Monday 30 September 2019

நண்பன் மாலன் -Tk Kalapria - https://www.facebook.com/tksomasundaram/posts/10157522251578374

கலாப்ரியாவை நினைக்கப் பாவமாக இருக்கிறது. அவர் கட்டமைத்திருப்பதும் அவரொரு காதல் கவிஞர் எனும் அதிகாரம்தான். மாலன் பற்றி புத்தர்-சித்தார்த்தன் அதற்கும் அப்பால் என ரெபர் செய்து அவர் எழுதியிருப்பது சுத்தப் பேத்தல். இதை ஒருவர் சொன்னால், அண்ணா பற்றியும் மாலன் பற்றியும் எப்பிடி ஒரே நாவால் ஈசிக்கொள்ள முடியும் என நிறுவவேண்டும். அவரது எல்லா நினைவுகளையும் எம்.ஜி.ஆர்.படத்தை வைத்துப் பார்ப்பதும், அவரது சொந்தக் காதல் அனுபவங்களைப் பேசுவதும் அவரது அகஉலகு. அதை யாரும் விமர்சிக்க அவசியம் இல்லை. புத்தன் ஒரு நாத்திகன். இன்றைய செக்யூலர் மரபுக்கு அவன் ஒரு அறத்தந்தை. மாலனை புத்தனுக்கும் அப்பால் என்று இன்று எழுதுவது அறிவுப் போக்கிரித்தனம். இது ஒரு ஸ்பெசிபிக் விஷயம். இதைவிட்டுவிட்டு படைப்பாளி வெண்ணெய் வெட்டி, விமர்சகன் ராணுவ இசைக்கோஷ்ட்டி என எள்ளல் செய்வது அதிகப்பிரசங்கித்தனம்..


Tk Kalapria
9 hrs ·
நண்பன் மாலன் எழுத்துலகில் தடம் பதித்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்தி மழை மாத இதழ் நடத்தும் விழாவையொட்டி அவனைப் பற்றிய என் மனப்பதிவுகள்

நண்பனாக, நல்லாசிரியனாக கலாப்ரியா

1969 அக்டோபர் முதல் வெளிவந்த ’கசடதபற’ இதழுக்கு மாதச் சந்தா மூன்று ரூபாய். அதன் ஆரம்ப நாட்களில் வண்ணதாசன் வீட்டிற்கு வரும் இதழினை வாங்கி வந்து படிப்பேன். 32 பக்கம்தான். ஆனால் ஒரு மாதம் முழுக்கப் படிக்க அதில் விஷயம் இருக்கும். 1970 ஏப்ரலில் சொர்க்கத்தைச் சுவர் எட்டி சற்றே பார்த்து விட்டுத் திரும்பியிருந்தேன். ஜூன் மாதம் என்று நினைவு,அப்போது தற்காலிக வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், ஜூன் மாதம் முதல் நான் சந்தா கட்டியிருந்தேன். அப்போது அது பெரிய தொகை. அந்த விலாசத்தை வைத்தோ என்னவோ,’வாசகன்’ என்றொரு இதழ் வந்தது. மாலன் அதன் ஆசிரியர்களுள் ஒருவன். 1/8 கிரவுன் அளவில் குட்டியாக 32 பக்க அளவில் வந்தது. கருப்பு அட்டை. சில இதழ்களே வந்தன. வாசகன் இதழில் சிறு கதைகளே அதிகமும் வந்த நினைவு. அப்போது ராஜு, பாலகுமாரன், ஜெயபாரதி, மாலன் எல்லோருமே கவிதையை விட சிறுகதை எழுதுவதிலேயே விருப்பம் உடையவர்களாக இருந்தார்கள். இவர்களின் சினேகிதியான இந்துமதியின் கதைகளும், தொடர்கதையும் அவரை அப்போது பிரபல எழுத்தாளர் வரிசையில் வைத்திருந்தது. ஜெயபாரதி என்னுடைய கவிதை நோட்டு ஒன்றில் ‘ஆட்டோகிராஃப்’ போல, “உன் (காதல்) தவிப்பு என்னையும் பாதிக்கிறது, ஏனென்றால் நானும் தோற்றவன், நீ வளர்வதை அவள் தெரிந்து கொள்ள சிறுகதைகள் எழுது,” என்று எழுதி, கையெழுத்துப் போட்டிருப்பான்
