Wednesday, 15 June 2016

கு.ப.ராஜகோபாலன் (1902 - 1944) By சாரு நிவேதிதா


கு.ப.ராஜகோபாலன் (1902 - 1944)


By சாரு நிவேதிதா


First Published : 12 June 2016 10:00 AM IST



http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/06/12/கு.ப.ராஜகோபாலன்-1902---1944/article3475813.ece

‘ராஜகோபாலன் நல்ல சிவப்பு, குள்ளம், மெலிந்த பூஞ்சை உடல். பூ மாதிரி இருப்பார். முழுசாக பத்து கிலோ எடை இருப்பாரா என்று சந்தேகம் வந்து விடும். சாப்பாடு கூட கொறிப்புதான். ‘இரண்டு இட்லி சாப்பிட்டேன்’ என்று இரண்டு விரல்களைக் காண்பித்து, கண்ணை அகட்டிக் கொண்டு சொல்வார் - ஏதோ இரண்டு பானை சோற்றைச் சாப்பிட்டது போல.

பல பெரியவர்களுக்குக் கிட்டுகிற ‘தனிப்பட்ட முக அமைப்பு’ அவருடையது. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்கு தடிக் கண்ணாடி. கண் சதையை அரிந்த பின்பு அணியும் பூதக் கண்ணாடி. அதற்குப் பின்னால் இரண்டு கண்களும் இரண்டு மடங்கு பெரிதாகத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பதுதான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்.

ராஜகோபாலனுக்குத் தீவிரமாக சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அது முகத்தில் தெரியும். எப்போது எழுதுவார் என்று எங்களுக்குத் தெரியாது. நட்டநடுநிசிக்கு வெகு நேரத்திற்குப் பிறகு எங்களை அனுப்பி விட்டுத்தான் அவர் எழுதியிருக்க வேண்டும். தீவிரமான சிந்தனையுடன் வேகமாக, குறுகிய நேரத்தில் செய்து விடுவார் என்று தோன்றுகிறது. மறுநாள் இரவு சந்திக்கும் பொழுது, எழுதி வைத்ததை, கதையையோ விமர்சனத்தையோ காண்பிப்பார். அடித்தல் திருத்தலின்றி, ஒரு முடிவான உணர்வோடு எதையும் எழுதியிருப்பார். செட்டாக, தெளிவாக எழுதியிருப்பார். ஒரு நேர்மையும் துணிச்சலும் பளிச்சென்று தெரியும் எழுத்து. அந்த நேர்மையிலும் துணிச்சலிலும் சத்தம், ஆர்ப்பாட்டம் ஏதும் மருந்துக்குக் கூட தொனிக்காது. கண்டிப்பான, பட்டுத் தெறித்த எழுத்து. அதே சமயம் மென்மையும் கண்யமும் அடக்கமும் நிறைந்த எழுத்து.




அது அவருடைய இயல்பு. பேசுவதும் மிக மென்மையான பேச்சு. சற்று தள்ளி உட்கார்ந்தால் காதில் விழாது. அபிப்பிராயங்களை அழுத்தமாக, உறுதியாகச் சொல்வார். நகைச்சுவையுடன் சொல்வார். புண்படுத்தாமல் சொல்வார்.’

கு.ப.ரா. பற்றிய தி.ஜானகிராமனின் சொற்சித்திரம் இது. கு.ப.ரா. பற்றி சிட்டி இப்படி எழுதுகிறார்:

‘கு.ப.ரா.வும் ந. பிச்சமூர்த்தியும் கும்பகோணத்தில் இருந்தார்கள். இருவரும் ‘மணிக்கொடி’க்கு அனுப்பிய எழுத்துக்கள் மூலம் சென்னையில் வ.ரா.வைச் சுற்றி இயங்கிய என் போன்றவர்களுக்குப் பரிச்சியமானார்கள். அவர்களிடமிருந்து தபாலில் கதையோ, கவிதையோ வரும் பொழுதெல்லாம் ஒரு பரபரப்பு ஏற்படும். புதுமைப்பித்தன், ராமையா போன்ற படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த எனக்கு இந்த கும்பகோணம் இரட்டையர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவல்... அப்போது பிச்சமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை வந்திருந்த பிச்சமூர்த்திக்காக ராமையா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட எங்களில் சிலருக்கு டாகூரையே சந்தித்த ஒரு பிரமை ஏற்பட்டது. தாடியுடன் கம்பீரமாகத் தோன்றிய பிச்சமூர்த்தியைப் பார்த்த பிறகு அவருடைய ஜோடியான ராஜகோபாலன் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்வதே எனக்கு ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருந்தது. சில மாதங்களுக்குள் நான் கும்பகோணம் சென்ற போது ராஜகோபாலனைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றேன். தோற்றத்தில் பிச்சமூர்த்தியை விட முற்றிலும் வேறுபட்டவராகக் காணப்பட்டது மட்டுமல்ல அதிர்ச்சிக்குக் காரணம், அழகு சொட்டும் கவிதைகளையும் கலைத்திறன் நிறைந்த கதைகளையும் எழுதிய ராஜகோபாலன், அன்று, நான் முதல் முதலில் சந்தித்த போது தம்முடைய பார்வையை இழந்திருந்தார்.’

அப்போது கு.ப.ரா.வுக்குக் கண்களில் சதை வளர்ச்சியால் பார்வை தடைபட்டிருந்தது. அவர் சொல்லச் சொல்ல அவரது சகோதரி கு.ப. சேது அம்மாள்தான் எழுதியிருக்கிறார். சேது அம்மாளும் அப்போது சிறுகதைகள் எழுதி பிரபலமாக இருந்திருக்கிறார். ‘மிகச் சிறிய வயதிலேயே கு.ப.சேது அம்மாள் கணவனை இழந்துவிட்டார். இது கு.ப.ராஜகோபலனைச் சங்கடம்கொள்ளச் செய்தது. 1943ஆம் ஆண்டு கு.ப.ரா. முயற்சிக்குப் பின் கு.ப. சேது அம்மாளுக்கு மறுமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு விரைவிலேயே சேது அம்மாள் காலமானார். கு.ப.ராஜகோபாலனுடைய பல கதைகள் சேது அம்மாளின் இளவயது வாழ்க்கையுடன் தொடர்புடையவை’ என்று எழுதுகிறார் தளவாய் சுந்தரம். கு.ப.ரா.வின் வாழ்க்கை பற்றிய இவரது அருமையான கட்டுரை ‘அழியாச் சுடர்கள்’ இணைய இதழில் கிடைக்கிறது.

மேலும் கு.ப.ரா. பற்றி சிட்டி:

‘பிள்ளையார் கோவில் தெருவில் பிச்சமூர்த்தியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்த கு.ப.ரா.வுடன் சில நாட்கள் தங்கியிருந்தது எனக்கு ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது. கீழே சாப்பிட்டு விட்டு மாடியில் அவருடைய அறைக்குப் படியேறிச் செல்லும் பொழுது நான் கு.ப.ரா.வைக் கை பிடித்து அழைத்துச் செல்வது வழக்கம். உண்மையில் அவர்தான் எனக்கு வழி காட்டினார். பல ஆண்டுகள் அவர் ஏறி இறங்கிப் பழகிய படிகள் எனக்குத்தான் புதியவை. அத்துடன் அவருக்கு அகக்கண் துணையும் இருந்தது. மாடி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்தேன். அந்த மாடியில் ஒரு ஜன்னல் வழியாக எதிர்ப்புறத்து புழக்கடைகளில் தோன்றிய செடி கொடிகள் மற்றும் குடும்ப நடவடிக்கைகள் முதலியவற்றைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கு.ப.ரா. சொன்னார்.

‘ரொம்ப சுவாரஸ்யமான காட்சிகளைப் பார்க்கலாம். இந்த ஜன்னல் ஒரு மாயாலோகத்தையே நமக்கு எடுத்துக் காட்டும்.’

நான் கண்ணால் கண்டு ரசித்ததை கண் பார்வை இழந்த கு.ப.ரா. அறிந்து விளக்கம் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து ஆங்கிலக் கவிஞன் கீட்ஸின் ‘Ode to a Nightingale' என்ற கவிதையிலிருந்து

Magic casements opening on the foam
Of perilous seas in feary lands forlorn

(தனிமை சூழ்ந்த மாயாலோகங்களில், மர்மச் சாளரங்களினூடே காணப்படும் அலைகடல் காட்சி)

என்று அவர் தம்முடைய மென்மையான குரலில் பாடிய போது அவருடைய திருஷ்டியின் அழகு நிறைந்த தன்மை எனக்குப் பளிச்செனப் பட்டது.’

நினைத்துப் பார்க்கிறேன். முன்கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று ஒருவர் சென்னையிலிருந்து கும்பகோணத்திலிருக்கும் இரண்டு எழுத்தாளர்களைச் சந்திக்க கிளம்பிப் போகிறார். இருவரும் பக்கத்துப் பக்கத்து வீடு. ஒருவர் வெளியூர் போயிருக்கிறார். இன்னொருவருக்குக் கண்களில் சதை வளர்ச்சியால் பார்வை போயிருக்கிறது. யாராவது கைப்பிடித்துத்தான் நடத்திச் செல்ல வேண்டும். அந்த நிலையில் அந்த சென்னைக்காரர் கண் பார்வை போய் விட்ட எழுத்தாளரின் வீட்டில் சில தினங்கள் தங்கி விட்டு வருகிறார்.

மேலே சிட்டி விவரித்துள்ள காட்சிகளை மீண்டும் மீண்டும் தியானித்துப் பார்க்கிறேன். கு.ப.ரா. என் கண் முன்னே கீட்ஸின் அந்தக் கவிதையைத் தன் மென்குரலால் பாடுகிறார்.

