Saturday, 28 April 2018

திசை மாற்றம் - சண்முகம் சிவலிங்கம்

ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர் ”சசி” என அழைக்கப்படும் சண்முகம் சிவலிங்கம். இவரும் நுஃமானும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். “சசி“யின் ”திசைமாற்றம்” என்ற சிறுகதையை வாசித்திருக்கிறீர்களா? அந்தக் கதையில் வரும் ”நோமன்” என்ற கதாபாத்திரம் நுஃமான் அவர்கள்தான்.
தமிழ் தேசிய விடுதலைக்கு இலக்கிய வெளியில் நுஃமானளவு பங்களிப்புச் செய்தவர்கள் யாருமில்லை. ஆயினும், அந்தக் கதையை முதலில் வாசியுங்கள் பின்னர் அது குறித்து சொல்கிறேன். நுஃமானை எப்படி சித்தரிக்க முயல்கிறது அந்தக் கதை என்பது, ஈழத்திலிருக்கும் இனவாதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
மிக நெருங்கிய நண்பரே அப்படி சித்தரித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புலிப் பாணி இலக்கியவாதிகள் புரிந்துகொள்ளட்டும்

திசை மாற்றம் - சண்முகம் சிவலிங்கம்

மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் துக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்த மேல்கழுவி உடைமாற்றி வருவதற்கிடையில் இன்னும் பலர் வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் ஒவ்வொருவரும் மஜிம்தாரை உற்றுப் பார்த்துக் கொண்டே அமர்ந்தார்கள். மஜிம்தார் அவர்களுக்கு வினோதமாக்ப் பட்டிருக்கக்கூடுமா?
சடை வளர்த்திருந்த மஜிம்தார் கம்பசுக்கு வந்தது முதல் ஒட்டவெட்டி இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? அவன் கொஞ்சம் ஒல்லி, தலை இருந்து கால் வரையும் ஒரே சீராக இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? கொஞ்சம் பெரிய பெல்ஸ்தான் அணிந்திருந்தான். அவனுடைய மூக்கு முழி எல்லாம் அவ்வளவு வித்தியாசம் இல்லை. உதடு கொஞ்சம் கறுத்திறுந்த்து. அவ்வளவு சிகரெட் பற்றி இருக்கின்றான். ஒரு வேளை அதுதானோ? எதுவாய் இருந்தால் என்ன? இவர்கள் என்ன பெரிய ஆட்களா?

வந்தவர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும். எல்லோரும் பேர் பெற்ற திரிபுவாதிகள். முதுகீரனுக்குக் கூட மஜிம்தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. முதுகீரனும் திரிபு வாதிகளின் முகாம்தான் இப்போது. நோமன் வந்து சேர்ந்த பிறகுதான் மஜிம்தாருக்கு தெம்பாக இருந்தது. ஒரு வானொலி ஸ்க்ரிப்ட் பற்றிப் பேசுவதற்கு நோமனை பேராசிரியர் அழைத்திருந்தார். ஏனையவர்களும் இவ்வாறு ஒவ்வொரு காரியத்துக்காக பேராசிரியரிடம் வந்திருப்பார்கள். ஆனால், அவர்களில் நோமனைத் தவிர மற்ற எல்லோரும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருந் தார்கள். பேராசிரியருக்கும் முகத்தைத் தொங்கப் போடும் வியாதி தொற்றி விட்டது போலிருந்த்து. பேராசிரியரும் அந்த ஹோலுக்கு வந்து இரண்டொரு முகமன்களைப் பரிமாறிக் கொண்டபின் வாட்டமாய் போனார். நோமனுடன் பேசிக் கொண்டிருந்த்தில் அவர்களுடைய ஆரம்ப்ப் பேச்சை அவன் கவனித்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை ஏதாவது மரணச்செய்தியோ? நோமனிடம் கேட்டான், நோமனுக்கு புன்னகைக்க மட்டுந்தான் தெரிந்த்து,எதேச்சையாக உள்ளறையில் இருந்த ஹோலுக்கு வந்த பேராசிரியரின் மனைவி சகலகலாவல்லி பெரும் புதினத்தைக் கண்டது போல் சிரித்தா.

‘’என்ன, எல்லோரும் ஒருமிக்க, சொல்லி வைத்தாற் போல? நேற்று மகாநாட்டில் தீர்மானித்துக் கொண்டதோ? இருங்க, ரீ கொண்டார்றேன்’’
கன்வஸ் கதிரை ஒன்றினுள் உட்குழிந்து போயிருந்த வட்டக் கண்ணாடி திரு நரேம்ஜிதான் முதலில் சற்று அசைந்து பத்திரிகையை மடித்தபடி நிமிர்ந்தார்.

‘’எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பிரதமர் சிறிமாவோ சொன்னது போல் வரவில்லையா? அமைச்சர் கெனமன் வந்து அவ்வளவு நேரமும் இருக்கவில்லையா? நாம் அழைத்த எந்தச் சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் வராமல் இருந்தார்கள்? வட கிழக்கில் இருந்தும், மலைநாட்டில் இருந்தும் வந்திருந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களினதும், கலைஞர்களினதும் எண்ணிக்கையை வரவுப்பதிவேட்டில் பார்த்தாலே தெரியும். இப்படி எல்லாம் ஒழுங்காகப் போன ஒரு மகாநாட்டில் கடைசியில் இப்படி ஒன்று நடந்து போயிற்றே’’.
என்ன விஷயம் என்பதை மஜிம்தார் ஊகித்தான். அவனுக்குச் சிரிப்பு வந்த்து.