இதே காலகட்டத்தில் சுப்ரமணிய ராஜுவும், பாலகுமாரனும் தொடர்ந்து கடிதம் எழுதுவார்கள். மாலனுடன் அவ்வளவு கடிதப் போக்குவரத்து கிடையாது. உண்மையில் மாலனை மிகவும் தாமதமாகவே சந்தித்தேன். சென்னைக்குச் சென்ற ஓரிரு தடவைகளில், பாலகுமாரனையும் ராஜுவையும் மட்டுமே நேரில் சந்தித்திருந்தேன். ஞானக்கூத்தனின் அறையில் வைத்து அவர்களைச் சந்தித்தேன்.அங்கிருந்துதான் கசடதபற இதழுக்கான வேலைகள் நடக்கும். ஆனால் அப்போது கசடதபற நின்றிருந்தது. ஜெயபாரதி தினமணி கதிரில் வேலை பார்த்தான். என்னுடைய சிறுகதை ஒன்று “கண்ணாடி ஜன்னலில் விட்டெறிந்த கல்” என்று கதிரில் பிரசுரமாகி இருந்தது. அதற்கு நான் வைத்திருந்த தலைப்பு.”மேற்குச் சூரியன்”. அந்த விஜயத்தின் போதே கும்பகோணம் அருகே சுவாமி மலையில் நடக்க இருக்கும் ராஜுவின் கல்யாணத்திற்கு கண்டிப்பாக வந்து விட வேண்டுமென்று சொல்லி இருந்தார்கள், ராஜுவும் ஜெயபாரதியும்.
1975 ஜூலை 5 அன்றுதான் ராஜுவின் கல்யாணம். அதற்குள் கதிரிலிருந்து கதைக்குப் பணம் வந்து விடுமென்று நினைத்திருந்தேன். வரவில்லை. அதனால் ஐம்பது ரூபாய்க்கு மோதிரத்தை அடகு வைத்துப் புறப்பட்டு விட்டேன். என் அப்பாவின் உடல்நிலை அப்போது மோசமாக இருந்தது. அவரே சொன்னார், “ எனக்கு ரொம்ப முடியலையே இப்போது அவ்வளவு தூரம் போகணுமா,” என்று. ராஜு அவனது டி.டி.கே கம்பெனியில் எனக்கு ஒரு வேலைக்குச் சொல்லி வைத்திருந்தான். அதை அப்பாவிடம் சொன்னேன். சரியென்று ஒரு பெட்டியைத் தூண்டித் துளைத்து ஒரு ஐந்து ரூபாய்ப் பணம் தந்து அனுப்பினார். அந்தக் கல்யாணத்தில்தான் முதன் முதலில் மாலனைப் பார்த்தேன். இருவரும் அப்போது காற்றடித்தால் ஒடிந்து விடுகிற மாதிரித்தான் இருந்தோம். அதனால் அவனுடன் ஒரு இனிய ஒட்டுதல் வந்தது. நான் முந்தின நாளே போய் விட்டேன். மாலன் மறுநாள் காலையில்தான் வந்தான். அலிடாலியா ராஜாமணிதான் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான். கல்யாணம் முடிந்து எல்லோரும் தஞ்சாவூர் கிளம்பினோம். நான் நா.விச்வநாதனுடன் பேராவூரணிக்குப் போவதாக இருந்தேன்.
பஸ்ஸில் மாலன் என் அருகில் உட்கார்ந்து வந்தான். ”ஏதாவது Fiction எழுதுகிறாயா,” என்று கேட்டான். நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஒரு வருடம் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதைச் சொன்னேன். ”சீக்கிரம் எழுது, உரைநடையும் முயன்று பார்,” என்றான். நான் பேராவூரணியில் இறங்கி விச்சுவின் வீட்டிற்குப் போனாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம். ஏற்கெனவே அன்று காலையில் சுவாமி மலை கோயிலுக்குப் போகும்போது வீதியில் ஒரு பைத்தியக்காரன், அரிவாள் கம்பு சகிதம் எங்களைத் துரத்தி வர, எல்லோரும் ஓடினோம். நான் மட்டும் கீழே விழுந்து கையில் நல்ல அடி. அதன் வலி கூடிக் கொண்டே இருந்தது. அதனால் விச்சுவுடன் தங்கும் எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன். ஊர் வந்து சேரும் போது என் அப்பா இறந்து போயிருந்தார். இடிந்து போயிருந்த போது, மாலனிடமிருந்து ஒரு ஆறுதலான கடிதம் வந்தது. “இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும், வட்டம் முடியாமலே போகாது, வசந்தம் வராமலே இருக்காது” என்று எழுதியிருந்தான்.அவனுடைய கையெழுத்து எப்போதுமே அழகாக இருக்கும். விஷயமும், ஒரு வார்த்தை கூடவோ குறையவோ இல்லாமல் கச்சிதமாக இருக்கும். எப்போதுமே அவன் எழுத்தின் கவர்ச்சி இதுதான்.
