Friday, 6 March 2015

த - கோணங்கி (93 ஆவது அத்தியாயம்) வண்டானம்

த - கோணங்கி (93 ஆவது அத்தியாயம்)
வண்டானம்


எழுதமுடியாத கதைகளை யார் எழுதிட முடியும். இசையும் எரிமலைச் சாம்பலாக ஒலிபூசிய மரணத்தைப் பிரித்து கல்நாயனத்தை உரித்து எடுப்பதில் பாணரும் உன்மத்தம் ஏறிய வறண்டபழுப்பில் துயர் உருவங்களாக களிமண்ணால் ஆன ஊருக்குள் பேய்கள் நுழைவதை சங்கிலிகளால் எல்லையடித்து வந்தது வண்டானம்.

ஓணான் பாறையை விட்டு இன்னும் நகரவில்லை. உடலின் நிறம் சாம்பல். அதில் எழுதப்படும் உடைமுள்கோடு கண்ணீர் ஒடியாமல் நீளும் வெகுளி, வெள்ளிக்கோம்பை எனும் நாயின் நிறம்சாம்பல் தேடும் வழியிலே பல கிளைகளாகி விடும். காவேரி மீன்கள் ஓவியம் வயல் அறுத்த கருக்கு அரிவாள் வீசி வீசிப்போன குருசடிப் பெண்கள் மணலில் கோடுபோட்டு அழுத எழுதப்படாதவை எழுத்தாவதிலிருந்து தனித்திருக்கும் புலமே சொல்லும் கதைதான் மனப்போக்கில் நீர்பட்டால் அழியும் கதைக்கொரு பெண், காடுகளில் அரிச்சலாய் நடமாடி வருகிறாள். காவேரி வயலில் அடிமைகள் கால்கள்பட்டு ஜீவனுள்ள நெருப்பு உறங்குகிறது. சொல்லாத கதைகள் மேலும் குருடர்கள் வளையச் சாய்ந்திருக்கும் தலைக்கதிர் நெல் வாசனை. வெளிரிய வைக்கோலின் பொன்னிற ஒடிவுக்கூளம் காயும் களத்தில் பாணர் ஒலிமணியில் படிவாங்கி அடைமழைக்குக் கட்டியமாக நல்லவெயிலில் ஓய்வெடுக்க, பச்சை இலைகள் மீதாக ஊர்ந்துவரும் பாம்புகள் த.பட்டினத்தில் உறைந்திருப்பவை. வெள்ளிநரி இரைதேடி சாம்பல்நிற ஊசிவாத்துகளிடம் வருவதில்லை. ஏனோ வாத்துக்காரி கைகோர்த்து சகதியைப் பூசி விளையாடுகிறாள். காக்காய் பொன் ஓவியத்தை உரிக்க உரிக்க நடனமாது மெலிந்து பழுத்து ஒளிர்கிறாள் காவேரியில். நானும் உற்றுப்பார்த்தேன் என்று நினைக்கிறேன். கஞ்சாவைப் பிரிக்கிறேன் ஜேபியிலிருந்து.

பின்னேகைவிளக்கேந்தி வந்த முதியதாசி நாடகங்களின் விளிம்பைத் திறந்து சுடரைப் படிய விடுகிறாள். புறாமாடங்களில் ஒளியின் சுருதிக்குள் இருண்டிருந்த சரபோஜி நாவுகள் தூண்மேலமர்ந்து கீழே ஓடும் பார்வையில் உரையாடலில் கலந்துவிடும். ஏடுகளை எரிதாவிடம் வாங்கி விரல் வைத்துப் புரட்டுகிறார் சரபோஜி. மேலும் அவர் பின்னால் துருப்புகள் நிற்கிறார்கள். மங்கியவரி வெளிச்சத்தில் பூச்சிஏடுகளின் மினியேச்சர் சித்திரங்களில் ஈடுபடுகிறார். எரிதாவின் பூச்சி ஏடுகளில் நீலப்பிழம்புகளும் சொல்லாத திருநங்கையர் கதைகள் மேலும் தீப்பந்தம் ஒளிபடர்கிறது.

இந்த சரஸ்மஹால் நூலகத்தின் உயரே கால்பற்றித் தலைகீழாகப் பழம் தின்னும் வௌவால்கள் ஓவியர்களாக வானத்தில் வேர் ஊன்றி ஏடுகளில் பரந்துவிரியும் மரத்தின் கிளைகளில் தவழ்கிறார்கள். கலைஞன் எனும் இருட்டு வௌவால்கள் நிறங்களை மாந்தியுண்ணும் பூச்சி ஏடுகள்மேல் கண்தொட மசங்கிய ஆழத்தில் பூச்சிஏடுகளின் சாம்பல்நிறம். பழுப்புநிற ஆந்தை வண்டானம் தோளில் அமர்ந்த மௌனத்தில் வட்டமாகும் ஈர்ப்பு மையம்.

சரபோஜியின் நாடகக் கிறுக்கில் துலங்கி எழும் விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. விதூஷகர் கூட்டம் புறாக்களை ஏந்தி உள்ளே வரும். அலகு நீட்டி ஒவ்வொரு சிறைக்குள் சென்ற சிறு அறைகில் கஞ்சாக்குடிக்கிகள், சந்தேகத்தின்பேரில் அடைபட்டோர், திருநங்கையர் அமர்ந்து ஏடுகளை அவிழ்க்கச் சுருதி விளக்கின் வெளிச்சம் இவ்வளவாகப் படிந்து ஓடும் வாஸிப்பு. சித்திரங்களால் மேலுறையிட்ட துணி ஏடுகளை கம்பளத்தில்வைத்து விளக்குகளில் பெருகிய நிழல்களும் பொங்கிய இருளில் கரைய சாம்பல் மேலங்கிகளைக் கலைந்து ஒருவர் அருகில் குனிந்து பனுவல் புரட்டும்வேளை நகர்ந்துவந்து கேட்கிறார் சரபோஜியும்.

