("I am in the Aleph,
the point at which everything is in the same place at the same time"
-Paulo Coelho, The Aleph.)
கதை நிகழும் களம்
பற்றிய நேரடி அனுபவம் அல்லது கற்பனை மூலம் சாத்தியப்படக்கூடிய அறிதல் மூலமாக, கண்டிராத புனைவுலகின்
தோற்றத்தையும் அதன் இயக்கவிதிகளையும், கதாபாத்திரங்களின்
தன்மைகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக விவரித்துச் செல்லும்
கதைசொல்லல்களில், வாசகன்
கதையில் வலம் வரும் கதாபாத்திரங்களுள் ஒன்றாக தன்னையோ அல்லது கதாபாத்திரங்களின்
இயக்கங்களையும் மனவோட்டங்களையும் கதை நிகழும் களத்தில் இறங்கி பின்தொடரும் ஒரு
கனவுலக ஜீவியாகவோ ப்ரக்ஞைக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் உருவகித்துக் கொள்தல்
இயலுகிறது.
இத்தகைய உரு நிலையில்
காலம் கதையோடு ஒன்றிணைந்திருக்கும் வாசகர்களான நமக்கும் கதைக்குமிடையேயான சங்கேதப்
பரிமாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கதையின்
முழுத்தொடர்ச்சியையும் கொண்ட ஒட்டுமொத்த வரைபடத்தையும் காலத்தின் பிரமாண்ட கண்கள்
அரவமின்றி ஒரே கணத்தில் கண்காணித்தபடி இருக்கின்றன. கதைக்களத்தின் கண்கூடான
அனுபவங்களில் மட்டும் பிரக்ஞையின் பரிபூரணத்தை செலுத்தும் நமக்கு சமீபத்திய
நிகழ்வுகளே பொருட்படுத்தத் தகுந்ததாக ஆகின்றன. சமீபத்திய சீர்மை வாய்ந்த நிகழ்வின்
தடம் புரள்தலின் தொலைதூரத்தை ஒரே கணத்தில் கவனிக்கும் காலத்தின் கண்களுக்கு நமது
நகர்வு எறும்பு வரிசைகளைப் போல சிறுத்துத் தோற்றமளிக்கின்றன.
பா.வெங்கடேசனின்
வாராணசி கண்முன் காணும் ஒவ்வொரு நிகழ்வையும் அதன் பிரதி நிகழ்வுகள் நடைபெற்ற
காலத்தின் வெவ்வேறு தளங்களையும் ஒருசேர புலப்படுத்துகிறது. அதன் மூலம் ஒரே
கணத்தில் காலத்தின் பெரும்நீளத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளையும் காணும்
சாத்தியம் வசப்படுகிறது. காலம் பின்னிருந்து முன்னோக்கி நகராமல் இங்கு கடந்த
காலமும் நிகழ் காலமும் ஒன்றை ஒன்று எதிர் துருவமாகக் கொண்டு பாய்கிறது. இரண்டு
துருவங்களும் ஒன்றை ஒன்று இடைவெட்டுகின்றன, ஒன்றோடொன்று பிண்ணிப்
பிணைகின்றன, ஒன்றின்
துவக்கம் பிரிதொன்றின் முடிவாக வெளிப்படுகின்றன. கதையின் துல்லியமான துவக்கமோ
முடிவோ இன்னதென வரையறுத்துக் கூற இயலாதபடி ஒரு முடிவு இன்னொரு நிகழ்வின் துவக்கமாக
எல்லையற்ற புதிர்வடிவ வட்டச்சுழல் அமைப்பை உருவாக்குகிறது.
வாராணசி வாசகர்களாகிய
நம்மை கதைக்களத்திற்குள் நேரடியாகக் கொண்டு வந்து இறக்குவதில்லை; கதையின் போக்கை
அனுமானித்துப் பின்தொடரும் ஒரு ஆவியுரு போன்ற திட்பமற்ற உரு ஸ்தானத்தையும் நமக்கு
வழங்குவதில்லை. மாறாக பா.வெங்கடேசனின் கற்பனை வன்மை தொடக்கமும் முடிவுமற்ற
காலத்தின் பெருவெளியில் இறந்த காலமும் நிகழ்காலமும் ஒரு சேரக் காட்சியளிக்கும்
உயரநிலையில் மிதந்து கொண்டிருக்கும் புலனறிதலுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்திற்குள்
நம்மை பிரசன்னப் படுத்துகிறது. காலம் என்ற சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கத்தினனாக நம்
அகம் மற்றும் புற இருப்பைத் தகவமைக்க எத்தனிக்கிறது பா.வெங்கடேசனின் சீரிய
கவனிப்பைக் கோரும் வாக்கியக் கட்டமைப்புகளின் உத்தி.
