Saturday, 8 October 2016

என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய் சிறுகதை எஸ். செந்தில்குமார்

Kalachuvadu ஆகஸ்ட் 2008 என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்

என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்
சிறுகதை
எஸ். செந்தில்குமார்


சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில் வாரச் சந்தை கூடும் நாள். சந்தையைத் தாண்டித்தான் சவவண்டி நகர்ந்துபோனது. சிகாமணி இறப்பதற்கு முன், அவனாகவே யாரிடமோ சொல்வதுபோலத் தான் இறந்ததும் கார்க்கோடனும் இறந்துபோவான் என்று சொன்னான்.

தேனி வாரச் சந்தை முடிந்ததும் அன்று இரவு, கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் தேடி எடுப்பவனாக இருந்தான் சிகாமணி. காக்கி நிறத்தில் அரை டவுசரும் சிவப்பு நிறத்தில் அரைக்கை பனியனும் போட்டியிருந்தான் சிகாமணி. சந்தைக்கு வருபவர்கள் கைதவறிவிடும் நாணயங்களைப் பொறுக்கி எடுப்பதற்காக வந்தபோது அவனைத் தவிரக் கார்க்கோடனும் இருந்தான். தவறிவிழுந்து தேடி எடுக்க முடியாத நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் கார்க்கோடனும் சிகாமணியும் போட்டிபோட்டுக்கொண்டு எடுத்தனர். கார்க்கோடனின் உண்மையான பெயர் அதுவல்ல. வேறு ஏதோ. பஸ் ஸ்டாண்டிலிருந்த நடைபாதை வியாபாரிகள் அவனுக்குக் கார்க்கோடன் என்று பெயர் வைத்திருந்தனர்.

கார்க்கோடனின் உண்மையான பெயர் சிகாமணிக்கு மட்டுமே தெரியும். கார்க்கோடன் தினமும் உப்பார்பட்டியிலிருந்து தேனி வருவான். காலையிலிருந்து மாலை வரை பஸ்ஸ்டான்டில் பிக்பாக்கெட் அடிப்பான். மாலையில் கையில் காசிருக்கும் அளவைப் பொறுத்துச் சிகாமணியுடன் சேர்ந்து திட்டம்போடுவான்.

இரவுக் காட்சி முடிந்து ஆட்கள் வரும் வேளையில் சந்தையில் நடமாட்டம் இருக்கும். இரண்டு வேசிகள் சந்தையின் பின்புறம் அமர்ந்திருப்பார்கள். அவர்களில் குட்டையாக இருந்தவளிடம் தேநீர் அருந்துவதற்கெனச் சில்லறை வாங்கித் தேநீர் குடித்துவிட்டுச் சந்தையின் வாசலில் நின்றிருப்பார்கள்.

சிகாமணி வீட்டிற்குச் செல்வதே இல்லை. அதேபோல அவனைத் தேடிவருவதற்கும் ஆட்கள் என எவரும் இல்லை. அவனது அம்மாவும் அப்பாவும் தேயிலை எஸ்டேட்டிலும் அவனது சகோதரன் ஒருவன் பெரியகுளம் பவளம் தியேட்டரிலும் வேலைசெய்வதாகச் சிலர் சொல்வார்கள்.

சிகாமணியின் அம்மா மலையாளத்துக்காரி என்றும் இல்லை இல்லை அவனது அப்பாதான் மலையாளி. அம்மா நம்மூர்க்காரி. வேலைக்குப்போன இடத்தில் அவன்கிட்டே பிள்ளையைப் பெத்துக்கிட்டா என்று சொல்பவர்களும் உண்டு.

தேனி மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாலையில் சென்று அங்கிருக்கும் கிணற்றில் நீரை இறைத்துக் குளித்துவிடுவான். கிணற்றின் சுவரில் ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்தில்தான் அவன் கட்டிக் குளிக்கும் கோமணத்தையும் தேய்த்துக் குளிக்கும் வைக்கப்புல்லையும் ஒளித்துவைத்திருந்தான். வங்கிக்குப் பின்னால் இருக்கும் ரேஷன் கடைகளில் கவிழ்த்துவைத்திருந்த மண்ணெண்ணெய் டின்னில் கோமணத்தைக் காயப்போட்டுவிட்டுப் பிறகு எடுத்து மடக்கிப் பொந்துக்குள் வைத்துவிடுவான்.

சந்தைகூடாத பிற நாள்களில் தினமும் காலையில் குளித்துவிட்டுச் சுந்தரம் தியேட்டருக்குச் செல்வான். தியேட்டரின் வாசலில் அமைதியாக உட்கார்ந்துகொள்வான். காலைக்காட்சி ஓடாத அன்று தியேட்டரின் முன்னிருக்கும் மைதானத்தில் நெல் காயப்போட்டிருப்பார்கள். சில நாள்கள் புளியம்பழத்தைப் பெண்களும் சிறுமிகளுமாக உட்கார்ந்து தட்டிக்கொண்டிருப்பார்கள். அதையே சிகாமணி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். தியேட்டரின் முன்புறமாக இருக்கும் தென்னை மரங்களின் காற்றில் உறக்கம் வரும். அப்படியே உறங்கிவிடுவான்.

