Saturday 17 August 2019

மோகப் பெருமயக்கு - சுகுமாரன்


மோகப் பெருமயக்கு

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
பாரதி
காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட செவ்வியல் ஆக்கங்களை மீண்டும் வாசிக்கும்போது ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தப் படைப்புகள் உருவான காலத்தில் அவற்றின்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மெல்ல மெல்ல வலுவிழந்து போகின்றன, அவற்றில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் அவற்றின் குணங்களாகவே அங்கீகரிக்கப்பட்டுவிடுகின்றன. செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படும் படைப்பைத் திரும்ப வாசிக்கும்போது அதன் சிறப்புகள்தான் கவனத்தை ஈர்க்கின்றன. குறைகள் புலப்படுவதே இல்லை. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' ஓர் எடுத்துக்காட்டு. நாவல் தேவைக்கு அதிகமான பக்கங்களைக் கொண்டிருக்கிறது. கதையாடல் கட்டுக்கோப்பானதாக இல்லை. கதை நிகழும் காலத்தையும் சமூகப் பின்புலத்தையும் அழுத்தமாகச் சித்தரிக்கவில்லை, இவை நாவலை முன்னிருத்திச் சொல்லப்பட்ட விமர்சனங்கள். நாவல் எழுதப்பட்டும் வெளிவந்தும் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்று வாசிக்கும்போது இந்த விமர்சனங்கள் பொருட்படுத்தத் தகுந்தவையாக இல்லை. நாவலின் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள் வாசகனுக்கு மலைப்புத் தரும் அளவல்ல; ஆயிரம் பக்கங்கள் அச்சியற்றப்படுவதும் வாசிக்கப்படுவதும் இலக்கியத் தகுதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டிருக்கிறது. கட்டுச் செட்டான கதையாடலெல்ல இன்றைய நாவல்கள், சிதறுண்ட கதை மையங்கள்தாம் இன்றைய புனைவு நடைமுறை. காலமும் இடமும் முயங்கிய வெளிதான் இன்றைய ஆக்கங்களின் பின்புலம். இந்தக் கருத்துகளின் பின்பலத்தில் அணுகும்போது 'மோக முள்' தன்னியல்பாகவே தமிழின் செவ்வியல் நாவல்களில் ஒன்றாக நிலைபெறுகிறது. இன்று அந்த 'மேலான குறைகளையும் ஏற்றுக்கொண்டே நாவலை வாசிக்கிறோம், புதுமுக வகுப்பு மாணவனாகக் கல்லூரி நூலகத்தில் முதன் முதலாக 'மோக முள்' நாவலை வாசித்த தருணம் இப்போதும் கலையாமல் நினைவில் தங்கியிருக்கிறது. அது ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து புதுமைப்பித்தன், ஜானகிராமன் படைப்புகளின் வாசகனாக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக்கொண்ட காலம். இரண்டு நாட்கள் வகுப்புகளுக்குப் போகாமல் நூலகரின் சந்தேகக் கேள்விகளுக்கு நம்பகமாகப் பொய்களைச் சொல்லியும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பார்வையில் அகப்படாமலும் வாசித்து முடித்த பரவசத்தை அன்று சொல்லத் தெரியவில்லை. இப்போதென்றால் தி.ஜா.வையே மேற்கோள் காட்டலாம் - 'காதல் செய்கிற இன்பம் அதில் இருந்தது. காதல் செய்கிற இன்பம். ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை - எல்லாம் அதில் இருந்தன.' பரவசம் முற்றிய நிலையில் மிகச் சிக்கலான ஒரு நடவடிக்கை பற்றி யோசித்தேன், இருப்பதிலேயே அலுப்பூட்டும் பாடமான வேதியியலைக் கற்பிக்கத் தற்காலிக நியமனத்தில் வந்திருந்த ரெங்கநாயகி மேடத்தைக் காதலிக்கலாமா என்று தீவிரமாக ஆலோசனை செய்தேன். அவர் கற்பிக்க ஆரம்பித்த பிறகுதான் கந்தக அமிலத்துக்கு மல்லிகை மலரின் வாசனையிருப்பது தெரியவந்தது, அவரும் யமுனாவின் சாயலில்தான் இருந்தார். 'அவ்வளவு தேர்ந்த அழகு என்று சொல்தற்கில்லை. உயரம். உடலமைப்பு. கால் கை விரல்களின் நீளம். குவிப்பு, நடுவில் உயர்ந்து நீண்டு குவியும் நகங்கள் எல்லாவற்றிலும் யமுனாவின் அச்சு, நிறத்தில் மட்டும் அவளைவிடச் சற்றுச் சிகப்பு,' யமுனா பேசிய தமிழில் மராத்தி வாடை இருந்ததா என்று நாவலில் குறிப்பு இல்லை. ஆனால் ரெங்கநாயகியின் தமிழில் கொங்கு தேச நாயக்கர் தெலுங்கின் காரம் தொனித்தது. படிக்கிற பையன் என்று அவருக்கும் என்மேல் கரிசனம் இருந்தது. ஆசிரியர் அறைக்கு அழைத்துப் பேசும் நெருக்கமும் கான்டீனில் தேநீருக்குக் காசைக் கொடுக்கிற பிரியமும் இருந்தன. முதிரா இளைஞன் முதிர்ந்த இளைஞயைப் பற்றிக் கனவு காண இவை போதாதா? தன்னுடைய நியமனத்தை உறுதி செய்துகொள்வதற்காக ரெங்கநாயகி மேடம் நடத்திய வகுப்புத் தேர்வில் சக