Monday 14 December 2015

-Kuei Kuo Yao --Ku Hsiung - -Li Ho--Han Yu--Paul Groves--Gillian Clarke --Ian McDonald-Allen Ginsberg --Andrew Young --Andrew Motion-(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
25.12.2015 at 2:36am ·



இளவேனில் படிப்படியாக தேய்ந்தபடியிருக்க-
எங்கும் வீழ்ந்த பூக்கள், பெருமழை இளம்சிவப்புக் கறையுற்றிருக்கிறது.
அணிமணி பதித்த அவனது கூண்டில் ஒரு துயரார்ந்த கிளி
தங்குகிளையில் தனியாய் அமர்ந்துள்ளது, தன் துணையின்றி,
நான் தெற்கில் கண்ணோக்கி உள்ளேன் - வழி எத்துனைத் தொலைவானது ?
நான் பூக்களை வினவுகிறேன், அவைகள் ஏதும் நவிலவில்லை.
ஓ, அவனோ அன்றி நானோ எப்போது வீடு திரும்புவது!
அவனது நீலமணிச் சிறகுகளை நான் கொண்டிருக்க விழைகிறேன்.


-Kuei Kuo Yao -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






Shanmugam Subramaniam
December 24 at 12:21am ·



இலையுதிர்கால இரவொன்றில் மணமூட்டப்பட்ட அவளது அறையில்
தனிமையின் அசைவின்மையில் நினைவுற்று ஏங்குகிறாள் .
இரவு தொடர்ந்து தேய்கிறது.
தாராக்களும் ஆண் வாத்துகளும் பூத்தையலிடப்பட்ட திரைச்சீலைகளில் நறுமண தூபம் மங்குகிறது;
மெழுகுவத்தியின் மென் -கதிர்கற்றைகள் படபடக்கின்றன,
அவளது யோசனைகள் யாவும் நேசரை ஒட்டியதே,
தொலைவாய் பரந்தகன்று திரிதல்-
அவன் எங்குற்றான் என உரையாதிருத்தல்,
பொழியும் மழையின் முணு முணுப்பை அவள்
பலகனித் திரையின் புறத்தே
எவ்விடம் வாழையிலைகளில் சொட்டுமோ அங்கவள் செவியுறுகிறாள்


-Ku Hsiung -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 23 at 1:21am ·



சூனியக்காரி தனது வைனை ஊற்றும் பொழுது,
மேகங்கள் வானில் திரள்கின்றன,
பச்சை மாணிக்க அடுப்பில்
நறுமணக் -கரி எரிகிறது,
கடல்-கடவுளர்களும் மலை -ஆவிகளும்
யாவருமாய் தங்களது இருக்கையை ஏற்க வருகின்றனர்.
காகித நாணயங்கள் படபடவென ஒலிக்கின்றன, சாம்பலாக மாறுகின்றன
சுழற்காற்றினில் நர்த்தனம் புரிகின்றன.


நேச-நோய்மையின் மரத்தாலான யாழை மீட்டுகிறாள்,
பொன்னாலான பீனிக்ஸால் சிங்காரிக்கப்பட்டிருக்கிறாள்,
அவள் முணுமுணுத்த வண்ணமாய் காலத்தை தோற்கடிக்கிறாள்
தனது புருவங்களைத் திருகி:

வாருங்கள் , தாரகைகளே பேய்களே, விருந்தை அனுபவியுங்கள்.
ஆவித் தோற்றங்கள் உண்ணுகையில்,
மானுடன் நடுங்குகிறான்.
சுங் நான் மலைகளின் தாழ்வில் கதிரோன் மூழ்குகிறான்
ஆவிகள் புலனாகின்றன இருப்பினும் புலனாகாதிருக்கின்றன.
அவர்களது கடுஞ்சினத்தையும் அல்லாது அவர்களது இன்பத் துய்ப்பையும்
அவளது முகம் மட்டுமே பிரதிபலிக்கிறது.
பின்னர் எண்ணிலா தேர்கள் தமது புறப்பாட்டிற்கு
தயார்படுத்திக் கொள்கின்றன.

-Li Ho-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
December 22 at 12:22am ·



இலையும் மிலாறும் முதிய தருவிலிருந்து போயின,
காற்றும் உறைபனியும் அதற்கினி தீங்கிழைக்க இயலாது.
அதன் வெறுமைக் குழிவான வயிற்றில் ஒரு மானுடனுக்கான அறையுள்ளது,
வட்டமுறும் எறும்புகள் உரியும் மரப்பட்டையின் கீழ் தேடலுற்றுத் திரிகின்றன,
அதன் ஒற்றை உறைபவர், ஒரேயொரு காலைப் பொழுதே உயிர்த்திருக்கும் நிலக்குடை காளான்,
இனி ஒருபோதும் பறவைகள் மாலைப் பொழுதில் வருகைதரப் போவதில்லை,
ஆனால் அதன் மரம் கந்தக கற்றையை பொறியூட்டும்,
அதன் நெஞ்சகத்தில் வெறும்பாழாய் மட்டுமே இன்னும்
இருப்பதில் அது அக்கறை கொள்வதில்லை.


