நாடோடியின் நாட்குறிப்புகள் – 2 : சாரு நிவேதிதா!
திங்கள், 28 நவ 2016
http://minnambalam.com/k/1480271437
எழுத்தாளர்களுக்கு சாதி, மதம், இனம், தேசம், குடும்பம் என்ற அடையாளங்கள் இருக்க முடியாது என்று நம்புகின்றவன் நான். ஒட்டுமொத்த மனித குலத்துக்காகப் பேச வேண்டிய நிலையில் இருப்பவரே எழுத்தாளர். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற குரலில் அந்தப் பொதுத்தன்மையை நாம் காணலாம். அந்த வகையில் ஒரு ஆண் எழுத்தாளன் தன்னை பெண்ணாகவும் உணர வேண்டிய அவசியம் இருக்கிறது. நம் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிர்தம், தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்கள் அப்படித் தம்மை பெண்களாகவும் உணர்ந்தவர்கள்தாம். அவர்களிடம் கேட்டால் ஒருவேளை அவர்கள் அதை மறுக்கலாம். அது பற்றிய ஓர்மையின்றியே அதை அவர்கள் சாதித்திருக்கலாம். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதிய அசோகமித்திரன் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய இடதுசாரி கோஷங்களை எழுப்பாதவராக இருக்கலாம். ஆனால், அவர் கதைகளில் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களின் குரல்களையே அதிகம் கேட்க முடிகிறது. தஞ்சை ப்ரகாஷின் எழுத்தில் வரும் பெண்களின் குரல்கள் ஒரு ஆண் மகனால் கற்பனையே செய்து பார்க்க முடியாதவை. எப்படி நிகழ்ந்தது என்றால், அவர் தனது பாட்டிகளின் கதைகளை அவர்கள் வாயாலேயே கேட்டு எழுதியிருக்கிறார். அதைப் படித்து அவர் தாய் கண்ணீர் விட்டதாக எழுதுகிறார். அதனால் அவையெல்லாம் பெண்களின் கண்ணீர்க் கதைகள் என்று நினைத்து விடாதீர்கள். பெண்களின் காமம் பற்றிய கதைகள் அவை. அவருடைய ‘கரமுண்டார் வூடு’ என்ற நாவலில் ஒரு இளம் பெண்ணுக்கும் அவள் தந்தையின் ஐந்தாவது மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு பற்றிய தீவிரமான பகுதிகள் உண்டு.
எதற்குச் சொல்கிறேன் எனில், நான் எப்போதும் ஒரு பெண்ணின் மனநிலைக்குள் செல்ல விரும்புகிறேன். அல்லது, அவர்களின் அந்தரங்க உணர்வுகளைக் கேட்க விரும்புகிறேன். அந்தரங்கம் என்றால் அது உடலின் தாபம் பற்றித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருநாள் ஒரு வாசகி சொன்னார். திங்கள் காலை எட்டு மணி. ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் அவசரமான நேரம். சாலையின் நடுவே தண்ணீர் தேங்கியிருக்கிறது. சாலையும் சிதிலமடைந்து அதன் அடையாளமாக யாரோ ஒரு நல்லவர்‘இறங்காதே, ஆபத்து’ என்று சொல்வதைப் போல் ஒரு குச்சியையும் நட்டு வைத்திருக்கிறார். ஸ்கூட்டரை ஒதுக்குகிறார் பெண். கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் பின்னே வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஸ்கூட்டரில் லேசாக மோதி விட்டது. கவனமாகவே வண்டியைச் செலுத்தியதால் பெண் கீழே விழவில்லை. பின்னால் திரும்பி ‘என்ன சார் இப்படி?’ என்பது போல் வருத்தத்துடன் சைகை செய்கிறார். முகத்தில் கோபம் இல்லை. கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா என்ற கெஞ்சல். காரை ஓட்டி வந்த 32 வயது மதிக்கத்தக்க ஆடவன் கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு, “என்ன...? ம்...? ஒன்னெ அடிச்சுத் தூக்கிருக்கணும்” என்கிறான். அதற்கு மேல் அந்தப் பெண்ணுக்குக் கோபம் வந்து விட்டது. “என்னது, அடிச்சுத் தூக்குவியா, எங்கே தூக்கு பார்க்கலாம்?” என்று பதில் சொல்ல காரை எடுக்கிறான் ஆடவன். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரை இடிப்பது போலவே பின்னால் துரத்துகிறான். பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செல்கிறார் பெண். அதுவரை ஸ்கூட்டரைத் துரத்தி வந்த கார் சட்டென்று வேறு திசையில் சென்று விடுகிறது. பெண் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததால் கார் எண்ணைக் குறித்துக் கொள்ளவில்லை.
