Saturday, 30 July 2016

ந. முத்துசாமி By சாரு நிவேதிதா

ந. முத்துசாமி
By சாரு நிவேதிதா
First Published : 31 July 2016 12:00 AM IST
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/07/31/ந.-முத்துசாமி/article3554989.ece
மூத்த எழுத்தாளர்களில் நான் யார் மீதாவது உணர்வுபூர்வமான உறவு வைத்திருக்கிறேன் என்றால் அது ந. முத்துசாமியின் மீதுதான். ஒருமுறை என்னுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தேன். ஏழெட்டு ஆண்டுகள் இருக்கலாம். அவர் பேசியபோது ஒரு விஷயம் சொன்னார். ‘பல ஆண்டுகளுக்கு முன்பு சுபமங்களாவின் ஆண்டு விழாவில் பேசும்போது சாரு என்னைப் பற்றிக் கிண்டலாகப் பேசினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்.’

அதைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய முதல் உணர்வு, ஆச்சரியம். ‘நாமெல்லாம் ஒரு உதவாக்கரை. நாம் பேசியதைப் போய் இவர் ஞாபகம் வைத்திருக்கிறாரே!’ பிறகு நான் பேசியபோது முத்துசாமிக்குப் பதில் கூறினேன். நான் உங்களை என் தந்தையை விடவும் மேன்மையான இடத்தில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் என் அப்பனைத் திட்டவும் கிண்டல் செய்யவும் எனக்கு உரிமை இருக்கிறது என்றே நினைக்கிறேன். காரணம், எழுத்தால் ஜீவித்துக் கொண்டிருக்கும் நான், எழுத்தையே வாழ்க்கையின் அர்த்தமாகக் கொண்டிருக்கும் நான், என் எழுத்தின் மொழியை எடுத்துக்கொண்டது உங்களிடமிருந்து. மொழியை மட்டுமல்ல; எழுத்தின் உயிரையும்தான். என்னுடைய மொழி உங்களுடைய மொழி என்பதால் நீங்கள் என் தகப்பன். உங்களைப் புண்படுத்தியிருந்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.’

சுபமங்களா விழாவில் நடந்தது என்னவென்றால், நவீன நாடகம் என்ற பெயரில் மக்களுக்குப் புரியாமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாகப் பேசினேன். மக்களுக்குக் கூட வேண்டாம்; பல உலக நாடகங்களைப் பார்த்திருக்கும் எனக்கே உங்களுடைய நாடகங்கள் அந்நியமாக இருக்கின்றன. இதுவே என் பேச்சின் சாரம். இதில் நான் குறிப்பிட்டது கூத்துப் பட்டறையின் நாடக ஆக்கங்களையே தவிர முத்துசாமியின் நாடகப் பிரதிகளை அல்ல. ஆனால் என் பேச்சில் இந்தத் தெளிவு இருந்திருக்காது என்பதால் முத்துசாமியின் வருத்தம் நியாயமானதுதான். நாடகம் என்ற பெயரில் ஏதோ காமா சோமா என்று அசட்டுத்தனம் நடந்து கொண்டிருக்கும் சபா நாடகத் தமிழ்ச் சூழலில் முத்துசாமியின் நாடகப் பிரதிகள் தான் முதல் முதலாக நாடகம் என்றால் இதுதான் என்று தமிழுக்கு அறிமுகப்படுத்தியவை. அவரது நாடகப் பிரதிகள் உலகில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாடகப் பிரதிகளுக்கு நிகரானவை. ஆனால் இது பற்றியெல்லாம் விரிவாகப் பேசாமல் நவீன நாடகங்கள் பார்வையாளர்களிடமிருந்து அந்நியமாக இருக்கின்றன என்பதை மட்டுமே கவனத்தில் வைத்துப் பேசிவிட்டேன். மேலும், சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ள இளைஞர்கள் கூத்துப் பட்டறையை சினிமாவில் சேர்வதற்கான ஒரு பயிற்சிப் பள்ளியாகப் பயன்படுத்துவதும் எனக்குள் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. முத்துசாமியின் நாடகங்களுக்கு நாம் பின்னால் வருவோம்.



இப்போது முத்துசாமியின் சிறுகதைகள். பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு நிகரான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது ‘நீர்மை’. 1972-ல் ‘கசடதபற’ இதழில் வெளிவந்தது அந்தக் கதை. பிறகு ‘நீர்மை’ என்ற தலைப்பிலேயே தொகுப்பாக 1984-ல் க்ரியா வெளியீடாக வந்தது. அந்தத் தொகுப்புக்கு நடேஷ் வரைந்த முகப்புக் கோட்டோவியத்தில் தெரியும் முத்துசாமியின் முகத் தோற்றம் அதியற்புதமான ஒன்று. எனக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் ஆதிமூலம் தீட்டிய காந்தியின் சித்திரம் நினைவு வரும்.

***

25 ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி வாலாஜா ரோட்டில் பாரகன் டாக்கீஸுக்கு அருகில் குடியிருந்தார். எதிரே கலைவாணர் அரங்கம். இப்போது பாரகன் டாக்கீஸ் இருந்த இடத்தில் பனிரண்டு மாடிக் குடியிருப்பு உள்ளது. சமீபத்தில் கூட பத்தாவது மாடியிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை கீழே விழுந்து இறந்தது. முத்துசாமியின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஒருநாள் இந்தப் பாரகன் டாக்கீஸில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பார்ப்பதற்கு மைலாப்பூரிலிருந்த கபாலி தியேட்டர் மாதிரி இருக்கும்.

முத்துசாமியின் வீடு முதலாவது மாடியில் இருந்தது. மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் மிகவும் குறுகலாகவை. வளைந்து வளைந்து ஏற வேண்டும். அந்த வீட்டில் முன்பு க.நா.சு. குடியிருந்ததாகவும் பிறகு அவர் தில்லிக்குக் குடிபெயர்ந்த சமயத்தில் முத்துசாமியைக் குடியமர்த்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு நான் சின்மயா நகருக்குக் குடிபோனதும் நான் இருந்த வீட்டுக்கு இரண்டு தெரு தாண்டி நடேசன் நகரில் முத்துசாமியின் வீடு இருந்தது. வாலாஜா ரோட்டிலேயே பழக்கம் என்பதால் முத்துசாமியின் மனைவியை அம்மா என்றுதான் அழைப்பேன். அவரும் என்னுடன் வாஞ்சையாகப் பேசுவார். என்னை ஒருமையில் அழைக்கும் ஒருசில பெண்மணிகளில் அவர் ஒருவர்.

சின்மயா நகர் வீடு கருங்கல் வீடு. சென்னையில் நான் பார்த்த ஒரே கருங்கல் வீடு முத்துசாமி வீடுதான். அதில் ஒரு புராணிகத் தன்மை தெரியும். ஏதோ ஒரு ரிஷியின் குடில் போல் தோற்றம் தரும். வாசலில் ஓர் ஊஞ்சல் தொங்கும். நடேஷ் வரும் வரை அந்த ஊஞ்சலில் ஆடுவது என் வழக்கம். (நடேஷைப் பார்க்கத்தான் போவேன்.) நடேஷ் வந்த பிறகும் என் ஊஞ்சலாட்டம் தொடரும். அப்போதெல்லாம் முத்துசாமி என்னை எதிர்கொள்வது எப்படி இருக்கும் தெரியுமா? உங்கள் மகனின் வகுப்புத் தோழன் மகனைப் பார்க்க வரும்போது நீங்கள் அவனை எப்படிப் பார்ப்பீர்களோ அதே போன்ற வாத்ஸல்யம் அவரது பார்வையிலும் பேச்சிலும் இருக்கும். முத்துசாமியிடம் எப்போதுமே கர்வம் இருக்காது. எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். எனக்கும் நடேஷுக்கும் பதினைந்து ஆண்டு வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் பள்ளித் தோழர்கள் போலவே பழகுவது வழக்கம்.



***

உலகில் பிராமண குலத்தைப் போல் பெண்களை வதை செய்த வேறு குலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்து வயதில் திருமணம் நடக்கும். அப்போது ‘கணவனின்’ வயது எட்டு இருக்கும். அவளுக்கு ஆறு வயது ஆகும்போது ‘கணவன்’ இறந்து விடுவாள். இவள் ஆறு வயதிலேயே விதவையாகி விடுவாள். அதோடு அவள் வாழ்வு அவ்வளவுதான். எத்தனையோ பக்கங்கள் இந்த வேதனைக் கதைகளை எழுதியிருக்கிறார் க.நா.சு. கணவன் போனதுமே தலையை மொட்டையடித்து, சமூக விலக்கு கொடுத்து விடுவார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பிராமண வீடுகளிலும் வாசல் திண்ணையிலோ ஆளோடியிலோ ஒரு வயதான பாட்டி படுத்திருப்பார். வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கும். கணவன் இறந்து அரை நூற்றாண்டு ஆகியிருக்கும். மொட்டையடித்து காவிப் புடவையைக் கொடுத்து விடுவார்கள். புடவையால் தலையை மூடிக் கொள்ள வேண்டும். அந்தப் பெண் எதிரே வந்து விட்டால் காரியம் விளங்காது. ஊரே மொட்டைப் பாப்பாத்தி என்று கரித்துக் கொட்டும்.

அப்படி ஒரு ‘மொட்டைப் பாப்பாத்தி’யின் கதைதான் ‘நீர்மை’. கதையின் அடிச்சரடு காமம்தான். மறுக்கப்பட்ட காமம். காமத்தின் இல்லாமை. ‘அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூற்றுக்கு மேல். அப்போது எனக்குப் பதினைந்து வயது...’

‘அடுப்பங்கரை தயிர் கடையும் தூணில் முடிந்திருக்கும், மத்து இழுக்கும் கயிற்றை நாங்கள் அம்மாவுக்குத் தெரியாமல் விளையாட அவிழ்த்துக் கொண்டு வந்து விடுவோம். அது நாள்பட்டு, இழுபட்டு, வெண்ணெய்க் கை பட்டு, திரித்தது என்பதை விட, பயிரானது என்று இருக்கும். அதை இவன் (கதைசொல்லியின் தம்பி) கழுத்தில் போட்டு அக்குளுக்கடியில் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவனை வண்டி மாடாக ஓட்டுவது எங்கள் விளையாட்டு. அவன் எட்டுக் குளம்புப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடுவான். முடிவில் மாடாகிக் களைத்துப் போவான்.’

கதைசொல்லி அப்போது கால்சட்டை கூடப் போடாத பொடியன். அதனால் அவனை அவள் ‘கண்டாமணி’ என்றுதான் அழைப்பாள். காரணம், இயற்கையாகவே அவனுக்கு அது கொஞ்சம் பெரிதாகத் தொங்கிற்று. வெகுநாள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் பருவ இயல்புக்குச் சுருங்கிற்று. இதே சொல்லை, வாக்கியமாக்காமல், ஓடும்போது அவளைச் சந்திப்பது ஒத்துக் கொண்ட போதெல்லாம் சொல்லிவந்தாள். அவள் அப்போது சந்தோஷப்பட்டிருப்பாள். சிரித்துக் கூட இருக்கலாம்.

‘சிறுகச் சிறுக மாறி வந்த அவள் முகத் தோற்றத்தை ஊர் காண முடியாமல் போய்விட்டது. நினைவில் இருப்பது எந்த வயதின் சாயலென்றும் தெரியவில்லை. பிறர் நினைவில் எந்தச் சாயலில் இருக்கிறாள் என்பதை எப்படி ஒத்துப் பார்ப்பது? அவள் பொதுவில் பெயராக மிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.’
மு. நடேஷ்
கதைசொல்லி கால்சட்டை போட ஆரம்பித்த பிறகு அவள் அவனை கண்டாமணி என்று அழைப்பதை நிறுத்தி விடுகிறாள். ஊராருக்கு அந்தப் பெண் ஆச்சரியமற்றவளாக மாறியிருந்தாள்.

கதைசொல்லியின் பெயர் கண்ணன். நடேசய்யர் மகன். ஊர் புஞ்சை. பத்து வயதில் வீணானவளின் பிறந்த வீடும் புஞ்சைதான். புகுந்த ஊரில் வாழ்ந்த அனுபவம் இல்லாமல் பிறந்த வீட்டிலேயே வயதாகிக் கிழவியானவள். கண்ணனின் பாட்டிக்கும் அவளுக்கும் சம வயது. முப்பது ஆண்டுகள் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. அவளுடைய நாற்பதாவது வயதில் தந்தை இறந்து போன போதுதான் வெளியே வருகிறாள். யாரையும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. யாருக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை.

‘அவள் வெளியில் வந்ததும் தவிர்க்க முடியாமல் நேர்ந்ததுதான். அவளுடைய தந்தை இறந்த தினத்தன்று அவள் வெளியில் வந்தாள். பிரேதம் எடுத்துக்கொண்டு போன பிறகு கூட்டத்திலிருந்து மிரண்டு பயந்து அழுது ஓடிப் போய்ச் சாலைக்குளத்திலே விழுந்தாள். அவளைக் கரையேற்றி காவிரிக்கரைக்குக் கொண்டுபோக பெரும்பாடு பட்டார்களாம். அவளை அணைத்து அழைத்துப் போனவர்களில் எங்கள் பாட்டி ஒருத்தி. துக்கத்தினால் அன்றி, தொடு உணர்ச்சிக்கே அஞ்சியவளாக, பாட்டியை அடையாளம் காணாதவளாக மிரண்டு பார்த்திருக்கிறாள் அவள்.’

கண்ணனின் அம்மாவிடம்தான் தினம் வந்து பாலோ தயிரோ வாங்கிக் கொண்டு போவாள். அந்தக் காட்சி முத்துசாமியின் வார்த்தைகளில்:

‘அவள் சாலைக்குளத்திலிருந்து கரையேறிய வேகத்தில் வந்திருப்பாள். ரேழி வாயிற்படியைத் தாண்டி தாழ்வாரத்தின் முனையில் சின்னத் திண்ணையில் ஓரமாய் நிலைப்படியில் சாய்ந்து கொண்டு காத்து நிற்பாள்....

அவள் நிற்கும் இடம் தண்ணீரும் தெரு மணலும் சேர்ந்து குழம்பிப் போயிருக்கும். எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய பழைய நார்மடிப் புடவையோடு தவிர்க்க முடியாமல் தெரு மண்ணையும் பாதங்களில் அப்பிக் கொண்டு வந்திருப்பாள். நின்ற சந்தர்ப்பத்தில் புடவையின் நீர் வடிந்து கால் மண்ணைக் கழுவி விடும். மண் சிமெண்டுத் த்ரையில் தங்கி நீர் பிரிந்து முற்றத்திற்கு ஓடும்.’

கணவனைப் பத்து வயதில் இழந்து, அதற்குப் பிறகு வீட்டை விட்டே வெளியில் வராமல், நாற்பது வயதில் தகப்பனை இழந்து, அதிலிருந்து தான் சாகும் வரை எப்போதும் குளத்திலேயே பாசியைப் போல் வாழ்ந்து செத்துப் போன ஒரு பெண்ணைப் பற்றிய கதை ‘நீர்மை’. கதையில் ஒரு வார்த்தையில் கூட அவளுடைய தேகத்தின் வாதை எழுதப்படவில்லை என்றாலும் கதையின் அடிச்சரடாக இருப்பது அவள் தேகத்தின் விவரிக்க முடியாத காமம்தான். பத்து வயதில் விதவையானவள். நாற்பது வயது வரை அந்நியர்களையே பார்த்திராதவள். அப்படிப்பட்டவளுக்குக் காமம் என்றாலே என்னவென்று புரிந்திருக்காது. தன் தேகம் என்ன சொல்கிறது என்பதைக் கூட அவளால் அனுமானித்திருக்க முடியாது.

அவளைத் தண்ணீர்ப் பிசாசு என்றே ஊரார் சொல்கிறார்கள். ஒரே ஒரு நாள் கண்ணனும் அவனை ஒத்த பிள்ளைகளும் அவளை அவளுடைய வீட்டில் காண நேர்கிறது. கதையில் வரும் அந்த இடத்தின் அமானுஷ்யத் தன்மை உலக இலக்கியத்திலேயே அபூர்வம்...

(தொடரும்)


ந. முத்துசாமி - பகுதி 2




By சாரு நிவேதிதா



First Published : 07 August 2016 12:00 AM IST

அந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளத்துக்குச் சென்று விடுவார்கள். அப்போதுதான் ஆண் பார்வை படும் முன் திரும்பலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக் கொண்டு விடலாம். தனியாகப் போகாமல் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் போகும் போது இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில் கூட நம் கதையின் நாயகியான ‘தண்ணிப் பிசாசு’ குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும்.

‘நீர்மை’ கதையைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் நினைவு வரத் தவறுவதில்லை. ‘நீர்மை’யை ஒரு சினிமாவாக இயக்கினால் அது ஒரு பெர்க்மன் ‘கிளாஸிக்’ போல் இருக்கும். அந்த அளவு துயரம், அமானுஷ்யம், தனிமை, நுணுக்கமான விவரம், செவ்வியல் தன்மை எல்லாம் நிறைந்தது ‘நீர்மை’.

அந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகி மாட்டுக் கொட்டகையில் தங்கியிருக்கும் பெண்களை அடிக்கடி பிசாசு பிடித்துக் கொள்வதுண்டு. ‘நீர்மை’யிலும் அப்படி ஒரு இடம் வருகிறது. ‘விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளியமரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளை, பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் குழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தலையில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்து விட்டுப் படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்த மாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசுக் கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்... பிசாசுக் கருவை விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள்.

வீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர், வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர் காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்திருந்தால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும் வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.’

கிருஷ்ண ஜெயந்திக்குக் குழந்தைகள் ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடியபடி வீடு வீடாக எண்ணெய் வாங்கப் போகிறார்கள். அவள் வீடும் வருகிறது. நூறு வருஷத்திற்கு முந்திய வீடு. ‘குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள். அவை சித்திர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்த தச்சன், கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்த திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும் போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போலச் சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியில் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்பிடி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை, காயம்படும் போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போகும் போதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்கும் அவை, காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.’



இப்படியே இன்னும் இரண்டு பத்திகள் நுண்ணிய விபரங்களைக் கொண்டு நமக்குக் கதையைச் சொல்கின்றன. அடுத்து:

‘ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போலக் கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.

முற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி, கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந்தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.

நாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறிய போது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டி விட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பெண்களின் வழக்கம்போல் அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.’

இப்படியே விவரணங்களாக நான்கு நீண்ட பத்திகள் தொடர்கின்றன. அடுத்து:

‘எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றி விட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழ் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயணப் புத்தகங்கள் போலும், ஓலைச் சுவடிகள் போலும் புழுதி படிந்த கும்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கை படாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.

ஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒரு மாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்டதற்கு மற்ற குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.

இன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக் கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்பவில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருந்தது.

‘கொஞ்சம் எண்ணெய் ஊத்தறேளா?’ என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.

அவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச் சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்றுப் பட்டு, ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

விளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.

நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
‘சீசந்தி அம்பாரம்... சிவராத்திரி அம்பாரம், பட்டினி அம்பாரம், பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.

‘ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப் போவுது?’ என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.

பூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.’

அவளைப் பொறுத்தவரை காலமே உறைந்து போய் விட்டது என்பதை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் முத்துசாமி. கதைசொல்லியான கண்ணனின் அம்மாவின் கதை இந்தக் கதையிலேயே மற்றொரு உபகதை.

***

இப்போதெல்லாம் ஆண்டு தோறும் நடக்கும் புத்தக விழாவுக்காக அவசர கோலத்தில் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் புத்தகங்களைக் கண்டு மிகவும் துக்கப்படுவது என் வழக்கம். பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியும், எங்கே புதிய புத்தகம் வராவிட்டால் நம்மை எல்லோரும் மறந்து விடுவார்களோ என்ற அச்சமும் பீடிக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். இந்த நிலையில் ‘நீர்மை’ தொகுப்புக்கு ந. முத்துசாமி எழுதிய முன்னுரையை நாம் வாசிக்க வேண்டும். அவர் சொல்கிறார்:

‘இந்தக் கதைகளை எல்லாம் எப்படி எழுதினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆர்வம் குன்றாமல், வேண்டியது வருகிற வரையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு கதையை நான்கைந்து முறை கூட எழுதி இருக்கிறேன். எழுத எழுதத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்துக் கொள்வேன். எத்தனை முறை அதைப் படித்திருப்பேன் என்று தெரியாது. கதையின் ஆரம்பம் கதை முடிகிற வரையில் தொடர்ந்து படித்துக் கொண்டு வரப்படுவதால் அது அதிக முறை படிக்கப்பட்டிருக்கும். மிகவும் குறைந்த முறை படிக்கப்படுவது கதையின் முடிவாக இருக்கும். முடிவு திருப்தி தருகிற வரையில் படிக்கப்படும். என்றாலும் கடைசியில் இருக்கிறபடியால் அதைப் படித்த தடவைகள் ஆரம்பப் பகுதியைப் படித்த தடவைகளை விடக் குறைவாக இருக்கும். தொடர்ந்து எழுதிக் கொண்டு போகிற போது படித்துப் படித்து, விரும்புகிற சப்த ஓட்டமும் கதை ஓட்டமும் கிடைக்கிற வரையில் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். பகுதி பகுதியாகத் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். திருத்தி எழுதப்பட்ட பகுதிகளை எறியாமல் வைத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் திருத்தி எழுதுகிற போது ஆரம்பத்திலிருந்து எழுதுவேன். மேலும் இன்னொரு திருத்தம் வருகிற போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து. இப்படித் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறபோது கதை முடிந்தவுடன் பார்த்தால் ஏராளமான தாள்கள் குவிந்து போயிருக்கும். இதில் முழுதாக, முழுக் கதையாகத் திருத்தப்பட்டதும் சேரும். எழுதப்பட்ட பின்னர் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் அது எடுத்துப் படித்துப் பார்க்கப்படும். அப்போது திருப்தி இல்லையென்றால் மீண்டும் தொடங்கி விடுவேன். அவன், அவள், அது என்று படர்க்கையில் ஒருமுறை. நான் நீ, அவன், அது என்று தன்மை முன்னிலையில் ஒருமுறை. ஒரு கதையை எழுதுவதற்குச் சில மாதங்கள் கூட ஆகும். ‘நீர்மை’ அப்படித்தான் எழுதப்பட்டது. எழுதி எழுதி என் மனைவியிடம் படித்துக் காண்பித்து அவள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் கூட, விடாமல் மீண்டும் திருத்தித் திருத்தி எழுதி முடிக்கப்பட்டது அது. அதற்காகவே அவள் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன் என்பாள். நன்றாக இருக்கிறது என்று சொன்னால் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். நன்றாக இல்லை என்றாலும் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். இதற்கு அபிப்பிராயம் எதற்கு என்பாள். நான் அவளையா கேட்கிறேன். என்னைக் கேட்டுக் கொள்கிறேன். என்னிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதுதான் முடிவாக இருக்கிறது...’