-Han Yu-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






Shanmugam Subramaniam
December 21 at 12:14am ·



செந்தாமரையின் வாசம் மங்குகிறது,
பாய் குளுமையை உணர்கிறது.
எனது ஆடையை தளர்த்துகிறேன் தனியாய் படகில் ஏறுவதற்கு.
மேகங்களின் வழியே செய்தியை விடுப்பவர் யார்?
அன்னத்தின்-வடிவாக்கங்கள் திரும்புகையில்
மேற்கு அறையை நிலவொளி நிறைக்கிறது,
பூவிதழ்கள் வீழலாம் நீரும் பாய்ந்தோடலாம்:
ஒரு தனிவகையான ஏக்கம்,
பெயரிடப்பெறா உளத்துயருக்கு பலியான இருவர்.
இந்த சிந்தனையிலிருந்து விடுபட வழியேதுமில்லை;
புருவங்களிலிருந்து அது சற்றே வடிகையில்
நெஞ்சில் அது பொங்கிப் பெருகுகிறது.


-Yi chien men-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 19 at 11:04pm ·



நான் கண்ட துறவி
ரீங்கார பறவைகளைச் சுவாசிக்கிறார்
திறந்த வாயின் வழியே,
விரல்களில் அவர் தேனீக்களை அணிந்திருக்கிறார்.


அவரது கேசம் கூலக் கதிர்கற்றைகளால் அடுக்கப்பட்டுள்ளது
அவைகள் பொன் -மஞ்சளாய் உள்ளன,
அவரது விழிகள் சிற்றலைகளாக உடைகின்றன
ஒரு கூழாங்கல்லால்.

அவர் பேசுகையில், அவர் பேசுகையில்
சுருண்டிருக்கும் வெள்ளியினில் வாய்மை பாய்கிறது
கதிரொளிக்கும் இறகுகளுக்கிடையே;

அன்பிற்குரிய ஒரு பல்பணியாளன்
குனிந்து, அளவிடுகிறான்,
அவையாவையும் அகழ்ந்தெடுக்கிறான்
புதிதாய் முகிழ்ந்த கிண்ணத்தில் .

தாரகைகள் அவனை ஒளிவட்டமிடுகின்றன
அவனது தேகம் பித்தளையால் ஆனது,
ஆயிரம் நகரங்களைக் கொண்டு
தைத்து அமைக்கப்பட்ட மேலங்கியை அணிந்திருக்கிறார்

அவரது இருப்பின் முன் வருவது
உருமாற்றத்திற்கு ஆளாவாதாகும்
பித்தப் பிதற்றலை வரவேற்பதாகும்
வெண்திராட்சை மதுவில் நீராடுவதாகும் -
எலும்புகள் கழுவப்பட்டு வெளிப்பட
ஹாவ்தோர்ன் புதர்செடிகளைப் பனிக்காலத்தில் முளைக்கச் செய்கிறார்:இளவேனில் பருவத்தில் ,
அவரது இருப்பிலிருந்து நீருற்றுகளை தெற்கு நாடிப் பாயச்சி ,
நவ- பள்ளத்தாக்குகளின் மாசுநீக்கி தூய்மையாக்குகிறார் .

-Paul Groves-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 19 at 1:14am ·



பூனை நடையிடுகிறது.
நான் செய்வது போல், அதுவும் கவனமாய் செவிசாய்க்கிறது,
தனது எஃகு தோள்களை நமது கதவுகளில் சாய்க்கும் காற்றுக்கு. பூனையின் உறுமல் அன்றி எனது குருதி, புயலின் இயற்கையாற்றலின் அச்சத்திற்கென மெல்லிழைவாய் ஒடுகிறது.
பிறகு இதுவே பெரும் வானிலையாக வருமென அவர்கள் சொல்கின்றனர்.
அறிகுறிகள் யாவும் தீங்காயிருந்தன,
கடற்பறவைகள் வெண்மையாய் வருகின்றன,
நெடுங்கால் நீர்ப் பறவைகள் குழுமுகின்றன,
செம்மறியாடுகளும் கூட இராப்பொழுதெங்கும் அழைப்பொலிக்கின்றன.
வனங்களில் ஜிப்ஸிக்கள் தங்களது நெருப்பினை மூட்டுகின்றனர்
அங்கு கிழக்கின் தாழ்புலத்தில்............ எப்போதும் ஒரு எச்சரிக்கை நிலவுகிறது.
மழைக் கொடுக்கு கொட்டுகிறது,
இலபனும் சிறுமர மஞ்சள்-மலர்ப் புதர்களின் கசையடிகள்
கெஞ்சும குடிலின் மேற்கூரையை வலிமையாய் அறைகிறது.
அறியும் -ஆர்வமுள்ள அமைதி, புயலிலில் கிளைத்து வருகிறது,
நம்மை இணைவிக்கிறது, நாம் வினையாற்றியவை நிலைக்குமா
என வியந்திருக்கும் தருணம் .
சிறு பண்ணைத் தருக்களின் கூட்டம் நெடிதுயர்ந்த மலையில் வீசும் ஆகஸ்ட் புயலை எதிர்கொண்டு நிலைக்குமா.
மலையின் குறுக்காய் ஓட
அங்கு உயிர்த்திருக்கும் யாவும் கவனமாய் செவிசாய்க்கிறது,
அதன் வீட்டை மெதுவாய் நடையிட, இதயம் துடிப்பற்றிருக்கிறது?