நான் கும்பகோணம் சென்றதில்லை. ஒருமுறை அங்கே சென்று அந்தப் பிள்ளையார் கோவில் தெருவை தரிசித்து வரலாம் போல் இருக்கிறது. அந்தத் தெருவில்தானே கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் புழங்கியிருப்பார்கள். பிச்சமூர்த்தி கு.ப.ரா.வை விட இரண்டு வயது மூத்தவர். தி. ஜானகிராமனும் எம்.வி. வெங்கட்ராமும் அந்த இரட்டையரை விட பதினெட்டு பத்தொன்பது வயது இளையவர்கள். அடுத்த தலைமுறை. ஆனாலும் பழகியிருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் நடந்திருப்பார்கள்.

தி. ஜானகிராமன் சொல்கிறார்:

‘நாங்கள் ராஜகோபாலனோடு பழகியது அவருடைய கடைசி காலத்தில்தான். அதாவது, ஒன்றரை வருட காலம். 1942 கடைசியிலிருந்து 1944 ஏப்ரல் வரை. நாங்கள் என்று என்னையும் கரிச்சான் குஞ்சுவையும் சொல்லிக் கொள்கிறேன். இன்னும் சற்று அதிக காலம் பழகியவர்கள் சாலிவாஹனன், திருலோக சீதாராம், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியவர்கள். சிட்டி, பிச்சமூர்த்தி என்று அவரோடு வெகு காலமாக நெருக்கமாக இருந்தவர்கள் திருச்சியிலும் செட்டிகுளத்திலும் இருந்தார்கள். இந்த ஒன்றரை வருட காலம் பழகியதும் கும்பகோணத்தில். அப்பொழுது ராஜகோபாலன், கண் பார்வையே போய் விடும் நிலையிலிருந்து சிகிச்சையால் மீண்டு, கும்பகோணத்தில் வசித்து வந்தார். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு திருலோக சீதாராம் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் நாங்கள் நேரில் பரிச்சயமானோம். அதற்குச் சில காலம் முன்பு என்று ஞாபகம். நான் தற்செயலாக ஆனையடி கோவிலுக்கு முன் அவரைச் சந்தித்து நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனக்கு இருபத்திரண்டு வயது அப்பொழுது. ‘ஹீரோ வொர்ஷிப்’பில் ஈடுபட்டுள்ள இளைஞன் பாணியில்தான் பேசினேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் கதைகளை வாசித்து ஏற்பட்ட பிரமிப்பையும், இலக்கிய உற்சாகத்தையும் பற்றிச் சொன்னேன். எல்லாம் மூன்று நிமிடங்களில் முடிந்து விட்டது. வீட்டுக்கு வாருங்களேன் என்று நேரம் சொன்னார். அன்று மாலை தொடங்கிய பேச்சு, நாள்தோறும் - இல்லை, இரவு தோறும் - சராசரி ஏழு மணி எட்டு மணி நேரம் நடந்து கொண்டேயிருந்தது.

ராஜகோபாலனோடு வம்பு பேச முடியாது. இலக்கியம்தான் பேச முடியும். வம்பு கூட இலக்கிய சம்பந்தமாகத்தான் இருக்கும். இலக்கியம் படைப்பவர்களின் குடும்பம், வரும்படி, தனி குணங்கள் - இவற்றைப் பற்றி இராது. ராஜகோபாலன் வெற்றிலை, புகையிலை நிறைய போடுவார். ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுத் தொடங்குகிற பேச்சு, நள்ளிரவு கடந்து, விடியற்காலை மூன்று மணி, நான்கு மணி வரை இழுத்துக் கொண்டே போகும். வெற்றிலை தீர்ந்து விட்டால் மூலையில் கிள்ளியெறிந்த வெற்றிலைக் காம்புகளை எடுத்து அவற்றில் சுண்ணாம்பைப் பூசிப் போட்டுக் கொள்வார். எனக்குக் கல்யாணம் ஆன புதிது அப்பொழுது. ஒரு சமயம் மேனாட்டு ஊராக இருந்திருந்தால், ஒரு நாளைப் பார்த்தாற்போல் விடியற்காலை நேரத்திலேயே வீடு திரும்பி வரும் காரணத்திற்காக விவாகரத்து வழக்குக் கூட நடந்திருக்கும்.’

***

கும்பகோணத்தில் கர்ண கம்ம என்ற தெலுங்கு பிராமண குடும்பத்தில் 1902-ல் பிறந்தார் கு.ப.ரா. தந்தை பட்டாபிராமய்யர். தாய் ஜானகி. தாயார் தெலுங்கு மொழியிலும் இசையிலும் புலமை படைத்தவர். கு.ப.ரா.வின் தமக்கை ராஜம்மாள். தங்கை சேது அம்மாள். ஆறு வயதில் குடும்பம் திருச்சி சென்றது. அங்கே உள்ள கொண்டையம்பேட்டை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் ராஜகோபாலன். ‘பிராப்தம்’ என்ற சிறுகதையில் அது பற்றி இப்படி எழுதுகிறார்:

மாதுவுக்கு ஆறு வயசான பொழுதே அவரைத் திருச்சிக்கு மாற்றி விட்டார்கள்.ஆகையால் அவனுக்கு நல்ல நினைவு வந்த நாள் முதல், திருச்சி கொண்டையம்பேட்டை என்ற அக்கிரகாரத்தில்தான் வாசம். அது பட்டிக்காடும் அல்ல,பட்டினவாசமும் அல்ல. பெரிய தோப்புக்குள் அமைந்தது போல எப்பொழுதும் குளுமையாக இருக்கும். இரண்டு சிறகுகளுக்குப் பின்னும் வாய்க்கால்கள். கிட்டே,திருமஞ்சனக் காவேரி என்ற பெரிய வாய்க்கால்; திருவானைக்காவலுக்கு அடுத்தது;கோட்டைக்கும் ஸ்ரீரங்கத்திற்கும் நடுவு என்பது போல அமைந்தது.

1918-ல் மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்று திருச்சி நேஷனல் காலேஜில் இண்டர்மீடியட் படித்தார் கு.ப.ரா. பதினெட்டு வயதில் தந்தை இறந்ததால் குடும்பப் பொறுப்பு அவர் மீது விழுந்தது. ஆனாலும் படிப்பை நிறுத்தி விடாமல் இண்டர்மீடியட்டில் தேறினார். பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. சேர்ந்தார். சிறப்புப் பாடம் சம்ஸ்கிருதம். கல்லூரி முதல்வர் சாரநாதன், ஆங்கிலப் பேராசிரியர் ஏ. ராமய்யர் இருவரது வழிகாட்டலில் ஆங்கில, சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஒருமுறை தாகூர் கும்பகோணம் கல்லூரிக்கு வந்து கவிதை வாசித்ததைக் கேட்டு, வங்க மொழியில் புலமை பெற்றிருந்த தனது ஆசிரியர் ஏ. ராமய்யரிடம் வங்க மொழியைக் கற்றார். பிற்காலத்தில் வங்க மொழியிலிருந்து நேரடியாக சில படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இது அவருக்கு உதவியாக இருந்தது.

ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் என்ற சம்ஸ்கிருத அறிஞரோடு சேர்ந்து ‘காளிதாசர்’ என்ற மாத வெளியீட்டை ஆரம்பித்தார். ஷேக்ஸ்பியர் சங்கம் என்ற இலக்கிய அமைப்பைத் தனது சக மாணவர்களோடும் ஆங்கிலப் பேராசிரியரான எஸ். நரசிம்மையங்காரோடும் சேர்ந்து துவக்கினார். அதில் இருபது இருபத்தைந்து அங்கத்தினர் இருந்தார்கள். அந்தச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடியது. சிலர் சொந்தமாக கதை கட்டுரை எழுதி வந்து படிப்பார்கள். சிலர் ஷேக்ஸ்பியரிலிருந்து நாடகப் பகுதிகளைப் படித்தும் நடித்தும் காட்டுவார்கள். கு.ப.ரா. அதில் தான் எழுதிய கவிதைகளைப் படிப்பார்.

அக்காலத்தில் கு.ப.ரா.வின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ந. பிச்சமூர்த்தி. ‘இரட்டையர்கள் என்று என்னையும் கு.ப.ரா.வையும் ஸ்ரீ வ.ரா. குறிப்பிடுவது வழக்கம். எங்கள் ஊரில் கூட எங்களை ராம - லக்ஷ்ஹ்மணர்கள் என்று சொல்வது வழக்கம்’ என்றும். கும்பகோணத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். படிப்புக்காக வெளியூர் போன போதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்தியோகம் பார்த்த காலத்திலும் கூட கும்பகோணம் வரும் போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம்’ என்றும் கு.ப.ரா.வுக்கும் தனக்குமான நட்பு பற்றிக் கூறுகிறார் ந. பிச்சமூர்த்தி. இருவரும் சேர்ந்து கும்பகோணத்தில் ‘பாரதி சங்கம்’ என்ற அமைப்பையும் நிறுவியிருக்கின்றனர்.

இருபத்து நான்காம் வயதில் கு.ப.ரா.வுக்குத் திருமணம் நடந்தது. அதாவது, 1926-ம் ஆண்டு. அந்தக் காலத்து வழக்கப்படி திருமணம் ஆவதற்கு இது அதிக வயதுதான். ஏன் இத்தனை தாமதம் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் காண இயலவில்லை. மனைவி பெயர் அம்மணி அம்மாள். திருமணத்துக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகச் சேர்கிறார் கு.ப.ரா. இது பற்றி ‘புனர்ஜன்மம்’ என்ற கதையில் குறிப்பிடுகிறார்.