‘சி. மணியிடம் ‘நீர்மை’ படித்துக் காண்பிக்கப்பட்டு அவர் சொன்ன யோசனைகளின் பேரில் திருப்பித் திருப்பி எழுதப்பட்ட கதை. படர்க்கையிலும், தன்மை முன்னிலையிலும் மாற்றி மாற்றி எழுதப்பட்ட கதை. கதை சொல்பவனின் தன்மை, முன்னிலை. ‘நீர்மை’யின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டி விடப்பட்டிருக்கின்றன அதற்கு...’

(தொடரும்)
ந. முத்துசாமி - பகுதி 3


By சாரு நிவேதிதா


First Published : 14 August 2016 12:00 AM IST
இன்றைய தினம் பதினைந்து வயதாகும் பாலகன் ஒருவனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆப்பிள் மடிக்கணினி, ஆப்பிள் கைபேசி என்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவனைத் திடீரென்று கால எந்திரத்தின் மூலம் 1960களில் கொண்டு போய் விட்டால் எப்படி மருண்டு போவானோ அதே போன்றதொரு மருட்சி எனக்கு தமிழ் நாடகங்களைப் பார்த்தபோது ஏற்பட்டது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டும். 1978-லிருந்து 1990 வரை தில்லியில் இருந்த காலத்தில்தான் உலக இலக்கியமும், கலையும், சினிமாவும் பயின்றேன். கலைகளிலேயே ஆகத் தீவிரமானது நாடகம். ஏனென்றால், அது நம் கண் முன்னே நிகழ்த்தப்படுகிறது. எடுத்த எடுப்பில் அறிமுகமானது ஜான் ஜெனேயின் நாடகங்கள். (‘வேலைக்காரிகள்’, ‘டெத்வாட்ச்’) ‘டெத்வாட்ச்’ நாடகம் இரண்டு கைதிகளுக்குள் இன்னொரு கைதி மீதான தன்பாலினக் காதலால் ஏற்படும் போராட்டம் பற்றியது. பிறகு ஸ்பானிஷ் நாடகாசிரியர் கார்ஸியா லோர்க்கா. அதற்குப் பிறகு அறிமுகமானவர்கள்தான் சாமுவல் பெக்கட், ப்ரெக்‌ஷ்ட் எல்லாம்.

தில்லி மண்டி ஹவுஸிலேயே தேசிய நாடகப் பள்ளியும் அமைந்திருந்ததால் மாதம் ஒருமுறை உலகின் மிகச் சிறந்த நாடகாசிரியர்களின் நாடகங்களைப் பார்த்து விட முடிந்தது. இந்த தேசிய நாடகப் பள்ளியைச் சீரமைத்தவர் இப்ராஹீம் அல்காஷி. இப்போது தொண்ணூறு வயது நிரம்பிய அல்காஷி இந்திய நவீன நாடகத்தின் பிதாமகராகப் போற்றப்படுபவர். தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா கோட்டையில் அவர் அரங்கேற்றிய ‘அந்தா யுக்’ என்ற நாடகத்தைப் பற்றி 1980களில் கண்கள் விரியப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் தில்லி சென்றபோது அவர் தில்லி நாடகப் பள்ளியிலிருந்து கிளம்பி விட்டார். நான் அங்கே இருந்த பன்னிரண்டு ஆண்டுகளிலும் பார்த்த நாடகங்கள் மட்டும் அப்படி அப்படியே காட்சி ரூபமாக என் ஞாபகத்தில் நிற்கின்றன. அதுதான் நாடகக் கலையின் விசேஷம் போலும்.

 



அல்காஷியை அடுத்து தில்லியில் மிகப் பெரிய நாடக அலையை உண்டாக்கியவர் ரத்தன் திய்யம். மணிப்புரியைச் சேர்ந்தவர். இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். தேசிய அளவில் ஐரம் ஷர்மிளா தவிர வேறு வகையில் யாருடைய நினைவிலும் நிற்காத மாநிலம். அதிலும் எண்பதுகளில் மணிப்பூரில் ராணுவ அத்துமீறல்கள் இல்லை என்று நினைக்கிறேன். அநேகமாக மணிப்பூர் பற்றிய செய்தியே தினசரிகளில் இருக்காது. அப்படிப்பட்ட மணிப்பூரில் நாடகம் மட்டும் உலக நாடக அரங்கில் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்திருந்தது என்றால் அதற்கு முதன்மையான காரணம், ரத்தன் திய்யம். அவருடைய ‘இம்பால் இம்பால்’ என்ற நாடகத்தை 1982-ல் மண்டி ஹவுஸில் பார்த்தேன். 34 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் நினைவில் நிற்கிறது.

அந்தக் காலகட்டத்தில் மண்டி ஹவுஸில் நான் பார்த்த தமிழ் நாடகங்களில் முக்கியமானவை, மு. ராமசாமியின் இயக்கத்தில் அரங்கேறிய ‘துர்க்கிர அவலம்’ மற்றும் செ. ராமானுஜத்தின் ‘கறுத்த தெய்வத்தைத் தேடி’. அப்போது நான் பார்த்த மற்றொரு மறக்க முடியாத நாடகம், ‘பாகல் கானா’ (பைத்தியக்கார விடுதி). இந்த நாடகத்தை எண்பதுகளின் முற்பகுதியில் பார்த்தேன். சரியான ஆண்டு ஞாபகம் இல்லை. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ‘பாகல் கானா’ மண்டி ஹவுஸில் உள்ள கமானி ஹாலில் நிகழ்த்தப்பட்ட மறுநாள் இந்திரா காந்தி ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அச்சட்டத்தின்படி நாடகம் போடும் அனைவரும் தங்கள் நாடகப் பிரதியை போலீஸ் கமிஷனரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகே நிகழ்த்த வேண்டும். அப்படி என்ன இருந்தது அந்த நாடகத்தில்?

‘The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade’ என்ற நீண்ட தலைப்பு உடைய ஒரு நாடகத்தை எழுதினார் ஜெர்மன் நாடகாசிரியர் Peter Weiss. உடனே அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல நாடுகளிலும் நிகழ்த்தப்பட்டது. Marat/Sade என்று சுருக்கமான தலைப்பால் அந்த நாடகம் அழைக்கப்பட்டது. இதை ‘பாகல் கானா’ என்று ஹிந்தியில் மொழியாக்கம் செய்து தில்லியில் நிகழ்த்தினார் அலிக் பதம்ஸீ (Alyque Padamsee). என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு நாடகம் இது. ஏனென்றால், நம் கண் முன்னே மேடையிலும், அரங்கத்தில் நம்முடைய இருக்கையின் அருகிலும் கூட ஒரு கலகமே (anarchy) நடந்து கொண்டிருந்தது. ஃப்ரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருக்கும்போது, பைத்தியக்கார விடுதியில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) விடுதிக்குள்ளேயே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். (ஸாத் பைத்தியக்கார விடுதியில் இருந்தது நிஜம்; ஆனால் அங்கே ஸாத் அரங்கேற்றும் நாடகம் நிஜம் அல்ல; அது நாடகத்துக்குள் வரும் நாடகம்.) ஃப்ரெஞ்சுப் புரட்சியை அறிந்தவர்களுக்கு ஜான் பால் மாரா பற்றித் தெரிந்திருக்கும். தோல் வியாதிக்காக ஒரு குளியல் தொட்டியில் அமர்ந்திருந்தபோது கொல்லப்பட்ட புரட்சிகரப் பத்திரிகையாளர். 13 ஜூலை 1793-ல் கொல்லப்பட்ட ஜான் பால் மாரா 13 ஜூலை 1808-ம் ஆண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் அன்றைய நாடகத்தில் தோன்றுகிறார். பைத்தியக்கார விடுதியின் கண்காணிப்பாளர் தன் விடுதியில் உள்ளவர்களெல்லாம் மனநிலை சரியாக இருப்பவர்கள்தான் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களை ஒரு நாடகம் போடச் சொல்கிறார். நாடகத்தை அவர் மனைவியோடும் மகளோடும் பார்க்கிறார். (நாடக அரங்கின் உள்ளேயே). செவிலிகளும் விடுதிப் பணியாளர்களும் நாடக நடிகர்களிடையே ஏற்படும் கூச்சல் குழப்பங்களை அவ்வப்போது சரி பண்ணி விடுகிறார்கள். அந்த நாடகத்தை இயக்குபவர் மார்க்கி தெ ஸாத்.

மேடையில் நடக்கும் கூச்சல் குழப்பங்களையும் களேபரங்களையும் பார்த்து பயந்து போகும் எங்களை (பார்வையாளர்களை) நோக்கி, விடுதிக் காப்பாளர் தைரியம் சொல்கிறார்; ‘நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்; அதோ பாருங்கள்’ என்று கை காண்பிக்கிறார். சுற்றிலும் கையில் லத்தியோடு காவலர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மேடையில் சவுக்கடி வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரன் பார்வையாளர் பகுதியின் ஒரு பக்க ஓரத்தில் அமர்ந்திருந்த என்னை நோக்கி வந்து ‘என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறுகிறான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. வெங்கட் சாமிநாதன் வேறொரு வரிசையில் அமர்ந்திருக்கிறார். அப்போது இரண்டு காவலாளிகள் ஓடி வந்து அவனை லத்தியால் அடி அடியென்று அடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள். பைத்தியக்காரர்களின் கூச்சல் அரங்கத்தில் அதிர்கிறது. இடைவேளை. இடைவேளை முடிந்து நாங்கள் வந்து அமர்ந்தபோது மேடைக்கும் எங்களுக்கும் இடையே இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு நிம்மதி பிறந்தது. நாடகம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நிஜப் பைத்தியங்களையே அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள் போலிருக்கிறது, பாவிகள்.

இரண்டாம் அங்கம் தொடங்கியதும் விடுதிக் கண்காணிப்பாளர் தோன்றி மேடையிலிருந்து பைத்தியங்கள் யாரும் கீழே குதித்து எங்களை நோக்கி வந்து விடாமல் இருப்பதற்காகத்தான் இரும்புக் கம்பிகள் வைத்திருப்பதாகச் சொன்னார். நாடகம் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குளியல் தொட்டியில் கிடக்கும் மாராவை ஷார்லத் கொல்ல வேண்டும். (மாராவை நிஜ வாழ்வில் கொன்றவள் ஷார்லத்). இப்போது ஷார்லத் மாராவைக் கொல்வதற்குப் பதிலாக விடுதிக் கண்காணிப்பாளரைக் கொல்கிறாள். அவ்வளவுதான்; பைத்தியக்கார விடுதியில் கூச்சல் குழப்பம் உச்சத்தை அடைகிறது. ஒரு பைத்தியம் எங்கோ ஓடிப் போய் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறது. மேடையின் இருள் சூழ்ந்த வெளிச்சத்தில் பைத்தியங்கள் இரும்புக் கம்பிகளின் மேல் ஏறிக் குதித்து பார்வையாளர்களின் நடுவே புகுந்து ஆஸாதி ஆஸாதி என்று கத்திக் கொண்டே அரங்கத்தை விட்டு வெளியேறுகின்றன. பார்வையாளர்கள் அனைவரும் ஸ்தம்பித்து நிற்கிறோம்.

வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. பிறகு கடைசியில்தான் தெரிந்தது, பைத்தியங்கள் அத்தனையும் நடிகர்கள் என்றும், அரங்கத்தில் லத்தியோடு நின்று கொண்டிருந்த காவலர்களும் நடிகர்களே என்றும்.

இது போன்ற நாடகங்களெல்லாம் ஃப்ரெஞ்சிலும் ஜெர்மனிலும் மட்டும் எப்படி எழுதப்பட்டன? அதற்கு அந்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud 1896 - 1948) Theatre of Cruelty என்ற கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சரி, இதற்கும் ந. முத்துசாமிக்கும் என்ன சம்பந்தம்? நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று. உதாரணம், ந. முத்துசாமி. இன்றைய தினம் உலக நாடக அரங்கில் இப்ராஹீம் அல்காஷி ஒரு legend-ஆகக் கருதப்படுபவர். ந. முத்துசாமியின் பெயர் அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ரத்தன் திய்யம் அளவுக்காவது உலக அளவில் தெரிந்திருக்க வேண்டாமா? ரத்தன் திய்யத்தைத் தெரியாத ஒரு மணிப்பூர்க்காரரை நாம் பார்க்க முடியாது. இந்திய நாடகம் என்றால் அதில் முதல் ஐந்து பேரில் வரும் பெயர் ரத்தம் திய்யம். ஆனால் முத்துசாமியின் பெயர் சொல்ல இங்கே ஆள் இல்லை. நமக்குத் தெரிந்தால்தானே பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரியும். இதுவாவது போகட்டும். தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய பிரபலங்கள் பலருமே ந. முத்துசாமியின் கூத்துப் பட்டறையில் நடிப்புக் கலை பயின்றவர்கள். முத்துசாமியை குருவாக நினைப்பவர்கள். ஆனால் பாவம், அவர்களுக்கும் முத்துசாமி என்றால் யார் என்று தெரியவில்லை. முத்தமிழ் என்று பெருமையுடன் சொல்கிறோமே, அதில் ஒன்றான நாடகத் தமிழுக்கு 2000 ஆண்டு வரலாற்றிலேயே முதல் முதலாக நவீன அடையாளத்தை அளித்தவர் ந. முத்துசாமி. தமிழ்நாடே கொண்டாட வேண்டிய ஒரு செயல் இது. ஆனால் நம் யாருக்குமே அது தெரியவில்லை.

ந. முத்துசாமி - பகுதி 4


By சாரு நிவேதிதா


First Published : 21 August 2016 12:00 AM IST





தமிழ்நாட்டில் வசிக்கும் நமக்கு நாடகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது, சிரிப்பு நாடகங்கள். கலை, கலாசாரம் பற்றி அக்கறை கொள்ளும் நாளிதழ்களில் கூட நாடகம் என்றால் சபா நாடகங்களை மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நான் சபா நாடகங்களுக்கு எதிரி அல்ல; எல்லா மொழிகளிலும் இது போன்ற சிரிப்பு நாடகங்கள் உண்டு. ஆனால் அது ஒன்று மட்டுமே நாடகம் என்று நம்பி வாழும் ஒரு சமூகம் வேறு எங்கும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலைநாடுகளில் நாடகங்களுக்கு 3000 ஆண்டு பாரம்பரியம் உண்டு. கிரேக்க நாடகாசிரியரான சோஃபாக்ளிஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். 120 நாடகங்களை எழுதியவர். யூரிப்பிடஸும் சோஃபாக்ளிஸின் சமகாலத்தவர்தான். யூரிப்பிடஸின் ‘மெடியா’ என்ற நாடகத்தை தில்லியில் பார்த்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாடகம் A Dream of Passion என்ற சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. அந்த நாடகத்தின் இறுதியில் வரும் கோரஸைக் கேட்டவர்களால் அதை அவர்களது வாழ்வின் இறுதி வரை மறக்க முடியாது. அந்த அளவுக்கு வலுவானவை கிரேக்க நாடகங்கள். மேற்குலகில் இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட நாடகக் கலைக்கு இருபதாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்கள் என ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அந்தோனின் ஆர்த்தோ (Antonin Artaud), பெர்ட்டோல்ட் ப்ரெக்‌ஷ்ட், க்ரொட்டோவ்ஸ்கி, சாமுவல் பெக்கெட் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களது நாடகக் கோட்பாடுகள் அனைத்தும் தனித்தனி சிந்தனைப் பள்ளிகள் என்று சொல்லத்தக்கவை.

ஆனால் தமிழில் நாடகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று நினைத்தால் சகிக்கவொண்ணாத் துயரம் கவிகிறது. முதலில் இங்கே நாடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் முதல்முதலாக நவீன நாடகத்தை ஒரு கலையாக அறிமுகப்படுத்தியவர் ந. முத்துசாமி. இதற்கும் அவர் சி.சு. செல்லப்பாவுக்கே நன்றி சொல்கிறார். முத்துசாமி சொல்கிறார்: ‘டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் இருந்துதான் இந்தியா முழுதும் நாடக இயக்கம் தொடங்குகிறது. ஆனால் கூத்துப் பட்டறை தேசிய நாடகப் பள்ளியின் உந்துதலால் உண்டான ஒன்றில்லை. அது ‘எழுத்து’விலிருந்து தோன்றுகிறது.’

ந. முத்துசாமியையும் நவீன நாடகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் உடனடியாகச் செய்ய வேண்டியது அவரது நாடகங்களைப் படிப்பதாகும். நாடகம் மட்டுமே இரண்டு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கலையாக இருக்கிறது. ஒன்று, வாசிப்பு; இரண்டாவது, நிகழ்த்துதல். முத்துசாமியின் முதல் நாடகமான ‘காலம் காலமாக’ 1968-ல் ‘நடை’ இதழில் வெளிவந்தது. (‘நடை’, ‘எழுத்து’வின் தொடர்ச்சி.) இந்த நாடகம்தான் நவீன நாடகத்தின் தொடக்கம் என்கிறார் செ. ரவீந்திரன்.

(இங்கே செ. ரவீந்திரன் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி விட்டு, தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார். உலக இலக்கியம், இசை, நாடகம், சினிமா போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி கொண்டவர். நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய்வதிலும் தேர்ந்தவர். நான் தில்லியில் இருந்தபோது அவர் வீட்டுக்கு வாரந்தோறும் போவது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் கரோல்பாகில் உள்ள அவர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடுவோம். அவர்களில் முக்கியமானவர் வெங்கட் சாமிநாதன். செ. ரவீந்திரனுடன் பேசும்போதெல்லாம் ஒரு பெரிய நூலகத்தினுள் சென்று வந்தது போல் இருக்கும். அவரைத் தமிழ் இலக்கிய உலகம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முத்துசாமியின் நாடகங்களை முழுவதுமாக கே.எஸ். கருணா பிரசாத் தொகுத்திருக்கிறார். 1060 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் முத்துசாமியின் 21 நாடகங்கள் இருக்கின்றன. 1968-லிருந்து எழுதப்பட்டு வந்த முத்துசாமியின் நாடகங்கள் எதுவும் உடனடியாக மேடை ஏறவில்லை. அதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆயின. 1977-ல் கூத்துப் பட்டறை தொடங்கப்பட்ட பிறகு 1981-ல் முத்துசாமியின் ‘உந்திச் சுழி’ என்ற நாடகம் சென்னை மியூசியம் தியேட்டரில் மேடையேறியது.)

‘காலம் காலமாக’ நாடகம் 1968-ல் எழுதப்பட்டதன் பின்னணியை முன்னுரையில் விவரிக்கிறார் முத்துசாமி. சி. மணி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படித்துக் கொண்டிருந்தபோது அங்கே இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்த முத்துசாமிக்கு அவருடன் பரிச்சயம் ஏற்படுகிறது. பிறகு முத்துசாமி படிப்பைத் தொடராமல் சென்னை வந்து விடுகிறார். அப்போது தற்செயலாக திருவல்லிக்கேணி தபால் நிலையத்துக்கு அருகில் சி. மணியைச் சந்திக்கிறார். அப்போது சி. மணி விக்டோரியா ஹாஸ்டலிலும், முத்துசாமி அதற்கு அருகிலிருந்த வெங்கடரங்கம் பிள்ளை தெருவின் பக்கத்திலிருந்த மீனவக் குப்பத்திலும் தங்கியிருக்கின்றனர். சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’வில் பிரசுரமாகின்றன. பிறகு மணி மேல்படிப்புக்கு செகந்திராபாத் போய் விடுகிறார். அதனால் முத்துசாமி தனது மற்ற நண்பர்களான வி.து. சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோரைப் பார்க்க சைதாப்பேட்டை போய் வந்து கொண்டிருக்கிறார். 1958-ல் முத்துசாமிக்குத் திருமணம் ஆகிறது. இளம் மனைவியையும் விட்டு விட்டு சைதாப்பேட்டையில் இலக்கிய விவாதம் செய்து கொண்டிருக்கிறார் முத்துசாமி. (இலக்கியத்துக்காக ஒவ்வொரு கலைஞனும் அவனது குடும்பத்தினரும் எத்தனை பெரிய தியாகத்தைச் செய்திருக்கின்றனர் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.) சைதாப்பேட்டையில் நடந்தது வெட்டி அரட்டை அல்ல. மணியிடமிருந்து கவிதைகள் வரும். அவற்றைப் பற்றிய விவாதம் மணிக்கணக்கில் தொடரும். அதெல்லாம் தனக்குப் பெரிய பயிற்சியாக இருந்ததாக நாடகத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் முத்துசாமி. சி. மணி செகந்திராபாதிலிருந்து வந்து குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்கிறார். முத்துசாமி சென்னையிலிருந்து அடிக்கடி சேலம் போகிறார். குமாரபாளையத்துக்கு அருகிலுள்ள பவானியில், காவிரியின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு ந. முத்துசாமியும், சி. மணியும் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதாக முடிவு செய்கிறார்கள். அதுதான் ‘நடை’. ‘எழுத்து’ பத்திரிகையிலேயே தமிழில் நாடக இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டுமென்று எழுதிய செல்லப்பா, அமெரிக்க நாடகாசிரியர் வில்லியம் சரோயனின் ‘ஹலோ யாரங்கே?’ என்ற நாடகத்தை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சி. மணி குமாரபாளையம் போன பிறகு அவர் நண்பர் எம். பழனிச்சாமியோடு (பிரசிடென்ஸி மாணவர்) விக்டோரியா ஹாஸ்டலின் புல் தரையில் அமர்ந்து ஐரிஷ் நாடகாசிரியரான ஜான் மிலிங்க்டன் சின்ஞ்சின் (John Millington Synge) Riders to the Sea என்ற நாடகத்தை மொழிபெயர்க்கிறார் முத்துசாமி.





