Tuesday, 12 July 2016

சா. கந்தசாமி By சாரு நிவேதிதா

கந்தசாமியின் முதல் நாவலான ‘சாயாவனம்’ 1964-ல் எழுதப்பட்டது. கதை நடக்கும் காலம் இன்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால். கதையில் ஓர் இடத்தில் பிபின் சந்திரபால் சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சு பற்றிய விபரம் வருகிறது. சுதந்தரப் போராட்டத்தில் காந்திக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர் பிபின். அப்போது மூன்று தலைவர்களை Lal Bal Pal என்று இணைத்து சொல்வார்கள். லாலா லஜபதி ராய், பால் கங்காதர திலக், பிபின் சந்திர பால். நாவலில் இன்னொரு இடத்தில் வரும் குறிப்பு இது:

வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை. அது தொழில் அல்ல. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் வாழ்க்கையே வேளாண்மையாக இசைந்து போகிறது. பல நூற்றாண்டுகளாக இழையறாமல் இருந்து வந்த அந்த முறை சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் தன் நிலையை இழக்க ஆரம்பித்தது’ என்று முன்னுரையில் சொல்கிறார் சா. கந்தசாமி. 25 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை மாவட்டம் முற்றிலுமாக தன் ஜீவனை இழந்து, நதிகளை இழந்து வறண்ட பாலையாகிவிட்டது. உதாரணமாக, நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வரும் வெட்டாறு கடலில் கலக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அந்த வெட்டாறில் நாவலின் நாயகனான சிதம்பரம் குளித்து நீச்சலடித்து மூழ்கி விளையாடுகிறான். இக்கரையிலிருந்து அக்கரை போகிறான். ஆனால் என் காலத்திலேயே (அறுபதுகள்) அந்த வெட்டாறு வெறும் ஓடையாகக் குறுகிவிட்டது. இப்போது வெறும் மணல் காடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பேரழிவின் ஆரம்பத்தைச் சொல்கிறது சாயாவனம்.

சா. கந்தசாமி

By சாரு நிவேதிதா

First Published : 10 July 2016 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/07/10/சா.-கந்தசாமி/article3521234.ece

1940-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் மாயவரத்தில் பிறந்தவர். இளம்பருவம் பூம்புகாரிலும் சாயாவனத்திலும் கழிந்தது. காவிரி கடலோடு கலக்கும் ஊர் பூம்புகார். மாயவரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிற்றூர், சாயாவனம்.

‘ஒரு வாட்டி தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை, கூறைநாடு சண்முகப் படையாச்சி, நாகப்பட்டினம் அப்துல் காதர், எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி எல்லாரும் இந்த வழியாத்தான் போனா. அவாளுக்கு ஒரு பெரிய மாலை போட்டோம்.’

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. இன்று உலகம் பூராவும் விவாதிக்கப்பட்டு வரும் சுற்றுப்புறச் சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளைக் குறியீடாகக் கொண்டு இயங்கும் நாவல், சாயாவனம். அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே சாயாவனத்தைக் கருதவேண்டும். நாவலில் ஒரு மரம் செடி கொடியின் பெயரோ அல்லது பட்சியின் பெயரோ இல்லாத ஒரு வாக்கியத்தைக் கூட காண முடியவில்லை. சாயாவனத்தில் வரும் தாவரங்களைப் பற்றி ஓர் ஆய்வே செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பூமியின் இருப்பே அதன் தாவர உயிர்ப்பைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியர்கள் விலங்குகளையும், விருட்சங்களையும், காற்று பூமி ஆகாயம் அக்னி போன்ற பஞ்ச பூதங்களையும் வணங்குவதைப் பரிகசித்த மேலை நாட்டினர் இன்று காடு மற்றும் காட்டுயிர்களின் பாதுகாப்புதான் மனித வாழ்வின் ஆதாரம் என்கிறார்கள். ஒரு யானை தினமும் முப்பது கிலோமீட்டர் நடக்கிறது. அதன் கழிவுதான் சில வனவுயிரிகளின் உணவாக இருக்கிறது. அதன் கழிவுதான் விருட்சங்களின் விதைகளை வனத்தில் ஒவ்வொரு இடமாக எடுத்துச் செல்கிறது. யானை இல்லையேல் வனம் இல்லை. ஓநாய் குலச் சின்னம் நாவலில் மங்கோலியர்களின் குலச்சின்னமாக ஓநாய் விளங்குவதன் காரணம், ஓநாய் இல்லையேல் மங்கோலிய இனமே இல்லை என்கிறார் அதன் ஆசிரியர். ஓநாய்கள் இல்லையேல் பனிக்காடான மங்கோலியாவில் மிக அரிதாகவே உருவாகும் புல்வெளிகளை ஆயிரக் கணக்கில் பெருகும் மான் கூட்டமே தின்று தீர்த்து விடும். அப்படி ஆகாமல் அந்தப் பிராந்தியத்தின் சமநிலை (eco balance) கெடாமல் இருக்க ஓநாய்கள் காரணமாக இருக்கின்றன. நாவலின் இறுதியில் ஓநாய்கள் அழிக்கப்பட்டு அங்கே மனிதக் குடியிருப்புகள் தோன்றும்போது அதன் இயற்கையான உயிர்ப்புத்தன்மை மறைந்து கட்டடக் கலாசாரம் ஆரம்பமாகிறது. அதுதான் apocalypse என்று சொல்லப்படும் பேரழிவு. இதையேதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சாயாவனமும் பேசுகிறது.