இணைப்பு:

கு.ப.ரா. பற்றி தளவாய் சுந்தரம் http://azhiyasudargal.blogspot.in/2008/09/blog-post_2265.html



(தொடரும்)


கு.ப.ரா. - பகுதி 2


By சாரு நிவேதிதா


First Published : 19 June 2016 10:00 AM IST


யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவன் நான். நான் மட்டும் அல்ல; எழுத்தாளர் என்றாலே அப்படித்தான் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் தேசம், இனம், மொழி, ஜாதி, மதம் என்றெல்லாம் இருக்கமுடியுமா என்ன? ஆனால் இந்த விஷயத்தைச் சற்றே உணர்ச்சிவசப்படாமல் எட்டத்திலிருந்து அணுகவேண்டும். ஒவ்வொரு ஊர் மண்ணுக்கும் ஒரு விசேஷமான குணம் உண்டு. ஆம்பூர் பிரியாணிக்கு ஏன் அத்தனை ருசி என்றால் அது அந்த ஊர் நீரின் ருசி. அந்த நீரிலிருந்து விளையும் பயிரைத் தின்று வளரும் ஆடுகளின் இறைச்சி ருசியில் ஆம்பூர் நீரும் தாவரமும் கலந்திருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு ஒவ்வொரு இனக்குழுவுக்கும் என்று பிரத்தியேகமான உணவு, மொழி, கலாசாரம் எல்லாம் இருக்கிறது. அப்படி இல்லை; எல்லாம் ஒன்று எனச் சொல்வது பொய். இதில் உயர்வு தாழ்வுதான் கூடாதே ஒழிய வித்தியாசம் என்பது இருக்கத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் நெருங்கிய உறவினர்களான சி.வி. ராமனும், சந்திர சேகரும் ஒரே துறையில் நோபல் பரிசு பெற்றிருக்க முடியாது.

என் மனைவி அவந்திகா ஸ்ரீவைஷ்ணவ குலம். நான் கலவை. மைலாப்பூரிலும் மாம்பலத்திலும் குடியிருக்க வீடு பார்த்தபோது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசதியாகக் கிடைத்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அங்கே இருந்த எல்லாக் குடும்பங்களுமே பிராமணர்கள். நான் அங்கே போய் இருந்துகொண்டு மீனும் இறைச்சியும் சமைத்தால் அவர்கள் நிம்மதி கெட்டு விடும். அதே சமயம் என்னாலும் அசைவம் உண்ணாமல் வாழமுடியாது. பேசாமல் ஓட்டலில் சாப்பிட்டு விடேன் என்றாள் அவந்திகா. ஓட்டலில் அசைவம் சாப்பிடுவதை விட அசைவத்தையே விட்டு விடலாம்; அது டாஸ்மாக்கில் மது அருந்துவதைப் போல என்று சொல்லிவிட்டுக் கடைசியில் இஸ்லாமியர் அதிகம் வாழும் ஒரு தெருவில் தனி வீட்டுக்கு வந்துவிட்டோம். ஆனால் அவந்திகாவுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டும் பிரச்னை. பக்ரீத் அன்று மட்டும் வீட்டை விட்டு வெளியில் தலை காட்ட மாட்டாள்.

என் தந்தையின் பூர்வீகம் ஆந்திரா. அதனால்தானோ என்னவோ எனக்கு ஆந்திர உணவு என்றால் அப்படிப் பிடிக்கும். அக்கார அடிசிலுக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாய்க்கும் எப்படி நான் அடிமையோ அதேபோல கோங்குரா சட்னிக்கும். எண்பதுகளில் நான் தில்லியில் இருந்தபோது ஆந்திரா செல்லும் என் அலுவலக சகாக்கள் திரும்பி வரும்போது ஒரிஜினல் கோங்குரா சட்னியை எனக்காக எடுத்து வருவார்கள்.

இதற்கும் கு.ப.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் பிராமண இனக்குழுவைச் சார்ந்தவர் என்றால் - இன்றைய தினம் அப்படிப்பட்ட இனக்குழு அடையாளங்களை நாம் பெரும்பாலும் இழந்துவிட்டோம் என்ற போதிலும் - உங்கள் முன்னோர் எப்படியெப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டியது கு.ப.ரா.வும் க.நா.சு.வும். ‘எனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை; அதைவிட்டு நான் வெளியே வந்துவிட்டேன்’ என்று ஒருவர் சொல்லலாம்; அப்படித்தான் சொல்லவும் வேண்டும். ஆனாலும் அமெரிக்காவில் வாழ்ந்த அலெக்ஸ் ஹேலே என்பவர் தன் மூதாதையரைத் தேடி ஆஃப்ரிக்கா செல்கிறார். ஏழு தலைமுறைகளுக்கு முன்னே - பதினெட்டாம் நூற்றாண்டில் - காம்பியா என்ற தேசத்தில் கிந்த்தா குந்த்தே என்ற பதினேழு வயது இளைஞன் - மிருகங்களை வேட்டையாடிப் பிடிப்பது போல் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறான். வட அமெரிக்காவில் வசிக்கும் கருப்பின மனிதர்களின் வரலாற்றில் ஒரு மின்னல் தோற்றத்தைக் கொடுக்கும் நாவல் ‘வேர்கள்’ என்ற தலைப்பில் வெளியாகி உலக அளவில் பிரபலமானது.

அதே போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களாகத் திகழக் கூடியவை கு.ப.ரா. மற்றும் க.நா.சு.வின் எழுத்துக்கள். சென்ற நூற்றாண்டின் பிராமண சமூகம் எப்படி வாழ்ந்தது என்பது பற்றிய ஆவணம் மட்டுமல்லாது சர்வதேச இலக்கியத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன மேற்கண்ட இருவரின் எழுத்துக்களும்.





‘ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுதவேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது நிறைவேற மறுத்துக் கொண்டேயிருக்கிறது. அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப் போன்ற சொற்களிலும், பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும் உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்! இந்தத் தொகுப்பிலேயே உள்ள ‘மூன்று உள்ளங்கள்’, ‘படுத்த படுக்கையில்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘தாயாரின் திருப்தி’ - இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது ஒரு பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், கோர்வைகள்! எழுதியதை விட எழுதாமல் கழித்ததே முக்கால்வாசி என்று தோன்றுகிறது. ஆடம்பரம் இல்லாத எளிய சொற்களுக்குக் கூட, உணர்ச்சி முனைப்பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதிய பொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரண சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீர்யத்தை ஏற்றிய பாரதியின் வெற்றியைத்தான், ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக்கின்றன. அதனாலேயே சத்தமில்லாத வேகமும், சிக்கனமும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும், இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இதுவரை எழுதவில்லை. உண்மையாகவே மௌனங்கள் நிறைந்த சிறுகதைகளை அவர் ஒருவர்தான் எழுதியிருக்கிறார்.’

கு.ப.ரா. பற்றி இப்படிச் சொல்லியிருப்பவர் தி.ஜானகிராமன். கு.ப.ரா.வின் ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் தி.ஜா. சொல்வதைப் போலவே நானும் உணர்ந்தேன். கூடவே ஒரு வேதனையும் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி; இந்தியாவிலேயே ஆகச் சிறந்த நாவல்களை எழுதியிருப்பவர் என தி.ஜானகிராமனை தமிழ்ப் படைப்புலகம் கொண்டாடுகிறது. என்னுடைய கருத்தும் அஃதே. அப்படிப்பட்ட ஒருவர், தமிழில் இதுவரை யாராலும் விஞ்ச முடியாதவர் என கு.ப.ரா. பற்றிச் சொல்லியும் யாரும் கு.ப.ரா.வைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லையே? சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய எந்தக் கட்டுரையை எடுத்தாலும் அதில் புதுமைப்பித்தன் தான் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் எனக் குறிப்பிடுகிறார்கள். இல்லாவிட்டால் மௌனி. ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா. தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்தது தான் மற்றவர்களெல்லாம். புதுமைப்பித்தனின் படைப்புலகில் இருக்கும் பன்முகத்தன்மை (versatality) கு.ப.ரா.விடம் இல்லை என்பதால் - நனவோடை, மிகை எதார்த்தம், மாய எதார்த்தவாதம் போன்ற பல வகைகளில் (genre) கு.ப.ரா. எழுதவில்லை என்பதாலேயே அவரைப் பத்தோடு பதினொன்றாக, புதுமைப்பித்தன் விட்ட இடைவெளிகளை நிரப்பியவராக வைத்துவிடமுடியாது. ஏனென்றால், புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று வர்ணிக்கப்பட்ட மௌனி தன் வாழ்நாள் முழுக்கவும் எழுதியது 24 சிறுகதைகள். அந்த 24 சிறுகதைகளிலும் ஒரே கருதான். ஒரே கதையைத்தான் அவர் மாற்றி மாற்றி வேறுவேறாக எழுதிப் பார்த்தார். ஆனால் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் என எல்லா விமரிசகர்களாலும் அழைக்கப்படும் புதுமைப்பித்தன் மௌனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்கிறார்; ஆக சிறுகதையின் திருமூலரே ஒரே கதையை மாற்றி மாற்றி வாழ்நாள் முழுவதும் எழுதுகிறபோது ஆண் - பெண் உறவின் சிடுக்குகளைப் பற்றி மட்டுமே பேசிய கு.ப.ரா.வை எப்படி பத்தோடு பதினொன்றாகச் சொல்லலாம்? இதுபோன்ற இலக்கிய மதிப்பீடுகளில் நாம் கொஞ்சம் நம்முடைய தனிப்பட்ட ரசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சர்வதேச இலக்கியப் பார்வையோடு கொஞ்சம் பொதுவான நிலையிலிருந்து அவதானிக்க வேண்டும்.

