Saturday, 9 January 2016

சாரு நிவேதிதா - ஒரு நேர்காணல். கோபி கிருஷ்ணன் (1945 – 2003) By சாரு நிவேதிதா




சாரு நிவேதிதா - ஒரு நேர்காணல்


(பேட்டி எடுத்தவர்: பிச்சைக்காரன்
சூர்ய கதிர், ஃபெப்ருவரி 2015)
1) ஒரு படைப்பின் கருத்தை விமர்சிக்காமல் படைப்பை உருவாக்கியவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சூழல் அண்மைக் காலமாக பெருகி வருகிறது. நாவலில் கூறப்பட்ட புனைவுகளை உண்மை என நினைப்பதும், உண்மையை கற்பனை என நினைப்பதுமான இந்தப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொதுவாகவே தமிழில் ஒரு நவீன இலக்கியப் படைப்பை எப்படி வாசிப்பது என்பது பற்றிய புரிதலோ முன்மாதிரியோ இங்கே இல்லை. ஐரோப்பிய மொழிகளில் ரீடர் என்று ஒருவித வாசிப்பு அனுபவ நூல் மாதிரி உண்டு. உதாரணமாக, என்னுடைய ராஸ லீலாவில் எக்கச்சக்கமான வெளிநாட்டு நூல்கள், நாம் கேட்டிராத இசை மற்றும் சினிமா பற்றிய குறிப்புகள் உண்டு. அதெல்லாம் என்ன என்பது பற்றி ஒரு சீரிய வாசகர் தனியாக ஒரு நூலே எழுதலாம். அது ராஸ லீலா என்ற பிரம்மாண்டமான புனைவு உலகில் நுழைவதற்கு உதவும். கம்ப ராமாயணம், மகாபாரதம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற பக்தி இலக்கியப் பிரதிகளுக்கு இது போன்ற விரிவுரைகள், வியாக்கியானங்கள் பல உண்டு. நவீன இலக்கியப் பிரதிகளுக்கும் இப்படிப்பட்ட விரிவான மதிப்புரைகள் வரத் தொடங்கினால் நீங்கள் குறிப்பிடும் நிலை மாறும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். நவீன இலக்கியப் படைப்புகளை இந்த இலக்கியத் துறைக்கு வெளியே உள்ளவர்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.  உதாரணமாக, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதைச் செய்யலாம்.  மேற்கில் இப்படித்தான் நடக்கிறது.  ஆனால் இங்கே உள்ள பல பேராசிரியர்களுக்கு சமகால இலக்கியம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஜெயமோகனின் நாவல் பற்றி என்னிடம் கருத்து கேட்கிறார்கள்.  என் சமகால எழுத்தாளர் பற்றி நானே எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  இதுவரை ராஸ லீலாவுக்கு ஒரு மதிப்புரையோ விமர்சனமோ வந்ததில்லை.  அப்படிப்பட்ட சூழலே இங்கு இல்லை. அதை விடுங்கள்.  65 ஆண்டுக் காலமாக எழுதி வரும் அசோகமித்திரன் பற்றி அவரது சமகாலத்தவரான, புகழ் பெற்ற விமர்சகரான வெங்கட் சாமிநாதன் ஒரு நல்ல வார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை. நவீன தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு இது.  ஞானக்கூத்தனை தமிழ் நவீன கவிதையின் உச்சம் என்று சொல்லலாம். ஆனால் அவர் பெயரை கமல்ஹாசன் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரிகிறது.  தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் உண்டாகும் வரை இந்த நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.
2) காமம் என்பது ஒரு தற்காலிக மரணம். இதை உங்களின் சமீபத்திய படைப்பான ‘எக்ஸைல்’ நாவலில் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்தால் காமம் என்பது பிறப்பு என்றும் சொல்லலாம் அல்லவா? ‘எக்ஸைல்’ நாவலில் வரும் அஞ்சலி காமம் மூலமாகவே புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். இதன் மூலம் காமம் என்பது மரணம் மட்டுமல்ல; பிறப்புக்கும் அது காரணமாக அமையும் என்கிற கூற்றும் சரிதானே?
எக்ஸைல் நாவலில் இந்திய வேதாந்த மரபின் அடிப்படையில் பிரபஞ்சம் பற்றிய ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,32,00,00,000 ஆண்டுகள் நமக்கு ஒரு கல்ப காலம். அது பிரம்மாவின் ஒரு பகல்.  ஒரு கல்பம் என்பது நான்கு யுகங்கள்.
சத்ய யுகம் = 17,28,000
த்ரேதா யுகம் = 12,96,000
த்வாபர யுகம் = 8,64, 000
கலி யுகம் = 4,32,000
மொத்தம் 4,32,00,00,000 ஆண்டுகள். பிரம்மாவின் இந்தப் பகல் முடிந்து இரவு துவங்கும் போது மீண்டும் 4.32 பில்லியன் ஆண்டுகள் கழிகின்றன. இப்படியாக பிரம்மாவின் ஒரு நாள் முடிகிறது.
இப்படியாக 100 பிரம்மா ஆண்டுகள். நூறாவது பிரம்மா ஆண்டில் பிரம்மா அழிந்து இரண்டாம் பிரம்மா தோற்றம் எடுக்கிறது.
இந்தக் கணிதங்களை முறைப்படுத்தியவர் ஆர்யபட்டா. தற்போதைய கலியுகம் கி.மு. 3102-ஆம் ஆண்டில் துவங்கியது.
எந்தச் சிந்தனையும் இல்லாமல் மேற்கண்ட எண்களால் சொல்லப்படும் காலம் என்பதை தியானியுங்கள். அது உங்களை எங்கே அழைத்துச் செல்கிறதோ அதே இடத்துக்கு அழைத்துச் செல்வது கலவி.
பூமியே… ஒரு தாய் தன் பிள்ளையை அணைத்துக் கொள்வது போல் இந்த மானிடனை நீ அரவணைத்துக் கொள் என்பதாக ரிக் வேதத்தின் பத்தாம் பகுதியில் ஒரு சுலோகம் வருகிறது. இதேபோல் அக்னிக்கும் ஒரு பிரார்த்தனை… காற்றுக்கும் ஒரு பிரார்த்தனை.
கலவியில் மரணத்தை அளிப்பவள் இன்னொரு தாய். கலவியில் ஜனனத்தை அளிப்பவளும் அவளே.
இது எக்ஸைல் என்ற நாவலின் பல பரிமாணங்களில் ஒன்று. இதைக் கண்டு பிடித்த உங்களுக்கு என் நன்றி.
3) பாரம்பரியம், இயற்கை, சுற்றுச் சூழல், மொழி, வனவிலங்குகள் என எதைப் பற்றியும் சுரணை அற்ற தமிழனைப் பற்றி உங்கள் ‘எக்ஸைல்’ நாவலில் காண முடிகிறது. இந்த சுரணையற்ற தன்மை தமிழர்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது உலகளாவிய மற்ற இனத்தவர்க்கும் பொதுவானதா?
நீங்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர் என்றால் உங்களுக்கு உரிய இடம் இந்தியா அல்ல; ஐரோப்பா என்றால் நம்ப முடிகிறதா? ஐரோப்பியர்கள் மாமிச உணவு உண்பவர்கள். ஆனால் சைவ உணவு என்றால் அங்கே நூறு விதமான உணவுப் பொருட்கள் உண்டு. சீஸ் கட்டிகளில் கூட நூறு விதம் உண்டு. பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளில் நூறு விதம் உண்டு. காய்கறிகளிலும் அப்படியே.
மரங்களை அவர்கள் வணங்குவதில்லை. ஆனால் மரங்களை வெட்டினால் அது கொலைக்குச் சமமாக எண்ணுகிறார்கள்.  அங்கே ஒவ்வொரு ஊருமே ஒவ்வொரு வனம் மாதிரி தான் இருக்கிறது. மொழியையும் அவர்கள் வணங்குவதில்லை; ஆனால் (தாய்) மொழி தெரியாதவனை அங்கே மனிதனாகவே மதிப்பதில்லை. வாழ்த்துப் பாடல் பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முட்டாள்தனம் அவர்களிடம் இல்லை. ஆனால் – உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஃப்ரான்ஸை எடுத்துக் கொள்வோம் – ஃப்ரெஞ்ச் மொழி தெரியாவிட்டால் நீங்கள் அங்கே எந்தக் கல்வி நிலையத்திலும் படிக்க முடியாது. ஃப்ரெஞ்ச் தெரியாவிட்டால் நீங்கள் அங்கே டூரிஸ்டாக மட்டுமே சுற்றலாம். மற்றபடி  உங்களுக்கு அங்கே எந்த இடமும் கிடையாது.  நீங்கள் ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கணவர் ஃப்ரான்ஸில் வேலை பார்க்கும் இந்தியர்.  நீங்கள் ஃப்ரெஞ்ச் மொழியில் சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் ஃப்ரான்ஸில் உங்களுக்கு இடம் கிடையாது. இந்தியாவுக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான். இந்திய மனைவிமார்கள் விழுந்து விழுந்து ஃப்ரெஞ்ச் படிப்பதை அங்கே நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நம்மைப் போல் பெட்ரோலை அல்லது மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிப்பதில்லை, ஃப்ரெஞ்சுக்காக.
தமிழ்நாட்டில் மட்டுமே எதைப் பற்றியுமே கவலை இல்லாத பொறுப்பற்ற தன்மையைப் பார்க்கிறோம். ஐந்து மாணவ மாணவிகளை ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று மூன்று பிள்ளைகளைக் கொன்று தானும் செத்தவன் இந்த உலகிலேயே தமிழன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்.
4) ‘எக்ஸைல்’ நாவலில் மனிதர்களுக்கு நிகராக மீன்கள், நாய், மரம் போன்றவையும் மனதில் நிற்கின்றன. யானையையும் மறக்க முடியவில்லை. இது திட்டமிட்டு அமைக்கப்பட்டதா? மேலும், ‘எக்ஸைல்’ நாவலின் பல பக்கங்கள் பாமரத் தமிழனுக்கு புரியும்படியான எழுத்து நடையில் இல்லையே? என்ன காரணம்?

திட்டமிட்டே செய்தேன். எக்ஸைலை என்னுடைய மற்ற நாவல்களைப் போல் பாமரர்களும் வாசிக்க இயலாது. எக்ஸைலுக்குள் நுழைய சற்று இலக்கியப் பரிச்சயம் தேவை. அந்த நாவலின் கரு அப்படி. எல்லா எழுத்துமே எல்லோருக்கும் புரியும்படியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
5) ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிற நம் பண்பாடு விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக விற்கும் பண்பாடாக எப்படி மாறியது?
தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகள் இன்று எப்படி சீரழிவின் அடையாளங்களாக மாறிப் போனதோ அப்படியே தமிழ்நாடும் தனது தொன்மையை இழந்து பணம், அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் போய் சீரழிந்து விட்டது. சினிமாவும் தொலைக்காட்சியும் அந்தச் சீரழிவை துரிதப்படுத்தி வெற்றி கண்டு விட்டன. இன்றைய தமிழ்நாட்டை தொன்மை நாகரீகத்தின் சீரழிவின் குறியீடாகச் சொல்லலாம்.
6) ‘‘வறுமையில் வாழ்ந்துள்ளேன். சாக்கடையில் வாழ்ந்ததில்லை,’’ எனச் சொல்லும் நீங்கள், ‘‘நான் வாழ்ந்த பகுதி இப்போது சாக்கடையாக மாறிவிட்டது’’ என சொல்லி இருப்பீர்கள். இதற்குத் தீர்வாக எதை முன் வைக்கிறீர்கள்?
தீர்வை எந்த எழுத்தாளனும் சொல்ல முடியாது. நோயை சுட்டிக் காட்டுவதே அவன் வேலை. நோய்மையின் மருந்தைத் தேட வேண்டியது ஒரு சமூகத்தின் கடமை.
7) சாரு என்றால் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் மட்டுமே படைப்பார். முழுக்க முழுக்க ஒரு நாவலில் புனைவு எழுத மாட்டார் என்கிற விமர்சனம் பரவலாக உள்ளது. இதை மாற்றி, முழுக்க முழுக்க ஒரு புனைவு நாவல் எழுதும் திட்டம் இருக்கிறதா?
அதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாகாது. நேற்றைய தினசரிகளிலிருந்து கச்சாப் பொருளை எடுத்து கதை எழுதுவதில் ஆழம் இல்லை என்று எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நேற்று என்பது என்ன? காலம் என்ற நேர்க்கோட்டில் இன்று என்ற புள்ளியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுக்கு வேண்டுமானால் நேற்று என்பது மிகச் சமீபத்திய விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தரைவெளியிலிருந்து மேலே இருந்து பார்க்கும் கலைஞனுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாரதமும் ஒன்றுதான்; நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஐந்து மாணவர்களை அழைத்துச் சென்று கொன்றவனின் கதையும் ஒன்றுதான். மேலே பறக்கும் கலைஞனுக்கு எல்லாமே புள்ளிகள் தான். பிரம்மாவைப் போன்றவன் எழுத்தாளன். மனிதக் கணக்குகளெல்லாம் அவனுக்கு ஒரு தூசு.
இந்த நிலையில் கதையில் வரும் நான் என்பது இன்றைய சாரு நிவேதிதாவாக இன்றைய வாசகனுக்குத் தெரியலாம். தப்பில்லை. ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பின்னே வரும் ஒரு வாசகன் அந்தப் பிரதியையும் அதில் வரும் ”நான்”-ஐயும் எப்படி எதிர்கொள்வான் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்.
மேலும், நான் மட்டுமே சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளை உருவாக்குகிறேன் என்று சொல்வது தவறு. எனக்கு முன்னே இது போல் எழுதியவர்களில் முதன்மையானவர் க.நா.சு.  அவருடைய நாவல்கள் அனைத்திலும் அவர் ஒரு எழுத்தாளராகவே வருகிறார்.  ஒரு நாவலில் அவர் பெயரே க.நா.சு.  அதே நாவலில் தி. ஜானகிராமனும் தி. ஜானகிராமன் என்ற பெயரிலேயே வருகிறார். அந்த வரிசையில் நகுலன், கோபி கிருஷ்ணன் போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனாலும் ஒரு மாற்றம் வேண்டி, ‘நான்’ இல்லாத வேறொரு கதையை எழுத இருக்கிறேன். அதற்கான தயாரிப்பு தான் வரும் ஆறு மாதம்.
8) உங்களை ஏன் பெரும்பாலான எழுத்தாளர்கள் புறக்கணிக்கிறார்கள். உங்களின் நண்பர்களும் இதில் அடங்குவர். இந்தப் புறக்கணிப்பு திட்டமிட்டுச் செய்யப்படுகிறதா?