சிகாமணி ஒருமுறை சந்தையில் காசு தேடிக்கொண்டிருந்தபோது சந்தையின் எந்தப் பக்கத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. சந்தை வியாபாரிகளைத் திட்டிக் கொண்டே நடந்தான். செங்கல்வராயன் பொடிக் கடைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு காறிக்காறித் துப்பினான். துப்பிய இடத்தில் எச்சிலின் மேல் மண்ணைப் போட்டு மூடும்போதுதான் ஒரு நூறு ரூபாய்த்தாளைப் பார்த்தான். அப்படியே டபக் என்று எடுத்துக்கொண்டு பெரியகுளம் ரோட்டில் நின்று நல்ல தாளா, கள்ளத் தாளா என்று பார்த்தான். ஜெராக்ஸ் காப்பி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடித்துவிடுவான். ஜெராக்ஸ் காப்பி ரூபாய்களைக் கண்டுபிடிக்கச் சொல்லிக்கொடுத்தது கார்க்கோடன்தான்.

பஸ்ஸ்டாண்டுக்குப் போய்க் கார்க்கோடனிடம் ரூபாய்த்தாளைக் காட்டியதும் சிகாமணியின் முதுகில் தட்டி, "ஆத்தா கண்ணத் திறந்துப் பார்த்துட்டா சிகாமணி" என்றான் கார்க்கோடன். "நல்ல நோட்டா" என்று கேட்டான். ஆமாம் என்றான் கார்க்கோடன். அவன் விரல்கள் ரூபாய்த்தாளையே தடவிக்கொண்டிருந்தன. பிறகு இருவரும் நாகர் புரோட்டாக் கடைக்குப் போனார்கள். ஆளுக்கு இரண்டு புரோட்டா, ஒரு ஆம்லெட் என்று சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்குப் போனார்கள். சிகாமணியும் கார்க்கோடனும் லெட்சுமி தியேட்டரில் படம் பார்ப்பதற்கு விரும்புவார்கள். மின்விசிறிக்குக் கீழே உட்கார்ந்துகொண்டால் தூக்கம் நன்றாக வரும். படம் முடிந்த பிறகுதான் தூக்கமே கலையும்.

சிகாமணிக்கு அதற்குப் பிறகு ரூபாய்த் தாள் கிடைப் பது அரிதாக இருந்தது. தான் பிக்பாக்கெட் அடித்த காசில் கார்க்கோடன் இரண்டு தடவை அவனை நாகர் புரோட்டாக் கடைக்கு அழைத்துச் சென்றான். கார்க்கோடனைப் புதிதாக வந்த எஸ். ஐ. லாக்கப்பில் போட்டுவிட்டார்.

கார்க்கோடனைப் போலீஸ் பிடித்துக்கொண்டுபோனதிலிருந்து சிகாமணிக்குத் தனியாக இருப்பது வருத்தமாக இருந்தது. கார்க்கோடனிடம் லெட்சுமி தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிந்தபோது "நான் இறந்த பிறகுதான் நீயும் சாக வேண்டும்" என்றான். அதற்குக் கார்க்கோடன் அமைதியாக இருந்தான். திரும்பவும் சிகாமணி "நான் இறந்ததும் நீயும் இறந்திடனும். நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக் கூடாது" என்றான்.

அதற்குப் பிறகு லெட்சுமி தியேட்டரில், படம் பார்க்கக் கார்க்கோடனால் முடியவில்லை. சிகாமணிக்கும் படம் பார்ப்பதற்கு இஷ்டம் இல்லை. அன்று முழுவதும் அவன் அமைதியாக இருந்தான். கார்க்கோடன் இல்லாதபோதுதான் சிகாமணி ஹக்கீம் பாய் மரக்கடைப் பக்கம் போவான். கார்க்கோடனை, ஹக்கீமுக்குப் பிடிக்காது. தனக்குத் தெரியாமல் சிராய்களையும் மரப்பட்டைகளையும் விற்றுவிடுகிறான் என அவனைக் கடைக்குள் விடுவதில்லை. ஆனால், பாய் சிகாமணியைக் கடைக்குப் போய்வரக் கூப்பிட்டுக்கொள்வார்.

மரக்கடை வசந்த விஹார் லாட்ஜிற்குப் பின்னால் இருந்தது. மரக்கடையின் வெளியே பெரிய பெரிய உருட்டுக்கட்டைகளின் மேலே, ஆள்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். மரக்கடைக்கு எதிரே பொதுக் கழிப்பறை இருந்தது. மரக்கடையிலிருந்தபடியே பொதுத் தொலைபேசி நிலையத்திலிருக்கும் பெரிய ஆண்டனாக்களைப் பார்க்க முடியும். கடையில் யாரும் இல்லாதபோது, சிகாமணியை இரவு நேரத்தில் காவலுக்குப் படுக்கச் சொல்வார் ஹக்கீம் பாய். மரக்கடையின் பக்கத்திலேயே பாய் அவர்களின் வீடு இருந்தது. வீட்டில், வெள்ளை நிறத்தில் பழுப்பு நிறக் கண்களோடிருந்த பெரிய கோம்பை நாயை முரட்டு இரும்புச் செயினில் கட்டியிருப்பார்கள்.

