http://www.asymptotejournal.com/fiction/pedro-novoa-the-dive/tamil/
#மீள்பதிவு: பெட்ரோ நெவோவின் பெரு நாட்டு ஸ்பானிஷ் சிறுகதை - ‘தலைகீழ்ப் பாய்ச்சல்’ - என் மொழியாக்கத்தில்: http://www.asymptotejournal.com/fiction/pedro-novoa-the-dive/tamil/ …
தலைகீழ்ப் பாய்ச்சல்
Pedro Novoa
நீருக்குள் தலைகீழாகப் பாய்கிறாய் நீ. கீழிறங்கும்போது இரோமி பாட்டியின் குரல் உன் காதில் விழுகிறது: ”நமக்கு ஆகிவந்த நீர்ப்பாசியை அங்கேயிருந்து கொண்டு வா.” கையால் வனையப்பட்ட உன் முகமூடிக்கு எதிரே, ஒளிச் செதிள்களை உதிர்த்திடும் மீன்களைப்போல் சொற்கள் மிதக்கின்றன. நவீன மருத்துவத்தின்மீது பந்தயம் வைத்து நீ தோற்றுவிட்டாய். இரத்தசோகையை முறியடிக்க உன் அண்ணன் யோசன் உட்கொண்ட அயோடின் குளிகைகள் சிறிதும் பலனளிக்கவில்லை. அதிகம் போனால், அவை யோசனின் கன்னங்களை சில வாரங்களுக்கு இளஞ்சிவப்பாக்கின; அவ்வளவே.
அடுத்து வந்தது உன் பயிற்சி: நீர் விளையாட்டு, படிப்படியாக நீடித்த அமிழ்தல்கள், உன் உடல் தகுந்த விதத்தில் மறுவினை புரிகிறதா என்று அறிந்துகொள்ள மருத்துவப் பரிசோதனைகள். உன் தயார் நிலையை உறுதி செய்துகொள்ளவேண்டிய தேவை உனக்கிருந்தது: மிசுகி அம்மாவின் இறப்புக்குத் துல்லியமான காரணம் அவள் அறிவியலைக் குறைத்து மதிப்பிட்டதும், எதார்த்தத்தைவிட தொன்மத்தில் கூடுதலாக நம்பிக்கை வைத்திருந்ததும்தான். தன் மகள் இறக்கவில்லை; கடல் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டது என்று பாட்டி நம்பினாள். யாரும் அவளை மறுத்துப் பேசவில்லை. சவ அடக்கத்துக்கு முன் நடைபெற்ற காவல் சடங்கில் வழக்கம்போல் யாரும் அழவில்லை. இதேவோ அப்பா மட்டும் குளியலறையில் தஞ்சமடைந்து வழமைக்கு மாறாக கண்ணீர் வடித்தார்.
அப்பா எப்போதும் தன் உள்மனதின் விழைவுகளுக்கு இசைவாகவே நடந்துகொண்டார். புவி ஈர்ப்பு விசை நம்மை கீழே இழுப்பதில் முனைப்பாக இருந்தால் அவர் அந்தரத்தில் மிதந்தார். உலகம் இடது பக்கமாக சுழன்றால் அவர் எதிர்த்திசையில் விரைந்தார். மேலும் என்ன நடக்கக்கூடும் என்பதை நன்றாகவே அறிந்திருந்தாலும் கோசிகாவில் நிலவக்கூடிய வறண்ட பருவநிலை உன் அண்ணனின் உடல்நலத்தை மேம்படுத்தும் என்று நம்பி. அங்கு குடி பெயரலாம் என்று யோசனின் மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு அவர் இணங்கினார்.