இதெல்லாம்தான் ‘காலம் காலமாக’ என்ற தமிழின் முதல் நவீன நாடகம் எழுதப்பட்டதன் பின்னணி. நவீன நாடகம் புரியவில்லை என்பது ஒரு பொதுவான புகாராக இருந்து வருகிறது. ஆனால் சில நாடகக் குழுக்களின் stylized acting-ஐப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்குமே தவிர நாடகப் பிரதிகள் புரியாமல் போக வாய்ப்பே இல்லை. ‘காலம் காலமாக’ நாடகத்தில் வைத்தியநாதன், கந்தப்பன் என்ற இரண்டு பேர் ஒரு நோயாளியை ஆளுக்கொரு பக்கம் கை போட்டுத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு நோயாளி அவர்கள் பின்னே நடந்து வருகிறான். பிறகு வைத்தியநாதனும் கந்தப்பனும் அந்த நோயாளியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்ததற்காகத் தங்களைப் பாராட்டிக் கொள்கிறார்கள்.

‘அப்பாடா’

‘அவங்க முட்டாளுங்க’

‘நல்லவேளை. இவனெ சமயத்திலே காப்பாத்திட்டோம். அவனெப் போல இல்லே. இவன் பிழைச்சுக்குவான்’

‘ஆமா. இவனெ இவ்வளவு தூரம் காப்பாத்திக் கொண்டாந்துட்டோம். இவன் நம்மகிட்டே பிழைச்சுக்குவான். அவங்க முட்டாளுங்க’

காலம் நகர்ந்து கொண்டே போகிறது. நோயாளி நோய்ப் படுக்கையிலேயே கிடக்கிறான். வைத்தியநாதனுக்கும் கந்தப்பனுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. ஆனாலும் நோயாளிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே போகிறார்கள்.

நோயாளி சொல்கிறான்: நான் பொழச்சிக்குவேனான்னு பாக்கறேன். அதுக்குச் சூழ்நிலை இங்கே இருக்கான்னு பாக்கறேன். ஒங்க சக்தியெ மிகைப்படுத்தாமே உணர்ந்தாதான் என்னெ உங்களால காப்பாத்த முடியும். அவன் சாகறதெ என் கண்ணால பாத்துக்கிட்டிருந்தேன். நீங்களும் பாத்துக்கிட்டிருந்தீங்க. அவங்க குறைகளெயெல்லாம் இத்தனை நாள் நீங்க தெரிஞ்சுக்கிட்டிருக்கணுமில்லியா? அவங்க கொறைகளையும் ஒங்க சக்தியையும் உணர்ந்து என் வியாதியெ குணப்படுத்தி என்னெத் தெளிவிக்கப் போறீங்கன்னு நம்பிக்கிட்டிருக்கேன். அவங்க கையிலே அவனெப்போல இல்லாம ஒங்க கையிலே நான் பிழைச்சுக்கணும். பழகிப் போனதாலே அவன் நோய் குணமானா அவங்களால சகிச்சுக்க முடியாதுன்னு கடைசியிலே தோண ஆரம்பிச்சுட்டது. குணமாறதெ நோய்ப்படரதுன்னு அவங்க உணர ஆரம்பிச்சுட்டாங்க போலிருந்துது. மதிப்பும் பொழைப்பும் அவன் நோயிலேதான் இருக்குன்னு அவங்க எண்ணினாங்களோன்னு தோணிச்சு. பழகிப் போன பொய் உண்மையாயிடுது. அதனாலே உண்மை பொய்யாயிடுது. என்ன வேடிக்கை! என்னெ நீங்க காப்பாத்தணும்.

அதற்கு வைத்தியநாதன் இப்படிச் சொல்கிறான்: ‘கவலெப்படாதே. ஒன்னையும் காப்பாத்துவோம். (‘ஒங்கப்பனையும் காப்பாத்துவோம்’ என்று அறையிலிருந்து தலையை நீட்டி ரமேஷ் கோபுவிடம் அடங்கிய குரலில் சொல்கிறான்) சாகவிட மாட்டோம். நாங்க இருக்கற வரைக்கும் இவனெச் சாக விட மாட்டோம். எங்களெ மீறி இவன் செத்தா எங்களாலே சும்மா இருக்க முடியாது. எதையானும் காப்பாத்திக் காப்பாத்திப் பழக்கமாயிட்டுது. அது மரபாவே ஆயிட்டுது. இவனுக்குப் பின்னாலே ஒன்னெப் புடுச்சுக்குவோம். ஒன்னையும் காப்பாத்துவோம். கவலெப்படாதே.’

இதற்கு இரண்டாவது நோயாளி சொல்கிறான்: ‘ரொம்ப சந்தோஷம். அதான் எனக்கு வேண்டியது. இந்த உறுதியெ நீங்க கொடுத்தாப் போதும். எத்தனை நாள் வேணும்னாலும் ஒங்களுக்காக உசிரைக் கையில் புடுச்சுகிட்டு காத்துக்கிட்டிருக்க தயார்.

கந்தப்பன்: உறுதிமொழிக்கென்ன? எத்தனை உறுதிமொழி வேணும்?

நோயாளி 2: அது போதும் எனக்கு. உறுதிமொழி கூட வேண்டாம். உறுதிமொழி ஒங்களாலே தர முடியும்னாலே போதும். எனக்குத் திருப்தி. கையிலே புடுச்சுகிட்டு காத்திருப்பேன்.

இப்படியே உறுதிமொழிகளும் காத்திருப்புகளும் காலம் காலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது. கடைசியில் முதல் நோயாளி செத்து விடுகிறான். ஒரு பணியாளனுக்குச் சந்தேகம், நோயாளி உறங்குகிறானா செத்து விட்டானா என்று. சுவாசம் இருக்கிறதா இல்லையா என்று சோதிக்கிறார்கள். நோய் வெளியே பரவி விடக் கூடாது என்று கதவுகளைச் சாத்துகிறார்கள். இல்லை, இல்லை, நோய் அறையிலேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று கதவுகளைத் திறக்கிறார்கள். நோயாளி செத்து விட்டானா இல்லையா? ஒருத்தன் அவன் காலைத் தொட்டுப் பார்க்கிறான். ஒருவன் மார்பில் காதை வைத்துப் பார்க்கிறான். கடைசியில் ‘நின்னு போச்சு, நின்னு போச்சு’ என்று எல்லோரும் ஏக காலத்தில் கத்துகிறார்கள்.

இப்போது இரண்டாவது நோயாளியை, ஆரம்பத்தில் முதல் நோயாளியைத் தூக்கியது போலவே வைத்தியநாதனும் கந்தப்பனும் தூக்கிக் கொண்டு வந்து மேஜையில் கிடத்துகிறார்கள்.

திரும்பவும் நாடகத்தின் ஆரம்ப வசனங்கள். அவங்க முட்டாளுங்க; அவனெக் காப்பாத்தத் தெரியலே.

நோயாளி 2: (தலையைத் தூக்கி) என்னெ டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போங்க

பணியாளன்: கவலெப்படாதே. அவங்க முட்டாளுங்க, நாங்க உன்னெ காப்பாத்திடுவோம்

(மேடையில் ஒளி மங்குகிறது. 25, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மேடையில் இடப்புறத்திலிருந்து நுழைகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நோயாளி ஒருவன் தள்ளாடிக் கொண்டே போய் வலப்புற நாற்காலியில் உட்கார்கிறான்)

இந்த நாடகத்தில் நோயாளிகள் யார், வைத்தியநாதனும் கந்தப்பனும் யார், பணியாளர்கள் யார் என்றெல்லாம் நமக்குத் தெரியாதா? இந்த நாடகத்தில் எது புரியவில்லை? விஷயம் என்னவென்றால், நாம் இன்னும் ந. முத்துசாமியைப் படிக்கவில்லை. அவ்வளவுதான். படித்திருந்தால் ‘கோதோவுக்காகக் காத்திருத்தல்...’ என்ற நாடகத்தை எழுதிய சாமுவெல் பெக்கட்டை உலகம் எந்த அளவு கொண்டாடுகிறதோ அதே அளவு முத்துசாமியையும் கொண்டாடியிருப்போம். அவர் பெயரும் தமிழ்நாட்டைத் தாண்டித் தெரிந்திருக்கும்.

‘ந. முத்துசாமி நாடகங்கள்’ தொகுப்பு கிடைக்குமிடம்: போதிவனம், அகமது வணிக வளாகம், தரைத் தளம், 12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14.

Sunday, 24 July 2016

அங்குசம் - தஞ்சை ப்ரகாஷ்

அங்குசம்

180 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்



தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

வானம் கறுத்து வந்தது. மின்னி ஒதுங்கி நின்றாள். சூல்கொண்ட மேகம் நடு வானத்தில் கருக்கும்மென கூடிக்குவிந்து சூரிய வெளிச்சத்தை உடைத்து விசி றியதால் பூமி பளிச்சென்று ஒரு வித ஊமை வெளிச்சத்தால் அதிகப்பட்டது. அவனைக் காணோம். சந்து முனையில் வந்து காத்திருக்கும் அண்ணா முகத் தைப் பார்க்க பயமாய் இருக்கும். நாராயணனுக்கும் இது எல்லாம் தெரியும். முதலில் பதினெட்டாம் வயதில் மின்னி அவனிடம் உதை வாங்கியபோது அஞ் சாமல் சொன்ன அதே பெயர்தான் ரத்தனராஜ்

"இப்படிக்கூட பேர் வைப்பாளோ? ரத்தனராஜாமே வெள்ளிராஜ்ன்னு வெச்சினுடறது தானே' என்று கத்தினான் நாராயணன். நாராயணனிடம் அடி வாங்குவதும் மின்னிக்குப் புதிதல்ல. கண்டதற்கும் உதைப்பான். பெரிய பெண் ணான பிறகும் கூட அவனிடம் அறைவாங்கி அழுது கொண்டிருப்பது அவள் வீட்டு வழக்கம்தான். அப்பா ரிட்டையராயாச்சு அவள் எட்டு வயசாகும் போதே வீட்டில் எப்போதும் சும்மா உக்காந்திருந்து அம்மாவுக்கு கறிகாய் நறுக் கிக் கொடுத்து, வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, ஜபம் சொல்லிக் கொடுத்து வந்த அப்பாவைத்தான் அவளுக்குத் தெரியும். நாராயணன்தான் வீட்டு ஹெட் ஆஃப் டிப்பார்மெண்ட் அடுத்தவன் சுப்ரமணியன், ரெயில்வே கிளர்க் வீட்டில் மொத்தம் பத்து உருப்படி மின்னிதான் ஐந்தாவது பெண். மூன்று பேர் உலகில் வாழாமல் மேலோகம் போய் விட்டார்கள். பெண்களில் நாலுபேரையும் கரை ஏத்தியவன் நாராயணன்தான். பாவம் தலை நரைத்து நாற் பத்தைந்து வயது தாண்டி முக்கால் கிழவனாய் அந்த வீட்டை முதுகு கொடுத் துத் தாங்கியே கூன் விழுந்து விட்டான். நேரத்தில் கல்யாணம் பண்ணியிருந் தால் நாலு பிள்ளை பெற்று பேரனும் எடுத்திருப்பான். காலம் அவனை உடைத் ததேயொழிய மறுபடி வார்க்க முடியவில்லை. மின்னி குழந்தையாயிருந்த போதிலிருந்தே அவனிடம் உதை வாங்கி வளர்ந்தவள். ரத்தன்ராஜ் பற்றி அவ ளிடம் நாராயணன் கேள்விப்பட்டதும் கன்னத்தில் அறைந்தான். உலகம் ஒரு கணம் இருண்டது அவளுக்கு உதடு கனிந்தது. அதே பெயரை மறுபடி நாரா யணனுக்கு ரத்தம் உதடுகளில் கசியச் சொன்னாள் மின்னி. 'ரத்தன்ராஜ்' - 'அம்மா' வயிற்றில் பிடித்துக் கொண்டு அழுதாள்.

"யாருடி அவன்? சொல்லுடி வேறு சாதிப் பயகிட்டே ஆசப்பட்டேங்கிறே யேடி வெட்கமில்லாம பேரே வேற சொல்றேயேடீ தேவடியாமுண்டெ கட் டால போறவளே.'

அப்பா நிச்சலமாய் தூணில் சாய்ந்து நின்று ஒற்றைக் காலால் உந்திக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டு நின்றாரே ஒழிய வேறொன்றும் பேச வில்லை.

"அவன் என்ன ஜாதிடீ எந்த ஜாதி?"

சமுதாயத்தில் இப்போது ஜாதியினை மீறுவது ஒரு பெரிய சீர்திருத்தமாகிப் போய்விட்டது. மின்னியை இன்று ஆதரிக்காதவர்களே இல்லை. அவள் கல் லூரியில் அடிவைத்த போது, அம்மா அவளுடனே காவலாய் காலேஜ்வரை வருவாள். நாராயணன் பஸ் ஏற்றி விடுவான். தனியே எங்கும் விடமாட்டார்அங்குசம் 181

கள் அவளை காவல்தான் வீட்டுக்குள் வந்ததும் ஆத்திரம் தீர அடிப்பது நாரா யணனுக்கு வழக்கம்.

பளிச் பளிச்சென்று அறை விழும்போது சமையல் உள்ளில் அம்மா கதறு வாள். அடி வயிற்றில் தீ பற்றும் மின்னிக்கு தெரு திரும்பும் போது எங்கி ருந்தோ ரத்தன் உடனே சைக்கிளில் தோன்றுவான். நாராயணன் எரித்து விடு கிற மாதிரி பார்த்தபடி மின்னியின் கையைப் பிடித்து வேகமாய் வீட்டுக்கு இழுத்து வந்து மயிரைப் பற்றி பலமாக சுவற்றில் ஒரு மோது மோதிவிட்டு பேயறையாய் ஓர் அறை வைப்பான். மூச்சு முட்டும் மின்னிக்கு அடி வலிக் காது சொல்லப்போனால் அடி வாங்குவதுதான் சுகம்

வீட்டு வேலைகளை, தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதை தினசரி பழக்க மாய் வைத்திருந்ததால், நாராயணன் உடம்பு கண்டு கண்டாய் இருக்கும். ஒயா மல் உழைக்கிறவன். நன்றாக சாப்பிடுகிறவன். நரை கண்டவன். தப்பு ஏதும் புரி யாதவன், அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும். "அவன் பார்க்கறான்னா நீ ஏண்டி பார்க்கறே? தேவடியா நாயே தலையை குனிஞ்சுண்டே வான்னா, அந்த தாயழியப் பாக்க அலையறியேடீ வெங்கங்கெட்ட கம்மநாட்டி' எட்டி வயிற்றில் உதைப்பான் அம்மா, தலையில் அடித்துக் கொண்டு அழுவதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள் மற்றப் பெண்கள் மைதிலியும், சாந்தாவும் எல்லோரும் குலைநடுங்கி நிற்பார்கள். அப்பா வழக்கம்போல துணை உதைத்துக் கொண்டு சாய்ந்து ஒற்றைக் காலில் நிற்பார்.

அப்பாவுக்குப் பேச்சு நின்னு இருபது வருஷமாச்சாம் ஊனம் கிடையாது பேசமாட்டார் என்ன விரதமோ ஒருநாள் ராத்திரி பயங்கரமாக சண்ை நடந் ததாம் அம்மாவுக்கும். அப்பாவுக்கும். மைதிலிதான் மின்னிக்கு சொன்னது. "இனிமே உள்ளேயே வர்றதில்லெடி இனிமே பாரு அஞ்ச வந்தா ஏண்டா மானங்கெட்டவன்னு கேளு' என்று கத்திவிட்டு வெளியே போனாராம் நடு ராத்திரியில் அதற்குப் பின் அப்பா நடுமுற்றத்தில்தான் நிற்பார் வீட்டுரேழி தாண்டி உள் கூடம் வந்து மின்னி பார்த்ததேயில்லை.

தனியாய் என்றைக்காவது வீட்டுக்கு காலேஜியிலிருந்து வந்ததும், நாரா யணன் கேட்பதும் ஒன்றாக நிகழும். மின்னி பயந்து ஒதுங்கினாலும் விட மாட் டான். அப்பா துணில் உதைத்துக்கொண்டு பாராத பார்வையாய் இருப்பார். அம்மா ஒன்றும் கேட்க மாட்டாள். கல் மாதிரி நிற்பாள் மின்னி மைதிலியும், சாந்தாவும் அழுவார்கள்.

'மாப்பிள்ளை சந்து முனையில் நின்று கொண்டிருந்தானே பாத்தாச்சா? பேசியாச்சா?" + -

"கொன்னுடுவேண்டி வாயத்தெற சித்த முன்னாடி பாத்துட்டுத்தான் வந் தேன் சொல்லு'182 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"மொளைச்சு மூனெல விடல்லே உனக்கு அதுக்குள்ள ஆம்படையான் வேணுமாமில்லே?"

------- அடி விழப்போவது தெரிந்தும் அமைதியாகிப் போகும் மின்னியைத் தாங்க முடியாது நாராயணனுக்கு வெறி பிடித்து விடும். அடித்து நொறுக்கு வான். இரண்டு கால்களுக்கு இடையில் அவளைத் துவைத்து எடுப்பான் - அந்த வீட்டில் யாரும் தடுப்பதில்லை. 'சாதிகெட்ட பயலெத் தேடிண்டு போவியா?" என்று சாத்தும்போதும் ஆத்திரம் அடங்காது அவனுக்கு ரத்தம் கசிய ஊமைக்காயங்களுடன் இரவு மிகச் சுதந்திரமான சுகம் மின்னிக்கு அனு பவமாவது நாராயணனுக்குப் புரியாத தனியுலகம் சூத்திரன் ரத்தன்ராஜ் ஆம் அவனிடம் எப்படி இது? இன்னும் புரியாத இன்பம் அது ரத்தன்ராஜிடம் சிக் கும் போதும் நாராயணனிடம் சிக்கும்போதும் சிதைந்து போவது மின்னியின் சுகம். ரத்தன்ராஜின் அவசரம், ஆத்திரம், வேகம் இவைகளில் சிக்கி அலைப்பு றும்போதெல்லாம் நாராயணனின் உடம்புதான் மின்னிக்கு ஞாபகம் வரும். தூண் மாதிரி இரண்டு கால்களிடையே அவளைப் போட்டு கைகளால் அறைந்து இனிமே போவியோ? செய்வியோ, இனிமே பண்ணுவியோ? போவியோ அவனோட?" என்று நாராயணனின் கரங்களின் வலிமையை ஒரு பெண்ணாய் அறிவதில் வேதனை மட்டுமல்ல. அதைத் தாண்டிய ஏதோ ஒரு ஆண்மை அனு பவப்பட்டுக் கொண்டேயிருந்தது. ரத்தன் ராஜைப் போலவே நாராயணன்

ரத்தன்ராஜூம் அவளை நாராயணனைப் போலவேதான் அணைத்தான். பகலில் பலருக்கு மத்தியில், பஸ்களில், ரயில்களில் இரவில், பாதை ஓரங்க ளில், வீட்டு வேலிக்கருகில், சில வேளைகளில் உயிரே போய்விட்டால் தேவலை என்றிருக்கும். ரயில்களில் போகும் வேளைகளில் பலருக்கும் மத்தி யில், பகல் இரவு என்று அறியாத பேதமில்லாத அணைப்பு யாரும் வித்தியா சம் காணமுடியாது. சாதாரணமாய் பக்கம் பக்கமாய் இருந்தே உரசி தீ கனன்று நசுங்கும் அந்த வேளைகளின் இரக்கமற்ற வெறும் கசங்கல் பயங்கரமாய் நாரா யணனையே நினைவூட்டி பயங்கரம் தரும். வெட்கமும், அவமானமும் தாங்க முடியாது. சாவு நினைவு வரும்போது உடம்பு உடம்புடன் தவிக்கும். மின்னி கிறங்கிக் கிடப்பாள். ரத்தன்ராஜின் தோள்களின் மீது வெட்கமற்றுச் சாய்ந்து கிடப்பாள். யாரும் தப்பு கண்டுபிடித்து விடமுடியாது. இக்கொடும் உறவில் சாவு மட்டும் வாராது இனிக்கும்!

ரத்தன்ராஜூக்காக காத்திருக்கும் நேரம் எல்லாம் பயமும், சந்தோஷமும், ஆச்சரியமும் சந்திக்கும்போதோ துடிப்பும், தவிப்பும், வேதனையும். சந்தித்த பின்போ ஆக்ரமிப்புதான் சண்டை அழுகை, ஆத்திரம் எல்லாம் அதன் பின் தான் வெட்கம் கெட்ட ஆசை பல இரவுகள் அவளைத் தின்னும் தனிமை கொடுமை!

"நேத்து ஏண்டி வல்லே?"

'அண்ணா கூடவே வந்தான்?"

"அண்ணாவெயா கட்டிக்கப் போறே?"அங்குசம் |83

“ச்சி இது மாதிரி பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு உங்க ளுக்கு?"

"பின்னே அண்ணா அண்ணாங்கிறியே அவனையா கட்டிக்கப் போறே? தப்பா?"

"அசிங்கமாப் போசாதீங்க நிறுத்துங்க"

'நாலு மணிக்கே வந்து ஏழு மணி வரைக்கும். இந்த பஸ் ஸ்டாண்டுல காத் துக்கிட்டு உனக்காக ராத்திரி..."

"என்ன ராத்திரி?”

'உன்னெய.சொன்னா பேசப்படாதும்பெ.வாண்டாம்."

'இதுதான் பேசுவேளா எப்பவும்!"

"நீ என்னிக்கு அதுக்கு ரெடி?"

‘'எதுக்கு?"

"என்னோட வர!"

"ஐயோடி என்னாலெ முடியாது'

"இப்படியே இரு. கெழவியானப்புறம்தான் நாராயணன் விடுவான்'

'ச்சீ, அசிங்கமா பேசாதீங்க"

'இதுல என்னடி அசிங்கம்? அவன் உன்னை விடப் போறதில்லை!"

"எங்க வீட்ல நான் கடைசி என்னை இஷ்டம் போல விட்டுடுவாளா?"

