Wednesday, 24 May 2017

நிலவறைப் பாட்டைகள் ரமேஷ் : பிரேம் - http://maatrupirathi.blogspot.in/2017/05/blog-post_70.html

செவ்வாய், மே 23, 2017

நாவல் என்ற எழுத்து

நிலவறைப் பாட்டைகள்

http://maatrupirathi.blogspot.in/2017/05/blog-post_70.html
மொழியியல், குறியியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பற்றி சிருஷ்டிபரமான சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான கோட்பாடுகளையும் பதிவு செய்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த உம்பர்ட்டோ ஈகோ முதலில் ஒரு தத்துவவாதியாகவே அறிமுகமானவர். சமகாலச் சிந்தனைகளுடன் நெருக்கமான உறவுள்ளவர்களுக்கும், பல்வேறு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ ஆய்வறிவு இலக்கியப் பார்வையுடன் தொடர்ந்து இயங்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் அணுக்கமான ஒரு கோட்பாட்டாளர் இவர்.
இவ்வகைச் சிந்தனைகள் மேற்குலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும், அதிகமாக ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களின் பெயர்களே இவற்றில் இடம் பெற்றிருப்பது இவற்றைப் பயில்பவர்களுக்குச் சிறு புதிராகத் தோன்றுவதுண்டு. இந்தப்போக்கில் முதல் முறையாக ஒரு மாற்றமாக இடம் பிடித்தது உம்பர்ட்டோ ஈகோவின் பெயர். ஐரோப்பிய வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் தனித்தன்மையுடன் கூடிய மேதமை ஈகோவிடம் உண்டு. அதே சமயம் மற்ற கோட்பாட்டாளர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சமும் இவரிடம் உண்டு. இவர் படைப்பிலக்கியவாதியும் கூட, இதுவே இவரை இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக மாற்றியது.
இவருடைய "ரோஜாவின் பெயர்" (Name of the Rose), "ஃபூக்கோவின் ஊசல்" (Foucault"s Pendulum), "நாளுக்கு முந்திய தீவு" (Island of the Day before) என்ற மூன்று நாவல்களும் இத்தாலிய மொழியிலிருந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டவை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் உலகின் பல நாடுகளிலும் பலமுறை வாசிக்கப்பட்டவை. தீவிர இலக்கியப்பயிற்சி இன்றி பொழுதுபோக்கும் வாசகர்களுக்கும் கூட மிகவும் பிடித்தவையாக அமைந்து சிறந்த விற்பனைப் பிரிவில் (Best Sellers) இடம் பிடித்தவை இவரின் முதல் இரு நாவல்களும். பல பதிப்புகள் பல வடிவில் வெளிவந்தன. இலக்கியத் தரமும் விற்பனைக்கவர்ச்சியும் கொண்டு அமையும் ஆக்கங்கள் இவைபோல மிகச் சிலவே காணக்கிடைக்கின்றன. அதே சமயம் அதிகம் பேசப்பட்டவையும் கூட.
ரோஜாவின் பெயர் - நாவலின் அமைப்பும் எழுத்துச் சுழலும்:-
இந்நாவல் ஒரு நூலைப் பற்றிய நூலாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கற்பனையான எழுத்தாளன் 1968 இல் Abbe Vallet என்பவரால் மொழி பெயர்த்தும் தொகுத்தும் எழுதப்பட்ட ஒரு நூல் பிரதியைக் கண்டெடுக்கிறான். 1842 இல் வெளியிடப்பட்ட அந்த நூலோ பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் Adso de Melk என்ற பெனடிக்டன் பிரிவைச் சேர்ந்த துறவியால் 1327இல் இத்தாலியைச் சேர்ந்த ஒரு துறவோர் மடத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நினைவு கூர்ந்து தொகுத்து எழுதப்பட்ட குறிப்புகளை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. Adso எழுதிய லத்தின் மொழியில் Vallet எழுதியது பிரெஞ்சு மொழியில் - இப்பொழுதைய எழுத்தாளன் எழுதியது நாம் வாசிக்கும் மொழியில்.
அட்சோ தனது குருவான சகோதரர் வில்லியம்சுடன் இத்தாலியின் ஒரு பகுதியில் அமைந்திருந்த (Abbey) துறவோர் மடம் ஒன்றில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதற்காகத் தங்கி இருந்த ஏழுநாட்களில் நடந்தவைகளை நினைவிலிருந்து தனது இறுதிகாலத்தில் பதிவு செய்வதாக நூலின் பகுதிகள் அமைகின்றன. முதல் நாள், இரண்டாம் நாள் எனத் தொடங்கும் ஒவ்வொரு பேரத்தியாயமும் விடிகாலை, காலை, பகல் என இரவுவரையான சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியே தலைப்பு வாக்கியங்கள் இடப்பட்டிருக்கின்றன. (தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் ஏழாம் நாளை ஆசிர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம்; இரண்டாம் அதிகாரம்; இரண்டாவது, மூன்றாவது வசனம்).
ஆகக் கற்பனையான மூன்றாவது நூலாசிரியன் எழுதிய கதை. Eco என்ற நான்காவது நூலாசிரியன் எழுதிய பிறகு உள்ள பிரதியே நாம் தற்போது வாசிப்பது. பிரதியைப் பற்றிய பிரதியாக, மடிந்து மடிந்து அமைந்திருக்கும் இப்பிரதி கடைசியாக நம்மைப் பொறுத்தவரை ஒரே பிரதியாகத் தான் வாசிக்கக் கிடைக்கிறது. எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப்புறம்பான எதையும் நுழைத்துவிட முடிவதில்லை. (ஆழ முகக்கினும் நாழி முகவாது நாநாழி) என எழுத்தாய் விரியும் பிரதி தன் அமைப்பால் ஒரு மெட்டாபிக்ஷன் தன்மை கொண்டுள்ளது.
