Thursday, 25 May 2017

யுத்த தேவதையின் திரு முக மண்டலம் - தாமஸ் வுல்ப் : புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு

யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

Published inபுதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2009 12:05 Print
யுத்த தேவதையின் திரு முக மண்டலம்

தாமஸ் வுல்ப் - அமெரிக்கா
http://www.dinaithal.com/component/k2/8473-tirumuka-of-fairy-war-zone.html

     ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு மாதிரி தாவவோ ஓடவோ லாவகம் படைத்த கட்டமைதி, கரத்தையும் கருப்புப் பாதங்களையும் - அவற்றை முஷ்டி என்று சொல்லுவது பொருத்தமல்ல, அகன்றபடி விரித்து ஆகஸ்ட் மாதச் சூரியன் கன்னக் கனிந்த கருப்பில் பளபளக்க சர்வ ஜாக்கிரதையாக பின்வாங்குகிறான். காய்ந்து கருங்கட்டையாகப் புல்லற்று மலடடித்துப் போன களிமண் கட்டாந்தரை மீது கால் ஊன்றிப் பின்வாங்குகிறான். வெள் விழிகள் ஆழங்காண முடியாத, மூங்கையான வெறுப்பும் பீதியும் கொப்பளிக்கிறது. அவனை விரட்டிக் கொண்டு தென்னாட்டு வெள்ளையன், காங்கித் தலைவனோ ஓவர்ஸீயரோ - கொழுப்பேறிய சதைப்பற்று மிகுந்த கைகளில் தடியேந்தி, சளக்கு பளக்கென்று அவனைத் தொடர்கிறான். அவனுடைய அடித் தொண்டை கொலையையும் ரத்த வெறியையும் குமுறிக் கனைக்கிறது. 'கருப்புக் கூத்தியா மவனே; ஒன் கொடலைக் கொதறிப்புடறேன் பாரு. நாசமாப்போன மூளையைச் சிதற அடிக்கிறேன் பாரு!' தடி நீக்ரோவின் மண்டையில் பொட்டு பொட்டு என்று விழுந்து மைதானம் முழுவதிலும் கேட்டது. கட்டை உயிரடிக்கும் எலும்பில் அடித்துக் கொண்டிருந்தது. இந்தத் தொந்தி பெருத்த வெள்ளையனுக்குப் பின்புறம் உலகத்தின் தலையாட்டிப் பிராணியான ஆபீஸ் குமாஸ்தா, ஷர்ட் போட்டு நடமாடும் எலிமாதிரி தொடர்ந்து கொண்டிருந்தது. ஆபத்து என்றால் எலி மாதிரி பொடுக்கென்று ஒளிந்து கொள்ளும் திறமையும், ஆபத்து அகன்றது என்றால் அசகாய சூரத்தனத்தோடு கொல்ல வரும் தன்மையும் படைத்த ஜந்து இது. இது எலிப் பல்லை இளித்துக் கொண்டு, தன்னைப் பாதுகாப்பவன் நிழலில் தொடர்ந்து வந்தது. பயத்தில் தலையாட்டும் அடிமை. கொலையின் குனிந்து கொடுக்கும் மெய்க்காவல், இரக்கமோ தயவோ இல்லாமல் அடியோடு கொல்ல வேண்டும் என்ற கோழையின் ஆசையோடு கூடி எலிப் பல்லைக் காட்டிக் கொண்டு வந்தது. ஈவிரக்கமற்ற சூரியன் கைப்பட்டனிலும், கஞ்சியேறி மொடமொடக்கும் ஷர்ட் அணிந்த கையிலும், அது ஏந்திய மங்கிய நீலக் கைத்துப்பாக்கி மீதும் பிரகாசித்தது. துப்பாக்கியை ஏந்திய அவன் கை நடுங்கியது. ரத்த வெறிகொண்ட எஜமானுக்குத் துப்பாக்கியை நீட்டி 'இந்தாருங்க... இந்தாருங்க மிஸ்டர் பார்லட், பய எதுத்தா தாட்சண்யமில்லாமல் சுட்டுத் தள்ளுங்க' என்று காதில் ஓதியது. 

     இந்த நிலையில் நீக்ரோ ஜாதியான் க்ஷணங்கூட நிற்காமல் பின்வாங்கி நடந்து கொண்டே இருக்கிறான். பயங்கரமான அவனுடைய வெள்ளை விழிப் பார்வை, பீதியும் வெறுப்பும் குடிகொண்ட பார்வை, எதிரியைப் பார்க்கவில்லை. அவனுக்கும் பின்னால் பளபளத்த மங்கிய நீல உருக்குக் குழலை இடைவிடாமல் பார்த்தது. அவனுடைய கரங்கள் குருட்டுத்தனமாக, பயனற்ற ரீதியில் முன்னுக்கு நீண்டு மறித்தன. வெறும் காற்றைத்தான் மறித்தன. அவன் வெறுப்பைக் கொட்டிக் கொண்ட எதிரி, மேலுக்கு மேல் அடித்துக் கொண்டே வந்தான். அவனுடைய கருப்பு முகத்தில் வாய்க்கால் வாய்க்காலாகச் சிவப்பு ரத்தம் பிரவாகமெடுத்தது. மண்டையில் பொட்டுப் பொட்டென்று குறுந்தடி விழுந்து கொண்டிருந்தது.

     'ஒங்க... நாசமாப்போன கருப்புக்களுக்கு... நாப்பயமவனே.' கொலை நிறைத்துக் குமுறியது அந்தக் குரல். 'எப்பிடி இருக்கணும்னு சொல்லிக் குடுக்கேன் பாரடா.' படார். தடி மூக்கந் தண்டில் விழ சில் எழும்பு சரசரவென்று நொறுங்கியது. 'நாசமாப் போன கருங்களுதே வெள்ளைக்காரனை எதுத்துப் பேசரதா?' - படார். பக்க வாட்டாகச் சரிந்து வாக்கற்று விழுந்த அடி வாயை ஒரே ரத்தக் குமையலாக்கி விடுகிறது. உருக்குக் குழலின் நீலப் பளபளப்பில் வைத்த கண் மாறாமல், அந்த நீக்ரோ ஜாதியான் நொறுங்கித் தூளாகிவிட்ட பற்களைத் துப்புகிறான். 'அந்த நாசமாப்போன பய மண்டையை உடைத்துத் தருகிறேன் பாரு. கழுசடைக் கருப்புக் கூத்தியா மவனெ - என்னமாச் சொல்லிக் கொடுக்கிறேன் பாரு.' படார் - சுருண்டு வளர்ந்த மயிர் நிறைந்த மண்டையோட்டின் மத்தியில் இப்பொழுது அடி விழுந்து குறுகிய நெற்றிக்குமேல் மாங்காய் மாதிரி பிளந்து விட்டது. சக்தி துளும்பும் கரும் புருவம் கிறங்கித் தள்ளாடி முழங்கால் வளைய, தலை குனிய கரங்கள் இன்னும் முன்போல் பரவலாக விரிந்தபடி, முதலில் ஒரு முழங்காலை வளைத்து, ஒரே ரத்தமயமான தலையை நெஞ்சில் மடியத் தொங்கவிட்டபடி கால் பூட்டுகள் குருட்டுத்தனமாகத் தள்ளாட, அடியற்றது போல் மண்ணில் குப்புறச் சரிந்து விழுந்தான். அடிக்குடலோடு குமட்டலெடுக்கும் இந்தக் கோரத்தனத்தின் சிகரமாக, பிரக்ஞை இழந்து ரத்தச் சக்தியாக நைந்த முகத்தில், பூட்ஸ் காலின் கொலைகார உதை விழுந்தது. அப்புறம் யாவும் ஒடுங்கிய நிசப்தம். பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை. வெள்ளைத் தொந்தியில் முட்டி முட்டித் திக்குமுக்காடி எழும் சுவாசமும், எலிப்பல்லைக் காட்டிய வெள்ளை எலி மூஞ்சியின் பீதி முடிந்த மூச்சும், மங்கி நீலம் இமைக்கும் விஷமுண்ட உருக்குந்தான் மிச்சம்.

 அப்புறம்.

     பீதியும் வெறுப்பும் குடிகொண்ட கோழையின் நெஞ்சு, தனக்கு ஆபத்து வராமல் கொல்ல விரும்பும் ஏக வழியில் செல்லும் கோழையின் கொலைக்காமம், சுயமதிப்புக் கப்பல் உடைந்ததும் எலி சாயுஜ்யத்தைப் பெற, துப்பாக்கி ஏந்தி காக்கியணிந்து, அதிகாரக் குதிரையில் ஆரோகணித்து இங்கு இப்போது கொலைத் தொழில் நடத்துகிறது. மூன்று பையன்கள்; எல்லோருக்கும் அந்தக் குத்தகைக் கம்பெனியில் தான் வேலை. இராத்திரிச் சாப்பாடு முடிந்தபின், கருக்கிருட்டில், இருளின் வருகையில் விமான மைதானத்தின் ஓரத்தின் பக்கமாக நடந்து செல்கிறார்கள். தண்ணீர்க் கரையோரமாக சமதளமான சதுப்பு மண் வழியாக, வீட்டைப் பற்றியும் ஊரைப் பற்றியும் படித்த படிப்பைப் பற்றியும் வாரக் கடைசியில் சம்பளம் வாங்கியதும் கடற்கரைக்கு உல்லாசப் பயணம் போவது பற்றியும் பேசிக்கொண்டு போகிறார்கள்; சர்க்கார் வெள்ளோட்டம் பார்த்து பரீட்சை செய்து கொண்டிருக்கும் போர் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் கொட்டடியண்டையில் வந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட இரகசிய இடம் என்பது அவர்களுக்குத் தெரியாது. திடீரென்று அந்த இடத்தைக் காவல் காத்து நிற்கும் சோல்ஜர் இடுப்புப் பெல்டில் தொங்கும் ரிவால்வரில் கை வைத்தபடி அவர்களை நெருங்குகிறான். திருட்டு விழிகள் இமைகளை 'இடுக்கிக்' கொண்டு பார்க்கின்றன. நகர எலிகள் மூஞ்சி, சாம்பல் பூத்து வரண்டு, திருட்டுப் பார்வை, போட்டு உதப்பும் உதடு சலசலத்தது. மலடு தட்டி, ஜீவனற்ற சரசல் பேச்சை உதிர்க்கிறது.

     'என்ன செய்யறீங்க - தேவடியா மகனுகளா. இங்கே யாரு வரச் சொன்னா? - கொட்டடியைச் சுத்தி ஏன் வட்டம் போடுறே?'

     தெற்குக் கீழ் பிராந்தியங்களிலிருந்த சிறுவன் ஒருவன். செக்கச் சிவந்து அழகு குடிகொண்ட முகம். நேசமும் பரிவும் பேச்சில் குழைய, தயங்கித் தயங்கிப் பதில் சொல்ல முயன்றான்.

     'ஏனையா, இப்படிப் போகலாம்...'

     மின்வெட்டுப்போல, அந்த எலி, பையனை வாயில் அறைந்தது. பையனுடைய செக்கச் சிவந்த கன்னத்தில் அழுக்குக் கறைபிடித்த விரல் நுனிகள் முத்திரையிட்டன. அவன் ஜீவனுடைய முக மண்டலத்தில் அழித்துத் துடைக்க முடியாத அசிங்க முத்திரையை வைத்தன.

     'பதில் பேசாதேடா. நீ என்ன நெனைச்சா எனக்கென்னடா. மறு வார்த்தை பேசினா சுட்டுக் கொதிக்க வச்சுப்புடுவேன். ஹும், யாருக்கிட்டே...' அவன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவித் தயாராகக் கையில் எடுத்துக் கொண்டான். மந்தித்த பீதி, மந்திரம் போல் கட்டுண்ட நம்பிக்கையின்மை கவிந்து ஒரே சொருகாக நீலக் குழலின் மங்கிய பளபளப்பின் மீது மூன்று சிறுவர்களின் பார்வையும் தைத்தது.

     'சரிதாண்டா போங்கடா' என்று பையனை அறைந்த வீரன் கழுத்தில் கைவைத்து அவர்களை நெட்டித் தள்ளுகிறான். 'எல்லோரும் ஓடிப் போங்க, இல்லாட்டாக்கா - ' அந்த மகாப் பெரியவர் உறுமுகிறார். கண்கள் பாம்பு மாதிரி பளபளக்கின்றன. முகம் பயமுறுத்தி அவர்களை நெருங்குகிறது. 'இன்னும் பேசினா சுட்டுத் தள்ளுவேன். ஓடுங்கடா. சுட்டுத்தள்றத்துக்கு முன்னாலே ஓடிப் போங்க.'

     மூன்று சிறுவர்களும் திக்பிரமையடித்து, மனங்குழம்பி வெட்கத்தால் குன்றிப்போய், ஒரு கணத்திற்கு முன் நெஞ்சில் சுனையூறிய சந்தோஷம், நம்பிக்கைகளும் அஸ்தமித்துவிட, திரும்பி, மௌனமாக மரத்துப்போய் வெட்கச் சுமையால் முதுகு குனிய, யுத்தம் சாகுபடி செய்த மிருகத்தனமான, உள்ளத்தைக் கரும்பும் குரோதம் உள்ளத்தைச் செல்லரித்துத் துளைக்க நடந்தார்கள்.

     இனியும்...

     மனிதனுடைய ஆசை நிர்வாணமாக, மிருகத்தனமாக, அதிகாரத்துடன் பற்றியிழுத்து, கண்ட கண்ட உணவை எல்லாம், பசியின் அகோரத்தால் கிழித்துக் குதறி எதையும் சட்டை செய்யாது தன் வசமாக்கும் அடிமாண்டு போன நிலையில் இங்கு போல அங்கும் நிலவுகிறது.



பாலத்துக்கு அப்பால், ரயில் பாதையைத் தாண்டி நியூபோர்ட் நியூஸ் நீக்ரோச் சேரியில் முடை நாற்றமெடுத்து வரண்டு புகையடித்துத் துரு ஏறிய குடியிருப்புகளிலும் குப்பங் குடிசைகளிலும் இது சஞ்சரிக்கிறது. வர்ணம் பூசாத மொட்டை மொழுக்கென்ற பைன் மரப் பலகைகளை இணைத்துத் தைத்து யுத்தத்தின் அதிரடி வேகத்தில் எழுப்பப்பட்ட குரடில்; பசியைப் போல் தெவிட்டுதல் காணாது வாழ்வைப் போல் வயசுற்ற மிருகத்தனமான குருட்டாசையைத் திருப்திபடுத்த அதே அகோர ரூபத்தில் அமைந்து நிற்கிறது. உலக மாத்யந்தமும் உலாவித்திரியும் தேசமற்றோர், வீடற்றோர் தேவையே இது.

     கரடுமுரடான, புதுத்தன்மை மங்காத, அழுக்கு மண்டும் இந்த இடத்தின் முன் பகுதி சாப்பிடும் அறை, பானம் அருந்தும் முன் கூடம் என்று இரண்டாகப் பலகை அடைத்துப் பிரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நாலைந்து மேஜைகள். சாப்பாட்டு லிஸ்ட் காட்டி, ஈ மொய்த்திருக்கும் கார்ட்கள் அதன்மேல் குத்தி நிறுத்தப்பட்டிருக்கின்றன. வந்தாதரிப்போர் அதை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மரப் பலகை கணக்கு மேஜை என்று ஒரு புறம் அத்துவான வனாந்தரமாக, அதன் ஜோடனைகளுடன் - வெதுப்பு இறங்கும் சோடா ஸிரின்ஜ், நாலைந்து சிகரெட் பெட்டி, ஒரு சுருட்டுப் பெட்டி முதலிய வகையறாக்களைத் தன்னுள் அடக்கும் ஒரு கண்ணாடிகேஸ், நாற்றமெடுத்த பாலேடும் பன்றிக் கறியும் கொண்ட கண்ணாடிப் பெட்டி - முதலிய ஜோடனைகளுடன் அங்கே நிற்கிறது. பாலேடும் பன்றிக் கறியும் கடை வைத்த நாள் முதல் குடிபுகுந்து வாழுகின்றன. யுத்தம் முடியுமட்டும் அப்படியே அங்கேயே குடிவாழும்.

     அறை முழுவதிலும் வேசிகள், மெல்லிய நீண்ட அங்கி போட்ட வேசிகள், பரிமாறுவோராக கூட்டத்திடை இடைவிடாது சஞ்சரித்துத் தம் தொழிலை நடத்துகின்றனர். அங்கு உட்கார்ந்திருந்த மனிதர்கள் யாவரும் வகுப்பு வளமுறைக்குள் அடங்காத வர்க்கம். திசையற்று ஜீவ நதியிலே மிதந்து செல்லுகிறவர்கள். இன்று உழைப்பு நாள், ஓய்ச்சல், மறுபடியும் திசையற்ற மிதப்பு, பட்டினி, சற்று சிறைவாசம், சற்று வெளிவாசம், அழுக்கும் அடிமாண்ட வரட்சியும் பட்டினியும் பிய்த்துத் தின்ன அதிர்ஷ்டமிழந்து, ரயில் வண்டிகளில் அடிக் கம்பிகளைத் தொத்திக்கொண்டோ , அல்லது மிருக ராசிகளுக்கான கூட்ஸ் பெட்டிகளிலோ சவாரி செய்து, ஊர்ப் பயணம் செய்து கொந்தளித்து வெந்து காயும் நாடோ டிக் கானகத்தில் உணவு பறித்து உயிரைப்பற்றி உலாவித் திரியும் உடலங்கள். திடீரென்று பணமும், அற்ப சுபிட்சமும் அவர்களைத் தலைதெறிக்க வைத்துவிடும். அர்த்த ராத்திரியில் குடைபிடித்து விடுவார்கள். ஜீவ நதியிலே மிதந்து செல்லும், பெயரற்ற வீடு வாசலற்ற, வேரூன்றா வர்ஜா வர்ஜமற்ற வகுப்பு இந்த மனிதப் பிராணிகள். இவை தேசத்தை மொய்த்துச் சுற்றுபவை.

     இவர்கள் இந்தப் பூவுலகத்திலே மனிதக் கரிப்பிண்டங்கள். எரிந்து கருகிப்போன கரிக்கட்டைகள். கருப்போல் வரண்டு, அழுக்கேறி, வருஷம் வரையும் கோடுகள் சுமந்த முகம் பெற்று, வேற்றுமை காட்டாது வறுமையின் ஏகஜாடை பெற்று, அலைபவர்கள் இவர்கள். அன்று காலைதான் வேறு நகரத்து ரயில் ஸ்டேஷனில் கூட்ஸ் வண்டியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்த ஜந்துக்கள் போலத் தோன்றும். சற்றும் கவலையற்றுப் பார்த்துக் கொண்டு கையில் அட்டைப்பெட்டி ஒன்று சுமந்து (ஒரு ஷர்ட், இரண்டு காலர்; ஒரு கழுத்துப் பட்டி - இவைதான் அதிலுள்ள ஆஸ்தி.) நடமாடுவார்கள் இந்தப் பிராணிகள். எங்கிருந்தோ நெடுந்தூரம் கடந்து வந்தவர்கள் என முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். அவர்கள் அனாதைப்பட்டது போன்ற ஒரு அவலம் அவர்கள் முகத்தில் தெறிக்கும். துரு ஏறி இயங்கும் ஒரு மனிதப் புள்ளி நிர்வாணமாக, அவனைக் கவித்து மூடும் வறட்சியுள்ள வானத்தின் கீழே அகோரமான மகா கானகம் என்ற பூலோகத்தில் எற்றுண்டு கூட்ஸ் வண்டியடிக் கம்பிகளில் ஒட்டித் தொங்கும் துருவாக இயங்குகிறது.

     நிர்வாணமாக, பெயரற்று வரவேற்று, ஒரு ஜீவனுடன் பொருந்தியுள்ள தனித் தன்மையும் அந்தரங்கமும் வாய்ந்த விசேஷங்கள் யாவும் உறிஞ்சப்பட்டு, துரு இரும்பு - வியர்த்தம் என்ற வரம்பற்ற சூன்யத்திலே, ஏகாங்கியாக, தொடர்பற்ற தொலைவுகளிலே உந்தப்பட்டு இயங்கும் மனிதக் கரிக்கட்டைகள் இந்த ஜீவராசிகள்.



கடைசியாக இந்த மனித அணுக்கள் இந்தக் கண்டத்தின் கண்ணற்ற இடத்தில், கொல்லிப் பாவையின் கண்ணெதிரில் உயிரைக் கக்கி வெடித்து மடிகின்றனர். தடத்தில் தெரிந்த ரத்தமும் அலறிச் சுழலும் சக்கரக் குமுறலில் இடுங்கி மடியும் மனிதக் கிரீச்சுக் குரலும் ரயில் வண்டியின் அடித்தண்டுகளில் சுற்றித் தொங்கும் குடலும் ரயில் பாதைக் கட்டையில் என்னவென்று அடையாளம் பிரிக்க முடியாதபடி மூளையும் சதையும் எலும்பும் ரத்தமும் சொட்டுச் சொட்டாகத் தெரியும் தடங்களுமே அதன் சமாதி, அல்லது நகரத்துத் தலை வாசலிலோ பாலத்து அடியிலோ சுருண்டு வடிவம் மாறி அழுக்குக் கந்தை சுற்றிய மனிதன் மூட்டையாக விரைத்துப் போய், ஜீவனற்று, போலீசார் வந்து வண்டியிலேற்றி, அகற்ற, வாழ்விலே பெயரற்று மறக்கப்பட்டு அலைந்ததுபோல் சாவிலேயும் அந்தப்படியே அகற்றப்படும்படி காத்திருக்கும்.

