Thursday, 29 September 2016

ஃபூக்கோஸ் பெண்டுலம்-ரகசிய வரலாற்றின் புனைவு ஒப்பந்தம் - Mubeen Sadhika

Wednesday, 28 September 2016

ஃபூக்கோஸ் பெண்டுலம்-ரகசிய வரலாற்றின் புனைவு ஒப்பந்தம்



















 கல்குதிரை-27ஆவது இதழில் வெளியான கட்டுரை....

(உம்பர்த்து எகோவின் படைப்புகளைப் பற்றி எழுதி வரும் நூலில் இடம்பெற விருக்கும் 'பூக்கோஸ் பெண்டுலம்' நாவல் பற்றி எழுதிய கட்டுரையை 'கல்குதிரை' இதழுக்காக சுருக்க அறிமுகமாக எழுதியது)

·         இத்தாலிய எழுத்தாளர் உம்பர்த்து எகோ எழுதிய 'ஃபூக்கோஸ் பெண்டுலம்' நாவல் 1989ல் வெளியானது. பின்நவீன எழுத்தவகையில் வந்த நாவல்களின் வரிசையில் முதல் பத்து இடங்களில் ஒன்றைப் பிடித்தது. ஃ'பூக்கோஸ் பெண்டுலம்'' நாவல் அறுநூறு பக்கங்களில் எழுதப்பட்ட சிக்கலான வலைப்பின்னல்களைக் கொண்ட அழித்தெழுதும் மறை பிரதி. வரலாற்றை உருவகித்து உண்மையைத் தேர்வதும் உண்மைக்கு அருகில் விளையாட்டை வைப்பதும் விளையாட்டின் போக்கில் மதத்தைச் சுழற்றுவதும் வேத நூலின் அமைப்பாக்கத்தில் ஊசலாடச் செய்வதும் என இந்த நாவல் இலக்கிய வெளியின் ஒரு பெரிய பரப்பை ஆக்கிரமித்துவிடுகிறது. வரலாற்றைப் போல ஒன்றை உருவாக்கி அதற்குள் வாழ்வையும் மரணத்தையும் திணித்து ரகசியத்தைத் தேடச் செய்கிறது இந்த நாவல். புலனாய்ந்து கண்டெடுப்பது மீண்டும் ஒரு வரலாறுதான். அல்லது ரகசியம்தான். தொடர்ந்திருக்கும் மறைவைக் கதைக்கு வெளியே நிலைத்திருப்பதாக ஒரு கற்பனையைப் புனையச் செய்கிறது இந்த நாவல். வரலாறும் உண்மையும் இணையாகப் பயணித்து பொய்மையின் வலிமையை உண்மை உணரச் செய்யும் நிகழ்வாகக் காட்டி முடிகிறது நாவல். 'மனிதன் ஒரு மதம்சார் மிருகம்' என்பார் உம்பர்த்து எகோ. மதம் மிருகமாவதும் மத அதிகாரத்தின் மிச்சமாவதும் இந்த நாவலின் உச்சம். மனப்பிறழ்வின் விலை கோரும் சடங்குகளில் மூழ்கடித்து கடவுளுக்கு நிகரான சக்தியைப் பெறுவதற்கு நடக்கும் நாடகீய அரங்கை விளையாட்டாக நிகழ்த்திக் காட்டுகிறது இந்த நாவல். சின்னாபின்னமாக்கும் அற விதிகளை அப்புறப்படுத்தி வெற்று அரங்காக அண்டத்தின் வீச்சை ஊசலாட்டுகிறது இந்த நாவல்.

1.வரலாற்று உருவகம்

புனைவுக்குள் நடக்கும் வரலாறு உண்மைக்கு நிகரானதாக வாசிக்கப்படும். அல்லது உண்மையின் புனைவு போல் வரலாற்றைச் சித்தரிப்பதாக இருக்கும். ஏனெனில் உண்மை என்பது முற்று முழுதான உண்மை அல்ல. வரலாறும் உண்மையின் பதிலி அல்ல. வரலாற்றை எழுதுதல் என்பது உண்மையை எழுதுதல் என்று கருதப்படக்கூடாது. புனைவுக்குள் நிகழும் வரலாற்றுக்கும் காலக்கிரமத்தில் நடந்த வரலாற்றுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்தான் புனைவின் வாசிப்பு இன்பமாக மாறுகிறது. புனைவு வழி வரலாற்றை அறிதலாகவும் வரலாற்றின் வழி உண்மையைத் துய்த்தல் என்பதாகவும் இது பொருள் கொள்ளப்படுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது ஒருவகையில் அதிகற்பனையை எழுதுதலாகவும் மாறிவிடுகிறது. அதிகற்பனையான கதைச் சூழலில் உருவாக்கப்படும் உருவகம் கதையின் உண்மைக்கு வரலாற்றின் பொருளைத் தந்துச் செல்லும். வரலாற்றின் நிகழ்வுகள் கதையின் உருவகமாக மாறிவிட்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டால் உண்மைக்கான தேடல் மறைந்துவிடும். வரலாறும் புனைவும் மறையும் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அங்கு அதிகற்பனைத் தோன்றிவிடும். 'ஃபூக்கோஸ் பெண்டுலம்' நாவலும் வரலாற்றையும் உண்மையையும் முயங்கச் செய்து அதிகற்பனையான புள்ளியில் இணைத்திருக்கிறது. வரலாற்றைத் தேடலும் உண்மையை அறிதலும் ஃபூக்கோஸ் பெண்டுலம்' கோரும் அதிகற்பனை செயலாக வாசிப்பில் நிகழ்கின்றன.

அ.உண்மை எனும் வரலாறு

'ஃபூக்கோஸ் பெண்டுலம்' நாவலில் வரலாற்றின் பக்கங்கள் எல்லாம் திரும்பக் கூறப்படுதல் என நிகழ்வது ஒரு குறிப்பிட்ட ரகசிய ஆவணம் இருப்பதாகச் சொல்லப்பட்டபின்தான். அந்த ரகசிய ஆவணத்தின் குறிப்பை விரிவாக்கம் செய்கையில் வரலாற்றின் நாண்களோடு கதை கொண்டிருக்கும் இணைப்புக் கண்ணியானது வரையப்படுகிறது. அது:

''சென்ட் ஜானின்(இரவு)
ஹே வைன் என்ற ஓவியம் வரையப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து
முத்திரையுடன் இருக்கும் 6 செய்திகள்
வெள்ளுடை உடுத்திய டெம்ப்ளார்கள் எனும் தளபதிகளுக்கு
நாடுகளைக் கைப்பற்றி மீட்டுருவாக்கம் செய்யும் பழியுடன்
ஆறு முறை ஆறு பேர் ஆறு இடங்களில்
ஒவ்வொரு முறையும் இருபது வருடங்கள் என்பதால் 120 ஆண்டுகள்
இது தான் திட்டம்
முதலாவது கோட்டைக்குச் செல்லவேண்டும்
அதன் பின் இரண்டாவது 120 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது குழு சேரவேண்டும்
நதிக்கு அப்பாலிருக்கும் எங்களின் தலைவியைக் காக்கும் ரொட்டிக்குரியவர்கள் வரவேண்டும்
அதன் பின் போப்பிலிகன்களின் விடுதிக்குச் செல்லவேண்டும்
அதன் பின் மீண்டும் கல்லுக்கு வரவேண்டும்
6 மூன்று முறை(666) பெரிய விபச்சாரியின் உணவுக்கு முன்''
----------------
இதுதான் ஃபூக்கோஸ் பெண்டுலம் நாவலின் முக்கியத் திறப்புக் கூறு. இதிலிருந்துதான் அந்த நாவலின் ரகசிய மொழிதல் தொடங்குகிறது. இந்த ஆவணம் கற்பனையானது. ஆனால் இதன் பொருளை வரலாற்றில் தேடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. வரலாறும் புனைவும் இணையும் புள்ளி இது. இதைப் பல வகையிலும் படிக்கலாம் என்பதை இந்த நாவல் திரும்பத் திரும்பச் செய்து காட்டுகிறது. இறுதியில் இது வெறும் துணி துவைப்பவரின் கணக்குக் குறிப்பாகக் கூட இருக்கலாம் என்று உதாசீனப்படுத்தியும்விடுகிறது இந்த நாவல்.

ஆ.வரலாற்று உண்மை

ஃபூக்கோஸ் பெண்டுலம்' நாவல் வரலாற்று உண்மைகளாகக் கூறும் செய்திகள்:

1.டெம்ப்ளார்கள் என்ற பாதுகாப்புப் படை வீரர்கள் கொண்டிருந்த ரகசியத்தை அறிதல்
2.ஃபூக்கோவின் ஊசலைக் கொண்டு இடத்தைக் கண்டடைதல்
3.பூமியை ஆட்டிப் படைக்கும் காந்த வீச்சுள்ள ஓடைகளின் மூலத்தைக் கண்டுபிடித்துக் கைக்கொள்ளுதல்

இந்த மூன்று முதன்மையான ரகசியங்களை வரலாற்றின் உண்மைகளாக நாவல் உரைக்கிறது. இந்த மூன்றையும் தேடி அடைய உருவாக்கும் 'திட்டம்' கற்பனையானது; பொய்யானது; விளையாட்டானது; விபரீதமானது.

''வரலாறு ஓர் ஆசிரியர். அப்படி ஒன்று இல்லை என்பதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். வரிசைமாற்றங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை''[1] என்கிறது நாவல்.