"அப்ப ஊறுகா போட்டு வெய்யேன்!"

"அசிங்கமா பேசாதேங்கன்னு சொல்றேன்னோல்யோ?"

...நீண்ட மெளனம் தொடரும். அவர்கள் வரவேண்டிய பஸ் வந்து நிற்கும். உடனே ஏறுவார்கள் இருவரும். முன்னால் அவர்களை யாரும் பார்க்க முடி யாது. கடைசி சீட்டின் மூலையில் அவளை ஜன்னல் ஒரம் உட்கார்த்தி விட்டு பக்கத்தில் ஒட்டி உரசி உட்கார்ந்து கொள்வான் ரத்தன்ராஜ் ஆசை மடைதிறக் கும். உதவாக்கரையான வெறும் பேச்சு:அலப்பும் உதடுகள், கனவுகளை மறைத்து வாழ்வைத் திட்டம் போடும் அவன் உதடுகள். இருவரின் பேச்சுக் களிலும் இருவரும் இல்லாத இருட்டு இருவருக்குள்ளும் பஸ் எப்போது புறப் பட்டது? இருவருக்கும் எப்போதும் தெரியாது. கூட்டம் மாலைப் பள்ளிகள், கல்லூரிகள் முடிந்து பக்கத்து ஊர்களுக்குப் போகும் மாணவ, மாணவியரின் கூட்டம், பஸ் முழுவதும் வியர்வை மணமும், கசங்கல் மல்லிகையின் நெடியும்.

காலையில் அணிந்த பள்ளி யூனிஃபார்ம் கசங்கும். காற்று மின்னியின் முடியைச் சுருளவிட்டு உலைக்கும். அவன் உடலின் சூடு அவளில் பரவும். யார் இதை இன்பம் இல்லை என்றார்கள்?

பயத்தில் உடல் நடுங்கும். பேச்சு நிற்காது - ஒன்றரை மணி நேரம் வாழ் வின் மிக முக்கியமான பயணம் - உடல்கள் பேசும் நொடிகள் பஸ்ஸின் இரைச்சல் - ஜனங்களுக்கு மத்தியில், ஊருக்கும் உலகுக்கும் மத்தியில், அவன் விரல்களுக்குள், முதலில் தடுத்துத் தடுத்து, முண்டி அவள் தோல்வியடைந்து| 84 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

போனாள் வெட்கம் கெட்டு வெளிச்சத்தில் பஸ் பாயும் அந்த வேளைகளில் பல நாட்களிலும் அவள் அந்த உடலுக்குள்ளே புதைந்தாள். மானமற்ற வெட் கமற்ற அந்தத் தழுவல்களில் ஆரம்பங்களில் அவளது தவிப்பு அவனது ஆக் கிரமிப்பில் அழுந்திப் போகும். கண்ணிர் மடையுடைய குனிந்து கொண்டு கண் ணிரைத் துடைக்கவும் நேரமற்றுக் கசங்குவாள் மின்னி. அவனும் வெட்கித்தான் தவிப்பான். அதையும் உணர்ந்தும் அவனை எதிர்க்க முடியாது. சரிவாள். பஸ் ஸின் பாய்ச்சலும், கூட்டமும் கண்களை இருட்டும். இரு கரங்களில் அவள் சுருண்டு போவாள். இவைகளைக் கண்ணால் காணவும் யாராலும் முடியாதது ஆச்சரியம் சாதாரணம்.

தஞ்சாவூரில் பஸ் இறங்கும் போது, இருவரும் எதிரிகளைப் போல் எரிச்ச லில் இருப்பார்கள். அவள் தவிப்பாள்!

"வீட்டு வரைக்கும் வரவேண்டாம்" என்பாள் பயத்துடன். "நான் வர்றேன்னா அலையிறேன்?" என்பான் ரத்தன் "அசிங்கம்ன்னு தெரிஞ்சும் விடாமே பண்றளே யாரேனும் பாத்தா? சீ அவமானம் சாகலாம் போல வர்றது நேக்கு'

"என்ன பண்ணிபுட்டோம் அப்டி?" "இனிமே என்ன பண்ணனும்? போறாதாக்கும்? ச்சேய்' என்ன வேண்டி யிருக்கு இதெல்லாம்?"

"ஆமா உரசிக்கிட்டு வந்ததெத் தவிர என்ன பண்ணிட்டேனாம் நானு?" "வேற என்ன பண்ணணுங்கறேள்? யாரானும் பாத்திருந்தா அடியம்மா அங்கியே சாகனும்!"

"என்னெத்தான் சாகடிக்கிறயே? ராத்திரியெல்லாம் சாவுறேன்டி!" "அனாவசியமா என்ன பேச்சு? யாரானும் கேக்கப்போறா ஊர் வந்தாச்சு தெரியறதோ?”

"எவன் என்ன சொல்றது நாலா வகுந்துடுவேன்' "ஆமா கிழிப்பேள். அசிங்கமா ஏதாவது பண்றது கேட்டா வகுந்துடுவேங் கறது. வஸ்தாத்துதான்'

"ஆமாண்டி வஸ்தாதுதான். ஒருநாள் உங்கண்ணனைத்தான் நாலா வகுந்து தள்ளப்போறேன்'

"அண்ணா என்ன பண்ணினான் உங்களை? இந்த மாதிரி பேசாதேங்கோ' இருட்டில் பிரியும்போது இரண்டு ஓரங்களில் நடந்து போய் திரும்பும் போது, அவள் வீட்டுச் சந்து முனையில் - நாராயணன் காத்து நிற்பதை இரு வரும் பார்க்க வேறு முனையில் திரும்புவான் ரத்தன். நாராயணனைத் தெரி யாதா? வீரன் காலை நாலு மணி இருளில் எத்தனை நாள் காத்துக்கிடக்கும் பஸ் ஸ்டாண்டுகள் எத்தனை பனியில் இருளில் அவள் வந்ததும் கிளம்பும் முதல் பஸ்ஸில் மூலையில் ரத்தனுடன் மின்னி எத்தனை வருஷங்கள்அங்குசம் 185

அவள் எல்லா பரீட்சைகள் எழுதும்போதும், ஒவ்வொரு தேர்வுகள் ரிசல்ட் வரும்போதும், வீட்டில் ஒவ்வொரு அக்காவின் கல்யாணம் நிச்சயம் ஆகும் போதும், ஒவ்வொரு விசேஷம் நேரும் போதும், போகும் ஒவ்வொரு அக்கா வின் பிள்ளைப் பேற்றுக்கும் பொறந்த வீட்டுக்கு - புக்ககத்துக்கு வரும்போது, போகும்போதும் ரத்தனைத் தேடி வரும் மின்னி அவள் வித்யாசமான பொண்ணுதான் ரத்தன்ராஜூக்கு அவனிடம் சொல்லாமல், அவன் சம்மதம் இல் லாமல், அவன் புன்சிரிப்பை வாங்காமல், அவளால் ஒன்றும் செய்வதற்கில்லை, அவளால் அவனில்லாமல் முடியாது.

ஆனாலும் அவளை அவன் கல்யாணம் செய்ய இப்போது முடியாது ரத் தன்ராஜ் இப்போது 'கல்யாணம் கேட்பதில்லை அவளை. இரண்டு பேருமே வருடங்களாய் அது பேசுகிறதேயில்லை. மைதிலி கல்யாண அழைப்பிதழை அவனிடம் கொடுக்க அவனைத் தேடி வந்தாள். ரத்தன்ராஜ் வீட்டு வராந்தாவில் நின்றாள். 'வாயேன்" என்றான். "இருக்கட்டும்' - என்றபடி படி ஏறினாள் மின்னி.

ரத்தன் கையில் அழைப்பிதழைக் கொடுத்து 'அவசியம் வரணும்' என் றாள். அவன் கையை நெருடினான். அவள் கைகள் எப்படி சிக்கின. அவை? அதென்னமோ அவளும் அப்படித்தான்!

'இத்தானே வேண்டாங்கிறது!"

"பின்னே எது வேணும்?"

'ஏதும் வேண்டாம்"

"உனக்கு வாண்டாம் சரி. எனக்கு வேணுமே" கை நசுங்கியது.

"அப்பப்பா - சீ விடுங்கோ'

"நாளைக்கு பார்க்கலாமா?"

'எதுக்கு? வாண்டாமே! உங்க தொல்லையே பெரிய தொல்லையா போய் டுத்து'

"அது சரி நாராயணன் விடுவானா?"

"தோ பாருங்கோ. அசிங்கப் பேச்சு வாண்டாம்."

'சர்த்தாம் போடி'

"நானா? நீங்களா? ச்சீ."

விடுவிடுவென்று இறங்கிப் போய் தெருவில் கலந்து போனாள் மின்னி.

அவன் சொன்னதில் என்ன தப்பு? நாராயணன் விடமாட்டான். அவன் உருமல் விடாது. பத்து வருஷமாச்சே ரயில்களில், பஸ்களில், இன்னும் வேலி யோரத்தில், கோயில் சந்நிதிகளில் - ரத்தன்ராஜ் கால்கடுக்க நின்று கொண்டிருக் கிறான். நீண்ட பயணிகளுடன் பயணம். ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில் இறங்கி காரணமே யில்லாமல் எதிர்புறமாய் நடக்கிறார்கள். ஆரம்பங்களில் ஜாதி குறுக்கில் பயமாய் இருந்தது உண்மை. வருடம் எத்தனை இதிலேயே கழிந்து போயிற்று பதின்மூன்று வயதுள்ள பெண்ணாய் இருந்த காலத்திலி186 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

ருந்து ஒயா தொடர் பயணம். இப்போது முப்பது வயது அவளுக்கே தாண்டி யாயிற்றே?

ஏதாவது ஒரு பஸ் ஸ்டாப்பில் அவன் இறங்குவான்.

அவள் இறங்க மாட்டாள் - பஸ் போய்விடும். இதுவும் ஒரு விளையாட்டு தொடர்ந்து பத்து நாள் - ஒரு மாதம் சந்திக்க வரமாட்டாள் மின்னி. ரத்தன்ராஜூ வரமாட்டான். இதுவும் ஒரு போட்டிதான்!

சலிப்பு தீரும் வரை. ஏதாவது ஒரு நண்பர் கல்யாணத்தில் மின்னியைப் பார்ப்பான். அகஸ்மாத்தான சந்திப்பு.

நண்பர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு மாதிரியான பிணக்கு. ஊடல், உரு கல் அப்புறம் ஒரு வெறுப்பு - ஆனால் பார்த்ததும் வெடிப்பான்.

"என்னடி இங்கே?' - என்பான் ரத்தன்.

"வரப்படாதா?"

"பெரிய்ய இது பண்ணிக்கிட்டுப் போனியே இப்ப என்ன?"

"வெக்கங்கெட்டுப் போய் பேச்சென்ன வேண்டியிருக்கு?"

"அறஞ்சன்னா பல்லு முப்பத்ரெண்டும் பல்லாங்குழி ஆடப்போய்டும் தெரி யும்ல?"

"நீங்க பொம்மனாட்டியா?"

“என்ன?"

"பின்னே பல்லாங்குழி ஆடறேங்கறேளே?"

"வாயே மூடு களுதே'

ரத்தன்ராஜ் என்ன பிறவி. மின்னிக்கு எப்போதும் சந்தேகம்தான். வெட்கம் கெட்டவன். திரும்பித் திரும்பி அவளையே சுற்றிச் சுழற்றுகிறானே.

அவனை அவள் அடியோடு ஒதுக்கி எத்தனை வருடம்? அடேயப்பா இப் போது அவளால் எதுவும் செய்ய முடியாது பெண்டாட்டி ஆகவில்லை! அவ்வளவுதான். இன்னும் ஒன்றாய்ப் படுத்து பிள்ளை பெறவில்லை! அதுவும் பஸ்ஸிலேயோ, ரயில் கம்பார்ட்மெண்ட் ஒன்றிலேயோ என்றாவது சாந்தி முகூர்த்தம்' ஆகிவிடுமோ என்ற பயம் எப்போதும் மின்னிக்கு உண்டு! "ரகூடிஸன் என்று அவனுக்கு ரகஸியமாய் நாமகரணம் செய்திருந்தாள்.

அதை நாராயணனுக்கு ஒவ்வொரு தடவையும் சோதனை செய்து அவள் 'இல்லை என்று நிரூபித்தாக வேண்டும். சாதாரண வேலைகளைக் கூட நாரா யணன் விட்டு வைக்க மாட்டான். பெருமூச்சு விட்டால் நாராயணன் குரல் துரத் தும் மின்னியை.

"என்னடி மாப்பிள்ளையை விடமாட்டே போலேயிருக்கே?"

"என்னடி மீனாட்சி இன்னுமா குளிச்சாறது உள்ளாற மாப்பிள்ளை வந்து உக்காண்டுருக்கானா என்ன?"

'ஏண்டா உயிரெ வாங்கறே? தோ ஆச்சு தோட்டிண்டு வந்துடறேன்"அங்குசம் 187

'மாப்பிள்ளையெ இன்னிக்கு காத்தாலே பாத்தேனே மார்க்கெட்லெ? ராஸ் கல் - கறிகாய்காரியோட கொஞ்சிண்டு நிக்கறார். பாவம், நீ பார்த்தியானா மூணு நாள் சாதம் உனக்கு எறங்காது. தெரியுமோன்னோ?"

------

அமைதி பொறுக்காது அவனுக்கு வெளியில் வந்து பதில் சொன்னால் நிச் சயம் அடிப்பான். இப்போதெல்லாம் அடி வாங்க தெம்பு இல்லை உடம்பில் பயம் வலி அப்பாவா? அம்மாவா? ரெண்டு பேரும் ஒரு விதமான ஊமை கள்.

நாராயணனை மீறி ஓடிப்போக மின்னியால் முடியாது. இதுவரை பிரச்சனை இல்லை. ரத்தன்ராஜை நாராயணன் போய் அவன் வீட்டிலேயே சந்தித்து பதி னைந்து வருடம் ஆகவில்லையா என்ன? ரெண்டு பேரும் அலட்சியமாய் எச் சரிக்கையாய் சந்தித்துக் கொண்டார்களாம். ரெண்டுபேருமே அவளை விடத் தயாராய் இல்லை. ரெண்டுபேரும் சண்டை போடவும் தயாராயில்லை. ரெண்டு பேருமே பதுங்கினார்கள். விடத் தயாராயில்லை. ஒரு இரண்டு மணி நேரத்துக் குப் பின் சந்தோஷமாகவே பிரிந்தார்கள். மேம்போக்காய் ரத்தன்ராஜைப் பற்றி நாராயணன் வந்து சொன்ன அபிப்பிராயம் - "லேசுப்பட்டவனில்லை அவன்!" அவனிடம் நாராயணனைப் பற்றி ரத்தன் ராஜ் சொன்னது 'ம்ஹவும்! தேறாது அவனும் தேறமாட்டான்'

வாழ்க்கை மின்னியிடம் இப்படித்தான் விளையாடியது பஸ்கள் எப்போதும் போல பல மைல்கள் தூரம் ஓடின. மாலை இருள் வேளைகளில் கொல்லைப்புறம் மின்னியின் வீட்டுத் தோட் டத்து வேலியோரங்களில் மீண்டும் மீண்டும் ரத்தன்ராஜ் நின்று பேசினான். அவளை நோக்கி இருளில் நீண்ட அவனது கைகளை ஒதுக்க முடியாமல் அவற் றில் சிக்கினாள். இரவுகளில் துக்கம் அண்டாது புரண்டு புரண்டு அவனை நினைத்துப் பதறும் போது நாராயணனின் அடிகள், உதைகள் அறைகள் தந்த நீலம் உடம்பில் பரவி விஷமாகி கன்னிப் போன வலிகள் ஒன்றினை ஒன்று தின்று தீர்த்து மகிழ்ந்தன. கனவுகளில் கூட நாராயணனே வருவது விசித்திரம் அவளால் வெளியே சொல்ல முடியாது.

பஸ் ஸ்டாண்டில் நிற்கவே வந்திருப்பது போல் வந்து சேர்வான் ரத்தன்ராஜ். பெரும்பாலும் மாலை வேளைகளில் ஏதாவது ஒரு பஸ்ஸுக்கு ரத்தனும் மின் னியும்!

"எப்போ வந்தேள்? ரொம்ப நேரமாய்டுத்தா? இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தி' -

"என்ன வேலை? ரொம்ப வேலை இருக்குமே ஓ! சரி சரி'

"ஆரம்பிச்சிட்டேளா அசிங்கப் பேச்சே!'188 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"இதிலென்னடி அசிங்கம் ? உள்ளதுதானே?" "நான் சொல்லாமெ உங்களுக்கு தெரிஞ்சுட்றதோ?” அவள் பல கதைகள் சொல்வதுண்டு மின்னிக்கு பொய் வாராது. கஷ்டமே அங்கேதான் ஆரம்பம். மின்னி பைத்தியம்தான் அப்பா கேட்பார்: " யாரோ டடி சுத்திண்டிருக்கியாம்?"

'ரத்தன்ராஜ்ன்னு ஒருத்தர்' 'தர் - என்னடி தர் யாரவன்?" 'அதான் சொல்றேனே அவனோட சுத்தறேன்னு.கல்யாணம் பண்ணிண்டா அவனெத்தான் பண்ணிப்பேன்'

'அடிப்பாவி" அம்மா கேட்பாள் - “ஏண்டி மீனாட்சி அவனெத்தாம் பண்ணிப்பேன்னு எப்படி சொல்றடி பொண்ணே பயில்வான் மாறி ஆளும் உடம்புமா இத்த பெரிசா இருக்கான். பயமாக்கூட இல்லையோடி நோக்கு?"

'பயம் என்னம்மா?" "என்ன தைரியமா சொல்றேடி அவனெத்தாம் பண்ணிப்பேன்னு அடி யம்மா.நேக்கு இப்படி ஒரு பெண்ணா?"

"...என்னா அவ கொழந்தை நீங்க யாரானும் புத்தி சொல்லப்படாதா?" - எதிராளத்து கோமதிமாமி திட்டுவாள்.

“ஏண்டி அந்த பயலெனா கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பண்றி யாம்'

"ஆமா மாமி' "அடிப்பாவிப் பெண்ணே புத்தி கெட்டுப் போய்டுத்தா நோக்கு?" "அவன் கிருஸ்துவப் பையன்னா?" 'அதனாலென்ன மாமி ஏசு கூட சாமிதானே?" "அவர் ஸ்வாமிதான் இவன் ஸ்வாமியில்லையேடீ?" "எனக்கு இவர் ஸ்வாமிதான் மாமி." வாயடைத்து நிற்பாள் கோமதி மாமி. இந்தப் பொண்ணு ஐயோ! புத்தி கெட் டுப்போச்சு!

ரத்தன்ராஜ் கேட்பான் அவளிடம் "என்னடியது? தெருவுல எல்லாரும் கேக் கறாங்க என்னத்தான் கேக்றாங்க என்னத்தான் கட்டிக்கப் போறேங்கறி யாமே?"

"ஆமாம்!" "அப்ப - எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டே இருக்கேன் வாடீன்னு' "ஆமா சொல்றேள் நானும் சொல்லியாச்சு என்னால ஓடி வர முடியாது. நீங்க யாரையானும் கல்யாணம் செய்துக்கங்க நீங்க செளக்யமா இருக்கேன் னுட்டு, எனக்கு இது போறும்."“எது போறும்? எது போறும்?"

'இதுதான்'

பளீரென்று விழும் அறை - வேலியோரத்தில் நின்றபடி இது நடக்கும் போது முற்றத்திலிருந்து.

....அம்மா கூப்பாடு கேட்கும்- "அந்தக் கடங்காரப் பயலண்டை அடிவாங் கறாளே! நாராயணா'

'போய்ப் பாரேண்டா அடிப்பாவி கட்டால போறவளே!"

நாராயணன் வேலியோரம் வருவான்.

அவள் எதிர்கொண்டு போவாள். நாராயணனைக் கடுத்தபடி

"யாரது அவன்தானா?"

"ஆமாண்டா!'

"என்ன திமிர் உனக்கு'

அவள் எதிர்பார்த்தபடி அறை விழும். கையை முறுக்கி கண்மண் தெரியாமல் உதைப்பான். முதுகில் மிதி விழும். போய்க் கொண்டிருக்கும் வன் னியர் சொல்வார். "அட விடு நாராயணா தெரிஞ்சு போச்சு இனிமே என்ன பண்ன?"

அவளுக்குப் பதவி உயர்வு வந்தது கண்ணாடிப் பிள்ளையார் கோவிலுக் குப் போனாள். அவனை இப்போதெல்லாம் பார்க்க வேண்டும் என்றால் கண் ணாடிப் பிள்ளையார் கோவிலுக்குத்தான் போக வேணும் இல்லை என்றால் ரத் தன்ராஜின் காரஜிக்குப் போக வேணும்.

காருக்கடியில் படுத்துக் கொண்டு ஸ்பானர்களாலும், சுத்தியலாலும் கார்க ளையும், ட்ரக்குகளையும் தட்டித் தட்டி முறுக்கி எண்ணை ஊற்றி க்ரீஸ் அடித் துக் கொண்டிருப்பான். அவன் ஒரு இரும்பு வேலை செய்கிற முதலாளி. மெக் கானிக் அவன் அப்பா கொடுத்த தொழில் சொத்து எல்லாம் அதுதான்.

அங்கே வரக்கூடாது என்பது அவன் உத்தரவு

போகாமல் முடியாது என்று மின்னி அங்கேயும் போய் நிற்பாள்.

சட்டையில்லாமல் உடம்பு முழுவதும் க்ரீஸ்ஸும், ஆயிலும் கறுப்பு மண்டி, மையும் தீற்றியிருக்கும் அவளைப் பார்த்ததும் அப்படி எழுந்து விடுவான்.

"எங்கேடி வந்தே"

"பார்க்கணும்தான் வரப்படாதா?"

"பார்த்தாச்சில்ல போயேன்!"

-வினோதமாய் சிரித்துக் கொண்டு நிற்பாள் மின்னி.

'மீனாட்சின்னு கூப்ட மாட்டேளா?"

"என்னத்துக்கு?"