மாணவர்களில் முக்கால் சதவீதமும் தோல்வியடைந்ததில் அவர் வெறுத்துப்போய் முனைவர் பட்ட ஆய்வையே கைவிட நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட இழப்புணர்வு, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிற்கருவிகள் விற்பனையாளனாக எனக்குக் கிடைத்த முதல் (வேலைப் பருவத்தில் மறைந்தது. நான் விற்பனை நிமித்தமாகச் சென்றிருந்த ஒரு வார்ப்பகத்தின் உரிமையாளர் ரெங்கநாயகி மேடத்தைத் தன்னுடைய மனைவியும் ஃபவுண்டரியின் மேலாளரும் என்று அறிமுகப்படுத்தினார். அந்த தினத்துக்குச் சில மாதங்கள் முன்னர்தான் தி, ஜானகிராமனின் மறைவு, அதையொட்டி நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் நான் வாசித்த இரங்கற்குறிப்பின் ஒரு வரி 'தி. ஜானகிராமனிடம் எனக்கு

 அந்தரங்கமான நன்றிக் கடன் உண்டு; என்னுடைய யமுனாவை எனக்கு அடையாளம் காட்டியவர் என்பதால்" என்பது. இன்று அந்த வரி நினைவுக்கு வரும்போது அசட்டுத்தனமாக உணர்கிறேன். ஆனால் எழுதியது ஆத்மார்த்தமாகத்தான், ஒரு நல்ல படைப்பின் ஜீவன் வாசகனுக்குள் ஊடுருவி நிலைக்கும் இலக்கியச் செயலின் உதாரணமாகவே இதைக் காண விரும்புகிறேன். அதே காலப் பகுதியில் வாசித்துப் புளகாங்கிதப்பட்ட வேறு பல நாவல்களும் பின்னர் வாசித்தபோது பொக்காகிப்போயின, ஆனால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகப் பல முறை வாசித்தும் உயிர்ப்பின் இளமை தீராத படைப்புகளில் ஒன்றாகவே 'மோக முள்" என்னளவில் இருந்து வருகிறது. என்னைப் போலவே இந்தப் பரவசத்துக்கு ஆட்பட்ட தீவிர வாசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது என் ஊகம். இது
வாசிப்பவனின் மனப்பாங்கு மட்டுமல்ல; நாவல் மையத்தின் ஈர்ப்பு விசை மட்டுமல்ல, அந்தப் படைப்பு மொழியுடனும் வாசகப் பரப்புடனும் கொண்டிருக்கும் உறவின் இயல்பு. இந்த இயல்புதான் அதை இன்றைக்கும் வாசிக்கத் தகுந்த பிரதியாக ஆக்குகிறது.
'மோக முள்' இன்றும் தரும் பரவசம் கதையாடலைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒவ்வொரு மறு வாசிப்பிலும் அது வாசகனுக்குத் திறந்துவைக்கும் நுண் தளங்கள் சார்ந்தது. அந்தத் தளங்கள் வாசகனின் அந்தரங்கத்தில் வேறு இடங்களை உருவாக்குகின்றன. தி. ஜானகிராமனின் பிரதி என்னுடைய பிரதியாகவும் அவருடைய பாத்திரங்கள் என்னுடைய அனுபவத்தில் உலவும் மனிதர்களின் பிரதிநிதிகளாகவும் மாறுவது இந்த இயல்பினால்தான். இந்த இயல்புதான் புனைவுக்கும் உண்மைக்குமுள்ள புலனாகாத கோட்டை இல்லாமல் செய்கிறது. 'மோக முள்' நாவலை 1955-56ஆம் ஆண்டுகளில் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் ஜானகிராமன். அதைத் தொடர்ந்த ஆண்டிலேயே புத்தகமாகவும் வெளிவந்திருக்கலாம். புத்தகம் வெளிவந்த பிந்தைய ஆண்டுகளில் கதை நிகழும் இடத்தைச் சென்று 'தரிசித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது. குறிப்பாக யமுனாவின் வீட்டைத் தேடி அலைந்தவர்கள் அதிகம். எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரபஞ்சன் முதல் நான் உட்பட ஜானகிராமன் பார்த்த கும்பகோணமும் தூக்காம்பாளையத் தெருவும் அவர் காலத்திலேயே மாறியிருக்கக்கூடும், அதற்குப் பின்னர் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் ஜானகிராமன் பார்த்த இடத்தையோ சித்தரித்த இடத்தையோ பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லவே இல்லை. அந்த நிகழிடம் கற்பனையானது; அது புனைவின்

 களம் என்று தெரிந்தே 'இலக்கியத் தீர்த்த யாத்திரை நடக்கிறது. இலக்கியப் புனைவு வாசக மெய்மையாகும் இந்தப் படைப்பு விநோதம் செவ்வியல் இலக்கியங்களுக்கு மட்டுமே சாத்தியம். அல்லது இதைச் சாத்தியப்படுத்தும் படைப்புகளே (செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகின்றன. செவ்வியல் இயல்பு கதைக்களத்தை இலக்கியப் புனிதத் தலமாக மாற்றுவதன் பழைய உதாரணம் - ஐரிஷ் நாவலாசிரியரும் கவிஞருமான ஜேம்ஸ் ஜாய்சின் 'டப்ளின்.' புதிய உதாரணம் - கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் 'மகோந்தா." தமிழ் உதாரணம் - ஜானகிராமனின் கும்பகோணம். தமிழில் வேறு எந்தக் கதைக்களமும் இவ்வளவு துல்லியமாக வாசக கவனத்தில் பதிந்திருக்குமா என்பது சந்தேகம். இத்தனைக்கும் ஆசிரியச் சித்தரிப்பில் நகர வர்ணனை வெறும் இடம் சுட்டல் மட்டுமே, ஆனால் அந்தச் சுட்டலில் அவர் கொடுக்கும் தகவல்கள் கதை மாந்தரளவுக்கு முக்கியமானவை. பாபுவைப் போல யமுனாவைப் போல நகரத்தையும் ஒரு கதாபாத்திரமாக்குகின்றன அந்தத் தகவல்கள், எனக்குக் கும்பகோணம் அறிமுகமானது 'மோக முள்' வாயிலாகத்தான். முதன்முறையாக அந்த நகரத்துக்குப் போனபோது ஜானகிராமனின் சித்தரிப்புத்தான் வரைபடமாக மனதில் இருந்தது. 