Saturday, 2 January 2016

கடைத்தேறினவன் காதல் - சார்வாகன்

""The inferno of the living is not something that will be; if it exists, it is already here, the hell of our daily life, formed by living together. There are two ways of enduring it. The first is what many find easy: accept hell and become a part of it, until you no longer see that it is there. The second is risky and needs constant attention and learning: in the midst of hell to look for, and know how to recognize what is not hell, to make it last, to give it space."

Italo Calvino
'Invisible Cities'

கடைத்தேறினவன் காதல் - சார்வாகன்

சார்வாகன்,
 (1929 - 2015 )
தான் எல்லாரையும்போல இருப்பதாகத்தான் அவன் சின்னப் பையனாக இருந்தபோது நினைச்சுக்கொண்டிருந்தான். சொல்லப்போனால் தான் மற்றவர்களைவிட ஒரு படி உசத்தி என்றுகூட அவன் நம்பியிருந்தான். நடமாடும்போதும்,  வேலை செய்கிற இடங்களிலும் அவன் அடிக்கடி முட்டிக்கொண்டு, காயம்பட்டுக்கொள்கிறது வயசு ஏற ஏறத்தான் அவனுக்குத் தெரியவந்தது. மற்றவர்களோடு பேசிப் பழகுகிறபோது அவர்களுடைய குரல்தொனி மாற்றங்களிலிருந்தே எதிரே இருப்பவர்களுடைய மனோநிலைகளை அவன் ஊகித்து அறிந்துகொள்ள வேண்டியிருந்ததும் நாளாவட்டத்தில் அவனுக்குப் புலப்பட்டது. வெளிச்சம், இருட்டு, நிறம், அழகு என்றெல்லாம் எல்லாரும் சொல்வதனுடைய அர்த்தமும் உண்மையில் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதும் புரியவந்தது. அப்போதான்,தன்னிடம் என்னமோ ஒரு கோளாறு இருக்கிறது, கண் என்று சொல்கிறார்களே அது தனக்கு இல்லையோ, அல்லது அது இருந்தும் வேலை செய்யவில்லையோ என்று நினைத்தான். இந்த மாதிரி ஒரு குறை இருப்பது அவனுக்கு ரொம்பவும் துக்கத்தைக் கொடுத்தது. மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்று நினைத்திருந்ததற்கு  மாறாக அவர்களைவிட மட்டமாகிவிட்டோமே என்கிற நினைப்பு, அவன் துக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. வைராக்கியத்தினால் அவன் நடவடிக்கைகளெல்லாம் மாறிப்போச்சு. கவனமாகச் செல்ல வேண்டிய இடங்களில் வேகமாக முண்டியடித்துக்கொண்டு போவான். மெல்ல போக வேண்டிய சமயத்தில் பறப்பான். பென்மையாக வார்த்தை சொல்ல வேண்டியபோது  உரத்த குரலில் அடித்துப்பேசுவான். காயம் பட்டால் கண்டுகொள்ளமாட்டான். வேணுமென்றே  இருட்டில் விரைந்து போவான். விஷயம் தெரியாததனாலே ஊரிலே எல்லாரும் அவனை மிகத் தைரியசாலி என்றும், தன்னலமற்றவன் என்றும் புகழ்ந்து போற்றினார்கள் ! மற்றவர்கள் அவனைப் புகழும்போதும், மரியாதை செய்யும்போதும் அவனுக்கு உச்சி குளிர்ந்துபோகும். அந்தச் சமயங்களிலே தன்னுடைய உடம்பு பூராவும் உள்ளேயும் வெளியேயும் ரணமாகி ரணங்களிலே பல ஆறாமல் சீழும், நீரும் வடித்துக்கொண்டிருப்பதை அவன் மறந்திபோவான். சில வருஷங்களுக்குபு பிறகு இந்தப்புண்களெல்லாம் எத்தனை  அருவருக்கதக்கவையாக இருந்தன என்பது  அவனுக்கே தெரியாமல்போச்சு !