     இப்படிப்பட்டவர்களே இந்த மேஜைகளருகில் சூழவிருந்தனர். இந்த அவசர ஆசைக் கொட்டிலில் அமர்ந்து இருந்தார்கள். திருட்டு விழி போட்டு வலைபோட்டு அரிப்பது போல் கணக்கெடுக்கும் பாவனையில் தயங்கி, கோணல் சிரிப்போடு ஆட்டு விழி விழித்து அமர்ந்திருந்தார்கள்.

     அவர்களுக்குப் பரிமாறியவர்களோ, வடக்கு, மத்ய கிழக்கு மாகாணங்களிலிருந்து திரட்டிக் கொண்டுவரப்பட்ட வேசிகள். மிலேச்சப் பேராசையும், பேய்ப்பசியும், சோர்வுற்ற கண்ணும், வரண்ட முகமும், தம்முடைய ஜீவனோபாயமான தொழிலில் யந்திரம் போல் இயங்கி, இடம் கொடுத்து சொற்ப அவகாசத்திற்குள் கிடைத்ததைச் சுருட்டுவதையே ஏக நம்பிக்கையாகப் பற்றிப் பிடித்து உயிர் வாழும் ஜாதி அது. குரல் கரடுமுரடாகத் துருவேறிக் கிறீச்சிட்டது. வேண்டுமென்றே அசிங்க வார்த்தைப் பிரயாணம் பண்ணித் தன்னை முரடியாய்க் காட்டிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றது. பெரிய நகரத்துச் சேரிக் குடில்களில் வசிக்கும் ஜீவராசிகளின் குணம் அது. அங்கு தழைக்கும் குழந்தைகளிடமும் அதைக் காணலாம்.

     ஓயாத ஆணை, ஓயாத வசவு, ஓயாத கேலி, நையாண்டி, நாக்கில் நரம்பற்றுப் பேசுவது, ஓயாத பீதி, ஓயாத கொடுமை - இவை யாவும் அவர்களைச் சூழ உலாவித் திரியும் பேய்ப்பசியின் பிடுங்கலின் விளைவாகப் பிறந்தவை. கைத்துப்போன வாழ்வில் கையில் பட்டதை 'கல் நார் உரிச்சு' எப்படியோ காலந்தள்ளும் ரீதியில் நடமாடித் திரிவதால் இவர்கள் தம்மிடம் நல்ல தன்மை இருப்பதாக, இளகிய மனசு குடி கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளப் பயப்படுகின்றனர். இந்தக் குணங்கள் இவர்களை 'இவர்கள் போன்ற சகாக்களான ஆபத்துக்களில் சிக்கவைத்து அவர்களது தாக்குதல், கொடுமை, ஜபர்தஸ்து முதலியவற்றிற்குத் தம்மை ஆட்படுத்தி விடலாகாது' என்பதே இவர்களது ஓயாத கவலை.

     இந்தப் பெண்டுகளும் அப்படித்தான். புகை மண்டும் அந்த அறையில் அவர்களது கமறல் குரல், கரகரத்துக் கேலி மண்டும் சிரிப்பு; 'அட, சேங், அட கிருஸ்து! எனக்கென்ன ஆத்தரண்டா. வாயேன். இப்போ என்னடா பண்ணப் போறே. எனக்கு வேறே வேலையில்லை. 'வேணும்'னா காசெக்களத்து இல்லாட்டா கம்பியை நீட்டு' என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வெடிபடும் பேச்சு - இவைதான் இவர்கள் சரக்குகள்.

     இப்படியிருந்தும், இந்த நைந்துபோய் மிருகமாகி, பீதி உந்த நடமாடித் திரியும் ஸ்திரீ ஜாதியில், வாழ்விலிருந்து நசிக்கித் தேய்த்துவிட முடியாததொன்று பரிதாபகரமாகக் கனிந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது. உள்ளுக்குள்ளே புதைபட்டு சமாதியாகிக் கிடக்கும் பரிவு, பீதியோடு நேசத்தை, உள்ளன்பைத் தேடித் துழாவும் மனசு, மென்மை, ஏன் அன்புகூட, இந்த நாசமாகி அஸ்தமித்துப் போன மனிதக் கரிக்கட்டைகளிடத்தே தேடித் திரிகிறது.

     தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்கிரதையோடு எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. இப்படியாக, இவர்களிடம் வைது முரட்டுத்தனமாகப் பேசுகிறவனிடத்தில் அதுதான் இங்கே சாதாரண வழக்கம். அதே ரீதியில் அவனுக்குப் பதில் சொல்லுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அமைதியாகப் பேச்சுக் கொடுத்தால், சற்றுப் பரிவோடு 'பார்வை விட்டால்' அவர்கள் தங்கள் கமறல் குரலை அடக்கி, மூச்சாக வெளிவரும் குசுகுசுப்புப் பேச்சோடு, அவனை இடித்துக் கொண்டு பயங்கரமான பரிதாபகரமான குழைவு காட்டி, வர்ணமேற்றிய மூஞ்சிகளை அவனருகில் கொண்டு வந்து, கவர்ச்சிப் பாவனையைக் காட்டி நடப்பார்கள். இது மாதிரி:



'ஹெலோ, பெரிய தம்பி, ஏண்டா தனியா குந்திக்கிணு நிக்றே, சும்மானாச்சு உக்காந்து மடியிரே.'

     'பேச்சுத் தொணைக்கி ஆளு வாணாம், உம்.' வர்ணமேற்றிய உதட்டிடை பல்லிளித்துக் காட்டி அவன் மீது ஒண்டிச் சாய்ந்து கொண்டு 'வெள்ளாட வாரியா கண்ணுக்குட்டி, வாடா எந்தொற மவனே வாயேன்'... போஷகன் கை பிடித்திழுத்து, 'பொளுது களியுதே தெரியாது' என அழைப்பார்கள்.

     இந்த மாதிரி ஒரு கூத்தில் சிக்கிய ஒரு பையன் மேஜையை விட்டு எழுந்து, ஒருத்தியுடன், புகைமண்டும் அறையைவிட்டு ஒரு பக்கத்தில் செல்லும் ஒடுங்கிய பாதைக்கப்புறமிருந்த கதவைத் திறந்துகொண்டு பின்புறமிருந்த விபசார விடுதியின் - தனிக் கொட்டடிகளுக்குப் போனான்.

     இங்கே, காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எதிரிலிருந்த தனி அறைகளில் ஆட்களிருப்பது சப்தம் கேட்டது. இந்த இடவசதி நோக்கி ஜோடி ஜோடியாக ஆடம்பர வெறி 'சக்தி - சிவங்கள்' காத்து நின்றன.

     இந்த ஜோடி உள்ளே நுழைந்ததும் அங்கு நின்ற ஒருத்தியைப் பார்த்து, 'ஹல்லோமே, கிரேஸைப் பார்த்தியா?' என்றாள்.

     வாயிலிருந்து புகைப் படலத்தை வெளிவிட்டுக் கொண்டு 'ஏழாம் நம்பரிலே பாரு. ஒரு வேளை அங்கே இருப்பா' என்றாள்.

     இப்படித் தனக்குத் தெரிந்த தகவலை 'மெட்டாக' வெளிவிட்டுவிட்டு தன் பக்கத்திலே நிற்கும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த முரட்டு மாலுமியைப் பார்த்து, 'ஏண்டா பையா காத்துக் காத்து கால்கடுத்துப் போச்சா?' என்று கேலி செய்தாள். 'இன்னம் நேரமாவது, அடுத்த நிமிஷம் நாம் போவோம்' என்றாள்.

     இந்த ரீதியிலே பேச்சுப் பாவனையும், காமம் மண்டும் கேலியும், சிரிப்பும் அந்த வரிசையில் ஓயாது எழுந்தது. வேறு சிலர், உள்ளிருப்பவர்களைக் கதவைத் தட்டி முடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

     அது வெந்து வழியும் ஆகஸ்ட் இரவு... என்பதில் துளிக்கூட ஐயமில்லை. ஹால் வெந்து ஒழுகியது. கும்மிப் போன முடை நாற்றம் எண்ணைக் கசடு பிசுபிசுத்துக் குமட்டலெடுக்க வைத்தது. அறை முழுவதும் நாற்றம் பிடித்த சிகரெட் புகை வெளிச் செல்லாது மண்டிச் சுருண்டு, மனிதர்களுடைய உடலின் கற்றாழை நாற்றம், 'பெண்டுகள் போட்டிருந்த மூக்கை அறுக்கும் வாசனை', கடைசியாக நிர்வாணமாக மிலேச்சத்தனமாக மனிதனுடைய காம கரும்பு மறக்க முடியாத நாற்றமாக உருவெடுத்து, தைத்துக் கோத்த பைன் பலகைச் சாவடியில் மரக்கந்தத்துடன் கலந்து மனத்தில் அதே அகோர ரூபத்தில் ஒட்டிக்கொண்டது.

     கடைசியாக, இந்த மூச்சு திக்குமுக்காடும் ஹாலில் நெடுநேரம் காத்திருந்து அதனிடை எத்தனை ஜோடியோ வெளியே வந்தது. எத்தனை ஜோடியோ உள்ளே சென்றது. பையனும் பெண்ணும் வரிசையின் முதல் ஸ்தானத்தைப் பெற்றார்கள். பின்னால் ஓயாது அலம்பிக் கொண்டிருக்கும் ஜோடி வகைகள், முன்னால் குருட்டுக் காமக்குமுறல்.

     கடைசியாக அவர்கள் காத்து நின்ற கதவு திறந்தது. ஒருவன் வெளியேறிப் பின்னால் கதவையடைத்துக் கொண்டு சென்றான். பிறகு ஒரு கணம் நிசப்தம். மறுபடியும் வாயசப்பல். 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்' என்ற ஜோடியின் முணமுணப்பு. கடைசியாக அந்தப்பெண் 'ஏண்டி. உள்ளே யாரு. வாயேண்டி வெளியே. வளியை மறுச்சுக்கிட்டு கிடக்காதே' என்று உறுமினாள்.

     உள்ளிருந்து ஒரு ஸ்திரீயின் சோர்வுக்குரல் கேட்டது.

     'சரிதாண்டி, ஒரு நிமிஷத்திலே வாரேன். சித்த பொறுத்துக்கோ' என்றது.

     'ஓ' என்றாள் அந்தப் பையனுடன் நின்ற பெண்.

     'அவள் மார்கரெட்டு, பாவம் சோந்து களைச்சுப் பூட்டிருக்கும்' என்று இளகிய குரலுடன் சொன்னாள்.

     'குட்டியம்மா. என்னம்மா இருக்கு? ஒத்தாசைக்கு வரட்டுமா' என்று பரிவுடன் குரல் கொடுத்தாள்.



 'அதெல்லாம் வேண்டாம்' என்று சர்வ சோர்வுடன் தள்ளாடியது உள்ளிருந்த பெண் குரல். 'ஒரு நிமிசத்திலே வந்துடுறேன், ஏன் நீயுந்தான் வாயேன்' என்று குரல் கொடுத்தது.

     அந்தப் பெண் மெதுவாக ஓசைப்படாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். கொதிப்பேறிப் பச்சைக்கழைபோல் சீர்குலைந்து பயங்கரமாகக் கிடக்கும் அந்த அறையின் சீர்வரிசைகளைச் சொல்லி முடியாது. ஒரு நாற்காலி. அதற்குப் பக்கத்திலே குலைந்து கிடக்கும் படுக்கை, பக்கத்திலே ஒரு குட்டி மேஜை. மேஜையின் பேரில் ஒரு பொம்மை. இடுப்பில் ஒரு ரிப்பன் கட்டியிருந்தது. பக்கத்தில் அதனுடன் சேர்த்துக் கட்டின ஒரு மாலுமித் தடியன் போட்டோ . 'எனக்கு நிசமாகக் கிடைத்த ஒரு சினேகிதி மார்கரெட்டு' - எட்டி நின்ற ஷரத்துக்கள் நின்றன. பக்கத்திலே ஒரு சிகரெட் பெட்டி. மேலே ஒரு மின்சார விசிறி ஆடியது. புழுங்கி வழியும் காற்றைச் சுருட்டிச் சுருட்டியடித்தது.

     அடிக்கடி அந்த விசிறிகள் சுழற்சியில் ஒரு கோணத்தில் வரும்போது, கட்டிலிலே களைப்பே உருவாய் அல்லித்தண்டு போலக் கிடந்த பெண்ணின் முகத்திலே வீசியது. அப்போது பட்டுப்போல் மென்மையான கபோல ரோம ராசி ஒன்றைத் தலை சுற்றி ஆடவைத்தது. 

     அந்தப் பெண் சற்று நெட்டையாக, ஒல்லியாகக் கட்டிலிலே நீட்டிப் படுத்துக் கிடந்தாள். ஒரு புறம் மறிந்து கிடந்த கையில் சோர்வு கொழுந்தோடியது. மற்றொரு கையை மடக்கித் தலைக்கடியில் வைத்துப் படுத்திருந்தாள். முகம், அழகு குடிகொண்டிருந்த இடத்தைச் சோர்வும் பட்டினியும் வதங்க வைத்துவிட்டது. அவள் ஒரு புறமாகக் கண்களை மூடிக் கைகளை முட்டுக் கொடுத்துக் கிடந்தாள். கண் இமைகள் ரத்த ரேகையைக் காட்டின. சோர்வால் நொந்து கிடந்தன.

     வந்தவள் மெதுவாகச் சென்று கட்டிலில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பரிவோடு பேச ஆரம்பித்தாள். படுத்துக் கிடந்தவள் கண்ணைத் திறந்தாள். சிரித்தாள். போதையில் தூரத்தில் அலைந்த புத்தி தயங்கித் தயங்கி குடிபுகுவது போல் இருந்தது அந்தச் சிரிப்பு. 

     'என்னம்மா, என்ன கண்ணே சொன்னே. எனக்கு ஒன்றுமில்லே' என மெதுவாகச் சொன்னாள். உட்கார்ந்திருந்தவள் ஒத்தாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். நாற்காலியில் கிடந்த உடையை இழுத்துப் போட்டுக் கொண்டாள். பிறகு புன்சிரிப்போடு எழுந்து நின்றாள். மேஜையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டாள். வெளி வாசலண்டை காத்து நின்ற பையனைப் பார்த்துக் கிண்டலாக 'இப்ப உள்ளே வரலாண்டா ஜார்ஜியா' என்றாள். அவள் குரலில் கமறல் லேசாகத் தொனித்தது. இருந்தாலும் மகிழ்ச்சியோடு பேச்சு வெளிவந்தது என்பதை தொனிப்புக் காட்டியது. போஷகர்களை 'ஜார்ஜியா' என்று குத்து மதிப்பாக ஒரு பேர்வைத்துக் கூப்பிடுவது வழக்கம்.

     அவன் தயங்கி உள்ளே வந்தான். பார்வையில் திக்பிரமை வெறித்துக் கொண்டு தெறித்தது. அவனைப் பார்த்த நிமிஷத்திலேயே அவனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள். அந்தப் பையன் படித்த சர்வகலாசாலை இருந்த ஊரிலே ஏழைகளானாலும் நாணயமாக ஜீவித்த குடும்பத்தில் பிறந்தவள் தான் அவள். நகரத்தில் எல்லோருக்கும் தெரிந்த குடும்பம் அது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவள் திடீரென்று எங்கோ மறைந்து போனாள். அங்கே படித்த மாணவனோடு 'தப்புத் தண்டாவில் சிக்கிக் கொண்டவள்' என்ற வதந்தி சற்று அடிபட்டது. அதற்கப்புறம் அவளைக் கண்டதோ கேட்டதோ கிடையாது.

     'ஊரிலே எல்லாரும் எப்படி? சௌக்கியந்தானே?' என்று கேட்டாள் அவள்.

     சாம்பல் வர்ணத்தில் பளபளத்த அவன் கண்கள் கடினம் காட்டியது. மெலிந்து வாடிய சின்ன முகத்துச் சின்ன வாய் கத்திபோல் கடினம் காட்டியது. குரல் கடினங் காட்டி ஈட்டிபோல் கிண்டி, கிண்டல் செய்தது. ஆனால் எதிர்த்து அடிக்கும் பாவனையிலும் ஒரு அபூர்வமான பரிவு காட்டி இயங்கியது. அவனுடைய தோளில் மெலிந்த கைகளைப் போட்டாள். அன்னியமாக உலகத்திலே எதிர்பாராதபடி தெரிந்த முக தரிசனம் கிட்டியதால் ஏற்படும், ஞாபகத்துடன் இயங்காத, திடீர் பரிவு அச்செயல்.

     'அவர்கள் சௌகரியமாகத்தான் இருக்கிறார்கள்' என்று குமுறினான் அவன். தட்டுக்கெட்டு நிற்பதால் முகம் சிவக்க ஆரம்பித்தது.



 'எனக்குத் தெரிஞ்சவர்களைப் பார்க்க நேர்ந்தால், எனக்காக அவர்களிடம் குரல் கொடுத்து நானும் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று சொல்லு. 'என் அன்பைச் சொல்லி அனுப்பி வைத்ததாகச் சொல்லு' என்றாள்.

     'சரி அப்படியே ஆகட்டும். நிச்சயமாகச் செய்கிறேன்' என்றான் அவன்.

     'ஜார்ஜியா ஒம் மேலே கன கோவம் எனக்கு. வந்தவன் எனக்குச் சொல்லி அனுப்ப வாண்டாம்? அடுத்த தரம் வந்தா என்னைக் கூப்பிட்டுவிடு. இல்லாட்டா எனக்குப் பெரிய கோவம் வரும். ஒரு ஊருக்காரர் ஒண்ணா ஒட்டி வாழாமே முடியுமா? மார்கரெட்னு கேளு. எங்கேயிருந்தாலும் ஓடியாந்துடறேன் - தெரிஞ்சுச்சா?' என்று மறுபடியும் உத்தியோக - கொச்சையில் இறங்கினாள்.

     'சரி ஆகட்டும். ஒன்னையே கூப்பிட்டு விடுகிறேன்' என்று குமுறினான் அவன். அவள் அவனை ஒரு கணம் கடின பார்வையுடன் நோக்கினாள். கசந்த, அபூர்வங்கலந்த சிரிப்புக் குலையவில்லை. விரல்களை அவன் சிகைகளில் விட்டுக் கோதிக் கொடுத்தாள். மற்றவளைப் பார்த்து 'அவனைப் பரிவாப் பார்த்துக்கொள். எங்கூர்க்காரன். போய்ட்டு வாரேன் ஜார்ஜியா. அடுத்த தடவை வந்தா எம்பேரைச் சொல்லிக் கேக்கணும். போய்ட்டு வாரேன்' என்றுவிட்டு வெளியேறி, மூச்சுத் திணறி முடைநாற்றம் வீசி, குருட்டாசைக் கைகாட்டி அழைத்துத் திரியும் குறுகிய உலகுக்குள் நைந்த மெல்லிய உடம்பை ஆயிரத்தோராந்தடவை விற்பனை செய்ய அங்காடிக் கடைக்குள் மறைந்து விட்டாள். கூப்பிடவும் கைப்பற்றவும், வந்தவரை அங்கீகரிக்கவும் அந்த இருட்டென்ற நாழி குலுக்கிப் போடும் ஆயிரமாயிரம் பெயரற்ற பிராணிகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க மறைந்துவிட்டாள்.

     அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல்லை. யுத்தம் என்ற சுழிப்பு அவனைத் தன்னுள் இழுத்துச் சொருகி விட்டது. விஸ்தாரமான, குரூரமான மந்திரோச்சாடனம் போன்ற மகா அமெரிக்கா என்ற ஆழங்காண முடியாத பாதாளம். குருட்டாட்டமாடும் குழப்பத்தினுள் அவனை இழுத்துக்கொண்டுவிட்டது. அங்கேதான் நாமும் ஜீவிக்கிறோம். அன்னியராக நடமாடுகிறோம். அங்கேதான் நாமும் குள்ள மனிசர்களாக, தனிமைப்பட்டு, கைவிடப்பட்டு, கடைசியாக ஒரே கவனமாக உள்ளிழுக்கப்பட்டு, பெயரற்ற அனந்தகோடிகளின் சமாதியான இருளுக்குள் மறக்கப்பட்டு மறைகிறோம்.

     இதுதான் யுத்த தேவதையின் பேரழிவு இன்ற மூன்றாவது முக மண்டலம். ஆசையின் உருவச்சிலை. யுத்தத்தின் முகம்.

     அப்புறம்...

     யுத்தத்தின் திடீர் தீர்மானத்தின் வேகம். அவசரம், கொடுமை, மிருகத்தனமான ஹாஸ்யம்...

     வேர்த்து வடியும் மத்யானம்...

     நியூபோர்ட் நியூஸ் வெடிமருந்து ஏற்றுமதி செய்யும் துறைமுகம். அங்கே ஒரு பையன் தணிக்கைக் கணக்கனாக வேலை செய்கிறான். துறைமுகத்துக்குள் இருக்கும் பெரிய ஷெட்டில் உள்ள 110 டிகிரியில் மூச்சைத் திக்குமுக்காட வைக்கும் வெக்கை. மௌனமாடும் புழுக்கம் அழுக்கேறி காற்றில் தூசித்தூள் மிதக்கிறது. உயரமாக நிற்கும் சூட் யந்திரத்திலிருந்து தான்ய வகை ஓயாத பிரவாகமாகக் கிழே விழ விழ சாக்குச் சாக்காகக் கட்டப்பட்டு அம்பாரம் அம்பாரமாக அடுக்கப் படுகிறது. இந்தத் தான்யத் தூசிதான் தகதகவென்ற தங்கத்தூள் மாதிரிக் காற்றைக் கொழுக்க வைக்கிறது.

