லா.ச.ரா. (1916 – 2007)
By சாரு நிவேதிதா
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/20/லா.ச.ரா.-1916-–-2007/article3185907.ece
First Published : 20 December 2015 10:00 AM IST
ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. பழுப்பு நிறப் பக்கங்களில் ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்த கட்டுரையை மீள் வாசிப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியதில் ஜி. நாகராஜன், ஜெயகாந்தன் இருவரை விடவும் மிக உயர்ந்த தளத்தில் இலக்கியரீதியாக வெற்றி அடைந்தவர் ஆ. மாதவன். ஆனால் இவ்வளவு காலம் கடந்து கொடுத்திருக்கக்கூடாது. 15 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருந்தால் அது அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரமாக இருந்திருக்கும். ஞானபீடப் பரிசுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அந்த அமைப்பு ஒவ்வொரு மொழி சார்ந்த படைப்பாளிகளிடமும் இலக்கிய ஆர்வலர்களிடமும் கேட்பது வழக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். என்னிடம் அப்படி ஒரு கேள்வி ஞானபீடத்திடமிருந்து வந்தது. உடனே ஆகாயத்தில் பறந்தபடி அசோகமித்திரனுக்கு போன் செய்தேன். ஒரே வார்த்தையில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பெயரை எழுதி விட முடியாது. பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு அந்த எழுத்தாளரின் ‘ஜாதகத்தை’ எழுதி அனுப்ப வேண்டும். அசோகமித்திரனின் ஷட்டகர் பெயர் என்ன என்றுதான் கேட்கவில்லை. மற்றபடி அது போல் ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன. அசோகமித்திரன் அவருக்கே உரிய கிண்டலுடன், ‘அந்தப் பரிசெல்லாம் நம்முடைய பெயரே நமக்கு மறந்து போகும் அளவுக்கு முதுமை வந்த பிறகல்லவா கொடுப்பார்கள்… இப்போது நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?’ என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னபோது நகுலன் அந்த ஸ்திதியில்தான் இருந்தார். நகுலனோடு நீங்கள் ஐந்து நிமிடம் பேசினால் ஐம்பது முறை உங்கள் பெயரைக் கேட்டு விடுவார்.
ஒரு படைப்பாளி தீவிரமாக இயங்கும் காலகட்டத்திலேயே பரிசுகள் வழங்கப்பட்டு விட வேண்டும். மேலும், ஒரு லட்சம் என்பதெல்லாம் இப்போது ஐந்தாயிரம் ரூபாய்க்குச் சமமாகி விட்டது. ஒரு லட்சத்தை வைத்துக் கொண்டு ஒரு எழுத்தாளர் என்ன செய்ய முடியும்? அறுவை சிகிச்சை என்று மருத்துவமனைக்குப் போனாலே ஐந்து லட்சம் ஆகி விடுகிறது. எனவே, சாகித்ய அகாதமி பரிசுத் தொகை குறைந்த பட்சம் பத்து லட்சமாகவாவது உயர்த்தப்பட வேண்டும்.
***
பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல வேலை, 91 வயது வரை வாழ்ந்த நிறைவான ஆரோக்கியமான வாழ்க்கை. மட்டுமல்லாமல் அவருடைய எழுத்துக்கு எல்லோருமே வசமாகியிருந்தார்கள். எல்லா தரப்பினராலும் வாசிக்கப்பட்டவராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார் லா.ச.ரா. இவ்வளவுக்கும் அவருடைய எழுத்துக்கள் யாவும் இலக்கியச் சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை அல்ல; ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வந்தவை.
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்காது. ஆனால் லா.ச.ரா.வின் எழுத்தை அவரது குடும்பமும் கொண்டாடியது. என்னுடைய முதல் வாசகன் என் புதல்வன் சப்தரிஷிதான் என்று சொல்லியிருக்கிறார் லா.ச.ரா. முதுமையில் அவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டு சில காலம் எழுத முடியாமல் போனபோது அவர் புதல்வர் சப்தரிஷிதான் லா.ச.ரா. சொல்வதை எழுதியிருக்கிறார். சமயங்களில் நள்ளிரவில் கூட விழித்து சப்தரிஷி என்று அழைப்பாராம் லா.ச.ரா. உடனே சப்தரிஷி காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு போய் தந்தை சொல்வதை எழுதியிருக்கிறார். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைப்பது அரிது. அதேபோல் 91 வயது வரையிலும் எழுதிக் கொண்டிருந்தார் லா.ச.ரா. உடலுக்கு முதுமை வந்திருந்தாலும் அவருடைய எழுத்து எப்போதும் போலவே இருந்தது.
என்னுடைய பள்ளிக்கூட நாட்களிலேயே நான் லா.ச.ரா.வின் எழுத்துக்கு அடிமையாகிக் கிடந்தேன். அறுபதுகளின் இறுதியிலிருந்து இன்றுவரை அதேதான் நிலை. நான் அப்போது பதின்பருவத்தில் இருந்தேன். லா.ச.ரா.வின் கதைகளைப் படித்து நானும் என்னையொத்த இளைஞர்களும் பித்துப் பிடித்தவர்களாக இருந்தோம். யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் ஜனனி என்றே பெயர் வைப்போம். என் தம்பி ஜனனி என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்டான்.
தி.ஜா.வுக்கும் லா.ச.ரா.வுக்கும் என்ன பொருத்தம் என்றால், பாரதிக்குப் பிறகான தமிழை இவர்கள் இருவரையும் போல் அழகு படுத்தியவர்கள் வேறு யாரும் இலர். பிரெஞ்சு மொழியை ஜான் ஜெனே எவ்வாறு செழுமைப்படுத்தினாரோ அப்படிச் செய்தார்கள் தி.ஜா.வும் லா.ச.ரா.வும். ஜாக் தெரிதா (Jacques Derrida) 1974-ல் Glas என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார். அதில் அவர் ஹெகலின் தத்துவத்தையும் ஜெனேயின் எழுத்தையும் ஒப்பிட்டார். வடிவத்திலும் மிக வித்தியாசமான நூல் அது. ஒரே பக்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இடது பக்கம் ஹெகல்; வலது பக்கம் ஜெனே. (படம் கீழே) இதேபோல் லா.ச.ரா.வையும் வேதங்களையும் – குறிப்பாக அதர்வ வேதம் - ஒப்பிட்டு ஒரு நூல் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை ஒப்பீடு என்று கூட சொல்லக்கூடாது. வரலாற்றின் இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இரண்டு வித பிரதிகளுக்குள் செல்லும் பயணம்.
என்னுடைய அறிதல் முறையை (perception) நான் அசோகமித்திரனிடமிருந்தும் மொழியை தி.ஜா., லா.ச.ரா. இருவரிடமிருந்தும் எடுத்துக் கொண்டேன் என்று சொல்ல முடிகிறது. மொழி எவ்வளவு முக்கியம் என்று இன்றைய எழுத்தாளர்களின் பலகீனமான பிரதிகளைப் பார்த்தால் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தங்கள் மொழியை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் கற்க வேண்டியது தி.ஜா., லா.ச.ரா.
லா.ச.ரா.வின் மொழி எப்படிப்பட்டது? ஒரே வார்த்தையில் சொன்னால் மந்திரம். ஜனனியிலிருந்து ஒரு பகுதி:
‘ஆ! இப்பொழுது உனக்கு ஞாபகம் வருகிறது. நீ விளக்கைத் தூண்டிய பொழுது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில், நீயாக எடுத்துக் கொண்ட பிறப்பின் மாசும், காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் இப்போழுது நேர்ந்த பூகம்பத்தினால் நீயே புரண்டதால், உன்னுள் புதைந்து போன நான் இப்பொழுது வெளிவந்தேன்.’