நீட்டிய சோபா ஒன்றினுள் வெள்ளை வலாமணியை தள்ளிக்கொண்டு தொப்பை வயிறு சற்றே தெரிய மல்லாந்து கிடந்த மல்லிகை நேசன் கொழுக்கி போன்ற தன்கழுத்தில் தொங்கும் தலையை முன் நீட்டி நிமர்ந்தார்.

‘’கெடுத்துப் போட்டான். கெடுத்துப் போட்டான்’’ தலையில் அடித்துக் கொண்டு சொன்னார்.

தொடைகளை அசைத்தசைத்து, நரை படரும் தன் மலர்ச்சியான முகத்தைக் கோணல்கள் ஆக்கிக்கொண்டு ஒரு சஞ்சிகையில் மூழ்கி இருந்த நீர்வை ஒரு சிங்கம் போலக் குதித்தெழுந்தார்.

‘’நானும் காவலுரும் எவ்வளவு கவனமாக இருந்தானாங்க, மகாநாட்டு மண்டபத்துள் அதிதீவிர மாவோயிட்டுகளை தூண்டில் போட்டுக்கொண்டு எவ்வளவு கவனமாக இருந்தனாங்க. அதிதீவிர மாவோயிஸ்ட்டுகளில் ஒரு ஈ எறும்பைக்கூட நாங்கள் உள் நுழைய விடல்லியே. அப்படியிருந்தும் நமக்குள்ள இருந்து ஒரு நாலாம் படை வெளிக்கிளம்பி இருக்கே……..’
மஜிம்தார் களுக்கென்று சிரித்தான். மெல்ல நோமனின் காதுக்குள் சொன்னான். ‘நான் இருந்தேனே மகாநாட்டில, என்னை இவர்கள் கண்டு கொள்ளவில்லையே’’
நோமனும் சிரித்து மஜிம்தாரின் காதுக்குள் சொன்னான். ‘’உன்னை அதிதீவிர மாவோயிஸ்ட்டாக அவர்கள் கணக்கெடுக்கல்ல ,,,,,,’’
நோமனை உற்றுப் பார்த்தான் மஜிம்தார் அந்தச் செந்தளிர்ப்பான முகத்தில் ஒரு தெளிவு இருந்தது, திரிபுவாதிகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தீவிர மாவோயிஸ்ட்டுகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தனக்கென்று ஒரு கருத்தை எப்படி வைத்துக் கொள்ள முடிகிறது இந்த நோமனால்?
நீர்வையின் பேச்சை ஒட்டி ஒருவர் கேட்டார்.

‘’யார் அந்த நாலாம படை?’’
நோமன் சொன்னான்.
‘’அவர் நம்ம அள்தான். நம்ம கூட்டாளிதான். ஒரு நல்ல மாக்ஸ்ஸிட்டு தான். ஆனால், இது ஒரு திசை மாற்றமான காலம், தளம்பல்களும் பின்னோக்கல்களும், தடுமாற்றங் களும் மிகுந்த காலம் எவர் சரி என்பதை எதிர்காலந்தான் சொல்லும்…..’’
‘’அப்போ உம் நண்பரை நீர் ஆதரிக்கின்றீர்?’’
‘’நான் அவருடைய கவிதையை ஆதரிக்க வில்லை. ஆனால், அவர் ஒரு நல்ல கவிஞர், ஒரு நல்ல மாக்ஸ்ஸிட்’’
‘’ஒரு நல்ல மாக்ஸ்ஸிட் இதைச் செய்வானா?’’
மல்லிகை நேசன் மீண்டும் தலையில் அடித்துக்கொண்டார்.
‘’ஓ ! கெடுத்துப் போட்டான். கெடுத்துப் போட்டான்.’’
திருமதி சகலகலாவல்லி தேனீர் தட்டத்துடன் வந்தவர் அப்படியே நின்று விட்டா,
‘’என்ன கெடுத்துப்போட்டான், கெடுத்துப்போட்டான், என்று சொல்லுறீங்கள், இல்ல, நான் ஒரு கதைக்குத்தான் கேட்கிறன், அந்தப் பொடியன் என்னத்தைச் செய்து போட்டான்? – ஒரு கவிதையை வாசித்தான். மக்கள் அவனுக்கு கரகோஷம் செய்தார்கள். இது பிழையோ?’’
திருமதி சகலகலாவல்லி தேனீர்த்த தட்டத்தை நீட்டியபடி ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்டா, திரு நாரேம்ஜி அம்மையாருக்கு பதில் சொல்ல விரும்பியவர் போல எழுந்து நின்றார். இந்தப் பேச்சு நீண்டு விடுமே என்று பயந்தவர் போல பேராசிரியர் வைகுந்தம் இடை மறித்தார்.
‘’சசீந்திரன் அவ்வளவு பிழையான ஆள் அல்ல. நான் நினைக்கிறேன், அவனை யாரோ தூண்டி விட்டிருக்க வேணும். அல்லது அவனே இதன் நன்மை தீமையை கருதாது ஒரு வம்புக்கு ஒரு வாய்ச் சவடால் வீசியிருக்க வேணும். எதுக்கும் நாம ஆளை ஒருக்கா எடுப்பிச்சு நேரில கேட்டால் என்ன? ஏன் இதை வைத்துக் கொண்டு பிசுபிசுப்பான்? உந்த ஹவ்லொக் றோட்லதானே இருக்கான் , , , , தம்பி, இங்க வா மோனே, மஜிம்தார். உனக்கு சசியின் லொட்ஜ் தெரியுந்தானே சைக்கிளை எடுத்துப் போய் நான் வரச் சொன்னதென்று கூட்டிற்று வா மோனே,,,,’’
மஜிம்தாருக்கு தன் காரியம் முடியாவிட்டாலும், அப்போதையச் சூழலில் அந்தக் கூட்டத்தில் இருந்து விடுபட்டது சந்தோஷமாகவே இருந்த்து. இந்தக்கலப்பு முற்போக்குவாதிகளுடன் காலத்தை வீணாக்குவதை விட கிறுக்கன் சசியிடம் போய் பேசிக்கொண்டிருப்பது பரவாய் இல்லைப் போல் தோன்றியது. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு கவிதையை சசி எழுதினான் என தானே அவனிடம் கேட்க வேண்டும்,,,, என்று முந்திய நாளே நினைத்திருந்தான். அவர்களுடைய மார்க்சீய ஆய்வு வட்டத்தின் கலந்துரையாடல்களின் போதும் அந்த விஷயத்தை அவன் எழுப்ப இருக்கிறான்.
ஏழ்மையான அவனுடைய பைசிக்கிள் லொடலொடத்து வெள்ளவத்தை வீதியில் இறங்கியது. தலை நிறையச் செடை வைத்திருந்தவனுக்கு இப்போது அது இல்லாமல் இருப்பது கொஞ்சம் பாரம் குறைந்த மாதிரித்தான் இருந்த்து. காதோரமாக நெரித்து குறுக வெட்டப்பட்ட அந்த இடங்களில் மாலை நேரக்காற்றுப் படும் போது இதமாக இருந்த்து.