     துறையில் மற்றொரு பக்கத்தில் யுத்தத்தின் கருவிகள் கோபுரமெடுக்கிறது. பெரிய பெரிய கிரேட்டுகள் (மரப் பெட்டிகள்) நிறைய சகலவிதமான உணவு வகைகளும் கறி, பழம், பயறு, வெடி மருந்து - வாழ்வையும் மரணத்தையும் போஷிக்கும் சகலவிதமான உணவு வகைகளும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தொலைவிலே தீராப் பசியோடு வாங்கி வாங்கி உண்ணுகிறது அரசு செலுத்தும் யுத்த தேவதை.



 கொதித்துக் குமையும் வெப்பக் காற்றில் சகலவிதமான மணங்கள் கமழ்கின்றன. தான்யக் கமறல், நைந்த சாக்கு நெடி, புதிதாக அறுத்துத் தைத்த கிரேட்டுப் பலகை வாசனை, போழைபோல் கதம்பக் கமறலாக பல்லாயிரங் கோடி அடைபடா அசுத்தங்கள், நாற்றங்கள் இறங்கு துறையில் முட்டித் ததும்பி முளைத்தெழும் சோதியாய் சர்வ பரிபூரணமாய் நினைவில் குடியேறித் தனியரசு செலுத்துகிறது. அதிலே தண்ணீரில் கிடந்து கிடந்து ஈரங் கசிய நாறும் மர உத்தர வீச்சும் வேறு.

     இப்பொழுது வேலை எல்லாம் ஓய்ந்துவிட்டது. அதனுடன் அந்தத் துறைமுகத்தின் சந்தடியும் ஓய்ந்து விட்டது. டிரக்கு வண்டிகளின் கடமுடா, கப்பல் மேல் தட்டில் தரையிட்டு நிற்கும் சாமான் தூக்கும் யந்திரச் சங்கிலியின் சணசணப்பு, சாமான் ஏற்றுமதியில் காணப்படும் சகல சந்தடிகளும் ஒடுங்கிவிட்டன. அதற்குப் பதிலாக அதிகாலையிலிருந்து, துறைமுகத்துக்குள் காக்கியுடை அணிந்த தளவரிசைகள் சாரை சாரையாகக் கப்பலுக்குள் ஏறி அதன் வயிற்றுள் அஸ்தமனமாகிவிடுகின்றனர். அந்தக் கப்பல் இன்னும் இன்னும் என்று காத்து நிற்கிறது.

     நீக்ரோ மாட்டுக்காரர்கள் மூட்டைமேல் சரிந்து கண்ணயருகின்றனர். கணக்கர்கள் மூட்டைக் கிடுவலில் குமைந்து ஜன்னி வேகத்தில் சூதுருட்டுகிறார்கள்.

     துருப்புகள் பட்டாளம் பட்டாளமாக வந்து குவிகின்றன. சாரை சாரையாக வரும் வரிசைகள் இடையில் சற்று நிற்கின்றன. முதுகுச் சுமைகளை நகர்த்திவிட்டு வலியை நகர்த்திக்கொள்ளுகின்றன. தொப்பியை அகற்றுகின்றன. நெற்றியில் வடியும் வேர்வையைப் புறங்கையால் துடைக்கின்றன. தனக்குள் வைத்துக் கொள்கின்றன. மறுபடியும் சாரை ஊர்வதற்காகப் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர்.

     கப்பலின் பக்கத்தில் ஏறுபாதை ஓரத்தில் சில ஆபிஸர்கள் மேஜையருகில் உட்கார்ந்து துருப்புகள் கப்பலுக்குள் ஏறும்போது ஒவ்வொருவருடைய தஸ்தாவேஜியையும் பரிசீலனை செய்துகொண்டு கையெழுத்தைக் கிறுக்கி, உடமஸ்தன் ஆசைப்பட்டுத் தவிக்கும் யாத்திரைக்கு, புதிய தேசத்துக்கு, அவன் வேட்கைகொண்ட புகழுக்கு, சண்டையில் கணக்கிட முடியாத அபாயங்களுக்கு, மரணத்திற்கு, வியாதிக்கு, விவரம் தெரியாத பீதிக்கு, குமட்டலுக்கு அவனை ஏற்றிச் செல்லக் காத்திருக்கும் கப்பல் என்ற சாயுஜ்ய பதவி கிட்டும்படி செய்விக்கிறார்கள்.

     இப்போது கருப்பர்கள் பட்டாளம் (நீக்ரோக்கள்) ஒன்று வருகிறது. டெக்யாஸ் நீக்ரோ ரெஜிமெண்டின் ஒரு பகுதி பலாட்டியர்களான மனிதர்கள்; ஆனால் எதைக் கண்டும் ஆச்சரியப்பட்டு நிற்கும் களங்கமற்ற குழந்தைகள்; ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குச் சற்றும் ஒவ்வாதவர்கள். தளத்திலிருந்த ஒவ்வொருவனும் எதையோ மறந்தான், எதையோ இழந்தான் என்ற தொல்லைதான். ஒருவன் தலைக்குல்லாயை இழந்துவிட்டான். இன்னொருவனுக்கு இடுப்பு பெல்ட் போய்விட்டது. மற்றவன் சட்டையில் இரண்டு பொத்தான்கள் காணோம். இன்னொருவன் தன் மூட்டையிலிருந்த சாமான்களில் பெரும்பகுதியைத் தொலைத்துவிட்டான். எப்படிப் போச்சு என்பது அவனுக்குப் புரியவேயில்லை. தன்னிடம் இருந்து ஏதோ ஒன்று தொலைந்தது. ஏதோ தப்பிதம் செய்துவிட்டோ ம் என்பது தவிர வேறு ஒரு பிரக்ஞையும் கிடையாது.

     துறைமுகத்தில் காத்து நிற்கும்போது ஒவ்வொருவனும் தன்னுடைய கவலையைச் சொல்லி அழுகிறான். வெப்பப் புழுக்கத்தில் கருப்புக்குரல் சளசளப்பு அதிகரிக்கிறது. இவர்களது அங்கலாய்ப்புகளும், தொல்லைகளும் குவிக்கப் படுவதற்காகக் காலடியைக் காட்டி நிற்கும் வெள்ளைக்காரக் கமாண்டர், சீறிச்சீறி விழுகிறான். ஒவ்வொருவனும் தான் சிக்கிக் கொண்டிருக்கும் தப்பி தவலையை வெட்டிவிட வேண்டும் என்று அவனைக் கெஞ்சிக் கூத்தாடிக் குழைகின்றான். கமாண்டரோ வெறித்துக் கொண்ட காளை போலத் துறைமுகத்தில் உலாவுகிறான். அவனுடைய சர்வசக்தியில் பரிபூர்ண நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் காத்திருக்கிறது இந்த மனித சிசுக்கள்.

     கமாண்டர் கழுத்துப் பட்டியைப் பிய்த்துக்கொள்ளுகிறான். அவர்களுடைய தொல்லைப் பரம்பரை அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து கோபுரமெடுக்க, கோபம் மீறிப் போய்ச் சிரிப்பு சிரிக்கிறான்.



அப்படியிருந்தும் அவனிடம் நம்பிக்கையிழக்காமல், குழந்தைகளின் நிச்சயத் தன்மையுடன் 'எஜமான் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்' என்று தம் குறைபாட்டைப் பிரலாபிக்கிறார்கள். ஒருவன் காணாமற்போன பெல்ட்டைக் கதைக்கிறான். இன்னொருவனுடைய தகரப்போணி - மற்றவனுடைய காலிப்பை. எல்லாரும் ஆசையோடும் பரிவோடும் 'எசமானே, எசமானே' என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய பேச்சுக்கள் அவனை வசவுக்குள் இறக்கி விடுகிறது.

     'அட வாலில்லாக் கொரங்குகளா, கட்டி மூளைக் களி மண்ணே, குருட்டுக் கழுதைக்கு அண்ணன்மார்களா, நாய்க்குப் பொறந்த கொரங்கு மூஞ்சிகளா, குருவிமூளைக் கோட்டான்களா. மூளையிருக்கிற எடத்திலே வெடிமருந்து வச்சா, மூக்கைச் சிந்தினாக்கூட வெடிக்காதே. ஆந்தைக்கி அண்ணாத்தை மகனுகளா. பாருங்க ஒங்களே மொதல் லயன்லே நிறுத்தி அந்த ஜெர்மன் தேவடியா மகன்களை வைத்துச் சுட்டுத் தள்ள வைக்கிறேன்' என்று வைது மொழிகிறான்.

     'எஜமானே' என்கிறது ஒரு குரல்.

     'எத்தனை தரண்டா மாரடிக்கிறது. எஜமானே, எஜமானேன்னு சொல்லாதேடா சொல்லாதேடான்னு எத்தனை தரம் சொல்லித் தொலைக்கிறது' என்று கதறுகிறான்.

     'எனக்குத் தெரியும் எஜமான். ஆனாக்க என் பெல்ட்டு அறுந்து போச்சே. ஒங்ககிட்ட சின்னக் கயிறு இருக்கா' என்று கெஞ்சுகிறது அந்தக்குரல்.

     'கயிறு இருக்கா' கமாண்டர் தொண்டை கம்முகிறது. 'கயிறு இருக்கா' என்று பினாத்திக்கொண்டே சொல்லி முடியாத கோபத்தால் தன் தொப்பியைக் காலடியில் போட்டு துவைத்து மிதிக்கிறான்.

     இதைவிட இன்னும் பெரிய பேரிழவு ஒன்று அவனுக்காகக் காத்திருக்கிறது. கப்பல் பக்கத்தில் பரிசோதனை நடத்தும் ஆபீசர்கள், வரிசையில் சென்ற ஆறுபேரை வெளியேற்றித் தடுத்து விடுகிறார்கள்.

     அவன் தொப்பியைத் தூக்கிக்கொண்டு 'அட ஆண்டவனே. அங்கேயென்ன தொல்லை' என்று கோஷிக்கிறான். ஆறு பேரும் சோகமே உருவெடுத்தது போலக் கண்ணீர் மாலை மாலையாக வடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆபீசர்களை ஆத்திரத்தோடு கேட்க விஷயம் புலனாகிறது. இந்த ஆறுபேரும் சிற்றின்ப வியாதிக்காக முகாமில் சிகிச்சை பெற்று வந்தார்கள். உடம்பு குணமாகுமுன் எப்படியோ 'டபாய்'த்துக்கொண்டு உடம்பு சரி என்ற அத்தாட்சியில்லாமல் இதுவரை வந்துவிட்டார்கள். இப்போது திருட்டுத்தனம் வெளிப்பட்டது. போகப்படாது என்று தடுக்கப்பட்டு விட்டார்கள். கமாண்டர் சொன்னால் எல்லாம் சரியாகி விடும் என்ற பரிதாபகரமான நம்பிக்கையுடன் குழைகிறார்கள். கூழைக் கும்பிடுபோட்டுக் கெஞ்சிக் கூத்தாடுகிறார்கள்.

     'எசமானே, எங்களுக்கு ஒண்ணுமே இல்லே, ஒண்ணுமே இல்லே, ஒண்ணுமே இல்லே. இந்த நாசமாப்போன ஊருலே இருக்கவே மாட்டோ ம். ஒங்ககூட பிரான்ஸுக்குப் போகத்தான் ஆசை. ஒங்ககூடக் கூட்டிக்கொண்டு போய்ட்டா என்ன வேணும்னாலும் செய்றோம்' என்று கருத்த பலாட்டியன் அழுதழுது கெஞ்சினான்.



'நீங்க எக்கேடும் கெட்டு நாசமாப் போங்கடா. இப்ப வந்து கடசி நிமிஷத்திலே சொல்லித் தொலைச்சா என்னடா பண்றது' என்று கொழிக்கிறான். அவர்களுக்கிடையில் பாய்ந்து வெறி கொண்ட காளை மாதிரி வைது ஒழிக்கிறான்; அவர்கள் கெஞ்சலும் அழுகையும்தான் மிஞ்சி விடுகிறது. காதைப்பொத்திக்கொண்டு 'நாய்ப்பய மகனுவ எல்லாரையும் அவன் கொன்று தொலைக்கணும்' என்று கத்திக்கொண்டு பரிசீலனை ஆபீசர்களிடம் வாதம் செய்து தன் கட்சிக்குத் திருப்புகிறான்.

     பெத்லெத்திலேயே பரிசோதித்துச் சரியாக இருந்தால் அனுமதிப்பது என்று தீர்மானமாகிறது. சிகப்பு மூஞ்சி ஆபீசர் ஒருவன் அவர்களை மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லுகிறான்.

     சுமார் பத்து நிமிஷம் கழிகிறது.

     நீக்ரோவர்கள் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். அவர்களது கருப்பு முகம் பெரும் களிப்புகளைக் கொப்புளிக்கிறது. குழந்தைகள் மாதிரி எஜமானைச் சுற்றி வட்டமிட்டுக் கொம்மாளமடிக்கிறார்கள்.

     நெட்டை நெட்டென்று கறுத்து நின்ற ராணுவ வைத்ய பரிசோதகனும் இருக்கிச் சிரித்துக்கொண்டு நேர் பார்வை போட்டுத் திரும்புகிறான். அந்தச் சின்னக் கமாண்டர் இன்னும் வையத்தான் செய்கிறான். ஆனால் அவன் வசவில் ஒரு பரிவும் பாசமும் கலந்திருக்கிறது.

     கடைசியாக மனிதச் சாரையும் ஊர்ந்து ஊர்ந்து கப்பலுக்குள் குடிபுகுந்துவிட்டது. துறைமுகத்தில் அது இழந்த சப்தமும் மௌனமுந்தான் குடிகொண்டிருக்கின்றன. மெல்லிய, இதழ் பூத்த மாலை சகலரையும் தழுவித் தன்னுள் மறைக்கும் ஆழ்ந்த நெஞ்சுடைய இருளின் வரவைக் கட்டியங் கூறிக் குளிர்வித்தது.

Wednesday, 24 May 2017

நிலவறைப் பாட்டைகள் ரமேஷ் : பிரேம் - http://maatrupirathi.blogspot.in/2017/05/blog-post_70.html