‘என்னைக் கை விட்டாயே என் கடவுளே!’
‘ஜனனீ, நீ என்னை விட்டு ஓடிப் போனாய். ஆனால் நீயே நானாய் இருப்பதால் உன்னை விட்டு நான் ஓட முடியாது. உன்னுடன் ஒட்டிக் கொண்டு வந்தேன். வந்த என்னையும் உன்னுள் புதைத்து விட்டாய். புதைத்தும் எனக்குச் சாவு இல்லாததனால், என் மேல் மண்ணைப் போட்டு மூடினாலும், நான் மூச்சுக்குத் தவித்துக் கொண்டாவது இருந்து கொண்டுதான் இருக்கிறேன்…’
‘ஜனனீ, நீ இதை அறி. இப்பொழுது நீ – என்னிலிருந்து பிரிந்த நீ – மறுபடியும் நானாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று, உருவற்று, உருவற்ற நிலையிலிருந்தே, உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள்தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால், ஜனனீ, ஜனனம் எவ்வளவு பின்னம்! ஆயினும் துண்டங்கள் இன்னமும் துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனீ, நீ என்னில் மூழ்கினால், நீயே நானாகி விடுவாய். இதுதான் உன்னின் மீட்சி… இதுதான் உன்னின் மீட்சி… மீட்சி. அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது, குழலின் நாதம் போல்.’
லா.ச.ரா. வெறுமனே மேட்டுக்குடியினர் பற்றித்தான் எழுதினார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ‘ஜனனி’ என்ற கதையில் வரும் துயரம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க காவியங்களின் துயரத்தையும் விஞ்சக் கூடியது.
அணுவுக்கு அணுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்ட பராசக்தி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஒரு நள்ளிரவு நேரம். அமாவாசை. எங்கே ஜன்மம் நேரப் போகிறதோ அங்கே போய் ஒட்டிக் கொள்வோம் என்று தேடியபடியே காற்றில் மிதந்து செல்கையில் ஒரு கோவில் திருக்குளத்தின் அருகில் ஒரு மரத்தடியிலிருந்து முக்கல் முனகல் கேட்கிறது. ஒரு இளம்பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அருகே ஒரு ஆடவன் கைகளைப் பிசைந்தபடி உட்கார்ந்திருக்கிறான். ஜன்மம் எடுக்க வேண்டுமென வந்த தேவி உடனே அந்த இளம்தாயின் உள்மூச்சு வழியே உட்புகுந்து கருப்பையில் பிரவேசிக்கிறாள். அங்கே ஏற்கனவே இருந்த ஜீவனிடம் நீ இவ்விடத்தை விட்டு விடு என்கிறாள். அதற்கு அந்த ஜீவன், பிறவித் துன்பத்தைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படிப் பிறவி எடுக்கிறோம். உனக்கு ஏன் இந்த அற்ப ஆசை என்கிறது.
குழந்தாய், நான் அன்னையாய் இருந்து இந்த உலகைப் பராமரித்து அலுத்து விட்டது. நான் குழந்தையாக வேண்டும் என்ற இச்சை வந்து விட்டது என்கிறாள் தேவி. அப்படியானால் இந்த ஜன்மத்தின் மூலம் எனக்கு விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே என்கிறது கருவில் இருக்கும் உயிர். அதைத்தான் உனக்குப் பதிலாக நான் அனுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமாணுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ அதன் உருவில் நீ இத்தாயின் வெளிமூச்சில் வெளிப்படுவாயாக! ஆசீர்வாதம்.
தேவி ஜனனம் எடுக்கிறாள். ஆனால் பிறந்த மறுகணமே அவளுக்கு மூச்சுத் திணறுகிறது. ஒரு அழுக்குத் துணி அவள் முகத்தில் விழுகிறது. குரல்வளையை இரண்டு கட்டைவிரல்கள் அழுத்துகின்றன. மூச்சு விட முடியவில்லை. பிள்ளையைப் பெற்றவளின் கை அது. ஏன் என் குழந்தையைக் கொல்கிறாய், கொலைகாரி என்று குழந்தையைப் பிடுங்குகிறான் ஆடவன். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், ‘இந்தா, சாமி குடுத்தது, கொஞ்சு’ன்னு குடுக்கச் சொல்றியா என்கிறாள் அவள். பிறகு அந்தக் குழந்தையை அங்கேயே குளக்கரையில் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள் காதலர்கள். அப்படியே உருண்டு குளத்தில் விழுந்தாலும் சரி, அல்லது யாராவது எடுத்து வளர்த்தாலும் சரி.
ஒரு வயதான பிராமணர் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறார். அவருக்கு மூன்று தினங்களாக இதே கனா வந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு குழந்தை இவரிடம் வந்து தாத்தா, உங்காத்துலே எனக்கு ஒரு இடம் கொடேன் என்று கேட்கும் கனா. தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை எதுவும் இல்லை.
குழந்தையை அந்த பிராமணரின் மனைவி எப்படி எதிர்கொள்கிறாள் என்று பார்ப்போம். ‘இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணு பேரை ஏற்கனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள். இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துல குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழாமடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங்கண்டிருக்கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேள். மூணும் பெத்தேள். தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு இன்னும் பாவமூட்டையைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.’
என் பாவம்தான். ஆனால் என் எண்ணம்… என்று பம்முகிறார் பிராமணர். உடனே மனைவி சீறுகிறாள். ‘உங்கள் எண்ணத்தைப் பத்தி என்னிடம் பேசாதேயுங்கள். குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தாரம் பண்ணிக்கணும்னு தோணித்தே. அதுதான் உங்கள் எண்ணம். ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு. என் வீட்டுலே சோத்துக்குக் கூட நாதியில்லே. அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே?’
குழந்தையின் முகத்தில் இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுகிறது. ‘இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால் அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்’ என்று நினைக்கிறாள் குழந்தையாய்ப் பசியில் துடிக்கும் பராசக்தி. ஜனனி.
‘ஜனனீ… விளையாட்டுப் போதுமா? திரும்பி வருகிறாயா?’ கேட்கிறான் ஆண்டவன்.
‘இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே?’
‘நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ, எப்படியும் உன் சக்தியினால் அல்ல.’
ஐயர் வீடு ரமித்தது. அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன். ரமித்தது என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ரம்யம் என்பதன் வினைச்சொல்.
வீட்டு அம்மாளுக்கும் ஜனனிக்கும் ஒட்டவில்லை. அதன் பிறகு அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனாலும் ஜனனிக்கு அவள் ஆசைப்பட்ட தாய்ப்பால் மட்டும் கிடைக்கவில்லை. மடியில் ஏறி அமர்ந்தாலும் பாலுக்குப் பதிலாக அறைதான் கிடைத்தது. அம்மாளுக்கு ஜனனி மீது வெறுப்பு அல்ல; பயம். இன்னதென்றே தெரியாத பயம். பார்த்துக் கொண்டிருந்த ஐயரின் கண்களில் ஜலம்.
இறைவன் சொல்கிறான். ‘ஜனனீ, உனக்குச் சொல்ல வேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளேயன்றி, குடிப்பவள் அல்ல! உலகில், தான் ஈன்ற கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் தடயம் போட்டு விடுவார்கள். உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான் ஜன்மத்தின் முதல் பாடம். எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!’