திரைக்குப்பின்னே விரல்களில் நகரும் பெண்ணொருத்தி கம்பத்தில் நின்றகோலம். வண்டானம் மணிக்கரத்தில் வந்தமர்ந்த கோயில்சிங் புறா திருகிய கண்களை உருட்டித் தைலத்தில் அலைவுறும் நயனத்தில் ஈர்த்தது. கஞ்சா சேவிக்கும் இவர்கள் அறைக்கதவுகளிலிருந்த வெளிச்சத்தை மூடினார்கள். தொடர்ந்து காவலர்கள் விசில். பூட்ஸ் கால்களின் ஓட்டம். நீண்ட நேரம் மாறிமாறிப் பல குரல்களால் உரைவேகத்தில் எரிதா வாஸித்து வருகிறாள்.

கடந்தகாலங்களில் மிதந்து பார்த்திருப்பவர்களுக்கெல்லாம் தெரியும் மாடுமேய்க்கும் மூங்கில் சிறுபாணன் தூயபேதுரு ஆலயக்கல்பாலத்தில் புகை உருவங்களோடு இருப்பது பெரிய கோயில் முதல் கோபுரத்துக்குத் தெற்கில் இறங்கும் புதுஆற்றுப்படித்துறையில் ராத்திரிகளில் புகைவது வண்டானம்தான். யார் வேண்டுமானாலும் சுற்றில் வரலாம். சின்ன பியால்தெருப் பாணன் தாவேசந்தில் வாங்கி வரக் காலணா. அந்த தாவே குஜராத்தியில் கேட்டால் தருவான்.

அத்தனைபேரையும் சட்டென மூங்கில் இடையே மடக்கி அழவைக்கும் சுருள் மூச்சில் செங்குளவிகளும் சுற்றிக்கொள்ளும். ரீ... ரீயத்தைத் தெம்மாங்குப் பாதையெல்லாம் வண்டிக்குப் பின்னால் தொடரும் கடிநாயெனச் சற்றும் வண்டானம். பால்யத்தை அடைந்துவிடும் குழந்தமையின் ஆறு. சுரக்குடுக்கையோடு காததூரம் காவேரி நெடுகநீஞ்சல். தாய்மூங்கில் அகம்பாலை சுநாதம் இருந்த இயற்கை.

கேட்ட கேள்விக்கெல்லாம் முடிவில்லாத மௌனம். எல்லாருக்கும் சிமிழ் சுற்றிப்புகைவர குற்றவேல் செய்யும் வண்டானம். மூங்கிலில் பதில் பேசும் சிறுசலனம் உருகிமறையும் மோனம் புன்னகையில் ஓய்ந்து ஊர் ஊராய் யார் பந்தலிலும் இலைபோட்டு பந்தியில் பரிமாறித் தப்பிவிடும்.

இசையில் சீதாளக்குறத்தி பாசிவிற்கும் குரலில்கேட்ட ராகத்தைப் பின்தொடர்ந்து மூங்கில் எடுத்து அவள் மண்குரல்வளையை வாஸிக்கக் கேட்டது ஆறு. பையனைத் தவறிவிட்டவர்கள் வண்டானத்தைத் தவுட்டுக்கு வாங்கி வளர்த்தாலும் நழுவிநடக்கும் காவேரி வண்டிப்பாதை அது. நடுச்சாமத்தில் சேத்தாண்டி வேஷமிட்டு வழிப்போக்கரைப் பயங்காட்டி கதிகலக்கிப்பின் சகதிஅடியில் ஏனாதிச் சிறுவரோடு வயல் நண்டுபிடித்து வாங்கரையில் சுட்டுத்தின்னும். கள்ளி அடந்தலுக்குள் முள்பழம் சிவந்திருக்கும் அடித்தொண்டை இனிக்க ஐந்து தலைநாகம் சுருண்டுவந்து விட்டகதையைச் சொல்லிவர, உடைமுள்காடு பேய்விரிக்கப் பாம்புவாலை வெளியில் இழுத்து வளைத்தபோது மீதிக்கதை சொரட்டை எனப்படும் ஊர் ஆனது.

நீயின்றி வேறன்ன நீராயிருக்கிறது காவேரியில்... என்னப்பெத்தாரு... என உச்சி தடவி விரல் நெறித்தாள் மூக்கரைக்கிழவி. நீர்குட்டையில் எருமையுடன் மூழ்கி தாமரை இலைபறிக்கும் வண்டானம். மாடுகளின் கொம்புகளும் முகம்முகமாய் வெளித்தெரிய நீஞ்சும் தனித்தனி அலை வட்டங்களுக்குள்ளிருந்து தலைநீட்டும் வண்டானத்துடன் அம்மணச் சிறுவர் குதிப்பு மண்டிகலக்கும். கொம்பு முகம் நீஞ்சும் கோடுகளில் குழல் அதி அதிர்வில் அசையும் கல்மாடத்தின் நிழல். புற ஆழம் அகத்தின் அரூபத்தில் கரைய நாத பிந்தில் சூல்கொண்ட காவேரி மழலை. வண்டானம் கண்ணிலிருந்து சிதறும் விதைகள் தாவிக் கனவுவழி போகும் குடவாயில் அம்மான் உறவு. சிவப்பு நாழி ஓடு போட்ட வீடு. அதனுடன் உரையாடும் பரிபாஷையில் கீழே உடைந்து விழும் ஒவ்வொரு கையோட்டின் துகளிலும் சிகப்பாய் ஒட்டிக்கொள்ளும் அத்தைக்காரி மருகும் வயல்காட்டு ஆலமரம் விழுதுவிட்டு நிற்கிறது கீழிறங்கி.