-Gillian Clarke -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






Shanmugam Subramaniam
December 18 at 2:02am ·



அவளது இல்லத்திற்கு நான் வருகிறேன்
ஒரு கூடை செந்நிற பூவிதழ்களுடன் நேசிக்க.
ஒரு நங்கையிடம் செல்லும் நான் எத்தகைய அறிவிலியென
ஆண்-நண்பர்கள் சொல்கின்றனர்,
வா, ஆடவனே,வா சுறாவே, வலிமையான வெண் சுறாவே,
நள்ளிரவில் வெதுவெதுப்பான கரிய பாறைகள் நெடுகிலுமாய்
வா கோல்ட் ஸ்நாப்பர் கயலே.
ஆனால் என் மனதைத் தீர்மானித்து நேசிக்க அவளிடம் வருகிறேன்.


அவளது ஆடை நீல- தும்பிகளால் அமைவுற்றுள்ளது
அவள் ஒவ்வொரு செவியிலும் ஒரு செந்நிற மணியை அணிந்திருக்கிறாள்
பச்சைநிற பல்லிகள் அவளது விழிகளில் ஓடுகின்றன
அவளது தேகம் கதிரவனில் உலர்ந்த வெட்டி வேர் நாணலின் நறுமணம் கமழ்கிறது
இனித்திருக்கும் நாரிழைகளை லினன் ஊடாக மதியவேளை முதலாய் இட்டிருக்கிறாள்
தனது வாயை அவள் பால் கொண்டு கழுவியிருக்கிறாள்
தனது இதழ்களை அவள் நறுமண 'பே' இலைகளால் துடைத்திருக்கிறாள்
தனது கைகால்களை அவள் பச்சைநிற கலபாஷிலுள்ள நீரினால் தூயாதாக்கி இருக்கிறாள்
இப்போது எனக்கவள் சில ப்ளம் கனிகளையும் கருஞ்சிவப்பு தோல் குடுவையிலிருந்து பனங்கள்ளையும் விரும்பி அளிக்கிறாள்.

-Ian McDonald-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






Shanmugam Subramaniam
December 17 at 3:04pm ·



லாமா படுக்கையில் அமர்ந்தார்
முதுகு சொரியும் மூங்கில் கழியுடன்
அவரது பொய்ப்பல்
பெரிய குவளைத் தண்ணீரில்
சூரிய ஒளிமிகு சாளர அடிக்கட்டையில்.......


-Allen Ginsberg -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 16 at 10:47pm ·



ஒவ்வொரு நூறு மணிநேரத்தில் ஒரு மணிநேரம்
நான் குழந்தைப் பருவத்தைப் பாடுகிறேன்,
பறவைகள், பூக்கள்;
என் பண்பை பாடலில் யார் வாசிக்கிறார்களோ
அதிக தீமையான யாதொன்றையும் என்னில் காணவியலாது.


ஆனால் எனது தொண்ணூற்று ஒன்பது மணிநேரத்தில்
எனது சிந்தைனைகள் எதுவென நான் உரைக்க மாட்டேன்:
அவையொன்றும் அத்துனை தூய்மையானதல்ல
குழந்தைப் பருவப் பாடலில் தனது வார்த்தைகளை கண்டறிய , பூக்கள், பறவைகள்.