ராஜு, பாலகுமாரன், மாலன் மூவரும் அப்போது அலெக்ஸாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கெட்டியர்ஸ் போல. மூவரின் வாழ்க்கை பற்றிய அணுகு முறைகளும் வேறு வேறு. ராஜுவின் வாழ்க்கை என்பது எல்லாக் கட்டங்களிலும் பிறரின் வாழ்க்கை சார்ந்தது. பாலகுமாரனிடம் அசாத்திய திறமையுடன் தன் முனைப்பு தூக்கலாக இருக்கும். மாலன் எப்போதுமே வாழ்வில் புதுப்புது திசையில் பயணிப்பான். மூன்று பேரும் பாதரசம் போல சேர்ந்தும் இருப்பார்கள். சமயத்தில் தனித்தனி முத்துக்களாகவும் இருப்பார்கள். மூன்று பேரிடமும் கற்றுக் கொள்ள எவ்வளவோ உண்டு. மாலனிடம் இயல்பாகவே ஒரு நிர்வாகத் திறன் இருக்கும். அது அவனது அப்பாவிடமிருந்து வந்திருக்கலாம். அவர் நான் வேலை பார்த்த தனியார் வங்கிக்கே சேர்மனாக வந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்த போது இதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்.
ஏனைய அரசுடமை வங்கிகள் போல எங்கள் வங்கியிலும் வங்கிக்கான பத்திரிகை (House Magazne) ஆரம்பிக்கும்படி என்னிடம் சொல்லி அதற்கு ஒரு பெயர் கேட்டார். நானும் என் நண்பரும் பெயர்கள் எழுதிக் கொண்டு போனோம். நண்பர் “ வந்தனம்”, ’கிரணம்’ என்பது போல எழுதி வந்திருந்தார். நான் “ பக்கங்கள்’,/ The Pages, ”வெளிச்சம்”, “பொருநை” என்று எழுதிக் கொண்டு போயிருந்தேன். அவருக்கு பொருநை என்ற பெயர் மிகவும் பிடித்துப் போனது. திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கிக்கு இது பொருத்தமான பெயர், நல்ல தெரிவு, என்று பாராட்டி விட்டுச் சொன்னார். மாலன் சினேகிதன் என்றால் சரியாகத்தான் இருக்கும் என்று. அதன் மூலம் வங்கி ஊழியர்களிடையே ஏதாவது எழுத்து ஆர்வம் உண்டாகும் என்று நம்பினார். எனக்கு அவ்வளவெல்லாம் எதிர் பார்ப்பில்லை என்று நான் சொன்னபோது “Trial costs nothing, let us try ” என்றார். அதே குணம் மாலனுக்கும் உண்டு.
இடையில் 76-77 வாக்கில் மாலனது திருமண வரவேற்பு திருநெல்வேலியில் நடந்தது அதற்குப் போயிருந்தேன். அவனது மனைவி பெயரும் சரஸ்வதிதான். அவனது அப்பாவின் நண்பர்களும், உறவினர்களும் ஏகத்திற்கு வந்திருந்த அன்றைக்கு என்னை வரவேற்பு மேடையிலிருந்து விருந்து மண்டபத்திற்கு அவனே அழைத்துப் போக வேண்டுமென்று பரபரப்புடன் இருந்தான். சிறு பத்திரிகை எழுத்தாளனை சரியானபடி அடையாளம் கண்டு கொள்வார்களா என்று நினைத்தானோ என்னவோ. நல்ல வேளை அவன் தங்கை வந்து, ”அண்ணா வாருங்கள்,” என்று உரிமையோடு அழைத்துப் போய் பக்கத்தில் நின்று கொண்டு உபசரித்தாள். ”அது ஏன் அண்ணா, கலாப்ரியா என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்,” என்று கேட்டாள். “கலா மேல பிரியம் அதனால கலாப்ரியா “ என்று நொடி நேரம் கூட யோசிக்காமல் சொன்னேன். கலகலவென்று சத்தமாகச் சிரித்தாள். “ரொம்ப வெளிப்படையாகச் சொல்றீங்க அண்ணா, இதையே நான் ‘ கலாஸ்ரீ’ யிடம் கேட்டப்போ அவர் ஏதேதோ வியாக்கியானம் சொன்னார், நீங்க ரொம்ப ப்ளெய்ன் ஒங்க கவிதை மாதிரி,” என்றாள். அன்றைக்கு அந்த மாலைக்கு மேல் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். அவள் அப்போது இரண்டாம் ஆண்டோ முதல் ஆண்டோ மருத்துவம் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் கொஞ்ச காலத்திலேயே அந்த அன்புமகள் கனவு மகளாகிப் போனாள் என்ற செய்தி தெரிந்து ஒரு கடிதம் எழுதினேன். அப்போதும் “நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “ என்கிற பாணியில் ஒரு கடிதம் எழுதியிருந்தான்.