நூலைத் தேடிச்செல்லும் பயணத்தில் தமது உயிரை இழக்கும் துறவிகள் பற்றியும், நூலைப்பதுக்கி வைத்து உலகின் அறிவிற்கான பரிணாமத்தைத் தடைசெய்ய முயலும் துறவிகள் பற்றியும், நூல்களால் நிரம்பியுள்ள புதிர்வட்டப்பாதை மண்டபத்திற்குள் பதுக்கப்பட்ட நூல்களைத் திறந்தால் அவற்றிற்குள்ளும் விரிந்து விரிந்து செல்லும் அறிவின் - கற்பனையின் - மனித எண்ணங்களின் - புதிர் வட்டப்பாதைகளே காணப்படுவதையும் எழுதிச் செல்லும் மூலநூலை எழுதியதாகச் சொல்லப்படும் அட்சோவுக்கும் அழிந்து போன மகாமடம் ஒன்றின் இடிபாடுகளுக்கு நடுவே மிஞ்சுவதும்; சிதைந்து போன மக்கிப்போன சில நூல் பிரதிகளே.
* At the end of my patient reconstruction, I had before me a kind of lesser library, a symbol of the greater, vanished one: A library made up of fragments, quotations, unfinished sentences, amputed stumps of books. (p. 609 ரோஜாவின் பெயர். 1984)
* இந்நூலின் முக்கியமான பாத்திரமாக இடம் பெறும் புதிர்வட்டப்பாதை பற்றி : A spiritual labyrinth, it is also a terrestrial labyrinth. You might enter and you might not emerg. ( p.37 ரோ.பெ. 1984).
* இந் நூலில் இடம் பெறும் கொலைகளுக்குக் காரணமான பாத்திரம்: பார்வையற்ற முதிய துறவியான Jorge of Burgos.
* "ரோஜாவின் பெயர்" துப்பறியும் நாவல் அமைப்பில் எழுதப்பட்டது. மத்தியகால ஐரோப்பியச் சூழலில் ஒரு துறவிகள் மடத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கின்றன. கொலையாளியைக் கண்டுபிடிக்க வேறு இடத்தைச் சேர்ந்த ஒரு துறவியும் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் மடத்திற்கு வருகின்றனர். அவர்கள் தனது புலனாய்வைச் செய்யும் அதே சமயத்தில் அம்மடத்தின் ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் புலனாய்வுச் சமயத்திலும் கூடக் கொலைகள் தொடர்கின்றன. அம்மடத்தில் அமைந்துள்ள புதிர் வட்டப் பாட்டைகளால் ஆன நுலாகம் ஒன்றைச் சுற்றியே இந்தக் கொலைகள் நிகழ்வதையும், இந்தக் கொலைகளுக்குப் பின் ஒருவித கோட்பாட்டு, இறையியல் பிடிவாதமுடைய துறவி ஒருவர் உள்ளத்தையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர். விலக்கப்பட்ட ரகசிய அறிவு சார்ந்த நூல்களைத்தேடும் சிலர் கொல்லப்படுவதும் தெரியவருகிறது. கிருஸ்திய மதத்தின் சம்பிரதாயப் பிரிவின் மரபிலிருந்து விலகும் சிந்தனைகளைத் தேடும் துறவிகள் அந்த மரணப் பொறியில் சிக்கிக் கொள்கின்றனர் இறுதியில் ஜார்ஜ் ஆஃப் பர்கோஸ் என்ற பெயருடைய பார்வையற்ற முதிய துறவி ஒருவர் அரிஸ்டாட்டிலின் "கவிதையியல் பற்றி" என்ற நூலில் இன்பியல் பகுதியை யாரும் படிக்கக்கூடாது என்றும், இன்பியல் உலகின் இறையியல், ஒழுக்கவியலை நாசம் செய்துவிடும் என்றும் அதைத்தேடி வருகிறவர்களைக் கொல்கிறார். அந்நூலின் ஒவ்வொரு பக்க மூலையிலும் கடுமையான விஷம் ஒன்றைத் தடவி வைப்பதன் மூலம் நாக்கில் தொட்டுத் தொட்டுப் புரட்டிப் படிப்பவர்கள் முழுமையும் படித்து முடிக்கும் போது சாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதைப் துப்பறியும் துறவி கண்டுபிடிக்கும் போது ஏற்படும் குழப்பத்தில் அந்தப் பெருமடமே எரிந்து சாம்பலாகிவிடுகிறது. அது மட்டுமல்லாமல் நூல்களும் அழிகின்றன.
இன்றுள்ள அரிஸ்டாட்டிலின் "கவிதையியல் பற்றி" - நூலில் இன்பியல் பகுதி இல்லாமல் இருப்பதற்கும் அந்தக் குருட்டுத் துறவியே காரணமாக அமைவதாக கற்பனை நிரூபணம் ஒன்று காட்டப்படுகிறது.
கதையெழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விளக்கும் இந்நாவலில் குறிப்பிடும்படியான அம்சங்களாகச் சிலவற்றைக் கூறலாம்.
* மத்தியக் கால ஐரோப்பிய வரலாறு, கலாச்சாரம் பற்றிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக பல்வேறு பிரதிகளிலிருந்து தொகுத்து ஒரு முன்பிரதித்தொகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
* பொருள்கள், மரபுகள் பற்றிய புராதானத் தன்மையுடன் தகவல்கள், பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன.
* துப்பறியும் எழுத்துமுறையின் பெருவழக்கில் உள்ள ஒரு வடிவம் அப்படியே கையாளப்படுகிறது.
* துப்பறியும் கதையின் எதிர்பார்ப்பும் வரலாற்று நாவலின் விவரணைகளும் ஒன்றாக அமைக்கப்படுவதன் மூலம் வரலாறு பற்றிய துப்பறிதலாக கதை மாறுகிறது.
