Saturday 23 July 2016

பூங்காக்களின் தொடர்ச்சி - ஹூலியோ கொர்த்தஸர் ,லாஸ்கோவும் கலையின் பொருளும் - ழார் பத்தாய்:திணை இசை சமிக்ஞை


nagarjunan

பூங்காக்களின்  தொடர்ச்சி 

ஹூலியோ கொர்த்தஸர் 
திணை இசை சமிக்ஞை 29 மார்ச் 2008

பூங்காக்களின் தொடர்ச்சி - ஹூலியோ கொர்த்தஸர்


சில நாள் முன்பே வாசிக்கத் தொடங்கியிருந்தார் அந்த நாவலை. ஏதோ அவசர வர்த்தகக் கருத்தரங்குகளின் பொருட்டு வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்த நாவலை, எஸ்டேட்டுக்குத் திரும்புகிற ரயில் பயணத்தின்போது மீண்டும் திறந்தார். கதைக்கருவிலும் பாத்திரப்படைப்பிலும் கொஞ்சங்கொஞ்சமாகக் கவனம் செலுத்த முற்பட்டார். அன்று பிற்பகலில் எஸ்டேட்டின் பத்திரப்பொறுப்பு தொடர்பான கடிதத்தை எழுதி அதன் சொத்துரிமையைப் பகிர்ந்துகொள்வது குறித்து முகாமையாளரிடம் விவாதித்துப் பிறகு ‘ஓக்’ மரங்கள் நிறைந்த பூங்காவை நோக்கியிருக்கும் தன் வாசிப்பறையின் ஆழ்-அமைதியை நாடித் திரும்பினார், நாவலுக்கு.

தமக்குப் பிடித்தமான சாய்வு-நாற்காலியின் பின்புறம் கதவை நோக்கியிருக்க அதைப் போட்டார். சட்டென்று யாராவது வந்துவிடக்கூடிய சாத்தியப்பாடு ஒரு கணத்தில் தோன்றியிருந்தால்கூட நிரம்ப எரிச்சல்பட்டிருப்பார். நாற்காலியில் சரிந்து தம்முடைய இடக்கைவிரல்கள் நாவலின் பச்சை வெல்வெட் உறையை மீண்டும் வருட வாசித்தார், அதன் இறுதி அத்தியாயங்களை. பாத்திரப்பெயர்களை, அவற்றின் தம்முடைய மனப்பிம்பங்களை முயற்சியின்றியே நினைவில் வைத்திருந்தார். ஆக, தன் வசீகரத்தை, ஏன் சட்டென்றே, இவர்மேல் விரித்துவிட்டது நாவல்.

சுற்றியுள்ள பொருட்களிலிருந்தும் வரிவரியாகக் கழன்றுகொள்கிற - ஏன் வக்கிரமான - அந்த மகிழ்ச்சியை அனுபவித்தார். அதே நேரம், உயரமான சாய்வு-நாற்காலியின் பச்சை வெல்வெட் உறையைத் தம்முடைய தலை அவ்வப்போது தொட, கையெட்டும் தூரத்தில் ஸிகரெட் பல இருப்பதை உணர்ந்தபடி, பிரம்மாண்டமான அந்த ஜன்னல்களைத் தாண்டி, பூங்காவின் ’ஓக்’ மரங்கள் அடியில் கண்டார், பிற்பகல்-காற்றின் நாட்டியத்தை. காதலன்-காதலி இடையில் தோன்றிய அவலக்குழப்பத்தால் சொல்சொல்லாக உறிஞ்சப்பெற்று, அந்த பிம்பங்கள் மனதில் தங்கி வண்ணமும் இயக்கமும் கொண்டதாக மாற அவற்றில் மூழ்கிப்போனார்...

