Friday, 23 December 2016

சிறப்புப் பகுதி: வித்யாஷங்கர் ஸ்தபதியுடன் ஒரு நேர்காணல்! : மின்னம்பலம்

https://minnambalam.com/k/1482431433

சிறப்புப் பகுதி: வித்யாஷங்கர் ஸ்தபதியுடன் ஒரு நேர்காணல்!

வெள்ளி, 23 டிச 2016
நேர்கண்டவர்: வைஷ்ணவி ராமநாதன்
உங்கள் குடும்பப் பின்னணி பற்றி...
நான் கோயில்களுக்காக பஞ்சலோக திருமேனிகள் செய்யும் ஒரு ஸ்தபதி குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் பாரம்பரியம் 500 வருடங்களுக்கும் மேலானது. அந்த முன்னோர்களின் பெயர் தெரியாது. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இருந்தவர்களின் பெயர்களிலிருந்து தெரியும். என் கொள்ளுத்தாத்தா ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதியை 1884இல் திரு. E.B.Havell சென்னைக்கு அழைத்துச் சென்றார். அவரையும், திருநெல்வேலியில் இருந்தும், மதுரையில் இருந்தும் வேறு இரண்டு ஸ்தபதிகளையும் வைத்துதான் திரு. E.B.Havell சென்னைக் கலைக் கல்லூரியைத் தொடங்கினார். என் கொள்ளுத்தாத்தா இல்லையென்றால் நான் இந்தத் துறைக்குள் நுழைந்திருக்க மாட்டேன். ஏதாவது, ஒரு பள்ளியில் Drawing வாத்தியாராக பணி செய்துகொண்டு இருந்திருப்பேன்.
பரம்பரை பரம்பரையாக கோயில் சிற்பங்களைச் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சிற்பத் துறைக்கு வந்ததற்கு காரணம் அது மட்டும்தானா?
நான் SSLC ஸ்ரீரங்கம் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது என் தகப்பனார் ஸ்ரீரங்கம் கோயிலில் வாகனங்கள், கொடிமரம் போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார். SSLC முடித்தவுடன் நான், மருத்துவம் இல்லையென்றால் வக்கீல் துறைக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பம் என் தந்தைக்கு இருந்தது. அந்தக் காலத்தில் கலைக்கு போதுமான ஆதரவு இல்லாமையால், நான் இந்தத் தொழிலுக்கே வரக்கூடாது என்று நினைத்தார். ஆனால் நான் கலைதான் படிப்பேன் என்று சாதித்தேன். என்னுடைய தாத்தா முத்துசாமி ஸ்தபதி, சிறுவயதில் என்னை மிகவும் ஊக்குவிப்பார். மணலின்மீது எனக்கு பறவை உருவங்களையும் விலங்குகளையும் வரைவார். அதைப் பார்த்து நானும் வரைய கற்றுக்கொண்டேன். .
என் தந்தையார் சென்னைக்கு வந்தபோது நானும் அவருடன் வந்தேன். அந்தக் காலத்தில் மூன்று காலேஜ்கள் பிரபலமாக இருந்தன - செத்த காலேஜ், உயிர் காலேஜ், பொம்மை காலேஜ். பொம்மை காலேஜ் என்றால் கவின்கலைக் கல்லூரி. என் தாத்தா, கல்லூரியில் இருந்த கட்டடத்தைக்காட்டி என் கொள்ளுத்தாத்தா எப்படி அங்கு வேலை செய்தார் என்று கதைகள் சொல்வார். அதைக்கேட்டு, நானும் அவரைப்போல் வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மேலும் என் அப்பா ஸ்ரீரங்கத்தில் வேலை செய்யும்போது அங்குள்ள ஆகம, சிற்ப சாஸ்திர விஷயங்களைப்பற்றி அங்குள்ள வைணவ பட்டர்களுடன் விவாதம் செய்வார். நானும் அதைக்கேட்டு வளர்ந்தேன். கலைக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற என் உறுதியை வலுப்படுத்தியதற்கு அதுவும் ஒரு காரணம்.