'அணைக்கரை ஆனையடியைக் கடந்துவந்து டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து நாற்சந்தியையும் கடந்து போயிற்று' என்ற வரியில் துலங்கும் நகரமைப்புப் படத்தைக் கற்பனை செய்துகொண்டு டவுன் ஹைஸ்கூல் வாசலில் நின்றபோது சட்டையும் கால் சராயும் அணிந்திருந்த எனக்கு 'ஐந்து முழக் காவிக் கதரால்' மூக்கைப் பொத்திக்கொள்ளத் தோன்றியது. ஏனெனில் பாபுவின் காலத்துக்கும் எனது காலத்துக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. 'கும்பியில்" அப்போதும் புழுதி மாறாமலிருந்தது. செவ்வியல் கதாபாத்திரங்கள் நிரந்தர இருப்புக் கொண்டவை, கும்பகோணப் புழுதியும் அப்படித்தான் போல.
பாரதி கவிதைகள் பற்றி தி. ஜானகிராமன் அதிகம் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை . சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், எனவே தவிர்க்கவியலாதபடி பாரதியை அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னுடைய எழுத்துகளின் முன்னோடி என்று அவர் மதித்த மணிக்கொடி எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன், பாரதி கவிதைகளை வியந்து பாராட்டும் விதத்தில் (சிட்டியுடன் இணைந்து

 'கண்ணன் என் கவி') ஒரு நூலையே எழுதியிருக்கிறார். அதை அவர் வாசிக்காமலிருந்திருக்கவும் வழியில்லை . ஜானகிராமன் எழுதவந்த காலத்தில் பாரதி மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டுப் பரவலாக விவாதத்துக்கும் உரையாடல்களுக்கும் உள்ளாகியிருந்தார். பாரதியின் வரிகள் அநேகமாகத் தேய்வழக்குகளாகவே ஆகியிருந்திருக்கவும் கூடும். அந்தப் பேச்சுகள் அவர் காதை வந்தடையாமல் இருந்திருக்காது. எனினும் அது பற்றி அவர் எங்கும் குறிப்பிட்டதில்லை. என் வாசிப்புக்கு எட்டியவரை அவரது எழுத்துகளில் எங்கேயும் பாரதியைப் பற்றிய சூசகங்களோ கவிதை மேற்கோள்களோ இல்லை. ஆனால், "மோக முள்' நாவலின் தலைப்பும் அதன் கதை மையமும் இங்கே மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வரிகளின் பாதிப்பாக இருக்கலாம் என்பது அனுமானம், 'உரவில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வது' போன்ற (உவமைக்கு நன்றி: சுந்தர ராமசாமி) பாதிப்பாக இருக்கலாம்.
பாபுவுக்கு யமுனாமேல் தோன்றும் பிள்ளைப்பருவ ஈர்ப்பு நாட்களினூடே வளர்ந்து இளமைப் பருவ மோகமாக விரிகிறது. அந்த மோக சாந்திக்காக அவன் படும் அவஸ்தைகள்தான் கதையாடலின் மையம். அவளுடன் பிணைப்பு நிகழும்வரையிலான தேக வேட்கையும் சிந்தனைக் குமுறல்களும்தான் கதையாடலின் நகர்வுகள். அவற்றைப் பாரதியின் நான்கு வரிகளுக்குள் வைத்து யோசிக்கும்போது நாவலின் ஒற்றை வரிச் சுருக்கத்தைக் கண்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஜானகிராமன் தனது நாவலை இப்படி உள்வாங்கியிராமலும் இருக்கலாம். நாவலின் தலைப்பேகூட மேற்கோள் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் யோசித்திருக்கிறேன், தன்னுடைய கவிதைகளில் தீவிரமான உணர்ச்சியைக் காட்ட பாரதி அதிகம் பயன்படுத்திய சொல் 'மோகம்." 'மோகத்தைக் கொன்று விடு, அடிமையின் மோகம், மோகப் பெருமயக்கு என்ற பிரயோகங்கள் தீவிர நிலையைச் சித்தரிக்கின்றன. நாவலின் உச்சமும் மோகம் தைப்பதுதான் என்பதால் இப்படி ஒற்றுமையைத் தேடியிருக்கலாம் என்றும் படுகிறது. இந்த ஒப்பீடு அந்தரங்கமானது. பாரதியின் பாடலை வாசிக்கும்போதும் கேட்கும் போதும் (குறிப்பாக மகாராஜபுரம் சந்தானம் பாடியது) 'மோக முள்' நாவலின் காட்சிகள் பார்வைக்குள் புரள்வதும் 'மோக முள்' நாவலை வாசிக்கும் தருணங்களில் பாரதியின் பாடல் ஒலிப்பதுமான மனநிலையைப் பலமுறை அடைந்திருக்கிறேன். அதுவும் காரணமாக இருக்கலாம், இது வாசகனாக நான் செய்யும் அதிகப் பிரசங்கித்தனம், ஆனால் அது நாவலை இன்னும் துல்லியமாக விளங்கிக்கொள்ளத் துணை புரிகிறது. ஒரு செவ்வியல்

 படைப்பு இது போன்ற 'அதிகப் பிரசங்கித்தனத்துக்கு இடம் கொடுக்கிறது.