ஒன்றின் மீதே ஒன்றாக
படியும் வெவ்வேறு நிகழ்வுகளின் ஒற்றுமையான ஆதாரச் சாத்தியங்களை இயல்பு மீறாத
யதார்த்தமான துருப்புகளைக் கொண்டும் அதேசமயம் துருப்புகளை கோர்க்கும் செய்முறை
வித்தையில் மாயாஜாலத் தொனியுடன் வேயப்பட்ட அசாதாரணமான புனைவுலகை காலத்தின் கண்
கொண்டும் நம்மைப் பார்க்கச் செய்கிறார் பா.வெங்கடேசன். காலத்தின் கண்களை அணியும்
நமக்கு முன்னால் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளின் நேரடித்தன்மைகளை விட அவர்கள்
ஒவ்வொருவருக்குமிடையே நிறைந்து பரவியிருக்கும் நிறமற்ற பிடிபடாத காலத்தின்
புகைமூட்டம் சூழலின் பிரத்யேகமாக உருவெடுக்கிறது.
காலத்தின் புகைமூட்டச்
சூழலில் தோன்றி மறையும் வெடிப்புப் புள்ளிகளாக கதாபாத்திரங்கள் தோன்றி
மறைகிறார்கள். இறந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் நிகழ்தல் இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகான நிகழ்காலத்தின் நிகழ்தலோடு வேறுபாடுகள் இன்றி ஒன்றின் மீது
ஒன்றாகப் படிகின்றன. நிகழ்வுகளின் பிரதிகளாக இரு காலத்தின் சம்பவங்கள் ஒன்றை ஒன்று
ஒத்திருக்க கதாபாத்திரங்களின் உணர்வலைகள் ஒருவரிலிருந்து இன்னொருவரின் நினைவுகளை
மீட்டெடுத்தபடியும் நினைவுகளே நிகழ்வுகளாக தோற்றம் கொண்டபடியும் விந்தைகள்
நிகழ்கின்றன.
வீட்டை விட்டு
வெளியேறிப் போன பெரியம்மாவைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தந்தை
விஸ்வநாதனுடன் வாராணசிக்கு வரும் இதாவின் வழியாக இருபத்தைந்து வருடங்களுக்கு
முன்பு வாராணசியின் அதே படித்துறைக்கு வந்து நின்றிருந்த அவளது பெரியம்மா aaaராவின் எதிர்காலமும், aaaராவின் இறந்த காலம் வழியாக இதாவின் நிகழ்காலமும் காலம்
காலமாக உயிர்த்துறப்பின் நிலமாக அதன் தொன்மத்தை தாங்கி நிற்கும் வாராணசியின்
பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மள்ளர் சமூகத்தைச் சேர்ந்த படகோட்டியான
சோனுவுடனான இதாவின் சந்திப்பின் வழியே, இருபத்தைந்து
வருடங்களுக்கு முன்பு aaaரா புகைப்படக்கலைஞனான
லோத்தரை சந்தித்த நிகழ்வுக்குள் காலம் உட்புகுந்து உருமாறுகிறது.
"எத்தனை வினோதங்கள்
நிறைந்த வாழ்க்கையை யதார்த்தம் என்கிற பெயரில் எத்தனை தட்டையான
கலையாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்" (பக்கம் - 148) என்றொரு வாக்கியம்
வருகிறது. கதைசொல்லலின் மையச்சரடாக ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கும் பின்னணியாக
எதிரொலிக்கிறது இந்த வாக்கியம்.
