பிழைப்பின் நிமித்தம் கலைஇயக்குநராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் ஜே. கே. வை ஓவியங்கள் அழைத்தபடி இருக்கின்றன. அவரும் அந்தக் குரலுக்கு விசுவாசமான பணியாளின் பவ்யத்தோடு வந்துவிடுகிறார். பின்தொடர்கிறார். கட்டளைகளை நிறைவேற்றுகிறார். திடீரென எங்கோ காணாமல் போய்விடுகிறார். இந்த ஒட்டுறவும் விட்டுப் பிரிதலுமான ஊடாட்டம்தான் அவர் படைப்பின் தொடர்ச்சியை, பலத்தை, சென்றடைந்த விதத்தைத் தீர்மானிக்கிறது.
சமீப வருஷங்களில் அவரது சில அக்ரலிக் வண்ண ஓவியங்களை நான் கவனித்து வருகிறேன். 2013இல் அவர் வரைந்த வண்ணப்படங்களில் ஒரு விதமாய் நான் ஊகித்து சிறந்ததாய்ச் சொன்ன அவரது ‘டிரான்ஸ்ஃபர்மர்’ ஓவியம் 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்தவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 24ஆம் தேதி டெல்லி லலித்கலா அக்காதெமியின் கண்காட்சியில் அந்தப் படத்தை நான் நேரில் பார்க்க நேர்ந்ததும் ஒரு மகிழ்ச்சியான தருணம். சிறந்த கோட்டோவியர்களில் ஒருவராக அவரை நான் அறிந்திருந்தும் வண்ணப்பட ஓவியராய் அவரை எழுதும் முனைப்புக்குக் காலம் இப்போதுதான் தூண்டியிருக்கிறது. ஏன் இவ்வளவு காலத்தில் என்ன ஆயிற்று ஜே.கேவுக்கு. எங்கே போனார்.
சென்னையின் வியாசர்பாடியில் 11.3.51இல் மாணிக்கம் பத்மாவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த ஜெயக்குமார் தன் பதினேழாம் வயதில் ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர்கிறார். ஓரளவு வளமான செல்வக் குடும்பப் பின்னணி கொண்ட அவருக்கு அரிய ஆசிரியர்களின் வழிகாட்டல்கள், ஓவியத்திறனுக்காக பிரிட்டிஷ் கவுன்சில் நல்கையென பல உற்சாகங்களும் ஊக்குவிப்புகளும் கிடைக்கின்றன. முதல் கண்காட்சியை 73இல் கூட்டுக் கண்காட்சியாய் வைக்கிறார். சலியாமல் உழைக்கிறார். ஆளுமைமிக்க கோட்டோவியங்களைத் தனித்துவமாய் வரைந்து குவிக்கிறார். நல்ல துவக்கம்தான். ஆனால் அவரின் சிறந்த கோட்டோவியங்கள் பரண்களில் கிடக்கின்றன. பத்திரிகைகளுக்கோ காட்சிகளுக்கோ நல்ல படங்கள் போய்ச் சேரவில்லை. துணிச்சலான தனிநபர் கண்காட்சிகளுக்குத் தயாராகாத மனம். வரைந்து வரைந்து வீட்டின் அறைகளுக்குள் அடுக்கியிருக்கிறது, இதையெல்லாம் அசட்டை என்பதா. கலைஞனின் துரதிர்ஷ்டம் என்பதா. இது ஒரு பக்கம்.
பாடல்வரிகளின் மேல் உள்ள மயக்கம். அவற்றைப் போல தொடர்ந்து ஏதாவது எழுதிப்பார்ப்பதில் ஒரு உவகை. எதுகை மோனையில் சொற்றொடர்களை உருவாக்கி அதைச் சொல்லிச் சொல்லி மகிழும் பழக்கம். தவறான இலக்கியப் புரிதல்கள் இவையெல்லாம் சேர்ந்து ஓவியத்தில் குவிய வேண்டிய கவனத்தைக் குலைத் திருக்கிறது.
பிம்ப வழிபாடுகளிலும் அதீத உணர்ச்சித் ததும்பல்களிலும், ஏமாற்ற இழப்புகளிலும், இலக்குகளைத் தவறவிட்ட விம்மல்களிலும் கழிந்திருக்கிறது காலம். தொடர்ச்சியற்ற செயல்பாடுகள் படைப்புக் கண்ணிகளை இரக்கமற்று அறுத்துப் போட்டிருக்கிறது. விட்ட இடத்தில் துவங்க நினைக்கையில் கூடிவந்த கைவாகு காணாமல் போயிருக்கிறது. மறுபடி முதலிலிருந்தே துவங்கி பாதியிலேயே நிறுத்த நேர்கிறது. ஆனாலும் காலம்கடந்த பின்னாவது இப்போது சுணக்கம் விலகத்துவங்கியுள்ளது. சட்டகம் உள்ளடக்கம் உணர்ச்சி எல்லாவற்றிலும் மனஓர்மை தென்படுகிறது. 2014இன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தேசியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஜே.கே.யின் ஓவியம் ஒன்றைப் பார்க்கலாம்.