ஹக்கீம்பாய் சொல்கிற வேலையைச் செய்துவிட்டு, உருட்டுக்கட்டையின் மேல் உட்கார்ந்திருந்ததால், டீ வாங்கிக்கொண்டு வரச் சொல்வார். எத்தனை டீ வாங்கிக்கொண்டு வரச் சொல்கிறார், கடையில் எத்தனை ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கையைச் சரிபார்ப்பான் சிகாமணி. தனக்கும் சேர்த்துத்தான் டீ வாங்கிக்கொண்டு வரச் சொல்கிறார் என்றால் வேகமாக வந்துவிடுவான். இல்லையென்றால் இரண்டு தடவை டீக்கடைக்கு ஆட்கள் தேடி வரும்வரை தாமதிப்பான். பிறகு ஹக்கீம் பாய் டீ தம்ளர்களைத் திரும்பத் தரும்போது கணக்கில் டீ குடிச்சுக்கோ என்பார். சிகாமணி இனிப்பு வடை, காரவடை என்று சாப்பிட்டு நிதானமாகத்தான் டீயைக் குடித்துவிட்டு வருவான்.

பாய்க்கு இந்த விசயமெல்லாம் தெரிந்ததுதான். வார விடுமுறை புதன்கிழமையில் 'தண்ணி மப்பில்' நெடுங்கண்டத்தில் தனது மாமாவிடம் வேலை செய்யும்போது சாயாக் கடையில் அவரது கணக்கில் ரூபாயே வாங்கி ஜிஞ்சர் குடிப்பதைச் சொல்வார். தனக்குத் தெரியாமல் கடையில் சிராய்களையும் மரப்பட்டைகளையும் கூடையில் அள்ளி விற்பதைத்தான் பொறுத்துக்கொள்ளமாட்டார் பாய்.

ஹக்கீம் பாய் மரக்கடையில் உருட்டுக்கட்டையின் மேல் உட்கார்ந்திருந்தான் சிகாமணி. நாடார் அம்மா பிளாஸ்டிக் சாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு பட்டையும் சிராயும் கேட்டது.

சிகாமணியை முறைத்துப் பார்த்துவிட்டு "குண்டு தொங்குது" என்றாள் நாடார் அம்மா. சிகாமணி "அம்மாச்சி நீங்க பார்க்காத குண்டா" என்றான். நாடார் அம்மா கோபமாக, "சீ! நாயே" என்றாள்.

நாடார் அம்மா பட்டையும் சிராயும் வாங்கிக் கொண்டு போனபிறகு உருட்டுக்கட்டையின் மேல் உட்கார்ந்துகொண்டு தனது தொடைகளையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு என்ன நினைத்தானோ கட்டையின் குறுக்குவாக்கில் உட்கார்ந்திருந்தவன் நீளவாக்கில் இரண்டு கால்களையும் இரண்டு பக்கமும் போட்டுக்கொண்டு, அப்படியே உருட்டுக்கட்டையைக் கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டான். அப்படிப் படுத்துக்கொள்வது சிகாமணிக்குப் பிடிக்கும். தொடர்ந்து சிறிது நேரம் படுத்திருந்தவன் எழுந்து எதிரே இருந்த பொதுக் கழிப்பிடத்திற்குச் சென்றான். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.

தேனியில் மதியமே சாரல் தொடங்கிவிட்டது. சாரல் விழுந்துகொண்டேயிருந்தது. ஹக்கீம் பாய் கடையில் மரங்கள் நனைந்துவிட்டன. காற்றும் சாரலும் தொடர்ந்தபடியே இருந்தன. சாக்பீஸால் எழுதிவைத்திருந்த மரக் கட்டையின் அளவு எண்கள் சாரலில் நனைந்துகொண்டிருந்தன. அந்த மழையில் மரக்கடைத் தரை சகதியாகிவிட்டது. பாய் நாயைக் கையில் பிடித்துக்கொண்டு ராத்திரியில் எப்போதும் போலக் கடையைச் சுற்றிவந்தார். சகதி மண்ணில் கால் பிசகி வழுக்கிவிட்டது. விழுந்தவருக்கு இடுப்பில் நல்ல அடி. விழுந்த அடியில் ஏதோ தவறாகி மூத்திரம் வருவது நின்றுவிட்டது. இடுப்பு எலும்பு விலகியதற்குக் கட்டுப்போடப் போன இடத்தில், முதலில் மூத்திரம் வருவதற்குச் சரிசெய்யுங்கள். பிறகு கட்டுப்போடலாம். ஐந்து அல்லது ஆறு கட்டில் எழுந்து நின்றுவிடுவார் என்று சொன்னார்கள்.

