Monday, 6 April 2020

புனைவு என்னும் புதிர் – 2 திலீப் குமார் சிறுகதை: கடவுhttps://web.archive.org/web/20190707210643/http://maamallan.com/?p=4118

November 1, 2018
கடவு
திலீப் குமார் 
இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துதான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும்போல், அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம்போல், கால்களை நீட்டி, பின்னந்தலையைச் சுவரில் அழுந்தப் பதித்து, விட்டத்தைப் பார்த்தபடி வாயைப் பிளந்து மிகுந்த சிரமத்துடன் சத்தமாக மூச்சுவிட்டாள் பாட்டி.
பாட்டியின் எதிரே, எதிர் வீட்டு சாரதா பெஹ்னும் அடுத்த வீட்டு புஷ்பா பெஹ்னும் உட்கார்ந்திருந்தார்கள். உயிர் பிரிந்ததும் பாட்டி நேரே சொர்க்கத்துக்குப் போகும் வகைக்கு, ஒரு மூலையில் நாத்தி பெஹ்ன் வியாசப் பலகையில் டோங்கரே மஹ்ராஜ்ஜின் பாகவதத்தை விரித்து வைத்துப் படிக்கத் துவங்கியிருந்தாள். பாட்டி யின் மருமகள் சுரேகா பாட்டியின் முதுகைத் தடவிக்கொடுத்தபடி இருந்தாள். 
வாசல் பக்கம் தாழ்வாரத்தில் பாட்டியின் மருமகன் கோபால் பாயுடன் நான் நின்றுகொண்டிருந்தேன். அண்டை வீட்டுக்காரர்களான த்ரம்பக் பாய், பாபு பாய், ப்ரான் ஜீவன்லால், மற்றும் ஓரிரு இளைஞர்கள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒட்டடை சூழத் தொங்கிக்கொண்டிருந்த பழுப்பேறிய 25 வாட்ஸ் பல்பு அழுதுவடிந்தது.
வழக்கம்போல் தரம்பக் பாய் என்னைப் பார்த்து ”டேய் நிலைமை ஒன்றும் சரியில்லை. எதற்கும் 31லிருந்து ரஜ்னியை அழைத்துவந்துவிடு”, என்றார். நான் தயங்கி நெளிந்தபடி மாடிப்படிப் பக்கம் நகர்ந்தேன். 
ஏகாம்பரேஸ்வரர் அக்ரகாரத்தில், 25ஆம் எண் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் 22ஆம் எண்வீட்டு முன்னறையிலும் தாழ்வாரத்திலும் பல முறை அரங்கேறிய காட்சிதான் இது. சாகக் கிடப்பவர்கள் செத்துதான் போக வேண்டும் என்று நியதி கிடையாது. ஆனாலும் கங்குப் பாட்டி சாகக் கிடப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தைப் பல முறை மீறிவிட்டிருந்தாள். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, 27 முறை அந்தக் கட்டடத்தில் வாழ்ந்த 24 குஜராத்திக் குடித்தனக்காரர்கள் எல்லோரையும் இப்படி அர்த்த ராத்திரியில் எழுப்பி, சாகாமலேயே கலவரப்படுத்தியிருக்கிறாள். அக்ரகாரத்தில் இறங்கி, “கங்குப் பாட்டிக்கு சீரியஸ்” என்று யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். உடனே உங்கள் கன்னத்தில், செல்லமாகத்தான் என்றாலும், “சப்பென்று அறைந்துவிடுவார்கள். உன் மூச்சுத்திணறத் துவங்குவதற்கு முன்பான சில கணங்களில், ஒவ்வொரு முறையும் பாட்டி, கண்களை அகல விரித்து அந்த முன்னறையின் வெறுமைக்குள் வெறித்தபடி, “மகனே கோபால், இன்று எனக்கு ஜீவன் தவிக்கிறது. நான் கோலோகம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டதடா! சீக்கிரம் கங்கா ஜலம் கொண்டுவா” என்று உருக்கமாகக் கூறுவாள். 
கொண்டித்தோப்பிலிருந்த மார்வாடி ஆஸ்பத்திரியின் தலைமை வைத்தியரான 80 வயது கன்னடக்காரர் ராமச்சந்திர சர்மாவை ஸ்கூட்டரில் உட்கார்த்தி அழைத்துவந்ததும், அவர் பாட்டியின் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். ”மாஜிக்கு இதயம் வீக்தான். ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை. ராத்திரி ஏதும் எண்ணெயில் பொரித்த பதார்த்தத்தைச் சாப்பிட்டிருப்பார்” என்பார் அலட்சியமாக (பாட்டி நாத்தி பெஹ்ன் வீட்டு போண்டாக்களையோ, கீழ்வீட்டு மதூரியின் சமோசாக்களையோ ஒருகை பார்த்திருப்பாள்). தொப்பியைக் கழற்றித் தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி ஒரு கணம் யோசிப்பார். பிறகு, தன் கோட்டுப் பைக்குள் கை விட்டுச் சிறுசிறு சூரணப் பொட்டலங்களைக் கொத்தாக எடுப்பார். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரித்து, பாட்டியின் திறந்த வாய்க்குள் கொட்டுவார். மேலும் சில பொட்டலங்களை சுரேகாவிடம் கொடுத்து, “வேளைக்கு ஒன்று, மூன்று நாளைக்கு. சாப்பாடு கூடாது. பார்லி வாட்டரும் உப்பில்லாத அரிசிக் கஞ்சியும்தான். எல்லாம் சரியாகிவிடும்,” என்று கூறுவார். 15 ரூபாய் ஃபீஸ் வாங்கிக்கொண்டு, “நமஸ்தே” சொல்லிவிட்டுக் கிளம்புவார். பரீட்சித்து மஹராஜன், “சர்ப்பம் தீண்ட” சாபத்திற்கு ஆளாவதற்குள், பாட்டி ஆ, ஊ என்று ஆர்ப்பரித்து பெரிய பெரிய ஏப்பங்களையும், டர்ர், புர்ர் என்று ஏகப்பட்ட குசுக்களையும் விடத் துவங்குவாள். நாலைந்து நிமிடம்தான். பின்பு எல்லாம் சரியாகிவிடும். பாட்டி ஒரு மிடக்குத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் குழந்தையைப் போல் தூங்கிவிடுவாள். கிழவியைக் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டுக் கட்டடம் மறுபடியும் கோழித்தூக்கம் போடும்.
தெருவில் கால் வைத்ததும், நிலவொளியில் அக்ரகாரம் வெறிச் சென்றிருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோபுர உச்சியில் ஒரு சிறிய மின்விளக்கு மினுங்கியது. குளிர்ந்த காற்று ரகசியம் போல் மேலெல்லாம் படர்ந்தது. 31ஆம் நம்பர் கட்டடத்தை நெருங்க நெருங்க ரஜினிகாந்த் மாமாவின் முகம் மனதுக்குள் தோன்றியது.
குஜராத்தி முறைப்படி பாடை கட்டுவதில் படு வல்லவரான ரஜினிகாந்த் மாமாவுக்கு ப்ராட்வேயில் ஒரு மொத்த சைக்கிள் கடையில் விற்பனைப் பிரதிநிதி வேலை. பெரும்பாலான நாட்களில், சைக்கிள் உதிரி பாகங்கள், டயர் ட்யூப்களுக்கு ஆர்டர் சேகரிக்க சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு அதிகாலையிலேயே கிளம்பிப் போய்விடுவார். அவரும் அவர் மனைவி மட்டும்தான். குழந்தை குட்டி கிடையாது. அன்பும் சிறிது ரெளடித்தனமும் மிக்கவர்.
பித்ருக்களான பிறகு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்ய வாரிசில்லாதவர்கள் பேயாய் அலைவார்கள் என்று ரஜினிகாந்த் மாமா விடம் யாரோ சொல்லியிருந்தார்கள். கூடவே, அந்த விதிக்கேட்டுக்குப் பரிகாரமாக 108 சாவுக்குப் பாடை கட்டினால் நல்ல கதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் ரஜினி காந்த் மாமா பாடை கட்டுவதில் முழுமூச்சாக இறங்கினார். அதை ஒரு கலையாகவே கற்றுத் தெளிந்திருந்தார். அவர் கட்டிய பாடையில் கடோத்கஜனைக்கூடப் படுக்க வைத்துத் தூக்கிச் செல்லலாம் என்பார்கள். சவுக்கார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் எங்கே குஜராத்திகள் செத்துப்போனாலும் ரஜினிகாந்த் மாமாவுக்குத்தான் முதல் தாக்கல்! தன் 45 வயதில் இதுவரை 102 பாடைகளைக் கட்டியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒரு பாடை என்பது மோட்சத்தை நெருங்குவதற்கான ஒரு படி.
31ஆம் எண் கட்டடத்தின் பின்கட்டில் வசித்த ரஜ்னி மாமாவை எழுப்ப, கோயில் கதவு போன்றிருந்த அந்தப் புராதன முன்கதவின் இரும்பு நாதாங்கியைப் பிடித்து, சத்தமாக அவரை அழைத்தபடி நான் தட்டியபோது, தெருவோரம் படுத்திருந்த மூன்று நாய்கள், இரண்டு பெருச்சாளிகள் மற்றும் கட்டடத்திற்குள் இருந்த மிட்டு மாமா, லக்கு மாமா, சூரி சித்தப்பா எல்லோரும்கூட குடும்ப சகிதம் எழுந்துவிட் டார்கள். ரஜ்னி மாமாவிடம் விஷயத்தைக் கூறியதும் அவர் அந்த அரைத் தூக்கத்திலும்கூடச் சற்று ஆவேசமாகத்தான் பேசினார்: “அடேய் பைத்தியக்காரா, அந்தக் கிழவியாவது சாவதாவது! கொள்ளை வந்து ஊரே பாடை ஏறினாலும் அவள் சாக மாட்டாள்; எழுதி வைத்துக்கொள்… சரி, சரி… யார் உன்னை இங்கே அனுப்பியது? அந்தத் த்ரம்பக் பயல்தானே? இன்றைக்கு மட்டும் கிழவி சாகாமல் இருக்கட்டும்… பேசிக்கொள்கிறேன் அந்த படவாவை.”
ரஜ்னி மாமாவுடன் நான் 25ஆம் நம்பருக்குத் திரும்பியபோது, முற்றம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கோபால் மாமாவைத் தவிர யாரும் இல்லை. வைத்தியர் வந்துபோயிருந்தார். வாயு பிரிந்து, பாட்டி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். ரஜ்னி மாமா, “நான் சொன்னேன் அல்லவா! கிழவி மறுபடியும் எமனுக்குக் கொக்காணி காட்டி விட்டாள்” என்றார் லேசாகச் சிரித்தபடி.
2
கங்குப் பாட்டியும், பாட்டியாவதற்குமுன் ஒரு காலத்தில், பேதையாக, சிறுமியாக, பெதும்பையாக, மங்கையாக, மடந்தையாக, அரிவையாக, எல்லாமாக இருந்திருந்தாள் என்பது இப்போது யாருக்கும் ஞாபகம் இல்லை. பாட்டியின் சமகாலத்தவர்கள் எல்லோரும் பெரும்பாலும் செத்துவிட்டார்கள். இப்போது உயிரோடிருக்கும் கிழவிகளும், கிழவர்களும்கூட அவளைவிட எட்டு பத்து வயது குறைந்தவர்கள்தான். கங்குப் பாட்டிக்குக் கல்யாணமானபோது அவளுக்கு வயது 13. 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதுக்குள் 6 குழந்தைகளைப் பெற்று, அந்த 6 குழந்தைகளையும் வரிசையாகப் பறிகொடுத்து 27 வயதில் விதவையும் ஆகிவிட்டாள். கங்குப் பாட்டி, கோபால் மாமாவின் ஒன்றுவிட்ட அத்தையின் பெண். அவளைப் பெற்றவர்களும், அவள் கூடப்பிறந்தவர்களும் அவளது கண் முன்னாலேயே ஒருவர் பாக்கியில்லாமல் செத்துப்போயிருந்தார்கள். விதவையான பின் கோபால் மாமாவின் தந்தைதான் அவளைத் தன் குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டார். கங்குப்பாட்டியின் சோகம் அத்தோடு முடிந்து விடவில்லை. கோபால் மாமாவின் தந்தை, மறு வருடம், ரேணி குண்டாவில் வேலை காரணமாகச் சில மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அப்பொழுது, அவர்கள் வசித்துவந்த இடத்துக்கு எதிரில் ஒரு மிலிட்டரி ‘பாரக்ஸ்’ இருந்தது. உள்ளூர் மற்றும் ஆங்கிலோஇந்திய சோல்ஜர்கள் லாரிகளிலும் ட்ரக்குகளிலும் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஒரு நாள் இரவு திடீரென்று கங்குப் பாட்டியைக் காணவில்லை. மிலிட்டரிக்காரர்கள்தான் அவளைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டதாகச் சொல்வார்கள். அதன்பின் கங்குப் பாட்டியை 4, 5 வருடங்கள் காணவில்லை. என்ன ஆனாள், எப்படி எங்கே இருந்தாள் என்பது இன்றுவரை புதிர்தான். கங்குப் பாட்டி திரும்பக் கிடைத்தபோது, அவள் பம்பாயில், பூலேஷ்வரில் ஒரு தெருவோரத்தில் கர்ப்பமாக, இடது கால் மூட்டுப் பிசகி, சித்தம் கலங்கித் திரிந்து கொண்டிருந்தாள். அக்ரகாரத்துக்காரர்கள் யாரோ பம்பாய்க்குச் சென்றவர்கள் தகவல் சொல்ல, கோபால் மாமாவின் தந்தை போய் அவளை மீட்டு வந்தார். பம்பாயிலேயே கருக்கலைக்கப்பட்டு, காலுக்கும் ஓரளவு சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டாள். அந்த நாட்களில் கங்குப் பாட்டி திக்பிரமை பிடித்தவள்போல் உத்திரத்தையே வெறித்துக்கொண்டு கிடப்பாள்; அல்லது முகத்தைக் கைகளால் மறைத்தபடி விசும்பிவிசும்பி அழுதுகொண்டிருப்பாள். மார்வாடி வைத்தியசாலையில் 11 வருட சிகிச்சைக்குப்பின் அவளது மனநிலையில் சிறிது தெளிவு ஏற்பட்டது. அப்படியும் கங்கு பெஹ்ன் பழைய கங்கு பெஹ்ன் அல்ல என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களுக்கு அந்தப் பழைய கங்கு பெஹ்னைப் பற்றி யும் அதிகம் தெரிந்திருக்கவில்லைதான்.
இளவயதில் கங்கு பெஹ்ன் பார்க்க மிக அழகாக இருப்பாள். மூக்கைத் தவிர அவள் முழுக்க முழுக்க “நர்கீஸ்’ ஜாடைதான். செக்கச் சிவந்த மேனி, விம்மித் ததும்பும் மார்பகம், அழகிய கண்கள், சிறிய கனமான அதரங்கள், ‘பஃப்’ வைத்த ஜாக்கெட் அணிந்து முத்துக்கள் பதித்த ‘பட்வா’வைத் தோளில் மாட்டிக்கொண்டு, பக்கவாட்டில் ஒயிலாக நிற்கும் அவளது அந்தக் காலத்து கலர் ஃபோட்டோவை இப்போது பார்த்தாலும் மனம் பதறாமல் இருக்காது. உலகத்தையே பரிகசித்தபடி மமதை கொண்டு மினுங்கியது அவளது இளமை! காயமே இது பொய்யடா என்று கூறியவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு, பின் அதே கையோடு அவனைக் கட்டித் தழுவிக்கொள்ளவும் தோன்றும். 
சிகிச்சைக்குப் பின், சிறிது உற்சாகமாகக் காணப்பட்டாலும், வதங்கிய மனத்தின் ஆற்றாமையும் குரூரமும் முகத்தில் லேசாக எப்போதும் படர்ந்திருக்கும். தன் வயதையொத்தவர்களிடம் அதிகம் பேச மாட்டாள். குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் மட்டும்தான் ஏதோ பேசினாள். மாலையில் சிறுசிறு வீட்டு வேலைகள் செய்வாள். அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லித்தருவாள். ரேடியோவில் சுரையாவின் பாட்டு போட்டால் கேட்பாள்-கூடவே அவளும் பாடுவாள் (சுரையா பாடிய ‘சோச்சா த்ஹா கியா, கியா ஹோ கயா…’, ‘ஓதூர் ஜானேவாலே… இந்த இரண்டு பாடல்களும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்).
அக்ரகாரத்து மற்ற விதவைகளைப் போல், சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைப்பது, காய் நறுக்கித் தருவது, பாத்திரம் தேய்ப்பது, ஹவேலிக்குச் சென்று பூத்தொடுப்பது என்றில்லாமல், ஒரு சமயம், பாட்டி ஆவேசம் வந்தவள் போல் புத்தகம் படிப்பதில் இறங்கினாள். சிறு வயதில் அவள் குஜராத்தியில் 5 புத்தகங்களும், இங்கிலீஷில் 2 புத்தகங்களும் படித்திருந்தாள். ‘குஜராத்தி மண்டல்’ லைப்ரரியிலிருந்து கோபால் பாய் மூலம் புத்தகங்களை எடுத்துவரச் சொல்லிப் படிக்க ஆரம்பித்தாள். நாட்டுப் பாடல்கள், கட்டுரைகள், நாவல்கள், சமய நூல்கள், சிறுகதைகள், சமையல் கலை என்று ஏராளமான புத்தகங்கள். தன் காரியங்களை முடித்துவிட்டு, மதியத்திலிருந்து இரவுவரை படித்துக்கொண்டேயிருப்பாள். தடிதடியான புத்தகங்களை, ஓயாமல், வருடக்கணக்கில் படித்தாள். அப்புறம் திடீரென்று ஒரு நாள் அதையும் நிறுத்திவிட்டாள். பிறகு முன்னறையில் ஒரு ஓரமாகச் சுவரில் தலையைச் சாய்த்துக்கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். பாட்டி அந்த நாட்களில் என்ன நினைத்தாளோ, என்ன யோசித்தாளோ! 
இப்படியாக, பாட்டிக்கு வருடங்கள் ஸ்தம்பித்து நின்றன என்றாலும், கோபால் மாமா காலேஜ் முடித்து, வேலைக்குப் போய், கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார். கோபால் மாமாவின் பெற்றோர்களும் கோலோகம் போய்ச்சேர்ந்தார்கள். தன் எழுபதாவது வயதுக்குப் பிறகு, பாட்டிக்குத் திடீரென்று ஒரு நாள் மனம் திரும்பியது. கட்டடத்திலிருந்த எல்லோரிடமும் வலியச் சென்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினாள் பாட்டி. ஒரு நாள் காலை, குளித்து முடித்து, வெள்ளைவெளேரென்ற புடவையைக் கட்டிக்கொண்டு, கைத்தடியை ஊன்றி ஊன்றி, கட்டடத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தாள். தூங்கிவழிந்த, குளிக்காத குழந்தைகளின் தலைகளை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். சில குழந்தைகளுக்கு முத்தம்கூடத் தந்தாள். முற்றத்தில் இருந்தபடி , கதவருகே நின்ற குடும்பத் தலைவிகளிடம் பொதுவாகவும், தனியாகக் குறிப்பிட்டும், பீடிகையோடு, உருக்கமாகப் பேசினாள் பாட்டி: “மகளே! பல காலமாக நான் உன்னோடெல்லாம் பேசிப் பழகாமல் இருந்து விட்டேன். என் நிலைமை அப்படி. வாஸ்தவம்தான். நான் உங்களை யெல்லாம்விட மூத்தவள்தான். ஆனால் மூத்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பதில்லையே… என்ன, நான் சொல்வது உண்மையா, பொய்யா? நீயே சொல். மனத்தைச் சின்னது பண்ணிக்கொள்ளாதே. பெரிய நாள் சிறிய நாள் வந்தால் மறந்துவிடாதீர்கள் இந்தக் கிழவியை. உன் அத்தையும் நானும் சிறு வயதில் ஒன்றாக விளையாடியவர்கள், தெரிந்துகொள். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள்; சங்கோஜப்படாதே. என்னாலானதை அவசியம் செய்வேன். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதேடியம்மா! கடைசியில் மனிதர்களுக்கு என்னதான் வேண்டும் சொல், அன்பைத் தவிர. உலகில் உண்மையான அன்புதான் எல்லாவற்றையும்விடப் பெரிது. எனக்கு என்ன இருக்கிறது இனி, சொல். நான் போக வேண்டியவள். நீங்கள் எல்லோரும்தான் இருக்க வேண்டியவர்கள். சந்தோஷமாக இருங்கள். நான் பட்ட பாடுதான் தெரியுமே உங்களுக்கு! நூறுநூறு மனித நாய்கள் குதறிக் கிழித்த உடம்பு இது. இந்தச் சீரழிந்த உடம்பைச் சாய்த்துவிட இன்னும் மனம் வரவில்லை அந்தக் குருட்டு பகவானுக்கு. நான் உயிரோடு இருக்கும்வரை, உங்களுக்கெல்லாம் பெரியவள் நான் ஒருத்தி இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். என் பாழும் வயிற்றில் பிறக்காத அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள். நன்றாக இருங்கள். சரி. சமையல்கட்டை ஒழித்துவிட்டு மதியத்திற்குப் பின் மாடிக்கு வா. பேசிக்கொண்டிருக்கலாம்.”
இவ்வாறு அன்று தன் நல்லெண்ண விஜயத்தை நான்கு கட்ட டங்களில் முடித்துக்கொண்டு திரும்பினாள் பாட்டி. பாட்டியின் பேச்சைக் கேட்டு 25ஆம் எண் கட்டடத்து 24 குடித்தனக்காரர்களும் – அதிசயித்து நின்றார்கள். பாட்டியுடைய பேச்சின் ‘மெய்ப்பொருள் காணும் அறிவு’ பலருக்கு இருந்தாலும், சிலருக்குப் பாட்டிக்குச் சுத்த மாக மரைகழன்றுவிட்டது என்று தோன்றாமலும் இல்லை.
பாட்டி விடுத்த வேண்டுகோளைக் கட்டடத்தில் இருந்த பெண்கள் மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மதியத்திற்குப் பின் கோபால் மாமா வீட்டு முற்றத்தில் படிக்கட்டை ஒட்டிப் பெண்கள் கூடி அமர ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் குமரிப் பெண்கள், இளம் பெண்கள், நடுத்தர வயதுப் பெண் கள்தான். (த்ரம்பக் பாயின் மகள், மாதுரி மட்டும்தான் எல்லோரையும் விடச் சிறியவள். சனிக்கிழமைகளில் மட்டும் வருவாள். அவளுக்கு வயது 13. கொழுகொழுவென்று இருப்பாள்.) கிழவிகள் யாரும் வரவில்லை. நீண்ட மூக்கில் கண்ணாடி சரிந்திருக்க, கங்குப் பாட்டி சுவரில் சாய்ந்து நடுநாயகமாக வீற்றிருப்பாள். பல வருடங்களாகப் பேசாமலிருந்த பாட்டி இப்போது பேசுபேசு என்று பேசினாள். தான் படித்த புத்தகங்களிலிருந்து கதை சொன்னாள், பாட்டு பாடினாள், விடுகதை போட்டாள். மருதாணி இட்டு விட்டாள். ஜடை பின்னி விட்டாள். விதவிதமாகக் கொண்டை போட்டு விட்டாள். எம்பிராய்டரி போட, ஸ்வெட்டர் பின்ன, ரங்கோலி போட, கண்ணாடியில் மயில் படம் வரைய, ஊறுகாய்கள் போட, பிஸ்கட், கேக் செய்ய என்று பலவற்றையும் கற்றுத்தந்தாள். பாட்டிக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். பாட்டியும் புதுப்பெண்ணின் உற்சாகத்துடன் அக்ரகாரத்துப் பெண்கள் எல்லோரையும் ஒரே வாரத்தில் அரவணைத்துக்கொண்டாள். பாட்டி படித்தவள் என்பதால் எதைப்பற்றியும் பேசினாள். ஆசாரகுஜராத்திப் பெண்கள், குறிப்பாக விதவைகள், பேசக் கூசும் விஷயங்களை அவள் தயக்கமோ விகற்பமோ இல்லாமல் பேசினாள். பாலியல் உறுப்புகள், உணர்வுகள், உறவுகள் பற்றியெல்லாம் கூட அவள் கூச்சமில்லாமலும் துடுக்காகவும் பேசினாள். பாட்டியின் இந்தப் பக்கத்தைக் கண்டு, கட்டடத்துப் பெண்கள் முதலில் திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஆனால் பாட்டியின் குழந்தை மனமும் கூர்மையான நகைச்சுவை உணர்வும் புரியப் புரிய அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பவர்கள் நாணி நெளிந்தாலும், உள்ளூர ரசித்துக் குதூகலிக்கும்படி இருந்தது அவள் பேச்சு. இன்னும், தாங்கள் பேச முடியாததைப் பாட்டி பேசுகிறாள் என்று பலருக்கு மகிழ்ச்சியாகக்கூட இருந்தது.
