சரமேகோ உறுப்பினர் கார்டை கொண்டிருந்த கம்யூனிஸ்டாக இருந்தாலும் அந்த காலத்தில் இடதுசாரிகளால் மிகவும் விதந்தோதப்பட்ட சோசலீச எதார்த்தவாதத்தை தன்னுடைய எழுத்தில் கடைபிடிக்கவில்லை. மாய எதார்த்த புனைவு வகையே அவருடைய எழுத்துப்பாணியாக இருந்தது. 'மாய எதார்த்தவாதியாக' இருப்பினும் தன்னுடைய நாவல்களின் இருக்கும் தாக்கங்களை குறித்து அவரே விளக்குகிறார். Stylized statements-உடன் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இந்த எழுத்தாளன் சாக மறுக்கிறான்.
பிள்ளைகெடுத்தாள்விளை என்ற சிறுகதையை நான் கிண்டலாக குறிப்பிடுவதன் காரணம், 'எங்க டீச்சர்' என்ற சிறுகதையும், 'பிள்ளைகெடுத்தாள் விளை' கதையும் பார்ப்பன பார்வையில் உதித்த பிராமண/உயர்சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதிகள் குறித்தான Stereotype-களை மிகவும் தந்திரமாக வாசகர்களுக்கு கடத்தும் ஒரு பார்ப்பன எழுத்தானின் பிரதிநித்துவபடுத்தும் படைப்புகள் என்பதால்தான். ஜே.ஜே. சிலகுறிப்புகளுடன் ரிக்காடோ ரெய்ஸின் மரணம் என்ற நாவலை இணைத்துப் பேசுவதன் காரணம் இரண்டு நாவல்களுமே உண்மையில் இருந்திராத இலக்கியவாதிகளை குறித்துப் பேசுவதாலும் (பெஸ்ஸாவோ தன் வாழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கற்பனை சித்திரத்தை ரிக்கார்டோ குறித்து கொடுத்திருப்பதால் ரிக்கார்டோவும் கற்பனை கதாபாத்திரமாக மாறுகிறான்), இரண்டு நாவல்களுமே அரசியல் பேசும் நாவல்களாக இருப்பதாலும்தான். (இரண்டு நாவல்களையுமே சரியான இடத்திலிருந்து புரிந்துகொள்வதற்கு அவர்கள் குறிப்பிடும் நிலப்பகுதிகள் குறித்த அரசியல் புரிதல் அவசியம்) சரமேகோ தனக்கென சார்புநிலை அரசியல் நிலைப்பாட்டினை கொண்டிருந்தாலும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. மாய எதார்த்த புனைவு வகைமையை அவர் கையாளுகிறார். அதன் காரணமாக புனைவு அழகியல் முறையிலும் சிறப்பானதாக வருகிறது. பிள்ளைகெடுத்தாள் விளை நாயகனுக்கு அது கைவரப்பெறவில்லை. நுண்மையான பிரச்சாரம் அங்கிருக்கிறது (என்ன, பிராமண சங்கத்திலோ ஆர். எஸ். எஸ்-சிலோ அவர் உறுப்பினராக இருக்கவில்லை). நாவலின் முதல் பகுதில் வரும் பல பத்திகள் அதன் முன்னுரையாக வந்திருக்க வேண்டியது. இந்த படைப்பு மிகவும் சராசரியானதாவதற்கான காரணமும் இதுதான். இங்கு எழுத்தாளன் யார்? எங்கிருந்து எழுதுகிறான்? என்றக் கேள்விகள் முக்கியமானதாகிறது. இந்தக் கேள்விகளில்லாது இலக்கிய ஆய்வுகளின்/விவாதங்களின் பயன் என்னவாக இருக்க முடியும்? எழுத்தாளனுக்கு சாவு கிடையாது. அதுவும் பார்ப்பன எழுத்தாளனுக்கு கிடையவே கிடையாது.
ரொபர்டோ பொலானோ, அமெரிக்காவில் (வட மற்றும் தென் அமெரிக்கா) நாஜி இலக்கியம் என்ற புதினத்தில் வலதுசாரி சராசரி இலக்கியவாதிகளை கிண்டலடித்து எழுதியிருப்பார். நாஜி இலக்கியவாதிகளின் போதாமைகளை அம்பலபடுத்தும் புத்தகம் அது. ஆனால் அவர் குறிப்பிடும் இலக்கியவாதிகள் குறித்து தேடிப்பார்த்தால் எந்தத் தகவலையையும் பெறமுடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே கற்பனை கதாபாத்திரங்கள். இதற்காகவேனும் எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்ல முடியுமா? இல்லை. காரணம் என்னவென்றால் அந்த கதாபாத்திரங்கள் உண்மையாக கதாபாத்திரங்களிலிருந்து வடிக்கப்பட்டவர்கள். எழுத்தாளன் ரோலன் பார்த்தஸ் சொல்லும் 'பொருளில்' எழுத்தாளன் சாகவே முடியாது என்பதற்கு இந்த படைப்பே சான்று!