மலைப்பகுதித் தனியறையில் நிகழ்ந்தது அவர்களுடைய இறுதி சந்திப்பு. பதற்றமாக முதலில் வந்தது அவளே. அடுத்து, காதலன். அவன் முகத்தைக் கிழித்திருந்தது கிளையொன்றின் பின்னசைவு. ரத்தத்தை முத்தங்களால் அழகாக ஒத்தியெடுத்து அவள் வருடியதை உதறித் தள்ளினான். காட்டினுள் காய்ந்த இலைகளும் ஒதுங்கிய பாதைகளும் பாதுகாத்த அந்த ரகசியத்தாபச் சடங்கை மீண்டும் நடத்துவதற்காக அங்கே வரவில்லை அவன். அவன் மார்பை உரசி சூடேறிக்கொண்டிருந்தது கட்டாரி. துடித்தது அதற்கடியில் மறைந்திருந்த சுதந்திரமும். பக்கங்கள் ஊடே நாகங்களின் சிறுநதிச்சுழலென வேட்கையும் இரைப்பும் கொண்ட உரையாடல் ஓடிக்கொண்டிருக்க, நடந்த யாவும் காலமற்ற ஓருலகில் நிச்சயமாகித் தெரிந்தன. காதலனை அங்கேயே தங்கவைக்கும்படியாக அவன் உடலைச் சுற்றி இயங்கி அவள் வருடியது அவன் அந்தக்காரியத்தைச் செய்வதைத் தடுப்பது போல இருந்தாலும் அவள் விரல்கள் வரைந்ததோ அழிந்துபட வேண்டியதான அந்த இன்னொரு உடல் குறித்த கேவலமான கோலத்தை. வரப்போகும் குற்றச்செயலின்போது வேறிடத்தில் இருப்பதற்கான சான்றுகள், அதற்கு முன்பான எதிர்பாராத இடையூறுகள், தவிர்க்க வேண்டிய தவறுகள் யாவும் மறப்பதற்கில்லை ஆங்கு. அந்த நிமிஷத்திலிருந்து நுட்ப வரையறைக்குள்ளாகின கணங்கள் ஒவ்வொன்றும். ரத்தம் உறைய மீளாய்வாகும் அந்தச்செயலின் அத்தனை விபரங்களும் எப்போதோ ஒருகணம் நிற்பது கரமொன்று கன்னத்தை வருடுவதற்காக மாத்திரம்.

கவியத்தொடங்கிவிட்டது இருள்.

தத்தம் உடனடிக்கடமைகளை மட்டும் மனதில் இருத்தி அறைக்கதவு அருகே பிரிந்தனர் காதலர் பரஸ்பரம் காணாதபடி. வடக்கு நோக்கிப் போக வேண்டும் அவள். எதிர்த்திசையில் போன அவன் ஒரேகணம் திரும்பிப்பார்த்தான் அவளை. பறந்த விரிகூந்தலுடன் ஓடினாள். மரங்கள், புதர்களுக்கிடையில் குனிந்தவாறே அவனும். அஸ்தமனத்தின் மஞ்சள் பனியில் அந்த வீட்டை அடைகிற நிழற்சாலை தென்படுகிற வரை ஓடினான். சொல்லிவைத்தபடி நாய்கள் குரைக்கவில்லை. அதேபோல எஸ்டேட் மேலாளரும் அங்கில்லை. நடைப்பூங்காவின் படிகள் மூன்றைத் தாண்டி நுழைந்தான் அவன். நெற்றிப்பொட்டில் துடிக்கும் ரத்தத்தைத்தின் ஊடே அவள் வார்த்தைகள் வந்தடைந்தன அவனை. நீலநிற அறை முதலில். அப்புறம் வரவேற்பறை. பிறகு கம்பளம் விரித்த படிக்கட்டு. மேலே கதவுகள் இரண்டு. யாருமில்லை முதல் அறையில். இரண்டாம் அறையிலும்தான். ’பார்’ கதவு. அப்புறம் கையில் கட்டாரி. பிரம்மாண்ட ஜன்னல்கள் வழி பாய்கிற ஒளி. பச்சை வெல்வெட் உறையுடன் உயரமான சாய்வு-நாற்காலி. நாற்காலியில் நாவல் வாசித்துக்கொண்டிருக்கும் ஒருத்தரின் தலை.

--- Julio Cortazar, La continuidad de los parques, Final del juego, 1964.Julio Cortazar, Cuentos Completos 1, Madrid, 1994 , p. 291-2. Translated from Spanish by Paul Blackburn: The Continuity of Parks, Blow-Up and Other Stories, New York, 1968, pp. 55-56.

ஆங்கிலவழி முதல் தமிழாக்கம்: குதிரைவீரன் பயணம் இதழ் 3, 1994.

ஸ்பானிஷ் மூலத்தை வைத்து மறு ஆக்கம்: 2005. புகைப்படம் - அந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் போன போது கண்ட சிற்பம், அங்கே பிறந்த கொர்த்தஸரின் தலை.