செவ்வாய், மே 23, 2017

நாவல் என்ற எழுத்து

நிலவறைப் பாட்டைகள்

http://maatrupirathi.blogspot.in/2017/05/blog-post_70.html
மொழியியல், குறியியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பற்றி சிருஷ்டிபரமான சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான கோட்பாடுகளையும் பதிவு செய்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த உம்பர்ட்டோ ஈகோ முதலில் ஒரு தத்துவவாதியாகவே அறிமுகமானவர். சமகாலச் சிந்தனைகளுடன் நெருக்கமான உறவுள்ளவர்களுக்கும், பல்வேறு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ ஆய்வறிவு இலக்கியப் பார்வையுடன் தொடர்ந்து இயங்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் அணுக்கமான ஒரு கோட்பாட்டாளர் இவர்.
இவ்வகைச் சிந்தனைகள் மேற்குலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும், அதிகமாக ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களின் பெயர்களே இவற்றில் இடம் பெற்றிருப்பது இவற்றைப் பயில்பவர்களுக்குச் சிறு புதிராகத் தோன்றுவதுண்டு. இந்தப்போக்கில் முதல் முறையாக ஒரு மாற்றமாக இடம் பிடித்தது உம்பர்ட்டோ ஈகோவின் பெயர். ஐரோப்பிய வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் தனித்தன்மையுடன் கூடிய மேதமை ஈகோவிடம் உண்டு. அதே சமயம் மற்ற கோட்பாட்டாளர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சமும் இவரிடம் உண்டு. இவர் படைப்பிலக்கியவாதியும் கூட, இதுவே இவரை இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக மாற்றியது.
இவருடைய "ரோஜாவின் பெயர்" (Name of the Rose), "ஃபூக்கோவின் ஊசல்" (Foucault"s Pendulum), "நாளுக்கு முந்திய தீவு" (Island of the Day before) என்ற மூன்று நாவல்களும் இத்தாலிய மொழியிலிருந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டவை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் உலகின் பல நாடுகளிலும் பலமுறை வாசிக்கப்பட்டவை. தீவிர இலக்கியப்பயிற்சி இன்றி பொழுதுபோக்கும் வாசகர்களுக்கும் கூட மிகவும் பிடித்தவையாக அமைந்து சிறந்த விற்பனைப் பிரிவில் (Best Sellers) இடம் பிடித்தவை இவரின் முதல் இரு நாவல்களும். பல பதிப்புகள் பல வடிவில் வெளிவந்தன. இலக்கியத் தரமும் விற்பனைக்கவர்ச்சியும் கொண்டு அமையும் ஆக்கங்கள் இவைபோல மிகச் சிலவே காணக்கிடைக்கின்றன. அதே சமயம் அதிகம் பேசப்பட்டவையும் கூட.
ரோஜாவின் பெயர் - நாவலின் அமைப்பும் எழுத்துச் சுழலும்:-
இந்நாவல் ஒரு நூலைப் பற்றிய நூலாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கற்பனையான எழுத்தாளன் 1968 இல் Abbe Vallet என்பவரால் மொழி பெயர்த்தும் தொகுத்தும் எழுதப்பட்ட ஒரு நூல் பிரதியைக் கண்டெடுக்கிறான். 1842 இல் வெளியிடப்பட்ட அந்த நூலோ பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் Adso de Melk என்ற பெனடிக்டன் பிரிவைச் சேர்ந்த துறவியால் 1327இல் இத்தாலியைச் சேர்ந்த ஒரு துறவோர் மடத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நினைவு கூர்ந்து தொகுத்து எழுதப்பட்ட குறிப்புகளை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. Adso எழுதிய லத்தின் மொழியில் Vallet எழுதியது பிரெஞ்சு மொழியில் - இப்பொழுதைய எழுத்தாளன் எழுதியது நாம் வாசிக்கும் மொழியில்.
அட்சோ தனது குருவான சகோதரர் வில்லியம்சுடன் இத்தாலியின் ஒரு பகுதியில் அமைந்திருந்த (Abbey) துறவோர் மடம் ஒன்றில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதற்காகத் தங்கி இருந்த ஏழுநாட்களில் நடந்தவைகளை நினைவிலிருந்து தனது இறுதிகாலத்தில் பதிவு செய்வதாக நூலின் பகுதிகள் அமைகின்றன. முதல் நாள், இரண்டாம் நாள் எனத் தொடங்கும் ஒவ்வொரு பேரத்தியாயமும் விடிகாலை, காலை, பகல் என இரவுவரையான சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியே தலைப்பு வாக்கியங்கள் இடப்பட்டிருக்கின்றன. (தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் ஏழாம் நாளை ஆசிர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம்; இரண்டாம் அதிகாரம்; இரண்டாவது, மூன்றாவது வசனம்).
ஆகக் கற்பனையான மூன்றாவது நூலாசிரியன் எழுதிய கதை. Eco என்ற நான்காவது நூலாசிரியன் எழுதிய பிறகு உள்ள பிரதியே நாம் தற்போது வாசிப்பது. பிரதியைப் பற்றிய பிரதியாக, மடிந்து மடிந்து அமைந்திருக்கும் இப்பிரதி கடைசியாக நம்மைப் பொறுத்தவரை ஒரே பிரதியாகத் தான் வாசிக்கக் கிடைக்கிறது. எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப்புறம்பான எதையும் நுழைத்துவிட முடிவதில்லை. (ஆழ முகக்கினும் நாழி முகவாது நாநாழி) என எழுத்தாய் விரியும் பிரதி தன் அமைப்பால் ஒரு மெட்டாபிக்ஷன் தன்மை கொண்டுள்ளது.
நூலைத் தேடிச்செல்லும் பயணத்தில் தமது உயிரை இழக்கும் துறவிகள் பற்றியும், நூலைப்பதுக்கி வைத்து உலகின் அறிவிற்கான பரிணாமத்தைத் தடைசெய்ய முயலும் துறவிகள் பற்றியும், நூல்களால் நிரம்பியுள்ள புதிர்வட்டப்பாதை மண்டபத்திற்குள் பதுக்கப்பட்ட நூல்களைத் திறந்தால் அவற்றிற்குள்ளும் விரிந்து விரிந்து செல்லும் அறிவின் - கற்பனையின் - மனித எண்ணங்களின் - புதிர் வட்டப்பாதைகளே காணப்படுவதையும் எழுதிச் செல்லும் மூலநூலை எழுதியதாகச் சொல்லப்படும் அட்சோவுக்கும் அழிந்து போன மகாமடம் ஒன்றின் இடிபாடுகளுக்கு நடுவே மிஞ்சுவதும்; சிதைந்து போன மக்கிப்போன சில நூல் பிரதிகளே.
* At the end of my patient reconstruction, I had before me a kind of lesser library, a symbol of the greater, vanished one: A library made up of fragments, quotations, unfinished sentences, amputed stumps of books. (p. 609 ரோஜாவின் பெயர். 1984)
* இந்நூலின் முக்கியமான பாத்திரமாக இடம் பெறும் புதிர்வட்டப்பாதை பற்றி : A spiritual labyrinth, it is also a terrestrial labyrinth. You might enter and you might not emerg. ( p.37 ரோ.பெ. 1984).
* இந் நூலில் இடம் பெறும் கொலைகளுக்குக் காரணமான பாத்திரம்: பார்வையற்ற முதிய துறவியான Jorge of Burgos.
* "ரோஜாவின் பெயர்" துப்பறியும் நாவல் அமைப்பில் எழுதப்பட்டது. மத்தியகால ஐரோப்பியச் சூழலில் ஒரு துறவிகள் மடத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கின்றன. கொலையாளியைக் கண்டுபிடிக்க வேறு இடத்தைச் சேர்ந்த ஒரு துறவியும் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் மடத்திற்கு வருகின்றனர். அவர்கள் தனது புலனாய்வைச் செய்யும் அதே சமயத்தில் அம்மடத்தின் ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் புலனாய்வுச் சமயத்திலும் கூடக் கொலைகள் தொடர்கின்றன. அம்மடத்தில் அமைந்துள்ள புதிர் வட்டப் பாட்டைகளால் ஆன நுலாகம் ஒன்றைச் சுற்றியே இந்தக் கொலைகள் நிகழ்வதையும், இந்தக் கொலைகளுக்குப் பின் ஒருவித கோட்பாட்டு, இறையியல் பிடிவாதமுடைய துறவி ஒருவர் உள்ளத்தையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர். விலக்கப்பட்ட ரகசிய அறிவு சார்ந்த நூல்களைத்தேடும் சிலர் கொல்லப்படுவதும் தெரியவருகிறது. கிருஸ்திய மதத்தின் சம்பிரதாயப் பிரிவின் மரபிலிருந்து விலகும் சிந்தனைகளைத் தேடும் துறவிகள் அந்த மரணப் பொறியில் சிக்கிக் கொள்கின்றனர் இறுதியில் ஜார்ஜ் ஆஃப் பர்கோஸ் என்ற பெயருடைய பார்வையற்ற முதிய துறவி ஒருவர் அரிஸ்டாட்டிலின் "கவிதையியல் பற்றி" என்ற நூலில் இன்பியல் பகுதியை யாரும் படிக்கக்கூடாது என்றும், இன்பியல் உலகின் இறையியல், ஒழுக்கவியலை நாசம் செய்துவிடும் என்றும் அதைத்தேடி வருகிறவர்களைக் கொல்கிறார். அந்நூலின் ஒவ்வொரு பக்க மூலையிலும் கடுமையான விஷம் ஒன்றைத் தடவி வைப்பதன் மூலம் நாக்கில் தொட்டுத் தொட்டுப் புரட்டிப் படிப்பவர்கள் முழுமையும் படித்து முடிக்கும் போது சாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதைப் துப்பறியும் துறவி கண்டுபிடிக்கும் போது ஏற்படும் குழப்பத்தில் அந்தப் பெருமடமே எரிந்து சாம்பலாகிவிடுகிறது. அது மட்டுமல்லாமல் நூல்களும் அழிகின்றன.
இன்றுள்ள அரிஸ்டாட்டிலின் "கவிதையியல் பற்றி" - நூலில் இன்பியல் பகுதி இல்லாமல் இருப்பதற்கும் அந்தக் குருட்டுத் துறவியே காரணமாக அமைவதாக கற்பனை நிரூபணம் ஒன்று காட்டப்படுகிறது.
கதையெழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விளக்கும் இந்நாவலில் குறிப்பிடும்படியான அம்சங்களாகச் சிலவற்றைக் கூறலாம்.
* மத்தியக் கால ஐரோப்பிய வரலாறு, கலாச்சாரம் பற்றிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக பல்வேறு பிரதிகளிலிருந்து தொகுத்து ஒரு முன்பிரதித்தொகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
* பொருள்கள், மரபுகள் பற்றிய புராதானத் தன்மையுடன் தகவல்கள், பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன.
* துப்பறியும் எழுத்துமுறையின் பெருவழக்கில் உள்ள ஒரு வடிவம் அப்படியே கையாளப்படுகிறது.
* துப்பறியும் கதையின் எதிர்பார்ப்பும் வரலாற்று நாவலின் விவரணைகளும் ஒன்றாக அமைக்கப்படுவதன் மூலம் வரலாறு பற்றிய துப்பறிதலாக கதை மாறுகிறது.
* துப்பறிதல் என்பதற்கும் (Investigation), பொருள் கூறல் என்பதற்கும் (Interpretation) இடையில் உள்ள உறவு உருவக நிலையில் கையாளப்படுகிறது. அதாவது துப்பறிதல் என்பது ஒருவிதக் கதை சொல்லலாக இருக்கிறது.
கதைசொல்லல் மாறும்போது கண்டுபிடிக்கப்படும் உண்மையும் மாறுகிறது. உண்மையைத் தேடுதல் என்பதும் துப்பறிதல் போலவே தடயங்களையும் சான்றுகளையும் வைத்து நிகழ்த்தப்படும் ஒரு பயணமாகவே அமைகிறது. இவை இரண்டிலும் எதேச்சைகள், திடீர் திருப்பங்கள், புதிர்வட்டப்பாதைகள், தடம் மாறும் பாட்டைகள் போன்றவை இடம் பெறுகின்றன. அதே சமயம் அறிதல் முறை மாறும் போது மொத்தப் போக்கும் மாறிவிடக்கூடியதாகவும் உள்ளது.
* துப்பறிகிறவர், தொடரப்படுபவர் இருவரும் ஒரே கதையின் இருவேறு புள்ளிகளில் இயங்குகிறார்கள் அதே சமயம் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்குவதும் இல்லை இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கும் போது கூட வேறுவேறு நபர்களாக இருக்கிறார்கள்.
* துப்பறிதல் என்னும் செயல் ஒரே சமயத்தில் தன்னுடைய பாதையைத் தானே அமைத்துக் கொள்கிறது. இன்னொன்றின் பாதையைத் தொடருவதாகவும் உள்ளது. அடுத்த கணம் என்பது நிச்சயமற்றதாக உள்ள நிலையில் முன் நிகழ்ந்தவைகளின் தர்க்கத்தை வைத்து நகர்வதாக உள்ளது. இந்தப் துப்பறிதல் என்ற நிகழ்வில் ஒரு இறந்தகாலம் அதன் எதிர்காலமாக அமைவதை முரண் அழகாகக் கொள்ள முடியும். ரோஜா நாவலில் ஒரு மர்மம் கண்டறியத் தோற்றம் தந்தவைகள் மர்மங்களாக மாற்றப்படுகின்றன.
* ஒரே புள்ளியை அடைய எண்ணற்ற வழிகள் உள்ள நிலையில் இந்தத் துப்பறிதல் வகை எழுத்து தனது வழியையே முதன்மைப்படுத்துகிறது. இங்கு மையம் என்பது கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் வரலாறு என்பதும் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளின் தொகுப்பே என்பது விளக்கிக்காட்டப்படுகிறது.
* மேற்குலகின் - குறிப்பாக கிறிஸ்திய-இறையியல் பற்றியும், தத்துவ முரட்டுவாதம் பற்றியும் பல கேள்விகளை விளையாட்டுத் தனமாக இந்நாவல் எழுப்பி சந்தேகப்படுதலின் சாத்தியங்களை அதிகமாக்கிவிடுகிறது. இந்தப் புனிதமறுப்பு கதைகூறல் எல்லா புராணிக, புனிதப் பிரதிகளின் முற்றொருமையையும் கலைத்துப்போட்டு அவற்றின் "கதைப்பாட்டு" சாத்தியங்களை அதிகமாக்கிவிடக்கூடியது.
* மிகையில் பக்தினின் "நகைப்புணர்வின் ஆதிக்க நீக்க உத்தி" இந்நாவலின் மொழியமைப்பிலேயே அமைந்துள்ளது. நேரடியாக எதையும் கிண்டலோ கேலியோ செய்யாமல்; வேறு ஒரு காலம் பற்றிய சித்தரிப்பைத் தற்காலம் என்ற மறைமுகப் பிரதியுடன் நேரெதிர்ப்படுத்தும் பொழுது நாம் இதில் உள்ளவைகள் உண்மை என்று கொள்ளாமல் கதையெழுத்தை மட்டுமே நம்பி நகர்கிறோம். இதில் உள்ள பன்முகப்பிளவு நிலை நிஜம் பற்றிய நகைப்புணர்வாக மாறுகிறது. அதாவது எழுத்து தானே உருவாக்கும் கற்பனை தர்க்கத்தின் மூலம் வரலாற்றை வேறாக விளக்கும் பொழுது இந்நாவலின் வாசிப்பு முழுக்க ஒரு நீடித்த குறுஞ்சிரிப்பாக செயல்படக்கூடியது.
* "மறையெதிர்ப்பு" அறிவைத்தேடும் வாசக மனமும் - அறிவைத் தணிக்கை செய்து நம்பிக்கையின் மீது தன்னை நிர்மாணித்துக் கொள்ளும் தொழுகை ஒழுங்கும் முரண்பட்டு இயங்குவதும், இவற்றின் தொடர் போராட்டமே தத்துவங்களையும் இலக்கியங்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பதும் இந்நாவலில் விவரிக்கப்படுகிறது. தேவாலாய அதிகாரம் அறிவை மறைத்தும் கட்டுப்படுத்தியும் உருவாகிய ஒன்று (எல்லா அதிகாரமும்தானே) என்பது இந்த எழுத்தில் நாடகத்தன்மையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.
* ஜீசஸ் தனது வாழ்நாளில் சிரித்ததே இல்லை. அது சாத்தியம் இல்லை என்று கூறும் கிழத்துறவி சிரிப்பு பற்றிக் குறிப்பிடுபவர் மீது கடுங்கோபம் கொள்கிறார். அதே காரணத்திற்காகவே அவர் "இன்பியலையும்" மறுதலிக்கிறார். சிரிப்பற்ற உலகே ஆன்மவியலுக்கானது என்று அவர் நம்புவதன் மூலமும், விபரீத அறிவுகள் அல்லது பல தரப்பு அறிவுகள் மதநம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று தீர்மானிப்பதன் மூலமூம் கொலை என்ற வழிமுறையை அழித்தொழிப்பு என்ற முறையைக் கையாள்கிறார். அப்போகிரிபா என்ற வேத மறுப்பு நூல்களைப்பற்றி மேற்குலகின்மரபு கொண்டிருந்த பயம் இந்நாவலின் முக்கிய பின்புலமாக உள்ளது. அதேசமயம் தன்னை நிறுவிக்கொள்ள அது கையாண்ட கொடூரங்களைப் பற்றிய உள்ளீடான குறிப்புகளும் இதில் உள்ளன.
* இலக்கிய ஆக்கமுறையில் "பாவனை எழுத்து" அல்லது "நிகழ்த்துதல் எழுத்து" என்பது முக்கியமானது. அதாவது இங்கு உண்மை என்று எதுவும் கூறப்படாமல் - கூறுதல் முறை மட்டுமே - "இது இப்படியாக" .. என்பது போல் எழுதிச் செல்லும் முறை. இந்நூல் இப்படியாக அமைவதன் மூலம் கூறப்பட்ட ஒன்றை கூறுவதாக மூன்றாம் தள கதை கூறுநிலை உருவாக்கப்படுகிறது.
* இந்நூல் வாசிப்பு என்ற வினையை சுதந்திரமாக்கக்கூடியது. பல்வேறு பிரதி மேற்கோள்கள், ஊடுபிரதி இணைப்புகள் (Inter Textuality) மூலம் வேறுவேறு இலக்கியப் பிரதி ஞாபகங்களை எழுப்பிச் செல்வதாக அமைந்திருக்கிறது. (இந்நாவல் ழான் ழாக் அன்னூத் என்ற இயக்குநரால் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் வாசிப்பு என்பது தனித்தன்மை உடையது).
ரோஜாவின் பெயர் என்ற தன் முதல் நாவலுக்காக போர்கஸிடமிருந்து "புதிர் வட்டப்பாதை" என்ற உருவாக்கத்தைப் பெற்று பெரும் பிரதி மாற்றத்தை நிகழ்த்திய ஈகோ அதற்காகத் தான் செய்த Medical History பற்றிய ஆய்வுகளின் தகவல்களை அசாத்திய தந்திரத்துடன் உருமாற்றம் செய்ததின் மூலம் தனது இரண்டாவது நாவலான ஃபூகோவின் ஊசல்-ஐ எழுதி முடிக்கிறார். இந்நாவல் பலமுறை வாசிக்கத்தூண்டும் ஜாலத்தன்மை கொண்டது.
* ஊசல் நாவல் Jacopo Belbo, Casaubon, Diotellavi என்ற நபர்களையும் Abulafia என்ற கம்ப்யூட்டரையும் முக்கிய பாத்திரங்களாகக் (A,B,C,D) கொண்டு எழுதப்பட்டது. கதையைக் கூறுவது காசேர்போன் என்ற பாத்திரம், தன்னை விட வயதில் மூத்த பெல்போவைப்பற்றி இப்பாத்திரம் கூறுவதாகக் கதை நிகழ்கிறது. அதே சமயம் தன் நினைவுகள், தான் வாசித்தவைகள், பெல்போ தனது கம்ப்யூட்டரில் எழுதி வைத்திருந்தவைகள் எனக் கதை கூறல் கதை எழுதுதலாக மாற்றமடைந்து கதை உருவான கதையாக நீண்டு செல்கிறது.
காசோபோனும், பெல்போவும் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்யும் ஆய்வாளர்கள். பெல்போ தனது ஆய்வுகளுக்கு நடுவே கிருஸ்திய மதத்தின் வரலாற்றையும் ஆய்வு செய்கிறான். அதிலும் குறிப்பாக "Templars என்ற ரகசிய சங்கம் பற்றி ஈடுபாட்டுடன் தகவல்களைச் சேகரிக்கிறான். இதன் மூலம் ஐரோப்பாவின் பல்வேறு ரகசிய இயக்கங்கள், அமைப்புகள் பற்றிய விபரங்களும், வரலாற்றில் அவற்றின் இடமும், ஊடுருவலும் பற்றிய வினோதமான செய்திகளும் அவனுக்குக் கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் ரகசிய சங்கங்களின் வலைப்பின்னலுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். ஆய்வுக்காக அவன் அணுகும் நபர்கள், நூல்கள், தொல்பொருள் சாலைகள் இவற்றின் மூலம் ரகசிய சங்கத்தின் இன்றைய காலத்திட்டம் ஏதோ ஒன்று இருக்கலாம் என்பது பற்றி அவனுக்குத் தெரிய வருகிறது.
இவை ஏதோ பழைய காலத்துடன் முடிந்து போனவை அல்ல என்பதும் இன்னும் அவற்றின் உறுப்பினர்கள், செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியவருகிறது. இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் அவனைத் தொடர்ந்துவர ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்களின் ரகசியத் திட்டம் தொடர்பாக அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு வரைபடம் ஆய்வுகள் மூலம் பெல்போவிடம் கிடைத்திருப்பதாக நம்பும் அவர்கள் அவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். அவனிடம் அது இல்லை என்பதையும் நம்ப மறுக்கிறார்கள். அவர்களின் சதிவலையில் அவன் சிக்கிக் கொள்கிறான். அவனது உயிருக்கான போராட்டமாக அது மாறிவிடும் சூழ்நிலையில் தன் நண்பனான காசாபோனிடம் தனது நெருக்கடிகளைத் தெரிவிக்க தனது கம்ப்யூட்டரான அபுலாஃபியாவைப் பயன்படுத்துகிறான்.
அதுவரை பெல்போவுடன் சேர்ந்து தான் செய்த ஆய்வுகளை இல்லாத ஒரு காலம் பற்றிய தகவல் திரட்டாக மட்டுமே நம்பிவந்த காசாபோன் அதன் பயங்கர எதார்த்தத்தை அறிந்து கொள்கிறான். இதன் மூலம் அவனும் அதன் சதிநாடகத்திற்குள் சிக்கிக்கொள்கிறான். தன் நண்பன் திடீரெனக் காணாமல் போன நிலையில் அவனை மீட்கவும்., இந்த பயங்கரத்திலிருந்து தப்பிக்கவும் ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறான். இதைப்பற்றி யாரிடமும் கூறவும் முடியாத நிலை. அனைத்தையும் பிரம்மை, மனநோய்மயக்கம் என்று யாரும் இலகுவாகக் கூறிவிடமுடியும். இந்நிலையில் தனியாகத் தன் நண்பனின் தடத்தைப் துப்பறிந்து செல்லும்பொழுது, அவனது நண்பனான பெல்போ ரகசிய சங்கத்து உறுப்பினர்களைப் பாரிசிலுள்ள தொல்பொருள் சாலைக்கு வரும்படியும் அங்கு அவர்கள் தேடும் வரைபடம் பற்றிக் கூறுவதாகவும் அறிவிக்கிறான். ஆனால் அவர்களிடமிருந்து தப்பமுடியாது என்ற மனநெருக்கடியில் பொருள்சாலையில் இருக்கும் ஃபூக்கோ ஊசலில் தூக்கிலிட்டு இறந்துவிடுகிறான். அவன் அங்கு வருவதை அறிந்து சென்ற காசாபோன் நண்பனின் உயிரற்ற உடல் ஊசலின் அசைவை நிறுத்திவிட்டபடித் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, ரகசிய சங்கத்தினர் இன்னும் சில நேரத்தில் அங்கு வந்து விடுவார்கள் என்பதால் தப்பி தனது கிராமத்திலுள்ள பழைய வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் ரகசிய சங்கத்தினரின் அடுத்த இலக்கு தான்தான் என்பதும்; ஏற்கெனவே அவர்கள் தன்னைத்தொடர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிற நிலையில் தனது மரணம் பற்றிய ஒரு உறுதிப்பாட்டுடன் எதுவும் நடக்கலாம் எனக் காத்திருக்கிறான்.
இந்நாவல் காசாபோனின் கூற்றாக எழுதப்படுகிறது. தன்னிலைக் கூற்றாக கதை கூறப்படும் அதேசமயம் அபுலாஃபியா என்ற கம்ப்யூட்டரில் உள்ள பெல்போனின் மொழியும் இணைக்கப்படுகிறது. பல்வேறு நூல்களிலிருந்து குறிப்புகளும் இருவரின் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இணைக்கப்படுகின்றன. நிகழ்ந்தவைகளாகவும், நினைவுகளாகவும் நீளும் கதையுடன் வரலாற்றுக் குறிப்புகள் அப்படியப்படியே பல்வேறு நூல்களிலிருந்தும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் கதைகூறல் என்ற நிலையிலிருந்து கதை வரைதல் என்ற நிலைக்கு எழுத்து மாற்றப்படுகிறது. அது மட்டுமின்றி கதை காட்சிக்குறியாக எழுத்துப் பரப்பில் உருவாக்கப்படுகிறது. இந்நாவல் மர்மநாவலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. துப்பறிதல் என்பது இந்நாவலிலும் அடிப்படை உருவமாக அமைக்கப்பட்டிருக்கிறது பதைபதைப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் "Thriller" என்ற வகை நாவல் வடிவத்திலும் இந்தப்பிரதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலகுவான வேகமான வாசிப்புக்கு உரியதாக மாற்றப்படுகிறது. அதே சமயம் மிக உள்ளோடிய தத்துவார்த்த, மெய்யியல், வரலாற்றியல், தொல்லாய்வியல், தொன்மவியல், கதையியல் பிரச்சனைகளும் இதில் கையாளப்படுகின்றன.
இந்நாவலின் சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வகைக் கூறுகளின் மூலம் இது ஒரு பேரிலக்கியப் பிரதியாக தன்னை மாற்றிக் கொள்ள முனைகிறது.
* ஐரோப்பியச் சமூகங்களின் கூறப்பட்ட வரலாற்றை இந்நாவல் முதலில் கேலி செய்கிறது. கிறிஸ்திய உலகின் மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பதை இந்நாவல் கேள்விக்குரியதாக மாற்றிவிடுகிறது.
* வரலாறு எப்பொழுதும் ஒருபோக்குத்தன்மை உடையதாக இருப்பதில்லை. ஏன் சிலசமயங்களில் வரலாறு என்ற தன்மைகூட இருப்பதில்லை என்பதை விரிவாக இந்நாவல் எழுதிச் செல்கிறது.
* வரலாறு என்பது பிரதிகளின், மொழிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இவற்றில் நேரும் பின்னல்களும், சிக்கல்களும் வேறுவகை எதார்த்தத்தைக் கட்டமைத்து விடக் கூடியவைகளாக உள்ளன. இதில் உண்மை என்ற ஒன்று உருவாக்கப்படுவதேயொழிய - வனைந்தெடுக்கப்படுவதே ஒழிய - கண்டறியப்படுவதில்லை என்பதை இந்நாவல் திரும்பத்திரும்பப் பேசிச்செல்கிறது.
* வரலாறு எழுதுதல் என்பது ஒருவகைப் பொருள் கோள் - உரைகூறல் - முறையே. இது எழுதப்படுதலுக்கேற்ப தனது உண்மையை மாற்றிக்கொள்கிறது என்பதை முரண்காரணிகள், ஜால-தர்க்கங்கள், விளையாட்டுச் சேர்க்கைகள் புனைவுவைப்பு முறைகள் மூலம் இந்த எழுத்து நிகழ்த்திக் காட்டுகிறது.
* புனிதப் போர்கள் முடிந்து மதச்சாம்ராஜ்யம் உருவானபின் சிலுவைக்காக ரத்தம் சிந்தியவர்களில் பலர் ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் தமக்குள் உருவாக்கிக் கொள்ளும் "டெம்ப்ளார்" என்ற அமைப்பு தடைசெய்யப்பட்டதாக மாறுகிறது. அதனால் அந்த அமைப்பு ரகசியமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதேபோல் உருவான ரோஸிக்குருசியன்ஸ், ஃபிரிமெசன்ஸ், ரேடிக்கல் கிறிஸ்தியன், ஆர்டர் ஆஃப் ஹோலிகிரெய்ல் போன்ற பல்வேறு மார்க்கங்களும் தடைசெய்யப்பட்டவையாக, தண்டிக்கப்பட்டவையாக மாறுகின்றன. இன்குசிஷன் மூலம் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒரு வகையில் மாற்று நம்பிக்கைகளே இல்லாமல் ஒருகாலத்தில் தடைசெய்யப்படுவதும் வேறொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கிறிஸ்திய வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியது. அதற்குள் நேர்ந்த பல்வேறு பிரிவுகளும் இவ்வாறே உருவாயின. இந்தப் பின்னணியை மிக விரிவாக விவரிக்கும் "ஊசல்" நாவல் முற்றிலும் கற்பனையான தர்க்கத்தின் மூலம் வரலாற்றின் புனைவுத்தன்மையை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடுகிறது.
* வரலாறு என்பது நம்பப்படுவது போல பெரும் நிகழ்வுகளால் வரிசைக் கிரமமாக அமையும் தர்க்கபூர்வ ஒழுங்கல்ல; மாறாக மனப்பிரம்மைகளால், எதேச்சைத்தன்மைகளால், மிகச் சிறிய வார்த்தை விளையாட்டுகளால், திடீர் திருகல்களால், ஒரு வித சூதாட்டத் தன்மையுடன் அமையும் குழப்படியே என்பதையும் - இந்த குழப்பத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கற்பிக்க நினைக்கும் முயற்சியே வரலாறு எழுதுதல் என்பதும் இந்நாவலில் தடம் காட்டப்படுகிறது.
* புனைவு மற்றும் உண்மை என்பவை தனித்தனியே இல்லை எனவும் புனையப்படுபவையே எல்லாம் என்பதையும் இந்நாவல் அடையாளப்படுத்தும் அதே நிலையில் மனித வரலாறே புனைவுகளின் மண்டலத்திற்குள் நகரும் ஒரு வலைப்பின்னல் தான் என்பதையும் கூறிச்செல்கிறது.
* புனைவுகள், மாயங்கள், கனவுகள் போன்றவை பருண்மை உலகின் மீது கவிந்து வடிவப்பரப்பாக மாறக்கூடியவையே என்பதையும் இந்நாவல் புலப்படுத்துகிறது.
* நிகழ்காலம் என்பதற்குள் பலகால அடுக்குகள் உள்ளதையும் - தொன்மங்களும், புராதான நினைவுகளும் ஒவ்வொன்றிற்குள்ளும் ஊடாடி இருப்பதையும் இவை மொழியின் மூலமே சாத்தியப்படும் ஒரு நிலை என்பதையும் இந்நூல் நிரூபிக்க முயற்சிக்கிறது.
* இந்நாவலில்: மதங்களின் வரலாற்றுக் கதைகள், மந்திரவாதங்கள் பற்றிய கதைகள், அமானுஷ்யங்கள் பற்றிய கதைகள், வினோத மனிதர்களைப்பற்றிய கதைகள், வெவ்வேறு போர்களைப் பற்றிய கதைகள், தத்துவ ஞானம் பற்றிய கதைகள், தத்துவவாதிகள், ஞானிகள், மதத்தலைவர்கள் பற்றிய கதைகள், ரகசிய சங்கங்கள், ரகசிய சடங்குகள், மர்மமான வாழ்வியல் முறை பற்றிய கதைகள், அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் பற்றி கதைகள், விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய கதைகள், பல்வேறு புராதானப் பொருள்கள் பற்றிய கதைகள் எனக்கதை கதையாய் விரிந்து செல்லும் புதிர்க்கிளைப்பதைகளூடாக மையமற்ற ஒருமொழிக்காடு பரவிக்கிடக்கிறது. அதே சமயம் மிகத்துல்லியமான ஒரு தொடரொழுங்கும் ஒரு புனைவுத்தர்க்கமும் செயல்பட்டபடியும் இருக்கிறது.
* மனிதர்கள் பின்னும் மொழிக்குள் மனிதர்களே சிக்கிக்கொள்வதும் எந்த ஒரு சொல்லும் வேறு ஏதோ ஒரு தருணத்திலாவது விளைவாக மாறவே செய்கிறது என்பதையும் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.
* ஒரு சொல்லில் ஆரம்பிக்கும் பொருள்கூறல் சங்கிலி எல்லையற்றும் முடிவுற்றும் வளர்கிறது. எந்த ஒன்றும் மையமுமில்லை: எந்த ஒன்றும் நுனியும் இல்லை - பெரும் சுழல் கிருக்கலின் விபரிதமே மனிதப் பிரபஞ்சம். இந்நாவலில் பெல்போவும், காகாபோனும், ஒரு பன்னிரண்டு ஆண்டுகால வாசிப்பின் மூலம் உருவாகும் மேற்கோள்களின் திரள் அவர்களை இதே வகைக் சுழல்கிருக்கலுக்குள் தள்ளிவிடுகிறது. ஒரு வகையில் எந்த அர்த்தமும் முக்கியத்துவமும் இல்லாத தனிமனிதர்களான பெல்போ, காசாபோன், டியோடாலேவி என்ற நபர்கள் திடீரென உலக வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளியை நெருங்கிவிடுகிறார்கள், சில நூற்றாண்டு மர்மத்தின் ஒரு பகுதியாகி விடுகின்றனர். பிரபஞ்ச வினோத நிகழ்வொன்றின் அத்தியாயமாக ஆகிவிடுகின்றன.
* தெளிவானதாக, பகுத்தறிவுக்கு அடங்கக் கூடியதாக தோற்றம் தரும் சமூக வெளியும், உலக மற்றும் அரசியல் வரலாற்றுப் போக்குகளும் திடீரென மர்மங்களும், மந்திர விபரீதங்களும், சதிநாடகங்களும் நிரம்பியதாக மாறிவிடுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு ரகசிய சங்கங்களால் மர்மமார்க்கங்களால் திட்டமிடப்பட்டு ஊடுறுவப்பட்டு, திசைமாற்றப்பட்டு கையாளப்படுபவைகளாக தோற்றம் தருகின்றன.
* விஞ்ஞானிகள் அனைவரும் மர்மவாத மாயாஜாலக் கலை மரபை பின்பற்றும் மந்திர மார்க்கிகளாகத் தோற்றம் தருகின்றனர்.
* உலகின் பல புரட்சிகளும், சமூகக்கிளர்ச்சிகளும் இவ்வகை ரகசிய, நிலத்தடி இயக்கங்கள் - மார்க்கங்களால் நிகழ்த்தப்பட்டவையாக விளக்கமுறுகின்றன.
* தத்துவவாதிகள், கலைஞர்கள் போன்றவர்கள் மாந்திரிக மரபின் மாறுவேடமிட்ட செயல்பாட்டாளர்களாக விளக்கப்படுகின்றனர்.
* ஷேக்ஸ்பியர், தாந்தே, நியூட்டன், மோசார்ட், வால்டேர், ரூசோ எனத் தொடங்கும் ரகசியமார்க்க பற்றாளார்கள் பட்டியல் மெல்ல மெல்ல நீண்டு உங்களையும் எங்களையும் கூடத் தன்வரிசையில் நி
றுத்திக் கொள்வதன் மூலம் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் சில ரகசிய மார்க்கங்களின் உறுப்பினர்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாது என்பது மட்டுமல்ல ஒருவருக்கே அவர் உறுப்பினராகச் செயல்படுவது தெரியாமல் கூட இருக்க முடியலாம்.
* பகுத்தறிவில் ஆகக்கூடிய மூடநம்பிக்கையும், தத்துவத்தில் மிகத்தீவிரமான காமார்த்தகமும், அறிவியலில் மிகவினோதமான தொன்மத்தன்மையும், வரலாற்றில் மிகக்குழப்பமான கட்டுக்கதையும் கலந்து கிடப்பதாக இப்பிரதி குழம்பியபடி விவரித்துச் செல்கிறது.
* அபுலாஃபியா என்ற பெல்போவின் கம்ப்யூட்டருக்குள் எல்லாக் கதையும் புதைந்திருக்கிறது. காசாபோனுக்கு உள்ளே நுழையும் சங்கேத வார்த்தை தெரியாது. பலநூறு சொற்களை முயற்சி செய்து முடியாத நிலையில் "உன்னிடம் நுழைவுச் சொல் உள்ளதா? என்ற கேள்விக்கு விளையாட்டாக "இல்லை" என்ற சொல்லைத் தருகிறான். அதுவே அனைத்திற்கும் திறவுகோலாகிவிடுகிறது. இதுவே எல்லா அறிவிற்குமான உத்தி என அவன் இன்னொரு இடத்தில் நினைவு கூறுகிறான்.
* ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு மந்திரத் தன்மையுடன் உள்ளது என்றும் அதை அறிய ஒரு முறை உள்ளது என்றும் அம்முறையை அறிந்து பழகுவதன் மூலம் எந்த ஒரு பொருளையும் வெவ்வேறு விதமாகக் கையாளலாம், வசப்படுத்தலாம் என்று கூறுவது மாந்திரிக மார்க்கங்கள் தானே என்று தோன்றலாம். ஆனால் எல்லாக் கலாச்சாரங்களும் மரபுகளும் ஏதோ ஒரு வகையில் மாந்திரிக மார்க்கங்களாகவே இருக்கின்றன.
இந்த முரண் நிலையை இந்நாவல் ஓர் அழுத்தமான கேலியுடன் நடித்துக்காட்டுகிறது.
* இன்றைய உலக நடவடிக்கையில் ரகசிய சங்கங்களின் ஏதாவதொன்றின் பங்கும் பின்புலமும் இருக்கலாம் என்றும் - எதிரும் புதிருமான ரகசிய மார்க்கங்கள் தமது யுத்தத்தை மிகப்பூடகமாக உலகத்தளத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம் என்றும் - நாமெல்லாம் அவற்றிற்கு நடுவே வேறு எதையோ நம்பியபடி அலைக்கழிக்கப்படுகிறோம் என்றும் இந்தப்பிரதி கூறும் பொழுது அதை மறுக்க நாம் வேறு ஒரு பிரதியை உருவாக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.
(எந்த ஒரு அமைப்பும், கலாச்சாரமும், மதமும் அவற்றிற்கு வெளியே உள்ளவர்களுக்கு ஒரு மர்மமான ரகசிய சங்கம் போல் புதிர்களால் அமைவதே என்பதை நினைவுகூர்வோம்).
* இந்நூல் மேலதிகம் பொருள்கோடல் (Overinterpretation) முறைமீறிய பொருள்கோடல் (Misinterpretation) என்ற இரு உத்திகளின் மூலம் வரலாற்றைத் தலைகீழாக்குவதுடன், அதன் தர்க்க வழியிலேயே அதன் புனித இடத்தைக் கலைத்துப் போட்டுவிடுகிறது.
* இந்நூல் இணையெதிர்வுகளை (Dichotomy) மோதவிட்டு வசதியான ஒரு சாராம்சவாத முடிவுக்கு வந்து சேராமல் கலப்பு முரண்களை நழுவவிட்டு முற்றொருமையைக் குலைத்துவிடுகிறது. தன்னிலைக்கும், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கும் உள்ள உறவை அதன் விபரீதமான வடிவத்துடன் அடையாளம் காணும் நிலையில் இந்நாவல் பின் நவீனத்துவ எழுத்தாக அடையாளம் பெறுகிறது.
* it was becoming harder for me to keep apart the world of magic and what today we call the world of facts (p.360).
* And I began to question everything around me; the house, the shop signs, the clouds in the sky, and the engravings in the library, asking them to tell me not their superficial story but another, deeper story, which they surely were hiding - but finally would reveal thanks to the principle of mystic resemblances. (p.361)
* பூமியின் சுழற்சியை நிரூபிப்பதற்காக ழான் பெர்னார் பூக்கோ என்ற விஞ்ஞானி 1851 இல் அமைத்த ஊசலும், மிஷேல் ஃபூக்கோ வரலாற்றை மறுக்க வரலாற்றை எழுதியதின் ஊசலாட்டமும் இணைந்து நினைவுக்கு வரும்படியான Foucault"s Pendulum என்ற தலைப்பும், இருவருமே பிரஞ்சு நாட்டவர்கள் என்பதும் இந்நாவலை வாசிக்கப் பெரிதாக எந்த உதவியும் செய்யப்போவதில்லை. ஆனால் டெம்ப்ளார்கள் அமைத்த சுரங்கப்பாதைகள், நிலத்தடி நகரம் போன்றவை பாரிசில் உள்ளவை என்றும் எஃபில் டவர் ஒரு Hermatic Valve என்றும் நாவல் குறிப்பிடும் பொழுது - நாவலை வாசிக்க ப்ரான்ஸ் நாட்டின் வரலாறு ஒரு பின்புலமாக அமைவதை நாம் அறியமுடியும். இப்படியாக நாவல் நெடுக அமையும் சிறு குறிப்புகள் கூட மேலதிக வாசிப்பை அவசியமாக்கிவிடுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றைச் சுட்டி விரியும் பிரதிப்பின்னல் இது. இதன் மூலம் எல்லையற்ற பிரதிப்பரப்புகளின் சுரங்கவழித்தடங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
* இந்நாவல் வாசிக்கப்படும் பொழுது நமது அறிதல் முறை, மற்றும் மெய்காண்முறையின் எல்லைகள் கரைந்து எல்லாப்புறமும் பரவும் பாட்டைகள் விரிவதை உணரமுடியும். ஏனெனில் இது ஒரு தர்க்கப்பூர்வமாக அமைந்த அதர்க்க எழுத்து.
(பி.கு). "நாளுக்கு முந்திய தீவு" என்ற நாவல் 39 அத்தியாயாங்களுடன் 513 பக்கங்களுடைய ஒரு ஆக்கம். இந்நாவலும் இடைக்கால ஐரோப்பியச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. Roberto என்ற பாத்திரம் திசைதவறித் தொலைந்த கப்பல் ஒன்றில் இருந்தபடி தனது அனுபவங்களை கண்டவைகளை கேட்டவைகளை காதலை நினைவு கூர்ந்து பதிவு செய்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து வேறொருவரால் எழுதப்படுவதாக இந்நாவல் அமைகிறது. 
17ஆம் நூற்றாண்டின் பிரான்ஸ் இத்தாலி நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளும் இடையே ஒரு துயரமான காதல் கதையும் எனத்தொடரும் இந்நாவலின் 37ஆம் அத்தியாயம் இப்படியாக முடிகிறது. "He did not know that especially when their authors are now determined to die, stories often write themselves, and go where they want to go". (p.482) இன்னும் இருமுறை நிதானமாகப் படித்தபின் விரிவாக எழுதலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கும் பொழுது "இதாலோ கால்வினோ" வின் பக்கங்கள் அடிக்கடி ஞாபகம் வருவதும் Don Quixote, அங்கங்கே தட்டுப்படுவதும் தன் முன்னீட்டுப் பிரதிகளை அடையாளம் காட்டும் குறிப்புகள் ஈகோவின் மூன்று நாவல்களையுமே இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர் William weavar. சில பேரிலக்கியங்களின் எழுத்தாளர்களைப் போலவே மொழி பெயர்ப்பாளர்களும் நினைவு கூறத் தக்கவர்களாக அமைவதும் இப்படியாகத்தான்.
கேள்வியாக ஒன்று: இலக்கியம் வாழ்க்கை அனுபவத்தையே பிரதிபலிக்க வேண்டும் என்ற அரிஸ்ட்டாடிலியக் கோட்பாட்டை ஆழமாக பதிவு செய்து வைத்திருக்கும் தமிழ் இலக்கியவாசகமனம், இலக்கியம் என்பதே தனி வாழ்க்கையும், தனி அனுபவமுமாக இருக்கலாம் என்ற முற்கோளை அடிப்படையாகக் கொண்டு முழுப்புனைவுகளாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று நாவல்களையும் எப்படி வாசிக்கும் என்பது சற்றே புதிரான ஒன்றுதான். இப்படிச் சொல்வதன் மூலம் வாழ்க்கையின் தனித் தன்மையும் குலைகிறது. இலக்கியத்தின் தனித் தன்மையும் குலைகிறது என்பதும் இரண்டும் ஒன்றில் ஒன்று அடங்காதது என்பதையும் கூடச் சொல்லித்தரப் பின் நவீனத்துவம் தேவை இல்லை.
"You Know how they wrote in that Centuty..... people with no soul" (நாளுக்கு முந்திய தீவு. பக்கம் : 513).