டெம்ப்ளார்கள் எனப்படும் கிறித்துவ பாதுகாப்புப் படை வரிசையாளர்களின் இயக்கம் பற்றிய ஒரு வரலாற்றை தேடிக் கண்டுபிடிக்கிறது நாவல். டெம்ப்ளார்கள் பூமியை ஆட்டிப்படைக்கும் காந்தவீச்சு ஓடைகளைக் கைக்கொள்ளும் ரகசியத்தை வைத்திருப்பதாக நம்பப்பட்டது. ஃபூக்கோவின் ஊசலை வைத்து அந்த இடத்தை அறிய முற்படுவதாக நாவலின் கதை முனைகிறது.

டெப்ம்பளார்களின் இயக்கம் பற்றிய ஆய்வு வரலாற்றிலிருந்து அவர்களின் நிகழ்காலத் தொடர்புகள் வரை அறிந்து கற்பனை பாத்திரங்களை உண்மையாக்கி வரலாற்றை மரிக்கச் செய்து நாவலை விட்டு வெளியே டெம்ப்ளார்களை வாழவைத்துவிடுகிறது. டெம்ப்ளார்களின் வரலாறு உண்மையாகிறது. டெம்ப்ளார்கள் நாவலுக்குள் கற்பனை பாத்திரங்களாகிறார்கள். நிகழ்காலத்தோடு தொடர்பு ஏற்பட்டவுடன் டெம்ப்ளார்கள் வரலாற்றைக் கற்பனையாக்கப் பாக்கிறார்கள். நாவலின் பாத்திரங்களா அல்லது டெம்ப்ளார்களின் வாழ்வைப் பற்றிய உண்மை பதிவா என்ற மயக்கம் வாசிப்பில் எழுகிறது.

இ.உண்மை-வரலாறு-அதிகற்பனை

அதிகற்பனையான 'திட்டத்தி'ன் மூலம் வரலாற்றின் உண்மைகளைக் கண்டடைதல் என்பதாக இந்த நாவல் கூற்றைப் புரிந்துகொள்ளலாம். கதைக்கு வெளியே உள்ள வரலாற்றில் கதையைத் தேடச் செய்வது இந்த நாவலின் நோக்கம். கதைக்குப் புறத்தான வரலாற்றையும்கூட அதிகற்பனையுடன் அணுகவும் அது வழிவகுக்கிறது.

12ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை டெம்ப்ளார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை மன்னர் பிலிப்பின் நெருக்கடியால் போப்பாண்டவர் கலைத்துவிட்டார். அதன் பின் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அவர்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாகமறைந்துவிட்டது இப்போது வரை ஒரு ரகசியமாக இருக்கிறது.

இஸ்லாமிய இறைத் தூதர் முஹம்மது நபியின் சிலையை டெம்ப்ளார்கள் வணங்கியதாக ஒரு குறிப்பு உள்ளது.(டான் க்விக்ஸாட் நாவலில் முஹம்மதின் சிலை இருப்பதாக ஒரு குறிப்பு உள்ளது)இந்த சிலைதான் பேஃபோமேட் என்று அழைக்கப்படுகிறது. பேஃபோமேட் என்பது முஹம்மத் என்பதன் மரூஉ. டெம்ப்ளார்கள் கிறித்துவத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உருவாதற்குக் காரணமும் அதுதான். அவர்கள் ஒரு கல்லை வணங்கியதாகவும் அது ஹோலி க்ரெய்ல் எனப்படும் புனிதக் கிண்ணம் எனவும் அது ஒரு கல்லால் ஆனது என்றும்கருதப்படுகிறது. அந்தக் கல் முஹம்மது நபி என்றும் நம்பப்பட்டது.

பூக்கோவின் பெண்டுலம் என்பது பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று நிரூபிக்கப் பயன்படும் ஒரு கருவி. இதில் ஓர் இரும்புக் குண்டு ஓர் இரும்புக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்க அது ஊசலாடும் பாதை வட்டமாக இருக்கிறது. பூமியின் வட துருவத்தில் வைக்கப்படும் போதுதான் அது 24 மணி நேரத்திற்குள் முழு வட்டத்தைச் சுற்றும். மற்ற இடங்களில் அது சுற்று வட்டப்பாதையை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. பெண்டுலம் தொங்கும் புள்ளி மட்டும் அசையாமல் இருக்கிறது. ஏனெனில் பூமி பால்வெளியில் நின்றிருக்கும் அச்சுதான் அந்தப் புள்ளி. அந்தப் புள்ளி எது என்பதுதான் இதுவரையிலான தீராத சந்தேகமாக இருக்கிறது.

கற்பனைக்கும் உண்மைக்குமான ஒரு விதமான நெருடலை ஏற்படுத்துகிறது இந்த நாவல். புனைவை விட்டு வெளியே வந்த பாத்திரங்களின் வரலாற்றைத்தேடுவதாக இந்த நாவல் இருக்கிறது. எது புனைவு எது உண்மை என்ற பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வதை இந்த நாவல் வாசிப்பு கோருகிறது. அல்லது புனைவையும் உண்மையையும் இணைக்கும் புள்ளியைத் தேடச் சொல்கிறது நாவல். பூக்கோவின் பெண்டுலம் தொங்கும் புள்ளி போன்ற இடம் அது.

2.மத ரகசியங்களின் புலனாய்வு

இந்த நாவலின் கதை பூமியை ஆட்டிப் படைக்கும் காந்தவீச்சுள்ள ஓடைகளின் மையப்புள்ளியைக் கண்டடைய எடுக்கும் பாத்திரங்களின்(வரலாற்றுப் பாத்திரங்களின்) முயற்சியாக இருக்கிறது. ஆனால் அந்த ரகசியம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. நாவல் முடிந்த பின்னும். நாவலுக்கு வெளியிலும். ரகசியம் என்றால் என்ன என்ற கேள்வியை நாவல் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. எப்போதுமே அறியப்படாமல் இருக்கும் ஒன்றுதான் ரகசியம் என்கிறது இந்த நாவல். எதுவுமே பெரிய ரகசியமாக இருக்கமுடியாது ஏனெனில் அது வெளிப்படும் கணமே ஏமாற்றத்தையும் சிறுமையையும் கொடுத்துவிடுகிறது என்கிறது இந்தக் கதை. அண்டம் ஒரு ரகசியம் என்றால் அது வெங்காயத்தைப் போல் உரித்துக்கொண்டே செல்லப்படுவது எனவும் அது எல்லையற்றுத் தொடர்வதாகவும் நாவல் விளக்குகிறது. அறியப்படாத ரகசியத்தைத் தொடர்ந்திருக்கச் செய்வதுதான் நாவலின் நோக்கம். அல்லது வரலாற்றின் நோக்கம். மறைவைத் தேடிக் கண்டடைவதில் கொள்ளும் இன்பத்தை இந்த நாவலும் பெரிதளவு வளர்க்கிறது. ஆனால் மறைவு எட்டப்பட முடியாதது என்பதை ஆழமாகப் பதியவும் செய்துவிடுகிறது. ஏனெனில் ரகசியமாய் இந்த நாவல் உருவகித்திருக்கும் பொருளும் உண்மையான ரகசியமும் இணைக் கோடுகளாய்த் தொடர்கின்றன. மேலும் அது மத ரகசியத்தின் ஒரு கிளையாகவும் இருக்கிறது. ரகசியத்தைத் தொடர்ந்து தேடிக் களைத்து இன்பம் அடைவதே இந்தப் புனைவின் முயற்சி.

அ.நீடித்த ரகசியம்

டெம்ப்ளார்கள் பூமி மீதான அதிகாரத்தைப் பெறத் தேடும் முயற்சியைத் தங்களுடையதாக்கிக் கொள்ள நாவலின் பாத்திரங்களில் பலவும் நினைக்கின்றன. அதற்கான 'திட்டம்' பொய்யானது என்பதை அறியாமலேயே இந்த முயற்சி தொடர்கிறது. இந்த அதிகாரம் என்பதுதான் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அல்லது இயற்கையில் இருக்கிறது. அல்லது ரகசியமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. அது அண்டத்தின் சக்தியாக இருக்கலாம். கடவுளின் அருளாக இருக்கலாம். அதில் பங்கெடுக்கும் முயற்சியைத்தான் இந்த நாவல் காட்சிப்படுத்துகிறது.

அண்டத்தின் ரகசியம் உரிக்கப்படலாம். ஆனாலும் அதன் மீதான கட்டுப்பாடு கை வருவது தொடர் ரகசியமாகவே கூட இருக்கலாம். நீடித்திருக்கும் ரகசியத்தின் மீதுதான் வேட்கை பிறக்கும். அந்த வேட்கையை முன்வைத்த புனைவு இது. ரகசியத்தைக் காத்திருக்க மரணங்கள் நிகழ்கின்றன. 'திட்டத்தை' உருவாக்கிய பாத்திரங்கள் ரகசியம் எதுவும் இல்லை என்பதைச் சொல்லாமல் நீட்டித்திருப்பது ரகசியத்தின் அற்புதத்திற்காக. ரகசியத்தை நிலைத்திருக்கச் செய்ய வாழ்வு கொடிதாகிவிடுகிறது. மரணம் இனிதாகிவிடுகிறது. ஏனெனில் வெளிப்படவேண்டிய ரகசியம் கடவுளுடையது, இயற்கையுடையது, அருளாளருடையது. வெளிப்பட்டால் அது உள்ளீடற்ற வெற்றுப் பூடகமாகிவிடும். வாசகர்களுக்கும் இயற்கையின் ரகசியம் புலப்படாதது என்று புரிகிறது. நாவலுக்குள் இருக்கும் ரகசியம் இயற்கையில் இருப்பதாகக் கண்டுகொண்டு நீட்டித்திருக்க இசைந்துவிடுவதுதான் புனைவின் இன்பம்.