பக்கத்து மாநகரத்துக்கப் போகப் புது வழி கண்டு பிடிக்க வேணும் ; அங்கே போய்த் தனக்குப் பார்வை நிஜமாகவே இல்லையா, புண்களும் நிஜமாகவே இருக்கின்றனவா, உண்மையாகவே அவை ஆறாமல் இருக்கின்றனவா என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேணுமென்று பல நாளாக அவனுக்கு ஆசை. தவிர, மாநகரத்துக்குப் போய் வந்தாலே ஊரிலே அவன் மேல் இருந்த மதிப்பு இன்னும் பலமடங்கு ஜாஸ்தியாகிவிடும். ஆகவே அவன் தன் ஊரைவிட்டு மாநகரத்துக்குக் கிளம்பினான். ‘பக்கத்து’ என்று சொன்னேனேயொழிய அந்த மாநகரம் ஒண்ணும் பக்கத்திலே இல்லை. ஆனாலும், தூரம் தெரியக்கூடாது என்றோ, வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாரும் அதை ‘பக்கத்து மாநகர்’ என்றே குறிப்பிட்டார்கள். அந்த மாநகரத்துக்கு அவன் வழி தேடிப் போய்க்கொண்டிருந்தான். அப்போது வழியில் குறுக்கே இருந்த ஒரு குழிக்குள்ளே இறங்கிவிட்டான். இறங்கிவிட்டானாவது ? விழுந்து விட்டான்.
,
அது ஒரு மாயக் குழி. அதிலே விழுகிறபோதும் மெல்ல இறங்குகிற மாதிரிதான் இருக்கும். அந்தக் குழி நாற்ற விஷச் சேறு நிரம்பினது. ஆனாலும் அந்தக் குழி இருப்பதே எல்லார் கண்ணுக்கும் தெரியாது. சில பேருக்கு, சில சமயந்தான் புலப்படும். அதேபோலத்தான் அதன் துர்நாற்றமும். முதலிலே நல்ல வாசனை மணக்கிற மாதிரி இருக்கும். குழிக்குள்ளே ‘இறங்கி’ விட்டவர்களுக்கு ஆரம்பத்தில் சந்தனக் கலவை கரைத்த வெந்நீர்த் தொட்டிக்குள் இருப்பதுபோலச் சுகமாகவும், மணமாகவும் இருக்கும். காலப்போக்கில் சேற்றின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்துடன் கலக்க ஆரம்பிக்கும். தாங்க முடியாத வேதனைகள்  தலைதூக்க ஆரம்பிக்கும். ஆரம்ப காலத்தில் வேதனை எப்போதாவதுதான் ஏற்படும். நாளாக ஆக வேதனைக் காலம் நீடித்து, கடைசியிலே சதா காலமும் இருக்கும். உடம்புக்குள்ளே எல்லா அங்கங்களும் அழுகி வேதனையால் பீடிக்கப்பட்டாலும் உயிர் போகாது. அந்தக் குழியைப்பற்றி எல்லாரும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அது எங்கே இருக்கிறதென்று நிச்சயமாக யாருக்கும் தெரியாது. வாஸ்தவத்தில் அது ஓரிடத்தில்தான் இருக்குமென்றில்லை. ஒவ்வொருவர் போகிற வழியிலும், எந்த மார்க்கமானாலும் சரி, எதிர்பாராத சமயத்தில் அது எதிர்ப்படலாம். அது இருப்பதைக் கண்டுகொண்டால் அதிலே விழ முடியாது. அப்பேர்ப்பட்ட குழி அது.