வயது ஆக ஆக ஜனனி மீதான அம்மாளின் பகை வளர்கிறது. நெருப்பு வார்த்தைகளால் ஜனனியைப் பொசுக்குகிறாள். ஒருநாள் கோபம் தாங்காமல் ஜனனி தம்பியைச் சபிக்கிறாள். ‘உன்னை வைசூரி வாரிண்டு போக!’
தம்பிக்கு வைசூரி போட்டு விடுகிறது. தம்பி மேல் ஜனனிக்கு உயிர். ஏதோ கோபத்தில் சொல்லி விட்டாள். பிறகு ஜனனியே பிரார்த்தனை செய்து வைசூரியைப் போக்குகிறாள். குழந்தைக்கு ஜலம் விடுகிறார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுகிறாள் ஜனனி. அவளும் குழந்தைதானே? அப்போது அம்மாள் சொல்கிறாள். ‘இதென்னடியம்மா கூத்து! கொழந்தை சாகல்லையேன்னு அழறையா?’ ஜனனிக்குப் பூஜையறையில் யாரோ சிரிக்கிறாற்போலிருக்கிறது. போய்ப் பார்க்கிறாள். யாரும் இல்லை.
ஜனனி வளர்கிறாள். மாப்பிள்ளையே கிடைக்கவில்லை. கடைசியில் ஒருவன் கிடைக்கிறான். தூரதேசத்தில் ராணுவத்தில் வேலையில் இருந்தான். பையன் செந்தாழைச் சிவப்பு. பணத்தை வாரி இறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் ஐயர். நான்கு நாள் கல்யாணத்துக்குப் பிறகு ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி புக்ககத்துக்குப் பெண்ணை அனுப்புவதாக இருந்தது. ஆனால் ராணுவத்திலிருந்து தந்தி வந்து ஊருக்குக் கிளம்பி விடுகிறான் மாப்பிள்ளை. சாந்தி நடக்கவில்லை.
மாப்பிள்ளைக்கு வரவே முடியவில்லை. வீட்டில் அம்மாளின் கொடுமை தாங்க முடியாமல் போகிறது. ஒருநாள் ஜனனி குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆடவன் உற்றுப் பார்க்கிறான். பதற்றத்தில் ஜனனி வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். முதல்முதலாக ஜனனிக்கு தேகத்தின் வாதை புரிகிறது. அதை லா.ச.ரா. சொல்லும் விதம் லா.ச.ரா.வே சொல்வது போல் அவர் எழுதவில்லை. அவர் மூலமாக தேவி எழுதுகிறாள்.
”இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவன போல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா? முழுக்க முழுக்கப் பயந்தானா? புரியவில்லை. சமாளித்துக் கொண்டு சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக் கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக் கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதே சமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும், அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடூரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப் போல் தலை நீட்டுகையில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று.’
அதற்குப் பிறகு ஜனனிக்கு நடப்பதெல்லாம் ‘காதுகள்’ நாவலில் வரும் நாயகனுக்கு நடப்பவை. கபந்தங்களின் ஆவேச ஆட்டம். அன்று முதல் ஜனனியின் உடல் இளைக்கிறது. சரியாகச் சாப்பிடுவதில்லை. கண்ணீர் கன்னம் புரண்டு ஓடும். துடைக்கக் கூட முயலுவதில்லை. உட்கார்ந்த நிலை கூட மாறுவதில்லை. அவளுள் ஏதோ தகர்ந்து விட்டது. சோறு தண்ணியில்லாமல் பூஜையறையிலேயே கிடப்பாள். சமையலறையிலிருந்து அம்மாள் இறைவாள். பூஜையில் ஒக்காந்துண்டு சாமியை வேரோடு பிடுங்கினால் ஆயிடுத்தா? அதே நேரத்தில் எதிர்வீட்டில் உபந்நியாசகர் சொல்வார். ஊசிமுனையில் கட்டை விரலை அழுத்தியவளாய் பர்வதராஜகுமாரி, பராசக்தி, அளகபாராம் ஜடாபாரமாக ஆதாரத்தைத் தள்ளிவிட்டு, ஜலபானங்கூடப் பண்ணாது, காற்றையே புசிப்பவளாய் பிறகு அதையும் நிராகரித்தவளாய், சந்திரசூடனுடைய தியானத்தையே ஆகாரமாய்க் கொண்டவளாய் மஹா தபஸ்வியாய்…
ஒரு வருடம் கழித்து மாப்பிள்ளை வருகிறான். சாந்தி முகூர்த்தம் ஏற்பாடாகிறது. மாப்பிள்ளை அவளை அணைக்கிறான். அவளா, கபந்தங்களின் ஆட்டமா, தெரியவில்லை. அவனை ஒரு தள்ளு தள்ளுகிறாள். இரும்புக் கட்டிலில் மோதி இறக்கிறான் மாப்பிள்ளை.
ஜனனிக்குப் பதினைந்து ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்குப் போகிறாள். என்னைக் கை விட்டாயே கடவுளே எனக் கதறுகிறாள். அப்போதுதான் ஜனனீ, நீ இதை அறி என்ற மேலே கண்ட வாசகம் வருகிறது…
(தொடரும்)
லா.ச.ரா. - பகுதி 2
By சாரு நிவேதிதா
First Published : 27 December 2015 10:00 AM IST
ஜனனிக்கும் அவள் கணவனுக்கும் மணவறையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. வைத்தியர்கள் அவள் மனநலம் இல்லாதவள் என்று முடிவு கட்டுகிறார்கள். மனநல மருத்துவமனையிலும் சிறையிலுமாகத் தண்டனைக் காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வருகிறாள். இம்சை பண்ணாத பைத்தியம் என்று ஊர் மக்களால் முடிவு கட்டப்படுகிறது. வீதியில் திரிகிறாள் ஜனனி. அவளை வளர்த்த குடும்பம் புல் பூண்டு இல்லாமல் போய் விட்டது. ஆனால் அவளுக்குப் பிக்ஷையிட்ட வீடுகளும் கடைகளும் செழிக்கின்றன.
முதுமை வந்து தொண்டு கிழமாகி, உடல் சுருங்கி, பல் உதிர்ந்து, தலைமயிர் வெண்பட்டாய் மின்ன… ஒருநாள் ஒரு மரத்தடியில் ஒரு மத்தியான வேளையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஜனனி. மத்தியானம் பிற்பகலாகி, பிற்பகல் மாலையாகி, மாலை இரவாகி, இரவு காலை ஆகிறது. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் எழுந்திருக்கவேயில்லை.
***
‘என் எழுத்து ஒரு நீண்ட நினைவு, மனிதப் பரம்பரையின் நினைவு. அந்த நினைவு என்னை ஒரு கருவியாக அமைத்து வடிவம் பெறுகின்றது. என் வாழ்வின் விளக்கத்தின் மூலம் உயிரின் கதியைக் காண முயல்கிறேன். (அந்த கதி பாம்பின் கதியைப் போல அழகான இரக்கமில்லாத கதி). இதில் கற்பனை என்பது இருந்தால் அது உண்மையின், நித்தியத்துவத்தின் தொடர்பாகவோ விரிவாகவோதான் இருக்க முடியும்’ என்று சொல்லும் லா.ச.ரா. மனிதனின் மரபணுவின் மூலமாக காலம்காலமாகத் தொடர்ந்து வரும் ஞாபகங்களையே கதைகளாக ஆக்கிக் கொடுத்தார். அதனால்தான் பல சமயங்களில் கதையை நான் எழுதவில்லை; தேவி எழுதுகிறாள் என்று சொன்னார்.
