Wednesday, 12 July 2017

அகம் புறம் - பிரேதா : பிரேதன்

https://www.facebook.com/profile.php?id=100013678263272&hc_ref=OTHER&fref=nf
அகம் புறம்
முள்கீறி இசையெழும் சுழலும் ஒலிப்பாதையில் முயங்கித் தகித்த நரம்புகளின் பேரதிர்வு நிறைந்த இரவுகளின் நினைவுகளோடு ஊரற்ற வெளியில் வளைந்தோடும் இருப்புப் பாதைகளூடாக உன்னை அடையும் முனை தேடி வெயிலோடு நடக்கிறேன்.
வழியில், கைவிடப்பட்டு ஓடுகள் சரிந்து சிதைந்த சிறிய ரயில் நிலையம். உள்ளே, கழுத்தில் சுருக்கிடப்பட்டு உத்திரத்திலிருந்து தொங்கும் ஆண் பிணம். அழுகல் நெடியில் வெறியேறி தீண்டமுடியாமல் தாவித்தாவி ஏமாறும் சில நாய்கள்.
முகம்பொத்தி வெளிவருகிறேன். காய்ந்த குடிநீர் குழாயைக் கண்டதும் தாகம் ஊறுகிறது. பட்டுபோன ஒற்றை மூங்கில் மரம். சரிவர கவனிப்புப் பெறாத எருக்கம் பூவின் அழகு எனது நடையினூடே பூத்துக் குலுங்கும் புதர் மண்டிய கைவிடப்பட்ட சரக்கு ரயில் பெட்டி. அதில் எழுதப்பட்டிருக்கும் ஒரு காலத்தின் நம்பிக்கைகளாயிருந்து என்றோ பொய்த்துப் போய் கைவிடப்பட்ட பழைய புரட்சிகர வாசகங்கள்.
உன்னை அடையும் முனை தொலைவில் இல்லை. ஊரில் நெல் அவியும் உனது உடம்பின் மணம் காற்றில் கமழ்கிறது. இன்றிரவு முழுநிலா இசைத்தட்டாய் சுழலும். உனது உந்திச் சுழிப்பில் எனது நாவின் முள் தீண்டி புகைந்து பரவும் இசையில் வெயிலடிக்கும். ஒற்றை மூங்கில் மரம் நிலவில் தைக்கும்.
- பிரேதா : பிரேதன்
[ இருபது கவிதைகளும்
இரண்டாயிரம் ஆண்டுகளும் ]
1998.