"சாந்தாவுக்கும் கல்யாணம் நிச்சயமாய்டுத்து?"

| - - - - + "... r - - ++ ஒஹோ அப்புறமா உனக்காக்கும்? கல்யாணம்'190 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"என்ன கிண்டலாயிருக்கா? வாண்டாம்பேள் போலிருக்கே" "அடப்போடி நீயும் உங்கல்யாணமும்' "அதில்லே - கண்ணாடிப்பிள்ளையார் கோவிலுக்கு வாரேளா?" "என்ன விசேஷம்?" "கையை விடுங்கோன்னா?" 'இது வாண்டாமாக்கும்" "எழவாப்பேச்சு அட" "பின்னே ஏண்டி வர்றியாம்?" "எனக்கு. எனக்கு ப்ரமோஷன் ஆயிருக்கு வந்து..." 'கண்ணாடி பிள்ளையாரண்டை வேண்டியிருக்கேன்..." "புள்ள வரம் கேட்டிருக்கியாக்கும்?" விக்கித்துப் போய் விடுவாள் மீனாட்சி. அவளையே பார்த்து நிற்பான் அவ னும் அவன் மாதிரி குழந்தை அவனைப் போலவே பிரம்மாண்டமான சக்தி மிக்க பெரிய குழந்தை அட அவன் அவள் கேட்டு வந்த பிரார்த்தனை அது தான். ரத்தன்ராஜிடம் பலதடவை சொன்ன ஆசைதான் அது ஆமாமா அவ ளுக்கு ஒரு குழந்தை வேண்டும். கொழு கொழுவென்று சிவப்பாய், அழகாய், ரத்தன்ராஜ் போல வலிமையாய், ராட்சசதனமாய், அவளைக் காப்பாற்ற ஒரு குழந்தை ஒரே ஒன்றுதான். தாங்க முடியாது அம்மா மாதிரி நிறைய

நாராயணன் அவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டுதான் இருந்தான். அவளுக்கு இப்போது வயது முப்பத்தைந்து அவள் சிநேகிதிகள் எல்லாம் பிள்ளை பெற்று எடுத்து விட்டார்கள். நாராயணன் அதைவிட நல்ல வரன் தேடி னான். இன்னும் நல்லது வந்த வரன்களைத் தள்ளினாள். அம்மா அழுது கொண்டே இருந்தாள். அப்பா மெளனமாய் பார்த்துக் கொண்டேயிருந்தார். ரத் தன்ராஜின் பஸ்கள் எப்போதும் குறுக்கு நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. சிநேகிதிகள் இப்போதெல்லாம் அவளைக் கேலி செய்வது கூட இல்லை. அவள் தலையில் இரண்டு முடி நரை கண்டபோது அம்மா பின்னி விடும் போது பிடுங்கி கையில் எடுத்தாள்.

சுமுகமாய் இருந்த வேளை ஒன்றில் தைர்யமாய் நாராயணனிடம் சொன் னாள் மின்னி இப்படி இப்படி -

"தங்கக் கட்டி மாதிரி எனக்கு ஒரு கொழந்தை பெத்துக்கணும்டா' "உன் மாப்பிள்ளை கிட்ட வாங்கினுட முடியாது. மீனாட்சி யார் ஆம்ப டையானா வரானோ அவனண்டை கேளு'

"ஏன் மாப்பிள்ளை கிட்டே கெடைக்காதுங்கறே? எனக்கு ரத்தன் மாதிரி கொழந்தைதான் வேணும்'

அவளறியாமல் வந்துவிட்ட வார்த்தைகள் அது வேணும் என்று சொன்ன தில்லை.அங்குசம் |9||

பளிச் பளிச் சென்று விழும் அறைகள் நாராயணனை இனம் காட்டும். தூண் கள் மாதிரி இரண்டு கால்களிடையே கிடந்தாள் மின்னி, கழுத்தை நெறிக்கும் இரண்டு கைக்ள், குப்புறத் தள்ளி முதுகில் நிமிர்த்திப் போட்டு மாரில் அறை யும் இரண்டு பலிஷ்ட்டமான கைகள்.

இப்படி (நீண்ட காலம்) இந்த அடி உதைகளில் நாராயணனும், மின்னியும் பத்து நிமிடங்களில் திருப்தியாவார்கள். கசங்கிக் கிடப்பாள் மீனாட்சி.

நாராயணனிடம் மின்னிக்கு எந்த வருத்தமும் எப்போதும் இல்லை. முப் பத்தைந்து வயதாகியும் இன்னும் பிரியாத இருப்பும், உடல்வாகும். இன்னும் எதற்காக காலையில் ஸ்தோத்திரங்கள் முணுமுணுத்து இருள் பிரியுமுன் கிணற்று ஜலத்தின் வெது வெதுப்பில் குளித்த ஈரத்தோடு காக்கும் நோன்புக ளும், பட்டினிகளும் விரதங்களும், இரவில் வெகு நேரம் தனியே படுக்கையில் உட்கார்ந்து சொல்லும் கவசங்களும், ஜெபங்களும், புரியாவிட்டாலும் ஓயாமல் முனகும் ஸம்ஸ்க்ருத சுரமஞ்சரிகளும், ஸ்துதிகளும், யாருக்காக...!? நாராயண னுக்கும்தான் பிறக்காத தன் ரத்தினக் குட்டிக்கும்தான். முரட்டுத்தனமான கசங் கலில் பஸ்களில் இரைச்சலில் நசுங்கி ரத்தனிடம் சிக்கி, நசுங்குவது எதற்காக? உடம்புதினவு அடங்கவா? அவள் பெருமூச்சு அவளைச் சுடும். "என்னடி இப் படி நீயா மூச்சு விட்டுக்கிட்டு வர்றே?" என்பான் ரத்தனராஜ். அவள் தியா னத்தை சொல்லி முனகிக் கொண்டேதான் வருவாள். ஸுப்ரமண்யம் அரம்சாந் தம் கெளமாரம் கருணாலயம் க்ரீடஹாரகேயூர மணிகுண்டல பண்டிதம் ஷண் முகம் யுகஷட் பாகஹீம் ஸ்லாத்யாயுதகர்ணம் ஸ்மிவத்ரத்ன ப்ரஸந்நாபம் ஸ்து யமானம்...'

ரயில் தஞ்சையை நோக்கி போய்க் கொண்டிருக்கும். வழக்கமாய் அவள் அலப்புகிற அலப்பலைக் கேட்டுக் கொண்டிருப்பான் ரத்தன்ராஜ் அவள் பேச்சு மழலை, மனசும்!

"இன்னும் என்ன பண்ணப் போறேள்? போதும் சீக்கிரம் யாரையானும் கல் யாணம் பண்ணிடுங்கோ' ரத்தன்ராஜ் சிரிப்பான். "சும்மா இருக்க மாட்டியாடீ" என்பான். ரயிலில் இருவரும் அசைவின் ஸ்பர்சத்தில் ஆழ்ந்திருப்பார்கள். ரத் தன்ராஜ் பலதடவை இதையே திருப்பிச் சொல்லியும் இருக்கிறான். இருவருமே ரொம்பவும் தன்னிச்சையானவர்கள் ரத்தன் எப்போதவாது குடிக்கிறதுண்டு. நன்றாகவே மூச்சுமுட்ட குடித்து தகராறில் கிடப்பான். ரத்தன்ராஜூக்கு ஒரு குடும்பமும் மண்ணும் இல்லை. இனியும் இல்லை என்பான். தனியாகவே குழந் தையிலிருந்து காராஜிலே வளர்ந்தவன். அப்பா பதினைந்து வயதிலேயே போயாச்சு யாரும் உறவு தேடி வர. கூடி நிற்க எதுவுமில்லை. எப்போதாவது விஸ்கி இருந்தது. மீனாட்சியும் இருந்தாள்.

முதலில் அவளைச் சந்தித்தபோது அவளுக்குப் பதிமூன்று வயது பைத்தி யம் பிடித்தது. இப்போது அவனுக்குப் பாதி மனிதன் ஆயுசு நெருங்கியாயிற்று. பதிமூன்று வயதில் அவளைப் பார்த்த முதல் நாள் ஞாபகம் அப்படியே அச்சா லாய் விழுந்து விட்டது மனசில் வாழ்க்கையின் பொருள் புரியாத அந்த அவ தியிலும் அவளது முதல் ஸ்பர்சத்தை மறக்க முடியவில்லை. மாலைநேரம் தெரு192 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

முனையில் ஒரு அரசியல் கூட்டத்தில், கல்லெறி கலாட்டா போலீஸ் தடியடி ரோட்டில் ஜனங்கள் பயந்து சிதறி தேங்காய் சிதறுவது போல் பதறி நாலா புறங் களிலும் ஓட போலீஸ் கண்ணிர் புகை வீச்சு எங்கும் செவிடுபட வெடிக்கிறது. புகை எங்கும், ஜனங்களில் நடுவே மீனாட்சியும் சிநேகிதிகளோடு ஓடி வருகி றாள்.

கீழ வீதியில் தனது கராஜின் வெளியே நின்று கொண்டிருந்த ரத்தன்ராஜ் மீது வந்து ஓடிவந்து புரண்டு விழுந்தாள் மீனாட்சி. இன்னும் இரண்டு பெண்கள் தடு மாறி விழாமல் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றான் ரத்தன். கீழே விழுந்து பதைத்துக் கொண்டிருந்த பெண்ணைத்துக்கி விட்டான். கூட்டம் மேலும் ரோடு முழுவதும் ஒடிக் கொண்டிருந்தார்கள். துக்கிவிட்ட பின்னும் இன்னும் ஒருத்தி கீழே கிடந்தாள். கால்கள் பின்னக் கிடந்தாள். அவன், அவளை கீழே குனிந்து கைகளைத் தோள்களைப் பிடித்துத் துக்கிவிட்டான். அவள்தான்.

அழுது கொண்டிருந்தாள் மின்னி. தலை எல்லாம் மண், கைக்குட்டையால் தட்டிவிட்டு அழாதே என்று ஆறுதலாய் பேச முயன்றான். அதுதான் அவளை முதலில் பார்த்தது. பின் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவன் கூப் பிட்டு நிறுத்திவிடுகிறான். ஏனென்று தெரியாமலே நின்றாள் மின்னி. பேசும் போது வெட்கமாய் இருந்தது. பேசாமல் அவனைத் தாண்டிப் போக முடிய வில்லை. அவளைப் பார்த்ததும் நின்று போவாள். அவன் அவளை காராஜிக்கு வராதே என்று சொன்னான். அவள் வராமல் இருந்ததில்லை. அவனிடம் என்ன இருந்தது என்று அவள் யோசித்தேயில்லை. அவளைத் தேடி அவன் வந்தான். ரத்தன்ராஜ் என்றாள். சுருட்டிக் கொண்டான். மீள அவள் தயாராயில்லை. அவள் அவனிடம் அழுந்திப் பேர்னாள். அவனும்

யானை ஒன்று நின்றது தெருவில். ரத்தன்ராஜைப் பார்க்க வேகமாய் போய்க் கொண்டிருந்தாள் மின்னி. எல்லோரிடமும் தும்பிக்கை நீட்டி வாங்கித் தின்றது யானை. யானை எப்போதும் பயம், மின்னிக்கு சிறு குழந்தையிலி ருந்து யானையைப் பார்த்து பயந்து ஜூரம் வந்து சுகமாகவே அவளுக்கு பத்து நாளாயிற்றாம். அம்மா சொல்வாள். ரத்தன்ராஜை முதலில் பார்த்தபோது அவ ளுக்கு யானையைப் பார்த்து பயந்த கதையாயிற்று. குப்புற விழுந்து கால் பெரு விரலில் காயத்துடன் எழுந்து நின்றபோது பயந்துதான் ஓடினாள். பின்னரும் அந்தப் பக்கம் போகப் பயந்தாள்தான். யானை வந்தது. தும்பிக்கை நீட்டி அவ ளைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டது. பின்னர் இறங்கவே முடிய வில்லை. இப்படி ஒரு கனவு எப்போதும் ரத்தன்ராஜ் முதலில் அழைத்தபோ தும், முதலில் கொண்டுபோனபோதும், கூட அவள் உதறி விலகாத காரணம் என்னவாம்?

யானைக்கு அங்குசம் இல்லை!

இப்போது அங்குசம் வேண்டாம்!

ரத்தன்ராஜூம் அவளும் இப்போது கல்யாணம் செய்து கொள்வதை யாரும் தடுத்துவிடமுடியாது. எல்லோருக்கும் தெரியும். நாராயணனும் கூடவேண்டாம் என்று சொல்ல முடியாது. அம்மா எல்லா பெண்களையும் கரையேற்றிவிட்அங்குசம் 193

டாள். மின்னிக்கு வர்ற மாப்பிள்ளையெல்லாம் தட்டிக் கிட்டுப்போய் கொண்டே இருப்பதைத்தான் எல்லோருக்கும் விரும்புகிறமாதிரி இருந்தது. யாரும் எந்த முடிவையும் விரும்புகிற மாதிரி இல்லை. இப்படியே இருக்கட் டுமே அவள் -

ரத்தன்ராஜ் இழுத்துக் கொண்டு ஒடமாட்டான். மின்னியும் போகமாட்டாள். போய் என்ன செய்ய? அப்படியெல்லாம் ஓடுகிற வயசும் தாண்டிவிட்டது அல்லவா? நண்பரோ உறவோ யாரும் இந்த கல்யாணத்துக்குத் தடையும் இல்லை சம்மதமும் இல்லை. யானை திடீரென்று மிரண்டது. தெருவில் கடைகள் நொறுங்கின. பாத்திரக்கடைகள் தூளாகின. மிதியுண்டு செத்தவர் பதிமூன்று பேர் பாகனுக்கு இடுப்பு முறிந்தது. அல்லோலகல்லோலம். கொஞ்சநேரத்தில் அந்த தெரு மைதானமாகி, மயானமாகியது. யானைக்கு மதம். மீனாட்சி ஓடி কোণা,

அவள் ஓடிப்போய் நுழைந்த இடம் ரத்தன்ராஜின் காராஜ் நிறைய முன் னால் உடைசல் கார்கள், லாரிகள் ரத்தன்ராஜின் உதவியாட்கள் இஞ்சின்களை மூடிக் கொண்டும் ஓடவிட்டுக்கொண்டும், தண்ணீர்ப் பீய்ச்சி கழுவிக் கொண் டும் இருந்தனர். எல்லோரும் யானை மிரண்டதும் வாசலுக்கு ஓடி கதவைச் சாத் தியபோது அவள் மட்டும் உள்ளே ஒடி வந்தாள். வியர்த்து விறுவிறுத்தபடி கேட்டாள்.

"ஐயா இருக்கிறாரா?" 'உள்ளே இருக்கிறார் போங்கம்மா!' அவளுக்குச் சலிப்பாக இருந்தது. அவனைப் பார்க்க, பேச. ஆனாலும். ஆசை அண்ணா நாராயணனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது. சொல் லத்தான் அங்கே போனது ஏகப்பட்ட கருநிறம் பூசிக் கொண்டு, ஒரு லாரியின் அடியிலிருந்து வெளியே வந்தான் ரத்தன்ராஜ் கைகளை அழுக்கு வேஷ்டி துணிக்கூளத்தால் துடைத்துக் கொண்டே அவள் அருகில் வரும் அவனைப் பார்த்தபோது பெருமிதமாய் இருந்தது அவளுக்கு பார்க்கும்போதே இந்த சந் தோஷம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? இதன் அர்த்தம் புரிந்தால், அவளுக்கு அங்குசம் கிடைத்துவிடும், யானைமேல் அம்பாரிதான்

சுற்றிலும் பார்த்தபடியே அங்கு நின்ற லாரி மறைவில் போய் நின்றார்கள் இருவரும் அவள் கையைப் பிடித்தான். தொடாமல் அவனால் பேசமுடியாது. விலக்கியபடியே விலகினாள் மின்னி. விலகவிடாமல் நெருங்கிக் கொண்டான் சூழ்ந்து. -

'நாராயணனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு உங்களண்டை சொல்ல வந்தேன்' என்றாள்.

"என்ன சொன்னே? நாராயணனுக்கு கல்யாணமா?" "ஆமா, ஏன் அப்படி முழிக்கிறீங்க?" சிரித்தாள் மீனாட்சி.194 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"வயது ஐம்பத்தஞ்சுக்கு மேலே இருக்காது? உங்க வீடலே மூத்தவன்தானே அவன்?'

'அதனால் என்னா ஆயிடுத்து? பொண்ணு எங் கூடத்தான் வேலை செய்றா. அவளுக்கு இருபது வயசுதான்'

"அடுத்தது உன்னோட கல்யாணமா? யாரு மாப்பிள்ளை?" "இந்தப் பேச்சு என்னத்துக்கு பண்ணிப்பேளா யாரையாவது?" "பின்னே உன்னையா பண்ணிக்கப்போறேன்?" "அப்பாடா கஷ்டம் தீர்ந்ததுடா பகவானே பொண்ணு பார்த்தாச்சா?" 'நாராயணனுக்கு பார்த்தமாதிரி எனக்கும் ஒண்ணு பார்த்துடச் சொல் லேன்."

"வேற வேலை இல்ல பாருங்க உங்களுக்குப் பொண்ணு பார்க்க வேண் டியதுதான்."

-எத்தனை பேச்சு, எத்தனை காலம் இப்படியே போயிற்று தெரியாது. கடை சியில் ஒருநாள்.

பஸ் ஒன்றில் வந்து இறங்கி ஏழு மணியளவில் காத்திருந்த அவள் அவ ளைப் பார்த்ததும் எழுந்து கொண்டாள். "கொஞ்சம் லேட்டாச்சு ரொம்ப நேரம் காத்துக்கிட்டு நிக்கிறியா? ஆறு மணியாகியும் நான் வர்லேன்னா நீ பாட்டுக்கு தஞ்சாவூர் பஸ் ஏற வேண்டியதுதானே?' என்று கேட்டான் ரத்தன்ராஜ்.

ரொம்ப அழகாய் நாலுமுடி நரைசுருண்டு காற்றில் பறந்தது அவளுக்கு. அவனுக்கு ஒரு நரை இல்லை. முரட்டுச் சுருட்டை எல்லாம்.

"நீங்க எப்ப புறப்பட்டேளாம் தஞ்சாவூர்ல?" 'அஞ்சே முக்கால்." “வந்திருக்கவே வேண்டாம். வேஸ்ட் இப்ப மணி என்ன தெரியுமா? ஏழரை வந்து புடிச்சிட்டேனே!"

"வந்துதான் புடிக்கப் போறேளாக்கும் இனிமே!" வானம் கறுத்துக்கூடிக் கொண்டிருந்தது. மழைத்துளிகள் பெரிசு பெரிசாய் விழுந்தன. அடர்த்தியாய்ப் பெய்ய இன்னும் பத்து நிமிடமாகும். தஞ்சாவூர் பஸ் ஒன்று கிளம்பியது.

'மழை வர்றது. இதுல ஏறிடலாமா?' சாவதானமாய் சலிப்புடன் கேட்டாள் மீனாட்சி.

'ஓ போகலாமே" அவனும் சலித்தான்! "அடுத்த பஸ்ல போனா என்ன?" "அதுவும் சரிதான். ஆனா சந்துமுக்குல நாராயணன் காத்துக்கிட்டு நிப் பானே உதை விழுமே."

'நாராயணன் இப்போ உதைக்கிறதில்லே, பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் போறலே'

"அவ ஒதக்கிறாளோ என்னமோ?" மின்னல் வெட்டியது. பஸ் ஸ்டாண்டில் லைட்டுகள் போய் ஒரே வினாடியில் பஸ் ஸ்டாண்ட் இருண்டது. "ஹோ" வென்று பேரிரைச்சலுடன் மழை கொட்டியது.அங்குசம் 195

மெளனம் அவனாலும் தாங்க முடியவில்லை. வருத்தம் தோயப் பேசி

GŪTITET.

"மின்னி இனிமே என்ன? என்னோட அலையறது எனக்காக காத்திருக்கி றது எல்லாம் வாண்டாம் போதும் இன்னைக்கு கூட வர்றதாவேயில்லை. நான் வராம. வராமலே காத்துக்கிட்டேயிருந்துட்டின்னா என்ன பண்ணறதுன்னு நான் நேரமானாலும் பரவால்லேன்னு தான் இங்கே ஏழு மணிக்கு மேலதான் ஏறு வேன்னு தெரிஞ்சும் கூட வந்து சேர்ந்தேன். இனிமே காத்திருக்காதே நா வரலை நீயும் வராதே போ!'

'ஏன் சலிச்சுப் போச்சா?"

"யார் சொன்னா அப்படியெல்லாம்?"

"பின்னே வராதேங்கறேளே? நான் இனிமே யாரண்ட போவேன்?"

‘'எதுக்கு யார்க்கிட்டே போகணும்கிறே நீ?"

'எதுக்கும்தான்'

"என்ன வேணும் இப்ப உனக்கு?"

"கல்யாணம் வேண்டாம்!"

"பின்னே?"

"உங்களை மாதிரி..."

"மாதிரி?"

"ஒரு குழந்தை'

பயமாயிருந்தது மீனாட்சிக்கு. ஆனாலும் சொல்லியாச்சு அறை விழப் போகிற மாதிரி. அவனும் ஒரு நாராயணன்தான்.நாராயணன் மட்டும் இதை கேட்டுக் கொண்டாயிருந்தான். அடித்து நொறுக்கி அள்ளினான் ரத்தன்ராஜூம் அதயே.

"யாராவது கல்யாணம் பண்ணிண்டு நேக்கு ஒரு குழந்தை உங்களை மாதி ரியே அச்சாவாய் பெத்துக் கொடுக்கணும். இனிமே அவளைக் கல்யாணம் பண் ணிண்டு, சகிச்சுண்டு இருக்க முடியுமா? நான் உங்க கழுத்தை கட்டிண்டு தொங்க மாட்டேன்."

"பைத்தியம் மாதிரி பேசாதே" நடக்கிற காரியமா இது? - குழந்தை வேண் டுமாம், கல்யாணம் வேண்டாமாம்.

(சுபமங்களா, அக்டோபர் 94)

Saturday, 23 July 2016

பூங்காக்களின் தொடர்ச்சி - ஹூலியோ கொர்த்தஸர் ,லாஸ்கோவும் கலையின் பொருளும் - ழார் பத்தாய்:திணை இசை சமிக்ஞை


nagarjunan

பூங்காக்களின்  தொடர்ச்சி 

ஹூலியோ கொர்த்தஸர் 
திணை இசை சமிக்ஞை 29 மார்ச் 2008

பூங்காக்களின் தொடர்ச்சி - ஹூலியோ கொர்த்தஸர்


சில நாள் முன்பே வாசிக்கத் தொடங்கியிருந்தார் அந்த நாவலை. ஏதோ அவசர வர்த்தகக் கருத்தரங்குகளின் பொருட்டு வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்த நாவலை, எஸ்டேட்டுக்குத் திரும்புகிற ரயில் பயணத்தின்போது மீண்டும் திறந்தார். கதைக்கருவிலும் பாத்திரப்படைப்பிலும் கொஞ்சங்கொஞ்சமாகக் கவனம் செலுத்த முற்பட்டார். அன்று பிற்பகலில் எஸ்டேட்டின் பத்திரப்பொறுப்பு தொடர்பான கடிதத்தை எழுதி அதன் சொத்துரிமையைப் பகிர்ந்துகொள்வது குறித்து முகாமையாளரிடம் விவாதித்துப் பிறகு ‘ஓக்’ மரங்கள் நிறைந்த பூங்காவை நோக்கியிருக்கும் தன் வாசிப்பறையின் ஆழ்-அமைதியை நாடித் திரும்பினார், நாவலுக்கு.

தமக்குப் பிடித்தமான சாய்வு-நாற்காலியின் பின்புறம் கதவை நோக்கியிருக்க அதைப் போட்டார். சட்டென்று யாராவது வந்துவிடக்கூடிய சாத்தியப்பாடு ஒரு கணத்தில் தோன்றியிருந்தால்கூட நிரம்ப எரிச்சல்பட்டிருப்பார். நாற்காலியில் சரிந்து தம்முடைய இடக்கைவிரல்கள் நாவலின் பச்சை வெல்வெட் உறையை மீண்டும் வருட வாசித்தார், அதன் இறுதி அத்தியாயங்களை. பாத்திரப்பெயர்களை, அவற்றின் தம்முடைய மனப்பிம்பங்களை முயற்சியின்றியே நினைவில் வைத்திருந்தார். ஆக, தன் வசீகரத்தை, ஏன் சட்டென்றே, இவர்மேல் விரித்துவிட்டது நாவல்.

சுற்றியுள்ள பொருட்களிலிருந்தும் வரிவரியாகக் கழன்றுகொள்கிற - ஏன் வக்கிரமான - அந்த மகிழ்ச்சியை அனுபவித்தார். அதே நேரம், உயரமான சாய்வு-நாற்காலியின் பச்சை வெல்வெட் உறையைத் தம்முடைய தலை அவ்வப்போது தொட, கையெட்டும் தூரத்தில் ஸிகரெட் பல இருப்பதை உணர்ந்தபடி, பிரம்மாண்டமான அந்த ஜன்னல்களைத் தாண்டி, பூங்காவின் ’ஓக்’ மரங்கள் அடியில் கண்டார், பிற்பகல்-காற்றின் நாட்டியத்தை. காதலன்-காதலி இடையில் தோன்றிய அவலக்குழப்பத்தால் சொல்சொல்லாக உறிஞ்சப்பெற்று, அந்த பிம்பங்கள் மனதில் தங்கி வண்ணமும் இயக்கமும் கொண்டதாக மாற அவற்றில் மூழ்கிப்போனார்...

மலைப்பகுதித் தனியறையில் நிகழ்ந்தது அவர்களுடைய இறுதி சந்திப்பு. பதற்றமாக முதலில் வந்தது அவளே. அடுத்து, காதலன். அவன் முகத்தைக் கிழித்திருந்தது கிளையொன்றின் பின்னசைவு. ரத்தத்தை முத்தங்களால் அழகாக ஒத்தியெடுத்து அவள் வருடியதை உதறித் தள்ளினான். காட்டினுள் காய்ந்த இலைகளும் ஒதுங்கிய பாதைகளும் பாதுகாத்த அந்த ரகசியத்தாபச் சடங்கை மீண்டும் நடத்துவதற்காக அங்கே வரவில்லை அவன். அவன் மார்பை உரசி சூடேறிக்கொண்டிருந்தது கட்டாரி. துடித்தது அதற்கடியில் மறைந்திருந்த சுதந்திரமும். பக்கங்கள் ஊடே நாகங்களின் சிறுநதிச்சுழலென வேட்கையும் இரைப்பும் கொண்ட உரையாடல் ஓடிக்கொண்டிருக்க, நடந்த யாவும் காலமற்ற ஓருலகில் நிச்சயமாகித் தெரிந்தன. காதலனை அங்கேயே தங்கவைக்கும்படியாக அவன் உடலைச் சுற்றி இயங்கி அவள் வருடியது அவன் அந்தக்காரியத்தைச் செய்வதைத் தடுப்பது போல இருந்தாலும் அவள் விரல்கள் வரைந்ததோ அழிந்துபட வேண்டியதான அந்த இன்னொரு உடல் குறித்த கேவலமான கோலத்தை. வரப்போகும் குற்றச்செயலின்போது வேறிடத்தில் இருப்பதற்கான சான்றுகள், அதற்கு முன்பான எதிர்பாராத இடையூறுகள், தவிர்க்க வேண்டிய தவறுகள் யாவும் மறப்பதற்கில்லை ஆங்கு. அந்த நிமிஷத்திலிருந்து நுட்ப வரையறைக்குள்ளாகின கணங்கள் ஒவ்வொன்றும். ரத்தம் உறைய மீளாய்வாகும் அந்தச்செயலின் அத்தனை விபரங்களும் எப்போதோ ஒருகணம் நிற்பது கரமொன்று கன்னத்தை வருடுவதற்காக மாத்திரம்.

கவியத்தொடங்கிவிட்டது இருள்.

தத்தம் உடனடிக்கடமைகளை மட்டும் மனதில் இருத்தி அறைக்கதவு அருகே பிரிந்தனர் காதலர் பரஸ்பரம் காணாதபடி. வடக்கு நோக்கிப் போக வேண்டும் அவள். எதிர்த்திசையில் போன அவன் ஒரேகணம் திரும்பிப்பார்த்தான் அவளை. பறந்த விரிகூந்தலுடன் ஓடினாள். மரங்கள், புதர்களுக்கிடையில் குனிந்தவாறே அவனும். அஸ்தமனத்தின் மஞ்சள் பனியில் அந்த வீட்டை அடைகிற நிழற்சாலை தென்படுகிற வரை ஓடினான். சொல்லிவைத்தபடி நாய்கள் குரைக்கவில்லை. அதேபோல எஸ்டேட் மேலாளரும் அங்கில்லை. நடைப்பூங்காவின் படிகள் மூன்றைத் தாண்டி நுழைந்தான் அவன். நெற்றிப்பொட்டில் துடிக்கும் ரத்தத்தைத்தின் ஊடே அவள் வார்த்தைகள் வந்தடைந்தன அவனை. நீலநிற அறை முதலில். அப்புறம் வரவேற்பறை. பிறகு கம்பளம் விரித்த படிக்கட்டு. மேலே கதவுகள் இரண்டு. யாருமில்லை முதல் அறையில். இரண்டாம் அறையிலும்தான். ’பார்’ கதவு. அப்புறம் கையில் கட்டாரி. பிரம்மாண்ட ஜன்னல்கள் வழி பாய்கிற ஒளி. பச்சை வெல்வெட் உறையுடன் உயரமான சாய்வு-நாற்காலி. நாற்காலியில் நாவல் வாசித்துக்கொண்டிருக்கும் ஒருத்தரின் தலை.

--- Julio Cortazar, La continuidad de los parques, Final del juego, 1964.Julio Cortazar, Cuentos Completos 1, Madrid, 1994 , p. 291-2. Translated from Spanish by Paul Blackburn: The Continuity of Parks, Blow-Up and Other Stories, New York, 1968, pp. 55-56.

ஆங்கிலவழி முதல் தமிழாக்கம்: குதிரைவீரன் பயணம் இதழ் 3, 1994.

ஸ்பானிஷ் மூலத்தை வைத்து மறு ஆக்கம்: 2005. புகைப்படம் - அந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் போன போது கண்ட சிற்பம், அங்கே பிறந்த கொர்த்தஸரின் தலை.







லாஸ்கோவும் கலையின் பொருளும் - ழார் பத்தாய்


தொடர் இணைப்புகள்:

லாஸ்கோ அல்லது கலையின் பிறப்பு - ழார் பத்தாய்யின் முன்னுரை

லாஸ்கோ எனும் அற்புதம்: கலையின் பிறப்பு - ழார் பத்தாய்

லாஸ்கோ குகை-ஓவியம் பற்றி ழார் பத்தாய்

விழியின் கதை நாவலுக்குப் பிறகு - ழார் பத்தாய்

விலங்கினத்தின் இந்த வரியாடல் கலைவண்ணமாய் மலர்ந்த தருணத்தின் முன்பான யுகத்தில் இங்கு வளர்ச்சியற்று வாழ்ந்த இனத்தாரின் பல்திரள் குறித்த எச்சங்களை அகழ்ந்தெடுத்து, சதையற்று இறுகி உருக்கொண்ட உலர்-என்புகள் இவையென அறிந்தார் ஆய்வாளர். ஆம், லாஸ்கோவுக்குப் பல்லாயிரமாண்டு முன்பே, அதாவது சுமார் ஐந்து லட்சம் ஆண்டு முன்பே, இவ்வுலகின் பரப்பில், உழைப்பேறிவிட்ட இருகால் உயிரியர் பல்கிப் பெருகத் தொடங்கினர். இன்று தொல்படிவங்களாகிவிட்ட என்புகளைத் தாண்டித் தம் கருவிகள் தவிர வேறெதையும் இவர் நமக்கு விட்டுச் சென்றாரில்லை! பண்டைய மனிதராம் இவர் ஓரளவில் அறிவார்ந்தவர் என்பதை உறுதிசெய்வன இந்தக் கருவிகள். ஆனால் கரடாகத் தொடர்ந்த இவர்தம் அறிவின் ஒரே பயன்பாடு, இவர் கைக்கொண்ட ஆதிக்காலத் தடிகள், என்புத்துண்டுகள் மற்றும் கூரான சிக்கிமுக்கிக் கற்கள் உள்ளிட்ட எளிய சில கருவிகளை ஆக்கும் வரை சென்று நின்றது. இந்தப் பொருட்களினின்றும் இவை காட்டும் இவர்தம் பருண்மச் செயல்பாட்டினின்றும் நாம் பலவும் வாசிக்க இடமுண்டு; இருந்தாலும் கலை தொடர்புறுத்துகிற, கலை மட்டுமே தொடர்புறுத்தி உறவாடும் உள்ளக வாழ்வின் சாயையை, சாவற்ற வெளிப்பாடு தானல்ல என்றாலும் குறைந்த பட்சம் உறுதியுடன் நீடிக்கும் உய்வாய்க் கனன்றுயிர்க்கும் அந்த உள்ளக வாழ்வின் வண்ணச்சாயையை, லாஸ்கோவைக் கண்டறியுமுன் நாம் பெற முடிந்ததே இல்லை!

கலைக்கு இப்படித் முற்றுமுடிபான, எண்ணிலடங்கா மதிப்பை அளிப்பது சற்று அந்நியமாகத் தோன்றுகிறதோ! அதே நேரம், கலை பிறக்கும் பொழுதில்தான் அதன் முக்கியத்துவம் இன்னும் ஆயத்தம்பெற்று, அதைக் காத்திரமாக உணரும் சாத்தியமும் உண்டெனத் தோன்றுகிறதல்லவா! ஆக, இப்படித் தம்மில் வேறுபட்டுச் செல்வன, கலையும் தினசரிப் பயன்பாடும். தினசரிப் பயன்பாட்டின் எதிரில், அதை மயக்கும் சக்திகொண்டதாய், உணர்வில் வளர்ந்து பெருகி அந்த உணர்வை முன்வைத்து உரையாடுவதாய், குறியீடுகளைப் பயன்பாடேதுமற்று உருவாக்கும் வினைச்செயலாய், தன்னை முன்வைக்கும் கலை. ஆக, இதைக் காட்டிலும் இங்கு கலைக்கும் தினசரிப் பயன்பாட்டுக்கும் தனிச்சிறப்பான, அழுத்தமான வேறுபாடென ஏதுமில்லை! மாறாக இந்த வண்ணக்கலைக்குப் பயன்பாடெனும் காரணங்கள் உண்டெனக் கூறும் விளக்கங்களுக்குப் பிற்பாடு திரும்புவோம். இப்போதைக்கு இந்த அதிமுக்கிய வேறுபாட்டைக் குறித்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

லாஸ்கோவின் நிலத்தடிக் குகையில் நேரே நாம் நுழைய, வலுவான உணர்வொன்று நம்மை ஆட்கொள்ளும்; ஓர் அருங்காட்சியகத்தில் வைத்து மனித இனத்தார்தம் பண்டுறைந்த எச்சங்களையோ அவர்தம் கற்கருவிகளின் நேர்வரிசைகளையோ காட்டும் கண்ணாடிப்பெட்டிகள் முன்பு நிற்கும்போது வாராத உணர்வு நம்மில் வந்தடையும்; எக்காலம் சார்ந்த கலைப்படைப்பாயினும் எக்காலமும் நம்மில் கிளர்ந்தெழ வைக்கும் அதே பிரஸன்னமாம் உணர்வு, தெள்ளிய-சுழல வைக்கும் உணர்வு, லாஸ்கோவில் மீள மீள நம்மைத் தாக்கும். இந்த உணர்வு எப்படித் தோற்றங்கொண்டாலும் மனிதர் படைத்த இந்தப் பொருட்களின் அழகு நம்மை அள்ளுவது, நட்பெனும் கிழமையின் ஆன்மாக்களைப் பிணைக்கும் கொடையெனும் அன்பில்தான், அன்பெனும் இந்த ஞெகிழ்வில்தான். ஆக, நம்மில் இப்படிக் காதலாய்க் கசிவதும் அழகுதானன்றோ! நாம் விழையும் உவகையும் உயர்நட்பல்லவா என எக்காலமும் நம்மில் மீள மீள எழும் இந்த வினாவின் சாத்தியமான ஒரே விடை அழகுதானன்றோ!

விதையிட்ட பொருள் கலையாய் முளைப்பதன் சாரத்தை இத்துணை வலுவாய் வலியுறுத்துவதை வழக்கமாகச் செய்வதில்லை நாம். ஆனால் இங்கே நம் வினைநலன்கள் யாவற்றையும் தாண்டுமாம் இந்தச் சாரம்; நம் இதயத்தில் மறுகும் ஏதோ ஒன்றை ஊடுருவும் இந்தச் சாரம். லாஸ்கோ பற்றி நாம் மிக உள்ளார்ந்து உரைக்க வேண்டியதும் இதுவே! நம் தற்காலத் தன்னிலைகளினின்றும் எத்துணை சாத்தியமோ அத்துணை தொலைவில் கிடப்பதாய் முதலில் நமக்குத் தோன்றுவது லாஸ்கோ என்பதே இதன் காரணம்.

லாஸ்கோவை முதலில் காணும் பொழுதில் திகைத்தும் துணுக்குற்றும் சற்றே

பேச்சடைத்தும் போய், பிறகே அதைப் பொருள்படுத்தத் தொடங்குகிறோமென ஒப்புக்கொண்டாக வேண்டும். இதுவே மிகப் பண்டைய எதிர்வினை; எதிர்வினைகளில் முதன்முதலானது; காலமெனும் பேரிரவின் வழி வரும் இந்த வினை. உறுதியற்று மின்னும் மங்கிய ஒளி மட்டுமாய்த் துளைப்பதும் லாஸ்கோ குகையில்தான். ஆனால் இங்குக் கற்பாறைச்சுவர்களில் நழுவும் இந்தச் சாயைகளை மட்டும் நம்மில் விட்டுச் சென்ற மனிதர் பற்றி, வெற்றிடமெனும் சட்டகத்தில் வைத்துப் பின்னணியென ஏதும் கொள்ளாமல் கிடக்கும் இந்த வண்ணச்சாயைகளை மட்டும் நம்மில் விட்டுச்சென்ற மனிதர் பற்றி. ஏதும் நாமறியோம். காண அழகானவை இந்த வண்ணச்சாயைகள்; நம் கலைக்கூடங்களின் நயமிக்க ஓவியங்களைப் போலவே நம் கண்களில் வனப்பாகத் தோன்றுபவை இவை என மட்டும் நாமறிவோம்.

நம் கலைக்கூடங்களில் மிளிரும் ஓவியங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஒவ்வொன்றையும் தீட்டிய காலம், தீட்டியவர் எவார், பேசுபொருள் யாது, அந்தப் படைப்புக்கான அவர்தம் விழைவென்ன என ஏதாவது நாமறிவோம். அவற்றுடன் உறவாடிய வாழ்வின் பழக்க வழக்கங்கள், அவை உருவான காலகட்டக் கதைகளெனப் பலவும் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால் அவற்றின் உலகைப் போலன்றி லாஸ்கோவின் வண்ணக்கலை காட்டும் உலகாய் நாமறிந்ததும் மிகக் குறைவே.

இப்படி லாஸ்கோ பற்றி நாமறிந்த யாவற்றையும் தொகுக்கலாமா! தொகுத்தால் வருவன, அப்பொழுது வளங்கள் குறைவு, இந்த மனிதர் காட்டு விலங்குகளை வேட்டையாடிக் காட்டுக்கனிகளைப் பொறுக்குவதுடன் தம் எல்லைகளை நிறுத்திக்கொண்டவர், இவர் விட்டுச்சென்ற கற்கருவிகளும் என்புக்கருவிகளும் புதைப்புலங்களும் இவர் வளர்த்த அடிப்படைப் பண்பாடு பற்றி நமக்குரைப்பவை மிகமிகக் குறைவே என, இவ்வளவே! தவிர, லாஸ்கோ குகையின் காலத்தை அறிய விழைந்தாலோ, ஒரு பத்தாயிரமாண்டு அப்படி இப்படி வைத்து மதிப்பிட்டுத் திருப்தியடையத் தயாராக இல்லையெனில் அதுவும் சாத்தியமற்றுப் போகும்!

லாஸ்கோ குகையின் கற்பாறைச்சுவர்களில், விலங்குகளில் ஏறத்தாழ யாவற்றையும் இனங்காண முடிகிறது. கலைவண்ண முயற்சிகளை ஆங்கு தூண்டியது மந்திரவாதமெனக் கருதும் வழக்கமுண்டு. ஆனால் எழுதின வரலாறு தொடங்கப் பல்லாயிரமாண்டு முன் இங்கு வாழ்ந்தோரின் மந்திர நம்பிக்கைகளில், இவர் பங்கேற்ற சடங்குகளில் இந்த வண்ணக்கலையும் இதிலுள்ள உருக்களும் வகித்த துல்லிய இடம் பற்றி நாமறிய வழியே இல்லை! இவற்றை இதே கால கட்டங்களுக்கும் இதே நிலப்பரப்புகளுக்கும் உரிய வண்ணக்கலையுடன், மற்றக் கலைப்பொருட்களுடன் தொடர்புறுத்தி ஒப்பிடுவதைத் தவிர ஏதும் செய்ய இயலாத நிலையில் நாமுள்ளோம்; இந்த மற்றவற்றின் பொருளும் லாஸ்கோ போல மர்மமாகத் தோன்றுவதே! தவிர, எண்ணிக்கையிலும் இவை ஏராளம், ஏராளம்! லாஸ்கோவில் மட்டுமுள்ள ஓவியங்கள் நூற்றுக்கணக்கில்! அதே போல ஃப்ரான்ஸ் மற்றும் இஸ்பாஞ்ஞ நாட்டின் மற்ற குகைகளில் ஏராளம் ஓவியங்கள்! இவை யாவற்றிலும் மிகப் பண்டையதாக ஒருக்கால் இல்லாமல் போனாலும் நயமிகுந்தும் கட்டுக்கோப்புக் குலையாமலும் நமக்குக் கிட்டும் வண்ணத்தொகுதி, லாஸ்கோவே. ஆம், ஆழமான, அதே வேளை புதிரான இந்தக் கூற்றை, கலையெனும் பற்றற்ற செயலை, நிகழ்த்திச் செல்லும் சக்தியைத் தம்மில் முதன்முதல் வழங்கிக்கொண்ட இம்மனிதர்தம் வாழ்வும் எண்ணமும் பற்றி மேலதிகமாய்ச் சொல்ல இந்த வண்ணக்கலை தவிர வேறு ஏதாலும் இயலாது. அற்புதமானது, வலிய, நெருங்கிய உணர்வு கொண்டு நம்மில் உறவாடுவது, அதே வேளை அத்துணையும் புரிபடாமல் போகும் பண்பும் கொண்டது, லாஸ்கோவின் வண்ணக்கலை!

லாஸ்கோவின் கலையின் பொருள்தான் என்ன? அதை, தம்மை நெடிது உய்விக்கும் உணவாம் விலங்கை வேட்டையாடி இரையாக்கும் வேடுவரின் கொலைவேட்கையுடன் தொடர்புறுத்திக் காண வேண்டுமென ஆலோசனை கூறுவாரும் உண்டு. ஆனால், நம்மை மகிழ, கிளர்ந்தெழ வைப்பதும் வேடுவரின் பசியன்றி இந்த வண்ணக்கலையே என்பதால் இதன் ஒப்பற்ற அழகும் நம்மை விழித்தெழ வைக்கும் பரிவும் நம்மில் வலிக்க, நம்மைத் தடுமாறும் ஐயத்தில் விட்டுச் செல்லுமே இதன் பொருள்!

- ழார் பத்தாய்.

- Georges Bataille, Lascaux et ce que l'art signifie, Lascaux ou La naissance de l'art, Genève, 1955, traduit en tamoul.