1932-ம் ஆண்டு, அதாவது அவருடைய 16-வது வயதில் எழுதத் துவங்கி 2007-ல் காலமாகும் வரை எழுதிக்கொண்டே இருந்தார் லா.ச.ரா. இந்த 65 ஆண்டுகளில் இருநூறு சிறுகதைகள், ‘புதர்’, ‘அபிதா’, ‘கல் சிரிக்கிறது’, ‘பிராயச்சித்தம்’, ‘கழுகு’ உள்ளிட்ட ஆறு நாவல்கள், ’பாற்கடல்’, ‘சிந்தாநதி’ ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாறுகள்,‘முற்றுப்பெறாத தேடல்’, ‘உண்மையான தரிசனம்’ ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என்று எழுதியிருக்கிறார்.
‘ஜனனி’ போன்ற ஒரு கதை உலக மொழிகளிலே சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. ஊரில் நாம் எத்தனையோ பைத்தியகாரிகளைப் பார்க்கிறோம். சரியாக உடை உடுத்தாமல், நிர்வாணமாக, பல ஆண்டுகளாகக் குளிக்காத அழுக்குத் தோலுடன், எண்ணெய் படாத முடியுடன்… அது போன்ற ஒரு பெண்ணின் கதைதான் ‘ஜனனி’. எல்லா உயிரினத்துக்கும் தாயாக இருக்கும் பராசக்தி, தான் ஒரு குழந்தையாக இருந்து முலைப்பால் குடிக்கலாம் என எண்ணி மனித உரு எடுத்தாள். என்ன ஆனது என்று பார்த்தோம்.
லா.ச.ரா.வின் மற்றொரு சிறுகதையான ‘பச்சைக் கனவு’ பற்றி வண்ணநிலவன் இப்படிச் சொல்கிறார்: ‘இது போன்ற ஒரு சிறுகதை, உலகின் வேறு எந்த மொழிகளிலும் சாத்தியமில்லை. அவரது படைப்பாற்றலின் உச்சம் ‘பச்சைக் கனவு’. நாவல்களில் ‘புத்ர’வும், ‘அபிதா’வும். நுட்பமான வேலைப்பாடு மிக்க செட்டிநாட்டு வீடுகளின் கதவுகளை உருவாக்கியது போல், லா.ச.ரா. தமது உரைநடைப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ‘மந்திரம் போல் சொல் வேண்டுமடா’ என்று மகாகவி பாரதி சொன்னதை லா.ச.ரா.வும், மௌனியும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள்.’
கண் தெரியாத ஒருவன் நிலவைப் பச்சையாக நினைக்கிறான். சுண்ணாம்பைப் பச்சையென்று நினைக்கிறான். மனைவியிடம் வெயில் எப்படி இருக்கும் என்று கேட்கிறான். ஐயோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள், உள்ளே வாங்கோ என்கிறாள் மனைவி. கண் தானே இல்லை; இப்போது மனமும் கெட்டு விட்டதோ என அவளுக்கு அச்சம். பிறகு வெய்யில் பச்சையாக இருக்கும் நேரம் கூட உண்டு என்று சொல்லி குளுகுளு கண்ணாடி ஒன்றைக் கொடுக்கிறாள். அவளுடைய சகோதரன் வாங்கி வந்தது. போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா? வாய் தவறி வந்து விட்டது வார்த்தை. கண்ணாடியைத் தூக்கி எறிந்து விடுகிறான். விலையுயர்ந்த கண்ணாடி உடைந்து விடுகிறது.
காலையில் கண் விழித்ததிலிருந்து கண் மூடும் வரை கைப்பிடித்தே சகலத்துக்கும் கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருக்ஷையின் நடுவில் பாதி நேரம் ஊமை. வாயையே திறக்க மாட்டான். திறந்தாலும் வெயில் பச்சையா, நிலா பச்சையா என்று அசட்டுக் கேள்வி.
மனைவி அவனை ஊமை என்றதும் நேற்று கண்ட கனவு ஞாபகம் வருகிறது. பட்டை வீறும் பச்சை வெயிலில் பசும் புல்தரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில்லென்ற தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருக்கிறான். பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்ததோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங்கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி. அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள்.
அவனுக்குக் கண் இருந்தபோது அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அதனாலேயே அந்த நிறம் அவனைப் பற்றிக்கொண்டு விட்டது. அப்போது அவனுக்குப் பத்து வயது இருக்கும். அப்போதுதான் தாயை இழந்திருந்தான். மல்லாந்து படுத்து சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் பச்சையாக இருந்தது. தாயையும் இழந்திருந்த நிலையில் அந்த விளையாட்டு அவனுக்குப் புதுமையாக இருந்தது. ஆனால் அதை அவன் மூன்று நாள்களே விளையாட முடிந்தது. கண்களில் சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்றுகொண்டே இருந்து திடீரென்று பார்வை போய்விட்டது. அதற்குப் பிறகு பார்வை மீளவில்லை.
சிறுவனாக இருந்தபோதே அவனுக்குப் பால்ய விவாகம் செய்து வைத்து விடுகிறார் தந்தை. சாரதா சட்டம் அமுலுக்கு வரும் முன்பே அவசர அவசரமாக நடத்திவைத்த திருமணம். அப்போது அவனுக்குக் கண் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன பிறகுதான் தெரிந்தது, பெண் ஊமை. காதும் செவிடு. சிறுவனின் தந்தை சீர்வரிசையோடு பெண்ணையும் அவள் வீட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார். பையனுக்கு மறுமணம் செய்வதற்குக் கூட முயன்றார். அதற்குள் அவன் கண்ணை அவித்துக் கொண்டான். மாமனாருக்கு சந்தோஷம். குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?
கண் இல்லாதவர்களின் உலகம் எப்படி இருக்கும்? ஒருநாள் குளக்கரையில் மதிய வேளையில் அவன் பின்னால் யாரோ. யாரது? பதில் இல்லை. அவன் மேல் ஒரு கை படுகிறது. அப்பொழுது அவன் வயது பதினெட்டு. அன்று முதல் குளக்கரையில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனால் அவளைப் பார்க்க முடியாது. அவளோ வாயைத் திறப்பதில்லை. வண்ணநிலவன் சொல்வது உண்மைதான். இப்படி ஒரு கதை உலக மொழிகளிலே சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதோ மீதிக் கதை. குளக்கரையில் பசும் புல்தரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத் தாபமே என்னையுமறியாது மாறிமாறித் தோன்றும் குருட்டுக் கனவாயிருந்தாலோ? ஓஹோ, நீ கண்டது குருட்டுக் கனவானால் நான் கண்டது ஊமைக் கனவோ என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது.
என் கைமேல் இரண்டு சொட்டு கண்ணீர் விழுகிறது. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவள் உடல் விம்மிக் குலுங்கிற்று.
மறுநாள் அவன் தந்தையால் விலக்கி வைக்கப்பட்டிருந்த அவன் மனைவி விஷப்பூண்டைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். மருத்துவர் வந்து வயிற்றைக் கிழித்தால் வயிற்றில் மூன்று மாத சிசு. ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் நேற்று அவள் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் என்று அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஊராரிடம் அந்தக் குழந்தை என்னுடையது என்று அவன் சொல்லவில்லை. சொல்லி அவள் கற்பைக் காப்பாற்றி என்ன ஆகப்போகிறது? தாங்கள் இருவரையும் வாழ விடாத இந்த சமூகத்திடம் உண்மையைக் கூற அவனுக்கு விருப்பமில்லை. அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்து விட்டார்கள். செத்த பிறகு அவள் தலையில் பூச்சாடாவிட்டால் என்ன?
எல்லா கதையையும் தன் மனைவியிடம் சொல்லும் அவன், அந்த மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் நான் தான் என்கிறான்.