அதன் மூலம் வாசகனுடனான உறவை வலுவாக்குகிறது.' இந்தப் பார்வையின் வாயிலாக ஜானகிராமனின் எழுத்தியல்பை மதிப்பிடக்கூடிய இன்னொரு அம்சமும் புலப்படுகிறது. பாரதியின் பாதிப்பு ஜானகிராமனிடம் உண்டு என்ற குழப்பமான கருத்தைப் பிடிவாதமாக வைத்துக்கொள்கிறேன். அவர் எழுதிய காலத்தில் அந்தப் பாதிப்புத் தேய்வழக்காக மாறியிருந்தது என்ற ஊகத்தையும் சேர்த்துக்கொள்கிறேன், இங்கே ஜானகிராமனின் கலையிலுள்ள கறார்த்தன்மை வெளிப்படுகிறது. தேர்ந்த கலைஞன் தனது படைப்புகளில் தேய்வழக்குகளை அனுமதிக்க மாட்டான், அவனுடைய முந்தைய எழுத்துகளின் பாதிப்பையேகூட அண்டவிட மாட்டான் என்ற நிலைப்பாடு நிரூபணமாகிறது. ஜானகிராமனின் மொத்தப் படைப்புகளையும் ஊன்றிக் கவனித்தால் அவரது படைப்பு நோக்கத்தில் பொதுத்தன்மை தென்படுமே தவிரப் படைப்புகளில் வித்தியாசங்களே இருக்கும், கதையாடலிலோ நடையிலோ சொல்முறையிலோ இடங்களை விவரிப்பதிலோ இயற்கை வர்ணனைகளிலோ என்றைக்குமான புதுமை மிளிரும். தொடர்கதையாக எழுதப்பட்ட 'மோக முள்ளில்கூடத் தேய்வழக்குகள் இல்லை என்பது வாசிப்பில் புரியும்.
'மோக முள்ளின் கதை வாழ்க்கையில் பழைமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்குப் புதியது. முதிரா இளைஞன் முதிர் கன்னிமேல் ஈடுபாடு கொள்வதும் அடைவதும்தான் நாவலின் மையம். இந்த உறவுக்கு அன்றைய சமூக வாழ்க்கையில் மதிப்பில்லை, அது நாவலிலேயே குறிப்பாகச் சொல்லப்படுகிறது. பாபுவுக்கு யமுனாமீது ஏற்படும் ஈர்ப்புத் தெரிய வரும்போது அவர்களைச் சார்ந்தவர்கள், பாபுவின் தந்தை வைத்தி, நண்பன் ராஜம், யமுனாவின் தாய் பார்வதி, ஏன் யமுனாவேகூட அதை ஏற்கத் தயங்குகிறார்கள். இந்த உறவு மீறலைப் பதிவு செய்ததுதான் ஜானகிராமனின் கலைத் துணிவு. ஆனால் அதுமட்டுமே அல்ல நாவல். நாவலை மறுபடியும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் நுண் தளங்கள் வெளிப்படுகின்றன. காதலையும் காமத்தையும் முதன்மையாகச் சொல்லும் நாவல் நுட்பமாக வேறு பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இசையும் உறவுகளும் காலமும் நாவலின் மறைமுக மையங்களாகின்றன, தந்தைக்கும் மகனுக்குமான உறவு (வைத்தி - பாபு), நண்பர்களுக்கிடையிலான தோழமை (ராஜம் -

 பாபு), சகோதர வாஞ்சை (சங்கு - பாபு), ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான பந்தம் (ரங்கண்ணா - பாபு), சங்கீதத் தேடல் (மராத்தியப் பாடகர் - பாபு), காமத்தின் அழைப்பு (தங்கம்மா - பாபு). இந்த நுண் தளங்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து நிற்கின்றன, மேற்சொன்ன கிளைத் தளங்களிலிருந்து அணுகினால் 'மோக முள்' இன்னொரு தோற்றத்தைக் கொள்ளக்கூடும்,
எடுத்துக்காட்டாக, ரங்கண்ணா என்ற இசைக் கலைஞருக்கும் பாபுவுக்கும் இடையில் நிலவிய உறவின் கோணத்திலிருந்து பார்த்தால் 'மோக முள்ளின் முதன்மையான மையம் இசையாக மாறலாம். அப்போதும்கூட பாபு - யமுனா உறவே கதையாடலைத் தீர்மானிக்கும் அம்சமாக இருந்திருக்கும். சங்கீதம் ஓர் ஆன்மநிலை; அதை அடையப் புலனொழுக்கம் தேவை என்று பாபுவுக்குக் கற்பிக்கப்படுகிறது. அதை மீற முடியாமல் அவன் அடையும் தத்தளிப்புகள் இப்போதைய நாவல் வடிவத்தில் இடம்பெறுவதைவிடவும் சிக்கலானதாக இருந்திருக்கும். யமுனா மீதான பாபுவின் வேட்கையைக் கதை மாந்தர்களில் பலரும் மெல்லமெல்லவே அறிகிறார்கள். முதலில் யமுனா, பின்னர் ராஜம், யமுனாவின் தாய் பார்வதி, இறுதியாக பாபுவின் தந்தை வைத்தி, அந்த உறவை அவன் உறுதியாக உணர்வது தங்கம்மாவுடனான முயக்கத்தின்போதுதான். குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொள்ளும் யோசனையுடன் தடுமாறும் பாபு அதை 'யமுனாவுக்குப் பண்ணின துரோக'மாக நினைக்கிறான். அதை அவளிடம் சொல்லும் சந்தர்ப்பத்தில்தான் யமுனாவும் அவன் உள்ளக் கிடக்கையைத் தெரிந்துகொள்கிறாள். அதே நாட்களில்தான் ரங்கண்ணாவையும் குருவாக ஏற்கிறான். ரங்கண்ணா செய்யும் உபதேசத்தில் சரீரக் கட்டுப்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கிறார். 'கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும், அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும், அதுக்கப்புறம் சங்கீதம் பிராணன் எல்லாம் ஒண்ணொண்ணாக் கரையும். இந்த எச்சரிக்கை பாபுவைத் தடுக்காமலிருந்தால், பாபுவின் ரகசியத்தை ரங்கண்ணா அறிந்திருந்தால்? - நாவலின் பின்புலமாக இருக்கும் இசை அதன் மையமாகவே ஆகியிருக்கும். இது ஓர் உதாரணம் மட்டுமே. இவ்வளவு நுண்தளங்கள் கொண்ட படைப்பு இது என்று சுட்டிக்காட்டவே.
