Saturday, 12 November 2016

தாண்டவராயன் கதை – நூல் விமர்சனம்


தாண்டவராயன்


கதை – நூல் விமர்சனம்
Posted by kathir.rath on November 11, 2016 in நூல் விமர்சனம்



http://www.thoovaanam.com/?p=1479




தமிழில் வருடாவருடம் பல நாவல்கள் எழுதப்படுகின்றன, அவற்றில் பல அறிமுக எழுத்தாளார்களின் படைப்புகளாக வெளிவருகின்றன. ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளே பலரால் படிக்காமல் குவிந்து கிடக்கையில், புதிதாய் வந்துள்ள நூல்களில் சிறந்தவைகளின் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுவதால் அவை வாங்கப்படாமலேயே பதிப்பகங்களில் தேங்கிவிடுகின்றன. படித்த ஒவ்வொருவரும் தங்களது பார்வையில் புத்தகங்களை விமர்சிக்க தொடங்கினால் தமிழ் வாசிப்பு சமூகம் இன்னும் முன்னேறும், அப்படி முகநூல் நண்பர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பதிப்பகங்களிலும், கடைகளிலும் ஏன் எங்கேயுமே கிடைக்காத ஒரு புத்தகத்தினை தேடி அலைய வைத்த ஒரு புத்தகத்தினைப் பற்றித்தான் இங்கு சொல்ல விழைகிறேன்.



கி.பி 1750-1800 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருந்தது என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தியாவை அப்போது பலர் ஆண்டுக் கொண்டிருந்தார்கள். நான் சொல்வது இங்கு பல நூற்றாண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருந்த இராஜவம்சங்களைப் பற்றி அல்ல. வியாபாரம் செய்ய வந்தவர்களை, சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா என்ற ஒரு தேசம் முழுமையாக யாராலும் ஆட்சி செய்யப்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் இல்லாமல் இடைப்பட்ட காலத்தில், அப்பொழுது வடக்கே கிழக்கெந்திய கம்பெனிகளிடம்(ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு) ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு, மராத்தியர்களும், இராஜபுத்திரர்களும், சுல்தான்களும் பெயருக்கு அரியனையில் அமரத் துவங்கிய காலம். தென் இந்தியாவிலும் பல அரசுகளும், பாளையங்களும் போராடும் எண்ணம் எதுவும் இல்லாமல் வருபவர்களுக்கெல்லாம் வாசலை திறந்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் சண்டைகள் இருந்தாலும் அது சுதந்திர எண்ணத்திற்காக ஏற்பட்டதாக இருக்காது, மாறாக வாரிசு சண்டை, அதன் மூலம் உருவான கோஷ்டி தகராறு, அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கம்பெனிகளுக்கும் இடையேயான போர், பிறகு இறுதியாக அமைதி உடன்படிக்கை என்றுதான் சென்றுக் கொண்டிருந்தது.

அப்படி ஒரு அரியணைக்காக நடந்த சண்டையில் தான் ஹைதர் அலிக்கும், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் சண்டை ஆரம்பமானது, எதிரிக்கு எதிரி நண்பன் போல மைசூர் சாம்ராஜ்யத்திற்கு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் நட்பு கிடைத்தது. இது அனைவருக்கும் தெரிந்த வரலாறு. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலக அரங்கில் மற்ற நாடுகளை ஒன்றுதிரட்டும் அரசியல் உத்தியை கையாண்டது இருவர்தான், ஒருவர் நேதாஜி, மற்றொருவர் திப்பு சுல்தான். மைசூர் சாம்ராஜ்யம் அந்தக் காலகட்டத்தில் தென் இந்தியாவில் இருந்த கடைசி பேரரசு. உலக அளவில் பெரிய கப்பற்படையை வைத்திருந்த ஆங்கிலேயர்களை அவர் எதிர்க்க உபயோகித்த யுத்திகள் மிகவும் சுவாரசியமான ஒன்று. மொகலாயர்களை புகழ்ந்த வரலாறு ஹைதர் அலி, திப்புவை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை என்பது எனது அபிப்பிராயம்.

அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எப்படி இருந்திருக்கும்? பிரெஞ்சு தேசத்தில் தொழிற்புரட்சி ஆரம்பித்த சமயம், உலக அளவில் சமயங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் கட்டுண்டு கிடந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் பக்கம் தங்களது கவனத்தினை குவித்த காலகட்டம், அறிவியல் சாதனங்களை விட ஆயுதங்கள் தான் அதிகம் தயாரிக்கப்பட்டன என்பது வேறு விஷயம், அப்படி உலகத்தில் உள்ள தேசங்களில் மூடநம்பிக்கைகள் ஒழிய துவங்கும் பொழுது முதலில் என்ன மாற்றம் நிகழும் என்பதை சொல்லுங்கள்? சரிதான், முதலில் ஆண்டான் – அடிமை வழக்கங்கள் மறைய எத்தனிக்கும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே இந்தக் கொடுமை உண்டு, இங்கு தாழ்த்தப்பட்டவர்களை, அமெரிக்காவில் பழங்குடியினரை, இங்கிலாந்தில்? அங்கும் உண்டு. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் உலகம் முழுக்க இருக்கும் பொதுவான ஒரு விஷயம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்று இருக்கும். உதாரணமாக நம் ஊர்பக்கம் என்றால் “விடாது கருப்பு” ரக கதைகளைக் கூறலாம். அவையெல்லாம் பொய் என்று சொல்லவில்லை, உண்மை என நிருபிக்க முடியாத, பொய் என ஒதுக்கி தள்ள முடியாத வகை என சொல்கிறேன். அதே போல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில், முழுக்கவும் சூன்யகாரர்களும் படிப்பறிவில்லாதவர்களும், விவசாயத்தினை மட்டுமே செய்ய தெரிந்த ஒரு கிராமத்தில் கதை துவங்குகிறது.

கிராமத்திற்கு ஒரு விசித்திர ஓவியன் திருவிழா நாளன்று வருகிறான். அவன் ஒரே நொடியில் உள்ளதை உள்ளபடி வரைந்து தருவதாக அறிவிக்கிறான். யாரும் நம்பாமல் ஒதுங்க ஐந்து பெண் குழந்தைகளுடன் ஊரில் சிறப்பாக வாழ்ந்து வரும் நபர் தன் குடும்பத்தை வரைந்து தரச் சொல்கிறார். அக்குடும்ப இளம்பெண்களுக்கு கூச்சத்தின் காரணமாக விருப்பமில்லை, ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் இருக்க ஒரு பெண்ணின் மார்பகம் தெரியும்படி இருந்த கணத்தில்(ஒரு நொடி) படம் வரைந்தாகி விட்டது எனச் சொல்லும் ஒவ்வியன், நாளை வந்து தருவதாக சொல்லி விட்டு அவ்வூரின் எல்லையில் இருந்த சாபக்காட்டினுள் நுழைகிறான். படைத்தவனின் சொல்லை மீறி ஆதாம்- ஏவாளால் உண்ணப்பட்ட ஆப்பிளின் விதையில் இருந்து முளைத்த காடு அது. தற்போது சாத்தானால் ஆளப்பட்டு வரும் அக்காட்டினுள் நுழையும் யாரும் திரும்ப வந்ததில்லை. அவர்கள் இந்த உலகத்தில் இருந்து தொலைந்துவிடுவார்கள்.

அடுத்த நாள் திரும்ப வரும் ஓவியன் தந்த ஓவியத்தில் தன் மகளின் மார்பகம் வெளிப்படையாக தெரிவது போல் இருப்பதனை திருத்தித் தர சொல்ல, அவன் முடியாது என மறுக்க, பணம் தர இவர் மறுக்க, அந்த ஓவியத்தை பார்த்த அப்பெண், இது நான் அல்ல என அலற, கலவரத்தில் முடிந்து, ஓவியன் தாக்கப்படுகிறான். அவனது சாபம் அந்தக் குடும்பத்தையே தாக்கும் என ஊர் முழுக்க பேச, அதன்படியே அக்குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி செல்கிறது. பாதிக்கப்படாமல் இருக்கும் கடைசிப் பெண் எலினார் தன் கடும் முயற்சியாலும், உழைப்பாலும் நன்கு படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்தில் இருக்கும் பெரிய பல்கலைக்கழகத்திற்கு செல்ல, அங்கு ட்ரிஸ்ட்ராம் அறிமுகமாகிறான்.

ஒருமுறை மாணவர்களுடன் சுற்றுலாவிற்கு, எலினாரின் ஊர் வழியாக அனைவரும் வந்து தங்கி இருந்த தருணத்தில், ட்ரிஸ்ட்ராம் எலினார் இடையே பொங்கிய காதல் உணர்வு இருவரையும் சாபக்காட்டினுள் அழைத்து செல்கிறது. அதன் விளைவு எலினாரின் கண்பார்வை மங்க துவங்குகிறது. தனது காதலினால் கண்பார்வை இழந்தவளை கைவிட மனமின்றி, பெற்றோரையும் மீறி அவளையே மணந்துக் கொள்ளும் ட்ரிஸ்ட்ராம் 16 ஆண்டுகள் கண்நோய்க்கு மருந்து தேடி அலைகிறான். அதன் மூலம் அவன் ஒவ்வொரு முறையும் அடைவது விரக்தியைத்தான், சமகாலத்தில் இங்கிலாந்தில் பெரும் அரசியம் மாற்றங்களும் நிகழ்கிறது. எலினார் மருத்துவர்களால் என்னவென கணிக்கவியலாத குழந்தையை வயிற்றில் சுமக்க துவங்குகிறாள். 10 மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை, அதனை தாண்டி பல மாதங்கள் காக்க வைக்கிறது. இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக, ஒரு அதிகாரியாக, இந்தியா செல்லும் அவசியம் ட்ரிஸ்ட்ராம்க்கு வருகிறது.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் – தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது. தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