* துப்பறிதல் என்பதற்கும் (Investigation), பொருள் கூறல் என்பதற்கும் (Interpretation) இடையில் உள்ள உறவு உருவக நிலையில் கையாளப்படுகிறது. அதாவது துப்பறிதல் என்பது ஒருவிதக் கதை சொல்லலாக இருக்கிறது.
கதைசொல்லல் மாறும்போது கண்டுபிடிக்கப்படும் உண்மையும் மாறுகிறது. உண்மையைத் தேடுதல் என்பதும் துப்பறிதல் போலவே தடயங்களையும் சான்றுகளையும் வைத்து நிகழ்த்தப்படும் ஒரு பயணமாகவே அமைகிறது. இவை இரண்டிலும் எதேச்சைகள், திடீர் திருப்பங்கள், புதிர்வட்டப்பாதைகள், தடம் மாறும் பாட்டைகள் போன்றவை இடம் பெறுகின்றன. அதே சமயம் அறிதல் முறை மாறும் போது மொத்தப் போக்கும் மாறிவிடக்கூடியதாகவும் உள்ளது.
* துப்பறிகிறவர், தொடரப்படுபவர் இருவரும் ஒரே கதையின் இருவேறு புள்ளிகளில் இயங்குகிறார்கள் அதே சமயம் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்குவதும் இல்லை இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கும் போது கூட வேறுவேறு நபர்களாக இருக்கிறார்கள்.
* துப்பறிதல் என்னும் செயல் ஒரே சமயத்தில் தன்னுடைய பாதையைத் தானே அமைத்துக் கொள்கிறது. இன்னொன்றின் பாதையைத் தொடருவதாகவும் உள்ளது. அடுத்த கணம் என்பது நிச்சயமற்றதாக உள்ள நிலையில் முன் நிகழ்ந்தவைகளின் தர்க்கத்தை வைத்து நகர்வதாக உள்ளது. இந்தப் துப்பறிதல் என்ற நிகழ்வில் ஒரு இறந்தகாலம் அதன் எதிர்காலமாக அமைவதை முரண் அழகாகக் கொள்ள முடியும். ரோஜா நாவலில் ஒரு மர்மம் கண்டறியத் தோற்றம் தந்தவைகள் மர்மங்களாக மாற்றப்படுகின்றன.
* ஒரே புள்ளியை அடைய எண்ணற்ற வழிகள் உள்ள நிலையில் இந்தத் துப்பறிதல் வகை எழுத்து தனது வழியையே முதன்மைப்படுத்துகிறது. இங்கு மையம் என்பது கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் வரலாறு என்பதும் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளின் தொகுப்பே என்பது விளக்கிக்காட்டப்படுகிறது.
* மேற்குலகின் - குறிப்பாக கிறிஸ்திய-இறையியல் பற்றியும், தத்துவ முரட்டுவாதம் பற்றியும் பல கேள்விகளை விளையாட்டுத் தனமாக இந்நாவல் எழுப்பி சந்தேகப்படுதலின் சாத்தியங்களை அதிகமாக்கிவிடுகிறது. இந்தப் புனிதமறுப்பு கதைகூறல் எல்லா புராணிக, புனிதப் பிரதிகளின் முற்றொருமையையும் கலைத்துப்போட்டு அவற்றின் "கதைப்பாட்டு" சாத்தியங்களை அதிகமாக்கிவிடக்கூடியது.
* மிகையில் பக்தினின் "நகைப்புணர்வின் ஆதிக்க நீக்க உத்தி" இந்நாவலின் மொழியமைப்பிலேயே அமைந்துள்ளது. நேரடியாக எதையும் கிண்டலோ கேலியோ செய்யாமல்; வேறு ஒரு காலம் பற்றிய சித்தரிப்பைத் தற்காலம் என்ற மறைமுகப் பிரதியுடன் நேரெதிர்ப்படுத்தும் பொழுது நாம் இதில் உள்ளவைகள் உண்மை என்று கொள்ளாமல் கதையெழுத்தை மட்டுமே நம்பி நகர்கிறோம். இதில் உள்ள பன்முகப்பிளவு நிலை நிஜம் பற்றிய நகைப்புணர்வாக மாறுகிறது. அதாவது எழுத்து தானே உருவாக்கும் கற்பனை தர்க்கத்தின் மூலம் வரலாற்றை வேறாக விளக்கும் பொழுது இந்நாவலின் வாசிப்பு முழுக்க ஒரு நீடித்த குறுஞ்சிரிப்பாக செயல்படக்கூடியது.
* "மறையெதிர்ப்பு" அறிவைத்தேடும் வாசக மனமும் - அறிவைத் தணிக்கை செய்து நம்பிக்கையின் மீது தன்னை நிர்மாணித்துக் கொள்ளும் தொழுகை ஒழுங்கும் முரண்பட்டு இயங்குவதும், இவற்றின் தொடர் போராட்டமே தத்துவங்களையும் இலக்கியங்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பதும் இந்நாவலில் விவரிக்கப்படுகிறது. தேவாலாய அதிகாரம் அறிவை மறைத்தும் கட்டுப்படுத்தியும் உருவாகிய ஒன்று (எல்லா அதிகாரமும்தானே) என்பது இந்த எழுத்தில் நாடகத்தன்மையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.
