Saturday 3 December 2016

வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிவசங்கரா

http://solvanam.com/?p=47451#comment-3472
70களிலிருந்து ஒரு கட்டுரை: வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’


[‘70களில் வெளி வந்த பிரக்ஞை எனும் சிறு பத்திரிகையில் 1977 ஆம் ஆண்டின் ஜூலை மாத இதழில், சிவசங்கரா எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம். ]
ஒரு நாவலை விமர்சிக்க முற்படும்போது அதற்கான கருவிகள் நமது அனுபவங்கள் என்று கூறலாம். இந்த அனுபவங்கள் நேரிடையாகவோ கேள்விப்பட்டதாகவோ நம்மைப் பாதித்து வாழ்க்கையின் பல்வகையான பல திசைகளிலும் இழுத்துச் செல்கிற தன்மைக்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வடிவத்தை ஆதாரமாகக் கொண்ட உணர்வே ஒரு நாவலின் உலகத்தை எதிர் கொள்வதற்கான கருவியாகிறது; அனுபவங்களின் புதிய வடிவங்களையும் அவற்றின் புதிய பொருளையும் கண்டு கொள்ளப் பயன்படுகிறது. மாறாக, சிறுகதைகள் இந்த உணர்வுக்கு அகப்படுவதில்லை. ஏனெனில், வீச்சிலும் விவரணையிலும் நாவலை விடச் சிறுகதை வறுமை கொண்டது. நாவல்களின் அகத்தில் அமுங்கிப் போகிற சிறிய – ஆனால் மகத்தான – மனித வெளிப்பாடுகள் சிறுகதைகளில் பரிமளிக்கின்றன. அறைகள் நடமாடுகின்றன; தோட்டங்கள் ஏக்கமூட்டுகிற வகையில் இருந்து மறைகின்றன;மனிதர்கள் நமக்கு பரிச்சயமானவுடனேயே காதலுறுகிறார்கள்; நமக்கு புலப்படாத சோகங்களின் இடைவெளியில் ஒரு மாலைப் பொழுது கழிகிறது.

ஆதி அந்தமின்றி நடந்தேறும் இந்நிகழ்ச்சிகள் நமக்குக் கணநேரத்தில் தெரிந்து மறைகிற அன்னிய மனிதர்களின் அனுபவங்களைப் புரிந்து கொள்வதற்கான உற்சாகத்தையும் ரகசிய உணர்வையும் ஏற்படுத்துகின்றன. எதையோ சுட்டிக் காட்டுவதற்கெனப் புனை கதையில் உலகம் சமைக்கப்படுமெனில் சிறுகதை உலகம் இன்னும் நெருக்கமானது, ஆழமானது; ஒரு நாவலின் விஸ்தாரத்தைத் தவிர்த்து ஒரு நெருங்கிய மனிதரின் விளங்காத முகச்சுளிப்பின் தீவிரத்தை நம்முள் தோற்றுவிக்கக் கூடியது.

ஆயினும் சிறுகதைகள் பலவாறாக எழுதப்பட்டு வருகின்றன. சில உளக் கோட்டங்களை அல்லது சமூக பாதிப்புகளை விளக்குவதற்கெனப் பல சிறுகதைகள் இதுவரை எழுதப்பட்டுள்ளன. ஜெயகாந்தனின் சிறுகதைகள் அறுபதுகளில் இவ்வாறே செயல் புரிந்தன. பிரச்சனைகளை ஆதாரமாகக் கொண்டு, கதாபாத்திரங்கள் தங்கள் முரண்பாடுகளைத் தங்கள் தன்மைக்கேற்ப அலசி அவற்றிற்குத் தீர்வு காண்பதாக இவை எழுதப்பட்டன (யுகசந்தி, அக்கினிப் பிரவேசம் சுயதரிசனம் மற்றும் பல). நுணுக்கமான அனுபவங்கள் இவற்றில் அதிகம் இடம் பெறவில்லை; அப்படியே தோன்றினாலும் அவை கதாபாத்திரங்களின் மெய்யான இருப்பை நிறுவுவதற்கே பயன்பட்டன. இந்த உணர்வுகள் யாவுமே அறிவு பூர்வமாய்த் தீர்க்க வேண்டிய ஒரு முரண்பாட்டிற்கு இவர்களை அழைத்துச் சென்றன.தம் உணர்வு, பார்வை இவற்றை மட்டுமே கொண்டு அனுபவத்திலாழ்ந்தவர் இக்கதைகளில் மிகக் குறைவே.