ஆலமரம் அசையக் கீவளூர் ஸாவேரி வாஸிப்பைக் கேட்டு கற்சாளரத்தில் நிற்கிறது வண்டானநிழல். சிதிலமான கற்சாளர இடுக்கில் வழியும் சூதெறும்புகளின் இசைரேகை, அரசத்தளிர் இலைவிடும் காரைவீடு. இயற்கையெனும் ஜீவதாது புரளும் விருட்சத்தின் குரலில் இலை ஒலிகளில் கீறும் கோடு. வண்டு அகன்ற கண்களை உருட்டி தைலத்தில் மிதக்கும் கருவாக ரக்தி வீர்சாமி நாயனத்தாரிடம் போய் வெற்றிலை போட்டு சம்பாசிக்கும். ரக்தியெனும் லயவிஷேங்கள் நிறைந்திருக்கும் கடனாகைக்காரோணத்தில் ஏராளம் வர்ணங்கள் இசைவுருக்களை இயற்றிவந்த ரக்தியார்மேல் அளவிலாப் பிரீதி. ‘வனஜாஷிரோ கல்யாணி ஆதிஸாமினி பந்துவராளி ஆதிவர்ணங்களான நாயனத்தில் கொடையளித்த இசையோகி ஸ்வாபத்தில் முன்கோபி. ஆனால் வீட்டில் சாதாரண மனுஷன். பரிமாறும் அமுதில் கூடக்குறைய ஆகிவிட்டால் தட்டுகள் வட்டமாய் சுழன்று பறக்கவாரம்பிக்கும். வீடு ஒரு யுத்த களமாகிவிடும். ஆயினும் வண்டானம் வந்துவிட்டால் ‘இப்படி இரு ராசா. சாப்டு ராசா. குடவாயில் மாமா சௌக்யமா...’ நகைச்சுவைக்கு அர்த்தவிஷயமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிராது. ரக்தியார் மூத்தகுமார் வேணுவுக்கு வண்டானம் நெருங்கிய பழக்கம். கீவளூருக்கு கூட்டிப்போனதால் இருக்கும். ஸாவேரி லயமலர் வெற்றிடத்தில் படர்ந்து வெற்றிடமே பூக்கிற வெளி. நாசனம் முளைத்த ஒலிச்செறிவில் கருக்கொள்ளும் சங்கதிகள் நகர்ந்துசெல்லும் ‘தூவெழுத்த கோவணத்தை அரையிலார்த்த கீளானைக் கீழ்வேளூர் கேடிலியை நாடுமவர் கேடிலாரே...’ என சமண்நாவு உருகக் கருத்த சடை விதியில் சிக்கினது பிற்காலம்.

சுவாதீனமான ஜனனநாடியில் ஸாவேரி விதையுறையில் கீவளூரார் கொடுத்த மூலத்தில் ஒரு பாணர் காந்தல் சிவக்க வாஸித்த வழி ஓதினார் வண்டானம்போன வழிகளில். உலர்ந்த விநாடிகள் ஏழாய்ப் பிளக்கும் ‘க்ஷணிகம். கல்லாகமாறிய ஒரு மரநாயனம் உயிர்விழியில் கடனாகைக்காரோணத்தில் நீலாயதாட்சி கால்வழியில் ஒளிர சாம்பல் எரிமலைப் பூவும் அதிர்கிற வாசனைதான். அந்த வாத்யத்தின் பூர்வீக சங்கீத மெய்மை கந்தப்பாவிடம் வேணுவைக் கொண்டுவிட எவ்வளவு காதுகொடுத்துக் கேட்டு உடல்எலாம் கோடுபட ஈர்த்த கிரகிரப்பில் சீடனாகிவிட்டதில் வீர்சாமிக்கு எவ்வளவோ மனஉருக்கம். அங்கே சிக்கல் ருத்ராபதி கோட்டூர் சுப்பையா போன்றோரெல்லாம் இவரிடம் சீடர்களாயிருந்ததில் அவ்வூர் ஆற்றங்கரையில் இருந்த பாம்பேறி மண்டப சாதகத்தின் உருக்கம் யாளிகள் எதிரெதிர் பெயர்ந்த தூண்களில் கற்சிரவம் கேட்டுப் புதைகிறது காவேரியில்.

வேணுவும் கோட்டூருக்குப்போன நாளில் கூடவருபவனின் தோளைத்தொட்டு ‘என்ன நடந்துகொண்டிருக்கிறது நீரின் சுழற்சியில்’ என்றது வண்டானம். ‘உயிர்விசையில் துக்கத்தின் தாது விம்மும் நீலமாய்ப் பளிங்கு வெண்மையாகவும் கேட்கிறது ஸாவேரி கேட்ட தூரம்வரை...’ என்றான் வேணு.

அதற்குமேல் ‘நீலம் வெற்றிடமாய் ஊடுருவி நீலயதாட்சி இருப்பிலிருந்து மறைகிறாள் நீலமாய்...’ என்றது பித்து.

நாயனம்பிடித்த ரேகை குளிர்ந்த கைகளைத் தொட்டதும் இரு கைகளும் சேர்கிற விநாடியில் சிவந்து ஓடுகிறது காவேரி. படிந்த மணல்கோடு வெளியெங்கும் திரும்பிய வடு. ‘வண்டு எனக்கு பயமா இருக்குடா.’ தாப்பனார் இறங்கி வருகிற அந்திமவேளை. ‘ஒவ்வொரு நாள் வாசிப்பிலும் மூச்சிறைக்கும் ஒலி.. இருட்டு பெரிய தூணாட்டம் நிற்கிறது. அப்பா அதில் சாஞ்சிட்டு காவேரி பாலத்தில் நிக்கிறார். மூங்கில்வீடு தூரமாய் தெரியுதுடா வேணு.’ அந்தக் கரை நெடுக மூங்கில் தோப்புகள். அப்பாவைக் கைத்தாங்கலாகச் சிகப்பு நாழி ஓடு வேய்ந்த மூங்கில் வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன். ‘நீ வந்திடுவியா. வண்டு. எனக்கு யாரும் இல்லடா. அக்காவுக்கு என்ன விட உன்னத்தான் ரொம்ப பிடிக்கும். பித்துக்குளி.. ஞானப்பித்து. பட்சிகூப்பிட்டதெல்லாம் சீட்டியில் அடிப்பான் வண்டு. இயற்கை அது... அதுகிட்ட கூடவே இரு’ என தழுதழுத்தார் வேணு.