அப்படி அவதானிக்க முடியாமல் போனதற்குக் காரணம், எந்தக் காலத்திலுமே ஆண் - பெண் உறவு என்று வருகிற போது அது ஒரு பேசக் கூடாத பொருளாகவும், அப்படியே பேசினாலும் அது மற்றவைகளையெல்லாம் விட அற்ப விஷயமாகவுமே கருதுவதால்தான் கு.ப.ரா. பத்தோடு பதினொன்றாகவும் இடைவெளிகளை நிரப்புபவராகவும் தோன்றுகிறார்.

‘வழிகாட்டி’ என்ற கட்டுரையில் தி. ஜானகிராமன் தனக்கும் கரிச்சான் குஞ்சுவுக்கும் வழிகாட்டியாக விளங்கிய கு.ப.ரா. பற்றி இப்படி எழுதுகிறார்:

‘நாங்கள் (தி.ஜா.வும் கரிச்சான் குஞ்சுவும்) சற்று அதிகமாக அவரைப் பற்றியே பேசியதற்குக் காரணம் ஒரு கோபம். ‘செக்ஸ்’ கதைகளை எழுதி அவர் தீட்டுப்பட்டு விட்டது போலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்து விட்டதாகவும் சில விமரிசகர்கள் அந்தக் காலத்தில் (முப்பதுகளில்) எழுதிக் கொண்டிருந்தார்கள். கற்பிழந்து ‘அந்தத்’ தெருவுக்குக் குடி போய் விட்ட பெண் பிள்ளை பற்றிப் பேசுவது போல் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களோடு பல நாட்கள் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ‘இதைப் படிக்கிறபோது, தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதுகிறானோ என்று கவலைப்படுகிறார்களோ?’ என்று இயல்பான மெல்லிய குரலில் பதில் அடங்கிய கேள்வி ஒன்றை அவர் எங்களிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது.’

‘சிறிது வெளிச்சம்’ என்ற கதையில் ஓர் இளம் எழுத்தாளர் சென்னையில் ஒரு வீட்டு ரேழி உள்ளில் ஒண்டுக் குடித்தனம் இருக்கிறார். கல்யாணமாகாதவர். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். கோபாலய்யர், சாவித்திரி. திருமணம் ஆனபோது சாவித்திரியின் வயது பதினைந்து. இப்போது பதினெட்டு இருக்கும். கோபாலய்யருக்கு எங்கோ ஒரு வங்கியில் வேலை. பகல் முழுவதும் வீட்டில் இருக்க மாட்டான். இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டு விட்டு வெளியே போவான். இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். எழுத்தாளர் கூச்ச சுபாவம் உள்ளவராதலால் கோபாலய்யர் அலுவலகத்துக்குப் போகும் முன்பே முற்றத்திலிருக்கும் குழாயை உபயோகித்துக் கொள்வார். கோபாலய்யரின் மனைவி சாவித்திரி யாருடனும் வம்பு பேச மாட்டாள். வெளியிலும் வருவதில்லை.

ஒருநாள் கோபாலய்யர் இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டும் போது சாவித்திரி கதவைத் திறக்கவில்லை; தூங்கி விட்டாள். எழுத்தாளர்தான் கதவைத் திறக்கிறார். உள்ளே போனவன் உறங்கிக் கொண்டிருந்த சாவித்திரியை எழுப்பி உதைக்கிறான். புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று சும்மா இருந்து விடுகிறார் எழுத்தாளர்.

மறுநாள் அவள் விழித்திருந்து கதவைத் திறந்தும் அடி விழுகிறது. எழுத்தாளர் அவனைத் தட்டிக் கேட்கிறார். போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன் என்கிறார். கோபாலய்யர் வீட்டை விட்டு வெளியே போய் விடுகிறான்.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள். இனி கு.ப.ரா.:

‘தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யௌவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. சிவப்பு என்று சொல்கிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.’

சாவித்திரி எழுத்தாளரின் வீட்டுக்குள் வருகிறாள். தன் இருண்டு போன வாழ்வைப் பற்றிச் சொல்கிறாள். புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...

தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறாள். முடியவில்லை. இடையில் எழுத்தாளர் உன் புருஷன் வந்து ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறான் என்று எச்சரிக்கிறார். ‘இனிமேல் என்ன செய்ய முடியும்? கொலைதானே செய்யலாம்? அதற்கு மேல்?’ என்கிறாள் சாவித்திரி.

எழுத்தாளர் சாவித்திரியைத் தன்னுடன் வாழ வருமாறு அழைக்கிறார். அவளுக்கு நம்பிக்கை இல்லை. ‘என் புருஷனைப் போல் என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்க மாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன்... மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளும் அல்ல. போதுமா?’

‘சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்பதை ருசி பார்த்திருக்கிறாயா?’

‘எது சுகம்? நகைகள் போட்டுக் கொள்வதா? என் தகப்பனார் நாகப்பட்டினத்தில் பெரிய வக்கீல். பணக்காரர். புடவை, ரவிக்கை நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம் நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.’

‘அதாவது...’

‘என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’

மேலும் சற்று நேர சம்பாஷணைக்குப் பிறகு அவளைத் தன் படுக்கையில் படுக்க வைக்கிறார் எழுத்தாளர்.

அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டிய இதழ்கள் ஓய்ந்து போனது போலப் பிரிந்தபடியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா, போதுமடி!’ என்று கண்களை மூடியவண்ணமே முனகினாள்.

‘சாவித்திரி, என்னம்மா?’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்.

‘போதும்!’

‘சாவித்திரி, விளக்கு...’

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

‘சிறிது வெளிச்சம்’ என்ற இந்தச் சிறுகதை ‘கலாமோகினி’யில் வெளிவந்த ஆண்டு 1943!

***

‘ஆண் பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவன் (கு.ப.ரா.) எழுத்தில் ஏதோ பச்சையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண் மனம் இப்படியா இருக்கிறது என்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் - உண்மையைப் பார்க்க, பேசப் பயந்தவர்கள் - கூறும் பேச்சு இது. அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு அத்தாட்சி. பச்சையாக இருந்தால் அது அவன் குற்றமன்று. ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம்’ என்று ந. பிச்சமூர்த்தி கூறுகிறார்.

(தொடரும்)

கு.ப.ரா. - பகுதி 3


By சாரு நிவேதிதா


First Published : 26 June 2016 12:00 AM IST



நவீன தமிழ் உரைநடையின் முன்னோடிகள் என பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா போன்றவர்களைச் சொல்லலாம். அதற்கு அடுத்து தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் சென்றவர்களில் அதிமுக்கியமானவர்கள் கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, வ.ரா., புதுமைப்பித்தன். முப்பதுகள், நாற்பதுகளில் நடந்த இந்தத் தமிழ் உரைநடை மறுமலர்ச்சியில் பிரதானமான இடம் கு.ப.ரா.வுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். சிறுகதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் கு.ப.ரா. பிற்கால சந்ததியினருக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை வெறும் சிறுகதை ஆசிரியராகவும், அதிலும் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே எழுதினார் என பத்தோடு பதினொன்றாகவும் கருதுவது கு.ப.ரா.வின் மகத்தான பணிக்குச் செய்யும் நியாயம் ஆகாது.

கு.ப.ரா.வும் சிட்டியும் (பெ.கோ. சுந்தரராஜன்) இணைந்து1937-ல் ’கண்ணன் என் கவி : பாரதியின் கவிதையும் இலக்கிய பீடமும்’ என்ற 144 பக்க நூலை எழுதியிருக்கின்றனர். ஆறு அணா விலையுள்ள அந்த நூலை ‘சுதந்திரச் சங்கு காரியாலயம்’ பதிப்பித்துள்ளது. ‘இம்முயற்சிக்கு மூல காரணமாகிய வ.ரா. அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று அதில் கண்டுள்ளது. அதன் முன்னுரையில் கு.ப.ரா. சொல்கிறார்:

‘நாங்கள் கையாளத் துணிவு கொண்ட வேலை மகத்தானது, புதியது; நவீன முறை இலக்கிய விமரிசனத்தில், அதிலும் பாரதி விமரிசனத்தில் முதல் ஏர் ஓட்டும் வேலை. நாங்கள் எண்ணின அளவு விஸ்தரிப்புடன் அதை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதை அறிவோம். நாத்து நட்டு விட்டோம். நடவு தானாக நடக்கிறது. எங்கள் கருத்துக்களும் நாத்துக்கள் போல இந்த நாத்தாங்காலில் நெருங்கி இருக்கின்றன. காலம் வரும் பொழுது பிடுங்கி நட வேண்டும்.

ஆதியில் எங்களுக்கு உற்சாகமளித்து இக்கட்டுரைகளை எழுதுமாறு தூண்டியவர் வ.ரா. (வ.ராமஸ்வாமி அய்யங்கார்). அவை தினமணியிலும் சுதேசமித்திரனிலும் முறையே வெளிவந்தன. இப்பொழுது அவைகளை புத்தக உருவில் வெளியிட அனுமதி கொடுத்ததற்கு ஆசிரியர்கள் ஸ்ரீ டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கும் ஸ்ரீ ஸி.ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். கு.ப.ரா., பெ.கோ.சு.’