சாப்பாட்டு மேசையை ஒட்டி அருகருகேயுள்ள இரு நாற்காலிகளில் ஆணும் பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். தம்பதியரா என்பது தெரியவில்லை. ஆனால், இருவருக்குமான பிணக்கு முதல் பார்வையிலேயே தென்பட்டு விடுகிறது. பாப் தலையுடன் கறுப்பு நிறம்கொண்ட அவள் சற்றே சோகமாக தன் கன்னத்தின் மேல் கைவைத்து ஒரு பக்கமாய்த் தலை சாய்த்துத் தன் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறாள். அவனோ என்ன செய்வதெனத் தெரியாத விழிப்போடு உதட்டில் கைவைத்து மூடியபடி அமர்ந்திருக்கிறான். மேலிருந்து கீழாக ஒரு பழைய குண்டு பல்பு ஒளிர்கிறது. முதுகுக்குப் பின்னே ஒரு பக்கம் திறந்த ஜன்னல். அதற்கருகே தாழிடப்பட்ட இரட்டைக்கதவு. ஜன்னலின் வழியே ஒளிரும் இளம் மஞ்சள், அமர்ந்திருக்கும் நாற்காலிகளைத் தொட்டு ஆணின் தோள் தொட்டு ரத்தச்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் மேசையின் நடுவில் ஒளிக்கற்றையாய் பாய்கிறது. மேசைக்கு எதிரே ஒரு ஒற்றைக் காலி நாற்காலி. நாற்காலியின் இருக்கை பகுதியில் சற்றே மினுங்கும் சன்ன மஞ்சள். மேசை மீது இருக்கும் தேநீர்க் கோப்பைகளில் ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்று நேராக உள்ளது. மேசைமீது ஒரு அலைபேசியும் கழுத்துச் சங்கிலியும் கிடக்கின்றன. மேசைக்கடியில் கூர்ந்து பார்த்தால் ஒரு பூனை. அவரவர் கற்பனைக்குத் தக்க அர்த்த அடுக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். வண்ணங்களும் உணர்ச்சியும் காட்டிய கோணமும் ஒளிக்கையாள்மையும் இன்னபிறவும் கூடிவந்த படம் இது. இதில் அவர் வரைந்து காட்டிய பெண்ணின் சோகம் அவர் படங்களில் காணமுடியாதது. பொதுவாய் ஜே.கேயின் ஓவியப் பெண்கள் சோகமானவர்கள் அல்ல. இந்த பெண் அவர் ஓவிய உலகில் உலவவிட்ட பல பெண்களையும் ஞாபகப்படுத்திவிட்டாள்.
ஜே.கே.வின் ஓவியப் பெண்கள் விசித்திரமானவர்கள். விசேஷத்தன்மை கொண்டவர்கள். புகைப்படக் கோணத்தின் பிரதிபலிப்பாகவோ இருண்மை வனத்தில் மறைந்தபடியோ நிற்பவர்கள் அல்ல அவர்கள். உடற்பயிற்சி செய்யும் ஆணழகர்கள் போன்று நம் கண்ணுக்கு தோன்றுபவர்கள். பெண்ணுடலில் ஆணின் மூர்க்கம் திரண்டு மேனியின் ரூபமே உருளை திரளையாய் மாறியவர்கள். ஐரோப்பிய பாணியில் பாப் கட் செய்யப்பட்ட பம்மென்ற சுருள் கேசமும் ஆப்பிரிக்க நிறமும் உரத்துப் பேசும் உடல்மொழியும் கொண்டவர்கள். உடலமைப்பால் திராவிடர்கள். அந்த வகை உடலமைப்பை நாம் யதார்த்தத்தில் காண இயலாது. அவர்கள் ஜே.கே.வின் ஓவியங்கள் வழியே மட்டுமே நமக்குக் காணக் கிடைப்பவர்கள். கனத்து நீளும் இரவுகளில் செறுமல்களைச் சன்னமான தீனத்தில் அல்ல வேகம் கொண்ட உக்கிரத்துடன் சொல்பவர்கள். கூச்சத்தை உதறி வேண்டியதை உரிமையுடன் கட்டளையிட்டுப் பெறத்துடிப்பவர்கள். ஆனாலும் என்ன. அவர்களின் விரகக் கண்கள் ஆணின் ஸ்பரிசத்தில் கிறங்கித்தான் செருகுகிறது. அவர்களின் காமமே அவரது கோடுகளையும் வண்ணங்களையும் வளைக்கிறது. நாணேற்றி அதிரவைக்கிறது. இலக்கை அடைந்து குத்திட்டு இறங்குகிறது. குத்திட்ட வேகத்தில் களுக்கெனச் சுரந்து பரவுகிறது நீர்மையின் மதன வாசம்.