அந்தக் குழிக்குள்ளே அவன் விழுந்து விட்டான். இத்தனை இதமாக இருக்கிற வெந்நீர்த்தொட்டி, அதுவும் சந்தனக் கலவை சேர்த்தது இருப்பது இவ்வளவு நாள் தனக்குத்தெரியாமல்போச்சே என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போவாவது கண்டுபிடித்தோமே என்று ஆனந்தத்துடன், குழிக்குள் துளைந்துகொண்டிருந்தான். ஆரம்பித்த பயணத்தை முடிக்க வேணும் என்கிறதெல்லாம் அவனுக்கு மறந்தேபோச்சு. நாட்கள் செல்லச் செல்ல அவன் உடம்பில் அங்கேயும் இங்கேயும் வலி ஏற்பட  ஆரம்பித்தது. சில சமயம் ஒரு பல் வலிக்கும். வேறே சமயம் வலதுகால் பெருவிரல் விரிஞ்சுபோகிற மாதிரி வலிக்கும். இன்னொரு சமயம் ஒரு கண்ணுக்குள்ளே அதன் வேரில் தாங்கமுடியாத வலி பிறக்கும். மற்றொரு சமயம் இடுப்பிலே. அப்புறம் மார்பை நசுக்கி நெருக்கிறாப்போல இருக்கும். சேற்றிலே அதிகமாகத் துளைத்தால் இதமாக இருக்கும். அசதியினால் துளைவதை நிறுத்தினால் வேதனை ஓரிடத்தில் மாத்திரமல்லை, பல இடங்களில் புதுசு புதுசாக ஆரம்பித்துவிடும். இப்படிக் கொஞ்சநாள் கழிந்தது. பிறகு உடம்பு வலியுடன் மனசுக்குள்ளே துக்கம் சேர ஆரம்பித்தது. துக்கம் தலையெடுத்த பிறகு தான் அந்தக் குழியைப்பற்றிப் பல பேர் எச்சரித்திருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் சொன்னதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றே அவன் நினைத்திருந்தான். வேதனையும், துக்கமும் அதிகமாகி அவன் உடம்பையும் உயிரையும் ஆக்ரமித்த பிறகுதான் அவர்கள் சொன்னதெல்லாம் நிஜமே, இதுவே அந்த மாயக்குழி என்கிற ஞானம் அவனுக்குப் பிறந்தது. தான் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆனால், தப்பித்துச் செல்ல குழியின் கரைகளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கஷ்டந்தான் அதிகமாச்சு. பயந்தான் அதிகமாச்சு.

ஒரு நாள் அந்தப் பக்கமாக ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள்.  அன்பையும் கருணையையும் சேர்த்துப் பிசைந்து பிடித்துவைத்திருந்த இருதயம் கொண்டவள். அவள் அந்தப்பக்கம் போய்க்கொண்டிருந்தாள். குழிக்குள் விழுந்துகிடந்த அவனைப் பார்த்துவிட்டாள். தேன் கிண்ணத்துக்குள் விழுந்து செத்துக்கொண்டிருக்கும் ஈயைப்போலத் திக்குமுக்காடிக்கொண்டிருந்த அவனைப் பார்த்து விட்டாள். கொஞ்சமும் தயங்காமல் அந்தப் பள்ளத்துக்குள்ளே இறங்கினாள். சிரித்த முகத்தோடு ஒரு கையால் அவன் கையைப் பிடித்து இன்னொரு கையால் அவனைத் தாங்கினபடி அவனை மெல்ல வெளியே கொண்டுவந்து  கரையேற்றிவிட்டாள். அவனுக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போச்சு. ‘இத்தனை நாள் கரை தெரியாமல் கஷ்டப்பட்டேன், ஒரு நிமிஷத்திலே கொஞ்சமும் கஷ்டமேபடாமல் வெளியே இழுத்துக்கொண்டு வந்துவிட்டாளே’ என்று அவனுக்கு ஆச்சரியம். இவள் சாதாரண மனுஷியாக இருக்க முடியாது என்று அவனுக்குத் தோணியது. ஆச்சரியத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அவளைப் பார்த்தான். அவளைப் புதைசேறு இழுக்கவில்லை என்கிறது மாத்திரமில்லை, அவள் மேல் சேறு ஒட்டி இருக்கவே இல்லை! மாறாக அவள் மேனி, புடம் போட்ட தங்கம் போலப் பளபளத்து மின்னிக்கொண்டிருந்தது. அவள் உள்ளத்திலிருந்து ஊறி வந்த கருணை அவள் மார்பிலிருந்து பாலாகப் பெருகி வழிந்துகொண்டிருந்தது. அவளுடைய பொன்னான உடம்பு, வெண்மையாக வடிந்துகொண்டிருந்த கருணை அமிர்தம், அவள் கண்களிலிருந்து ஒளிர்ந்துகொண்டிருந்த அன்பு ஜோதி இவற்றையெல்லாம் அவன் தன் கண்ணால் கண்டான். அவள் கை பட்ட விசேஷத்தால் தன் பார்வையின் குறைபாடுகள் எல்லாம் அறவே ஒழிந்துவிட்டதாகவும், ஒளி, நிறம், அழகு எல்லாம் வாழ்நாளிலேயே முதல் முதலாகத் தன் கண்களுக்குத் தெரிவதாகவும் அவனுக்குப் பட்டது.