ப்ரெஞ்சு காலாண்டிதழ்
ஒன்றில் வாராணசியின் அஸி கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நிர்வாணத் தோற்றத்தில்
எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கும் இளவயது பெண்ணின் நிழற்படம் குறித்த இருவரின்
விவாதத்தில் துவங்குகிறது நாவல் (ஆனால் காலவரிசைப்படி இச்சம்பவம் கதையின்
துவக்கமல்ல). விவாதத்தில் இருக்கும் இரண்டு ஆண்களில் படத்தை தனது காமிராக் கண்களில்
பதிவு செய்து பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமானதற்கு காரணமான லோத்தர் என்ற
புகைப்படக் கலைஞரும் இன்னொருவர் படத்தில் இருக்கும் பெண்ணின் கணவனும் தன்
மனைவியின் நிர்வாணத்தை முதல் முறையாக அந்த ப்ரெஞ்சு இதழ் மூலமாகவே கண்டவருமான
விஸ்வநாதன். விவாதத்தின் ஆரம்பப்புள்ளி கணவன் என்கிற முறையில் மனைவியின் நிர்வாண
நிழற்படம் கலை என்கிற ரீதியில் கூட வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று
ஒருபுறமும் அதை அவளின் மனப்பூர்வமான இணங்கலுக்குப் பிறகே பதிவு செய்தவனென்கிற
முறையில் படத்தில் இருப்பது வெறும் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடல்
அல்ல, அது
ஒரு பொதுத்தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கலையின் வெளிப்பாடு என்று
லோத்தரின் வாதமும் தொடர்கிறது. விவாதத்திற்கு ஊறு விளைக்காத வண்ணம் ஒரு பருவ
வயதுப் பெண்ணும் விவாதம் நடைபெறும் அறையில் இருக்கிறாள், அவள் பெயர் இதா, விஸ்வநாதனின் மகள், ஆனால் நிர்வாணமாக
படத்தில் இருக்கும் பெண்ணுக்குப் பிறந்தவளல்ல.
பிரபலமான ப்ரெஞ்சு
இதழில் வெளியாகியிருக்கும் நிர்வாண நிழற்படத்தின் நிஜ உடலுக்கு சொந்தமான பெண்ணின்
பெயர் aaaரா. அவளுக்கு உடன்
பிறந்தவர்கள் சுமதி மற்றும் ஊர்மிளா என்று இரண்டு சகோதரிகள். aaaரா மூத்தவள். aaaரா மற்றும்
கடைக்குட்டியான ஊர்மிளா இருவருக்குமிடையே பிறந்தவளான சுமதியும் அவளது முறைப்பையனான
விஸ்வநாதனும் பால்ய பருவம் முதலே காதலித்து வருகிறார்கள். சுமதி விஸ்வநாதன்
இருவருக்கிடையேயான காதலுக்கான தூது பரிமாற்றங்களை மூத்தவளான aaaரா மன உவகையோடு செய்து வருகிறாள்.
கதையின் போக்கில்
ஆதித்திருப்புமுனையாக வரும் ஜமீன் வம்சாவளியினரான ரெகுபதி நாயக்கரிடம், ஜமீன் பரம்பரையில்
தலைமுறை தலைமுறையாக கணக்குப்பிள்ளை உத்யோகத்தில் இருந்து வரும் பிராமணத்
தலைமுறையின் தற்போதைய ஆண்வாரிசான விஸ்வநாதன் கணக்குப்பிள்ளையாக சேருகிறார்.
ரெகுபதி நாயக்கரின் பல சில்மிஷமான போக்குகளைத் தொடர்ந்து தனது கணக்குப்பிள்ளை
உத்யோகத்தை நாசூக்காக விட்டு விட்டு அரசாங்கப் பணிக்குச் செல்கிறார் விஸ்வநாதன்.
பல தலைமுறைகளாக தொடரும் ஜமீன், கணக்குப்பிள்ளை உறவு
விஸ்வநாதன் ரெகுபதி நாயக்கரோடு முடிந்து போகிறது.