 

வனங்களையும் வனவுயிர்களையும் அழிப்பதன் மூலம், தான் வாழும் பூமிக்கே அழிவைக் கொண்டு வரும் மனித வாழ்வின் அவலத்தைக் குறியீடாக வைத்திருக்கிறது சாயாவனம். நாவல் முழுவதுமே வனமும் வனத்தை அழிக்கும் நான்கைந்து மனிதர்களும்தான். நாவல் இப்படித் துவங்குகிறது: ‘புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒரு மடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. ஒரு தனி செம்போத்து. இரண்டு பச்சைக்கிளிக் கூட்டங்கள்.

சற்றைக்கெல்லாம் வானம் நிர்மலமாகியது.

சிதம்பரம் குத்துக் குத்தாய் வளர்ந்திருக்கும் காரைச் செடிகளைத் தள்ளிக் கொண்டு, நாயுருவி கீற, ஒற்றையடிப் பாதைக்கு வந்தான்.’

‘பெரிய சாலையிலிருந்து கிளிமூக்கு மாமரம் வரையில் ஒரு கொடிப்பாதை. ஆலமரத்திலிருந்து முனீஸ்வரன் தூங்குமூஞ்சி மரம் வரையில் ஒரு பாதை. அப்புறம் இலுப்பை மரத்திலிருந்து கொய்யா மரம் வரையில் இன்னொரு பாதை... நொச்சியையும் காரையையும் தள்ளிக் கொண்டு புல்லிதழ்களைத் துவைத்தவாறு நடக்க வேண்டும்.’

நாவலில் சோட்டான் என்று ஒரு வார்த்தை வருகிறது. இது தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உரிய வார்த்தையா அல்லது மற்ற இடங்களிலும் உண்டா என்று தெரியவில்லை. புளியங்காயை நாங்கள் சோட்டான் என்று சொல்லுவோம்.

‘சிவனாண்டித் தேவர் கைக்கு எட்டிய கிளையைப் பிடித்து உலுக்குவார். புளியம்பழங்கள் சடசடவென உதிரும். அங்குமிங்கும் சிதறிக் காரையிலும் கருநொச்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கும் சோட்டான்களைப் பொறுக்கி மரத்தடியில் போட்டு விட்டுப் போய் ஆட்படைகளோடு திரும்பி வருவார்.’

‘காட்டாமணக்கு இலையைக் கிள்ளி, பாலை உதறி விட்டுக் கொண்டு, புன்னையும் கொய்யாவும் நிறைந்த மேட்டுப் பூமியில் ஏறினார் சாம்பமூர்த்தி. சற்றே உயர்ந்த பூமி. அங்கிருந்தபடி வனம் முழுவதையும் பார்க்க முடியாவிட்டாலும், முன்னே இருக்கும் மரஞ்செடி கொடிகளைப் பார்க்கலாம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சரஞ்சரமாய்ப் பச்சைக் கயிறு பிடித்தாற்போலப் புளியமரத்தையும், இலுப்பை மரத்தையும், பலா மரத்தையும் மீறிக் கொண்டு நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன.’

‘அக்காக் குருவி பரிதாபமாகக் கூவிக் கொண்டு தலைக்கு மேலே பறந்து சென்றது.’

‘நான்கைந்து நாரைகள் படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வந்து மரக்கிளையில் வந்து அமர்ந்தன.’

‘ஒரு மடையான் கூட்டம் பறந்து சென்றது. சாம்பமூர்த்தி ஐயர் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.’

‘மெல்ல நகர்ந்து செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு சிவனாண்டித் தேவரும் கணக்குப் பிள்ளையும் சென்றார்கள். பூவரசு மரத்தைத் தாண்டி, கூந்தல் பனை மறைவில் உள்ள ஐயனாரைக் கடக்கும் வரையில் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

வண்டி காத்தவராயன் இலுப்பை மரத்தைத் தாண்டியதும் கணக்குப் பிள்ளை, ‘மாமாவுக்கு ரொம்பக் கோபம்’ என்றான்.’

‘காய்ந்த சருகுகள் படபடத்தன. யாரோ வேகமாக ஓடி வருவது போல இருந்தது. உன்னிப்பாகப் பார்த்தான். நரி ஒன்று எதிரே வந்து நின்று, தலைதூக்கிப் பார்த்து விட்டு, ஒரே பாய்ச்சலில் ஓடி மறைந்தது.’

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குப் பக்கத்தில் இருந்த வனத்தில் நரிகளெல்லாம் இருந்திருக்கின்றன. 1970 வரை எங்கள் ஊரிலும் நரிகள் இருந்தன. இப்போது அங்கே காடுகளுக்குப் பதில் பிளாஸ்டிக் கழிவுகள் தான் மலைமலையாகக் குவிந்திருக்கின்றன.

‘அவன் மேலே பார்த்தான். ஆகாயமே தெரியவில்லை. பச்சைப் பசுந்தழைகளால் மூடப்பட்டிருந்தது. வானமே வனமாகி விட்டது போல ஒரு காட்சி - மேலும் கீழும் பச்சை; திசையெங்கும் பச்சை. இயற்கையின் சௌந்தர்யம் மிகுந்த வனத்திற்குள் அவன் மெல்ல மெல்லப் பிரவேசித்துக் கொண்டிருந்தான்.

பூவரசு மரத்தை மூடி மறைத்துக்கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருந்தது. அநேகமாக பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கிடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான கொடிகள்! நெட்டிலிங்க மரத்தில் குறிஞ்சாக் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது.’

‘சிதம்பரம் ஒவ்வொரு கொடியாக, கைக்கு எட்டிய கோவைக்கொடி, குறிஞ்சாக்கொடி, காட்டுப் பீர்க்கு, பிரண்டை எல்லாவற்றையும் அறுத்தெறிந்தான்.’

