Wednesday 15 June 2016

தூத்துக்குடி திருடர்கள் --------------------------------- பாரேம்மாக்கல் தோமா

தூத்துக்குடி திருடர்கள்
---------------------------------
பாரேம்மாக்கல் தோமா
கி.பி. 1778 மே 7ஆம் தேதி, கேரளாவில் இருந்து ரோமுக்கு, பாரேம்மாக்கல் தோமா என்ற பாதிரியார், பயணம் புறப்படுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கடல் வழியாக குளச்சல் துறைமுகம் வரும் பாரேம்மாக்கல், அங்கிருந்து கோட்டார் (நாகர்கோயில்) – மணப்பாடு - தூத்துக்குடி – நாகப்பட்டிணம் – மைலாப்பூர் வழியாக தமிழகத்துக்குள் பயணம் செய்கிறார். இந்த பயணம் பற்றி பாரேம்மாக்கல் எழுதியது ‘ரோமாபுரி யாத்திரை’ என்னும் நூலாக தமிழில் வந்துள்ளது. மலையாளத்திலிருந்து தமிழில் யூமா. வாசுகி மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்திலிருந்து சில பகுதிகள்…
*****
….கரியாட்டி மல்பானின் தலைமையில் நாங்கள் (நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் தக்கலைக்கு அருகேயுள்ள) உதயகிரி கோட்டையை அடைந்தோம். நாங்கள் கோட்டை வாயிலை அடைந்த உடனே, அதிகாரிகளின் அனுமதியில்லாமல் உள்ளே நுழையக்கூடாது என்று வாயிற்காவலன் தடுத்தான். (எங்களுடன் வந்த) முட்டத்துக்காரர் சாக்கோ பாதிரியாருக்கு, (தற்போது கோட்டையின் தலைவராக இருப்பவருக்கு முந்தைய) மறைந்த தலைவரின் மனைவியுடன் அறிமுகம் இருந்தது. அவர் ஒருவிதமாக காவலனிடம் அனுமதி வாங்கி, தன் பணியாளை ஒரு கடிதத்துடன் தலைவரின் மனைவியிடம் அனுப்பினார். அதன்படி அந்த பெருமாட்டி ஒரு ஆளை அனுப்பி, எங்களை உள்ளே விடும்படி காவலனிடம் சொல்ல வைத்தார்கள். ஆயினும், எஜமானின் கட்டளை வேண்டும் என்று காவலாளி கட்டாயப்படுத்தினான். அந்தப் பெருமாட்டி உடனே கோட்டை அதிகாரியின் அனுமதி வாங்கி எங்களை உள்ளே வரச் செய்தார்கள். நாங்கள் உடனே மறைந்த தலைவரின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெருமாட்டிக்கும் அவர்கள் மகளின் எதிர்கால வரனுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டோம். தன் கட்டளைப்படி காவல்காரன் எங்களை உள்ளே அனுமதிக்காதது குறித்து தலைவரின் மனைவி வருத்தத்தைத் தெரியப்படுத்திக்கொண்டார்கள்….
….எங்களைப் பலமுறை வந்துப் பார்த்துக்கொண்டிருந்த மாத்தாயி, தலைவரின் மனைவி சொன்னதன் பேரில் எங்களுக்கு தங்குமிடமும் மற்றும் சகல வசதிகளும் அங்கே ஏற்பாடு செய்துகொடுத்தார்…..
….அதன்பிறகு நாங்கள் உதயகிரி கோட்டையிலிருந்து பயணம் புறப்பட்டோம். முன்பு கோட்டைக்கு உள்ளே செல்வதற்கு காவல்காரன் தடுத்ததுபோன்ற அனுபவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு வழிசெய்யவேண்டும் என்று நாங்கள் மாத்தாயியிடம் கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர் கோட்டையின் முக்கிய அதிகாரியின் எழுத்து மூலமான அனுமதி வாங்கித் தந்தார். அதனால், நாங்கள் கோட்டையைக் கடந்து செல்வதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை….
….மாலைநேரம் வந்த போது ஒரு தேவாலயத்தை அடைந்தோம். அது ஒரு ஏழ்மையான தேவாலயம். பக்கத்திலுள்ள விவசாயிகளெல்லாம் மிகவும் வறுமைப்பட்டவர்கள். ஆயினும், எங்கள் மீது அவர்கள் அவ்வளவு அன்பும் மரியாதையும் காட்டினார்கள். அன்று இரவு அங்கே தங்கினோம். காலையில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். மாலைநேரம் வந்தபோது மற்றொரு தேவாலயத்தை அடைந்தோம். (இப்படி சில நாட்கள் நடை பயணத்துக்குப் பிறகு) பற்பல ஊர்களைக் கடந்து மணப்பாட்டுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து (திருச்செந்தூர் அருகேயுள்ள) வீரபாண்டியன் பட்டணத்துக்கு சென்றோம்….
…பிற்பாடு நாங்கள் வீரபாண்டியன் பட்டணத்தில் இருந்து புறப்பட்டு ஒரு சத்திரத்தை அடைந்து கஞ்சி வைத்துக் குடித்த பிறகு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பாதை, நிழலற்ற வெட்டவெளியில் சென்றது. இளைப்பாற எங்கும் ஒரு வீடுகூட இல்லை. வெயிலின் வெப்பம் அதி கடினமாயிருந்தது. உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை உருகும்படி சுட்டெரித்தது. ஆயினும், வழியில் திருடர்கள் உண்டு என்று சாக்கோ பாதிரியார் சொல்லியிருந்ததால் வெயிலையும் காலில் துளைத்தேறும் முட்களையும் பொருட்படுத்தாமல் விரைந்து நடந்தோம். தாகத்துடன் துன்புற்றும் ஓடியும், நேரம் இருட்டிய போது தூத்துக்குடியை சென்றடைந்தோம்.