வேணுநிலமையில் வண்டானம்போய் கோட்டூரில் முத்தம்மாளைப் பெண் பேசிவிட்டு கூடவே தவங்கிய தகப்பனாரை மாட்டுவண்டியில் பேச்சுக் கால் சிரிப்பும் சக்கரநிழல் சுற்றில் அடுத்த வண்டிவரிசையில் சகோதரிமார் தேனு, காந்தம்மா, சுபத்ரா தங்கச்சியும் இசையில் ஆடிச்சென்ற கூளப்போர்வையில் மெய்மறந்த வண்டானம் இரு பைதாவுக்கு இடையில் அரிக்கேன் விளக்கில் பெருகிய நிழலுடன் ஆரக்கால்களில் சுற்றும் கோடுகளில் ஒவ்வொரு இடமாய்ப் பாடி முனகும். எதையோ கேட்கும் பெண்களுக்கு வீர்சாமி பதில்பேசும் நடுக்கம். எல்லாப்பரிசமும் முடிந்தாயிற்று. வெளியில்போன வண்டானத்தைக் காணவில்லை. வேணுவுக்கு அதை என்னவென்று தெரியும்.

யானைக்காதுகள் போன்றிருக்கும் வண்டானம் செவிகள் மட்டும் தனியே அசையத் தலையாட்டி பொம்மையாய் உருட்டி தோடிராகத்துக்குப் பின்னால் திருவாடுத்துறைக்கே தஞ்சமென்று எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் வண்டானம். என் சக்கரவர்த்தி சீவாளியை வெற்றிலை எச்சிலால் மென்று சவைத்த தாய்மடுவாய் வைத்துக்கேட்டதும் சாரைகள் ஓடும்பாதைமேல் வளையும் சீற்றத்தில் கூழாங்கற்கள் சக்கரத்தில் உரசித்தெறித்த வேகத்தில் மூச்சிரைத்தவாறு ‘உம்மோட தோடி நெளியும் கண்ணாடிப் பாம்பு சுவாதீனத்தில் நழுவி நாதவெளியைக் கடந்து கொண்டிருக்கிறோம் இல்லையா ... நாகசின்னத்தின் தடம் அசுர சாதகம் எல்லாமே ஆலகாலவிஷப்பச்சை சுமந்த கலைஞனின் இருட்டில் கரைந்து பித்தவேகத்தில் அவனையே பருகிக்கொண்டு இருக்கிறதே ... ராஜரத்னம். தொலைவில் எரியும் நீலநிலா உமிழ்ந்த ஒளிவீசிய நாகசம். துணிக்குள் ஸர்ப்பமாய் மூச்சரவம் கேட்டேன். உன்னிடம்... உன்னையும் அது விழுங்கித் தீர்க்கும் சர்ப்பவாய்.. திரும்பவும் பச்சை நிலவைக் கக்கி அதில் மரகதக்கல். நாகசின்னம் உருக எல்லாப்பச்சையும் மரணத்தில் இருளாகிவிட்ட தடத்தில் தோடியின் காலடிகள் சப்தமற்றுக் கமகச்செறிவடையும் அலாதி’ அதை உணர்ந்தவன்போல் ராஜரத்னத்தைப் பார்த்தது வண்டானம். ஜீவனில் உறைந்த ராசிகள் இரைதேடி அலையும் ஸர்ப்பவனம் தெரிகிறது.

‘இந்த ஒரு ராகத்தில் ஜீவனும் சொருகிக்கொள்ள நாம் இருக்கிறோம் தானே வண்டானம்...’ என்றது தோடி. ‘இல்லாமல் என்ன... விழிகள் நாண கடைவிழியில் பழுத்துச்சிவந்தமோனம் வெப்பமாய் அசைவதும் அழிவதும் உம் விரல்கள் மெல்ல அசைந்து நகரும் ரேகையில் பல உருஆகி மந்திரத்தில் கட்டுண்ட மனதில் உருச்செய்த கற்பனைக்கோலங்கள் ஊழாகிப் பின்தொடரும் மரணபயம் உன் வாஸிப்பில் அடைகிறேன். ரத்னம்.. நடந்த இயற்கைவிசித்திரம் துயில்வதில் காத்திருக்கும் லட்சிய மறதியில் எதைக்கொடுத்து விதியிடம் சிக்கினாய்.. .’

இருவரும் பேச்சற்ற நிலையில் வெகுதூரங்களைக் கடக்கிறார்கள்.

‘வண்டானம் எங்கு நீ சென்றாய் நானும் வருகறேன் உன்னோடு.. என்ன இருக்கிறது அங்கே.. ஒண்டியாய்க்கிடந்து எதைக்கேட்டு வைத்திருக்கிறாய்.. சொல்லு...’ ராஜரத்னம் வில்வண்டிக்குள் சாய்ந்து பேச்சில் ஆழ்ந்து கேட்டதைக் கேட்காதகாதுகள் வேறெதையோ கேட்டன அரிச்சலில்.