மூர்க்கக் கூறுகளை ஏன் பெண்ணின் உடலுக்கு மாற்றுகிறார் ஜே.கே. கட்டற்ற சுதந்திர உணர்வோடு கூடிய பெண் மனசிற்கு அவர் உருக்கொடுத்துப் பார்க்கிறார். ஆண் பெண் உறவின் உறவுச்சிக்கல்களின் புதிர்களுக்குத் தன் கோடுகளின் வண்ணங்களின் வழியே விடை தேடுகிறார் ஜே.கே. ஒரு வகையில் பெண்களின் மேல் ஜே.கே. கொண்ட கனிவின் வண்ணம் இது. அதுவே அவர் படைப்பின் மையச் சரடு.
காமம் கிளர்ந்த நிலம் |
|
தேனுகா |
எல்லா இசங்களும் திடீரென்றுதான் கி.பி. 1900க்கு முன்னும் பின்னும் என்று ஒரு 80 வருடங்களுக்குள் கொட்டித் தீர்ந்தன. மாடர்ன் இசங்கள் என்று அழைக்கப்பட்ட cubism, futurism, surrealism போன்ற நவீனம் சார்ந்த எல்லா இசங்களும், புதிய அறிவுத் தளங்களில் இயக்கம் கொண்டு உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு வந்த ஓவியங்களை மாடர்னிசம் எனும் நவீனம் சார்ந்ததாகவே எல்லோரும் அழைத்து வருவது விந்தையாக உள்ளது.
போஸ்ட்மார்டன் என்ற ஒரு புதிய இயக்கம் உருவாகியது. இவ்வியக்கம் மாடர்னிச இயக்கத்தை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் நங்கூரம் பாய்ச்சிய இசமாகவே திகழ்ந்தது. இருப்பினும் மாடர்னிசம் புதிய போஸ்ட்மாடர்னிசத்தைத் தழுவியும், மேற்சென்றும் இன்றும் தம் இருப்பினைக் காட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை. பிறகு வந்த Kazimir Malevich என்ற சூப்பர் மேட்டிச ஓவியரின் From Cubism and Futurism to Supermatism எனும் துண்டுப் பிரசுர நூல் இதற்கு முன் வியாபித்திருந்த இசங்களைப் புறந்தள்ளி, உருவமற்ற புதிய ஓவிய உலகிற்கு இட்டுச் சென்றது எனலாம். கசிமிர் மெலிவிச் சிறந்த ஓவியர் மட்டுமல்ல; சிறந்த எழுத்தாளர், ஓவிய விமர்சகராகவும் திகழ்ந்தார். இவர் அவ்வப்போது எழுதிய ஓவியக் குறிப்புகள், கட்டுரைகள், தத்துவ விசாரங்கள், ‘Essays on Art’ எனும் இவரது நூல் ஓவிய உலகத்தைப் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வரலாற்று ஆவணமாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் விந்தை என்னவென்றால் தான் ஒரு பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு கருத்தை, வேறொரு பக்கத்தில் மறுத்தும் எழுதியிருப்பார் இவர். இருப்பினும் நவீன ஓவிய உலகத்திற்கு வழிகாட்டும் கையேடாகவே இவரது நூல் இன்றும் திகழ்கிறது. ஓவியர் க்ஷிணீஸீ நிஷீரீலீ தனது சகோதரன் தியோவிற்கு எழுதிய வண்ணங்கள் குறித்த கடிதங்கள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றனவோ, அவ்வளவிற்கு இவரது நூலும் இவரது முரண்பாட்டுக் கருத்துகளிடையேயும் வரவேற்கப்படுகிறது.