உரைநடையில் சிறுகதை, நாவல் வடிவங்களைத் தவிர கட்டுரையில் பாரதிக்குப் பிறகான முன்னோடிச் சாதனையாளர் கு.ப.ரா. கட்டுரை இலக்கியம் பற்றி அவர் குறிப்பிடுகிறார்:

‘காவியம் இலக்கியத்தின் தலைச்சன் பிள்ளை என்றால் கட்டுரை அதன் கடைக்குட்டி. இடையே பிறந்தவை நாடகம், நவீனம், சரித்திரம் எல்லாம். கடைசியாகத் தோன்றினது என்ற சலுகையால்தானோ என்னவோ, இன்று கட்டுரை வசன நடையின் லட்சிய உருவமாக நின்று, இலக்கியத்தின் பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்க முயலுகிறது. கட்டுரை மூலம் எதையும் சொல்லலாம் என்னும்படியாக இன்று அது அவ்வளவு வளர்ச்சி பெற்று விட்டது. வாழ்க்கையே இன்று கட்டுரை கட்டுரையாகச் சித்திரிக்கப்படுகிறது. கவிதையின் ஏகபோகமாக வெகுகாலம் இருந்து வந்த இயற்கை வர்ணனையும் செயற்கை அழகுச் சித்திரிப்பும் இப்பொழுது கட்டுரையில் கவர்ச்சியான உருவம் பெறுகின்றன. விஞ்ஞானமே தெளிவு கொள்வதற்குக் கட்டுரையின் உதவியை நாடுகிறது. நாடகமும் நவீனமும் தனிச்சிறப்புடன் கையாண்ட குணச் சித்திரமும் சந்தர்ப்பச் சித்திரமும் கட்டுரையில் கலையுருவம் பெற்றுக் களிப்பளிக்கின்றன. மேலும், பல இடைக்காட்சிகளும் நுணுக்க ஆராய்ச்சிகளும் கூடக் கட்டுரைகளே என்று சொல்லி விடலாம்.’





கட்டுரை என்ற தலைப்பில் மற்ற இலக்கிய வடிவங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு கட்டுரை வடிவம் முன்னணியில் நிற்பதற்கான காரணத்தை அதில் விளக்குகிறார் கு.ப.ரா. கட்டுரையைச் சிறப்பாகக் கையாண்டவர்கள் என ஜி.கே. செஸ்டர்ட்டன் (1874 – 1936), Hilaire Bellock (1870 – 1953), இ.வி. லூகாஸ் (1868 – 1938) ஆகியோரைச் சொல்லலாம். இந்த மூவரில் ஜி.கே.சி.யின் கட்டுரைகளை நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். இவர்களைப் பற்றி கு.ப.ரா. மிகத் துல்லியமாக எழுதுகிறார்.

ஜி.கே.சி. என்று அழைக்கப்படும் ஜி.கே.செஸ்டர்ட்டன் பற்றி:

‘செஸ்டர்ட்டன் தாம் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் கையாளாத விஷயமே கிடையாது. அவர் எழுதுவதற்கு உதவியாயிருந்த உயிர்நாடிகள் இரண்டும் ஹாஸ்யமும் ஆழ்ந்த தத்துவ ஞானமும்தான். விபரீத அலங்காரம் என்று சொல்லக் கூடியதுதான் அவர் அதற்கு அளித்த மூச்சுக் காற்று. அர்த்தமற்றது என்பதை உயர்த்திக் கூறுவதிலிருந்து கடவுள் நம்பிக்கை என்பதை அறிவு மூலமாக உறுதி செய்வது வரை எல்லா விஷயங்களையும் வியக்கத்தக்க கூர்மையுடனும் ஆழத்துடனும் பத்து நிமிஷ நேரத்தில் (அதுதான் அசல் கட்டுரையின் வாசிப்புக் காலம்) ஓடுகிற ஓட்டத்தில் அவர் வர்ணிக்கிறார்.’

அடுத்து Robert Lynd (1879 - 1949), A.A. Mylne, ஆல்டஸ் ஹக்ஸ்லி பற்றி எழுதுகிறார். ‘ராபர்ட் லிண்ட், நூல் இழைகளைப் பிரித்தெடுப்பது போல், சிறுசிறு பகுதிகளை எடுத்து ஆராய்ந்து, அவற்றின் நுட்பமான அழகுகளையும் உண்மைகளையும் தெளிவாக்குகிறார். ‘லண்டன் வாசிகள்’ என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் லண்டன் நகரத்தில் வசிக்கும் பட்சிகளைப் பற்றி வெகு ருசிகரமாக எழுதுகிறார். நாம் இதுவரையில் அறிந்தும், முற்றிலும் உணர்ந்து அனுபவிக்காமல் விட்ட பல நுண்ணிய உணர்ச்சிச் சாயல்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறார். இந்த ‘ஞாபகப்படுத்தல்’தான் கலை என்றே சொல்லி விடலாம். அதுதான் கட்டுரையும்.’

‘ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். உள்ளத்தை வெட்டும் சோகத்தையும், வயிறு வெடிக்கச் செய்யும் ஹாஸ்யத்தையும் கொடுக்கும் இரண்டு உதாரணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். கோல்ட் ஸ்மித் எழுதிய ‘இரவில் காணும் நகரம்’ என்ற கட்டுரை மகத்தான நாடகம் ஒன்று ஊட்டக் கூடிய சோக ரஸத்தை ஊட்டுகிறது. ஸ்டீபன் லீகாக் எழுதிய கிண்டல் கட்டுரைகள், ஹாஸ்யக் கதையும் ஹாஸ்ய நாடகமும் கூடக் கொடுக்க முடியாத நகைச்சுவை இன்பத்தைக் கொடுக்கின்றன.’

‘தமிழில் கட்டுரை இப்பொழுது கைக்குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. கட்டுரையை எடுத்துக் காட்டும் அம்சங்கள் இரண்டுதான்: கருத்து, நடை. ஒன்று அதன் உம்மிசம், மற்றொன்று அதில் பதிந்திருக்கும் ரத்தினம். ஒன்று இல்லாமல் மற்றொன்று எடுபடாது. தற்சமயம் தமிழில் கட்டுரை எழுதுகிறவர்களிடத்தில் இந்த இரண்டு அம்சங்களும் பரிபூரணமாகச் சேர்ந்து தென்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. டாக்டர் சாமிநாதய்யர், சிதம்பரநாத முதலியார், ‘கல்கி’ இவர்களுக்கு நல்ல நடை, எழுதும் வன்மை இருக்கிறது. ஆனால் கருத்து மிகவும் குறைவு. வ.ரா., பிச்சமூர்த்தி கூட்டத்தினர் நல்ல கருத்துக்களைக் கையாளுகிறார்கள். நடை இன்னும் அவர்கள் கையில் இஷ்டம் போல் வளைந்து கொடுத்துத் தெளிவாக ஓடும் தன்மை பெறவில்லை. இந்த இரண்டு அம்சங்களும் பாரதியிடம்தான் ஓரளவு சேர்ந்து தென்பட்டன. ஆனால் அவரும் கட்டுரையின் முழு உருவத்தைக் கடைசல் பிடித்து எடுக்கவில்லை.’

இதுதான் கு.ப.ரா. எப்பேர்ப்பட்ட மேதமை இருந்தால் மேற்கண்ட வாக்கியங்களை எழுத முடியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். அ. சதீஷ் தொகுத்துள்ள ‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுதியில் ஐந்து குறுநூல்களும் 89 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ‘கண்ணன் என் கவி’ என்ற பாரதி பற்றிய சிறுநூலை பாரதி இறந்து பதினாறு ஆண்டு கழித்து எழுதுகிறார் கு.ப.ரா. அதாவது 1937-ல்.

‘சமீபத்தில் ஒரு சிநேகித கோஷ்டியிடையே பாரதியின் பேச்சு வந்தது. ‘நந்தனார் சரித்திரம் எழுதியிருக்கிறாரே அவர் தானே?’ என்று ஒரு படித்த நண்பர் (வக்கீல்) கேட்டார். ஒரு பானைச் சோறாகிய நமது பொதுஜன கலைஞானத்திற்கு இந்த ஒரு சோறு பதமல்லவா?’ என்று துவங்கும் இந்த நூலில் பாரதியை மகாகவி என்று காரண காரியங்களோடு நிறுவுகிறார் கு.ப.ரா.

1936-ல் காரைக்குடியில் வ.ரா. பாரதியின் ஒரு வரிக்கு நிகராக ஷேக்ஸ்பியரோ, ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசி அவரை மகாகவி என்று சொல்ல, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கல்கி போன்றவர்கள் வால்மீகி, காளிதாஸன், ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்கள்தான் மகாகவிகள்; பாரதி தேசிய கவி மட்டுமே என்று சொல்லி வ.ரா.வின் கூற்றை மறுத்தார்கள். இங்கே பாரதியின் சமகாலத்தவரான உ.வே.சாமிநாதய்யர் கூட பாரதியை நிராகரித்தவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் கு.ப.ரா. எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற நூலின் பின்னணி.

‘தேசிய கீதங்களைப் பாடின பாவம்தான் பாரதியை தேசபக்த கவியாக்கி விட்டது போலும்! ஸ்ரீ ரவீந்திரரின் முதுமை நூலாகிய ‘கீதாஞ்சலி’ ஆங்கிலத்தில் முதலில் பிரசித்தி அடைந்ததால்தான் அவர் ஒரு ‘வேதாந்தக் கவி’ என்று முத்திரை போட்டு அலமாரியில் அடுக்கப்பட்டு விட்டார்! ஒருவருடைய கவிதையின் ஒரு அம்சம் மட்டும் பிரபலமடைவதால் அதில் அதற்கு மேற்பட்ட அம்சங்களும் இருக்கின்றன என்பது அறியப்படாமலே போகிறது.’

இப்படிச் சொல்லும் கு.ப.ரா.வும் பின்னாளில் அவரது சிறுகதைகளுக்காக மட்டுமே அறியப்பட்டது ஒரு நகைமுரண் என்றே சொல்லவேண்டும்.

