனையை அறிந்து கொள்வது குறிப்பிட்ட எழுத்தாளனின் மனவெழுச்சிகளையும் அக்கறைகளையும் கண்டுகொள்ள வாசகனுக்கு பெருமளவு உதவக்கூடும். மானுடம் என்கிற பெருங்கொந்தளிப்பினை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறவனாக டால்ஸ்டாய் தன்னை போரும் வாழ்வும் நாவலில் பாவனை செய்து கொள்கிறார். ஜெயமோகனின் பெரும்பாலான ஆக்கங்களில் ஒரு வரலாற்று விசாரணையாளின் பாவனையை நம்மால் காண இயலும். புதுமைப்பித்தன் மதிப்பீடுகள் சரிவதால் கோபமும் கசப்பும் கொள்ளும் கூரிய நல்லுணர்ச்சி கொண்டவராக தன்னை பாவனித்துக் கொள்கிறார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்கள் பலரின் எழுத்துக்களுக்கு கசப்பும் விலகலும் முக்கியமான புனைவு பாவனையாக மாறியிருக்கிறது. அவ்வகையில் அராத்து என்கிற எழுத்தாளர் தன்னை என்னவாகப் புனைந்து கொள்கிறார் என்ற கேள்வி அவரது இந்த நாவலையும் பிற படைப்புகளையும் புரிந்து கொள்ள அவசியமானது என நினைக்கிறேன்.
/மென்பொருள் துறையில் டிரெயினிங் & கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுதுபோக்குக்காக எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!/
இப்படி ஒரு குறிப்பினை அராத்து எழுதிய சில நூல்களில் காண முடிந்தது. இந்த நூலிலும் அதைக்காண முடிகிறது. இந்த நாவலின் தொனி அவரது பிற புனைவு நூல்களின் வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டு அராத்து தன்னையொரு "தீவிரமற்ற விளையாட்டான எதிர்தரப்பாக" புனைந்து கொள்ள முயல்கிறார் என ஊகிக்கலாம். ஆகவே அவர் இயல்பாக தமிழ் இலக்கியம் தீவிரமானது என்றும் விளையாட்டுத்தனங்களை மீறல்களை அனுமதிக்காதது என்றும் அந்த அனுமயின்மையின் வெளிக்கு வெளியே தன் புனைவுகள் இருப்பதாகவும் எண்ணிக் கொள்கிறார். அவர் படைப்புகளில் அழகியல் ஒருமையை பல இடங்களில் குலைப்பது அவரது இந்த புனைவு பாவனைதான். தீவிரமின்மை போலவே தீவிரமும் இலக்கியத்தில் ஒரு பாவனைதான் என்பது இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய ஒருசில வருடங்களிலேயே வாசகனுக்குத் தெரிந்துவிடும். சமூக அக்கறையுடனும் நம்பகத்தன்மை மிக்க தரவுகளுடனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு படைப்பின் அழகியல் ஒருமையும் தரிசனமுமே வாசகனுக்கு முக்கியமானதாக இருக்குமே ஒழிய அப்படைப்பின் கலகக்குரலோ,மீறல் தொனியோ அவனை எவ்வகையிலும் ஆர்வப்படுத்தாது. ஆகவே அராத்து நாவலின் முன்னட்டையில் "Fake novel" என்று குறிப்பிட்டிருப்பதையோ பின்குறிப்பில் "தொழில்முறை எழுத்தாளர் அல்ல" என்பது போன்ற ஆர்வத்தின் காரணமாகவோ சுயத்தின் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவோ எழுதப்பட்ட குறிப்பினை நீக்கிவிட்டு இந்த நாவலை வாசித்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.
வாசகனுக்கு எதையெல்லாம் இப்படைப்பு கொடுக்காது என எழுத்தாளர் பட்டியல் இட்டிருந்தாலும் "ஜாலியாக" எழுதப்பட்டது என விலகினாலும் ஒரு வாசகனாக நான் அத்தகைய பலகீனமான ஒப்புதல் வாக்குமூலங்களை விலக்கிவிட்டே இப்படைப்பை வாசிக்கிறேன்.