‘நான்கடிகள் பின்னுக்குச் சென்று தீவிரமான நோக்கோடு தன்னுடைய வேலையைத் தொடங்கினான் சிதம்பரம். சீமை காட்டாமணக்கு முதன்முதலாக வெட்டுண்டு சாய்ந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளைப் பூ பூக்கும் எருக்கு, மேகவண்ணப் பூ பூக்கும் நொச்சி - இவைகளை ஒரே மூச்சில் வெட்டித் தள்ளிக் கொண்டு காரைப் புதரில் நுழைந்தான்.

அநேகமாக வனம் முழுவதும் வளர்ந்து இருப்பது காரைதான். தண்ணீர் இல்லாத பிரதேசத்திலேயே செழித்து வளரும் காரை நீர் நிறைந்த பகுதியில் மதமதவென்று வளர்ந்திருந்தது.’


 

நாவல் முழுவதுமே இப்படியாகத்தான் செல்கிறது. கரும்பு ஆலை வைப்பதுதான் சிதம்பரத்தின் நோக்கம். அவன் அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல. அவன் அம்மா அந்த ஊரை விட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்ற போது அவன் இரண்டு வயதுக் குழந்தை. இலங்கையிலும் பிறகு சிங்கப்பூரில் இருந்துவிட்டு அம்மாவின் ஊர்ப்பக்கம் திரும்பியவன் சிதம்பரம். அந்தப் பெரிய காட்டை விலைக்கு வாங்கி அதை அழித்து கரும்பு ஆலை வைப்பது அவன் நோக்கம். அதற்காகவே அதன் ஒவ்வொரு செடியையும் கொடியையும் மரத்தையும் வெட்டி அதன் உள்ளே நுழைந்து பிறகு அத்தனை பெரிய காட்டையும் தீ வைத்து எரிக்கிறான்.

குறியீட்டுக்குள் குறியீடாக வருகிறது புளியமரம். ‘ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்திற்குப் புளி. தெற்கே இருக்கிற தித்திப்புப் புளியமரத்திலிருந்து புளி சாம்பமூர்த்தி ஐயர் வீட்டிற்கு. குட்டை மரத்திலிருந்து பெரிய பண்ணைக்கு. தென்கிழக்கு காத்தவராயன் மரத்துப் புளி பதஞ்சலி சாஸ்திரி வீட்டிற்கு. நெட்டை மரத்துப் புளி பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டிற்கு. ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக உலுக்குவார். ஒரு மரத்துச் சோட்டானோடு இன்னொரு மரத்துச் சோட்டான் கலக்காது.’

‘ஊர் முழுவதற்கும் புளி கொடுத்துக் கொண்டிருந்த மரங்கள் அவை. பல தலைமுறைகளாக மனிதர்களின் வாழ்க்கை வியக்கத்தக்க முறையில் அதனோடு பிணைக்கப்பட்டிருந்தது. மென்மையான அந்த உறவு யாரும் எதிர்பாராத விதமாகத் தீப்பட்டுப் பொசுங்கி விட்டது.’

கரும்பு ஆலையில் வேலை செய்பவர்களின் உதவிக்காக ஒரு மளிகைக் கடை வைக்கிறான் சிதம்பரம். ஊர்ப் பிரமுகர்களுக்குப் புளி அனுப்புகிறான். காட்டில் விளைந்ததல்ல. சீர்காழி, திருவெண்காடு, காவேரிப்பட்டினம் - இங்கெல்லாம் சென்று வாங்கியது.

ஆனால் அந்தப் புளி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எல்லாப் புளியும் திருப்பி அனுப்பப்பட்டது. பல்வேறு ரகம் - தித்திப்புப் புளி, புளிப்புப் புளி எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது. செங்காயையும் அடித்துக் கலந்திருந்தார்கள். அரிந்து கொட்டையெடுத்துக் கோது நீக்கியபோது பாதிக்கு மேல் குறைந்து போயிற்று. செட்டியார் வீட்டுக்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்பி வந்தது.

நாம் வாழும் இந்தப் புவிக்கு மனித இனத்தால் நேர்ந்த பேரழிவு நாவலின் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறது.

‘ஆச்சி காவிரிக் கரையில் சிதம்பரத்தைப் பார்த்ததும், ‘ஏண்டாப்பா, புண்ணியவானே! புளியெ வாயிலே வைக்க முடியல்லே!’ என்று குறைபட்டுக் கொண்டாள்.

தான் ஊருக்குள் காலடியெடுத்து வைத்த அன்று நிறைந்திருந்த புளிய மரங்கள் நினைவில் படர்ந்தன.

‘பாத்து நல்ல புளியா அனுப்பறேங்க, ஆச்சி.’

‘அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே?’

ஆச்சி பட்டுப் புடவையைப் பிழிது தோளில் போட்டுக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றாள்.

சிதம்பரம் ஆச்சி போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.’

(தொடரும்)


சா. கந்தசாமி - பகுதி 2
By சாரு நிவேதிதா
First Published : 17 July 2016 12:00 AM IST

அந்தத் தொகுப்பின் பெயர் கோணல்கள். தொகுத்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி. ம. ராஜாராம், சா. கந்தசாமி, நா. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் 12 சிறுகதைகள். தொகுப்பில் மூன்று கதைகளை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன் இன்று க்ரியா ராமகிருஷ்ணன் என்று அறியப்படுபவர். மைலாப்பூர் தேவடி தெருவில் இயங்கிய இலக்கிய சங்கம் நான்கு ரூபாய் விலையுள்ள இந்த நூலை 1968-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. (இந்த தேவடி தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்தான் பத்து ஆண்டுகளாக நான் வசித்து வருகிறேன். )

நூலுக்கு ஆர். சுவாமிநாதன் அருமையான முன்னுரையை வழங்கியிருக்கிறார். அதில் ‘இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றைய சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை’ என்று குறிப்பிடுகிறார் அவர். மேலும், தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாக விளங்கிய புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி ஆகிய மூன்று பேரின் பாதிப்பு இல்லாமல் தொகுப்பில் உள்ள நால்வரும் எழுதியிருப்பதாகவும் கூறுகிறார்.