அந்த பாட்டிக்கு அக்ரகாரத்து ஆண்கள் மேல் அவ்வளவு மதிப்பு கிடையாது. எல்லோரையும் ‘டா’ போட்டுதான் பேசுவாள். முதுகுக்குப் பின்னால் மட்டுமரியாதை இல்லாமல் ‘ராண்ட்நா ‘ என்றும் அழைப்பாள். குஜராத்தியில் ‘ராண்ட் நா’ என்பதைத் தமிழில் தோராயமாக “தேவடியா மகனே’ அல்லது ‘அவிசாரி மகனே’ என்று மொழி பெயர்க்கலாம். பாடைகட்டும் ரஜ்னி மாமாவைப் பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். அதனால், அவரை முகத்துக்கு நேராகவே ‘ராண்ட்நா’ என்று அழைப்பாள். தேனொழுகும் வாத்சல்யத்துடன் அவள் அந்தச் சொல்லை உச்சரிக்கும்போது தொல்காப்பியம் வரையறுக்கும் பொருள் – மயக்கம் ஏற்பட்டுவிடும். இதேபோல் பாட்டி ஏராளமான குஜராத்தி வசைச் சொற்களை அச்சுவெல்லம்போல் அழகாகப் பயன்படுத்துவாள். “உன் ஆசன வாயில் தீயை வைக்க” என்று அவள் சொல்லும்போது நம் நெஞ்சைத் தென்றல்தான் வருடியதோ என்று இருக்கும். (சபைக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பாட்டி ஒரு பட்டப் பெயர் சூட்டினாள். “சின்ன டேக்ஸா’, ‘பெரிய டேக்ஸா’, ‘வெள்ளைப் பன்னி’, ‘குண்டு ராணி’, ‘ஒட்டடைக் கொம்பு’, ‘தவளை’, ‘யாட்லி’, ‘டபுள் ரொட்டி’, ‘ஸ்டைல் மாமி’, ‘லலிதாஜி’, ‘சந்திரபாபு’ என்று ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பாட்டி தனக்கும் ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டாள்-‘விடியாமூஞ்சி.’ இது தவிர, பாலியல் உறுப்புகளுக்கும்கூடப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஆண்குறியை “வஸ்து’ என்றும், பெண்குறியை ‘கபிலவஸ்து’ என்றும், புட்டத்தை ‘டேக்ஸா’ என்றும் அழைத்தார்கள். முதலில் கூச்சப்பட்டவர்கள்கூட நாளடைவில் இந்தச் சங்கேத வார்த்தைகளின் நுண்பயன் கருதி அவற்றை ஏற்றுக்கொண்டார்கள். ஒவ்வொரு நாளும், “இன்று உன் வீட்டில் என்ன சமையல்” என்றுதான் ஆரம்பிப்பார்கள். பிறகு பேச்சு ரேஷன் கார்டு, பால் கார்டு, பஞ்சாப் கோதுமை, பூஜை, மாமியார், நாத்தனார், வெய்யில் கொடுமை, சல்மான்கானின் வெற்று மேலுடம்பு, தண்ணீர்ப் பிரச்சினை, உடைகள், என்று எங்கெல்லாமோ போகும். எப்படியும், ஒவ்வொரு நாளும் வஸ்துவையும் கபிலவஸ்துவையும் பற்றிச் சொல்லி யாரையாவது சீண்டிக்கொண்டிருப்பாள் பாட்டி. பாட்டியிடம் அகப்படுபவர்கள் முதலில் சங் கோஜப்பட்டாலும் பிறகு, அவர்களாகவே முன்வந்து அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக, இளம் பெண்கள் லஜ்ஜை குறைந்து உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். பாட்டியும் தனக்கு மெத்தப் படித்த மேதாவி என்ற பிம்பம் இருந்ததால் தாறுமாறாகப் பேசி எல்லோரையும் துணுக்குறச் செய்தாள். (சபை நடவடிக்கைகள் சிறுசிறு அனுபந்தங்களாகக் கீழே தரப்பட்டுள்ளன.) வெடுக் வெடுக்கென்று பாட்டி பேசுவது பார்க்கவும் கேட்கவும் மிக அழகாக இருக்கும். அக்ரகாரத்துப் பெண்கள் பாட்டியின் உண்மையான அன்பிலும் பச்சைபச்சையான பேச்சிலும் நெகிழ்ந்து கிளுகிளுத்துப்போனார்கள்.
அக்ரகாரத்துப் பெண்கள் மற்றும் பாட்டியின் இந்தப் பரிபாடிகளில் இன்றுவரை மாற்றம் இல்லை. என்ன, கடந்த சில மாதங்களாகப் பாட்டியின் உடல்நிலைதான் கொஞ்சம் படுத்துகிறது. 
*** 
“ஏண்டி லலிதாஜி, கல்யாணமாகி ஆறு மாதமாகிறது, இன்னும் கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கிறாய். வஸ்து கபிலவஸ்துவுக்கு வருவதில்லையா? அல்லது நீதான் கபிலவஸ்துவின் கதவுகளை மூடி வைத்துவிட்டாயா?”
“எனக்குதான் இஷ்டமில்லை பாட்டி, வஸ்துவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.”
“ஆறு மாதமாகிறது. இன்னும் என்னடி பயம்? தைரியமாக இரு. தேவையானால் டாக்டரிடம் போ. பயம் பயம் என்று கோட்டை விட்டுவிடாதே. (குஜராத்தி) ஆண்களுக்கு இரண்டு விஷயம்தான் முக்கியம். ஒன்று சப்பாத்திகள், மற்றது கபிலவஸ்து. ஞாபகம் வைத்துக் கொண்டு சமர்த்தாய் இரு.” 
*** 
“பாட்டி, நீங்கள் விரதப் புத்தகமெல்லாம் படித்திருக்கிறீர்களா?”
“ஓ! படித்திருக்கிறேனே சந்திரபாபு! என்ன வேண்டும் சொல்.”
“ஏதாவது ஒரு நல்ல விரதமாகச் சொல்லுங்கள்.”
“ஏன்”
“வீட்டில் ஒரே பிரச்சினை.”
“என்ன, வஸ்துவால் நிற்க முடியவில்லையா?”
“தூ… எந்த நேரத்தில் என்ன பேசுகிறீர்கள்!”
”இல்லைடி, அதற்கெல்லாம் கூட விரதம் இருக்கிறது தெரியுமோ?”
இடையில், வெள்ளைப் பன்னி “’நிஜமாகவா பாட்டி! எனக்குச் சொல்லுங்கள், எனக்குச் சொல்லுங்கள்” என்றாள். பாட்டி “ச்சீ நாயே! இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை, அதற்குள் அதெல்லாம் எதற்கு உனக்கு?” என்று அவள் முதுகில் அறைந்தாள். “எனக்குச் சொல்லு பாட்டி, எனக்குதான் கல்யாணமாகிவிட்டதே என்று காதை நீட்டினாள் தவளை. பாட்டி தவளையின் காதில் ஏதோ கிசு கிசுத்தாள். உடனே, “ஐய்யெ… ச்சீ, இதெல்லாம்கூட ஒரு விரதமா” என்று அலறினாள் தவளை. “இல்லையா பின்னே” என்ற பாட்டி சந்திரபாபுவிடம் திரும்பி “உன் வீட்டில் என்ன பிரச்சினை” என்று கேட்டாள்.
”எவ்வளவு பணம் வந்தாலும் பத்த மாட்டேனென்கிறது. வீட்டில் ‘பர்கத்’தே இல்லை .
“அடியே, இதற்கெல்லாம் விரதம் கிடையாது. அப்படியே இருந்தாலும் நீ அந்த விரதம் இருப்பதைவிட *சிதம்பரத்தையே” இருக்கச் சொல்லிவிடலாம். உன் பிரச்சினைதான் இந்த நாட்டுக்கும்.” 
(*ப. சிதம்பரம், பலமுறை இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர்).
சந்திரபாபு பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால், சபை கலையத் தொடங்கியபோது, பாட்டி சந்திரபாபுவுக்கு இரண்டு மூன்று விரதங்களைப் பற்றிக் கூறினாள். கூடவே, இதையும் சொன்னாள். “இதோ பார், விரதங்களால் பெண்களுக்குத்தான் பாதிப்பு. உலகில் உள்ள எல்லா விரதங்களையும் பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு ஒரு விரதமும் கிடையாது. நாய்கள் தின்றுவிட்டு ஊர்சுற்றத்தான் லாயக்கு. எனவே யோசித்துச் செய்…”
***
“என் மாமியார் உன்னைக் கண்டபடி திட்டுகிறாள். உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சினை பாட்டி?”
“என்ன சொன்னாள்?”
“வண்டைவண்டையாகப் பேசும் துக்கிரி முண்டை , அவள் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள்.”
“அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் உடம்பு அழுக்கு படிந்த உடம்புதான். இந்தியாவிலிருக்கும் எல்லா ஜாதி நாய்களும் என்னை துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன், வெள்ளைக்காரன்கூட என் மேல் படுத்திருக்கிறான். இதைத்தான் சொல்கிறாள். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இதைச் சொல்வதற்காக அதையும் சேர்த்துச் சொல்கிறாள்… நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து என் உறுப்பிலும் ஆசன வாயிலும் மாறிமாறிக் குறிகள் நுழைந்து கொண்டேயிருக்கும்… மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக்கதற ”ரம்”மும் பிரியாணியும் திணித்துத் திணித்து… இந்தக் கஷ்டமெல்லாம், அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவையைச் சுற்றிக்கொண்டு புருஷனுக்குக்கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி புரியும் சொல். அவள் கிடக்கிறாள், விடு.”
“அழாதே பாட்டி.”
”நான் எங்கேடி அழுகிறேன். அழ வேண்டியதெல்லாம் எப் போதோ அழுது முடித்துவிட்டேன்.”
***
“பாட்டி ஆத்மா அழியாது என்கிறார்களே, ஆத்மா என்றால் என்ன ?”
“யார் சொன்னது குண்டு ராணிக்கு இதைப் பற்றியெல்லாம்?”
”நேற்று பாகவதம் சொன்ன பெரியவர் சொன்னார்.”
“என்ன சொன்னார்?”
“உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது என்றார்.”
“அப்படியா சொன்னார்? உன்னைப் பார்த்தா சொன்னார்?”
“இல்லை, பொதுவாகச் சொன்னார்.”
“ஓ, அதுதான் நீ தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாய். பெண்களுக்கு ஆத்மா கிடையாது, தெரியுமா உனக்கு?”
“என்ன பாட்டி இப்படிச் சொல்கிறாய்! எனக்கு ஆத்மா இல்லையா?” 
“வருத்தப்படாதே. எனக்கும்தான் ஆத்மா இல்லை. இங்கேயிருக்கும் யாருக்கும் ஆத்மா இல்லை. பெண்களுக்கே ஆத்மா கிடையாது.”
“பின்னே அவர் சொன்னாரே, “நம் எல்லோருடைய உடல்களும் அழிந்துவிடும், ஆனால் ஆத்மாக்கள் மட்டும் அழியவே அழியாது’ என்று ?”
“அவர் ஆண்களுக்காகத்தான் சொல்லியிருப்பார். நமக்காக அல்ல. ஆத்மா இருப்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், அது அழிகிறதா இல்லையா என்று. நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்குதான் ஆத்மாவே இல்லையே!” 
“அப்படியானால், ஆத்மா இல்லாமல் நாமெல்லாம் எப்படி மறுபிறவி எடுக்க முடியும்?”
“இது யார் சொன்னது?”
“அவரேதான்.”
“நீ மறுபிறவி எடுக்க விரும்புகிறாயா?” 
“ஆமாம்… ஆனால் எனக்குதான் ஆத்மா இல்லை என்று சொல்லிவிட்டாயே!”
“ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒருவேளை உனக்கு ஆத்மா இருந்து, நீ மறுபிறவி எடுக்கும் வாய்ப்பிருந்தாலும்கூட, என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், நீ அதிகம் போனால் ஹரியானாவில் கறவைப் பசுவாகத்தான் மறுபிறவி எடுக்க முடியும். உனக்கு இந்தப் பிறவியே போதும். பார், எவ்வளவு அழகாக இருக்கிறாய் ஜம்மென்று! ஆத்மா கீத்மா என்று கவலைப்படாதே. வாழ்வதற்கு நல்ல உடம்பு ஒன்று போதும். சரி, விடு. இந்தப் பிறவியில் நீ என்ன ஆகப்போகிறாய்?”
“டாக்டராக, ஆனால் எனக்கு சயின்ஸே வரவில்லை .”
“எல்லாம் வரும், கவனமாகப் படி. மனதுவைத்தால் எதையும் சாதிக்கலாம்.”
“மனதுவைத்தால் ஆத்மாவைப் பெற முடியுமா?” 
“அடியே, உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது! மனது வைத்தால் சாகக்கூடசாகலாம். ஆனால் ஆத்மாவை மட்டும் அடைய முடியாது. கடவுள் பெண்களுக்கு ஆத்மா தேவையில்லை என்று எப்பவோ முடிவுசெய்துவிட்டார். ஆத்மா இல்லாவிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. சந்தோஷமாக இரு.”
பாட்டி சொன்னதை நம்பியும் நம்பாமலும் நிராசையுடன் போனாள் குண்டு ராணி. டபுள் ரொட்டி, பாட்டியிடம் “என்ன ஒரே போடாய்ப் போட்டுவிட்டாய் பாட்டி?” என்றாள். “பின்னே என்ன, எல்லாச் சாமியார்ப் பயல்களும் காலங்காலமாக “உடல் அழியக் கூடியது உடல் அழியக்கூடியது’ என்று சொல்லிச் சொல்லியே உடலைக் கேவலப்படுத்திவிட்டார்கள். இப்படிச் செய்தால் உடம்பை சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எவளுக்காவது தோன்றுமா? உடம்பு சந்தோஷமாக இருந்தால் தானேடி மனம் சந்தோஷமாக இருக்கும், தன்னம்பிக்கை வரும். உடம்பைச் சிறுமைப்படுத்துவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படாது – லௌகீகத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி. சோம்பேறித்தடியர்கள்தான் உருவாவார்கள். 13 வயதுக்குழந்தை உடல் அழியும், ஆத்மா வேண்டும், மறுபிறவி வேண்டும் என்று பினாத்துகிறாள். என்ன கேடுகாலம் இது!” என்றாள் பாட்டி.
***
“பாட்டி உலர்ந்த-மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மிளகாய் எவ்வளவு பாகம்?”
“அது உன் டேக்ஸாவின் எரி-எதிர்ப்புத்திறனைப் பொறுத்தது.”
(இப்படிக் கூறினாலும் பாட்டி சபை முடிவில் மிளகாயின் சரியான அளவைச் சரியானபடி கூறிவிடுவாள்.) 
*** 
“கபிலவஸ்துவில் சந்தோஷமும் இல்லை, திருப்தியும் இல்லை. பின் இந்தக் கபிலவஸ்துவால் பெண்களுக்கு என்ன லாபம்?”
“இது மிக நல்ல கேள்வி” என்று டி.வி.யில் பேட்டி காணப்படுபவர் சொல்வதுபோல் அமரிக்கையாக ஆரம்பிப்பாள் பாட்டி. “ஒட்டடைக் கொம்பே, கபிலவஸ்துவில் சந்தோஷம் விளையாததற்கு முக்கியக் காரணம் வஸ்துதாரிகளின் அறியாமைதான். கபிலவஸ்துவின் நுட்பங்கள் தெரியாமல் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்கிற மாதிரி இருந்தால் என்ன பயன்? உலகில் உள்ள பெரும்பான்மையான கபிலவஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி, பொதுவாக, கபிலவஸ்துவில் பிரச்சினைகள் இருக்க நியாயமே இல்லை. எங்கோ லட்சத்தில் ஒரு கேஸ், இரண்டு கேஸ்களில் இயற்கையான நீர் வறட்சி இருக்கலாம். அதற்கும் சிகிச்சை உண்டு. மற்றபடி பெரும்பாலான கபிலவஸ்துகளில் இதமும் பதமும் குறைவதற்கு வஸ்துதாரிகளின் அவசரப் புத்திதான் காரணம். கபிலவஸ்துவின் அந்தப்புரத்துக்குள் வருவதற்கான சரியான பத்ததிகளை நீதான் உன் புருஷனுக்குச் சொல்லித்தர வேண்டும்.”
“கடவுளே, இதையெல்லாமா பேச முடியும்?”
“பேசித்தான் தீர வேண்டும். உங்கள் காலம் எவ்வளவோ பரவாயில்லைடி. எங்கள் காலத்தில் வஸ்துவையே கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொண்டே இருப்போம்.”
***
“என் அத்தையின் தொல்லை தாங்கலை பாட்டி”
”சரியான பஜாரியாச்சே அவள், என்ன செய்தாள்?”
“சிடுசிடு என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். வேலைமேல் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். நேற்று 12 கிலோ கோதுமையைக் கொடுத்து சாயங்காலத்திற்குள் பொறுக்கி வைக்கச் சொல்லிவிட்டாள். இடுப்பு உடைந்துவிட்டது.” 
“கல்யாணமாகி வந்த புதிதிலிருந்தே எனக்கு அவளைப் பற்றிப் தெரியும்டி. அவள் சிரித்து யாருமே பார்த்ததில்லை. அப்படியே எப்போதாவது அவள் சிரித்தால் சிவகாசி காலண்டர் பூனை சிரிப்பு போல் இருக்கும்.
“பூனை சிரிக்குமா பாட்டி?” *
“அசடே, பூனை எங்கேயாவது சிரிக்குமா? அப்படி வரைந்திருப்பார்கள். சரி, இதற்கு உன் புருஷன் என்ன சொல்கிறான்? சரியான உப்பில்லாத மடையனாச்சே அவன்!”
“அவருக்கு ஒன்றுமே தெரியாது. இவளால் எங்களுக்குள்ளும் பிணக்கு. அவர் தினமும் வேண்டும் என்கிறார். ஆனால் என்னால் முடியவில்லை பாட்டி.” 
”அடப் பாவமே. சின்னஞ்சிறுசுகள். இப்போது இல்லாமல் எப்போது சந்தோஷமாக இருப்பது?”
“என் மார் ரொம்பக் குலுங்குகிறதாம், தேவடியாள் மாதிரி. அதனால் மேக்ஸி போடக் கூடாது என்று சொல்லிவிட்டாள்.”
“அதெல்லாம் ஒன்றும் இல்லேடி, உன் மாருக்கென்ன… செப்புக் குடமாட்டம் அளவாகத்தானே இருக்கிறது. நீ அழாதே. உன் மாமியாருக்குப் பொறாமை, அதான். அவளுக்கு எந்தக் காலத்திலும் மாரே இருந்ததில்லை. சப்பாத்திக் கல் மாதிரிதட்டையாகத்தான் இருக்கும். நான் சொல்வதைக் கேள். மூன்று நாளைக்கு டீயில் பேதி மருந்தைக் கலந்து கொடுத்துவிடு. 40, 50 தடவை கொல்லைக்குப் போய்ச் சுருண்டு படுத்தால்தான் அவள் கொட்டம் அடங்கும்.”
“ஆனால் அது பாவமில்லையா?”
“பாவம் புண்ணியமெல்லாம் பார்த்தால் உன் காரியம் நடக்குமா? என்னைக் கேட்டால் உன் மாமியாரை விஷம் வைத்துக்கூடக் கொன்றுவிடலாம். நீ அழாதே போ. உன்னை மாதிரி சமர்த்து மருமகள் கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டுமே அந்த முண்டைக்கு.” 
***
“வாடி, காலேஜ் டூரெல்லாம் எப்படியிருந்தது?”
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாட்டி. ஒரு வாரம் பயங்கர சந்தோஷமாக இருந்தது.”
“‘ஊட்டியெல்லாம் நன்றாகச் சுற்றிப்பார்த்தாயா?”
“ஊட்டி என்ன, உலகத்தையே பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் பாட்டி.”
“என்னடி சொல்கிறாய்?” –
“பெண்களுக்கு இனி வஸ்துவே தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டிவிட்டாள் அவள்.”
“யாரவள்?”
“அகிலாண்டேஸ்வரி. என்கூடப் படிக்கிறவள்.”
“என்னடி செய்தீர்கள்?”
“எல்லாமே… அதையெல்லாம் வாயால் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்க்க வேண்டும்.”
“அடியே, சுத்தபத்தமாக இருந்துகொள்ளுங்களடி.”
“எனக்கு ஒரு பயமும் கிடையாது. யார் தயவும் வேண்டாம் இனி எனக்கு. அகிலா ஒருத்தி போதும்.”
“உன் அம்மாக்காரி சும்மா விடுவாளாக்கும். நிலத்துக்கேத்த உழவனைக் கூட்டிவந்துவிட மாட்டாளா?”
“அதெல்லாம் என்னிடம் நடக்காது. பார்த்துக்கொண்டே இரு. அது சரி பாட்டி, இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“அடி நாசமாய்ப் போனவளே, நானே ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் டேக்ஸாவைச் சொரிந்து விடக் கையைக்கூட மடக்க முடியாமல் கிடக்கிறேன். என்னிடமா வந்து கேட்கிறாய்? நான் சொன்னால் உடனே சட்டம் போட்டுவிடுவார்களாக்கும்… சனியனே!”
“அகிலாகூட உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் பாட்டி.” 
“கிண்டலா செய்கிறாய்! அடியே! உன் டேக்ஸாவில் ஒரு உதை விட்டேனென்றால்… தெரியும் சங்கதி.”
***
”கங்குப் பாட்டி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா ?”
“சில சமயம் நம்புவேன்; சில சமயம் மாட்டேன்.”
“தீர்மானமாக இல்லையாக்கும்.”
”உலகில் எதுவும் தீர்மானமானதில்லைடி. பயம் ஏற்படும்போதோ என்னை நானே சகித்துக்கொள்ள முடியாதபோதோ கடவுளை நம்புவேன். மற்றபடி நம்ப மாட்டேன்.”
“ஏன் அப்படி?”
“அது அப்படிதான். நீ மேலே சொல்லு.”
”நம்ம புஷ்டி மார்க்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.”
“புஷ்டி மார்க்கம் காலாவதியாகிவிட்டது.”
“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நேற்றுக்கூட அந்த பாகவதர் சொன்னாரே… புஷ்டி மார்க்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறதென்று…”
“மகளே, உடுப்பி ஓட்டல் சரக்கு மாஸ்டர்கள்போல் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிற இந்த பாகவதர்களுக்கு ஒரு இழவும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பணக்காரர்கள் வீட்டு கார்களில் ஏறி மிதந்து கொண்டே இருப்பார்கள். உனக்கும் எனக்கும்தான் தெரியும். இந்த அக்ரகாரத்தைத் தாண்டிப் போனால் புஷ்டி மார்க்கம் இல்லை, சென்ட்ரல் ஸ்டேஷன்தான் இருக்கிறது என்று.”
“இவ்வளவு வயதான நீங்களே இப்படி அபசாரமாகப் பேசலாமா?”
“அபசாரம் ஒன்றும் இல்லையடி; வாஸ்தவத்தைத்தான் சொல்கிறேன். வல்லபாச்சாரியார் முக்தியடைந்த காலத்திலிருந்தே புஷ்டி மார்க்கத்தைப் பற்றி ஏகப்பட்ட ‘கம்ப்ளையிண்டுகள் உண்டு.”
“அப்படியானால் நம் போன்ற வைஷ்ணவர்களின் கதி? நாம் வேறு எந்த மார்க்கத்தைத்தான் பின்பற்ற முடியும்?”.
“இந்து மதத்தில் இரண்டு முக்கிய தாரைகள் உண்டு. ஒன்று நீயே கடவுள் என்று சொல்வது; மற்றது கடவுள் வேறு, நீ வேறு என்று சொல்வது. இரண்டாவதில் சில உட்பிரிவுகளும் உண்டு. கடவுளைத் தேடி நீ போ என்று, கடவுள் உன்னைத் தேடி வருவார் என்று, நீ பாதி வழியில் போய் நின்றுகொள், மீதிப் பாதி வழியைக் கடவுள் கடந்து வந்து உன்னை ஆட்கொள்வார் என்று. நீ இந்த வம்பிலெல்லாம் மாட்டிக்கொள்ளாதே. நீ நல்லவளாக இருப்பதற்கு இதெல்லாம் அவசியமில்லை. கடவுள் இல்லாமலேயே நாம் நல்லவர்களாகவும் இருக்க முடியும், துஷ்டர்களாகவும் இருக்க முடியும்.”
“நீங்கள் எந்தக் கடவுளை நினைத்துக்கொள்வீர்கள் – அதாவது நம்புகிற சில சமயங்களில்?”
“நானா, நான் பாலகிருஷ்ணனைத்தான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அது பழக்கதோஷம்டி, அதைப் பெரிதுபடுத்தாதே. பொதுவாகக் கடவுளை நம்பாமல் இருப்பதில்தான் அனுகூலங்கள் அதிகம்.”
”இப்படி விவஸ்தை கெட்டத்தனமாகப் பேசுவதற்காகவா அவ்வளவு புத்தகங்களையும் படித்தீர்கள்?”
“புஸ்தகம் படித்தவர்கள் எல்லாம் விவஸ்தை உள்ளவர்கள் என்று யார் உனக்குச் சொன்னது?” 
“விளையாடாதீர்கள் கங்குப் பாட்டி. நான் தூய எண்ணத்தோடு கேட்கிறேன். அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே நான் கடவுளை நம்ப விரும்புகிறேன்.”
“நீ அழுக்கான எண்ணத்தோடு கேட்டாலும் தப்பில்லை. உனக்கு என்ன பிரச்சினை இப்போது… கும்பிடுவதற்குக் கடவுள் வேண்டுமா அல்லது பின்பற்றுவதற்கு மார்க்கம் வேண்டுமா?”
“இரண்டும்தான் வேண்டும்.”
“அதற்கு நீ ஏதாவது ஒரு மடத்தில்தான் போய்ச் சேர வேண்டும். உண்மையைச் சொல்கிறேன் தாயே, மார்க்கங்களின் காலம் முடிந்து விட்டது. கூட்டத்தோடு கோவிந்தா போடுவதுதான் முடியும் இப்போது. இளம் பெண் நீ, மார்க்கம் கீர்க்கம் என்று ஏன் அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு இஷ்டப்பட்ட எல்லாக் கடவுள்களையம் கும்பிடு அல்லது அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கும்பிடு. உன்னை மாதிரி இருப்பவர்களுக்காகத்தான் இந்து மதத்தை ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி அமைத்திருக்கிறார்கள். உனக்குப் பிடித்த அயிட்டத்தை நீ எடுத்துக்கொள்ளலாம்.”
“இப்படி எல்லாம் பேச உங்களுக்கு பயமாயில்லையா பாட்டி?”
“மனத்தில் பட்டதைச் சொல்வதற்குப் பயப்படுவானேன்?”
***
“பாட்டி, வஸ்துவை டேக்ஸாவில் போட வேண்டுமாம்.”
“உன் புருஷன்தானே, அந்த அக்கிரமி செய்தாலும் செய்வான். சரி, விடு. அப்படியும்தான் ஒரு நாள் இருக்கட்டுமே.”
“பாட்டி, என்ன நீ சுத்த கூறுகெட்டவளாக இருப்பாய் போலிருக்கிறதே!”
“அடியே, வீணாகப் பதறாதே. உலகத்தில் எதுவுமே புனிதமானது இல்லை. நிச்சயமாக உன் டேக்ஸா புனிதமானதே இல்லை. இந்து மதம் என்ன சொல்கிறது-உடல் தூய்மையற்றது; அழியக்கூடியது என்று. அழியக்கூடிய உடலிலிருந்து இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே.”
“நீ சரியான வக்கிரம் பிடித்தவள். உன்னிடம் வந்தேன் பார்!”
“வெளிப்படுத்திவிடுகிற வக்கிரத்தைவிட, தேக்கி வைத்திருக்கிற வக்கிரம்தான் அபாயமானது. தவிர, வக்கிரம் எதில்தான் இல்லை? பார்க்கப்போனால் எல்லாமே வக்கிரம்தான். என் பேச்சைக் கேள். உனக்கு நிச்சயமாக விருப்பம் இல்லையென்றால் தீர்மானமாக மறுத்துவிடு. ஆனால், நீ அரைமனத்துடன் இருந்தால் பரீட்சித்துப்பார். அதனால் உனக்குச் சில அனுகூலங்களும் ஏற்படலாம்.”
“கிழவி, நீ நாசமாய்த்தான் போவாய்.” 
***
“நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.”
“பெரிய டேக்ஸாவுக்கு அப்படி என்ன சோகம்?”
“ஒன்றும் சரியில்லை. மனம்விட்டுப்போய்விட்டது. யாரையும் பிடிக்கவில்லை. எல்லோரையும் போட்டு மொத்த வேண்டும்போல் இருக்கிறது.”
“உன் வயது என்னடி?”
“47”
“இந்த வயதில் அப்படித்தான் இருக்கும். உன் உடம்புக்குள் மாறுதல் நடக்கிறது.”
“என்ன மாறுதலோ போ பாட்டி, நான் சாகத்தான் போகிறேன்.”