* ஜீசஸ் தனது வாழ்நாளில் சிரித்ததே இல்லை. அது சாத்தியம் இல்லை என்று கூறும் கிழத்துறவி சிரிப்பு பற்றிக் குறிப்பிடுபவர் மீது கடுங்கோபம் கொள்கிறார். அதே காரணத்திற்காகவே அவர் "இன்பியலையும்" மறுதலிக்கிறார். சிரிப்பற்ற உலகே ஆன்மவியலுக்கானது என்று அவர் நம்புவதன் மூலமும், விபரீத அறிவுகள் அல்லது பல தரப்பு அறிவுகள் மதநம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று தீர்மானிப்பதன் மூலமூம் கொலை என்ற வழிமுறையை அழித்தொழிப்பு என்ற முறையைக் கையாள்கிறார். அப்போகிரிபா என்ற வேத மறுப்பு நூல்களைப்பற்றி மேற்குலகின்மரபு கொண்டிருந்த பயம் இந்நாவலின் முக்கிய பின்புலமாக உள்ளது. அதேசமயம் தன்னை நிறுவிக்கொள்ள அது கையாண்ட கொடூரங்களைப் பற்றிய உள்ளீடான குறிப்புகளும் இதில் உள்ளன.
* இலக்கிய ஆக்கமுறையில் "பாவனை எழுத்து" அல்லது "நிகழ்த்துதல் எழுத்து" என்பது முக்கியமானது. அதாவது இங்கு உண்மை என்று எதுவும் கூறப்படாமல் - கூறுதல் முறை மட்டுமே - "இது இப்படியாக" .. என்பது போல் எழுதிச் செல்லும் முறை. இந்நூல் இப்படியாக அமைவதன் மூலம் கூறப்பட்ட ஒன்றை கூறுவதாக மூன்றாம் தள கதை கூறுநிலை உருவாக்கப்படுகிறது.
* இந்நூல் வாசிப்பு என்ற வினையை சுதந்திரமாக்கக்கூடியது. பல்வேறு பிரதி மேற்கோள்கள், ஊடுபிரதி இணைப்புகள் (Inter Textuality) மூலம் வேறுவேறு இலக்கியப் பிரதி ஞாபகங்களை எழுப்பிச் செல்வதாக அமைந்திருக்கிறது. (இந்நாவல் ழான் ழாக் அன்னூத் என்ற இயக்குநரால் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் வாசிப்பு என்பது தனித்தன்மை உடையது).
ரோஜாவின் பெயர் என்ற தன் முதல் நாவலுக்காக போர்கஸிடமிருந்து "புதிர் வட்டப்பாதை" என்ற உருவாக்கத்தைப் பெற்று பெரும் பிரதி மாற்றத்தை நிகழ்த்திய ஈகோ அதற்காகத் தான் செய்த Medical History பற்றிய ஆய்வுகளின் தகவல்களை அசாத்திய தந்திரத்துடன் உருமாற்றம் செய்ததின் மூலம் தனது இரண்டாவது நாவலான ஃபூகோவின் ஊசல்-ஐ எழுதி முடிக்கிறார். இந்நாவல் பலமுறை வாசிக்கத்தூண்டும் ஜாலத்தன்மை கொண்டது.
* ஊசல் நாவல் Jacopo Belbo, Casaubon, Diotellavi என்ற நபர்களையும் Abulafia என்ற கம்ப்யூட்டரையும் முக்கிய பாத்திரங்களாகக் (A,B,C,D) கொண்டு எழுதப்பட்டது. கதையைக் கூறுவது காசேர்போன் என்ற பாத்திரம், தன்னை விட வயதில் மூத்த பெல்போவைப்பற்றி இப்பாத்திரம் கூறுவதாகக் கதை நிகழ்கிறது. அதே சமயம் தன் நினைவுகள், தான் வாசித்தவைகள், பெல்போ தனது கம்ப்யூட்டரில் எழுதி வைத்திருந்தவைகள் எனக் கதை கூறல் கதை எழுதுதலாக மாற்றமடைந்து கதை உருவான கதையாக நீண்டு செல்கிறது.
காசோபோனும், பெல்போவும் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்யும் ஆய்வாளர்கள். பெல்போ தனது ஆய்வுகளுக்கு நடுவே கிருஸ்திய மதத்தின் வரலாற்றையும் ஆய்வு செய்கிறான். அதிலும் குறிப்பாக "Templars என்ற ரகசிய சங்கம் பற்றி ஈடுபாட்டுடன் தகவல்களைச் சேகரிக்கிறான். இதன் மூலம் ஐரோப்பாவின் பல்வேறு ரகசிய இயக்கங்கள், அமைப்புகள் பற்றிய விபரங்களும், வரலாற்றில் அவற்றின் இடமும், ஊடுருவலும் பற்றிய வினோதமான செய்திகளும் அவனுக்குக் கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் ரகசிய சங்கங்களின் வலைப்பின்னலுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். ஆய்வுக்காக அவன் அணுகும் நபர்கள், நூல்கள், தொல்பொருள் சாலைகள் இவற்றின் மூலம் ரகசிய சங்கத்தின் இன்றைய காலத்திட்டம் ஏதோ ஒன்று இருக்கலாம் என்பது பற்றி அவனுக்குத் தெரிய வருகிறது.
இவை ஏதோ பழைய காலத்துடன் முடிந்து போனவை அல்ல என்பதும் இன்னும் அவற்றின் உறுப்பினர்கள், செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியவருகிறது. இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் அவனைத் தொடர்ந்துவர ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்களின் ரகசியத் திட்டம் தொடர்பாக அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு வரைபடம் ஆய்வுகள் மூலம் பெல்போவிடம் கிடைத்திருப்பதாக நம்பும் அவர்கள் அவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். அவனிடம் அது இல்லை என்பதையும் நம்ப மறுக்கிறார்கள். அவர்களின் சதிவலையில் அவன் சிக்கிக் கொள்கிறான். அவனது உயிருக்கான போராட்டமாக அது மாறிவிடும் சூழ்நிலையில் தன் நண்பனான காசாபோனிடம் தனது நெருக்கடிகளைத் தெரிவிக்க தனது கம்ப்யூட்டரான அபுலாஃபியாவைப் பயன்படுத்துகிறான்.