தொகுப்பின் மிக முக்கியமான கதை சா. கந்தசாமி எழுதிய ‘உயிர்கள்.' 1965-ல் எழுதப்பட்ட இந்தக் கதையும் சாயாவனத்தின் கருவையே கொண்டிருக்கிறது. இந்தக் கதையும் என் சிறு பிராயத்தில் அனுபவித்ததுதான். அதே இடங்கள்; அதே சம்பவங்கள். அப்போதெல்லாம் அங்கே பெரும் தோப்பும் துரவுமாக இருக்கும். எங்குப் பார்த்தாலும் நீர் நிலைகள், மரங்கள், பட்சிகள். கண்ணுக்கெட்டிய தூரம் பச்சைப் பசும் வயல்கள். அவ்வப்போது வெட்டாற்றில் வாளக்கடியான் கடித்தோ நீரில் மூழ்கியோ யாராவது செத்துப் போவார்கள். ஊரில் வால் முனீஸ்வரனும் உண்டு. ‘உயிர்கள்’ கதையில் அற்புதராஜ் என்று ஒரு சார். தங்கையா, கோபால் என்று இரண்டு மாணவர்கள். தங்கையா ஆறாம் வகுப்பு. கோபால் ஏழாம் வகுப்பு. ஆனால் அற்புதராஜ் எட்டாம் வகுப்பு ஆசிரியர். தங்கையா அற்புதராஜ் சாரை சந்திக்கும் இடம் இது:

‘இரண்டு நாட்கள் அவருக்கு முன்னும் பின்னுமாக நடந்து மூன்றாவது நாள் வகுப்பிற்குப் போகும் போது, ‘குட்மார்னிங் சார்’ என்றான் தங்கையா. எட்டாவது சாருக்குத் துணிந்து முதன்முதலிலே குட்மார்னிங் வைத்தவன் அவன் தான். அற்புதராஜ் மெல்ல தலையசைத்து குட்மார்னிங் சொன்னார். அந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. ஒரு நிமிஷத்திற்குள்ளேயே அவன் புகழ் பெற்று விட்டான். ‘சாரைத் தெரியுமாடா?’ என்று துளைத்துத் துளைத்துக் கேட்டவர்களுக்கெல்லாம் மெல்ல சிரித்துக் கொண்டே தலையசைத்து, ‘சர்ச்சிலே பார்த்திருக்கேன்’ என்று பெருமையோடு பதிலளித்தான்.’

அற்புதராஜிடம் ஒரு வேட்டைத் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டு பறவை வேட்டைக்குப் போவது அவரது பொழுதுபோக்கு. தங்கையாவும் கோபாலும் அவரோடு சேர்ந்து கொள்வார்கள். ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்த போது, ஒரு செம்போத்துப் பறவையின் குரல் கணீரென்று கேட்டது.


செம்போத்து
செம்போத்துப் பறவையின் குரல்:
https://www.youtube.com/watch?v=_qEAh8sL3UU
https://www.youtube.com/watch?v=9PQ1a-K5oJU

(செம்போத்துவின் குரல் அமானுஷ்யத் தன்மை கொண்டதாக இருக்கும்.)

‘ஒரு செம்போத்துக் குரல் கணீரென்று கேட்டது. முன்னே சென்று கொண்டிருந்த அற்புதராஜ் இரண்டடி பின்வாங்கி அரசமரத்தைப் பார்த்தார். செம்போத்து தெரியவில்லை. ஆனாலும் அதன் குரல் மட்டும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டே இருந்தது. தங்கையாவும் சார் கூடவே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். வானுயர்ந்த மரம்; அடிமரத்தைக் கட்டிப் பிடிக்க பத்துப் பேர் வேண்டும். மரத்திற்கு முன்னே ஒரு சூலம். சூலத்திலேயே போட்டிருந்த ஒரு நீண்ட மாலை வாடிக் கிடந்தது. அரச மரத்திலே கிளை வெட்ட மாட்டார்கள்; ஆட்டுக்குக் கூட ஒரு இலை கிள்ள மாட்டார்கள். அது வால்முனி மரம்; வால்முனியைப் பற்றி எல்லோரையும் விட கோபாலுக்கு ரொம்பத் தெரியும். வானத்திற்கும் பூமிக்கும் சரியாக, உதயத்திற்கு முன்னே மேலத்தெரு வழியாக கலீர் கலீரென்று சலங்கையொலிக்க நடந்து போவதைப் பற்றி அவன் பாட்டி சொல்லியிருக்கிறாள். வால்முனி உறையும் மரத்தில் வேட்டையாட, சார் போவதைப் பார்த்து அவன் திடுக்கிட்டுப் போனான். செம்போத்து, சார் கண்ணிலே பட்டு விட்டது. சார் குனிந்து குனிந்து போய் பனைமரத்தின் கீழ் துப்பாக்கியை மேலே உயர்த்தி சரியாக நின்றார்.’

உடனே அதைத் தடுத்து விட்டுச் சொல்கிறான் கோபால். ‘சார், இது ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் சார். நெய்வாசலுக்குப் போற வழியிலே கூந்தப் பனைமரத்திற்கு அன்னாண்டே இலுப்ப மரத்திலே இருக்கிற முனியும் இதுவும் ஒன்னு சார்; இதுவும் நெய்வாசலும்தான் சார் அதன் எல்லை. இங்கேர்ந்து அங்கேயும், அங்கேர்ந்து இங்கேயும் போய் வந்து கொண்டிருக்கும்; பொழுது விடிஞ்சுட்டா எங்கயாச்சும் தங்கிடும் சார்.’ கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும் போலவே தெய்வங்களும் பேய் பிசாசுகளும் கூட வாழ்ந்து கொண்டிருந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்துக் கொண்டிருந்தன. இதைப் பதிவு செய்த முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் சா. கந்தசாமி.