மறுபடியும் அவளைப் பார்த்தான். முதலில் தேவதை போலத் தெரிந்த அவள், இப்போது அவனுக்கு ரொம்பவும் அறிமுகமானவள்போலவும், எப்போதோ நெருங்கிப் பழகினவள்போலும் இருந்தது. “நீ யார்?” என்று அவன் கேட்க வாயெடுப்பதற்குள் கணீரென்று சிரித்தபடி, “என்னைத் தெரிகிறதோ? ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே உங்க வீட்டுக்கு தினமும் வருவேனே, நாம ரெண்டு பேரும் பாண்டி, பல்லாங்குழியெல்லாம் விளையாடுவோமே, ஞாபகம் வருகிறதோ?” என்றாள். அவள் குரலைக்கேட்டதும் அவனுக்கு அடையாளம் புரிந்துவிட்டது.

அப்போது அவள் சின்னப் பெண். அவன் இருந்த தெருவிலே அவர்களும் குடியிருந்தார்கள். தினம் அவள் அவன் வீட்டுக்கு வந்து விளையாடுவாள். விளையாடிக்கொண்டிருக்கும்போது சில சமயம், அவளைப் பிடித்து நசுக்கிக் கடித்துத் தின்றுவிடலாம்போல அவனுக்குத் தோணும்! அவளை அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. கொஞ்ச நாளைக்கப்புறம் ரெண்டு குடும்பத்தாரும் வெவ்வேறு இடங்களுக்குக் குடிமாறிப் போனார்கள். பிறகு அவளை அவன் சந்திக்கவே இல்லை. எப்போதாவது அவள் நினைவு அவனுக்கு வரும். அப்படி நினைவு வரும் போதெல்லாம் மனசுக்கு சந்தோஷமாக இருக்கும். கூடவே கொஞ்சம் ‘முணுக்’ கென்று வலிக்கும். அதெல்லாம் அவன் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய பழைய விளையாட்டுத் தோழிதான் இப்போது மாயக் குழிக்குள்ளேயிருந்து கரையேற்றி மீட்டாள், கண்ணும் தன் கை விசேஷத்தினால் கொடுத்தாள் என்று உணர்ந்துகொண்டபோது அவன் சந்தோஷத்துக்குக் கங்கு கரையே இல்லாமல் போச்சு. “அடே, நீயா ! உன்னாலேதான் உயிர் பிழைச்சேன். கோடிப் புண்ணியம் உனக்கு” என்று சொல்லி அடக்க முடியாத ஆனந்தத்தினால் சிரித்தபடியே அவள் முகத்தைப் பார்த்தான். அவள் இப்போ தனக்கு மிகவும் நெருங்கியவளாய் விட்ட மாதிரி அவனுக்குத் தென்பட்டது. பழைய நாட்களைப்பற்றிப் பேச ஆரம்பித்தான். பேசிக்கொண்டிருக்கும்போது, “உன்னை அப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னைப் பார்க்கிறபோதெல்லாம் அப்படியே கடிச்சுத் தின்னுடலாம்போல இருக்கும்” என்று தன்னை அறியாமலேயே சொல்லிவிட்டான். “அப்படியா! எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும். ஊரை விட்டுப் போன பிறகுகூட அடிக்கடி உன்னை நினைச்சுக்கொள்வேன். நீ பேரும் புகழும் பெற்று உலகமெல்லாம் உன்னைக் கொண்டாடும்போது எனக்கே அந்தக் கியாதி கிடைச்ச மாதிரி பெருமைப்பட்டு பூரிச்சுப்போவேன். நாம விளையாடுவமே, அப்போ சில சமயம் எனக்குங்கூட உன் மேலே ரொம்ப ஆசையாக இருக்கும்” என்று அவள் மூச்சுவிடாமல் பேசி முடித்தாள். அவனை ‘நீ’ என்று அவள் குறிப்பிட்டபோது பன்னீரில் குளிச்சதுபோல் இருந்தது! ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சந்தோஷமிகுதியானாலே சிரித்தபடி கட்டித் தழுவிக்கொண்டார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை. கற்பனைக் கதையானாலும் நிஜமாக நடந்ததாச்சே. நம் இஷ்டம்படி முடித்துவிட முடியுமா? மீதையையும் கேளுங்கள். “என் பேரும் புகழும் கிடக்கட்டும். நீ எங்கே இருக்கிறே, என்ன செய்கிறே, எப்படி இருக்கே? எல்லாம் விவரமாச் சொல்லு” என்று ஆவலோடே அவன் கேட்டான். அவள் அசுவாரசியமாக, “ ம்ம். . இருக்கேன். . பூமிக்குப் பாரமாக, சோற்றுக்கு எமனாக இருந்துகொண்டிருக்கேன்” என்றாள். அதுக்கு மேலே தன்னைப்பற்றி அவள் ஒண்ணும் சொல்ல விரும்பவில்லை. அவன் திரும்பத் திரும்பக் கேட்டபோது, “ அதுவெல்லாம் குப்பை, அதையெல்லாம் கிளறி இப்போ வேதனையைக் கிளப்புவானேன் ” என்று சொல்லிவிட்டாள். அவளோடு பேசப் பேச, அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அவள் மேல் அன்பு பெருகி ஆழ்ந்து மனசுக்குள்ளே ஊறி, உயிருக்குள்ளே காதலாகப் பரவினது. வாழ்க்கையிலேயே இப்போதான் சந்தோஷமாய் இருக்கிறதாக அவன் உணர்ந்தான். அவளுடன் எப்போதும் இருந்தால் தன் வாழ்க்கை நிறைவு பெறும், தனக்கு ஒரு குறைவும் வராது என்று அவனுக்கு தோணியது.  அதை அவளிடம் சொன்னான். அதை மாத்திரம் இல்லை. தன்னுடைய ஆசைகள், பயங்கள், குறைகள், நல்லவை, கெட்டவை, மணமானது, நாற்றமடிப்பது எல்லாவற்றையும் ஒளிக்காமல் அவளிடம் சொல்லிவிட்டான். அவள் முகத்தில் சஞ்சலம் தெரிந்தது. “ நான் தப்பாகக் கேட்டுவிட்டேனோ ? நீ . .நீ வேறே யாரோடாவது . . உனக்கு வேறே யாராவது . . ? ” என்று அவன் தயக்கத்துடன் கேட்டான்.  “ அதெல்லாம் போச்சு இப்போ தனிக்கட்டைதான் ” என்று தணிந்த குரலில் அவள் சொன்னாள். “ பின்னே என்ன தயக்கம் ? நானும் என் பந்தங்களையெல்லாம் உதறிவிட்டு வந்துவிடுகிறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புது வாழ்க்கை ஆரம்பிச்சு இனிமேலாவது சந்தோஷமாக இருக்கலாம். என் அன்பிலே உனக்கு சந்தேகம் இருந்தால் புலிப் பாலை வேணுமானாலும் கறந்து கொண்டுவந்து அதன் நிஜத்தை நிரூபிக்கிறேன் ” என்று அவன் வசனம் பேசிக் கெஞ்சினான். “ உனக்கு என் மேலே அன்பு இருக்கு என்கிறதுலே எனக்குச் சந்தேகமில்லை. இருந்தாலும் . . . . ” என்று அவள் இழுத்தாள்.