ஆ.மதம் எனும் ரகசியம்

வாழ்வையும் மரணத்தையும் கட்டமைத்து வழங்குவதாக மதம் உருவகப்படுத்தப்பட்ட பின் அந்த இயற்கை நிகழ்வை மாற்றி அமைக்கும் சக்தியை, ஆற்றலைத் தேடுவதுதான் மதத்தின் ரகசியமாகிவிடுகிறது. சாலமன் மன்னனின் நகரத்தில் இருந்தத் தூய்மையும் புனிதமும் தொடர்ந்திருந்தால் பூமியும் சொர்க்கமாகியிருக்கும். அத்தகைய சொர்க்கத்தைக் காத்தவர்கள் டெம்ப்ளார்கள். அவர்கள் தேடியச் செல்வத்தை அடைதலே சொர்க்கத்தை மீண்டும் நிர்மாணிக்கும். அது மதத்தின் உச்சபட்ச இலக்காக இருக்கும். அந்த ரகசியம்தான் மத ரகசியம். அதை உதவாத துப்பறிதலைக் கொண்டு கண்டறிவதாகக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நாவல்.

உலோகங்களை ரசவாதத்தில் மாற்றுவது போன்ற பல வித்தைகளைக் கற்றாலும் இயற்கையின் குணத்தை மாற்றுவது இயலாத காரியம் என்பதை அறிந்த அறிவுப்புலம் மதத்திற்குள் புகுந்து இயற்கையைக் கட்டுப்படுத்துவதை மேற்கொண்டது. உதாரணமாக இந்த நாவலில் வரும் செய்திகள் மதத்தின் வரலாற்று ரகசியத்தைப் பற்றி விளக்குகின்றன.

ஆட்டோ ரான் என்ற ஜெர்மானியர் தனது யூத மரபணு பற்றிய ஆய்வை செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்ற போது கேதார்கள் என்ற ஒரு குழுவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார். அவர்கள் ஏராளமான செல்வத்தை ஆல்ப்ஸ் மலையில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். அவர் இளம் வயதில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். நாஜி படைகள் அவரைக் கொன்று விட்டதாக ஓர் எண்ணம் உள்ளது. அந்தப் புதையல் ஹிட்லர் வசம் சென்றுவிட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிட்லர் ஒரே ஓர் ஆயுதத்திற்காகத்தான் ஏங்கிக் கொண்டிருந்ததாகவும் அது என்ன என்பது பற்றிய ரகசியம் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிஸ்டியன் ரோஸ்குரூஸ் என்பவர் முலமாக ரோஸிக்ரூஷியன் குழுபரவியிருக்கிறது. டமஸ்கஸ், எகிப்து, போன்ற இடங்களில் பயணித்து பல மொழிகள் அறிந்து இயற்பியல், கணிதம் போன்ற அறிவியல் செய்திகளைக் கற்று நுட்ப உயிரியலிலிருந்து பேரண்டம் வரையிலான பரிமாணத்தைப் பயின்று வந்தவர் ரோஸ்குரூஸ். அதன் பின் இந்தக்குழுவை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார். முப்பது வருட போர் ஐரோப்பாவில் தொடங்கியது. அதன் பின் கேம்பனெல்லா அல்லது அவரைப் போன்ற ஒருவர் இந்த ரோஸிகுரூஷியன்ஸ் குழு தடை செய்யப்படவேண்டியதாக அறிவித்துவிடுகிறார். ஆனால் பாரீஸில் ரோஸிகுரூஸியன் பற்றிய சுவர் செய்திகள் வெளி வருகின்றன. அவர்களை ஆதரிக்க, எதிர்க்க, கவனிக்க மக்கள் தொடங்குகிறார்கள். அவர்களில் 36 பேர் என குழுவாகப் பிரிந்து உலகத்தின் பல பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டெகார்த்தும் அவர்களைத் தேடிப் போனார். ஆனால் அவர்களைக் காண முடியாமல் திரும்புகிறார். அவரையே ரோஸிகுரூஷியனாக நினைக்கிறார்கள்.

ஏசு கிறிஸ்து ரோஸிக்ருஷியர்களின் தலைவர். அவர் ஆணி அறைந்து சிலுவையில் மரிக்கவில்லை. அவருக்கும் மேரி மக்தலீனுக்கும் மணமானது. ஏசுவின் இரத்தம் அல்லது மேரி மக்தலீனின் கற்பப்பை தான் புனித க்ரெய்ல் (புனிதக் கிண்ணம்) என்று வழங்கப்படுவது. இந்தக் கிண்ணத்தை டெம்ப்ளார்கள் பாதுகாப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தப் புனிதக் கிண்ணத்திற்கு அணு சக்தி போன்ற சக்தி இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இந்த மதரகசியத்தை கைக்கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் இந்த நாவலில் பாத்திரங்கள் அலைகின்றன. அந்த ரகசியம் அறியப்பட முடியாதது என்பதை நாவல் தெளிவாகச் சொல்லிவிடுகிறது. மத ரகசியம் என்பது நம்பிக்கை அடிப்படையிலானதாக இருப்பதைத்தான் இந்த நாவல் சுட்டிக்காட்டும் உண்மை.

இ.புலனாய்வு இன்பம்

டெம்ப்ளார்கள் குறித்து கர்னல் ஆர்தெந்தி என்ற பாத்திரம் உருவாக்கிய ரகசியத்தைப் பிற பாத்திரங்கள் புலனாய்வு செய்கின்றன. அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து மேலும் ரகசியமாக வளர்த்தெடுக்கின்றன. அதுவே டெம்ப்ளார்களின் 'திட்டம்' என்று கொள்ளப்படுகிறது. புலனாய்வு செய்வதில் பாத்திரங்களுடன் சேர்ந்து உருவாக்கப்படும் திட்டத்தில் பங்கெடுப்பதுதான் வாசிப்பு இன்பம். பிற புலனாய்வு கதைகள் புனைவின் உண்மையை நோக்கிச் செல்லும். இந்த நாவலில் உண்மை என்பது அறுதியிட்டு கூறமுடியாததாக இருக்கிறது. புலனாய்வு என்பது நல்லதுxதீயது என்ற இருமையின் அடிப்படையில் நிகழ்வதாகவே இருக்கிறது என்பதை உம்பர்த்து எகோ ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் பற்றிய ஒரு சிறிய கட்டுரையையும் அவர் எழுதியிருக்கிறார். அந்த வகையான புலனாய்வை இந்த நாவலுக்குள் மேற்கொள்ள முடியாத சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் டெம்ப்ளார்கள் பூமியை ஆட்படுத்தும் வல்லமையைப் பெறுவதற்கான முயற்சியில் இருந்தார்கள். அதைக் கைக்கொள்ள இந்த நாவலின் பாத்திரங்கள் முயல்கின்றன. டெம்ப்ளார்களின் திட்டம் நல்லது என்றால் பாத்திரங்களின் முயற்சி தீயதாகிவிடும். இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டமே இல்லை என்பதுதான் இறுதியான உண்மை. அது மட்டுமே நல்லது என்றாலும் அதற்கான முயற்சி தீயதாகாது. அதனால் புலனாய்வு இன்பமாக இந்த நாவல் இருமைகளைக் கொள்ளவில்லை; பன்மைகளைக் கொண்டிருக்கிறது. நல்லதின் அடுக்கல்களாகவும் தீயதின் பரவல்களாகவும் அது இருக்கிறது. நாவலுக்குள் வரும் பாத்திரங்கள் வரலாற்றைப் புலனாய்கின்றன. வருங்காலத்தின் அதிகாரம் நல்லதையும் தீயதையும் ஒரு சேர கொண்டிருப்பதால் அதைக் கைக்கொள்ள முடியாது என்று நாவலின் கதை முடிந்துவிடுகிறது. டெம்ப்ளார்களிடம் அந்த அதிகாரத்தை விட்டுவிட்டு இயற்கையை இயல்பாகத் தொடரச் செய்வதைப் பரிந்துரைக்கிறது நாவல்.