மூத்திரம் வருவதற்கு வைத்தியம் செய்யக் க. விலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். குளுகோஸ் ஏற்றிப் படுக்கவைத்துவிட்டார்கள். இரண்டு நாள் கழித்து மூத்திரம் சிவப்பு நிறத்தில் வெளியேறியது. யூரின் கேனில் நிறைந்திருக்கும் நீரைக்கொண்டு கழிப்பறையில் கொட்டிவிட்டு, கழுவிவைத்துவிட வேண்டும். மூத்திரம் வந்ததும் யூரின் கேனில் பிடித்துத் தருவார் பாய். கொண்டுசென்று திரும்பவும் கழிப்பறையில் கொட்ட வேண்டும். ஹக்கீம் பாயின் மனைவிக்கு மருத்துவமனையில் இருப்பதே குமட்டிக்கொண்டு வந்தது. இதில் எப்படிக் கழிப்பறைக்குச் செல்வது என யோசித்தாள். இந்த நேரத்தில், ஹக்கீமுக்கு மலம் வர நெருக்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த பணிப் பெண்கள் தங்களால் இயலாது எனத் தெரிவித்துவிட்டார்கள். 'இதற்கெல்லாம் வேறு ஆம்பிளைங்களத் துணைக்கு வைச்சிருக்கணும்' என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகுதான் ஹக்கீம்மின் மனைவிக்குச் சிகாமணியின் ஞாபகம் வந்தது. மூத்திரம், மலம் எடுத்துப்போடவும் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு இருக்கவும் சொல்லுகின்ற வேலையைச் செய்யவும் அவனை அழைத்துவந்தாள். தேனியிலிருந்து தினமும் மூன்று வேளை அவர்கள் இருவருக்கும் உணவு வந்தது.

கண்டமனூர் மருத்துவமனையிலிருந்து, பாயை வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். கட்டுப்போடுபவர்கள் வீட்டிற்கே வந்து முதல் கட்டைப் போட்டார்கள். கட்டிற்கு மேல் எண்ணெய் ஊற்றவும் இரண்டு கால்களிலும் முதுகு மற்றும் ஆசனப் பகுதிகளில் எண்ணெய் தடவவும் மூத்திரம், மலம் எடுத்துப்போடவும் திரும்பவும், சிகாமணியை அழைத்துவைத்துக்கொண்டார்கள்.

சிகாமணி ஹக்கீம் மரக்கடையில் இருப்பது ஜெயிலிலிருந்து வந்த கார்க்கோடனுக்குத் தெரியவந்தது. அவன் மதிய நேரத்தில் கடைப்பக்கமாக வந்து உட்கார்ந்துகொண்டான். பாய் வீட்டில் அன்று நாட்டுக் கோழிக் குழம்பு. எலும்புச் சேர்மானத்திற்குக் குழம்பில் நல்லெண்ணெய் ஊற்றித் தட்டு நிறையக் குடிக்க வேண்டுமென வைத்தியர்கள் சொல்லியிருந்தார்கள். சிகாமணிக்கு எல்லோரும் சாப்பிட்ட பின்பாகப் பீங்கான் தட்டில் சோறும் குழம்பும் கறியும் போட்டுத் தந்தார்கள். சிகாமணி எப்போதும்போல உருட்டுக் கட்டையின் மேல் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்போதுதான் கார்க்கோடனும் வந்துசேர்ந்தான்.

பீங்கான் தட்டில் இருந்த சாப்பாட்டை இருவரும் பாதிப் பாதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். கை கழுவிவிட்டு, பீடி புகைத்தான் கார்க்கோடன். ஜெயிலில் தான் மலையாளியைச் சந்தித்ததாகவும் அவன் தன்னை மூணாறுக்கு வரச் சொல்லியிருக்கிறான் என்றும் சொன்னான். சிகாமணியும் சரி என்றான். பிறகு அவன், "ராவுத்தருக்கு உடம்பு சரியில்லை. அவராக வெளிக்குப் போக ஒரு வருஷமாவது ஆகும். அதுவரைக்குக் கூட இருக்கச் சொல்லியிருக்காங்க" என்றான்.

"சரி இங்கேயே இரு" என்றான் கார்க்கோடன்.

சாரலும் காற்றும் நின்றிருந்தன. வெளியில் மரக்கட்டைகளின் ஊடே பரவிக்கிடந்த சகதியில் ஊறிய சருகு இலைகளும் மரப்பட்டைகளும் கூட்டி அள்ளுவதற்கு ஏதுவாக இருந்தன. சிகாமணி கூடையில் அள்ளி வெளியே கொட்டினான். சுக்குமல்லிக் காப்பிக் காரன் காப்பி விற்றுக்கொண்டு வந்தான். கார்கோடன் இரண்டு காப்பி வாங்கினான். இருவரும் குடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்களைத் தூக்கிக் குப்பையில் போட்டார்கள்.

கார்க்கோடன் தான் ஊருக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப்போன பிறகு சிகாமணி தனியாக உட்கார்ந்து அவன் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந் தான். மெயின் ரோட்டிற்குப் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தான் கார்க்கோடன். சிகாமணி எழுந்து நின்று கண்களைத் துடைத்தபடி கையசைத்தான். பதிலுக்குக் கையை ஆட்டிவிட்டு நடந்தான் கார்க்கோடன்.

சிகாமணிக்கும் கார்க்கோடனுக்கும் ஐந்து வருடத்திற்கும் மேலாகப் பழக்கம். ஒருவரைவிட்டு ஒருவர் தனியாக சினிமாவுக்கோ ஹோட்டலுக்கோ இதுவரை போனதில்லை.