விழைவுகளைச் சொல்லும் நாவலாகவே 'மோக முள்'

 பார்க்கப்பட்டிருக்கிறது. உறவுக்கான விழைவும். சங்கீதத்துக்கான விழைவும். மனிதர்கள் தமது இருப்பின் சமநிலையை எட்டுவதற்காக மேற்கொள்ளும் தவிப்பைப் பற்றிய கதையாடலாக நாவலை வாசிக்கலாம். பிரதானமாக பாபுவின் தவிப்புகள். அதன் விளைவாகப் பிறரிலும் ஏற்படும் தவிப்புகள். இளம் பருவம் முதல் பார்த்துவந்த யமுனாவின் மீது கொள்ளும் ஈடுபாடுதான் அவனுடைய தவிப்புக்குக் காரணம். அவன் வளர வளர இந்தத் தவிப்பும் வெவ்வேறு பருவங்களில் வளர்கிறது. சகோதரிக்கு இணையாகப் பார்க்கும் நிலை. தன்னுடைய தகப்பனார் காரியஸ்தராக இருக்கும் நிலவுடைமை அமைப்பின் உரிமையாளராகப் பார்க்கும் நிலை. தனது ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் தோழியாகப் பார்க்கும் நிலை, அவளுடைய உடல் வனப்பால் ஈர்ப்புக்கு உள்ளாகும் நிலை, அவளுடைய அறிவையும் தன்மானத்தையும் வியக்கும் நிலை. வாழ்ந்து கெட்டு அநாதரவாக அவள் துவண்டிருக்கும் நிலை. இந்த நிலைகளின் இறுதியாக அவளை அடையும் நிலை, அவன் தவித்துத் தவித்து அவளை அடைந்த பின்புதான் சமநிலையைப் பெறுகிறான். அந்தச் சமநிலையையும் யமுனாவின் வழிகாட்டுதலில் தான் எட்ட முடிகிறது. அவனுடைய வாழ்க்கையின் நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து முன்னே செல்ல உந்துகிறது. சரிவுகளில் தடுமாறி நின்ற அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான். அது அவளை உரிமை கொள்ளும் சுவாதீனத்தை
அவனுக்கு அளிக்கிறது.
"பழைய பாபு இல்லை என்றுதான் நம்பினேன். நீ பிடிவாதமா இருக்கே, உன் திருப்திக்காகத்தான் நான் உயிரை வச்சிருக்கேன். உன்னைத் திருப்தி செய்யறதுதான் என் கடமை. எனக்கு ஆசை அதுதான். உன் திருப்திக்குத்தான், நீ செஞ்சது கொஞ்சநஞ்சமல்ல. எதையும் லட்சியம் பண்ணாமல் எனக்குக் கைகொடுத்துண்டே வந்திருக்கே. நான் ஏன் உன்னைத் திருப்திப்படுத்தப் படாது?" இந்த வாசகங்களை யமுனா சொல்லும் இடத்தில் பாபுவின் தவிப்பு நிறைவேறும் வழி திறக்கிறது. முதல் கூடலுக்குப் பின்பு அவள் கேட்கும் கேள்வி: 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமாக இல்லை , விவரம் தெரிந்தது முதல் பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே, ம்?" அவளே பதிலும் சொல்கிறாள் "இதற்குத்தான்." பாபு தவிப்பிலிருந்து விடுபட்டுச் சமநிலையை உணர்வது இந்தப் பதிலில்தான். இந்தச் சமநிலை அவனை இசையின் புதிய ஞான விழைவுக்கு உந்துகிறது. மோகித்து அடைந்த பொருள் வசப்பட்ட பின்னர் உருவாகும் வெற்றியின் வெறுமையிலிருந்து

 அவனை மீட்பது இசைமீதான நாட்டம். அதை அவனுக்கே புரியவைப்பவள் யமுனா. கற்பனைப் பாத்திரமான யமுனா வாசக மனதில் உயிரும் ஒளியுமுள்ள ஜீவனாக நிலைப்பது இதனால்தானா? யமுனாவை பாபு ஒரே சமயத்தில் இரண்டு விதமாகப் பார்க்கிறான். அடையக்கூடியவளாகவும் அடைய முடியாதவளாகவும், குருதியும் நிணமும் பின்னிய வனப்பான மோகத்துக்குரிய மனித உடலாகவும் வழிபடத்தகுந்த சொரூபமாகவும், 'அவளைப் பார்த்ததும் பெருமிதம் பொங்கிற்று. அவள் மேனி முழுவதும் கூடத்தில் தொங்கும் பதினைந்து காண்டில் பவர் விளக்கின் ஒளியில் தகதகவென்று மின்னிற்று' என்று இச்சையுடன் பார்க்கும் அவனே "நான் உன்னைச் சாதாரண மனிதப் பிறவியாக நினைக்கவில்லை. நான் வணங்கும் தெய்வத்தின் வடிவம் நீ" என்று மனதிலேயே தலைவணங்குகிறான். இந்த இரண்டு முனைகளுக்கும் நடுவில் அவன் மனம் ஆடும் ஊஞ்சலாட்டம்தான் தவிப்பைக் கொந்தளிப்பாக்குகிறது. யமுனாவுடனான கல்விதான் அதைத் தணிக்கிறது. அவளும் உயிரின் வேட்கையை உணரும் உடல் என்று உணர்கிறான். அந்த உணர்வு அடையக் கிடைக்காத ஒன்றை