இந்திய நவீன ஓவிய மரபு ஜாமினிராய், நந்தலால்போஸ், ரவிந்திரநாத்தாகூர், ராம்கிங்கர்பெய்ஜ், அமிர்தாசெர்கில் போன்றோரிடமிருந்து தொடர்கிறது. இம்மரபில் இவற்றை முழுதுமான நவீனம் சார்ந்த ஓவியங்களாக ஏற்பது சற்றுக் கடினமாகத்தான் உள்ளது. அதற்குப் பிறகான காலகட்டத்தில் நவீனத்தை முன்னிறுத்திய கலைஞர்கள் ஏராளமாகத் தோன்றினர். கே.சி.எஸ். பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோருடன் ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், சாந்திநிகேதன், புரகிரசிவ் பெயிண்டர்ஸ் அசோசியேசன்ஸ் போன்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்கிய ஓவிய இயக்கம் நவீன படைப்புகளை முன்னிறுத்தின. இந்திய அளவில் சாந்திதவே, தாந்திரீக ஓவியர் சந்தோஷ், ஓவியர் சிற்பி கட்டடக்கலைஞர் என்ற பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் சத்தீஸ் குஜரல், சிற்பி கஜிரியோ, வளைந்து நெளியும் கம்பிச் சிற்பி சிவ்சிங், நவீன தாந்திரிக் ஓவியர் எஸ்.எச். ராசா, சூசா, பிரேண்டே, எம்.எப். உசைன், சாந்திநிகேத ஓவியர் கணேஷ்பைன், ஏ.பி. சந்தானராஜ், எல். முனுசாமி, இந்திய கிராபிக் உலகின் முன்னோடியான ஆர்.பி. பாஸ்கரன், தையப்மேத்தா, Enigma ஜெ. சுவாமிநாதன், கே.ஜி. சுப்ரமணியன், லக்ஸ்மண்கௌடு, லக்ஸ் மண்பை, கோபிநாத், விருட்சகர் எஸ்.ஜி. வாசுதேவ், தமிழ் நியோகிளாசிக்கல் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி, அல்பான்சோ, untitled கே.எம். ஆதிமூலம், சிற்பி தெட்சிணாமூர்த்தி போன்றோர், இந்திய நவீன உலகை அலங்கரித்த பெருமைக்குரிய கலைஞர்களாவர்.
மேல்நாட்டு நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதில் ஓவியர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் ஏதோ ஒருவித மனத்தடை ஏற்படுவதை இன்றும் நாம் உணரலாம். Visual Based பார்வை வழியே அதைப் புரிந்துகொள்வதுதான் இந்தத் தவறுக்கான காரணம். அதன் பின்புலமாக உள்ள தத்துவச் சரடுகளைப் பிரித்தெடுக்க நாம் முனைவதில்லை. அதனால் அது புரியாமலும் போய்விடுகிறது. எல்லோரும் கியூபிசத் தந்தை Picasso, Braque சர்ரியலிச ஓவியர் Salvador Dali போன்றோர்களின் ஓவியங்களை மேம்போக்காகப் புகழ்ந்து பாராட்டுவதைத் தவிர, இவர்களுக்கும் வேறு வழியில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
நவீன ஓவியம் என்பது கேன்வாசில் வரையும் ஒரு ஓவிய வித்தை அல்ல. நவீன சிற்பம் என்பதும் உளியால் செதுக்கப்படும் சிற்பக் கலை அல்ல. நவீனக் கட்டடம் என்பது கட்டுமானக் கலையும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி இவற்றிற்கு அடிப்படையான தத்துவங்களே, இப்படைப்புகளை உருவாக்கும் பின்புலமாக அமைந்துள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எல்லோரும்போல் நாமும் பெயரளவில் பாராட்ட முடியுமே தவிர, அதைப் புரிந்துகொள்வதில் தொடரும் சிக்கலை நம்மால் அவிழ்க்க இயலாமலே போய்விடும் ஆபத்தும் ஏற்படும். பிகாசோ வரைந்த அவிக்னான் நகர விலைமாதர்கள் எனும் les demoiselles d’avignon ஓவியத்தைப் பார்த்த அவரது நண்பர் ஓவியர் Brague உலகின் மிக அருவருப்பான ஓவியம் இது என்றார். பின்னர் அவரே பிகாசோவின் முதல் கியூபிச ஓவியம் என்று வியந்து பாராட்டியது நவீன ஓவிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். காரணம் Henri Bergson எனும் மேதையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே கியூபிசம் உருவானது என்பதை பிராக் உணர்ந்துகொண்டதுதான் இதற்குக் காரணம்.