3.அறிவியில் விளையாட்டுகளும் புதிர்களின் உலகமும்

'ஃபூக்கோஸ் பெண்டுலம்' நாவலில் கர்னல் ஆர்தெந்தி என்ற பாத்திரம் ஒரு ரகசிய ஆவணத்தைப் பதிப்பகத்தின் அலுவலரான பெல்போ என்ற பாத்திரத்திடம் தருகிறது. அந்தப் பாத்திரம் டெம்ப்ளார்கள் பற்றி ஆய்வு செய்த காஸ்பானிடம் அந்த ஆவணம் பற்றி விவாதிக்கிறது. அந்தப் பதிப்பகத்தில் வேலை செய்யும் யூத கபாலாவில் திறன் பெற்ற பாத்திரமான டயோதெல்லவியும் சேர்ந்து அந்த ஆவணத்தை வைத்துக் கொண்டு ஒரு விளையாட்டான 'திட்டத்தை'த் தயாரிக்கின்றன. வரலாற்றை விளையாட்டாக்கும் நகர்த்தல் இது. அந்தத் 'திட்டத்தில்' இடம்பெற்ற இடத்தை அறிய ஃபூக்கோ என்ற அறிவியலாளர் கண்டுபிடித்த ஊசலைக் கொண்டு அறியலாம் என்று அந்தப் பதிப்பகத்தின் உரிமையாளர் பாத்திரமான கார்மண்ட் பாத்திரத்தைத் தன் வசப்படுத்திய ஆக்லி என்ற பாத்திரம் கருதுகிறது. திட்டத்தை உருவாக்குதல் அறிவியிலில் புனைதல் அதிலிருக்கும் புதிர்களைக் களைதல் என்பதாக நாவல், வடிவம் பெறுகிறது. இந்தத் 'திட்டத்தை' வகுக்க பெல்போ பாத்திரம் தனது கணினியைப் பயன்படுத்துகிறது. அந்தக் கணினியின் பெயர் அபுலாஃபியா. யூத கபாலாவை ஸ்பானிய மொழியில் எழுதியவர் அபுலாஃபியா. அந்தத் 'திட்டம்' உண்மை என்று கருதி பெல்போ பாத்திரம் கடத்தப்பட்ட பின் காஸ்பான் பாத்திரம் அந்தக் கணினியைத் திறக்க திறப்புச் சொல் தெரியாமல் கடவுளின் பல பெயர்களைப் போட்டு இறுதியில் கணினி கேட்கும் 'திறப்புச் சொல் தெரியுமா?' என்ற கேள்விக்கு 'இல்லை' என்ற பதில் அளித்தவுடன் கணினி திறந்துவிடுகிறது. இல்லை என்ற சொல்லின் மந்திரத்தை நாவல் விளையாட்டாகப் பயன்படுத்திப் பார்க்கிறது. வெங்காயத்தில் ஒன்றும் இல்லை என்பதாகவும் அதை அண்டத்திற்கு உவமைப்படுத்தியும் பிறகு வரும் விளக்கத்தைக் குறிக்க இந்த விளையாட்டை நாவல் பயன்படுத்தியிருக்கிறது. அதன் பின் அந்த ஆவணம் ஒரு துணி துவைப்பரின் கணக்குக் குறிப்பு என்று புதிரைக் களைந்தும்விடுகிறது இந்தக் கதை.

அ.பெயர்களின் விளையாட்டு

இந்த நாவலில் கார்மண்ட் பதிப்பகம் இறையியல் தொடர்பான நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் கொண்ட ஒன்று. இந்தப் பெயர் கார்மண்ட் பதிப்பகம் என்று உண்மையிலேயே இருக்கும் பதிப்பகத்தை நினைவுகூறுகிறது. அது மனுடியஸ் என்ற மற்றொரு பதிப்பகத்தையும் ரகசியமாக வைத்திருக்கிறது. மனுடியஸ் கிரேக்க இலக்கியத்தைப் பதிப்பித்தவர். எழுத்தாளர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அதிகப் புத்தகங்களைப் பதிப்பித்து குறைவான எண்ணிக்கையைக் காட்டிவிட்டு மீதி புத்தகங்களை விற்று வரும் பணத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதுதான் நாவலில் இந்த பதிப்பகத்தின் வேலை. இந்தப் பதிப்பக உரிமையாளர் கார்மண்ட் பாத்திரம் கர்னல் ஆர்தந்தி பாத்திரத்தின் இறையியல் தொடர்பான கருத்துகளால் கவரப்பட்டு அவருடைய ஆவணங்களை வைத்து அது தொடர்பான நூலை உருவாக்குமாறு பெல்போ பாத்திரத்தைப் பணிக்கிறது. இத்தாலியில் பாசிச கருத்துகளுக்கான அடிப்படையை உருவாக்கியவர் பெல்போ. அந்தப் பெயர் இந்த நாவலில் வரும் பாத்திரத்தின் பெயராக உள்ளது. இந்தப் பாத்திரம் டெம்ப்ளார்கள் பற்றி ஆய்வு செய்த காஸ்பானிடம் கூறி உலோகங்கள் பற்றி ஆய்வு செய்யும் பணியைத் தருகிறது. காஸ்பான் என்ற பெயர் மெத்தப் படித்த கல்வியாளர் காஸ்பானை நினைவுகூறுகிறது. இந்த வகையில் உண்மையான பெயர்களை பாத்திரங்களுக்கு வைத்து ஒரு விளையாட்டு நாவலுக்குள் நடக்கிறது. ஆர்தந்தி, பெல்போ, காஸ்பான், டயோதெல்லவி என்ற ஆங்கில எழுத்துகளான A,B,C,D என்ற வரிசையில் அமைந்த பெயர்களைக் கொண்ட பாத்திரங்கள் ஒரு பொய்யான 'திட்டத்தை' உருவாக்குகிறார்கள்.

ஆ,அறிவியலில் புனைதல்

பெல்போ பாத்திரத்தின் கணினி ஒரு குறிப்பிட்ட மென்பொருளைக் கொண்டு அதில் கொடுக்கப்படும் தரவுகளை வைத்து ஏதாவது ஒரு திட்டத்தை வடிவமைத்துக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றை இந்த வகையில் வரிசை கிரமமாக ஒரு கதையாக வடிவமைத்துவிடலாம் என்ற விளையாட்டை நாவல் விளையாடுகிறது. பெல்போ, காஸ்பான், டயோதெல்லவி மூன்று கதாபாத்திரங்களும் தாங்கள் உருவாக்கும் 'திட்டத்தி'ல் பிரச்னை நேர்ந்தால் இந்தக் கணினியில் அதுவரைப் படித்த தரவுகளை வைத்து அதற்கு அடுத்த கட்ட வரைபடத்தை உருவாக்குகிறார்கள்.

இதைப் போல் கபாலாவை வைத்து காரின் மின்பொறி முனை பற்றிய விளக்கத்தை உருவாக்குகிறார்கள். அதே போல் கபாலாவின் உயிர்மரமான செபிரோதை எந்திர அமைப்பாக வடிவமைத்துப் பார்க்கிறார்கள். அறிவியலின் துணைகொண்டு இறையியலை வடிவமைப்பதாக இந்த விளையாட்டு தொடர்கிறது.

இந்த வகையிலான விளையாட்டாகத்தான் டெம்ப்ளார்களின் 'திட்டத்தை'யும் கூட இந்த மூன்று பாத்திரங்களும் உருவாக்குகின்றன. மாயமந்திரத்தையும் அறிவியலையும் கலந்து உருவான ஒரு குறிப்பிட்டாக்கம்தான் அந்தத் 'திட்டம்'. அதற்கு அடிப்படையான வாய்ப்பாடு தொடர்புபடுத்துதல். ஒன்று மற்றொன்றுடன் தொடர்புபடும் போதுதான் அதன் பொருள் புலப்படுகிறது. தொடர்பு, தோற்றத்தை மாற்றிவிடும். தொடர்பினால்தான் ஒவ்வொரு பேச்சும் எழுத்தும் சொல்லும் ஒரு ரகசியத்தின் குறியீடாக ஒலிக்கும். அதைச் சந்தேகிப்பது மட்டுமே தொடர்பை அறியும் வழியாக இருக்கும். எல்லாவற்றையும் சந்தேகிப்பது மட்டுமே இறையியலுக்கு அருகில் செல்லும் பாதை என்று பகடி செய்கிறது நாவல்.

இ.புதிர்களைக் களைதல்

கர்னல் ஆர்தந்தி பாத்திரம் கொடுத்த ஆவணத்தை வைத்துத்தான் ஒரு பொய்யான 'திட்டம்' தயாராகிறது. அதில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்று நாவலின் பாத்திரங்களில் சில இறுதியில் நம்பத் தொடங்குகின்றன. நாவலின் முதன்மை பாத்திரமான காஸ்பானின் பெண் தோழி பாத்திரமான லியா பாத்திரம் அந்த ஆவணத்தை ஒரு துணி துவைப்பவரின் கணக்குக் குறிப்பு என்று விளக்கிவிடுகிறது. இந்த ஆவணம் ப்ராவின்ஸ் என்ற இடத்தில் கிடைத்திருக்கிறது. அந்த இடம் வெறும் வணிகப் போக்குவரத்திலும் முக்கியத்துவம் பெற்ற இடமாகவும் இருந்திருக்கிறது. அங்குதான் டெம்ப்ளார்களின் இறுதிக் கூட்டம் நடந்ததாக கர்னல் ஆர்தெந்தி என்ற பாத்திரம் நம்புகிறது. இது எழுத்துகளை எழுதும் முறை வரலாற்றில் மாறிக் கொண்டே வந்திருப்பதை வைத்து அது 36 வருடங்கள் இல்லை என்பதை லியா என்ற பாத்திரம் நிறுவுகிறது. 120 வருடங்கள் என்ற பொருளில் அல்லாமல் அது எழுத்து உடைந்து சில குறிப்புகளை வைத்து ரோஸிக்ரூஷியன்களின் வரலாற்றில் தோய்ந்த மனம் அதை 120 வருடங்கள் என்று நம்பிவிட்டது என்கிறது லியா பாத்திரம்.