அதுவரை பெல்போவுடன் சேர்ந்து தான் செய்த ஆய்வுகளை இல்லாத ஒரு காலம் பற்றிய தகவல் திரட்டாக மட்டுமே நம்பிவந்த காசாபோன் அதன் பயங்கர எதார்த்தத்தை அறிந்து கொள்கிறான். இதன் மூலம் அவனும் அதன் சதிநாடகத்திற்குள் சிக்கிக்கொள்கிறான். தன் நண்பன் திடீரெனக் காணாமல் போன நிலையில் அவனை மீட்கவும்., இந்த பயங்கரத்திலிருந்து தப்பிக்கவும் ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறான். இதைப்பற்றி யாரிடமும் கூறவும் முடியாத நிலை. அனைத்தையும் பிரம்மை, மனநோய்மயக்கம் என்று யாரும் இலகுவாகக் கூறிவிடமுடியும். இந்நிலையில் தனியாகத் தன் நண்பனின் தடத்தைப் துப்பறிந்து செல்லும்பொழுது, அவனது நண்பனான பெல்போ ரகசிய சங்கத்து உறுப்பினர்களைப் பாரிசிலுள்ள தொல்பொருள் சாலைக்கு வரும்படியும் அங்கு அவர்கள் தேடும் வரைபடம் பற்றிக் கூறுவதாகவும் அறிவிக்கிறான். ஆனால் அவர்களிடமிருந்து தப்பமுடியாது என்ற மனநெருக்கடியில் பொருள்சாலையில் இருக்கும் ஃபூக்கோ ஊசலில் தூக்கிலிட்டு இறந்துவிடுகிறான். அவன் அங்கு வருவதை அறிந்து சென்ற காசாபோன் நண்பனின் உயிரற்ற உடல் ஊசலின் அசைவை நிறுத்திவிட்டபடித் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, ரகசிய சங்கத்தினர் இன்னும் சில நேரத்தில் அங்கு வந்து விடுவார்கள் என்பதால் தப்பி தனது கிராமத்திலுள்ள பழைய வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் ரகசிய சங்கத்தினரின் அடுத்த இலக்கு தான்தான் என்பதும்; ஏற்கெனவே அவர்கள் தன்னைத்தொடர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிற நிலையில் தனது மரணம் பற்றிய ஒரு உறுதிப்பாட்டுடன் எதுவும் நடக்கலாம் எனக் காத்திருக்கிறான்.
இந்நாவல் காசாபோனின் கூற்றாக எழுதப்படுகிறது. தன்னிலைக் கூற்றாக கதை கூறப்படும் அதேசமயம் அபுலாஃபியா என்ற கம்ப்யூட்டரில் உள்ள பெல்போனின் மொழியும் இணைக்கப்படுகிறது. பல்வேறு நூல்களிலிருந்து குறிப்புகளும் இருவரின் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இணைக்கப்படுகின்றன. நிகழ்ந்தவைகளாகவும், நினைவுகளாகவும் நீளும் கதையுடன் வரலாற்றுக் குறிப்புகள் அப்படியப்படியே பல்வேறு நூல்களிலிருந்தும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் கதைகூறல் என்ற நிலையிலிருந்து கதை வரைதல் என்ற நிலைக்கு எழுத்து மாற்றப்படுகிறது. அது மட்டுமின்றி கதை காட்சிக்குறியாக எழுத்துப் பரப்பில் உருவாக்கப்படுகிறது. இந்நாவல் மர்மநாவலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. துப்பறிதல் என்பது இந்நாவலிலும் அடிப்படை உருவமாக அமைக்கப்பட்டிருக்கிறது பதைபதைப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் "Thriller" என்ற வகை நாவல் வடிவத்திலும் இந்தப்பிரதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலகுவான வேகமான வாசிப்புக்கு உரியதாக மாற்றப்படுகிறது. அதே சமயம் மிக உள்ளோடிய தத்துவார்த்த, மெய்யியல், வரலாற்றியல், தொல்லாய்வியல், தொன்மவியல், கதையியல் பிரச்சனைகளும் இதில் கையாளப்படுகின்றன.
இந்நாவலின் சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வகைக் கூறுகளின் மூலம் இது ஒரு பேரிலக்கியப் பிரதியாக தன்னை மாற்றிக் கொள்ள முனைகிறது.
* ஐரோப்பியச் சமூகங்களின் கூறப்பட்ட வரலாற்றை இந்நாவல் முதலில் கேலி செய்கிறது. கிறிஸ்திய உலகின் மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பதை இந்நாவல் கேள்விக்குரியதாக மாற்றிவிடுகிறது.
* வரலாறு எப்பொழுதும் ஒருபோக்குத்தன்மை உடையதாக இருப்பதில்லை. ஏன் சிலசமயங்களில் வரலாறு என்ற தன்மைகூட இருப்பதில்லை என்பதை விரிவாக இந்நாவல் எழுதிச் செல்கிறது.
* வரலாறு என்பது பிரதிகளின், மொழிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இவற்றில் நேரும் பின்னல்களும், சிக்கல்களும் வேறுவகை எதார்த்தத்தைக் கட்டமைத்து விடக் கூடியவைகளாக உள்ளன. இதில் உண்மை என்ற ஒன்று உருவாக்கப்படுவதேயொழிய - வனைந்தெடுக்கப்படுவதே ஒழிய - கண்டறியப்படுவதில்லை என்பதை இந்நாவல் திரும்பத்திரும்பப் பேசிச்செல்கிறது.
* வரலாறு எழுதுதல் என்பது ஒருவகைப் பொருள் கோள் - உரைகூறல் - முறையே. இது எழுதப்படுதலுக்கேற்ப தனது உண்மையை மாற்றிக்கொள்கிறது என்பதை முரண்காரணிகள், ஜால-தர்க்கங்கள், விளையாட்டுச் சேர்க்கைகள் புனைவுவைப்பு முறைகள் மூலம் இந்த எழுத்து நிகழ்த்திக் காட்டுகிறது.