தமிழ் வாசகரின் வழிபாட்டுக்குரிய எழுத்து நாயகர்கள் சுந்தர ராமசாமியும் புதுமைப்பித்தனும். அவர்கள் இருவரையுமே நான் ஆரம்பத்திலிருந்தே மறுதலித்து வந்தவன்.  என்னுடைய முதல் நாளிலேயே தமிழ் இலக்கியத்தின் இரண்டு பெரிய புனித பீடங்களை உடைத்து நொறுக்கினேன்.  இப்படியாக, தமிழில் எழுதும் அத்தனை பேரின் வழிபாட்டு நாயகர்களை உடைத்து நொறுக்கிய ஒருவனை அவர்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்? மேலும், அவர்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு விஷயத்தையே நான் எப்போதும் பேசியபடி இருக்கிறேன். முன்பு இளையராஜா. இப்போது பெருமாள் முருகன். எனவே அவர்கள் என்னைப் புறக்கணிப்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.
9) ஜேஜே சில குறிப்புகளை போலி நாவல் எனக் குறிப்பிட்டு, அதை விளக்கும் பொருட்டு நீங்களே தனியாக புத்தகம் வெளியிட்டீர்கள். அதே போல ஜி.நாகராஜனையும் புறக்கணிக்கிறீர்கள். இவர்கள் எழுத்தில் இருக்கும் போலித்தனத்தை இன்றைய வாசகர்களுக்கு சுருக்கமாக விளக்க முடியுமா?
ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள். ஒரு தங்க ஆபரணத்தையும் கவரிங் நகையையும் எப்படி அடையாளம் காண்பீர்களோ அதைப் போன்றதுதான் இலக்கியத்தில் நிஜமான படைப்பையும் போலியையும் அடையாளம் காண்பதும். ஒரு கால் நூற்றாண்டில் ஜேஜே சில குறிப்புகள் காணாமல் போய் விட்டது. ஆனால் என்னுடைய ஸீரோ டிகிரி எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் சர்வதேசப் பரிசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆங்கிலக் கட்டுரைக்குக் கீழும் என்னைப் பற்றிய அறிமுகத்தில் ”His magnum opus, Zero Degree, is considered one of the best in transgressive fiction” என்றே எழுதுகிறார்கள். இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. தமிழின் பிற நாவல்கள் இப்படிச் சென்றிருந்தால் முதலில் பெருமைப்படுபவன் நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால், என்னை விட தமிழையே நான் அதிகம் நேசிக்கிறேன்.
ஜி. நாகராஜன் விளிம்பு நிலை வாழ்க்கையை romanticize செய்து எழுதியவர். அதில் உண்மை இல்லை. ஒரு பிராமணன் அந்த விளிம்பு நிலை மனிதர்களைப் பார்த்து ஆஹா ஓஹோ என்று வியப்பது மட்டுமே அவருடைய எழுத்தில் காணக் கிடைக்கிறது. ஒரு விளிம்பு நிலை மனிதன் அந்த வாழ்க்கையை எழுதினால் அது நாகராஜனின் எழுத்தைப் போல் இருக்காது. தஞ்சை ப்ரகாஷின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஜி. நாகராஜனை இங்கே எந்த அடிப்படையில் கொண்டாடுகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நாளை மற்றுமொரு நாளே என்ற அவருடைய நாவல் எனக்கு சில அசட்டுத் தமிழ் சினிமாப் படங்களை ஞாபகப்படுத்துகிறது.  இலக்கியத்திலும் கூட போலிகள் ஜொலிக்க அசல்கள் காணாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை தான் நிலவுகிறது.  தஞ்சை ப்ரகாஷின் பெயர் சொல்ல இங்கே ஆள் இல்லை;  ஆனால் ஜி. நாகராஜன் வழிபாட்டுக் கடவுளாகவே மாறி விட்டார்.
10) எழுத்தாளனை சமூகம் மதிப்பதில்லை என்கிறீர்கள். ஆனால் எழுத்தாளனுக்குத்தான் அதிக தோழிகள் கிடைக்கின்றனர். இதன் உளவியல் என்ன?
சவலைப் பிள்ளையைத்தான் தாய்க்குப் பிடிக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதுதான் பெண்களுக்குக் கருணை பிறக்கும். அது தாய்மைக் குணம். காதலியும் தோழிகளும் எனக்குத் தாய் போன்றவர்களே. கருணையின் ஊற்றை பெண்ணின் கண்களிலேதான் என்னால் காண முடிகிறது.
11) படைப்புகளுக்கான விருதுகள் குறித்து உங்கள் பார்வை?
ஐம்பது லட்சம் ரூபாய்க்குக் குறைவான தொகை கொண்ட எதையும் நான் விருதாகவே கருதவில்லை. ஏனென்றால், என் நண்பர் ஒருவர் ஒரு மேட்ரிமனி நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதச் சம்பளம் ஐந்து லட்சம். வேலை செய்யும் இடம் அமெரிக்கா அல்ல. சென்னை. இந்தச் சூழ்நிலையில் ஒரு படைப்பாளிக்கான விருதுத் தொகை ஐம்பது லட்சம் என்பதுதானே நியாயம்?
மற்றபடி இந்திய விருதுகள் எல்லாமே நான்சென்ஸ். சமீபத்தில் டி.எஸ்.ஸி. விருது பெற்ற ஜும்ப்பா லஹரியின் நாவலைப் போன்ற நாவல்கள் தமிழில் 200 உண்டு. விருதுகள் தகுதி அடிப்படையில் கொடுக்கப் படுவதாகத் தோன்றவில்லை.
12) எழுத்தாளர்கள் பலர் சினிமாவில் இறங்கி வருகிறார்கள். சாருவை எப்போது சினிமாவில் எதிர்பார்க்கலாம்?
கௌதம் மேனனுடன் ஒரு படத்தில் வேலை செய்தேன். படம் வெளிவராமல் போனாலும் ஆறு மாத வேலை. அந்தச் சமயத்தில்தான் அவருடைய தயாரிப்பில் தங்க மீன்கள் என்ற படம் வெளிவந்தது. அப்போது கௌதம் கடுமையான பணப் பிரச்சினையில் சிக்கியிருந்தார். வழக்கு அது இது என்று பெரிதும் மன உளைச்சல். தங்க மீன்களைப் பார்த்தேன். மிகக் கொடுமையான சமூக விரோதமான கருத்துக்களையும், குழந்தைகளின் நலன்களுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டிருந்த அந்தப் படத்தை பத்திரிகைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடின. கௌதமின் பெரும் பணம் அந்தப் படத்தில் இருந்தது. அவரோ கடுமையான பணச் சிக்கலில் இருந்தார். தங்க மீன்களோ சமூக விரோதக் கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் ஆபத்தான படம்.
என் வாழ்க்கையில் செய்த முதலும் கடைசியுமான சமரசம் அந்த சமூக விரோதப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதவில்லை என்பதுதான்.
ஒரு படத்துக்கே இப்படி என்றால் நான் சினிமாவில் நுழைந்தால் என் தர்மமும் அறமும் என்னாவது? அஞ்சு பத்து லட்சத்துக்கு என் நேர்மையையும் அறத்தையும் விற்க முடியாது. என் உயிரை விட மேலானது என் தர்மம்; என் நேர்மை. அதை என் கால் தூசை விடக் கீழான காசுக்காக என்னால் விற்க முடியாது என்பதை அந்தச் சம்பவத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.
படத்துக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு துறையில் முழுமையாக உங்களை சமரசத்துக்கு உள்ளாக்கிக் கொள்வது என்பதே ஆகும். விஸ்வரூபம் படத்துக்கு மிக மிகக் கடுமையாக விமர்சனம் எழுதிய ஜெயமோகன் ஐந்து மணி நேரத்தில் அந்த விமர்சனத்தை எடுத்து விட்டதைக் கொண்டு இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்தப் படம் முஸ்லீம்களை மிக மோசமாக அவமதிக்கிறது என்ற என் கருத்தையேதான் ஜெயமோகனும் அவரது விமர்சனத்தில் எழுதியிருந்தார்.
ஆனால் எனக்குப் பணத் தேவை இருக்கிறது.  மிகக் கடுமையாக இருக்கிறது.  என் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பணம் வேண்டும்.  அது என் எழுத்தின் மூலம் கிடைக்காது.  சினிமாவில் நுழைந்தால் பணம் கிடைக்கும்.  ஆனால் அதற்காக என்னையே சினிமாவுக்கு விற்க எனக்குச் சம்மதம் இல்லை.  மேலும், என் சினிமா விமர்சனங்களை வாசித்த இயக்குனர்கள் யாருமே என்னை வசனம் எழுத அழைப்பார்கள் என்று தோன்றவில்லை.  எந்த மனிதனுக்குமே comfort முக்கியம் இல்லையா?  என்னைப் போல் உண்மையை உரத்துச் சொல்லக் கூடிய ஒருவனால் சௌகரியம் கிடைக்குமா?  ஒரு ஞானியை அருகில் வைத்துக் கொண்டு உங்களால் கசாப்புக் கடைக்குப் போக முடியுமா சொல்லுங்கள்?  எழுத்தாளன் என்பவன் ஒரு ஞானியைப் போன்றவன்.  பணம், புகழ், அதிகாரம் போன்ற எதற்குமே மயங்கக் கூடாதவனாக இருப்பவனே எழுத்தாளன்.  இந்த வகையில் சி.சு. செல்லப்பா, க.நா.சு., தருமு சிவராமு என்ற சென்ற தலைமுறையைச் சேர்ந்தவனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன்.  என் அறம் நெருப்பைப் போன்றது.  இந்த நெருப்பை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு எனக்கும் முன்னே செல்வதற்கு ஏராளமான இளைஞர்கள் இப்போதும் உண்டு என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
13) யூதாஸ் குறித்து நாவல் ஒன்று எழுதப் போவதாக சொல்லியிருந்தீர்கள்.  அடுத்த நாவல் அதுதானா?
அது என்னுடைய திட்டங்களில் ஒன்று. அடுத்த நாவல் எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. Parricide என்ற விஷயத்தை வைத்து எழுதலாம் என்று இருக்கிறேன்
கோபி கிருஷ்ணன் (1945 – 2003)


By சாரு நிவேதிதா

www.dinamani.com
First Published : 10 January 2016 10:00 AM IST


சே குவேராவின் சாகசமான வாழ்க்கை இன்று உலகம் பூராவும் பிரசித்தம். அதேபோன்ற சாகச வாழ்க்கையைப் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், ஓவியர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். எழுத்தாளர்களில் ஆர்த்தர் ரேம்போ (Arthur Rimbaud), தாஸ்தயேவ்ஸ்கி, அலெக்ஸாண்டர் சோல்ஷெனிட்ஸன், வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பர்க், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, கேத்தி ஆக்கர்; ஓவியர்களில் வான்கோ; இசைக் கலைஞர்களில் அநேகமாக எல்லோரையுமே சொல்லலாம். அனைவரிலும் பார்க்க ஆர்த்தர் ரேம்போவின் வாழ்க்கை சாகச சினிமாக்களையும் மிஞ்சக் கூடியதாக இருக்கிறது.


தமிழ் எழுத்தாளர்களில் சாகசங்களைக் கொண்ட வாழ்க்கை கவிஞர் விக்ரமாதித்யனுடையது. பலரும் ஜி. நாகராஜனைச் சொல்வார்கள். நாகராஜனின் வாழ்வில் நான் காண்பது வெறும் உயர்சாதித் திமிர் மட்டுமே. சாதித் திமிரும் ஆணவமும் கொண்டு அலைவது சாகசம் அல்ல. கேரளத்தில் ஒரு பஸ்ஸில் ஏறிவிட்டு ‘நான் ஒரு எழுத்தாளன்; எனக்கு முன்சீட்டில் இடம் கொடு’ என்று கண்டக்டரோடு அடிபிடி சண்டை போடுவதன் பெயர் சாகசமா? அது ரவுடித்தனம். ‘என் தொழிலில் நான் வஸ்தாத். எனக்கு நீ சலாம் போடு’ என்ற மனோபாவத்தையே ஜி. நாகராஜன் சம்பந்தப்பட்ட அத்தனை சம்பவங்களிலும் காண்கிறேன். மேலும், அவர் ஒன்றும் அவருடைய தொழிலில் வஸ்தாத் அல்ல; அவர் எழுதிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவரும் பாரதிராஜாவின் பாடல் காட்சிகளில் வரும் கிராமங்களோடு பொருந்தக் கூடியவர்கள். நிஜத்துக்கும் நாகராஜன் காட்டும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் விக்ரமாதித்யனின் சாகச வாழ்க்கை தன்னையே அழித்துக்கொண்டு அந்த அழிவிலிருந்து மனித வாழ்வையும் தன்னையும் பார்த்தது.


விக்ரமாதித்யனின் அற்புதமான கவிதை ஒன்று இது:

ரத்தத்தில்
கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்கநேர்கிறது எனக்கு

சோரம்
தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறுவாங்கித் தின்னநேர்கிறது எனக்கு

திருடிப்
பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு

கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத்திரிய நேர்கிறது எனக்கு

காட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு

பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதா சாபம் கவியாதா


தமிழ் தெரிந்த அத்தனை பேரும் வாசித்துக் கொண்டாட வேண்டிய கவிஞன் விக்ரமாதித்யன்.

