இனவரைவியலாளர் -
ஹோர்ஹே லூயி போர்ஹெஸ்
http://www.kapaadapuram.com/?ayal_ilakkiyam_shankar
தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஹோர்ஹே லூயி போர்ஹெஸ்
http://www.kapaadapuram.com/?ayal_ilakkiyam_shankar
தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்
அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே பேசினான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் அவனிடம் இல்லை. இளைஞர்கள் வெளிப்படுத்தும் பாவனையான ஒரு தனித்தன்மைகூட அவனிடம் இல்லை. இயல்பாகவே அவன் மரியாதையுடையவனாக இருந்தான். அத்துடன் அவன் புத்தகங்களையோ அவற்றை எழுதிய ஆண்கள் மற்றும் பெண்கள் மீதோ அவநம்பிக்கை கொண்டவனாக இல்லாமல் இருந்தான். இன்னமும் தான் யார் என்பதை அறியாத வயதில் அவன் இருந்தான். எனவே, தன் வழியில் என்ன வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றனவோ அதற்குள் தன்னைச் செலுத்திக்கொள்வதற்குத் தயாராக இருந்தான் - பாரசீக மறைஞானம் அல்லது ஹங்கேரியர்களின் அறியவராத பூர்விகங்கள், போரின் அல்லது அல்ஜீப்ராவின் ஆபத்துக்கள், தூய்மைவாதம் அல்லது கூட்டுக் களியாட்டங்கள். அவன் படித்த பல்கலைக்கழகத்தில், ஒரு ஆலோசகர் அவனிடம் அமெரிந்திய மொழிகள் குறித்த விருப்பத்தை ஏற்படுத்தினார்.
மேற்கில், குறிப்பிட்ட சில ஆதிவாசிகளிடம் இன்னமும் சில குறிப்பிட்ட தாந்த்ரீகச் சடங்குகள் இருந்துவந்தன. அவனது பேராசிரியர்களில் ஒருவர், வயதில் மூத்தவர், அங்கே சென்று தனியாகத் தங்கி, சடங்குகளை அவதானித்து, ஆதிவாசி மருத்துவர்கள் தங்கள் சீடர்களுக்குச் சொல்லித்தரும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவரும்படி யோசனை கூறினார். அப்படி அவன் திரும்பிவரும்போது, அவனுக்கு ஆய்வுப்பட்டம் கிடைக்குமெனவும், அந்த ஆய்வைப் பல்கலைக்கழக அதிகாரிகள் பதிப்பிப்பார்கள் என்றும் அவனிடம் கூறப்பட்டது. முர்டாக் அந்த ஆலோசனையால் உந்தப்பட்டான். அவனது மூதாதையர்களில் ஒருவர் எல்லையில் நடந்த போர் ஒன்றில் இறந்தவர். அவனது இனத்தின் அந்தப் பூர்விக முரண்தான் தற்போதைய இணைப்பாயிற்று. தான் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை அவன் முன்னுணர்ந்திருக்க வேண்டும். தங்களில் ஒருவனாகத் தன்னை அந்தச் சிவப்பு மனிதர்கள் ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவைக்க வேண்டும். அவன் நீண்ட ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கினான். அவன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புல் சமவெளியில் வாழ்ந்தான். சில சமயங்களில் களிமண் பாவிய சுவர்களின் பாதுகாப்பிலும் சில சமயங்கள் வெட்டவெளியிலும். அவன் அதிகாலைக்கு முன்னர் எழுந்தான், அஸ்தமனத்தில் படுக்கைக்குச் சென்றான். அவனது தந்தையர்களுடையதல்லாத மொழியில் கனவு காணத் தொடங்கினான். பச்சையான உணவு ருசிகளுக்குத் தனது நாக்கைப் பழக்கப்படுத்திக் கொண்டான். வினோதமான உடைகளால் தன்னை மறைத்துக்கொண்டான். தனது நண்பர்களையும் நகரத்தையும் மறந்தான். அவனது மனதின் தர்க்கம் புறக்கணிக்கும் வகையில் சிந்திக்கத் தொடங்கினான். அவன் கற்ற