அசோகமித்திரனின் பல சிறுகதைகள் நிகழ்கால வாழ்க்கையின் அராஜகத்தை உணர்த்தும் வண்ணம் அமைகின்றன. மதிப்பீடுகள் கதைகளில் உருவாக்கப்படாமல் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடுகள் பெரும்பாலும் உன்னதத்தையோ நம்பிக்கையையோ சார்ந்ததாக இருப்பதில்லை. விதிக்கப்பட்ட ஒரு உலகத்தில் உணர்வுகள் கவிந்து போகின்றன. முக்கியமாக, எதுவும் பணயம் வைக்கப்படுவதில்லை. எல்லாமே ஒரு இரக்கமற்ற குறுகிய தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. இது நமது சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருக்கலாம். எனினும் இந்த வாதம் எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதைப் பற்றிய அறிவு நமக்குக் கிடைக்கிறது.

நிறைய எழுதியிருக்கிற இரண்டு எழுத்தாளர்களின் கதைகளின் பொதுத் தன்மையைப் பற்றி இவ்வாறு உதாரணங்களின்றிக் குறிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதுதான். எனினும் சிறுகதைகளின் குறிக்கத் தகுந்த ஆழத்திற்கு உதாரணங்களாகவே இவை தரப்பட்டுள்ளன. இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகப் போகிற வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தொகுதிக்கு உணர்வு பூர்வமான, கலை வடிவத்த்தைச் சார்ந்த விமர்சன ஆதாரங்களை நிறுவுவதற்கு மேற் கூறியவை அவசியமாகின்றன.

பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் எழுத்திலும், வசீகரத்திலும் எழுப்புகிற ஈடுபாட்டிலும் வேறுபாடு இருப்பது இயற்கை. எனவே எல்லாக் கதைகளுக்கும் ஒரே வகையான கவனம் கிடைக்க முடியாது. வேறுபட்ட மனிதர்கள், நிகழ்ச்சிகள், உணர்வுகள் இவற்றை ஆசிரியர் கையாண்டுள்ள விதம் இந்தப் பதினைந்து சிறுகதைகளையும் படிக்கும் போதுதான் தெரிகிறது. இதில் நாம் காணும் ஒற்றுமை வேற்றுமைகளும் இந்த எழுத்தை இனம் காண உதவுகின்றன.

பொதுவாக, வண்ணதாசனின் கதைகள் அக நிகழ்வை ஆதாரமாகக் கொண்டவை. கிலேசங்கள், தாபங்கள், ஏக்கங்கள், சில சமயம் ஆற்றாமை இவையே அடிக்கடி தோன்றுகின்றன. நிலைத்த உறவுகள், அவை விவரணைக்குள்ளாகும்போது புரிந்து கொள்ளுதலுக்கான போராட்டத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்தப் போராட்டத்தின் தன்மையும் தீர்வும் நம் கவனத்திற்குரியவை. இந்தக் கதைகளின் மற்றொரு தன்மை இந்தப் பாத்திரங்களின் தனிமை. இந்தத் தனிமை பொய்யாகவும் இருக்கலாம்; அக நிகழ்வுகளில் மிகையான ஈடுபாடு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இதற்கான பதில் இந்தக் கிலேசங்களின் தன்மையிலிருந்து கிடைக்கிறது.