மேலே உள்ள கவிதையில் கண்டது போல் சாகசம் ஒருவரின் வாழ்வில் நிகழ்வதற்கு ஈடாக அது அவரது வாழ்வையே பலியாகக் கேட்கிறது. அந்தப் பலியைத் தருவதற்கு விக்ரமாதித்யனைத் தவிர வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் தயாராக இல்லை. காரணம், ஒரு வேசியிடம் தன் காதை அறுத்துக் கொடுத்து விட்டு வரக் கூடிய சூழல் இங்கே எந்த எழுத்தாளனுக்கும் கிட்டியதில்லை. வேசியை நேரில் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பு கிட்டிய எழுத்தாளர்களே ஒன்றிரண்டு பேர்தான் இருக்கக் கூடும். தமிழ் எழுத்தாளனின் சுமைகள் அதிகம். பிழைப்புக்காக குமாஸ்தா வேலையும் பார்த்துக்கொண்டு, மத்தியதர குடும்பத்தின் பிச்சுப் பிடுங்கல்களோடு எழுதுவதே பெரிய சாகசமாக இருக்கும்போது நிஜமான சாகசத்துக்கு அவன் எங்கே போவான், பாவம்?


இன்னொரு விஷயம், சாகசம் நிகழ்த்துவதற்கு ஒரு குழந்தையின் எளிமையான மனநிலை தேவை. தமிழ் எழுத்தாளனோ புத்திஜீவியாகவும் இருக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் நிற்பவன். அவனால் எப்படி ஒரு வேசியிடம் காதை அறுத்துக் கொடுக்க முடியும்? காதை அவள் கேட்டால் அதன் சாதக பாதகங்களைப் பற்றி அவன் யோசிக்க ஆரம்பித்துவிடுவான்.


அதனால்தான் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை விடவும், கலைஞர்களை விடவும் ஒரு சராசரி மனிதன் சாகசங்களை நிகழ்த்தக் கூடியவனாக இருக்கிறான். தன்னை நேசிக்காத பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசுவது (சாகசம் செய்ய ஹீரோவாக மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன?), காதலுக்காகத் தற்கொலை செய்து கொள்வது, அரசியல் தலைவருக்காக நாக்கை அறுத்து திருப்பதி உண்டியலில் போடுவது, அரசியல் தலைவர் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்குச் சென்றால் தீக்குளிப்பது போன்ற எல்லாமே சாகசச் செயல்கள்தான். நாக்கை அறுத்து உண்டியலில் போட்டால் அது தினசரியில் செய்தி. அதே செயலை ஒரு கலைஞன் செய்யும்போது அவன் தன்னுடைய கலையின் மூலம் அந்தச் செயலை மனித குலத்துக்கான கலாசிருஷ்டியாக மாற்றி விடுகிறான். மனப்பிறழ்வு கொண்டவனுக்கும் அதே மனப்பிறழ்வை கலையாக மாற்றுபவனுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.


கோபி கிருஷ்ணன்





இப்படியாக, சாகசங்கள் ஏதுமற்ற தமிழ் எழுத்துச் சூழலில் விக்ரமாதித்யனுக்கு அடுத்தபடியாக சாகசங்களையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் கோபி கிருஷ்ணன். 1995-லிருந்து 2003-ல் மரணம் அடையும் வரை கோபியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. நான் அப்போது சின்மயா நகரில் இருந்தேன். அவர் வீடு பாடியில் இருந்தது. நினைத்துப் பார்க்கவே முடியாத வறுமையான சூழல். மாதம் ஒருமுறை நானும் அவரும் சந்திப்போம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா திரையரங்குக்கு அருகில் உள்ள பூத் பங்களாவைப் போல் தோற்றமளிக்கும் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் எனக்கு வேலை. அங்கே என்னைப் பார்க்க வருவார் கோபி. அலுவலக சூழலில் என்னால் சரியாகப் பேச முடியாமல் போகும். அடுத்த நாளே அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்குப் போவேன். காலை பத்து மணியிலிருந்து மாலை வரை அவர் வீட்டிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஒரு மணிக்கு ஒருமுறை வெளியே வந்து ரோட்டோரத்தில் இருக்கும் டீக்கடைக்கு வருவோம். நான் மட்டும் அந்த ஐந்து மணி நேர இடைவெளியில் ஒரே ஒருமுறைதான் டீ குடிப்பேன். அவருக்கு அங்கே மாதாந்திரக் கணக்கு இருந்தது. என்னைக் காசு தர அனுமதிக்க மாட்டார். அவர் மனைவி ஏதோ ஒரு பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். நான் போகும்போது அவர் மனைவி பணிக்கும், மகள் பள்ளிக்கும் சென்றிருப்பார்கள். அப்படி நான் கோபியை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் காலையிலிருந்தே தண்ணீர் குடிக்காமல் வயிற்றைக் காலியாக வைத்துக் கொண்டுதான் செல்வேன். காரணம், அவருடைய வீடு ஒரு ஒண்டுக் குடித்தனம். நாலைந்து குடும்பங்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் இருந்தது. அதுவும் ஒருவர் நிற்கக் கூடிய அளவில்தான் இருக்கும். உட்கார்ந்தால் பின்புறம் இடிக்கும். அதை விடக் கொடுமை, கழிப்பறையின் வாசலில் இன்னொரு குடும்பத்தின் புழங்குமிடம் இருக்கும். அங்கே இரண்டு பெண்கள் கதை பேசிக் கொண்டோ அரிசி களைந்து கொண்டோ இருப்பார்கள். இந்தக் காரணத்தினாலேயே நான் கோபி வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் தண்ணீரோ தேநீரோ அருந்துவதில்லை. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் வழக்கமுள்ள நான் ஐந்தாறு மணி நேரம் கழிப்பறை செல்லாமலேயே கோபியோடு பேசிக் கொண்டிருப்பேன். காற்றே புக முடியாத ஒரு சிறிய அறைதான் வீடு. இதெல்லாம் இந்தியா முழுவதும் உள்ள விளிம்பு நிலை மனித வாழ்க்கைதானே, இதில் எங்கே சாகசம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வருகிறேன். கோபி அப்போது ஒரு பதிப்பகத்தில் பிழை திருத்துபவராக வேலை செய்து கொண்டிருந்தார். 12 மணி நேர வேலை. தினக் கூலி மாதிரி. நாங்கள் சந்திக்கும் நாள்களில் விடுப்பு எடுத்து விடுவார். ஒருநாள் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சொன்னார். ஏனென்று கேட்டால், ‘முதலாளி ஒரு அடிமட்டத் தொழிலாளியை மட்டமாக நடத்தி விட்டார். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அப்படி நடத்தலாமா? உடனே ராஜினாமா கடுதாசி கொடுத்துவிட்டேன். இதோ பாருங்கள். அதன் கார்பன் காப்பி’ என்று எடுத்துக் கொடுத்தார். முப்பது பக்கங்கள் இருந்தன ராஜினாமா கடிதம்! மார்க்ஸ் எங்கெல்ஸிருந்தெல்லாம் மேற்கோள் காட்டியிருந்தார். ஐந்தரை அடி உயரத்தில் ஒரு குழந்தையைக் கற்பிதம் செய்து கொள்ளுங்கள். அதுதான் கோபி கிருஷ்ணன். இப்படி பல ராஜினாமா கடிதங்கள். பட்டினிகள். மனப்பிறழ்வு. தற்கொலை முயற்சிகள். மனநல மருத்துவமனையில் சிகிச்சை. மாத்திரைகள். சிகரெட். தேநீர். தேநீர். தேநீர். இதுதான் கோபி கிருஷ்ணனின் சாகசம். மிகப் பெரிய உத்தியோகங்களைக் கூட இம்மாதிரி காரணங்களுக்காக ராஜினாமா செய்திருக்கிறார். அதிலும் அவர்கள் கோபியை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக மதித்து நடத்திய போதிலும், பல சித்தாந்தக் காரணங்களுக்காக வேலையை விட்டு விடுவார். சித்தாந்தம் என்ன தெரியுமா? அந்த அலுவலகத்துக்கு ஒரு பாம்பு வந்தது. பாம்பை அடித்து விட்டார்கள். அடிக்கலாமா? இந்த உலகில் நம்மைப் போலவே பாம்புக்கும் வாழும் உரிமை இல்லையா? வேலையை விட்டு விட்டேன். இதோ பாருங்கள் ராஜினாமா கடிதத்தின் கார்பன் நகல். அது, இந்த உலகில் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ உரிமை உண்டு என்பது பற்றிய ஒரு manifesto-வாக இருக்கும்.


கோபி கிருஷ்ணனின் நேர்காணல் ஒன்றை யூமா வாசுகி எடுத்திருக்கிறார். அதில் உள்ள பல விஷயங்களை கோபி ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்ற தன்னுடைய நாவலில் எழுதியிருக்கிறார். ‘உள்ளே’ என்பது ஒரு மனநோய் மருத்துவமனை. அங்கே உள்ள நோயாளிகளில் ஒருவராக கோபியும் இருந்திருக்கிறார். கதையில் வரும் ‘அவன்’ யூமா வாசுகியின் நேர்காணலில் ‘நான்’ ஆக மாறுகிறது.


23 ஆகஸ்ட் 1945-ல் மதுரை ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் அருகில் பிறந்தார் கோபி. கோபியின் தாய்மொழி சௌராஷ்டிரம். படித்தது மதுரை சௌராஷ்டிரா ஹைஸ்கூல். சௌராஷ்டிரர்கள் அப்போது தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். தாத்தா சுப்பையர் சுதந்திரப் போராட்ட தியாகி. நிலம் நீச்சுடன் வசதியாக வாழ்ந்தவர், கதர்க் கடை வைத்து தோற்று, கடைசியில் மனநிலை சரியில்லாமல் போனார். தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார். கடைசியில் குணசீலத்தில் சேர்க்கப்பட்டார். ஒரு மண்டலம் குணசீலத்தில் தங்கி வீட்டுக்கு வந்தவர் உடனே இறந்து போகிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம் போல் மனநோய் என்பதும் பரம்பரையாக வருவதுதான். தாத்தாவின் மனநோயைப் பார்த்து கோபிக்கு மனநலம் சார்ந்த ஈடுபாடு வருகிறது. 1962-லிருந்து 1965 வரை சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் சைக்காலஜி படிக்கிறார். குடும்பத்தில் கடும் வறுமை. ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டீ ஷர்ட்டோடுதான் மூன்று ஆண்டுகளும் கல்லூரியில் படிக்கிறார் கோபி.


‘இறுதியாண்டு படிக்கும்போது என்.எம். பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி. மதியச் சாப்பாடு கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காப்பி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடு மாதிரி. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன். அதோடு சரி.’


படிப்பு முடிந்த பிறகு பல்வேறு வேலைகளைச் செய்கிறார். அதில் ஒரு வேலை, அரசு மருத்துவமனையில் அவயவங்கள் புனர்வாழ்வு மையத்தில் கிடைத்தது. அங்கே நர்ஸாக வேலை பார்த்த பெண்ணைக் காதலிக்கிறார். அவள் ஏற்கனவே விவாகரத்தானவள். கணவனைத் தவிர வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததே விவாகரத்துக்குக் காரணம். அந்தப் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் கொடுக்கிறார் கோபி. மிகவும் கொச்சையான பாலுணர்வுக் கடிதம் அது. அதை அந்தப் பெண் மருத்துவமனையில் உள்ள அனைவரிடமும் காண்பித்து விட்டது போல் மனப்பிரமை கொள்கிறார். அதுவே அவரது முதல் மனப்பிறழ்வு ஆகிறது. காதுகளில் ‘நீ மோசமானவன். பச்சையானவன். அருவருப்பானவன். காமுகன். அசிங்கமானவன்’ என்றெல்லாம் குரல்கள் தொடர்ந்து கேட்கின்றன. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலை இங்கே நினைவு கூரவும். டாக்டர் தைரியம் என்ற சைக்கியாட்ரிஸ்டை சந்தித்து அவர் கொடுத்த மாத்திரைகளை உட்கொள்கிறார். பிறகு டாக்டர் சாரதா மேனனைப் பார்க்கிறார்.


பிறகு தன்னுடைய பழைய தோழியான ஒரு கிறித்தவப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அதன் பொருட்டு கிறித்தவராகவும் மாறுகிறார். 12.7.72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம். பெண்ணுக்கு ராமநாதபுரத்தில் வேலை. கோபி சென்னையில். மாதம் ஒருமுறை ராமநாதபுரம் போவார். ஏற்கனவே கோபிக்கு இருந்த மனப்பிறழ்வுக்காக அவர் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்க, அது பற்றி மனைவி விசாரிக்கிறார். கோபி காரணம் சொல்லவில்லை. அந்த மாத்திரையே அவர்களுக்குள் பெரும் பிரச்சினை ஆகிறது. ஒருநாள் 17 மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயல்கிறார் கோபி. பிழைத்துக் கொள்கிறார். பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு டாக்டருடன் உறவு ஏற்படுகிறது. ‘நீ யாரிடம் வேண்டுமானாலும் பழகிக் கொள். ஆனால் தயவுசெய்து அவர்களைப் பற்றி என்னிடம் சொல்லாதே’ என்கிறார் கோபி. வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறது. திருமணம் முதல் ஆண்டு முடிந்து நான்கு நாள்களுக்குப் பிறகு நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்து, வீட்டில் குடித்தால் தண்ணீர் குடிக்கும் ஓசையில் மனைவி எழுந்து கொண்டு விடலாம் என்று கக்கூஸுக்குப் போய் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு அந்த மாத்திரைகளை விழுங்குகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது கிட்னி முழுவதுமாக செயலிழந்து விட்டதாகவும் மரணம் தவிர்க்க முடியாது என்றும் சொல்கிறார் மருத்துவர். மருத்துவமனையில் அவரைப் பார்க்க வந்த மாமியார், ‘எங்களைக் கேவலப்படுத்தி விட்டாய். உன்னை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று கன்னாபின்னாவென்று கத்தி ரகளை செய்கிறார். அப்போது அவரைப் பார்க்க வரும் மனைவி அவருக்கு எதிரிலேயே தன் காதலனான டாக்டருடன் கொஞ்சிக் குலாவுவதைப் பார்க்கிறார் கோபி. தன்னை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என்று அவளிடம் சொல்லி விடுகிறார். அதோடு அந்த அத்தியாயம் முடிகிறது. அன்றோடு Largactyl மாத்திரை உட்கொள்ளுவதையும் நிறுத்தி விடுகிறார். இது நடந்து நான்கு மாதங்கள் சென்று கோபியின் மனைவியும் அவரோடு தொடர்பில் இருந்த மருத்துவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதில் பெரிய நகைமுரண் என்னவென்றால், அதுவரை கோபி தன் மனைவி பற்றிச் சொன்னவையெல்லாம் Schizophrenic paranoid என்று கருதி மனநல மருத்துவர்கள் அவருக்கு மனநல மாத்திரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!