பொதுவாகவே அவனுக்கு ஒரு காரியம் ஆரம்பிக்கிறோம், அதற்கு முழு உழைப்பையும் அறிவையும் செலுத்த வேண்டும். அது என்ன விளைவை உண்டாக்கும் என்று யோசிக்கக் கூடாது என்று நினைப்பான். இதையெல்லாம் கண்டுணர்ந்த்தனால்த்தான் சாவி, தன் பத்திரிகைக்கு தற்காலிக ஆசிரியப் பொறுப்பையும், ’திசைகள்’ என்ற பெயரில் பத்திரிகைக்கு முழுப் பொறுப்பையும் வழங்கினார். பிரபு சாவ்லா தமிழ் இந்தியா டுடே பதிப்பிற்கு ஆசிரியப் பொறுப்பை வழங்கினார். அதிலிருந்து அவன் திறமை மிக்க பத்திரிகாசிரியனான். அவனுடைய பத்திரிகைகளில் அவனே பக்கங்களை நிரப்ப முடியுமென்றாலும் அப்படிச் செய்யவில்லை. எல்லோருக்கும் இடம் கொடுத்தான். எனக்குத் தோன்றுவதுண்டு. அவன் எழுத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் இன்று அவனுடைய இலக்கிய உயரம் என்பது பால குமாரனை விடவெல்லாம் பெரிதாக இருந்திருக்கும். ஏனென்றால் அவன் தன் நாவல்களுக்கான தகவல்களைப் பெற கடும் பிரயாசை எடுப்பான். “ஜனகனமன “ நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போது, திருநெல்வேலியின் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், தொண்டர்களையெல்லாம் தேடித்தேடிச் சந்தித்தான் என்பதை நான் அறிவேன். அந்த நாவலின் தழுவல்தான் ஹே ராம் என்று யார் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. ஆனால் அது பற்றி அவனுக்குப் பெரிய கோருதல்களும் இல்லை.
அவன் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த போது, மதுரையில் மீரா நடத்திய ஒரு புத்தகக் கண்காட்சிக்கு சிறப்புரையாற்ற வந்திருந்தான். அப்போது நான் வங்கியின் பயிற்சி வகுப்புகளுக்காகச் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம். மாலை நேரத்தில் விடுதி அறையில் ரொம்ப ஆத்மார்த்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ”எனக்கு எல்லாமே போதும் என்று தோன்றுகிறதப்பா” என்று சொல்லிக் கொண்டிருந்தான். எனக்குமே அப்படி ஒரு பிறழ்வு மனோ நிலை இருந்தது.அதற்காக நான் மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஆனால் அவன் சொன்னது என்னைப் போல டிப்ரஷன் சார்ந்து அல்ல. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிற contenment மனநிலை போல.
