கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
கன்னியும் மீமனிதக் கிழவியின் காதகப் பார்வையும்
சிதானந்த தாஸ்குப்தா
எரிந்திராவைக் கதையாக்க மாயாவசீகர இயக்கம் தேவை. ஆனால் நாவலாக அன்றி திரைக்கதையாக எழுதினார் முதலில். காணாமல் போனதால் மீண்டும் வேண்டியதாயிற்று எழுத. எழுத்தின் கற்பனை காட்சிப்படிமங்களை இயக்குவது இதனால்தான். படிமங்கள் அடுக்கப்பட்ட பக்கம்பக்கமாக இழுத்துக்கொண்டுவாக்கிய அமைப்பில் நூல்ரப்பராகச் சென்று மாறாத உண்மையொன்றை உணர்த்தும். காட்சிகளை மறக்கவியலாதபடி அடுக்கடுக்காகப் பளீரிடும் வகையில் கொண்ட படத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம். பீறிடும் வார்த்தைகள் கொண்ட நடை வாசகனின் கற்பனைக்கும் வர்ணனையிலிருந்து படிமங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்திக்கும் சவால். ஒளிர்கிற கண்ணாடியின் காட்சிகளில் கற்பனை தூண்டும் பிம்பங்களைப் பார்க்கச் செய்கிற கடினமான வாக்கியங்கள், படிமக் கணைகள், வித்தைக்காரன் சுழற்றிப்போடுகிற மின்னும் கற்பளிங்குகள். பார்க்கும் கண்கள் மருள், அவள் துயரம், அவள் கண்ணியம் உச்சத்திலிருந்து அடைகிற வீழ்ச்சி, எள்ளல், அழிவு, வெகுளித்தனம், பகட்டு இப்படிப் பலவித உணர்வுகள் மனிதமாகக் கலந்து போகின்றன.
எரிந்திரா, அவளை விற்றுவிடும் காதகிப்பாட்டி, பாட்டியிடமிருந்து காப்பாற்ற விழைகிற இளைஞன் யுலிளஸ் என்று திரைக்கதை சுழல்கிறது. பாலைவனத்தில் படமாகிய வசீகர நாடகத்தில் ஓவிய-எழுத்துத் திறமைகள் சங்கமிக்கின்ற. ஆதார உணர்வுகளின் நடனத்தில் இயங்குகிற பாத்திரங்களை எழுதி இயக்கத்தை ரை குவேரா என்ற ப்ரேஸிலிய இளைஞரிடம் விடுகிறார் மார்க்வெஸ்.
படம் முடிந்து வரும்போது தூக்கம் விழித்த கனவாகிறது. கோர்வையற்றும் இடம்பெயர்ந்தும் தலைகீழாகவும் நினைவுகள் - பாலைவனமும் க்யூ வரிசைகளும் சார விளக்குகளும் காதல்வசப்பட்ட பெயர்களான எரிந்திராவையும் யுலிஸ்ஸையும் பிடிக்கத் துரத்தும் கார்களும் அலங்கார நாற்காலியில் பாட்டியும் தங்கிவிட,இருந்தும் வார்த்தைகளின் மந்திரசக்தி படத்திலன்றி எழுத்தில்தான். மொழி தந்த போத்தல்களிலிருந்து பூதங்களை உலவ விட்டிருப்பதில் தான். படிமங்கள் மூலம் வருகிற பூதங்கள் ஒளிந்து விளையாடுகின்றன. வாசக மூளையாகிய கண்ணாடியில் பிரதிபலித்து திரும்பவும் வார்த்தைகளாகின்றன. திரைக்கதையை நாவலாக அவர் எழுதும்போது கூடுதலான கிளர்ச்சி வாசகனுக்கு நிச்சயம்.
தமிழில் - ரமோலா நடராஜன்