மொழியறிவுப் பரிட்சயம்
அவ்வளவாக இல்லாதபோதும் வெளிநாட்டு இதழ்களில் வெளிவரும் கவர்ச்சியான வாளிப்பான
பெண்களின் புகைப்படங்களைக் காண்பதும், பெண்ணுடல் மோகம்
சார்ந்த கதைகளில் கிளர்ச்சியூட்டும் தன்மை வாய்ந்த புத்தகங்களை மறைமுகமாக
தருவித்துக் கொண்டு படிப்பதோடு அவற்றில் படித்தவற்றை விஸ்வநாதனோடு பகிர்ந்து
கொள்வதும் ரெகுபதி நாயக்கரின் வாடிக்கையாகிப் போக, விஸ்வநாதனுடன் தனது
காதல் நேரங்களை செலவழிக்கும் போதெல்லாம் சுமதி பணியிட சம்பந்தமான அன்றாட
சமாச்சாரங்களை விஸ்வநாதனிடம் கேட்க, ரெகுபதி நாயக்கரின்
அசூயையை ஏற்படுத்தும் விதமான அதேசமயம் அதிலும் ஒருவித கலைத்தன்மை கொண்டதாகத்
தெரிகிற காமத்தின் பல்வேறு விதங்களைப் பற்றிய விஸ்வநாதனுடனான உரையாடல்களைப்
பற்றியே கேட்க நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் மூத்தவளான aaaராவின் அழகில் பித்துபிடித்து விடும் ரெகுபதி நாயக்கர்
தன்னைப் பற்றி நல்லபிப்ராயங்கள் aaaராவின் குடும்பத்தில்
ஏற்படுமாறு விஸ்வநாதனை ஏவ, அதனால்
aaaராவின் குடும்பத்தில்
ரெகுபதி நாயக்கர் மேல் ஏற்பட்டு விடும் அபாயமான பரபரப்பு விஸ்வநாதனுக்கும் aaaராவுக்கும் அவசரசவரமாக திருமணம் நடக்க காரணமாக அமைந்து
விடுகிறது.
வீட்டுக்குத் தெரியாமல்
ரகசியமாக தொடர்ந்து வந்துகொண்டிருந்த சுமதியின் காதலுக்கு தான் உறுதுணையாக இருந்த
போதிலும் aaaரா சுமதியின் இணங்கலைப்
பெற்றுக்கொண்டே விஸ்வநாதனைக் கரம் பிடிக்கிறாள். ஆனால் சுமதியின் அந்த இணங்கலில்
ஒருவித சுயநலநோக்கமும் எதிர்காலத்தில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு
திட்டமும் அடங்கியிருக்கிறது. திருமணம் ஆகி வருடங்கள் கடந்த பின்னரும் aaaரா விஸ்வநாதன் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்திற்கான
அறிகுறிகள் தென்படாமல் இருக்க, விஸ்வநாதனுக்கு சுமதியை
இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கப்பட தனது லட்சியத்தை அடைகிறாள் சுமதி.
ஆனால் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, தனது குடும்பத்தின்
மீது சமுதாயத்தின் பார்வையில் குறிப்பாக ரெகுபதி நாயக்கர் தன் குடும்ப கவுரவத்தில்
சேற்றை வாரி இறைக்கும் முன்பாக கடைசி சகோதரியான ஊர்மிளாவையும் விஸ்வநாதனுக்கு மணம்
முடித்து வைக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அந்த சகோதரிகளின் குடும்பத்தின் மீது விழ
இருந்த களங்க வலை ஊர்மிளாவால் தடுக்கப்படுகிறது. ஊர்மிளா குழந்தைப் பாக்கியம்
எய்தி ஒரு பெண் குழந்தையை ஈன்று விட்டு பிரசவத்திலேயே இறந்து போகிறாள். அவள் தான்
இதா.
ஆண்கள் இல்லாத
காரணத்தால் தனது அம்மாவின் திதி கொடுக்க விஸ்வநாதன் துணையோடு வாராணசி செல்லும் aaaரா கங்கை நதியின் நீராடலில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு
உயிர் திரும்புகிறாள். வாராணசி வரும் முன்பாகவும் ஒரு முறை கிணற்றில் நீர்
இறைக்கும் போது வழுக்கி உள்ளே விழுந்தும் பின்னொரு முறை பல்லி விழுந்த உணவை உண்டு
வாயில் நுரை பொங்கி வழிய பிரக்ஞை இழந்து கிடந்து மருத்துவமனைக்கு கொண்டு
சேர்க்கப்பட்டுமாக மொத்தம் மூன்று முறை மரணத்தின் வலுவான கை aaaராவின் கன்னி உடலைத் தழுவி தன்னோடு வந்து விடும்படி
வேண்டி கோரிக்கை வைத்து தோல்வியோடு திரும்புகிறது.