பாட்டிக்கு இது தெரியவந்ததும் அவள் அப்பாவைத் தன் குடும்பத்தின் வாரிசுரிமையிலிருந்து விலக்கிவைத்தாள்; தன் பெட்டிகளுடன் பயணத்திற்கு ஆயத்தமானாள். “என் தாய்நாட்டுக்கே நான் திரும்பிப் போகிறேன்’ என்றவாறே தன் எண்பது ஆண்டுகளையும் விமான நிலையத்திற்கு எடுத்துச்சென்று அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணமானாள். மின்சாரம், கடனட்டைகள், பேரங்காடிகள் போன்ற வசதிகள் இல்லாமல் தன்னந்தனியாக வாழ்ந்துவந்த அந்த வைராக்கியமான கிழவி கடலுணவையும் கடலிலிருந்து தானே எடுத்துவந்த நீர்ப்பாசியையும் மட்டுமே உணவாகக் கொண்டிருந்தாள். ”பசிஃபிக் பெருங்கடல் முழுவதுமே எனக்கானதாக இருந்தது” என்று ஓராண்டுக்குப் பிறகு அவள் விளக்கமளிப்பாள்.
கோசிகாவின் பருவநிலை யோசனைத் தேற்றுவதற்கு மாறாக அவனுடைய நலத்துக்கு கேடாக இருந்ததைக் கண்டறிந்தபின், நாங்கள் கயாவுக்குத் திரும்பினோம். நீதான் பாட்டியிடம் பேசி அவளை இங்கே திரும்பிவருவதற்கு இணங்கவைத்தாய். அது துரோகத்தின் தருணமும் கூட; நீ இழைத்த துரோகம். குஸ்கௌவில் உனக்கு நல்ல வேலை கிடைத்திருந்ததால் நீ அங்கே வசிக்கச் சென்றாய். ஆனால் பாட்டியிடம் நீ லீமாவில், அதாவ்து வீட்டிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் அடைந்துவிடக்கூடிய தொலைவில், வசிப்பதாக சொல்லியிருந்தாய். அதனாலேயே நம் குடும்பம் ஒன்றுகூடிய ஒவ்வொரு முறையும் நீ விசித்திரமான சாக்குப்போக்குகளை இட்டுக்கட்ட வேண்டியிருந்தது. நீ பாட்டியின் செல்லம் என்று அவள் என்றுமே ஒப்புக்கொண்டதில்லெயென்றாலும், அது உண்மையென்பதால் நீ அவளிடம் அவிழ்த்துவிடக்கூடிய எந்த அபத்தத்தையும் எப்படியோ ஏற்றுக்கொண்டுவிடுவாள். இருந்தாலும் யோசனின் நோய் தீவிரமடைந்துவிட்டது எனவும் மருத்துவர்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் எனவும் தொலைபேசி அழைப்பு வந்தவுடன் நீ லீமாவுக்கு செல்லும் முதல் விமானத்திலேயே புறப்பட்டாய். உன் அண்ணன் இறக்கப்போகிறான் என்று மருத்துவ அறிவியல் தெரிவித்த உடனேயே நீ அங்கிருந்தாய், உன் பாட்டி பயன்படுத்திய நீர்ப்பாசியைத் தேடி முக்குளித்தவாறு.
யோசனுக்கு எட்டு வயதிருக்கும்போது பாட்டி அவனுக்காக முக்குளித்தாள்; பதினாறு வயதில், மிசுகி அம்மா; அவனுக்கு இருபத்து நான்கு வயதாகும் இந்த தருணத்தில் அப் பொறுப்பு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உன்னிடம் வந்துசேர்ந்தது. உன் அண்ணி உனக்குப் பதிலாக தான் கடலுக்குப் போகிறேன் என்றாள்; ஆனால் அவளுடைய ரத்த நாளங்களில் முன்னோர்களின் வரலாறு ஓடவில்லை. நம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சிப்பிக்களையும் முத்துக்களையும் தேடி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடலில் முக்குளித்திருக்கிறார்கள். இப்போது உன் இடுப்பைச் சுற்றியிருந்த கயிறைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதே தவிப்புடன் உன் அண்ணி கலக்கமுற்றவளாய் உன் தொலைபேசி எண்ணை சுழற்றுவாள். படகிலிருந்த உன் அண்ணிக்கு வியர்வையும் வேதனையும் பெருகிக்கொண்டிருந்தன; நீரில் அமிழ்ந்திருந்த உன்னுடல் ஒருவகையில் அவளுடைய உடலே.