* புனிதப் போர்கள் முடிந்து மதச்சாம்ராஜ்யம் உருவானபின் சிலுவைக்காக ரத்தம் சிந்தியவர்களில் பலர் ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் தமக்குள் உருவாக்கிக் கொள்ளும் "டெம்ப்ளார்" என்ற அமைப்பு தடைசெய்யப்பட்டதாக மாறுகிறது. அதனால் அந்த அமைப்பு ரகசியமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதேபோல் உருவான ரோஸிக்குருசியன்ஸ், ஃபிரிமெசன்ஸ், ரேடிக்கல் கிறிஸ்தியன், ஆர்டர் ஆஃப் ஹோலிகிரெய்ல் போன்ற பல்வேறு மார்க்கங்களும் தடைசெய்யப்பட்டவையாக, தண்டிக்கப்பட்டவையாக மாறுகின்றன. இன்குசிஷன் மூலம் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒரு வகையில் மாற்று நம்பிக்கைகளே இல்லாமல் ஒருகாலத்தில் தடைசெய்யப்படுவதும் வேறொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கிறிஸ்திய வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியது. அதற்குள் நேர்ந்த பல்வேறு பிரிவுகளும் இவ்வாறே உருவாயின. இந்தப் பின்னணியை மிக விரிவாக விவரிக்கும் "ஊசல்" நாவல் முற்றிலும் கற்பனையான தர்க்கத்தின் மூலம் வரலாற்றின் புனைவுத்தன்மையை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடுகிறது.
* வரலாறு என்பது நம்பப்படுவது போல பெரும் நிகழ்வுகளால் வரிசைக் கிரமமாக அமையும் தர்க்கபூர்வ ஒழுங்கல்ல; மாறாக மனப்பிரம்மைகளால், எதேச்சைத்தன்மைகளால், மிகச் சிறிய வார்த்தை விளையாட்டுகளால், திடீர் திருகல்களால், ஒரு வித சூதாட்டத் தன்மையுடன் அமையும் குழப்படியே என்பதையும் - இந்த குழப்பத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கற்பிக்க நினைக்கும் முயற்சியே வரலாறு எழுதுதல் என்பதும் இந்நாவலில் தடம் காட்டப்படுகிறது.
* புனைவு மற்றும் உண்மை என்பவை தனித்தனியே இல்லை எனவும் புனையப்படுபவையே எல்லாம் என்பதையும் இந்நாவல் அடையாளப்படுத்தும் அதே நிலையில் மனித வரலாறே புனைவுகளின் மண்டலத்திற்குள் நகரும் ஒரு வலைப்பின்னல் தான் என்பதையும் கூறிச்செல்கிறது.
* புனைவுகள், மாயங்கள், கனவுகள் போன்றவை பருண்மை உலகின் மீது கவிந்து வடிவப்பரப்பாக மாறக்கூடியவையே என்பதையும் இந்நாவல் புலப்படுத்துகிறது.
* நிகழ்காலம் என்பதற்குள் பலகால அடுக்குகள் உள்ளதையும் - தொன்மங்களும், புராதான நினைவுகளும் ஒவ்வொன்றிற்குள்ளும் ஊடாடி இருப்பதையும் இவை மொழியின் மூலமே சாத்தியப்படும் ஒரு நிலை என்பதையும் இந்நூல் நிரூபிக்க முயற்சிக்கிறது.
* இந்நாவலில்: மதங்களின் வரலாற்றுக் கதைகள், மந்திரவாதங்கள் பற்றிய கதைகள், அமானுஷ்யங்கள் பற்றிய கதைகள், வினோத மனிதர்களைப்பற்றிய கதைகள், வெவ்வேறு போர்களைப் பற்றிய கதைகள், தத்துவ ஞானம் பற்றிய கதைகள், தத்துவவாதிகள், ஞானிகள், மதத்தலைவர்கள் பற்றிய கதைகள், ரகசிய சங்கங்கள், ரகசிய சடங்குகள், மர்மமான வாழ்வியல் முறை பற்றிய கதைகள், அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் பற்றி கதைகள், விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய கதைகள், பல்வேறு புராதானப் பொருள்கள் பற்றிய கதைகள் எனக்கதை கதையாய் விரிந்து செல்லும் புதிர்க்கிளைப்பதைகளூடாக மையமற்ற ஒருமொழிக்காடு பரவிக்கிடக்கிறது. அதே சமயம் மிகத்துல்லியமான ஒரு தொடரொழுங்கும் ஒரு புனைவுத்தர்க்கமும் செயல்பட்டபடியும் இருக்கிறது.
* மனிதர்கள் பின்னும் மொழிக்குள் மனிதர்களே சிக்கிக்கொள்வதும் எந்த ஒரு சொல்லும் வேறு ஏதோ ஒரு தருணத்திலாவது விளைவாக மாறவே செய்கிறது என்பதையும் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.
* ஒரு சொல்லில் ஆரம்பிக்கும் பொருள்கூறல் சங்கிலி எல்லையற்றும் முடிவுற்றும் வளர்கிறது. எந்த ஒன்றும் மையமுமில்லை: எந்த ஒன்றும் நுனியும் இல்லை - பெரும் சுழல் கிருக்கலின் விபரிதமே மனிதப் பிரபஞ்சம். இந்நாவலில் பெல்போவும், காகாபோனும், ஒரு பன்னிரண்டு ஆண்டுகால வாசிப்பின் மூலம் உருவாகும் மேற்கோள்களின் திரள் அவர்களை இதே வகைக் சுழல்கிருக்கலுக்குள் தள்ளிவிடுகிறது. ஒரு வகையில் எந்த அர்த்தமும் முக்கியத்துவமும் இல்லாத தனிமனிதர்களான பெல்போ, காசாபோன், டியோடாலேவி என்ற நபர்கள் திடீரென உலக வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளியை நெருங்கிவிடுகிறார்கள், சில நூற்றாண்டு மர்மத்தின் ஒரு பகுதியாகி விடுகின்றனர். பிரபஞ்ச வினோத நிகழ்வொன்றின் அத்தியாயமாக ஆகிவிடுகின்றன.