Friday, 12 May 2017

மரத்தடியில் துயிலும் ஒருவன் - தேவதேவன்

http://poetdevadevan.blogspot.in/2011/03/blog-post_2503.html

SUNDAY, MARCH 6, 2011

மரத்தடியில் துயிலும் ஒருவன்  

தேவதேவன்

புரண்ட விலாவினில்
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன
வீசிய காற்று
விலா மணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதேவேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி

Tuesday, 9 May 2017

பறவையியல் விவாதம் ----- ஹோர்ஹே லூயி போர்ஹே

பறவையியல் விவாதம்
-----
ஹோர்ஹே லூயி போர்ஹே
நான் கண்களை மூடியபோது ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனைப் பறவைகளைப் பார்த்தேன் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா? இந்த சிக்கல் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் எனத் தெரியும் அவருக்கு. கடவுள் இல்லை என்றால் எண்ணிக்கையும் அறுதியற்றது. ஏனெனில், எத்தனை பறவைகள் என யாராலும் சொல்லவியலாது. இந்த நிலையில் நான் பத்துக்கும் குறைவான ஒன்றுக்கு அதிகமான பறவைகளைப் பார்த்தேன் (எனக்கொள்வோம்). ஆனால் நான் ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு பறவைகளைப் பார்க்கவில்லை. நான் பார்த்தது பத்திலிருந்து ஒன்றுக்குள் ஒரு எண்ணை. ஆனால், ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து…. மற்றவை இல்லை. அந்த எண் ஒரு முழு என் என்ற அளவில் புரிந்துகொள்ளவியலாதது. எனவே, கடவுள் இருக்கிறார்.
(தமிழில்: இளங்கோ கிருஷ்ணன்)

Sunday, 7 May 2017

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா – ஆத்மார்த்தி, ..