இந்தச் சம்பவத்தில் உள்ள மிக முக்கியமான மற்றொரு விஷயம், காரை ஓட்டி வந்த ஆடவனுக்குப் பக்கத்தில் பள்ளிச் சீருடையோடு ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான் என்பதுதான். கார் ஓட்டியவர் மேட்டுக்குடி அடையாளத்தோடு இருந்தார். ஆக, அது டிரைவர் அல்ல; சிறுவனின் தந்தை. இப்படி சாலையில் போகும் பெண்ணின் மீது காரை இடித்து விட்டு, ‘இது போதாது, உன்னை அடிச்சித் தூக்கியிருக்கணும்’ என்று கொலைவெறி கொள்ளும் ஆள் தன் மனைவியை எப்படி நடத்துவான்? இதையெல்லாம் பார்த்து வளர்கின்ற ஒரு பையன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான்? ஆக, குடும்பத்திலேயே நாம் குழந்தைகளை சமூக விரோதிகளாக வளர்த்து வருகிறோம்.
அது போக, அந்தப் பெண்ணின் மனநிலையை யோசித்துப் பார்ப்போம். அவருக்கு 35 வயது இருக்கும். இத்தனை வயதில் அவர் இதுபோல் எத்தனை கொடூரமான ஆண்களைப் பார்த்திருப்பார்? ஒரு பெண்ணை முறைத்துப் பார்ப்பதே அவரைத் துன்புறுத்தும் செயல்தான். எத்தனை நிர்வாகச் சீர்திருத்தங்கள் வந்தாலும், எத்தனை ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கினாலும் ஒரு பெண்ணுக்கு இந்திய சமூகம் நிம்மதியானதாக இல்லை.
தஞ்சைப் பிரகாஷ்
பெண்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு NH 10 என்ற படம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலை 10 டெல்லியிலிருந்து பஹதூர்கட், சிர்ஸா, ரோதக் வழியாக பாகிஸ்தான் எல்லை வரை செல்கிறது. அதாவது, இந்த நெடுஞ்சாலை அதிகமாகச் செல்வது ஹரியானா பகுதியில். இந்தியாவின் மிக வளமான பகுதியாக இருந்தாலும் பெண்ணடிமைத்தனத்தில் முன்னணியில் நிற்கும் மாநிலம் ஹரியானா. தில்லியில் வசிக்கும் இளம் தம்பதி மீரா - அர்ஜுன். மீரா தமிழ்ப் பெண். கணவன் வட இந்தியன். பொதுவாக வட இந்தியப் பெண்களை விட தமிழ்ப் பெண்கள் முற்போக்கானவர்கள் என்று அங்கே ஒரு கணிப்பு உண்டு. அதன்படி மீரா புகைப்பழக்கம் உடையவள்; ஆனால் அர்ஜுன் புகைக்க மாட்டான். ஒருநாள் இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கும்போது மீராவுக்கு அலுவலகத்திலிருந்து ஒரு அவசர வேலை என்று ஃபோன் வருகிறது. அர்ஜுனை அங்கேயே விட்டு விட்டு காரில் கிளம்பிச் செல்கிறாள். அப்போது காரின் பக்கத்தில் பைக்கில் வரும் இரண்டு இளைஞர்கள் அவளோடு தகராறு செய்கிறார்கள். அவள் காரை விட்டு இறங்கவில்லை. மிக வேகமாக அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறாள். ஆனாலும், அந்த இளைஞர்கள் அவளுக்கு ஏற்படுத்தும் பதற்றத்தையும் பீதியையும் இந்திய சினிமாவில் நான் அரிதாகவே கண்டிருக்கிறேன். என் சினிமா அனுபவத்தில் என்னால் மறக்கவே முடியாத காட்சி அது. (சம்பவம் நடக்கும் இடம் ஹரியானாவில் உள்ள குட்காவ்(ங்). டெல்லியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஊர்.)
ஏன் அது மறக்க முடியாத காட்சி என்றால், நான் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அந்தப் பெண்ணாக மாறுகிறேன். தன் நண்பனோடு ஒரு பஸ்ஸில் ஏறிய அந்த டெல்லிப் பெண்ணாக உணர்கிறேன். நீங்கள் ஆண்களாக இருந்தால் ஒருகணம் நீங்களும் அப்படி மாறி அந்தத் தருணத்தை மனதால் வாழ்ந்து பாருங்கள். நாலைந்து பேர் உங்கள் உடலைக் குதறத் தயாராகிறார்கள். சுற்றி வர ஆள் நடமாட்டமே இல்லை. அப்போது ஏற்படும் பீதியை, அதன் தாக்கத்தை வாழ்நாளில் என்றேனும் தாண்டி வர முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு ஆணாகிய என்னாலேயே அது முடியவில்லை. ஏனென்றால், இந்தியாவில் அது ஒரு அன்றாட நிகழ்வு. பத்திரிகைகளில் படித்துக் கொண்டே இருக்கிறோம். இதற்கிடையில் குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல் வேறு. ஒரு பெண்ணிடம் அவளுடைய கணவனின் தந்தை அத்துமீறுகிறான். அத்துமீறல் வெகு தந்திரமாக நடக்கிறது. சூட்கேஸை அவளிடம் கொடுக்கும்போது கை தொடை நடுவே போகிறது. கணவனிடம் சொன்னால் “நீ ஒரு பர்வர்ட்” என்பான். கன்னத்தில் அறைகூட கிடைக்கலாம். பல ஆயிரம் பெண்கள் இதையெல்லாம் வெளியே சொல்வதே இல்லை.