‘மிச்சம்’ இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்று. துன்பம் மிகுந்த ஒரு வாழ்க்கையின் அசைவுகளைக் காட்டுகிறது. பெயர் தெரியாத அந்த இளம் பெண் உண்மையில் தனியானவள்; நம்பிக்கை அற்றவள்; வெளி உலகின் ஒழுங்கினால் அச்சுறுத்தப் படுகிறவள். அவள் தன் தனிமையை ஒரு பின்னிரவுக்காலத்தில் உணர்கிறாள். வெறுமையென்று தீராத தன் வாழ்க்கையின் சிறிய அடையாளங்களைப் பற்றி அவள் சிந்தனை ஓடுகிறது. அவளுக்கு டீ வேண்டியிருக்கிறது. காலை வரை காத்திருக்க வேண்டும். அதற்காக அவள் ஒதுங்கியிருந்து ஏற்கவேண்டிய அசைவும் ஒழுங்கும் தொடங்குகின்றன. அப்போது அவள் நண்பர்கள் உலகத்தை நாடுகிறாள். இந்த நட்பு அபாரமாக இருக்கிறது. அச்சிறுவர்கள் மிச்சத்தைப் பருகும்போது, வளர்ந்த அவள் ஒழுங்கின் பெயரால் அவர்களை விரட்டுகிறாள். அப்படியும் அந்த ஒழுங்கு குலைவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. குட்டியப்பன் ‘சாமியே ஐய்யப்போவ்’ என்று பாடுகிறான். இது நேற்றிரவு அவளைப் புணர்ந்தவனின் வக்கிரமான, நிலையற்ற, பாசாங்குத் தன்மையான பக்தியின்மையைவிட ஒழுங்கைச் சிறிதும் அறியாத குதூகலமாக இருக்கிறது. அவள் சந்தோஷப்படுகிறாள். அவர்களது மனித உலகம் இந்த ஒழுங்கற்ற தன்மையுடன் இழைகிறது.

‘தனுமை’யின் கதாநாயகன் ஞானப்பன் அழகுணர்வு படைத்த ஒரு தாற்காலிகமான அனாதை. அவனுக்குத் தனுவின்மேல் platonic காதல் பிறக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு ரொமாண்டிக் கதாநாயகன் போல தனுவைப் பொறுத்தவரையில் சிறு விஷயங்களையும் அவன் போற்றுகிறான். அவனுடைய உணர்வுலகம் விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது. இந்த விவரணையில் ஞானப்பன் அசைவற்றுத் தனியாய்த் தென்படுகிறான், ‘தனுமை’யில் உள்ளுலகம் நிரடுகிறது; உலகத்தைப் பற்றிய குறிப்புகள் தனியே அன்றி ஞானப்பன் மூலம் தரப்படுவது நாம் அவனை அறிந்து கொள்ளத் தடையாய் இருக்கிறது. சிறுவர்களுடன் உறவாட முடியாதததாக ஞானப்பன் நினைத்துக் கொள்வதாக இரண்டு பத்திகள், இந்த நிலையின் சோகத்தை, பொருந்தாத கவியுள்ளத்தைக் காட்டி வன்முறைப்படுத்துகின்றன. அனாதை ஆசிரமத்தில் பாடப்படும் பாடலுக்கான உவமானங்களும் ஒரு மோசமான, கவிதைப் பொருளுக்கே நியாயம் செய்யாத கவிதையைப் போல அமைகின்றன. ‘தனுமை’யில் உண்மையாகவே மனிதத் தன்மை பொருந்தியவள் டெய்ஸி வாத்திச்சிதான். ‘தனலட்சுமிதான் வேண்டுமாக்கும்’ (தனுவல்ல!) என்று அவள் கேட்பது உலகம் சார்ந்ததாய் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. ‘தனு’வை நேசிக்கும் கவியுள்ளம் படைத்த ஞானப்பனுக்கோ இது கொச்சையாகத் தோன்றுகிறது (இங்கும் ஒரு உவமானம் என்பது மாற்ற முடியாதது).

‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ என்ற தலைப்புச் சிறுகதையின் விவரணையும் இதே ரீதியில் தொடங்குகிறது. ஒரு காஷியர் தன் ஒரு உத்தியோக நாளின் உணர்வுலகைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்தக் காஷியரும் ஒரு sensitive மனிதன்; கூரிய கவனம் உள்ளவன். நடப்பவை யாவும் அவனை எங்கெங்கோ கொண்டு செல்கின்றன. பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றுக் காஷியராக அமர்கிறான். அந்தப் பெருந்தன்மை மாற்றமில்லாத உத்தியோகச் சோர்வுக்கு வழிகாட்டுகிறது. ஓரளவுக்கு முதிர்ச்சி பெற்றவனாக இருப்பான் என்ற எதிர்பார்ப்பு தகர்க்கப்படுகிறது. சங்கடமான நிலை, என்றாலும் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ என்ற இரங்கல் பொருந்தவில்லை. அந்தத் திருமணத்திற்கு வந்திருக்கக் கூடிய ஏனைய காஷியர்கள் விடுதலை பெற்றிருப்பார்கள் என்று கூடத் தோன்றுகிறது.