ரொம்ப நேரம் அவன் வாதிட்டுப்பார்த்தான். அவள் தன்னைக் கரையேற்றிப் புனர்ஜென்மம் கொடுத்ததிலிருந்து தன் வாழ்வே மாறிவிட்டதையும், தன்னுடைய பழைய வீடு வாசல் எல்லாவற்றையும் துறந்து இனிமேல் எப்படிப் புதிய வாழ்வை அமைத்துக்கொள்ளப்போகிறான் என்பதையும், இப்போ கண் வந்துவிட்டதனால் தன் குறைகளெல்லாம் நன்றாகத் தெரிகிறதனாலே அவற்றை நீக்கிவிடுவான் என்றும், இன்னும் என்னவெல்லாமோ சொன்னான். அவன் சொன்னதையெல்லாம் அவள் கேட்டாள். தலையைப் பிடித்துக்கொண்டு யோசனை செய்தாள். அவன் தன்னையே பழித்துப் பேசிக்கொண்டபோது அவன் வாயைப்பொத்தி முத்தமிட்டாள். அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளுக்கும் அவன் மேலே கொள்ளை ஆசைதான் என்றாள். “ இருந்தாலும் . . ” என்று தயங்கினாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவளாய், “ நான் சொல்கிறதைக் கேட்டு நீ கோவிச்சுக்கொள்ளக்கூடாது ” என்று பீடிகை போட்டு ஆரம்பித்தாள். “ நீ சொல்கிறதெல்லாம் சரியாக இருக்கிற மாதிரி இருந்தாலும்` அது சரியில்லை என்று எனக்குத் தோணுகிறது. இத்தனை நாள் கண் இல்லை, இப்போ என்னமோ திடீர்னு பார்வை வந்துட்டதுன்னு சொல்கிறே. ஆனாலும் இதுவரை கண் இருந்ததா, இல்லையா என்கிறதே உனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. உன் கஷ்டமெல்லாம் வேறே ஏதாவது கோளாறினாலே வந்ததோ என்னமோ ? ‘ இத்தனை நாள்வரை நாடகத்தில்போலப் பொய் வாழ்வு வாழ்ந்தேன், இனிமே உன்னோடதான் நிஜ வாழ்வு வாழப்போகிறேன்னு ’ சொல்கிறே. நீ சொல்கிறதுக்கெல்லாம் நியாயம் காட்டுகிறே, நீ சொல்கிறது எதுவும் பொய்யின்னு நான் சொல்லவில்லை. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். உனக்கு உண்மைக்கும், போலிக்கும், நாடகத்துக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதில்லைன்னு எனக்குத் தோணுகிறது. இப்போ பழைய வாழ்க்கையை நாடகம் என்று சொன்னாலும் அப்போ அதை நிஜம் என்று நம்பித்தானே வாழ்ந்தே? இப்போ நீ சொல்கிற மாதிரி புது வாழ்வு, நிஜ வாழ்வு என்று நம்பினாலும் அதுவே பின்னொரு நாள் நாடகமாகத் தெரியாதுன்னு என்ன நிச்சயம் ? ‘ மாயக் குழி வேதனையையும் துக்கத்தையும் கொடுத்தாலும் அதிலே சுகத்தையும் அனுபவித்தேன்’னு சொல்கிறே. ‘ இது மாயக்குழி’ன்னு தெரிஞ்சவுடனே மாயமெல்லாம் மறைஞ்சு போய் அதன் கரை தெரிய வேணுமே ?