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா – ஆத்மார்த்தி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா
ஆத்மார்த்தி
மே 3, 2017
http://charuonline.com/blog/?p=5834
என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் கையில் கிடைத்தால் நாக்கு எரிகிறாற் போல நாலு கேள்விகளையாவது கேட்டுவிடவேண்டும் என்பதை நோக்கமாக அல்ல, உறக்க நடுவாந்திரம் எழுப்பி இந்தா சாரு என்றால்கூட சாறு பிழிந்துவிடுகிற எத்தனமாக, ஏன் என் பல பிறவிகளுக்கான ஒற்றை வெறியாகவே வைத்திருந்தேன்.
“எதையாவது எரிக்கப் போகிறாயா? எழுத்துக்கள் கொண்ட காகிதமாக இருந்தால் படித்துவிட்டு எரி,” என்று எனதொரு நண்பன் ராஜஷேகர் சொல்வான். எனக்கு ராஜஷேகரை ரொம்பப் பிடிக்கும். பாவம், பீஎஸ்சி படித்துவிட்டு மேலே தான் படித்த கணக்கைத் தொடராமல் சீ.ஏ. படித்து முடித்துவிட்டு கம்பெனிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். எழுத்தாளனாக வந்திருக்க வேண்டியவன். எனக்கு ஆத்மாநாமை அறிமுகப்படுத்தி சுஜாதாவைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளை என்னோடு உரையாடியவன். பல நவீன எழுத்துக்களை எனக்கு முன்னால் உதிர்த்தாடுகிற சீட்டுக்களைப் போலக் காண்பித்த அதே அவன்தான். சாரு நிவேதிதாவை நான் திட்டும் போதெல்லாம் அமைதியாகக் கடந்து சென்றுவிடுவான். எனக்கென்னவோ ஷேகரைத் திட்டும்போது சாருவையே திட்டுகிறாற் போல ஒரு அந்தரங்கமான கிளுகிளுப்பு ஏற்பட்டது. மேலும் யாரெல்லாம் அமைதியை முன்வைக்கிறார்களோ அவர்களிடம்தான் இன்னும் கொஞ்சம் அலம்பல் செய்து பார்க்கத் தோன்றும். நான் ஒரு சல்லியாகத்தான் அவ்வாறு நடந்துகொண்டேன்.
மேலும் சில கூடுதல் தகவல்கள். நான் சாருவைத் திட்டியதற்கான ஒரே ஒரு காரணம் அந்த மனிதன் அதுவரைக்குமான உலகத்தின் ஒழுங்குகளை எல்லாம் மீறி ஸீரோ டிகிரி என்ற ஒன்றை எழுதினதால்தான். அடுத்த தகவல் என்ன தெரியுமா? என்னிடம் ஸீரோ டிகிரியின் பிரதிகள் இரண்டு இருந்தன என்றபோதும் நான் அதன் ஒரு பக்கத்தைக்கூட படித்திருக்கவில்லை என்பதுதான். படித்துவிட்டதாகவும் அது ஒரு குப்பை என்றும் சில முடிவுகளுக்கு நான் வந்திருந்தேன். எதிர்பாராத நள்ளிரவில் தலைவன் ஒருவனை இழந்தபின் கலவரம் வெடித்த நீர்சூழ் நகரொன்றின் அடுத்த தினக் காலைப் பொழுதைப் போல் பலரும் எந்தவிதமான கூச்சமுமே இன்றி ஸீரோ டிகிரியைப் பற்றிய கொடூரமான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். அந்தச்  சூழலில் நானும் அவர்களில் ஒருவனாக என்னை நானே நியமித்துக்கொள்வதற்கு அந்தப் பிரதியை அல்ல, அதன் ஒற்றை வார்த்தையைக்கூடப் படித்திருக்கவேண்டியதில்லை என்று எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. அதுதான் எல்லோரும் திட்டுகிறார்களே, பலர் திட்டுகிற ஒன்றை நானும் சேர்ந்து திட்டினால் என்ன பாவம்? முதலில் திட்டுவோம். பிற்பாடு தேவைப்பட்டால் வாசித்துக்கொள்ளலாம். இப்போது என்ன அவசரம்? மேலும் சாரு நிவேதிதா என்ன கடவுளா? இப்படித் தன் தலையில் தானே மண்ணை அல்ல, மலையைப் போட்டுக்கொள்வானா ஒருவன்? சரி, சாருவை யாரென்றே தெரியாது; ஒழியட்டும்; நமக்கென்ன என்றுதான் எனக்குள் ஒலித்த குரல் பேசிற்று.
ராஜஷேகர் சாருவை விடாமல் வாசிப்பவர். என் வாசிப்பின் மீது பெரிய காதல் உள்ளவரும்கூட .எப்படியாவது சாருவின் எழுத்தை எனக்குள் சரியான திசையில் செலுத்திவிடுவதற்கான நல்லதோர் தருணத்திற்காக அவர் காத்திருந்தார். அந்த வேளையில்தான் ஒரு மழையற்ற இரவு முழுக்க நானும் ஷேகரும் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இசை, வெயில் என்றெல்லாம் நவ கவிஞர்கள் உருவானது பிற்காலத்தில். இந்த இசை என்பது ம்யூசிக்தான். என்ன கொடுமைடா சாமி! தமிழை விளங்க வைக்க இங்கிலீஷித் தொலைய வேண்டி இருக்கிறது.
“ரவீ, ஸீரோ டிகிரியை நீ உண்மையாவே படிச்சியா?” என்றார் ஷேகர். நான் அதிர்ந்தேன். பிடிபட்டுவிட்ட குற்றக்காரனின் மௌனமாய் என்னுடையதும் தொனித்திருக்கக் கூடும். என்னை மேலும் சங்கடப் படுத்தவிரும்பாத ஷேகர், “சரி ரவீ, நீ படிச்சிட்டு சொல்லு. உண்மையாவே படிச்சிட்டு, உண்மையாவே சொல்லு,”என்றபடி உறங்கப் போனார்.
சைத்தான்களுக்கான ப்ராயம் பதின்பருவம் என்பார்கள். உண்மையில் குழந்தைகளாயிருக்கையிலேயே பற்களின் கோரத்தால் தன் தசையையே குதறிக் குருதி ருசி பழகுபவை சைத்தான்கள். உண்மையாகவே என்ற சொல்லின் இரட்டை வருகைகள் எனக்குள் இருந்த வாசிப்பாளனைத் துன்புறுத்தின. பலவந்தமாகஆடைகளை அகற்றிய பிற்பாடு தன் நிர்வாணத்தைத் தண்டனையென்று உணராத ஓர் கணத்தில் அடுத்த யுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கத் தொடங்குவானே செதிலாழங்களில்கூடத் தப்புதலும் வெறியும் சரிவரக்கலந்த சண்டைப்ரியன், அவனைப் போல ஸீரோ டிகிரி என்ற நூலுக்குள் நுழைந்தேன். உண்மையில் என் விருப்பம் அந்தப் பிரதியைப் படித்துவிட்டு இன்னும் பலமாக சாரு நிவேதிதாவைக் காயப்படுத்த வேண்டும்; அதைவிட என்ன செய்தாலும் அசைய மறுக்கிற ராஜஷேகர் என்கிற வாசக சைத்தானை ஓரே வெட்டில் இரண்டாகப் பிளந்துவிட வேண்டும் என்ற வெறியோடே படித்தேன்.
அந்த இரவிலிருந்து புதிதாக மதம் மாறிய ஒருவன் புதிய ஆலயத்திலிருந்து சதா தன் முதுகில் ஆயிரம் கண்களை எதிர்நோக்கியபடியே வெளிவருவானே, அப்படித்தான் வெளியேறினேன். நான் வெகு நேரம் கழித்தே எழுவேன் என்பதால் ஷேகர் அதிகாலையிலேயே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார். நான் எழுந்த போது காணாமற் போனதற்கும் சேர்த்து ஷேகருக்கு நன்றி சொன்னேன். லவ் யூ ஷேகர் என்று காற்றில் முனகினேன். ஸீரோ டிகிரி என்பதைப் படித்த பிறகு ஒரு மலைப்பாதையில் முழுவதுமாக ஏறிவந்த ஒருவனைப் போல் சாரு என்பவரை முற்றிலுமாக வெறுத்து முடித்த ஒருவனாக நேசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலையில் நான் சாருவை சந்தித்திருப்பேனேயானால் அவரது வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறையைக்கூடத் தந்திருப்பேன். அல்லது ஒரு அழுத்தமான முத்தத்தை. இந்த இரண்டின் நோக்கமுமே அவருக்கு ஏதேனும் ஒரு சிறிய வலியைத் தந்தபடி அவருக்கு அறிமுகமாக வேண்டும் என்கிற என் பழைய ஆசையின் தீர்ந்துபோன இன்னொன்றாகவே இதனையும் பிற்பாடு உதிர்த்தேன்.
ஷேகர் அடுத்த சந்திப்பின் போது ஒன்றே ஒன்றைத்தான் கேட்டார், “சொல்லு ரவி, உன் வார்த்தைகள்ல உனக்குக் கிடைத்த வார்த்தைகளைப் பற்றிச் சொல்லு,” என்றார். ஒரு நனவிலி கால ஞாபகத்தைப் பெயர்த்துத் தருகிற ஒருவனைப் போல் ஸீரோ டிகிரி பற்றிய என் அவதானத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
ஸீரோ டிகிரி மூலமாக எனக்குள் அறிமுகமான சாரு நிவேதிதாதான் நான் எழுத வருவதற்கான காலத்தை இன்னுமோர் எட்டு வருடங்கள் தாமதித்துத் தந்தார் என்பது நான் வெறுமனே வார்த்தைக்காக சொல்லவில்லை. எதையும் நான் நிரூபிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்த உலகத்தில் நிரூபிக்கப்படாதவற்றின் இயல்பான சித்திரங்கள் மாத்திரமே நிரந்தரிப்பதற்கான வாய்ப்புள்ளவை. அத்தனை சத்தியங்களும் கைவிடப்பட்டே தீரும்.
சாருவைப் படித்த பிற்பாடு எத்தைத் தின்றால் பித்தைத் தீர்க்கலாம் என்றானது தனிக்கதை. “என்னடா நீ பெரிய ரஜினியா?” என்று கோபத்தில் உதிர்க்கிற வாக்கியம்கூட, “என்னடா நீ பெரிய சாரு நிவேதிதாவா போடாங்க்…!” என்று திட்டும் அளவுக்கு அதிகரித்துப் போயிற்று.
கோவையிலிருந்து ஸ்ரீபதி பத்மநாபாவும் சுதேசமித்திரனும் சேர்ந்து ஆரண்யம் என்ற மெகா சைஸ் பத்திரிகையைத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தின் மாபெரிய சைஸ் பத்திரிகை அது. அட்டையிலிருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் மகா நேர்த்தியுடன் வெளியான அந்தப் பத்திரிகையின் சந்தாதாரர்களுள் அடியேனும் ஒருவன். அதில் சாரு ‘மதுமிதா சொன்ன பாம்பு கதைகளை’ எழுதினார். எனக்குள் கிறுக்குக்கூடியது. பிறிதொரு நாளில் சாருவின் அத்தனை புத்தகங்களும் வைத்திருக்கிறேன் என்ற போது அருணாச்சலம் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நேநோ முதல் பதிப்பு இருக்குதா ஜீ?” என்றார். நான் உடனே பதிலுக்கு, “அதன் தலைகீழ் அட்டையின் பின்புறம் ச்செகப்பு சட்டைபோட்டுக்கிட்டு சாருவோட இளமையான படம் ஒண்ணு இருக்கும்ல,” என்றேன். “ஏன் ஜீ இப்பவும் சாரு இளமைதானே,” என்றார் என்னைவிட அதிகப்பித்து அருணா.
சாருவின் படைப்புகள் பற்றிப் பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் முரண்பாடுகள். சாருவைப் பிடித்தாயிற்று. ஆயிற்றா? முதல் பிரச்சினை இளையராஜாவா சாருவா என்று வந்தது. எனக்கு உண்மையிலேயே ராஜா நீச்சலறியாதவனின் கடலாழம் போல். திரும்புவதற்கான வாய்ப்பே இல்லாமல் பார்த்துக்கொண்ட பிறகான ஜலமாடல் இளையராஜா மீதான என் பித்து. ஆனால் அடிக்கடி சாரு எதையாவது ராஜா பற்றி சொல்லி வைப்பதும் என்னளவில் என்னைச் சார்ந்த சொற்பசிலர், “என்ன பார்த்தியா, உன் ஆளு உன் ஆளைப் போட்டுத் தாக்கியிருக்காப்ல,” என்று கருத்துக் கேட்பதும் நான் வெறுப்பாகி வேதனையாகி விரக்தியாகி, “அதான் நீங்களே சொல்றீங்கள்ல, என் ஆளு என் ஆளுன்னு! ரெண்டுமே என் ரெண்டு கண்ணுய்யா; இதுல எதை நா விட்டுத் தர்ரது?” என்று சிவாஜி போலவே நடிக்கும் சண்முகசுந்தரம் போல பெர்ஃபார்ம் பண்ணுவேன்.
நிசமாகச் சொல்லப் போனால் எதன் மீதும் ஒரு அளவுக்கு மேல் பற்றற்று இருப்பதற்கான உந்துதல் எனக்கு சாருவின் மேற்கண்ட வெளிப்பாட்டின் விளைவாகவே வந்தது. நீங்க முடியாத ஒரு மச்சத்தின் மறுநிறம் போன்றது நமக்குள் நேர்கிற சாருவின் அனுபவம். திரும்புவதாவது திருப்புவதாவது. ஒரு சொல்லைக்கூடத் திருப்பித் தரமுடியாத கடன் சாருவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டிருக்கும் பெருஞ்செல்வம் என்பேன்.
இளையராஜாவின் இசை என்னளவில் என்னைக் காப்பாற்றிய அருமருந்து. என்னை ஆற்றுப்படுத்திய மகா மருத்துவனாகவே இளையராஜாவை மதிக்கிறேன். மேலும் இளையராஜாவின் இசை மீதான என் பற்றுதல் என்பது ஒரு முடிவிலாப் பேரன்பின் தொடக்கம். இவை ஒரு புறம் இருக்க சாரு இளையராஜாவின் இசை பற்றி எழுதுகிற எதையுமே நான் அவருடைய விமர்சனம் என்பதைத் தாண்டி என் மனதினுள் புகுத்திக் கொள்வது இல்லை. ஏன் என்றால் சாரு என்பவர் கருத்துப் பிடிவாதியாக இருந்தால்தான் நான் கவலைப் படவேண்டும். ஒரு பக்கம் இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்வைகள், ஆரம்ப காலம் முதற்கொண்டு அவருடைய தனித்துவமான பாடல்கள், மேலும் திரை இசை சாராத அவருடைய இசைப்பணி குறித்தெல்லாம் சாரு சிலாகிப்பதை நான் அறிவேன். இளையராஜாவின் இசை பற்றிய சாருவின் ஏற்ற இறக்க சார்புகள் எவை மீதுமான நிரந்தரப் பிடிமானமோ பெரும் விவாதமோ அவருடைய விருப்பமில்லை. சாரு சொல்லிவிட்டார் என்பதற்காக இளையராஜா பற்றிய என் மதிப்பீடுகளை நான் மாற்றிக்கொள்வேனா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே. ஆனால் சாரு நிவேதிதா என்கிற என் மனம் கவர்ந்த எழுத்துக்காரன் இளையராஜா குறித்துத் தன் கருத்துகளை முன்வைப்பதை என்னால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முரண்படுகிறேனே தவிர வெறுப்பை உமிழ்வதில்லை. எந்த இருவரும் முரண்படுவதற்கான முழு உரிமையின் பேர்தானே வாழ்வென்பது. என் சாரு என் ராஜா என்பதை அறியாமல் சாருவா ராஜாவா என்று என்னிடம் கேள்வி கேட்காத எல்லாரையும் விரும்புகிறேன். மற்ற எல்லாக் கேள்விகளையும் விரும்பினாற் போலவே.
என் வாழ்வில் என்னால் மறக்கவே முடியாத மூன்று புத்தகங்கள்: ஜெயமோகனின் அறம் மற்றும் சாருவின் தேகம் மற்றும் கோணங்கியின் பாழி. பாழியை மறக்க முடியாததற்கான காரணம் நெருக்கமான நண்பனொருவனின் மரணத்தின் போது அந்தப் புத்தகத்தை வாசித்தபடி அந்த இழப்பைக் கடந்தேன்.
ஒருமுறை மதுரை புத்தகத் திருவிழா ஆரம்ப தினம் அது. மனுஷ்ய புத்திரன் அன்றைக்குக் காலையில் மதுரை வந்து சேர்ந்து ஹோட்டலில் தங்கி இருந்தார். அவரைப் பார்க்கச் சென்றுவிட்டு அப்படியே புத்தக விழாவில் நுழைவதாகத் திட்டம். அம்மாவிடம் BYE சொல்லிவிட்டுக் கிளம்பினேன். என் அபார்ட்மெண்டில் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டேன். மின்வெட்டுகாலத்தின் தொடக்கம் என்பதால் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாக தெருப்பொறுக்கி ஒருவனின் தன்னிஷ்ட வருகைகளைப் போல மின்சாரத்தின் பிரசன்னம் இருந்தது. அப்படியான காலத்தில் மின்வெட்டின் போது லிஃப்டுக்குள் நான். வழக்கமாக யாராவது லிஃப்டில் மாட்டினால் அலாரத்தை அடிப்பார்கள். அதைக் கேட்டுவிட்டு சம்மந்தப்பட்ட லிஃப்டுக்கான ஜெனரேட்டரை ஆன் செய்து அவரை வெளியேற்றிவிட்டு மறுபடி ஜெனரேட்டர் அணைக்கப் படும். இது அப்போதைய நிலைமை. இதில் என் ஜாதகப் பலன் என்னவாயிற்று என்றால் அலாரம் அடிக்கவில்லை. என் புத்திக்கு செல்ஃபோன் இருப்பதே மறந்து போயிற்று. அதை எடுத்திருந்தால் ஒரு பிரச்சினையுமின்றி யாரையாவது அழைத்திருக்கலாம். இருள். கசகசப்பு. காற்றில்லாத் தனிமை. பயம். பள்ளம். நடுவாந்திர அந்தரம். பல்கிப் பெருகி மிருகமாய் ஆனேன். நேரம் ஆக ஆக சட்டை பனியனை எல்லாம் கழற்றினேன். பெருவெள்ளமொன்றை அடைத்துக்கொண்டிருப்பவனைப் போலாகி இருந்தேன். யாராவது எப்போதாவது வந்துகொள்ளட்டும் என்று சற்று நேரம் லிஃப்டின் தரையில் சரிந்து அமர்ந்திருந்தேன். விடாமல் கால்களால் லிஃப்ட் கதவை உதைத்துக்கொண்டே இருந்தேன். எங்கேயோ யாரோ மாட்டிகிட்டாங்க போல என்று ஒருவன் இன்னொருவனிடம் பேசியதைக் கேட்டு, இருவரின் பரம்பரையையும் சபித்தேன். கதவை ஓங்கி ஓங்கித்தட்டி, சப்தமாய்க் கத்தி ஒருவழியாக முதலாவது நபருக்கு நான் மாட்டியிருக்கிற அதே லிஃப்ட் தெரிந்து அதற்குண்டான சக்தியை ஊட்டி எப்படியோ வெளியேறினேன்.
அன்றைய தினம் ஒன்றும் தெரியவில்லை. அதற்கடுத்த நாட்களில் சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு என்னை அறியாத பதற்றம் என் உடலில் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். அப்போதுதான் ஆசான் எழுதிய அறம் நூலைப் படித்தேன். அவ்வப்போது அவரது எழுத்துகளையும் வாசிப்பவன்தான்; ஏழாம் உலகம் ரொம்பப் பிடித்த நாவல்; அதைப் பிற்காலத்தில் பாலா என்கிற இயக்குனர் தன்னிஷ்டத்துக்கு ஃபிலிமால் எழுதியதைப் படித்த போது கண்ணீர் உகுத்தவன் நான். ஜெயமோகனின் எழுத்தை அப்படியே படமாய் எடுக்க பாலாவால் முடியவில்லை, முடியாது. அன்றைக்கு வாசித்த அறம் என்னை உலுக்கிற்று. அந்தத் தொகுப்பின் அத்தனை கதைகளையும் படித்து முடித்து வேணமட்டும் கள்ளருந்திய யானை போலாகி மறுபடி மதுரையை மீட்ட சுந்தரனாய் மாறினேன். ஒரு தவிப்பான பதற்றமான பொழுதின் வதங்கலிலிருந்து எனை மீட்டெடுப்பதற்கான மந்திரத்தை அறம் கதையின் ஏதோ ஒரு சொல்லாக்கி வைத்திருந்ததாகவே நம்புகிறேன்.
சாருவின் எழுத்துக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தேகம். ஒரு லௌகீக சண்டையின் இரண்டாவது தளத்தில் உச்சஸ்தாயியில் விஸ்வரூபம் எடுக்க முற்பட்ட போது எனக்கு ‘வாய்ஸ் லாக்’ (voice lock) ஏற்பட்டது. தொடர்ச்சியாகக் கத்துவதும் சிகரட்டும் சேர்ந்து என் குரல் எனக்கு இல்லாமல் போயிற்று. ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிற்கும் சென்னைக்குச் செல்வது; மூன்று நாலு பெட்டிகளை பார்ஸலில் எனக்கே அனுப்பிக்கொண்டு திரும்புவது என்று ராஜவாசகவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த காலம் அது. தேகம் நாவலை வாங்கிப் பல நாட்கள் படிக்காமல் வைத்திருந்தேன். சாருவின் கட்டுரைத் தொகுதிகளைக் குறிப்பாக அவரது கோணல் பக்கங்களின் உள்ளே மறைந்திருக்கிற வரிசை தப்பிய உபநுட்பத் தரவுகளின் மீது பெருங்கிறக்கம் ஏற்பட்டிருந்த காலம் அது. எதையுமே சாருவின் கண்களால் பார்க்க எத்தனித்தது அப்போதுதான். அனேகமாக ஒரு நாற்பது பக்க நோட்டில் நாலு நீண்ட பத்திகளாகக் காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். அதை வாசித்த நித்தி, “நீ முழுசா சந்திரமுகியா மாறிட்டே,” என்றாள். என் கவலை சாருவின் வாசனைகூட என் எழுத்தில் தெரியவே கூடாது என்பது. பெர்ஸனலை எழுதும்போதே பிடிபடுவது எழுதுவதை நோக்கி அல்லாமல் எதிர்ப்புறம் நோக்கி என்னைத் தளர்த்தி அனுப்பிற்று.
உண்மையில் ‘வாய்ஸ் லாக்’ ஆன போது மரணத்தின் ஒரு பகுதியாகவே அதனை உணர்ந்தேன். நான்பேசுவது எனக்கே அன்னியமானது. உறவும் சுற்றமும் அட்வைஸ்களை மழையாக்கினர். சுயபரிதாபத்தின் உச்சத்தில் திரும்ப வருமா என் பழைய குரல் என்பது தெரியாமல் தவித்தேன். அன்றைய பொழுதில் முன்பைப் போல் எந்த மாற்றமும் கொள்ளாமல் இசையைக்கூட ரசிக்க முடியாமற் போன எனக்கு மாபெரும் ஆறுதலாய் இருந்தது சாருவின் தேகம் நாவல்தான். உண்மையில் சாருவைவிட்டு விலகுவதும் இல்லை நெருங்குவதும் இல்லை என்ற என் முந்தைய அணுக்கத்தை முழுவதுமாக அற்றுப் போகச் செய்திருந்தது தேகம். அந்த நாவலின் ஒரு சொல்லைக்கூட தங்கள் வாழ்க்கைகளில் விரும்புவதைப் பற்றி கற்பனைகூட செய்யாத பலருடைய வாழ்விலும் அத்தனை சொற்களையும் விரும்பச் செய்கிற குறளிகாரியம் சாருவின் தேகம்.
தேகம் நாவலின் ஏழாவது அத்தியாயத்தில் இரண்டே இரண்டு வரிகள் வரும். அதன் பின் சாருவிற்கு பதிப்பாளன் கிருஷ்ணா ஒரு கடிதம் எழுதி இருப்பார். அதில் அந்தக் கதையில் இடம்பெறுகிற தேகவதைகள் சாதாரண மனிதர்களிடையே நடப்பது போலிருப்பதை ஆட்சேபித்து மாற்றம் செய்யலாமா எனக் கேட்பார். அதற்கு பதிலாக ஒரு பத்தி எழுதி இருப்பார் சாரு.