குப்புறக் கவிழ்ந்த முகத்துடன், கரும்பாலால் ஆக்கப்பட்ட அந்தப் பிரபஞ்சத்துக்குள், உன் வாயிலிருந்து முளைத்திருந்த கொம்பு போன்ற காற்றுவழங்கியுடன் நீ முழுகிக்கொண்டிருந்தாய். லாந்தர் விளக்கின் தாங்கவொண்ணா ஒளித் தாரை, இரவு என்பது கடற்பரப்புக்குக் கீழே இன்னும் இருட்டான இரவாக இருக்கும் என்பதை நிறுவிக்கொண்டிருந்தது. அத் தாரையே உன் இறக்கத்தைக் கட்டமைத்தது. மீன் துடுப்புகளின் துணையின்றி, முக்குளிப்பதற்கான சிறப்பு உடையுமின்றி, திறந்துகிடந்த மார்பகங்களுடன், உள்ளாடை மட்டுமே அணிந்தவளாய், ஒரு நீர்ப்பாசிக் கூட்டத்தைத் தேடி முடிவிலியாய் நீ புறப்பட்டாய். அங்கே மஞ்சள்-பழுப்பு நிறம் கொண்ட பாசியை – புகழ்பெற்ற ஃப்யூகஸ் பாசியை – கண்டெடுக்க நீ உத்தேசித்திருந்தாய். அமா என்றழக்கப்படும் உன் முன்னோர்கள் – பண்டைய காலத்தில் முத்துக்குளித்தவர்கள் – பலவீனமென்னும் பேயை விரட்டுவதற்காக பச்சையாக உட்கொண்டவை அத் தாவரங்கள். நீரடியிலிருக்கும் செங்குத்தான பாறை முகடுகளின் அண்டமுடியாத ஆழங்களில் தம் கூடுகளைக் கட்டியமைக்க அவற்றுக்குப் பிடிக்கும் என்பதுதான் மோசமான விடயம். தற்போது, இன்னும் முப்பதே மீட்டர் ஆழத்தில் பாறைகளின் சிதறிய அமைவிருப்பதை நீ அறிந்துகொண்டாய்.
மிதவை நுண்ணுயிர்களாலான புதர்காடுகளையும் கிளிஞ்சல் கூட்டமைவுகளையும் கவனமாக ஊடுருவினாய். இறுதியாக, ஃப்யூகஸ் நீர்ப்பாசியின் புடைத்த நீர்க்கொப்புளங்கள் உன் கைகளிலும் கால்களிலும் உரசிச் செல்வதையும் உன் மார்பக வடிவங்களில் தடம் பதிப்பதையும் உணர்ந்தாய். உன் சிறிய கம்பிவலை சஞ்சியில் எத்தனை கொள்ளுமோ அத்தனை செடிகளை நீ பிடுங்கி எடுத்துக்கொண்டாய். உன் வேலை முடிந்தது. போரில் அரை வெற்றி கிடைத்துவிட்ட்து.