கரை  தெரிஞ்ச பிறகு யாரும் அந்தக் குழிக்குள்ளே இருக்கமாட்டார்களே. நீயோ நான் வருகிறவரை அதிலேயே குளிச்சு முழுகி நீச்சலடித்துக்கொண்டிருந்தே ! எனக்கு இதையெல்லாம் எப்படிப் புரிஞ்சுக்கிறதுன்னு தெரியலை. தவிர, உன்னுடைய மூச்சக் காற்றிலே மாயக்குழியினுடைய நெடி அடிக்கிறது. உன் பேரிலிருந்த ஆசையினால்தான் நான், விஷக்குழியாக இருந்தாலும் பரவாயில்லேன்னு குதித்துக் கை கொடுத்தேன். என் ஆயுசுலே இது ஒரு நல்ல காரியமாவது செய்கிறேன்னு அப்போ எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட்டது. உனக்கு விஷயம் தெரியாது, என் இருதயத்திலே ஏற்கனவே ஒரு பகுதி செத்துப்போயாச்சு. அதனுடைய இனிமையில்லாத மணம் பலரையும் என்னை வெறுக்கச் செய்கிறதுன்னு எனக்குத் தெரியும். உன்னோடே சேர்ந்தா, எல்லோரும் என்னை இன்னும் அதிகமாக வெறுக்கிறது மாத்திரமில்லை, பேரும் புகழுமோட இருக்கிற உன்னையும் எல்லாருடைய வெறுப்புக்கு ஆளாக்கி, உன்  பெயரையும் கெடுத்துவிடுவேன்னு எனக்குப் பயமாகிறது. நமக்குள் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு இருக்கிற ஆசை இந்த மாதிரியான வெறுப்புக்களை மாற்றிவிடுமா என்ன ? நீயே  சொல்லு. எல்லாரும் நம்ம ரெண்டு பேர் மேலேயும் காறித் துப்புவதை அது தடுத்துவிடுமா ? உன் மேலே எனக்கும் கொள்ளை ஆசைதான். இருந்தாலும் என்னாலே எல்லாருடைய ஏச்சுப் பேச்சுகளையும் தாங்கிக்கொள்ள முடியுமின்னு தோணவில்லை. இத்தனை சந்தேகத்தையும், பயத்தையும் அடி வயத்துலே கட்டிக்கொண்டு எப்படி, நான் உனக்கு என்ன சுகத்தைக் கொடுக்க முடியும் ? என்ன சுகத்தைக் காண முடியும்?  யோசனை பண்ணிப்பார்த்தா நாம ரெண்டு பேரும் இப்போ இருக்கிற நிலையிலே நீ சொல்கிறது, நான் ஆசைப்படுகிறது நிறைவேறுமின்னு தோணவில்லை. என் அதிர்ஷ்டம் இவ்வளவுதான்னு நினைச்சுக்கொண்டு  கொஞ்ச நேரமாவது உன்னைக் கை தொட்டு, கட்டி அணைச்சு, கூடிப்பேசி சுகப்பட முடிஞ்சுதே, அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்கொண்டே மீதி நாளை நான் கழிக்கிறதுதான் விவேகம் ” என்று கண்ணீர் விட்டபடி சொல்லிமுடித்தாள்.

ஏமாற்றம் பொறுக்க முடியாமல், ரெண்டு கைகளாலேயும் தலையைத் தாங்கியபடி, நிற்கவும் சக்தியில்லாதவனாய் அவன் அப்படியே உட்கார்ந்துவிட்டான். எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று அவனுக்கே தெரியாது. பிறகு மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தான். அவளைக் காணோம். அவனுக்கு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. விஷக் குழிக்குள் விழுந்து உயிரைப்போக்கிக் கொள்வதே மேல் என்று நினைத்தான். குழிக்குள்ளே குதிக்கப்போனான். ஆனால், அவனால் அதற்குள் குதிக்க முடியவில்லை ! அவளுடைய கைபட்ட விசேஷம், தன் கண்ணுக்குத் தெரிந்தாலும் அந்தக் குழிக்குள்ளே குதிக்கும் சக்தி தனக்குக் கிடையாது, அவன் அந்த மார்க்கமாகத் தப்பி ஓட முடியாது எனபதை உணர்ந்தான்.

அவன் அங்கேயே உட்கார்ந்து சப்தம் வராமல், விக்கி விம்மாமல், பொருமி முனகாமல் மனசுக்குள்ளேயே அழுது அழுது அழுகையின் வெளிப்பாடாக வருகிற கண்ணீரால் தன் உயிரிலிருந்து வெளிவருகிற கெட்ட நாற்றங்களைக் கழுவிக் கரைக்க ஆரம்பித்தான்.