வெள்ளவத்தை சந்தையின் ஓரமாக உள்ள பஸல்ஸ் ஒழுங்கையில் திரும்பினான். ஒழுங்கையின் முன்பகுதியில் சந்தையின் மீன் வெடுக்கு இருந்தது என்றாலும் அந்த ஒழுங்கையில் போவது அவனுக்கு சந்தோஷமாகவே இருந்த்து, ஒரு காரணம் சசி கொடுத்த தகவல், அந்த ஒழுங்கையின் 39ம் இலக்க வீட்டில்தான் கும்பிழான் ஐ. சண்முகமும் யேசுராசாவும் விடுதியைக் கொண்டிருந்தார்களாம். அந்த நினைவில் அந்த வீட்டோடு மஜிம்தாருக்கு மானசீகமான பரிச்சயம் ஏற்பட்டிருந்த்து, குப்பிழான் ஐ. சண்முகம் மார்க்சீயவாதி அல்ல. ஆனால், மென்மையான உணர்வோட்டம் உடைய ஒரு மனிதாபிமானி. யேசுராசாவை நேற்றுதான் மாநாட்டு மண்டபத்தில் அவருடைய ‘அலை’ முதல் இதழோடு கண்டான். பேராசிரியரின் வரட்டுத்தனத்தை யேசுராசா விமர்சனம் செய்தார். பேராசிரியரின் சீனச்சாயம் கழன்று போவதாகவே மஜிம்தாருக்கும் பட்டது.
பஸல்ஸ் லேன் முடிவில் வந்த குறுக்கு வீதியினுடாக டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தைக்கு வந்தான். பின் பாமன்கடை சந்தி. சந்தியில் இடது பக்கமாக திரும்பினால் ஹவ்லொக் ரோட்டின் லேசான இறக்கம். இறக்கத்தில் சற்று நடந்து திரும்பினால் ரம்புட்டான் பழுத்த அந்தப் பெட்டையின் வீடு. எதிரே உள்ள மாடிதான் சசியின் விடுதி.

அறையில் சசி இருக்கவில்லை. உமா இருந்தான். உமா இரண்டு நாட்களுக்கு – முன்புதான் அறிமுகம். உமாவிடம் பேசுவதிலும் அவனுக்கு ஆர்வம் இருந்த்து. உமாவும் சடை வளர்த்திருந்தான். அவனுடைய கோழிக் குஞ்சு மார்பில் உரோமங்கள் புரிவிட்டிருந்த்து. அகன்ற பெரிய விழிகளும் ஆனைக்காதுகளும் அசப்பில் சொல்லத்தான் நினைக்கிறேன், கமலஹாசனைப் போன்ற தோற்றமும்.
உமாவினுடைய இரண்டு நாள் சினேகத்தில் உமா மார்க்சீயம் பற்றிய தவறான முடிவுகளுடன் இருப்பதை மஜிம்தார் உணர்ந்திருந்தான். மெல்லமெல்ல உமாவை அவன் மார்க்சீயப் பார்வைக்கு இட்டுச் செல்ல வேணும். சசியின் நட்பு தத்துவத் தொடர்பில்லாத்து. ஒரே அறையில் உமாவுடன் இருந்து கொண்டும் உமாவின் சித்தாந்த நோக்கு பற்றி சிரத்தை இல்லாமல் இருந்திருக்கிறேனே சசி.

சசியின் அணுகுமுறையில் தத்துவத்திற்கு முதலிடம் இல்லைப் போல்தான் தெரிகிறது, மஜிம்தாருக்கு உள்ளது போன்று மார்க்சீயத்தை பரப்ப வேணும் என்ற முனைப்பு அவ்வளவாக இல்லை. இருந்திருந்தால் சசியின் கிராமத்தில் மார்க்சீய அரசியல் வேலை செய்ய மண்முனையிலிருந்து மஜிம்தார் அங்குபோக வேண்டிவந்திருக்குமா? சசி தன் பகுதியில் கொஞ்சம் வேலை செய்திருந்தான்தான், தன்னை சூழ்ந்திருந்த சில கிராமங்களில் சில படிப்பு வட்டங்களை அமைத்திருந்தான்தான். செவ்வானம், அக்னி, சிற்பிகள், செங்கனல், தேன்தோடை முதலிய பல வட்டங்களை உருவாக்கி இருந்தான்தான். அப்பெயர்களைத் தாங்கிய கை எழுத்து பத்திரிகைகளில் கருத்துக்கள் முன்வைக்க பட்டனதான். ஆனால், வேகம் போதாது, சசிக்கு போதிய வேகம் இருந்திருந்தால் பன்னீர்செல்வம் போன்ற தமிழ் இயக்கவாதிகளின் செல்வாக்கு ஓங்க விட்டு வைத்தருப்பானா?