நான் கலைக்கல்லூரியில் சேர்ந்த சமயம், ராய் சவுத்ரி பணிமுடித்து, பணிக்கர் வந்த காலம்.
உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். இத்தகைய சிந்தனை, ஒரு சிற்பியாகிய உங்கள் தந்தைக்கும் இருந்ததா?
இல்லை. ஆனால் இந்தக் கேள்வியை பலரும் கேட்பார்கள். எங்களுடைய முப்பாட்டனார்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்காக சிற்பங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். என் தந்தையார், கோயில்களுக்காக கவசங்கள் செய்வார். அவர் கோயில்களுக்குச் செல்லும்போது நானும் பலமுறை அவரோடு செல்வேன். என் தந்தையாரிடமிருந்து மரபுவழி செய்முறைகளை கற்றுக்கொண்டேன். ஆனால் இதையே எவ்வளவு நாள்தான் செய்வது என்று என்னுள் கேள்வி எழுந்தது. மேலும் நாம் கோயிலுக்காக சிரமப்பட்டு செய்யும் ஒரு கவசத்தை, கோயில் நிர்வாகிகள் உருக்கிவிட்டு புது கவசத்தையும் செய்யலாம். இவ்வாறு அந்த கலைப் பொருள் அழிந்துவிடும்.


எனக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்று நினைத்து, நான் சென்னைக் கலை கவின் கல்லூரியில் சேர்ந்தேன். நான் Modelling படித்தேன். அந்தக் காலத்தில் Craft, Fine Art என இரு பிரிவுகளாக இருக்கும். Craft அதாவது, Sheet Metal, Wood work, Engraving படிப்பு Fine Art அதாவது, Modelling, Commercial Art, Painting படிப்பு. என் தந்தையாருக்கு நான் Commercial Art படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் Painting மற்றும் Commercial Art படிக்க வேண்டும் என்றால், 2 ஆண்டுகள் General Drawing படித்திருக்க வேண்டும். நானோ General Drawing படித்திருக்கவில்லை. ஆனால் General Drawing படிக்காமல் நேராக சிற்பக்கலை (Modelling) படிப்பில் சேரமுடியும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், Painting மற்றும் Commercial Art பயிலும் ஒரு மாணவனுக்கு முப்பரிமாணம் பற்றி படித்தால்தான் தெரியவரும். ஆனால் சிற்பக்கலை பயிலும் மாணவனுக்கோ 3-Dimension-ஐ பற்றி தனியாகப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், ஓவியம் மற்றும் வணிக ஓவியம் இரு பரிமாண கலை வடிவங்கள். ஆனால் சிற்பக்கலையோ முப்பரிமாண கலை வடிவம். இன்னும் சொல்லப் போனால், சிற்பத்துக்கு 4 அல்லது 6 பரிமாணங்கள்கூட உள்ளன.
அது எப்படி?
இதோ, இங்கு மனிதத்தலை வடிவில் ஒரு சிற்பம் உள்ளது. அதை நாம் நேர்பார்வை, மேல்பார்வை, ¾பார்வை எனப் பல கோணங்களில் பார்க்கலாம். இவ்வாறு, நாம் எண்ணற்ற பரிமாணங்களில் பார்க்கலாம். நான், என் சிற்பங்களை பலவிதமான கோணங்களிலிருந்து பார்த்து புகைப்படங்கள் எடுத்து ரசிப்பேன். அதனால்தான் என்னால் இத்தகைய சிற்பங்களைச் செய்ய முடிகிறது.