தோடியின் தாயார் நடசேனின் மூத்த தமக்கை கோவிந்தக்காவும் தந்தை குப்புஸ்வாமியும் ஆரம்பப் பழக்கம். கமலாம்பாளுக்கு ஆறு பெண் மக்கள் வளர்ந்து ருதுவாகி இசையின் சாகரத்தை வண்டிச்சக்கரத்தில் சுற்றிய ஆரங்களின் ஓட்டத்தில் ராசிகளை மாற்றும் வண்டானம் கருவை உணர்ந்த சிசுவிடம் பேசும் சுபாவம். இவர்களிடம் தனித்தன்மை கொண்ட சாகித்ய விசேடங்கள் என்னவென்று தூரத்தில் கல் மண்டப இருட்டில் நாயின் பிலாக்கண வேளை. அதனில் ஒடுங்கும் கபால வாசனைகள் கந்தமாய்நெடிக்க உருப்படிகளைப் பாந்தமாய் விசாரிக்கும் தாம்வாழ்ந்த விதியில் எந்தெந்த பட்சியோ கோள் நிலையில் சங்கீதத்தை உணர்த்தும். பலர் அந்தக் காவேரி நெடுக ஆற்றங்கரையில் பூத எலும்பாய் இருக்கும் கபாலச்சித்ரங்களில் எல்லா ராசிகளும் வரையப்படும் ஏடுகளாகத் திறந்துகிடந்த புறங்காடு. சுடலை எரிவதில் நிறங்களைப் பிடித்து வாசிப்பைக் கேட்பதில் தீராதபித்து. சீவாளியை நாதஸ்வரத்தில் பொருத்திச் சுருதியில் சேர்ந்தவுடனே நடேசனின் ரவை ஜாதிகள் உருளவாரபம்பிக்கும் நாதவிந்து அவருக்கு வசப்படும் அருவப்பாம்பின் மயக்கம். எளிமையும் மிகவும் பயந்த சுபாவமும் பிறர்முன் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற கவலைதான் விசேஷத்தைக் கூட்டியிருக்கும். திருமருகலின் பிருகா என்றால் அதற்குக் கால அளவில்லாதிருக்கும். இடைவெளியற்றுத் தொடர்ச்சியாக சூர்வரணம் நீண்ட நேரப் பிர்காக்களைப் பொழிவதில் இயற்கையிடம் ஓடும் ஆற்று வழியில் காட்டுத்தீமரத்தைச் சுற்றி புறவிதழ் கறுத்து கிளிமூக்காய் வளைந்து சிவந்திருக்கும். கொத்துக்கொத்தாய் நாதம் எரிதழல் பூக்களில் மணிவடப் பூச்சிகள் அடிவயிற்றுக்கண்களால் சீவாளியைப் பற்றிக்கொள்ளப் பறந்துதிரியும் காலையில் சாதகம்செய்யப்போன ஆற்றங்கரைப் பக்கம் வண்டோட்டும் மாதிகப்பெண் ஆள்உயர வாரியலில் பரிதியுடன் மேலுகிறாள் தூற்றுத்தூற்று நகரும் தெருக்கோடுகளில் கேட்டு வாசித்த நடை மல்லாரியில் ஜோடுகள் தைக்கும் மாதிக்குருவி விடியலில் கேட்டதை ஆற்றுமறுகரையில் பிடித்துக் கொள்ளக் காலடியாய் ஊர் கூட்டிவந்த மணல்கோடு மாதிகர் தொலைத்த சத்தக்குழல் உள்வாங்கும் சுநாதத்தில் பறக்கும் வண்டானம்.

லோத்தல் நடனமாதின் பழமைச் சிற்பத்துணுக்குகளில் சமகால வாசனையை அடைகிறேன் இப்போது. ஹரப்பாவில் கண்டெடுத்த வெளிர் சிகப்புக்கல் ஆபரணம் கசிகிறது லோத்தல். கரு பழைய சிற்பம். அவளை நெருங்கவும் முடியவில்லை.
‘இத்தனைக்கும் இடையில் உனக்கு உன்னை மூங்கிலால் தொட்டுப் பறக்கும் என் குருவி...’ எனத் திருமருகல் நாயனம் சொல்லும் பைத்தியத்தில் காவேரி நெடுக வண்டிச்சோடை சிதறிய தானியம். ஒரு பழுப்பு விதைக்குள் மாதிகச் சிறுமி மறைகிறாள். பறவைகளுக்குப் பயந்து ஒரு மஞ்சள் தானியம் பாறைக்குள் உருள்வதும் ஒளிவதுமாய் விளிம்புகளில் எட்டிப்பார்த்ததை அவரும் நோக்க, மாதிகக்குருவி கல்பாலத்தில் ஜோடு தைத்தவாறு சீட்டியில் ஒலிப்பித்துக்காட்டும் பட்சி ஜாலங்களைக் கல்மண்டபத்தில் இளைப்பாறிய வண்டானம் கேட்டுத் திருமருகலிடம் அதிசயம் காட்டி ஜோடுமேல் திறக்கும் தோல் ஏடுகளை நீ குனிந்து எடுக்க கந்தலான பாதரட்சைகளின் ஊழினை அறியமாட்டாய். என்னுடைய பிர்காக்களாயில்லாமல் பட்சி ஜாலங்களின் ஒலி அகராதியை உமது பிர்காக்களாய் கரைத்துப் புகட்டினீர் எனக்கு...’

ஜோடுமேல் வீசி எறிந்த ஏடு ஒவ்வொரு தையலிலும் தோல்வார் கிழிய உன் விரல்களைத் தாமரையாக ஏந்தும் ஜோடுதைப்பவரைத் தொடாதஉன் பாண ஊர் காரூக ரத்தம் மாறாமல் இருப்பதில் உன் தொலிமுக உரியைக் கிழித்துத் தைப்பவர்கள் சாதாரண மாம்சத்துண்டான உன்நாக்கு மேல் வாக்கும் சிதையும்... ஜோடுகள்வழி நடந்த கிரீச்சிடல் அடியில் ஒட்டிய புனைவுலகம் அறியாத முழிகண் குருடனாய் அந்தப் பாண ஊர் வெள்ளாளத்தெரு சனாதனம் கலையைச் சந்திக்காத வெறுங்கூடு. ஜோடு மேல்வளரும் இயற்கையில் பரந்துகிடக்கும் ஊர்ப்புழுதி மண்சகதி விவசாயப்பெண்களில் காலணிகளை படைத்தவனைவிட்டு நீ எட்டாத தூரத்தில் நடந்துகொண்டு இருக்கிறாய். நின்றுவிட்டார் மாட்டுத்தோலில் உலர்ந்திருக்கும் பாடாந்திரங்களில் சத்தக்குழல் வாசித்து முடித்தபின் வெளியே கிளம்பி ஆறு ஜோடி ஜோடுகளை ஏடுகளாய்க் கட்டித் தலைமேல் சுமந்துசெல்ல ஆற்றைக் கடக்கிறார் குருவியார் ‘தங்கள் காதுகளில் மின்னுகிற சீமைக்கடுக்கண் என்ன மோஸ்தர் பாருங்கள்.. எப்போது வாங்கினீர்கள்? தீட்டுக்குருதிஒளிகக்குதே...’ எனக்குருவி கேட்டதும் சுய உணர்வு பெற்றார் திருமருகல். சீடனாய் கூடவந்த யாழ்ப்பாணி கடுக்கனை மூடிக்கொண்டு நழுவத் திருதிருத்தான்.