ரூ செயின்ட் ஜானில்
36 எடை அளவுள்ள புல் தேவை
6 புதிய நீளமுள்ள முத்திரையுடன் கூடிய துணி
ரூ ப்ளாங்க் மாண்டி
போராட்டக்காரர்களின் ரோஜாக்கள் கொண்டு ஒரு பூக்கட்டு
6 பூக்கள் கொண்டு 6 கட்டு 6 இடங்களில்
20 பட்டின் அளவு ஒட்டு மொத்தமாக 120 பட்டின் அளவு
அவை கீழ்க்கண்ட வரிசையில்:
முதல் உருப்படி கோட்டைக்கு
இரண்டாவது உருப்படி போர்ட் ஆ பெய்ன்ஸுக்கு
உருப்படி மீளலின் தேவாலயத்திற்கு
உருப்படி நதியைக் கடந்து நாத்ரே டேமுக்கு
உருப்படி கேதாரின் பழைய கட்டிடத்திற்கு
உருப்படி டி லா பியர் ரோன்டேவுக்கு
ஆறு பூக்களுக்கு மூன்று கட்டுகள் விபச்சாரிகளின் தெருவுக்கு
----------------
இதுதான் அந்தக் கணக்குக் குறிப்பு என்கிறது நாவல். ஒரு புதிர் அதை மாயத்தில் வைக்க மற்றொரு புதிர் அதை விளையாட்டில் வைக்கிறது. இரண்டுக்கும் இடையிலான ஊசலாட்டம்தான் நாவலின் கதை.

4.ஊசல் குண்டும் புனிதக் கிண்ணமும்

ஃபூக்கோவின் கண்டுபிடிப்பான ஊசல் இந்த நாவலின் தலைப்பாக உள்ளது. இது பூமியின் இயக்கத்தை அளவிடும் கருவி. அது மட்டும் அல்லாமல் இந்த நாவலின் முதன்மை கதாபாத்திரமான பெல்போ இந்தக் கருவியில்தான் தூக்கிலிடப்படுகிறான். ஊசலின் முனையில் தொங்கவிடப்படுகிறான். அந்தப் புள்ளியிலிருந்து குண்டு ஊசலாடுகிறது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் பாத்திரங்கள் இது போன்ற திட்டம் இருப்பதாக நம்பும் பாத்திரமான கர்னல் ஆர்தெந்தி, கார்மண்ட் பதிப்பக உரிமையாளர், மாயமந்திர வலைக்குள் ஊடாடும் பாத்திரமான ஆக்லி மற்றும் பெல்போவின் பெண் தோழி லோரன்ஜா போன்றவர்கள் ஃபூக்கோவின் ஊசல் இருக்கும் பாரிஸின் அருங்காட்சியகத்திற்கு வருகிறார்கள். அங்கு பெல்போவைக் கடத்திவந்து உண்மையை அறிய முயன்று முடியாதபோது தூக்கிலிடுகிறார்கள். பெல்போவிடம் உண்மையை வரவழைக்க முடியாத லோரன்ஜாவைக் குத்திக் கொல்கிறார்கள். இந்தத் திட்டத்தை அறிந்திருக்கும் காஸ்பானையும் தேடுகிறார்கள். உண்மையில் பூக்கோவின் ஊசல் என்பது அதிகாரப் புள்ளி. இயற்கையின், பூமியின் கட்டுப்பாட்டைக் கொண்ட புள்ளி. அதைக் கைக்கொள்ளவேண்டும் என்ற அதிகாரத்தின் குறியீடுதான் இந்த ஊசல். ஒரு வகையில் லிங்கமைய வாதத்தின் மறைமுகக் குறியீடு. ஃபூக்கோ என்ற விஞ்ஞானி என்பதைக் குறித்தாலும் அதிகாரம் பற்றிய கேள்வி எழுப்பிய மைக்கேல் பூக்கோவையும் அது குறிக்கிறது. புனிதக் கிண்ணம் என்பது பெண்ணின் கருப்பையைக் குறிப்பது என்ற வகையில் அதுவும் ஒரு குறியீடுதான். இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள முரணை முன் வைக்கிறது இந்த நாவல்.

அ.ஊசலாடும் ஆண்

ஃபூக்கோவின் ஊசல் என்பது மாயத்திற்கும் அறிவியலுக்கும் சென்று வரும் கருவியாக இந்த நாவலில் காட்டப்படுகிறது. அது எந்தப் புள்ளியிலிருந்து ஊசலாடுகிறதோ அதுதான் அதிகாரப் புள்ளி. இயற்கையில் இருக்கும் அந்தப் புள்ளியைக் கைக்கொள்ளும் திட்டத்தை பெல்போ பாத்திரம் வைத்திருப்பதாகக் கருதி அவனிடமிருந்து அதை அறிய மற்ற பாத்திரங்கள் முற்படுகின்றன. அவை எல்லாமே அந்த அதிகாரப் புள்ளியைக் கைக்கொண்டுவிடத் துடிக்கின்றன. இதில் ஆக்லி என்ற பாத்திரம் காம்தே டி ஜெர்மன் என்ற ரசவாதியின் மறுபிறவி போல் தன்னை முன்வைத்துக் கொள்கிறது. இந்தப் பாத்திரம்தான் அந்த அதிகாரத்தைத் தன் கைக்குக் கொண்டுவர அதிகமாக விரும்பும் பாத்திரம். இந்த வகையில் இந்த ஆண் பாத்திரங்கள் எல்லாமே அந்த அதிகாரத்தைக் கைக்கொள்ள விரும்புகின்றன. அந்த ரகசியத்தை அறியாமலேயே கூட அதை அறிந்திருப்பது போல் காட்ட விரும்பும் பெல்போ பாத்திரமும் அந்த அதிகாரத்தின் ஓர் அங்கம்தான். அதனால் தூக்கிலிடப்படுகிறான். இது ஒரு வகையில் ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததற்கு நிகரானதாக இருக்கிறது. அந்த அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு நிகரானது. அத்தகைய அதிகாரத்தைக் குறிப்பதுதான் ஃபூக்கோவின் ஊசல். அந்த அதிகாரத்தைப் பற்றிச் சொன்னவர் மைக்கேல் ஃபூக்கோ. இந்தப் பெயர் பொருத்தமும் ஊசல் என்பது லிங்க மைய அதிகாரத்தின் குறியீடாகவும் இருந்ததால் இந்த நாவல் அதைப் பெயராகத் தேர்ந்திருக்கிறது.

பூக்கோவின் ஊசலில் தூக்கிலிடப்பட்ட பின் பெல்போவின் உடல் அந்த ஊசலுக்கு அச்சாகிறது. பூமியின் அச்சு போல் இருக்கிறது அது. ஆண் உடல் பூமியின் அச்சில் இருப்பதாக இதைக் கொண்டுவிடலாம். ஊசலாடுவதான அதிகாரத்திற்காக உயிர் துறந்த ஆண் உடல் அது. அந்தப் புள்ளி எது என்று அறியாமலும் அந்தப் புள்ளியில் இருந்தாலே அதிகாரம் வாய்த்துவிடும் என்று கருதிய ஆண் உடல் அது. ஊசலாடும் ஆண் உடல், அதிகாரத்தின் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது.

ஆ.புனிதக் கிண்ணப் பெண்

புனிதக் கிண்ணத்தைக் கைப்பற்றினால் உலகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடைக்கும் என்று அலையும் கூட்டம் பற்றிய கதை இது என்று சொல்லிவிடலாம். புனிதக் கிண்ணம் என்பது பெண்ணின் கர்ப்பப்பை என்பதாக வரலாற்றில் பொருள் உள்ளதால் பெண் மீதான அதிகாரமாக அது மாறுகிறது. இந்த நாவலில் வரும் காஸ்பான் பாத்திரத்தின் பெண் தோழி லியா தாய்மை அடைகிறாள். அது ஓர் அழகான அனுபவமாக வர்ணிக்கப்படுகிறது. கர்ப்பப்பை என்பதே அழகான இடம் என்பதாகவும் அதனால் தாய்மை அடைவதும் அழகான ஒன்றாகவும் அது கூறுகிறது.

பெண்ணின் மனித மறுஉற்பத்தி பற்றிய இயல்பு உயிர் மீதான அதிகாரமாக இல்லாதிருப்பதே இதில் அடிக்கோடிட்டு சொல்லப்பட்ட செய்தி. ஆனால் உலகின் அச்சைக் கைக்குள் அடக்கி ஆட்டிப் படைக்கவேண்டும் என்பதற்காக தேடலில் இருக்கும் தன் ஆண் நண்பனையும் அவனுடைய கூட்டாளிகளையும் நோக்கிச் சொல்லப்பட்டச் சொற்கள் அவை. மனித மறு உற்பத்தியின் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் புனிதப் பெண் அதை ஓர் அதிகாரமாகக் கருதவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இந்த வரிகள்.

இந்த நாவலில் இருக்கும் மற்ற பெண் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கப் பங்கை ஆற்றுகின்றன. காஸ்பானின் முதல் காதலி அம்பாரோ பிரேசிலில் ஒரு சடங்கிற்குச் சென்று அதீதமான அனுபவத்தைப் பெறுகிறாள். அவள் ஆக்லி பாத்திரத்தினால் காஸ்பானைவிட்டுப் பிரிந்து செல்கிறாள். பெல்போவின் காதலி லோரன்ஜா ஒரு பாலியல் தொழிலாளி. அந்தப் பெண்ணும் ஆக்லியின் தொடர்பால் கடவுளின் ஞானப்பிரதிநிதியான சோபியா என்ற நாடகீய பாத்திரத்தை ஏற்கிறாள். லியா மட்டும் நேர்க்கோட்டுப் பாதையில் செல்லும் பாத்திரம். காஸ்பானின் புனிதக் கிண்ணத்தைக் கொண்டிருக்கும் பாத்திரம்.