லாஸ்கோவும் கலையின் பொருளும் - ழார் பத்தாய்


தொடர் இணைப்புகள்:

லாஸ்கோ அல்லது கலையின் பிறப்பு - ழார் பத்தாய்யின் முன்னுரை

லாஸ்கோ எனும் அற்புதம்: கலையின் பிறப்பு - ழார் பத்தாய்

லாஸ்கோ குகை-ஓவியம் பற்றி ழார் பத்தாய்

விழியின் கதை நாவலுக்குப் பிறகு - ழார் பத்தாய்

விலங்கினத்தின் இந்த வரியாடல் கலைவண்ணமாய் மலர்ந்த தருணத்தின் முன்பான யுகத்தில் இங்கு வளர்ச்சியற்று வாழ்ந்த இனத்தாரின் பல்திரள் குறித்த எச்சங்களை அகழ்ந்தெடுத்து, சதையற்று இறுகி உருக்கொண்ட உலர்-என்புகள் இவையென அறிந்தார் ஆய்வாளர். ஆம், லாஸ்கோவுக்குப் பல்லாயிரமாண்டு முன்பே, அதாவது சுமார் ஐந்து லட்சம் ஆண்டு முன்பே, இவ்வுலகின் பரப்பில், உழைப்பேறிவிட்ட இருகால் உயிரியர் பல்கிப் பெருகத் தொடங்கினர். இன்று தொல்படிவங்களாகிவிட்ட என்புகளைத் தாண்டித் தம் கருவிகள் தவிர வேறெதையும் இவர் நமக்கு விட்டுச் சென்றாரில்லை! பண்டைய மனிதராம் இவர் ஓரளவில் அறிவார்ந்தவர் என்பதை உறுதிசெய்வன இந்தக் கருவிகள். ஆனால் கரடாகத் தொடர்ந்த இவர்தம் அறிவின் ஒரே பயன்பாடு, இவர் கைக்கொண்ட ஆதிக்காலத் தடிகள், என்புத்துண்டுகள் மற்றும் கூரான சிக்கிமுக்கிக் கற்கள் உள்ளிட்ட எளிய சில கருவிகளை ஆக்கும் வரை சென்று நின்றது. இந்தப் பொருட்களினின்றும் இவை காட்டும் இவர்தம் பருண்மச் செயல்பாட்டினின்றும் நாம் பலவும் வாசிக்க இடமுண்டு; இருந்தாலும் கலை தொடர்புறுத்துகிற, கலை மட்டுமே தொடர்புறுத்தி உறவாடும் உள்ளக வாழ்வின் சாயையை, சாவற்ற வெளிப்பாடு தானல்ல என்றாலும் குறைந்த பட்சம் உறுதியுடன் நீடிக்கும் உய்வாய்க் கனன்றுயிர்க்கும் அந்த உள்ளக வாழ்வின் வண்ணச்சாயையை, லாஸ்கோவைக் கண்டறியுமுன் நாம் பெற முடிந்ததே இல்லை!

கலைக்கு இப்படித் முற்றுமுடிபான, எண்ணிலடங்கா மதிப்பை அளிப்பது சற்று அந்நியமாகத் தோன்றுகிறதோ! அதே நேரம், கலை பிறக்கும் பொழுதில்தான் அதன் முக்கியத்துவம் இன்னும் ஆயத்தம்பெற்று, அதைக் காத்திரமாக உணரும் சாத்தியமும் உண்டெனத் தோன்றுகிறதல்லவா! ஆக, இப்படித் தம்மில் வேறுபட்டுச் செல்வன, கலையும் தினசரிப் பயன்பாடும். தினசரிப் பயன்பாட்டின் எதிரில், அதை மயக்கும் சக்திகொண்டதாய், உணர்வில் வளர்ந்து பெருகி அந்த உணர்வை முன்வைத்து உரையாடுவதாய், குறியீடுகளைப் பயன்பாடேதுமற்று உருவாக்கும் வினைச்செயலாய், தன்னை முன்வைக்கும் கலை. ஆக, இதைக் காட்டிலும் இங்கு கலைக்கும் தினசரிப் பயன்பாட்டுக்கும் தனிச்சிறப்பான, அழுத்தமான வேறுபாடென ஏதுமில்லை! மாறாக இந்த வண்ணக்கலைக்குப் பயன்பாடெனும் காரணங்கள் உண்டெனக் கூறும் விளக்கங்களுக்குப் பிற்பாடு திரும்புவோம். இப்போதைக்கு இந்த அதிமுக்கிய வேறுபாட்டைக் குறித்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