எந்தவித
குறிப்புகளையும் உணர்த்தாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று
விடும் aaaரா, விஸ்வநாதனுக்குள்
அவனால் கொடுக்க முடியாத இல்லற சுகத்திற்கான எதிர்வினை தான் அவளின் இந்த திடீர்
வெளியேற்றம் என்ற குற்றவுணர்வை மட்டும் விதைத்து விட்டுப் போகிறாள். இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு ரெகுபதி நாயக்கரின் கண்ணில் தென்படும் aaaராவின் நிர்வாணப் படம் வெளியான ப்ரெஞ்சு காலாண்டிதழ்
அவர் மூலமாக பழிவாங்கும் குரூரமும் ஆற்றாமையும் கலந்த எண்ணத்தோடு விஸ்வநாதன்
காணுமாறு அமைகிறது. தனது மனைவியின் நிர்வாணத்தை முதல் முறையாக அதுவும் இப்படி ஒரு
வெட்டவெளியான நிலையில் பார்க்கும் கொடூரம் விஸ்வநாதனுக்கு மனப்பிறழ்வை ஒத்த
சுயப்பிரக்ஞை துண்டிக்கப்பட்ட நிலைக்கு ஆழ்த்துகிறது. அதைக் காணும் சுமதியோ அந்த
இடத்திலேயே கதறி அழுது உயிரை விடுகிறாள்.
படத்தில் இருக்கும்
வாராணசியின் அஸி கட்டத்தின் பின்னணியை வைத்து அவளைத் தேடி விஸ்வநாதனும், இதாவும் ஓசூரிலிருந்து
வாராணசிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். aaaராவைத் தேடும்
முயற்சியில் அந்தப் புகைப்படத்தை எடுத்த மனிதரைத் தேட வாராணசியின் அத்தனை
படித்துறைகளும் நன்கு பரிச்சயமான சோனுவின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது.
சோனுவின் உதவியால்
லோத்தர் என்ற புகைப்படக் கலைஞனை கண்டடைகிறார்கள் இதாவும் விஸ்வநாதனும். முப்பது
வயதில் வீட்டை விட்டு வெளியேறிய aaaரா லோத்தருக்கு
அறிமுகமான ஏழு வருடங்களில் இறந்து போனது அவர்களுக்கு தெரிய வருகிறது. aaaரா தன்னோடு இருந்து ஏழு வருடங்களாக அவனது கலைப்பணிக்கு
ஆதாரமாக அவளது கன்னியுடலை அர்ப்பணித்த கதைகளையும், அவளது வாழ்நாள்
முழுவதும் அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மரணத்தின் புணர்ச்சியின் உச்ச
நிலையை ஒத்த கிளர்ச்சியையும், அதன் விடுபடல்
அவளுக்குள் ஏற்படுத்திய தன்னுடல் குறித்த பெருமித மனப்பான்மையையும், கலையின் வழியாக அவளது
வாழ்தல் காலத்தைத் தாண்டி நிலைத்திருக்கும் வகையான நிழற்படங்களுக்குத் தகுந்த
கலாப்பூர்வமான படிமியாக தன்னை முன்னிறுத்துவதற்கான சிந்தனைத் தேர்ச்சியுடன் கூடிய
அவளின் பரிபூரணத்துவம் பற்றியும் இதாவிடம் விவரிக்கிறார் லோத்தர்.
நாவலில் வரும் aaaரா, சுமதி, ஊர்மிளா மற்றும் இதா
ஆகிய நான்கு பெண் கதாபாத்திரங்களும் ஒவ்வொரு வகையில் ஒருவருக்கொருவர் முரணான
குணச்சித்திரங்களைக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வநாதனுடன் திருமணம் ஆகும் வரை
சுமதியின் காதலுக்காக அவளுடனே நேரத்தைக் கழிக்க நேரும் சமயங்களில் ரெகுபதி
நாயக்கருடனான பழக்கத்தினால் விஸ்வநாதன் விவரிக்கும் பெண்ணுடல் பற்றிய கலையம்சம்
நிறைந்த பார்வை aaaராவுக்குள் அவளை
அறியாமல் அவளுக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளே தன்னை நிர்வாணக் கோலத்தில் படம்
பிடிக்க அனுமதி கோரும் லோத்தரின் வேண்டுகோளுக்கு தன்னுடல் வெறும் காமம் சார்ந்த
காரணங்களுக்கப்பால் கலையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படக்கூடும் என்ற ஓர்மையில்
இணங்குவதற்கான காரணமாக அமைகிறது. இறப்பிற்குப் பிறகும் வாழ்தலின் உயிர்ப்பைக்
கொண்டிருக்கும் கலையம்சம் பொருந்திய தோற்றத்துடன் வெளிப்பட மூன்று முறை தனது
கன்னியுடலை தழுவிய மரணத்தின் கைகள் ஏற்படுத்திய கிளர்ச்சியும், அந்தக் கிளர்ச்சியைத்
தக்க வைத்துக் கொள்ள அவள் உள்மனம் வலியுறுத்தும் கன்னித்தன்மை பேணுதலும், படிமியாக தான் நிற்க
தனக்கு பின்புலமாக பிணங்கள் எரியும் வாராணசியின் பழங்கால படித்துறையும் அவளின் தேர்வாக
அமைகிறது.