-W.H.Davies-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
December 16 at 9:17am ·



இருப்பினும் உறைபனி இன்னும் தயங்கி நீடிக்கிறது,
மழுங்கிய தோலிழை விரல்களின்மீது ஐவி படர் கொடி இலைகள் குவிந்துள்ளன
ஒருபக்கம் தருக்களின் தண்டை வண்ணம் தீட்டுகிறது,
இங்கு இக்கதிரொளியால் ஒளியூட்டப்பட்ட சோலைவழியில்
பெயரிடப்படாத புத்தம் புதிய பொருட்கள் தோன்றுகின்றன,
இலை, பாளை, தண்டு,
பூமியின் நுண் துகள்கள் அதனோடு ஒட்டியுள்ளன
அவைகள் வந்த பாதையைக் காண்பிக்க,
ஆனால் எந்த மலரும் தன் நாமத்தை இன்னும் நவிலாதிருக்கிறது,
ஒரு பச்சை ஈட்டி
கீழ்புறமிருந்து மரித்த இலையைக் குத்துகிறது
பனிக்காலத்தை உரம்வாய்ந்த ஒற்றை வினையில் கொல்கிறது.


-Andrew Young -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
December 15 at 2:35am ·



தொலைபேசி இருளின் புறத்தே ஒலித்தது;
உனது குரலை எனது ஆடையற்றத் தோளில் அழுத்துகிறேன்
உடைபட்ட நம் நெடும் இன்மைக்கான காரணத்தை கேட்காது,
வார்த்தைகள் என் பின்புறத்தை கழுவிச் செல்லட்டும்.
கையாள அறிதான வேட்கையை காலைவரை தழுவிக் கொண்டு,
நம்மிடையே நிலவும் வெளி குறுகுவதை செவிகொள்கிறேன்,
எனது அறையின் கீழ் ஆழி புதிய ஒழுங்கற்றலை உறுதி செய்கிறது.


நானுன்னை ஐயுறவில்லை ஆனால்
உன்னைச் சுட்டும் நினைவை;
இப்போது உனக்காக
நான் ஏன் காத்திருக்கிறேன், தவிரவும்
உன்னைக் கொண்டிராதிருத்தலில் நிர்மானிக்கப்பட்ட
நம்பிக்கையை பரிசோதிக்கவும்;
அதையும் கூட நீ சொந்தமாக்கிக் கொண்டாய் என அறிந்து,
இவ்விசித்திர அணுக்கத்தின் ஊடே
நான் இப்புதிய முக்கியமின்மையை சலித்தெடுக்கிறேன்?

வெறிச்சோடிய உணவகத்தில் உனக்கெனவே தனித்துக் காத்திருக்கிறேன்,
கடந்தகாலம் எனது வெறித்தலுக்கு தன்னைச் சமர்ப்பிக்கிறது:
ஐரோப்பா நெடுகிலுமாய் குத்திட்டிருக்கும் மா- மேகங்கள்,
உன்னைப் பின்னிழுக்கிறது
ஒரு ஒத்த வெற்று நம்பிக்கைக்கு.
இன்னும் நான் ஏன் அந்த தெளிவிற்கு அவாவுறுகிறேன்,
துயிலும் எனது யாக்கையை உனது கூரிய கரங்கள் எழுப்ப?

பின்புறம் நீ வீழச்செய்யும் செந்நிற கட்டமிட்ட துணி
இருபது வருடங்களுக்கு முன்,
புறக்கனிக்கப்பட்ட பசிக்குத் தீனியிடுகிறது,
ஆழியின் வெண் ஒலியை கேட்ட வண்ணமாக
திகைப்பில் நீ அமர்ந்திருக்கிறாய் அத்துனை அண்மையில்,
உனது அங்கித்தொங்கலின் கீழ் காற்றை கரங்களாய் உணர்கிறாய்.

ஏறக்குறைய உன்னையவன் கண்ட ஒரு நிமிடத்திற்கு முன்.
அது எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறிருந்தது
சிறிய மாற்றங்கள் உன்னை ஆச்சர்யப்படுத்தின,
அகன்ற இன்மையை நெளிவடையச் செய்து.
உனது மதிப்பிடப்பட்ட ஏக்கத்தில்
ஆண்டுகளின் கண்ணோட்டத்துடன் மெச்சுகிறாய்,
அவனது பழக்கப்பட்ட பீதியை நீ பார்வையுறுகிறாய்
உன்னைக் கடந்தகாலத்திலிருந்து கிழித்தெடுக்கிறது
தொலைவின் பழக்கம்;
உனது நினைவுகள் யாவும் சுருங்குகின்றன
ஒரு குறுகலான மெய்யணைப்பில்.

-Andrew Motion-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




shanmugam Subramaniam

17 hrs ·



நான் நிலவை வெறுக்கிறேன், என்றாலும் பெரும்பாலானவர்களை அது மகிழ்விக்கிறது,
அவர்கள் கெக்கரித்து நகைக்கின்றனர் வெள்ளிக் கீற்றுகளைப் பற்றிப் பேசுகின்றனர்- உனக்குத் தெரியுமா!
அவள் சொல்கிறாள் நிலவின் தோற்றம் மக்களைப் உந்திப் பித்தாக்குகிறதென்று,
அந்த விஷயம் என்னை எப்போதும் அச்சுறுத்துகிறது.