ஓவிய விமர்சகனுக்கும் இதே பிரச்சினைதான் முன் நிற்கிறது. ஏன்தான் விமர்சகனைப் போற்றுகிறார்களோ தெரியவில்லை. விமர்சகனிடம் ஒன்றுமில்லை. உண்மையான படைப்பாளிக்குமுன் விமர்சனம் வேண்டாத ஒன்று. ஓவிய விமர்சகர் என்று அறியப்படும் Herbrt Read, பிரிட்டிஷ் விமர்சகர் Sharles Jencks போன்ற ஒரு சிலரைத் தவிர, ஓவிய விமர்சகர்கள் என்று அதிக அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது Charles Correa எனும் புத்தகத்தை மதிப்பீடு செய்துள்ள Kenneth Frampton போன்ற சிலரைத் தவிர கட்டடக் கலை விமர்சகர்களும் இன்று இல்லை என்றே சொல்லிவிடலாம்.
ஓவியர்களால் வரையப்பட்டதைவிட விமர்சகன் என்ன சொல்லிவிட முடியும்? அதிலும் அவன் எழுதும் எழுத்தின்மீது குறித்த ஈர்ப்பு ஓவியர்களுக்கு ஏனோ இன்னும் அடங்கவில்லை. எழுதுவது எனும் எழுத்து என்பது அவ்வளவாகப் போற்றத்தக்கதும் அல்ல, அதன் நம்பத்தன்மையும் சந்தேகத்திற்கு உரியதே. ஒன்றுக்கொன்று முரணானதை முடிச்சுப்போட்டு எழுதும் எழுத்தை நம்பி ஏமாறாதீர்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இச்சொற்கள், இன்று தரும் அர்த்தங்களை நம்பி ஏமாறாதீர்கள், அதற்குப் பதிலாகப் பேசும் பேச்சான Oral traditionஐ ஓரளவு நம்பலாம் என்றும் மொழியியல் அறிஞர் Derrida சொல்லிவிட்டுச் சென்றார். பேசும் பேச்சு என்பது, மனதில் நினைத்தவுடன் வாய் வழியாகச் சொல்லிவிடும் போக்கினைக் கொண்டது. இதில் மனத்தந்திரத்திற்கு அதிகம் இடமில்லை. ஆனால் எழுதும் எழுத்தோ, பிறர் மனம் மற்றும் சூழ்நிலை குறித்த நோக்கோடு operation of thoughts எனும் தந்திரத்தோடு எழுதப்படும் ஒன்றாகும். எழுதும் எழுத்தைவிட, பேசும் பேச்சை முதன்மையாகக் கொள்ளுங்கள் என்று of Grammatology எனும் நூலில் மொழியியல் அறிஞர் Derrida வலியுறுத்துகிறார். கலை இலக்கியங்கள் சார்ந்த பேச்சு மொழியை ஆவணப்படுத்த இன்றைய இந்தியச் சூழல் இடங்கொடுக்குமா, தெரியவில்லை.
எது எப்படியோ ஜெ.கே. என்று ஓவிய, திரைப்படக் கலை இயக்க உலகில் அன்போடு அழைக்கப்படும் எம். ஜெயக்குமாரின் கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள் குறித்து அவசியம் நான் எழுதியாக வேண்டியுள்ளது. இருப்பினும் 1970லிருந்து, தில்லி பிரகதி மைதானில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் Internationakl Trinalle India எனும் உலக ஓவியக் கண்காட்சிகளில் ஓவியங்கள், சிற்பங்களைத் தொடர்ந்து பார்த்த அனுபவங்கள் மட்டும்தான் எனக்கு உண்டு. அது மட்டுமில்லாமல் அமெரிக்கன் பெவிலியன், பிரான்சு பெவிலியன், ஜெர்மன் பெவிலியன் என்றெல்லாம் நான் பார்த்து வரும்பொழுது, நமது இந்திய பெவிலியனில் உள்ள ஓவியங்கள் காலத்தால் எவ்வளவு பின்தங்கி நிற்கின்றன என்பதை உணர்ந்தேன். அதனால் தில்லி, சென்னை போன்ற இடங்களில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்கள், அமெரிக்கன் நூலகங்கள், லலித்கலா அகாதெமி நூலகங்கள், சென்னை, கும்பகோணம் ஓவியக்கல்லூரி நூலகங்களில், ஓவியங்களுக்கான பின்புலத் தத்துவார்த்த விஷயங்களைத் தேடிப் பிடித்து படித்ததை மட்டும்தான் என் தகுதியாகச் சொல்ல வேண்டும். வேறொரு தகுதி ஏதும் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஜே.கே.யின் ஓவியங்களில் ஆண், பெண் உறவுகள், அவர்களின் காம இச்சைகள் என்பதையும் தாண்டி ஒருவித Eroticity மேலோங்குவதைக் காணலாம். தமிழக ராஜகோபுரங்களின் அடித்தளத்தில் உள்ள காமச் சிற்பங்கள், கிருஷ்ண லீலாச் சிற்பங்கள், கஜுரஹோ ஆண் பெண் உறவின் காமக் கோலங்கள், இயங்கு முக்கோணம், நிலைத்த முக்கோணம் இவற்றின் பிணைப்பில் உருவான சிவசக்திபோகம் எனும் சாக்த மரபு, அக்பர் கால மினியேச்சர் ஓவியங்கள், அரண்மனை அந்தப்புரத்து காம லீலைகளைக் காட்டும் ஓவியங்கள் போன்றவற்றை இந்திய மரபின் அடையாளமாகக் கொள்ளலாம். இருப்பினும் இவற்றினுள் அவற்றிற்கும் மேலாக composition சார்ந்த Aesthetics எனும் அழகின்பம் மீதூருவதைத் தவிர்க்க இயலாது.