தன்னாளுமை மிகுந்தவளான
சுமதி தான் செய்யும் எந்த ஒரு செயலும் அதை முன்னர் செய்த வழிமுறையை ஒத்திருக்காமல்
ஒவ்வொரு முறையும் அது புதிதான வழிமுறைப்படி செய்யப்பட வேண்டும் என்று எதிலும்
அதிகப்படியான உணர்ச்சிவயப்பட்ட குணாம்சங்களைக் கொண்டவள். விஸ்வநாதனுக்கு தன் மேல்
இருக்கும் ஈர்ப்பு நிலைத்திருக்க நாளுக்கு நாள் புதிது புதிதாக தன்னை அவனுக்கு
காட்டிக்கொள்ள வேண்டும் என்று வினோதமான நடவடிக்கைகளை செய்ய அவளைத் தூண்டுகிறது.
காதல் தினங்களில் அவள் செய்யும் பல பைத்தியக்கரத்தனமான செயல்கள் சுமதியின்
கதாபாத்திரம் மீது அமானுஷ்யத் தன்மை கொண்ட மர்மத்தை பூசுகிறது. aaaராவின் கன்னி கழியாமை முதல் அவளின் மரணச்சந்திப்புகள், வீட்டை விட்டு
வெளியேறினதற்கான காரணங்களின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக சுமதியின் வினோதமான
நடவடிக்கைகள் மூலமாக கட்டவிழ்கின்றன.
சுமதியின் வினோதமான
நடவடிக்கைகளுள் ஒன்று aaaராவுக்குப் பிறகு
இரண்டாம் முறையாக அவளைத் திருமணம் செய்து கொள்ளும் விஸ்வநாதனுடனான உடலுறவுகளின்
போதெல்லாம் தன்னுடல் அங்கங்களை விஸ்வநாதன் பார்க்க முடியாத இருளையே தேர்வு
செய்கிறாள். இருள் சிந்தனைகளின் வீச்சை அதிகப்படுத்தும் என்பதால் தன் அங்கங்களின்
ரகசியத்தை விஸ்வநாதன் தன்னிடம் மட்டுமல்லாது தன் சகோதரிகளிடத்தும் தேட வைக்க
இயலலுமாகையால் தான் அல்லாத பிறரிடத்திலும் கூட விஸ்வநாதனிடம் தன் இருப்பு குறித்த
ப்ரக்ஞையே சூழ்ந்திருக்கும் என்று எண்ணுகிறாள்.