பின்னர் அந்த நூலில் தேசிய கவி என்ற சொற்பிரயோகமே அடிப்படையில் தவறு என்று விளக்குகிறார் கு.ப.ரா. அந்த விளக்கம் கு.ப.ரா.வை ஒரு மகத்தான ஆளுமையாகவும் கால தேச எல்லைகளைத் தாண்டிய கலைஞனாகவும் காட்டுகிறது. தேசிய கவி என்ற பதத்துக்கு அர்த்தமில்லை என்பதன் காரணம், ‘கவியும், கவி வாக்கும் ‘நிரந்தரம்’ என்ற வகையில் எப்பொழுதும் காலதேச வர்த்தமானங்களுக்கு மீறிச் சென்றே இருக்கவேண்டும். அப்படியிருப்பதற்கு மொழி ஒருக்காலும் தடங்கலாகாது. கவிதையில் இந்த எல்லைகளுக்கு மீறிய ஒரு கொள்கையோ, அபிப்பிராயமோ இருந்து கொண்டுதான் அதற்கு எல்லையற்ற உயிரை அளிக்கிறது.

உதாரணமாக, இதுதான் ஆங்கிலக் கவி ஷெல்லியின் கவிதையில் ‘ஸ்பிரிட் ஆஃப் லைஃப்’ ஆகவும், ரவீந்திரரின் கவிதையில் ‘ஜீவன தேவதை’யாகவும் பாரதியின் கவிதையில் ‘சக்தி’யாகவும் பேருருக் கொண்டு பரவி நிற்கிறது. இந்தத் தத்துவத்தின் நோக்கிலிருந்து அவரவர்களுடைய எழுத்துக்களை ஒரே ஒரு தரிசனமாகக் காணலாம். எல்லா மகாகவிகளின் கிரந்தங்களிலும் இப்படிப்பட்ட ஒரு பேரெண்ணத்தை நிச்சயமாக நிர்ணயிக்கக் கூடும்.

இந்தத் தத்துவத்தின் பெயர் (நாமம்) கவிதை. உருவம் (ரூபம்) காவியம். இந்த நாமரூபத்தை அநேக கவிஞர்கள் அநேக விதமாக வரையறுத்திருக்கிறார்கள். கவிகளே அதை வர்ணித்திருக்கும் முறை அவரவர்களுடைய தனி அனுபவத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, வோர்ட்ஸ்வர்த் என்னும் கவி, கவிதையை ‘உணர்ச்சி பொங்கியடங்கியபின் ஏற்படும் அமைதியில் திரும்பி அனுபவிக்கப்படும் ஒரு ரசப் பெருக்கு’ என்கிறார். ஷெல்லி, ‘மனிதனின் உள்ளத்தில் அடிக்கடி தோன்றும் வானக ஆவேசத்தை வாக்கில் நிரந்தரமாக்குவது கவிதை’ என்கிறார்.

மாத்யூ ஆர்னால்டு என்ற ஓர் அறிஞர் ‘வாழ்க்கையின் ஆராய்ச்சியே கவிதை’ என்கிறார். இம்மூன்று வகையிலும் கவிதைக்கு ஏற்படும் உருவமானது ஒரு சிறு காவியமாகவே இருக்கும். ஏனெனில் ஒரு ரசப்பெருக்கோ, ஆவேசமோ, அல்லது நிலையோ நீடித்திருக்க முடியாது. அது எப்பொழுதுமே தோன்றி மறையும் குணமுடையது. மகா காவியம் என்ற பெயருடையது இப்பேர்ப்பட்ட பல தனி சிறு காவியங்களின் இணைப்பே தவிர, எக்காலத்திலும் ஒரு நீண்ட மனோநிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. பெருக்கு வடியத்தான் வேண்டும். மின்னல் மறையாமல் நிலைக்குமா? மகா காவியத்தை அநேக தனிப்பாடல்கள் பதிந்த வசன அணியென்றும் சொல்லலாம். கதைப் பிணைப்பாகிய இந்த வசனத்தின் தங்க உம்மிசத்தில் பதிவு கொண்ட நவரத்தினங்கள். (இவ்விடத்தில் வசனமென்பது கவிதையுணர்ச்சியற்ற செய்யுட்களைக் குறிக்கிறது.)

இந்த முறையில்தான் ராமாயணம், ரகுவம்சம், கம்பராமாயணம், பேரடைஸ் லாஸ்ட், ப்ராமெத்யூஸ் அன்பவுண்ட், ஹைப்பீரியன், டைநாஸ்ட்ஸ் முதலியவை மகாகாவியங்கள்...’

இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கத்தக்க ‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுப்பில் உள்ள முதல் நூலில் உள்ள ஆரம்பப் பக்கங்களே இப்படி இருக்கின்றன. அடுத்து, ஈ.ஜே. தாம்சனின் தாகூர் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரவீந்திரர் பற்றி விளக்குகிறார். தாகூரையும் இன்னும் பல வங்காளி கலைஞர்களையும் மூல மொழியிலேயே படித்தவர் கு.ப.ரா. மட்டுமல்லாமல் பங்கிம் சந்த்ர சட்டர்ஜியின் துர்க்கேச நந்தினி, ஹிரண்மயி, மிருணாளினி, ராதாராணி ஆகிய நான்கு நாவல்களையும், ஹரி பிரஸாத சாஸ்திரி எழுதிய காஞ்சன மாலை என்ற நாவலையும் வங்காளத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பங்கிம் சந்த்ர சட்டர்ஜிக்கு கு.ப.ரா. இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் என்ன? அவரே சொல்கிறார்: ‘பங்கிம் சந்திரர் 1838-ல் பிறந்து 1894-ல் மறைந்தவர். இந்திய நாவலின் தலைக்காலத்திலே தோன்றியவர். நவீன வசன இலக்கியத்தின் மூல புருஷர்களிலே ஒருவர். அவருக்குப் பிறகுதான் தாகூரும் சரத் சந்திரரும் வங்காளி இலக்கியத்தில் வசனத்தை அவ்வளவு சிறப்பு மிக்க கருவியாக்கினர்.’

மீண்டும் பாரதி பற்றிய கு.ப.ரா. நூலுக்குச் செல்வோம்.

‘பாரதியினுடைய கவிதையின், இடை பிங்களை என்ற இரண்டு நாடிகளாகச் சொல்லக்கூடிய, கருத்துருக்கமும் உவமைத் திறமையும், அவ்வளவும் அவருடையதேயானாலும் அவற்றின் அமைப்பில் பாரதியின் கண்முன் இரண்டு லட்சிய புருஷர்கள் இருந்திருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் ஷெல்லி. மற்றொருவர் காளிதாசன். இவ்விருவர் நூல்களையும் பாரதி பாவ சுத்தத்துடன் படித்துப் போற்றியிருப்பது எல்லோருமறிந்த விஷயம். கருத்து உருக்கத்திற்குக் காரணமான ‘லிரிக்’ என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் தனிப்பாடலின் உருவம் நவீன இலக்கியத்தில் ஷெல்லியைப் போல யாராலும் கையாளப்படவில்லையென்பது ஆங்கில விமர்சகர்களின் அபிப்பிராயம்.

அவ்வுருவத்தை பாரதி அதிசய வேகத்துடன் கையாண்டிருக்கிறார். ‘ஊழிக் கூத்து’, அதனுடைய முடிமணிகளில் ஒன்று. ஷெல்லியின் ‘மேற்குக் காற்று’, தாகூரின் ‘ஊர்வசி’, பிரான்சிஸ் தாம்ஸனது ‘ஹ்வ்ண்ட் ஆப் ஹெவன்’ (Hound of Heaven) முதலியன அந்த ‘லிரிக்’ அமைப்பின் பூரணப் பொலிவிற்கு உதாரணங்கள். உவமையில் காளிதாசனுடைய சிறப்பும் புதுமையும் பாரதியின் கவிதையில் வெகு காலத்திற்குப் பிறகு மறுபடி இந்திய இலக்கியத்தில் இரண்டாவது தடவையாகத் தோன்றுகின்றன. முதல் தடவை ரவீந்திரரின் கவிதையில்.’

***

‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுப்பில் அடுத்த சிறு நூலாக வருவது ஸ்ரீ அரவிந்த யோகி. இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றோடு இணைத்து அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார் கு.ப.ரா. அடுத்த நூல் ‘உலக ஒற்றுமை’. அதில் மார்க்ஸுக்கும் காந்திக்குமான வித்தியாசத்தை விளக்குகிறார்.