“அப்படிச் சொல்லாதேடி. அது எளிதில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய கோழைத்தனம் வேண்டும். நீதான் தைரியசாலியாயிற்றே. நீ சாகமாட்டாய். பேரன் பேத்தி எடுத்தபின் எமன் வந்து வெற்றிலை, பாக்கு வைத்து உன்னை அழைத்துப் போவான். தவிர தற்கொலை செய்துகொள்வதென்றால் 30 வயதுக்குள் செய்து கொண்டுவிட வேண்டும். அதற்குப் பின் செய்து பயன் இல்லை. ஒரே குழப்பம் ஆகிவிடும்.”
***
“முன்பு மாதிரி வஸ்துவுக்குக் கபிலவஸ்துவுக்குள் நுழைய முடியவில்லை பாட்டி .”
“ஏன், என்ன ஆச்சு?”
“ஒரு நிமிடத்துக்குள் வழுக்கிவிடுகிறது.”
“அடப் பாவமே, பழைய ஜபர்தஸ்து போய்விட்டதாக்கும்… நாப்பத்தைந்து வயதுக்குள்ளாகவா… உன் புருஷன் பாஸ்கட் பால் ப்ளேயராட்டம் நெடுநெடுவென்று லட்சணமாக இருப்பானே. அவனுக்கா இப்படி? சரி சரி, அதற்காக வேறு வஸ்துவைத் தேடி நீ போய்விடாதே. உன் புருஷன் அப்பாவி.”
“ஆமாம் பாட்டி, பர்மாபஜாரில் வஸ்து மாதிரி மிஷினெல்லாம் கூடக் கிடைக்கிறதாமே!”
“பர்மா பஜாரில் நிஜ வஸ்துவே கிடைக்கும். நான் சொல்வதைக் கேள். மிஷின் கிஷின் எல்லாம் சரிப்பட்டுவராது. விலையும் ஜாஸ்தி. அப்புறம் உன் மாமியாருக்குத் தெரிந்தால் உன் டேக்ஸாவைக் கிழித்து விடுவாள். உசிதமானது- மாதத்திற்கு ஒரு முறை கபிலவஸ்துவுக்குள் வஸ்து வரட்டும். மற்ற சமயத்தில் கைப்பக்குவமாக ஏதாவது செய்து கொள்ளுங்கள்.”
“பாட்டி, உனக்கு அபார மூளை.”
“ஏண்டியம்மா திடீரென்று என் மூளையைப் பாராட்டுகிறாய்?”
”நான் நினைத்ததை நீ அப்படியே சொல்லிவிட்டாய்.”
”அப்படியா! எவ்வளவு சமத்துடி நீ! ச்சீ நாயே, உன் டேக்ஸாவில் தீயை வைக்க… இவள் நினைத்தாளாம், நான் சொல்லி விட்டேனாம்!”
***
“உனக்கு உன் சின்ன வயது ஞாபகம் இருக்கிறதா பாட்டி?”
“இப்போது அதைப் பற்றி என்ன?”
“நீ சின்ன வயதில் ரொம்ப அழகாக இருப்பாயாமே?”
“அப்படியா! யாரடீ சொன்னது? சின்ன வயதில் ஒட்டகம்கூடத்தான் அழகாக இருக்கும்?” 
“இப்போது திடீரென்று நீ சின்னப் பெண்ணாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்?”
“நான் சின்னப் பெண்ணாக மாறவேண்டும் என்றால், நீ உன் அம்மா வயிற்றுக்குள்ளும், உன் அம்மா உன் பாட்டி வயிற்றுக்குள்ளும் போயாக வேண்டும். பைத்தியம் போல் உளறாதே.”
“உன் கடந்த காலத்தை நீ நினைத்துக்கொள்ளவே மாட்டாயா?”
“கடந்த காலம் கடந்துவிட்டது. நானோ நீயோ அதை நினைத்து என்ன ஆகப்போகிறது?” 
”உன் இளமைக் காலத்தை நீ நேசிக்கவே இல்லையா? வருத்தமோ சந்தோஷமோ எதுவுமே இல்லையா உனக்கு?”
“மனிதர்கள் எந்தக் காலத்தையும் நேசிக்கக் கூடாதடீ. சொல்லப் போனால், காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது தெரியுமா? கடவுளைப்போல் காலமும் மனிதனின் கற்பனைதான்.”
“காலம் கற்பனை என்றால், நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒன்றுமில்லையா?”
”வெறுமைக்குள் குடைந்த குகைபோல்தான் இந்தக் கணக்கெல்லாம். நீ விரும்பினால் குகையையும் பார்க்கலாம். குகையின் கூரையையும் பார்க்கலாம். விரும்பாவிட்டால் எதுவுமே இல்லை.”
3
மறுநாள் காலை, ரஜ்னி மாமா, பாட்டியைப் பார்க்கக் கிளம்பினார். பாட்டி முன்னறையில் உட்கார்ந்து டீயை சாஸரிலிருந்து சத்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தாள். ரஜ்னி மாமா செருப்பைக் கழட்டிக்கொண்டே, “பாட்டீமா, நேற்றும் டிக்கெட்டைக் கான்சல் செய்துவிட்டாயா? உனக்கு முன் நான் டிக்கெட் வாங்கி விடுவேன் போலிருக்கிறது,” என்றார்.
உள்ளே வந்து ரஜ்னியை தலைநிமிர்த்திப் பார்த்த பாட்டி, “அடேய் ராண்ட்நா , காலங்காலையில் வந்து என்ன அமலங்கப் பேச்சு பேசுகிறாய். கிழவி நான் இருக்கும்போது நீங்கள் எல்லாம் ஏனடா சாக வேண்டும்? விவஸ்தைகெட்ட நாய்.”
பாட்டியை நெருங்கியதும், ரஜினி மாமா, தலைகுனிந்து வணங்கி அப்படியே அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். “பாட்டிமா ஞாபகம் வைத்துக்கொள். உனக்குப் பாடை என் கையால்தான்.”
“சந்தோஷமாக மகனே, நீ கட்டிய பாடையில்தான் நான் ஏறுவேன். இந்தக் கிழவியின் மனம் அப்போதுதான் குளிரும்.”
ரஜ்னி மாமா, சட்டென்று குரலில் கரிசனம் தோய, “என்ன ஆயிற்று பாட்டிமா? நாங்கள் எல்லாம் ரொம்பவும் பயந்துவிட்டோம்” என்று கூறியபடி, பாட்டியின் தலையை வருடினார்.
“எனக்கு என்னடா… ஒன்றுமில்லை. “கேஸ் டிரபிள்தான். நேற்று கீழ் வீட்டு மந்தாகினி சொன்னாள், “பாட்டி, உளுந்து வடை செய்திருக்கிறேன். அப்படியே ‘ரத்னா கேப்’ வடையாட்டம் இருக்கிறது. நீங்கள் இரண்டு சாப்பிட்டுப் பாருங்கள்’, என்று. இந்தக் கிழட்டு முண்டையும் ஆசையில் தின்றுவிட்டேன்.”
“என்ன! இரண்டு… இரண்டு வடையா? மூளை கீளை பிசகி விட்டதாஉனக்கு? குடல் என்ன இரும்பில் செய்திருக்கிறதா? பொறித்த உளுந்து வடை இரண்டைக் குதிரையால்கூட ஜீரணிக்க முடியாது. நாக்கை கன்ட்ரோல் செய் முதலில். அது உனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.”
“செய்கிறேன்; செய்கிறேன். கிடக்கட்டும். உன் பெட்டைக் கழுதை என்ன செய்கிறாள்?”
“வேறு என்ன செய்வாள், சமையல்தான்.”
‘உங்களுக்கு என்னப்பா, எஜமானன் எஜமானி இரண்டே பேர்; வக்கணையாய்ச் சமைத்துச்சமைத்துச் சாப்பிடலாம். ஜாலிதான் போ ”
“என்…ன்…ன ஜாலி” என்று ரஜ்னி மாமா ஆரம்பித்தபோது, கோபால் மாமா பேப்பரும் கையுமாக உள்ளே நுழைந்தார். ரஜ்னியைப் பார்த்ததும் “என்னடா, நீ எப்பொழுது வந்தாய்?” என்றார்.
“இப்பொழுதுதான். பாட்டிக்குத் தேவலை போலிருக்கிறது. நான் இன்று ஆந்திரா டூர் போகிறேன். வரப் பத்து நாட்களாகும்.”
கோபால் மாமா, நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே குரல் கொடுத்தார். “சுரேகா, ரஜினிக்கு டீ கீ கொடுத்தாயா?”
“என்னடா உன் முதலாளி காந்தி ஜெயந்திக்கு ஒரு லட்சம் செலவு செய்து அன்னதானம் செய்கிறானாமே!” 
”இரண்டாம் நம்பர் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்? திங்கவும் முடியாது; கழியவும் முடியாது. இப்படித்தான் தீர்த்தாக வேண்டும்.” என்றார் ரஜ்னி மாமா.
டீ குடித்துவிட்டு, பாட்டியின் கையை ஆதரவாகப் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு, “பாட்டி, நான் போய்வருகிறேன். உடம்பைப் பார்த்துக்கொள்” என்று கூறி மீண்டும் தலைகுனிந்து பாட்டியை வணங்கினார். பாட்டி “நல்லா இரு அப்பனே” என்று ஆசீர்வாதம் செய்தாள்.
பாட்டி, வைத்தியர் கொடுத்த சூர்ணத்தைப் போட்டுக் கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல் மதியம் வரை படுத்திருந்தாள். பிற் பகலில் சபை கூடவில்லை. இதற்கு முன்பு 27 தடவை பாட்டிக்கு சீரியசானபோதும் இப்படித்தான். மறுநாள் ஓய்வு. மாலை நான்கு மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டு வந்த குண்டு ராணி என்ற மாதுரி வந்து எழுப்பினாள். எழுந்து உட்கார்ந்த பாட்டி அவளை அணைத்துக் கொண்டாள்.
“பாட்டி, உனக்கு நேற்று ரொம்ப சீரியசாகிவிட்டதாமே?”
“அதெல்லாம் இல்லேடி. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பார்.”
“இந்தத்தடவை நீ பிழைக்க மாட்டாய் என்று சொன்னார்கள்.”
“ஆமாம். நான் செத்துப்போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.” 
“நீ நிஜமாகவே சொல்கிறாயா பாட்டி? சாவதற்குப் பயமாயில்லையா உனக்கு?”
“எனக்கு என்னடி பயம்? நான் எவ்வளவோ சாவுகளைப்பார்த்தவள். நீ சின்னப் பிள்ளை ; உனக்கு ஒன்றும் தெரியாது.”
“பயமில்லையென்றால், உனக்குச்சாவதற்கு மனமில்லை என்று தான் அர்த்தம்.”
“சாவதற்கு மனம் மட்டும் இருந்தால் போதுமா? சாவும் வர வேண்டும்.” 
“மனம்வைத்தால் நாம் சாகக்கூடச் சாகலாம் என்று நீதானே பாட்டி ஒரு முறை சொன்னாய்!”
“நானா… நானா சொன்னேன்? எப்போது சொன்னேன்?”,
“இல்லை நீ சொல்லியிருக்கிறாய். எனக்கென்னமோ நீ பயப்படுகிறாய் என்றுதான் தோன்றுகிறது.”
“இல்லைடீ கண்ணே. எனக்கு பயமே இல்லை. சாவது நம் கையில் இல்லை .”
”நீ மனதுவைத்தால் சாக முடியாதா? உனக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்ற ஆசைதான்.”
பாட்டி திடீரென்று மௌனமானாள். ஓரிரு கணங்கள் கழிந்த பின் பதில் பேசினாள்.
“நான் இருந்து என்ன பண்ணப்போகிறேன் சொல். சாவு வராதா, வராதா என்று சதா என் ஆத்மா துடித்துக்கொண்டேயிருக்கிறது.”
“உனக்கு ஆத்மா இருக்கிறதா? பெண்களுக்கு ஆத்மா கிடையாது என்று நீதானே சொன்னாய்.”
“நான் எங்கே சொன்னேன்?”
“நீ சொன்னாய்.”
“அப்படியா சொன்னேன்?”
“ஆமாம்”
பாட்டி மீண்டும் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின் மீண்டும் பேசினாள். “நான் செத்தால் உனக்கு வருத்தமாக இருக்குமா?”
“எனக்கு யார் செத்தாலும் வருத்தமாக இருக்கும்.”
“நான் செத்தால் நீ எப்படி அழுவாய்?”
“முதலில் நீ செத்துக் காண்பி.”
“நான் செத்துப்போன பின் நீ அழுவதை எப்படிப் பார்க்க முடியும்?”
இப்போது மாதுரி மௌனமாகிவிட்டாள். சிறிது கழித்து பாட்டியே மீண்டும் பேசினாள்.
“நான் செத்தால் நீ கத்தித்தான் அழ வேண்டும். விசும்பிவிசும்பி அழக்கூடாது.”
“ஏன் அப்படி?”
“அது அப்படித்தான். குழந்தைகள் விசும்பி அழக் கூடாது. கத்தித் தான் அழ வேண்டும்.”
“பாட்டி, நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டாயா? நீ சாகக் கூடாது. பாட்டி, நீ இன்னும் கொஞ்ச நாள் இரு.”
“ச்சீ என்ன பேச்சடி, இது. நீ சொல்வதை நான் ஏன் தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன்? எவ்வளவு சமர்த்தாகப் பேசுகிறாய்? சரி, சரி, போய் உடை மாற்றிக்கொண்டு டீ கீ குடித்துவிட்டுப் படி, நாளைக்கு மறுபடி வா” என்றாள் பாட்டி.
அன்று இரவு பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பல முறை புரண்டு புரண்டு படுத்தாள். வெகு நேரம் விழித்திருந்தாள். காலை 5 மணி ஆனதும் வழக்கம்போல் எழுந்து பாயைச் சுருட்டி எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து சுவரோரமாக உட்கார்ந்து வடக்கில் தலை வைத்துக் கீழே சாய்ந்தாள். கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள். திடீரென்று விக்கல் போல் ஒரு சத்தம் வெளிப்பட்டு, அதோடு பாட்டியின் உயிரும் நீங்கிற்று.
கங்குப் பாட்டி இறந்துபோன செய்தி கேட்டு அக்ரகாரமே திரண்டது. ஒரு அமர்க்களமில்லை, ஒரு ஆர்ப்பாட்டமில்லை. கிழவி, ரிக்ஷாவிலேறி பீச்சுக்குப் போவது போல் சட்டென்று சாய்ந்து செத்துப் போய்விட்டாளே என்று வியந்துபோனார்கள் எல்லோரும். ரஜினிகாந்த் மாமா ஊரில் இல்லாததால், பாட்டியின் பாடையை வேறு யாரோ தான் கட்டினார்கள். 25ஆம் எண் கட்டடத்திலிருந்து பாட்டியின் உடல் வெளியே கொண்டுவரப்பட்டபோது பெண்கள் அடங்கிய குரலில் தேம்பிக்கொண்டு நின்றார்கள். சலசலப்பு கலந்த அமைதியோடு பாட்டியின் சவ ஊர்வலம் கிளம்பியது. 
ஊரிலிருந்து திரும்பிவந்த ரஜ்னி மாமா நேரே கோபால் மாமா வீட்டுக்கு ஓடினார். முன்னறையில் இருந்த பாட்டியின் படத்தைப் பார்த்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “கடைசியில் கிழவி நீ என்னை ஏமாற்றிவிட்டாய். இனி நான் யாரை இஷ்டப்படித் திட்ட முடியும்; இல்லை என்னையும்தான் இனி யார் உன்னைப் போல பாசத்துடன் “ராண்ட்நா” என்று அழைக்கப்போகிறார்கள்?” என்று புலம்பினார். ஒரு மூலையில் கோபால் மாமாவின் மனைவி சுரேகா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக்கொண்டிருந்தாள், அவள் சிரிக்கிறாளா, அழுகிறாளா என்பது தெரியவில்லை.
நன்றி: க்ரியா Cre-A.
*** 
புனைவு என்னும் புதிர்
திலீப் குமார் சிறுகதை – கடவு 
கலைஞர்கள், பொதுவாகவே புனிதங்களைப் போற்றுவதைவிடவும் உடைப்பவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாகக் கலாச்சாரம் என்கிற பெயரில் கெட்டித்துப்போன புனித பிம்பங்களையும் மதிப்பீடுகளையும் உடைப்பதைக் கலையாக்குவதில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம் அளப்பரியது.
மனித வாழ்வை வளப்படுத்த அறிவியல்போலவே இன்றியமையாதது அரசியல். ஆனால் அரசியலில் இருக்கும் அதிகாரமும் பணமுமே அதை நோக்கி அனைவரையும் ஈர்க்கிறது. இதை வெளிப்படையாய் ஒப்புக்கொள்வதில் இருக்கும் நாகரிகக் கூச்சமே கொள்கையின் பெயரால் அணிதிரள்வதான பாவனையை உருவாக்கிக்கொள்கிறது. இதன் காரணமாகவே, நோக்கங்களின் அடிப்படைகளைக் கேள்விகேட்கும், வெற்றுக் கோஷங்களைத் அம்பலப்படுத்தும்  நவீன இலக்கியம், வாசகனை அரசியலற்றவனாக ஆக்கிவிடுகிறது என்று கட்சி அரசியல்காரர்களை அலறவைக்கிறது.
சீரிய இலக்கியமும் அரசியல்தான் பேசுகிறது. குடும்பங்களுக்குள்ளும் மனிதர்களுக்கு இடையிலும் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியலைத்தான் பேசுகிறது.
மத, அரசியல் தலைவர்களாக அறியப்படுகிறவர்கள், புனிதம் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றின் பெயரால், யதார்த்த வாழ்வில், சொல்பவன் உட்பட யாருமே கடைப்பிடிக்காத பழைய மதிப்பீடுகளைப் பூசி மெழுகிப் பூசித்துக் கொண்டிருக்கிற காரியத்தையே வெவ்வேறு ரூபங்களில் செய்து மனிதர்களை மந்தைகளாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில், கோவையிலும் சென்னையிலும் குடியேறி இரண்டு மூன்று தலைமுறைகளுகளாக வசிக்கும், கீழ் மத்தியதர குஜராத்தி சமூகத்தின் வாழ்வை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்பவராக அறியப்படுபவர் திலீப் குமார்.
இன்றைய பேஸ்புக் மொழியில் சொல்வதானால், இதை வந்தேறிகளின் கதை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இது அக்ரகாரக் கதை குஜராத்திகளின் கதை என்பதெல்லாம், கதையைக் கண்முன்னே தத்ரூபமாகக் காட்டுவதற்கான மேற்போக்கான அரிதாரம் மட்டுமே.
இலக்கிய வாசகன், பிராமண பின்னணியில் இருக்கும் கதைகளை, அவற்றில் வரும் கதை மாந்தர்களை அவர்களின் குணாதிசயங்களை பிராமணர்களுக்கு மட்டுமே உரியவை என்று ஒருபோதும் கருதுவதில்லை. அவற்றை ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமானதாகப் புரிந்துகொள்கிறான். இல்லையெனில் இருநூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ருஷ்ய இலக்கியம் எப்படி இங்குள்ள இன்றைய வாசகனுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
எந்த மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும், சொன்னதில் இருந்து சொல்லப்படாததை உணர வாசகனைப் பண்படுத்துவதே இலக்கியத்தின் அடிப்படை இயக்கமாக இருக்கிறது. கதாபாத்திரம் சாதி மதம் நிறம் பேச்சுவழக்கு என்று சகல அடையாளங்களுடனும் இருக்கும். ஆனால் அது சொல்லும் மதிப்பீடுகளும் தாக்கமும் வீச்சும் மொழி நாடு என்கிற எல்லைகளைக் கடந்து உலகின் எந்த மனிதனுக்கும் அர்த்தமுள்ளதாக இருப்பதே இலக்கியமாக மதிக்கப்படுகிறது.
சவுக்கார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரகாரமே கதைக்களன். அங்கிருக்கும் ஒரு கட்டடத்தில் வசிப்போரே கதாபாத்திரங்கள். சாகக் கிடக்கும் கங்குப் பாட்டியே கதையின் நாயகி. அவள் சாகப்போகிறாள் என்று தொடங்குகிறது இந்தக் கதை.
இதன் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. முப்பது பக்கங்களில், குறுநாவல்போல் எக்கச்சக்க பாத்திரங்களுடன் இருக்கிறது இந்த நீளமான சிறுகதை. அதன் ஊடாக, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஆனால் செக்ஸ் என்கிற ஒற்றைச் சரட்டில் கோர்க்கப்பட்டிருக்கின்றன பல குறுங்கதைகள்.
கிழங்கள் பெரிய ‘போர்’. இது, நம்மைவிட அவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. கிழங்களின் கதை போரடிக்கும் என்பதாலேயே எல்லோரையும் ஈர்க்க அவர்கள் கைக்கொள்கிற கவர்ச்சிகர உத்தி செக்ஸ் பேச்சு. அதுவும் வெளிப்படையாக இருக்காது. இலைமறை காய்போல் இருப்பதில்தானே கிளர்ச்சி அதிகம்.
இந்த அளவில் இந்தக் கதையை, எழுதித் தேர்ச்சிபெற்ற எந்த வெகுஜன எழுத்தாளனும் எழுதிவிடமுடியும். செக்ஸ் பேசுகிற கிழவி என்பது கிளுகிளுப்பு சமாசாரம். எனவே எந்தப் பெரிய பத்திரிகையில் எழுதியிருந்தாலும் அட்டகாச ஹிட்டாகிவிடும். ஆனால் இந்தக் கிழவி ஏன் இப்படி இருக்கிறாள், அவளுக்குப் பின்னால் இருக்கிற கொடுமையான காரணம் என்ன என்பதில் இலக்கிய வாசகனைத் தவிர எவருக்குமே அக்கறையோ ஆர்வமோ இருக்க சாத்தியமில்லை. எனவே இதை திலீப் குமார் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே எழுதமுடியும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
முப்பது பக்கக் கதையில், கிழவியின் முழு வாழ்க்கையும் ஓரிரு பக்கங்களில் சொல்லப்பட்டுவிடுகிறது.
கங்குப் பாட்டி என்கிற இந்தக் கிழவி, தனக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்து மீள்வதற்குப் பல வருடங்கள் ஆகின்றன. பற்பல ஆண்டுகளில் அவள் பல்வேறு நிலைகளைக் கடந்துவருகிறாள். அவளது இறுதிக் காலத்தில் நிகழும் கதையில், உடலும் மனமும் ஒருசேர கனிந்த பழம்போல காட்சியளிக்கிறாள்.
அதிர்ச்சியிலிருந்து உலகின் மீதான வெறுப்பிற்கும் வெறுப்பிலிருந்து வெறுமைக்கும் வெறுமையிலிருந்து அனைவர்மீதான அன்புக்கும் மீண்டு வந்து சேர்கிறாள். சில வரிகளில் சிறிய சுய விளக்க ஆன்மீகச் சொற்பொழிவுபோல் சொல்லி, தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரிடமும் – குறிப்பாகக் குழந்தைகளிடமும் பெண்களிடமும் – அன்பு பாராட்டி நெருங்கிப் பழகத் தொடங்குகிறாள்.
அவளது அன்பு இளவயது பெண்களிடம் எப்படி வெளிப்படுகிறது என்கிற துணுக்குகள்தான் பிற்பகுதியில் வரும் குறுங்கதைகள். அவை வெறும் காம நகைச்சுவைகளாக இல்லாமல், அங்கதம் இழையோடும் அறிவுரைகளாகவும் அவற்றோடு செக்ஸ் மேற்பூச்சில் நாட்டு நடப்பு உட்பட பல விஷயங்கள் பின்னிப் பிணைந்திருப்பதும் ஒவ்வொரு பகுதிக்கும் முழுமையையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது.
“எவ்வளவு பணம் வந்தாலும் பத்தமாட்டேனென்கிறது. வீட்டில் ‘பர்கத்’தே இல்லை”
என்பவளிடம் கங்குப் பாட்டி சொல்கிறாள்,
“அடியே, இதற்கெல்லாம் விரதம் கிடையாது. அப்படியே இருந்தாலும் நீ அந்த விரதம் இருப்பதைவிட (நிதி அமைச்சர்) சிதம்பரத்தையே இருக்கச் சொல்லிவிடலாம். உன் பிரசனைதான் நாட்டுக்கும்”
தங்களது மார்க்கம் உலகெங்கும் பரவியிருப்பதாய் பாகவதர் சொன்னதைப்பற்றிக் கேட்கும் பெண்ணிடம் பாட்டி சொல்வது
“மகளே, உடுப்பி ஓட்டல் சரக்கு மாஸ்டர்கள்போல் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிற இந்த பாகவதர்களுக்கு ஒரு இழவும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பணக்காரர்கள் வீட்டுக் கார்களில் ஏறி மிதந்துகொண்டே இருப்பார்கள். உனக்கும் எனக்கும்தான் தெரியும். இந்த அக்ரகாரத்தைத் தாண்டிப் போனால் புஷ்டி மார்க்கம் இல்லை, செண்ட்ரல் ஸ்டேஷன்தான் இருக்கிறது என்று.”
இந்தக் கதை ஏன் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு செக்ஸ் கிளுகிளுப்பு இருந்தும் எப்படி இது, இப்படியோர் உயரத்தைத் தொடுகிறது என்பதற்கு இந்தப் பகுதி சிறந்த எடுத்துக்காட்டு. இதைச் சுருக்கிச் சொல்வதோ சொல்லாமல்விடுவதோ இரண்டுமே, இந்தக் கதைக்கு இழைக்கும் அநீதி என்பதால் முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
***
”என் மாமியார் உன்னைக் கண்டபடி திட்டுகிறாள். உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சினை பாட்டி?”
”என்ன சொன்னாள்?”
”வண்டைவண்டையாகப் பேசும் துக்கிரி முண்டை, அவள் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள்.”
”அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் உடம்பு அழுக்கு படிந்த உடம்புதான். இந்தியாவிலிருக்கும் எல்லா ஜாதி நாய்களும் என்னை துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன், வெள்ளைக்காரன்கூட என் மேல் படுத்திருக்கிறான். இதைத்தான் சொல்கிறாள். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இதைச் சொல்வதற்காக அதையும் சேர்த்துச் சொல்கிறாள்… நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்கவைத்து என் உறுப்பிலும் ஆசன வாயிலும் மாறிமாறிக் குறிகள் நுழைந்துகொண்டேயிருக்கும்… மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக்கதற “ரம்”மும் பிரியாணியும் திணித்துத் திணித்து… இந்தக் கஷ்டமெல்லாம், அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவையைச் சுற்றிக்கொண்டு புருஷனுக்குக்கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி புரியும் சொல். அவள் கிடக்கிறாள், விடு.”
“அழாதே பாட்டி.”
“நான் எங்கேடி அழுகிறேன். அழ வேண்டியதெல்லாம் எப்போதோ அழுது முடித்துவிட்டேன்.”
அரசியல் சமூக விழிப்புணர்வை உச்சத்தில் கொண்டவர்கள் இப்போது சொல்லட்டும். இது அக்ரகாரக் கதையா குஜராத்தி உயர்சாதிக் கதையா இந்து ஆதிக்கசாதி விதவையைப் பற்றிய கதை மட்டுமேவா இல்லை எல்லோருக்குமான நம் எல்லோரையும் தொடுகிற கதையா என்று. 
நன்றி: அம்ருதா நவம்பர் 2018