கோபியின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க எனக்கு ஆர்த்தர் ரேம்போவின் வாழ்க்கையே நினைவுக்கு வருகிறது. முக்கியமாக ரேம்போவும் அவரது காதலர் வெர்லேனும் அப்ஸிந்த்தையும் ஹஷீஷையும் உபயோகித்த நாள்கள். அப்ஸிந்த் என்ற மது அப்போது உலக அளவில் கலைஞர்களிடம் பிரபலமாக இருந்தது. அந்த மது மூலிகைகளால் தயாரிக்கப்பட்டாலும் 74 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளதால் அதிகம் குடித்தால் உடனடியாக மரணத்தைக் கொடுக்கக் கூடியது.


(தொடரும்)

கோபி கிருஷ்ணன் – பகுதி 2


By சாரு நிவேதிதா

First Published : 17 January 2016 10:00 AM IST

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/17/கோபி-கிருஷ்ணன்-–-பகுதி-2/article3224363.ece


நீங்கள் குளியலறையில் இருக்கிறீர்கள். வீட்டில் வேறு யாரும் இல்லை. அப்போது அழைப்பு மணி அடிக்கிறது. அதிமுக்கியமான தபால் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அழைப்பு மணி அதற்காகவும் இருக்கலாம். அவசர அவசரமாக இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, மொஸைக் தரையில் வழுக்கி விழுந்து விடாமல் சர்க்கஸ்காரர்கள் நடப்பது போல் நடந்து வந்து பார்த்தால், வேர்த்து விறுவிறுக்க ஒரு இளைஞர் ஒரு புதிய ரக சோப் அல்லது டிக்‌ஷனரி அல்லது ஸானிடரி நாப்கின்னைக் கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார். கன்னாபின்னா என்று திட்டத் தோன்றும். ஆனால் கடும் பட்டினியில், கொலைபாதக வெயிலில் அலைந்து கொண்டிருக்கும் அந்த இளைஞனின் பரிதாபமான முகம் உங்கள் மனதை மாற்றிவிடும். ‘வேண்டாம், போப்பா.’ ‘இல்லை சார், ஒரே ஒருமுறை உபயோகித்துப் பார்த்தால் அப்புறம் இதை விடவே மாட்டீர்கள்.’ உங்கள் குரலில் கொஞ்சம் எரிச்சல் தலைகாட்டும். ‘குளிச்சிக்கிட்டு இருக்கேம்பா… ப்ளீஸ்…’ ஸாரி சொல்லிவிட்டு அடுத்த இடத்துக்கு நகர்வார் அந்த இளைஞர். இப்போதெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் காவலாளி வந்துவிட்டதால் கேட்டிலேயே இதுபோன்ற இளைஞர்கள் விரட்டப்பட்டு விடுகிறார்கள். உள்ளே நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இதுபோன்ற ஒரு வேலையைச் செய்திருக்கிறார் கோபி கிருஷ்ணன். சம்பளம் 100 ரூ. இப்படி மாற்றி மாற்றி எத்தனையோ உதிரி வேலைகள் செய்தார்.





அவரது ஒரு ஆண்டு விவாக வாழ்க்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த விவாகத்துக்காக வாங்கிய கடன்கள் அவருக்குப் பெரும் சுமையாக ஆயிற்று. பார்த்துக் கொண்டிருந்த ஓர் உதிரி வேலையை உதறிவிட்டு கல்லூரிச் சான்றிதழ்களோடு வடக்கே புறப்படுகிறார். வார்தாவில் ஒரு நண்பரின் அறையில் ஒரு மாதம் இருக்கிறார். பிறகு அந்த நண்பர் கோபியை வேறிடம் போகச் சொல்லவே திருட்டு ரயிலில் பம்பாய் கிளம்புகிறார். டிக்கட் பரிசோதகரிடம் மாட்டுகிறார். அவரிடம் தன் நிலைமையை விளக்கி ஐந்து ரூபாய் கொடுக்கிறார். அவர் அதை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு பம்பாய் ரயில்நிலையத்திலும் அதேபோல் மாட்டுகிறார். பரிசோதகரிடம் தன் நிலையை விளக்கிச் சொல்ல அவர் மனம் இரங்கி விட்டு விடுகிறார். (என்ன இருந்தாலும் இந்தியர்கள்தான் எவ்வளவு இளகிய மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்!) பசியுடன் ஓட்டல் ஓட்டலாகச் சென்று வேலை கேட்கிறார். எங்கும் உணவில்லை; இடமில்லை. இரவு எங்கே தங்குவது என்று தெரியாமல் தாராவிக்குப் போய் யாரோ ஒருவரிடம் தன் நிலைமையைச் சொல்கிறார். அவருடைய குடிசையின் பரணில் தூங்க இடம் கிடைக்கிறது. பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களை எடைக்குப் போட்டு அந்தக் காசில் ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுகிறார். அதற்கு அடுத்த நாள் சோர் பஜாரில் தன்னுடைய துணிகளை விற்றுச் சாப்பிடுகிறார்.

பிறகு ஒரு ஓட்டலில் போய் வேலை கேட்கிறார். விண்ணப்பம் எழுதித் தரச் சொல்கிறார் முதலாளி. எழுத முடியாதபடி கை நடுங்குகிறது. (அவரது மரணம் வரை அந்த நடுக்கம் அவரைத் தொடர்ந்தது.) அதைப் பார்த்த முதலாளி வேலை தர முடியாது என்று சொல்லி சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்கிறார். அப்போது கோபி வேலை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்கிறார். அதற்கு முதலாளி, ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம்; சும்மா சாப்பிடுங்கள் என்கிறார். மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டதாகச் சொல்கிறார் கோபி.

இப்படியாக மூன்று நாள் பம்பாய் வாசத்துக்குப் பிறகு மீண்டும் திருட்டு ரயில் ஏறி ஹைதராபாத் போகிறார். அங்கே அவருக்குத் தெரிந்த ஓர் உளவியல் நிபுணர் இருந்தார். அவர் உதவ மறுத்ததும் வழக்கம் போல் திருட்டு ரயில் ஏறி சென்னைக்குப் புறப்படுகிறார். அப்போது டிக்கட் பரிசோதகரிடமிருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலிலிருந்து குதித்து முழங்காலில் கடுமையான அடி. நடக்க முடியாமல் நகர்ந்தே போய் ஓர் இடத்தில் அமர்கிறார். யாரோ தெலுங்குக்காரர் இவர் நிலைமையைப் பார்த்து டீ வாங்கிக் கொடுத்து, சென்னை செல்லும் ஒரு லாரியில் ஏற்றி விடுகிறார். லாரி டிரைவர் தன் கட்டணமாக இவருடைய சட்டையையும் கைலியையும் வாங்கிக்கொண்டு போரூரில் இறக்கி விடுகிறார். அதேசமயம் கோபி கையில் கொஞ்சம் பணமும் கொடுக்கிறார். நேராக வீட்டுக்குப் போகிறார் கோபி. வீட்டில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

பிறகு தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் தொற்றுகிறது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். அரசு மனநலக் காப்பகத்தில் சேர்கிறார். அங்கே கண்காணிப்பாளராக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். 45 நாள் சிகிச்சைக்குப் பிறகு மதுரைக்குப் பாட்டி வீட்டுக்குப் போகிறார். டிக்கெட்டுக்கும் பாட்டியே பணம் அனுப்புகிறார். மதுரை ஆதீனத்தின் மூலம் மீண்டும் இந்து மதத்துக்கு மாறுகிறார். பாட்டியால் பராமரிக்க முடியாமல் போன போது மீண்டும் சென்னை பயணம். வீட்டுத் திண்ணைகளில் தூங்கி, தெருக் குழாய்களில் குளித்து வேலை தேடுகிறார். தொடர்ந்து மனநல மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார். பிறகு க்ரியாவில் வேலை.

மே 1980-ல் மீண்டும் மனநலம் கெடுகிறது. மீண்டும் காதுகளில் மாய ஒலிகள். நீ எதற்கும் தகுதி இல்லாதவன். செத்துப் போ. நீ எதற்கும் லாயக்கு இல்லாதவன். செத்துப் போ. இதே ஆண்டு நவம்பரில் இரண்டாவது திருமணம். (இந்தியாவில் எந்த நிலைமையிலும் செய்துகொள்ளக் கூடிய காரியம் திருமணம்தான்!) மணம் முடிந்ததுமே ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்ற கேள்வியை மீண்டும் மனைவியிடமிருந்து எதிர்கொள்கிறார் கோபி. உண்மையான காரணத்தைச் சொல்ல முடியாது. சொன்னால் பைத்தியக்காரன் பட்டம் கிடைக்கும். அதிலும் மனைவியாக இருந்தால் ஒரு பைத்தியத்துக்கா வாழ்க்கைப்பட்டோம் என்று நினைத்து மனைவியும் மனநலத்தை இழந்து விடுவாள்.

கோபியின் பிரச்னைகள் யாவுமே அவர் மனதினுள்ளே நடக்கும் காரியங்கள். நான் எண்பதுகளிலும் கோபியைச் சந்தித்திருக்கிறேன். பார்த்தால் இத்தனை பிரச்னைகள் இருப்பதாகத் தெரியவே தெரியாது. முகத்தில் எப்போதுமே ஒரு மந்தகாசப் புன்னகை. கையில் சிகரெட். படு ஸ்டைலாக இருப்பார். ஒரு முதிர்ந்த பாதிரியாரைப் போன்ற மென்மையான பேச்சு. அவர் உங்களோடு பேசும்போது ஒரு மகான் உங்களுடைய துயருற்ற வாழ்வைப் பற்றி அக்கறையோடு விசாரிப்பது போன்றே இருக்கும். அன்பின் மொத்த வடிவமே உருப்பெற்று நிற்பது போல் தோன்றும்.

கோபி கிருஷ்ணனின் சிக்கலான வாழ்க்கை திருமணத்துக்குப் பிறகு மேலும் சிக்கலானதே ஒழிய கொஞ்சமும் சரியாகவில்லை. மனைவி வசதியாக வாழ்ந்தவர். ஒருநாள் வீட்டில் சுத்தமாகக் காசு இல்லாததால் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை அடகு வைக்கக் கிளம்புகிறார். அன்று அடகுக் கடை விடுமுறை. அதனால் பாத்திரங்களைத் திரும்பவும் வீட்டில் வைத்துவிட்டு நண்பர்களோடு அலங்கார் தியேட்டரில் சினிமாவுக்குப் போகிறார். அப்போது க்ரியாவில் வேலை செய்து கொண்டிருக்கிறார் கோபி. படம் திடீரென்று நின்று, ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வாண்டட் இம்மீடியட்லி’ என்று சிலைடு போடப்படுகிறது. மனைவி தற்கொலை முயற்சி. ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கோபியின் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார். போலீஸ் கேஸாகி கோபி கைது செய்யப்படுகிறார். ‘நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன். அதனால் அடிக்கமாட்டேன். உண்மையைச் சொல்லி விடு’ என்கிறார் இன்ஸ்பெக்டர். எவ்வளவோ விளக்கிச் சொல்லியும் போலீஸ் கோபியின் பேச்சை நம்பவில்லை. (அப்படிப்பட்ட தோற்றமும் கோபிக்கு இல்லை!) அசிங்கமான கேள்விகளையெல்லாம் கேட்கிறார்கள். ‘உன் நண்பர்கள் யாரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?’ என்றெல்லாம் கேள்விகள்.

‘இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று எனக்குப் புத்தாண்டு வாழ்த்து சொன்னார்.

நான் பித்தளைக் குடங்களை எடுத்துக்கொண்டு அடகுக் கடைக்குப் போனதைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள் மீதும் கேஸ் ஆகி விட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனையில்லாமல் விட்டு விட்டார்கள். கடைசியாக நான் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும் போது அந்த இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொன்னேன். ‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அது போதும்’ என்றார்.’

இதுவரை நடந்தது விளிம்பு நிலையில் வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கக் கூடியதுதான். இதற்குப் பிறகுதான் ஒரு கலைஞனின் பாத்திரம் துலங்குகிறது.

‘இன்ஸ்பெக்டர் அப்படிச் சொன்னதும் எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.’

கோபியின் வாழ்க்கையைப் பற்றி கோபியே சொல்வதைக் கேட்கும் போது எனக்கு ஏதோ ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது ஆண்டன் செகாவின் ஒரு கதையையோ படிப்பது போல் இருந்தது. கோபி கிருஷ்ணனின் இன்னொரு தற்கொலை முயற்சி பற்றிப் பார்ப்போம். கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் பணி செய்த போது ஒரு பொய்யான ஆய்வறிக்கையைத் தயார் செய்யப் பணிக்கப்பட்டார் கோபி. 250 குடும்பங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். ஆனால் அவ்வளவு குடும்பங்களையும் ஆய்வு செய்வது சாத்தியமல்ல. எனவே பொய் அறிக்கை கேட்டார்கள். கோபியால் பொய் சொல்ல இயலாது. பொய் அறிக்கை தராவிட்டால் வேலை போய் விடும். உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது. அந்தப் பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டு விட்டார். ஆனால் எதேச்சையாக கதவைத் தாள் போட மறந்து போனதால் அவர் மனைவி உடனடியாக அவரை ஆட்டோ பிடித்து கே.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்.