அடைந்துவிட்ட அகங்கார நிறைவும்கூட
தவிப்பின் பேருருவம் தங்கம்மா. உடலை நாடும் உயிரின் பெரும் அலைக்கழிப்பு, யமுனாவின்பால் பாபு கொண்டிருக்கும் தவிப்புக்கு நிகரானது அவன் மேல் தங்கம்மா கொள்ளும் விழைவு, கிழவருக்குக் கட்டிவைக்கப்பட்டு, சரீர சுகம் பெறாமல் தவிக்கும் அவள் நள்ளிரவில் சுவர் தாண்டி வருவது அபாயகரமானது. ஓர் சமூக அத்துமீறல். தடையாக இருக்கும் சுவரைத் தாண்டுவதிலேயே ஓர் உருவகத்தன்மையை ஜானகிராமன் சித்தரிக்கிறார். பாபுவுக்கு உடலின்பம் தேவையாக இருக்கிறது. அதே சமயம் அவனுக்குப் புகட்டப்பட்ட ஒழுக்க நெறிகள் அதைக் குற்றம் என்று எச்சரிக்கின்றன. சமூகக் கண்ணோட்டத்துக்கு அவனைப் பணியவும் செய்கின்றன. தவிர, சங்கீதம் ஓர் இறைநிலை, அதை அடைய நல்லொழுக்கம் பேணப்பட வேண்டும் என்ற போதனை அவனைக் கட்டுப்படுத்துகிறது. அந்த இறுக்க நிலையை ஒருமுறையேனும் தகர்ப்பதில் வெற்றி பெறுகிறாள் தங்கம்மா. அந்தத் தளர்வுதான் யமுனா மீதான காதலை மீண்டும் அவனுக்குள் கிளர்ந்தெழச் செய்கிறது. இரண்டாம் முறையாகத் தங்கம்மா தன்னை நாடும்போது பாபு அவளை நிராகரிக்கக் காரணம் ஒழுக்க நியதிகள் மட்டுமல்ல; யமுனாவுக்குத் துரோகம் செய்துவிடக் கூடாது என்ற தவிப்பும்தான். தங்கம்மாவின் பெருந்தவிப்பு மரணத்தில் சமநிலை அடைகிறது,

 பெருந்தவிப்புகளில்லாமல் இருப்பின் சமநிலையை அடைந்த பாத்திரங்கள் நாவலில் இருக்கிறார்கள். எல்லாப் பெண்களையும் கடவுள் சாயலாகப் பார்க்கும் ராஜம், உலகின் எல்லா அசைவுகளிலும் இசையைக் காணும் ரங்கண்ணா , மனிதர்களுக்காக உருகும் அப்பா வைத்தி, அவமதிப்புகளிலும் புறக்கணிப்புகளிலும் வறுமையிலுமிருந்து தன் அகவலிமையால் நிமிரும் யமுனா - இவர்களின் தவிப்புகள் குறைந்தபட்சம் தன்னலமில்லாதவை. அதனால்தான் பாபு அவர்களை மானசீகமாகத் தஞ்சமடைகிறான். )
5
'மோக முள்' - ஓர் இரண்டு அடுக்கு நாவல், காதல் ஓர் அடுக்கு. இசை இன்னொரு அடுக்கு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிறைவுசெய்து கொள்ளும் வகையில்தான் கதையாடல் அமைகிறது. எந்த அடுக்கு எப்போது இன்னொரு அடுக்கில் ஊடுருவுகிறது என்பதைக் கண்டடைவது ஒரு புதிர். நாவலின் தொடக்கத்திலிருந்து (மேலக் காவேரி சாஸ்திரிகளின் உரையாடல்) இறுதியில் இசை ஞானம் தேடி புனே செல்வதுவரை ('கீழ்ஸ்தாயி ஷட்ஜமத்தில் நிற்கும்போதுகூட இந்த எதிர்ப்புத்தான் குரல் கொடுக்கிறது' என்ற தனிமொழி) நாவலின் பக்கங்களில் இசையின் கார்வை நீடிக்கிறது. சரியாகச் சொன்னால் நாவலின் மையப்பகுதி முழுவதும் இசைமயமானது. அதன் ஆதார சுருதி ரங்கண்ணா. இந்த நாவலின் உயிரோட்டம் மிகுந்த பாத்திரம் அவர்தான். ஒருவேளை நவீனத் தமிழ்ப் புனைகதை மாந்தர்களில் முழுமையாக வார்க்கப்பட்ட பாத்திரங்களில் ரங்கண்ணாவும் ஒருவராக இருக்கலாம், ரங்கண்ணாவின் வாழ்க்கைச் சித்தரிப்பு ஒரு காவிய நாயகனின் வாழ்க்கைபோல நுட்பமாக ஜானகிராமனால் உருவாக்கப்படுகிறது. காண்பதிலெல்லாம் சங்கீதத்தின் சாயலைக் காண்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் இசையை உணர்கிறார். அவரது மரணமும் கூட இசையின் முத்தாய்ப்பாக அமைகிறது. பாபுவின் மடியில் கிடந்து ரங்கண்ணா உயிர் துறக்கும் காட்சிக்கு உண்மையான ஆதாரம் இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். சீடரான எம்.டி ராமநாதனின் மடியில் கிடந்து குரு டைகர் வரதாச்சாரி உயிர் நீத்த சம்பவம் ஜானகிராமனை இந்தச் சித்தரிப்புக்குத் தூண்டி விட்டிருக்கலாம், இந்த அனுமானத்தை நேர்ச் சந்திப்பில் அவரிடம் தெரிவித்தபோது "அப்படி உங்களுக்குத் தோன்றினால் அது நல்லது" என்று சிரித்தார். மழுப்பலான சிரிப்பு. ஆனாலும் என் அனுமானத்தையொட்டியே இந்தக்