கார்க்கோடன் தன்னைவிட்டு, மூணாறுக்கு ஏன் போகிறான் என வருத்தப்பட்டான் சிகாமணி. தான் போக வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை என்றும் தன்னையும் உடன் அழைத்துச் செல்கிறாயா என்று கேட்காமல் இருந்துவிட்டோமோ என்றும் அவன் சென்ற பிறகு நினைத்துக்கொண்டான்.

மூணாறில் ராஜகுமாரி தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்ப்பதாக ஹக்கீம் பாய் மரக்கடைக்கு போன் செய்து சொன்னான் கார்க்கோடன். மரக்கடையிலிருந்த கணக்குப்பிள்ளைதான் முதலில் போனை எடுத்துப் பேசினார். சிகாமணிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. கார்க்கோடன் அங்கேயே இருந்துவிடுவான். தேனி மந்தைக்கு எல்லாம் இனி வரமாட்டான் என்று போனை வைத்துவிட்டுக் கணக்குப்பிள்ளையிடம் சொன்னான்.

ஹக்கீம் பாய்க்கு இரண்டு நாள்களாக ரத்தம் கலந்து மலம் வந்தது. மிகவும் வேதனைகொண்டு அலறத் தொடங்கினார். கணக்குப்பிள்ளையின் யோசனையில் சிகாமணி தேங்காய் எண்ணெய்யை ஆசனவாயில் வைத்துவிட்டான். அய்யோ அம்மா என்று சிகாமணியைப் பிடித்துத் தள்ளிவிட்டார். சிகாமணி போய்க் கணக்குப்பிள்ளைமேல் விழப்போனான். நல்லவேளை யாரும் கீழே விழவில்லை. கட்டுப்போட அலைய வேண்டியதில்லை என்ற கணக்குப்பிள்ளை வீட்டிலிருந்து கடைக்குப் போய்விட்டார்.

ஆசனவாயில் வலி அதிகமாகிவிட்டது. டாக்டர் வந்து பார்த்துவிட்டுப் போனார். கோழிக் குழம்பும் நல்லெண்ணெய்யும் மூலவரை கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது என்று மாத்திரை எழுதித் தந்துவிட்டு, ஊசி போட்டுவிட்டுப் போனார். தினமும் ஊசி போட வேண்டும் என்றும் தன்னால் வர முடியாது நர்ஸை அனுப்புகிறேன் என்றும் சொல்லிவிட்டுப் போனார்.

தினமும் மாலையிலும் காலையிலும் நர்ஸ் வந்து ஊசிபோட்டுவிட்டுப் போனாள். கண்டமனூர் மருத்துவமனையிலிருந்த நர்ஸ்போல இல்லையென அவளைப் பார்த்ததும் தெரிந்துகொண்டான் சிகாமணி. வெள்ளை உடை இல்லை என்பதுதான் வருத்தம் அவனுக்கு. க.வி. மருத்துவமனையில் இருந்த எல்லா நர்ஸ்சுகளும் வெள்ளைச் சேலையில்தான் இருந்தார்கள். அவசரத்தில் நடந்துபோகும்போது பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். சட்டைக்குள்ளிருக்கும் உள்ளாடையின் நிறத்தைத்தான் சிகாமணி முதலில் பார்ப்பான். எந்த நர்ஸ் நேற்று அணிந்திருந்த உள்ளாடையினையே திரும்பவும் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாள் எனக் கண்டுபிடிப்பது தான் ஹக்கீம் பாயுடன் இருந்தபோது அவனது வேலையாக இருந்தது.

ஹக்கீம் பாய் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுவிட்டுப் போன நர்ஸ் வெள்ளை உடை அணிந்திருக்கவில்லை. தினமும் வெவ்வேறு நிறங்களில் சுடிதார் போட்டுக் கொண்டு வந்தாள். அந்தப் பெண்ணின் பெயர் நிஷா எனத் தெரிந்துவைத்திருந்தான் சிகாமணி. நிஷாவின் இடது காலில் ஆறு விரல்கள் இருந்தன. மாலையில் ஊசி போட்டுவிட்டுப் போகும் சமயத்தில் அவளிடம் ஆறு விரல் இருப்பதைச் சொன்னான்.

அவள் கோபமாக "என்னோட கால். என்னோட விரல் உனக்கென்ன?" என்று முகத்தைச் சுண்டிவிட்டுப் போனாள். அதற்குப் பிறகு தினமும் அவளிடம் சிகாமணி பேசினான். அவள் அவனைப் பொருட்படுத்தவே இல்லை. ஹக்கீம் பாய் இனிப்பு வடை வாங்கித்தரச் சொன்னார் என்று இரண்டு வடைகளைக் கட்டி வாங்கித் தந்தான். நிஷா வாங்கிக்கொள்ளவே இல்லை. போடா அரை டவுசர் என்று திட்டினாள்.