இ.ஒழுங்கின் அழகு

வரலாற்றை லிங்கமைய எந்திரமாகவும் புனிதக் கிண்ண மந்திரமாகவும் இந்த நாவல் மாற்றிப் பார்க்கிறது. அதில் பாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் சுழல்கின்றன. ஆண் பாத்திரங்கள் அதிகாரத்திற்கான வேட்கை கொண்டிருப்பவர்களாகவும் பெண் பாத்திரங்கள் அதிகாரம் பற்றிய எந்த ஒரு சிந்தனையும் இல்லாதவர்களாகவும் இருப்பதைக் காண முடிகிறது. ஆணிய மதம் சார் சிந்தனையின் சிக்கல், அதிகாரத்தை நோக்கியத் தேடலாக விரிகிறது. பெண்ணிய மறு உற்பத்திசார் பரவல், அமைதியின் ஒழுங்கின் நிலைத்தன்மையின் கூறாக இருக்கிறது. அதிகாரத்தைக் கட்டமைத்த- பொய்யாகக் கட்டமைத்த, ஆண் உடல் மரிக்கிறது. அன்பின் திரட்சியைப் பெருக்கிய பெண் உடலும் மரிக்கிறது. மறைந்தும் போகிறது. இயற்கையோடு இயைந்த உற்பத்தியின் உடல் நிலைத்திருக்கிறது. திட்டத்தை வடிவமைத்தவர்கள் பெண்கள் அல்ல. ஆண்கள் மட்டுமே அதில் நிறைந்திருக்கிறார்கள். ஒரு பெண் மட்டும் திட்டத்தை சுயநலமாகக் கைக்கொள்ள முயல்பவர்களைச் சாடுகிறது. பெண்ணின் புனிதக் கிண்ணத்தின் சக்தியை எதிர்கொள்ள பூமியின் இயற்கையின் கடவுளின் ஆற்றலைக் கைக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆண் உடல் தள்ளப்படுகிறது என்பதை இந்த நாவல் வரலாற்றை அடியொற்றி விவாதிக்கிறது. ஆனாலும் பூமி, இயற்கை, கடவுளின் ஆற்றலை அடைய முடியாமல் ஆண் உடல் வீழ்ந்து படுகிறது என்பதையும் நாவல் அழுத்தமாகக் கூறிவிட்டது. இதுதான் வரலாற்றின் புனித ஒழுங்காகவும் வருங்காலத்தின் அழகின் ஒழுங்காகவும் இருக்கக்கூடும் என்பதைத்தான் நாவல் கட்டியமைத்திருக்கிறது.

5.அதிகாரக் கடவுளின் அற்ப மரணம்

இந்த நாவலில் முதன்மை பாத்திரங்கள் மரிக்கின்றன. அந்த மரணங்களுக்குரிய பொருளை அறிவது இந்த நாவலின் ஆன்மீகக் கட்டுடைப்பிற்கு அவசியமானதாக இருக்கும். ஏனெனில் மரணங்கள் நிகழ்ந்தவற்றுக்குக் காரணமாக இருப்பது மத நம்பிக்கை. அல்லது நம்பிக்கை இன்மை. நாவலுக்குள் மதம்சார் தேடலில் பக்க விளைவாக மரணங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தின் மரணத்திற்கும் மதத்தின் ஏதோ ஒரு கண்ணியோடு தொடர்பு இருக்கிறது. விளையாட்டாகவோ விபரீதமாகவோ இந்தத் தொடர்பை இணைப்பதும் பிரிப்பதும் அதற்கேற்ற பொருளை அடைவதற்கான வழியைக் கொடுப்பதாக இருக்கும். கொலையாகவோ இயற்கையாகவோ மரணம் நிகழ்ந்தாலும் காரணம் மதத்தில் தேடப்பட வேண்டியதாக இந்த நாவலுக்குள் இருக்கிறது. ஒவ்வொரு மரணத்தையும் மத குறிப்பானுக்குள் மிதக்க விட்டிருக்கிறது இந்த நாவல். கடவுளின் இருப்பையும்/இன்மையையும் தொட்டுச் செல்ல மரணங்களின் பொருளாக்கம் உதவுகிறது. அந்த வகையிலான கடவுளதால் என்பதன் ஒரு சுவட்டைக் கண்டடைதலாக இந்தப் பொருளாக்கம் நிகழலாம். மரணத்திற்கும் வாழ்தலுக்கும் இடையில் ஊசலாடுவது வெறும் கருவி மட்டும் அல்ல வேட்கையின் இருப்பு, அதிகாரத்தின் சுவை, மற்றும் விருப்பின் ஊற்றும் கூடத்தான் என்பதை நாவல் வெளிப்படுத்துகிறது. மரணங்கள் நிகழ்ந்தவை மட்டும் அல்ல நிகழப் போகிறவைப் பற்றியும் நாவல் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பொருளாம்சத்திலும் குறிப்பீட்டாக்கத்திலும் தொடர்ந்திருக்கும் மதத்தின் வேரோடு.

அ.மரணங்களும் பொருளும்

நாவலுக்குள் நிகழும் மரணங்கள் பொருள் கொள்ளலில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. முதலில் கர்னல் ஆர்தெந்தி பாத்திரத்தின் மரணம். இந்தப் பாத்திரம் டெம்ப்ளார்களின் ஆவணம் பற்றி வெளிப்படுத்திய பிறகு கொல்லப்படுவதாக அல்லது மறைந்து போவதாக நாவல் காட்டுகிறது. அடுத்து நாவலின் முதன்மை பாத்திரமான பெல்போ ஃபூக்கோவின் ஊசலில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுவது அல்லது தற்கொலை செய்வது. அடுத்து டயோதெல்லவி பாத்திரம் இயற்கையாக மரணம் அடைவது. அடுத்து லோரென்ஜா கத்தியால் குத்தி கொல்லப்படுவது. அடுத்து காஸ்பான் பாத்திரம் மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பது. டெம்ப்ளார்களின் ரகசியத்தை அறிவதற்காகப் பொய்யான 'திட்டத்தை' உருவாக்கிய நால்வரில் மூவர் கொல்லப்படுகிறார்கள். ஒருவர் மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறார். கிறித்துவ, யூத மத நம்பிக்கையிலான 'திட்டம்' மரணத்தை உருவாக்குகிறது. அது ஒரு 'திட்டம்' என்பதைவிட வாழ்விலிருந்து அகற்றும் அளவுக்கான அதிஆற்றல் வாய்ந்த மரணக்கிணறாக இருக்கிறது. டயோதெல்லவி பாத்திரம் யூத நம்பிக்கைகளை, கிறித்துவ நம்பிக்கைகளை விளையாட்டாக அணுகியதால் புற்றுநோய் வந்து மரணம் வாய்த்துவிட்டதாகச் சொல்கிறது. மதப்புனிதத்திற்கு ஊறுவிளைவித்தால் மரணம் நேரும் என்பதாக இதைச் சொல்ல முற்படுகிறது நாவல். மதமும் மரணமும் இரு இணைக்கோடுகளாக இந்த நாவலில் பயணிக்கின்றன. மதம் தருவிக்கும் பொருளை மரணமாகப் படைத்தளிக்கிறது நாவல். இதைத் தவிர ஹிட்லரால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான யூதர்களின் மரணமும் டெம்ப்ளார்களின் மரணமும் மதம் சார் அதிகாரத்தை உட்கொண்ட பொருளிலிருந்தே நேர்ந்திருக்கின்றன என்பதையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது.

ஆ.கொலை, தற்கொலை, இயற்கை மரணம் நேர்க்கோடற்ற பாதை

நாவலின் பாத்திரங்களான கர்னல் ஆர்தெந்தி, பெல்போ, லோரன்ஜா போன்றவர்களின் கொலைகளுக்குரிய காரணத்தை நாவல் மந்திரத்தால் உருவாக்குகிறது. ஆர்தெந்தியின் கொலை டெம்ப்ளார்கள் பற்றிய பல உண்மைகளை அறிந்திருப்பதால் நேர்கிறது. கார்மண்ட் பதிப்பக உரிமையாளர் இந்தக் கொலையை நடத்தியிருக்கலாம். அந்த உண்மைகள் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்ள நடத்தப்பட்டக் கொலையாக இது இருக்கிறது.

பெல்போவின் மரணம் ரகசியத்தை வெளியிட மறுப்பதால் நேர்வது. ரகசியமாக உள்ள ஒன்றை வெளிப்படுத்தியிருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதாலும் ரகசியத்தை வைத்துக் கொண்டு சாவை எதிர்கொள்ளும் போது அது பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதாலும் மரணத்தைத் தேர்வது தற்கொலை போல் தோற்றம் தருகிறது. மத ரகசியமும் மரண ரகசியமும் இணைந்துவிடும் இடம் இது. இயற்கையின் ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியாது என்பதால் மரணத்தின் பொருளையும் அறிய முடியாது என்பதாக பெல்போ பாத்திரத்தின் மரணத்தைக் கொள்ளலாம்.

லோரன்ஜாவின் மரணம் கடவுளின் ஞானவடிவமான உருவின் மரணம். அவள் பெல்போவின் காதலியாக இருந்தும் ரகசியத்தை அவனிடமிருந்து வரவழைக்க முடியாமல் தோற்றதால் நேர்ந்த மரணம். மரணத்திற்குப் பின்னும் லோரன்ஜா ஏற்ற ஞானவடிவப் பாத்திரம் நிலைக்கும். லோரன்ஜாவின் மரணத்திற்கு முடிவில்லை.