“நீ சொல்வது போல் மாற்றி வாசித்துக் கொள்ளும் உரிமையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன். மனிதவதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.”
அந்தப் பத்தியின் முடிவு இப்படி இருக்கும்:
“அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது என்று நினைக்கிறாய்?
பழி வாங்கும் உணர்வுதான்.
சாரு”
என்னால் எளிதாக இதற்கு மேல் இந்த நாவலைப் படித்துக் கடந்து செல்ல முடியவே இல்லை. என் சூழலும் அதனுள்ளே இருந்த நானும் மறந்து போனோம். என்னை மெல்ல ஒரு கதையின் வாக்கியங்களைக் கொண்டே அழித்தவாறு நிசமான என்னை வரைந்தெடுக்க விழைந்தேன். மேற்சொன்ன இடத்தில் அந்தக் கதைசொல்லியாக சாருவை உணராமல் நான் என்னையே உணர்ந்தேன். அதன் பின்னதான தேகம் நாவலை என் விரல்களைக் கொண்டு சாரு எழுதிச் சென்றதாகவே என் அனுபவம் இருந்தது.
The Blind Belief என்பார்கள். அப்படியான ஓரிடத்துக்கு ஒரு வாசகன் தன் வாழ்காலத்தில் இரண்டாவது எழுத்தாளனை அமர்த்தவே மாட்டான். என் வாழ்வில் சுஜாதா என்ற ஒருவருக்கு அப்பால் இன்னொருவர் வழியற்ற வழியில் நுழைவதென்பது இயலாத காரியம். ஆனால் அதுதான் நடந்தது. சாரு என்கிற மனங்கொத்தியின் பிம்பம் எனக்குள் மாவுருவாய்த் தோன்றும் போது நானடைந்த  அதிர்வென்பது உச்சபட்சமாயிருந்தது.
சுஜாதாவை நான் சந்தித்த போது என்று ஆரம்பித்து எதையும் எழுதப் போவதில்லை. நான் சந்தித்ததில்லை. கூட்டத்தில் ஒருவனாகப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். அப்படித்தான். அதுதான் நல்லது. எனக்கு ப்ரியமான என்ற இரண்டு சொற்களின் காரணத்தினாலேயே நான் சாருவை சந்திக்கக் கூடாதென்று திட்டமாய் இருந்தேன். வேண்டாம். எதையாவது செய்து நானோ அவரோ எனக்குப் பிடிக்காமல் போய்விடுவதற்கான சன்னலைத் திறந்துவிடுவோமோ என்ற பயம். சாருவின் புத்தகங்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கக் கூடிய நாட்டில் சாருவின் எழுத்துகள் இணையவெளியெங்கும் கிடைத்துக்கொண்டே இருக்கிற ஒரு வாழ்வில் அவரை ஸ்தூலமாய் அருகில் சென்று நெருங்கித்தான் ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மேலும் எனக்கே உண்டான தயக்கமும் நிஜப்ரியத்திலிருந்து பத்தடி தூரத்தில் இருந்துவிடுவதன் சிலாக்கியத்தை நடைமுறைப் படுத்திவிடுவதன் சவுகரியமும் என்னை அப்படியானவனாகவே ஆக்கின.
மதுரையில் ஒரு புத்தகத் திருவிழாவில் அப்போதுதான் எழுத ஆரம்பித்திருந்த நேரம். மனுஷ்ய புத்திரனுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது புகையிலிருந்து எழுந்து வந்த தாமத தூதனைப் போல அங்கே வந்து சேர்ந்தார் சாரு. அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் மனுஷ்ய புத்திரன். சாரு தன் மெல்லிய குரலால் அப்பிடியா என்றார். அதுதான் என் வாழ்க்கையில் அவரளித்த முதல் சொல். சதா சர்வ காலமும் அப்படித்தான் சாரு என்று அப்போது சொல்லவில்லை. அதனாலென்ன இங்கே சொல்லியாயிற்றல்லவா? அன்றைய தினம் ஒரு பெண்மணி தன்னோடு வந்திருந்த இன்னொரு பெண்மணியிடம், “ஸார் பெரிய ரைட்டர் தெரியும்ல,” என்றவாறே சாருவைக் கைகாட்டி அறிமுகப் படுத்தினார். அப்பிடியா பேரென்ன என்றார் சொல்லப்பட்ட பெண்மணி. “ஸார்தான் ஜெயமோகன். உனக்குத் தெரியாதா?” என்றவாறே உயிர்மை ஸ்டாலைக் கடந்தார். அவர்கள் நீங்கியதும் சாரு மனுஷ்ய புத்திரனிடம், “மனுஷ் இது தானா நடந்ததுதானே? யாரும் ஏற்பாடு செய்யலைதானே?” என்றார். நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்ததில் மொத்த புத்தகத் திருவிழாவுமே ஒரு நிமிடம் நின்று எங்களை வெறித்தது.
சாரு தன்னைக் கலைத்துக் கொள்ளத் தயங்காத முதன்மையான எழுத்துக்காரர். பின்வாங்குவதும் பிடிவாதமும் தான் சொல்லியவற்றில் உறுதிபட நின்றுகொண்டே இருப்பதும் தனக்கு எதிரான பேய்களைத்தானே உற்பத்தி செய்வதைப் போன்றது. சாரு ஒருபோதும் அப்படிச் செய்வதே இல்லை. அவ்வப்போது குறுகியும் பெருகியும் வறண்டும் பொங்கியும் நிதானித்தும் அலைந்தும் பிரவகிப்பதன் பெயர்தான் நதி என்றாக முடியும். ஒரே சீராய் எப்போதும் பாய்கிறதென்றால் அது வெறும் பம்ப் ஸெட்தான். சாரு நிவேதிதா அடித்துத் திருத்திக் கொள்ளத் தயங்காத இயல்பின் மொழியாளர். இந்தக் குணாம்சம் எனக்குத் தெரிந்து சாருவுக்கு முன்பாக இத்தனை சதவிகித அதிகம் வேறொரு எழுத்தாளரிடமும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்களது ஆவி என்னை மன்னிப்பதாக.
சாரு ஒரு முழுமையான ஆளுமை. தனக்கென்று தனியான வாழும் வழிப்பட்டியலைக் கொண்டிருப்பவர்கள்தான் முழுமையான ஆளுமை என்று அழைக்கப்பட முடியும். பிரபலமாவதோ ஒருதுறையில் உயர்ந்தோங்குவதோ ஒரு ஆளுமையின் பகுதி மட்டுமே. மேலும் அது அவர்களது ஆளுமையின் முக்கியமான பகுதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் அப்படியானவர்களை முழுமையான ஆளுமை என்று சொல்லிவிட முடியாது. சேணம் கட்டிய குதிரைகளில் ராஜகுதிரைகள் என்று தனியாக சிலாகிக்கலாம். அதைத் தாண்டி ஒன்றுமில்லை. உதாரணமாய்ச் சொல்வதானால் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஆளுமை. தலைசிறந்த கிரிக்கெட்டியர். ஆனால் பாராளுமன்றத்தில் நியமன எம்பியாக புஸ்தகத்தை விரித்துக் காண்பித்தும் வெள்ளெளுத்து எனப் பொய்கூறி எதையும் எழுதாமல் திரும்பி வருகிற மக்குப் பையனாகத்தான் பாராளுமன்றத்தில் சச்சின் நடந்துகொண்டார். இப்படியானவர்கள் நிறைந்து ததும்புகிற வாழ்தலில் முழுமையான எனும் சொல்லின் தீவிரம் அலாதியானதும்கூட. என்னைப் பொறுத்தவரை சகலகலா சன்னிதானங்கள் பலவும் அற்றுப் போகிற தராசில் முழுமையான பர்ஸனாலிடிகள் மிகவும்சொற்பமே கிட்டுகிறார்கள். நம் தேசத்தில் குஷ்வந்த் சிங், எம்.எஃப். ஹுஸேய்ன், ஓஷோ போன்ற முழுமையான பர்ஸனாலிடிகளின் பட்டியலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் சேர்ப்பேன். வாழ்கிற காலகட்டத்தைத் தன்னாலான அளவு மாற்றியமைக்க, சிதைக்க குறைந்த பட்சம் சலனிக்க வைக்க முயன்றுகொண்டே இருப்பவனைத்தான் அப்படியான முழுமையான பர்ஸனாலிடி என்று விளிக்க முடியும். மேலும் இப்படியானவர்களின் வாழ்க்கை வழியைக் கவனித்தால் இன்னொருவருடன் ஒப்பிட முடியாத வினோதங்களின் கூட்டுக்கலவையாக போலி செய்யமுடியாத நிரந்தரமான விலகிச்செல்லும் சாலையாக இப்படியானவர்கள் இருப்பதை கவனிக்கலாம்.
சாரு ஒரு முறை மதுரைக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிப் பலரும் இருந்தார்கள். அன்பு நண்பர் அருணாச்சலம் என்னை சாருவிற்கு இன்னொரு முறை அறிமுகப் படுத்தினார். அந்த மாலையில் சாருவோடு சிலமணி நேரங்கள் செலவிட முடிந்தது. இசை சார்பு அரசியல் கலாச்சார அறம் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனிதன் ஒருவனுக்கு புற உலகம் தந்து கொண்டிருக்கும் அழுத்தம் ஆகியவற்றைப் பற்றிய சாருவின் அணுகல்களைக் கண்ணறியாப் புள்ளிகளைக் கொண்டு இணைத்து ஒரு சித்திரமாக்கி அவரிடம் முன்வைத்தேன். அத்தனை பேர்கள் சூழ்ந்திருந்த போதும் எனது வினாக்கள் சிலவற்றுக்கு வெகு விரிவாகப் பதிலளித்தார். மற்ற சில வினாக்களுக்கு ஒற்றை வார்த்தைகள் தொடங்கித் தன் பாணியில் பதில் சொன்னவாறே நடுவில், “பழமாவது சாப்பிடுங்க ஆத்மார்த்தி. எதுவுமே எடுத்துக்கலைன்னா, நான் எதுவுமே தரலைன்னு எனக்கே தோணிடும்ல,” என்றார்.
யோசியுங்களேன். எதை எதையோ கேட்கிறேன். அவர் பதில்களைத் தந்துகொண்டபடி இருக்கிறார். இந்த கான்வர்ஸேஷனை அவரே எள்ளித் தள்ளிக் காலி பண்ணுகிறதுதான், “பழத்தையாச்சும் சாப்பிடு.இல்லைன்னா நா எதுமே தரலைன்னு ஆயிடும்ல,” என்பது. இதை வேறாரால் சொல்ல முடியும்! “ச்சாரூ….” என்று முறைத்ததும் சிரித்தார். அது ‘கண்டுபிடிச்சிட்டியா’ என்கிற வெள்ளந்தித்தனம் பொங்கும் சிரிப்பு. இந்த ஒரு வாக்கியத்தின் மேலார்ந்த பாசாங்குகளுக்கு அப்பால் தொனிக்கிற அபாயமான எதிர்மறையான பகடியை நான் உணர்ந்தபோது தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதவரைப் போல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார் சாரு. சாருவின் அடிப்படைக் குணமே ஒவ்வொரு மனதின் மேற்தோலை மாத்திரம் தானே கிழித்தும் தைத்தும் விளையாடியபடி செல்வதுதான். இதை வேறாரும் முயன்றுகூடப் பார்க்கமுடியாது.
குரு என்பது ஒரு சுமை. இந்தியாவில் அதிகம் சிதைவுக்கு உட்படுத்தப்படுகிற சொற்க்கூட்டுக்களில் குரு என்பதும் ஒன்று. இன்றைக்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் அதிகம் சிதைக்கப்பட்ட சொற்களில்தலையானது என்பேன். அந்தச் சொல் அத்தனை பரிதாபமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதிவிலக்கு நபர்களை உற்றுக் கவனித்தால் அப்படியானவர்கள் மனிதர்கள் சூழ இருப்பதையும் சதா அவர்களை நேசிக்கிறவர்களுக்கிடையே போட்டியும் போருமே நேர்வதையும் அப்படியான நபர்களின் வழங்கல் சதவீதத்திற்கு எந்தவித விகிதாச்சார நிர்ப்பந்தமும் இன்றி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதன் இயக்கம் நடைபெறுவதையும் அளவைகளாகக் கொண்டால் ஒரு ஆச்சரியம் ஏற்படத்தான் செய்கிறது. ‘டாம் இட்!’ இந்த ப்ராஸஸ் முழுக்க இதுவரைக்கும் நடிகர்களுக்கும் அவருக்கு நெருக்கமான நட்புத் தளம் என்கிற பெயரிலான மேல்மட்ட ரசிகர்களுக்கும் இடையில் மாத்திரம் காண வாய்த்தது. முதல்முறையாக இதனை எழுதுகிற ஒருவனை விரும்புகிறவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் மொழியின் அறமாகப் பழமையின் பிடிவாதம் முன்வைக்கப் படுகிற நமது நிலத்தில் சாருவுக்கும் அவரது அன்பர் குழாமுக்கும் இடையே இயங்குகிற அன்பின் குறுக்குவெட்டுத் தோற்றம் பண்படுதலின் பின்தொடர்தலின் இடைப்பாலமாக உள்ளுறைவதை உணரமுடிகிறது. சாருவுடனான இந்தச் சமீப வருடங்களில் எந்த விதமான பாசாங்குமின்றி ஒரு சாதாரண மனிதனால் எனக்குத் தர முடிகிற அதே ஒரே போலியற்ற comfort எனப்படுகிற அணுக்கத்தை உணரச்செய்தபடி இருக்கிறார்.
இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உண்மையில் நான் புகை பிடிப்பதை நிறுத்தி ஏழு மாதங்களாகிறது. நான் வெறுமனே புகைத்தவன். அதிகம் அருந்தியவன் அல்லன் என்பதால் மது எனக்குப் பெரிய வதை அல்ல. ஆனால் வெகு கம்பீரமாக மது அருந்துவதிலிருந்து வெளியேறிய சாருவின் மானசீக விரல்களைப் பற்றிக்கொண்டே என் குரல்வளையை நெறித்த புகையெனும் பாம்பிலிருந்து விடுபட்டேன். சாருவை நினைத்துக்கொள்வதால் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது. ஏதாவதொரு சாருவின் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு யானையின் முதுகிலமர்ந்தபடி நகரமொத்தத்தையும் அசைந்தாடிப் பார்க்கிற குழந்தையைப் போல் ஆகித் தப்பிவிட முடிந்தது. யாருமற்ற போழ்துகளில் லவ் யூ சாரு என்று ஏதோ ஒரு திசை பார்த்துக் கத்துவதைத் தவிர பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. என்றாலும் இங்கே ஒரு தடவை பதிவு செய்துகொள்ளலாம். லவ் யூ சாரு.
சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் ( 2015) நானும் கலந்து கொண்டேன். உலக அளவில் தான் ஏற்கனவே எழுதிய ஒரு பிரதியின் திருத்தங்களுடனான புதிய பிரதியை வெளியிடுவதை இப்படி ஒரு கொண்டாட்டமாக வேறெங்கேயும் எப்போதும் செய்திருக்கிறார்களா என்றெனக்குத் தெரியாது. என்னளவில் பழைய எக்ஸைலை நிராகரித்ததையும் புதிய எக்ஸைலை முன் வைத்ததையும் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி சாரு நிவேதிதா செய்தது அவரது கம்பீரம் என்பேன். மிட்டாய் கிடைக்கப் போகிற ஈர்ப்பில் கொடியேற்றத்தின் போது விடாமல் கைதட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் போல வளர்ந்த சமூகத்தின் அங்கத்தினர்களைக் கையாள முடியுமா? எக்ஸைல் எனக்குள் வார்த்தைப் பட்டாம்பூச்சியாகி சதா பறந்தபடி இருந்தது.
எனக்கே எனக்கு நிகழ்வதன் ஆச்சரியம் தாளவில்லை. “என்னடா இது, நமக்குப் பிடிச்சவம் பக்கத்துலயே போகமாட்டம்; இப்ப என்னடான்னா சாருவோட மாத்திரம் இவ்ளோ அருகாமையில போறமே,” என்று. அந்த இரவு நீரற்ற தீர்த்தமாடலின் கூடுகையில் சாம்நாதன், அராத்து, டேய் மனோ, ஜெகா ஜெகதீசன், ஸ்ரீராம் உட்படப் பல புண்யாத்மர்களிடம் நான்தான் ஆத்மார்த்தி என்று அறிமுகம் செய்துகொண்டேன். பிறிதொருசமயம் சாரு தன் ப்ளாகில் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் எனும் பட்டியலில் அராத்துவுக்கு அப்பால் என்ற முன் குறிப்புடன் கணேசகுமாரன் உள்பட நால்வரைக் குறிப்பிட்டதும் அவர்களில் நானும் ஒருவனாய் இடம்பெற்றதையும் இங்கே செருகிக் கொள்ளலாம். என் பெருமைக்குரிய பெருமிதம் அல்லவா அது? பிற்காலத்தில் எனது குலேபகாவலி நூலை வெளியிட்ட சாரு எனதொரு சிறுகதை ‘தென்னம்பாளையை’ வெகுவாக சிலாகித்தார். இடைக்கால முதல்வராகையில் முகம் சாதாரணமாக தோற்றமளித்தாலும் உள்ளே ஒவ்வொரு செல்லும் கூத்தாடும் அல்லவா? அப்படி நிசமாகவே கூத்தாடியது மனசு.
சாருவின் எழுத்துகள் ஆகப்புதியவை. அவற்றின் தரவுகளின் பின்னே இருக்கக் கூடிய சவால் தமிழ் மத்யமசமூகத்தின் hide and seek மனோபாவத்தைக் குறிவைத்து இயங்குவது. அதாவது இவனை யாராச்சும் பிடிச்சித்தாங்களேன் ப்ளீஸ் எனப் பெருங்கூட்டமே ஒருவனின் பின்னால் தொடர்ந்து அலைவது. பிடிபடுவது அன்னாரின் ஜாதகத்திலேயே கிடையாது என்பது அமைப்பின் வடிவம். சாரு சுட்டுகிற எதையும் உடனே சந்தேகித்து அதன் மெய்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்கிறவர்கள் பலரும் மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்து சாரு மதத்திற்கு மாறுவதும் ஒரு கட்டத்தில் சாருவைக் கண்திறக்காமல் காதலிப்பதும் அதே மனோபாவத்தின் மீவரும் பாதைதானே அன்றி வேறொன்றுமில்லை. அவரது சினிமா விமர்சனங்களை ஒழுங்காகப் புரிந்துகொண்டவர்கள் ஒன்று நல்ல சினிமாக்களை நோக்கி இன்னும் உறுதியாக விரைவார்கள். அல்லது நிச வாழ்க்கையில் இல்லாத அன்ஃப்ரெண்ட் மற்றும் ப்ளாக் பட்டன்களைத் தேடுவார்கள்.
சாருவின் கதாமாந்தர்கள் நாளை மறு தினங்களில் வரப்போகிறவர்கள். அவர்கள் உண்மையில் நேற்றும் இன்றும் இருந்தார்கள் என்கிற நிசத்தின் வேறோரு பரிணாமத்தை கிரகிக்க இயலாத ஒரு பார்வையைத்தான் தொடர்ந்து சாருவின் எழுத்துகளை அதிர்ச்சி எழுத்துகள் என்றே விமர்சித்தவர்கள் வைத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் காலம் அவர்களைத் திருப்பி அனுப்பிற்று. தற்போது அந்த அதிர்ச்சிகள் ம்யூசியத்தில் கரப்பான்களின் மீசைகளைக் கண்டு அஞ்சியபடி காலங்கழிக்கின்றன.
சாரு நிவேதிதா என்கிற மனிதன் எதை எழுதினாலும் அது எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். அந்தப் பட்டியலில் என்னைக் கேட்க வேண்டியதில்லை. என் பெயரை எழுதிக்கொள்ளுங்கள். இந்த இரண்டு வாக்கியங்களைவிட வேறெதையும் சொல்லிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
சாருவைப் பற்றி அனேகர் அனேக முறைகள் சொல்லித் தொலைத்ததுதான். மனிதரோடு எத்தனை வேண்டுமானாலும் முரண்படலாம். எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். தன் நிலையிலிருந்து மாற்றம் கொள்வதைப் பற்றிய எந்தவிதமான பதற்றமும் அல்லாத நிசமான ஞானி சாரு நிவேதிதா. அவரது எழுத்துக்களில் அவர் நான்கு உளவியல்களாக வகுபடுகிறார். இன்னும் எளிதாக சொல்வதானால் நாலு நிவேதிதா என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலாமவர் பயணி. அதாவது சதா சர்வ காலமும் தன் கைகளைக் கட்டியிருக்கிற நிலம், காலம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் கட்டுமானங்களிலிருந்து தப்பியோட முயற்சித்தபடி இருப்பது. சாருவின் அனேக பத்தி எழுத்துக்கள் இந்த உளவியலை முன்வைத்தபடி இயங்குபவை.
அடுத்தவர் கலகக்காரன். தான் சார்கிற காலத்தினின்றும் தப்பியோட முற்பட்டு முடியாமற் போகிற பயணி தன் நிலத்திலேயே கலகங்களைத் தொடர்ந்து முன்வைப்பவனாகிறான். சாரு அவ்வப்போது முன்வைக்கிற அரசியல், அதிகாரம், பணம், நிறுவனம் ஆகியவற்றுக்கெல்லாம் எதிரான குரல்கள் இத்தகைய திரி கொளுத்துகிற கணங்களே.
அதற்கும் அடுத்தவர் காதலன். இசை உள்படப் பல கலைகளிலும் முகிழ்ந்து சதா மென்மையிலும் மென்மையான ஆழமொன்றில் சஞ்சாரித்துக்கொண்டே இருப்பதும் சுயத்தின் ரசித்தல் எனும் குணாம்சத்தைத் தன்னை அகழ்ந்து அதிகரித்துக் கொள்வதையே போதையாக்கிக் கொள்கிற அபாயன் சாரு.
நாலாமவர் எதிராளி. தனது முந்தைய அத்தனையையும் எந்தவிதமான சூட்சும சூத்திரங்களுக்கும் கட்டுப்படாமல் கலைப்பதன் மூலமாக, மறுதலிப்பதன் மூலமாக, கைவிடுவதன் மூலமாக, திரும்பப் பெறுவதன் மூலமாக, இல்லாமற் செய்வதன் மூலமாக, தன்னைப் பற்றிய சித்திரத்தின் அனுமானங்கள் அத்தனையையும் நொறுக்கியபடி தானே அதனைப் பூர்த்தி செய்துகொண்டு உட்புறம் பூட்டிக் கொள்கிற லாவகம். The Most Dangerous Planning Methodology is Un-Plan the Plans. சாத்தியமுள்ள அத்தனை முடிச்சுக்களையும் மானசீகத்தில் சதா அவிழ்த்து விளையாடுகிற தந்திரவாதி சாரு நிவேதிதா.
ஞானம் என்பதன் வசீகரமே அதனைத் தந்துகொண்டே பெற்றுக் கொள்ளவும் முடியும். ஞானிகள் தருவதைப் பற்றிக் கித்தாய்ப்புக் கொள்ளாமற் போவதற்கு இதுவே முக்கிய காரணம். சாரு நிவேதிதா நிசத்தின் ஞானி. சாரு நிவேதிதா என்பது ஒரு மனிதனின் பெயர் மாத்திரமல்ல. அது ஒரு காலகட்டத்தில் ஒரு மொழியில் ஒருமுறை மாத்திரம் நிகழவாய்ப்புள்ள ஒரு முறைமை. அதன் முக்கிய பாகம் அவராகிறார். அந்த முறைமையின் மற்ற பாகங்கள் நான் நீங்கள் நாம் எல்லாருமே.
வாழ்தல் இனிது
அன்புடன்
ஆத்மார்த்தி