***
‘பாற்கடல்’ என்ற ஒரு அற்புதமான கதை. இளம் பெண் ஜகதா தலைத் தீபாவளியின்போது தன் அருகில் இல்லாமல் ஊருக்குப் போய்விட்ட கணவனுக்கு எழுதும் கடிதம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த குடும்ப அமைப்பின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கதை. இதுவும் உலக மொழிகளிலே சாத்தியமில்லாத கதைதான். வாய் கொப்புளிக்க செம்பில் மனைவி கையிலிருந்து ஜலம் வாங்கும்போது கூட சுற்றும் முற்றும் பார்க்கும் கணவன். தீபாவளிக்கு இரண்டு நாள்கள் முன்பு ஜகதாவின் பெற்றோர் வந்து அவளை அழைக்கிறார்கள். கணவனும் வேலை விஷயமாக வெளியூர் போய் விட்டதால் போகலாம் என ஆசைப்படுகிறாள். ஆனால் இனிமேல் ஜகதா எங்கள் வீட்டுப் பெண்ணாயிற்றே என்கிறாள் மாமியார். ‘ஆனால் அவள் கிளம்பினால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அவள் இஷ்டம்.’ இது ஜகதாவுக்கு வைக்கப்பட்ட பரீட்சை. தன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட இருந்திராத தன் தம்பி சீனுவைப் பார்க்க வேண்டுமென்று அடித்துக் கொள்கிறது ஜகதாவுக்கு. ஆனாலும் போக மறுத்து விடுகிறாள். மாமியாரின் பரீட்சையில் பாஸ்.
பெண்களுக்கு மட்டும்தான் சுதந்தரம் இல்லை என்று யார் சொன்னது? ஆண்களுக்கும்தான் சுதந்திரம் இல்லை. இதோ விசேஷ நாள் அன்று கூட வீட்டில் இருக்க முடியாமல் அலைகிறான் கணவன். எல்லோரும் சேர்ந்து ஒரு சிறைக்கூண்டில் இருக்கிறோம். போகிற சமயத்தில் என்னிடம் வந்து, ‘ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?’ என்று ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும்தான் பார்த்து விடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக் கூடாது என்றால் பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது.
கூட்டுக் குடும்பம் எப்படி இருந்தது என்பதற்கு அதில் ஒரு காட்சி. ஜகதா அழுது கொண்டு அமர்ந்திருக்கிறாள். கல்யாணம் ஆகி இன்னும் சாந்தி முகூர்த்தம் கூட ஆகவில்லை. கணவன் வெளியூரில் இருக்கிறான். ஒரு வார்த்தை பேசியதில்லை. பெற்றோருடனும் போக முடியவில்லை. மாமியார் வந்து என்னடி குட்டி என்கிறார்.
‘ஒண்ணுமில்லையே அம்மா!’ என்று அவசரமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.
‘அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே.’ (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) ‘என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும் உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடீ!’
அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாக நானும் எழுந்து என்னவென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
‘ஏ குட்டி, எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?’
‘இருக்கிறதே!’
‘குறைஞ்சிருக்கா?’
‘இல்லையே, நிறைய இருக்கே!’
‘இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு’ என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
அப்போது நினைத்துப் பார்க்கிறாள் ஜகதா. எங்கோ தொலைதூரத்தில் கேம்ப் என்று சொல்லி உட்கார்ந்திருக்கிறீர்கள். நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது. நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் என்ன ஆவது? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவைகளை நம்பிக் கொண்டிருப்பதிலும்தான் உயிர் வாழ்கிறோம்.
யாரேனும் ரொம்ப வயதானவர்கள் சாலையில் போனால் அப்படியே ஒருக்கணம் நின்று அவரை வணங்குவாராம் லா.ச.ரா. ஜகதாவின் தகப்பானாரும் அப்படித்தான். வாழ்க்கையிலிருந்து தான் எல்லாவற்றையுமே எழுதியிருக்கிறார் லா.ச.ரா. ஏன் அப்படி வணங்குகிறீர்கள் என்று கேட்டால், ‘இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிறேன்’ என்று வேணுமென்றே குரலைப் பணிவாக வைத்துக்கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.
கூட்டுக் குடும்பத்தில் அப்பா (மாமனார்), அம்மா (மாமியார்), அப்பாவின் அம்மா (மாடியை விட்டு இறங்கவே இறங்காத பாட்டி), மற்றும் கணவனின் மூன்று சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் (ஒரு சகோதரன் இறந்து விட்டான்; அவன் மனைவியும் குழந்தையும் இங்கேதான் இருக்கிறார்கள்), கல்லூரி செல்லும் ஒரு தங்கை. பாட்டியை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் ஜகதாவின் மாமியாருடையது. மலஜலமெல்லாம் அள்ள வேண்டும்.
அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: ‘என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்’பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் ‘பொட்’டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான்.
குடும்பம் என்பது ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. ஆலகால விஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிருலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றசாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?’
மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளியிருப்பது போல் பாட்டி மூன்றாம் மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றாம் மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக்கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம் காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.
சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.
தீபாவளிக்காக அம்மா ஜகதாவின் பாதங்களுக்கு மருதாணி இடுகிறார். அப்போது அவள் பாதங்களில் அம்மாவின் கண்ணீர் சுடுநீர் போல் விழுகிறது. பதறிப் போகிறாள் ஜகதா. அம்மாவுக்கு ஜகதாவைப் போலவே ஒரு மகள் இருந்தாளாம். சிறிய வயதில் வியாதியில் இறந்து விட்டாள். அவள் ஞாபகம் ஜகதாவின் பாதங்களைத் தொட்டபோது அம்மாவுக்கு வந்திருக்கிறது.
அடுத்தாற்போல் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து கொள்ள பாட்டி மாடியிலிருந்து கீழே வரப் பிரியப் படுகிறாள். தொட்டால் பிய்ந்து விடும் போன்ற தோல் என்பதால் விசேஷ நாட்களில் மட்டுமே குளியல். பாட்டி கீழே வரும் இடத்தை லா.ச.ரா. எழுதியிருப்பதை என்னவென்று சொல்வது! லா.ச.ரா.வே சொல்வது போல் தேவிதான் இதையெல்லாம் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அந்த இடத்தை மேற்கோள் காட்டத் தயங்குகிறேன். வெறும் மேற்கோள்களாகவே இருக்கிறதே என்கிறார் நண்பர் ஒருவர். என்ன செய்வது? தெய்வத்தைப் பார்த்த பரவசம் அது என்றே கொள்ள வேண்டும்.
திடீரென்று சிறுவன் சேகரின் அழுகுரல் கேட்கிறது. செத்துப் போன மகனான இரண்டாமவரின் புதல்வன். சேகரின் அம்மா காந்தி அவனைப் பலமாக அடித்து விடுகிறாள். கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்து விட்டன. பார்த்தால் காந்தி மன்னிக்கு வெறி வந்து இருக்கிறது. அம்மாவைப் பார்த்துக் கூட எழுந்து கொள்ளவில்லை. ஜகதா புருஷனின் இரண்டாவது அண்ணா தீபாவளிக்கு சீனி வெடி வாங்கப் போனவன் வெடிக் கடை தீ விபத்தில் மாட்டி இறந்து போனான். முகம் இருந்த இடத்தில் முகமே இல்லை. அங்கே வெறும் துணிப்பந்தைப் போட்டுத்தான் கொண்டு வந்தார்கள். அப்போது சேகர் காந்தி மன்னி வயிற்றில் மூன்று மாதம். அப்படியானால் கல்யாணமாகி ஆறு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அன்றிலிருந்து மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை காந்தி மன்னிக்கு வெறி பிடிக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் போய் உட்கார்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். சேகரின் வயது இப்போது ஏழோ எட்டோ. (இந்த இடத்தில் நாம் தஞ்சை ப்ரகாஷின் ‘கரமுண்டார் வூடு’ நாவலில் வரும் பெண்களைப் பற்றி நினைவு கூர வேண்டும்.)