Facebook

Tuesday, 12 July 2016

சா. கந்தசாமி By சாரு நிவேதிதா

கந்தசாமியின் முதல் நாவலான ‘சாயாவனம்’ 1964-ல் எழுதப்பட்டது. கதை நடக்கும் காலம் இன்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால். கதையில் ஓர் இடத்தில் பிபின் சந்திரபால் சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சு பற்றிய விபரம் வருகிறது. சுதந்தரப் போராட்டத்தில் காந்திக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர் பிபின். அப்போது மூன்று தலைவர்களை Lal Bal Pal என்று இணைத்து சொல்வார்கள். லாலா லஜபதி ராய், பால் கங்காதர திலக், பிபின் சந்திர பால். நாவலில் இன்னொரு இடத்தில் வரும் குறிப்பு இது:

வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை. அது தொழில் அல்ல. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் வாழ்க்கையே வேளாண்மையாக இசைந்து போகிறது. பல நூற்றாண்டுகளாக இழையறாமல் இருந்து வந்த அந்த முறை சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் தன் நிலையை இழக்க ஆரம்பித்தது’ என்று முன்னுரையில் சொல்கிறார் சா. கந்தசாமி. 25 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை மாவட்டம் முற்றிலுமாக தன் ஜீவனை இழந்து, நதிகளை இழந்து வறண்ட பாலையாகிவிட்டது. உதாரணமாக, நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வரும் வெட்டாறு கடலில் கலக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அந்த வெட்டாறில் நாவலின் நாயகனான சிதம்பரம் குளித்து நீச்சலடித்து மூழ்கி விளையாடுகிறான். இக்கரையிலிருந்து அக்கரை போகிறான். ஆனால் என் காலத்திலேயே (அறுபதுகள்) அந்த வெட்டாறு வெறும் ஓடையாகக் குறுகிவிட்டது. இப்போது வெறும் மணல் காடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பேரழிவின் ஆரம்பத்தைச் சொல்கிறது சாயாவனம்.

சா. கந்தசாமி

By சாரு நிவேதிதா

First Published : 10 July 2016 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/07/10/சா.-கந்தசாமி/article3521234.ece

1940-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் மாயவரத்தில் பிறந்தவர். இளம்பருவம் பூம்புகாரிலும் சாயாவனத்திலும் கழிந்தது. காவிரி கடலோடு கலக்கும் ஊர் பூம்புகார். மாயவரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிற்றூர், சாயாவனம்.

‘ஒரு வாட்டி தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை, கூறைநாடு சண்முகப் படையாச்சி, நாகப்பட்டினம் அப்துல் காதர், எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி எல்லாரும் இந்த வழியாத்தான் போனா. அவாளுக்கு ஒரு பெரிய மாலை போட்டோம்.’

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. இன்று உலகம் பூராவும் விவாதிக்கப்பட்டு வரும் சுற்றுப்புறச் சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளைக் குறியீடாகக் கொண்டு இயங்கும் நாவல், சாயாவனம். அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே சாயாவனத்தைக் கருதவேண்டும். நாவலில் ஒரு மரம் செடி கொடியின் பெயரோ அல்லது பட்சியின் பெயரோ இல்லாத ஒரு வாக்கியத்தைக் கூட காண முடியவில்லை. சாயாவனத்தில் வரும் தாவரங்களைப் பற்றி ஓர் ஆய்வே செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பூமியின் இருப்பே அதன் தாவர உயிர்ப்பைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியர்கள் விலங்குகளையும், விருட்சங்களையும், காற்று பூமி ஆகாயம் அக்னி போன்ற பஞ்ச பூதங்களையும் வணங்குவதைப் பரிகசித்த மேலை நாட்டினர் இன்று காடு மற்றும் காட்டுயிர்களின் பாதுகாப்புதான் மனித வாழ்வின் ஆதாரம் என்கிறார்கள். ஒரு யானை தினமும் முப்பது கிலோமீட்டர் நடக்கிறது. அதன் கழிவுதான் சில வனவுயிரிகளின் உணவாக இருக்கிறது. அதன் கழிவுதான் விருட்சங்களின் விதைகளை வனத்தில் ஒவ்வொரு இடமாக எடுத்துச் செல்கிறது. யானை இல்லையேல் வனம் இல்லை. ஓநாய் குலச் சின்னம் நாவலில் மங்கோலியர்களின் குலச்சின்னமாக ஓநாய் விளங்குவதன் காரணம், ஓநாய் இல்லையேல் மங்கோலிய இனமே இல்லை என்கிறார் அதன் ஆசிரியர். ஓநாய்கள் இல்லையேல் பனிக்காடான மங்கோலியாவில் மிக அரிதாகவே உருவாகும் புல்வெளிகளை ஆயிரக் கணக்கில் பெருகும் மான் கூட்டமே தின்று தீர்த்து விடும். அப்படி ஆகாமல் அந்தப் பிராந்தியத்தின் சமநிலை (eco balance) கெடாமல் இருக்க ஓநாய்கள் காரணமாக இருக்கின்றன. நாவலின் இறுதியில் ஓநாய்கள் அழிக்கப்பட்டு அங்கே மனிதக் குடியிருப்புகள் தோன்றும்போது அதன் இயற்கையான உயிர்ப்புத்தன்மை மறைந்து கட்டடக் கலாசாரம் ஆரம்பமாகிறது. அதுதான் apocalypse என்று சொல்லப்படும் பேரழிவு. இதையேதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சாயாவனமும் பேசுகிறது.


 

வனங்களையும் வனவுயிர்களையும் அழிப்பதன் மூலம், தான் வாழும் பூமிக்கே அழிவைக் கொண்டு வரும் மனித வாழ்வின் அவலத்தைக் குறியீடாக வைத்திருக்கிறது சாயாவனம். நாவல் முழுவதுமே வனமும் வனத்தை அழிக்கும் நான்கைந்து மனிதர்களும்தான். நாவல் இப்படித் துவங்குகிறது: ‘புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒரு மடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. ஒரு தனி செம்போத்து. இரண்டு பச்சைக்கிளிக் கூட்டங்கள்.

சற்றைக்கெல்லாம் வானம் நிர்மலமாகியது.

சிதம்பரம் குத்துக் குத்தாய் வளர்ந்திருக்கும் காரைச் செடிகளைத் தள்ளிக் கொண்டு, நாயுருவி கீற, ஒற்றையடிப் பாதைக்கு வந்தான்.’

‘பெரிய சாலையிலிருந்து கிளிமூக்கு மாமரம் வரையில் ஒரு கொடிப்பாதை. ஆலமரத்திலிருந்து முனீஸ்வரன் தூங்குமூஞ்சி மரம் வரையில் ஒரு பாதை. அப்புறம் இலுப்பை மரத்திலிருந்து கொய்யா மரம் வரையில் இன்னொரு பாதை... நொச்சியையும் காரையையும் தள்ளிக் கொண்டு புல்லிதழ்களைத் துவைத்தவாறு நடக்க வேண்டும்.’

நாவலில் சோட்டான் என்று ஒரு வார்த்தை வருகிறது. இது தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உரிய வார்த்தையா அல்லது மற்ற இடங்களிலும் உண்டா என்று தெரியவில்லை. புளியங்காயை நாங்கள் சோட்டான் என்று சொல்லுவோம்.

‘சிவனாண்டித் தேவர் கைக்கு எட்டிய கிளையைப் பிடித்து உலுக்குவார். புளியம்பழங்கள் சடசடவென உதிரும். அங்குமிங்கும் சிதறிக் காரையிலும் கருநொச்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கும் சோட்டான்களைப் பொறுக்கி மரத்தடியில் போட்டு விட்டுப் போய் ஆட்படைகளோடு திரும்பி வருவார்.’

‘காட்டாமணக்கு இலையைக் கிள்ளி, பாலை உதறி விட்டுக் கொண்டு, புன்னையும் கொய்யாவும் நிறைந்த மேட்டுப் பூமியில் ஏறினார் சாம்பமூர்த்தி. சற்றே உயர்ந்த பூமி. அங்கிருந்தபடி வனம் முழுவதையும் பார்க்க முடியாவிட்டாலும், முன்னே இருக்கும் மரஞ்செடி கொடிகளைப் பார்க்கலாம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சரஞ்சரமாய்ப் பச்சைக் கயிறு பிடித்தாற்போலப் புளியமரத்தையும், இலுப்பை மரத்தையும், பலா மரத்தையும் மீறிக் கொண்டு நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன.’

‘அக்காக் குருவி பரிதாபமாகக் கூவிக் கொண்டு தலைக்கு மேலே பறந்து சென்றது.’

‘நான்கைந்து நாரைகள் படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வந்து மரக்கிளையில் வந்து அமர்ந்தன.’

‘ஒரு மடையான் கூட்டம் பறந்து சென்றது. சாம்பமூர்த்தி ஐயர் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.’

‘மெல்ல நகர்ந்து செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு சிவனாண்டித் தேவரும் கணக்குப் பிள்ளையும் சென்றார்கள். பூவரசு மரத்தைத் தாண்டி, கூந்தல் பனை மறைவில் உள்ள ஐயனாரைக் கடக்கும் வரையில் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

வண்டி காத்தவராயன் இலுப்பை மரத்தைத் தாண்டியதும் கணக்குப் பிள்ளை, ‘மாமாவுக்கு ரொம்பக் கோபம்’ என்றான்.’

‘காய்ந்த சருகுகள் படபடத்தன. யாரோ வேகமாக ஓடி வருவது போல இருந்தது. உன்னிப்பாகப் பார்த்தான். நரி ஒன்று எதிரே வந்து நின்று, தலைதூக்கிப் பார்த்து விட்டு, ஒரே பாய்ச்சலில் ஓடி மறைந்தது.’

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குப் பக்கத்தில் இருந்த வனத்தில் நரிகளெல்லாம் இருந்திருக்கின்றன. 1970 வரை எங்கள் ஊரிலும் நரிகள் இருந்தன. இப்போது அங்கே காடுகளுக்குப் பதில் பிளாஸ்டிக் கழிவுகள் தான் மலைமலையாகக் குவிந்திருக்கின்றன.

‘அவன் மேலே பார்த்தான். ஆகாயமே தெரியவில்லை. பச்சைப் பசுந்தழைகளால் மூடப்பட்டிருந்தது. வானமே வனமாகி விட்டது போல ஒரு காட்சி - மேலும் கீழும் பச்சை; திசையெங்கும் பச்சை. இயற்கையின் சௌந்தர்யம் மிகுந்த வனத்திற்குள் அவன் மெல்ல மெல்லப் பிரவேசித்துக் கொண்டிருந்தான்.

பூவரசு மரத்தை மூடி மறைத்துக்கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருந்தது. அநேகமாக பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கிடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான கொடிகள்! நெட்டிலிங்க மரத்தில் குறிஞ்சாக் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது.’

‘சிதம்பரம் ஒவ்வொரு கொடியாக, கைக்கு எட்டிய கோவைக்கொடி, குறிஞ்சாக்கொடி, காட்டுப் பீர்க்கு, பிரண்டை எல்லாவற்றையும் அறுத்தெறிந்தான்.’

‘நான்கடிகள் பின்னுக்குச் சென்று தீவிரமான நோக்கோடு தன்னுடைய வேலையைத் தொடங்கினான் சிதம்பரம். சீமை காட்டாமணக்கு முதன்முதலாக வெட்டுண்டு சாய்ந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளைப் பூ பூக்கும் எருக்கு, மேகவண்ணப் பூ பூக்கும் நொச்சி - இவைகளை ஒரே மூச்சில் வெட்டித் தள்ளிக் கொண்டு காரைப் புதரில் நுழைந்தான்.

அநேகமாக வனம் முழுவதும் வளர்ந்து இருப்பது காரைதான். தண்ணீர் இல்லாத பிரதேசத்திலேயே செழித்து வளரும் காரை நீர் நிறைந்த பகுதியில் மதமதவென்று வளர்ந்திருந்தது.’


 

நாவல் முழுவதுமே இப்படியாகத்தான் செல்கிறது. கரும்பு ஆலை வைப்பதுதான் சிதம்பரத்தின் நோக்கம். அவன் அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல. அவன் அம்மா அந்த ஊரை விட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்ற போது அவன் இரண்டு வயதுக் குழந்தை. இலங்கையிலும் பிறகு சிங்கப்பூரில் இருந்துவிட்டு அம்மாவின் ஊர்ப்பக்கம் திரும்பியவன் சிதம்பரம். அந்தப் பெரிய காட்டை விலைக்கு வாங்கி அதை அழித்து கரும்பு ஆலை வைப்பது அவன் நோக்கம். அதற்காகவே அதன் ஒவ்வொரு செடியையும் கொடியையும் மரத்தையும் வெட்டி அதன் உள்ளே நுழைந்து பிறகு அத்தனை பெரிய காட்டையும் தீ வைத்து எரிக்கிறான்.

குறியீட்டுக்குள் குறியீடாக வருகிறது புளியமரம். ‘ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்திற்குப் புளி. தெற்கே இருக்கிற தித்திப்புப் புளியமரத்திலிருந்து புளி சாம்பமூர்த்தி ஐயர் வீட்டிற்கு. குட்டை மரத்திலிருந்து பெரிய பண்ணைக்கு. தென்கிழக்கு காத்தவராயன் மரத்துப் புளி பதஞ்சலி சாஸ்திரி வீட்டிற்கு. நெட்டை மரத்துப் புளி பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டிற்கு. ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக உலுக்குவார். ஒரு மரத்துச் சோட்டானோடு இன்னொரு மரத்துச் சோட்டான் கலக்காது.’

‘ஊர் முழுவதற்கும் புளி கொடுத்துக் கொண்டிருந்த மரங்கள் அவை. பல தலைமுறைகளாக மனிதர்களின் வாழ்க்கை வியக்கத்தக்க முறையில் அதனோடு பிணைக்கப்பட்டிருந்தது. மென்மையான அந்த உறவு யாரும் எதிர்பாராத விதமாகத் தீப்பட்டுப் பொசுங்கி விட்டது.’

கரும்பு ஆலையில் வேலை செய்பவர்களின் உதவிக்காக ஒரு மளிகைக் கடை வைக்கிறான் சிதம்பரம். ஊர்ப் பிரமுகர்களுக்குப் புளி அனுப்புகிறான். காட்டில் விளைந்ததல்ல. சீர்காழி, திருவெண்காடு, காவேரிப்பட்டினம் - இங்கெல்லாம் சென்று வாங்கியது.

ஆனால் அந்தப் புளி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எல்லாப் புளியும் திருப்பி அனுப்பப்பட்டது. பல்வேறு ரகம் - தித்திப்புப் புளி, புளிப்புப் புளி எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது. செங்காயையும் அடித்துக் கலந்திருந்தார்கள். அரிந்து கொட்டையெடுத்துக் கோது நீக்கியபோது பாதிக்கு மேல் குறைந்து போயிற்று. செட்டியார் வீட்டுக்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்பி வந்தது.

நாம் வாழும் இந்தப் புவிக்கு மனித இனத்தால் நேர்ந்த பேரழிவு நாவலின் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறது.

‘ஆச்சி காவிரிக் கரையில் சிதம்பரத்தைப் பார்த்ததும், ‘ஏண்டாப்பா, புண்ணியவானே! புளியெ வாயிலே வைக்க முடியல்லே!’ என்று குறைபட்டுக் கொண்டாள்.

தான் ஊருக்குள் காலடியெடுத்து வைத்த அன்று நிறைந்திருந்த புளிய மரங்கள் நினைவில் படர்ந்தன.

‘பாத்து நல்ல புளியா அனுப்பறேங்க, ஆச்சி.’

‘அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே?’

ஆச்சி பட்டுப் புடவையைப் பிழிது தோளில் போட்டுக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றாள்.

சிதம்பரம் ஆச்சி போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.’

(தொடரும்)


சா. கந்தசாமி - பகுதி 2
By சாரு நிவேதிதா
First Published : 17 July 2016 12:00 AM IST

அந்தத் தொகுப்பின் பெயர் கோணல்கள். தொகுத்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி. ம. ராஜாராம், சா. கந்தசாமி, நா. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் 12 சிறுகதைகள். தொகுப்பில் மூன்று கதைகளை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன் இன்று க்ரியா ராமகிருஷ்ணன் என்று அறியப்படுபவர். மைலாப்பூர் தேவடி தெருவில் இயங்கிய இலக்கிய சங்கம் நான்கு ரூபாய் விலையுள்ள இந்த நூலை 1968-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. (இந்த தேவடி தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்தான் பத்து ஆண்டுகளாக நான் வசித்து வருகிறேன். )

நூலுக்கு ஆர். சுவாமிநாதன் அருமையான முன்னுரையை வழங்கியிருக்கிறார். அதில் ‘இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றைய சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை’ என்று குறிப்பிடுகிறார் அவர். மேலும், தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாக விளங்கிய புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி ஆகிய மூன்று பேரின் பாதிப்பு இல்லாமல் தொகுப்பில் உள்ள நால்வரும் எழுதியிருப்பதாகவும் கூறுகிறார்.

தொகுப்பின் மிக முக்கியமான கதை சா. கந்தசாமி எழுதிய ‘உயிர்கள்.' 1965-ல் எழுதப்பட்ட இந்தக் கதையும் சாயாவனத்தின் கருவையே கொண்டிருக்கிறது. இந்தக் கதையும் என் சிறு பிராயத்தில் அனுபவித்ததுதான். அதே இடங்கள்; அதே சம்பவங்கள். அப்போதெல்லாம் அங்கே பெரும் தோப்பும் துரவுமாக இருக்கும். எங்குப் பார்த்தாலும் நீர் நிலைகள், மரங்கள், பட்சிகள். கண்ணுக்கெட்டிய தூரம் பச்சைப் பசும் வயல்கள். அவ்வப்போது வெட்டாற்றில் வாளக்கடியான் கடித்தோ நீரில் மூழ்கியோ யாராவது செத்துப் போவார்கள். ஊரில் வால் முனீஸ்வரனும் உண்டு. ‘உயிர்கள்’ கதையில் அற்புதராஜ் என்று ஒரு சார். தங்கையா, கோபால் என்று இரண்டு மாணவர்கள். தங்கையா ஆறாம் வகுப்பு. கோபால் ஏழாம் வகுப்பு. ஆனால் அற்புதராஜ் எட்டாம் வகுப்பு ஆசிரியர். தங்கையா அற்புதராஜ் சாரை சந்திக்கும் இடம் இது:

‘இரண்டு நாட்கள் அவருக்கு முன்னும் பின்னுமாக நடந்து மூன்றாவது நாள் வகுப்பிற்குப் போகும் போது, ‘குட்மார்னிங் சார்’ என்றான் தங்கையா. எட்டாவது சாருக்குத் துணிந்து முதன்முதலிலே குட்மார்னிங் வைத்தவன் அவன் தான். அற்புதராஜ் மெல்ல தலையசைத்து குட்மார்னிங் சொன்னார். அந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. ஒரு நிமிஷத்திற்குள்ளேயே அவன் புகழ் பெற்று விட்டான். ‘சாரைத் தெரியுமாடா?’ என்று துளைத்துத் துளைத்துக் கேட்டவர்களுக்கெல்லாம் மெல்ல சிரித்துக் கொண்டே தலையசைத்து, ‘சர்ச்சிலே பார்த்திருக்கேன்’ என்று பெருமையோடு பதிலளித்தான்.’

அற்புதராஜிடம் ஒரு வேட்டைத் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டு பறவை வேட்டைக்குப் போவது அவரது பொழுதுபோக்கு. தங்கையாவும் கோபாலும் அவரோடு சேர்ந்து கொள்வார்கள். ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்த போது, ஒரு செம்போத்துப் பறவையின் குரல் கணீரென்று கேட்டது.


செம்போத்து
செம்போத்துப் பறவையின் குரல்:
https://www.youtube.com/watch?v=_qEAh8sL3UU
https://www.youtube.com/watch?v=9PQ1a-K5oJU

(செம்போத்துவின் குரல் அமானுஷ்யத் தன்மை கொண்டதாக இருக்கும்.)

‘ஒரு செம்போத்துக் குரல் கணீரென்று கேட்டது. முன்னே சென்று கொண்டிருந்த அற்புதராஜ் இரண்டடி பின்வாங்கி அரசமரத்தைப் பார்த்தார். செம்போத்து தெரியவில்லை. ஆனாலும் அதன் குரல் மட்டும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டே இருந்தது. தங்கையாவும் சார் கூடவே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். வானுயர்ந்த மரம்; அடிமரத்தைக் கட்டிப் பிடிக்க பத்துப் பேர் வேண்டும். மரத்திற்கு முன்னே ஒரு சூலம். சூலத்திலேயே போட்டிருந்த ஒரு நீண்ட மாலை வாடிக் கிடந்தது. அரச மரத்திலே கிளை வெட்ட மாட்டார்கள்; ஆட்டுக்குக் கூட ஒரு இலை கிள்ள மாட்டார்கள். அது வால்முனி மரம்; வால்முனியைப் பற்றி எல்லோரையும் விட கோபாலுக்கு ரொம்பத் தெரியும். வானத்திற்கும் பூமிக்கும் சரியாக, உதயத்திற்கு முன்னே மேலத்தெரு வழியாக கலீர் கலீரென்று சலங்கையொலிக்க நடந்து போவதைப் பற்றி அவன் பாட்டி சொல்லியிருக்கிறாள். வால்முனி உறையும் மரத்தில் வேட்டையாட, சார் போவதைப் பார்த்து அவன் திடுக்கிட்டுப் போனான். செம்போத்து, சார் கண்ணிலே பட்டு விட்டது. சார் குனிந்து குனிந்து போய் பனைமரத்தின் கீழ் துப்பாக்கியை மேலே உயர்த்தி சரியாக நின்றார்.’

உடனே அதைத் தடுத்து விட்டுச் சொல்கிறான் கோபால். ‘சார், இது ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் சார். நெய்வாசலுக்குப் போற வழியிலே கூந்தப் பனைமரத்திற்கு அன்னாண்டே இலுப்ப மரத்திலே இருக்கிற முனியும் இதுவும் ஒன்னு சார்; இதுவும் நெய்வாசலும்தான் சார் அதன் எல்லை. இங்கேர்ந்து அங்கேயும், அங்கேர்ந்து இங்கேயும் போய் வந்து கொண்டிருக்கும்; பொழுது விடிஞ்சுட்டா எங்கயாச்சும் தங்கிடும் சார்.’ கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும் போலவே தெய்வங்களும் பேய் பிசாசுகளும் கூட வாழ்ந்து கொண்டிருந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்துக் கொண்டிருந்தன. இதைப் பதிவு செய்த முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் சா. கந்தசாமி.