புனைவு என்னும் புதிர் – 3 ஷோபாசக்தி சிறுகதைகள்: பரபாஸ், மாதா, சூக்குமம் November 27, 2018 பரபாஸ் பாரபாஸ் –புனைவு என்னும் புதிர் – 3 ஷோபாசக்தி சிறுகதை: மிக உள்ளக விசாரணை://web.archive.org/web/20190628163345/http://maamallan.com/?p=4158

November 27, 2018
பாரபாஸ் – பேர் லாகர்குவிஸ்டு எழுதியது. தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் எழுதியது. இரண்டுமே ஸ்வீடிஷ் படைப்புகள். இரண்டுமே திருடர்களைப் பற்றியவை. இரண்டையுமே தமிழில் மொழிபெயர்த்தவர் க.நா.சு. இரண்டுமே இலக்கிய பொக்கிஷங்கள்.
தம்முடைய பரபாஸை, தேவமலர் போன்ற உலக தரத்திற்கு இணையாக எழுதி வைத்திருக்கிறார் ஷோபாசக்தி. இதுவும் திருடர்களைப் பற்றிய கதைதான்.
மூன்று கதைகளிலுமே திருடர்கள் கருணையுடன் பார்க்கப்படுகிறார்கள். அதற்காக அவர்களது திருட்டு மூன்றிலுமே நியாயப்படுத்தப்படவில்லை. மூன்று எழுத்தாளர்களும் அவர்களது கதை மாந்தர்கள் ஏன் திருடர்களாக ஆனார்கள் எப்படி சமுதாயத்தால் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றெல்லாம் முற்போக்காக எந்த முலாமும் பூசி விளக்கிக்கொண்டிராமல், அவர்கள் திருடர்கள் என்பதை, அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கை, எழுத்தாளர்களின் எந்த உச்சுக்கொட்டலும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகும் எவ்வித இறைஞ்சுதலுமின்றி இந்தத் திருடர்கள் மூவரிடமுமே வாசகனை இரக்கம்கொள்ள வைப்பதுதான் இவர்களது எழுத்தின் மேன்மை.
தம் கதைகள் எல்லாமே அரசியல், தாம் கதை எழுதுவதே அரசியல் செயல்பாடுதான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பவர் ஷோபசக்தி. அவரது அரசியல் எதிரிகளும் அவரது கதைகளில் அவர்களுக்கு எதிரான அரசியலை மட்டுமே பார்த்து, இலக்கியத்தைத் தவறவிடுகிறார்கள். அரசியல் என்று சொல்லிக்கொண்டு இலக்கியத்தைப் படைத்துக்கொண்டிருப்பது தமிழில் கொஞ்சம் அபூர்வம். ஏனென்றால் இங்கே இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியமாகப் படைக்கப்பட்டுபவையே ரொம்பக் கொஞ்சம்.
இவற்றைக் கதையாக மட்டுமே பார்க்கிறான் கால தேசங்களைக் கடந்த தேர்ந்த வாசகன். அவனுக்கு இவை எப்படித் தெரிகின்றன என்பதில்தான் இருக்கிறது எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளின் இலக்கியத் தகுதி.
பின்புலம் கதையைப் புரிந்துகொள்ள மேலதிகமாக உதவக்கூடும் என்பதால் இது எழுதப்பட்ட காலம் முக்கியமாகிறது. பரபாஸ் ஜூன் 2007ல் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையின் இந்தக் காலகட்டத்தின் பின்னணியுடன் சேர்த்துப் பார்த்தால் சொல்லப்படாத அடுக்கு புலப்படக்கூடும். சொல்லப்பட்டு இருப்பவற்றைவிட சொல்லப்படாமல் விடப்பட்டவையே எந்தக் கதையையும் வேறு தளத்திற்கு நகர்த்தவல்லவை.
மேற்கோளுடன் கதையைத் தொடங்குவது கிளாசிக் இலக்கிய மரபு. ஆனால் மேற்கோள் அல்லது கவித்துவமான தலைப்பு கூட வாசகனிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிடும் அபாயம் உள்ளது. மேற்கோளின் தரத்திற்குக் கதை இல்லையென்றால் அதுவே படைப்பைக் கேலிச்சித்திரமாக்கிவிடும்.
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்கிறீர்கள்? பரபாஸையோ? கிறித்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” – (மத்தேயு 27:18)
எதிரெதிர் இருமைகளால் ஆனது உலகு.
இயேசு கிறிஸ்து இரட்சகராக அறியப்படுகிறவர். மனிதனை இரட்சிக்க வந்தவையாகச் சொல்லிக் கொள்பவை இயக்கங்கள். போலீஸ் என்கிற அரசு இயந்திரம் இருப்பதும் மக்களை இரட்சிக்கத்தான். திருடர்களும் இரட்சகர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் கதை நெடுக தெளித்துச் செல்கிறார் ஆசிரியர்.
“குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்குமிடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக, கலை உணர்வுடன் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும் நம்பிக்கை சிருஷ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகு லாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்” என்று பிரெஞ்சு இலக்கிய மேதையான ஆண்ட்ரே ழீடு, பேர் லாகர்குவெஸ்டின் பாரபாஸ் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுதியதாக அன்புவழி என்கிற தமது, பாரபாஸ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் கூறுகிறார் க.நா.சு.
ஷோபாசக்தியின் பரபாஸ் தொடங்குவதும் முடிவதும் காலடித் தடங்களில். கடற்படையினரின் பூட்ஸ் கால் தடங்களைத் தவிர சந்தியாப்புலம் கிராமத்தில் வேறு மனிதக் கால் தடங்களே இல்லாமல் போய்விட்டது என்று தொடங்குகிற கதை, அதற்கு இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததென்று சொல்லி தேவாலயத்தின் சந்தியோகுமையருடைய குதிரையின் குளம்படித் தடங்கள் கடலுக்குள் சென்று மறைவதில் முடிகிறது.
வில்லியம் என்கிற திருடனைப் பற்றிக் கூறத்தொடங்கிய கதை, அறுபது ஆண்டுகளாகத் திருடிக்கொண்டிருக்கும் கள்ளக் கபிரியேலின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிரப்பம்தாழ்வு என்றழைக்கப்பட்ட அந்த கிராமம், அறுபது ‘வருடங்களீற்கு’ முன்பு பெத்லேம் இஸ்ரேல் பாதிரியாரால் சந்தியோகுமையர் தேவாலயம் அமைக்கப்பட்டதிலிருந்து மாதத்திற்கு ஓரிருமுறை நடுநிசியில் குதிரைக் குளம்பொலிக்க சந்தியோகுமையர் வீதிவலம் போவதைச் சொல்கிறது. கண்ணிகளை இணைத்துக்கொள்வது வாசகன் கையில்.
கிழவர் திருடுவதும் பிடிபடுவதும் அதற்கொரு சால்ஜாப்பைச் சொல்லி அவர் சாதாரணமாக செல்வதும் பொருளைப் பறிகொடுத்தவனைத் தவிர மற்ற எல்லோரும் அதை சகஜமாக எடுத்துக்கொள்வதுமாக முந்தைய தலைமுறைக் கதை சென்று முடிகிறது.
தூய்மையான வெள்ளைச் சாரமும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிகிற அடுத்த தலைமுறைத் திருடன் வில்லியம். அவன்கூட, நகரத்திற்குச் சென்று ‘சென்ற் பற்றிக்ஸ்’ பாடசாலையில் படித்தவனாக இருந்தும் திருடுகிறான் என்றாலும் பிடிபட்டவுடன் முதல் அடியிலேயே திருடியதை ஒப்புக்கொள்கிறவனாகதான் இருக்கிறான். அவனுக்கும் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அவனோ திரும்பத் திரும்பத் திருடுபவனாகவே இருக்கிறான்.
“பத்து தடவைகள் திருடினால் அவன் பதினொரு தடவைகள் பிடிபட்டான்”
என்கிற வில்லியம் பற்றிய வாக்கியத்தையும் களவைக் கண்டுபிடிக்க விசாரணைக்கு வரும் பொலிஸ் சார்ஜனும் பொலிஸ்காரர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிப்போகிறார் ஷோபாசக்தி.
தமிழில் இலக்கியக் கதை என்று எழுதப்படுபவற்றில் பலவும் இதை மட்டுமே சொல்லிமுடித்த உப்புசத்தில் துவண்டுவிடுபவையாக இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துரதிருஷ்டவசமாக இதுதான் தமிழின் நவீன இலக்கியம் என்று வேற்று மொழிகளுக்குப் பறந்துகொண்டு இருக்கின்றன.
பொலிஸுக்கு அடுத்து, திருட ஒன்றுமற்ற கத்தோலிக்க பாடசாலையிலும் அறைக்கதவை உடைத்து வாலிபர் சங்கத்திடம் அடிபடுகிறான் வில்லியம். அறிவுரைகள் கூறி இரக்கப்பட்டு ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
கால ஓட்டத்தில் சந்தியாப்புலம் இயக்கத்தின் கீழ் வந்திருப்பதை, செயின் திருட்டு வழக்கு இயக்கத்திடம் வந்தது என்று சொல்லிப்போகிறார். குடிசைக்குள் தேடியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் மறுநாள் காலை வில்லியத்தின் குடும்பமே தற்கொலை செய்துகொண்டு கிடக்கிறது. திருட மட்டுமே தெரிந்த ஒருவனால் அதையும் ஒழுங்காகச் செய்யமுடியாத ஒருவனால், செத்துப் போவதைத்தவிர  வேறு என்னதான் செய்யமுடியும். துரதிருஷ்டவசமாக வில்லியத்தால் மனைவி குழந்தைகளைப்போல செத்தும்கூடப் போகமுடியவில்லை. இயக்கம், யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பிழைக்கவைத்துவிடுகிறது.  இனி இங்கே திருடிப் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று குடிசையை பிரித்துப்போட்டு விற்றுவிட்டு ஊரைவிட்டே வெளியேறுகிறான்.
உழைக்க முடியாதா என்பது எவருக்கும் இயல்பாக எழுகிற கேள்விதான். தர்க்க நியாயங்களுக்குள் கட்டுப்பட்டு இருந்தால்  மனித வாழ்வு எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்வது அப்படி இல்லை என்பதுதானே யதார்த்தம்.
வில்லியம் என்கிற திருடன் சந்தியாப்புலத்திலிருந்து வெளியேறியதற்கு மறுநாள் காலையில், சந்தியோகுமையர் தேவாலயத்தின் பிரமாண்டமான கதவுகள் திறந்துகிடக்க வெள்ளியினாலான திருவிருந்துப் பேழை காணாமல் போகிறது.
கள்ளக் கபிரியேல் காலத்திலிருந்து, அறுபது எழுபது வருடங்களாக ஒவ்வொரு திருட்டின்போதும் குதிரைமேல் வீதிவலம் போய்க்கொண்டிருக்கிற சந்தியோகுமையர், தமது தேவாலயத்திலேயே திருட்டு நடந்தபோது வீதிவலம் போகவில்லை. மாறாக அவரது குதிரையின் காலடித்தடங்கள் கடலுக்குள் சென்று மறைகின்றன.
சொல்லப்பட்டிருப்பதைவிட, சொல்லாமல் விடப்படுவதும் அப்படி விடுபட்டதே கதையை வேறு தளத்திற்கு நகர்த்துவதும் உயர்ந்த எழுத்தின் அடையாளம்.
***
சிறுகதை என்பதற்கு, ஒரு நிகழ்வு குறித்தது, எதிர்பாராத திருப்பம் குறித்தது, ஒரு முரண் குறித்தது, எதிர்பாராத முடிவைக் குறித்தது. ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் குறித்தது என்றெல்லாம் அவரவர் மனதுக்கு ஏற்றார்போல இலக்கணம் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தலைப்பு குறித்தது என்று யாரும் விசேஷ முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
மேற்சொன்ன அத்தனையும் இந்தக் கதையில் இருக்கின்றன. மேலதிகமாக தலைப்பும் இறுதி வாக்கியமும் இந்தக் கதையை வேறு தளத்திற்கு உயர்த்திவிடுகின்றன.
ரேப் என்கிற ஒரு நிகழ்வைப் பற்றியதுதான் கதை. அது நடக்கும் தருணமான கதையின் மத்தியப் பகுதிவரை, கதை இதைப் பற்றியது என்பது தெரிவதில்லை.
குற்றவாளி பதுங்கிக் கவனித்துக் கொண்டிருந்தான் என்று கதையின் முதல் பத்தியிலேயே வெளிப்படையாய் சொல்லிவிட்டு என்ன செய்யப்போகிறான் என்கிற எதிர்பார்ப்பை வாசகனுக்குள் கிளப்பிவிடுகிற மர்மக் கதை, அவன் என்ன செய்யப் போகிறான் என்றே ஊகிக்க முடியாதபடி, வெற்றிகரமாகப் போய்க்கொண்டே இருக்கிறபோது, ஒருவேளை இதுவாக இருக்கலாமோ என்கிற மெல்லிய சம்சயம் தோன்றும் வண்ணம் கோடிகாட்டப்படுகிறது. ஆனால் அந்தச் சந்தேகத்தை முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் சம்மந்தப்பட்ட பாத்திரத்தின் செயல்கள் இருப்பதால், பிற்பகுதிக் கதை முழுவதுமே அதைப்பற்றியே இருந்தாலும் கதைப்போக்கில் மற்ற பாத்திரங்களால் கவரப்பட்டு வாசகன் அவற்றுடன் கரைந்துவிடுகிறான்.
ரேப் கூட பக்கவிளைவேயன்றி குற்றவாளியின் முதன்மை நோக்கமன்று. திருடவந்து அடிபட்டதன் வெறி, பெண் அதுவும் ஒரு வயதான பெண் தன்னை அடித்துவிட்டாளே என்கிற, ஆண் என்பதால் உண்டாகிற கபோதக் கோபம் வெறியாகி ரேப்பில் முடிகிறது. பெண்ணின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஆணின் அடுத்த நடவடிக்கையே பாலியல் வசைத் தாக்குதலில் ஈடுபடுவதாகத்தானே இருக்கிறது. பொதுவெளி என்றால் வார்த்தையளவில் நின்றுவிடுகிறது. கேட்க யாருமில்லை என்றால் அத்துமீறி பாலியல் பலாத்காரமாகிறது.
அந்த அம்மா அறுபத்தியெட்டு வயது முதிர்ந்தவர் என்பதுகூட, ஐம்பது வயதில் ஓய்வுபெற்றதாக இரண்டாவது பக்கத்திலும் சில பத்திகள் தாண்டி, அறுபத்தியெட்டாவது வயதில் மனிடம் சென்றதாகவுமாகத் தூவப்பட்டிருக்கும் தகவல்களைக் கூட்டிச் சேர்த்து கவனமாகப் படிப்பவனுக்கே மனதில் தங்கும். அந்த அம்மா ஐந்தடி பத்தங்குலம் இருப்பவர் என்பதும் ‘சற்று உயரம் குறைந்த’ குற்றவாளியைத் தாக்கும் அளவுக்கு வல்லமை மட்டுமின்றி வாளிப்பானவரும்கூட என்பது கவர்ச்சியாக ஆகிவிடாபடி நாசூக்காக ‘எப்போதுமே நிமிர்ந்து கம்பீரமாக நடப்பார்’ என்றும் அவருக்குப் பெயரென்ற ஒன்று இருப்பினும் கதை முழுக்க அம்மா அம்மா என்றுமே சொல்லப்படுகிறது.
தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் குற்றம் நிகழ்ந்துவிடும். பார்வையாளனுக்கும் அது அப்பட்டமாகக் காட்டப்பட்டுவிடும். ஆனாலும் அதன்பிறகு ஒன்றரை மணிநேரம் பதற வைத்துக்கொண்டிருப்பார் என்பதில்தானே ஹிட்ச்காக்கின் சிறப்பே இருக்கிறது. மற்றப் பாத்திரங்கள் எதர்க்கும் யார் குற்றவாளி என்பது தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமுடியாதபடி சூழ்நிலை அமைந்திருக்கும். அந்தப் பாத்திரத்தின் தவிப்பும் வேறு பார்வையாளனைத் தொற்றிக்கொள்ளும்.
இந்தக் கதையிலும் என்ன நடந்திருக்கிறது என்பது, பாதிக்கப்பட்டவரைத் தவிர எல்லோருக்கும் தெரிகிறது. அல்லது நாளாவட்டத்தில் தெரியவந்துவிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு, நடந்தது தெரிந்துவிடக்கூடாதே என்று எல்லோருமே பதைக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதுகுறித்து மனதளவில் அதீதமாக பாதிக்கப்படுகிறார்கள். ரேப் என்பதை மகனும் மருமகளும் கணவரும் எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களது பாதிப்பு எங்கே மையம் கொள்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் பார்வை எப்படியாக இருக்கிறது என்கிற முரண் வெளிப்படும் கதை இது என்றும் கூறலாம். அதையும் தாண்டி ரேப்பை ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த கதைத்துவ ஆய்வுக் கட்டுரையாகவும் இதைப் பார்க்கலாம் -எவ்வித அலசலோ வியாக்கியான விளக்கச் சொற்பொழிவுகளின் சுவடுகளோக்கூட இல்லை என்றபோதிலும்.
சர்வ சத்தியமாக இந்தக் கதையில் இப்படியான முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. தொடர்ந்து ஷோபாசக்தியைப் படிக்கப்படிக்க கிட்டத்தட்ட ரசிக மனோபாவத்துக்கு நான் தள்ளப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதிகம் படித்த வாசகனைவிட ஊகிக்கமுடியாதபடி இன்னொரு எழுத்தாளனை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனென்றால் எழுதும் தொழிலின் ரகசியம் தெரிந்தவனல்லவா மற்றவனும். ஆனால் இந்தக் கண்கட்டும் கலை ஷோபாசக்திக்கு அநாயாசமாகக் கைவருகிறது.
ஒரு வார்த்தையில் கதையின் கடைசி வாக்கியத்தில் கதையைத் தலைகீழாக மாற்றிவிடுவது பெரிய திறமைதான். தொடக்கத்திலிருந்து எங்குமே கொஞ்சமும் இடிக்காதபடி இதைச் செய்வதற்கு நிறையவே திறமை வேண்டும். எழுத்து வசப்பட்டிருக்கவேண்டும். வாசக விசிறி, தனக்குப் பிடித்த எழுத்தில் இன்னும் இன்னும் என கரையவே சித்தமாக இருக்கிறான். அப்படியான வாசகர்களைப் பெறும் எழுத்தாளன் பிரம்மிப்புக்குரிய பிம்பமாகிறான். இவ்வளவும் வெறும் சுவாரசிய பொழுதுபோக்குக் கதை சொல்லிகளுக்கும்கூடப் பொருந்தும்.
எல்லா எழுத்தாளர்களாலும் எளிதில் எட்டித் தொட்டுவிட முடியாத தள நகர்வு கலைஞர்களுக்கு மட்டுமே கைகூடுகிற விஷயம்.
நிகழ்வுகளாகச் சொல்லப்படும் கதையில் மன ஓட்டம் என்று எழுத்தாளனே எல்லாவற்றையும் சொல்லி பாத்திரங்களை நிரப்பிக்கொண்டு செல்லாமல், துலக்கம்பெறும் அளவுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருப்பது எல்லோருக்கும் கைவரப்பெறுகிற காரியமில்லை.
பொழுதுபோக்கு சுவாரசிய எழுத்தாளனுக்கோ பாத்திரத்துக்கு மனம் என்ற ஒன்று இருக்குமே என்பதைப் பற்றிய கவலயேயில்லை. சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகக் கதையைக் கொண்டுசெல்வதற்குக் கதாபாத்திரத்தின் மனமும் எண்ண ஓட்டமும் முட்டுக்கட்டை. போகவும் அவனுக்கே மனமும் சுயமான எண்ண ஓட்டமும் இருந்தால் அல்லவா அகப்பையில் வருவதற்கு. எனவே சம்பவங்களை எப்படிச் சுவாரசியமாக்கலாம் என்பதற்கு மட்டுமே பயிற்சிபெற்ற அவன் மூளைக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிப்பதே அனாவசியம்.
வெகுஜன மனதில் புனித பிம்ப அந்தஸ்துடன் திகழ்கிற எழுத்தாளனோ ரேப்பின் பயங்கரத்தை அஞ்சி நடுங்கி அல்லது பிழியப்பிழிய அழுது புரண்டு வாசகன் கதறும்வண்ணம் எப்படியெல்லாம் நாடகீயமாக்கலாம் என்பதிலேயே குறியாயிருப்பான்.
கதையின் முடிவில் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் கதையையே வேறாக ஆக்கி, வாசகனை பிரமிப்பில் ஆழ்த்திவிடுவது, எழுதிக்கொண்டே இருப்பதால் தீவிரப் பயிற்சியில் சித்தித்துவிடக்கூடிய கைத்தேர்ச்சி; திறன்.
அதுகாறும் அதற்கு எதுவுமே தெரியாது என்று, வாசகன் உட்பட எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்படியாக ஒரு பாத்திரத்தைப் படைப்பதும் ஒருவேளை அந்தப் பாத்திரத்திற்குத் தெரிந்திருக்குமோ என வாசகனுக்குத் துளியும் ஐயம் ஏற்படாவண்ணம் இறுதிவரை நகர்த்திச் செல்வதும் கதை சொல்லும் திறமை என்றால், சம்பவம் நிகழ்ந்தபோது நடந்ததைக் கதையின் இறுதியில் தர்க்கரீதியாக நம்பும்படி அளவாக விவரித்து, அப்போது ஒரு வாக்கியத்தில் அவர் சொன்னதாக இப்போது சொல்லி வாசகனைக்  கலங்கடிப்பது எழுத்தில் தேர்ந்த கைக்கே சாத்தியம்.
நினைவில் சற்றே தோய்ந்தவரிடம், தலைமைப் புலனாய்வு அதிகாரி அருகில் வந்து அவர் சொல்லப்போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கையில், அந்த அம்மா கூறுகிற கதையின் இறுதி வாக்கியம் முக்கியமானது. வேறெவரும் அவ்வளவு எளிதில் கூறிவிடமுடியாத அந்த வார்த்தைகளை அவர் கூறியது, அவர் மட்டுமே கூறியிருக்கக்கூடும் என்கிற சாத்தியத்துக்கான தர்க்க அமைதியின் விதை கீழ்க்காணும் வரிகளாகக் கதையின் இரண்டாவது பக்கத்திலேயே ஊன்றப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் பிரசவ விடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல அன்பும் கருணையும் அன்பும் கொண்டவர் என அங்கே பெயர் வாங்கியிருந்தார்
இந்த வரிகளை தலைப்புடனும் கதையின் முடிவுடனும் பொருத்திப் பார்க்கிற இலக்கிய வாசகன், அம்மாவை மாதாவாக்கி எழுத்தாளன் எப்படிக் கலைஞனாகியிருக்கிறான் என்பதை உணரக்கூடும்.
***
சூக்குமம்
சரசரவென்று படிக்கமுடிகிற மாதிரி எழுதுவது சிறந்த எழுத்தின் முக்கியமான அம்சம் என்பதைப்போல, சிறந்த வாசகனின் முதன்மை லட்சணம் அதை மூச்சுவிடாமல் வாசித்து முடிப்பதன்று. நல்ல வாசகனின் மற்றொரு அடையாளம், ஆரம்ப வாசகனைப் போலல்லாது, எழுதப்பட்டுக் கிடக்கும் ஏராளத்தில் பெரும்பாலானவற்றைப் படிக்கமுடியாமற் போவது.
நெருடலற்ற எழுத்து என்பது, மொழி மீதான எழுத்தாளனின் ஆளுகையை மட்டுமின்றி, சொல்லவந்தது பற்றிய அவனது தெளிவையும் குறித்தது.
அதேபோல ஆரம்ப வாசகன், கையில் கிடைப்பதையெல்லாம் எப்படி வேகமாகப் படிக்கிறான். தேர்ந்த வாசகன் ஏன் நிதானமாகப் படிக்கிறான். ஏன் எழுதப்பட்ட எல்லாவற்றையும் பின்னவனால் படிக்க முடிவதில்லை என்பதும் எதிரெதிரல்ல தொடர்ச்சி. துளிர் வேகமாய் வளரத் துடிக்கிறது. முதிர்ச்சி விவேகத்தை வளர்க்கிறது -ஷோபாசக்தியின் ரம் மாஸ்டரைப்போல.
நல்ல எழுத்தில் நாட்டம் கொண்டவன் எழுதப்பட்டிருப்பதில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் நகாசுகளையும் ரசித்துத் துய்க்க நினைப்பதால் பொறுமையாகப் படிக்கிறான். பயிற்சி காரணமாக அவற்றை முதல் வாசிப்பிலேயே அவனால் கண்டு உணர முடிகிறது. அதே காரணத்தால்தான், எவ்வித நுட்பமும் வேலைப்பாடுமற்ற வெறும் சம்பவக் கோர்வைகளை அவனால் படிக்கவே முடிவதில்லை.
எழுத்தின் சூக்‌ஷுமம் எழுதிக்கொண்டேயிருப்பதில் இருக்கிறது என்பார்கள். இது எல்லா எழுத்துக்கும் பொருந்தக்கூடியதன்று. குறிப்பாக இலக்கியத்தைப் பொறுத்தவரை இது பொருந்தாது. எழுதாதபோதும் எழுதிக்கொண்டிருப்பவனே இங்கே எழுத்தாளன். எவ்வளவு காலம் உறைக்குள்ளேயே தூங்கிக்கொண்டு இருந்தாலும் துருப்பிடித்துப் போகாதிருந்தால்தானே அது போர்வாள்.
எழுத்தின் சூக்‌ஷுமம் வெறும் பயிற்சியால் மட்டுமே வருவதன்று என்பதற்கு நல்ல உதாரணமாக இந்த சூக்குமம் கதையைச் சொல்லலாம்.
பெரிய கேன்வாஸில் பல்வேறு வண்ணங்களுடைய பாத்திரங்களை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்களுடன் தீட்டப்பெறும் அவருடைய பிற்காலக் கதைகளின் வரிசையில் ஒன்றாக இதைச் சேர்க்கமுடியாது என்றாலும் அவற்றின் கூறுகள் இரண்டாயிரங்களிலேயே தொடங்கிவிட்டதற்கான ஆதாரமாக இருக்கிறது இந்தக் கதை. தேசத்துரோகி தொகுப்பிலிருக்கும் கதைகள் 1997க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்கிறன கதையின் இறுதியில் இருக்கும் குறிப்புகள்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எல்லோரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய ஒரு விஷயத்தை, அதிலும் குறிப்பாக வசதியற்ற, முன்னாள் போராளியொருவன் அகதி அட்டை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தியிருக்கிற முக்கியமான கதை.
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் 
வாக்கினிலே ஒளி உண்டாகும்
என்கிற இலட்சியவாதக் கவிதை வரிகளைப் போலில்லை யதார்த்தம் என்பதை பிரான்ஸில் ஈழத்துப் பாத்திரங்களை வைத்து கைப்பு கலந்த நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு செல்கிற கதை.
கலை என்பதே, தத்ரூபமாக ஒன்றை கண்முன் நிகழ்வதைப்போல கட்டியெழுப்பிக் காட்டுகிற பொய்தானே. போலவே, நம்பும்படியாக வாழ்வில் பொய்சொல்வதும் ஒரு கலைதானே. யாரை நம்பவைக்கை என்ன சொல்லவேண்டும் அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதை அவரவர் பாணியில் கைதேர்ந்தவர்களை வைத்துச் சொல்லிச்செல்கிறது கதை.
வெளிப்படையாகப் பிரித்துக் குறிப்பிடப்படாவிட்டாலும் மூன்று பகுதிகளாக இருக்கும் கதையின் தொடக்கம் அகதி கார்ட் கேட்பவனின் கதையைச் சொல்கிறது. இவன் சிறுவனாக தகப்பனுடன் கூலிக்குப் பனை தறிக்கப் போவதில் இருந்த அவனது இயல்பான புத்தி சூக்குமம் இயக்கத்தில் சேர்ந்த பின்பு எப்படி உதவிற்று வளர்ந்தது என்பது முதல்பகுதியாக வருகிறது. அதன் நீட்சியாகக் கள்ள பாஸ்போர்ட் தயாரிப்பில் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவதிலும் அது வெளிப்படுகிறது. இதன் பின்னிரு பகுதிகளாகவே அகதி அட்டைக்கு விண்ணப்பமெழுதும் இரண்டு நிபுணர்கள் வருகிறார்கள்.
உரையாடல் தவிர ஆசிரியர் கூற்றிலும் முழுக்கவே ஈழத்தமிழில் எழுதிச்சென்றிருப்பதும் கதையின் சரளத்துக்கு ஒரு காரணம் என்றாலும் கதை, அகதி கார்ட் வேண்டி நிற்பவனின் பார்வையிலேயே நகர்வது இந்த மொழிநடைக்கான அவசியத்தை நியாயமாக்கி இந்தியத் தமிழ் வாசகனையும் நெருக்கமாக உணரவைக்க உதவுகிறது.
கதையின் முடிவைப்போல,முரண்நகை ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுகிறது. அவனது சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்து பிரான்ஸுக்கு ஓடி வந்து அகதி கார்டுக்கு விண்ணப்பிப்போரின் பெரும்பான்மை மனுக்கள், சொந்த நாட்டில் வாழ முடியாதபடிக்கு ராணுவம் ஆவர்களைத் தேடுவதற்கான முக்கியமான காரணமாக, ஊரில் இயக்கப் பொறுபாளராக இருந்த இந்த சூக்குமத்தைக் குறிப்பிடுகின்றன. அவர்களுக்கெல்லாம் சீக்கிரத்தில் கிடைத்துவிடும் அகதி கார்ட் இவனுக்கு நிராகரிக்கப்படுகிறது.
எப்படி நிராகரிக்கப்பட்டது, அடுத்தடுத்த முயற்சிகள் எப்படி தோல்வியில் முடிகின்றன. இழு இழுவென இழுத்து எட்டு வருடங்கள் கழித்து எப்படி இவனுக்கு அகதி கார்ட் கிடைத்தது என்பதை வறள்நகைப்புடன் சொல்லத்தான் மீதி கதை.
அவனே 21 பக்கங்களுக்குத் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப் போய் சேருமிடத்துக்குத் தமிழோவியம் எனவும் நியாயஸ்தராகக் காட்டிக்கொண்டு இவன் தலையைத் தடவுகிறவர் பெயர் காந்தி மாஸ்டர் என்றும் உபரியாக அவர் யாழ்ப்பாணக்காரர் என்கிற தகவலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘தம்பி இது பச்சைப் பிழையான கேஸ்’ என்று படித்த உடனே அவனது விண்ணப்பத்தை நிராகரிக்கிறார். அதை, இவன் நொந்துபோகுமளவுக்கு எப்படியெல்லாம் பிழை என்று அவனுக்கு உணர்த்த அவனுக்குத் தெரியாத பிரெஞ்சு வார்த்தைகளைப் போட்டு ஜெனிவா ஒப்பந்தத்திலிருந்து கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதுவரை பெரிய கிளாஸ் எடுத்து, அவரது கைச்சரக்கை எல்லாம் சேர்த்து, பக்கத்துக்கு 150 ப்ராங்க் எண்ட கணக்கில 22 பக்கங்கள் வரும்படி பிரெஞ்சில் எழுதிக்கொடுக்கிறார்.
உள்ளது ஒன்றென்றால் அதை ஆளாளுக்கும் ஊதிப் பெருக்கி எட்டாக்குவதை முழுக்கவே பகடியாகச் சொல்லிச் செல்கிற கதையில், உளவு பார்க்கவரும் ‘சீ ப்ளேன்’ வெடி வைத்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவ விவரனை முக்கியமான இடம்.
அது ஒரு வெருட்டுற வெடிதான். திட்டமிட்ட பண்டார வெடிதான். ஆனால் அதுக்குப் பிறகு சீ ப்ளேன் அந்த ஏரியாவுக்கே வாறதில்ல. பனவட்டு எப்பிடிப் பத்தி எழும்பினது எண்ட சூக்குமம் இவனுக்கும் இவன்ர டீமுக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் ஈழநாடு, வீரகேசரி பேப்பருகளில எழுதின இராணுவ ஆய்வாளமார் அதை ‘ஆகாயக் கன்னிவெடி’ எண்டொரு புதுச்சொல்லைப் பாவிக்கத் தலைப்பட்டினம். அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னொரு தளத்துக்கு நகருதாம்.
இப்படி எல்லாமே ஊதிப் பெருக்கப்பட்டவை என்று, இவன் சொல்கிறவற்றையெல்லாம் கதைகளாகவே பார்த்து நிராகரிக்கின்றனர் பிரெஞ்சு விசாரணை அதிகாரிகளும் அப்பீல் நீதிபதியும்.
இறுதிப்பகுதியில் அகதி கார்டை வெற்றிகரமாகப் பெற்றுத்தரும் மற்றொரு விண்ணப்பக் கலைஞருக்கு ஷோபாசக்தி வைத்திருக்கும் பெயர் ரம் மாஸ்டர்.
ப்ரெஞ்சுக்காரர்களுக்கு எது அதிக அனுதாபத்தை உருவாக்கும் என்கிற அவருடைய சூக்கும விண்ணப்பமும் இவனது எட்டுவருட அனுபவமும் சேர்ந்து அகதி கார்டை எப்படிப் பெற்றுத் தருகின்றன என்று முடிகிற கதையில் கடைசி வரிவரை முரண்நகை எங்குமே பிசிறு தட்டாமல் விறுவிறுவெனச் செல்கிறது. எதிரும்புதிருமான நோக்கங்களும் இயல்புகளும் கொண்ட இரண்டு விண்ணப்ப மாஸ்டர்கள் கதையின் ஆதாராமான முரண்நகைக்குள் எவ்வளவு பாந்தமாய் பொருந்தி உட்காருகிறார்கள். கதையின் நாயகனிடம் இயல்பாகவே இருக்கும், எல்லா இடத்திலும் கைகொடுக்கும் நாட்டுப்புற சூக்குமம் வெளிநாட்டில் எடுபடவில்லை. இந்தக் கதை, முழுக்கவே வழக்குமொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு இதுவும் நியாயம் சேர்க்கிறது.
ஷோபாசக்தியிடம் இருக்கிற கலை அமைதி அசாதாரனமானது. ஆரம்பம் முதல் இறுதிவரை சுருதியோ தொனியோ பிசகுவதேயில்லை. 2003ல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை பின்னால் வரப்போகும் பெரிய கச்சேரிக்களுக்கு முன்னோட்டம் போல விளங்குகிறது.
நன்றி: காலம் நவம்பர் 2018
==================================================
November 28, 2018
இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது.
ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம்.
இந்தக் கதையில் நடக்கும் விசாரணைக்கும் காஃப்காவின் விசாரனைக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் உள்ளன.
மேலோட்டமான பார்வைக்கு, இருவருமே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதுவரை மட்டுமே இரண்டிற்கும் ஒற்றுமை என்று தோன்றும். அடிப்படையில் இரண்டு கதைகளுமே ஒன்றைத்தான் சொல்கின்றன என்கிற ஒற்றுமையை இறுதியில் பார்ப்போம்.  
ஃப்ரான்ஸ் காஃப்காவின் விசாரணையில், கதை முடியும்வரை விசாரணையே தொடங்கப்படுவதில்லை.
ஷோபாசக்தியின் விசாரணையில், விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு என்கிற பெயரில் தீர்வும் தரப்பட்டுவிடுகிறது. ஆனால் அளிக்கப்பட்ட தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்பதுதான் கதையே.
காஃப்காவின் கதையில் குற்றம் சாட்டப்பட்ட நாயகன் இறுதியில் இறந்துவிடுகிறான். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பது இறுதிவரை யாருக்குமே தெரியாது அவனுக்கு உட்பட.
ஷோபாவின் கதையில் விசாரிக்கப்படுபவன் குற்றவாளியில்லை என்பது மட்டுமின்றி உண்மையான குற்றவாளி யார் என்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனது விசாரணையின் வழியே எல்லோருக்குமே தெரியும் அவனை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உட்பட.
எனினும் இரண்டு கதைகளின் முடிவுகளும் ஒன்றுதான் என்பதே ஷோபாசக்தி சொல்லவருவது.
இதை அவர் கதையில் எங்குமே சொல்லவில்லை. அதனால்தான் அவர் எழுத்தாளரில் இருந்து கலைஞனாகிறார்.
காஃப்காவின் விசாரனை எழுதப்பட்டது 1914-15 வாக்கில். ஷோபாசக்தி தமது விசாரணையை எழுதியிருப்பது 2016ல். இரண்டிற்குமிடையில் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலான இடைவெளி. ஒருவேளை, காஃப்காவின் விசாரணை நாவலுக்குச் செலுத்தும் நூற்றாண்டு அஞ்சலியாக இந்தக் கதையை ஷோபாசக்தி எழுதியிருந்தாலும் பொருத்தமானதே.
நூறாண்டுகள் கழிந்தும் ஜெர்மனிக்கு சம்மந்தமேயில்லாத தமது நாட்டிலும் இன்று நடக்கிற விசாரனையின் லட்சணமும் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லாது காஃப்கா சொன்னதைப்போலவேதான் உள்ளது என்பதை, இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது.
இந்தக் கதையின் முதல் பத்தியைத் தவிர்த்துவிட்டுப் படித்தாலும் இலக்கியத் தரமோ வீச்சோ வாசகனிடம் இது உண்டாக்கும் தாக்கமோ இம்மியளவும் மாறவோ குறையவோ செய்யாது என்பதை இரண்டையும் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
இரண்டு பகுதிகளாக இருக்கும் கதையில் முதல் பகுதி விசாரணைக்கான முன்கதைச் சுருக்கமாக இருக்கிறதென்றால் இரண்டாம் பகுதி முழுக்க விசாரனையாகவும் அதில் வெளிப்படுவது பூர்வகதையாகவும் தீர்ப்பு முத்தாய்ப்பாகவும் இருக்கிறது.
முன்னும் பின்னுமாகக் கதை சொல்வதைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தவிர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு பிளாஷ்பேக்கிற்கு மட்டுமே அனுமதி என்பது சிறுகதையில் எழுதப்படாத விதி. வேறொன்றுமில்லை குழப்பிவிடும் என்பதுதான் காரணம். சில சமயம் வாசகனையும் பல சமயம் எழுதுபவரையும்.
ஷோபாசக்தி கண்டமானத்துக்கும் கதை சொல்பவர் என்பது போல எடுத்தவுடனே தோன்றினாலும் உள்ளூர ஒத்திசைவும் ஒழுங்கும் கச்சிதமாக உட்கார்ந்திருப்பது, பகடியும் எள்ளலும் குமிழியிட்டுக்கொண்டு சரசரவென்று ஓடும் கதைகளை சற்றே நிறுத்திப் படித்தால் பிடிபட்டுவிடும். கூடவே, சொல்லப்படாமல் ஆங்காங்கே கவனமாய் தவிர்க்கப்பட்டிருக்கும் மறைபொருளும்.
உள்ளக விசாரணை என்கிற தலைப்பிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கவில்லையா. மிக உள்ளக விசாரணை என்று ஏன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது கதையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே படிக்கிறவனிடம் தோன்றுகிற வறண்ட புன்னகை சொல்லிவிடும். இதைவிட பொருத்தமான தலைப்பை இந்தக் கதைக்கு வைக்க முடியாது என்பதை கதை முடியும்போது வாசகனுக்கு உண்டாகிற மன அழுத்தம் உணர்த்திவிடும்.
முதல் பத்திக்குப் பிறகு வரும் பாராவில்,எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது.
பிறகு, எப்படி அந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் தொடங்கி ஆற்றொழுக்காய் செல்கிற கதையில், இதைப்போலவே இதற்கருகில் ஒரு கிணறு இருந்ததாகவும் மண்மூடப்பட்டுவிட்ட அதிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நேரடியாகத் தோண்டிப்பார்த்துவிசாரணை செய்வதற்காக வரும் நீதிபதிகளில் ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர்.
உக்கிரமாக, பொறி பறக்க எழுதுவதே முற்போக்கு எழுத்து என்கிற எண்ணம் இன்னும்கூட நிறைய இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் இலக்கியம் எப்போதும் அதைத் தாண்டியே, இயங்கிக்கொண்டு இருக்கிறது.
25 வருடங்களுக்குப் பிறகு தோண்டிப்பார்க்கிற கிணற்றில்,
அவர்கள் கயிற்றில் தொங்கியவாறே ஆழத்திலிருந்து அச்சத்துடனும் வியப்புடனும் கூச்சலிட்டார்கள்:
” இங்கே ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான்.”
இதைக் கேட்டதும் நீதிபதிகளின் உணர்வு என்ன, வைத்திய சட்ட நிபுணர்களின் எதிர்வினை என்ன, தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளரின் ஊகம் என்ன, காவற்துறையினரிடையே எழுந்த சலசலப்புகள் தானென்ன போன்றவற்றை விபரிப்பது இந்தச் சிறிய கதைக்கு முக்கியமல்ல என்பதால் கதையின் முதற்பாதியை நாங்கள் இங்கேயே நிறுத்திவிட்டு கதையின் மறுபாதிக்குச் செல்வோம்.
என்று, எழுதாமல் விட்டதைப் பற்றி, எழுதுகிற விதத்தில் எழுதினால், எழுதுவதைவிட வலுவாகச் சொல்லிவிடமுடியும்.
எழுதத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தைப் போலவே, அதில் எதையெதை எழுதுகிறான் எதையெதைத் தவிர்க்கிறான் என்கிற எழுத்தாளனின் பிரஞைபூர்வ தேர்விலும் இருக்கிறது எழுத்தின் வீரியம்.
விசாரணை நடக்கையில், என்ன நடந்தது எப்படி நடந்தது என்று விரிவாக அவன் விவரித்து முடிக்கையில், படித்துக்கொண்டிருக்கிற வாசகனைப்போலவே நீதிபதிகளுக்கும் நியாயமான அடிப்படை ஐயம் எழுகிறது.
“நீர் இவ்வளவு காலமும் மூடப்பட்ட கிணற்றுக்குள் உயிரோடு இருந்தீர் என்பது பெரிய அதிசயமாயிருக்கிறது.”
“அங்கே நிலத்தோடு கொஞ்சத் தண்ணீர் எப்படியிருக்கிறதோ, தாவரங்களும் தவளைகளும் புழுபூச்சிகளும் எப்படியிருக்கின்றனவோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதிசயமாக எதுவுமில்லை.”
எதை எழுதுவது எதை விடுப்பது என்பதைப் பல எழுத்தாளர்கள் அவரவர் தேவை பார்வை சார்பு பக்குவம் முதிர்ச்சி அறிவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். அதைப் போலவே இந்தக் கதையிலும் விசாரணை முடிந்தபின் நீதிபதிகள், எது நியாயம் என்பதைவிட எது நாட்டிற்கு நல்லது என்பதை முடிவுசெய்கிறார்கள். அது எப்படி நிறைவேற்றப்படுகிறது என்கிறபடியாகக் கதை முடிகிறது.
காஃப்காவின் விசாரணையில் K என்கிற பெயர் கொண்ட நாயகன் இறுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு இறக்கிறான்.
ஷோபாசக்தியின் மிக உள்ளக விசாரணையில் பெயரே இல்லாத நாயகன் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் -எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று மட்டும் கேட்டுவிடவேண்டாம் என்கிறபடிக்கு. 

நன்றி: அரும்பு டிசம்பர் 2018

Saturday, 8 February 2020

என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி |


என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/jan/26/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்---சாகந்தசாமி-3341050.html
Published on : 26th January 2020 12:21 PM |




"நான் எனக்காக மட்டும் எழுதக் கூடியவனாக இருக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பிறகுதான் உள்ளே அது இருப்பது தெரிய வருகிறது. இதைப்போல் உள்ளே வேறு என்ன என்ன இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு விடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ' என்று தன் எழுத்தைப் பற்றி குறிப்பிடும் சுந்தர ராமசாமி தன் வாசகர்கள் பற்றியும் சொல்கிறார்.
"இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக ஆளாக, என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்தியமாக இருக்குமென்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள் என்னுடைய வாசகர்கள்' என்றார்.
தன் எழுத்துகள் பற்றியும், தன் வாசகர்கள் பற்றியும் தீர்க்கமான முன் முடிவுகள் கொண்ட ராமசாமி 1931-ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள "தழுவிய மகாதேவர் கோவில்' என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை எஸ்.ஆர். சுந்தரம் ஐயர். தாயார் தங்கம்மாள்.
எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் கோட்டயத்தில் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். அது மலையாள மொழி பேசப்படும் பகுதி. பள்ளிக்கூடத்தில் மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பப் படிப்பை மலையாளத்தில் தான் அவர் தொடங்கினார்.
1939 - ஆம் ஆண்டில் எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவர் பணியை விட்டு விட்டு நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அப்பொழுது ராமசாமிக்கு எட்டு வயதாகி இருந்தது. அவர் தந்தையார் சுதர்சன் ஜவுளிக் கடையை ஆரம்பித்து நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான நாகர்கோவில் திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. எனவே பள்ளிக்கூடங்களில் மலையாள மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. அவர் பள்ளியில் மலையாள மொழி படித்து வந்தார்.
ராமசாமிக்குப் பத்து வயதாகும்போது பக்கவாத நோய் வந்துவிட்டது. அதனால் பள்ளிக்கூடம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. எனவே வீட்டில் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தமிழ்மொழி வீட்டில் பேசப்பட்டு வந்தது.
அவர் தாயார் தங்கம்மாள் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா சிறுகதைகளைப் படித்துக் காட்டி வந்தார். அவரை நவீன தமிழ்ச் சிறுகதைகள் வசீகரித்தன.
1947- ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்பொழுது ராமசாமிக்கு பதினாறு வயதாகி இருந்தது. தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. எனவே வீட்டில் இருந்து கொண்டே மலையாளம், ஆங்கிலம் வழியாக நாட்டின் நடப்புகளை, அரசியல் சமூக, கலாசார இலக்கிய நிகழ்வுகளைப் படித்தறிந்து கொண்டார்.
மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பெரியார், அரவிந்தர், ராம் மனோகர் லோகியா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.சி. குமரப்பா உட்பட எதிர் எதிரான சிந்தனைப் போக்குகள் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சாதனைகளையும், தத்துவங்களையும் அறிந்து கொண்டார்.
அவருக்குத் தமிழ் மொழிவழியாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. "சொந்த முயற்சியால் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுக் கொண்டேன்' என்று பின்னால் எழுதியிருக்கிறார்.
அவர் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுத் தமிழ் மொழியில் பின்னால் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதியதால்தான் இலக்கிய ஆளுமை கொண்டவர், மேலான கலைஞர் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். அதுதான் எழுத்து என்பதின் வலிமை.
தமிழ் படிக்கக் கற்றுக் கொண்ட ராமசாமி புதுமைப்பித்தனின் "காஞ்சனை' சிறுகதையைப் படித்தார். கதைகளின் கருத்துகளும், சொல்லப்பட்ட விதமும், மொழியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புதுமைப்பித்தன் அசலான கதாசிரியர் என்று முடிவு செய்தார். பதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவு மலர் கொண்டு வர முன் முயற்சிகள் எடுத்தார். புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட ஒரு சிறுகதை எழுதினார். அதற்கு "முதலும் முடிவும்' என்று பெயரிட்டார். தன் தாயாரிடம் படித்துக் காட்டினார். நன்றாக இருக்கிறது என்று தாயார் பாராட்டியதைக் குறிப்பிட்டு விட்டு, "எந்தத் தாயார்தான் தன் மகன் எழுதியதை பாராட்டாமல் இருப்பார்' என்று ஒரு கேள்வியையும் கேட்கிறார்.
1951- ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் நினைவு மலர் வெளி வந்தது. அதில் அவரது முதல் சிறுகதை, "முதலும் முடிவும்' இடம் பெற்றது.
ராமசாமிக்கு மலையாள மொழி இலக்கியத்தின் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், காரூர், கேசவ தேவ் உட்பட பலரைப் படித்திருந்தார். 1942- ஆம் ஆண்டில் வெளிவந்த தகழியின் "தோட்டியின் மகன்' பெருமளவில் வெற்றி பெற்ற நாவலாக இருந்தது. நாவலின் தலைப்பே முற்போக்கான, எதைச் சொல்கிறது என்பதை உரக்கச் சொல்வதாக இருந்தது. "தோட்டியின் மகன்' நாவல் ராமசாமியை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மலையாளத்தில் இருந்து அதனை தமிழில் மொழி பெயர்த்தார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்புக்கு 2000- ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில், "அப்போது எனக்கு வயது இருபது, இருபத்தியொன்று. அதற்கு முன் தமிழில் சொல்லும்படி நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நிச்சயமாக என்னுடைய படைப்பென்று எதுவும் அச்சேறியிருக்கவில்லை. என் உடல், மனம் சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும், வருத்தத்துடனும் புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்' என்று "தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்பு பற்றி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் ராமசாமி நினைவு கூர்ந்து சொல்கிறார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்க்கப்பட்டு அவரிடம் இருபது ஆண்டுகள் இருந்தன. அவர் பிரபலமாகி வந்தார்.
கம்யூனிஸ்டும், இலக்கியவாதியுமான தொ.மு.சி. ரகுநாதன் வெகுஜனப் பத்திரிகைகள் மீதும், புலமை அற்ற பேராசிரியர்கள் மீதும் கடுங்கோபம் கொண்ட எழுத்தாளராக இருந்தார். அவர் வை.கோவிந்தனின் "சக்தி'யில் சில காலம் பணியாற்றியவர். தீவிரமான இலட்சியவாதி. அவருடன் ராமசாமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன், ராமசாமியைக் தத்துவரீதியிலும், கலைக் கோட்பாட்டிலும், கம்யூனிஸ்டு சித்தாந்தம் என்பதிலும் அதிகமாகவே சிந்தித்தவர் என்றே குறிப்பிட வேண்டும். இருவரும் தோழமை கொண்டிருந்தார்கள். ராமசாமி திறமை மிகுந்ததொரு கலைஞர் என்றே தொ.மு.சி. ரகுநாதன் கருதினார்.



1953- ஆம் ஆண்டில் தொ.மு.சி.ரகுநாதன் "சாந்தி' என்றொரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார். அது சிற்றிதழ்தான். அதில் அரசியல் கட்டுரைகள் சில வந்தன. ஆனால் "சாந்தி' வெளியிட்ட கதைகளுக்காகவே மதிக்கப்படுகிறது. "சாந்தி' யின் முதல் இதழில் ராமசாமியின் இரண்டாவது சிறுகதை "தண்ணீர்' வெளிவந்தது. தண்ணீர் முற்போக்கான சிறுகதை. ஆனால் வறட்சி உள்ள சிறுகதை கிடையாது. மனிதாபிமானம் என்பதுதான் கதையின் ஆதார சுருதி.
இலக்கியம் என்பது பொழுதுபோக்கிற்கானது இல்லை. அது மனித குலத்தின் மேன்மைக்கானது என்ற சோசலிச கருத்து முதன்மையுற்று இருந்தபோது ராமசாமி உளவியலையும் சேர்த்து எழுதினார்.
தண்ணீர் கதையின் பிரதான அம்சம்தண்ணீர்தான். "நீரின்றி அமையாது உலகு' என்பது பொதுவிதி. அது மனிதர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. பூமி பசுமை கொள்ள பயிர்கள் விளைய, பறவைகள் வானில் பறக்க, விலங்குகள் கானகத்தில் திரிய, மனிதர்கள் உண்டு களிப்புற்று இருக்க தண்ணீர் வேண்டும்.
ஒரு கிராமம் நீரின்றி வறண்டு போன போது மனிதர்கள் தண்ணீர் இன்றி தவிக்கும்போது, ஒரு முதியவர் கிணறு வெட்டுவதுதான் தண்ணீர். அது மனித முயற்சியின் உச்சம். அது வெறும் முற்போக்கு இல்லை. ஆனால் சொல்லப்படும் முறையில் சார்பு கொண்டு விடுகிறது
ராமசாமி கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் ஆதரவாளராக இருந்தபோது, அவர் அடிப்படையில் கலைஞராகவும் இருந்தார். கலை எல்லாவிதமான புத்திசாலித்தனமான காரியங்களையும் உருட்டித் தள்ளிவிடும் என்பதால், அவர் ஆரம்ப கால கதைகள் கூட அதிகமான சேதாரம் இல்லாமலேயே இருக்கின்றனர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு, 1959- ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் பெயர் "அக்கரைச் சீமையிலே' . ராமசாமிக்கு அப்போது இருபத்தெட்டு வயதாகி இருந்தது.
உலகம் முழுவதிலும் பல எழுத்தாளர்கள் இளம் பருவத்தில் கவரப்பட்ட இலட்சியப் பிடிப்போடு எழுதிக் கொண்டு இருப்பதில்லை. இடையில் இலட்சியம் ஒரு சுமையென கருதி அதை கீழே இறக்கி வைத்துவிட்டு எழுத போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் இளம் பருவத்தில் தவறானதொரு இலட்சியத்திற்காக எழுதியதாகப் பிரகடனப் படுத்திக்கொண்டு அதற்கு எதிராக எழுதி இருக்கிறார்கள். எழுதவே வேண்டாம் என்று போனவர்களும் இருக்கிறார்கள். சிலர் இலட்சியத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் அதனை செயல்முறைப்படுத்திய தலைவர்கள் செயற்பாட்டில் அதிருப்தி உற்று வெளியேறி உள்ளார்கள். சித்தாந்தம் தவறு என்று சொல்லிக் கொண்டு வெளியில் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
1950- ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளில் பலர் எழுத்தாளர்களாக இருந்தார்கள். அல்லது எழுத்தாளர்களில் சிலர் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் முதன்மையானவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் கம்யூனிஸ்டு சித்தாந்தவாதி. இளம் பருவத்தில் இயக்கத்தில் பங்குபெற்ற அவர், தன் இறுதி காலம் வரையில் கொள்கைப் பிடிப்பாளராகவே வாழ்ந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் சித்தாந்த அடிப்படையிலேயே எழுதி வந்தார். மொழி பெயர்ப்பாளர். சோவியத் நாவல்களையும், கவிதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் காந்திய கோட்பாடுகள், கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள், திராவிடச் சிந்தனைகள் பரவி இருந்தன. அவற்றில் கவரப்பட்ட சிலர் கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் எழுதி வந்தார்கள். நாடகங்கள் எழுதி சிலர் அரங்கேற்றினார்கள். சித்தாந்தம் கலைப் படைப்பிற்கு அவசியமில்லை. வாழ்க்கையை எழுதுவதுதான் இலக்கியம் என்ற முறையில் சிலர் எழுதி வந்தார்கள். பத்திரிகைகள் குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் வெளியிட்டு வந்தன. எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் பெரும்பாலும் பத்திரிகை எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
தமிழகத்தின் தென்கோடியில் இருந்து சுந்தர ராமசாமி வந்தார். கடலூரில் இருந்து ஜெயகாந்தன் வந்தார். இருவரும் சொற்பப் படிப்புப் படித்தவர்கள்தான். ஆனால் சுயமான சிந்தனை கொண்டவர்கள். மார்க்ஸ், லெனின் சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள். ஒரு பத்தாண்டு காலத்திற்குள் அவர்கள் சித்தாந்தம் சார்ந்து எழுதுவதில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள்.
சுந்தர ராமசாமி, ""சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டபோது மனம் மாறி வந்துட்டேன்'' என்றார்.
ஜெயகாந்தன், " நான் கம்யூனிஸ்டுகளால்தான் உருவானேன். ஆனால் அவர்களோடு இருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒரு கட்சியில் சேர்வதற்கும், சித்தாந்தம் சார்ந்து எழுதுவதற்கும் பெரிய ஈர்ப்புகள் ஒன்றும் கிடையாது. சித்தாந்தத்தின் கவர்ச்சி, தலைவர்களின் செயற்பாடுகள், அறிமுகம், அரவணைப்பு சேர்த்து வைக்கிறது. வயது ஏற ஏற எழுத்தாளர்களின் ஆர்வம் மாறுகிறது. கட்சியின் மீது பிடிப்பு குறைகிறது. தலைவர்கள் சாதாரணமான முதியவர்களாகப் படுகிறார்கள். தன்னிடம் அபாரமான அறிவும் ஆற்றலும், தலைமைப் பண்பும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் காரணமாகச் சுதந்திர எழுத்தாளராக பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டு தலைவர் ப.ஜீவானந்தத்திடம் சுந்தர ராமசாமி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். ஜீவா இலக்கியவாதி இல்லை. இலட்சியவாதி. இலட்சியவாதிக்கு சமூகத்தில் இடம் உண்டு என்ற முறையில் நினைவோடையில் ப.ஜீவானந்தம் பற்றி எழுதியிருக்கிறார்.
தொ.மு.சி. ரகுநாதன், கம்யூனிஸ்டு சுந்தர ராமசாமியை இனம் கண்டு இலக்கியவாதியாக அறிமுகப்படுத்தியவர். அவரை வெகுவாகப் பாதித்த எழுத்தாளர். ஆனால் அவரைப் பற்றி நினைவோடையில் எழுதவில்லை. அதுவும் ஒரு விமர்சனம்தான்.
அவருக்கு எழுதும் மொழி முறை, படிக்கும் விதம் பற்றி எல்லாம் தனியாகக் கருத்து இருந்தது. அவர் சொல்கிறார்:
"முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்கும் என உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகத்தைப் படிக்க கஷ்டமாக இருக்கிறது.'
இலக்கியம், அது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், எதுவாகட்டும் மொழியில்தான் எழுதப்படுகின்றன. மொழி என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்டதுதான். மொழியைக் கொண்டுதான் பலரும் தம் மேதமையை நிலை நாட்டி வருகிறார்கள். ஆனால் மொழிக்கு என்ன இடம் என்பது படைப்பாளர்கள் தீர்மானிப்பதுதான். சிலர் கருத்துக்கேற்ற வசீகரமான மொழி நடையையும், வார்த்தைகளையும் வளர்ப்பதோடு கொண்டு வந்து எல்லோரையும் படிக்க வைத்துவிடுகிறார்கள். மற்றும் சிலர் மொழியே பிரதானமென்று கொண்டு முரட்டுத்தனமாக எழுதி படிக்கவே முடியாமல் செய்துவிடுகிறார்கள்'.
ஓர் படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் மொழியின் முக்கியத்துவம் பற்றி சுந்தர ராமசாமி தன் அனுபவம் என்ற முறையில் சொல்லி இருக்கிறார்.
மொழி என்பது கற்கப்படுவது. ஒருவன் எந்த மொழியும் கற்றுக்கொண்டு எழுதலாம். அவன் வாழும் பகுதியில் அது அதிகமான மக்களால் படிக்கப்படுகிறது. ராமசாமிக்கு மலையாள மொழி முதல் மொழியாக இருந்தது. அதில் அவர் எழுதியிருந்தால் மலையாள எழுத்தாளராகி இருப்பார். தமிழ்மொழி தாய்மொழியாக இருந்தது. அவர் பெற்றோர்கள் தமிழ் பேசிவந்தார்கள். சில தமிழ்க் கதைகள், கேட்டு, அதனால் தமிழ் படித்து தமிழில் கதைகள் எழுதி தமிழ் எழுத்தாளராகி விட்டார். அது சொந்தமான முடிவுதான் என்கிறார். மலையாள மொழியில் எழுதி இருந்தால் கூடுதலான அங்கீகாரம் பெற்று இருக்கலாம் என்று அர்த்தம் சொல்லப்பட்டதின் வழியாகத் தெரிகிறது.
சுந்தர ராமசாமி இளம் பருவத்தில் படித்த புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் நினைவுகளையெல்லாம் உரையாடலில் எழுதியிருக்கிறார்.
அவர்களில் க.நா.சுப்பிரமணியம் மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னையும், ஜெயகாந்தனையும் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்கள் என்று அவர் அறிமுகம் செய்தது உற்சாகம் அளித்தது என்றோர் இடத்தில் பதிவு செய்து இருக்கிறார். ஆனாலும் க.நா.சுப்பிரமணியம் பட்டியல் அடிக்கடி மாறக் கூடியதாக இருப்பது பற்றி கேலி செய்கிறார்.
சிறுகதை எழுத்தாளரும், புதுக்கவிஞருமான ந.பிச்சமூர்த்தி மீது அவருக்கான மரியாதை குறையாமலே இருந்து வந்தது. அவர் வாழ்க்கையையும், சாதனைகளையும் பற்றி "ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்' என்று இலக்கியச் சிந்தனைக்காக 1991-ஆம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.
ந.பிச்சமூர்த்தியை, அவர் சி.சு. செல்லப்பா போல மகாகவி என்று கொண்டாடாவிட்டாலும் அசலான புது கவிஞர் என்று உறுதிபட நம்பினார்.
ந.பிச்சமூர்த்தி ஒரு படைப்பு எழுத்தாளராகவே இருந்தார். அவர் சார்ந்திருந்த மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா அலசல் முறையிலும், ரசனைரீதியிலும் நவீன படைப்பிலக்கியத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது சிறுகதைகள், புதுக் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார். விமர்சனம் செய்ய வேண்டாம் என்றுதான் இருந்தார்.
சுந்தர ராமசாமி விமர்சனத்தின் மீது ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். அதாவது ஒரு படைப்பின் சக்தியை, கலையம்சத்தைக் கண்டறியும் ஆற்றல் பெற்று இருந்தார். அவர் தனக்கு உவப்பான எழுத்தாளர்கள் பற்றி நினைவோடையில் எழுதினார். அந்தத் தேர்வே விமர்சனம்தான்.
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள், நாடகங்களை விட, புதுக்கவிதைக்காக அதிகமாக மதிக்கப்படுவார் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அதனை விளக்கி எழுதவில்லை. ஆனால் புதுக்கவிதைகள், சிறுகதைகள் பற்றி எழுதியதன் வழியாகத் தெரிய வருகிறது.
(தொடரும்)
****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/02/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3347430.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 02nd February 2020 10:34 PM |!






சென்ற இதழ் தொடர்ச்சி...

சுந்தர ராமசாமியின் உற்ற நண்பர் கிருஷ்ணன் நம்பி. அநேகமாக இருவரும் ஒரே வயதினர். இலக்கியப் பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி வழியாக கிருஷ்ணன் நம்பியையும், கிருஷ்ணன் நம்பி வழியாக சுந்தர ராமசாமியும் தமிழக இலக்கிய உலகம் தெரிந்து கொண்டது. அவர்களின் நட்பின் இறுக்கத்தையும்.

சுந்தர ராமசாமி, தன் காலத்தில் மிகவும் மதித்த எழுத்தாளர் என்றால் அது க.நா.சுப்பிரமணியம்தான். அவர் படைப்புகள், மொழி பெயர்ப்புகள், இலக்கிய அபிப்பிராயங்கள், அவற்றை எழுதியது பற்றியெல்லாம்கவனிக்கத்தக்க விதமாகவே எழுதியுள்ளார்.

அவர் நாகர்கோவிலில் வசித்து வந்தார். பல தமிழ் எழுத்தாளர்கள் சென்னையில் இருந்தார்கள். ஆனால் எழுத்தாளராக வாழ்வதற்கு சென்னைதான் சரியான ஊரென்று சிலர் வாழ்ந்து வந்தார்கள். ஒரு வேலையும் செய்யாத எழுத்தாளர்கள் கூட, சென்னையை இருப்பிடமாகக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள்,புத்தக நிலையங்கள், நூலகங்கள் புத்தகக் கடைகள் எல்லாம் சென்னையில் இருந்தன. வானொலி சென்னையில் இருந்தது. வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பல எழுத்தாளர்கள் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சென்னையில் சில எழுத்தாளர்கள் வசித்தார்கள்.

சுந்தர ராமசாமி, திருவனந்தபுரத்தில் தன் நண்பர் கிருஷ்ணன் நம்பியுடன் சென்று க.நா.சுப்பிரமணியத்தைச் சந்தித்ததை, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஒரு பெரிய மனிதர் சந்திப்பு என்ற வகையிலேயே எழுதி இருக்கிறார். க.நா.சுப்பிரமணியத்தின் இலக்கிய மதிப்பீடுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டார். தொ.மு.சி. ரகுநாதன் உட்பட கம்யூனிஸ்டுஎழுத்தாளர்கள் க.நா.சுப்பிரமணியம் படைப்புக்களையும் ஏற்றுக் கொண்டது இல்லை; அவருடைய இலக்கிய விமர்சனங்களையும் கண்டு கொண்டது இல்லை. அவரை சோவியத் எதிர்ப்பாளர் என்றும், மார்க்சிஸ்டு விரோதி என்றும், அமெரிக்காவின் கூலி என்றும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். இந்திய-தமிழக கம்யூனிஸ்டு எழுத்தாளர்களோடு இலங்கை கைலாசபதியும் சேர்ந்து கொண்டார். சுந்தர ராமசாமி, கைலாசபதியை நிராகரித்தார். ஆனால் ரகுநாதன் பற்றி ஒரு சொல்லும்சொன்னது இல்லை.

இலக்கியத்திற்குச் சித்தாந்தம் எதிரானதோ, விரோதமானதோ இல்லை. ஆனால் அதனைக் கலையாகச் சொல்வதில் இருக்கிறது என்ற முறையில்தான்
பின்னால் எழுதினார்.

சுந்தர ராமசாமியின் முதல் நாவல் "சரஸ்வதி' இதழில், "ஒரு புளிய மரம்' என்ற பெயரில் 1959 - ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அது தொடர்ந்து வரவில்லை. இடையில் நின்று போய்விட்டது. பின்னர், 1966 -ஆம் ஆண்டில் "ஒரு புளிய மரத்தின் கதை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அவர் வெகுஜன பத்திரிகை எழுத்தாளர் இல்லை. அதில் உறுதியாக இருந்தார். தன் படைப்புகள்வெகுஜன பத்திரிகைகளில் வந்து பிரபல்யம் அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் சிறுபத்திரிகை, சிற்றிதழ் எழுத்தாளர்தான். அவர் "சாந்தி', "சரஸ்வதி", "எழுத்து', "இலக்கிய வட்டம்', " சலங்கை', "கொல்லிப்பாவை', "தீபம்', "ஞானரதம்' இதழ்களில் தான் எழுதினார். "தாமரை'யிலும் சில கதைகள் எழுதி உள்ளார். அவர் மொத்தமாக எழுபத்திரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நா. பார்த்தசாரதி, சுந்தரராமசாமி மீதும், அவர் படைப்புகள் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கதைகள் தான் பணிபுரிந்த "கல்கி'யில் வெளிவரவேண்டுமென விரும்பினார். அவரிடம் வற்புறுத்தி கதைகள் வாங்கி "கல்கி' தீபாவளி மலரில் வெளியிட்டார். சொந்தமாக "தீபம்' தொடங்கியதும் அவர் கதைகளை வெளியிட்டார்.

சுந்தர ராமசாமி அதிகம் எழுதும் எழுத்தாளர் இல்லை. அவசரப்படாமல்தான் எழுதி வந்தார். 1967-ஆம் ஆண்டில் சொந்தத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏழாண்டு காலம் எழுதுவதையே விட்டுவிட்டார். படைப்பு மனம் மாறிவிட்டது. அது ஒரு மனோ நிலை. சிலர் எழுதிக் கொண்டும், பலர் எழுதாமலும் எழுத்தாளராகவே இருக்கிறார்கள். சிலருக்கு விட்டதைப் பிடிக்கும்போது கலையே உருமாறி விடுகிறது.

எழுத்து என்பது மனத்தில் சுரந்து வருவது. சிலருக்கு வற்றாது சுரந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள் சுரந்து வறண்டு போவதும் உண்டு. என்றும் சுரப்பவர்தான் எழுத்தாளர் என்றோ இடையில் விடுகிறவர் எழுத்தாளர் இல்லையென்றோ சொல்ல முடியாது. என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதுதான் படைப்புலகத்தில் முக்கியமாகக் கவனம் பெறுகிறது.

சில எழுத்தாளர்கள் முதல் நாவலில் தன்னை எழுத்தாளன் என்று நிலைநிறுத்திக் கொண்டுவிடுகிறார்கள். க.நா.சுப்பிரமணியம் முதல் நாவல் "சர்மாவின் உயில்', சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்', ஆர். சண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்', நீல பத்மநாபனின் "தலைமுறைகள்', அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்' எல்லாம் முதல் நாவல்கள்தாம். ஆனால் முதிர்ச்சி உள்ள நாவல்கள். ஒரு படைப்பைப் பாதியில் விட்டால், இணைப்பது என்பது அநேகமாக சாத்தியமில்லாமல் போகிறது. மிகச்சிறந்த கலைவாணர்கள் இரண்டு பகுதிகளையும் வெகு நுட்பமான முறையில் முடிச்சுத் தெரியாமல் இணைத்து விடுகிறார்கள்.

சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை' மிகவும் நேர்த்தியான விதத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது பற்றி எத்தனைதான் சொன்னாலும், பூரணமாகச் சொல்லி முடித்துவிட முடியாது. ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லை எட்டியே செல்கிறது.

சுந்தர ராமசாமி விட்டதைப் பிடிக்கும் எழுத்தாளராகவே இருந்தார். அவர் உரைநடையில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது போல புதுக் கவிதைகளும் எழுதினார். அவர் புதுக் கவிதைகள் தமிழில் எழுதப்பட்டு வந்த புதுக்கவிதைகள் மரபை ஒட்டி இல்லை. இருண்மை, தத்துவ விசாரணை கிடையாது. தீர்மானமான வெளிப்பாடுகள். ஆனால் சமூக விமர்சனம் செய்கின்றவை இல்லை. மனத்தை நெகிழ வைக்கும் புதுக்கவிதைகள் எழுதியது போல பிரகடனப்படுத்தும் கவிதைகளும் எழுதினார்.

அவர் புதுக் கவிதைகள் எழுதி வந்த காலத்தில் அவர்தான் புதுமையைச் சார்ந்திருந்தார்.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா இல்லை அவர். அவர்களைப் படித்திருந்தார். ஆனால் அவர்களை விட்டு ஒதுங்கி வெகுதூரம் வந்திருந்தார். அவரின் புதுக் கவிதைகள் மொழியும், சொல்லப்பட்ட கருத்தும், சொல்லிய விதமும் வசீகரம் கொண்டிருந்தன. அவருக்குத் தான் எழுதுவது பற்றி பூரண பிரக்ஞை இருந்தது. ஒவ்வொரு சொல்லின் சொல்லப்படும் அர்த்தமும், சொல்லப் படாத பொருளும் வாசிக்கும்போது புரிந்து கொள்ளும் விதமாக எழுதினார்.

"ஜே.ஜே. சில குறிப்புகள்' என்ற நாவல் 1981 - ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் சிறப்பான முறையில் அச்சிட்டிருந்தார். "ஜே.ஜே. சில குறிப்புகள்' மலர்மன்னன் என்ற எழுத்தாளர் நடத்திய "கால்' என்ற காலாண்டு இதழில் பல பகுதிகள் வெளிவந்தன. "ஜே.ஜே. சில குறிப்புகள்' அது மரபான கதையில்லை. மொழி இறுக்கமாக இருந்தது. இலக்கியம் மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும் மொழியே இலக்கியம் கிடையாது. அதனை சுந்தர ராமசாமி அறிந்து கொண்டுதான் இருந்தார். ஆனால் எழுதுகிறபோது முறுக்கலான மொழிநடை நாவலை நிலைநிறுத்திவிடும் என்று எழுதி இருப்பது தெரிகிறது.

சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்' எழுதப்பட்ட புதுமொழி புதிய வாசகர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் "ஜே.ஜே. சில குறிப்புகள்' போலதொரு நாவல் தமிழில் இல்லை என்றே கொண்டாடினார்கள். அவருக்கும் தமிழ் நாவலாசிரியர்கள் யார் மீதும் பெரிய அளவில் மதிப்பு இல்லை. அவருக்கு ஜானகிராமன், ஜெயகாந்தன் மீது சிறிது மதிப்பு இருந்தது. அதைத்தவிர அவர் மலையாள எழுத்தாளர்கள் தகழி, பஷீர், பொற்றே காட், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, காரூர், தாமஸ் மேல் எல்லாம் மதிப்பு கொண்டிருந்தார். அதுவே அவரை தகழியின் "தோட்டியின் மகன்' நாவலை இருபது இருபத்தொரு வயதில் மொழி பெயர்க்க வைத்தது. பின்னர் அவர் தகழியின் "செம்மீன்' நாவலை மொழி பெயர்த்தார்.

க.நா.சுப்ரமணியம், இந்திய எழுத்தாளர்களில் மலையாள எழுத்தாளர் பஷீரையும், கன்னட எழுத்தாளர்களில் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், சிவராம் காரந்தையும் அங்கீகாரம் செய்தார். தமிழ் மக்கள் விரும்பிப் படித்து வந்த மராத்திய எழுத்தாளர் வி.ச. காண்டேகரை ஒதுக்கித் தள்ளிவிட்டார். அவர்தான் இலக்கியத் தரம் நிர்ணயிக்கக்கூடிய திறன் பெற்றவராக இருந்தார். அவரை ஏற்காதவர்கள் கூட, அவர் பட்டியலுக்கும், மதிப்புரைக்கும் மதிப்பளித்து வந்தார்கள். ஆனால் அவர் தன் குரலை உயர்த்தாமல் சொல்லவும் எழுதவும் கூடியவராக இருந்தார். ஒரு கவிதையை, சிறுகதையை, நாவலை வாசகன் படித்து தன் சொந்த அறிவால் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இலக்கிய விமர்சனம் என்பது தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படுவது இல்லை என்று சொல்லப்படுவதுதான் அது.

கலையென்பதும், படைப்பு என்பதும் வித்தையல்ல. மூளையில் கட்டும் நேர்த்தியான கூடும் கிடையாது. ஓர் எழுத்தாளன் வாழும் காலம் முழுவதும் சிறந்த கதைகளையே எழுதி கொண்டிருக்க முடியும் என்பதோ, எழுதவேண்டும் என்பதோ விதி கிடையாது. சில மகோன்னதமான படைப்பு எழுத்தாளர்களுக்கு, ஒரு படைப்பு போதுமானதாக இருக்கிறது. அதுவும் முதல் படைப்பிலேயே சிலர் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் தரமான, மேலான படைப்புகள் எழுதினால்தான் படைப்பாளர் என்பது கிடையாது. தமிழ் மரபில் ஒரு பாடலுக்காக மூவாயிரம் ஆண்டுகளாகக் கவியென கொண்டாடப்படுகிற கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கவிதை, ஒரு பாடல்தான் எழுதினார்கள் என்பதில்லை. தொகுப்பாளர்கள் ஒரு பாடல் போதுமென கருதி இருக்கிறார்கள். ஒரு பாடல் மூலமாக எல்லாக் காலத்திற்குமான கவியாகி இருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி எழுத்தைச் சமூகத்திடம் இருந்து பெற்றவர். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழியென்பது பத்திரிகைகளின் மொழியில்லை.
"மணிக்கொடி'யில் வெளிவந்த புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா சிறுகதைகளை அவரது தாயார் தங்கம்மாள் படித்துக் காட்ட கேட்டுக் கொண்டார். அதுவே அவரை வெகுஜன பத்திரிகை கதைகள் எழுதவிடாமல் தடுத்து நிறுத்தி, தனித்தன்மையோடு மிளிர வைத்தது என்று குறிப்பிட வேண்டும்.

இளம்பருவத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீது அவர் கொண்ட ஈடுபாடு கடைசி வரையில் குறையவே இல்லை. இளம் பருவ இலக்கிய ஈடுபாடு, அக்கறை எல்லாம் காலம் போகப் போக ஐம்பது அறுபதுஆண்டுகளுக்குப் பின்னால் மாறிப் போவது உண்டு. அவரே முற்போக்குச் சித்தாந்தத்தின் மீதும், அதையொட்டி கதைகள் எழுதுவது என்பதையும் விட்டுவிட்டு தன்னையறிதலும் அறிந்ததைச் சொல்வதுமாக எழுத ஆரம்பித்தார். புதுமைப்பித்தனை அதிகமாக அவர் மதித்தாலும், அவர் படைப்புகள் மீது புதுமைப்பித்தன் பாதிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

புதுமைப்பித்தன் வேறு, தான் வேறு என்ற நிலைப்பாடே அவருடையது.

அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதனை அறிந்தேதான் செய்தார் என்று குறிப்பிட வேண்டும். அவருக்குத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைப் பிரபல்யப் படுத்துவதில், அவரின் இலக்கிய மேதமையை எடுத்துச் சொல்வதில்தான் ஈடுபாடு இருந்தது. தெரிந்துதான் அதனைச் செய்தார் என்பதுதான் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது.

புதுமைப்பித்தன், சீடர்களை நேர்முகமாகவும், இலக்கிய வழியாகவும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் தொ.மு.சி. ரகுநாதன் போன்று சிலர் சீடர்களாகி இருந்தார்கள். சுந்தர ராமசாமிக்கு பதின்மூன்று வயதாகும்போது புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டார். அவருக்குப் புதுமைப்பித்தன் அறிமுகம், பழக்கம் என்பது எல்லாம் புத்தகங்கள் வழியாகத்தான். அதுதான் படைப்பு இலக்கியம் என்பது. அதற்கு ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது கிடையாது. பார்த்துப் பேசி அனுபவம் பெற வேண்டும் என்பதும் இல்லை. ஒரு படைப்பில் சொன்னதற்கு மேலாக, எழுத்தாளன் எதுவும் சொல்லிவிட முடியாது. சில அபூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் பற்றி பேசியும், எழுதியும் வதம் செய்திருக்கிறார்கள்.

அதுதான் ஜீவிதமான மரபு. ஒரு கவி, படைப்பு எழுத்தாளன் காலத்தில் வாழ்ந்து உரையாடி ஞானம் அடைவதை விட, அவன் படைப்புகள் வழியாக தானே ஞானம் அடைவதுதான் மகத்தான ஆளுமை. அதுதான் குருவை ஒழிக்கச் சொல்கிறது. பல கலைகள் ஒன்றாகச் சேர்ந்து இருந்தாலும், ஞானத்தின் வெளிப்பாடான எழுத்து என்பது தனித்துவம் கொண்டது. அது குடும்பப் பாரம்பரியம் கொண்டது இல்லை. பயிற்சி பெற்று கவியாகிவிட முடியாது.

மகத்தான கவிஞர், வியப்பூட்டும் எழுத்தாளர்கள், கதைகளையும் படிக்கலாம். ஆனால் அசல் எழுத்தாளன் தனக்குப் பிடித்தமான, பிடிக்காத எந்ததொரு எழுத்தாளனையும் பின்பற்றி எழுத முற்படுவது இல்லை. தான் விரும்பும் படைப்புக்கு இன்னொரு படி மேலே போக வேண்டும் என்பதுதான் எழுதும் எழுத்தாளர்கள், சொல்லும் இலட்சியமாகவும், சொல்லப்படாத இலட்சியமாகவும் இருக்கிறது.

""என்னை உருவாக்குவதில் பாரதிக்கு, புதுமைப்பித்தனுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு, க.நா.சுப்பிரமணியத்துக்கு, மலையாள மொழி எழுத்தாளர் எம்.கோவிந்தத்துக்குப் பங்கிருக்கிறது'' என்று சுந்தர ராமசாமி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவர் நம்பியதைச் சொல்கிறார். படைப்பில் அது பூரணமாக இருக்கிறதா என்று பார்த்தால் அநேகமாக இல்லாமலேயே இருக்கும். எனவேதான் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு, எழுத தூண்டிய சக்தி, எழுதுவதற்கான காரணம் பற்றியெல்லாம் சொல்வதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தமிழ் மொழியே கவிதை மொழி. மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் என்பது கவிதையாகவே இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழி வழியாக, பிரிட்டிஷ், அமெரிக்கக் கவிதைகளைப் படித்த புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம் எல்லாம் இலக்கணம் இல்லாமல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். சொந்த மன உணர்வுகளைச் சொல்லும் விதமாகவும், சமூக விமர்சனமாகவும் இருந்த அவர்களின் கவிதைகளுக்குத் தமிழ்ப் பேராசிரியர்கள், முற்போக்குவாதிகளிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் வாசகர்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தது.

சி.சு.செல்லப்பா எழுத்துப் பத்திரிகை ஆரம்பித்ததும் அதில் தமிழ்ப் புதுக் கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. அவர் பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளை வெளியிட்டு மகாகவி என்று எழுதினார். புதிதாகப் பலர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். புதுக்கவிதை எதிர்ப்பாளர்களாக இருந்த தொ.மு.சி. ரகுநாதன், நா.பார்த்தசாரதி உட்பட பலரும் புதுக்கவிதை ஆதரவாளராக மாறினார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் புதுக்கவிதைகள் எழுதினார்கள்.

(அடுத்த இதழில்)


****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/09/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3353311.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 09th February 2020 07:57 PM |



சென்ற இதழ் தொடர்ச்சி...

சிறுகதைகள் எழுதி வந்த ராமசாமி புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் என்று அங்கீகாரம் பெற்றிருந்தார். 1959 -ஆம் ஆண்டில் "எழுத்து'சிற்றிதழ் ஆசிரியருக்கு “"உன் கை நகம்'” என்ற புதுக்கவிதையை "பகவய்யா' என்ற புனைப்பெயரில் அனுப்பி வைத்தார். அதோடு அது ராமசாமி எழுதியது என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தன் புதுக்கவிதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைஅறிய புது ஆளாகவே இருக்க ஆசைப்பட்டார்.

உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு
பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவியஅருமை கண்ணாளின்
இடது தோளில்ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு
தூக்கி சுமக்கும்அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்ரத்தம் கசியும்
இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே
குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

"புதுக்கவிதை என்பது இலக்கணம் இல்லாதது மட்டும் இல்லை. அதில் சொல்லப்படும் கருத்தும் புதுமையாக இருக்கவேண்டும்; சொற்களும் வழக்கமாகப் பயன்பாட்டில் உள்ளனவாகப் பெரும்பாலும் இருக்கக் கூடாது'என்று க.நா.சுப்பிரமணியம் சொல்லி வந்தது ராமசாமிக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அதனை அவரின் முதல் புதுக்கவிதையான "உன் கை நகம்' என்பதன் வழியாகவே தெரிந்தது.

"உன் கை நகம்' எழுத்தில் வெளி வந்ததும் கவனம் பெற்றது.ஆனால் அது ஓர் புதுக் கவிஞர் புதுக் கவிதை இல்லை; தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்று அனுமானிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கவிதைக்காகவே கவனிக்கப்பட்டது. அது அவருக்கு உற்சாகம் அளித்தது. சமூகம், வாழ்க்கை என்பன பற்றி மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்யும் புதுக்கவிதைகளையும் எழுதி வந்தார்.

1964 -ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "பிரசாதம்' வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான "அக்கரைச் சீமையிலே' தொகுப்பில்இருந்து முற்றிலும் மாறான ஒரு சிறுகதைத் தொகுப்பு. கருத்தும், மொழியும் மாறி விட்டிருந்தது. "பிரசாதம்' தொகுப்பில் இடம்பெற்றபல கதைகள் விஜயபாஸ்கரனின்,"சரஸ்வதி'யில் வெளிவந்தவையாகும். அது முற்போக்கு இதழ்தான். ஆனால் விஜயபாஸ்கரன் பலவிதமான சிந்தனைப் போக்குகளுக்கும் இடம் கொடுப்பவராக இருந்தார். தொ.மு.சி. ரகுநாதன், க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன், சுந்தர ராமசாமி எல்லாம் "சரஸ்வதி'யில் எழுதினார்கள்.

1957-58-ஆம் ஆண்டுகளில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த தகழியின் "தோட்டியின் மகன்' நாவல் தொடராக வெளிவந்தது. அவர் "சரஸ்வதி'யில் சிறுகதைகள் எழுதி வந்தார். எனவே ஒரு மாறுதலுக்காக என்.எஸ்.ஆர். என்ற புதுப் பெயரில் மொழிப் பெயர்ப்பாளர் குறிப்பிடப்பட்டிருந்தார். என்.எஸ்.ஆர் என்பது நாகர்கோவில் சுந்தரம் ஐயர் ராமசாமி என்பதுதான்.

2000-ஆம் ஆண்டில் "தோட்டியின் மகன்'நூலாக வெளிவந்தது. நாவல் மொழி பெயர்க்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் நூலாக வந்தது. முன்னுரையில் எழுதினார். "மலையாளத்தில் "தோட்டியின் மகன்'வெளிவந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நாவல். மேடையிலும் எழுத்திலும் அங்கு நடந்த விவாதங்கள் என நினைவில் இருக்கின்றன. ஆனால் "சரஸ்வதி'யில் இந்நாவல் தொடர்கதையாக வந்தபோது வாசகர் கவனத்தை இந்த தொடர் பெற்றதற்கான எந்த அடையாளமும் என்னிடம் வந்து சேரவில்லை. யாரும் இந்த நாவலைப் பற்றி இன்று வரையிலும் எழுத்திலோ, பேச்சிலோ, குறிப்பிட்ட நினைவும் இல்லை.'

சுந்தர ராமசாமி எழுத்தாளராக இருந்தது போலவே படிக்கக் கூடியவராகவும், படித்ததைப் பற்றிச் சொல்லக் கூடியவராகவும் இருந்தார். ஒரு முறைதான் படிப்புப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார்:

""இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழி பெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டு போவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒருவிஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கைகொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதியையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ, சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படைப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தை சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக் கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஓர் ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து என் மனோநிலை சார்ந்து தாவிக் கொண்டே இருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கதைகள், காலங்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள், கடவுள் சார்ந்த அக்கறைகள், கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறைகள், தத்துவம் சார்ந்த அக்கறைகள், மனிதர்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள் இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.''

""1948ஆம் அண்டி வாக்கில் க.நா. சுப்பிரமணியம் முதல் நாவலான "சர்மாவின் உயில்' படித்தேன். என்னைக் கவரவில்லை'' என்கிறார்.

க.நா.சுப்பிரமணியம் வீட்டில் ஆர்.சண்முகசுந்தரம், கம்பதாசனையும் சந்தித்தது பற்றி எழுதியுள்ளார். அவர்கள் ""என்னிடம் பேசியது இல்லை. க.நா. சுப்பிரமணியத்திடம் பேச வருவார்கள். இரண்டு மணிநேரம் போல காத்திருந்ததுகூட ஏதாவது பேசி விட்டுப் போவார்கள்'' என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் க.நா.சுப்பிரமணியம் பாதிப்பால்தான் "நாகம்மாள்' எழுதினார் என்பதை விமர்சனமாகச் சொல்கிறார். அவர் இலக்கியத்தை முன்னெடுத்துச் சொல்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். 1988-ஆம் ஆண்டில் "காலச்சுவடு' ஆரம்பித்தார். சில இதழ்கள் கொண்டு வந்தார். அதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டதால் நிறுத்தி விட்டார்.

சுந்தர ராமசாமி இன்னொருவர் பேசுவதை கவனமாகக் கேட்கக் கூடியவராக இருந்தார். அதோடு அவர் இரண்டு மூன்று பேர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது குறுக்கில் புகுந்து தன் கருத்துக்களைச் சொன்னது கிடையாது. கூட்டத்தில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாக செவி மடுப்பவராகவே இருந்தார்.

"நான் அவரை சென்னையிலும், டில்லியிலும் பல முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் பேச்சைக்கேட்கும் தோரணை, "இன்னும் கொஞ்சம் பேசுங்கள்' என்று கேட்கக் கூடியதாகவே இருக்கும். அவர்கள் க.நா.சுப்பிரமணியத்திடம் எவ்வளவு தெளிவாகக் கேட்டுக் கொண்டாரோ அப்படியே மற்றவர்களிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் எழுதும் அவர் அப்படி இல்லை. தீர்மான முடிவுகள் அடிப்படையில் எழுதினார். "கொஞ்சம் குரலை உயர்த்தி கூடுதலாகவே எழுதினார்' என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை "ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் எம்' என்று அறியப்படும் "மகேந்திர குமார் டைரி' குறிப்புகளைப் படிக்கச் சொன்னார். மேலும், ""தமிழில்வேண்டாம். ஆங்கிலத்தில் படியுங்கள். அதுவும் வங்க மொழியின் மொழி பெயர்ப்புதான். ஆனால் படிக்க வசீகரமாகவும், எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கிறது'' என்றார்.

“""என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?''” என்று கேட்டபோது, “""வங்கமொழி எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜியின்"ஆரோக்கிய நிகேதன்' படித்துக்கொண்டு இருக்கிறேன். கிராம வாழ்க்கையைச் சொல்லும் சிறப்பான நாவல். சாகித்திய அகாதெமி வெளியிட்டு இருக்கிறது''” என்றார். பிறகு “""தமிழில் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறதா?''” என்று கேட்டார்.

“""அநேகமாக இல்லை''”

“""விரைவில் வெளிவந்துவிடும். அவசியம் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்''” என்றார்.

த.நா.குமாரசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. அவர் வீட்டுப் பக்கத்தில்தான் நான் குடியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்து அற்புதமான நாவல் என்று சொல்லி கையெழுத்து இட்டுக் கொடுத்தார். படித்தேன். அது அசலான இந்திய நாவல்தான்.

சுந்தர ராமசாமி புத்திசாலியான படைப்பு எழுத்தாளர். நுணுக்கமாகவும், ஆழமாகவும் எதைப் பற்றியும் சொல்லக் கூடியவர்.

சுந்தர ராமசாமியின் மாமா நாராயணன் சென்னையில் தியாகராய நகரில் வசித்து வந்தார். அவர் சினிமாவில் என்னென்னவோவேலைகள் செய்து கொண்டிருந்தார். சிறிது காலம் "துக்ளக்' பத்திரிகையில் "பரந்தாமன்' என்ற பெயரில் எழுதி வந்தார். அவருக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அபரிதமான ஈடுபாடு. எனவே கலைவாணர் கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். பல சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார். நானும் பரந்தாமனும் நந்தனம், தியாகராயர் நகர் பகுதிகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பேச நிறைய அரசியல், இலக்கியம், சினிமா சம்பந்தப்பட்ட அம்சங்கள் இருந்தன.

சுந்தர ராமசாமி, நாராயணன் என்ற பரந்தாமன் பற்றி மனம் நெகிழும் விதமாக சிறிது எழுதியிருக்கிறார்.

தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபாவில் நடைபெற்ற மகாத்மா காந்தி பற்றிய கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் வீடு அருகில் இருந்தது. வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் காபி கொடுத்து உபசரித்தார். வீடு நிறைய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை, நாடகம், சினிமா பற்றிய தகவல்கள் கொண்ட காகிதங்களை கட்டி வைத்திருந்தார். ""கலைவாணர் பற்றி ஒரு சரியான வாழ்க்கைச் சரித்திரம் எழுதப் போகிறேன். அந்த வேலையாகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார். அவர் ஆர்வம் உண்மையானது. ஆனால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது.

நாராயணன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ""ராமசாமியைப்பார்த்தீர்களா?'' என்று கேட்பார். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், ""ராமசாமி சென்னைக்கு வந்திருக்கிறாரா'' என்று கேட்பேன்.

ஒருமுறை நானும், என் நண்பருமான நா.கிருஷ்ணமூர்த்தியும், சென்னை கோபாலபுரத்தில் சுந்தர ராமசாமியைச் சந்தித்திருந்தோம். அவர் சோர்ந்து போய் இருந்தார். என்னவென்று விசாரித்தோம். மூத்த மகள் செளந்தராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

1991 -ஆம் ஆண்டில் அவரை தியாகராய நகரில் சந்தித்தேன். இரண்டு பேரும் நல்லி ஜவுளி கடைக்கு அருகில் இருந்த பார்க்லேண்ட் ஓட்டலுக்கு வந்து காபி சாப்பிட்டோம். பிறகு பனகல் பூங்காவிற்கு வந்தோம். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கியப் பரிசுகள், வெகுமதிகள், விமர்சனங்கள் பற்றி பேசி கொண்டிருந்தோம். இரண்டு மணிநேரம் சென்று விட்டது. பின்னர் எழுந்தோம்.

""மகள் எப்படி இருக்கிறார். உடம்பு சரியாகி விட்டதா?'' என்று கேட்டேன்

“""இல்லை. அவள் போய்விட்டாள்''” என்றார்.

நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

“""கேன்சர். ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்''” என்றார்.

கீதா தர்மராஜன் என்ற தமிழகப் பெண்மணி கதா என்ற அமைப்பை டில்லியில் ஏற்படுத்தி தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். கதா 2003 -ஆம் ஆண்டு "கதா சூடாமணி' என்ற வெகுமதியை சுந்தர ராமசாமிக்கு வழங்கியது. அதற்கான விழா கோலாகலமாக டில்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனலில் நடபெற்றது. டிசம்பரில் நல்ல குளிர்காலத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற விழாவில் கம்பளி உடை, தலைக்குல்லாய் அணிந்து, அனல் காய்ந்து கொண்டு அவர் ஏற்புரையை வழங்கினார். தமிழில்தான் பேசினார். அவர் நிதானமாக தீர்மானமான தொனியில் பேசினார். விழா முடிந்ததும், பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவர் மேடையை விட்டு இறங்கி வந்ததும் முன்னே சென்று வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் என் கையைப் பற்றிக் கொண்டு, “""நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா?''” என்று வினவினார்.

“""இல்லை. ஆனால் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது''” என்றேன்.

“""அவசியம் வாருங்கள். என் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். நான் மூன்று மாதங்கள் நாகர்கோவிலில்தான் இருக்கிறேன். பிறகு அமெரிக்கா போகப் போகிறேன்''” என்றார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். நான் நாகர்கோவில் செல்ல முடியாமல் போய்விட்டது.

2005 - ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமி தன் எழுபத்து நான்காவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

அவர் தனித்துவம் மிக்கத் தமிழ் எழுத்தாளர். மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியவர். எழுத்துக்கு இலக்கியப் பூர்வமாகப் பலனுண்டு என்று எழுதியவர். அதோடு எழுத்தாளன் படைப்பு சுதந்திரம் பற்றித் தன்னளவில் அறிந்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயேஎழுதினார். எழுத எழுத அவர் எழுத்துகளில் வீரியம் கூடியது. அவர் சிறுகதைகளில் "தண்ணீர்', "பிரசாதம்', "வாழ்வும்வசந்தமும்', "விசாகம்'மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய சிறுகதைகள். நாவல்களில் "ஒரு புளிய மரத்தின் கதை' குறிப்பிடப்படவேண்டியது. நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் படைப்புகள் அசலான படைப்புகள் என்ற வகையில் இடம் பெறுகின்றன.

சுந்தர ராமசாமி 1988 -ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள "குமாரன் ஆசான் விருதை' கவிதைக்காகப் பெற்றார்.

2001 -ஆம் ஆண்டுகனடா நாட்டில் டொரண்டோவில் வழங்கப்படும் "இயல்' விருது பெற்றார். 2003 - ஆம் ஆண்டில் அவருக்கு கீதா தர்மராஜன் கதா அறக்கட்டளை, "கதா சூடாமணி' விருது வழங்கியது.

சுந்தர ராமசாமி தமிழ் எழுத்தாளர். அவர் தன் படைப்புக்களைத் தாய்மொழியான தமிழில்தான் எழுதினார். ஆனால் அவர் படைப்புகள் மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, ஜெர்மன் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1966 -ஆம் ஆண்டில், தன் முப்பத்தைந்தாவது வயதில் சுந்தர ராமசாமி, "நானும் என் எழுத்தும்'கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

"வாழ்வின் அந்திமத தசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும். என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன். இவ்வளவு போதும் எனக்கு.' சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாததையும்,சொல்லப்படாததின் வழியாக அறியத்தக்கதையும் சொல்வதுதான் இலக்கியம்.

சுந்தர ராமசாமி அதனையே கூர்ந்து எழுதி வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

(21.11.2019 சென்னை சாகித்திய அகாதெமி அரங்கில் ஆற்றிய உரை)

Sunday, 12 January 2020

மாய உலகம்: ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...
maaya-ulagam
மருதன்
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/534050-maaya-ulagam-4.html
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.

என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.

உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன். மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.

என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.

என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.

கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.

கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன். மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.



ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.

எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.

இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.

நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.

வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com