‘(அற்புதராஜ்) வானத்தை நிமிர்ந்து பார்த்தார். வௌவால் மீன் சிறகு போல கொக்குகளும் மடையான்களும் பறந்து சென்று கொண்டிருந்தன. பின்னும் முன்னுமாக இரண்டு கூட்டங்கள் வந்தன. கிழக்கே வேட்டைக்காரன் வந்து விட்டான் என்பது தெரிந்தது; எங்கேயாவது துப்பாக்கி முழக்கம் கேட்டால் அதற்கு எதிர்த்திசையில் இப்படித்தான் கொக்குக் கூட்டமும் பறக்கும்.

‘மடையான் மடையான் பூப்போடு
மடைக்கு ரெண்டு பூப்போடு
அறுவா மணை தீட்டித் தறேன்
அதுக்கு ரெண்டு பூப்போடு.’

சின்னப் பிள்ளைகள் ஒரே குரலில் ராகமிட்டு நகங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.’

இப்போதைய இளைஞர்களுக்கு மேலே உள்ள பத்தியின் கடைசி வாக்கியம் புரியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. கூட்டமாகச் செல்லும் மடையானிடம் சிறுவர்கள் மேலே உள்ள பாடலைப் பாடியபடி நகங்களைத் தேய்த்தால் நகங்களில் ஒன்றிரண்டு பூக்களைச் சிந்தி விட்டுப் போகும் மடையான் கூட்டம். நானே சிறுவயதில் அப்படி பல பூக்களை விரல் நகங்களில் பெற்றிருக்கிறேன். நகத்தில் வெள்ளைக் கீறலாகத் தீற்றியிருக்கும் அந்தப் பூ. சீரகத்தின் அளவில் புறாவின் இறகை வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கும் அந்தப் பூ. அப்படி ஆளுக்கு ஒன்றிரண்டு பூக்களைத் தந்து போகும் மடையான்களை கேட்டாபெல்ட்டாலும் சுங்குத்தானாலும் வேட்டையாடித் தின்பதில் அப்போது எதுவும் தவறாகத் தெரியவில்லை.


கேட்டாபெல்ட்

சுங்குத்தான் படம் கிடைக்கவில்லை. ஊது குழலைப் போல் சுமார் ஒன்பது அடி நீளம் இருக்கும் அந்தக் கருவி. அதன் ஒரு துளையிலிருந்து கோலிக்குண்டு போன்ற ரவையை வாயில் வைத்து ஊதினால் பறவை சுருண்டு விழும். நாகூர் தவிர மலேஷியாவிலும் இந்த சுங்குத்தான் பழக்கத்தில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘உயிர்கள்’ கதை பற்றி சா. கந்தசாமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அறுபதுகளில் இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானபோது எம்.ஜே. அக்பர் ஆயிரம் ரூபாய் சன்மானம் அனுப்பி வைத்ததாக நினைவு கூர்ந்தார். நான் சொல்ல வந்தது என்னவென்றால், ‘மடையான் மடையான் பூப்போடு என்று சின்னப் பிள்ளைகள் ஒரே குரலில் ராகமிட்டு நகங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்’ என்ற கந்தசாமியின் வாக்கியம் இன்றைய இளைஞர்களுக்குப் புரியுமா? புரியாது எனில் இது எத்தகைய மகத்தானதொரு ஆவணம்! ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் கூட இந்த வாக்கியத்துக்கு அடிக்குறிப்பு எழுதியாக வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிக்குறிப்பு இதன் தாத்பர்யம் தெரிய வேண்டுமே?

அதேபோல் இன்னொரு இடம், தங்கையா பம்பரம் ஆடிக் கொண்டிருக்கும் கட்டம். ‘புளிய மரத்தடியில் பத்துக் குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். மனம் திக்கென்றது. அப்பீட் எடுக்கவில்லை. சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு ‘சார்’ என்றான்.’ இந்த இரண்டு வாக்கியங்களில் இன்றைய வாழ்வில் காணாமல் போய் விட்ட பத்துக்குத்து, அப்பீட், சாட்டை என்ற மூன்று வார்த்தைகள் உள்ளன. இப்படியே கந்தசாமியின் அத்தனை எழுத்துக்களிலும் தேடி ஒரு தனி அகராதியையே உருவாக்கலாம். ஆக, இப்படிப்பட்ட கலைஞர்களின் மூலம்தான் ஒரு மொழி நூற்றாண்டுகளைத் தாண்டி தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் போய் எந்தெந்த மரங்களில் பறவைகள் இருக்கின்றன என்று பார்த்து வைத்துக் கொள்கிறான் கோபால். ‘புன்னை மரத்தில் ஒரு குயில்; பிரப்பங்காட்டிற்குப் பக்கத்தில் நுணா மரத்தில் இரண்டு குயில்கள்; புள்ளியும் கருப்புமாக - ஆணும் பெண்ணுமாக. நெட்டிலிங்க மரத்தில் அவன் எண்ணிக் கொண்டே இருக்கையில் சிறகடிக்காமல் விர்ரென்று இன்னொன்று வந்தமர்ந்தது; அதைத் தொடர்ந்து இன்னொன்று. அவன் எண்ணிப் பார்த்தான். இங்கு மட்டும் ஆறு. தாழைக்குத்துப் பக்கம் போனால் கணக்கே கிடையாது. கள்ளுக் குருவி, நாணத்தாங்குருவி கணக்கா குயில் ரொம்ப இருக்கும்.’