‘ஏண்டி காந்தி, இப்படிப் பச்சைக் குழந்தையை அடித்தாய்? என் பிள்ளை நினைப்புக்கு, இவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?’ என்கிறாள் அம்மா. அதற்கு காந்தி சொல்லும் பதிலில் இத்தனை நூற்றாண்டுகளாகப் பெண்கள் பட்ட வேதனையெல்லாம் சேர்ந்து தீயாய்க் கனன்று எரிகிறது. காந்தி கேட்கிறாள்: உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?
குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார் அம்மா. மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
‘காந்தி, இதோ பார், இதோ பாரம்மா.’
லா.ச.ரா.வின் நாவல்களைப் படித்தவர்கள் அனைவருமே அவர் மொழியில் ஒருவித லகரி இருப்பதாக உணர்கிறார்கள். அதுபற்றி அடுத்தப் பகுதியில் காண்போம்.
(தொடரும்)
லா.ச.ரா. – பகுதி 3
By சாரு நிவேதிதா
First Published : 03 January 2016 10:00 AM IST
‘அம்பாளின் சிலம்பொலி’ என்ற கட்டுரையில் ஜடாயு லா.ச.ரா.வின் படைப்புலகை psychedelic writing என்று குறிப்பிடுகிறார். Psychedelic என்பது எல்.எஸ்.டி. போன்ற போதை மருந்துகளின் மூலம் கிடைக்கும் மனவெளித் தோற்றங்கள் (hallucinations) எனலாம். பிங்க் ஃப்ளாய்ட் ஒரு சிறந்த ஸைக்கடெலிக் பாடகர். ஸைக்கடெலிக் இசை என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு பிங்க் ஃப்ளாய்டின் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்:
https://www.youtube.com/watch?v=bnC7TdkRnP4
ஸைக்கடெலிக் எழுத்துக்கு உதாரணமாக, அமெரிக்காவின் Beat இயக்கத்தைச் சேர்ந்த ஆலன் கின்ஸ்பெர்கைச் சொல்லலாம். ஆச்சரியம் என்னவென்றால், ஆலன் கின்ஸ்பெர்கின் தத்துவ தரிசனம் அனைத்தும் இந்திய mysticism-த்தின் மூலமாகக் கிடைத்தது. அவர் கல்கத்தாவில் ஒரு இந்து சந்நியாசியைப் போல வாழ்ந்தவர். எனவே மேற்கில் எல்.எஸ்.டி. போன்ற போதை மருந்துகளின் மூலம் கிடைக்கும் மனவெளித் தோற்றங்களை இந்திய ஞானிகள் தியானம், தவம் போன்ற வழிமுறைகளின் மூலம் அடைந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு எழுத்துலக ஞானியே லா.ச.ரா. ஞானிகள் தியானத்தின் மூலமும் தவத்தின் மூலமும் அடையும் அந்த மனோநிலையை லா.ச.ரா. தனது எழுத்தின் மூலம் கண்டடைகிறார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 1296 பிரபந்தங்களை இயற்றியவர் நம்மாழ்வார். அவர் பாடிய திருவிருத்தம் ரிக் வேத சாரத்தையும், திருவாசிரியம் யஜூர் வேத சாரத்தையும், பெரிய திருவந்தாதி அதர்வ வேத சாரத்தையும், 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்மொழி சாம வேத சாரத்தையும் கொண்டிருப்பதால் நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்படுகிறார். இதேபோல் வேதசாரம் என்ற தரிசனத்தின் வாயிலாக வாழ்க்கையைப் பார்த்தவர் லா.ச.ரா. வாசகர்களுக்கு நான்கு வேதங்களையும் தமிழில் படிக்கும் ஆர்வம் இருந்தால் அவற்றை மென்பிரதிகளாகவே இலவசமாகப் படிக்கலாம். எம்.ஆர். ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பு மட்டுமே நான்கு வேதங்களுக்கும் தமிழில் கிடைக்கும் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாக உள்ளது. ஜம்புநாதனின் இந்த மொழிபெயர்ப்பை பேராசிரியர் அரசு தற்காலத் தமிழில் மாற்றி பதிப்பித்துள்ளார். அது வேதத்துக்கும் நியாயம் சேர்க்கவில்லை; தன் வாழ்க்கையையே இந்த மகத்தான பணிக்காக தியாகம் செய்த எம்.ஆர். ஜம்புநாதனுக்கும் நியாயம் சேர்க்கவில்லை.
இந்தியப் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்ட பல சிந்தனையாளர்கள் இருந்தும் கூட நான்கு வேதங்களையும் அற்புதமான தமிழில் மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதனின் மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல ஆள் இல்லை. ஏனென்றால், அவர் செய்த மொழிபெயர்ப்பு நூல்கள் இப்போது யாரிடமும் கிடைப்பதில்லை. என்னிடம் அதர்வ வேத மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இப்போது யாரேனும் முன்வந்து மென்பிரதியாகக் கிடைக்கும் ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பிலான நான்கு வேதங்களையும் பதிப்பிக்க வேண்டும். எம்.ஆர். ஜம்புநாதன் செய்த நான்கு வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு:
http://www.vedicgranth.org/home/the-great-authors/mr-jambunathan
மேற்கண்ட இணைப்பில் உள்ள வேதங்களைப் படிக்கும்போது அதன் மொழியும் லா.ச.ரா.வின் மொழியும் ஒன்றே போல் இருக்கக் காண்பீர்கள். லா.ச.ரா.வின் ‘புத்ர’ என்ற நாவலில் உள்ள ஒரு அத்தியாயத்தை நான் வாசித்து ஒலிப்பதிவு செய்தேன். அதைக் கேட்ட டாக்டர் ஸ்ரீராம் எனக்கு இப்படி எழுதினார்:
‘ஸ்ரீபெரும்புதூரில் திருமஞ்சனம் முடிந்த பிறகு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடுவார்கள். அதுபோல் உள்ளது லா.ச.ரா.வின் எழுத்து உங்கள் குரலில்.’
யார் குரலிலும் லா.ச.ரா. அப்படித்தான் இருப்பார். ஏனென்றால், அவர் சமகால இலக்கியத்தின் நம்மாழ்வார். லா.ச.ரா. எழுதிய எல்லா எழுத்தையும் நீங்கள் வாய் விட்டுப் படிக்கலாம். காரணம், அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையுமே மந்த்ரம் போல் ஒலிக்கின்றது. ‘புத்ர’ நாவலிலிருந்து:
‘என் பொருளைத் தாங்கும் சொல்லில் நான் தோன்றி விட்டதால் அப்பொருளில் இயங்குதல் என் வினை.
என் பொருளை வெளிப்படுத்திக் கொண்டு, அவன் மூடிய கண்ணுள்ளோ, நினைவிலோ தோன்றுவது என் வினை.
என் தோன்றலில் அவன் வதைபடல் என் வினை.
ஏன், எதற்கு, மாட்டேன் என்பதெல்லாம் எனக்கல்ல. என்னுடைய சமயங்களில், என்னுடைய பொருளில், வெளியின் அசரீரக் கலவையினின்று நான் பிதுங்குகிறேன்.