உமா குளியலறைக்குப் போனான், புத்தகங்களும், சஞ்சிகைகளும் குழம்பிக்கிடந்த மேசையோடிருந்த கதிரையில் இருந்தபடி கீழே மாலைப்பொழுது இன்னும் பிரகாசமாய் இருந்த ஹவ்லொக் வீதியின் வாகனப் போக்குவரத்தைக் கவனித்தான் மஜிம்தார். வாகனங்களில் ஊர்ந்த எண்ணங்கள் மலைகளையும் வெளிகளையும் கடந்து சசீந்திரனின் கோயில் வெளியை அடைந்தன. மண்முனையிலிருந்து சசியின் கோயில் வெளியில் மார்க்சீய வகுப்புகள் எடுக்க மஜிம்தார் சென்றிருந்த அந்த மாலைப்பொழுது நினைவுக்கு வந்த்து. பதற்றம் மிக்க அந்த இரவு கண்முன் விரிந்த்து.

கோயில் வெளி. அடர்ந்த பெரிய ஆலமரங்கள், இடையிலே வெள்ளை மணற்பரப்புகள் சுற்றிவர வீதிகள். மஞ்சள் ஒளி தரும் பல சோடியம் பல்புகளுக்கிடையில் ஒரு பெரிய மேர்க்கூரி வெளிச்ச மின்கம்பம். மேர்க்கூரிக் கதிர்கள் ஆல மரங்களுக்கிடையில் நிழல்களை வீழ்த்தின. கோயில் விளக்குகளின் ஒளிக்கீற்றுகள் ஆலமரங்களின் நிழல்களை வரிவரிவாய் கீறின.

அந்த வகுப்புக்கு சசி ஓடியாடி நல்ல வேலை செய்திருந்தான். ஒரு நாற்பது ஐம்பது தோழர்களைத் திரட்டி இருந்தான். அவர்களை அந்த மங்கல் மணல் வெளியில் ஒன்றாக்க் காண மஜிம்தாருக்கு சந்தோஷமாக இருந்த்து. மஜிம்தாருடன் துரையும் சுபத்திரனும் வந்திருந்தார்கள். கூட்டத்தைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மஜிம்தாருக்கும் அது பெருமையாகத்தான் இருந்த்து.

இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். வகுப்புத் தொடங்கும் போது ஆலமரங்களின் இருள் கீற்களிடையே சருகுகள் சரசரத்துக் கேட்டன. சுபத்திரன் கேட்டான்,
‘’இன்னும் தோழர்கள் வர்றாங்களா-‘’
மௌனம்.
அவர்கள் காத்திருந்தார்கள்.
சரசரப்புகள் ஓய்ந்தன.
ஏன் அந்த்த் தோழர்கள் இருட்டுக்குள் இருக்கிறார்கள்? அவர்களும் இங்கே வரலாமே…’’
சசி எழுந்து இருட்டுக்குள் இருந்தவர்களிடம் போனான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
‘’அவர்கள் அங்கிருந்தே கேட்கிறார்களாம். பன்னீர்செல்வமும் வந்திருக்கான்,’’
‘’யார் பன்னீர் செல்வம்-‘’
‘’கூட்டணியில் முக்கியமானவர்…’’
மஜிம்தாருக்கு பூரிப்பாகவே இருந்த்து. கூட்டணிக்காரப் பையன்களும் மாற்றுச் சிந்தனையுடன் தன் வகுப்புக்கு சமூகமளித்திருக்கிறார்களே! அவனுடைய வாராந்த வகுப்புகள் கிராமத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே! அதனால்தான் வெளியில் தெரியாமல் மறைப்புக்குள் இருந்து கேட்கிறார்கள்!
‘’மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை’’ என்ற வரிகளோடுதான் அவன் அன்று தன் மார்க்சீய வகுப்பை தொடங்கினான். இருட்டுக்குள் இருப்பவர்களும் கேட்கட்டும என்று சுற்று உரத்த குரலில்தான் பேசினான்.
வகுப்பின் அரைவாசி நேரம் கடந்த்து. காசியின் அந்தக் கவிதை வரிகளுக்கு வந்தான்.
‘’ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில் என்ன குறை?‘’