மேலே இருக்கும் 3 பத்திகளிலும் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பாத்திரத்தை குறித்துமே இரண்டு பக்கம் எழுதலாம், அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது, உண்மையில் அனைத்தையும் எழுதும் திறன் எனக்கு இல்லை என்பதே நிதர்சனம். இப்புத்தகத்தினை படிக்கையில் நாம் பலவற்றை நம்மை அறியாமல் கற்றுக் கொள்வோம். அதில் மிக மிக முக்கியமான ஒன்று

“சொல்லப்படுவது மட்டும் கதையல்ல, கதைகளில் சொல்லாமல் விடப்பட்டுள்ளவை தான் உண்மையாக சொல்ல விரும்பப்படும் கதை”.

இப்புத்தகத்திற்கு பிறகு கதைகளையும், திரைப்படங்களையும் நான் பார்க்கும் விதமே அடியோடு மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

இப்படியெல்லாம் தமிழில் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும் விஷயமே பலருக்கு தெரிந்திருக்காது, இதன் பக்கங்களின் எண்ணைக்கையிலேயே பலர் பயந்திருப்பார்கள். என்னைக் கேட்டால் இதுவே குறைவு. என்ன இது சம்பந்தம் இல்லாமல் எங்கோ ஆரம்பித்து, எதையோ சொல்லி, எங்கோ முடிக்கிறான் எனத் தோன்றுகிறதா? நீங்கள் இந்த புத்தகத்தினை ஏன் படிக்க வேண்டும் என்பதனை மட்டும் சொல்கிறேன்.

உங்களில் யாருக்காவது கதைக்குள் நுழைவது எப்படி என்று தெரியுமா? நோலன் கனவுகளுக்குள் நுழைவதை குறித்துத்தான் படம் எடுத்திருக்கிறார். கதைகளை குறித்து அவருக்கு முன்பே வெங்கடேசன் எழுதியுள்ளார். சிறுவயதில் யாரேனும் உங்களுக்கு கதை சொல்லியிருப்பார்கள், வளர்ந்த பின் நீங்கள் சொல்ல துவங்கி இருப்பீர்கள். குழந்தைகளை மகிழ்விக்க அவர்களையே அக்கதைகளில் வரும் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும், மக்களை மந்திரவாதியிடம் இருந்து காப்பவர்களாகவும் கதைக்குள் கொண்டு சென்று இருப்பீர்கள். அப்படி யாரோ ஒருவர் கூறும் கதைக்குள் தவறுதலாக நுழைந்த ஒருவன் அதனால் பறிபோன மனைவியின் கண்பார்வைக்கு மருந்தினை கண்டறிய வேண்டுமென்றால் மீண்டும் அந்தக் கதைக்குள் நுழைய வேண்டும் என ஒருவர் சொன்னால், கேட்பவனுக்கு எப்படி இருக்கும்? கதைக்குள் செல்வதற்கு என்ன வழி?

இதை ஏதோ பைத்தியக்காரத்தனமான பேச்சு என ஒதுக்கிவிட்டு வந்த பிறகு, பல நாட்களுக்கு பிறகு ஒருவர் “உங்களுக்கு உறுதியாக நீங்கள் கதையை விட்டு வெளியே வந்து விட்டது தெரியுமா? நீங்கள் இருப்பது நிஜ உலகிலா? கதைக்குள்ளா?” என்றால் எப்படி இருக்கும். அடுத்தவன் மனைவியை மனதிற்குள் இரசித்து யாரிடமும் சொல்ல இயலாமல் செய்துக் கொண்ட வர்ணனையை, சில நாட்களுக்கு பிறகு ஒரு இராஜ்ஜியமே தேடிக் கொண்டிருக்கும் சுரங்கப்பாதையின் வழியாக, ஒருவன் வாய்மொழியாக கேட்டால் எப்படி இருக்கும்?

கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பது இன்னொருவர் சொல்லிக் கொண்டிருக்கும் கதை உலகில், உங்களுக்கு அடுத்த நிகழப்போவதை தீர்மானிப்பவர் உலகின் மறுமூலையில் இருக்கும் ஒருவரின் கற்பனை என்றால் எப்படி இருக்கும்?

தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தால் கட்டாயம் படியுங்கள்.

கொண்டாடப்பட வேண்டிய படைப்பு இது.

நன்றி: ராஜன்