இப்படியே போய்க் கொண்டிருக்கிறது கோபி கிருஷ்ணனின் நேர்காணல். நற்றிணை பதிப்பகத்தில் கோபி கிருஷ்ணனின் ஆக்கங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக இருந்து அந்த வேலையை ராஜினாமா செய்த கதையை விஸ்தாரமாக அந்தப் பேட்டியில் விவரித்திருக்கிறார். தொகுப்பை வாங்கிப் படியுங்கள்.

***

‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்ற நாவல் ஒரு மனநலக் காப்பகத்தில் உள்ள நோயாளிகள் சிலருடைய பேச்சைப் பதிவு செய்கிறது. இந்த நோயாளிகளில் கோபி கிருஷ்ணனும் உண்டு என்பது அவருடைய நேர்காணலைப் பார்க்கும்போது தெரிகிறது. The Madness and Civilization என்ற நூலில் மிஷல் ஃபூக்கோ மனநோயை மனித சமூகம் எதிர்கொண்டதன் வரலாற்றை ஆய்வு செய்கிறார். 15-ம் நூற்றாண்டில் மனநோயாளிகளை ஒரு கப்பலில் போட்டு கண்காணாத தீவுகளில் கொண்டு போய் விட்டு விடுவது பற்றிக் குறிப்பிடுகிறார் ஃபூக்கோ. அந்தக் கப்பல்களை Ship of Fools என்று சொல்வார்கள். ஒரு சமூகத்தின் எதார்த்தங்களைப் பைத்தியம் என்று கருதப்படுபவர்களே வெளிப்படுத்துகிறார்கள் என்று அந்த நூலில் சொல்கிறார் ஃபூக்கோ. அதற்கு செர்வாந்தேஸ் எழுதிய தோன் கெஹோத்தே (Don Quixote) மற்றும் கிங் லியரிலிருந்து உதாரணங்கள் தருகிறார். நம்முடைய கூத்துக்களில் கட்டியங்காரன் என்ற கோமாளியை நாம் இங்கே இந்த ஆய்வுகளோடு ஒப்பு நோக்கிப் பார்க்கலாம்.

‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்ற நாவல் மனநோய்க் காப்பகத்தின் உள்ளே உள்ள பல காட்சிகளையும் பல நிலைகளையும் பதிவு செய்கிறது. ஒரு நோயாளியின் கைகால்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் எல்லோரையும் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார். ‘தாயோளிங்களா, கட்டியா போட்டிருக்கீங்க? எம் ஒடம்புல நாகாத்தம்மா கருநாகம் இருக்கு. என் சக்தி ஒங்களுக்குத் தெரியல்லெ. இப்ப எடுத்து விட்டேன்னா நாகம் ஒங்களையெல்லாம் கொத்தித் தீத்திரும் டோய்…’ எத்தனையோ ஆன்மிகவாதிகளின் குரலை இந்தக் குரல் ஒத்திருக்கிறது. ஆனால் இந்த ஆள் பைத்தியமாக கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறார்.

இன்னொரு நோயாளியான கிருஷ்ணராஜுக்குப் பயம். எதைக் கண்டாலும் பயம். ஒருமுறை வாகனத்தில் செல்லும்போது நடந்த சிறுவிபத்தில் கிருஷ்ணராஜின் நண்பருக்குக் காலில் அடி. அதிலிருந்து அவருக்கு எதைக் கண்டாலும் மரண பயம். பயத்தைப் போக்க மின்சார அதிர்ச்சியெல்லாம் கொடுக்கிறார்கள். மாத்திரையும் கொடுக்கிறார்களா என்கிறார் ஆய்வாளர் ரவீந்திரன். ‘மாத்திரையால் என்ன பயன்? ஒருதரம் மெண்டல் ஆயிட்டா அப்பிடியே இருக்க வேண்டியதுதான். இங்கே ஏற்கெனவே வந்தவன்தான் திரும்பித் திரும்பி வந்துக்கிட்டிருக்கான். குணமாறதுன்னு ஒண்ணு இருந்தா ஏன் மறுபடியும் மறுபடியும் இங்கேயே வரணும் சொல்லுங்க?’

இப்படி மரணத்தை நினைத்து செத்து செத்துப் பிழைப்பதற்கு ஒரேயடியாக செத்துப் போய் விடலாம் என்று நினைக்கிறார் கிருஷ்ணராஜ். விஷ ஊசி போட்டுக் கொன்று விடும்படி மருத்துவரைக் கெஞ்சுகிறார். சாவு என்பது தவிர்க்க முடியாதது. அது ஒரு பிரச்னை. அதை நினைத்துப் பயப்படுவது இன்னொரு பிரச்னை. ஆக, ஏன் ஒரு பிரச்னையை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் ரவீந்திரன். ‘ஐயோ, சாவைப் பத்திப் பேசாதீங்க. ஏற்கனவே இருக்கிற பயம் ஜாஸ்தியாயிரும்.’ ‘சரி, என்னதான் செய்யப் போகிறீர்கள்?’ ‘இங்கேயே இருக்க வேண்டியதுதான். குருதேவ் சுவாமிகள்தான் என்னைக் காப்பாத்தணும்.’ கிருஷ்ணராஜ் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார். கதை இதோடு முடியவில்லை. சாவைக் கண்டு அஞ்சுவதாகச் சொல்லும் அவர் அந்த மனநலக்காப்பகத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற நர்ஸைக் கவர்வதற்காக கேஸனோவா மாதிரி என்னென்னவோ பேசுகிறார், செய்கிறார். அப்போது அவருக்கு மனப்பிறழ்வு இருப்பதில்லை!

இன்னொருவருக்கு இரண்டு என்றால் ஆகாது. தெரியாத்தனமாக ஒரு நியூமராலஜிஸ்டிடம் செல்கிறார். அவர் இவருக்கு இரண்டாம் நம்பர் ஒத்துக் கொள்ளாது என்கிறார். அதிலிருந்து இவருக்கு ‘ரெண்டு’ பைத்தியம் பிடித்து விடுகிறது. மனைவி இன்னும் இரண்டு இட்லி வைத்துக் கொள்ளுங்கள் என்றால் தட்டைத் தூக்கிக் கடாசுவது. பையன் ரெண்டுக்குப் போயிருக்கான் என்றால் அடிதடி. ரெண்டு என்ற வார்த்தையைக் கேட்டாலே அதகளம். கடைசியில் அவருக்கே தான் ஏதோ விபரீதமாக நடந்து கொள்வதாகத் தோன்றி voluntary boarder-ஆக மனநலக் காப்பகத்தில் சேர்கிறார்.

நாவலின் ஒரு முக்கியமான இடம் இது: ஒரு நோயாளிக்கு உருவெளித் தோற்றங்களாகத் தெரிந்து கொண்டிருந்தன. அவற்றை அவர் abstract ஓவியங்களாக வரைந்தார். அவருடைய மனைவி அவர் எப்போதும் யோசனையிலேயே இருப்பதால் மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்லி அங்கே அவரைச் சேர்க்கிறார். அதோடு அவருக்கு abstract designs தெரிவது நின்றுவிட்டது. ஓவியமும் வரைய முடியவில்லை. அவருக்கும் மருத்துவருக்கும் ஒரே வாக்குவாதம். ஆக, யாருடைய அளவுகோளில் யார் நோயாளி?

இது கோபி கிருஷ்ணன் எழுத்துக்களின் ஆதாரமான கேள்விகளில் ஒன்று.



(தொடரும்)

கோபி கிருஷ்ணன் – பகுதி 3
/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/24/கோபி-கிருஷ்ணன்-–-பகுதி-3/article3241202.ece

By சாரு நிவேதிதா

First Published : 24 January 2016 10:00 AM IST



கிருஷ்ணனை சிலர் அசோகமித்திரனின் துணை கிரகம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு எந்த இலக்கியரீதியான ஆதாரங்களும் இல்லை. அசோகமித்திரனின் கதைகளும் கோபியின் கதைகளும் நகரத்தில் நடக்கின்றன என்பதைத் தவிர இருவருக்கும் எந்தப் பொதுத்தன்மையும் இல்லை. அசோகமித்திரன் நவீனத்துவத்தின் உச்சம். ஆனால் கோபி கிருஷ்ணனோ நவீனத்துவத்தைத் தாண்டி பின்நவீனத்துவத்துக்குள் வந்துவிட்டார். தமிழில் பின்நவீனத்துவ எழுத்தைத் தொடங்கி வைத்த முன்னோடிகள் என சாரு நிவேதிதா, கோபி கிருஷ்ணன், ஸில்வியா ஆகியோரைச் சொல்லலாம். இவர்களில் ஸில்வியா ஆரம்பத்திலேயே எழுதுவதை நிறுத்திவிட்டார்.

இந்தத் தொடரை நான் எந்தவித சொந்த விருப்பு வெறுப்புகளின் பாதிப்பும் இல்லாமல் எழுதுவதால் என் பெயரையும் பொதுவாகவே வைத்து எழுதுகிறேன். சமகாலத் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சரியாகப் பதிவு செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் கவனத்தில் இல்லாததால் என் பெயரைச் சேர்த்திருப்பதற்காக வாசகர்களிடம் மனமார்ந்த மன்னிப்பையும் கோருகிறேன். சாரு நிவேதிதாவின் எழுத்துக்கும் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கும் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமை இருப்பதால் மட்டுமே என் பெயரைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. கட்டுரையில் போகப் போக அதைப் புரிந்து கொள்ளலாம்.

சாரு நிவேதிதா, கோபி கிருஷ்ணன் ஆகிய இருவரது எழுத்தின் அடிப்படையான ஒற்றுமை, மனப் பிறழ்வைக் கலையாக மாற்ற முயற்சித்தது. இதுபற்றி ஒரு சமகாலப் படைப்பாளி, கோபியிடம் காணும் மனப்பிறழ்வு அசல் (authentic), சாருவிடம் இருப்பது போலி (fake) என்று குறிப்பிட்டார். இதற்குக் காரணம், கோபி வறுமையில் வாடினார்; சாரு ‘ஆடம்பரத்தில்’ புரண்டார். யாரொருவர் வறுமையில் சாகவில்லையோ அவர் நிஜமான கலைஞன் அல்ல என்பது தமிழர்களின் ஆழ்மன நம்பிக்கையாகும். கலைஞன் என்றால் அவன் பட்டினி கிடந்து சாகவேண்டும். அல்லது, குடித்துக் குடித்து சாக்கடையில் புரளவேண்டும். தன் லௌகீக வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டு, கஞ்சா அடித்துத் திரிய வேண்டும். அதனாலேயே ஜி. நாகராஜனுக்கு ஒரு ஸ்டார் எழுத்தாளர் அந்தஸ்து கிடைத்தது. யார் கண்டது, பாரதியும் புதுமைப்பித்தனும் தாகூரைப் போல் செல்வந்தர்களாக இருந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகம் அவர்கள் இருவரையும் இந்த அளவுக்குக் கொண்டாடி இருக்குமா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

இந்த வகை நோயை நெக்ரோஃபீலியா (Necrophelia) என்று சொல்வார்கள். இறந்தவரின் மீதான விருப்பம் என்பது இதன் பொருள். Nekros என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் பிரேதம்; Nex, necis என்ற லத்தீன் வார்த்தைகளின் பொருள் கொலை அல்லது கொடூர மரணம். இதுபற்றி The Anatomy of Human Destructiveness என்ற நூலில் Erich Fromm மிக விரிவாக ஆய்வு செய்கிறார். எந்தக் கலைஞனையும் உயிரோடு இருக்கும்போது அங்கீகரிக்காமல், கவனிக்கக் கூட செய்யாமல் அவன் இறந்ததும் அவனுக்குச் சிலை வைத்துக் கொண்டாடுவதை நெக்ரோஃபீலியாவின் இன்னொரு வடிவம் என்று சொல்லலாம். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மற்றும் ஏராளமான கலைஞர்களுக்கும் நடக்கும் கொண்டாட்ட வைபவங்களை நாம் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு கலைஞன் வறுமையில் வாடினால்தான் அவன் கலைஞன்; இல்லையேல் அவன் நிஜமல்ல, போலி. அப்படிப் பார்த்தால் வறுமையில் வாடிய ஓவியன் வான்கோ கலைஞன்; கோடிகளில் புரண்ட ஸால்வதோர் தாலி போலி. மேற்கத்தியர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள். இந்த ஒரே காரணத்தினால்தான் கோபியின் எழுத்து நிஜமாகவும் சாருவின் எழுத்து போலியாகவும் இங்கே காணப்பட்டது.