எந்தக் காலத்திலும் எந்த்த் தேசத்திலும், எந்த இனத்தினுள்ளும் ஆளும் பரம்பரையும் ஆளப்படும் பரம்பரையும் உண்டு என்பதை மஜிம்தார் விளக்கினான். ஒரே இனத்துக்குள் ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை எடுத்துக் காட்டினான். ஆண்ட பரம்பரையை ஆளுவதற்கு மீண்டும் அழைப்பது அவர்களால் ஆளப்பட்ட அவர்களது இனத்தின் விவசாயிகளையும் பாட்டாளிகளையும் தொடர்ந்து அடிமையாய் வைத்திருக்க அழைப்பதுதான். வேறு வகையாகச் சொன்னால் ஒரு ஆளும் வர்க்கத்தை நீக்கி இன்னொரு ஆளும் வர்க்கத்தை மக்கள் மீது சவாரி விட அழைப்பதுதான் அது. அதுதான் இனத்தேசியம். ஆண்ட பரம்பரை என்ற கோஷம் அவர்களுக்குக் கீழ் சுரண்டப்பட்ட மக்களுக்கு ஊட்டப்படும் மயக்க மருந்து, போதை வஸ்த்து அபின் ….. ‘’
‘’நிறுத்தடா ‘’
இருட்டுக்குள் இருந்து ஆவேசம் பூண்ட ஒரு குரல் கத்தியது.
‘’நிறுத்தடா, நிறுத்தடா…’’
மேலும் பல குரல்கள்.
இருட்டுக்குள் இருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மங்கல் ஒளி மணற்பரப்புக்கு ஓடி வந்தார்கள்.
‘’ஆர்ரா நீ காசியின் வரிகளைக் கறைப்படுத்த?’’
வெங்கலம் போன்ற அவனுடைய குரல் இலக்கண சுத்தமான உச்சரிப்பு அந்த்த் தொனியே ஒருதேர்ந்த பேச்சாளனின் தொனி.
மஜிம்தார் அந்தத் தொனிக்குரியவனைப் பார்த்தான். அவன் ஒல்லியாய், வெள்ளை வேஷ்ட்டியுடன் வெள்ளை சேட் அணிந்திருந்தான். பளிச்சென்ற அகன்ற முகம் சற்றுக்கருமை. அந்தக் கருமையில் அவனுடைய வெண்பற்கள் மிளிர்ந்தன. மினுங்கிய அந்தக் கண்களில் வன்ம்மும் ஆசேவமும் பக்கத்து உச்சி. பக்கவாடாக வாரிய சுருள்முடி.
மஜிம்தார் முழிசினான்.

‘’என்னடா முறைக்கிறாய்?’’
அந்தக் கறுத்த ஒல்லியான வெள்ளை வேட்டி வெள்ளை சேட் முண்டி அடித்துக் கொண்டு ஆக்கிரோஷமாக மஜிம்தாரை நெருங்கினான். கண்ணை மூடி முழிக்க முன் அவன் மஜிம்தாரின் சேட் கொலரைப் பற்றி இருந்தான்.
‘’பன்னீர் செல்பம் . . . பன்னீர் செல்வம் . . .’’ சசி உரத்துக்கத்திக் கொண்டு முன்னுக்கு ஓடி வந்தான்.
அவன்தான் பன்னீர்செல்வம் என்று மஜிம்தாருக்கு அப்போதுதான் தெரியும். ஒல்லியான அவனுடைய பிடியில் தான் எத்தனை உரம்! மலர்ச்சியான அந்த முகத்தில் தான் எத்தனை மின்னல். . . !

படீர் எனக் கதவு திறக்க, மஜிம்தார் சட்டெனத் திரும்பினான். உமா குளித்துச் சுற்றிய ரவலுடன். அந்த அனெக்ஸ்ட் பாத்ரூமின் கதவை அவன் மீண்டும் படீர் என்றே மூடினான். அவனுடைய சடை விரிந்த நிலையில் சாயிபாபாவை நினைவு படுத்தினான்.
‘’சசியர் இன்னும் வரல்லியா….?’’ ஈரோசுக்கு முன்னால் விஜயாள் பீற்றரின் வீடு இருக்கு. 134ம் இலக்கம் அங்கதான் வாசகர் இருக்கார். வாசகரிடந்தான் சசியர் போயிருக்கிறார். இதை நான் உங்களிடம் முதலே சொல்லி இருக்கலாம்…..’’
தன்னுடன் பேச்சுக் கொடுப்பதை உமா தவிர்க்கிறான் என்பதை மஜிம்தார் புரிந்து கொண்டான். உமா முக அலங்காரம் செய்து உடையணிந்து புறப்படுவதற்கு எல்லாம் தன்னுடைய தொடர்ந்த இருப்பு சங்கோஜம் தரவும் கூடும். எனினும் உமா நீண்ட முடியை நன்றாக உணர்த்தி, எண்ணெய் தடவி வார்ந்த கிறீம் பூசி, பெல்சுக்கு மேல் ஸ்லாக்கை அணிந்து புறப்படும் வரை காத்திருந்து உமாவுடனேயே அறையை விட்டு வெளிக்கிட்டான். மாடியில் இறங்கும்போது சிறிது பேச்சுக்கொடுத்தான். உமா சுருக்கமாகவே பதில் அளித்துக் கொண்டு வந்தான்.
‘’நீங்கள் எங்கள் மார்க்சீய ஆய்வு வட்ட கலந்துரையாடல்களுக்கு வரலாமே-‘’
‘’எனக்கு ஆர்வம் இல்லை.’’
‘’கொள்ளுப்பிட்டியில், லோட்டஸ் ஹோட்டலுக்குப் பின்னால் நோமனுடைய அறையில்தான் கூடுவோம். மகாநாடு மூன்று மாதமாய் குழப்பிப்போட்டு. இந்தச் சனிக்கிழமை கூடுகிறோம்’’
‘’தெரியும்’’
‘’நல்ல பொழுது போக்குத்தான். இந்தோ சிலோனின் சூடான தயாரிப்புகளுடன்’’
‘’நாங்கள் அந்நேரம் ஹோட்டல் பிளாசுவுக்குப் போவோம்….’’
ஹவ்லொக் வீதியில் டபிள்யு.ஏ. சில்வா மாவத்தைக்குப் போகும்
‘’மன்னிக்கவும்,,,நான் நண்பர் ஒருவரை சந்திக்கப் போக வேணும்…’’
‘’சரி’’
தப்பினேன் பிழைத்தேன் என்பது போல் உமா விரைவாக நடந்தான். விரைவான நடையில் உமாவின் பதுமைத்தனம் சற்றுக் குழம்பிப் போவது போல் இருந்த்து.
ஈரோசுக்கு எதிரே தான் நின்ற பக்கம் பார்த்தான். அதன் எதிரே ஒரு பிரம்பு வேலைத் தளபாடக் கடைதான் இருந்த்து. வீட்டிலக்கங்கள் தொடர்பற்றுப் போய் இருந்தன. 134ம் இலக்கத்தைக் காணவில்லை.
பரவாய் இல்லை. அந்த இடத்தில் நின்று கூட அவனால் உலகை ரசிக்க முடியும். கடைசியாக கொள்ளுப்பிட்டியில் நடந்த மார்க்சீய ஆய்வு வட்டக் கலந்துரையாடலும் அதைத் தொடர்ந்த காலிமுக்த் திடலின் அழுத்தமான சந்திப்பும் அவன் முன் நிழலாடின. நோமனின் விடுதி கண் முன்னே வருகிறது….
வழமைபோல நோமனின் விடுதி அறையின் இரண்டு கட்டில்களும் நிரம்பி வழிந்தன. ஒர கட்டிலின் மையத்தில் நோமனும் மற்றக்கட்டிலின் மத்தியில் சமுத்திரனும் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் அவர்களைச் சூழவும் இருந்தார்கள். சசியும் மஜிம்தாரும் இரண்டு கதிரைகளிலும் இடம்பிடித்திருந்தார்கள்.