காஸ்பான் மரணத்தை எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கும் பாத்திரம். பெல்போவைப் போல ரகசியத்தைச் சொல்லமுடியாமல் இருக்கும் நிலையில் மரணமே ரகசியமாகிவிடுவதைத் தேர்ந்தெடுத்தப் பாத்திரம். எனவே இந்தப் பாத்திரங்களின் மரணங்களில் நாவல் கதையின் போக்கை இட்டுச் செல்கிறது.

இ.விளையாட்டு-அதிகாரம்-மரண இலக்கணம்

'திட்டம்' என்ற விளையாட்டு மரணத்தை நல்கிவிடுகிறது. அது அதிகாரத்தை மறுத்ததால் நேர்ந்த மரணங்களாக இருக்கின்றன. இந்தத் திட்டம்தான் இந்தக் கதையை எடுத்துச் சென்ற ஒன்று. எனவே திட்டம் தீட்டியது பெல்போ பாத்திரம். நாவலில் குறிப்பிடப்படுவது போல பெல்போவின் மரணம் கதாசிரியனின் மரணம். பார்த் சொன்ன கதாசிரியன் இறந்துவிட்டான் என்ற பின்நவீனத்துவ மரணம். இந்த மரணத்தின் இலக்கணம் இலக்கியத்தின் ஒரு பாதையைத் தேர்ந்திருக்கிறது. காஸ்பான் எதிர்கொண்டிருக்கும் மரணமும் கதையின் சாட்சியாக இருக்கும் ஒரு பாத்திரத்தின் மரணம்தான். வாசகனின் மரணமாகக் கூட இருக்கலாம். காஸ்பான், பெல்போ எழுதிய பிரதிகளை வாசிக்கும் பாத்திரம். பெல்போவின் பிரதியும் நாவலுக்குள் ஓர் இணைகதையாக ஓடுகிறது.

நவீன டெம்ப்ளார்கள் அறிய வேண்டிய ரகசியம் வெளிப்படக்கூடிய சடங்கு நடக்கும் இடத்தில்தான் பெல்போவின் மரணம் நடக்கிறது. பெல்போவின் ரகசியம் கடவுளின் ரகசியமாகத்தான் நாவலுக்குள் கருதப்படுகிறது. அதனால் கடவுளாதல் என்பதுதான் அந்த மரணத்தின் மற்றொரு பக்கமாக இருக்கிறது. இறைவனின் அலகிலா விளையாட்டு போல் பெல்போவும் ஒரு விளையாட்டை நிகழ்த்தி, மரணித்து கடவுளாகும் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பகடி செய்கிறது இந்த நாவல். ஏசுவின் மரணம் சிலுவையில் அறையப்பட்டு நிகழ்ந்ததைப் போல பெல்போவின் மரணம் ஊசலில் தொங்கவிடப்பட்டு நிகழ்ந்திருக்கிறது. ரகசியங்கள் கொண்ட இறைத்தூதர்களின் மரணங்கள் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக நாவலுக்குள்ளும் வெளியிலும் பயணித்து இந்த மரணங்களின் பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

பெல்போவின் காதலி லோரன்ஜாவும் கடவுளின் ஞானவடிவம் என்பதாகக் கடவுளாகும் பாத்திரத்தை ஏற்று நடித்து மரணிக்கிறது. மரணத்தின் இலக்கணம் இங்குக் கடவுளாதல் என்பதாகிறது. அதாவது மரணத்தின் பின்னும் வாழ்ந்திருத்தல். அல்லது நிலைத்திருத்தல். 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' என்பதைப் போல மரணம் மீறிய வாழ்வு அது.

சமூகத்தின் பித்தும் மதங்களின் ஊடாகக் கடவுளாகும் நெருக்கடியும் ஒரு பிறழ்வை ஏற்படுத்தியிருக்கின்றன. அதை இந்த நாவல் முன்னெடுக்கிறது. 'திட்டம்' என்பது உள்ளீடற்றதாக இருந்தாலும் அது ஊதிப் பெருக்கிய பரோனியாவை-சித்தப்பிரமையைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த நாவல் காட்டுகிறது. உயிர்க்குடிக்கும் விஷம் போன்ற சித்தப்பிரமை அது.


6.கதையான யூத கபாலா

'ஃபூக்கோஸ் பெண்டுலம்' என்ற எகோவின் நாவல் ஒரு வகையில் யூத கபாலாவின் பொருளைக் கொண்டிருக்கும் செஃபிரோ எனப்படும் உயிர் மரத்தின் வடிவத்தைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. அது பத்து முனைகளைக் கொண்ட பிரிவு. அதன் அடிப்படையிலான தலைப்புகளில் இந்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. யூத கபாலாவின் மந்திரத்தன்மையைக் கைவரப்பெற்ற முயக்கத்தில் இந்த நாவல், வடிவம் கொண்டிருக்கிறது. அபுலாஃபியா என்ற யூத முன்னோடியின் பெயரைக் கொண்ட கணினியின் மென்பொருள் உருவாக்கிய விளையாட்டாகக் கூட இந்த நாவல் இருக்கலாம். இது வரலாற்றின் மாயத்தைப் பகடி செய்தும் விளையாட்டாக மாற்றியும் எழுதப்பட்ட ஒரு நாவல். ஒளியால் படைக்கப்பட்ட உலகத்தைப் போல் இந்தக் கபாலா இந்த நாவலைப் படைத்திருக்கிறது. யூத கபாலாவின் மறுஉருவாக்கம் போல் இந்த நாவலைப் படித்துக் கொள்ளலாம். உயிர் மரத்தின் கிளைகளிலுள்ள முனைகள் வாழ்வின் பொருளையும் நாவலின் பொருளையும் அளிக்க வல்லவை. உடலின் உறுப்பாக்கம் போல் நாவலின் உறுப்பாக்கமும் உருவாகிறது. யூத நம்பிக்கைக் கூறுவது போல ஓர் இறைதூதரின் வரவும் இந்த நாவலுக்குள் நடக்கிறது. கடவுளை ஸ்பரிசிக்க நடக்கும் சடங்கில் இறைத்தூதர் கொல்லப்படுகிறார். யூத மதத்தின் மீதான தாக்கத்தினால் இது போன்ற ஒரு நாவல் படைக்கப்பட்டிருக்கலாம். யூதர்களுக்குள் இருந்த ஆன்மீகச் சொல்லாடல் மத ரகசியத்தை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது என்பதை இந்த நாவல் வெளிப்படுத்த முனைகிறது.

அ.யூத கபாலாவின் மறுஉருவாக்கம்

யூத கபாலா செவி வழியில் சொல்லப்பட்டு உருவான வேதம். இந்து மத வேதங்களைப் போல் உருவானது. தோரா எனப்படுவது ஆதியிலிருந்து அந்தம் வரையிலான படைப்பு மற்றும் அழிவு பற்றிய இறையியல் நூல். அதை வாய்மொழியாக மட்டுமே அறிந்துகொள்ளும் கல்வியும் உண்டு.

கபாலாவின் ஆதி வடிவத்தைக் குறித்து லூரியா என்ற கபாலா அறிஞர் எழுதிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி இந்த நாவல் தொடங்குகிறது. ''எல்லையற்ற ஒளி நேர்க்கோட்டில் மேற்குறிப்பிட்ட வெற்றிடத்திற்குள் உமிழத் தொடங்கி ஒரேயடியாகக் கீழே போகாமல் சிறிது சிறிதாகப் போகிறது. அதாவது முதலில் ஒரு கோடாக உமிழப்பட்ட ஒளி பெரிதாக விரிந்து வட்டமான சக்கரமாக மாறுகிறது'[2]' என்ற வரிகள் இந்த நாவலில் பிறப்பின் தோற்றத்தை யூத வரையறைப்படி கூறப்படுகிறது. யூத மாந்தீரிகம்சார் ஆன்மீகத்தை உட்செறித்து ஒரு புதிய கபாலாவாகத் தோற்றம் கொள்ளச் செய்கிறது இந்த நாவல். கபாலாவின் பொருளிற்கு ஏற்ப சான்றுகளைக் காணக்கூடியதாக இந்தக் கதை உள்ளது. கபாலாவைப் பகடி செய்த மற்றொரு கபாலாவாக இதை வாசித்துக் கொள்ளலாம். கபாலாவை ஸ்பானிய மொழியில் அபுலாஃபியா எழுதியதைப் போல் இது இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. யூத மதத்தின் நம்பிக்கையான இறைத்தூதரின் வருகையையும் அவர் இறந்து போவதையும் நாவல் பதிவு செய்கிறது. அது விளையாட்டாக இருந்தாலும் செயல்பாடு ஒன்றாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறது. இந்தக் கபாலா மனப்பிறழ்வின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

கபாலாவை உருவாக்கத் தேவைப்பட்ட அடிப்படைகள் இந்த நாவல் உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ளன என்று நாவல் மொழிந்துகொள்கிறது. கபாலா வாழ்வின் முழுமையை அடைவதற்கான வழியாக இருக்கிறது. இந்த நாவலின் பாத்திரங்கள் வாழ்வென்று கொள்ளவேண்டிய நிகழ்வை அடையாளப்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. கபாலா வாழ்வுடன் தொடர்புடைய உறவுகள், தொழில் இன்னபிறவற்றுடன் நீண்ட காலம் முற்றுப்பெறா தொடர்பை நிலைநாட்டுவதைப் பற்றியும் வாழ்வும் இன்னபிற அம்சங்களும் கிளைத்திருக்கும் வேரைக் குறித்தும் கூறும் ஓர் ஞானம். நாவலிலும் பூமியின் காந்தவீச்சு ஓடைகளின் மையப் புள்ளியான வேரை அறிந்து இயற்கையின் கட்டுப்பாட்டை, தொடர்பை அறியும் முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.