குருவாரமாகிய இன்று ஜோடு தைத்தவாறு சீட்டியில் ஒலிப்பித்த பிர்க்காக்களில் ஒளிந்திருக்கும் இயற்கையின் சாகரம் இந்தத் தோல் கூணையில் அகப்பட்டிருப்பதில் மழைபொழிந்த மேதைக்குத்தான் கடுக்கண் பொருத்தமென பொய்யாளி உடனே கையைப்பிடித்து ரத்தாம்பரக் கடுக்கண்களைக் கழற்றி அளிக்கவும் ஜோடுமேல் ஏடவிழ்த்த வெள்ளாளர். ‘ஏதேது... திருமருகல் சீடனிடமா கடுக்கண் கேட்பது... நான்... ஸாவேரி படிக்கவந்தேன். திருப்பிப்போக இந்த கடுக்கனைவிட்டால் போட்மெயில் ஏற்றிக் கொள்ளுமா... தன் ஸ்திதியைச் சொல்லி இடத்தைவிட்டு கிளம்பியது பொய்யாளி. அய்யனே.. இவ்வளவு பெரிய வித்வான் வாசிக்கக்கேட்டேதே போதும்.. யார் யாருக்கோ கடுக்கனிட்ட கடவுச் சேவல்... தங்காது இங்கே போட்மெயில் ஏறிவிடும் பாருமே... எலும்புக் கூட்டை சுரங்களாகக் கற்பதும் வாசிப்பதும் ஜோடு தைக்கும்போதுதான் சகசமாய் வரும்... வாத்தியத்தில் வந்துவிடும்... ஆற்று நெடுக தூங்கு மூஞ்சி இலைகளைப் பார்ப்பேன். ஒருபோகம் மூடிக்கொண்டு தூங்கும் இலைகளில் ஒடுங்கி இருக்கும் பட்சிகளிடம் போகிறேன். சப்தஜாதிகளை ஒலிப்பித்ததை பாடம்பண்ணி துத்துகாரம் சுகாரம் எங்கெங்கு வேண்டுமோ பட்சி அடித்துவிடும். குயிலை விரட்டிசீவாளியை வாசிக்க முடியுமா... வெறும் ஸ்வரங்களால் பாவம் உண்டாகுமா... பட்சிகள் தலைகீழாய் வந்து குரலிடும் காலம் சீவனில் இருக்கிறதா... பொய்யாளியே உம்மிடம் ஒரு ஜோடி ஜோடுகளுக்காக விற்கப்பட்ட பூச்சி நான்...’ எனச் சொல்லிக் கொண்டே ஆற்றைக் கடக்கிறார் குருவன்.

‘குருவா... உமது தொடர்ச்சியையோ மறைமுக ஊழ் விசைப்படும் பட்சிகளின் ரேகைஓடும் திசையில் நான் காண்பேன். எனக்குள்ளும் சிறிது மறைந்திருக்கிறது’ எனத் திருமருகல் குருவியைப் பார்த்து உவந்து.

தாளம் படுமோ தறிபடுமோ

யார் படுவார்...’ எனக்குயிலொன்று வீறிட்டுப் பறந்து சாலியர் வீதியை ஊடுருவி, குருவி ஒரு மரங்கொத்தியின் தாளத்தில் புணர்சிருஷ்டி ஆனது. ஒன்றிற்கொன்று ஒலி வேறுபட்டாலும் தொடர்பிருக்கிறது. முன் கண்ட தானியம் தன்னைக்கொணர்ந்துண்டு மற்றப்பொழுதை வண்டானம் கதை சொல்லித் தூங்கிப்பின் பாடிவிழிப்புற்ற குருவிப்பாட்டு தானும் நான்.

‘கேட்டால் திருமருகல் வாசிப்பைக் கேட்கவேண்டும்.’ என காவேரிக்குள் ஜோடுகள் நனையாமல் படைப்பைக் கொடையளிக்க போகிறார் குருவன்.

பாரம்பரிய வாசனையில் தவில்காரர் கேளாயிருயிந்தும் மகனின் பிஞ்சுவிரல்கள் விறகுக்கட்டை ஆவதை விரும்பவில்லை தாயார். அவயாம்பாள் முன்கூட்டியே உணர்ந்து ஒரு மகனுக்கு நாகனம்தொட்டு முடி தழுவினாள். குழிக்கரையார் மருதமுத்திடம் ஓடிப்போன யாழ்பாணிச் சீடன் வர்ணங்கள் பிடிக்காமல் பிராக்குப்பார்த்துச் சவுக்கையில் அரட்டைக் கச்சேரி உடம்பு பிடித்துவிடும் இவனிடம் இசைபற்றி அபிப்ராயம் கேட்பது பைல்வானிடம் சுளுக்கு எடுத்துக்கொள்வதாயிற்று. பிறகு அவையாம்மாள் நோய்வாய்பட்டு பிழைக்கமாட்டாளோ என்ற நிலை. மகளுக்குக் கல்யாணம் முடித்துப்பார்த்ததும் கண்ணயர நினைத்தாள்.

வண்டானம் வந்து நார் கட்டிலில் கிடந்த அவயாம்பாள் கைஎடுத்து நாடி பார்த்தது. நாடி ஓலை ஒவ்வொரு வேளையும் மரணத்தில் சொருகிக்கொள்ளாமல் பார்வைசென்றது மருதமுத்துடன். திருணைக்குப்போய் ஆற்றுக்குக் கூட்டிப்போய் ‘குழிக்கரைக்குத் தாயாரை கூட்டிப்போனால் சொஸ்தமாகிவிடும் அங்கேதான் பிள்ளைகளை வளர்த்த சீதையத்தை ஓட்டுவீட்டில் குடியிருக்காள். அவளோடு நாடிஓட்டு வீட்டில் தாமசிக்கட்டும். ஓட்டுவீட்டில் பிறந்தவளுக்கு உள்காத்து பலவிதமாய் பேசும்.. மனசுக்கு ஏற்றபடியெல்லாம் தாழ்வாரத்தில் முனகும் ஊர்காத்து வேணும் அவளுக்கு.. நாஞ்சொல்வது மனசிலா ஆயிடிச்சா...’