‘குயிலுக்கு அவ்வளவு தந்திரம் தெரியாது; ஒரு குண்டு வெடித்தால், கொக்கு, மடையான் மாதிரி மேலே எழும்பி வெகுதூரம் போகாது. ஆபத்தையே உணராத பறவை அது. குண்டு சப்தம் கேட்டால் பத்து மரங்கள் தள்ளிப் போய் உட்கார்ந்து கொண்டு சோகமாக மனமுருகிக் குரல் கொடுக்கும்.’

சா. கந்தசாமியை நாம் ரிக் வேதத்தின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டும். ரிக் வேதத்தின் சாரத்தை பாரதி பாடியிருக்கிறார். அவருடைய புகழ்பெற்ற வசன கவிதைகளைப் பார்ப்போம்.


இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
உடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன. 
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் 
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

***

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான்,
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம்
தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள்,
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர் - இவை அமுதங்கள்.

***

இவ்வுலகம் ஒன்று.
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு - இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,
குழல், கோமேதகம் - இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி - இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி - இவை ஒருபொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -
இவை ஒருபொருளின் பலதோற்றம்.
உள்ள தெல்லாம் ஒரேபொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.


(தொடரும்)
சா. கந்தசாமி - பகுதி 3
By சாரு நிவேதிதா
First Published : 24 July 2016 12:00 AM IST


‘உயிர்கள்’ கதையில் இரண்டு மெலிதான காதல் காட்சிகள் வருகின்றன. கதை பத்து வயது சிறுவன் தங்கையாவின் பார்வையில் சொல்லப்படுவதால் அவனுக்கு அது பற்றி எதுவும் தெரிவதில்லை. அவன் வெறுமனே பார்த்ததை மட்டும் கதாசிரியர் நமக்குச் சொல்கிறார்.

‘பேசுவதை விட சார் சிரிக்கிறதுதான் ரொம்ப. ஆனாலும் அவனுக்கு நினைவு வந்தது. ஒருநாள் சரஸ்வதி டீச்சர் என்னமோ இங்கிலீஷில் சொல்லிவிட்டுத் தலையை கவிழ்த்துக் கொண்டு சிரிச்சாங்க. சார் கொஞ்சங்கூட சிரிக்கலே. அது ரொம்ப ஆச்சரியந்தான். சார் பாட்டுக்கு எழுதிக் கொண்டேயிருந்தார். அதிலேர்ந்து சரஸ்வதி டீச்சர் சார் கிட்டே பேசறதில்லே.’

இரண்டாவது காதல் இப்படி ஒருதலைக் காதலாக அல்லாமல் இருவரும் ஈடுபடுவதாகச் சித்திரிக்கப்படுகிறது. சிறுவனின் பார்வையில்தான்.

‘சார், எங்கக்கா ரெண்டு குயில் கேட்டுச்சு சார்’ என்று கேட்டான் தங்கையா.

அற்புதராஜ் தலையசைத்து மெல்லப் புன்னகை பூத்தார். ஓரோர் சமயம் தங்கையா வீட்டுப் பக்கமாக அவர் போவார். அவன் அக்கா வாசலில் நின்றிருந்தால் வெடுக்கென்று உள்ளே ஓடி விடுவாள். அவள் கேட்ட குயிலுக்காகத்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.’

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் குயில்களே கிடைக்கவில்லை. வழக்கமாக வேட்டையாடுவது போல் அற்புதராஜ் சார் வேறு எந்தப் பறவையையும் வேட்டையாடவில்லை. அவருடைய ஒரே நோக்கம் குயிலாகத்தான் இருந்தது. ஆனால் எங்குத் தேடியும் குயில்கள் தென்படவில்லை. கடைசியாக ஒரு புன்னை மரத்தில் இரண்டு குயில்கள் (ஆணும் பெண்ணும்) புள்ளியும் கருப்புமாகத் தெரிகின்றன.

சார் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தார். நிச்சயம் ஒன்று விழும். எந்தப் பக்கம் என்று நோட்டம் விட்டான் கோபால்.

ஆண் குயில் கீழ்க் கிளையிலிருந்து மேல் கிளைக்குத் தாவியது. குறி தப்பிவிட்டது. அற்புதராஜ் துப்பாக்கியைக் கீழே இறக்கினார். இரண்டடி பின்வாங்கி நெட்டிலிங்க மரத்தில் சாய்ந்தார். மேல் கிளைக்குத் தாவிய குயில் தலையசைத்து சன்னக் குரலில் கூவியது. அதன் குரல் என்றுமில்லாத சோபையும் மதுரமும் பெற்றிருப்பது மாதிரித் தோன்றியது. பெண் குயில் அழைப்புக்குச் செவி சாய்த்து சற்றே நாணி மெல்ல முன்னேறியது ஆண் குயில். மேல் கிளையிலிருந்து சர்ரென்று வந்து பெண் குயிலோடு அமர்ந்தது.

சார் சாய்ந்தபடியே நின்றார். துப்பாக்கி மேலே உயரவில்லை. இன்பம் துய்க்கும் குயில்களின் காதல் பெருவாழ்வு அவர் மனத்தைக் கரைத்து விட்டது. துப்பாக்கியைத் தோளில் மாட்டிக் கொண்டார்.

அன்றைக்கு ஒன்றும் வேட்டையில்லை; வெறும் கையோடு திரும்பினார்கள். அப்படித் திரும்புவது அதுதான் முதல் தடவை. குயில் பக்கத்திலிருந்தும் சார் ஏன் சுடாமல் விட்டார் என்பது இரண்டு பேருக்கும் விளங்கவே இல்லை; கோபால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவனால் தாள முடியவில்லை. கடைசியாக சாலைக்கு வந்தப்புறம் மெல்ல சார் பக்கமாகத் திரும்பி, ‘ஏன் சார் குயிலை சுடாம விட்டீங்க?’ என்று கேட்டான்.

அற்புதராஜ் லேசாக முறுவலித்தார்.