ஆ.உயிர் மரத்தின் கிளைகள்



செபிரோ எனப்படும் உயிர்மரத்தில் 10 முனைகள் உள்ளன. அந்தப் புள்ளிகள் இந்திய யோகாவில் கூறப்படும் உடலின் சக்கரங்களை ஒத்திருக்கின்றன. இந்த முனைகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் கொண்டிருக்கின்றன. இந்தப் புள்ளிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நாவல் இயல்களுக்குள் அந்தப் புள்ளிகளின் பொருள்களுக்கு இணையான செயல்பாடு நடக்கிறது. இந்த உயிர்மரமானது கபாலாவின் பண்டைய ஆன்மீக யூத மதக்குறியீடாகக் கருதப்படுகிறது.

1.கேட்டர்-இது தலைமையானது. இதில் தான் நாவலும் தொடங்குகிறது. இதன் பொருள் புனிதத் திட்டம்/எல்லையற்ற ஒளி/படைப்பு. நான் என்பது நானே என்ற உச்சபட்ச தன்னிலையை இது குறிக்கிறது.

2.சொக்மா-இது புனித உண்மை/அறிதல். சூன்யத்தில் இருப்பது. ஞானத்தின் சக்தி.

3.பினா-புரிதல். கழிவிரக்கம்/தர்க்கம். இது அன்பின் சக்தி.

4.செஸெட்-கருணை. கடவுளின் அன்பைப் போன்ற ஒன்றை வெளிக்காட்ட முனைதல். தோற்றத்தின் சக்தி.

5.ஜெவுரா-நீதி. பலம்/தீர்மானம். இது நோக்கத்தின் சக்தி.

6.டிஃபெரெட்- சமச்சீர் தன்மை. நடுவுநிலைமை/அன்புடைமை. இது படைப்பின் சக்தி

7.நெட்ஜாக்-சிந்தனை. தொடக்கம்/உளக்காட்சி. உறுதி. இது எல்லையற்ற பொறுமையின் சக்தி

8.ஹோட்-சரண். நேர்மை. இது நோக்கும் சக்தி

9.யேசோட்-அடிப்படை. ஒருமித்த அறிவு. இது வெளிப்பாட்டின் சக்தி.

10.மல்குத்- இறுதியான முனை. இராச்சியம். குணமாக்கும் சக்தி.

இந்த முனைகளைக் கொண்டு நாவல் கதையின் தன்மை வெளிப்படுத்துகிறது.

இ.உடல்/உயிர் உறுப்பாக்கம்-அவலம்

மனித உடலின் உறுப்பாக்கம் போல் இந்த செஃபிரோத்தின் கிளைகள் குறிக்கப்படுகின்றன. இந்த வகையில் நாவலின் உறுப்பாக்கமும் நிகழ்ந்திருக்கிறது. இந்த உறுப்பாக்கத்திற்குள் நிகழ்வது கபாலாவுக்கு நிகரான ஒத்தத்தன்மை. கபாலாவை, பூக்கோவின் அதிகாரம் பற்றிய சிந்தனையை, டெம்ப்ளார்களின் வரலாற்றை ஒன்றாக நெய்து உருவான இந்த நாவல் அழித்தெழுதும் மறை பிரதியாகியிருக்கிறது. காஸ்பான் பாத்திரத்தின் குழந்தையின் பெயர் கய்லியோ. உம்பர்த்து எகோவின் தந்தையின் பெயர்தான் அது. பெயர்களாலேயே விளையாட்டு ஒன்று இந்த நாவலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உம்பர்த்து எகோவின் தந்தை மூன்று போர்களில் பங்கெடுத்திருக்கிறார். அதன் பிறகும் அமைதிக்கான மனநிலையைக் கொண்டிருந்திருக்கிறார். அதனால்தான் உம்பர்த்து எகோவின் படிப்பும் அதன் பிறகான வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் பாசிச இத்தாலி அரசின் மீதான கருத்துருவாக்கத்தைக் கொள்வதற்கும் முடிந்திருக்கிறது. இந்த நாவலில் அந்தக் குழந்தைக்கு எகோவின் தந்தையின் பெயரை இட்டதன் மூலம் பழமையான கலாச்சாரத்தில் நசிவுறாத இத்தாலியில் பிறந்த ஒரு குழந்தையாக அந்தப் பாத்திரம் வடித்தெடுக்கப்படும் என்ற நம்பிக்கையை நாவல் கொடுக்கிறது.

இது போன்ற பொருள்களைக் கொள்ள வைப்பதும் அதிலிருந்து தடுத்துக் கொள்வதுமான விளக்கம் பற்றிய கோட்பாட்டை எகோவின் கருத்தாக்கம் உருவாக்கியிருக்கிறது. புனிதக் கிண்ணம் பற்றிய தேடல் என்ற இந்த நாவலின் கதைக்குள்ளிருந்து டேன் ப்ரௌன் 'டாவின்சி கோட்' என்ற நாவலை எடுத்து எழுதியிருக்கிறார். அதனால்தான் எகோ, டேன் ப்ரௌனை இந்த நாவலின் பாத்திரம் என்று கூறியிருக்கிறார். நாவலின் உறுப்பாக்கமாகப் பல கிளைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அது செஃபிரோவிலிருந்து இருக்கலாம். அல்லது தொடக்கமும் முடிவும் அறியாத வெற்றுத் தொடர்பாக்கமாகவும் இருக்கலாம்.

·         இந்த நாவலுக்குள், ஃபூக்கோவின் ஊசல் கபாலாவின் மந்திரந்திலிருந்து அறிவியலின் வெளி வரை ஆடிக் கொண்டிருக்கிறது. வரலாறு ஒன்றை உருவாக்கி அதைப் பொய்யாக்குகிறது நாவல். அல்லது உண்மையான சான்றுகளிலிருந்து புனையும் வரலாற்றை உருவாக்கிக் கொள்ளும் கற்பனையை விதைக்கிறது. முடிவற்ற வெளியில் தொடரும் பயணம். நாவலின் முடிவு ஏற்படவே இல்லை. லவைசியர் ஆடிகள் பிரதிபலிப்பில் மாயாஜால வித்தை காட்டுகின்றன. அவை பிம்பத்தை முதலில் காட்டும். பிறகு அந்தக் கண்ணாடியிலிருந்து சற்று தூரப்போனாலும் பிம்பம் மறைந்துவிடும். இந்த நாடக வித்தையைக் கொண்ட கண்ணாடி போல இந்த நாவலுக்குள் இருக்கும் வரலாறும் மந்திரத் தோற்றத்தைத் தந்தபடியே உள்ளது. ஒரு ரசவாத அலையைப் பரவச் செய்திருக்கிறது இந்த நாவல். கபாலாவைப் போன்ற படைப்பை நிறைவேற்றியிருக்கிறது இந்த நாவல். ஆன்மீக மந்திரந்தைப் புனைந்து வரலாற்றுக்குள் தேடும் முயற்சியை முன்னெடுத்து அதன் அவலத்தை வெளிக்காட்டி மரணத்தில் முடிக்கிறது கதை. பூமியை, இயற்கையை ஆட்படுத்தும் அதிகாரத்தைப் பெறும் மனித உள்மன ஆசை கடவுளாதல் என்பதாக நாவல் உருமாற்றிக் காட்டுகிறது. மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் நடக்கும் நாடகீயத்தின் புனைவை அவலச்சுவைக்குள் பொதிய வைத்துப் பகடி செய்கிறது இந்த நாவல். முற்றுப் பெறாத வாழ்வை நிறைவுறாத வாழ்வை மரணத்தின் பொருள் கொண்டு முடிக்கிறது இந்தக் கதை.

பயன்பட்ட நூல்கள்:

1.Farronato Christina, Eco's Chaosmas-From Middle Ages to Postmodernity, University of Toronto, 2005

2.Bondanella Peter, Umberot Eco and the Open Text- Semiotics, Fiction and Popular Culture, Cambridge University Press, 1997.

3.Capozzi Rocco(Ed), Reading Eco-An Anthology, Indiana University Press, 1997.

4.Merivale Patricia, Elizabeth Sweeny Susan(Eds), Detecting Texts-The Metaphysical Detective Story for Poe to Postmodernism, Univerity of Pennsylvania Press, 1999.

5.Della Colleta Christina, Plotting the Past-Metamorphoses of Historical Narrative in Modern Italian Fiction, Purdue University Press, 1999.

6.Francese Joseph, Socially Symbolic Acts-The Historicizing Fictions of Umberto Eco, Vincenzo Consolo, and Antonia Tabucchi, Fairleigh Dickinson University Press, 2006.

7.Lampert Jay, Deleuze and Guattari's Philosophy of History, Continuum, 2006.

8.Albertson Edward, Understanding the Kabbalah, Sherbourne Press, 1972.

Articles

1.Cusack M.Carole, Esotericism, Irony and Paranoia in Umberto Eco's Foucault's Pendulum

2.Drob L.Sanford, Derrida and Kabbala.








[1] History is a master  because it teaches us that it doesn't exist. It's the permutations that  matter." Foucault's Pendulum p102

[2] And here as the infinite light continues in a straight line across the vacuum mentioned above, it does not immediately go downward but continues little by little.  That is, at first it begins to emit a line of light and immediately the line expands until it changes into something like a spherical wheel”-Foucault's Pendulum.