ஆனால் அதே சமயம் இன்னொரு விபரீதமும் நடந்தது. கோபியை நிஜமான மனப்பிறழ்வு என்று சொல்லிக்கொண்டே அவரைப் பற்றி, அவரது எழுத்து பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் சாரு நிவேதிதாவின் ‘நான் – லீனியர்’ கதைகளை அவர் முனியாண்டி என்ற புனைப்பெயரில் எழுதியபோது அவை மிகுந்த பரபரப்புடன் விவாதிக்கப்பட்டன; வசை பாடப்பட்டன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரம்மராஜன் நடத்திய ‘மீட்சி’ என்ற பத்திரிகையில் வெளிவந்தன முனியாண்டியின் ‘நான் – லீனியர்’ கதைகள். தமிழில் பின்நவீனத்துவ எழுத்தின் ஆரம்பம் அது. அதே காலகட்டத்தில்தான் – அதாவது 1993-ல் கோபி கிருஷ்ணனின் ‘டேபிள் டென்னிஸ்’ என்ற குறுநாவல் வெளிவந்தது. ‘டேபிள் டென்னிஸை’ எந்தச் சந்தேகமும் இல்லாமல் ஒரு பின்நவீனத்துவ க்ளாஸிக் என்று சொல்லலாம். 1998-ல் வெளிவந்த சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி’க்குக் கிடைத்த பிராபல்யமும் விவாதமும் ‘டேபிள் டென்னிஸு’க்கும் கிடைத்திருக்க வேண்டும்; கிடைக்கவில்லை. உதாரணமாக, சுபமங்களா என்ற பத்திரிகையில் மாதாமாதம் வெளிவந்து கொண்டிருந்த பிரமுகர்களின் நேர்காணலில் ஒவ்வொரு மாதமும் ‘நான் – லீனியர்’ எழுத்து பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் கோபி கிருஷ்ணனின் எழுத்து பற்றி எந்த விவாதமும் சர்ச்சையும் எழவில்லை. இப்போது பெருமாள் முருகன் எழுதியிருப்பதையெல்லாம் விடப் பல மடங்கு அதிகமான சமூக ஒவ்வாமைகளையெல்லாம் எழுதியிருக்கிறார் கோபி. ஆனால் அவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

கோபியும் சாருவும் ஒரே விஷயத்தை ஒரே பாணியில் ஒரே காலகட்டத்தில் எழுதியும் ஏன் சாரு கவனிக்கப்பட்டார்; கோபி கவனிக்கப்படவில்லை என்று இது பற்றி மனுஷ்ய புத்திரனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது கேட்டேன். அவர் சொன்ன காரணம், சாரு தொடர்ந்து ஓர் இலக்கியக் களப்பணியாளராகச் (literary activist) செயல்பட்டார்; ஆனால் கோபி அமைதியாக எழுதிக் கொண்டிருந்தார்; அதிகமாகவும் எழுதவில்லை (இருபது ஆண்டுகளில் ஆயிரம் பக்கம்). உரையாடலின் இடையே மனுஷ்ய புத்திரன் ஒரு முக்கியமான விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தினார். ‘ஸீரோ டிகிரி’யின் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் இது: ‘இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாக சிதறுண்டு போன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது.’ இந்த சிதறுண்டு போன தமிழ் மனம்தான் கோபியையும் சாருவையும் ஒன்றிணைக்கிறது.

‘டேபிள் டென்னிஸி’ல் அந்த சிதறுண்டு போன மனம் இப்படிப் பேசுகிறது:

‘How do you rate your sexual performance?
Oh God, Nope. I don’t rate. I simply fuck.

என் கனவிலும் / நனவிலும்… பச்…/ அனைத்திலும் என்னுள் / கரைந்து நிற்கும் / வார்த்தைகளுள் / அகப்படாமல் / நழுவிக் கொண்டேயிருக்கும் எனதினிய Kathy Acker-ன் அழகான ஒரு நினைவாக…’

கேத்தி ஆக்கர் என்ற அவ்வளவு புகழ் பெற்றிராத அமெரிக்க லெஸ்பியன் எழுத்தாளர் பற்றித் தமிழ்ச் சூழலில் குறிப்பிட்ட இரண்டே எழுத்தாளர்கள் கோபியும் சாருவும் மட்டுமே. ‘ஸீரோ டிகிரி’யின் ஆங்கில மொழியாக்கம் கேத்தி ஆக்கருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் டேபிள் டென்னிஸ்:

‘அந்தக் கிழவன் என்ன சொன்னான்? அவனது மருத்துவமனையில் மின் அதிர்வு தரப் போகிறானாம். கிழமே மண்டையைப் போடு. கிழம் என்ன மருத்துவமா பாக்குறது? மெஷின் வாங்கிப் போட்டாச்சு. ஒரு ஷாக்குக்கு நூத்தம்பது ரூபான்னா பத்துக்கு எவ்ளோன்னு பாத்துக்கோ.’

ஓர் இடைச்செருகல்: உளவியல் சிகிச்சை முறைகள் மீதான மிகக் கடுமையான விமரிசனங்கள் கோபியின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன. ‘ (அவன்) எனக்கு உளவியல் சிகிச்சையைப் பரிந்துரைத்தான். அந்தச் சூனியக்காரக் கிழவனின் பெயரைச் சொன்னான். சாண்டைக்குடிக்கி, தூமைக்குடிக்கி பாஷையில் இறங்கினேன். மதியம் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் கிழவனை, ஆரத்தழுவி வைது ஒரு கடிதத்தைத் தட்டச்சு செய்து அனுப்பினேன்.’

இங்கே பைத்திய நிலை பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. சமீபத்தில் ஒரு செய்தி படித்திருப்பீர்கள். ஒரு பழைய ரவுடி தன்னுடைய இரண்டு மகள்களும் பெரிய பிள்ளைகளாகி விட்டதால் ரவுடித் தொழிலை விட்டு விட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாறி விட்டார். இந்தத் தொழிலில் ஈடுபடும் பலர் அவ்வப்போது கொலை செய்யப்படுவதை நாம் தினசரிகளில் பார்க்கிறோம். நிற்க. இப்போது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாறி விட்ட அந்தப் பழைய ரவுடியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் கிடக்கிறார். நான் சொல்ல வந்தது அது அல்ல. அந்த நபர் மீது பத்துக்கு மேற்பட்ட அடிதடி வழக்குகளும் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டவர் சிறையிலிருந்தபடியே அதைச் செய்திருக்கிறார். அவரும் ஒரு ரியல் எஸ்டேட் நபர்.

இரண்டாவது செய்தி, வடநாட்டில் ஒரு ஐஏஎஸ் தம்பதி. இருவருமே உயர்ந்த அரசுப் பதவியில் இருப்பவர்கள். இருவரும் சேர்ந்து 250 கோடி அரசுப் பணத்தை சூறையாடி இருக்கின்றனர். இப்போது அந்த ஐஏஎஸ் தம்பதி இருவரும் சிறையில் இருக்கின்றனர். இவ்வளவு படித்திருந்தும் தங்களுடைய வாழ்வின் சந்தோஷம் கோடி கோடியாகப் பணம் சேர்ப்பதென நினைத்து இப்போது சிறையில் இருக்கும் அந்தத் தம்பதியையும், முன்னால் சொன்ன படிக்காத ரவுடியையும் நான் பைத்தியம் என்று நினைக்கிறேன். இவர்கள் மட்டுமல்ல; யார் யாரெல்லாம் பணத்தையும் அதிகாரத்தையும் புகழையும் தங்கள் உயிரையும் விடப் பெரிதாக நினைக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரையும் நான் பைத்தியம் என்று நினைக்கிறேன்.

ஆனால் சமூகமோ வேறு மாதிரி நினைக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இருந்தார். வாழ்நாள் பூராவும் பைசா பைசாவாகச் சேர்த்தார். ஒரு வீட்டைக் கட்டினார். அதைத் தன் கடைசி மகனுக்கு எழுதி வைத்து விட்டு இறந்தார். மகனும் மருமகளும் அதை அனுபவிக்க முடியாமல் இளம் வயதிலேயே இறந்தார்கள். இருவருக்கும் குழந்தை இல்லை. அந்த வீட்டை அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவன் வளைத்துப் போட்டு விட்டான். இப்போது அந்த வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகி விட்டது. அந்த முதியவர் அடிக்கடி என்னிடம் ‘நீ ஒரு பைத்தியக்காரன்’ என்பார். ஏனென்றால், நான் வீடு கட்டவில்லை; பணம் சேர்க்கவில்லை.

ஆக, யார் பைத்தியம்? இதுதான் கோபி கிருஷ்ணன் இயங்கும் ஆதாரப் புள்ளி.

கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன்’ என்ற சிறுகதை சார்வாகனின் ‘மகா பண்டிதர்’, கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, அ. மாதவனின் ‘எட்டாவது நாள்’ போன்ற தமிழின் மகத்தான சிறுகதைகளில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டியதாகும். அந்தக் கதை மற்றவர்களைப் போல் நடந்து கொள்ளாத ஓர் இளைஞனை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பது பற்றியது. சமூகம் அவனைப் பைத்தியம் என்கிறது. ஏனென்றால், மற்றவர்கள் மனதுக்குள் போட்டுப் புதைத்து விடுவதை, மற்றவர்கள் மறைக்க நினைக்கும் விஷயங்களை அவன் பகிரங்கமாகச் சொல்லி விடுகிறான். மற்றவர்களுக்கும் அவனுக்கும் அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் அதனாலேயே சமூகத்தின் பார்வையில் அவன் பைத்தியம். அதனால் அவனை அவன் அம்மா ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள். உன் மனதில் இப்போது என்ன தோன்றுகிறது என்று கேட்கிறாள் மனநல மருத்துவர். உங்களோடு படுக்கலாம் போல் இருக்கு என்கிறான் இளைஞன். ஏனென்றால், அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. அவள்தானே உன் மனதில் தோன்றுவதைச் சொல் என்று கேட்டாள்? சொன்னான். பைத்தியம் என்பது நிரூபணமாகி விட்டது. உள்ளே போறதுக்கு முன்னாலே அம்மா சொன்னா, ‘டாக்டர்கிட்டெ எதையும் மறைக்கப்படாது’ன்னு. இவன் சொன்னதும் டாக்டர், ‘நான் டாக்டர், நீங்க இப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்கிறாள். பிறகு ஏதோ எழுதிக் கொள்கிறாள். இவனை வெளியே அனுப்பிவிட்டு அம்மாவை உள்ளே அழைக்கிறாள். அம்மா வெளியே வரும்போது அழுதுகொண்டே வருகிறாள்.

இவன் பி.காம். படிக்கும்போது நடந்தது. அம்மா சதா அழுதுண்டிருந்தா. பாக்கக் கஷ்டமா இருந்துது. நெறெய கோவிலுக்கெல்லாம் அழெச்சுண்டு போனா. அப்பறந்தான் இந்த டாக்டரம்மா. ‘நோக்கு சீக்கிரம் நன்னாயிடும். தைரியமா இரு’ன்னா அம்மா. ‘நேக்கு இப்போ என்ன?’ன்னு கேட்டேன். நேக்கு நானே பேசிக்கிறேனாம், சிரிச்சுக்கிறேனாம், கோபப்பட்டுக்கறேனாம். ‘நேக்கு சரியா ஒண்ணூம் தெரியலை’ன்னுட்டேன். அம்மா தலைலெ அடிச்சுண்டா.

அவனுக்கு நிறைய யோசனைகள் வருகின்றன. வந்தால் அது மனநோய். அதற்குக் கடுமையான மாத்திரைகள் தரப்படுகின்றன. காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு இரண்டு. மாத்திரைகளால் நன்கு தூக்கம் வருகிறது. ஆனால் விழிப்பு வந்ததும் யோசனை வருகிறது. என்ன யோசனை? அதெல்லாம் ஒரு ஹெடோனிஸ்ட் கவிஞனின் புத்தகத்தில் உள்ளவை. ‘இந்தமாரி பிஸியா ஏதேதோ நெனெச்சிண்டிருக்கேன். சிந்திக்கிறதுன்னா நெறெய அறிவு இருக்குன்னுதானெ அர்த்தம்? ‘நான் செத்துட்டேன்னா நீ பிச்செதான் எடுக்கணும்’ன்னா ஒரு விசை. ‘நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். ப்ளாட்பாரத்துலெ ஒக்காந்து ஷேக்ஸ்பியர் படிச்சுண்டிருப்பேன்’னேன். ‘நீ படிச்சு நன்னாதான் குப்பெ கொட்டீண்டிருக்கே’ன்னு ஒரு மாரிப் பேசுனா. அப்பறம் ஒரு பாட்டம் அழுதா. அம்மா வரவர ரொம்ப வெசனப்பட்டுக்கறா. அவளெத் தேத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு.’

‘டாக்டரம்மாவெ ஒரு மாசத்துக்கு ரெண்டு தரம் போய்ப் பாக்கறேன். அம்மாதான் அழெச்சுண்டு போறா. ஒருதபா கிளினிக்லெ ஒருத்தர் ‘மிஸ்டர் ராமபத்ரன்’னார். நன்னா மரியாதையா இந்த மாரி என்னெ யாரும் கூப்டதில்லை. சந்தோஷமா இருந்துது. ‘என்ன சார்?’ன்னேன். உள்ளெ வரச் சொன்னார். கதவெ உள்பக்கம் தாப்பா போட்டுண்டார். என்னென்னவோ படங்களையெல்லாம் காமிச்சார். மாடர்ன் பெயிண்டிங் மாரி இருந்துது. ‘என்னன்னு சொல்லுங்க’ன்னார். ‘எல்லாமே செக்ஸ்’ன்னேன். நேக்கு அப்படித்தான் தோணித்து. படுத்துக்கச் சொன்னார். ‘நான் ராத்திரிக்குத்தான் படுத்துப்பேன்’னேன். ’நான் தூங்கச் சொல்லலே. சும்மா இந்த டேபிள்லெ படுத்துக்குங்க’ன்னார். படுத்துண்டேன். ’ஒங்களுக்கு செக்ஸ் சிந்தனை வரும்போது மட்டும் சொல்லுங்க’ன்னார். அடிக்கடி சொன்னேன். சொன்னப்பொவெல்லாம் ஷாக் அடிச்சுது கையில. பத்து நிமிஷத்துலெ ஒரு பதினைஞ்சு ஷாக்குன்னா பாத்துக்கோங்க. ‘ஒங்களுக்குச் சீக்கிரம் நல்லா ஆயிடும். நீங்க முக்கியமா ஒத்துழைக்கணும்’ன்னார். நேக்குப் புரியலை. ஆனா ‘சரி’ன்னு சொன்னேன். நல்ல மனுஷரா இருக்கார். எதுக்கு மாட்டேன்னு சொல்லணும்? இந்த மாரி ஒரு ரெண்டு மாசத்துலெ நாலு தபா செஞ்சார். இந்த கிளினிக் வந்தாலே என்னென்னவோ விநோதமாத்தான் ஆறது.’