அடுத்த வாரம் சுட்ட எட்டு குயிலும் தங்கையாதான் எடுத்துக் கொண்டு போனான்.’

‘தங்கையா வீட்டுப் பக்கம் வந்து விட்டால் சாருக்கு சிரிப்பு வந்து விடும். தலை குனிந்து கொண்டு சிரிப்பார். கண்கள் சன்னலை நோக்கி அலைபாயும். ஆனால் ஒரு நிமிஷம் அங்கே நிற்க மாட்டார். விர் விர் என்று நடைதான்.

சர்ச்சுக்குச் செல்லுகையில் தங்கையா ஓடி வந்து சொன்னான், ‘உங்க சார் எதுக்குடா இப்படி ஓடுறார்ன்னு அக்கா கேட்டுச்சு சார். எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு; தினம் தினம் இப்படித்தான் உங்களைக் கேலி பண்ணுது. இன்னைக்கு சரியா மாட்டிகிச்சு; முதுகிலே நல்லா ஒரு குத்து விட்டுட்டு ஓடியாந்துட்டேன் சார். அதோ பாருங்களேன் குனிந்து கொண்டே போறதை’ என்று அக்காவைக் காட்டினான்.



அவனிடம் சொல்ல விரும்பியதையெல்லாம் அவர் சொல்லவில்லை.’

இப்போது பாலைவனத்தைப் போல் காய்ந்து கிடக்கும் தஞ்சாவூர் மாவட்டம் அப்போது எப்படி இருந்தது என்பது பற்றிய குறுஞ்சித்திரம் இது:

‘மழை பொழிந்து விட்டிருந்தது. நண்டு நத்தையெல்லாம் ஊரும். வரப்பிலே நடக்க முடியாது. சதசதவென்று சேறு. தண்ணீர்ப் பாம்பு வேறு கிடைக்கும். அதுதான் கொக்கு மடையானுக்குக் காலம். குளத்தையும் வயல்வெளியையும் சுற்றிச் சுற்றி வரும். குஞ்சுகளுக்குப் பாதுகாப்பாய், துணையாய் வந்து மேய்வது பார்ப்பதற்கு ரொம்ப அழகு.’

சென்ற அத்தியாயத்தில் பாரதியின் ரிக் வேத சாரத்தைப் பார்த்தோம் அல்லவா? பல்லுயிர் ஓம்புதல் என்பதன் அவசியத்தை வேறு விதமாகச் சொல்கிறார் கந்தசாமி.

‘சார் குயில்’ - உச்சிக் கிளையில் உட்கார்ந்திருந்த குயிலைப் பார்த்து விட்டுச் சொன்னான் தங்கையா. சார் மேலே பார்த்தார். குயில் உச்சியிலிருந்தது. சாதாரணமாக அவ்வளவு தூரம் குயில் போவதில்லை; ரொம்பக் கலவரமுற்றுப் போய் விட்டது. தப்பித்துக் கொள்ள ஆசை; கூவக் கூட பயந்து கிளையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தது. சார், கீழ்க் கிளையைப் பிடித்துக் கொண்டு மேல் கிளைக்குத் தாவினார். வசதியாக ஒரு கிளையில் சாய்ந்து கொண்டு துப்பாக்கியை மேல் நோக்கிப் பிடித்தார். குயில் எங்கே விழுமென்று பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக சிறகை படபடவென்று அடித்துக் கொண்டு போய் குளத்தில் விழுந்தது. உயிர் இன்னும் போகவில்லை. தலையறுத்துப் போட்ட கோழி மாதிரி எழும்பியெழும்பி அல்லி இலைகளில் விழுந்து புரண்டு கொண்டே இருந்தது. சோகம் கப்பிய காட்சி. எத்தனை துரதிர்ஷ்டமான சாவு. உடல் பிய்ந்து போவது மாதிரி கணமும் ஓயாது, சிறு இறகுகளைப் பறக்க அடித்துக் கொண்டு கூவியது.’

***

சா. கந்தசாமியின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பு ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. 1974-ல் க்ரியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த இந்த நூலை 1982-ல் வாங்கினேன். 35 ஆண்டுகளாக என் அலமாரியில் வீற்றிருக்கும் இந்த அற்புதமான தொகுப்பில் ஏழு சிறுகதைகள் உள்ளன. மேலே பார்த்த ‘உயிர்கள்’ சிறுகதையும் இத்தொகுப்பில் உள்ளது.



தொகுப்பின் முதல் கதையான ‘பாய்ச்சல்’ அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதையான புலிக் கலைஞனுக்கு நிகரான கதை. அனுமார் வேஷம் கட்டி ஆடும் ஓர் ஆளும் அவரைக் கண்டு வியக்கும் அழகு என்ற சிறுவனும்தான் இதன் பிரதான பாத்திரங்கள். கதை முழுக்கவும் அனுமார் எப்படியெப்படியெல்லாம் ஆடுகிறார் என்ற வர்ணனை.

‘வால் நீளமாகத் துவண்டு பூமியில் கிடந்தது. இவன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அடங்கியிருந்த மேளமும் நாதசுரமும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன. அனுமார் ஆடிக்கொண்டே கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். தலையை ஒரு சொடுக்குச் சொடுக்கி நடுவில் வந்து நின்று பெருங்குரலில் ‘ராமா, ராமா’ என்று இரு கையாலும் மார்பைக் கிழித்தார். மார்பு கிழிபட கிழிபட நெஞ்சின் நடுவில் ராமன்; அந்தப் பக்கம் சீதை; இந்தப் பக்கம் லட்சுமணன்.