* தெளிவானதாக, பகுத்தறிவுக்கு அடங்கக் கூடியதாக தோற்றம் தரும் சமூக வெளியும், உலக மற்றும் அரசியல் வரலாற்றுப் போக்குகளும் திடீரென மர்மங்களும், மந்திர விபரீதங்களும், சதிநாடகங்களும் நிரம்பியதாக மாறிவிடுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு ரகசிய சங்கங்களால் மர்மமார்க்கங்களால் திட்டமிடப்பட்டு ஊடுறுவப்பட்டு, திசைமாற்றப்பட்டு கையாளப்படுபவைகளாக தோற்றம் தருகின்றன.
* விஞ்ஞானிகள் அனைவரும் மர்மவாத மாயாஜாலக் கலை மரபை பின்பற்றும் மந்திர மார்க்கிகளாகத் தோற்றம் தருகின்றனர்.
* உலகின் பல புரட்சிகளும், சமூகக்கிளர்ச்சிகளும் இவ்வகை ரகசிய, நிலத்தடி இயக்கங்கள் - மார்க்கங்களால் நிகழ்த்தப்பட்டவையாக விளக்கமுறுகின்றன.
* தத்துவவாதிகள், கலைஞர்கள் போன்றவர்கள் மாந்திரிக மரபின் மாறுவேடமிட்ட செயல்பாட்டாளர்களாக விளக்கப்படுகின்றனர்.
* ஷேக்ஸ்பியர், தாந்தே, நியூட்டன், மோசார்ட், வால்டேர், ரூசோ எனத் தொடங்கும் ரகசியமார்க்க பற்றாளார்கள் பட்டியல் மெல்ல மெல்ல நீண்டு உங்களையும் எங்களையும் கூடத் தன்வரிசையில் நி
றுத்திக் கொள்வதன் மூலம் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் சில ரகசிய மார்க்கங்களின் உறுப்பினர்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாது என்பது மட்டுமல்ல ஒருவருக்கே அவர் உறுப்பினராகச் செயல்படுவது தெரியாமல் கூட இருக்க முடியலாம்.
* பகுத்தறிவில் ஆகக்கூடிய மூடநம்பிக்கையும், தத்துவத்தில் மிகத்தீவிரமான காமார்த்தகமும், அறிவியலில் மிகவினோதமான தொன்மத்தன்மையும், வரலாற்றில் மிகக்குழப்பமான கட்டுக்கதையும் கலந்து கிடப்பதாக இப்பிரதி குழம்பியபடி விவரித்துச் செல்கிறது.
* அபுலாஃபியா என்ற பெல்போவின் கம்ப்யூட்டருக்குள் எல்லாக் கதையும் புதைந்திருக்கிறது. காசாபோனுக்கு உள்ளே நுழையும் சங்கேத வார்த்தை தெரியாது. பலநூறு சொற்களை முயற்சி செய்து முடியாத நிலையில் "உன்னிடம் நுழைவுச் சொல் உள்ளதா? என்ற கேள்விக்கு விளையாட்டாக "இல்லை" என்ற சொல்லைத் தருகிறான். அதுவே அனைத்திற்கும் திறவுகோலாகிவிடுகிறது. இதுவே எல்லா அறிவிற்குமான உத்தி என அவன் இன்னொரு இடத்தில் நினைவு கூறுகிறான்.
* ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு மந்திரத் தன்மையுடன் உள்ளது என்றும் அதை அறிய ஒரு முறை உள்ளது என்றும் அம்முறையை அறிந்து பழகுவதன் மூலம் எந்த ஒரு பொருளையும் வெவ்வேறு விதமாகக் கையாளலாம், வசப்படுத்தலாம் என்று கூறுவது மாந்திரிக மார்க்கங்கள் தானே என்று தோன்றலாம். ஆனால் எல்லாக் கலாச்சாரங்களும் மரபுகளும் ஏதோ ஒரு வகையில் மாந்திரிக மார்க்கங்களாகவே இருக்கின்றன.
இந்த முரண் நிலையை இந்நாவல் ஓர் அழுத்தமான கேலியுடன் நடித்துக்காட்டுகிறது.
* இன்றைய உலக நடவடிக்கையில் ரகசிய சங்கங்களின் ஏதாவதொன்றின் பங்கும் பின்புலமும் இருக்கலாம் என்றும் - எதிரும் புதிருமான ரகசிய மார்க்கங்கள் தமது யுத்தத்தை மிகப்பூடகமாக உலகத்தளத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம் என்றும் - நாமெல்லாம் அவற்றிற்கு நடுவே வேறு எதையோ நம்பியபடி அலைக்கழிக்கப்படுகிறோம் என்றும் இந்தப்பிரதி கூறும் பொழுது அதை மறுக்க நாம் வேறு ஒரு பிரதியை உருவாக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.
(எந்த ஒரு அமைப்பும், கலாச்சாரமும், மதமும் அவற்றிற்கு வெளியே உள்ளவர்களுக்கு ஒரு மர்மமான ரகசிய சங்கம் போல் புதிர்களால் அமைவதே என்பதை நினைவுகூர்வோம்).
* இந்நூல் மேலதிகம் பொருள்கோடல் (Overinterpretation) முறைமீறிய பொருள்கோடல் (Misinterpretation) என்ற இரு உத்திகளின் மூலம் வரலாற்றைத் தலைகீழாக்குவதுடன், அதன் தர்க்க வழியிலேயே அதன் புனித இடத்தைக் கலைத்துப் போட்டுவிடுகிறது.