குழிக்கரைக்குத் தாயாரைக் கூட்டிப்போன வண்டிச்சோட்டில் எத்தனையோ வயல்வாய்க்கால் மெல்லச் சலசலத்த நீரும் தொனி கொடுத்து அவயாம்பாளிடம் பேசும். மாட்டுவண்டிக்குப் பேர்போன குழிக்கரை ஆசாரிமார் என்னேரமும் சின்னால மரத்தில் காலச்சக்கரத்தில் கையுளியால் வடிக்கும் இற்றுப்போன ஆரக்கால்களை அகற்றி உன்ன மரத்தைச் சீவிசீவி வடித்த வில்வண்டிக் காலமெல்லாம் காவேரி வாய்க்காலில் பஞ்சுவைத்த இருக்கைகளும் மூங்கில் வளைத்த வில்லுகளும் முறியாமல் தைலம் வற்றிய மேற்காலில் பழுப்பு நிறம் சாம்பல் உதிர அண்டங்காக்கை கடையாணி மேல்மை எடுத்துப் பூசிய மரணக்கரைவை இவளும் கேட்டாள்.

சாயாவன நாழியில் அளந்த நெல்மேல் சாணக்கோடிட்டு அரளிப்பூ வைத்த விலங்குக்காலுடைய அய்யனார் இவள் கொண்டுவந்த மடிஉப்பைக்கேட்டு அரற்றியது. சீவனில் சுற்றும் பித்தத்தில் அவயாம்பாள் கருத்தறிந்த சிசுக்கள் தலையடி நெல் கண்டதில் ஒருநெல் நூறுசங்கதிகள் சொல்லும். ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தனும் மன்னார்குடிப் பல்லுப் பக்கிரியும் குழிக்கரைத் தவில்காரர் வீடு சிகப்பு நா யோடுகள் முற்றிச்சிவந்த தவில் சொல்பட்டு உதிரும் ஒவ்வொரு சிகப்பிலும் சீதையத்தையிடம் போய் குருவக்களஞ்சி நெல் சோறும் தேளிமீனும் போட்டுச் சாப்பிட்ட ருசி உருளும் தவிலுக்குள் தன்மேளத்தை நூறுவருஷம் கு க்கரைக் காத்தும் காவேரி வேரோட்டம் லயசம்பத்தம் நுட்பங்கள் போதித்ததை இலுப்பைத் தோப்புக்குள் சாதகித்த சொட்டு ஒவ்வொரு யுகமாய் வழிய கூரைநாட்டுத் தாத்தா ‘சீதே.. என் மூத்த கருப்பி.. என் மகளே..’ எனத் திருணையில் நாயனத்தை வைத்துக் கூடவும் ‘பெரிய தம்பி இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்திருக்கே உனக்கு உலுவைமீன் குழம்பு வைக்கக்கூடச் சீவனத்து இருக்கனே..’ ‘அதான் நாவந்து உன்னைச் சேவிக்கிறேன் சீதையக்கா..’ திருணையடியில் வண்டானம் திண்டுபோல் கருத்திருந்தது. ‘ஆரது.. இன்னொரு தவில்.. கிடக்கே..’ என நையாண்டி பேசினார் கூரைநாட்டுத் தாத்தா.. உங்களிடம் சிறுவயதில் பாடம் கேட்டு வந்தேன். வர்ணங்களை எழுத்தாணியால் கீறிக்கொடுத்தீங்க.. ஏடுகள் தீய்ந்து கூரைவீட்டில் எஞ்சியவற்றை எடுத்தேன். எரிந்த ஒவ்வொரு துண்டிலும் காவேரி நீரோட்டம், எத்தனை பேர் அதில் கரைந்து சாதகம் செய்த மணல்மேல் ஓடும் ஆறுநீங்க. சிஷை பெறாமல் ஓடிப்போன ஒருகாலிப்பயல் அடே வண்டு.. கட்டை வண்டியில் நெடுந்தூரம் கூட்டிப்போன விசேஷம் சென்று திரும்பும் பாதைக்குக் கொடுத்தேன் உன்னை. அதனால்இன்னும் லொங்கோட்டம் நிற்காமல் ஓடும் கால்களப்பா.. ஒவ்வொரு அடியிலும் இசையளந்த பித்தனப்பா.. நீ.. என்னைப்போய் பெரிசாய் பேசுகிறாய்..’ எனத் தாத்தா வண்டானத்தைத் தொட்டு மருகினார். தாத்தாவீட்டில் ஏடுகள் செல்வாய்க்குள் மெல்லும் சத்தம் இன்னும் கேட்கிறது. பாழடைந்த பூர்வீக மண்வீடு சாணம் மெழுகிய கோடுகள். ஒவ்வொரு தானியமாய் எறும்புகள் வரிசையில் ஊர்ந்த இசை.. சோழனளித்த மேளகாரப்பாட்டா மண்குதிருக்குப் பின்னால் இருட்டில் மறைந்த வாச்சியம் கீறல்விழுந்த நிலம் கசிகிறது இசையை.. நயினாரடியார் ஓலை விசிறி துப்பட்டா வெள்ளிச் செல்லம் வெண்கல உரலில் காவேரிக் கலைகளைச் சுருட்டி இடிக்கும் போதெல்லாம் மணிஅதிரச் சொல்லும் வெண்கல மணி உருள்கிறதே.. தாத்தா.. பெய்திருக்கும் பெருமழையில் ஆலங்கட்டி நீர்.. தொடுவதற்கு வந்த மழலை நான்... சொன்னால் அதிகப்படியாக இருக்குமே... காவேரி பொங்கிய வெள்ளக்காட்டில் எத்தனைகாலம் பரிசல் கவிழ்ந்தது... நீஞ்சியே கரையேறினோம்... அரசனும் மந்திரியும் உப்பரிகையில் ஏறிநின்று நாற்புறமும் நோக்கினார்கள். தங்கத்தால் உருச்செய்த நாயனங்கள் ஒரு ஜோடியும் திருவாரூர் சேக்கரையில் பத்துவேலியும் பஞ்சமுக வாத்தியத்துக்கு ஐந்துஓடைகள் நீர்ச்சலனமிட நயினாரடியார் கைத்தடிக்குப் பூண்போட முடியுமா சோழனுக்கு... நாயனம் குருவன்பகடை கேட்டே விழுந்த கீறல்... நயினாரடியார் வாசித்த மாமங்கப் படித்துறை வாசிப்பு காவேரிக்குத்தனிமெருகு.