மூச்சே விடாமல் ஒன்றரை நிமிடங்களை நீ கடத்தியிருந்தாய்: நீரடியில் அஃது ஒரு முடிவற்ற பெருங்காலம். அவ்வப்போது உன் நாக்கு வளர்ந்துகொண்டிருப்பதாகவும், முறுக்கிக்கொள்வதாகவும், பின்நோக்கிச் சுருள்வதாகவும் உணர்ந்தாய். மேலே திரும்பும் வழியின் விசையைச் சரியாக கணக்கிடத் தவறியதால் உன் அம்மா அப்படித்தான் இறந்தாள். நீயும் அப்படியே இறக்கக்கூடும். உன் உடலைக் கரியமில வாயுவால் நிரப்புவதைத் தவிர்க்கும் முகமாக நீ இயன்றவரை அசையாமல் இருந்தாய். உன் கைகள் உன் தொடைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தன. மேற்பரப்புக்குத் திரும்பத் தேவையான அளவுக்கே உன் கால்களை உதைத்தாய். அப்போது உன் குதிகால்களில் பற்றிக்கொண்ட முடிச்சு உன் திட்ட்த்தைக் குலைத்தது. உன் உடலுடன் பிணைத்திருந்த கயிறில் நீயே சிக்கிக்கொண்டாய்.
“கடலைக் கண்டு அஞ்சாதே. உன் ஆழ்மனதில் நீ நேசிக்கும் ஒன்றுக்காகப் போராடவும் அஞ்சாதே” என்று உன் பாட்டி அடிக்கடி சொல்வாள். உன் முகமூடிக்கு எதிரே மீன்கள் ஒளியின் எச்சங்களை விழுங்கிக்கொண்டிருந்தன. கயிறு தொய்வடைந்திருப்பதையும் பின்னர் அறுந்திருப்பதையும் கண்டு, மேலே படகில் இருந்த உன் அண்ணி திடுக்கிட்டாள்; அயர்ச்சியும் வெறியும் மேலிட, கயிறை இழுக்க எத்தனித்தாள்.
உன் மார்பிடைச் சவ்வின்மீது விழுந்துகொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத அடிகளையும், உன்னை இந்த உலகத்திலிருந்தே இழுத்துச் சென்றுகொண்டிருந்த தாலாட்டும் கிறக்கத்தையும் உணர்ந்தபின் உன்னால் அந்த முடிச்சை அவிழ்க்கவும், தொடுப்பு வாரிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ளவும், உள்ளுணர்வைக் கொண்டே மேலேறவும் முடிகிறது. உன் மீள்வருகை மிகக் குறைவான வேகத்துடனும், ஆனால் இடையூறின்றியும், நிகழ்ந்தது. மேற்பரப்புக்கு ஐந்து மீட்டர் தொலைவிலிருக்கும்போது படகின் அடிப்பாகம் பெரிதாவதையும் மேலும் துலக்கமாவதையும் கீழேயிருந்து நீ அவதானிக்கிறாய். துண்டு துண்டாக, சீரற்ற எண்ணெய்ப் பொட்டுகள் போல உன் வாழ்க்கை மிதப்பதைப் பார்க்கிறாய். அவற்றிடையே அப்பாவிடமிருந்து பரம்பரைச் சொத்தாக யோசன் பெற்றிருந்த வெளிறிப்போன கன்னங்களையும், தன் முதல் முத்தைக் கண்டெடுத்த தருணத்தில் அம்மாவின் முகத்தில் மலர்ந்த புன்னகையையும், எப்போதும் அனைத்தையும் சரிப்படுத்திக்கொண்டிருக்கும் பாட்டியின் கண்டிப்பான குரலையும் கண்டுணர்கிறாய். அந்தக் கணத்தில் உன் கைகள் விறைக்கின்றன; உன் நாக்கு மேலண்ணத்தை அடைக்கும் ராட்சதப் பாம்பாக மாறியிருக்கிறது. ஓளியோ, இன்னும் வெண்மையானதும் இன்னும் மூர்க்கமானதுமான வேறொரு ஒளியாகிவிட்டது. நீ கனவு காணத் தொடங்குகிறாய். உன் கனவுகளில் மீன் துடுப்புகள் உன் பாதங்களில் முளைக்கின்றன; அங்கே பிராணவாயு என்பது வெறும் மூடநம்பிக்கையே.