‘நொண்டிக் கிளிகளும் வெறி நாய்களும்’ வித்தியாசமான சூழ்நிலையைக் கொண்டது. கலை உலகின் மகத்தானதொரு மூலையில் மட்டும் வெற்றி காண முடிந்த ஒரு கலைஞன் பழைய பேப்பர் வியாபாரியாக மாறுகிறான். இவனுக்குப் புட்டா என்ற கார்ட்டூனிஸ்ட் நண்பன். புட்டா விழுந்து போன மரத்திலிருந்து தான் காப்பாற்றிய ஒரு நொண்டிக் கிளியைப் பிச்சுவின் வீட்டில் குடியேற்றுகிறான். இவர்களுக்கிடையே அன்பு நிலவுகிறது. புட்டா தன் இயல்புக்கேற்ப ஒரு சுதந்திரப் பறவைபோல பறந்துவிடுகிறான். பிச்சு நொண்டிக் கிளியை வியாபார நோக்கங்களிலிருந்து விடுவித்த உடனேயே சரிந்த பழைய பேப்பர் கட்டுகளுக்கிடையே அது இறந்து கிடப்பதைக் காண்கிறான். இன்னதென்று விவரிக்க முடியாத வகையில் வண்ணதாசனின் நடை இந்தக் கதைப் பொருளுக்குப் பொருந்தி வருகிறது. பிச்சா, புட்டா போன்றவர்கள் இயல்பாகவே கவியுள்ளம் படைத்தவர்கள் என்பதற்காக இருக்கலாம்.

‘பசுக்கள்’ எளிமையாக எழுதப்பட்ட கதை. அகவுணர்வுகள் விவரணையின்றி மனித சம்பாஷணையும் செய்கைகளும் மட்டுமே இக்கதையில் அடங்குகின்றன. முதற்பசு தன் வாழ்வைச் சாக்கிட்டு அந்த வீட்டாருக்கு நஷ்டம் வைக்கப் போகிறது. இரண்டாவது பசு அந்த வீட்டுச் சின்னாச்சி, வாழாவெட்டியாக இருப்பவள் இவர்களுடைய பிரச்சனையின் அண்மை இவற்றின் ஒற்றுமையைக் காட்டுகிறது. இதைக் கண்டு கொள்கிற ஆச்சி மூன்றாவது பசு எனலாம். ஒரு மகத்தான பிரச்சனையின் – தவிர்க்க முடியாதபடி- மேலோட்டமான ஆரம்பமாகவே இந்தக் கதை முடிகிறது,

‘வடிகால்’ தன் தந்தையின் குரூரத் தன்மையைக் கண்டு கொதிக்கும் ஒரு சிறுவன் அருவியில் மூச்சுத் திணறி இறக்கிறான். தடை செய்யப்பட்ட தன் துக்கத்தை அந்த வீட்டுக்கு வந்திருப்பவர் அந்தக் கொடியவர் தன் பிள்ளையை நினைத்து அழும்போது தானும் வெளிப்படுத்துகிறார். சிறுகதையின் அசைவு இக்கதையில் தெரிகிறது. மற்றும் இத் தொகுதியின் தெளிவான, பிரமிக்க வைக்கிற கதைகளில் இதுவும் ஒன்று.

‘சில நிமிர்வுகள், சில குனிவுகள்’, ‘பாடாத பாட்டெல்லாம்’, ‘பாம்பின் கால்’ இவை மூன்றும் ஆற்றாமை நிரம்பிய கதைகள். ஆற்றாமையை அவரவர் இரக்கம், தனிமை, தோழமை மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் உறவற்ற தன்மை பொருந்தியவர்கள்; உறவை எதிர்நோக்குதல் இவர்களுக்கு இயலாமையையே உருவாக்குகிறது என்றாலும் இவர்களது முயற்சிகள் பலவீனமாகத்தான் இருக்கின்றன. கணநேர ஆறுதலைத் தவிர வேறெதுவும் இவர்கள் தேடுவதற்கில்லை.