கேடாய் நானைதை வெறுக்கிறேன் அது கொடூரமாகவும் வட்டமாகவும் பிரகாசமாகவும் உள்ள போது,
அதன் மூட-முகத்திலுள்ள தழும்பை உன்னால் இனமறியா முடியாது,
உனது இமை ரோமங்களைச் சாத்தும் தருணம் தவிர, இரவு முழுமையும்
வான் பச்சை வண்ணமாய் தோன்ற, இவ்வுலகு கோரமான புலம்.

நான் தாரகைகளை விரும்புகிறேன், குறிப்பாக பெருங்கரடி மண்டலத்தையும் 'W' தாரகையையும், வைர கணையாழியை ஒத்திருக்கும் ஒன்றையும்,
ஆனாலும் நான் நிலவை வெறுக்கிறேன் அதன் கல்லார்ந்த கோர வெறித்தலையும்,
எனக்குத் தெரியும் ஒருநாள் எனக்கது ஏதோவொரு பயங்கரத்தைச் செய்விக்கப் போகிறதென்று.

-Robert Graves-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




உனக்கது இப்போது தெரியவில்லையெனில்,
உனக்கது தெரியப் போவதே இல்லை.
அவளது வார்த்தைகள் அவளை அடையாளப்படுத்தின;
பரிச்சயமற்ற முத்தத்துடன் ஒரு அந்நியனின் வாய் அவளைத் தீண்டியது
பொருட்களைச் சேகரித்தபடியே ஒருவன் அறையை சுற்றினான்.


எதிர்பாராதவிதமாய், அவளது கனவு இருளினுள் மந்தமாய் நகர்ந்து தொலவுற்றது,
அவள் விழித்தாள் யாரோ ஒருவன் அருகில் அசைந்தான்.
அப்போது மணி என்ன? அது என்ன கிழமை?
திரைச் சீலைகள் அவளது முகத்தில் ஞாபகங்களாய் முகிழ்ந்தன..

-Andrew Motion-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
December 12 at 9:59am ·



வழக்கத்திற்கு மாறான ஒளியுடன் நாள் புலர்ந்த போது,
புதர் வரிசைகள் உறைபனியில் தனது அரை உயரத்தில் நின்றிருந்தன
கிராம வீதியில் வெண்மை கவிந்த பாதையில்
மழலையர் பாதங்களின்றி நடந்திருந்தனர்.


இப்போது அவர்களின் சுவாசமே வெதுவெதுப்பாய் வைத்திருக்க
உரக் -குவியல்கள் பண்ணையில் அம்மணமாய் உள்ளன
சுருங்கும் உறைபனியின் ஊடேயும்
மரித்த கோரைகளும் பூக்கும் முட்செடிகளும் துளிர்க்கத் துவங்குகின்றன.

-Andrew Young-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






Shanmugam Subramaniam
December 11 at 8:59am ·



பிரகாசமாய் மேலிருந்து ஒளியூட்டப்பட்ட,
எனது வட்ட அறையில் நான் அமர்ந்திருக்கிறேன்
குழைகாரையின் வார்ப்பு வானை பார்த்திருக்கிறேன
பதினாறு மெழுகுவத்திகளின் ஆற்றலுற்ற ஞாயிறையும்.


என்னைச் சுற்றிலுமுள்ள இருக்கைகள், மேசை, படுக்கை யாவும் ஒளியூட்டப்பட்டுள்ளன. நான் அமர்ந்திருக்கிறேன்
குழப்பத்தில் எனது கரங்களுடன் ஏது செய்வதென அறியாதிருக்கிறேன்.

உறைபனி படிந்த வெண் பனை-இலைகள் சாளர சட்டகங்களில் முகிழ்கின்றன.எனது மேலங்கியிலுள்ள கடிகாரம் உலோக சப்தத்துடன் துடிக்கிறது.

ஓ, அசைவற்றுத் தேங்கியுள்ள எனது நம்பிக்கையற்ற வாழ்வின் வெற்று இழிமையே!
இந்த பொருட்களைப் பற்றிய என் வருத்தத்தை யாரிடம் என்னால் உரைக்கவியலும்?

பின்னர், எனது முழங்கால்களைப் பற்றியபடியே,
நான் முன்னும் பின்னுமாக அசைந்தாடுகிறேன்,................
ஒரு மெய்-வசியத்தில் ஆழ்கிறேன்,
திடீரென்று நான் என்னிடமே கவிதையில் பேசிக் கொள்கிறேன்.