நான் சிற்பக்கலையில் Diploma முடித்த ஆண்டுதான், பழைய பாடத்திட்டம் மாறி 5 ஆண்டு படிப்பாக புதிய பாடத்திட்டமுறை அறிமுகமாயிற்று. நான் அந்தப் படிப்பில் சேர தகுதித்தேர்வு எழுதினேன். K.C.S.பணிக்கர்தான் மாணவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். என்னை அங்கு பார்த்த உடனே அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. நானும் 5 ஆண்டுப் படிப்பில் சேர வேண்டும் என்ற என் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். ஏனென்றால், நான் வேலைவாய்ப்புக்காக பல இடங்களில் விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைத்தவுடன் நான் படிப்பை விட்டுவிடுவேன் என்றும் அதனால் ஒரு இடம் வீணாகிவிடும் என்றும் அவர் சொன்னார். அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்தது. பின்னர் அவருடைய ஆலோசனையின்படி, நான் கல்லூரியில் இருந்த கைவினைப் பகுதியில் (Craft Section) சேர முயன்றேன். அந்தக் காலத்தில் கைவினைப் பகுதியில் Ceramic, Engineering, Sheet Metal என பல பிரிவுகள் இருந்தன. பணிக்கர் என்னை Sheet Metal துறையில் சேரச் சொன்னார். ஆனால் என் தாத்தா பல ஆண்டுகளுக்குமுன்னரே அதே துறையில் இருந்தார். மேலும் எனக்கு Sheet Metal செய்முறை எல்லாமே முன்னரே தெரியும். இதை, நான் பணிக்கரிடம் கூறினேன். அந்தக் காலத்தில் Sheet Metal துறையில் எவ்வாறு பாத்திரங்களைச் செய்வது, அவற்றை எவ்வாறு அழகுபடுத்துவது என்பன போன்ற பாடங்கள் இருக்கும். புடைப்பு (Embossing) நகாசு (Repousse) போன்ற வேலைப்பாடுகளை கற்றுக் கொடுப்பார்கள்.
அவரிடம், இந்தமாதிரியான ஒரு துறையில் நான் ஏன் சேர வேண்டும் என்றபோது, நான் உனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன். நீ இந்த உலோகங்களுடன் வேலைசெய்யும் முறையை மாற்ற வேண்டும் என்று பணிக்கர் சொன்னார். அப்போதுதான் அவர் ரஷ்யா சென்றுவிட்டு திரும்பிவந்திருந்தார்.
என் தந்தையார் செய்வதைப்போல எனக்கு தெய்வங்களை செய்யத் தெரியும். ஆனால் அதையே மறுபடியும் செய்வதில் என்ன பயன் உள்ளது. அதனால்தான் 1964இல் முதன்முதலில் என்னுடைய பாணியில் ‘பானை ஏந்திய மங்கை’ என்ற சிற்பத்தைச் செய்தேன்.
அப்போது, துறையில் இக்கலையை முறையாக என் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட குப்புசாமி நாயக்கர் என்ற ஆசிரியர் இருந்தார். ‘பானை ஏந்திய மங்கை’ சிற்பத்தை ஓவியமாக முதலில் செய்தேன். அதை சிற்பமாகச் செய்ய வேண்டும் என்றபோது செப்புத்தகடு துறையின் இருப்பில் இல்லை. ஒருநாள், அந்த ஓவியத்தை பணிக்கர் பார்க்க நேர்ந்தது. செப்புத்தகடு இல்லாமையால் அதை நான் சிற்பமாக மாற்றவில்லை என்றதும் பணிக்கர், உடனே குப்புசாமி நாயக்கரை அழைத்து தகடை வரவழைக்கச் சொன்னார். நான் சிற்பத்தை செய்துமுடித்தவுடனே பணிக்கரின் மேஜையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். அவர், அதைப் பார்த்தவுடன் என்னை வரவழைத்,து என் கையைப் பற்றிக்கொண்டு அந்த சிற்பத்தைப்பற்றி அரை மணிநேரம் பாராட்டிப் பேசினார்.