‘ராமா, ராமா’ - இரைச்சலில் கூட்டம் அமிழ்ந்தது. இவன் கண்களைச் சிமிட்டாமல் அனுமாரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ராமா’ என்று அனுமார் எம்பிக் குதித்தார். ராமனும் சீதையும் லட்சுமணனும் பார்வையிலிருந்து மறைந்தார்கள். கைச்சதங்கையும் கால் சதங்கையும் ஒலிக்க அனுமார் நடக்க ஆரம்பித்தார். இவன் அனுமாரை ஒட்டினாற் போலச் சென்றான். நடந்து சென்ற அனுமார் சட்டென்று திரும்பினார். தன்னைப் பிடிக்கத்தான் வருகிறாரோ என்ற பயம் மேலிட அழகு பின்னுக்குப் பின்னுக்கு ஓடினான்.

அனுமார் ஒரு சின்ன ஆட்டம் ஆடி விட்டு நடக்க ஆரம்பித்தார். கீழே புரண்ட வாலை இவனை ஒத்த இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். இவன் அவர்கள் பக்கமாகச் சென்றான்.

இருந்தாற்போல இருந்து அனுமார் துள்ளிப் பாய்ந்தார். இவன் தோளிலிருந்து வால் நழுவித் தரையில் விழுந்தது. அதைப் பிடிக்க இவன் குனிந்தான்.

அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார். ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்து மணி அறுந்து கீழே விழுந்தது. ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார். மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை. தடுமாறி விட்டது. மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.’

ஆட்டமெல்லாம் முடிந்து அனுமார் தன் இருப்பிடம் நோக்கிப் போகிறார். அவருடைய ஆட்டத்தில் தன்னைப் பறி கொடுத்து, அவரை நிஜமான அனுமாராக நம்பும் அழகு அவரைப் பின் தொடர்கிறான்.

‘அனுமார் நிமிர்ந்து உட்கார்ந்து வாலைப் பிடுங்கிப் போட்டார். அப்புறம் வாய், இடுப்பு வேட்டி, மார்புக் கச்சை, ராமர் படம், கால் சதங்கை, கை சதங்கை - ஒவ்வொன்றையும் எரிச்சலோடு வீசியெறிவது போல இவனுக்குத் தோன்றியது.

அனுமாருக்கு என்ன ஆகி விட்டது என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

பளுவை எல்லாம் இழந்த சுகத்தில் அனுமார் கையையும் காலையும் உதறிக் கொண்டு பீடியை எடுத்துப் பற்ற வைத்துப் புகையை நன்றாக இழுத்தார். கண்களை மூடி மேலே பார்த்தபடி புகையை ஊதுகையில் இருமல் வந்தது. விட்டு விட்டு இருமி இருமிக் காறி உமிழ்ந்தார்.

இவன் அனுமாரையே பார்த்துக் கொண்டிருந்தான். அசுர பலத்தோடு சாகசங்கள் புரிந்த அனுமார் பீடி அடித்துச் சோர்ந்து போய் இருமுகிறார். இவனுக்கு அழுகை வருவது போல இருந்தது.’

பல அன்பர்கள் என்னிடம் இலக்கியம் ஏன் படிக்க வேண்டும் என்று வினவுகிறார்கள். இலக்கியம் படித்தால் வாழ்வு இன்னும் செம்மையுறும். இந்தப் பாய்ச்சல் என்ற கதையில் வரும் அனுமாரை ரஜினிகாந்தாகவும் சிறுவன் அழகுவைத் தமிழர்களாகவும் உருவகித்துப் பாருங்கள், கலைஞன் என்றால் யார் என்று புரியும். 35 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதையில் இன்றைய தலைமுறையின் அவலத்தைச் சுட்டியிருக்கிறார் கந்தசாமி.

‘ஆட்டமெல்லாம் பார்த்தியா?’

‘பாத்தேங்க; ரொம்ப ஜோருங்க...’

‘உம்’ சின்ன இருமல்.

‘வால்ல நெருப்பு வச்சுக்கிட்டப்ப ஊரே எரியப் போவுதுன்னு நெனச்சேன்.’

அனுமார் கையைத் தரையில் அடித்துப் பெரிதாகச் சிரித்தார். கையிலிருந்த சதங்கை கீழே நழுவ அச்சத்தோடு அனுமாரைப் பார்த்தான்.’

பிறகு அவருக்கு முன்னே அழகு அவரைப் போலவே ஆடிக் காண்பிக்கிறான். அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘இதோ பார், நான் ஆடுகிறேன்’ என்று சொல்லி விட்டு சந்நதம் வந்தது போல் ஆடுகிறார் அனுமார். அதைப் பார்த்து விட்டு அழகு ஆடுகிறான். அப்படியும் அவரால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழகுவின் ஆட்டம் தொடர்கிறது.

‘அனுமாரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து அம்பு போல முன்னால் பாய்ந்தார். பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றிச் சமாளித்து நின்று வெறுமை நிறைந்த மனத்தோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.

அழகு பற்களெல்லாம் வெளியே தெரியச் சப்தமாகச் சிரித்து கைகளை ஆட்டி எம்பி எம்பிக் காற்றில் மிதப்பது போல முன்னே வந்தான்.

அனுமார் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் வந்த அவன் தலையை ஒயிலாக ஒரு வெட்டு வெட்டி பின்னுக்குச் சென்றான்.

‘என்னாடாலே, எனக்கா பாச்சக் காட்டுற’. அனுமார் கத்திக் கொண்டே அவனைப் பிடிக்கப் பாய்ந்தார். அவன் குனிந்து பிடியில் சிக்காமல் நழுவ - அனுமார் கால்கள் பின்னிக் கொள்ளத் தரையில் விழுந்தார்.

அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல், தன் ஆட்டத்தில் மூழ்கியவனாகக் களிப்பும் உற்சாகமும் பொங்க வேகமாக ஆடிக் கொண்டிருந்தான்.’

***

இப்படிப்பட்ட உலகத் தரமான சிறுகதைகள் ‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார்.

***