நாவலில் ஒன்றுக்கு
மேற்பட்ட சம்பவங்களைத் தொகுத்து இணைத்துப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பத்தை புனைவின்
அசாத்தியத் திறமையோடு பா.வெங்கடேசன் கையாண்ட பகுதிகளில் உதாரணமாக
பார்க்கப்படவேண்டியவை, நாவலின்
இறுதிக் கட்டத்தில், தோற்றத்தில்
தன் பெரியம்மா aaaராவின் இருபத்தைந்து
வருடங்களுக்கு முந்தைய உருவ அம்சங்களை அச்சு எடுத்தது போல ஒத்திருக்கும் இதா, வாராணசியில்
தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் நடுஇரவில் போதை மயக்கத்தில் அந்த ப்ரெஞ்சு இதழில்
வெளியாகியிருக்கும் aaaராவின் நிர்வாண உடலோடு
தன் நிர்வாணத்தைப் பொருத்தி முயங்கி தன் மூலமாக aaaராவின் குரலை வாங்கி ஒலிக்கிறாள். குறிப்பிட்ட இந்த
நிகழ்வுக்கு சற்று முன்பு நடந்த நிகழ்வின் பகுதிகள் நாவலின் நடுப்பகுதியில்
வருகிறது. போதை மயக்கத்தில் தூக்கத்தில் எழுந்து மாடிப்படி ஏறிச் சென்று
மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்த கேளிக்கை நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி
தன்னுணர்வின்றி கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கீழிறங்கி கட்டிலுக்கு சென்று
படுக்கையில் வீழ்கிறாள் இதா. அவள் படியிறங்கி வரும் போது தடுமாறி விழாமல்
இருக்கும் பொருட்டு அவளைப் பின்தொடர்ந்து வரும் சோனு தாழ்பாள் திறந்தவாறு
கிடக்கும் அவளது அறைக்குள் நிழலுருவம் ஒன்றின் அசைவைப் பார்த்து ஸ்தம்பித்துப்
போகிறான். தன்னையும் தன் அப்பாவையும் தவிர வேறு யாரும் அந்த அறையில்
இருந்திருக்கவில்லை என்று மறுநாள் காலை சோனுவின் பிரமைத்தனத்துக்கு பதில்
கூறுகிறாள் இதா. அந்த நடுஇரவில் சோனு கண்ட நிழலுருவம் என்ன என்பது இதா aaaராவின் புகைப்படத்துடனான முயங்கலின் போதானதாக இருக்குமோ
என்ற ஊகம் வாசகர்களாகிய நமக்கு ஏற்படுகிறது. போதையின் மயக்கம் மட்டுப்பட்டு
தூக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் தாழ்ப்பாள் திறந்தவாறே கிடப்பதைக் கண்ட
திகைப்பில் சற்று யோசனைக்குப் பிறகு மெல்லிய குரலில் "சோனு" என்று
முணுமுணுக்கிறாள். இந்த ஒற்றை வார்த்தையின் மூலமாக இணைக்க முயலும் சம்பவங்களின்
குறிப்பை கதையின் போக்கில் உணர்த்திவிட்டு, காலத்தை கதைசொல்லலின்
தொனிக்கேற்ப வளைத்துக் கொள்ளும் பா.வெங்கடேசனின் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாவல் முழுவதும் பா.வெங்கடேசனின் இதுபோன்ற கற்பனையின் விஸ்வரூபம் பல இடங்களில்
பிரமிக்க வைக்கிறது.
பா.வெங்கடேசனின்
தனித்துவமே நீளமான வாக்கியங்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் வரும்
அடைப்புக்குறிகள் தான். கதைக்குள் நுழைய ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாகவே நிதானம்
தேவைப்பட்டது உண்மை தான் எனினும், ஒரு கட்டத்தில் அதுவும்
பிடிபடத் துவங்கி விட்டது. அதுவுமில்லாமல் இதுபோன்ற கதைசொல்லலுக்கு இந்த பாணி
மொழிநடையே உகந்தது என்னும் உணர்வும் ஏற்பட்டது.
வாசிப்பில் கொள்ள
வேண்டிய கவனக்குவிப்பை மேம்படுத்தும் பயிற்சியை பா.வெங்கடேசனின் தீவிரமான மொழி
அளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசிக்க சிரமமாக இருக்கிறது என்று
மேலோட்டமாக எதிர்மறையான விமரிசனங்களை பா.வெங்கடேசன் மீது வைக்கப்படுவது
தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அவரை விரும்பும் ரசிகர்களுள் ஒருவனான என் எண்ணம்.
இன்னும் சொல்லப்போனால், இத்தகைய
மொழியைக் கையாளும் திறமைக்காகவும் புனைவில் உலகம் முழுவதுமான அங்கீகாரத்தையும்
புகழையும் பெற்ற எழுத்தாளர்களுக்கு சற்றும் குறைச்சலில்லாத திறமையைப் பெற்றவர்
என்கிற காரணங்களுக்காகவுமே போற்றப்பட வேண்டியவர் பா.வெ.
வாசகன்
என்பதைத் தாண்டி ஒரு ரசிகனாக பா. வெங்கடேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்