இல்லாமல் இருக்கிறேன்.
இருந்தும் இல்லையென்று
இருக்கிறேன்.
இல்லையென்பதே இல்லை.
இல்லையும் உண்டும் இயக்கத்தில் மாறி மாறி வரும். மயக்கங்களின்றி எப்பவும் இருக்கிறதென்பதுதான் இருக்கிறது.
நிகழ்ச்சியின் ஊர்வலம் முடிவின்றி ஊர்ந்து கொண்டே
செல்கிறது.
வருகிறது.
இருக்கிறது.
இயக்கத்தின் எங்கணும் நிறைவில், அதற்குத் தனி நோக்கில்லை. அதனாலேயே அது கண்மூடி.
கண்மூடியாதலால் அதன் கதி மாறாக்கதி. அதுவே இயக்கத்தில் ஈடுபட்டவைகளின் விதி.
காலத்தை உண்டு, உமிழ்ந்து, தன் செயலே கதியாய், இயக்கம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
இயக்கத்தின் பல்வேறு வகைகளின் தனித்தனிச் சோதனைகள், அதன் தனித்தனித் தோற்றங்கள்.
இத்தோற்றங்கள் நாளென்றால் தகுமா? அல்லது, நிமிடங்கள், மாதங்கள், வருடங்கள், வயது, மூப்பு – எதுவென்றால் தகும்?’
கதையின் ஊடாக நாவல் முழுவதுமே இந்த மொழியில்தான் விவரிக்கப்படுகிறது. லா.ச.ரா.வைச் சிலாகிப்பவர்கள் கூட அவர் ஒரே கதையைத்தான் விரித்து விரித்து பலவேறு கதைகளாக எழுதியதாகச் சொல்கிறார்கள். ஆனால் லா.ச.ரா.வின் ஒரு கதை கூட ஏற்கனவே சொல்லப்பட்ட கதையின் சாயை கொண்டதாக எனக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கதையுமே வேறு வேறு கதை. உதாரணமாக, ‘புத்ர’ நாவலின் கதை லா.ச.ரா.வின் வேறு எந்தக் கதையையும் நினைவுபடுத்தும் கதை அல்ல. மட்டும் அல்லாமல் உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு கதை எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப லா.ச.ரா. செய்வதெல்லாம் வேறு வேறு பெண்களின் கதைகளை எழுதுகிறார். ‘ஜனனி’யில் அன்னை பராசக்தி மனித உரு எடுத்து சீரழிந்த கதையைப் பார்த்தோம். ‘புத்ர’வும் புத்ர என்ற தலைப்பைக் கொண்டிருந்தாலும் அது ஒரு பெண்ணின் கதைதான். எத்தனையோ பெண் எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன். ஆனால் லா.ச.ரா. அளவுக்குப் பெண்களின் வலியையும் வாதையையும் சந்தோஷத்தையும் மற்ற உணர்வுகளையும் எழுதியவர் வேறு யாருமிலர் என்றே தோன்றுகிறது. தி.ஜானகிராமன் மட்டுமே விதிவிலக்கு. தி.ஜா. பெண்களை வழிபட்டார். ஆனால் லா.ச.ரா. பெண்ணாகவே மாறி விடுகிறார்.
1965-ல் வெளிவந்த ‘புத்ர’ ஜகதா என்ற பெண்ணின் கதையைச் சொல்கிறது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மறந்து போன வரலாற்றையும் சொல்கிறது. தன் புத்திரனிடம் ஏதோ கோபத்தில் ‘உனக்கு ஆண் குழந்தையே பிறக்காது; பிறந்தாலும் தங்காது’ என்று சாபம் விட்டு விடுகிறாள் ஜகதா. அதேபோல் புத்திரனுக்குப் பெண் குழந்தைகளே தங்கின. பிள்ளைக் குழந்தை ஒன்று கருவிலேயே இறந்து விடுகிறது; இன்னொன்று பிறந்து குழந்தையிலேயே இறந்து விடுகிறது.
ஜகதா ஏன் அப்படிச் சாபம் விட்டாள் என்பதற்கான காரணம் நாவலில் இல்லை. ஆனால் அவளுடைய குலமே கோபத்துக்குப் பேர் போனது என்ற கதை சொல்லப்படுகிறது. அதுதான் ‘புத்ர’ நாவலின் கதையே. அவள் பிறந்த வீட்டுக்கே வணங்காமுடிக் கூட்டம் என்று பெயர். அவள் முன்னோரில் யாரோ பீதாம்பர வித்தையில் பேர் போனவர். பல்லக்கின் பின் தண்டை மாத்திரம் பணியாட்கள் தூக்கிச் செல்ல, முன் தண்டு தானே காலியாய் முன்னேறும். அதைத் தூக்கிச் சென்றவை பேய்கள்! ஆனால் காலத்தின் போக்கில் வளமும் வாழ்வும் தேய்ந்து பகல் பட்டினியே வந்து விடுகிறது. வயிறு முதுகை ஒட்டிய நிலையிலும் அவர்கள் கால் மேல் காலைப் போட்டு ஆட்டிக் கொண்டு ‘அவன் என்னத்தைச் செய்து விட்டான்?’ ‘இவன் என்னத்தைக் கிழித்து விட்டான்?’ என்று பேசிக் கொண்டிருப்பவர்கள். அந்த வழி வந்த ஜகதா வேறு எப்படி இருப்பாள்?
கணவன் இறந்த பிறகு, புத்திரனுடனும் வர முடியாது என்று சொல்லிவிட்டுத் தன்னந்தனியாக வாழ்கிறாள் கிழவி ஜகதா. ஒரு கிழவியின் தனிமையான வாழ்வை இத்தனை உக்கிரமாக வாசிப்பது எனக்கு இதுவே முதல் முறை. அந்தத் தனிமையினூடாக அவள் ஐந்து வயதில் தன் கணவன் வீட்டுக்கு வந்ததிதிலிருந்து தன்னுடைய முழு வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதுதான் ‘புத்ர’.
பெண்மையை எழுதியது தவிர தி.ஜானகிராமனுக்கும் லா.ச.ரா.வுக்குமான இன்னொரு ஒற்றுமை, தமிழைச் செழுமைப்படுத்தியது. தி.ஜா.வின் அழகு தென்றலைப் போன்றது. லா.ச.ரா.வின் அழகோ மலையடிவாரத்தின் தனிமையையும் கானகத்தின் சாகசமும் நிரம்பியது. தமிழை எழுதப் பழகுபவர்கள் இந்த இரண்டு பேரையும் முழுமையாக வாசிக்காமல் மேலே செல்வது சாத்தியமேயில்லை.
ஜகதாவின் புத்திரனுக்கு நான்கு குழந்தைகள் ஆனதும் (மூன்று பெண் குழந்தைகள் தங்கி, ஆண் குழந்தை இறந்து விடுகிறது) இதற்கு மேலும் இச்சைக்கு இடங்கொடேல் என நினைக்கிறான். அந்த இடம் ஒரு கவிதை.
‘ஆனால்:
புருவத்தின் ஒரு சுளிப்பில், விழியோரச் சுழலில்
எனை விளிக்கும் ஒற்றை விரல் கொக்கியில்,
நள்ளிரவில், விடிவிளக்கின் நிழலாட்டத்தில்,
என் பொறி கலங்கி, முன்பின் எனை மறந்து
என்னிலிருந்து என்னை உருக்கி
தன்னை விடுவித்துக் கொள்ளும் தணல் பிழம்பாகி
விடுகிறேன்.’