அந்நேரத்தில் பெயர்ப்பலகைகளில் தமிழில் எழுத வேண்டுமென்ற போராட்டம் உச்சத்தில் இருந்தது. அதன் இயங்குதளமே மதுரைதான். அது பற்றி ஆனால் அதற்கு எதிராக அவன் சில கருத்துகளை இந்தியா டுடேயில் வெளியிட்டிருந்தான். அந்தக் கூட்டத்தின் பாதியில், சிலர் மேடையைக் கைப்பற்றி அவனது இந்தியா டுடேயின் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பேச்சு வன்முறையாக மாறி அவனைத் தாக்க நெருங்கியபோது நானும் சிலரும் அவனைச் சூழ்ந்து நின்றோம். என் கையைக் கூட ஒருவர் பின் புறமாக முறுக்கி ஏதோ மிரட்டினார். கூட்டம் கலாட்டாவில் முடிந்தது. அவனை அப்படியே பாதுகாப்பாக விடுதி அறைக்கும் அங்கிருந்து ரயில் நிலையத்திற்கும் அழைத்துப் போய், ரயில் ஏற்றி விட்டு வந்தோம். மிகவும் பயந்து போயிருந்த மீரா அப்போதுதான் மூச்சு விட்டார். ஒரு ரயில்வே நண்பர் அவனுடன் திண்டுக்கல் வரை சென்று இருக்கை உறுதி செய்து திரும்பினார். அப்போதும் ஒரு கடிதம் எழுதியிருந்தான். ”சிலரால்தான் எவ்வளவு காலம் கழித்துச் சந்தித்தாலும் முதலில் பழகியது போலவே பழக முடிகிறது. நடந்தவை குறித்து எனக்கு வருத்தமில்லை. உன்னைச் சந்தித்தது நிறைவாக இருந்தது,” என்பது போல எழுதியிருந்தான்.
ஒரு விதத்தில் அவனது எல்லா உழைப்புகளுமே “எந்த இடத்தையும் அடைய அல்ல. சும்மா நடக்கவே விரும்புகிறோம்” என்று வாசகன் பத்திரிகை ஆரம்பித்த போது சொன்ன கொள்கை அடிப்படையில் கட்டப்பட்டவையே. தினமணி ஆசிரியப் பொறுப்பு, குமுதம் ஆசிரியப் பொறுப்பு, சன் டி.வி செய்தி ஆசிரியப் பொறுப்பு எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதித்து ஒரு சரியான வழிகாட்டலை உண்டாக்கிய பின் வேறொரு புதிய பணியில் (In a new Module) தன்னைப் பொருத்திக் கொள்வான். அவனது தலையாய பங்களிப்பு “புதிய தலைமுறை” இதழில் முழுக்கத் தெரிந்தது. அதைப் பத்திரிகையாக அல்ல இளைஞர்களுக்கான இயக்கமாக ஆக்கி இருந்தான். எனக்கு அதில் ஒரு நல்ல தொடர் எழுதும் வாய்ப்பை அவனே அளித்தான். 1975 ல் அவன்,” நீ உரைநடை எழுது” என்று சொன்னதை நான் 2009 இல்தான் ஆரம்பித்தேன். அப்படி எழுதிய உரைநடைத் தொடர்கள் எல்லாவற்றிலும் புதிய தலைமுறை இதழில் நான் எழுதிய “காற்றின் பாடல்” முக்கியமானது. அதற்குக் காரணம் அதை எழுதும்போதெல்லாம் உற்சாகமூட்டுகிற ஒரு ஆசிரியராக அவன் இருந்தான்.
அவனது அரசியல் நிலைப்பாடு மாறிக் கொண்டேயிருக்கும். அதற்குக் காரணம் அவனது தேடுதல்களில் அவன் முழுமையை எட்டிய திருப்தி கொள்ளவில்லை. அவன், “கேள்விகளை எழுப்பிக் கொண்டே சிந்திப்பான். அதனால் கேள்விகள் இழுத்துச் செல்லும் திசையிலேயே செல்வான்,” என்று நான் உணர்கிறேன். அவன் தொடர்ந்து கேள்விகள் கேட்பவனாக இருக்கிறவன். பதில்கள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அவனே ஒரு பேட்டியில் இது பற்றி அவன் அம்மா திட்டுவதாகச் சொல்லும், “ உனக்கு கோணக்கட்சி ஆடறதே வழக்கமாப் போச்சு” எனக் குறிப்பிட்டிருப்பது மேலோட்டமாகச் சரி போலத் தோன்றினாலும், . நாமெல்லோரும் ஹெர்மன் ஹெஸ்செயின் சித்தார்த்தன் நாவலில் அதில் வருகிற ’கோவிந்தன்’ போல. புத்தனைச் சந்தித்து அவரது போதனைகளில் திருப்தியுற்று விடுகிறோம் . அவன் அதில் வருகிற சித்தார்த்தன் போல. அவன் புத்தனைத் தாண்டியும் செல்ல நினைக்கிறவன். ஆனால் புத்தர் குறிப்பிடுவது போல சாமர்த்தியம் காண்பிக்காதவன்.அவன் நண்பனாகவும் நல்லாசிரியனாகவும் வாய்த்தது என் நல்லூழே.