மீராவின் பதற்றத்தைக் குறைக்க அர்ஜுன் அவளை தேசிய நெடுஞ்சாலை வழியே காரில் நெடுந்தூரம் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறான். வழியில் ஒரு டாபாவில் அமர்ந்து சாப்பிடும்போது ஒரு பெண்ணையும் பையனையும் சில பேர் அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தடுக்கப் போகும் அர்ஜுனுக்கு அறை விழுகிறது. “அவள் என் தங்கை, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்கிறான் அடித்தவன். இன்னொருவன் மீராவிடம் “குட்காவ்(ங்) எல்லை எங்கே முடிகிறதோ அங்கேயே உங்கள் சட்டமும் முடிவுக்கு வந்து விடுகிறது மேடம்!” என்கிறான். (ஜஹா(ங்) ஆப்கே குட்காவ்(ங்) கா பார்டர் கதம் ஹோதா ஹே, வஹா(ங்) லா கதம் மேடம்.)
சமூக வெளியில் ஏதாவது அநீதி நடந்தால் அதை வேடிக்கை பார்ப்பவர்கள் மீது எல்லோரும் பாய்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது பலரும் தர்மாவேசம் கொண்டார்கள். அநீதியைத் தடுத்தால் தடுக்க முனைபவருக்கும் அடி என்பதே இந்திய யதார்த்தம். அறை வாங்கிய அர்ஜுன் அந்தக் கும்பலின் பின்னாலேயே காரில் பின் தொடர்கிறான். மீராவிடம் இருக்கும் பிஸ்டல் அவனுக்கு ஒரு தைரியம். வேண்டாம், வேண்டாம் என்று எவ்வளவோ சொல்கிறாள் மீரா. அந்தக் கிராமத்தான்களுக்கு நான் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்கிறான் அர்ஜுன். நகரத்து மனிதர்களுக்கு கிராமம் எவ்வளவு அந்நியமாக இருக்கிறது என்பதற்கு அந்தக் காட்சி ஒரு உதாரணம். வழியிலேயே அந்தப் பெண்ணும் இளைஞனும் அவர்களைக் கடத்தி வந்த கும்பலால் கொல்லப்படுவதை (கௌரவக் கொலை) மீராவும் அர்ஜுனும் பார்த்து விட்டுத் தப்பப் பார்க்கிறார்கள். கும்பல் அவர்களைப் பிடித்து விடுகிறது.
கதையை நான் முழுதாகச் சொல்லப் போவதில்லை. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. அர்ஜுன் அந்தக் கும்பலால் கொல்லப்படுகிறான். மீரா தப்பி விடுகிறாள். பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்து அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவியிடம் விஷயத்தைச் சொல்கிறாள். சொல்லும் போதுதான் சுவரில் பார்க்கிறாள், கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம். கடைசியில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கே வந்து சேர்ந்திருக்கிறாள். உடனே அந்தப் பெண்மணி மீராவை வீட்டிலேயே அடைத்துப் போட்டு விட்டுத் தன் மகனிடம் செய்தி சொல்லப் போகிறாள்.
படத்தின் முதல் காட்சியை எப்படி மறக்க முடியாதோ… அதே போன்றதொரு மறக்க முடியாத காட்சி, கடைசி காட்சி. அடைத்து வைக்கப்பட்ட வீட்டிலிருந்து தப்பும் மீரா ஒரு குடிசையின் திண்ணையில் கால் மேல் கால் போட்ட படி சிகரெட் குடிக்கிறாள். அவள் எதிரே காலில் அடிபட்டு நகர முடியாமல் கிடக்கும் பெண்ணின் அண்ணன் அதைப் பார்த்து உச்சபட்ச கோபம் அடைகிறான். ஏனென்றால், அவன் பார்த்த வரை பெண் என்றால் ஒரு ஆணை ஏறிட்டுப் பார்ப்பதே குற்றம். கண்களைப் பார்த்துப் பேசுவது கொலைக்கு சமம். ஒரு கட்டத்தில் மீராவிடமும் அவன் சொல்கிறான், ‘என் கண்ணைப் பார்த்துப் பேசாதே பெட்டை நாயே’ என்று. அப்படிப்பட்டவனின் முன்னால் முழு சிகரெட்டையும் ஊதுகிறாள் மீரா. கதை இன்னமும் போகிறது.
ஆணாதிக்கவாதிகள் ஹரியானாவில் மட்டும் அல்ல; ‘உன்னை அடித்துத் தூக்கியிருக்க வேண்டும்’ என்று சொல்லியபடி தமிழ்நாட்டிலும் திரிகிறார்கள்.
*
கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா
தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும்Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.