(தொடரும்)

கு.ப.ரா. - பகுதி 4

First Published : 03 July 2016 10:00 AM IST


சுமார் நாற்பது ஆண்டுகளாக இடைவெளியே விடாமல் எழுதி வருகிறேன். ஏதேனும் ஒரு பத்திரிகையிலாவது என் கட்டுரை வந்துவிடும். தமிழில் பத்திரிகை கிடைக்காத போது நான்கைந்து ஆண்டுகள் மலையாளப் பத்திரிகைகளான கலா கௌமுதி, மாத்யமம், மாத்ருபூமி ஆகிய மூன்றிலும் எழுதினேன். முதலில் மாத்யமம் பத்திரிகையில் தொடங்கியது. உடனே மற்ற இரண்டும் என் எழுத்தைக் கேட்டன. மூன்று ஆண்டுகள் ஒரே சமயத்தில் அந்த மூன்று வாரப் பத்திரிகைகளிலும் எழுத நேர்ந்தது. இதை ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்.
இப்படி ஓர் அடர்த்தியான எழுத்து வாழ்வில் இப்போது தினமணி இணையத்தளத்தில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு பத்தியை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், அ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். இதுவரையிலான எழுத்து வாழ்வில் இந்த அளவு தோய்ந்து எதையும் எழுதியதில்லை. ‘எனக்கு உங்களுடைய கட்டுரைகள் பிடிக்கும்.’ பொதுவாக பலரும் இப்படி என்னிடம் சொல்வதைக் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு அவமானமாக இருக்கும். ஏனென்றால், கட்டுரையில் என் உயிரை உருக்குவதில்லை; நாவல்களே என் அடையாளம். அப்படி நினைக்கும் நான் இந்தத் தொடரை என் நாவல்களுக்கும் மேலானதாக நினைக்கிறேன். ஏனென்றால், நானெல்லாம் தூசு என்று நினைக்கத்தக்க அளவு சாதனைகளைச் செய்திருக்கிறார்கள் நமது முன்னோடிகள். அதற்காக அவர்கள் செய்திருக்கும் தியாகங்களை நினைத்தால் மனம் பதறுகிறது; கண்கள் கலங்குகின்றன; நெஞ்சு துடிக்கிறது. அவர்கள் எனக்குப் பணித்ததை நான் எழுத நேரும்போது நான் நானாக இல்லை. கடந்த பன்னிரண்டு மாதங்களாக எனக்கென்று தனித்த வாழ்க்கை எதுவும் இல்லாமல் போனது. எப்போதும் எந்நேரமும் என் ஆசான்களோடு கூடவே நேரம் கழிகிறது. உங்களுடைய அடுத்த நாவல் எப்போது என்ற கேள்வியை நான் தினந்தோறும் எதிர்கொள்கிறேன். அதற்குப் பதிலாக என் மனம், பழுப்பு நிறப் பக்கங்கள், பழுப்பு நிறப் பக்கங்கள் என்றே ஸ்மரிக்கின்றன.
இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது.
இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைத்தீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்:
அன்புள்ள சாரு...  
இந்த வாரம் தினமணியில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். குபராவைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் அதீத உறவுகளைப் பற்றி எழுதும் சிறுகதை ஆசிரியரைப் போல் ஒரு பிம்பத்தை யாரோ தவறாக ஆவணப்படுத்திவிட்டார்கள். இலக்கியம் பற்றிய விசாலமான பார்வையும் படிப்பும் சிந்தனையும் கொண்ட ஒரு பிரக்ஞையுள்ள கலைஞனை உங்கள் கட்டுரை மூலம் கண்டறிகிறேன்.   
இத்தகைய தகவல்கள் மிக அடிப்படையாக ஒரு இலக்கிய வாசகனுக்கும் பின்வரும் தலைமுறைகளுக்கும் உபயோகப்படும். ஒரு கவிஞனின் ஏதாவது ஒரு கவிதை அம்சத்தை மட்டும் 'மேய்ந்து விட்டு' அவனுக்கு அதையே ஓர் அடையாள முத்திரையாக செய்துவிடுகிற அசிரத்தையான மதிப்பீடுகள் இன்றும் நேருகின்றன. கு.ப.ரா அன்றே இதை ஊகித்து சுட்டிக் காட்டியிருக்கிறார். உங்கள் ஊக்கமான இந்த இலக்கியப் பணி தொடரட்டும்.

அன்புடன்,  
எஸ். வைதீஸ்வரன்.
27.6.2016.

எஸ். வைதீஸ்வரன் பற்றி யாருக்கும் அறிமுகம் தேவையில்லை. ‘எழுத்து’ காலத்திலிருந்து இன்று வரை எழுதி வருபவர். தமிழின் முக்கியமான கவி ஆளுமை. உரைநடையும் எழுதுகிறார். அவர் வசித்த பகுதிக்கு ஒருமுறை இந்திரா காந்தி வந்ததையும் அதனால் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு விபரீதம் பற்றியும் அவர் எழுதியிருந்த கட்டுரை மறக்க முடியாத ஒன்று. உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள் என அவரிடம் ஒருமுறை கேட்டுக்கொண்டேன். ஏனென்றால், அவருடைய வாழ்க்கைச் சரிதம் அவருடையதாக மட்டும் இருக்காதே? சி.சு. செல்லப்பா போன்ற மகத்தான ஆளுமைகளோடு பழகியவர் ஆயிற்றே? செல்லப்பா எப்படி இருப்பார்? எப்படிப் பேசுவார்? அடிக்கடி கோபப்படுவாரா? க.நா.சு. மாதிரி காப்பிப் பிரியரா? சாப்பாட்டில் அவருக்கு என்ன பிடிக்கும்? இப்படி ஆயிரம் விஷயங்களைச் சொல்லலாமே?
ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்றார் வைதீஸ்வரன். இன்னும் நிறைய எழுதவேண்டும். இதையெல்லாம் இங்கே கு.ப.ரா.வை இடையீடு செய்து சொல்வதற்குக் காரணம் இந்த வரிகள்தான்: ‘கு.ப.ரா.வை வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் அதீத உறவுகளைப் பற்றி எழுதும் சிறுகதை ஆசிரியரைப் போல் ஒரு பிம்பத்தை யாரோ தவறாக ஆவணப்படுத்தி விட்டார்கள்.’ அந்தப் பிம்பத்தை ஓரளவுக்காகவாவது நேர் செய்ய வேண்டும் என்பதுதான் என் சேவகம். இது போலவே மற்ற முன்னோடிகளின் விஷயத்திலும். செல்லப்பா என்றால் வாடிவாசல், எழுத்து பத்திரிகை. க.நா.சு. என்றால் விமரிசகர். ஆனால் செல்லப்பாவின் சுதந்தர தாகமோ ஒரு நூற்றாண்டின் கதையைச் சொல்லும் காவியமாக அல்லவா விளங்குகிறது? கு.ப.ரா.வின் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால், தமிழ் தெரிந்த அத்தனை பேரையும் சேவித்து இந்த நூலைப் படிக்கச் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. உலகில் சில புத்தகங்களுக்கே அப்படிப்பட்ட பெருமை உண்டு. அதைப் படித்தால் அதைப் படிப்பதற்கு முன்பு இருந்த நம் ஆளுமைக்கும் அதைப் படிப்பதற்குப் பிந்தைய ஆளுமைக்கும் பெரும் வித்தியாசத்தை உண்டு பண்ணி விடும். மகாத்மாவின் சத்திய சோதனை அப்படிப்பட்ட ஒரு மகத்தான நூல். என்னைப் பொறுத்தவரை, ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானமும், செல்லப்பாவின் சுதந்திர தாகமும் அப்படிப்பட்ட நாவல்கள்தான். காரணம், இந்த மூன்றுமே மகாத்மா சம்பந்தப்பட்டவை. இந்த மூன்று நூல்களிலும் மகாத்மா தான் முக்கிய பாத்திரம்.
அப்படி நம் ஆளுமையிலேயே பெரும் மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய புத்தகம் கு.ப.ரா. கட்டுரைகள். இந்த நூலை இளைஞர்கள் அனைவரும் படித்தால் நம் சமூகம் இப்போது இருப்பதை விட பல நூறு மடங்கு மேம்பாடு அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை வாசிக்கும் அத்தனை பேரும் அடையாளம் பதிப்பகத்தின் கு.ப.ரா. கட்டுரைகளை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களுக்கும் இதைப் பரிசாக அளியுங்கள்.
நூலிலிருந்து ஒரு சில இடங்களைப் பார்ப்போம்.
‘கார்ல் மார்க்ஸ் உபதேசம் செய்த சமதர்ம வாதம் - கம்யூனிஸம் - பௌதிகப் பொருளுண்மையை ஆதாரமாகக் கொண்டது. நமது மனத்திற்கு எட்டாதது இன்னும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சஞ்சலப்படாமல், ‘இதுதான் நிஜம்; உலக இன்பங்கள்தான் முடிவு; மேலே ஒன்று கிடையாது. மேலே இருக்கிறது என்று சொல்லுகிறவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள். இந்த எண்ணத்தோடு முழுச் சக்தியுடன் வாழ்க்கையைச் சுவைத்து அநுபவிக்க வேண்டும்; அதில் தென்படும் மனித சுபாவத்தை அனுசரித்தே தான் எல்லாம் செய்ய வேண்டும்’ என்ற சார்வாக (உலகாயத) வாதம்தான் அவருடையது. அவருக்கு நேர் விரோதமான மனப்பான்மை பிரௌனிங் என்ற ஆங்கிலக் கவியினுடையது. ‘வாழ்க்கை என்பது ஒரு பகுதிதான்; ஒரு வட்டத்தின் சிறு வளைவுதான் அது. வட்டம் பூர்த்தியாவது மேல் வாழ்வில். மேல் வாழ்வைப் பெறத்தான் வாழ்க்கையே ஏற்பட்டது. சத்திரம் வீடாகுமா? வாழ்க்கை தங்குமிடம்தான்’ என்பது அவர் கொள்கை. - இதற்கு அடுத்த வாக்கியத்தில்தான் கு.ப.ரா.வின் மேதமை பளிச்சிடுகிறது - ‘இரண்டு கட்சிகளுக்கும் பெருத்த பலம் இருக்கிறது.’
அடுத்து சில பத்திகள் தாண்டி இரண்டையும் இப்படி இணைக்கிறார் கு.ப.ரா.:
‘ஒற்றுமை என்பதுதான் என்ன? நேர் எதிரிடையான போக்குக் கொண்டிருக்கும் பௌதிக வாதமும் லட்சிய வாதமும் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் ஒற்றுமை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். நம் நாட்டில் இந்த சூட்சுமத்தை வெகு அழகாயும் சுருக்கமாயும் ‘அம்ருதம் இஹ பவதி’ என்ற வாக்கியத்தில் சித்தாந்தம் செய்து விட்டார்கள். ‘இங்கே - இந்த வாழ்க்கையில் - அழிவின்மை தோன்ற வேண்டும்’ என்பதுதான் ஒற்றுமை. ‘இங்கே’ என்பது கையிருப்பு; ‘அழிவின்மை’ என்பது அவா. இரண்டும் ஒன்றாக வேண்டும். அதாவது, எட்டாத நிலையிலுள்ளதை எட்டிப் பிடிக்க இடைவிடாத ஆவல் கொள்ள வேண்டும். பிற்காலத்தில், நம் நாட்டில் கையிருப்பை அலட்சியம் செய்து, அவாவில் மட்டுமே லட்சியம் வைத்தார்கள். நாடு சிதறி விட்டது. இப்பொழுது மேல்நாட்டார், கையிருப்பில் மட்டுமே லட்சியம் வைத்து, அவாவை நிராகரிக்கிறார்கள். அவர்களும் சிதறுகிறார்கள். இரண்டுக்கும் ஒற்றுமை, சமரசம் எப்போது ஏற்படும்?’
உலகின் சமகால வரலாற்றையும் இந்தியாவின் பத்து நூற்றாண்டு வரலாற்றையும் ஒரு பத்தியில் விளக்கியிருக்கிறார் கு.ப.ரா. அதனால்தான் அவரை மேதை என்று குறிப்பிட்டேன்.
இன்னொரு இடத்தில் கூறுகிறார்: ‘உலகத்தில் சமாதானமும் சமத்துவமும் நிலவ வேண்டும் என்றால், அதில் இப்பொழுது இடைவிடாமல் நடக்கும் போர்கள் அற்றுப் போக வேண்டும். தேசியம் என்ற சிறு அபிமானம் ஒரு கட்டுக்குள் அடங்கித் தேவையான அளவில் நின்று, போட்டியும் பொறாமையும் நிற்க வேண்டும். எல்லாத் தேசங்களிலும் எங்கும் மக்களிடையே தாண்டவமாடும் பஞ்சத்தையும் நோயையும் அகற்றும் முறையில், அரசியல், பொருளாதார சமூக அமைப்பு, கல்வி - இவற்றைப் புதுமாதிரி உலகக் கூட்டுறவுக்கு ஒத்தவையாக அமைக்க வேண்டும்.’
1943-ல் வெளிவந்த ‘எதிர்கால உலகம்’ என்ற சிறுநூலில் இன்று ஐரோப்பிய யூனியன் செய்து வரும் காரியங்களைப் பற்றிக் கனவு காண்கிறார் கு.ப.ரா.
***
கு.ப.ரா. கட்டுரைகளின் முன்னுரையில் வீ. அரசு இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘கு.ப.ரா. இளமைக் காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாததை குற்ற உணர்வுடன் பதிவு செய்கிறார். பின்னர் அரவிந்தர், ரவீந்திரர், காந்தி ஆகியோரின் கருத்துநிலைகளை உள்வாங்கி தமக்கென ஒரு கருத்துநிலையை உருவாக்கிக் கொள்கிறார். அந்த அடிப்படையில்தான் செயல்படுகிறார். ஒருவகையில், வ.ரா. போன்று ஒரு கருத்துநிலைச் சார்பாளராகச் செயல்பட்டதை அறிய முடிகிறது. க.நா.சு. மற்றும் புதுமைப்பித்தன் கட்டுரைகளில் அவர்களின் இவ்வகையான சார்புநிலையைக் காண்பது இயலாதது. சமூக நிகழ்வுகளை விமர்சனம் செய்வார்கள். ஆனால் அதில் தங்களுடைய நிலை குறித்தப் பதிவை வெளிப்படுத்துவது குறைவு. காந்தியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் சொல்லாடல்களில் இதனைக் காணலாம். ஆனால் கு.ப.ரா. தனக்கென ஒரு நிலைப்பாடு உண்டென்பதைத் தமது கட்டுரைகளில் பதிவு செய்கிறார். இவ்வகையில் சமகால நிகழ்வுகளை எதிர்கொண்டவராகக் கருத முடியும். சமகால நிகழ்வுகளை விமர்சனம் மட்டும் செய்தவராகக் கருத முடியவில்லை. இவ்வகையில் இவரது ஆளுமை, அவரது சமகால எழுத்தாளர்கள் பலரிலிருந்து தனித்திருப்பதைப் பதிவு செய்வது அவசியம். கு.ப.ரா.வின் இவ்வகைப் பரிமாணங்களைத் தமிழ்ச் சமூகம் விரிவாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. புதுமைப்பித்தன், க.நா.சு. ஆகியோரைக் குறித்து இவ்வகைக் கூறுகளில் அறிந்த அளவிற்குக் கு.ப.ரா. அறியப்படவில்லை.’
***
 