மேல்நாட்டு ஓவிய மரபோ காமத்தை வெளிப் படுத்தும்போது அழகின்பத்தை முதன்மைப் படுத்துவதில்லை. உதாரணமாக Salvador Dali வரைந்த சர்ரியலிச காம ஓவியங்களை எடுத்துக்கொள்ளலாம். இவரது ஓவியங்களில் காணப்படும் Perspectives எனும் தூரத்தன்மையால் இவரது ஓவியங்கள் மரபு சார்ந்த சர்ரியலிச ஓவியங்களாகவே விமர்சன உலகில் கருதப்படுகின்றன. ஆனால் Max Ernstன் சர்ரியலிச ஓவியங்களோ முழுதும் நவீனம் சார்ந்ததாகவே கருதப்படுகிறது. இவ்வழியில் ஓவியர் Andrew Mason, கவிஞர் Andre Breton போன்றோரின் மிகை மீறிய காமத்தைக் காட்டுவதான சர்ரியலிச ஓவியங்கள் திகழ்கின்றன. Sex and Death instincts உணர்வுகளைப் பிரதானப்படுத்தும் இவ்வோவியங்கள், Sigmund Freud எனும் உளவியல் அறிஞரின் Interpretation of Dreams எனும் நூலை, சோதனையிடும் களமாகவே மாற்றின. கனவுகளோ ஆழ் மனத்துள் பதுங்கியுள்ளன. இவை சாதாரண நினைவு உலகத்தில் நடமாடுவதுமில்லை. உறங்கும்போது கனவில் தோற்றம் கொள்ளும் காமம் சார்ந்த இச்சைகளை இந்நூல் விவரிக்கின்றது. Season De Similes எனும் Period of Sleep எனும் கூட்டு உறக்கங்களைக் கொண்டு, அதனைச் சோதனைத் தளமாக ஏற்று ஆய்வு செய்தனர் சர்ரியலிச ஓவியர்கள். செக்ஸ் எனும் காம இச்சை மற்றும் மரண பீதி என்பது வாழ்வின் பிரதானமான, தவிர்க்க இயலாத உணர்வுகள் என்பதை இவர்களால் மட்டுமே நவீனம் சார்ந்து கலை வழியே காட்ட முடிந்தது.
ஜே.கே.யின் ஓவியங்கள் பற்றி நான் எழுத முற்படும்போது இந்நிலைக்கே நான் தள்ளப்பட்டேன். சல்வதோர் தலியின் Nude Sketches, பிக்காசோவின் Rape, Nude before mirror எனும் ஓவியங்கள், Marcel DuchampJ¡ Descending Nude, Heni Matisseயின் விதவிதமான நிர்வாணக் கோட்டோவியங்கள், Ande Derainனின்
Torso சிற்பம், அமெரிக்க சிற்பி Gaston Lachaise செய்த, கவிழ்த்த இரு மலைகளைப் போன்ற பிரம்மாண்டமான ஸ்தனங்களோடு கூடிய நிர்வாணச் சிற்பம் என்றெல்லாம் அம்மண உலகின் அற்புத விந்தைகளைக் காட்ட நம்மை அழைத்துச் செல்கிறார் ஜே.கே.