நாவலின் களம் பாலுணர்வுதான். பொழுதுபோக்குக்காக எழுதப்படும் பாலுணர்வெழுத்து மற்றும் காணொளிகளில் ஒரு பொதுக்கூறினை நம்மால் அவதானிக்க இயலும். பெரும்பாலான இத்தகைய பாலுணர்வெழுத்து "முறையற்ற" பாலுறவுச் சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது சமூகம் பொதுவில் கணவன்-மனைவி என்ற ஒற்றைப் பரிணாமம் கொண்ட பாலுறவை மட்டுமே அனுமதிக்கிறது. அதைத்தவிர்த்த மற்றதனைத்துமே மீறல்கள். யோசித்துப் பாருங்கள் பெரும்பாலான பால்நுகர்வெழுத்தில் கணவன்-மனைவி உறவே சொல்லப்படாத. கணவனின் தம்பி, மனைவியின் தங்கை,நண்பனின் காதலி,தோழியின் காதலன்,அம்மாவின் தோழி,மகளின் தோழன், இன்னும் தீவிரமாக தந்தை,தங்கை,தம்பி, மகள்,அம்மா என இந்த முறையற்ற உறவுகளின் பட்டியல் நீளும். இத்தகைய எழுத்தில் ஒரு பிரபலமான வடிவம் வயது சற்று முதிர்ந்த பெண் முதிரா இளைஞன். இந்த வடிவம் அதிகம் காணப்படுவதற்கான காரணத்தை எளிதாக ஊகிக்கலாம். "கன்னித்தன்மை" உடைய இளம்பெண்களை விட இத்தகைய பேரிளம் பெண்ணின் உடல் காமத்தை நாடும் ஒரு இளைஞனக்கு அதன் போஷாக்கு காரணமாக ஈர்ப்புடையதாக இருக்கும் மற்றும் மேலும் அவ்வயது பெண்களிடம் 'கனிவினை' எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை. இத்தகைய எழுத்தின் நுகர்வோர் பெரும்பாலும் விடலைகள் என்பதால் அவர்கள் விரும்பும் இந்த 'வடிவம்' அதிகமாக வாசிக்க கிடைக்கும். எழுத்தின் வழியாக வாசகன் அடையும் கிளர்ச்சி என்பது காமம் துய்ப்பதை வாசிப்பது என்பதைத்தாண்டி அது பிறழ்வாக இருப்பதால் அடையப்படுவதாகவே இருக்கும்.
இந்த நாவல் சிக்கலான வடிவத்தில் காலத்தை முன்பின் நகர்த்தி எழுதப்பட்டது போலத் தெரிந்தாலும் இரண்டு பகுதிகளாக பிரித்துவிடும்படியாகவே நாவலின் கட்டமைப்பு உள்ளது. மீறல் அளிக்கும் கிளர்ச்சியை வாசகனுக்கு கடத்துவதாகவே முதல் அத்தியாயம் துவங்குகிறது. அன்னம் என்ற பெண் தன்னுடைய கணவன் கங்கநாதனை ஜாஃபர் என்ற அவளுடைய காதலனுடன் இணைந்து கொலை செய்கிறாள். அதற்கான காரணமாக அன்னத்தின் வறுமை சொல்லப்படுகிறது. வறுமை ஒழிந்ததே தவிர ஜாஃபரிடமிருந்தும் அவர் எந்த இன்பத்தையும் அடைவதில்லை. இதுபோல எண்ணிக்கையிடக்கூடிய பல மீறல்கள் ஒரு தலைமுறையில் நடக்கின்றன. உத்திரம்,பெரியய்யா,செந்தாமரை,சுமதி,பாலு,அமிர்தகடேஸ்வரன் என தொடர்ச்சியாக இதுபோன்ற பிறழ்வுறவுகள் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது நாவலின் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் தீப்திகா அறிமுகமாகிறாள். அவளுடன் அவளுடைய தோழிகள் கன்யா,ஆதிரை,பிரபா என