இரவில் மூணாறிலிருந்து சிகாமணிக்கு போன் வந்திருப்பதாகக் கணக்குப்பிள்ளை சொன்னார். கார்க்கோடன் பேசினான். அவன் முதலாளி தேயிலைத் தோட்டத்தில் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டதாகவும் தொடையில் அடிபட்டு, எலும்பு உடைந்துவிட்டது என்றும் சொன்னான். சிகாமணி "சரிதான் அங்கேயும் அப்படிதானா?" என்றான்.

கார்க்கோடன், "சக்கைன்னு ஒண்ணு விக்கிறாங்கடா. திங்குறதுக்கு நல்லாயிருக்கு. பலாச்சுளையக் காயவைச்சு இப்ப வத்தலை வறுக்கிற மாதிரி வறுத்து விக்குறாங்க" என்றான்.

சிகாமணி "தேனிக்கு வர்றப்ப வாங்கிட்டு வாடா" என்றான்.

பிறகு அவர்கள் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தனர். லெட்சுமி தியேட்டரில் ஓடும் படம், சந்தையில் இரவுக் காட்சி முடிந்ததும் கடைசிக் கடைக்கு வரும் இரண்டு வேசிகளைப் பற்றிப் பேசினார்கள்.

கார்க்கோடன் கடைசியாக, "டேய் சிகா எப்படிறா மூத்திரம் பீ எடுத்துப்போட்ட நீ! எங்க முதலாளிக்கு எடுத்துப்போட்டபோது உன்னத்தாண்டா நினைச்சுப் பார்த்தேன். உவ்வே வாந்தி வருதுடா" என்றான்.

சிகாமணி 'அடப்பாவி' என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான். அடுத்து ஏதும் பதில் பேச முடியவில்லை. கார்க்கோடனும் போனை வைத்துவிட்டான். சிகாமணின்னு பேர் வைச்சவங்களுக்கு எல்லாம் அப்படிதான் வரும் என்று அவன் நினைத்துக்கொண்டான். கார்க்கோடனைத்தான் அப்போதுவரை அவனது உண்மையான பெயரைச் சொல்லி அழைத்திருக்கவில்லை என்பதும் கூடவே நினைவில்வந்தது. தனது பெயரும் கார்க்கோடனின் உண்மையான பெயரும் ஒன்றுதானே என நினைத்துக்கொண்டான் சிகாமணி.

சிகாமணிக்கு நான்கு நாள்கள் கழித்து மூணாறிலிருந்து இரவு நேரத்தில் போன் வந்தது. கார்க்கோடன் பேசினான். தனது முதலாளிக்குக் கட்டுப் போட்டிருக்கிறார்கள். டாக்டர் வந்து ஊசிபோட்டார். தினமும் டாக்டர் வர முடியாதென நர்ஸை அனுப்பியிருக்கிறார். நர்ஸின் பெயர் நிஷா. அவளது இடது காலின் விரலில் ஆறு விரல்கள் இருக்கின்றன. அவளிடம் இது பற்றிச் சொன்னேன். கோபமாக என்னைத் திட்டிவிட்டாள். பார்ப்பதற்கு அழகாயிருக்கிறாள் என்றான்.

சிகாமணியினால் நம்பவே முடியவில்லை. இங்கு தனக்கு நடப்பதுபோல மூணாறில் கார்க்கோடனுக்கும் நடக்கிறதே என அவனிடம் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான். அன்று இரவெல்லாம் சிகாமணிக்குப் பல கற்பனைகள். அவனும் கார்க்கோடனும் நர்ஸைத் திருமணம் செய்துகொள்வதுபோலவும் நிஷா ஊசி போடுகின்ற வீடுகளுக்கு மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் செல்வதுபோலவும் கனவு கண்டான்.

காலையில் கணக்குப்பிள்ளையிடம் திருமணம் நடப்பதுபோலக் கனவு வந்தால் அப்படி நடக்குமா என்றான். கணக்குப்பிள்ளை திருமணம் நடப்பதுபோலக் கனவுகண்டால் உன்னோட சொந்தக்காரங்க யாராவது இறந்துபோவார்கள் என்றார். இறந்துபோவதுபோலக் கனவு வந்தால்தான் கல்யாணம் நடக்குமெனச் சொன்னார். சிகாமணி தனக்கு யார் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களெனக் கனவு பற்றிய நினைப்பை அப்படியே விட்டுவிட்டான்.

அந்தக் கனவு வந்து பத்துத் தினங்களுக்குப் பிறகு கார்க்கோடனிடமிருந்து போன் வந்தது. அவன் தனக்குக் காய்ச்சலாக இருக்கிறது. காலையில் நன்றாக இருக்கிறது. இரவு முழுக்கக் காய்ச்சலும் குளிருமாக இருக்கிறது என்று சொன்னான். சிகாமணி மாத்திரை சாப்பிடு. ஊசி போட்டுக்கொள்ள தேனிக்குக்கூட வா. வந்து இங்கே இரு என்றான். சரி பார்ப்போம் என்றான் கார்க்கோடன்.