T
 காட்சியை வாசிக்க விரும்புகிறேன்.
நாவலின் இசைப் பின்னணியைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஓர் ஒற்றைவரி வாசகமும் ஒரு தீவிரமான காட்சியும் மனதில் படரும். இசைமையில்லாமல் அவை இல்லை என்று மனம் வலியுறுத்தும், தங்கம்மாவுடனான கூடலின் தருணத்தைச் சொல்லும் அந்த வரி - 'உறை கழற்றிய வீணை மாதிரி கிடந்த அந்த உடல் அலை அலையாக எழுந்தது' - ஓர் சங்கீத ஆலாபனையில் ராகத்தின் முழுச் சாயலும் வெளிப்படும் நாத உச்சத்துக்கு ஒப்பான வரி. அதற்குச் சற்று முன்பு வரும் தங்கம்மாவின் உரையாடலில் இசைத் தீவிரம் கூடிய காட்சியைப் பார்க்கலாம்.
"நேத்து நீங்க பாடினேன் பாருங்கோ , 'மனசு விஷய'வா அதுதானே?"
"ஆமாம்." "இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?"
"ஏன்?"
"நீங்க பாடினா நல்லாத்தான் இருக்கு ... பாட வேண்டாம்." "ஏன்?"
"என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை எனக்கு
அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு."
ஒரு வாசகனாகவும் இசை ஆர்வலனாகவும் இந்த வாசகம் புதிராக இருந்தது அந்தக் கீர்த்தனையின் பொருள் விளங்கும்வரை. 'மனதின் செய்கைகளைக் களவொழுக்கத்துக்கு அளித்துவிட்டால் ராமனின் கிருபை உண்டாகுமா? அந்தச் செயல், தன் வீட்டுக் கதவைப் பிறர் வீட்டிற்குப் பெயர்த்துவைத்துவிட்டு, தான், நாய்களை விரட்டுவதுபோல ஆகாதா? தவிட்டுக்கு வேசியாடச் செல்வது கூழ்ப் பானையைக் குரங்கு கொண்டுபோக அனுமதிப்பதுபோல ஆகாதா? அப்படிச் செய்வது செவிடனுக்கு உபதேசித்ததுபோல ஆகாதா?" இது அந்த நாட்டக் குறிஞ்சி ராகக் கீர்த்தனையின் சாரம். இது விளங்கியபோது அந்தக் காட்சி மேலும் துல்லியமானதாகத் தெரிந்தது. கதையாடலுக்கு வெளியிலிருக்கும் ஒன்றை அதற்குள் பொருத்திப்பார்ப்பது அநியாயம். ஆனால் இந்த அநியாயம் கதையாடலை மேலும் வசீகரமானதாக்குகிறது. பாபுவின் குற்ற உணர்ச்சி இன்னும் ஆழமானதாகப் புலப்பட இந்தப் பொருத்திப் பார்த்தல்

 துணைபுரிகிறது. தங்கம்மா 'எனக்கும் பாடத் தெரியும்' என்று சொல்வதை இந்த வியாக்கியானத்துக்கான சான்றாக எடுத்துக்கொள்கிறேன். அது அவளுடைய தவிப்பையும் விழைவையும் உணர்ந்து பச்சாதாபம் கொள்ளவைக்கிறது. எரியுண்ட மயானத்தில் அவளுடைய சாம்பலைப் பார்த்து பாபு புலம்புவதைப் புரிந்துகொள்ள வைக்கிறது. கதைமாந்தர்களின் பேச்சிலும் ஆசிரியரின் கூற்றிலுமாக இசை தொடர்பான நுட்பங்களையும் (தம்புராவுக்கு ஜீவா புடிச்சா மாதிரி சாரீரம், ரங்கண்ணாவின் அவதானிப்புகள்), விமர்சனங்களையும் (சங்கீதம் என்பது
அனுபவம், அனுபவம்தான் ஞானம் என்ற ரங்கண்ணாவின் நிலைப்பாடு, இந்துஸ்தானி பாடகர்களின் மதிப்பீடுகள்) ஜானகிராமன் போகிறபோக்கில் சொல்வதுபோல் எழுதிச் செல்கிறார். அவற்றை நுணுகிப் பார்த்தால் நாவலின் இசைத்தன்மை முடிவேயில்லாத ராக விஸ்தாரமாகத் தெரியும், நம் ஊர் சங்கீதக்காரர்கள் புனிதமயப்படுத்துவதுபோல் சங்கீதம் தெய்வீகமானதல்ல; மானுடத் தன்மை மிகுந்தது என்றும், இசை பக்தியின் கருவியல்ல அதுவே ஒரு கலை என்றும் அவர் வாதிடுவதாகப் படுகிறது.
