Thursday, 23 June 2016

"பெத்ரோ பராமோ"... ஹுவான் ரூல்ஃபோ



Niram Vilwam with Sundara Pandian and 15 others.




நான் வியந்த நாவல்..

ஒரு புத்தகத்தை வாசிக்கும் முன் நான்--வாசித்தப்பின் நான் ---

என் சிந்தனை செயல்முறையின் மாற்றங்களை நன்கு உணரமுடியும் நிலைக்கு என்னை இட்டுச்செல்கிறது ஒரு நல்ல புத்தகம்..


குதிரைகளின் கடைசிக் கதறல், மாபெரும் வேட்டைப்பறவைகளின் சிறகோசை, மயானங்களின் முனகல், சவம் தின்னும் விலங்குகளின் ஊளைச்சத்தம்...

கொமாலா நகரம் இறந்துவிடும் முன், அங்குத் தன்னைக் காதலித்தவன் மரணித்துவிட்டதால் சுயநினைவிழந்து புலம்பும் சூசன்னா வாழ்ந்திருந்தாள். அவளால்தான் அந்த நகரம் சாபமேற்றதா ?

சிறுவயதிலிருந்தே அவளைக் காதலித்தவன் ஒரு பெண்பித்தன், கொமாலாவின் அரசியல் நெருக்கடிகளுக்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் பெண்களின் உடல் மற்றும் மன வலிக்கும் காரணமானவன். பெத்ரோ பராமோ.

அவன் புணர்ந்த, சீரழித்த பெண்களின் கணக்குகளை டொரோத்தியா சரியாக நினைவில் வைத்திருக்கவில்லை. அவனுக்குப் பிறந்த குழந்தைகளையும் .. கொமாலாவின் பாலியல் தொழிலாளர்களின் கணக்குகளில் அப்பெண்களைக் கணக்கிட்டான் பெத்ரோ பராமோ..

ஹுவான் ரசீதியாவோ அம்மாவின் கடைசி வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்பா பெத்ரோவை பார்க்க கொமாலாவிற்கு வருகிறான்.. இதுதான் நாவலின் தொடக்கம்..ரசீதியாவோ கடந்துபோகும் இடங்களும் வீடுகளும் மனிதர்களும் எல்லாமே உயிரற்றவை .

பெத்ரோ பராமோவைத் தவிர அனைவரும் இறந்தவர்கள்.. இறந்தவர்கள் வாழும் இறந்த நகரத்தில் தந்தையைத் தேடி அலையும் ரசீதியாவோ கண்ட அசாதாரண மனிதர்களும் நிகழ்வுகளும். எல்லோருமே இறந்தவர்கள்.. பிறகு தெரிகிறது தேடி வந்தவனும் அவனுக்குக் கொமாலாவின் பெத்ரோவின் கதைச் சொன்ன அத்தனை மனிதர்களும் இறந்தவர்கள் என்று...

இரண்டு முறை படித்தப்போதுதான் பெத்ரோ பராமோ என்ற ஹுவான் ரூல்ஃபோவின் லாட்டின் அமெரிக்கன் நாவல் புரிந்தது.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய கதைச்சந்தர்பங்கள் விரிவாக நிகழ்வது மாயாஜாலம் போல்.. ஒரு கட்டத்தில் வாசிப்பு என்ற நிலை நின்றுவிட்ட பிறகு மனதும் நினைவுகளும் பூரணமாகக் கொமாலாவுக்குள் பயணமாகும் அதிசயத்தை அதிர்ச்சியுடன் உணர்ந்தேன்...

எப்போது வெளியே வந்தேன் என்றே தெரியவில்லை.. வாசிப்பிற்கு என்னானதோ..?

ஒரு நாட்டில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்குபவர்களால், அந்த நாடு மட்டுமல்ல அவர்களும் இல்லாமல் போய்விடுவார்கள் .. ஆனால் இதையெல்லாம் பார்க்கக் கதற வினைசெய்தவனை விட்டுவைக்கிறது காலம்.. பொல்லாத காலம் ..

பால்யக்காலச் சகியான சூசன்னாவை பெத்ரோ காப்பாற்ற முயல்கிறான்.. ஆனால் அவளோ சாவை நேசிக்கிறாள்...
எத்தனை கதைப்பாத்திரங்கள்.. எத்தனை பெண்வலிகள், எத்தனை கொடூரங்கள், காமம் தலைவிரித்தாடும் கொமாலா ... அப்படிப்பட்ட தலைவனின் நகரம் அப்புறம் எப்படியிருக்கும்...?

சிறு பைத்திய நிலை இருக்கவேண்டும் பெண்களுக்கு நல்ல கனவுகள் காண... சூசன்னா இதை உறுதிப்படுத்திக் கொண்டேயிருந்தாள்
ரசீதியாவோவின் தாயும் சொல்கிறாள் மகனிடம்.. "கொமாலா என்னைக் கனவுகளால் தளர்த்திவிட்ட நகரம்"..என்று

கொமாலாவில் கனவுகள் சிறகற்று துடித்துக்கொண்டிருந்தன.. கனவுகள் கூடுவைத்திருந்த இதயங்கள் படபடக்கும் ஒலியும், பெண்களின், இயலாமையில் கதறியவர்களின் புலம்பல்களும்... காற்றை நிறைத்துக்கொண்டிருந்தன...

"பெத்ரோ பராமோ"... ஹுவான் ரூல்ஃபோ எழுதிய நாவலா இல்லை ...அவரின் ஏதோ ஒரு மனநிலையின் எழுத்துவடிவமா?.. வாசிக்கும் முன் நான் கனவுகளை இப்படிப் பார்த்ததில்லை.. வாசித்தப்பின்..... !!!

மீரா வில்வம்