* இந்நூல் இணையெதிர்வுகளை (Dichotomy) மோதவிட்டு வசதியான ஒரு சாராம்சவாத முடிவுக்கு வந்து சேராமல் கலப்பு முரண்களை நழுவவிட்டு முற்றொருமையைக் குலைத்துவிடுகிறது. தன்னிலைக்கும், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கும் உள்ள உறவை அதன் விபரீதமான வடிவத்துடன் அடையாளம் காணும் நிலையில் இந்நாவல் பின் நவீனத்துவ எழுத்தாக அடையாளம் பெறுகிறது.
* it was becoming harder for me to keep apart the world of magic and what today we call the world of facts (p.360).
* And I began to question everything around me; the house, the shop signs, the clouds in the sky, and the engravings in the library, asking them to tell me not their superficial story but another, deeper story, which they surely were hiding - but finally would reveal thanks to the principle of mystic resemblances. (p.361)
* பூமியின் சுழற்சியை நிரூபிப்பதற்காக ழான் பெர்னார் பூக்கோ என்ற விஞ்ஞானி 1851 இல் அமைத்த ஊசலும், மிஷேல் ஃபூக்கோ வரலாற்றை மறுக்க வரலாற்றை எழுதியதின் ஊசலாட்டமும் இணைந்து நினைவுக்கு வரும்படியான Foucault"s Pendulum என்ற தலைப்பும், இருவருமே பிரஞ்சு நாட்டவர்கள் என்பதும் இந்நாவலை வாசிக்கப் பெரிதாக எந்த உதவியும் செய்யப்போவதில்லை. ஆனால் டெம்ப்ளார்கள் அமைத்த சுரங்கப்பாதைகள், நிலத்தடி நகரம் போன்றவை பாரிசில் உள்ளவை என்றும் எஃபில் டவர் ஒரு Hermatic Valve என்றும் நாவல் குறிப்பிடும் பொழுது - நாவலை வாசிக்க ப்ரான்ஸ் நாட்டின் வரலாறு ஒரு பின்புலமாக அமைவதை நாம் அறியமுடியும். இப்படியாக நாவல் நெடுக அமையும் சிறு குறிப்புகள் கூட மேலதிக வாசிப்பை அவசியமாக்கிவிடுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றைச் சுட்டி விரியும் பிரதிப்பின்னல் இது. இதன் மூலம் எல்லையற்ற பிரதிப்பரப்புகளின் சுரங்கவழித்தடங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
* இந்நாவல் வாசிக்கப்படும் பொழுது நமது அறிதல் முறை, மற்றும் மெய்காண்முறையின் எல்லைகள் கரைந்து எல்லாப்புறமும் பரவும் பாட்டைகள் விரிவதை உணரமுடியும். ஏனெனில் இது ஒரு தர்க்கப்பூர்வமாக அமைந்த அதர்க்க எழுத்து.
(பி.கு). "நாளுக்கு முந்திய தீவு" என்ற நாவல் 39 அத்தியாயாங்களுடன் 513 பக்கங்களுடைய ஒரு ஆக்கம். இந்நாவலும் இடைக்கால ஐரோப்பியச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. Roberto என்ற பாத்திரம் திசைதவறித் தொலைந்த கப்பல் ஒன்றில் இருந்தபடி தனது அனுபவங்களை கண்டவைகளை கேட்டவைகளை காதலை நினைவு கூர்ந்து பதிவு செய்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து வேறொருவரால் எழுதப்படுவதாக இந்நாவல் அமைகிறது. 
17ஆம் நூற்றாண்டின் பிரான்ஸ் இத்தாலி நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளும் இடையே ஒரு துயரமான காதல் கதையும் எனத்தொடரும் இந்நாவலின் 37ஆம் அத்தியாயம் இப்படியாக முடிகிறது. "He did not know that especially when their authors are now determined to die, stories often write themselves, and go where they want to go". (p.482) இன்னும் இருமுறை நிதானமாகப் படித்தபின் விரிவாக எழுதலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கும் பொழுது "இதாலோ கால்வினோ" வின் பக்கங்கள் அடிக்கடி ஞாபகம் வருவதும் Don Quixote, அங்கங்கே தட்டுப்படுவதும் தன் முன்னீட்டுப் பிரதிகளை அடையாளம் காட்டும் குறிப்புகள் ஈகோவின் மூன்று நாவல்களையுமே இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர் William weavar. சில பேரிலக்கியங்களின் எழுத்தாளர்களைப் போலவே மொழி பெயர்ப்பாளர்களும் நினைவு கூறத் தக்கவர்களாக அமைவதும் இப்படியாகத்தான்.
கேள்வியாக ஒன்று: இலக்கியம் வாழ்க்கை அனுபவத்தையே பிரதிபலிக்க வேண்டும் என்ற அரிஸ்ட்டாடிலியக் கோட்பாட்டை ஆழமாக பதிவு செய்து வைத்திருக்கும் தமிழ் இலக்கியவாசகமனம், இலக்கியம் என்பதே தனி வாழ்க்கையும், தனி அனுபவமுமாக இருக்கலாம் என்ற முற்கோளை அடிப்படையாகக் கொண்டு முழுப்புனைவுகளாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று நாவல்களையும் எப்படி வாசிக்கும் என்பது சற்றே புதிரான ஒன்றுதான். இப்படிச் சொல்வதன் மூலம் வாழ்க்கையின் தனித் தன்மையும் குலைகிறது. இலக்கியத்தின் தனித் தன்மையும் குலைகிறது என்பதும் இரண்டும் ஒன்றில் ஒன்று அடங்காதது என்பதையும் கூடச் சொல்லித்தரப் பின் நவீனத்துவம் தேவை இல்லை.
"You Know how they wrote in that Centuty..... people with no soul" (நாளுக்கு முந்திய தீவு. பக்கம் : 513).