அலகினால் அது நாத முனைகளில் பச்சைக்கோடு போட்டு அரூபத்தில்  சலனமுறும் சுழிக்காற்றாய் சுழன்று சுற்றிவரும் குருவிகளின் ஒலி. சின்னக்குருவி குடிக்கக்கூட நீரில்லாத கோடையில் சிகப்புச்சோளத்தை சுற்றிவந்த குருவி. தீங்கருதுப் பருவத்தில் தட்டையை விலகிவரும் போது தீங்கருதின்  அடித்தூரில் குருவிகட்டிய சத்தக்குழல். இதன் சுநாதம் திராட்சா பாகம் என்பது மரபு. குருவிப்பகடையின் சத்தக்குழல் தாதுவும் மாவும் ஒன்றாய்பிணைத்த ஒலியோடு உள்ளில் பொங்கிவரக் கேட்கச் சொல்லொணாத அனுபவம் விளையும்.
........
முற்றுப்பெறவில்லை.

Riyas Qurana - றியாஸ் குரானா https://www.facebook.com/riyas.qurana/posts/958816597481760
கலைக்கப்பட்ட கவிதை - மீள் பகிர்வு.

கலைக்கப்பட்ட எனது கவிதைக்குள்
இப்போதுதான் மலர்ந்ததுபோல்
எஞ்சியிருந்த பூவொன்றை,
அதன் தாய்நிலமான மரத்தில்
இணைக்கப்போனபோதுதான்
அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது
எப்போதோ பூத்து
உதிர்ந்திருக்க வேண்டிய அல்லது
யாராவது பறித்திருக்க வேண்டிய இந்த மலரை,
தனது கிளையில்
இனிப் பூத்துக் காட்சிப்படுத்துவதற்கு
சம்மதிக்க முடியாதென்றது அந்த மரம்.
அது ஏன் என்பதை
பின்வருமாறு விளக்கலாம்.
கற்பனையை இரண்டாகப் பிரித்து
பங்குபோட வேண்டி வந்திருக்கிறது.
நேற்றுச் சந்தித்தவள்தான்
எனினும்,சமபாதி அவளுக்கும் வழங்க வேண்டும்
கற்பனையைப் பிரிக்கும் பொதுச் சுவரை
சொற்களை அடுக்கி கட்டமுடிவெடுத்தேன்
ஒரு பகுதிக்குள்ளிருப்பவருக்கு
மறு பகுதிக்குள்ளிருப்பவரின் நடமாட்டம்
அறியாமலிருக்கும்படி
பொதுச் சுவரின் சொற்களுக்குள்
அடர்த்தியான எல்லையற்று நீளும்
மௌனங்களை நிரப்பினேன்
அவர்களைத் தனித்தனியே
சந்திக்கக்கூடிய வகையில்,
ஒன்றிலிருந்து ஒன்று
முற்றிலும் வேறுபட்ட சூழல்களை
கற்பனையின் இரண்டு பகுதிக்குள்ளும்
மாறி மாறி உற்பத்தி செய்தேன்
ஒரு கற்பனைக்குள்
அறவே பொருந்தாத,வித்தியாசமான
இருவேறு நிலவியலை கட்டமைப்பதும்,
அதற்காகக் கற்பனை செய்வதும்
பெரும் துயராக மாறத்தொடங்கியது
கற்பனையின் இருபகுதிக்குள்ளும்
தனித்தனியே வசிக்கும் அவர்களுக்கிடையில்,
சமநிலையைக் காப்பாற்ற முடியாது போகுமென
அஞ்சியபோதுதான்
நான் கடைசியாக எழுதிய
மஹா கவிதையைக் கலைத்தேன்
ஆக்குவது கடினம் அழிப்பது இலேசு
என்ற தத்துவம்
கவிதைக்குப் பொருந்தி வரவில்லை
எழுதுவதைவிட கவிதையைக் கலைப்பது
மிக மிகச் சிரமம் என்றறிந்தேன்
கவிதையைக் கலைக்கும்போது
ஏற்பட்ட ஒவ்வொரு தோல்வியின் போதும்
கவிஞனாக இருப்பதைவிட
வாசகராக இருப்பதன் துயரையும்
அசௌகரிகங்களையும் படிக்கத்தொடங்கினேன்.
முழுமையாக கற்பனை இருந்தபோது
எழுதப்பட்ட கவிதையை,
இரண்டாகப் பிரிக்கப்பட்ட
கற்பனைச் செயல்முறைகளால்
எப்படிக் கலைப்பதென்று புரியவில்லை
சொற்களை ஓரளவு கலைக்க முடிந்தது
தலைப்பைக் கலைத்துப் போடப்போட
வேறொரு தலைப்பாக மாறி,
முடிவற்ற அச்சுறுத்தலாக மாறியது
பெரும் யுத்தமொன்றில்
சிதைந்துபோன நகரமொன்றின்
இடிபாடுகளைப்போல
கற்பனை காட்சியளிக்கத் தொடங்கியது
அந்த இடிபாடுகளுக்கிடையிலும்,
சில கவிதைச் சம்பவங்கள்
ஆங்காங்கே மீதமாய்க் கிடந்தன
திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை எதிர்பாராத,
கற்பனையின் இரு பகுதிக்குள்ளும்
குடியிருந்த அவர்கள் இருவரும்
மிரண்டுபோய் வெளியேறினர்
அவர்கள் போனால் என்ன
கலைக்கப்பட்ட கவிதைக்குள்ளிருந்த
அழகிய மலரையாவது
காப்பாற்றிவிடலாமென்று விரும்பினேன்.

Also among those works burned were the writings of beloved nineteenth-century German Jewish poet Heinrich Heine, who wrote in his 1820-1821 play Almansor the famous admonition, “Dort, wo man Bücher verbrennt, verbrennt man am Ende auch Menschen": "Where they burn books, they will also ultimately burn people."