தொடர்ச்சியற்ற உணர்ச்சிமய வார்த்தைகள்!
அவை பொருளேதும் உணர்த்துவதில்லை.
ஆனாலும் சப்தங்கள் வார்த்தைகளைக் காட்டிலும் உண்மையாயிருக்கின்றன, வார்த்தை எதைக் காட்டிலும் கூடுதல் ஆற்றல் வாய்ந்திருக்கிறது.

இசை, இசை, இசை, தன்னையே எனது பாடலில் நெய்து கொள்கிறது, குறுகிய ,குறுகிய, வாள் என்னை ஊடுருவுகிறது.

நான் என்னிலும் மேலழுகிறேன், உயிர்ப்பற்ற எதார்தத்தின் மேலும், எனது பாதம் நிலத்தடியின் கனலிலும்,
புருவங்கள் நகரும் தாரகைகளிலும் உள்ளன.

அகல விரிந்த விழிகளுடன், ஒருவேளை அரவத்தின் விழிகளுடன், எனது பரிதாபமான பொருட்களைக் உன்னிப்பாய் காண்கிறேன்.
அதன் கட்டுக்கடங்கா பாடலைச் செவிமடுக்கிறேன்.

தாள லயத்தில் அறை முழுமையும் வட்ட நடத்தில் நகரத் துவங்குகிறது...................
யாரோ ஒருவன் பண்டைய யாழை காற்றினூடே என்வசம் கையளிக்கிறான்.

குழைகாரையின் வார்ப்பு வானும் பதினாறு மெழுகுவத்திகளின் ஆற்றலுற்ற ஞாயிறும் மறைந்துவிட்டன:
ஆர்ஃபியஸ் மென்னிழைவான கறுத்த பாறைகளில் நின்றிருக்கிறான்.

-Vladislav Khodasevich-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 10 at 10:11am ·



மீண்டும் ஒருமுறை , மீண்டும் ஒருமுறை உனக்கு நானொரு தாரகை,................

தனது நாவாயை பிழை கோணத்தில் ஒரு தாரகையின் மீது
எடுத்த கடலோடிக்குக் கடுந்துயர்;
அவன் பாறைகளின் மீதும் நீரடி மணற் கரைகளாலும் தகர்க்கப்படுவான்.


நெஞ்சத்தின் பிழை கோணத்தை என்மீது எடுத்த உனக்கும் கடுந்துயர்.
நீயும் பாறைகளின் மீது தகர்க்கப்படுவாய்,
பாறைகள் உன்னைக் கண்டு நகைக்கும் ,
நீ என்னைக் கண்டு நகைத்ததைப் போல்.

-Velemir Khlebnikov-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





தஞ்சை தவசி





Shanmugam Subramaniam
December 9 at 1:19am ·



கரையிலிருந்து படகுடன் பயணித்துவிட்ட துடுப்பு விடுத்துச் சென்ற சுவடு போல், தந்திக் கம்பியின் நடுங்கும் சப்தங்களை போல், மிடற்றொலித்து வெறியூட்டப்பட்ட ஒரு பறவையின் அழுகை, இளவேனில் வரையிலும் நமக்கு பிரியா விடையளிக்கிறது.

செவியுற இயலா வானொலியின் ஒலிபரப்பு போல் ,
தொலை பறத்தலிலுள்ள தூதுப் புறாக்களைப் போல்,
கவிதையின் இவ்வரி சுவாசத்திற்காக மூச்செறிகிறது- .
என்னைப் போலவே - இன்னமும் சுவாசிக்கிறது,
உன்னைச் சுட்டும் துயிலற்ற யோசனைகளில்;


ஆனால் இவையாவுமே விசனத்தின் செழிப்பு,
அதனுடன் நட்பார்ந்த இணக்கத்துடன் இருக்கிறேன்;
இன்னும் எளிமையாய் அதைப் பற்றி என்னை உரைக்கச் செய்தால், இன்னும் கூடுதலான எளிமையுடன் உரைப்பேன்.

பிரிதல் நிமிதத்தின் தீரத்தை பேசுகிறேன் ,
ஒருவரது விழிநீரைத் தன்னில் வைத்துக் கொள்ளும் அவசியத்தை நான் நவில்கிறேன். உனது கரங்களை முறுக்கி கட்டிலில் வீழ மாட்டாய், சுண்ணத்தைவிட வெளிறிய வெண்மையாய்.

ஆனால் நீ, என் அற்புத உளக் கலக்கம் ,
சிலசமயங்களில் வானத்தை பார்த்துக் கொண்டே நீ உரைப்பாய்:

”நிலவின் அதே பாதையையும் அதே தாரகைகளையும் அவன் காண்கிறான் பனிக்கட்டியால் ஆக்கியது போலும்”.

-Nikolay Tikhonov-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 8 at 1:46am ·



சாலைகளில் பனி வீழ்கிறது - வெண் கெமோமில் மலர்கள்.
ஒருவேளை சிறிது சிறிதாக , எங்கு வரவேற்கும் ஒளி ஜொலிக்குமோ அச்சாளரங்களை நான் அடைகிறேன்? .........