(இந்தியா டுடே,  அக்டோபர்-1991)
தட்டச்சு : ரா ரா கு
எழுத்தாளர் சார்வாகன் பற்றி அசோகமித்திரன் எழுதியது......
சார்வாகன் (1929 - 2015 )
திங்கட்கிழமை (21-12-2015) காலமான சார்வாகன் என்றும் அறியப்பட்ட ஹரி ஸ்ரீநிவாசன் தொழில்முறையில் அறுவை சிகிச்சை நிபுணர். நீண்ட காலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனியில் பணி புரிந்தவர். பின்னர் ஆக்ரா சென்று பணியாற்றினார். அதன் பிறகு சென்னையில் மிகச்சின்ன அளவில் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனைகள் தந்தவர். எண்பத்தேழு வயதில் காலமாவதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. தொழு நோய் கண்டவர்கள் விரல்களைச் செயலாக்கம் தரும் அறுவை சிகிச்சையில் அவர் உலகப் புகழ் பெற்றவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் பணியைக் குறித்து ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டது. அவர் ஆர்.கே.நாராயண் குடும்பத்துக்கு உறவினர்.
அவருடைய தொழில்முறைக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர் விரும்பி எழுதத் தேர்ந்தெடுத்த மொழி தமிழ். சி.சு.செல்லப்பா வெளியிட்ட’எழுத்து’ மாத இதழிலும் ’புதுக்குரல்’ நூலிலும் அவருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய இலக்கியத் தனித்தன்மையைக் கண்டு கொண்ட ‘நகுலன்’ (டி.கே. துரைசுவாமி) அவருடைய சில கவிதைகளையும் இரு சிறுகதைகளையும் அவர் தொகுத்து வெளியிட்ட ‘குருக்ஷேத்திரம்’ நூலில் இடம் பெறச் செய்தார். அதில் சார்வாகன் எழுதிய ஒரு கதை ஒரு சிற்றூரில் நடக்கும் கொடியேற்றத்தைப் பற்றியது. நகைச்சுவையில் அது வகைப்படுத்த இயலாத ஒரு தனித்துவமான படைப்பு. ‘உத்தரீயம்’ என்ற அவருடைய இன்னொரு கதையும் வகைப்படுத்த முடியாத ஒரு விசேஷப் படைப்பு. ‘தாமரை’ மாத இதழிலும் ‘கணையாழி’ இதழிலும் அவர் சில கதைகள் எழுதினார்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ‘க்ரியா’ அவருடைய ஒரு சிறுகதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனை ஆசிரியர் என்று தலப்பில் போட்டு இரு வெவ்வேறு அளவுகளில் ‘ஞானரதம்’ என்ற பத்திரிகையில் வெளிவந்த அவருடைய சிறுகதை ‘கனவுக்கதை’ கதையை காலம் சென்ற எழுத்தாளர் ஐராவதம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனை’ மாதக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமரர் சுந்தர ராமசாமியிடம் விடப்பட்டிருந்தது. அவர் சார்வாகனின் ‘கனவுக் கதை’யையே தேர்ந்தெடுத்தார்.

‘மணிக்கொடி’ காலத்திலிருந்தே ‘சாலிவாகனன்’ என்ற புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவருடைய கதை, கட்டுரை, கவிதைகள் தவிர அவர் நல்லதொரு பத்திரிகை ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானார். அச்செய்தியை ஒரு நண்பர் சொன்ன முறையில் வல்லிக்கண்ணன் அதைச் சார்வாகன் என்று நினைத்து ஓர் இரங்கல் கட்டுரை எழுதி, அது பிரசுரமும் ஆகிவிட்டது. தன்னைப் பற்றிய இரங்கல் கட்டுரையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த எழுத்தாளர்கள் இருவர். ஒருவர், சார்வாகன். இன்னொருவர் ஹெமிங்வே.
இரு ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணைப் பதிப்பகம் யுகன் சார்வாகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் சேர்த்து ஒரு சிறப்பு வெளியீடு வெளிக்கொணர்ந்தார். அது 2013 சென்னை புத்தகச் சந்தையின் போது வெளியிடப்பட்டது.

சார்வாகன் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய இறுதி நாட்களில் மருத்துவமனை கொண்டு சென்றேயாக வேண்டும் என்றிருந்த போது கூட அவர் சம்மதம் தரவில்லை. சென்னையில் அவர் வீட்டிலேயேதான் அவர் உயிர் பிரிந்தது.
சார்வாகன் அவருடைய புனைப்பெயருக்கேற்ப வாழ்ந்தவர். இடதுசாரிச் சிந்தனை உடையவர். பெரும்பாலும் கதருடை அணிந்தவர். அவருடைய ‘உத்தரீயம்,’ ’கனவுக்கதை’ போன்றவை தமிழ் உரைநடைப் படைப்புகளில் முற்றிலும் ஒரு புதிய பாணியை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவை.