Monday, 19 August 2019

பார்க்கிற மழையில் கலிஸியாவின் கதை - காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

பார்க்கிற மழையில் கலிஸியாவின் கதை -
காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
*****தமிழில் - தேவதாஸ்********
கல்குதிரை சிற்றிதழ்

காமிராக்காரர்கள் மற்றும் பத்திரிக்கை நபர்கள் சூழ்ந்திருக்க வெகுநாள் கழித்து மாட்ரிட் நகரத்தில் என்னைப் பார்க்க நேரிட்ட போது கவிஞனும் ஓவியனும் நாவலாசிரியனுமான ஹெக்டர் ரொஜஸ் ஹெராஸோ கருணை நிரம்பி நடுக்கம் கண்டு போயிருப்பான், "நாளாக ஆக உனக்கு நீ நல்லவனாகிவிட வேண்டும் என்பதை ஞாபகம் கொள்" என்று அருகே வந்து கிசுகிசுத்தான். நல்லதொரு பரிசை வழங்கிக்கொண்டு வருஷக்கணக்காகிறது. ஆகவே கனவுகளில் ஒன்றான கலிஸியாவுக்குப் போய்வருவதை வழங்கிக்கொண்டுவிடத் தீர்மானித்தேன். எனக்கு.
ருசித்துச் சாப்பிடுகிற யாரும் கலிஸியாவின் பதார்த்தங்களை நினைக்காமல் போக முடியாது. "வீட்டின் நினைவு ஏக்கமானது சாப்பாட்டில் துவங்குகிறது" என்றார் சே குவேரா. நினைவு கலிஸியாவுக்குப் போகுமுன்பே வந்துவிட்டது. ஆவிகள் பற்றி முதன்முறையாக அறிய நேரிட்ட அரக்காடக்காவின் பெரிய வீட்டில் பாட்டி சந்தோஷமாக ரொட்டி செய்து விற்று வந்தாள். ஆற்றுவெள்ளம் பெருகி வீட்டை நாசமாக்கி அடுப்பை சரிசெய்ய யாரும் முன்வராத வரையில் வியாபாரம் நடந்தது. தொழில் பெருகிவிட்டதால் ரொட்டி செய்ய முடியாமல் போன பின்பும் பன்றி இறைச்சியில் பதார்த்தம் செய்தாள். சுவையாக இருந்தாலும் குழந்தைகளாகிய எங்களுக்குப் பிடிக்காமல் போனது. பெரியவர்களுக்குப் பிடித்தவற்றைக் குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால் பதார்த்தத்தின் முதன்முதலான ருசி நாக்கில் தங்கிவிடுகிற ஒன்று. பிற்பாடு அதை ருசித்ததே இல்லை. நாற்பது வருஷங்கள் கழித்து பார்ஸிலோனாவில் அதே ருசியுடன் குழந்தைப் பருவத்தின் குதூகலங்களும் நிச்சயமின்மைகளும் தனிமைவாசம் கொண்ட உணர்வும் வந்து சேர்கின்றன.
அந்த ருசியுடன் ஆதியந்தத்தை ஆராயும் லயிப்பு பெருகி அந்தப்போக்கில் சென்று மே மாதத்துக்கு கீரைவகைகளிலும் சமுத்திரத்திலும் மழையிலும் கலிஸிய நாட்டுப்புறத்தில் வீசுகிற நித்தியக் காற்றிலும் ஈடுபட்டேன். அறிவார்ந்த விளக்கங்கள் எடுபடாமல் போய் அமானுஷ்ய உலகத்தில் எதுவும் சாத்தியமாகக் கூடியதாக பாட்டி வாழ்வதை அப்போது புரிந்து கொண்டேன். உத்தேசமாக வரப் போகிற பயணிகளுக்காக அவள் பதார்த்தத்தைத் தயாரித்துக் கொண்டு நாள் பூராவும் பாடிக் கொண்டிருப்பதையும் புரிந்துகொண்டேன். "சாப்பிட வரும்போது அவர்கள் எதைக் கேட்பார்களோ. மீன், ஆட்டுக்கறிப் பதார்த்தங்கள் செய்ய வேண்டுமே" என்று ரயிலின் கூ சப்தம் கேட்ட போதெல்லாம் சொல்லிக் கொள்வாள். வயது போய்ப் பார்வை மங்கி எதார்த்தம் பற்றிய உணர்வு விலகி நினைவுகளை தற்போதைய நிகழ்வுகளுடன் கலந்துவிட்டு குழந்தைப் பிராயத்தில் பரிச்சயமாகி மரணமடைந்தவர்களுடன் உரையாடியவாறே பாட்டி போய்ச் சேர்ந்தாள். போன வாரம் கலிஸிய நண்பன் ஒருத்தனுடன் ஸான்டியாகோ டி கம்போஸ்டெலாவில் இதைச் சொல்லப்போக "அப்படியானால் பாட்டி கலிஸியக்காரியாகத்தான் இருக்க வேண்டும், சந்தேகமில்லை. பித்துப் பிடித்தவள்" என்றான். நிஜத்தில் எனக்குத் தெரிந்திருந்த கலிஸியக்காரர்களும் சந்தித்துப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்களும் மீனராசியில் பிறந்தவர்களே.


சுற்றுலாப் பயணியாக இருப்பதிலுள்ள அவமானம் எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. சதா அலைந்து கொண்டிருக்கும் நண்பர்களும் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்து விடுவதை விரும்பாததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். கலக்காமல் போனாலும் தாங்களும் சுற்றுலாப் பயணிகளே என்பதை உணராத நண்பர்கள். போதிய அளவு அறிந்து கொள்வதற்கு நேரமில்லாமல் ஒரிடத்துக்குப் போகும்போது வெட்கத்துக்கு இடமின்றி என் பாத்திரம் சுற்றுலாப் பயணியுடையதாகி விடுகிறது. "உங்கள் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும்...." என்று வழிகாட்டிகள் ஜன்னல் ஊடாக விளக்கம் தருகிற மின்னல்வேக சுற்றுலாக்களில் இணைய விரும்புகிறேன். பார்க்க விரும்பாத இடங்களை சந்தேகமில்லாமல் தெரிந்து கொள்ளத்தான்.
எந்த வகையிலும் இத்தகைய விபரங்களுக்கு இடம் தராத நகரம் ஸான்டியாகோ. அங்கேயே பிறந்து விட்டதைப் போல உடனடியாகவும் முழுமையாகவும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் நகரம். ஸயானாவில் உள்ள சதுக்கத்தை விடவும் அழகானது பூமியில் இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அதைவிட அழகானதா என்ற சந்தேகத்தைக் கொண்டு வருவது ஸான்டியாகோ சதுக்கமே. பொலிவும் முனைப்பும் அதன் வயதை யோசிக்க வைக்காமல் செய்யும். காலப்பிரக்ஞையை இழந்து போன யாரோ நேற்றுத்தான் அதை நிர்மாணித்திருக்க வேண்டும். சதுக்கத்தை வைத்து மட்டும் இந்த மனப்பதிவு உண்டாவதில்லை. நகரத்தின் மூலை முடுக்குகளைப் போலவே தினசரி வாழ்க்கையில் ஆழ்ந்து தோய்ந்திருப்பதிலிருந்து உண்டாகிறது. துடிப்பான நகரத்துக்கு வயதேற உற்சாகமும் குதூகலமுமாக ஆர்ப்பரிக்கும் மாணவர்கள் வாய்ப்பளிப்பதில்லை. கெட்டியாகிப் போன சுவர்களிலிருந்து எழுகிற செடிகொடிகள் விநாசத்தையும் விஞ்சி நிற்கும். காலடி ஒவ்வொன்றிலும் பூமியின் இயல்பான கற்கள் முழுமலர்ச்சியுடன் படும்,
மூன்று நாட்களாக மழை புயலுடன் இல்லை. இடையிடையே கடும் வெயில் இருந்தாலும் கலிஸிய நண்பர்கள் பொன்மயமான இந்த இடைவெளிகளைக் கண்டதாகத் தெரியவில்லை. மழைக்காக சதா என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மழையற்ற கலிஸியா தரும் ஏமாற்றத்தைக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை...ஏனென்றால் கலிஸியர்களின் உலகம் அவர்களின் அதுபற்றிய உணர்வைக் காட்டிலும் புராணிகமானது. புராணிகப் பிரதேசங்களில் சூரியன் தலைகாட்டுவதில்லையே.
"போனவாரம் வந்திருந்தால் சீதோஷ்ணம் பிரமாதமாக இருந்திருக்கும்" என்றார்கள் அவமானம் படிந்த முகங்களுடன் நண்பர்கள். "பொருத்தமில்லாமல் வருஷத்தின் இந்த சமயத்தில் பெய்கிறது" என்றும் வலியுறுத்திச் சொன்னார்கள். வாலி இங்க்லான், ரொஸாரியோ டி காஸ்ட்ரோ மற்றும் கலிஸியக் கவிஞர்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களில் எல்லாம் பார்த்தால் பிரபஞ்சப்பிறப்புக் காலம்தொட்டே பொழிகிறது மழை என்றிருப்பதை மறந்துவிட்டிருந்தார்கள். மழைக்கிடையே ஓயாது வீசும். காற்றுதான் ஏகப்பட்ட கலிஸியர்களை மகிழ்வான வகையில் வித்தியாசப்படுத்தி வைத்திருக்கிற விதையைத் தூவியிருக்க முடியும்.
நகரத்தில் மழை. வயல்களில் மழை. அரோஸாவின் ஏரிகள் நிறைந்த சொர்க்கத்திலும் விகோ முகத்துவாரங்களிலும் மழை. பாலத்தின் மேலும். மாயத்தன்மை மிக்க ப்ளாஸா டி கம்படாஸ்ஸாவிலும் மழை. வேறுஉலக காலத்தைச் சார்ந்த ஹோட்டல் உள்ள லா டொஜாவிலும் மழை. மழை நிற்கவும் காற்று ஓயவும் மறுபடியும் உயிர்ப்பு வர சூரிய ஒளி தென்படுவதற்காகவும் ஹோட்டல் காத்திருப்பதாகக் தோன்றியது. நாசமாக்கப்பட்டிருக்கும் பூமியில் கிடைக்கிற ஒரேவகை சிப்பிமீன் பதார்த்தத்தைத் தின்றவாறே பொலிவுடனான உலகில் போவதாக மழையில் நடந்து போனோம். ஓயாத மழையால் கிட்டிய நன்மையென இதையெல்லாம் அறிந்துகொண்டோம்.
எப்போதோ பார்ஸிலோனா விடுதி ஒன்றில் எழுத்தாளர் அல்வாரோ கான்க்யுரர்ஸ் கலிஸிய உணவு பற்றிக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். விவரிப்பு அற்புதமானதால் கலிஸியக்காரனின் பிதற்றலான நினைவுகளாகக் குறித்தும் கொண்டேன். கலிஸிய அகதிகள் சொந்த ஊர் பற்றி பேசுவதை ஞாபகப் படுத்திக் கொள்ள முடிகிற வரையில் அவை கடந்த கால ஏக்கம் கலந்தவையாகத் தெரிகின்றன. கலிஸியாவில் கழித்த எழுபத்திரண்டு மணி நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கிற போது அதெல்லாம் நிஜம்தானா, பாட்டியின் பித்துப் பிடித்த பிதற்றலுக்கு ஒருவேளை பலியாகிவிட்டேனோ என்று ஆச்சரியத்துடன் யோசிக்க வேண்டியிருக்கிறது. கலிஸியர்களைப் பொறுத்த வரை இந்த சந்தேகத்துக்கு பதில் ஏதும் கிட்டாமல் தான் போகப் போகிறது.


தமிழில் - தேவதாஸ்