‘ஒரு வெள்ளை வேட்டியும் மஞ்சள் சட்டையும்’: மரியாதைக் குரியவர்களின் வர்த்தகத்திலிருந்து வருகிற ஆனால் இன்னும் அந்த மரியாதைக்கு உள்ளாகாத ஒரு வாலிபனின் அனுபவங்களை விவரிக்கிறது. முதலில் இயலாமையால் எழும் இரக்கமற்ற தன்மை, பின் தன் இரக்கத்தைப் பற்றிய நினைவு, ஒரு அபலைப் பெண்ணுடன் இரக்கமிருந்தும் உறவாட முடியாத இயலாமை, இரக்கமற்றவன் எனச் சாடப்படும்போது துன்பம், பின் கயமையைச் சாடும்போது இரக்கம். ‘வெள்ளை வேஷ்டி’யின் மெய்யான மேலோட்டத்தைப் பிரதிபலிக்கிற இந்நிகழ்ச்சிகள் உலகத்தின் எதிர்பார்ப்புகளை ஒருவன் திறமையின்றிக் கையாள்வதை விவரிக்கின்றன. அவனை மனிதனாக விடாமல் வெறும் வெள்ளை வேஷ்டியாக வெறும் இரக்க சிந்தனையாளனாக வைத்திருப்பது அவன் சூழ்நிலையெனப்படுகிறது.

‘ஒரு உல்லாசப் பயணம்’ அருவிக்குப் போகமுடியாத தன் ஆற்றாமையை ஒரு சிறுவன் மழையில் தீர்த்துக் கொள்வதைப் பற்றியது, அவனுடைய ஒடுக்கப்பட்ட தன்மைக்காக – அது தனக்குச் செளகரியமாக இருந்தாலும் – வருந்தும் தந்தை; இவையெதையுமே உணராத தாய். வண்ணதாசனின் சில கதைகளில் மனிதத் தன்மை கொண்டாடப்படுவதாகத் தோற்றமளித்தாலும், அது பற்றிய சாத்தியக் கூறுகளையே சார்ந்திருக்கிறது. கொண்டாடப்படுவதென்னவோ இந்தப் பாத்திரங்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத, இவர்களை சரிக்கட்டுகிற கவித்துவம் என்று தோன்றுகிறது.

‘வேர்’, ‘சபலம்’ இந்தக் கதைகளும் அதீதமான சுய உணர்வுடன் இருப்பதைத் திரித்துத் தன்னுள் நிறைவு பெறுபவர்களையே விவரிக்கின்றன. கடைசிக் கதையில் ‘இழிவு’ பரிமாறிக்கொள்ளப்படுகிறது. ‘புளிப்புக் கனிகள்’ கதையில் பிரபாவுக்காக இரக்கப்படும் நாயகனும் ‘பிரபா சிரித்தால் எப்படியிருக்கும் அவன் முகம்’ என்று நினைப்பவனாக இருந்தும் ஒரு சமரசத் தன்மையையே சுமந்திருக்கிறான். இந்த எல்லாக் கதைகளிலுமே ஈடு செய்வதுபோல் விவரணையும் குறிப்பும் நிரம்பியிருக்கின்றன. இவை பாத்திரங்களின் உள்ளுணர்வையோ அவர்களது செய்கைகளின் சாதாரணத்தையோ பாதிக்காமல் ஆசிரியரின் நடையாக மட்டுமே இருக்கின்றன.

சிலாகித்துக் கொள்ளக்கூடிய, மேலும் புரிந்துகொள்ளக்கூடிய நேர் விவரணைகளுக்கிடையில் ‘குடைகளை விரித்த நிலையிலேயே கறுப்புக் காளான்களாய்ச் சுவரை ஒட்டிச் சாய்த்து விட்டு’ போன்ற வரிகள் (உல்லாசப் பயணம்) அடிக்கடி தோன்றி நம் கவனத்தையும் கதையின் ஒருமையான அனுபவத்தையும் கலைக்கின்றன. ஒரு அழுத்தமான ஆழமான உலகம் இவர் கதைகளில் எழ வாய்ப்பிருந்தும் வெளிப்படையாகவே நிரடுகிற lyricism தடையாக இருக்கிறது.