ஜானகிராமன் நவீனத்துவரல்லர், செவ்வியல் மரபின் தொடர்ச்சி கொண்டவர், இசையிலும் எழுத்திலும். அந்த மரபில் அபூர்வமாக நிகழும் மீறலின் அடையாளம் அவர் எழுத்து. சமூகமும் மரபுகளும் காபந்து பண்ணிவைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு எப்போதும் எதிரானது அவருடைய கலை நோக்கு. விலக்கப்பட்டவர்களின் சார்பானது அவருடைய கரிசனம். இதை அவரது நாவல்களின் பொதுக் குணமாகச் சொல்லலாம். அதன் ஒரு சான்று 'மோக முள்.' சமூகத்தின் அணுகு முறையில் மீறலாகக் கருதப்படும் ஒன்றைத் தனது எழுத்தில் நியாயமானதாக நிறுவுகிறார். ஏனெனில் அவரது கண்ணோட்டத்தின்படி மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையல்ல; உணர்ச்சிகளுக்கும் அதை உருவாக்கும் சூழலுக்கும் இணங்கியவை, 'மோக முள்'ளின் கதையாடலைத் தீர்மானிக்கும் சிக்கல்களில் ஒன்று யமுனாவின் திருமணம். மணப்பருவம் கடந்தும் அவளுக்கு வாழ்க்கை அமையாததன் காரணம் அவள் பிறப்பு. அவள் பிராமண மராட்டிய உறவுகளின் சந்ததி, அதுவே அவளுக்குத் தடையாகிறது. அதன் தொடர் விளைவுதான் கதையின் நீட்சி. கலப்பு மணம் என்ன அவ்வளவு சிக்கலுக்குரிய பிரச்சனையா என்று நாவலை முன்பு வாசித்த

 சந்தர்ப்பங்களில் கேள்வி எழுந்திருக்கிறது. இப்போது வாசிக்கும்போது நிலவும் நிகழ்காலச் சூழல் அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று பதிலளிக்கிறது. ஜானகிராமனை 'தீர்க்கதரிசி' என்று சொல்லலாம். அப்படிச் சொல்வது அந்தக் கலைஞனுக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தனது படைப்புகளில் ஜானகிராமன் அதிகம் வாஞ்சை கொள்வது பெண்களிடம்தான், அவரது ஆரம்ப கால நாவலான 'அமிர்தம்' முதல் கடைசி நாவலான 'நளபாகம்' முடிய, பெரும்பான்மை நாவல்களும் பெண்களை முன்னிருத்தியே நகர்பவை, விதிவிலக்கானவை - கலை வறுமை நிரம்பிய அவருடைய தொடர் கதையான 'அன்பே ஆரமுதே'வும் கலையின் ஒளிமிளிரும் 'மோக முள்ளும் என்பது சுவாரசியமான முரண். இரண்டிலும் ஆணே மையம், ஆணின் பார்வையில் காட்டப்படும் உலகம்தான் அவருடையது. ஆனால் அங்கே விதியையும் விதிவிலக்கையும் உருவாக்குபவர்கள் பெண்களே, பாபு சங்கீதம் கற்கிறான். ஆனால் இசைக்கலைஞன் ஆவதில்லை. கல்லூரியில் படிக்கிறான். வேலைக்குப் போகிறான். ஆனால் சராசரி குமாஸ்தாவாக ஆவதில்லை. தன்னைத் தனக்குள் பொருத்திக்கொள்ள முடியாமல் அவன் கொள்ளும் தவிப்பை யமுனாவின் உறவு போக்குகிறது. அவளிடமிருந்துதான் அவனுடைய எதிர்காலம் துவங்குகிறது. 'பூமி வானைத் தொட்டதும் வானம் பூமியைத் தொட்டதும்' அங்கேதான்.
தனது எழுத்தை மூன்று நிலைகளில் எழுதுவதாகச் சொல்கிறார் ஜானகிராமன், எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் ஆகிய மூன்று நிலைகள், 'மோக முள்" நாவலைக் கடந்த காலங்களில் இடைவெளி விட்டுப் பலமுறை வாசித்திருப்பேன். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் எனக்கே எனக்கு என்று எழுதப்பட்ட படைப்புகளில் ஒன்றாக எண்ணச் செய்கிறது. அதன்மீது வைக்கப்பட்ட வைக்கப்படும் விமர்சனங்களை மீறி. 'மோக முள்' நாவலின் ஒவ்வொரு வாசகரும் இதையே சொல்லக்கூடும்.
திருவனந்தபுரம்
சுகுமாரன்
18 டிசம்பர் 2012