கு.ப.ரா.வின் கதைகள், கு.ப.ரா.வின் கட்டுரைகள், கு.ப.ரா.வின் நாடகங்கள் மற்றும் கவிதைகள் என தனித்தனியே மூன்று பெரும் தொகுதிகளாக, ஒவ்வொரு கதையையும் கட்டுரையையும் அதனதன் பிரசுர விபரங்களோடு ஆய்வு செய்து தொகுத்திருக்கிறார் அ. சதீஷ். இதற்காக அவர் சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முப்பதுகளில் வெளிவந்த பழைய இதழ்களிலிருந்து கதைகளையும் கட்டுரைகளையும் தேடி எடுத்திருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் இவரது பணி மிகுந்த பாராட்டுக்குரியது. சமகாலத் தமிழிலக்கியத்தில் கு.ப.ரா.வின் இடத்தை நிலைநிறுத்த இந்தத் தொகுதிகளே சாட்சியாக இருக்கும். (வெளியீடு: அடையாளம் பதிப்பகம்). இத்தொகுதிகளில் கு.ப.ரா.வின் அரிய புகைப்படங்களும், அவர் 17.7.1943 அன்று சி.சு. செல்லப்பாவுக்கு எழுதிய கடிதத்தின் புகைப்பட நகலும் அதில் உள்ளன.
4, பிள்ளையார் கோவில் தெரு, கும்பகோணம் என்ற சுய விலாசத்துடன் ‘என் அருமை செல்லப்பாவுக்கு’ என்று ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம்.
‘நீ ஏன் இப்பொழுது ஒன்றும் எழுதுவதில்லை. கி.ஊழியன் பத்திரிகையை உயர்தர இலக்கிய உருவில் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நீ அதற்கு உடனே ஒரு கதை அனுப்பி வை. நமது மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லோருக்கும் எழுதுகிறேன். 22.7.43க்குள் துறையூர் போய்ச் சேரும்படி அனுப்பி வை. மறந்து விடாதே. மற்றபடி உன் க்ஷேமத்திற்கு எனக்கு எழுது.
உன் கு.ப. ராஜகோபாலன்.’
கு.ப.ரா.வின் மறைவுக்குப் பிறகு 15.5.1944-ல் ‘கிராம ஊழியன்’ இதழ் வெளியிட்ட நினைவு மலர் மற்றும் 1.6.1944-ல் ‘கலாமோகினி’ இதழ் வெளியிட்ட நினைவு மலர்களின் முகப்பு அட்டைப் புகைப்படங்களும் மேற்படி நூலில் உள்ளது. ‘கிராம ஊழியன்’ 1.7.44 இதழில் ஒரு விளம்பரம். கு.ப.ரா.வின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்வதற்காக நடத்தப்பட்ட இசைக் கச்சேரியின் விளம்பரம் அது:
‘கு.ப.ரா. நிதிக்காக கானகலாதர மதுரை மணி ஐயர் அவர்களின் இன்னிசைக் கச்சேரி தக்க பக்கவாத்தியங்களுடன் ஜூலை 8-ந் தேதியன்று திருச்சியில் நடைபெறும். பிற விபரங்கள் எதிர்பாருங்கள்!’ எழுத்தாளர்களை எந்த அளவுக்கு இந்தச் சமூகம் பேணியிருக்கிறது என்பதற்கு மேற்கண்ட அந்த விளம்பரம் ஒரு சான்று.
கு.ப.ரா.வுக்கு மூன்று மகன்கள் உண்டு என்று படித்திருந்ததால் அந்த வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் எனக் குழம்பிக் கொண்டிருந்தேன். அது பற்றியும் சதீஷின் தொகுப்பில்தான் அறிய முடிந்தது. கு.ப.ரா.வின் மூன்று மகன்களில் பட்டாபிராமன் மட்டும் தஞ்சையில் வசிக்கிறார்.
இந்தத் தொடரில் க.நா.சு.வை மட்டுமே மேதை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறேன். அந்தச் சொல்லுக்கு ஏற்ற மற்றுமோர் பெயர் கு.ப.ரா. வெறும் 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர் அவர். இந்தியா சுதந்தரம் அடைந்ததைக் கூட அவர் பார்க்கவில்லை. (புதுமைப்பித்தனும் 42 ஆண்டுகள் வாழ்ந்தவரே. கு.ப.ரா. 1902 - 1944. புதுமைப்பித்தன் 1906-ல் பிறந்து 1948-ல் காலமானார்.) இவ்வளவு குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம் ஆகிய ஐந்து மொழிகளில் - அந்த மொழிகளிலிருந்தே தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு - பாண்டித்யம் பெற்றிருந்தார் கு.ப.ரா.
நம்மிடையே வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கம் இல்லாத காரணத்தால் அ. சதீஷ் தொகுத்த கு.ப.ரா. தொகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
***