ஒருமுறை கிளினிக்கில் அந்த நபர் ராமபத்ரனின் மனதில் வேண்டாத எண்ணம் வரும் போதெல்லாம் நிறுத்து என்று சத்தமாகச் சொல்லிப் பார்க்கச் சொல்கிறார். ஒருநாள் காலையில் எழுந்ததும் எக்கச்சக்கமான சிந்தனைகளுடன் அமர்ந்திருக்கிறான் ராமபத்ரன். அப்போது அவனுக்கு காப்பி கொண்டு வருகிறாள் அம்மா. ஏற்கனவே இருந்த யோசனையின் நடுவே இன்னொரு யோசனை குறுக்கிட்ட சமயம் ராமபத்ரன் ‘நிறுத்து’ என்று கத்துகிறான். அதிர்ச்சி அடைந்து தான் கொண்டு வந்த காப்பி டம்ளரை கீழே போட்டு விடுகிறாள் அம்மா. இவன் போட்ட சத்தத்தில் அரண்டு விட்டாள். ‘காப்பி குடுக்கறதெ இனிமே நிறுத்திக்கோன்னு நான் சொன்னதா அவ சொல்றா. அம்மாவுக்கு ஒண்ணும் புரியறதில்லை. வயசாயிடுத்தோன்னோ. அடுத்த தபா கிளினிக்குக்குப் போனப்பொ அவர்கிட்டெ சொன்னேன். ‘சும்மா சும்மா ‘நிறுத்து’ன்னு கத்திண்டிருந்தா ஆத்துலெ களேபரமா ஆயிர்றது’ன்னேன். ‘நான் ஒங்களெ மனசுலெதான் சத்தமா ‘நிறுத்து’ன்னு சொல்லச் சொன்னேன்’னார். ‘அத ஏன் மொதல்லெயே சொல்லலை?’ன்னேன். அவர் என் தோள்ல கை வச்சு முதுகிலெ தட்டிக் குடுத்தார்.

ஒருநாள் அம்மா அழுதா. ரொம்ப ரொம்ப அழுதா. அம்மா வெவரம் புரியாமெ என்னென்னவோ சொல்றா. ஏதாச்சும் ஏடாகூடமாப் பேச வேண்டியது. அழ வேண்டியது. அவளுக்கு என்னவோ ஆயிட்டுது. முந்தியெல்லாம் நன்னாத்தான் இருந்தா. சிரிக்காட்டிக் கூட அழ மாட்டா. இப்போதான் என்னவோ ஆயிட்டுது. அம்மாவெ நெனெச்சா பாவமா இருக்கு. ஆனா சரியோ தப்போ என்னோட பேசாமெ அவ யார் கூடப் பேசப் போறா? அம்மா பாவம்!

இந்த கிளினிக்கெ நெனெச்சுண்டாலே சில வேளைலெ வயித்தெக் கலக்கிண்டு வர்றது. ஒரு தபா ஒரு பெரிய ரூம்லெ அழெச்சுண்டு போனா. படுக்கச் சொல்லி புட்டத்துலெ ஊசி போட்டா. ஒரு மாரி மயக்கமா இருந்துது. ‘ஒண்ணுமில்லே’ன்னு டாக்டர் சொன்னா. நாக்கு மேல ஒரு துண்டுக் கட்டெயெ வச்சா. ‘ஒண்ணுமில்லைன்னா ஏன் இதெல்லாம் பண்றேள்?’ன்னு கேக்கலாம்னு நெனெச்சேன். நெனெக்கறேன். கேக்க முடியலெ. நெத்திப் பொட்டுலெ என்னத்தெயோ வச்ச மாரி இருந்துது. கையெக் கட்டிலோடு இழுத்துக் கட்டினா. காலெ ரெண்டு பேரு கெட்டிமாப் பிடிச்சுண்டா. நேக்கு ஒரே பீதியா இருந்துது. ஒரு க்ஷணம் வலி மாரி ஒண்ணுனாலெ நான் கத்தினேன்னு நெனெக்கிறேன். எந்திரிச்சப்பொ சாயங்காலம் ஆயிருந்துது. எந்திரிக்க முடியலை. புட்டத்துலெ ஊசி போட்டிருக்குன்னா. ‘திரும்பவுமா?’ன்னு கேக்கத் தோணித்து. ஆனா பேச வரலை. அவ்வளவு பலவீனமா இருந்துது. அடுத்த நாளும் அதே ரகளை. அதுக்கு அடுத்த நாளும் இதே கூத்து. ஒரு அஞ்சு நாள் என்ன நடந்துதுன்னே சரியாத் தெரியலை. நெத்திப் பொட்டுலெ கறுப்பா தோலு வெந்து கருகியிருந்துது. ஒரே கோரம். பாக்கச் சகிக்கலை. நான் சைவம். ஆனா தெரியும். இந்த மீனையெல்லாம் வறுப்பாளாம். மனுஷாள் ஒடம்பெ வறுப்பாளோ? என் நெத்திப் பொட்டெ வறுத்துக் கருக அடிச்சுட்டாள்ன்னா நேக்கு எப்படி இருக்கும் பாத்துக்கோங்க. ஆனா இதெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் நான் பழையபடி இப்பொமாரி ஆயிட்டேன். ஒருநாள் கேட்டுண்டேன். எது நான்? படிக்கறச்சே இருந்த நான் நானா, இப்போ இருக்கற நான் நானான்னு? என்னெ நானே அறிஞ்சுண்டா நான் ஞானியால்லெ ஆயிடுவேன். இப்பொவே நெறைய யோசிச்சு யோசிச்சு அறிவாளி ஆயிட்டேன்னு நெனெக்கிறேன். லோகத்துலெ இருக்கற எல்லா மனுஷாளுக்கும் சேத்து நானே யோசிச்சுண்டிருகேனோன்னு தோணறது. இதேரீதியிலே போனேன்னா சீக்கிரம் ஞானியானாலும் ஆயிடுவேன். அப்படியே ஞானி ஆனாலும் வயசான ஞானிங்க என்னெ ஞானின்னு ஏத்துக்க மாட்டா. ஒரு இருபத்து ஆறு வயசு ஞானி பொடி ஞானி.’

இன்னும் இன்னும் இன்னும் போகிறது கோபி கிருஷ்ணனின் கதை. உலகில் எந்த மொழியிலாவது இப்படி ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறதா? இப்படியே 1000 பக்கங்கள் எழுதியிருக்கும் கோபி கிருஷ்ணனை நாம் கொண்டாடித் தீர்த்திருக்க வேண்டாமா?

பொதுவாக எழுத்தாளர்களோடு நட்புறவு இல்லாத என்னிடம் கோபி மிகுந்த அன்பு கொண்டிருந்தார். என் திருமணத்துக்கு வந்திருந்த ஒரே ஒரு எழுத்தாளர் அவர்தான். அவர் சாகும் தறுவாயில் (ஒரு இளைஞனைப் போல் தோற்றம் கொண்டிருந்த அவர் அப்படிப் பிரிந்து போவார் என்று யார் கண்டது?) மாதம் ஒரு 500 ரூபாய் இருந்தால் போதும்; பிழைத்துக் கொள்வேன் என்றார். அந்த ஐந்நூறு அவருடைய தேநீர் செலவுக்கு. அநேகமாக தேநீர்தான் அவருக்கு உணவு. அவருடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகையாக நேரில் சென்றேன். உங்கள் கதை இருந்தால் கொடுங்கள்; கோபி கிருஷ்ணன் என்றால் தெரியாது என்றார்கள். வாஸந்தி அப்போது இந்தியா டுடே ஆசிரியராக இருந்தார். அதில் ஒவ்வொரு வாரமும் இலக்கியத் தரமான கதை வரும். ரூ. 1500 கொடுப்பார்கள். மற்ற பத்திரிகைகளில் கதை வந்தால் அப்போது நூறு இருநூறுதான். 1500 என்பது அப்போது லாட்டரி மாதிரி. எந்தப் பத்திரிகையிலும் கோபி கிருஷ்ணனின் கதை ஏற்கப்படாததால் வாஸந்தியை நேரில் சந்தித்து கோபியின் கதையைக் கொடுத்தேன். கதை வாஸந்திக்குப் பிடித்திருந்தது. அடுத்த மாதமே வெளிவந்தது. 1500 ரூபாய் மணியார்டர் வந்தபோது கோபி கிருஷ்ணன் உயிரோடு இல்லை. மன்னியுங்கள். இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்கிறது. நெஞ்சு வலிக்கிறது.

(தொடரும்)

கோபி கிருஷ்ணன் – பகுதி 4


By சாரு நிவேதிதா

First Published : 31 January 2016 10:00 AM IST



ஃப்ரன்ஸ் காஃப்காவைக் கேள்விப்படாத ஒருவர் இலக்கிய உலகில் இருக்க முடியாது. உலகில் உள்ள எண்ணற்ற கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் - குறிப்பாக போர்ஹேஸ் மற்றும் கார்ஸியா மார்க்கேஸ் - பெரிதும் பாதித்த எழுத்தாளர் அவர். ஆர்ஸான் வெல்ஸ் 1962-ல் காஃப்காவின் ‘விசாரணை’ என்ற நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார். 1991-ல் ஸ்டீவன் ஸோடர்பெர்க் ‘காஃப்கா’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இது தவிர, இந்தத் தொடரில் நாம் பார்த்த நம்முடைய இலக்கிய முன்னோடிகள் பலருக்கும் காஃப்கா தான் ஆதர்சமாகவும் ஆகப் பிடித்த எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். எனவே என்னுடைய ஆசான்களின் மதிப்புக்குரிய எழுத்தாளராயிற்றே என காஃப்காவைக் கொஞ்சம் பயபக்தியுடனேயே அணுகினேன். ஆனாலும் காஃப்காவின் எழுத்து என்னை ஈர்க்கவில்லை. இளம் வயதில் எனக்குத்தான் முதிர்ச்சி இல்லை என விட்டுவிட்டேன். பின்னர் உலக இலக்கியத்தில் ஓரளவு பரிச்சயம் கிடைத்த பிறகு அவரைப் படித்தேன். அப்போதும் அதே கதைதான். வெறும் சோர்வையும் அலுப்பையுமே தந்தது அவர் எழுத்து. கடினமான எழுத்து என்றும் சொல்ல முடியாது. கடினமான எழுத்துக்கு உதாரணமாக, கார்லோஸ் ஃபுவெந்தெஸின் தெர்ரா நோஸ்த்ரா, ஹூலியோ கொர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச் மற்றும் மிலோராத் பாவிச்சின் எல்லா நாவல்களையும் சொல்லலாம். காஃப்காவின் நாவல்கள் கடினமாக இல்லை. அலுப்பூட்டுவதாக இருந்தன. எத்தனை முறை படிக்க முயன்றாலும் என்னால் ஓர் அளவுக்கு மேல் தாண்ட முடியவில்லை.

ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது காஃப்காவை அலுப்பூட்டும் எழுத்து என்று மட்டுமே எளிமையாகப் புரிந்து கொண்டது தவறு என்று தோன்றுகிறது. இப்போதும் காஃப்காவின் எழுத்து எனக்கு அலுப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. சென்ற வாரம் கூட அவருடைய ‘உருமாற்றம்’, ‘விசாரணை’ ஆகிய இரண்டு நாவல்களையும் படிக்க எத்தனித்தேன். முப்பது பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. ஆனால் இது ‘அலுப்பூட்டும் எழுத்து’ என்று மட்டுமே புரிந்து கொள்ளத்தக்கதல்ல. இதில் என்னை அணுக விடாமல் வேறொரு தத்துவார்த்தப் பிரச்னையும் உள்ளது.

எதார்த்தத்தையும், வாழ்க்கையையும் மனிதனின் ஆன்மாவையும் காஃப்கா தனது எழுத்தில் அணுகிய விதமும் அதை விவரித்த பாணியும் முழுக்க முழுக்க நவீனத்துவம் மற்றும் ஐரோப்பிய கலையுணர்வு சார்ந்ததாக இருந்ததே காஃப்கா என்னை ஈர்க்காததன் காரணம். ஸோடர்பெர்கின் ‘காஃப்கா’ என்ற படத்தையும் பார்த்தேன். ஆனால் அது ஒரு த்ரில்லர். காஃப்காவின் வாழ்க்கை ஒரு திகில் படமா? புதுமைப்பித்தனின் வாழ்வை திகில் படமாக எடுக்க முடியுமா என்ன? ஸோடர்பெர்கின் படம் காஃப்காவின் எழுத்தில் இருக்கும் இருண்மைக்கும் துயரத்துக்கும் எதிராக உள்ளது. ஆர்ஸான் வெல்ஸின் ரசிகனான என்னால் அவர் எடுத்த காஃப்காவின் ‘விசாரணை’யைப் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. செக்கோஸ்லாவேகியாவைச் சேர்ந்த ஒரு யூதனை, ஒரு ஜெர்மன் எழுத்தாளனை சராசரி அமெரிக்க முகம் கொண்டவனாகக் காண்பதை என்னால் சகிக்க முடியவில்லை. ஆனால் ஸோடர்பெர்கின் ‘காஃப்கா’ நிஜமான காஃப்காவின் தோற்றத்தையும் பாவனையையும் கொண்டிருந்தார்.