மொத்தத்தில் வண்ணதாசனின் தீவிர அக்கறைகள் எவை என்று தீர்மானிக்க முடியாத வகையில் இத்தொகுதி அமைந்திருக்கிறது. மனித உணர்வுகள் – அவை எப்படிப்பட்டவையாக இருப்பினும் – இவரைப் பாதிக்கின்றன எனக்கொண்டால் அவை உறவு சாராமல் வெறும் விழைவுகளாகவும் கிலேசங்களாகவுமே தோன்றுகின்றன. Complexity of personal emotions is a poor substitute for complexity of relations. ‘நொண்டிக் கிளிகளும்’, ‘மிச்சம்’, ‘வடிகால்’, ‘ஒரு வெள்ளை வேட்டியும் மஞ்சள் சட்டையும்’ போன்ற கதைகளில் அந்த அளவில் கற்பனையும், உறவுகள் பற்றியத் தெளிவும் அசைவும் கிடைக்கின்றன. அபாயம், செழுமை துயரம் ஆகியவற்றிற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த அந்த உறவுலகத்தில் வண்ணதாசன் இனிமேல்தான் அடியெடுத்து வைக்க வேண்டும்.

___________________________________________

பதிப்புக் குழுவின் குறிப்பு:

இக்கட்டுரையை மீள் பிரசுரம் செய்ய, சிவசங்கரா என்ற புனைபெயரில் அன்று எழுதிய இன்றைய மொழிபெயர்ப்பாளர் திரு.என். கல்யாண்ராமன், அனுமதி வழங்கி இருக்கிறார். அவருக்கு சொல்வனம் நன்றியைத் தெரிவிக்கிறது. இது 70களின் நடுவில் துவங்கி 70களின் இறுதி வரை வெளிவந்த ‘பிரக்ஞை’ என்னும் சிறு பத்திரிகையில், ஜூலை ‘77 இல் பிரசுரமான கட்டுரை. கலைக்க முடியாத ஒப்பனைகள் எனும் சிறுகதைத் தொகுப்புடைய முதல் பதிப்புக்கு ‘சிவசங்கரா’ அந்தக் காலகட்டத்தில் எழுதிய விமர்சனம் இது. அந்தப் பதிப்பைக் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு அது கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு பதிப்பு என்பது தெரிந்திருக்கும்.

வண்ணதாசன் பற்றிக் கிட்டும் இன்னொரு பார்வைக்கு ஒரு உதாரணமாக, வண்ணதாசனின் இயக்கம் பற்றி கலாப்ரியா சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றின் சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறோம்.


நன்கறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக இன்று அறியப்பட்டு விட்ட வண்ணதாசனின் இலக்கியப் பணி பற்றிப் பல பார்வைகள் இன்று கிட்டும். மேலே கொடுக்கப்பட்ட இரு பார்வைகள் இந்தப் பார்வைகளெனும் கருத்துப் பிரிகையின் இரு கோடிகளாக இருக்கும் என்பதை எதார்த்தமாக நாம் கொள்ளலாம். இப்படிக் கிட்டக் கூடிய பல அணுகல்களைத் தொகுத்து ஒரு இதழில் பிரசுரித்தால் அது பல பத்தாண்டுகளாக இயங்கி வரும் ஓர் எழுத்தாளர் பற்றிய கோர்வையான ஒரு பார்வையை நமக்குக் கொடுக்கும். இப்படி ஒரு முயற்சியை சொல்வனம் மேற்கொள்ளலாமா என பதிப்புக்குழுவினர் யோசிக்கிறார்கள். வண்ணதாசனின் எழுத்துகளை மீள்பார்வை பார்க்கும் கட்டுரைகளை சொல்வனத்துக்கு அனுப்புமாறு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் ஒத்துழைப்பில் இப்படி ஓர் இதழ் நல்ல முறையில் அமையும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.