பிராய்டின் கோட்பாடுகள் ஆழ்மனப் பாலுணர்வுகளை உணரச் செய்வதாகும். இதில் விரசம், அதிவிரசம் என்றெல்லாம் ஆழ்மனத்துள் தொடர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. ஜே.கே. தன் ஆழ்மனப் பதுங்கு குழியின் உறைந்து கிடக்கும் காம இச்சைகளான Id, Ego,
Libidoக்களை தன் ஓவியங்களாகப் படைக்கிறார். இதில் என்ன வெட்கம் வேண்டியிருக்கிறது என்றும் கேட்கிறார் இவர். எல்லோரும் சொல்ல மறுப்பதை நான் என் ஓவியத்தின் வழியே சொல்ல முற்படுகிறேன் என்கிறார் ஜே.கே. பாலுணர்வு, காமம், காம இச்சைகள், காம வெறி, நிர்வாணம், அம்மணம் என்பதெல்லாம் மனித உணர்வுகளில் ஒன்றாகவே இருக்கும்பொழுது, அதை என் ஓவியம் மூலமாக வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும், இது மிகவும் இயல்பானதே என்கிறார். இதில் என்ன கூச்சம் வேண்டியிருக்கிறது என்றும் பேசுகிறார் இவர். இவரது ஓவியங்களில் வரும் நிர்வாண ஆண்கள் பெண்கள், இவர்களிடையே ஏற்படும் காமக் கிளர்ச்சிகள், புணர்தல், காமக் குறியீடுகளாகத் தோன்றும் பொலி காளை மாடுகள், குதிரைகள், அதன் மிகப் பிரம்மாண்டமான பாலுணர்வைத் தூண்டும் பிருஷ்டங்கள், இந்திர விழி திறந்து நாறும் மயிர்க் கண்கள், கொண்டைச் சேவல்கள், விரைத்திட்ட ஸ்கலித ஆண் குறியைக் குறியீடாகக் காண்பிக்கும் எரிந்து வழியும் மெழுகுவர்த்தி, காளைகளின் முதுகில் உருண்டு திரண்டு நிற்கும் வன்திமிலை அடக்கும் மென்முலைகள் போன்றவை இவரது காமம் கிளர்ந்த நிலத்தின் குறியீடுகளாகவே தோன்றுகின்றன. சிக்மண்ட் பிராய்டு சொல்வதைப்போல Phillic symbolsகளாக இவை ஓவியங்களுள் வந்து போவதை, இவர்தான் எப்படித் தடுக்க முடியும். காமப் பிடரியை தன் கைப்பிடிக்குள் அடக்கி விதவிதமான காமக் கலை வித்தைகளைக் காட்டுகிறார் ஜே.கே.
2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நம் தமிழ் மரபு, காமம், காந்தர்வம், காதல், நாணிக் கண்புதைத்தல், பொருண்வயின் பிரிவு, பிரிவாற்றாமை என்றெல்லாம் காம மரபைப் போற்றத்தான் செய்கிறது. ‘என் கொங்கை, நின் அன்பர் அல்லாள் தோள் சேரற்க’ எனும் பெண் கவி ஆண்டாளின் விரகதாபம் இவள் பாசுரத்தில் பற்றி எரிகிறது. ஆனந்தவர்த்தனர் எழுதிய த்வன்யாலோகம் எனும் சமஸ்கிருத நூலோ காம இச்சையைக் குறிப்பால் உணர்த்துகின்றது. தாயும் மகளும் பகலில் தரையில் படுத்திருக்கும்பொழுது அங்கே ஆடவன் ஒருவன் செல்கிறான். அவனைப் பார்த்து மகள் கூறுகிறாள்: ‘‘ஏய் குருடனே, இரவில் நானும் என் தாயும் இங்குதான் படுத்திருப்போம். தவறுதலாக நீ என் தாயின்மீது காலைப் போட்டு மிதித்து விடாதே’’ என்ற உதாரணத்தைக் குறிப்போடு கூறுகிறது இந்நூல். இதில் நேரடியாகச் சொல்லப்படும் அந்நபர் குருடன் அல்ல; மகள் - அவனுடைய காதலி, இரவில் நாங்கள் இருவரும் இங்குதான் படுத்திருப்போம். தாய்மீது தவறி காலினைப் போட்டு மிதித்துவிடாதே, அருகில் உள்ள என் மீது காலினைப் போட்டு என்னைத் தீண்டு என்று குறிப்பால் காதலை உணர்த்துவதாக ஆனந்தவர்த்தனர் கூறுகிறார். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி வழியே காமத்தைக் குறிப்பாகவும் குறியீடாகவும் இறைச்சியாகவும் உள்ளுறையாகவும் உவமமாகவும் உணர்த்துகின்ற மரபும் இருந்து வருகிறது. இதைப்போல் ஐரோப்பிய நாட்டிலும் ஓவியர்கள் Baudelaire, Mallarme கவிஞர் Paul Valery போன்றவர்களும் குறிப்பால் காமத்தை உணர்த்திய மேதைகளாவர். சமஸ்கிருத இலக்கணத்தில் பாணினி, தமிழில் தொல்காப்பியம் போன்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கண இலக்கிய மரபு இருக்கிறது. இம்மரபை இயங்கு இலக்கணம் எனும் Generative Grammar, புதிய ரீதி எனும் Stylitics, இயங்கு புலன் அமைப்பு எனும் Motor sensory organization என்றெல்லாம் ஓவியங்களை விமர்சிக்கும் எழுத்து, பேச்சு மொழிகளில் புதிய உருவாக்கம் கொண்டு இலக்கிய மரபினை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று வேண்டுகிறார் அமெரிக்க மொழியியல் அறிஞரும், தத்துவமேதையுமான Noam Chomsky. மொழியியல் சார்ந்த இவ்வேண்டுகோளை நாம் எப்போது தொடப்போகிறோமோ தெரியவில்லை.