சமுத்திரன் ஒரு மையம். நோமன் மற்றொரு மையம் இந்த இரண்டு மையங்களிடையே மற்றவர்கள் இணைந்திருந்தார்கள். ஒரு காந்த மண்டலத்தின் இரும்புத் துகள் நிரல்கள் மஜிம்தாருக்கு நினைவுக்கு வந்த்து. சமுத்திரனும் நோமனும் ஒன்று மற்றொன்றை ஈர்க்கும் துருவங்கள். எதிர் துருவங்கள் என்பது தவறான பிரயோகம்.

அந்த வட்டக் கழுத்துச் சேட்டுதான் சமுத்திரனின் அடையாளம். இடுப்பின் கீழ் இறக்கம் இரு பக்கமும் பிளவு பட்ட வட்டக்கழுத்துச் சேட். அவனுடைய குறுந்தாடியும் அவனுடைய ஒரு அடையாளம்தான். குறுகலாய் வெட்டிய தலை முடியிடனும், பெரிய கண்களுடனும் அவன் ஒரு பெருந்தோற்றமாகத்தான் தெரிந்தான். ஆர்ப்பாட்டம் மிகுந்த அவனுடைய தோற்றத்தின் முஷ்ட்டி மடக்கி கோஷமிட்டு ஒரு செஞ்சட்டை அணிக்கு தலைமை தாங்கக் கூடிய வலு தெரிந்த்து. அதே சமயத்தில் ஒரு சிந்தனையாளனின் தீர்க்கமும் அவனிடமிருந்த்து.
சமுத்திரன் சொன்னான்.

‘’நண்பர்களே, நாம் பேச இருந்த விஷயத்தை பின் போடுவோம். நமக்கு உடனடியாக ஒரு தகவல் இருக்கிறது. சில தமிழ் தீவிர வாதக் குழுக்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் எங்களைப் பற்றிய பல தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் நாமும் அவர்களைப் பற்றி பல தவறான புரிதல்களைக் கொண்டிருக்கிறோம் போல் தெரிகிறது. உதாரணமாக அவர்களுக்கு கெனமனும் மார்க்சிஸ்ட்டுதான். சண்முகதாசனும் மார்க்சிஸ்ட்டுதான். ரோகன் விஜயவீரவும் மாக்ஸ்ஸிட்டுத்தான். எங்களைப் போன்ற மார்க்ஸ்ஸிட்டுகளும் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புதிர். நாங்கள் அவர்களிடமிருந்தும் அவர்கள் எங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் அவர்களுடன் இன்றிரவு 9.00 மணிக்கு காலிமுகத் திடலில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம்….’’