எனது களைத்த பாதங்களை கெமோமில் மலர்களின் மீது பாவுகிறேன்.


சாளரங்களின் வழியே நான் கைராட்டினத்தைக் காண்கிறேன்;
தாய் ஒரு பாடலை இசைக்கிறாள், ஒரு கொழு கொழு ஆண் பூனை,
நூலுடன் மகிழ்வாய் நீட்டித்து சன்னமாக உறுமுகிறது.
உள்மர நாரினால் நெய்த புரியின் இணைவிற்கு.
வெட்டுக்கிளி விதவையான சுண்டெலியை ஈந்துவிடுகிறது.

எத்துனை இனியது அடுப்பின் அருகிலுள்ள மரமேடையில் துயிலாழ்வது.............

பூனை என்னருகே படுத்திருக்கிறது, ஆழ் துயிலுறுகிறது.
புலர்காலையில் பாட்டனார் வழிப்போக்கரை நோக்கி தேனிக்களின் கூடு போல் முணுமுணுக்கட்டும்; அவர் வனவெளியில் -வீழ்த்தப்பட்ட அடிமரமொத்த நரை-கேசத்தவர்-
வெண் கெமோமில் மலர்கள்.

ஆனால் என்னாலும் சமாதானத்தை தீண்ட இயலுமோ!
எனது கைப்பையில் எஃகும் கந்தக குச்சிகளும் உள்ளன,

எங்கு கதகப்பான சொகுசும் கில்லி மலர்களும் தாயின் கூந்தலுடன் கோர்த்துப் பின்னப்பட்டுள்ளதோ, அங்கென் கன்னங்கள் ஆப்பிள் தருக்களைப் போல் ரோஜா வண்ண வெம்மையில் முகிழும்,

வாழ்க்கை- ஒரு பல்குரல் ஆழி- வழிப்போக்கனின் துயிலெழுதலில்
மேலெழுகிறது.
கவி யாவையும் ஏற்கிறான் - வோல்கா நதி அன்றி ரோன் நதி கரைகள் எதுவாயினும்.

வெண் கெமோமில் மலர்கள் சரிவுகளில் மெத்தன வீழ்கின்றன.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 6 at 8:45pm ·



ஆழியின் அலைகளில் இன்னிசை உள்ளது,
தனிமங்களின் மோதலில் இணக்கமுள்ளது.
ஒத்திசைவான இசைச் சலசலப்பு அசைந்தாடும் நாணலினூடே கடக்கின்றது.

யாவற்றிலும் உலைவிலா இணக்கம் உள்ளது,
இயற்கையில் முழுமையான ஒலியிணைவு இருக்கிறது;
நம் மருள் சுதந்திரத்தில் மட்டுமே பிணக்கிருக்கிறது.


எவ்விடத்திருந்து, எவ்வாறு, இப்பிணக்கு தோன்றியது?
பின்னர் ஏன்? பொதுவான ஒத்திசையில் ஆன்மா ஆழியுடன் சுருதி பேதமடைகிறது, எதற்கிந்த சிந்திக்கும் நாணல் முறையிடுகிறது.

பின்னர் ஏன், பூமியிலிருந்து துவங்கி அப்பாலைத் தாரகைகள் வரையிலும்,
வனாந்தரத்தில் அழும் குரலிற்கு இதுவரை பதிலேதும் இல்லை-
ஆன்மாவின் கசப்புறும் கண்டனம்?

-Fedor Tyutchev -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)



Shanmugam Subramaniam
December 6 at 12:55am ·



வைனும் களியாட்டமும் மறந்து போயின, போர்க்கவசமும் வாளும் பின்னே விடப்பட்டுள்ளன; தன்னந்தனியாக நான் இருளுற்ற நிலவறையில் இறங்குகிறேன், ஒரு விளக்கைக் கூட ஒளியேற்ற விருப்பற்றிருக்கிறேன்.

நீடித்த கிரிச்சொலியுடன் கதவு திறக்கிறது: பல காலங்களாக அதனூடே யாருமே நுழைந்ததில்லை.
கதவிற்கு அப்பால் இருண்டு நீருற்றிருக்கிறது,
சாளரம் உயர்வாகவும் குறுகலாகவும் உள்ளது.


அவனது விழிகள் இருளுக்கு பழக கற்றன;
இருண்மை வழியே விநோதமான குறிகள் கவிகை மாடங்கள் சுவர்கள், தரை மீது வெளித் தோன்றுகின்றன.

ஊடுபாவான இடைப் பின்னலில் அறிதலைக் கடந்த குறிகளை நெடும் பொழுதாய் அவன் வெறிக்கிறான்,
யாவையும் - காணும் மரித்தல் அவனது விழிகளுக்கு அறிவொளியைக் கொணர காத்திருக்கிறான்.