புதிய கல்வியின் தொடக்க சில மாதங்களில் அவன் ரகசியமாகக் குறிப்புகளை எடுத்தான். பின்னர் அந்தக் குறிப்புகளைக் கிழித்தெறிந்துவிட்டான். தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவோ, இனி தேவைப்படாது என்பதற்காகவோ இருக்கலாம். அங்குள்ள குலகுரு, குறிப்பிட்ட காலகட்டத்துக்கு (உடல்ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சில குறிப்பிட்ட நடைமுறைகளால் தீர்மானிக்கப்படுவது) பின்னர் முர்டாக்கிடம், அவனது கனவுகளை ஒவ்வொரு நாள் விடியலிலும் நினைவுகூர்வதற்கு உத்தரவிட்டார். முழுமதி நாட்களின் இரவுகளில் அந்த இளைஞன் எருமையைக் கனவு கண்டான். தொடரும் எருமைக் கனவுகளை தனது குருவிடம் அவன் தெரிவித்தான். அந்தக் குரு கடைசியில் தங்கள் இனக் குழுவின் ரகசிய சித்தாந்தத்தை அவனிடம் வெளிப்படுத்தினார். ஒரு நாள் காலையில், யாரிடமும் சொல்லாமல் முர்டாக் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சமவெளி வாழ்க்கையின் தொடக்க மாலைகளில் நகரத்தைப் பற்றிய ஞாபகங்களில் இருந்ததைப் போலவே நகரத்தில் சமவெளி குறித்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தான். அவன் தனது பேராசிரியரின் அலுவலகத்துக்குச் சென்று, அந்த ரகசியத்தைத் தான் அறிந்துகொண்டதாகவும், ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டேனென்றும் கூறினான்.
"ஏதாவது உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டிருக்கிறாயா" என்று கேட்டார் பேராசிரியர்.
"அது காரணம் அல்ல", என்று முர்டாக் பதில் கூறினான். "என்னால் வெளிப்படுத்த முடியாத ஒன்றை நான் கற்றேன்"
"அதை வெளியிடுவதற்கு ஆங்கில மொழியால் இயலாமல் இருக்கலாமல்லவா" என்று பேராசிரியர் கேட்டார்.
"அது பிரச்சினை இல்லை ஐயா. என்னிடம் இருக்கும் ரகசியத்தை நூறு விதமாகவும் முரண்பட்ட வழிகளிலும்கூட என்னால் சொல்ல முடியும். இதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அந்த ரகசியம் அழகானது. அத்துடன் அறிவியல், நமது அறிவியல், தற்போது எனக்கு தீவிரமற்றதாகத் / முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது".
சற்று இடைவெளி விட்டு அவன் மேலும் கூறினான்: "என்னவாக இருந்தாலும், அந்த ரகசியத்தை நோக்கி என்னை வழிநடத்திய பாதைகள் அளவுக்கு அந்த ரகசியம் முக்கியமானதல்ல. ஒவ்வொரு நபரும் அந்தப் பாதைகள் வழியாக நடக்க வேண்டும்."
பேராசிரியர் இறுக்கமாகப் பேசினார்: "நான் கமிட்டியிடம் உனது முடிவு பற்றி தகவல் அளிக்கிறேன். செவ்விந்தியர்களுடன் வாழ்வதற்குத் திட்டமிட்டுள்ளாயா?"
"இல்லை" என முர்டாக் பதிலளித்தான். "நான் சமவெளிக்குத் திரும்பப் போகாமலும்கூட இருக்கலாம். சமவெளியின் மனிதர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தது எல்லா இடங்களுக்கும் எல்லாச் வழ்நிலைகளுக்கும் உகந்தது".
அவர்களுக்குள் நடந்த உரையாடலின் சாரம் இது தான்.
ப்ரெட் முர்டாக் திருமணம் செய்துகொண்டான். விவாகரத்தானது. தற்போது யேல் நூலகர்களில் ஒருவனாக இருக்கிறான்.
The Ethnographer - Jorge Luis Borges
Translated in English by Andrew Hurley