வதைகளின் கலைஞன் : வளனரசு


2.5.2017
(அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம்.  அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும்.  அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது.  என் நண்பர் வளனரசு எழுதியது.  வளனுக்கு என் அன்பு…)
என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் ‘கனவு’ என்ற பதிப்பகத்தை நடத்தி பல புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்து வந்தவர். (அவருடைய ‘கலகத்தின் வார்த்தைகள்’ என்ற மால்கம் எக்ஸ்-இன் இரண்டு நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது). அவருடைய அறையில் எங்கு நோக்கினும் புத்தகங்கள். அப்போது ஏதேனும் எனக்கு வாசிக்கக் கிடைக்குமா எனக் கேட்டபோது, சாரு நிவேதிதாவின் சில புத்தகங்களை காட்டி, “இந்த ஆளுடைய புத்தகங்களைத் தவிர வேற எது வேண்டுமானாலும் எடுத்துப் படிச்சுக்கோ,” என்றார். ஆச்சரியமாக ஏன் என்று கேட்டபோது, ”உன் வாழ்க்கைல அப்றம் நீயும் தனியா நின்னுகிட்டு பைத்தியம் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்கனும்,” என்றார். இப்படித்தான் சாரு நிவேதிதா என்ற பெயர் எனக்கு அறிமுகமானது.
அதன்பின் நண்பன் ஒருவன் மூலமாக ஸீரோ டிகிரி அறிமுகமானது. படித்தால் ஒன்றும் புரியவில்லை; ஆனால் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு. அடுத்த கொஞ்ச நாளில் தேகம். தேகம் நாவல் தந்த போதையை என்னவென்று சொல்ல! அந்த இரு புத்தகங்களின் பாதிப்பால் சாருவின் மற்ற புத்தகங்களை பித்தனாகப் படிக்க ஆரம்பித்தேன். சாருவின் புத்தகங்களைப் படிப்பது ஒரு புதிர்விளையாட்டை விளையாடுவது போன்ற சாகசங்கள் நிறைந்தது. சாருவைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாளில் உள்ளூர் இலக்கியம் தொடங்கி உலக இலக்கியம் வரை அறிமுகமானது. அதே போல நல்ல இசை, உலக சினிமா, சமையல் என்று சகலமும் என்னைப் பற்றிக்கொண்டன. இப்போதுதான் பிரச்சனைகளும் ஆரம்பமானது.  ஒரு Transgressive எழுத்தாளராக சாருவின் போராட்டத்தை நாம் அறிவோம். அவர் எதிர்கொள்ளும் அதே பிரச்சனைகளை அவருடைய வாசகர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் அவற்றைப் பிரச்சனைகளாக பார்க்காமல், எதார்த்தமாகப் பார்ப்பதைதான் சாருவின் எழுத்து போதிக்கிறது. (போதனை என்பது சாருவுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை!) சாருவின் வாசகனாக நான் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறேன். உதாரணமாக லா.ச.ரா.வின் நூற்றாண்டை லால்குடியில் கொண்டாடத் திட்டமிட்ட போது சாருவின் பெயரை சிறப்புரைக்காகப் பரிந்துரைத்தேன்; அப்போது பலர் என்னிடம், “அந்த ஆள எப்படி சார் புடிச்சிங்க? உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா?” என்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படிக் கேட்ட யாரும் சாருவைப் படித்தவர்கள் அல்ல; சாருவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள். யாரவது தங்கள் தகப்பனை வேறு யாராவது வசைபாடினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? சாரு என்னுடைய ஞானத்தகப்பன் (அப்பா என்றுதான் கூப்பிடுவேன்) என்றாலும் அவரை வசை பாடும்போது நாம் எதிர்த்துக் கேட்டால் அவ்வளவுதான்! போஜனவாயை கொடுத்து ஆசனவாயைப் புண்ணாக்கிக்கொள்ளும் கதைதான். (அனுபவம் பேசுகிறது!) சாருவின் எழுத்துக்களைத் தனதாக்கிக் கொள்ளும் மனிதன் சராசரி மனிதனாக இருக்க முடியாது. சராசரித்தனம் என்று நான் கூறவருவது யாதெனில், கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட இடத்தில் எச்சில் உமிழ்வது, நமக்கு அடுத்திருக்கும் மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்காமல் இருப்பது, இன்ன பிற. இவற்றிலிருந்து ஒதுங்கி வாழும் போது நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். இந்த சராசரித்தனத்தை ஏற்றுக்கொள்ளாததனால்தான் சாருவும், சாருவின் ‘தீவிர’ வாசகர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
தனிமை என் வாழ்வின் ஓர் அங்கம். தனிமையைப் போராடி வெல்ல முடியாது. அதை நண்பனாக்கிக் கொண்டால் வாழ்வில் எல்லாமும் நமக்குச் சொந்தமாகிவிடும். தனிமையில்தான் நம்மை நாம் அடையாளம் காண முடியும். தனிமையை நண்பனாக்கும் அந்தச் செயல்முறையைத்தான் சாருவின் எழுத்துக்களில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். இசையின் வழியாக, நல்ல சினிமாவின் வழியாக நான் தனிமையைக் கடந்து செல்கிறேன். சாருவின் சினிமா ரசனையை கவனிக்கும்போது எனக்கு ப்ளேட்டோ கூறிய குகை மனிதர்கள் என்ற உவமைக்கதை (Analogy of cave) ஞாபகத்துக்கு வந்தபடியே இருக்கும். குகையில் சில மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது முகம் சுவற்றை நோக்கிய வண்ணமும் அவர்கள் கரங்கள் பின்புறம் கட்டப்பட்டதுமாக இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் ஏற்படுத்திய நிழல்கள் சுவற்றில் விழுந்து வந்தன.  ஆக அந்தக் கட்டுண்ட மனிதர்கள் சுவரில் பார்த்தது வெறும் நிழல்கள்; இந்த மனிதர்கள் வேறெதையும் கண்டவர்கள் இல்லை என்பதனால் அந்த நிழலை மட்டும் உண்மை என்று நம்பியிருந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவன் எப்படியோ தன்னை விடுவித்துக்கொண்டு குகையை விட்டு வெளியுலகைப் பார்த்துவிட்டு வந்து இவ்வளவு நாள் தம்மினத்தவர் பார்த்தது நிழல் பிம்பங்கள், அவை உண்மையில்லை என்று கூறுவான் என்றால் அதை அவர்கள் நம்பவா போகிறார்கள்? இதுதான் சாருவுக்கும் இந்திய (குறிப்பாக தமிழ்) சினிமாவுக்கும் இடையேயான உறவு.
எனக்கு இலக்கியம் அறிமுகமான பொழுதில் என் நண்பர்கள் திட்டமிட்டு சாருவின் எழுத்துக்களை எனக்குத் தர மறுத்தார்கள். இதுதான் அசல் இலக்கியம் என்று ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, கோணங்கி, ஜெயமோகன் (கொற்றவை) இவர்களின் படைப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். இலக்கிய வாசிப்பிற்குப் புதியவன் என்பதால் ஆர்வமாக உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன். ஆனால் அரைமணி நேரத்தில் அத்தனை ஆற்றலும் வற்றிப் போகும். அதற்கு நேர் எதிர் சாருவின் எழுத்துக்கள். யார் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்ற இலக்கிய பேதங்கள் தெரியாமல் படித்ததால் விழுங்குவதற்கரிய கடப்பாரைகளை விழுங்கியிருக்கிறேன் என்பதைப் பின்னரே புரிந்துகொண்டேன். சாரு எந்தக் குழுவையும் சாராத கலகத்தின் எழுத்தாளன் என்பதையும் அறிந்துகொண்டேன்.
சாருவிடம் நெருக்கமாக இருந்து பார்க்கும்போது ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும்: அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். திடீரென ஒட்டு மொத்த மாநிலத்தவர்க்கும் எதிராக நின்று சமர் செய்து கொண்டிருப்பார். அடுத்த கணமே சாதரண ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்தைத் தூக்கிப்பிடித்து அடித்தட்டு மக்களின் மனோபாவத்தைப் பிரதிபலிப்பார். (இதனாலேயே சாருவை நெருங்கியிருப்பது மிகப் பெரிய சவால்). இந்த குணங்களை அவர் தனக்குத் தானே கட்டமைத்துக் கொண்டவரல்ல; இயல்பிலேயே சாருவிடம் இந்தத் தன்மை இருக்கிறது என்பது மற்றுமொரு ஆச்சரியம்.
ஆத்மன், ப்ரம்மன், அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமசி, ப்ரதிபாஷிகா, வ்யவஹாரிகா, பரமார்த்திகா, ஜீவா, ஜடா என்று தன்னைத்தானே ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிக்கொள்கின்றன இந்தியத் தத்துவங்கள். இவற்றால் ஒரு சராசரி இளைஞனைக் கவர முடியுமா? இதிகாசங்களையும் புரணாங்களையும் வேதங்களையும் இன்னும் எத்தனை நாட்களுக்கு மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருப்பது? இவை இப்படி இருக்க, நமது நிலப்பரப்பைத் தாண்டி மேற்குலகில் என்ன நடக்கிறது? இந்தியத் தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுழன்று கொண்டிருக்க, மேற்கத்திய தத்துவங்கள் காலந்தோறும் மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால், இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தியத் தத்துவங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக நான் சொல்வதால் மேற்கத்திய தத்துவங்களைத் தூக்கிப்பிடிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. இவை இரண்டும் வாழ்வைச் செம்மைப்படுத்த இன்றியமையாதவையாக இருக்கின்றன. இவற்றை எப்படி புரிந்துகொள்வது?
எனது இரண்டு வருட தத்துவவியல் படிப்பிற்கு முன்னதாகவே சாருவின் எழுத்துக்களின் வழியாக இவை இரண்டும் எனக்கு அறிமுகமாகிவிட்டன. அதனால்தான் சொன்னேன், சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால் இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சாருவின் எழுத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசம், ஸ்ட்ரக்சுரலிசம், Deconstruction போன்ற பதங்களையும் கிர்க்கேகார்ட், ஜான் பால் சார்த்தர், ஜாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற பெயர்களையும் அடிக்கடி காண முடியும். சாதாரண வாசிப்பில் இயல்பாகக் கடத்தப்படும் இச்சொற்கள் உண்மையில் பல வகையான அறிவுத் தேடல்களுக்கான ஊற்றுக் கண்கள். இந்தத் தத்துவங்களையும் தத்துவவாதிகளையும் ஓரளவிற்கு அறிந்தவன் என்ற முறையில் தைரியமாகச் சொல்வேன், மேற்கண்ட தத்துவங்களும் தத்துவவாதிகளும் உங்கள் வாழ்வை மாற்றிவிடுவார்கள். இந்தப் பின்னணியில் படிக்கப்பட வேண்டிய ஒருவரே சாரு.
இந்தியாவில் மார்க்சியத்திற்குப் பிறகான எந்த மேலைத் தத்துவங்களும் அறிமுகமானதாக தெரியவில்லை. மார்க்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்சியத்தில் சில மாற்றங்கள் செய்து அவை யாவும் ஒரு தனி மரபாக வளர்த்தெடுக்கப்பட்டது. சாருவை அந்த மரபோடுதான் நாம் பொருத்த முடியும். இயல்பாகவே சாருவின் வாழ்விலும் எழுத்திலும் இந்த தத்துவங்களின் தாக்கத்தைப் பார்க்க முடியும். உதாரணமாக, வாழ்வில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்ற போராட்டத்தை (Struggle of Choice) மையமாகக் கொண்டது எக்ஸிஸ்டென்ஷியலிசம். கொள்கை, கோட்பாடு என்று இயங்காத சாரு அந்தக் கணத்தை அற்புதமாக வாழ்ந்து அடுத்தடுத்த கணத்திற்குத் தாவிச் செல்கிறார். இதனால்தான் சாருவின் எழுத்திலும் அந்த குணத்தைக் காண முடிகிறது என நினைக்கிறேன். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இந்தத் தத்துவம் எந்த அளவிற்குச் சுதந்திரமாக இருக்கிறதோ அதேயளவு பொறுப்புணர்ச்சியும் உடையது. நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. எனவேதான் இது ஒரு அகப்போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
சாருவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவருடன் நட்பு பாராட்டவோ, அவரை நெருங்கவோ தேவையில்லை. அவருடைய எழுத்துக்களை வாசித்தாலே சாருவை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கு சம்பிரதாயமாக இருக்கும் எந்த பிம்பமும் சாருவுக்குக் கிடையாது. தன்னுடைய பின்நவீனத்துவ எழுத்துக்களால் அந்த சம்பிரதாயங்களை எல்லாம் அடித்து நொறுக்கியவர் சாரு. முதல்முறை சாருவை சந்திக்கச் சென்றிருந்தபோது, பெரிய எதிர்பார்ப்புகள் மனதில் இருந்தன. எழுத்தாளர் என்பதால் சட்டென கோபப்பட்டுவிடுவார்; அதனால் நல்லவிதமாக சில வார்த்தைகள் மட்டும் பேசி அவரை நிறைய பேச வைத்து குறிப்புகள் எடுக்கவேண்டுமென நினைத்திருந்தேன். பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. எளிமையாக ஒரு வேட்டி உடுத்தி வாசலில் எனக்காகக் காத்திருந்தார். உள்ளே போனதும் மனப்பாடமாக பேச நினைத்திருந்ததைக் கொட்ட ஆரம்பித்தேன். என் பதற்றத்தை தனித்து, “டீ குடிக்கிறீங்களா?” என்றார். இது அடுத்த ஆச்சரியம். சுவையான ஆப்பிள் டீ குடித்த பிறகு நடந்த உரையாடலில் என்னை அதிகமாகப் பேச வைத்து அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது சில வார்த்தைகள் பேசியதோடு சரி. இதுதான் ரொலான் பார்த் எழுத்தாளன் பற்றிச் சொன்ன புகழ் பெற்ற கருத்து என்பதைப் புரிந்துகொள்ள எனக்குப் பல வருடங்கள் ஆயின. இது மட்டுமல்ல; இப்படி எல்லா ஆட்சிபீடங்களையும் நொறுக்கியவர்  சாரு.
இத்தாலோ கால்வினோவின் If on winter’s night a traveler ஒரு புதுமையான நாவல். நீங்கள் நாவல்தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு கட்டத்தில் மறந்து போவீர்கள். பிறகு திடீரென விழிப்பு கிட்டி கதை நகரும். கதையின் போக்கு மீண்டும் உங்களை விழிப்பு நிலையிலிருந்து பழைய போதைக்கு ஆழ்த்தி மீண்டும் எங்கோ ஒரு இடத்தில் உணர்வு நிலை கிடைக்கும்.  இந்த அற்புதமான நாவலுக்கு இணையான ஒரு நாவல் ’ஸீரோ டிகிரி’. இப்படிக் கூறுவதால் சாருவிடம் கால்வினோவின் தாக்கம் என்று பொருள் இல்லை. கால்வினோவின் எழுத்துக்களைச் செரித்து ரொலான் பார்த்தின் ’எழுத்தாளனின் மரணம்’ என்ற தத்துவத்தை உள்வாங்கிக் கொண்ட ஒருவரால்தான் இப்படிபட்ட ஒரு படைப்பை வழங்க முடியும்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் யானைக் கட்டும் மண்டபம்தான் நான் கல்லூரி படிக்கும்போது எனக்கான வாசிக்கும் இடம். கோவிலுக்கு அருகே புத்தகக் கடை இருந்தது. புத்தகத்தை வாங்கிய உடன் மண்டபத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்துவிடுவேன். அப்படித்தான் சாருவின் நிறைய புத்தகங்களை வாசித்தேன். அப்படி ஒரு நாள் ராஸ லீலா படித்துக்கொண்டிருந்தபோது கண்கள் தானாக கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தது. காரணம், எனது தந்தை ஓர் இருதய நோயாளி. அவரது அறுவை சிகிச்சை சமயத்தில் அவர்பட்ட அத்தனை துன்பங்களும் ராஸ லீலாவில் இருந்தது. இதுதான் Autofiction வகைமையின் வெற்றி. ராஸ லீலா படித்தபோது சார்ல்ஸ் ப்யூக்கோவெஸ்கியின் ’தபால் நிலையம்’ நினைவுக்கு வந்தது. சாருவின் எழுத்துக்களோடு நான் ஒப்பிட்டுள்ள இவ்விரு நூல்களையும் உலகத்தில் யார் படித்தாலும் அவை அந்நியமாக இருக்காது. அதேபோல சாருவின் எழுத்துக்களும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டால் அப்படித்தான் இருக்கும். “எனது இலக்கு Dublin Impac விருது அல்லது நோபல் விருது,” என்று இந்த மனிதன் கூறுவதெல்லாம் பிதற்றல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இங்கே வாழவே முடியாது.” சாருவின் ஆன்மீகம் மதம் சார்ந்ததல்ல. ஆன்மீகத்தின் அசல் – அதாவது வேறெவற்றாலும் கரை படாத தூய ஆன்மீகம். அதனால்தான் அவரால் யானியின் இசைக்கும் பிஸ்மில்லாகானின் ஷெனாய்க்கும் மனம் லயித்துப் பரவசமடைய முடிகிறது. இன்றைய ஆன்மீகவாதிகள் தங்களுக்கென ஒரு பீடம் அமைத்துக்கொண்டு அதிலிருந்து இறங்க மறுக்கின்றனர். அதிகாரம் அவர்களின் போதை வஸ்துவாக இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான் சாருவின் ஆன்மீகம். ஒரு உதாரணம் தருகிறேன். லா.ச.ரா.வின் நூற்றாண்டு விழா நடந்த அன்று காலை எங்கள் வீட்டின் சிறிய அறையில் சாரு தரையில் அமர்ந்திருக்கிறார். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் கீழே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சப்தரிஷி அவர்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. காலை சற்று நீட்டி உட்காரலாம். ஆனால் எதிரில் சாரு உட்கார்ந்திருக்கிறார் என்று தயங்கி இறுதியாக சாருவிடமே தான் காலை கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டார். அப்போது சாரு சொன்ன பதில்தான் ஆன்மீகத்தின் உச்சம் எனச் சொல்கிறேன்: “காலை என் மடியில் வச்சுகோங்க; நான் பிடித்துவிடுகிறேன்,” என்றார். இதைத்தான் லெவினாஸ் தன்னிலிருந்து பிறருக்குக் (From I to other) கடந்து போவது என்றார்.
இந்தக் கட்டுரையை இப்போது மீண்டும் படித்துப் பார்க்கும்போது எனக்கே சலிப்பாக இருக்கிறது. சாருவின் மீதான பாசக்கொதிப்பில் எழுதப்பட்ட கட்டுரையாக உங்களுக்குத் தோன்றலாம். சாருவுடன் எந்த இடத்திலும் முரண்பட்டு நிற்க முடியும்; ஆனால் அதற்கான காரணங்கள் சரியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். மரண தண்டனை குறித்த சாருவின் பார்வையிலிருந்தும் நான் முரண்படுகின்றேன்.
தன்னுடைய காலத்தில் பிறரால் தன் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதைவிட வதை வேறெதுவுமில்லை. இது நீட்ஷே, பாரதி என்ற பல மாமனிதர்களுக்கு நிகழ்ந்தது. இவர்கள் செய்தது, தான் வாழும் காலத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்ததுதான். அதுவும் இந்தியா (குறிப்பாக தமிழகம்) போன்ற பெலிஸ்திய சமுதாயத்தில் இவ்வாறாக வாழ்வது மிகப் பெரிய வதை. இந்த வதையைதான் சாரு ஏற்றுக்கொண்டிருக்கிறார். சாருவைப் பற்றிப் பேசும் போது இந்த விவிலிய வாக்கியம் எப்போதும் நினைவுக்கு வரும். அந்த வாக்கியங்களைக் கொண்டே இக்கட்டுரையையும் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியவொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலிப்பியர் 2: 6-8)
இங்கே ‘கடவுள்’ என்னும் இடத்தில் பாரம்பரிய எழுத்தாளரின் பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘அடிமை’ என்னும் இடத்தில் இந்திய குடிமகன் என்ற பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘சாவு’ என்னும் இடத்தில் எழுத்தையும் ‘சிலுவைச்சாவு’ என்னும் இடத்தில் Transgressive எழுத்து என்பதாகவும் பொறுத்தி இன்னொரு முறை படித்துப்பார்க்கவும்.