சமுத்திரன் பேசியது மஜிம்தாருக்கு கண்ணுக்குள் கரிசல் விழுந்த்து போல் இருந்த்து. அவனுடைய அதே உணர்வுடன் நோமன் சொல்லிக் கேட்டது,
அது சரி வரும் என்று நான் நினைக்கவில்லை’’
ஏன்?’’
தமிழ் தேசியவாதிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை. எம்முடைய போராட்டத்தில் குறுகிய இனத் தேசியவாத்த்தைக் கலந்து கொள்வதற்கோ, அவர்களுடைய போராட்டத்தில் பூர்ஷூவாக்களுக்கு எதிராக பாட்டாளிகளையும், விவசாயிகளையும் வர்க்க அடிப்படையில் ஒரு சக்தியாக இணைத்துக் கொள்வதற்கோ சாத்தியமும் இல்லை.’’
மஜிம்தாருக்கு சசியின் கிராமத்தில் ஏற்பட்ட அனுபவம், நோமன் பேசும் போது நினைவுக்கு வந்தது. பன்னீர்செல்வத்தின் உருவத்தை மனதில் படமாக்கிக் கொண்டான். அவனும் சமுத்திரனுக்கு தன் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொண்டான். சமுத்திரன் சொன்னான்.
‘’சரி, அவை பற்றியும் நாம் விவாதிக்கலாந்தானே?’’
‘’விவாதித்து என்ன பயன்?’’
‘’எல்லாவற்றையும் நம் விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நோமன் இதைக் கேளும். மார்க்சீயம் பின்னாளில் லெனினிசமாக வளர்ச்சி கண்டது. லெனினிசம் பின்னாளில் மாவோயிசமாக வளர்ச்சி கண்டது. சரியாகச் சொன்னால், ஒவ்வொரு நாட்டிலும் மாக்சீயம் பரீட்சிக்கப்பட்டது. பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் ஒரு பரிசோதனையை முன் வைக்கிறார்கள். நாம் சற்றுக் காது கொடுத்தால் என்ன?’’
‘’சரி நீங்கள் காது கொடுங்கள் என்னை மன்னியுங்கள்….’’
‘’என்னை மட்டும் அனுப்பாதீர்கள். என்னுடன் ஒரு குழுவை அனுப்புங்கள்’’
சசி உடனே சம்மதித்தான். பாரூக்கும் முன்வந்தான். என்ன பேசுகிறார்கள் என்று அறிகிற ஆர்வம் மஜிம்தாருக்கும் ஏற்பட்டது.
‘’ஒரு பார்வையாளனாக நானும் வருகிறேன்’’.
நேரம் 8.30 ஆகி இருந்த்து இந்தோ சிலோனுக்கு போய் விட்டுப் பிரிந்தார்கள். காலி முகத்திடலை நோக்கி சமுத்திரனும் சசியும் பாரூக்கும் மஜிம்தாரும் நடந்தார்கள் ………
ஈரோஸ் தியேட்டருக்கு முன்னால் 134ம் இலக்க வீட்டை மஜிம்தாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. உமா பிழையான இலக்கத்தைக் கொடுத்திருப்பானா?
எவ்வாறெனினும், அந்த வீட்டைக் கண்டபிடிப்பதற்காக மஜிம்தார் சிரமப்பட விரும்பவில்லை. ஈரோசுக்கு முன்னால் நின்று புதினம் பார்த்தாலே அவனுக்குப் போதும் போல் இருந்த்து. உள்ளே ஒரு மெட்னி ஓடிக்கொண்டிருந்த்து. பேராசிரியர் எதிர்பார்த்து இருப்பார்தான். எனினும், அவன் வெறுங்கையுடன் போவதில் என்ன இருக்கிறது?’ இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஒரு ரெலிஃபோன் எடுத்துச் சொல்லி விடலாம்.
சட்டென்று ஒரு மின்னலில் சசி தெரிந்தான். என்ன ஆச்சரியம். அந்தப் பிரம்புத் தளபாட கடைக்குப் பின்னாலிருந்துதான் அவன் வந்து கொண்டிருந்தான்,
‘’ சசி….. சசி….. சசி…..’’
சசி திரும்பிப் பார்த்தான்.
‘’ஓ! தோழர் மஜிம்தார்!’’
பிரம்புத்தளபாட கடைக்கு முன்னாலிருந்த சைக்கிளைத் திறந்து தள்ளிக் கொண்டு சசி வந்தான். மஜிம்தார் தன் சைக்கிளோடு அவனை எதிர் கொண்டான்.
‘’உன்னை எவ்வளவு தேடிக் கொண்டிருந்தேன். 134ம் இலக்க வீடு என்று உமா சொன்னானே?’’
‘’நான் வந்த்துதான் 134ம் இலக்க வீடு. அந்தப் பிரம்புத் தளபாடக் கடை முகப்பை மறைக்கிறது…’’
சசி வழமைபோல் எதற்கும் எப்போதும் தயார் என்ற நிலையிலேயே இருந்தான். சற்றுக் கறுப்பு, எனினும் பிரகாசமான முகம். உதடுகள் கவர்ச்சியான சிவப்பு பரந்த முகம். சடை முடி வாட்டசாட்டமான உடல். பெல்ஸ்ஸின் மேல் புள்ளி போட்ட சேட் சொன்னதும் உடனே புறப்பட்டான்.

பாமன் கடைச்சந்தியை நெருங்கிய போது தான் எதையோ இழந்து விட்ட தவிப்பு மஜிம்தாருக்கு தோன்றியது. சிறிது மனதைக் குடைந்தான். மனதுக்குள்ளாலேயே அது தலைப்பிறைபோல உருக்காட்டியது. ஆமாம் அவனுடைய அந்தப் பகற்கனவு, அந்த இரை மீட்டல் . . . . கொள்ளுப்பிட்டியில் மார்க்சீய ஆய்வு வட்டக் கலந்துரையாடலில் சமுத்திரன் சொன்னவை, இந்தோ சிலோனுக்கு போனது…. ஆ…..ஆ…. மின்குமிழின் சரம் கோர்த்த காலி வீதியில் மெல்லிய காற்றின் வருடலுடன் அவர்கள் கரம் கோர்த்துச் சென்றது…. அந்த இரவு ….
காலிமுகத்திடல் களை கட்டித்தான் இருந்த்து. காலி வீதி மேர்க்குரி விளக்குகளுடன் கடலோரப் பாதையின் விளக்குகளும் எரிந்தன. இரண்டு நிரை விளக்குகள் இருந்தும் திடலின் நடுவில் கலங்கலாகத்தான் இருந்த்து. அந்தக் கலங்கலில்தான் அவர்கள் அந்தத் தீவிரவாதிகளுடன் கை குலுக்கினார்கள். கை குலுக்கும் போது மஜிம்தாருக்கு துக்கிவாரிப் போட்டது. நினைவின் கலங்களுக்குள் நீந்துபவனாக திடலின் கலங்களுக்குள் பன்னீர் செல்வமும் தெரிந்தது போல் இருந்த்து.