அன்று இரவே சிகாமணிக்குக் காய்ச்சலும் குளிருமாக வந்து முனங்கிக்கொண்டு படுத்தான். காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. கார்க்கோடன் போன் செய்தால் தனக்கும் காய்ச்சல் வந்திருப்பதாகச் சொல்லலாமென நினைத்தான். சுக்குமல்லிக் காப்பி வந்தால் வாங்கிக் குடிக்கலாமென, உருட்டுக்கட்டையின் மேலேயே உட்கார்ந்திருந்தான். வாரச் சந்தைக்கு, மாட்டுவண்டியில் சரக்குப் போவதை உட்கார்ந்த இடத்திலேயே பார்க்க முடிந்தது. இன்று வியாழக்கிழமை என அவனாகச் சொல்லிக்கொண்டான்.

கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைத்தவன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. சிகாமணி இறப்பதற்குமுன் யாரிடமோ சொல்வதுபோல 'நான் இறந்ததும் சிகாமணியும் இறந்துபோவான்' எனச் சொன்னான்.

எஸ்.செந்தில் குமார் with Crea and 37 others.18 Julyசமீபத்தில் நான் வாசித்ததில் பிடித்த சிறுகதை எஸ். செந்தில்குமாரின் "என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்." கதையின் சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-104/page18.asp"சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை" என்று தொடங்குகிறது கதை. யார் சிகாமணி? தேனியில் வாரச்சந்தையில் கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த்தாள்களையும் தேடி எடுப்பவன். அவனோடு கூட இன்னொருவனும் இவற்றைத் தேடி எடுக்கிறான். கார்க்கோடன் என்ற பெயரால் அழைக்கப்படும் வேறொரு பெயர் கொண்டவன் அவன். சிகாமணிக்கு எதிரிணை கார்க்கோடன். சிகாமணி போலன்றி நம்பகத்தன்மை இல்லாதவன். (திருநள்ளாறு தலபுராணத்தின்படி, கார்க்கோடகன் என்கிற பாம்பு, சனியின் தூண்டுதலால் நளனைக் கடித்தபின் விஷமேறிய நளன் உடல்வண்ணம் மாறியதாக வரலாறு. நளனோடு சேர்ந்த எதிர்மறையான விஷம் போல சிகாமணியோடு சேர்ந்த கார்க்கோடன் இக்கதையில்.) கார்க்கோடன் பிக்பாக்கட். அதனால் போலிஸால் பிடிக்கப்படுகிறான். அப்போதும்கூட எப்போதும்போல சிகாமணிக்கு அவன் இல்லாமல் அவனோடு இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லை. லட்சுமி தியேட்டரில் படம்பார்த்துக்கொண்டிருந்தபோது சிகாமணி கார்க்கோடனிடம் சொல்கிறான்: "நான் இறந்ததும் நீயும் இறந்திடனும், நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக்கூடாது" (நிச்சயமாக அப்போது உயிரையும் கொடுக்கும் நட்பை அல்லது உறவை விதந்தோதும் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என நினைக்கிறேன்)
சிகாமணியின் தாயையும் தந்தையையும் பற்றிய குறிப்பு கதையில் வருகிறது. ஆனால் கார்க்கோடன்? அவன் யாரோ, அவன் நிஜப்பெயர் என்னவோ. யாராயிருந்தால் தானென்ன? சிகாமணியை தேனியிலேயே விட்டுவிட்டு, மூணாறு செல்லும் கார்க்கோடனுக்கும் சிகாமணியின் வாழ்க்கையில் நடப்பவையே நடக்கின்றன. தேனியில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட ஹக்கீம் என்கிற மரக்கடை முதலாளிக்கு இடுப்பில் போட்ட கட்டுக்கு எண்ணெய் ஊற்றவும் மூத்திரம் மலம் எடுத்துப்போடவும் நியமிக்கப்பட்டிருக்கிறான் சிகாமணி. "அவராக வெளிக்குப் போக ஒரு வருஷமாவது ஆகும். அதுவரைக்குக் கூட இருக்கச் சொல்லியிருக்காங்க." சிகாமணியைப்போலவே கார்க்கோடனும் மூணாறில் கீழே விழுந்து தொடையை முறித்துக்கொண்ட தேயிலைத் தோட்ட முதலாளிக்கு சரீரக்கழிவுகளை எடுத்துப்போடுகிறான். மரக்கடை முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின் மேல் சிகாமணிக்கு ஈர்ப்பு ஏற்படுவதைப்போலவே, கார்க்கோடனுக்கும் அவன் முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின்மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. நிஷாவை திருமணம் செய்வது போல சிகாமணி இரவின் கனவொன்றைக் காண்கிறான்; அதே கனவை கார்க்கோடனும். இரண்டு நிஷாக்களும் அழகாக, இடது கால்களில் தலா ஆறு விரல்களோடு இருக்கின்றனர். இரண்டு நிஷாக்களும் இவர்கள் இருவரையும் ஒறுக்கின்றனர்.
கண்ணாடி பிம்பங்களாக இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இயக்கம் கொள்கின்றன. ஆனால் வலது இடதாக மாறும் உத்தியை கவனமாக விலக்கும் கண்ணாடி இந்தக்கதை. சிகாமணி, கார்க்கோடன்: இருவரும் ஒருவரே போன்ற இருவரா, இல்லை ஒருவர் தானா?
"கார்க்கோடன் கடைசியாக "டேய் சிகா எப்படிறா மூத்திரம் பீ எடுத்துப்போட்ட நீ! எங்க முதலாளிக்கு எடுத்துப்போட்டபோது உன்னைதாண்டா நினைச்சுப் பார்த்தேன். உவ்வே வாந்தி வருதுடா" என்றான்.
சிகாமணி 'அடப்பாவி' என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான். அடுத்து ஏதும் பதில் பேசமுடியவில்லை. கார்க்கோடனும் போனை வைத்துவிட்டான். சிகாமணின்னு பேர் வைச்சவங்களுக்கு எல்லாம் அப்படித்தான் வரும் என்று அவன் நினைத்துக்கொண்டான். கார்க்கோடனைத் தான் அப்போதுவரை அவனது உண்மையான பெயரைச்சொல்லி அழைத்திருக்கவில்லை என்பதும் கூடவே நி னைவில் வந்தது. தனது பெயரும் கார்க்கோடனின் பெயரும் ஒன்றுதானே என்று நினைத்துக்கொண்டான் சிகாமணி."
தேனியில் இருந்தால் என்ன, அல்லது தேனியை விட்டுவிட்டு மூணாறுக்குச் சென்றான் என்ன? மேலும் பெயர் தான் சிகாமணியாக இருந்தால் என்ன? கார்க்கோடனாக இருந்தால் என்ன? சந்தையில் ரூபாய் பொறுக்குதலும் மலமும் மூத்திரமும் அள்ளிப்போடுதலும் வாழ வழியாக இருக்கும்போது பெயர் என்பதின் மதிப்பு என்ன? எந்த வித்தியாசமும் இல்லாத(அ)வர்களின் விளிம்புவாழ்க்கைக்களங்களில் பெயர் என்கிற இடுகுறி கொள்ளும் பொருள் (அல்லது அந்த இடுகுறியின் பொருளற்ற தன்மை) கேள்வியாக நம்முன் விரிகிறது.
பெயர் என்பது arbitrary ஆக இடப்படுவது. ஆனால் நடைமுறையில் ஒரு பெயருக்கும் அந்தப் பெயர் சுட்டும் நபரின் பிம்பத்துக்குமான ஒரு பிணைப்பு, ஒரு தொடர்பு பார்ப்பவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இக்கதையிலோ இந்த பெயர்-பிம்பம் பிணைப்பும் தொடர்பும்கூடத் தீர்மானமாக இல்லை. ஒரே பெயர் கொண்ட இரு நபர்களா, அல்லது ஒரே பெயர் கொண்ட ஒருவரே தானா என்கிற ரகசியத்தைப் பிரதி தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது.
"சிகாமணி இறப்பதற்குமுன் யாரிடமோ சொல்வதுபோல 'நான் இறந்ததும் சிகாமணியும் இறந்துபோவான்' எனச் சொன்னான்."
இறந்தது சிகாமணியா, சிகாமணிகளா, தெரிவதில்லை நமக்கு. யார் யாருக்கு, எத்தனை பேருக்கு இழவுத்துக்கம் காக்கவேண்டும் என்பதை அறியாமலேயே வாசித்த கதையிலிருந்து விடைபெறுகிற துயரத்தை இக்கதை வாசகருக்குத் தன் வெகுமதியாக அளிக்கிறது.
(எஸ். செந்தில்குமாரின் இக்கதை ஆகஸ்ட் 2008 காலச்சுவடு இதழ் 104-ல் வெளியாகியிருக்கிறது. இந்த என் பதிவு பின்னர் விரித்து எழுதப்படும்)