ஜே.கே.வை உணரும்பொழுது நமது Rential Art எனும் கண் வழிகாணும் கலையை நம்மால் தவிர்க்க இயலாததாகிறது. இதனை அடுத்துள்ள தத்துவ விசாரங்களை நோக்கிய பயணம் நமக்கு வியர்த்தமாகவே முடிந்துவிடுகிறது. ஜே.கே.யின் ஓவியங்கள் என்பது திடீர் நிகழ்வுகள் அல்ல. அதன் தொடர்ச்சியை நாம் உற்று நோக்கவேண்டும். இவரது படைப்பு வழி ஆசானான ஆர்.பி. பாஸ்கரன், லலித் கலா அகாதெமியின் தலைவரானபோது எம்.எப். உசேன், தையப் மேத்தா போன்ற இந்திய Veteran Artistsகளை தன் காலத்தில் கௌரவப்படுத்தியது இந்திய நவீன ஓவிய உலகில் முக்கிய நிகழ்வாகும். ஏ.பி. சந்தானராஜ், அல்பான்சோ, போர்ட்ரைட் ஓவியர் அந்தோணிதாஸ் போன்றோரை ஆசிரியர்களாக ஏற்றதைப் பெருமையாகக் கூறும் ஜே.கே. பாஸ்கரன் கிராபிக் கலையால்தான் கோட்டோவியப் பயிற்சி தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் போன்றோரின் நட்பு என் படைப்பில் ஒரு Poesy ஏற்படக் காரணமாக இருந்தது என்கிறார். ஓவிய நண்பர்கள் சந்துரு, விஸ்வம் போன்றோர்கள் என் படைப்புலக வாழ்வின் அங்கங்களாக என்றும் திகழ்கிறார்கள் என்கிறார் ஜே.கே.
1983இல் பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக லண்டனில் ஸ்காலராக சென்றார் ஜே.கே., Henry Moore, Barbara Hepworth, Henri Matisse, பிரான்சில் Toulouse Lautrec, Rubens, Van Gogh, எக்ஸ்பிரசனிச ஓவியர் Edvard Munch, ஆண் உடல் உபாசகன் Michelangeloவின் சிற்பங்கள், Picasso’s Picassos போன்ற படைப்புகளை ஜே.கே. நேரடியாகப் பார்த்த சந்தர்ப்பத்தை, இவரது வாழ்வின் பெருமையான தருணங்களாகவே நாம் சொல்ல வேண்டும். இவ் ஓவியங்களைப் பார்ப்பதின் மூலம், அதன் பின்புலமாக உள்ள தத்துவார்த்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள வளர்ந்து வரும் ஓவியர்கள் முன்வர வேண்டும். பல தனி நபர்கள் பணியாற்றியது பிரான்சில் உள்ள லூவர் மியூசியம், லண்டனில் உள்ள வளர்கலை மியூசியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் ஓவியங்களை நேரடியாகப் பார்த்த அனுபவத்தைக் கலைப் புல விரிப்பாகக் காட்டுகிறார் ஜே.கே.
20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கட்டடக் கலைஞரான Le Corbusier கட்டடக் கலையில் தன்னை ஒரு கழைக் கூத்தாடியாகவே நினைத்து எழுதிய Acrobat கவிதை என் நினைவில் வந்து போவதை இவ்விடத்தில் என்னால் தவிர்க்க இயலவில்லை. ஒவ்வொரு தருணங்களிலும் மரணத்தின் விளிம்பிற்குச் சென்றும், மிக ஜாக்கிரதையாக அதையே திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்தும் தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ளும் இக்கழைக்கூத்தாடியை என்னென்று அழைப்பது என்கிறார் Corb தன் ஆங்கிலக் கவிதையில். |
|
|