லாஸ்கோவின் நிலத்தடிக் குகையில் நேரே நாம் நுழைய, வலுவான உணர்வொன்று நம்மை ஆட்கொள்ளும்; ஓர் அருங்காட்சியகத்தில் வைத்து மனித இனத்தார்தம் பண்டுறைந்த எச்சங்களையோ அவர்தம் கற்கருவிகளின் நேர்வரிசைகளையோ காட்டும் கண்ணாடிப்பெட்டிகள் முன்பு நிற்கும்போது வாராத உணர்வு நம்மில் வந்தடையும்; எக்காலம் சார்ந்த கலைப்படைப்பாயினும் எக்காலமும் நம்மில் கிளர்ந்தெழ வைக்கும் அதே பிரஸன்னமாம் உணர்வு, தெள்ளிய-சுழல வைக்கும் உணர்வு, லாஸ்கோவில் மீள மீள நம்மைத் தாக்கும். இந்த உணர்வு எப்படித் தோற்றங்கொண்டாலும் மனிதர் படைத்த இந்தப் பொருட்களின் அழகு நம்மை அள்ளுவது, நட்பெனும் கிழமையின் ஆன்மாக்களைப் பிணைக்கும் கொடையெனும் அன்பில்தான், அன்பெனும் இந்த ஞெகிழ்வில்தான். ஆக, நம்மில் இப்படிக் காதலாய்க் கசிவதும் அழகுதானன்றோ! நாம் விழையும் உவகையும் உயர்நட்பல்லவா என எக்காலமும் நம்மில் மீள மீள எழும் இந்த வினாவின் சாத்தியமான ஒரே விடை அழகுதானன்றோ!

விதையிட்ட பொருள் கலையாய் முளைப்பதன் சாரத்தை இத்துணை வலுவாய் வலியுறுத்துவதை வழக்கமாகச் செய்வதில்லை நாம். ஆனால் இங்கே நம் வினைநலன்கள் யாவற்றையும் தாண்டுமாம் இந்தச் சாரம்; நம் இதயத்தில் மறுகும் ஏதோ ஒன்றை ஊடுருவும் இந்தச் சாரம். லாஸ்கோ பற்றி நாம் மிக உள்ளார்ந்து உரைக்க வேண்டியதும் இதுவே! நம் தற்காலத் தன்னிலைகளினின்றும் எத்துணை சாத்தியமோ அத்துணை தொலைவில் கிடப்பதாய் முதலில் நமக்குத் தோன்றுவது லாஸ்கோ என்பதே இதன் காரணம்.

லாஸ்கோவை முதலில் காணும் பொழுதில் திகைத்தும் துணுக்குற்றும் சற்றே

பேச்சடைத்தும் போய், பிறகே அதைப் பொருள்படுத்தத் தொடங்குகிறோமென ஒப்புக்கொண்டாக வேண்டும். இதுவே மிகப் பண்டைய எதிர்வினை; எதிர்வினைகளில் முதன்முதலானது; காலமெனும் பேரிரவின் வழி வரும் இந்த வினை. உறுதியற்று மின்னும் மங்கிய ஒளி மட்டுமாய்த் துளைப்பதும் லாஸ்கோ குகையில்தான். ஆனால் இங்குக் கற்பாறைச்சுவர்களில் நழுவும் இந்தச் சாயைகளை மட்டும் நம்மில் விட்டுச் சென்ற மனிதர் பற்றி, வெற்றிடமெனும் சட்டகத்தில் வைத்துப் பின்னணியென ஏதும் கொள்ளாமல் கிடக்கும் இந்த வண்ணச்சாயைகளை மட்டும் நம்மில் விட்டுச்சென்ற மனிதர் பற்றி. ஏதும் நாமறியோம். காண அழகானவை இந்த வண்ணச்சாயைகள்; நம் கலைக்கூடங்களின் நயமிக்க ஓவியங்களைப் போலவே நம் கண்களில் வனப்பாகத் தோன்றுபவை இவை என மட்டும் நாமறிவோம்.

நம் கலைக்கூடங்களில் மிளிரும் ஓவியங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஒவ்வொன்றையும் தீட்டிய காலம், தீட்டியவர் எவார், பேசுபொருள் யாது, அந்தப் படைப்புக்கான அவர்தம் விழைவென்ன என ஏதாவது நாமறிவோம். அவற்றுடன் உறவாடிய வாழ்வின் பழக்க வழக்கங்கள், அவை உருவான காலகட்டக் கதைகளெனப் பலவும் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால் அவற்றின் உலகைப் போலன்றி லாஸ்கோவின் வண்ணக்கலை காட்டும் உலகாய் நாமறிந்ததும் மிகக் குறைவே.