சிறுகதை: என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய் | காலச்சுவடு |சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி…
KALACHUVADU.COMLikeShow More ReactionsCommentKarthigai Pandian M, Yavanika Sriram and 87 others2 shares
8 comments
CommentsNanban Gopi Arun Vino read this
LikeReply18 July at 15:33சத்ரியன் சிகாமணி..
LikeReply18 July at 16:05Abilash Chandran அட்டகாசம்
LikeReply18 July at 16:56Aazhi Veeramani அற்புதமான கதை இது. இக்கதை குறித்து நண்பர்களிடம் அடிக்கடி பேசுவேன்
LikeReply18 July at 17:04Perundevi Perundevi ஒரு முன்மாதிரிக் கதை. மௌனியின் கதாபாத்திரத் தன்மைகளை வெகுசனத் தளத்தில் வைத்தெழுதப்பட்ட கதை. எப்ப விமர்சனத்தை விரித்து எழுதப்போகிறாராம் விமர்சகர்? #தமிழ்ச்சூழலின் பொறுப்பற்ற தன்மை
LikeReply118 July at 17:07Manikandan Gurusamy அருமையான பதிவு
LikeReply18 July at 23:17Thamizhnathy Nathy நல்ல கதை. கார்க்கோடன், சிகாமணியின் கற்பனைப் பாத்திரமாகவும் இருக்கலாம்.
LikeReply119 July at 07:34Aruna Chalam நண்பர் Senthil Kumar ன் கதையும் பிரமாதம்.. பெருந்தேவியின் விமர்சனமும் அருமை..
LikeReply119 July at 08:42Edited