அதன்பின்னர், ஒரு பெண் வருத்தப்படுவதைப் போன்ற சிற்பத்தைச் செய்தேன். இவ்வாறு, சில சிற்பங்கள் செய்தபிறகு கிராமியக் கலையை மையமாகக்கொண்டு சிற்பங்களை செய்யத் தொடங்கினேன். பல இடங்களுக்குச் சென்று சுடுமண் சிற்பங்களை புகைப்படம் எடுத்தேன்.
என்னுடைய சிற்பங்கள் பலவும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. Punjab National Museum, புவனேஷ்வர் லலித் கலா அகாடமியில் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில். அப்போது, என் ஓவியங்கள் 600 அல்லது 900 ரூபாய் விலை இருக்கும். 1972 வரை பிரபலமான கலைஞர்கள்தான் தங்கள் படைப்புகளுக்கு 1000 ரூபாய் கேட்க முடியும்


பெரும்பாலும் பெண் உருவங்களை மையமாகக் கொண்டு படைக்கிறீர்கள். ஏன்?
பெண்களிடம்தான் நளினம், நாணம் போன்ற பாவங்களைக் காணமுடியும். ஆண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கென்று தனித்த உடலமைப்பு உள்ளது. அது, எப்படி சிற்பத்தில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை சிற்ப சாஸ்திரங்கள் விளக்குகின்றன. அந்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவின்படி நாமும் சிற்பங்களை வடிவமைத்தால் அழகு தானாகவே வந்துவிடும். பெண்களால் உயிர்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பெண்ணால்தான் கருவைத் தாங்க முடியும். ஆண்களால் அது முடியாது. இதுதான் பெண்ணின் சக்தி தாங்கும் சக்தி. அதனால்தான் நான் பெண்களை மையமாகக் கொண்டு அமைக்கிறேன். அதனுள் என் கற்பனையைப் புகுத்துகிறேன். சிற்பி ஜானகிராமனும் அவ்வாறே தெய்வ உருவங்களில் தன் கற்பனையைப் புகுத்துகிறார்.
ஜானகிராமன் என்னைவிட பெரியவர். நாங்கள் Sheet Metal துறையில் இருந்தபோது அவரும் அங்கு வந்து வேலை செய்தார். அப்போது நானும், என்னுடன் படித்த ரிச்சர்டு யேசுதாசும் அவருக்கு Sheet Metal சிற்பம் செய்ய உதவி செய்தோம்.
நான் ஒரு சிற்பம் செய்யும்போது நானே இறுதிவரையில் செய்வேன். ஆனால் பல கலைஞர்கள் அவ்வாறு இல்லை. ஓவியர் ஒருவரிடமிருந்து வாங்கி, மற்றவரிடத்தில் சிற்பத்தை செய்யச்சொல்லி பின்னர், தங்கள் பெயரை மட்டும் எழுதிக் கொள்வார்கள் சிலர். அது எனக்கு ஒப்பாது.
*
மூன்று பாகங்கள் கொண்ட இந்த நேர்காணலின் இரண்டாம் பாகம் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை (30.12.16) அன்று தொடரும்.
வித்யாஷங்கர் ஸ்தபதி
1938இல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். 1962இல் சென்னைக் கலைக் கல்லூரியிலிருந்து நுண்கலை பட்டம் (Diploma) முடித்தார். பின்னர், கும்பகோணத்தில் உள்ள கலைக் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் இருந்து ஓய்வுபெற்றார். இவர், National Award of Lalit Kala Akademi, New Delhi விருது (1993), Bombay Art Society Award (1976) என, பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் Regional Centre Art Exhibition of the Lalit Kala Akademi, Madras (1989), 3rd Havana Biennale Cuba (1989), The Madras Metaphor Exhibition organized by Ebrahim Alkazi of Art Heritage Gallery, New Delhi (1991) போன்ற முக்கியமான பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.
வைஷ்ணவி ராமநாதன்
Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் நுண்கலை படித்தார். இப்போது, சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதிநேர Art History ஆசிரியராக இருக்கிறார்.