‘(அற்புதராஜ்) வானத்தை நிமிர்ந்து பார்த்தார். வௌவால் மீன் சிறகு போல கொக்குகளும் மடையான்களும் பறந்து சென்று கொண்டிருந்தன. பின்னும் முன்னுமாக இரண்டு கூட்டங்கள் வந்தன. கிழக்கே வேட்டைக்காரன் வந்து விட்டான் என்பது தெரிந்தது; எங்கேயாவது துப்பாக்கி முழக்கம் கேட்டால் அதற்கு எதிர்த்திசையில் இப்படித்தான் கொக்குக் கூட்டமும் பறக்கும்.

‘மடையான் மடையான் பூப்போடு
மடைக்கு ரெண்டு பூப்போடு
அறுவா மணை தீட்டித் தறேன்
அதுக்கு ரெண்டு பூப்போடு.’

சின்னப் பிள்ளைகள் ஒரே குரலில் ராகமிட்டு நகங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.’

இப்போதைய இளைஞர்களுக்கு மேலே உள்ள பத்தியின் கடைசி வாக்கியம் புரியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. கூட்டமாகச் செல்லும் மடையானிடம் சிறுவர்கள் மேலே உள்ள பாடலைப் பாடியபடி நகங்களைத் தேய்த்தால் நகங்களில் ஒன்றிரண்டு பூக்களைச் சிந்தி விட்டுப் போகும் மடையான் கூட்டம். நானே சிறுவயதில் அப்படி பல பூக்களை விரல் நகங்களில் பெற்றிருக்கிறேன். நகத்தில் வெள்ளைக் கீறலாகத் தீற்றியிருக்கும் அந்தப் பூ. சீரகத்தின் அளவில் புறாவின் இறகை வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கும் அந்தப் பூ. அப்படி ஆளுக்கு ஒன்றிரண்டு பூக்களைத் தந்து போகும் மடையான்களை கேட்டாபெல்ட்டாலும் சுங்குத்தானாலும் வேட்டையாடித் தின்பதில் அப்போது எதுவும் தவறாகத் தெரியவில்லை.


கேட்டாபெல்ட்

சுங்குத்தான் படம் கிடைக்கவில்லை. ஊது குழலைப் போல் சுமார் ஒன்பது அடி நீளம் இருக்கும் அந்தக் கருவி. அதன் ஒரு துளையிலிருந்து கோலிக்குண்டு போன்ற ரவையை வாயில் வைத்து ஊதினால் பறவை சுருண்டு விழும். நாகூர் தவிர மலேஷியாவிலும் இந்த சுங்குத்தான் பழக்கத்தில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘உயிர்கள்’ கதை பற்றி சா. கந்தசாமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அறுபதுகளில் இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானபோது எம்.ஜே. அக்பர் ஆயிரம் ரூபாய் சன்மானம் அனுப்பி வைத்ததாக நினைவு கூர்ந்தார். நான் சொல்ல வந்தது என்னவென்றால், ‘மடையான் மடையான் பூப்போடு என்று சின்னப் பிள்ளைகள் ஒரே குரலில் ராகமிட்டு நகங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்’ என்ற கந்தசாமியின் வாக்கியம் இன்றைய இளைஞர்களுக்குப் புரியுமா? புரியாது எனில் இது எத்தகைய மகத்தானதொரு ஆவணம்! ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் கூட இந்த வாக்கியத்துக்கு அடிக்குறிப்பு எழுதியாக வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிக்குறிப்பு இதன் தாத்பர்யம் தெரிய வேண்டுமே?

அதேபோல் இன்னொரு இடம், தங்கையா பம்பரம் ஆடிக் கொண்டிருக்கும் கட்டம். ‘புளிய மரத்தடியில் பத்துக் குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். மனம் திக்கென்றது. அப்பீட் எடுக்கவில்லை. சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு ‘சார்’ என்றான்.’ இந்த இரண்டு வாக்கியங்களில் இன்றைய வாழ்வில் காணாமல் போய் விட்ட பத்துக்குத்து, அப்பீட், சாட்டை என்ற மூன்று வார்த்தைகள் உள்ளன. இப்படியே கந்தசாமியின் அத்தனை எழுத்துக்களிலும் தேடி ஒரு தனி அகராதியையே உருவாக்கலாம். ஆக, இப்படிப்பட்ட கலைஞர்களின் மூலம்தான் ஒரு மொழி நூற்றாண்டுகளைத் தாண்டி தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் போய் எந்தெந்த மரங்களில் பறவைகள் இருக்கின்றன என்று பார்த்து வைத்துக் கொள்கிறான் கோபால். ‘புன்னை மரத்தில் ஒரு குயில்; பிரப்பங்காட்டிற்குப் பக்கத்தில் நுணா மரத்தில் இரண்டு குயில்கள்; புள்ளியும் கருப்புமாக - ஆணும் பெண்ணுமாக. நெட்டிலிங்க மரத்தில் அவன் எண்ணிக் கொண்டே இருக்கையில் சிறகடிக்காமல் விர்ரென்று இன்னொன்று வந்தமர்ந்தது; அதைத் தொடர்ந்து இன்னொன்று. அவன் எண்ணிப் பார்த்தான். இங்கு மட்டும் ஆறு. தாழைக்குத்துப் பக்கம் போனால் கணக்கே கிடையாது. கள்ளுக் குருவி, நாணத்தாங்குருவி கணக்கா குயில் ரொம்ப இருக்கும்.’

‘குயிலுக்கு அவ்வளவு தந்திரம் தெரியாது; ஒரு குண்டு வெடித்தால், கொக்கு, மடையான் மாதிரி மேலே எழும்பி வெகுதூரம் போகாது. ஆபத்தையே உணராத பறவை அது. குண்டு சப்தம் கேட்டால் பத்து மரங்கள் தள்ளிப் போய் உட்கார்ந்து கொண்டு சோகமாக மனமுருகிக் குரல் கொடுக்கும்.’

சா. கந்தசாமியை நாம் ரிக் வேதத்தின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டும். ரிக் வேதத்தின் சாரத்தை பாரதி பாடியிருக்கிறார். அவருடைய புகழ்பெற்ற வசன கவிதைகளைப் பார்ப்போம்.


இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
உடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன. 
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் 
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

***

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான்,
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம்
தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள்,
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர் - இவை அமுதங்கள்.

***

இவ்வுலகம் ஒன்று.
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு - இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,
குழல், கோமேதகம் - இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி - இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி - இவை ஒருபொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -
இவை ஒருபொருளின் பலதோற்றம்.
உள்ள தெல்லாம் ஒரேபொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.


(தொடரும்)
சா. கந்தசாமி - பகுதி 3
By சாரு நிவேதிதா
First Published : 24 July 2016 12:00 AM IST


‘உயிர்கள்’ கதையில் இரண்டு மெலிதான காதல் காட்சிகள் வருகின்றன. கதை பத்து வயது சிறுவன் தங்கையாவின் பார்வையில் சொல்லப்படுவதால் அவனுக்கு அது பற்றி எதுவும் தெரிவதில்லை. அவன் வெறுமனே பார்த்ததை மட்டும் கதாசிரியர் நமக்குச் சொல்கிறார்.

‘பேசுவதை விட சார் சிரிக்கிறதுதான் ரொம்ப. ஆனாலும் அவனுக்கு நினைவு வந்தது. ஒருநாள் சரஸ்வதி டீச்சர் என்னமோ இங்கிலீஷில் சொல்லிவிட்டுத் தலையை கவிழ்த்துக் கொண்டு சிரிச்சாங்க. சார் கொஞ்சங்கூட சிரிக்கலே. அது ரொம்ப ஆச்சரியந்தான். சார் பாட்டுக்கு எழுதிக் கொண்டேயிருந்தார். அதிலேர்ந்து சரஸ்வதி டீச்சர் சார் கிட்டே பேசறதில்லே.’

இரண்டாவது காதல் இப்படி ஒருதலைக் காதலாக அல்லாமல் இருவரும் ஈடுபடுவதாகச் சித்திரிக்கப்படுகிறது. சிறுவனின் பார்வையில்தான்.

‘சார், எங்கக்கா ரெண்டு குயில் கேட்டுச்சு சார்’ என்று கேட்டான் தங்கையா.

அற்புதராஜ் தலையசைத்து மெல்லப் புன்னகை பூத்தார். ஓரோர் சமயம் தங்கையா வீட்டுப் பக்கமாக அவர் போவார். அவன் அக்கா வாசலில் நின்றிருந்தால் வெடுக்கென்று உள்ளே ஓடி விடுவாள். அவள் கேட்ட குயிலுக்காகத்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.’

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் குயில்களே கிடைக்கவில்லை. வழக்கமாக வேட்டையாடுவது போல் அற்புதராஜ் சார் வேறு எந்தப் பறவையையும் வேட்டையாடவில்லை. அவருடைய ஒரே நோக்கம் குயிலாகத்தான் இருந்தது. ஆனால் எங்குத் தேடியும் குயில்கள் தென்படவில்லை. கடைசியாக ஒரு புன்னை மரத்தில் இரண்டு குயில்கள் (ஆணும் பெண்ணும்) புள்ளியும் கருப்புமாகத் தெரிகின்றன.

சார் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தார். நிச்சயம் ஒன்று விழும். எந்தப் பக்கம் என்று நோட்டம் விட்டான் கோபால்.

ஆண் குயில் கீழ்க் கிளையிலிருந்து மேல் கிளைக்குத் தாவியது. குறி தப்பிவிட்டது. அற்புதராஜ் துப்பாக்கியைக் கீழே இறக்கினார். இரண்டடி பின்வாங்கி நெட்டிலிங்க மரத்தில் சாய்ந்தார். மேல் கிளைக்குத் தாவிய குயில் தலையசைத்து சன்னக் குரலில் கூவியது. அதன் குரல் என்றுமில்லாத சோபையும் மதுரமும் பெற்றிருப்பது மாதிரித் தோன்றியது. பெண் குயில் அழைப்புக்குச் செவி சாய்த்து சற்றே நாணி மெல்ல முன்னேறியது ஆண் குயில். மேல் கிளையிலிருந்து சர்ரென்று வந்து பெண் குயிலோடு அமர்ந்தது.

சார் சாய்ந்தபடியே நின்றார். துப்பாக்கி மேலே உயரவில்லை. இன்பம் துய்க்கும் குயில்களின் காதல் பெருவாழ்வு அவர் மனத்தைக் கரைத்து விட்டது. துப்பாக்கியைத் தோளில் மாட்டிக் கொண்டார்.

அன்றைக்கு ஒன்றும் வேட்டையில்லை; வெறும் கையோடு திரும்பினார்கள். அப்படித் திரும்புவது அதுதான் முதல் தடவை. குயில் பக்கத்திலிருந்தும் சார் ஏன் சுடாமல் விட்டார் என்பது இரண்டு பேருக்கும் விளங்கவே இல்லை; கோபால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவனால் தாள முடியவில்லை. கடைசியாக சாலைக்கு வந்தப்புறம் மெல்ல சார் பக்கமாகத் திரும்பி, ‘ஏன் சார் குயிலை சுடாம விட்டீங்க?’ என்று கேட்டான்.

அற்புதராஜ் லேசாக முறுவலித்தார்.

அடுத்த வாரம் சுட்ட எட்டு குயிலும் தங்கையாதான் எடுத்துக் கொண்டு போனான்.’

‘தங்கையா வீட்டுப் பக்கம் வந்து விட்டால் சாருக்கு சிரிப்பு வந்து விடும். தலை குனிந்து கொண்டு சிரிப்பார். கண்கள் சன்னலை நோக்கி அலைபாயும். ஆனால் ஒரு நிமிஷம் அங்கே நிற்க மாட்டார். விர் விர் என்று நடைதான்.

சர்ச்சுக்குச் செல்லுகையில் தங்கையா ஓடி வந்து சொன்னான், ‘உங்க சார் எதுக்குடா இப்படி ஓடுறார்ன்னு அக்கா கேட்டுச்சு சார். எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு; தினம் தினம் இப்படித்தான் உங்களைக் கேலி பண்ணுது. இன்னைக்கு சரியா மாட்டிகிச்சு; முதுகிலே நல்லா ஒரு குத்து விட்டுட்டு ஓடியாந்துட்டேன் சார். அதோ பாருங்களேன் குனிந்து கொண்டே போறதை’ என்று அக்காவைக் காட்டினான்.



அவனிடம் சொல்ல விரும்பியதையெல்லாம் அவர் சொல்லவில்லை.’

இப்போது பாலைவனத்தைப் போல் காய்ந்து கிடக்கும் தஞ்சாவூர் மாவட்டம் அப்போது எப்படி இருந்தது என்பது பற்றிய குறுஞ்சித்திரம் இது:

‘மழை பொழிந்து விட்டிருந்தது. நண்டு நத்தையெல்லாம் ஊரும். வரப்பிலே நடக்க முடியாது. சதசதவென்று சேறு. தண்ணீர்ப் பாம்பு வேறு கிடைக்கும். அதுதான் கொக்கு மடையானுக்குக் காலம். குளத்தையும் வயல்வெளியையும் சுற்றிச் சுற்றி வரும். குஞ்சுகளுக்குப் பாதுகாப்பாய், துணையாய் வந்து மேய்வது பார்ப்பதற்கு ரொம்ப அழகு.’

சென்ற அத்தியாயத்தில் பாரதியின் ரிக் வேத சாரத்தைப் பார்த்தோம் அல்லவா? பல்லுயிர் ஓம்புதல் என்பதன் அவசியத்தை வேறு விதமாகச் சொல்கிறார் கந்தசாமி.

‘சார் குயில்’ - உச்சிக் கிளையில் உட்கார்ந்திருந்த குயிலைப் பார்த்து விட்டுச் சொன்னான் தங்கையா. சார் மேலே பார்த்தார். குயில் உச்சியிலிருந்தது. சாதாரணமாக அவ்வளவு தூரம் குயில் போவதில்லை; ரொம்பக் கலவரமுற்றுப் போய் விட்டது. தப்பித்துக் கொள்ள ஆசை; கூவக் கூட பயந்து கிளையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தது. சார், கீழ்க் கிளையைப் பிடித்துக் கொண்டு மேல் கிளைக்குத் தாவினார். வசதியாக ஒரு கிளையில் சாய்ந்து கொண்டு துப்பாக்கியை மேல் நோக்கிப் பிடித்தார். குயில் எங்கே விழுமென்று பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக சிறகை படபடவென்று அடித்துக் கொண்டு போய் குளத்தில் விழுந்தது. உயிர் இன்னும் போகவில்லை. தலையறுத்துப் போட்ட கோழி மாதிரி எழும்பியெழும்பி அல்லி இலைகளில் விழுந்து புரண்டு கொண்டே இருந்தது. சோகம் கப்பிய காட்சி. எத்தனை துரதிர்ஷ்டமான சாவு. உடல் பிய்ந்து போவது மாதிரி கணமும் ஓயாது, சிறு இறகுகளைப் பறக்க அடித்துக் கொண்டு கூவியது.’

***

சா. கந்தசாமியின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பு ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. 1974-ல் க்ரியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த இந்த நூலை 1982-ல் வாங்கினேன். 35 ஆண்டுகளாக என் அலமாரியில் வீற்றிருக்கும் இந்த அற்புதமான தொகுப்பில் ஏழு சிறுகதைகள் உள்ளன. மேலே பார்த்த ‘உயிர்கள்’ சிறுகதையும் இத்தொகுப்பில் உள்ளது.



தொகுப்பின் முதல் கதையான ‘பாய்ச்சல்’ அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதையான புலிக் கலைஞனுக்கு நிகரான கதை. அனுமார் வேஷம் கட்டி ஆடும் ஓர் ஆளும் அவரைக் கண்டு வியக்கும் அழகு என்ற சிறுவனும்தான் இதன் பிரதான பாத்திரங்கள். கதை முழுக்கவும் அனுமார் எப்படியெப்படியெல்லாம் ஆடுகிறார் என்ற வர்ணனை.

‘வால் நீளமாகத் துவண்டு பூமியில் கிடந்தது. இவன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அடங்கியிருந்த மேளமும் நாதசுரமும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன. அனுமார் ஆடிக்கொண்டே கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். தலையை ஒரு சொடுக்குச் சொடுக்கி நடுவில் வந்து நின்று பெருங்குரலில் ‘ராமா, ராமா’ என்று இரு கையாலும் மார்பைக் கிழித்தார். மார்பு கிழிபட கிழிபட நெஞ்சின் நடுவில் ராமன்; அந்தப் பக்கம் சீதை; இந்தப் பக்கம் லட்சுமணன்.

‘ராமா, ராமா’ - இரைச்சலில் கூட்டம் அமிழ்ந்தது. இவன் கண்களைச் சிமிட்டாமல் அனுமாரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ராமா’ என்று அனுமார் எம்பிக் குதித்தார். ராமனும் சீதையும் லட்சுமணனும் பார்வையிலிருந்து மறைந்தார்கள். கைச்சதங்கையும் கால் சதங்கையும் ஒலிக்க அனுமார் நடக்க ஆரம்பித்தார். இவன் அனுமாரை ஒட்டினாற் போலச் சென்றான். நடந்து சென்ற அனுமார் சட்டென்று திரும்பினார். தன்னைப் பிடிக்கத்தான் வருகிறாரோ என்ற பயம் மேலிட அழகு பின்னுக்குப் பின்னுக்கு ஓடினான்.

அனுமார் ஒரு சின்ன ஆட்டம் ஆடி விட்டு நடக்க ஆரம்பித்தார். கீழே புரண்ட வாலை இவனை ஒத்த இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். இவன் அவர்கள் பக்கமாகச் சென்றான்.

இருந்தாற்போல இருந்து அனுமார் துள்ளிப் பாய்ந்தார். இவன் தோளிலிருந்து வால் நழுவித் தரையில் விழுந்தது. அதைப் பிடிக்க இவன் குனிந்தான்.

அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார். ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்து மணி அறுந்து கீழே விழுந்தது. ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார். மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை. தடுமாறி விட்டது. மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.’

ஆட்டமெல்லாம் முடிந்து அனுமார் தன் இருப்பிடம் நோக்கிப் போகிறார். அவருடைய ஆட்டத்தில் தன்னைப் பறி கொடுத்து, அவரை நிஜமான அனுமாராக நம்பும் அழகு அவரைப் பின் தொடர்கிறான்.

‘அனுமார் நிமிர்ந்து உட்கார்ந்து வாலைப் பிடுங்கிப் போட்டார். அப்புறம் வாய், இடுப்பு வேட்டி, மார்புக் கச்சை, ராமர் படம், கால் சதங்கை, கை சதங்கை - ஒவ்வொன்றையும் எரிச்சலோடு வீசியெறிவது போல இவனுக்குத் தோன்றியது.

அனுமாருக்கு என்ன ஆகி விட்டது என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

பளுவை எல்லாம் இழந்த சுகத்தில் அனுமார் கையையும் காலையும் உதறிக் கொண்டு பீடியை எடுத்துப் பற்ற வைத்துப் புகையை நன்றாக இழுத்தார். கண்களை மூடி மேலே பார்த்தபடி புகையை ஊதுகையில் இருமல் வந்தது. விட்டு விட்டு இருமி இருமிக் காறி உமிழ்ந்தார்.

இவன் அனுமாரையே பார்த்துக் கொண்டிருந்தான். அசுர பலத்தோடு சாகசங்கள் புரிந்த அனுமார் பீடி அடித்துச் சோர்ந்து போய் இருமுகிறார். இவனுக்கு அழுகை வருவது போல இருந்தது.’

பல அன்பர்கள் என்னிடம் இலக்கியம் ஏன் படிக்க வேண்டும் என்று வினவுகிறார்கள். இலக்கியம் படித்தால் வாழ்வு இன்னும் செம்மையுறும். இந்தப் பாய்ச்சல் என்ற கதையில் வரும் அனுமாரை ரஜினிகாந்தாகவும் சிறுவன் அழகுவைத் தமிழர்களாகவும் உருவகித்துப் பாருங்கள், கலைஞன் என்றால் யார் என்று புரியும். 35 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதையில் இன்றைய தலைமுறையின் அவலத்தைச் சுட்டியிருக்கிறார் கந்தசாமி.

‘ஆட்டமெல்லாம் பார்த்தியா?’

‘பாத்தேங்க; ரொம்ப ஜோருங்க...’

‘உம்’ சின்ன இருமல்.

‘வால்ல நெருப்பு வச்சுக்கிட்டப்ப ஊரே எரியப் போவுதுன்னு நெனச்சேன்.’

அனுமார் கையைத் தரையில் அடித்துப் பெரிதாகச் சிரித்தார். கையிலிருந்த சதங்கை கீழே நழுவ அச்சத்தோடு அனுமாரைப் பார்த்தான்.’

பிறகு அவருக்கு முன்னே அழகு அவரைப் போலவே ஆடிக் காண்பிக்கிறான். அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘இதோ பார், நான் ஆடுகிறேன்’ என்று சொல்லி விட்டு சந்நதம் வந்தது போல் ஆடுகிறார் அனுமார். அதைப் பார்த்து விட்டு அழகு ஆடுகிறான். அப்படியும் அவரால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழகுவின் ஆட்டம் தொடர்கிறது.

‘அனுமாரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து அம்பு போல முன்னால் பாய்ந்தார். பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றிச் சமாளித்து நின்று வெறுமை நிறைந்த மனத்தோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.

அழகு பற்களெல்லாம் வெளியே தெரியச் சப்தமாகச் சிரித்து கைகளை ஆட்டி எம்பி எம்பிக் காற்றில் மிதப்பது போல முன்னே வந்தான்.

அனுமார் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் வந்த அவன் தலையை ஒயிலாக ஒரு வெட்டு வெட்டி பின்னுக்குச் சென்றான்.

‘என்னாடாலே, எனக்கா பாச்சக் காட்டுற’. அனுமார் கத்திக் கொண்டே அவனைப் பிடிக்கப் பாய்ந்தார். அவன் குனிந்து பிடியில் சிக்காமல் நழுவ - அனுமார் கால்கள் பின்னிக் கொள்ளத் தரையில் விழுந்தார்.

அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல், தன் ஆட்டத்தில் மூழ்கியவனாகக் களிப்பும் உற்சாகமும் பொங்க வேகமாக ஆடிக் கொண்டிருந்தான்.’

***

இப்படிப்பட்ட உலகத் தரமான சிறுகதைகள் ‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார்.

***