கிழவி ஜகதா தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும்போது அவளைப் பாம்பு கடித்து விடுகிறது. அந்தத் தருணத்தில்தான் அவள் தன்னுடைய முழு வாழ்க்கையையுமே நினைத்துப் பார்க்கிறாள்.
‘சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு மறுபடியும் பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். வேண்டிக் கொண்டபடி காத்திருந்த இருள், திரும்பவும் மேல் கவிந்தது. முதலை போல் நினைவைக் கவ்வித் தன்னுள் இழுக்க முயன்றது. ஆயினும் நினைவு பணியவில்லை. விளக்கின் சுடரில் தன்னை நிறுத்தி, சுடரைத் துளைத்து, ஒளியுள் புகுந்து இருளினின்று தப்ப முயன்றது. சுடர் நிலைத்து நீலமாகியது.
நீலத்துக்கும் பச்சைக்கும் வித்தியாசம் சுருக்கத் தெரிவதில்லை. காண்பது சுடரின் நீலமா? விஷத்தின் பச்சையா? விஷம் பச்சையா? நீலமா? நல்ல பாம்பு விஷம் நீலம். பச்சைப் பாம்பு விஷம் பச்சை என்றிருக்குமோ? விஷம் நீலமானதால்தானே விஷமுண்ட கண்டன் நீலகண்டன்? நீலம் அவளைச் சுற்றிப் பெருகிற்று. விஷம் ஏறுகிறதோ? விஷம் இவ்வளவு குளுமையாய் இருக்குமா என்ன? இவ்வளவு சுகமா? நீலம் நெஞ்சுள் புகுந்தது. உள் நோக்கிய பார்வையின் நீல உணர்வில், எண்ணத்தின் கடல் நீலம் அலை தாண்டி முதன்முதலாய்க் காண்கையில், அதன் விரிவும் பரிவும் வியப்பைப் பெருக்கிற்று. தன் வியப்பே நீல மீனாய்த் தன்னின்று சுழன்று, தான் காணும் கடலில் குதித்துத் துள்ளித் துளைவது கண்டாள். என்னுள் இவ்வளவு பெரிய கடலா?..................
இந்நீலவெளியில்:
கடல் நடுவே, மூலத் தண்டாய், கடலாழம் முழங்கால் மட்டில் தான் நின்றுகொண்டு, கடலும், அதன் நீலமும், அலைகளும், எண்ணங்களும், அனுபவங்களும், ஞாபகங்களும் தன்னின்று பெருகுவது கண்டாள்.
எல்லாமே எண்ணங்கள் என்ற நிலையில், வயது, மூப்பு, ஆயுளின் பாத்திரங்கள்: கணவன், மகன், கல்பகம், மருமகள், பாசம், நேசம், காரம், வைரம், பயம், தைரியம், காலம், இரவு, பகல், பிறப்பு, இருப்பு, சாவு – எல்லாமே எண்ணங்கள். நேர்ந்தவை எல்லாம் நினைவுகள். நேரப் போவது கற்பனை. நிகழ்ச்சி ஞாபகங்களுக்கும் கற்பனைக்கும் இடைப்பூச்சு. எல்லாமே மூலத்தின் நீலத்தின் நிழல் பெருக்கு. விழிகள் கண்டதே பழியென எண்ணத்தின் தோற்றங்கள். இமைகள் மூடினும் திறப்பினும் ஒன்றாய் – ஒரே நீலமாய் – இருக்கும் நீலத்தை, நினைவு, சுடரின் துணை கொண்டு மேலும் துருவியது, உடைந்த குழாய் போல் மேலும் நீலம் மேல் சரிந்து, தலை சுற்றிக் கீழே சாய்ந்தாள்.
விழிகள் நீலத்தில் சொருகின.’
வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்பட்ட நம்மாழ்வாரின் இன்றைய வார்ப்பு லா.ச.ரா. என்று குறிப்பிட்டேன். அதற்கு
இன்னொரு உதாரணம்:
‘பேசி ஓய்ந்த நேரம் அது, பெரியதொரு மலர்க் கிண்ணம் தான் வழிய ஏந்திய தேன் அனைய மோன நேரம் இது என வேறு காண அதற்கென்றே நாளடைவில் அவளுள் நுண்ணறிவு ஒன்று பிறந்து வளர்வது உணர்ந்தாள். தேன் போலவே கனத்து, அகன்று, ஆழம் தோய்ந்து மூட்டமிட்ட வேளைகள் அவர் மேல் இறங்குகையில், அவளுக்கும் தேன் வழிந்ததைப் போல் அம்மோனத்தின் விளிம்புகளில் அடையாளங்கள் இன்னவென்று புரியாமலே உட்புலனில் பதிவாயின.
ஐப்பசியில் மாந்தோப்புகளின் மேல் சாய்ந்திறங்கும் மழைத்திரை. எங்கோ பொழிய, சரசரவென விரைந்தேகும் மேகக்கூட்டம். மார்கழி விடிவேளை திரள்பனிப் படலம். மண் தரையில் பாம்பு ஊர்ந்த வரிப்பதிவுகள். மடத்து அரசமரத்தடியில் குழல் விட்டு நாளுக்கு நாள் உயரும் புற்றுத் தொடர். வெளிவிட்டு, உள்வாங்க மறந்த, அல்லது மறுத்துத் தடைப்பட்ட உயிர்மூச்சு. கிணற்றில், நள்ளிரவின் கவியிருளில், தன் ஆழத்தைப் பால் வடிவில் மறைத்து நலுங்காது நிற்கும் ஜலமட்டம். மாவிலைகள் மறைக்க அவை நடுவில் தொங்கும் கார்வடு. நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம். நாள் கிழமைகளில், துருவாமணையடியில் தும்பையெனப் போர் குவியும் தேங்காய்த் துருவல். எழுதிய படம் போன்ற பசும் புற்றரை. பறக்கும் கொக்கின் சிறகடியினின்று புல்தரை மேல் உதிர்ந்து பளீரும் வெள்ளை இறகு. சீறியிறங்கும் விண்மீனின் வீழ்ச்சி. கைதவறிக் கீழே வீழ்ந்து குதித்தெழும் வெள்ளியின் இனித்த மெல்லோசை. கரு புரளும் பசுவின் பெருவயிறு. கன்று கண்டு கண் கனிந்து, மடி கசிந்து, காம்பு துளித்து, தனித்துத் தொங்கும் உயிர்ச் சொட்டு. கும்மட்டியின் நடுக்குழிவில் தேங்கிக் கணகணக்கும் குங்குமப் பழம்பு. கோடையில் நடுநடுங்கும் கானல். சமயம் காரணம் தாண்டி, ஒழுங்கை உள்ளினின்று கிளம்பிக் கூடம் முழுதும் குபீரிடும் தாழம்பூவின் தாழ்ந்த மணம். இதழ்களின் நடுவில் செருக்குடன் எழும் பூநாக்கு. வேளை ஓய்ந்து, வேலையும் ஓய்ந்து, தலை பாய் மேல் சாய்ந்ததும் தன்னறியாது, தன்னின்று தனிப் பிரியும் பெருமூச்சு.’
லா.ச.ரா.வின் பேட்டி ஒன்றில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது எல்லாம். எனக்கு நீ, உனக்கு நான். இதுதான் வாழ்க்கை எனக்கு அளித்த உபதேசம்.’
‘தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு. 'நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா' என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். 'நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா' என்பார். அப்படி சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள்.’
லா.ச.ரா.வின் எழுத்துக்குள் செல்வதற்கு முன் ஒருவர் அந்தப் பேட்டியை வாசிப்பது லா.ச.ரா. என்ற மகத்தான ரிஷியைப் புரிந்து கொள்ள உதவும்.