கோபி கிருஷ்ணன் பற்றிய கட்டுரையில் காஃப்கா பற்றிய இத்தனை விவரங்கள் எதற்கு? ஏனென்றால், கோபியை வாசிக்கும் போதெல்லாம் எனக்குக் காஃப்காவின் ஞாபகம் வருகிறது. காஃப்காவை நாம் வெறும் எழுத்தாக மட்டுமே பார்க்க முடியாது. காஃப்கா என்றால் அதோடு அவரது வாழ்க்கையும் சேர்ந்திருக்கிறது. உதாரணமாக, அவருடைய ‘தீர்ப்பு’ என்ற சிறுகதை மிகச் சாதாரணமான ஒரு கதைதான். ஜார்ஜ் என்பவன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அதைத் தடுக்கும் அவன் தந்தை அவன் நீரில் மூழ்கிச் சாவான் எனச் சாபமிடுகிறார். பல குடும்பங்களில் நடக்கும் ஒரு சாதாரண சம்பவம். ஆனாலும் இந்தக் கதை ஏன் குறிப்பிடத் தகுந்ததாக மாறுகிறதென்றால், இது காஃப்காவின் வாழ்வில் நடந்தது. மேலும், அவரது புதினங்களையெல்லாம் விட அவர் தன் தந்தைக்கு எழுதிய 47 பக்கக் கடிதம் அவர் எழுத்துக்களில் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. அதன் இணைப்பு:
https://docs.google.com/document/d/1CK480j6khmHzAZYdR26Zu1Iu064uCo32JnESIulbFYw/preview

அந்தக் கடிதம் காஃப்காவின் நாட்குறிப்புகளிலோ கடிதங்களிலோ சேர்க்கப்படாமல் அவரது சிறுகதைகளோடு சேர்க்கப்பட்டு வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக காஃப்காவின் வாழ்வும் எழுத்தும் பிரித்துப் பார்க்க முடியாமல் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கோபி கிருஷ்ணனின் எழுத்தும் வாழ்வும் இவ்வாறாகவே எனக்கு அர்த்தமாகின்றன. அதன் காரணமாகவே கோபியை வாசிக்கும் போதெல்லாம் எனக்குக் காஃப்காவின் ஞாபகம் வருகிறது. காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கும் அதிகாரத்தின் பிரம்மாண்டமான தூண்களைத்தான் கோபி கிருஷ்ணனும் எழுதினார். தந்தையைப் போல் பொருளீட்டுதலையே வாழ்வின் அளவுகோலாகக் கொள்ளாமல் தோல்வியுறுதல், லௌகீக உலகின் மதிப்பீடுகள் எதையும் மதிக்காதிருத்தல் ஆகிய இரண்டு ஆதாரமான இழைகளே காஃப்காவையும் கோபி கிருஷ்ணனையும் இணைக்கின்றன. (மனிதனின் ஆன்மாவை லென்ஸ் மூலம் கண்டு பிடிக்க முடியாது என்று காஃப்கா சொல்வதாக ஸோடர்பெர்க் படத்தில் ஒரு வசனம் வருகிறது.)

காஃப்காவின் தந்தை உழைப்பால் உயர்ந்தவர், குழந்தைகளுக்கு சௌகரியமான வாழ்வை அளித்தவர், பிரதியாக அவர் காஃப்காவிடமிருந்து எதிர்பார்த்தது காஃப்காவின் முன்னேற்றத்தை மட்டுமே. ஆனால் காஃப்கா தன் தந்தையின் மீது அன்பு பாராட்டவில்லை. ஏனென்றால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கு நீதிபதியின் மீது அன்பு இருக்குமா? இதுதான் காஃப்காவின் வாழ்க்கை முழுவதும் நீண்ட துயரம். அவர் வாழ்வை விசாரணை செய்யும் நீதிபதியாகவே விளங்கினார் தந்தை. கோபியிடம் அந்தத் தந்தை மனநோய் மருத்துவராகவும், அலுவலக அதிகாரியாகவும், மனைவியாகவும், மாமியாராகவும், வீட்டுக்கார அம்மாளாகவும் வருகிறார். காஃப்காவின் துயரம் இருண்மை நிரம்பிய அபத்தக் காட்சிகளாக இருக்க, கோபியின் துயரம் அனைத்தும் பகடியாக மாறியது. காரணம், கோபி பின்நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவர்.

காஃப்கா

***

மிலன் குந்தேரா, ஓரான் பாமுக் போன்ற பல ஐரோப்பிய எழுத்தாளர்களின் அத்தனை நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்து படித்துக் கொண்டிருக்கும் இலக்கியப் பிரியர்களான நாம் ஏன் கோபி கிருஷ்ணன் போன்ற உள்ளூர் சாதனையாளர்களைப் படிப்பதே இல்லை என்ற கேள்வியை நான் கேட்டுக் கொள்ளாத நாளே கிடையாது என்று சொல்லலாம். இலக்கியத்திலும் கூட நாம் வெளிநாட்டு மோகம் கொண்டுதான் திரிகிறோமோ எனத் தோன்றுகிறது. ஓரான் பாமுக் துருக்கியைச் சேர்ந்த ஒரு சமகால எழுத்தாளர். அவர் தன்னுடைய முன்னோடி என அஹ்மத் ஹம்தி தம்ப்பினார் (Ahmet Hamdi Tanpinar) என்று சொல்கிறார். இவரது காலம் 1901 – 1962. சென்ற தலைமுறை எழுத்தாளர். இவருடைய இரண்டு நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. ஆனால் கோபி கிருஷ்ணனை நமக்குத் தெரியாமல் இருக்கிறோம் என்பதே என் புகார்.

கோபி கிருஷ்ணன் அளவுக்கு சமகாலத் தமிழ் வாழ்வைப் பகடி செய்த ஓர் எழுத்தாளன் இல்லை என்றே சொல்லலாம். அவரது ‘காணி நிலம் வேண்டும்’ என்ற சிறுகதையைப் பார்ப்போம். அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து சென்றால் குழந்தைகளின் நரகல். இரவில் மாதத்தில் 20 நாட்கள் எரியாத தெரு விளக்குகள்.

வீடு என்பது ஒரே ஒரு அறை. ஜன்னல் என்பது வெளிச்சம் வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு திறப்பு. அதற்குக் கதவு இல்லை. வெளிச்சம் சிறிதளவு எப்படியோ உள்ளே வரும். காற்று என்பது விந்தை. மழை பெய்தால் திறப்பின் வழியே தாராளமாக உள்ளே தண்ணீர் வரும்.

இரண்டு கழிப்பறைகள். ஒன்று வீட்டுக்காரர்களுக்கு. இன்னொன்று குடித்தனக்காரர்களுக்கு. கழிப்பறையில் வாந்திதான் வரும்.

இதெல்லாம் கோபியின் சுய அனுபவம் என்பதை மறந்து விடக் கூடாது. அடுத்து வருவது குளியலறைக் காட்சி.

குளியலறை இன்னொரு விந்தை. ஒரு குறுகிய பாதை. ஒரு பம்ப். பின்னால் வெற்றிடம். பக்கவாட்டில் கழிப்பறைகளின் பின்பக்கச் சுவர். வெளியேயிருந்து பார்த்தால் பம்ப் தெரியும். கதவு என்பது வீட்டுக்காரர்களுக்கு அனாவசியச் செலவு. குளிக்க வேண்டுமென்றால் ஒரு பக்கெட்டை குறுகிய பாதை உள்ளே முடியும் இடத்திலும் கழிப்பறைகளின் சுவர் பாதையின் சுவரைத் தொடும் இடத்திலும் வைக்க வேண்டும். வெளியில் இருந்து பார்த்தால் பாதி பக்கெட் தெரியும். குளியலறைக்குள் வருமுன் பக்கெட் வெளியே தெரிகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, ‘யாரது?’ என்றோ, ‘யார் உள்ளே?’ என்றோ அவரவர் விருப்பப்படி கனிவாகவோ, அதட்டியோ அவரவர் மனநிலையைப் பொறுத்துக் குரல் கொடுக்க வேண்டும். குளிப்பவர் உள்ளேயிருந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது பிறிதொரு விந்தை. ஆணாக இருந்தால் மனைவியின் பெயரைச் சொல்லி அவளது கணவன் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக நான் ‘தாரா வீட்டுக்காரர்’ என்று சொல்வேன். பெண்ணாக இருந்தால் பெயர் சொல்வாள். தாயாக இருந்தால் குழந்தையின் பெயர் சொல்லி, அதன் அம்மா என்று சொல்வாள். இந்தக் கட்டுக்கோப்பையும் மீறி எனக்கு ஒரு தடவை விபரீதம் நிகழ்ந்து விட்டது. அம்புச்சம்மாள் என்ற மூதாட்டி எதிர்ப்பகுதியில் குடியிருந்தாள். அவள் நான் குளிக்கும்போது திடீரென்று உள்ளே பிரவேசித்து, பேயறைந்தாற் போல முகம் மாறி வெளியேறினாள். அத்துடன் விட்டிருக்கலாம். தாராவிடம், ‘இனிமேல் உன் புருஷனை ஜட்டி போட்டுக் கொண்டு குளிக்கச் சொல்’ என்று வேறு சொல்லி வைத்தாள். தான் செய்த குற்றத்தை மறைக்க மற்றொருவன் மேல் குற்றச்சாட்டு. வீடு முழுவதும் செய்தி பரவி விட்டது. ஏனோ இந்த விபரீதம் மற்ற ஆண்களுக்கு ஏற்படவில்லை. வீட்டுக்காரம்மாள் ஒரு கட்டளை பிறப்பித்தாள். எல்லா ஆண்களும் ஜட்டி போட்டுக் கொண்டுதான் குளிக்க வேண்டும். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது.

சிறு வயதிலிருந்தே நிர்வாணமாகத்தான் குளித்துக் கொண்டிருந்தேன். அதில் எந்தக் கேடும் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. இவர்கள் செய்த ரகளையில் நான் ஏதோ அம்புச்சம்மாளுக்காகப் பிரத்தியேகமாக அவ்வாறு முறைகேடாக நடந்து கொண்டு விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி, மகத்தான ஒரு குற்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தி, ஒரு வாரம் தலையைக் குனிந்து தரையைப் பார்த்து நடந்து கொண்டிருந்தேன். என்னுள் ஒரு பிரகாசமான எண்ணம் உதித்தது. அதன்படியே குளிக்கும்போது சற்று உரக்க ஒரு ஹிந்திப் பாட்டைப் பாடிக் கொண்டு குளிக்க ஆரம்பித்தேன். எந்த வேளையில் ஆரம்பித்தேனோ, அடுத்த நாள் அவ்வாறு செய்து கொண்டிருக்கையில் வீட்டுக்காரம்மாளுடைய குரல் கணீரென்று ஒலித்தது. ஜமீந்தாரிணிகள் குரல் வேறு எவ்வாறு இருக்கும்? ‘யாரது பாத்ரூமிலே பாட்றது?’ ஹிந்திப் பாட்டும் குளியலும் கசந்தே விட்டன. வாழ்க்கை சத்தியமாக வெறுத்து விட்டது.

இன்னொரு கதையில் வீட்டுக்காரம்மாளின் மகனுடைய ஜட்டி காணாமல் போய்விடுகிறது. அதனால் அந்தக் குடித்தனத்தில் ஏற்படும் தொடர் சம்பவங்கள் பற்றிய அது ஒரு ரகளையான கதை.

***

2003-ல் நான் சென்னை சின்மயா நகரில் இருந்தேன். கோபி பாடியில் இருந்தார். மாதம் ஒருமுறை சந்திப்பு. கோபி வீட்டில். ஏற்கெனவே எழுதியிருந்தபடி தண்ணீர் குடிக்காமல் போவேன். அப்போது நான் மனநோய் மருத்துவமனை என்று சொல்லத்தக்க (பார்க்கவும்: ராஸ லீலா) ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் நானும் ஒரு மனநோயாளி போலவே இருந்தேன். என்னுடைய அதிகாரி ஒரு முற்றிய மனநோயாளியாக இருந்தார். ஏதோ கோபத்தில் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றும். உதாரணம் சொல்கிறேன். அலுவலகத்தில் இருந்த கடைநிலை ஊழியர்களில் பெண்களைத் தேர்ந்தெடுத்து காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்தரை வரை அலுவலகத்தைச் சுற்றிலும் இருந்த பெரும் பெரும் மரங்களிலிருந்து விழும் இலைகளைத் திரட்டி கொளுத்தச் சொல்லுவார் அதிகாரி. அப்போதுதான் தரை சுத்தமாக இருக்குமாம். நான் அந்தப் பெண் அதிகாரியின் ஸ்டெனோ. அந்தக் கடைநிலை பெண் ஊழியர்களை இலைகளைப் பெருக்கச் சொல்லி மேற்பார்வை இட வேண்டியது அடியேனின் பணி. ‘அறிவழகன்… (என் அலுவலகப் பெயர்) நீங்க ரொம்ப லீனியண்ட்டா இருக்கீங்க… விரட்டி வேலை வாங்குங்க அவுங்களை’ என்று பெருங்குரலெடுத்து அலறுவார் அந்தப் பெண் அதிகாரி. இந்தச் சூழலில் ஒரு மாதம் கோபி கிருஷ்ணனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே ஆண்டு மே மாதம் முதல் தேதி கோபி கிருஷ்ணனிடமிருந்து ஒரு போஸ்ட் கார்டு வந்தது. அவர் எழுத்து குண்டு குண்டாக இருக்கும். உங்களை அவசியம் பார்க்க வேண்டும். வீட்டுக்கு வாருங்கள். எப்போது வந்தாலும் வீட்டில் இருப்பேன்.

நான் அந்தப் பெண் அதிகாரியிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கிக் கொண்டு இருந்தேன். சனி, ஞாயிறெல்லாம் வரச் சொல்லி பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார். இலைகள் மேல் அந்த அம்மணிக்கு என்ன கோபமோ? இரண்டு நாள் கழித்து கோபியிடமிருந்து ஃபோன் வந்தது. உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நாளையாவது வர முடியுமா? அவசியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகவில்லை. இதோ இதோ என்று கிளம்பிக் கொண்டிருந்தேன். மே பத்தாம் தேதி கோபி கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அடப்பாவி, எமன் கிட்டே நெருங்கி விட்டான் என்று சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?

மரணத்தின் துயரத்தையும் வலியையும் காலம் மாற்றி விடும் என்பார்கள். காலத்துக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது. ஆனால் கோபியின் மரணத்தினால் ஏற்பட்ட வலியை அந்தக் காலத்தினால் கூட ஆற்ற முடியவில்லை. சாவுக்கும் நான் போகவில்லை. கோபியின் மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என்னை மன்னித்து விடுங்கள் கோபி.