மேலும் சிலர் அறிமுகம் கொள்கின்றனர். இந்தப்பகுதியின் கதைசொல்லல் சமகாலத்தைச் சொல்வதாக இருக்கிறது. ஆனால் முதல் பகுதியைப் போன்றே இப்பகுதியிலும் மீறல்களும் பிறழ்வுகளும் வரிசையாகச் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. புணர்வுச் சித்தரிப்புகளையும் முன்புணர்வுச் சித்தரிப்புகளையும் புணர்வுக்கு பிறகான சித்தரிப்புகளையும் அராத்து இந்த நாவலில் மிக விரிவாக எழுதி இருக்கிறார். ஆனால் அவற்றை சித்தரிப்பதில் இருக்கும் கற்பனை வளம் ஒரு போர்ன் திரைப்படத்தை தாண்டவில்லை என்பதே அவற்றை தட்டையாக்குகின்றன. ஒரு தரமான பிரதியில் சித்தரிக்கப்படும் காமம் என்பது நமக்குத் தெரிந்த ஒரு ஆளுமை காமம் துய்ப்பதை அறிய நேரும்போது நமக்குள் தோற்றுவிக்கும் நிம்மதியின்மையையும் கேள்விகளையும் தோற்றுவிக்க வேண்டும். வெண்முரசு நாவல் வரிசையில் திரௌபதி பாண்டவர்களுடன் கொள்ளும் காமம் வாசகனுக்குள் அத்தகைய அதிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் அராத்து தன் கதாமாந்தர்களை ஒரு போர்ன் படத்தில் நடிக்கும் அல்லது ஒரு தரமற்ற பாலியல் கதையில் எழுதப்படும் பாத்திரங்களைப் போலவே காமத்தில் சித்தரிக்கிறார். உண்மையில் ஆசிரியரின் அக்கறை காமத்தை விரிவாகப் பேசுவதுதான் என்றால் 'இந்த தலைமுறை செக்ஸையெல்லாம் ரொம்ப கேஷுவலா எடுத்துக்குது' என்பதைப் போன்ற மேலோட்டமான மனநிலையில் இருந்து தன்னுடைய பாத்திரவார்ப்புகளை செய்திருக்கமாட்டார்.
நாவலின் மைய இழை தீப்திகா அடைந்து இழக்கும் மூன்று காதல்களே. நாவலில் பொருட்படுத்தி வாசிக்கத்தக்க ஒரே பகுதியாக இருப்பது இதுதான். ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா என்ற மூன்று வெவ்வேறு குண இயல்புகள் கொண்ட ஆண்களை காதலித்து தீப்திகா மீள்வதை மட்டும் ஓரளவு சரியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மூன்று காதல் தோல்விகளுக்கும் பிறகு தீப்திகா கட்டில்லாமல் குடியிலும் காமத்திலும் ஈடுபட்டு மீள்கிறாள். அதன்பிறகும் அவள் அழகிழக்கவில்லை என்பது ஆசிரியரின் விருப்ப கற்பனையாகவே இருக்க வேண்டும். காமத்தில் நோய்கள் மிக எளிதாகப் பரவும். பால்வினை நோய்களைத்தாண்டி சருமக்கோளாறுகள் முத்தமிடுதலால் பரவக்கூடிய மென்மையான வியாதிகள் என எத்தனையோ இருக்க அவளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்படியான மிதமிஞ்சிய போதை பழக்கம் வேறு இருக்கிறது. ஆனால் இத்தனைக்கும் பிறகும் கூட ஒரு அழகான ஆண் பொருட்படுத்தி காதலிக்கத்தக்க உடற்கட்டுடன் தீப்திகா இருக்கிறாள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.