‘’நீங்கள் பன்னீர் செல்வம் அல்லவா?’’
‘’நீங்கள் என்னை மறக்க வில்லை.’’
மஜிம்தாருக்கு முள் குத்தியது போலிருந்த்து. அதே கணீர் என்ற குரல். இப்போது ட்ரௌசரும் பற்றிக்ஸ் சேட்டும் அணிந்திருந்தாலும் அந்த அகலமான முகமும் தலை முடியும் அப்படியே இருந்த்து. ஆனால், தீவிரவாதிகளுள் ஒரு தீவிரவாதியாய் அவன் முன்பை விடவும் உரமேற்றியவனாய் அந்த மங்கலுக்குள் தெரிந்தான்.

மங்கலுக்குள் மங்கலாகத்தான் அவர்களுடைய பேச்சுக்கள் நிகழ்ந்தன. எனினும், வெளிச்சம் அவர்களுடைய பேச்சில் மிகைத்திருந்த்து. சமுத்திரன் சொன்னது சரிதான். ஒவ்வொரு சோஷிலிசப் புரட்சியின் வரலாறும் மிகவும் அத்துப்படியாய் இருந்த்து அவர்களுக்கு. காட்டிக் கொடுப்புகளைக் கரிக்கோடு இட்டுக்காட்டினார்கள். ஏகாதி பத்தியங்களின் துரோகத்தனங்கள் அவர்களின் விரல் இடுக்குகளில் இருந்தன. சனநாயகப் புரட்சி இன்றி சோஷலிசப் புரட்சிக்கு தாவுதல் சாத்தியமில்லை என்றனர். நாட்டுக் நாடு புரட்சியின் நடைமுறைகள் வேறுபட்டிருப்பதை விளக்கினார்கள். நவமார்க்சீயத்தின் தோற்றங்களையும் தொட்டார்கள். அவர்கள் அறிந்த அளவுக்கு நாம் அறியவில்லையே என்ற ஆதங்கம் மஜிம்தாருக்குள் அலை மோதியது. முடிவில் பன்னீர்செல்வம் முகத்தில் அடித்த்து போல் விட்டெறிந்த சவால்தான் அவனை இன்னும மோசமாகக் குத்தியது.
‘’நீங்கள் இலங்கையின் அனைத்து இனங்களிலுமுள்ள பாட்டாளி – விவசாய வர்க்கங்களையும் ஒன்றிணைத்து புரட்சி நடத்தி அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு முதல் நாங்கள் தமிழீழம் கண்டு அதன் மூலம் சமதர்ம சமூகத்தை உருவாக்கி விடுவோம்’’
அவர்கள் பிரிவதற்கு முன்பு இந்தோ சிலோன் கபேய்க்கு வந்தார்கள். அங்கிருந்து பிரியும் போது பன்னீர் செல்வம் திடீரெனக் கேட்டான்.

‘’சசியண்ணே, இரவுத் தங்கலுக்கு நான் உங்க ரூமுக்கு வரட்டுமா?’’
வா, வா, ரெண்டு கட்டில்தான் கிடக்கு. மூன்று பேரும் சமாளிப்போம்’’
‘’அந்த நினைவுக்கீற்றுடன் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த மஜிம்தார் தன்னை மறந்து கத்தினான்.
‘’ஹாய் எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்!’’
சைக்கிளில் போகும் சசியைப் பார்த்தான். சசி வெள்ளவத்தை 37ம் குறுக்குத் தெருவில் முடங்கிக் கொண்டிருந்தான். மஜிம்தார் ஊன்றி மிதித்தான்.

மஜிம்தாரின் விலாங்குக் கால்களுக்கு சைக்கிள் போதவில்லை. குழந்தைச் சைக்கிளை மிதிப்பது போலவே பெடலைச் சுற்றினான். அவன் இறுதியாக பேராசிரியரின் வீட்டை அடைந்தபோது சசி மர்மயோகி அரசவையில் கரிகாலன் பாணியில் மண்டபத்தில் நின்றும் திரும்பியும் நடந்தும் பேசிக் கொண்டிருந்தான்.
. . . . நீங்கள்தான். நீங்கள் ஒவ்வொருவருந்தான், அந்தக் கவிதையை எழுதும் படி என்னைத் தூண்டினீர்கள். வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் சனநாயக உரிமைகளைக் கேட்டால் அது வகுப்பு வாதம். தெற்கில் உள்ள இனத் துவேஷத்துக்கு பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த தீக்கோழித்தனந்தான் – இந்த ஒற்றைக்கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுத்த் துண்டியது…’’
‘’இல்லை, எனக்குத் தெரியும். உன்னை யார் அந்தக் கவிதையை எழுத்த் துண்டியதென்று. எல்லாம் அந்த பன்னீர்செல்வத்தின் தொடர்பு….’’
‘’அட, சவமே, பன்னீர்ச்செல்வம் செத்து இப்போது மூன்று மாதம். இவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு பற்றி சிந்திக்க முதலே…. வவுனியாவில் மருதங்குள துப்பாக்கிச் சமரில்….’’
மஜிம்தார் விறைத்து போய் நின்றான்.

Published on December 9, 2012
This entry was posted in சிறு கதை, படைப்புகள் and tagged 2001, முன்றாவது மனிதன் by sivalingam. Bookmark the permalink.