இப்படி லாஸ்கோ பற்றி நாமறிந்த யாவற்றையும் தொகுக்கலாமா! தொகுத்தால் வருவன, அப்பொழுது வளங்கள் குறைவு, இந்த மனிதர் காட்டு விலங்குகளை வேட்டையாடிக் காட்டுக்கனிகளைப் பொறுக்குவதுடன் தம் எல்லைகளை நிறுத்திக்கொண்டவர், இவர் விட்டுச்சென்ற கற்கருவிகளும் என்புக்கருவிகளும் புதைப்புலங்களும் இவர் வளர்த்த அடிப்படைப் பண்பாடு பற்றி நமக்குரைப்பவை மிகமிகக் குறைவே என, இவ்வளவே! தவிர, லாஸ்கோ குகையின் காலத்தை அறிய விழைந்தாலோ, ஒரு பத்தாயிரமாண்டு அப்படி இப்படி வைத்து மதிப்பிட்டுத் திருப்தியடையத் தயாராக இல்லையெனில் அதுவும் சாத்தியமற்றுப் போகும்!

லாஸ்கோ குகையின் கற்பாறைச்சுவர்களில், விலங்குகளில் ஏறத்தாழ யாவற்றையும் இனங்காண முடிகிறது. கலைவண்ண முயற்சிகளை ஆங்கு தூண்டியது மந்திரவாதமெனக் கருதும் வழக்கமுண்டு. ஆனால் எழுதின வரலாறு தொடங்கப் பல்லாயிரமாண்டு முன் இங்கு வாழ்ந்தோரின் மந்திர நம்பிக்கைகளில், இவர் பங்கேற்ற சடங்குகளில் இந்த வண்ணக்கலையும் இதிலுள்ள உருக்களும் வகித்த துல்லிய இடம் பற்றி நாமறிய வழியே இல்லை! இவற்றை இதே கால கட்டங்களுக்கும் இதே நிலப்பரப்புகளுக்கும் உரிய வண்ணக்கலையுடன், மற்றக் கலைப்பொருட்களுடன் தொடர்புறுத்தி ஒப்பிடுவதைத் தவிர ஏதும் செய்ய இயலாத நிலையில் நாமுள்ளோம்; இந்த மற்றவற்றின் பொருளும் லாஸ்கோ போல மர்மமாகத் தோன்றுவதே! தவிர, எண்ணிக்கையிலும் இவை ஏராளம், ஏராளம்! லாஸ்கோவில் மட்டுமுள்ள ஓவியங்கள் நூற்றுக்கணக்கில்! அதே போல ஃப்ரான்ஸ் மற்றும் இஸ்பாஞ்ஞ நாட்டின் மற்ற குகைகளில் ஏராளம் ஓவியங்கள்! இவை யாவற்றிலும் மிகப் பண்டையதாக ஒருக்கால் இல்லாமல் போனாலும் நயமிகுந்தும் கட்டுக்கோப்புக் குலையாமலும் நமக்குக் கிட்டும் வண்ணத்தொகுதி, லாஸ்கோவே. ஆம், ஆழமான, அதே வேளை புதிரான இந்தக் கூற்றை, கலையெனும் பற்றற்ற செயலை, நிகழ்த்திச் செல்லும் சக்தியைத் தம்மில் முதன்முதல் வழங்கிக்கொண்ட இம்மனிதர்தம் வாழ்வும் எண்ணமும் பற்றி மேலதிகமாய்ச் சொல்ல இந்த வண்ணக்கலை தவிர வேறு ஏதாலும் இயலாது. அற்புதமானது, வலிய, நெருங்கிய உணர்வு கொண்டு நம்மில் உறவாடுவது, அதே வேளை அத்துணையும் புரிபடாமல் போகும் பண்பும் கொண்டது, லாஸ்கோவின் வண்ணக்கலை!

லாஸ்கோவின் கலையின் பொருள்தான் என்ன? அதை, தம்மை நெடிது உய்விக்கும் உணவாம் விலங்கை வேட்டையாடி இரையாக்கும் வேடுவரின் கொலைவேட்கையுடன் தொடர்புறுத்திக் காண வேண்டுமென ஆலோசனை கூறுவாரும் உண்டு. ஆனால், நம்மை மகிழ, கிளர்ந்தெழ வைப்பதும் வேடுவரின் பசியன்றி இந்த வண்ணக்கலையே என்பதால் இதன் ஒப்பற்ற அழகும் நம்மை விழித்தெழ வைக்கும் பரிவும் நம்மில் வலிக்க, நம்மைத் தடுமாறும் ஐயத்தில் விட்டுச் செல்லுமே இதன் பொருள்!

- ழார் பத்தாய்.

- Georges Bataille, Lascaux et ce que l'art signifie, Lascaux ou La naissance de l'art, Genève, 1955, traduit en tamoul.

Facebook