பாலுறவுச் சிக்கல்கள் பேசப்படக்கூடாதவை அல்ல. மிக விரிவாகவே அவற்றை பேசுவதற்கான தேவை இன்றைய தாராளமய சமூகத்தில் இருக்கவே செய்கிறது. கடவுள்களும் லட்சியங்களும் இறந்து போன ஒரு காலத்தில் தேவைக்கதிகமான பணம் ,பணத்திற்கு இணையாக தேவைகளை பெருக்கிக் கொள்ளச் சொல்லும் நுகர்விய கலாச்சாரம், மரபான சமூக அமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் சேதம் என்பது போன்ற காரணிகளை கணக்கில் கொள்ளும்போது ஆண்-பெண் உறவிலும் இவற்றின் தாக்கம் பிரதிபலிப்பதை நம்மால் உணர இயல்கிறது. அது பேசப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. ஆனால் அராத்து அவற்றை பேச எடுத்திருக்கும் மொழியும் இணையுடன் காமம் கொள்வதற்கு முன்னும் பின்னும் உறவுகளில் ஏற்படும் நுட்பமான வண்ண மாறுதல்களும் என எவ்வளவோ இருந்தும் காமத்தின் மேல்மட்ட சிக்கல்களை மட்டும் தொட்டிருக்கும் தட்டையான தர்க்கமுமே இதை பாலுறவுச் சிக்கல்களைப் பேசும் படைப்பு என்ற தரத்தில் இருந்து இழுத்து வெறும் பாலுறவுக் கிளர்ச்சி மட்டுமே பேசும் படைப்பு என்றாக்குகிறது.
பாலுறவுச் சிக்கல்கள் தமிழில் எழுதப்படாத களமும் அல்ல. புதுமைப்பித்தனில் தொடங்கி கே.என்.செந்தில் வரை உண்மையான தீவிரத்துடன் பாலுறவுச் சிக்கல்கள் எழுதப்பட்ட பலநூறு பக்கங்களை உதாரணமாக எடுத்துவைக்க இயலும். தி.ஜானகிராமன்,இந்திரா பார்த்தசாரதி,ஆதவன்,சு.வேணுகோபால் என அனைத்து தட்டு மக்களின் பாலுறவுச் சிக்கல்களையும் அடையாளப்படுத்திய ஒரு வரிசை தமிழில் உண்டு. தன்னை அந்த வரிசையில் பொருத்திக்கொள்ளும் விருப்பமோ இதுபோன்ற வரிசையமைப்பதில் நம்பிக்கையோ கொண்டவராக அராத்து இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருக்க அவர் தனக்கென ஒரு தனி "பாணியை" உருவாக்கி முன்வைக்க முயன்றிருக்கிறாரா இந்த நாவலில் என்றால் அப்படியும் ஏதும் தென்படவில்லை. மீண்டும் மீண்டும் பெரும்பாலானவர்கள் போர்ன் படங்களில் கண்டு சலித்த தட்டையான சித்தரிப்புகள். வேண்டுமெனில் போர்ன் பார்க்காத "நல்ல பிள்ளைகளுக்கு" இந்த நாவல் உத்வேகத்தை ஊட்டலாம்!
மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு எனலாம்.
/ஆண்களால் காமத்திற்கென பெண்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். ஒரு பெண்ணை 'அனுபவித்ததும்' ஆண் அவளிடமிருந்து விலகிவிடுகிறான்./
இந்த தியரியை மெய்ப்பிப்பதற்காக தந்திரமான (ஜெயமோகன்,சாரு நிவேதிதா) குரூரமான (அமிர்த கடேஸ்வரன்,லக்ஷ்மணன்) பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத (ஒரு லோகோ பைலட் பாத்திரம்,அர்ஜித்) என விதவிதமான "ஆண் எதிர்கதாப்பாத்திரங்களை" உருவாக்கி உலவவிட்டிருக்கிறார். பெண்கள் மீண்டும் மீண்டும் இந்த ஆண்களின் சதுரங்கத்தில் வெட்டப்படுகின்றனர் அல்லது தோற்கடிக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். பெண் அன்புக்கு ஏங்குகிறவளாகவும் ஆண் காமத்துக்கு ஏங்குகிறவனாகவுமே எளிமையாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆண்-பெண் என்ற இருநிலைகளுக்கு இடையே பல்வேறு பால்நிலைகள் இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்க அராத்து தன் நாவலில் வெறும் ஆண்களையும் பெண்களையும் மட்டுமே சித்தரித்து - இப்படிச் சொல்லக் காரணம் இது பாலுறவு நாவல் என்பதே - அவர்களின் எந்த உளநுட்பங்களுக்குள்ளும் அகநகர்வுகளுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே உடலையே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி உடலை எழுதிவதிலும் ஒரு கள்ளமற்ற குழந்தைத்தனம்தான் வெளிப்படுகிறது. இந்த நாவலில் பெரும்பாலான பாத்திரங்களின் சிக்கல்கள் எப்படி கற்பிதங்களாகவே இருக்கின்றனவோ அதுபோலவே ஆதிரை,பிரபா,தீப்திகா போன்ற கதாப்பாத்திரங்களின் வழி நாவல் முன்வைக்கும் தீர்வுகளும் கற்பிதங்களாகவே இருக்கின்றன.
