Tuesday 4 October 2016

பெயரை அழித்தல் - மனுஷ்ய புத்திரன்

பெயரை அழித்தல்
………………

இலட்சோப இலட்சம் பெயர்களில்
ஒரு தனித்த நட்சத்திரம்
உன் பெயர்
நான் அந்த பெயரை
நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டேன்
இரத்தத்தில் எழுதி உனக்கு அனுப்பினேன்
பைத்தியமாகி அறைச்சுவர்களில்
கிறுக்கி வைத்தேன்
அந்தப் பெயரை
என் மதுவில்
ஐஸ் துண்டுகளைப்போல
போட்டு எத்தனையோமுறை
குடித்திருக்கிறேன்
நீ இல்லாமல் போன விலாசத்தில்
இந்தப் பெயரில் இருந்தவள் எங்கே
என்று கேட்டு கண்ணீருடன் போய்
நின்றவன்தான் நான்


அந்தப் பெயரை
இன்று காலை
ஒரு ஷேர் ஆட்டோவில் பார்த்தேன்
நெடுஞ்சாலை பயணமொன்றில்
சரக்கு லாரி ஒன்றிலும் பார்த்திருக்கிறேன்
அந்தப் பெயரில்
ஒரு பீடா கடை எனக்குத் தெரியும்
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுகிற
கடை ஒன்றையும் பார்த்த ஞாபகம்
கடற்கரையில் அந்தப் பெயருள்ள
ஒரு மீன் காரியை
இன்னொரு மீன் காரி
கெட்ட வார்த்தையால்
பெயர் சொல்லி திட்டிக்கொண்டிருந்தாள்
நேற்று பார்த்த சினிமாவில்
ஒரே ஒரு காட்சியில் வரும்
கதாநாயகியின் தோழிக்கும்
உன் பெயர்தான்
உன் பெயர்தானா அது
என்று நினைக்கும் அளவுக்கு
இந்த நாட்களில்
அது வண்ணமிழந்துவிட்டது

உன் நினைவுகளை அழிப்பது
ஒரு கயிறை துண்டிப்பது போல
எளிதாகத்தான் இருந்தது
உன் பெயரை அழிப்பது
ஒன்றை தினமும்
ரம்பத்தால் அறுப்பதுபோல இருக்கிறது

- மனுஷ்ய புத்திரன்

310.2016
காலை 10.34

 http://www.writerpayon.com/2016/10/04/விழிப்பு/

விழிப்பு -

பேயோன்

in கவிதை

உன்னை எரித்த பின்பு
இயல்பாகக் கண்விழித்துச்
சிலகாலம் ஆயிற்று
சில நாட்கள் பசி எழுப்பியது
சில நாட்கள் முதுகுவலி
சில சமயம் வேலையின் நினைப்பு
அரைத் தூக்கத்தில் ஒரு கவிதை
உதித்து எழுப்பியதும் உண்டு
ஒருமுறைகூட
நீ கனவில் வந்து எழுப்பவில்லை.