-Fedor Sologub-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
December 5 at 12:35am ·



ஆண்டவரின் நிலா வானத்து உயர்வில் உள்ளது ,
நான் இழிவாய் உணர்கிறேன். மெளனத்தில் ஒரு துயருறு நாளை எதிர்கொண்டேன்.

என்னைச் சுற்றிலும் எனது தோழர் ஒருவரும் குரைக்கவில்லை. சுற்றிலும் உள்ள யாவும் சலிப்பிலும் அச்சமூட்டும் ஒசையின்மையிலும் மூழ்குகிறது.


பிரகாசமாய் ஒளியூட்டப்பட்ட சாலைகள் அத்துனை வெறிச்சோடி மாய்ந்திருக்கிறது.
நடை சத்தம் அல்லது பாதங்களின் நெரித்தல் ஒளியென
உன்னால் செவியுற இயலாது - எதையுமே.

நான் பூமியை அச்சத்துடன் மோப்பமிடுகிறேன், இடரை எதிர்நோக்கி.
யாரோ ஒருவரது கால்தடம் சாலை நெடுகிலும் மங்கலாய் வாடையடிக்கிறது.

மாந்தரை விழிக்கச் செய்ய அவசர -கதி காலடியோசை எங்குமில்லை. நீள் எதிர்பார்த்தலின் வழிப்போக்கர் யாராயிருக்கக் கூடும் அவர் நண்பரா அன்றிப் பகைவரா?

குளிர்ந்த நிலவின் கீழ் நான் ஒற்றையாக உள்ளேன். இல்லை,
என்னால் அதை தாங்கவியலாது -
நான் சாளரத்தின் அருகே உளையிடத் துவங்குவேன்.

ஆண்டவரின் நிலா வானத்து உயர்வில் உள்ளது..........................

-Fedor Sologub-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 4 at 12:05am ·



நமது வறிய கிராமங்கள் ஏதாயிருக்கின்றன,
காலம் மற்றும் வெளியின் முழுமை ஏதாயிருக்கிறது?
பிதாவின் வசம் பல மாளிகைகள் உள்ளன, ஆனால்
அவற்றின் பெயர்கள் நாம் அறியாதனவே.


ஆனால் வானுலகின் பேரின்பங்கள் குறித்த முன்னுணர்தல் எனக்குள்ளது,
அன்றி வாழ்வெனப்படுவது ஒரு கனா;
நான் மருள்-தோற்ற இன்னிழைவைத் துறக்கிறேன்
காலத்தின் வாதையை மறுதலிக்கிறேன்.

நலிதலும், துயருறுதலும், நசிதலும் என - நீ
எனக்கொரு கொடிய மாலையைத் தொடுத்திருக்கிறாய்.
வாக்களிக்கப்பட்ட புத்துயிர்ப்பு ஒருபோதும் பூமிக்கென
எங்குமே நிறைவேற்றம் காணாது.

-Fedor Sologub-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
December 3 at 9:04pm ·



அந்தி வானில் புயல் ,
சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்...........

ஆழியின் மீதும் எண்ணங்கள் மீது புயல்-
வதைக்கும் எண்ணிறந்த எண்ணங்கள்.


ஆழியின் மீதும் எண்ணங்களின் மீதும் புயல் -
எண்ணங்களின் உயர்ந்தெழும் சேர்ந்திசை -
கரு முகிலின் பின் முகிலாய்,
சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்..........

-Afanasy Fet -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




Yaazh Mozhi




மனிதத் தன்மையற்ற அவ-விதியுடன் வாதிட ஏதுள்ளது?
என்ன போராட்டம் ?
இவையாவும் மருள் தோற்றம்.

ஆனால் இந்த வெளிர்-நீல அந்தியே இன்னும் என் ஆளுகையின் புலமாயிருக்கிறது.
வானம்: கிளைகளுக்கிடையே சிவந்தும்,
விளிம்புகள் முத்து-வர்ணம் பூண்டும் ...............
ஒரு நைட்டிங்கேல் பறவை லில்லாக் புதரில் கானம் இசைத்திருக்க,
ஒரு எறும்பு புல்லின் மேல் ஊர்கிறது:
இது யாரோ ஒருவனுக்கு பயனாகும்.


ஒருவேளை காற்றில் நான் சுவாசிப்பதிலும் கூட ஏதோவொரு பயனிருக்கவே கூடும்,
எனது பழம்-மேலங்கியின் இடதுபுறம் சூரியாஸ்தமனத்தில் நீராடியுள்ளது ,
அதன் வலதுபுறம் தாரகைகளில் அமிழ்கிறது.

-Georgy Ivanov-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)