நேற்றைய ஒரு ஆணின் பகற்கனவில் பெண் சேவகியாக, துணிச்சலானவளாக,கல்வி கற்றவளாக,சுதந்திரமானவளாக அதேநேரம் நல்ல மனைவியாகவும் இருந்தது போல இந்த நாவல் முன்வைக்கும் பகற்கனவில் பெண் மேற்சொன்ன எல்லா குணநலன்களுடனும் "அன்புக்கு ஏங்குகிறவள்" என்ற ஒரு கூடுதலான விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல மனைவி என்ற ஷரத்து நீக்கப்படுகிறது.வாசிப்பதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாத விரைவான நடை , திடீரென திறந்து கொள்ளும் மர்மங்கள் ,வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சித்தரிப்புகள் போன்றவை நாவலை நிறுத்தாமல் வாசிக்க வைக்கின்றன. அதேநேரம் நாவல் குறித்து இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இது போன்ற வேறு சில ஆழமற்ற படைப்புகளை வாசிக்க நேர்ந்ததும் அவற்றுக்கான இடம் வரையறுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்தான். ஏனெனில் தமிழில் வெளிவந்தபோது கண்டுகொள்ளப்படாத ஆக்கம் பின்னர் எடுத்து வைக்கப்பட்டு அதீதமாக சிலாகிக்கப்படும். அந்த சிலாகிப்புகளைக் கடந்து அப்படைப்பை அணுகுவதற்கு மேலும் தாமதம் ஏற்படும்.
ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் அதிர்ச்சிகர சித்தரிப்புகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஆண்களுக்கு புத்திசொல்லும் ஒரு எளிய ஆக்கமாகவேத் தெரிகிறது.
சுரேஷ் எழுதுகிறான் at 07:18
Share
1 comment:
shiva18 April 2019 at 07:01
அராத்துவால் சொல்ல முடிந்தது நகர்புறத்து மேல்தட்டு மக்களின் காதல் ரிலேஷன்ஷிப் பிரேகப் இஷ்யூஸ் போன்றவற்றை. இதிலேயே எவ்வளவு ஆங்கிலம் பார்த்தீர்களா அது தான் அவர் சிக்ஸர் அடித்து ஆடும் இடம். குறையாக சொல்லவில்லை இந்த நாவலிலேயே கூட அடித்தட்டு மக்களின் காதல் ஊடல் பாலுறவுகளை எந்த ஆழமும் இல்லாமல் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட செக்ஸ் காட்சிகளைப்போல் செயற்கையாக கூறியிருப்பார். ஒரு நுட்பமான பெருநகர் மேட்டுக்குடிகளுக்குரிய இளக்காரம் இழையோடியிருக்கும். சென்னை பிராமணத்தனம் என்றும் கூறலாம். ஆனால் தீப்தியின் தற்கால உறவுகளை மிக விரிவாகவும் ஆழமாகவுமே கூறியிருக்கிறார். அது அவர் கேட்டதாக இல்லாமல் நன்கு அறிந்ததாக இருக்கலாம்.
Reply